Year: 2014

மரியாதை இராமன் கதைகள் – நீயா கொலைகாரி?

மரியாதை ராமனுக்குப் பேரும் புகழும் சேரச் சேர, ராமன் அந்த ஊரில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் பிரபலம் ஆனான்.

வழக்கு என்றால், நீதிபதி முதல் கடைசி ஆள்வரை ஒரே கோணத்தில்தான் ஆராய்வார்கள். ஆனால், மரியாதை ராமன் யார் மீது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லையோ அவரைப் பிடிப்பான். கிடுக்கியில் மாட்டுவதுபோல் இரண்டு மூன்று கேள்விகளைப் போடுவான். கோணி மூட்டையில் இருக்கும் பூனைக் குட்டிகள் வெளியே வந்துவிடும். அதாவது ரகசியம் வெளியே வந்துவிடும்.

 

ராமன் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், வழக்கு, நீதி, வாதி, பிரதிவாதி என்று தன் பொன்னான இளைமையைப் பாழ் அடித்துக் கொள்கிறான் என்பது ராமனின் அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அவ்வப்போது ராமனுக்கும் அவன் அப்பாவுக்கும் இந்தப் பிரச்சினையாலேதான் சண்டைவரும். “ஏண்டா! நீ பாட்டுக்கு இன்னார்தான் குற்றவாளி என்று சமூக அந்தஸ்தில் பெரியவரைக் குறிப்பிடுவாய். காவலர்களும் கைது செய்து விடுவார்கள். ஆனால் அதன் பின்விளைவு என்ன தெரியுமா?

தண்டனை அனுபவிப்பவன் எதிராளியைப் பார்த்து “இந்த தடவை தப்பிச்சிட்டேன்னு நினைக்கிறியா? தண்டனைக்காலம் முடிவதற்குள், என் ஆட்கள் பழிவாங்கி விடுவார்கள். கண்டதுண்டமாக வெட்டி காக்கைக்கும், கழுகுக்கும் போடுவார்கள்!” என்று எச்சரிக்கை செய்வான். நமக்கு எதற்கு இந்த மாதிரி ஆபத்தான தொழில்?” என்னோடு வியாபாரத்தில் சேர்ந்து விடு! கொஞ்சம் வளர்ந்து வாலிபனானவுடன் உனக்குத் திருமணம் செய்கிறேன். எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.?”

மரியாதைராமன் தகப்பனாரின் பேச்சைக் கேட்டான். “அப்பா! ஆபத்தில்லாத வேலை கிடையாது. நீதிமன்றத்துறையில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நானா முறையிட்டேன்! அரசராகப் பார்த்து எனக்குக் கொடுத்த பதவியை, ‘எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்’னு சொல்றாப்பல நானும் பதவியை வேண்டாம் என்று சொல்வதா?

பார்க்கப் போனால், இந்தப் பதவி எனக்கு கிடைத்தது எவ்வளவு பேர்களுக்கு ஏமாற்றமும் எரிச்சலும் தந்தது என்று தெரியுமா?

குற்றத்தைச் செய்தவன் தன்னை யாராவது பார்த்து விடுவார்கள்! என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின்னாலே தைரியம் வந்து, தனக்கு விரோதிகளாக இருப்போரின் மீது பழி போடுவான்! அதனால் யாருமே அவனைச் சந்தேகப்பட மாட்டார்கள்.

சில சமயம் குற்றவாளியைக் கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி மீது பழி வந்து அவனுக்குத் தண்டனை கொடுத்துவிடக் கூடாது.

சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்காடுபவர் எடுத்துரைக்கும் வாதம் விளக்கு போன்றது. ஆனால், அந்த விளக்கு ஏழைக்கு எட்டாதது என்று ஓர் அறிஞர் கூறினார். தாமதப்படுத்தும் நீதியின் தீர்ப்பு! உனக்கு நீதி மறுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

“அப்பா! இந்த மரியாதைராமன் உங்கள் நற்பெயரைக் கெடுக்க மாட்டான்.”

“சரி! ராமா நான் கோவில்களுக்குச் சென்று திரும்பிவர பல நாட்கள் ஆகும்! அதற்குள் உனது லட்சியம் மாறாதா என்று பார்க்கிறேன்.” என்று அப்பா சொல்லிவிட்டு ஊர்ப் பயணம் செல்ல ஆரம்பித்தார்.

இரண்டு மாதம் கழித்து வந்தார் அப்பா. அன்று ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. வாதியும் பெண். பிரதிவாதியும் பெண். இரண்டு பெண்களும் ஒருவனுடைய மனைவிகள். அந்த இரண்டு பெண்களைப் பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடைய வீட்டுக் கெதிரில் உள்ள அவருடைய வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பது அவருக்குப் பழக்கம்.

இந்தப் பெண்கள் என்ன குற்றம் செய்தார்கள்! இந்தக் குற்றத்தின் தன்மை என்ன? பின்னணி என்ன?

வழக்கில் வாதி இரண்டாம் மனைவி. பிரதிவாதி முதல் மனைவி. குற்றம் – இளையவளின் குழந்தை இறந்து விட்டது. இயற்கையான மரணம் அல்ல என்று அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

ஆனால், குழந்தையைக் கொலை செய்தது யார்? கொலைக்கான உள் நோக்கம் என்ன? இதுதான் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் கேள்வி.

இளைய மனைவியின் பெயர் காந்தா. முதல் மனைவியின் பெயர் சாந்தா. இவர்களின் புருஷன் அப்பாவி. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான்.

“வழக்கை ஆரம்பிக்கலாமா?” என்று மரியாதைராமன் கேட்கவும் அரசர் “தாராளமாக” என்றார். மரியாதை ராமனின் அப்பா, மகனின் சாமர்த்தியத்தைக் காண ஆவலாய் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.

இளையவள் காந்தாவைப் பேச அழைத்தார் மரியாதை ராமன். “ஐயா! நீங்களும் சிறிசு, நானும் சிறிசு. எப்பவுமே சிறிசுகளைக் கண்டால் பெரிசுகளுக்குப் பொறாமை? பொச்சரிப்பு!

‘என் குழந்தையை யாரோ கொலை பண்ணிட்டாங்க! பெத்த வயிறு பத்தி எரியுது! துக்கம் தொண்டையை அடைக்குது” என்று சொல்லி சத்தம் போட்டு அழுகிறாள்.

மரியாதை ராமன் இளையவளைப் பார்த்து, “அழாதேம்மா! உன்னுடைய கஷ்டம் ஈடில்லாத கஷ்டம்! குழந்தையைக் கொன்னவங்க யாருன்னு தெரியல்லியே! உனக்கு யார் மேலே சந்தேகம்!

“அதை என் வாயாலே எப்படிச் சொல்வேன்? நீங்க கேட்டதாலே சொல்றேன்! எம் புருசன் ஒரு பூச்சி. எந்த விஷயத்தையும் காதிலே போட்டுக்க மாட்டார். என் சந்தேகம் சொல்லவே வெக்கமா இருக்கு…” என்று காந்தா இழுத்தாள்.

“சொல்லும்மா! இது நீதிமன்றம்.

“வேறே யாரு? இதோ எதிர்த்தாப்பலே குத்துக் கல்லாட்டம் நிற்கிறாளே அவதான் என் சக்காளத்தி. அவ மலடி! எனக்குக் குழந்தை பிறந்தது அவளுக்குப் பொறாமை! இந்த ஒரு காரணமே போதுமே! அவளுக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தா கூட என் ஆத்திரம் தீராது!”

மரியாதை ராமன் ஏட்டில் குறிப்பெடுத்தான். பிறகு மூத்தவள் சாந்தாவை கூண்டில் நிற்க வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.

“நான் என் புருஷனுக்கு முதல் மனைவி. குழந்தை பிறக்காததாலே, நானே என் புருசனுக்குப் பெண் பார்த்தேன். கூடப் பிறக்கல்லன்னாலும் அவ என் தங்கச்சி. குழந்தை பிறக்கப்போவுதுன்னு செய்தி வந்ததும் அதிக சந்தோசம் பட்டவ நான்தான் ஐயா!”

“தாய் இல்லாத பெண்ணாச்சே! பிரசவத்தை நம்ம வீட்லேயே பார்த்துடலாம்னு இவளைப் பொறந்த ஊட்டுக்குக் கூட அனுப்பலே! நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே, முடிச்சுப் போடாத காணிக்கை இல்லே!” என்றாள் மூத்தவள் சாந்தா.

உடனே இளையவள் காந்தா, “குழந்தை திடீர்னு எழுந்துக்கும். போய் ஆசையா பெரியம்மாகிட்ட படுத்துக்கும். அப்படிப் படுத்த குழந்தையை கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா போல நடிக்கறதைப் பாரு!” என்று சீறினாள்.

மரியாதைராமன் இளையவள் – காந்தாவிடம் “குழந்தைக்குக் குளிப்பாட்டுவது யார்? மருந்து கொடுப்பது யார்? தூங்க வைப்பது யார்? அழகா உடுத்தி, கண்ணுக்கு மை தீட்டி, காற்றாட வெளியில் தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்றது யார்?” என்று கேட்டான்.

அதற்கு இளையவள், “என்னமோ தான் பெத்த புள்ளை மாதிரி குழந்தைக்கு எல்லாம் செய்றது எதுக்கு? புருசன் தன்னைத் தள்ளி வச்சிடுவாரோ என்ற பயம். பாக்கறவங்க தன்னைப் பாராட்டுவாங்கன்ற சுயநலம்தான்! தாய்ப்பால் குடிக்க மட்டும்தான் குழந்தையை என்னண்டை கொடுப்பா! ஏன்னா அது அவளால முடியாது!” என்று ஏளனமாக சாந்தாவைப் பார்த்துச் சொன்னாள்.

மரியாதை ராமன் வாக்கமூலத்தில் தெரிகின்ற கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். குழந்தையின் தகப்பன் என்னை சொல்கிறான்? அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன். அவனுடைய கருத்தைக் கேட்போம் என்று மரியாதைராமன் குழந்தையின் தகப்பனைக் கூண்டில் ஏற்றினான்.

“ஐயா! இந்தக் குழந்தையை யார் கொன்றது? தெரியவில்லை என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற ஊகத்தைச் சொல்லும்!” – மரியாதை ராமன்.

தகப்பன் அழுது கொண்டே “நான் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இந்தக் கொலை நடந்திருக்கிறது. பெத்தவள் செய்தாளா? மத்தவள் செய்தாளா? யார் செய்திருந்தாலும் கடுமையான தண்டனை கொடுங்க? எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வச்சதே முதல்தாரம்தான். மனப்பூர்வமாகத்தான் ஒத்துக்கிட்டா! நமக்குக் குழந்தை வேணும்! என்னாலே முடியாதபோது எனக்கு வர ‘உடன்பிறவா சகோதரி’ மூலமாவது அந்தப் பாக்கியம் கிட்டட்டும்னு சொன்னவளே பெரியவள்தான்!

அடிக்கடி சின்னவ எங்கிட்ட பெரியவளைப் பத்தி தூபம் போடுவா! அவளை விரட்டுங்க. என் குழந்தையை எப்பவும் அவளே கவனிச்சுக்கறா. அப்புறம் குழந்தைக்கு எம்மேலே எப்படிங்க பாசம் வரும்! குழந்தையும் அவகிட்ட நல்லா ஒட்டிக்கிச்சு. அப்படிச் சொல்லும்போது நான் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’னு புத்தி சொல்வேன்.

 

 

 

 

“இன்னொரு உண்மையை இந்தச் சபையில் சொல்றேன். சின்னவளுக்குக் குழந்தை பிறந்த ஆறுமாசம் கழிச்சு பெரியவள் என்னை வைத்தியர்கிட்ட அழைச்சிட்டுப் போனா! வாந்தி மயக்கம்னு சொன்னா! வைத்தியர் அவளைப் பரிசோதித்து ‘மகிழ்ச்சி’ என்று சொன்னார். ஆம்! பெரியவளும் தாயாகப் போகிற நிலையில் இருக்கிறாளாம்!

‘நான் சந்தோஷம் அடைஞ்சேன்! ஆனா, பெரியவ வைத்தியரிடம், கருவைக் கலைக்கும் மருந்தைக் கொடுங்க. எனக்கு குழந்தை. வேணாம்!’ என்றாள். நானும் வைத்தியரும் தடுத்தபோது ‘விஷம் குடிச்சிருவேன்’னு பயமுறுத்தினா. வேறு வழியில்லாம வைத்தியர், கருத்தடை மருந்தைக் கொடுத்து விட்டார். இந்த விஷயம் இதுவரை சின்னவளுக்குத் தெரியாது” என்று தேம்பினார்.

வழக்கு தனக்கு எதிராகப் போவதை அறிந்த இளையவள் காந்தா, “என் குழந்தையைக் கொலை செய்தவளை சும்மா விடக் கூடாது. இந்த நீலிக் கண்ணீர் விட்டாகுழந்தை பொழைச்சுடுமா? விஷத்தைக் கொடுத்தா குழந்தை உடல் நீலம் பாய்ஞ்சிருக்கும் கையால நெறிச்சிருந்தா கை ரேகை தெரிஞ்சிருக்கும்…” என்று அரற்றினாள்.

மரியாதை ராமன் அவள் சொல்வதைக் குறித்துக் கொண்டான். “சரி அம்மா, குழந்தையைப் பெத்தவங்க நீங்க! ஆகவே தண்டனையில் ஒரு பகுதி நீங்க குற்றம் சாட்டும் மூத்தவளைக் கட்டிப் போட்டு கசையடியை நீங்களே கொடுக்கலாம். கயிறால் கட்டினால் அறுந்து விடும். எதனால் கட்டினால் உடலை இறுக்கும்?” என்று யோசிப்பதுபோல் கேட்டான்.

இளையவள் மகிழ்ச்சி பொங்க ‘மரத்தைச் சுத்திப் படரும் பாடவரங்காய் கொடியை வெச்சுக் கட்டினால் கொடி அறுபடாது. உடலை இறுக்கி விடும்’ என்றாள். ‘என் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தக் கொடி படருது’ என்று மேலும் தகவல் தந்து மூத்தவள் கொஞ்ச நேரத்தில் கொடியால் கட்டப்படுவாள் என்று மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

சொன்னபடியே இளையவள் வீட்டிலிருந்த நீளமான பாடவரங்காய் கொடி அறுத்துக் கொண்டுவரப் பட்டது. சபையில் நிசப்தம்.

மரியாதை ராமன் அரசரிடம் ரகசியமாக ஏதோ சொன்னான். “அப்படியா!” என்பதுபோல் அரசர் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார். கூடியிருந்த மக்கள் முடிவு தெரிந்து கொள்ள முட்டி மோதிக் கொண்டு இருந்தனர்.

மரியாதைராமன் அந்தப் பாடவரங்காய்க் கொடியை சேவகனிடம் கொடுத்து அந்த அம்மாவைக் கொடியால் கட்டுங்கள்!” என்று உத்தரவிட்டான். ‘எந்த அம்மா’ என்பதை மக்கள் யோசனை செய்வதற்குள், சேவகன் இளையவளைக் கட்டத் துவங்கினான்.

இளைவள் பதறி “வேண்டாம்! என்னைக் கட்டாதீர்கள். நானே உண்மையைச் சொல்லி விடுகிறேன். குழந்தையைக் கொலை செய்ய கசாப்புக் கடைக்காரனின் உதவியை நாடினேன். அவன்தான் கத்தியால் குத்தமாட்டேன். கொடியால் கழுத்தை நெரித்து பெரியம்மா பக்கத்தில் போட்டுடறேன் என்று சொன்னான். என் வீட்டுக்காரர் இல்லாத நேரம் பார்த்துத் தகவல் சொன்னேன். அவனும் காரியத்தை முடித்தான்.

எனக்குக் குழந்தை போனாலும் பரவாயில்லை. பெரியவ மேலே எங்க வீட்டுக்காரர் வெச்சிருக்கிற பாசத்தை நாசப்படுத்தணும்கிறதான் என் ஒரே நோக்கமாய் இருந்தது. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க!” என்று மண்டியிட்டு அழுதாள்.

மரியாதை ராமன், “குற்றவாளி வாயாலே குற்றத்தை ஒப்புக் கொள்ள” வைத்ததை, ராமனின் தந்தை மகிழ்ச்சி பொங்க பாராட்டினார். மக்களும் இளையவளின் அடாத செயலை இகழ்ந்தார்கள். இளையவளுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது.

இளையவள் மூத்தவள் கால்களில் விழுந்து அழுதாள். “அக்கா! நம் குலத்தைத் தழைக்க வந்த செல்வளை அழித்து விட்டேனே! நான் ஒரு மகா பாவி! அந்தப் பழியை உன் மீது போட்டு ஒழித்து விட நினைத்தேனே! என்னை மாதிரி ஒரு துரோகியை, நீங்கள் உங்கள் வாழ்வில் பங்கு போட்டுக் கொள்ள வைத்தீர்களே! நான் நன்றி கெட்டவள்…” என்று புலம்பலுக்கிடையே சொல்லி காவலர்களுடன் சென்றாள். புருசனும், மூத்தவளும் கண்கலங்கி ‘சீக்கிரம் நாம் மூவரும் ஒன்றாகலாம்’ என்றார்கள்.

மரியாதைராமன் வீட்டில் அவனுடைய தந்தை, “பெற்ற குழந்தையைக் கொன்றாள் ஒருத்தி. நானோ பெற்ற மகனின் புகழைத் தடுக்க நினைத்தேன். அவள் பொறாமை கொண்டு குழந்தையைக் கொன்றாள். நான் அறியாமையால் என் மகனின் அறிவுத் திறனை மூடி மறைக்க நினைத்தேன்!” என்று மரியாதைராமனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்

விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.

அதற்கு நந்தமகாராஜா கூறினார்: “இச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது. மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது”, என்று நந்தமகாராஜா கூறினார். இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திரனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. யாகத்தை நடத்த வேண்டாமென கிருஷ்ணர் விவாதித்தார். அதற்காக அவர் கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல், இகவுலக நலன்களுக்காக தேவர்களை வழிபடத் தேவையில்லை. தேவர்களை வழிபட்டுப் பெறப்படும் நன்மைகள் தற்காலிகமானவை. இரண்டாவதாக, தேவர்களை வழிபடுவதால் கிடைக்கும் தற்காலிகமான நன்மைகளும் முழுமுதற்கடவுளால் வழங்கப்படுபவை. அவரின் அனுமதியின்றி யாரும் யாருக்கும் எந்த நன்மையும் வழங்க இயலாது.

கிருஷ்ணர் மேலும் கூறினார்: “சுவர்க்க லோகத்தின் ஆளுனர் பதவியில் இருப்பதால் கர்வம் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இந்திரனுக்கு செய்யும் யாகத்தை நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும். நாம் விருந்தாவனத்தில் வாழ்வதில் திருப்தி காண்கிறோம். நமது உறவு குறிப்பாக கோவர்த்தன கிரியுடனும் விருந்தாவனத்துடனும் ஏற்பட்டது. நமது ஊரிலுள்ள பிராமணர்களையும் கோவர்த்தன கிரியையும் திருப்திப் படுத்துவதற்கான யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்”. எனப் பணிவாகக் கேட்டுக் கொண்டார். இறுதியில் நந்தமகாராஜா கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

govardhan-hill

அன்று முதல் இன்றுவரை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவர்த்தன பூசை நடத்தப்பட்டு வருகிறது. விருந்தாவனத்திலும், மற்ற இடங்களிலும், உலகெங்கிலும் உள்ள இஸ்கான் ஆலயங்களிலும் உணவு பெருமளவில் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது. நந்தமகாராஜாவும் ஏனைய ஆயர்களும் கோவர்த்தன பூசையை நிறைவேற்றி, மலையை வலம் வந்தார்கள். இந்த மரபையொட்டி இப்போதும் விருந்தாவனத்தில் இந்தப் பூஜை தினத்தன்று நன்றாக உடையுடுத்து, தம் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச் சென்று, பூஜையை நிறைவேற்றி மலையை வலம் வருகிறார்கள். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து வேதம் ஓதச் செய்து, கோவர்த்தன பூசையை நடத்திப் பிரசாதம் வழங்கினார்கள். விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள்.

கோவர்த்தன பூசையை நடத்தி வைத்த அந்தணர்கள், கோபாலர்களையும், கோபியரையும் ஆசிர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின், கிருஷ்ணர் மிகப் பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு, கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்றே, என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும்; கிருஷ்ணர் உண்டார். கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்ற கருத்து இன்றும் மதிக்கப் படுகிறது. அம்மலையின் கற்களை எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றைப் பூஜிக்கிறார்கள். உணவு முழுவதையும் உண்ட கிருஷ்ண வடிவமும், கிருஷ்ணர் தாமும் வெவ்வேறாக விழங்கி நின்றதால் கிருஷ்ணர் தாமும் மற்ற விருந்தாவனவாசிகளும் அந்த மாபெரும் மூர்த்திக்கும் கோவர்த்தன மலைக்கும் ஒருங்கே வழிபாடு நடத்தினார்கள். இவ்வாறு கோவர்த்தன பூசையை நடத்திய விருந்தாவன வாசிகள், வசுதேவர் மைந்தனான கிருஷ்ணரின் கட்டளைகளை நிறைவேற்றிய பின் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

(கிரி கோவர்த்தன ஷீலா)

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல்

வழக்கம்போல கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது நண்பர்களுடன் யமுனை நதிக் கரைக்குச் சென்றிருந்தபோது, ஆயர் சிறுவர்கள் காலை உணவு உண்டிராததால் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி இவ்வாறு கூறினார்கள்: “அன்பான கிருஷ்ணா, பலராமா, நாங்கள் இன்று பசியாக இருக்கிறோம். எங்கள் பசியைப் போக்குவதற்கான உபாயம் ஏதாவது கூறுங்கள்”. என்று கூறினார்கள்.

நண்பர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டபோது கிருஷ்ணரும் பலராமரும் அச்சமயம் யாகங்கள் நடத்திக் கொண்டிருந்த சில பிராமணர்களின் மனைவியரின் மீது கருணை கொண்டார்கள். அம்மனைவியர்கள் பிரபுவின் சிறந்த பக்தைகள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கிருஷ்ணர் அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். கிருஷ்ணர் நண்பர்களிடம் கூறினார்:அன்பான நண்பர்களே, பக்கத்திலுள்ள பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் உணவு கேளுங்கள். இப்போது அவர்கள் வேத முறைப்படியானஆங்கிரஸ எனும் யாகங்களை நடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பிராமணர்கள் வேதப் பண்களை இசைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், வேத அறிவின் நோக்கம் என்னை அறிவது என்பதை அவர்கள் மறந்திருக்கிறார்கள். என்று கிருஷ்ணர் தம் நண்பர்களுக்குக் கூறினார்.

கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று சிறுவர்கள் பிராமணர்களிடம் சென்று,கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் வந்திருக்கிறோம். அந்தணராகிய நீங்கள் தர்மங்களை அறிந்தவர்கள். எங்களுக்கு உணவு தரலாமென நீங்கள் எண்ணினால், நீங்கள் தரும் உணவை நாங்கள், கிருஷ்ணருடனும் பலராமருடனும் பகிர்ந்து உண்கிறோம். என்று; கூறினார்கள். அவர்களைப் பற்றி அவ்வந்தனர்கள் கவலைப் படாமல் சிறுவர்களிடம் பேச மறுத்து விட்டார்கள். பிராமணர்கள் தங்களிடம் பேச மாட்டார்கள் என்பதை அறிந்த சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்; திரும்பிச் சென்று கிருஷ்ணரிடமும் பலராமருடனும் நடந்ததை விவரித்தார்கள்.

அவர்கள் கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் கூறினார்: “பிராமணர்கள் தானம் தர மறுத்ததை எண்ணி வருந்தக் கூடாது. ஏனெனில் யாசகம் அப்படிப்பட்டது. யாசிப்பவன் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது நிச்சயமாகக் கிடைக்குமென்று எதிர்பார்க்கக் கூடாது. சில இடங்களில் ஏமாற்றமடைய நேரிடலாம். அதற்காக மனம் வருந்தக் கூடாது. நீங்கள் மீண்டும் அந்தணர்களின் இருப்பிடத்துக்குச் சென்று அந்தணர்களின் மனைவியரைச் சந்தித்து, அவர்களிடம் என் பெயரையும் பலராமரின் பெயரையும் சொல்லி உணவு கேளுங்கள். உங்களுக்கு வேண்டிய அளவு உணவை அவர்கள் நிச்சயமாகத் தருவார்கள்.” என்று கிருஷ்ணர் கூறினார்.

கிருஷ்ணரின் கட்டளைப்படி சிறுவர்கள் உடனே அந்தணர்களின் மனைவியரிடம் சென்றார்கள். அவர்கள் தத்தம் வீடுகளில் இருந்தார்கள். சிறுவர்கள் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கூறினார்கள்:அன்பான அன்னையரே, கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களுடன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டளைப்படி நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் மிகவும் பசியாக இருக்கிறோம்.

எனவே, உணவை வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கிருஷ்ணரும், பலராமரும் நாங்களும் உண்பதற்கு ஏதாவது உணவு தாருங்கள். என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்தண மனைவியர், கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றிக் கவலைப் பட்டார்கள். உடனே அவர்கள் பல பாத்திரங்களில் நேர்த்தியான உணவு வகைகளையும், யாகத்திற்காகத் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரையும் பலராமரையும் சந்திப்பதற்கு சென்றார்கள். கிருஷ்ணர் அவர்களைச் சந்தித்து, அவர்கள் அன்புடன் கொண்டுவந்த உணவுகளை ஏற்று, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தபின் அந்தணர்களின் மனைவிமார் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றார்கள்.

எப்போதும் ஆனந்த நிலையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்தன், சாதாரணக் குழந்தையாக வந்து தன் லீலைகளைக் காட்டி, அந்தணர்களின் மனைவியர் கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்தார். கிருஷ்ணரிடமிருந்து மனைவியர் திரும்பிய பின், யாகங்களை நிறைவேற்றிய அந்தணர்கள் முழுமுதற் கடவுளுக்கு உணவளிக்க மறுத்த குற்றத்திற்காக மனம் வருந்தி, தமது தவறை உணர்ந்து கொண்டார்கள்.

அந்தப் பிராமணர்கள் கூறினார்கள்: “கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றி அந்த ஆயர் சிறுவர்கள் நமக்கு நினைவூட்டியும், அவர்களை நாம் அசட்டை செய்து விட்டோம். நமது நன்மைக்காக, நம்மிடம் கருணை கூர்ந்து முழுமுதற் கடவுள் தம் நண்பர்களின் மூலம் நம்மிடம் உணவு கேட்டு அணுப்பினார். இல்லாவிடில் அவர் அவர்களை அனுப்பி இருக்கத் தேவையில்லை. அவர் நினைத்த மாத்தித்தில் அவர்களின் பசியைத் தீர்த்திருக்க முடியும். ஆனால், நம்மைப் போல் குறுகிய நோக்கில்லாத நம் மனைவியர் கிருஷ்ணருக்கு புனிதமான பக்தித் தொண்டாற்றி இருப்பதால் நம்மைவிட உயர்ந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை எண்ணி நாம் பெருமை அடைகிறோம். எனவே, நாமும் இப்போது அவரது பாத கமலங்களில் பணிவோமாக.” என்று அந்தப் பிராமணர்கள் கூறினார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு அன்புடன் உணவளித்த அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பிரலம்பாசுர வதம்

ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார்.

சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பாண்டீர வனம் எனும் காட்டினூடே சென்றனர். ஸ்ரீ தாமனும் விருஷபனும் இருந்த பலராமனின் கட்சி வெற்றி பெற்றது. கிருஷ்ணரின் கட்சி அவர்களை சுமந்து கொண்டு பாண்டீர வனத்தில் நடக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணர், ஸ்ரீ தாமனையும் பத்ரசேனர் விருஷபனையும் அங்கு ஆயர்குலச் சிறுவனின் தோற்றத்தில் வந்திருந்த பிரலம்பாசுரன் பலராமரையும் முதுகில் சுமக்க வேண்டியதாயிற்று.

பிரலம்பாசுரன் அசுரர்களுள் மிகப் பெரியவன். அங்கிருந்த ஆயர்குலச் சிறுவர்களுள் கிருஷ்ணர் மிகுந்த பலசாலியென்பதை அவன் யூகித்திருந்தான். கிருஷ்ணரின் அருகில் இருக்க விரும்பாமல் பிரலம்பாசுரன், பலராமரை வெகு தூரம் தூக்கிச் சென்றான். அந்த அசுரன் பலத்திலும் சக்தியிலும் மிகுந்தவன். ஆனால், ஒரு மலைக் குகைக்குச் சமமான பலராமரை அவன் தூக்கிச் சென்றான். எனவே அவன் களைப்புற்று பாரத்தைச் சுமக்க முடியாமல் போனதால் அவனது உருவம் மேக மண்டலம் வரை விரிந்து, கண்கள் அனலெனப் பளிச்சிட கூரிய பற்கள் வெளிப்பட அவன் தோன்றியதை பலராமர் கவனித்தார்.

அசுரனின் தோற்றத்தைக் கண்டு பலராமர் ஆச்சரியப் பட்டார். தன்னை அந்த அசுரன், தன் நண்பர்களிடமிருந்து தூரமாக எடுத்துச் சென்று கொல்ல நினைக்கிறான் என்பதை அறிந்தார். உடனே அவர், இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ஒரு மலையைத் தாக்குவது போல் அசுரனின் தலையில் தன் முஷ்டியால் ஓங்கித் தாக்கினார். பலராமரின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல், தலை நசுக்கப்பட்ட பாம்பைப் போல், அசுரன் கீழே விழுந்து இறந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. சிறுவர்களெல்லாம் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். கோரமான காட்சியைக் கண்டதும் பலராமருக்குசபாஷ் என்று கூறிப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமுவந்து பலராமர் மீது பூக்களைத் தூவி, ஆசி வழங்கி, பிரலம்பாசுரனைக் கொன்றதற்காகப் பாராட்டினார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – காட்டுத் தீயை அணைத்தல்

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிங்கன் மீது நடனமாடிவிட்டு யமுனை நதியில் இருந்து வெளி வந்தபோது இரவாகி விட்டதால் விருந்தாவன வாசிகளும், பசுக்களும், கன்றுகளும் மிகவும் களைப்படைந்து, யமுனை நதிக் கரையிலலேயே ஓய்வெடுத்துக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென்று காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டது. விரைவில் விருந்தாவன வாசிகள் எல்லோரும் நெருப்புக்கு இரையாகி விடக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டது.

நெருப்பின் உஷ்ணம் அவர்களைத் தகிக்கத் தொடங்கியதும் அவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடம், அப்போது அவர் ஒரு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போதும், சரணடைந்தார்கள். அவரிடம் அவர்கள் கூறினார்கள் அன்பான கிருஷ்ணா, முழுமுதற் கடவுளானவரே, பலத்தின் சிகரமான பலராமரே, கோரமான இந்த நெருப்பு எல்லாவற்றையும் அழிக்கக் கூடியது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். உங்களைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை. இந்த நாசகாரத் தீ எங்களை எல்லாம் விழுங்கி விடும். இவ்வாறு அவர்கள் கிருஷ்ணரின் பாதகமலங்களைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்று கூறி, அவரிடம் பிரார்த்தித்தார்கள்.

தம் ஊர்வாசிகளிடம் மிகுந்த கருணை கொண்ட கிருஷ்ணர், உடனே காட்டுத் தீ முழுவதையும் விழுங்கி, அவர்களைக் காப்பாற்றினார். இது கிருஷ்ணரால் முடியாத காரியமல்ல. ஏனெனில் அவர் வரம்பற்ற சக்தியை உடையவர். தாம் விரும்பிய எதையும் செய்ய வல்லவர். நாசகாரத் தீயை அணைத்த பின்னர் கிருஷ்ணர், நண்பர்களும், உறவினர்களும், பசுக்களும், எருதுகளும் புடைசூழ்ந்து அவரின் புகழ் பாடிவர, எப்போதும் பசுக்களால் நிறைந்திருந்த விருந்தாவனத்தை மீண்டும் அடைந்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – காளிங்கனின் மீது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நடனமாடுதல்

யமுனை நதியின் அடியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் காளிங்கன் என்ற மிகப் பெரிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. அதன் விஷம் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூய்மை கெட்டு, நச்சுக் கலந்திருந்தது. அங்கு ஒரு பறவை பறந்தால் அது உடனே மடிந்து கீழே விழும். யமுனையில் இருந்து வெளிவந்த நச்சு வாயுவின் பாதிப்பால் யமுனைக் கரையிலிருந்த மரங்களும் புற்களும் பட்டுப் போய்விட்டது. அப்பெரிய பாம்பின் விஷத்தால் ஏற்பட்ட கேட்டைக் கிருஷ்ணர் கவனித்தார். விருந்தாவனத்தை அடுத்து ஓடிய நதி முழுவதும் உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடியதாக இருந்தது.

உலகில் கேடு விளைவிக்கும் சக்திகளைக் களைவதற்கென்றே அவதரித்துள்ள ஸ்ரீகிருஷ்ணர், யமுனை நதியின் கரையிலிருந்த ஒரு பெரிய கடம்ப மரத்தின் மீது ஏறினார். கடம்பம் எனும் வட்டமான மஞ்சள் நிற மலர், பொதுவாக விருந்தாவனப் பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு மலர் வகை. மரத்தின் உச்சியில் ஏறியபின் அவர் தன் அரைக் கச்சையை இறுக்கிக் கொண்டு, மல்யுத்தம் செய்பவனைப் போல் கைகளை ஆட்டிக் கொண்டு நச்சு மிகுந்த அந்த ஏரியினுள் குதித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏறிய அந்தக் கடம்ப மரம் ஒன்று மட்டுமே அப்பகுதியில் பட்டுப் போகாமல் தப்பியிருக்கிறது. இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள் அந்த கடம்ப மரம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருப்பதைக் காணலாம். ஸ்ரீகிருஷ்ணரின் கால் பட்டதும் மரம் உடனே உயிர் பெற்றதென்று சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். சில புராணங்களில், இம்மரத்தில் கிருஷ்ணர் வருங்காலத்தில் ஏறுவாரென்று அறிந்திருந்த கருடர், அது பட்டுப் போகாமல் இருக்க அதன் மீது அமிர்தத்தைத் தெளித்திருந்தார் என்று கூறுகின்றன.

கிருஷ்ணர் நதியில் குதித்தபோது நீர் கரை புரண்டு ஓடியது. அதனால் எழுந்த பேரொலி, கரு நாகமான காளிங்கனின் காதில் விழுந்தது. தன் இருப்பிடத்தை யாரோ தாக்க வந்திருக்கிறார் என்பதை அது புரிந்து கொண்டு, கிருஷ்ணரின் முன் வந்தது. அழகிய முகத்தில் புன்னகையுடன், அவர் மிகுந்த பலத்துடன் யமுனை நதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அதற்கு கோபம் வந்தது. தன் பலம் மிக்க உடம்பின் சுருள்களுக்கிடையே காளிங்கன், கிருஷ்ணரைப் பிடித்து அழுத்தியது. பாம்பின் பயங்கரமான பிடியில் தப்ப முடியாத வகையில் கிருஷ்ணர் அகப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டதும், அவரிடம் அன்பு கொண்டிருந்த ஆயர் குலச் சிறுவர்களும் மற்ற விருந்தாவன வாசிகளும் பயத்தால் அதிர்ந்து போனார்கள்.

அவர்களால் நதிக்கரையில் நின்று அழமுடிந்ததே தவிர, கிருஷ்ணருக்கு உதவும் வகையில் எதுவும் செய்ய முடியவில்லை. அன்னை யசோதை வந்தபோது, அவள் யமுனையில் குதிக்க விரும்பினாள். மற்றவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவள் மூர்ச்சையடைந்தாள். தம் உயிரைக் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்திருந்த நந்தகோபரும் மற்றவர்களும் நீரில் குதிக்க எண்ணினார்கள். ஆனால் பிரபு பலராமர் அவர்களைத் தடுத்தார். எவ்வித அபாயமும் இல்லையென்பது பலராமருக்குத் தெரியும்.

இரண்டு மணி நேரங்களுக்குக் கிருஷ்ணர் காளிங்கனின் பிடியில் ஒரு சாதாரணக் குழந்தையைப் போல் இருந்தார். ஆனால் தன் தாயும், தந்தையும் கோபியரும், சிறுவர்களும், பசுக்களும் கன்றுகளும் மற்ற கோகுல வாசிகளும் ~மரணத்தின்| தருவாயில் காப்பவரின்றி இருந்ததைக் கண்டதும் கிருஷ்ணர், தம்மை உடனே விடுவித்துக் கொண்டார். அவர் தம் உடலை விரிவடையச் செய்தார். பாம்பு அவரைக் கட்டிப் பிடிக்க சிரமப்பட்டது. அதனால் அதன் பிடி தளர்ந்து, கிருஷ்ணராகிய முழுமுதற் கடவுளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தது.

காளிங்கன் மிகுந்த கோபமடைந்து, தனது பெரிய படங்களை விரித்தது. மூக்குகளில் இருந்து நச்சுக் கலந்த மூச்சை வெளியிட்டது. அதன் கண்கள் நெருப்பாய் தகித்தது. வாயிலிருந்து அனல் வீசியது. கிருஷ்ணரைப் பார்த்தபடி அது சிறிது நேரம் அசையாமல் நின்றது. பிளவுபட்ட நாக்குகளால் உதடுகளை நக்கியபடி கண்களில் விஷம் பொங்க அவரைப் பார்த்தது. பாம்பின் மீது கருடன் பாய்வதுபோல, கிருஷ்ணர் அதன்மீது பாய்ந்தார். காளிங்கன் தன் விஷப் பற்களால் கிருஷ்ணரைக் கடிக்க முயன்றான். ஆனால் கிருஷ்ணர், அதன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். பாம்பின் தலையில் இருந்த ரத்தினங்களின் ஒளியினால் பிரபுவின் பாதங்கள் சிவந்து காணப்பட்டன. பின்பு, கலைஞர்களுக்கு எல்லாம் ஆதி கலைஞரான ஸ்ரீகிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வாணவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக வாசிகளான கந்தவர்கள், சித்தர்கள் மற்றும் தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.

கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடியபோது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்தபோது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு, தன்னில் இருந்த விஷத்தைக் கக்கியபோது அதன் பாவங்கள் குறையத் தொடங்கின. பன்பு அது, விஷத்துக்குப் பதிலாக இரத்தத்தை கக்கத் தொடங்கியது.

அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாகபத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை நோக்கி, உடனே அந்த இடத்தை விட்டு தாமதிக்காமல்; மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய்விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – தேனுகாசுர வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்களான, ஸ்ரீ தாமா, ஸூபலா, ஸ்தோக கிருஷ்ணா ஆகியோர் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கூறினார்கள்:அன்பான பலராமரே, நீர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். உமது கைகள் மிகுந்த பலமுடையவை. அன்பான கிருஷ்ணா, தொல்லை தரும் பல வகையான அரக்கர்களைக் கொல்வதில் நீர் வல்லவர். விருந்தாவனத்திற்கு அருகில் தாளவனம் எனும் ஒரு பெரிய காடு உள்ளது. அந்தக் காட்டில் பல ஈச்ச மரங்கள் உள்ளன. அவற்றில் பழங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் பெரிய அரக்கனான தேனுகாசுரன் அங்கு இருப்பதால் அங்கு போவது மிகவும் கடினம். அந்த அசுரனும் அவனது நண்பர்களும் கழுதையின் உருவத்தில் அங்கு இருக்கிறார்கள். அதனால் பழங்களை பறிக்க யாரும் அந்த மரங்களை அணுக முடியாது. உங்களைத் தவிர வேறுயாரும் பயமின்றி அங்கு செல்ல முடியாது. அந்த அசுரர்களைக் கொல்லக் கூடியவர்கள் உங்களைத் தவிர யாரும் இல்லை. அங்கு மிருகங்கள் கூடப் போவதில்லை. பறவைகள் அங்கு உறங்குவதில்லை. அவையெல்லாம் அங்கிருந்து சென்று விட்டன. அந்தப் பழங்களை பறித்து உண்டு அவற்றின் சுவையை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. நாம் எல்லோரும் அங்கு சென்று பழங்களை உண்டு களிக்கலாம். என்று கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்கள் கூறினார்கள்.

தம் நெருங்கிய நண்பர்கள் புன்னகையுடன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததைக் கேட்ட பலராமரும் கிருஷ்ணரும் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, எல்லோரும் காட்டை நோக்கிப் புறப்பட்டர்கள். தாளவனத்தில் நுளைந்ததும் பலராமர் யானையின் பலம் கொண்ட தம் கைகளால் மரங்களைப் பிடித்து உலுக்கினார். அவர் மரங்களை அசைத்த போது பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. அங்கு கழுதையின் உருவத்தில் இருந்த தேனுகாசுரன், பழங்கள் விழுந்த சத்தத்தைக் கேட்டு வெகு வேகமாக அங்கு வந்தான். அவன் அங்கு வந்த வேகத்தில் ஏற்பட்ட அதிர்வால் நிலம் முழுவதும் பூகம்பம் ஏற்பட்டது போல் நடுங்கி, மரங்களெல்லாம் ஆட்டம் கண்டன.

அசுரன் முதலில் பலராமரின் முன்பு வந்து அவரது மார்பில் தன் பின் கால்கள் படும்படியாக உதைத்தான். முதலில் பலராமர் எதுவும் கூறவில்லை. கோபம் கொண்ட அசுரன் மிகுந்த பலம் கொண்டு மேலும் வேகத்தோடு மோதினான். பலராமர் தன் ஒரு கையால் அவனின் பின் கால்களைப் பிடித்து, மூன்று முறை சுழற்றி, அக்கழுதையை ஈச்ச மர உச்சியின் மேல் எறிந்த போது அவன் உயிரிழந்தான். அவனின் பாரத்தைத் தாங்க முடியாமல் அந்த மரம் மற்ற மரங்களின் மேல் சரிந்து பல மரங்கள் கீழே விழுந்தன. கிரகங்களை எல்லாம் தம் கோடிக் கணக்கான தலைகளில் தாங்கி நிற்கும் பலசாலியான அனந்த சேஷன் எனப்படும் முழுமுதற் கடவுளாகிய பலராமர் இவ்வாறு பலப் பிரதர்சனம் செய்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இரண்டு நூல் சரடுகள் நெய்யப்பட்ட துணியைத் தாங்கி நிற்பது போல் பிரபஞ்சத் தோற்றம் முழுவதையும் அவர் தாங்கி நிற்கிறார்.

அசுரன் மரங்களில் வீசி எறியப்பட்ட பின்பு, தேனுகாசுரனின் நண்பர்கள் ஒன்று கூடி பலராமரையும் கிருஷ்ணரையும் மிகுந்த பலத்துடன் தாக்கினார்கள். ஆனால் பலராமரும் கிருஷ்ணரும் முன்பு போலவே கழுதைகளின் பின் கால்களைப் பிடித்து சுழற்றி ஈச்ச மரங்களின் மேல் எறிந்து அவற்றைக் கொன்றார்கள். கழுதைகளின் சடலங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தது வினோதமாக காட்சியளித்தது. பல நிறங்களிலான மேகங்கள் மரங்களில் தங்கியிருப்பது போல் தோன்றியது. இந்த மகத்தான சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தேவர்கள், மேல் நிலைக் கிரகங்களில் இருந்து கிருஷ்ணரின் மீதும் பலராமரின் மீதும் மலர் மாரி பொழிந்து துதி பாடினார்கள். துந்துபிகள் முழங்கின. தேனுகாசுரன் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மக்கள் தாளவனத்துக்கு வந்து பழங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். மிருகங்கள் பயமின்றி வந்து அங்கிருந்த நேர்த்தியான புல்லை மேய்ந்தன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்ததும் தேவர்கள் சந்தோசத்தால் எழுப்பிய மங்களகரமான இனிய ஒலி அதிர்வுகள், உயர்நிலை கிரகங்களை எட்டியபோது, அவற்றைக் கேட்ட பிரம்மா, என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அசுரன் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு, முழுமுதற் கடவுளின் அசாதாரண மற்றும் மகிமை மிக்க லீலைகளைக் கண்டு வியந்தார். அகாசுர வதம் நடைபெற்ற போது கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தனர்.

யமுனை நதிக்கரையில் கன்றுகள் புல் மேய, கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் மதிய உணவை உண்பதற்காக, கிருஷ்ணர் நடுவில் அமர, அவரைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்தனர். அனைவரும் உணவு உண்பதற்கு ஆரம்பிக்கும் போது அருகாமையில் புல் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகள் புதிய புல்லைத் தேடி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டன. அப்போது கிருஷ்ணர், தன் நண்பர்கள் சாப்பிடுவதை விட்டு விட்டு கன்றுகளைத் தேடப் போவதை விரும்பவில்லை. எனவே அவர், தன் நண்பர்களைத் தொடர்ந்து சாப்பிடும் படியாகவும் தான் கன்றுகளைத் தேடிப் போவதாகவும் கூறிச் சென்றார்.

அகாசுரன் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை தேவர்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்தவரான பிரம்மாவும் அந்த சம்பவத்தை பார்க்க வந்திருந் பிரம்மா, கிருஷ்ணரின் மகிமை மிக்க லீலைகளை மேலும் காணும் விருப்பத்துடன் கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். கிருஷ்ணர் எவ்வளவு தேடியும் கன்றுகளைக் கண்டு பிடிக்க முடியவல்லை. அவர் நீண்ட தூரம் சென்றதால் அவரது நண்பாகளுடனான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் முழுமுதற் கடவுளான படியால் சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடி இருந்ததை அறிந்தார். பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் கொண்டு போய் விட்டதால், தான் மட்டும் எப்படி விருந்தாவனம் செல்வது? தாய்மார்கள் கவலைப் படுவார்களே என கிருஷ்ணர் நினைத்தார்.

தன் நண்பர்களின் தாய்மார்களை திருப்திப் படுத்துவதற்காகவும் முழுமுதற் கடவுளின் சக்தியை பிரம்மா உணரும்படி செய்வதற்காகவும் கிருஷ்ணர், உடனடியாகத் தன்னை இடைச் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் தன்னை விரிவு படுத்திக்கொண்டார். அந்த சிறுவர்களது தோற்றம், நடை, உடை, பாவனை போன்று மாற்றிக் கொண்டார். இந்த விஷயங்கள் கிராம வாசிகளுக்கு தெரியாது. விருந்தாவனத்தை அடைந்த பிறகு, கன்றுகள் எல்லாம் தத்தம் கொட்டிலை அடைந்தன. சுpறுவர்களும் தத்தமது தாய்மார்களிடம் வீட்டிற்குச் சென்றார்கள். சிறுவர்கள் எல்லோரும் தாய், தந்தையருடன் வழக்கம் போலவே பழகினார்கள். அவர்களிடம் எந்தவித வேறுபாடுகளும் காண முடியவில்லை. ஒரு வருடமாக கிருஷ்ணர் இவ்வாறு கன்றுகளாகவும் ஆயர்குலச் சிறுவர்களாகவும் வியாபித்திருந்து மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று வந்தார்

பிரம்மாவின் ஒரு கணம், நமது கணக்குப்படி ஒரு வருடம். பிரம்மா தனது ஒரு கணத்தின் பின், தாம் சிறுவர்களையும், கன்றுகளையும் திருடியதால் ஏற்பட்ட குழப்பத்தை வேடிக்கை பார்ப்பதற்காக திரும்பி வந்தார். தான் முதலில் கண்ட படியே கன்றுகளும், சிறுவர்களும் கிருஷ்ணரோடு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உண்மையில் அவர், அவைகளை எடுத்துக் கொண்டு போய், தன் மந்திர சக்தியால் உறங்க வைத்திருந்தார். பிரம்மாவுக்கு இது பெரிய குழப்பமாக இருந்தது.

அங்கிருந்த பசுக்களும் கன்றுகளும் சிறுவர்களும் உண்மையானவை அல்ல என்பதை பிரம்மாவுக்கு உணர்த்துவதற்காக கிருஷ்ணர், அவற்றை நீல நிற மேனியோடு சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை நான்கு கைகளில் வைத்திருக்கும் விஷ்ணு வடிவங்களாக மாறுபடச் செய்தார். பிரம்மா, முழுமுதற்கடவுளின் அற்புதமான சக்தியைக் கண்டு வியந்தார். உடனேயே பிரம்மா தம் வாகனமான ஹம்ஸத்தில் இருந்து இறங்கி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தனது பிரார்த்தனையை செலுத்தி விட்டு கிருஷ்ணரை மூன்று முறை வலம் வந்து, பிரம்மலோகம் சென்றார்.

பிரம்மா சென்றவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், கன்றுகளும் சிறுவர்களும் மறைந்த அன்று எப்படி இருந்தாரோ, அதே தோற்றத்தை உடன் மேற்கொண்டார். யமுனை நதிக்கரையில் உணவருந்திக் கொண்டிருந்த அவரது நண்பர்களை, அவர் விட்டுச் சென்று சரியாக ஒரு வருடத்தின் பின்பு அங்கு வந்த போதிலும் அவர் ஒரு நிமிடத்தில் திரும்பி விட்டதாக கிருஷ்ணரது நண்பர்கள் நினைத்தார்கள். பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

உணவை முடித்து விட்டு கிருஷ்ணரும் நண்பர்களும் கன்றுகளுடன் தம் வீடுகளுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் அகாசுரன் பெரும் பாம்பின் வடிவில் இறந்து கிடந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிருஷ்ணரின் மகிமைகளைப் பாடினார்கள். சிறுவர்கள், தாம் பயங்கரமான பாம்பின் வாயிலிருந்து தப்பியதை விருந்தாவன வாசிகள் அனைவருக்கும் கூறினார்கள். உண்மையில் அகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நிகழ்வு, பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் திருடியதால் ஒரு வருடத்திற்குப் பின்பே அனைவருக்கும் தெரிய வந்தது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்- அகாசுர வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் தோழர்களுடன் பால்ய லீலைகளில் திளைத்திருந்த போது, அகாசுரன் என்ற அரக்கன் மிகவும் பொறுமை அற்று இருந்தான். கிருஷ்ணர் விளையாடியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அந்தச் சிறுவர்கள் எல்லோரையும் கொல்லும் எண்ணத்துடன், அவன் அவர்களின் முன்பு தோன்றினான். வானுலகத்தினர் எல்லோரும் பயப்படும் அளவிற்கு அவன் பயங்கரமான தோற்றம் உடையவனாக இருந்தான். அகாசுரன் என்ற அந்த அரக்கன் பூதகி மற்றும் பகாசுரனின் சகோதரன் ஆவான். கிருஷ்ணர், தன் சகோதரனையும் சகோதரியையும் கொன்றதற்கு பழி வாங்குவற்காக, கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் கன்றுகளையும் கொல்ல வேண்டுமென்று வந்தான். அவன் கம்சனின் நண்பனும் ஆவான்.

உடனே அசுரன், மஹிமா எனும் யோக சக்தியின் உதவியால் தன் உருவத்தை எட்டு மைல் அளவுக்குப் பெரிதாக்கிக் கொண்டு, மிகவும் பெரிய உடலை உடைய பாம்பின் வடிவத்தை எடுத்தான். அந்த அதிசய உடலை எடுத்தவுடன், தனது வாயை ஒரு பெரிய மலைக்குகையின் அளவிற்குத் திறந்தான். ஒரே சமயத்தில் கிருஷ்ணரையும் பலராமரையும் மற்றைய சிறுவர்களையும் சேர்த்து விழுங்கத் திட்டமிட்டான். மிப்பெரிய பாம்பின் உருவத்தை மேற்கொண்டிருந்த அசுரன், தன் உதடுகளை தரையில் இருந்து ஆகாயம் வரை விரியும் படியாக வாயைப் பிளந்தான். அவனின் கீழ் உதடு தரையையும் மேல் உதடு வானத்தையும் தொட்டன. வாய் ஒரு பெரிய மலைக் குகையைப் போலவும் பற்கள் மலை உச்சியைப் போலவும், நாக்கு பெரியதொரு ரத வீதியைப் போலவும் காணப்பட்டன. புயல்காற்றைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். கண்கள் நெருப்பைக் கக்கின. சிறுவர்கள், முதலில் அந்த அசுரனை பெரியதொரு சிலை என்று நினைத்தனர். நன்றாக கவனித்த போது, ஒரு பெரிய பாம்பு வாயைப் பிளந்து கொண்டு படுத்திருக்கிறது என முடிவெடுத்தார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தங்களை எப்பொழுதும் காப்பாற்றுவார் என்ற தைரியத்தில் கிருஷ்ணரின் நண்பர்கள் விளையாட்டாக அகாசுரன் என்னும் பாம்பு அரக்கனின் வாயில் பயமின்றி நுழைந்தனர். பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அசுரனைக் கொன்று கோபாலச் சிறுவர்களையும் கன்றுகளையும் காப்பாற்று வதற்காக தானும் அசுரனின் வாயில் புகுந்தார். அசுரன், கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் நொறுக்க முயற்சித்த போது, கிருஷ்ணர் உடனே அரக்கனின் தொண்டைக்குள் தன் உருவத்தைப் பெரிதாக்கினார்.அசுரன் மலை அளவிலான உடலைக் கொண்டிருந்த போதிலும் பெரிதாகி வரும் கிருஷ்னரின் உருவத்தால் அவனுக்கு மூச்சு அடைத்தது. கண்கள் பிதுங்கின. உயிர் மூச்சு எவ்வழியிலும் வெளி வரமுடியாமல் போனதால் அவனது தலை வெடித்து உயிர் மூச்சு வெளிப்பட்டது. அசுரன் இறந்து வீழ்ந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் தமது திவ்யமான பார்வையை செலுத்தியதும் அவரது நண்பர்களும் கன்றுகளும் உணர்வு பெற்று, அரக்கனின் வாயில் இருந்து வெளி வந்தனர். தேவர்கள் பேருவகை பூத்து முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரின் மேல் மலர்மாரி பொழிந்து அவரை வணங்கினார்கள். வானுலக வாசிகள் மகிழ்ச்சியால் நடனமாடினார்கள். பிராமணர்கள் வேதம் ஓதினார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பகாசுர வதம்

ஆயர் குலச் சிறுவர்கள் எல்லோரும் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்துவார்கள். அவ்வாறு ஒரு நாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, உருவத்தில் வாத்தைப் போலவும், ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டனர். அதன் அசாதாரன வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர் பகாசுரன் ஆகும்.

அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரது தோழர்களும் என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால் பகாசுர அரக்கன் ஸ்ரீ கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவது போல் உணர்ந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ஷரின் ஒளிமிகு சக்தியினாலேயே அரக்கனின் தொண்டையில் அவ்வாறு எரிச்சல் ஏற்பட்டது.

உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் உமிழ்ந்துவிட்டு, தன் கூரிய அலகுகளால் அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த மாபெரும் பறவையின் அலகுகளைப் பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன் கோபால நண்பர்களின் முன்னிலையில் அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்தில் இருந்து சுவர்க்க வாசிகளான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். மலர் மாரியுடன் தாரைகளும் தப்பட்டைகளும், சங்கங்களும் ஒலித்தன.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பழக்காரிக்கு அனுக்கிரகம்

ஒரு நாள் ஒரு பழக்காரி நந்தகோபரின் வாயிலுக்கு வந்தாள். “பழம் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று அவள் கூவியதைக் கேட்ட குழந்தை கிருஷ்ணர், சிறிது தானியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பழம் வாங்க சென்றார். அக்காலத்தில், கொடுக்கல் வாங்கல் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. அவரின் தாய் தந்தையர் அவ்வாறு பண்டமாற்றம் செய்ததைக் கவனித்திருந்து அவரும் அப்படியே செய்ய முற்பட்டார். ஆனால் அவரின் கைகள் மிகவும் சிறியவையாக இருந்ததால், தானியங்கள் கீழே சிதறின. இதைக் கண்ட பழக்காரி, குழந்தை கிருஷ்ணரின் அபார அழகில் மனதைப் பறிகொடுத்து, அவர் கையிலிருந்த தானியத்தின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல் பழங்களைக் கை நிறையக் குழந்தை கிருஷ்ணருக்கு கொடுத்தாள்.

அதே சமயத்தில் அப்பழக்காரியின் கூடை முழுவதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், ஆபரணங்களாலும், பொன்னாலும் மணியாலும் நிறைந்து விட்டது. உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த, உள்ளத்தால் கொடுக்கப்பட்ட பழங்களுக்காக பகவான் அவளுக்கு செல்வம் கொடுத்து அனுக்கிரகித்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – நளகூவரன் மற்றும் மணிக்கிரீவன் சாப விமோசனம்

வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.


குவேரனின் இவ்விரு மைந்தர்களும் மது, மாது விடயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள்.


அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.


சத்தத்தைக் கேட்டு நந்த மகாராஜாவும் கோகுலவாசிகளும் ஓடி வந்தனர். கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தேவர்கள் தோன்றியதை கூறினார்கள். நந்தகோபர், கிருஷ்ணரை உரலில் இருந்து விடுவித்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தன் திருவாயில் பிரமாண்டங்களைக் காண்பித்தல்

பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார்.

அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழுவிக்கொண்டாள்.

 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – சகடா சூரவதம்

குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள்.

உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் காதில் விழவில்லை. பசியால் வருந்திய குழந்தை கோபமுற்று, எந்த சாதாரண குழந்தையும் செய்வதுபோல் கால்களைத் தூக்கி உதைக்கத் தொடங்கினார். குழந்தை கிருஷ்ணர் ஒரு சகட வண்டியின் கீழ் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர் கால்களை உதைத்தபோது வண்டியின் சக்கரத்தில் பட்டு அது பல துண்டுகளாக நொறுங்கியது. அந்த சகடமானது ஒரு அரக்கன். கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு கால்களால் உதைக்கப்பட்டதும் அரக்கன் மாண்டு விழுந்தான். ஓசை கேட்டு வந்த யசோதை, குழந்தை கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பிராமணர்களை அழைத்து, கொடிய தேவதைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படாமலிருக்க, வேத மந்திரங்களை ஓதும்படி கேட்டுக்கொண்டாள்.

 

ஆழிப்பேரலை

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய நாளின் இறுதி மூச்சாய் விட்டுக் கொண்டிருந்தது. அந்திசாயும் இளம்மாலை நேரமானதால் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதும் வந்த கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதுமாக துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட.. அயல் தேச வியாபாரிகள் தாங்கள் தங்கள் தேசத்திலிருந்து கொணர்ந்த வைரம், ரத்தினம், வைடூரியம், கோமேதகம், பவளம், மரகதம் மற்றும் விலை உயர்ந்த கற்களிலான அலங்கார அணிகலன்களையும் வாசனை திரவியங்களையும் பல வேலைப்பாடுகளுடன் கூடிய பாத்திரங்களையும், அரேபிய வியாபாரிகளோ உயர்ஜாதி புரவிகளையும், பேரீச்ச பழங்களையும் உள்ளூர் வியாபர்களிடம் பண்டமாற்று முறையில் அதற்கு ஈடாக ஏலக்காய், மிளகு, வசம்பு, இலவங்கம், மிளகாய் மற்றும் பல வாசனை பொருட்களையும் அழகிய சிற்பங்களையும் கற்சிலைகளையும் தங்கம், வெள்ளி, முத்து, பவழமாகவோ அணிகலனமாகவோ மாற்றிக்கொண்டிருந்தனர்.

மாமல்லபுரத்தில் செல்வம் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது.. மாலை நேரங்களில் அந்நகர மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கூடி கடற்கரையில் சித்ரான்னம் சாப்பிடுவதும்… அலையில் அடித்து வரும் சோழிகளை சிறுவர்கள் சேகரித்து அதை அடுத்த குழந்தை மீது வீசி விளையாடுவதும்.. சிறுவர்களும் சிறுமிகளும் ஒருவருக்கொருவர் மணற்பரப்பில் சண்டை இட்டு உருளுவதை அவரவர் பெற்றோர்கள் வேடிக்கை பார்த்து மகிழ்வதும்… வாலிபவயது ஆண்களோ தங்கள் காதலியின் மீது கடற்கரை நண்டுகளை விட்டு அவர்கள் அலறும் சத்தத்தைக் கண்டு ரசிப்பதும்… பெண்கள் தாங்களும் ஆண்களுக்கு சற்றும் சலைத்தவரில்லை என்பதை நிரூபிப்பது போல ஆண்கள் மீது அலையின் நுரையை இரு கைகளிலும் அள்ளி அவர்களுக்கு தெரியாமல் தலை மீது ஊற்றச் செய்து உடலை நனைத்து கைகொட்டிச் சிரிப்பதும் அன்றாடம் நடக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள்.

அன்று சித்ரா பௌணர்மி, நிலவுக் காதலி அலைக் காதலன் மீது தன் ஒளியை பாய்ச்சி அதனை வெள்ளிப் பாளங்களாய் கடலில் மிதக்க விட்டுக்கொண்டிருக்க, அந்த அலையோ சில்லென்று வீசும் காற்றை தன்னில் வாங்கி நிலவுக் காதலியை பிடிக்க முடியாத கோபத்தில் ‘ஹோ’வென்ற பேரிரைச்சலை பெருமூச்சாய் விட்டுக்கொண்டிருந்தது. அந்த அலையின் ஓசையையும் மீறி உளியின் ‘ணங்’, ‘ணங்’ ஓசை கேட்கிறதென்றால் சிற்பிகள் பாறையில் சிலையை செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் அந்த இரவு வேலையில் எங்கெல்லாம் உளியின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் கண்டிப்பாக அந்த பித்தன் இருக்க வேண்டும் அலையின் ஓசையும் சில்லென்று வீசும் உப்புக்காற்றையும் பொருட்படுத்தாமல் கற்சிலையை சிரத்தையாய் செதுக்கிக்கொண்டிருப்பான் அவன். கண்கள் பஞ்சடைந்து உடல் மெலிந்து தலை முழுவதும் கடல் நுரையை தலையில் கொட்டியபடி நரை படர்ந்து வியாபித்திருப்பதும் மோவாய் முதல் தொடை வரை நீண்ட தாடியும் பார்ப்பதற்கு பரதேசியாய் காணப்பட்டாலும் உடல் செதுக்கிய பாறையாய் உறுதியுடன் இருப்பது மட்டும் யாருக்கும் எளிதில் புரியாத அதிசியம். தள்ளாத வயதிலும் கையில் உளியுடன் தான் காணும் பாறையில் எல்லாம் தனக்கு தோன்றிய உருவங்களை நடு ஜாமம் வரை செதுக்கிக் கொண்டு… கிடைப்பதை உண்டு நகரமெல்லாம் சுற்றி வந்த போதிலும் அவன் உறங்குவதற்கு மட்டும் சரியாக இளவஞ்சியின் வீட்டிற்குச் சென்று விடுவான். அன்று அவனது கால்கள் மணலில் சிக்கி தள்ளாடுவதையும், சிக்கிய கால்களை பெரும் பிராயத்தனம் பட்டு வெளியே எடுத்து மெல்ல மெல்ல இளவஞ்சியின் குடிலை நோக்கி முன்னேறியபடி நடக்க… அவன் மனமோ பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

‘எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வரவேண்டாம் என்று…’ ஊருக்கு ஒதுக்குபுறமாய் அமைந்த குடில் அது… வெண்ணிலவு தலைக்கு நேர் வரும் நள்ளிரவு வேளை.. உளி கொண்டு அடித்த உடம்பின் வலியை சோமபாணம் உண்டு மயங்கிய நிலையில் மணல்தரையில் கால்கள் கோலம் போட இளவஞ்சியின் குடிலை வந்தியசேனன் அடைந்தபொழுது அவள் கேட்ட முதல் கேள்வி அவனை மேலும் தடுமாற வைத்தது..

இளவஞ்சி… பேரரசு முதல் பெருந்தனக்காரர்கள் வரை விரும்பும் போகப்பொருள்.. அலைமகள் அள்ளித்தந்த விலைமகள்.. ஆம்… சில ஆண்டுகள் முன் கடலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.. அந்தப் பெருமழையில் கடலில் சென்ற படகுகள் கவிழ்ந்து அதில் பயணித்த அனைவரும் மூழ்க… ஒரு பெட்டியில் பத்திரமாக அலையில் அடித்து கரை சேர்ந்த அந்த மழலையை ‘இளவஞ்சி’ என்று நாமம் சூட்டிய வளர்த்தவள் ஊரின் நாட்டியக்காரி. மழலையாய் வந்தவள் முலை வளரும் பருவம் வந்தவுடன் முறைப்படி கோவிலில் பொட்டு கட்டி விடப்பட.. அந்த ஊரின் தேவதாசியானவள்.

‘என்ன செய்வது… நீயும் அனாதை… நானும் அனாதை… பகல் முழுவதும் பாறையை செதுக்குவதும்.. மாலை வந்தால் வலியை மறக்க மதுவை அருந்துவதும் இரவு வந்தால் இன்பம் பெற உன்னை சந்திப்பதும் முறை மாறாமல் நடப்பதுதானே…’

‘அதற்குத்தான் கூறினேன்.. ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள் என்று’

‘அது ஏன் நீயாக இருக்கக் கூடாதா…’

‘என்ன குடித்து விட்டு பிதற்றுகிறாய்… நீ வாழவேண்டியவன்… வாலிபன்… நானோ நாட்டியக்காரி… பகலில் நாட்டியமாடி இரவில் ஊருக்கே விருந்து படைப்பவள்… உனக்கு மட்டும் எப்பொழுதும் தனியாக விருந்து படைத்தல் என்பது நடவாத காரியம்… அதை ஊரும் ஏற்காது… அது மட்டுமல்ல நீயோ இளையவன்.. நானோ மூத்தவள்…‘

‘மெய்ப்பசிக்கு தெரிகிறதா வயதும் ஆசையும்…’

‘அப்படிச் சொல்லவில்லை….’

‘பின்னர் எப்படி…. பெருந்தனக்காரர்களை மட்டுமே விரும்பும் நீ.. என்னை மட்டும் எப்படி விரும்பினாய்.. உன்னுடன் சேர்த்துக்கொண்டாய்..’

‘அது வந்து….’

‘சொல்… ஏன் தடுமாறுகிறாய்..’

‘மற்றவர்களிடமிருந்து வேண்டிய பொருள் மட்டும்தான் கிடைக்கிறது… பாசம்… நேசம்.. ம்ம்ம்.. அது உன்னுடன் பழகுவதில் மட்டும் தான் கிடைக்கிறது… அன்பும் கனிவான பேச்சும் இனிமையான நட்பும் என்னை உன்னுடன் பகிர்வதில் மனதிருப்தியும் கிடைக்கிறது… இது தான் என்னை உன்னிடம் இணைத்தன் ரகசியம்.. புரிகிறதா.. அதற்கென்று இந்த உறவை அடிக்கடி தொடர்வது சரியென்று கூறமாட்டேன்.. உனக்கென்று ஒருத்தி கண்டிப்பாக பிறந்து இருப்பாள்… அவளை வாழ்க்கை துணையாக ஏற்று… இல்வாழ்வை நல்லறமாய் நடத்து…’ அந்த அறையில் உள்ளே காற்றில் அசைந்த நெய்விளக்கின் சுடரொளி அவளின் பேச்சை ஆமோத்திப்பதாய் தன் தலையை அசைக்க, சொன்னவளின் நெஞ்சில் தன் நெஞ்சம் பதித்து… மெய்மறந்து பஞ்சணையில் கள்ளை உண்ணும் வண்டாய் அவள் மேனியில் மேல் மேவும் வேளையில்… கண்கள் கூசும் காட்சியைக் கண்டு வீசிய காற்றில் நெய்விளக்கு தன் ஒளியை அணைத்துக் கொண்டது அவர்களைப் போல. முயக்க நிலை முடிந்து மயக்க நிலையில் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த அந்த கணப்பொழுதில்… வாசலின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

அந்த குகையின் இருளை தீப்பந்தங்கள் விரட்டிக் கொண்டிருக்க… ஒரு உயர்ந்த பாறையில் அமர்ந்திருந்த தலைமைச் சிற்பி விக்கிரமவர்மர் தனக்கு அடுத்த நிலையுள்ள நான்கு தலைமை சிற்பிகளும் வந்து விட்டார்களா என்று அருகில் இருந்த தன் உதவியாளனைக் கேட்க..

‘வந்தியசேனன் மட்டும் வரவேண்டும்.. ஆள் அனுப்பி இருக்கிறேன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான்… நீங்கள் கூற வேண்டியதை கூற ஆரம்பியுங்கள்..’

‘அவனும் வரட்டும்.. எங்கே போய்விடப்போகிறான்.. அந்த தாசி வீட்டில் தான் இருப்பான்… பாவம்.. அனாதை.. மிகச் சிறந்த திறமைசாலி… எதற்கு இப்படி கள்ளுண்ணுவதிலும் காமகளியாட்டத்திலும் நேரத்தை வீணடிக்கிறானோ… அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் திருந்தி விடுவான்…’

‘நீங்கள் தான் அப்படி கூறுகிறீர்கள்.. ஆனால் கள்ளுண்ணுவதும்… கன்னியை ஆள்வதும் போதுமென்று நினைத்து விட்டானோ என்னவோ…’ மூத்த சிற்பி உரைக்க…

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்…’ மற்றொரு சிற்பி அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.

‘இவன் கல்லுடனே காலத்தை செலவழித்து உளியாய் மாறியவனாயிற்றே… இரும்பை கரைக்க ரசாவாதம் தெரிந்த சித்தரைத்தான் வரவழைக்க வேண்டும்’ தான் ஏதோ விகடமாய் கூறியதாக நினைத்து கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தார் மூத்த சிற்பி மறுபடியும்.

‘என்ன ஒரே சிரிப்பு… எனக்கும் சொன்னால் நானும் ரசிப்பேன் இல்லையா…’ கூறியவாரே உள்ளே நுழைந்தான் வந்தியசேனன்.

‘வா.. வந்தியசேனா… அப்படி அந்த பாறையில் அமர். உனக்காகத்தான் காத்திருந்தோம்.. இன்னும் ஆலோசனையை துவங்கவில்லை… ‘

‘சொல்லுங்கள் தலைமை சிற்பியாரே…. விடிவெள்ளி தோன்றும் வேலையில் பிடிகொண்டு அழைத்து வரக் காரணமென்ன…’

‘கூறுகிறேன்… அதற்கு முன் நாம் கட்டிக்கொண்டு வரும் கடற்கரைக்கோவில் வேலை எந்த நிலையில் இருக்கிறது…’

‘இன்னும் ஒரு மண்டலத்தில் முடிந்துவிடும்… சுற்று மதிற்சுவர் வேலை, கோபுர சிற்ப வேலை மற்றும் கோவிலின் கருவறையின் கடவுள் சிலை உருவாக்கம் மட்டும் முடித்தாக வேண்டியுள்ளது…’ மூத்த சிற்பி சொல்லச் சொல்ல ஆழ்ந்து கேட்ட விக்கிரமவர்மர்,

‘இன்று மாலை காஞ்சியிலிருந்து அரசர் ஒரு சேதி அனுப்பியிருந்தார்… வரும் சித்ரா பௌர்ணமியில் கோவிலின் குடமுழுக்கு நடத்த முடிவு செய்திருப்பதை.. அதற்கு இன்னும் சரியாக இரண்டு திங்கள் தான் உள்ளது.. எனினும் கடைசி நாள் வரை வேலையை தள்ளிச் செல்வது உசிதம் அல்ல… அதற்குள் எப்படியாவது முடித்து விடவேண்டும்.. என்ன புரிகிறதா…’
‘அதற்கு ஆட்கள் நிறைய தேவைப்படுமே…’

‘தேவையான ஆட்களை வெளி ஊர்களிலிருந்து வரவழைத்துக் கொள்வோம்… இப்பொழுது அதுவல்ல பிரச்சனை… எனக்கு ஒரு மற்றுமொரு ரகசிய செய்தி கிடைத்தது..’

‘என்ன…’ அனைவரும் ஆச்சிரிய முகத்துடன் அவரைப் பார்க்க…

வரும் அமாவாசையன்று அரசர் ரகசிய விஜயமாய் இங்கே வருவதாக செய்தி அறிந்தேன்.. எப்படியும் சில நாட்கள் இங்கே தங்க உத்தேசிட்டு இருப்பதாக கேள்விபட்டேன்..’
‘வரட்டுமே… அதற்கும் நாம் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம்..’

‘சம்பந்தம் இல்லாமல் இதனை சொல்வேனா… அப்படி தங்கும் நாட்களில்… ஏதாவது ஒரு நாளாவது கடற்கரை கோவிலில் நடைபெறும் வேலையை பார்வை இட வராமலிருப்பாரா என்ன… அதனால் இன்னும் அரைத்திங்களில் அதாவது வர இருக்கும்.அமாவாசைக்குள்… நாம் முடிந்த அளவு வேலையில் தீவிரம் காட்ட வேண்டும்… அதற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்க வேண்டும்… இந்தச் செய்தியைக் கூறவே உங்களை அழைத்தேன்… ‘ என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல அவர் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க…

‘கண்டிப்பாக… வேலையை ஆளுக்கு சமமாக பிரித்து நேரம் காலம் இல்லாமல் உழைத்தால் போதும்… முடித்து விடலாம்..’ வந்தியசேனன் சொல்ல..

அவன் சொல்லை அனைவரும் ஆமோதித்து பிரிந்தனர்.

துள்ளி வரும் கடலலையை தள்ளி நின்று பார்ப்பதும்.. தூர நகர்ந்தபின் ஓடிப் போய் கால்களை நனைப்பதுமாய் அந்த இரண்டு கன்னிகள் கடற்கரையையில் விளையடிக்கொண்டிருந்தனர்.
‘எழுனி… போதும் ஓடியாடியது… கால்கள் வலிக்கின்றன… வா வீட்டுக்குச் செல்வோம்.. அலைகள் பெரிதாக வருகின்றன.. ஆபத்தை விலைக்கு வாங்காதே” அவளுடன் வந்த தோழி சொல்ல… எதையும் காதில் வாங்காமல் அவள் அலைகளை ரசித்தப்படி தண்டை அணிந்த கால்கள் மணலில் செருக கெண்டை மீன் கண்கள் சுழல ஈர மண்ணில் ஆசை தீர விளையாடி மகிழ்ந்தாள் அவள்.

எழுனி… காஞ்சியை ஆளும் இரண்டாம் நரசிம்மவர்மரின் கப்பல்படைத் தலைவன் தழும்பனின் ஒரே செல்ல மகள், முட்டி மோதி திமிரும் பெண்மையை மூடி மறைத்தும், கெட்டியாக கைவைத்து மறைத்தும், விட்டு விட்டு வீசும் கடற்காற்றில் தறிகெட்டு கலைகிறது அவள் கட்டியிருந்த சேலை. பருவம் வளர்ந்து பார்ப்பவர்களின் புருவம் உயர்த்தும்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை மெச்சும் அழகி.. சுருங்கச் சொன்னால் பேரழகி.

‘நான் சொல்வது எதுவும் காதில் விழவில்லையா… ‘

‘ஆமாம் விழத்தான் செய்கிறது.. இந்த இரவு வேளையில் எங்கிருந்தோ உளியின் ஓசை கேட்கிறதே… எங்கே என்று கவனித்தாயா..’

‘கேட்டேன்.. அந்த பாறை இடுக்கிலிருந்துதான் கேட்கிறது..’

‘இந்த வேலையில் யார் கல்லைச் செதுக்குவது..’

‘அது யாராகவேணும் இருந்துவிட்டு போகட்டும்.. நமக்கெதற்கு வா… வீட்டிற்குப் போய்விடலாம்..’

‘இரு… சென்றுதான் போய் பார்ப்போமே..’

‘வேண்டாம் இந்த விவரீதம் எழுனி.. சொல்வதைக் கேள்..’ அவள் சொல்லச் சொல்ல கேளாமல் அந்தப் பாறையின் அருகில் செல்ல..

அங்கு தீப்பந்த ஒளியில் வந்தியசேனன் கோவிலின் கருவறை சிலையை வடிக்க பாறையை வெட்டியபடி இருந்தான், அவனின் கருத்த உருவமும் கல்லில் உளி கொண்டு செதுக்கும் கைகளின் தசைச் திரளும் உடம்பில் வழியும் வேர்வையும் தீப ஓளியில் மின்ன.. அப்படி ஒரு இளைஞனை எழுனி தன் வாழ்நாளிலே காணாததைப் போல காண..

இருட்டில் எரியும் தீப்பந்த வாசனையும் மீறி அவர்களின் வளையோசையும் தலையில் சூடிய மலரின் வாசமும் உளியின் வேகத்தைக் குறைக்கச் செய்தது… தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தவன்..

‘யாரது… ‘ உரத்த குரலில் அதட்ட..

‘பார்த்து விட்டான்.. வா சென்று விடுவோம்…’ தோழி சொல்ல… ஓடும் வேளையில் பாறையின் விளிம்பில் எழுனியின் கைபட்டு கைவளைவி உடைந்து கையைக் கீற… அவளோ… ‘ஆ‘வென கத்த… அருகில் வந்த வந்தியசேனன் இரண்டு கன்னிகளை கண்டு திகைத்தான்.

‘நீங்கள்…’ தோழி வாய் திறக்க…. அவளின் வாயை மூடிய எழுனி…

‘நாங்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள்…. உறவினர் வீட்டிற்கு வந்துள்ளோம்… கடற்கரையைப் பார்க்க வந்தோம்… இருட்டி விட்டது… உங்களின் உளி சத்தம் கேட்டு உதவி கேட்கத்தான் வந்தோம்..’

‘ஓ… இந்த இருட்டில் இனி தனியாக வரவேண்டாம்… இங்கு கயவர்கள் கள்ளுண்ண இரவில் வருவார்கள்.. சீக்கிரம் இடத்தை விட்டு நகருங்கள்..’

‘வழி தெரியவில்லை… தாங்கள் நல்லவர் போலத் தெரிகிறது… வழித்துணையாக வந்தால் நல்லது..’

‘ஆகட்டும்… முதலில் காயத்தைச் சுற்றி கட்டு போடுங்கள்… இரத்தம் வீணாகிறது…’
கிடைத்த பச்சிலைகளைக் கொண்டு காயத்துக்கு மருந்திட.. எழுனியோ அவனின் திடமான அங்கங்களின் அழகிலும், அடுத்தவர் நலம் காணும் சிரத்தையும் கண்டு மலைத்தாள்.. திளைத்தாள்… உணர்வை இழந்தாள்… உள்ளத்தை பறிகொடுத்தாள்.

அடி மேல் அடி வைத்தால் அம்மி நகருமோ இல்லையோ கற்பாறை மேல் படும் உளியின் அடி மேல் அடியால் அது தன் உருவமிழந்து சிலையின் வடிவைப் பெறும் என்பது சிற்பக் கலைஞர்களின் கூற்று. வந்தியசேனன் மிகவும் சிரத்தையாக அந்தச் சிலையை வடித்துக் கொண்டிருந்த மறு இரவில்…

‘என்ன சிற்பியாரே…. சிலை இன்னும் முழுமைபெற எத்தனை இரவுகள் தேவைப்படும்…’ எழுனி கேட்கவும்..

‘யார் அது…’

‘அதற்குள் மறந்து விட்டீர்களா…’

‘இல்லை இல்லை… நேற்று நடந்ததை இன்றே மறக்கும் அளவுக்கு வயதாகவில்லை… எங்கே உங்களின் வால் நட்சத்திரம்…’

‘என்னது…’

‘இரவில் தானே நட்சத்திரத்தைக் காண முடியும்… அதுவும் நீங்கள் நட்சத்திரம் என்றால் உங்கள் பின்னாடியே சுற்றித் திரியும் வால் அதான் உங்கள் தோழியைத்தான் அப்படி கேட்டேன்..எப்பொழுதும் உங்கள் அருகில் இருப்பார்களே… இன்று எங்கே என்று..’

‘ஓ… கல் உடைக்கும் சிற்பிக்கு கூட கொல் என்று சிரிக்க வைக்கும் சொல் பிறக்குமா என்ன..’

‘ஏன்… கல்லுடன் பழகுவதால் எங்கள் மனமும் கல்லாகி விட்டாதா என்ன… ‘

‘தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா.. ‘

‘இல்லை..’

‘ஓ… அதுதான்.. பகல் இரவு பாரமல் சிலையையே கொத்திக் கொண்டிருக்றீர்களோ…. மனைவி என்று ஒருத்தி இருந்தால் இப்படி இருக்கமாட்டீர் இல்லையா..’

‘எப்படி…’

‘இரவில் அதுவும் குளிர் காற்றில் இப்படி வேலை செய்தால்… எந்த மனைவிதான் அமைதியாய் இருப்பாள்…’

முழு நிலவு தேய்பிறையாக, பிறை நிலவு காதலோ முழு நிலவாய் மாறத் தொடங்கியது தொடர்ந்த நாட்களில்.

ஒரு இளம் மாலைப் பொழுதில்..

‘எழுனி நான் சொல்வதைக் கேள்… உன் தகுதிக்கு அவன் உகந்தவன் அல்ல..’

‘ஏன்… ஏழையை மணந்தாள் பாழ் ஆகிவிடுமா வாழ்க்கை…‘

‘அவன் தாய் தந்தை அற்ற தனியாள்… நீ தரணி ஆளும் அரசனின் கப்பல்படைத்தளபதியின் மகள்… புரிந்து கொள்..’

‘ஓ….’

‘அது மட்டுமில்லை.. மற்றொரு காரணம் இருக்கிறது…’

‘என்ன…’

‘சொல்ல நா கூசுகிறது…’

‘தொண்டை வரை வந்துவிட்டது முழுங்கி விடாமல் முழுவதையும் கொட்டி விடு..’

‘அவன் ஊர் தாசியிடம் அடிக்கடி செல்வானாம்.. அதனால்..’

‘அதனால் அவன் கெட்டவன்.. அப்படித்தானே சொல்கிறாய்…’

‘ஆமாம்…’

‘அரசன் முதல் ஆண்டி வரை ஆண்கள் செய்வதுதானே… இதில் அதிசியம் என்ன இருக்கிறது… தாசியிடம் செல்பவனும் சோமபாணம் அருந்துபவனும் கெட்டவன் என்றால்… உலகில் இருக்கும் அனைத்துப் பெண்களும் கன்னியாகவே காலம் தள்ள வேண்டியதுதான்..’

‘தெரியாமல் நடந்தால் பராவாயில்லை… இங்கே தெரிந்து விட்டதே அவனின் அருகதை…’

‘ஓ.. தெரியாமல் தவறு செய்யலாம்… தெரிந்து தவறு செய்யக் கூடாதா… அப்படித்தானே சொல்கிறாய்.. ஒன்று சொல்கிறேன்.. நீ சொன்னது அனைத்தையும் வந்தியசேனன் கூறிவிட்டான்.. அது அறியாத வயதில் புரியாமல் செய்தது… அன்பு காட்டவும் ஆதரவு தரவும் ஆட்கள் இல்லை… அவனுக்கு ஒரே ஆறுதல் அந்த இளவஞ்சி தான்… இனி தவறு செய்ய மாட்டான் என்று உறுதி அளித்திருக்கிறான் என்னிடம்..’

‘காதல் அவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதா…’ தோழி சொல்ல கன்னம் சிவந்தாள் எழுனி.
காஞ்சி மன்னனின் ரகசிய வருகை படைத்தளபதிகள் மட்டுமே அறிந்த ரகசியமாய் காக்கப்பட… அரசர் தங்ககுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் மன்னரின் கிழக்கு கப்பல்படைத் தலைவனும் எழுனியின் தந்தையுமான தழும்பன்.

தேய்பிறை முடியும் நாளின் பின்னிரவில் மன்னன் தன் முக்கிய அரசு அதிகாரிகளுடன் ரகசிய வீட்டில் தங்கினான், படைத்தலைபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்திவிட்டு ஓய்வாக தங்கி… பின்னர்… மாலையில் அரசு அதிகாரிகள் மற்றும் படைத்தளபதிகளின் குடும்பத்தாருடன் சற்று அளாவளாவிய பொழுதுதான் கவனித்தான் எழுனியை… அவளின் அழகில் மெய்மறந்தான்… மதி மயங்கினான்… தன்னை அவளிடம் பறிகொடுத்தான்… பின்னர் அவள் யார் எவர் என அறிந்து… தழும்பனை தனியாக அழைத்து வரச் சொன்னான்.. கட்டளைக்குப் பணிந்து அரசனின் அறைக்குச் சென்றான் தழும்பன்..

‘’வாரும் தளபதியாரே….’

‘மா மன்னர் வாழ்க… தாங்கள் அழைத்ததன் காரணம் அறிய விழைகிறேன்… வரவேற்பில் தவறா… பாதுகாப்பில் பிழையா…’

‘அமருங்கள்… உங்களிடம் தனியாக ஆலோசனை நிகழ்த்த வேண்டும்…’

‘கூறுங்கள் மன்னா…. செய்வதில் சித்தமாய் இருக்கிறேன்..’

‘எழுனி தங்கள் மகளா…’

‘ஆம் மன்னா…’ எழுனியின் அழகில் மயங்கினோம்… மதி இழந்தோம்… அவளை மணந்து கொள்ள விரும்புகிறோம்… என்ன கூறுகிறீர்கள்…‘

‘மன்னா….’ அதிர்ச்சி அடைந்த தழும்பன் தன்னை அறியாமல் அலறிட..

‘எழுனியை மணந்து காஞ்சிக்கு அழைத்துச் செல்கிறோம்… தங்களையும் போர்ப்படை அதிகாரியாக பதவி உயர்வு செய்கிறோம்‘

‘மன்னா… அதிர்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை… இது என் பாக்கியம்..’

‘நாளை அமாவாசை… நிச்சியம் செய்கிறோம்…. வரும் சித்ரா பௌர்ணமி அன்று திருமணம்‘
மன்னரிடம் விடைபெற்று மகளைப் பார்த்து மகிழ்ச்சியைப் பகிற சென்றான் எழும்பன்.
‘அப்புறம்.. என்ன முடிவெடுத்தாய் வந்தியசேனா…’

கண்ணோடு கண் பட்டு கலந்தது முதல் காதலில் விழுந்தது வரை எழுனியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் அனுபவத்தையும்…. கடந்த இரண்டு நாட்களாக அவள் வராதததையும் அதனால் தான் மன வேதனையில் விழுந்ததையும் கூறி முடித்தவன்… எப்படியோ அவளின் இருப்பிடத்தையும் பிறப்பையும் அறிந்தேன் அவள் தோழி மூலம்.

அவள் கப்பற்படைத்தலைவன் எழும்பனின் மகளாம்… அவளை அரசர் மணக்கப் போவதாகவும் அறிந்தேன்.. வாய் குழறியபடியே மனவேதனையில் சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த மதுப்பழக்கத்தை எழுனியிடன் கொடுத்த உறுதியையும் மீறி அளவுக்கதிகாமாக குடித்துவிட்டு வந்து உளறியபொழுதுதான் இளவஞ்சி அவனைப் பார்த்து அப்படிக் கேட்டாள்.

‘சொல்.. அப்புறம் என்ன முடிவெடுத்தாய்…’

‘என்ன செய்வது… எழுனியும் கையறு நிலையில் அவதியுறுவதாகவும்… தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும்… பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தோழி மூலம் அறிந்தேன்..’
‘அதற்காகவா அளவுக்கதிமாக குடிப்பது…’

‘அவளை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்… நீதான் ஒரு உபாயம் செய்ய வேண்டும்…’
‘இது அரசர் சம்பந்தப்பட்டது… ஆபத்து மிக்க அதிகம்…. அவசரப்படவேண்டாம்.. உரிய நேரத்தில் உதவுகிறேன்..’

‘இன்னும் இரண்டு நாட்களில் பௌர்ணமி.. அதற்குள்..’

‘புரிகிறது உந்தன் வேதனை… எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது…’

‘என்ன… சொல் இளவஞ்சி..’

‘ஒரு கட்டுமரத்தை மட்டும் ஏற்பாடு செய்துகொள்… அவளை எப்படியாவது அழைத்து வந்துவிடுகிறேன்… நீங்கள் இருவரும் தூர தேசத்திற்கு சென்றுவிடுங்கள்.. என்ன சரியா..’
‘இளவஞ்சி இதை மட்டும் நீ செய்தால்… உன்னை உயிர் இருக்கும் வரை நினைவில் கொள்வேன்..’

‘உந்தன் நட்புக்கும்… உன்னால் எனக்கு கிடைக்கும் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் முன் இந்த உதவி எம்மாத்திரம்… கவலைப்படாமல் சொன்னதை மட்டும் ஏற்பாடு செய்… எல்லாம் நல்லபடியாக நடக்கும்..’

விடிந்தால் பௌர்ணமி, ஊரே விழாக்கோலம் பூத்திருந்தது… கோவிலின் குடமுழக்கு வேலைகள் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, மறுபுறம் எழினிக்கு மருதாணி இடவும்… மணக்கோல அலங்காரங்களைச் செய்யவும்… இளவஞ்சி அவள் அறைக்குச் சென்றவள்….

‘எழுனி எல்லாம் தெரியும் எனக்கு…. உனக்காக என் குடிலில் வந்தியசேனன் காத்துக் கொண்டிருக்கிறான்… உன் உடைகளை நான் அணிந்து கொள்கிறேன்… நான் எப்படியோ இங்கு சமாளித்துக் கொள்கிறேன்… உடனே அங்கு செல்’ உணர்ச்சிப் பெருக்கில் அவளை ஆரத்தழுவிய எழுனி…. அவள் சொற்படி கேட்டு… அங்கிருந்து நகர்ந்தாள்.

அந்த நடுசாம நேரத்தில் இளவஞ்சியின் குடிலில் எழுனியும், வந்தியசேன்னும் சந்திக்க… பிரிந்தவர்கள் கூடினால் பேச வார்த்தை வராமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிய, உணர்ச்சி மேலீட்டால் இருவரும் தழவி உடுத்திருந்த ஆடை நழுவுவதை கூட கவனியாமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆடையாயினர், இருமனம் இணைந்தபின் திருமண நாடகம் எதற்கு என்பது போல அக்கணமே பிணைந்தனர், மீறிய உணர்ச்சிப் பெருக்கில் கூடிய இருவரும் களைப்பில் கண்ணயர… கோழி கூவுவதைக் கேட்டபிறகு தான் விழிப்பே வந்தது. இருவரும் களைந்த ஆடைகளை திருத்தி பிரயாணத்திற்கு கிளம்பத் தயாராயினர்.

பௌர்ணமி தினம் என்பதால் பனை மர உயர அலைகளை கடல் கடும் சீற்றத்துடன் வீசிக்கொண்டிருந்தது. விடியும் காலைப்பொழுதை விடிவெள்ளி கிழக்கில் தோன்றி அறிவித்தது…. அசுர பலத்துடன் அந்த கட்டுமரத்தை கடலில் செலுத்தினான் வந்தியசேனன்… அருகில் எழுனி கருநீலக் கடலின் சீற்றத்திலும் குளிர் காற்றிலும் படபடக்கும் நெஞ்சின் பயத்திலும் உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.

மகளைக் காணாமல் எழும்பன் தவிக்க… மறுபுறமோ அரசனுக்கு பதிலுரையாய் என்ன உரைப்பது என்று மனம் பேதலிக்க… இளவஞ்சியை அழைத்து விசாரிக்க.. அவள் எதையும் சொல்லாமல் மறைக்க… அவளின் குடிலில் ஆராய.. அங்கு எழுனியின் ஆடைகளில் கோர்த்த விலையுயர்ந்த கற்கள் சிதறி கிடப்படதைக் கண்டு வெகுண்டவன்.

இளவஞ்சியை மிரட்டி, சித்திரவதை செய்து நடந்தவற்றை அறிந்து தானே முன்னின்று தனக்கு மிக நெருக்கமான படை வீரர்களுடன் படகில் ஏறி எழுனியைத் தேட முற்பட்டான் எழும்பன்.
அதறக்குள் எப்படியோ தகவல் அரசனின் காதுக்குச் செல்ல… சினந்தவன்…வந்தியசேனனை உயிருடன் பிடித்து வருமாறு படைவீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

சித்ரா பௌர்ணமி நாள்… சந்திரன் அன்று நடைப்பெறப்போகும் மிகப்பெரிய அழிவைக் காணவோ என்னவோ பயந்து மேகப்பொதிதியில் மறைந்தபடியே கடலிருந்து தன் முகத்தை மேலே கொண்டு வந்தது.

காலையில் மந்திரங்கள் ஒத, ஓமகுண்டம் வளர்த்து, மிக கோலாகமாக குடமுழுக்கு விழா நடந்தது பொழுது….

‘பிடித்து விட்டீர்களா… அவனை’ எழும்பனை பார்த்து மன்னன் விளம்ப..

‘ஆம் மன்னா… தனி அறையில் அடைந்து வைத்துள்ளேன்’

தன் இருப்பிடத்திற்கு அவனை அழைத்து வரச்செய்து விசாரனை செய்தார் அரசர். ‘அவர்கள் இருவருக்கும் உதவிய இளவஞ்சி பெண் என்பதாலும் ஊரின் நாட்டியக்காரி என்பதாலும் மன்னித்து விடுதலை செய்தார் அரசர். அடுத்து வந்தியசேனனைப் பார்த்து அமைச்சர்…

‘அரசருக்கு நிச்சியக்கபட்ட பெண்ணை கவர்ந்து சென்று இருக்கிறாய்.. இது ராஜ துரோகம்… என்ன துணிச்சல் உனக்கு…’

‘மன்னிக்க வேண்டும் அமைச்சரே.. நிச்சியப்படுவதற்கு முன்பே என்னால் உச்சரிக்கபட்டவள்..’

‘அமைச்சரே இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..’

‘வழக்கம்போல் இவனை கடலில் கல்லைக் கட்டி வீசி எறியுங்கள்… ‘ அமைச்சர் சொல்ல…

‘ஆம்.. அதுதான் சரியான தண்டனை.. கோவிலின் குடமுழுக்குக்கு உயிர்பலி செய்ததாக இருக்கட்டும்.. அதுவும் இன்றிரவே…. ‘ அரசர் கட்டளையிட்டார்…. அடுத்து…. எழுனியைக்காண் அவள் அறைக்குச் சென்றார்…

‘உன்னை மணந்துகொண்டு அரசியாக்க நினைத்தேன்… நீ செய்த காரியத்திற்கு… உன்னை என் அந்தப்புரத்தின் ஆசை நாயகியாக இருக்க உத்திரவிடுகிறேன்… … இன்றிரவு என் பசிக்கு இரை நீ தான்.. யாரங்கே.. அழைத்துச் செல்லுங்கள் இவளை அந்தப்புரத்திற்கு’

‘அது ஒருக்காலும் முடியாது… நான் எச்சில் பட்டவள்… உன் இச்சைக்கு அடிபணிய மாட்டேன்..’ அவள் திமிரத் திமிர… ‘அழைத்துச் செல்லுங்கள் பாதுகாப்பாக அவளை.’ உத்தவிரட்டார் அரசர், சிறகொடிந்த கிளியாய் தங்கக்கூண்டில் அடைபடப்போவதை உணந்த எழுனி…

‘மன்னா… எனக்கு ஓரு ஒரு ஆசை… அதை மட்டும் நிறைவேற்றுங்கள்.. நான் உங்கள் சொற்படி கேட்கிறேன்..’

‘என்ன சொல்..’

‘வந்தியசேனனை கடலில் வீசும் முன் கடைசியாக ஒருமுறை அவர் முகத்தை காண அனுமதி கொடுங்கள் அது போதும்..’ யோசித்த அரசர்…

‘சரி அனுப்பிவைக்கிறேன்….’

அரசன் தன் பரிவாரங்களுடன் மலையின் உச்சியிலிருந்து விளக்கொளியில் மின்னும் கடற்கரை கோவிலையும் அதன் ஊடே நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் ரசித்தப்படி இருக்க.. அவன் மனமோ இரவு எழுனியுடன் நடைபெறப் போகும் உறவை நினைத்து நினைத்து களித்தது.

சங்கலியால் கட்டி வைத்த பாறாங்கல்லில் கண்கள் சொருக வந்தியசேனன் தன் கடைசி பயணத்திற்கு பிரயாணமானான்… ஒரு பொழுது வாழ்க்கை வாழ்ந்து மறு பொழுது தன் கண் முன்னே காதலன் உயிர் பிரியப்போவதை தாங்கொணாமல் கன்னம் சிவக்க அழுது… கண்கள் வீங்கி… தலைமுடி கலைந்து… உயிரற்ற பிணமாய் வீற்றிருந்தாள் படகின் மறுபுறம் எழுனி.
‘நடுக்கடல் வந்தாயிற்று… வீசி எறியுங்கள் அவனை….’ படகை ஓட்டிய தலைமைக் காவலன் சொல்ல… படகில் இருந்த பாறையோடு கட்டிய அவனை தூக்கி வீசும் சமயம்… ஓ என்று கதறியவாறு எழுனி அவன் மார்பில் விழுந்து கதற… அவளை தனியே பிரித்து.. அவனை கடலில் தள்ளும் சமயம்…. ‘வந்தியசேனா…’ ஆவேசம் கொண்டு எழுந்த எழுனி…. ஒரு தாவாய் அவனை கட்டித் தழுவியபடி தானும் கடலில் விழுந்து மூழ்கினாள்.

‘எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வராவேண்டாம் என்று…’

அந்தப் பெரியவர் இளவஞ்சியின் குடிலை அடைந்து கதவை தட்ட, திறந்த கதவில் ஊடே அந்த பெண் அவரைப் பார்த்து கூறவும் சரியாக இருந்தது.

‘பழகிவிட்டது…’

‘நேரத்தோடு வர வேண்டாமா… காத்திருந்து காத்திருந்து என் தூக்கம் தான் கலைகிறது.. மறுநாள் நான் நாட்டிய மாட சிறிது உறக்கம் அவசியம் இல்லையா…’

‘இனி எப்பொழுதும் இது மாதிரி நடவாமல் பார்த்துக்கொள்கிறேன்..’

‘இப்படி தாங்கள் கூறியதை கேட்டு கேட்டு எனக்கும் சலித்துவிட்டது..’

அவள் பொய்க்கோபத்துடன் அந்தப் பெரியவரை கைப்பிடித்து பஞ்சனையில் படுக்கவைத்து செல்ல… அவளின் தலையைக் கோதிய்வாறு….

‘இன்பவல்லி…. நாளை முதல் அந்தி சாயும் பொழுதே வந்து விடுகிறேன்… நிம்மதியாக படுத்துறங்கு…’

‘எந்த “நாளை” என்று சொல்ல மறந்து விட்டீரே.. அப்பா…’

அன்று வந்தியசேனன், எழுனியின் உடல்கள் மூழ்கிய பொழுது கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் வீசிய ஆழிப்பேரலை வந்தியசேனனை மட்டும் கடற்கறையில் ஒதுக்க… வந்தியசேனன், இளவஞ்சியால் காப்பற்றப்பட்டு இன்பவல்லியைப் பெற்றபின் இளவஞ்சி இறக்க… அந்தக் குழந்தையை வந்தியசேனனே வளர்த்து பெரியவளாக்கி குலத்தொழிலான நாட்டியத்தையே கற்கவைத்து இறுதி மூச்சு வரை அவளுடனே வாழ்ந்து மடிந்தான்.

அன்று அந்தக் கடற்கரை கோவிலை ஆழிப்பேரலை தன்னுள் உள்வாங்கிக்கொள்ள இன்றும் அந்தக் கோவில் கடலில் மூழ்கியபடி மாமல்லபுரத்தின் தற்போதைய கடற்கரைக் கோவிலுக்கு சற்று தொலைவில் மூழ்கியபடி காணப்படுகிறது.

ஒரு ராஜ விசுவாசியின் கதை

காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம்.

வாசுகாறை என்னும் நாட்டை சுமவன் என்னும் அரசன் அறம் தவறாது ஆட்சி செய்து வந்தான்.சுமவன் மிக பெரும் சிவபக்தன், அதனால் நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரும் சிவாலயத்தை அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தான்.

நாட்டில் காலம் தவறாது மழை பொழிந்ததால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் சிறப்பாக நடந்து வந்தன. நாட்டின் ஒரு பக்கம் கடல் நீர் பரப்பி இருந்ததால், வாசுகாறைக்கு இரண்டு நன்மைகள். ஒன்று வாணிபம் செலித்தது மற்றொன்று அந்த பகுதி வழியாக எதிரிகளின் அச்சுறுத்தல்கள் குறைவு.

நாட்டின் மக்கள் சுயதிருப்தியுடன் செலிப்பாக வாழ்ந்து வந்தனர் அதானல் நாட்டின் கஜானாவும் நிரம்பி இருந்தது. ஆலய பணிகளுக்காக செல்வத்தை கணக்கிடாமல் சுமவன் செலவழித்து கொண்டிருந்தான்.

வாசுகாறை-க்கு அவ்வப்போது எதிரிகளிடம் இருந்து அச்சுருத்தல்கள் இருந்து கொண்டே இருந்தது இதற்கு நாட்டின் இயற்கை வளம் முக்கிய காரணம். நாட்டின் நடுவே கோடு கிழித்தார் போல் வாவலாறு எனும் ஆறு ஓடி நாட்டை செலிப்பாக்கியது. இத்தகைய செலிப்பிற்கு சுமவனின் ஆட்சி கொள்கைகளும் முக்கிய காரணம்.

வெறும் ஏட்டு கல்வி மட்டும் உதவாது என்று எண்ணிய மன்னன், தொழில் சார்ந்த கல்வி முறையை பெரிதும் ஊக்குவித்தான் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

இது போக முக்கிய கொளகையாக, வாணிபத்தில் ஈடு படும் தன் நாட்டை சேர்ந்தவர்க்கு போதுமான சலுகைகளையும் அளித்து வந்தான். வெளி நாடு வணிகர்களை அவன் பெரிதும் ஊக்குவித்ததில்லை. இதனாலேயே வாசுகாறை செல்வ செலிப்பு மிக்க நாடாக மாறியது.
இது போக பகைவர் நாட்டம் கொள்ள மற்றொரு காரணமும் இருந்தது அது, நாட்டின் இளவரசி பவதனி. பவதனி ஓர் பேரழகி,மன்னனுக்கு வேறு ஆண் வாரிசு கிடையாது அதானால் பவதனியை மணந்து கொண்டால் நாட்டையும் கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணத்தில் பகைவர்கள் இருந்தனர்.

சுமவன் ஆன்மிக பணிகளில் ஈடு பட்டிருந்ததால் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பினை தனது சேனாதிபதி வம்திரனிடம் ஒப்படைத்திருந்தான்.

வீரத்திற்கும் , தீரத்திற்கும் அடையாளம் வம்திரன். தவறு செய்தவர்கள் மன்னனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ இவனுக்கு பயப்படுவார்கள் அவ்வளவு கண்டிப்பானவன்.
மன்னன் தவிர்த்து எவருக்கும் அடிபணிய மாட்டான், சரியென பட்டதை இடம் , பொருள் , ஏவல் பாராது சொல்லிவிடுவான். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டி கேட்க்க தயங்கமாட்டான். இதெல்லாம் அவன் சிறு வயது முதல் கற்ற பாடம். இதானால் நிறைய எதிரிகளையும் சம்பாதித்திருந்தான். இவனது முதுகில் குத்த சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள் இதில் சில அமைச்சர்களும் அடக்கம்.

போர்தொழில் போக இவனுக்கு பல திறமைகள் உண்டு, அதில் பாடுவதும், இசைப்பதும் அவனுக்கு பிடித்தவை. வீணை எடுத்து மீட்ட ஆரம்பித்தால் இராவணனே தோற்று விடுவான் என்கிற அளவுக்கு எங்கும் ஒலிக்கும் இசை.

தனது நாடான வாசுகாறையை இரவு , பகல், குளிர், வெயில் பாராது, ஒரு நொடியும் தவறாது பாதுகாத்து வந்தான். நட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தனக்கு மிகவும் விசுவாசமானவர்களை ஒற்றர்களாக நியமித்திருந்தான்.

இதனால் ஏதேனும் பிரச்சனை தொடங்கும் முன்பே அதை வேறுடன் அழிக்க முடிந்தது.
எதிரிகளின் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதால், பவதினி நகர்வலம் செல்லும் பட்சத்தில் பாதுகாப்பு மிகவும் சிரத்தையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். வம்திரன் நிச்சயம் அங்கே இருப்பான் பவதனியின் மெய்காப்பாளனாக.

இவ்வாறு நட்கள் நகர்ந்து கொண்டிருந்தது, எதிரிகளின் சின்ன சின்ன சீண்டல்களை வம்திரன் வெற்றிகரமாக முறியடித்து வந்தான்.

***

சும்பனுக்கு சில நாட்களாக சரியான் தூக்கமில்லை, மேலும் துர்சொப்பனங்கள் வேறு, இதற்கான காரணம் அறிய அரசகுல ஜோதிடர் அறகசியை வரவழைத்தான்.

கிரக நிலைகளை ஆராய்ந்த அவர் மவுனித்தார். மன்னனின் பதட்டம் அறிந்த வம்திரன் அறகசியின் மவுனம் கலைத்தான்.

அவரிடம், அறகசி அவர்களை , தாங்கள் கண்ட கிரக நிலைகளை பற்றி விழக்கி சொல்லுங்கள் என்றான்.

அவ்ர் பெருமூச்சை விட்டு விட்டு சொல்ல துவங்கினார்,

“மன்னா, தங்களின் கிரக நிலை சரியாக இல்லை, இதனால் நாட்டிற்கு பெரும் ஆபத்து வரவிருக்கிறது.”

இதை சரி செய்ய எதும் வழிகள் இருக்கிறதா, சற்றே பதட்டபட்டார் மன்னர்

இருக்கிறது மன்னா, நமது அண்டை நாடான வார்சுழியில் அமைந்துள்ள சிவாலயத்தில் தாங்கள் தொடர்ந்து பதினாறு நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்றார்.

இப்போது வம்திரன் குறுக்கிட்டான், அவர்கள் எப்போது நம்முடன் போர் புரியலாம் என்று காத்திருக்கிறார்கள் அவர்களிடம் சென்று நாம் எப்படி உதவி கோர முடியும்.

மாற்று வழி ஒன்று இருக்கிறது மன்னா, அதை செல்லுங்கள் என்று அவசர படுத்தினான் வம்திரன்.

அது வேண்டாம் மன்னா.

பரவாயில்லை செல்லுங்கள் இங்கே நாம் மூவர் மட்டும் தானே இருக்கிறோம். சொல்லுங்கள் அறகசி.

நமது இளவரசிக்கு , மணமுடிதது அவளை மணப்பவனை வாசுகாறைக்கு மன்னனாக முடிசூட்ட வேண்டும்.

இவ்வளவு தானா இதை சொல்லவா தயங்கி நின்றீர்கள்.

இது மட்டும் இல்லை மன்னா, முடி சூட்டிய பின்னர் “நீங்கள், உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் மன்னா” என்று திக்கி தினறி சொல்லி முடித்தார்.

அவர் வாக்கியத்தை முடித்த நொடி, வெகுண்டெழுந்த வம்திரன், தனது வாளை எடுத்து அறகசியின் கழுத்தில் வைத்தான்.

உத்தரவிடுங்கள் மன்னா… இப்போதே கொல்கிறேன் என்றான் கடும் சினத்துடன்.

அவனை அமைதியடைய சொல்லிவிட்டு தானும் மொளனம் ஆனார் மன்னர், இருவரிடமும் நான் சற்று தனிமையில் இருக்க விரும்புகிறேன். இங்கு நடந்தது நம்க்குள் இருக்கட்டும். நாளை நான் உங்களை சந்தித்து இது பற்றி பேசுகிறேன் நீங்கள் இப்போது நீங்கள் போகலாம் என்றார்.

வம்திரன் சற்று தயங்கினாலும் , சமவனின் வார்த்தைக்ககட்டு பட்டு அங்கிருந்து சென்றான். அவன் சென்றால் அவன் நினைவு முழுவதும் அறகசி சொன்ன விசயத்திலேயே நின்றது.

***

ம்திரன் நாட்டிற்கே சேனாதிவதியாக இருந்தாலும் அவனுக்கு மென்மையான மறுபக்கமும் இருந்தது. அவனுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது, காதலுக்கு காரணம் மத்தமிழ் பேருக்கேற்றார் போல் தமிழின் இனிமையும் அழகும் சரிவர கலந்த பெண்ணாக இருந்தால்.

இவளுடன் ஒப்பிட்டால் பவதனியும் தோற்று போவாள். இருவருக்குள்ளும் சரியான புரிதல் இருந்தது, இருவரும் பார்த்துக்கொள்வதே அறிது.

இன்று அவளை அவன் பார்க்க சென்றான், மாலை மங்கும் வேளையில், விழித்திருந்தது போதும் என்று சூரியன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தது.

அவளுக்கு முன்பாகவே நந்தவனத்திர்க்கு சென்று அவளுக்காக காத்திருந்தான். அவளும் வந்தாள். மின்னல் ஒளியில் மட்டுமே மலரும் தாழம்பூ சூடி காற்றில் எங்கும் நறுமணம் கமழ, அடிமேல் அடிவைத்து இவனை நோக்கி வந்தாள்.

அப்போது நிலவிய சூழ் நிலையில் தொலைவில் இருந்து அவளை பார்த்தால் அவள் பூலோகத்தை சேர்ந்தவள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டர்.

அவனும் ஒரு நொடி நிலைகுலைந்துதான் போனான், பின்பு அவளிடம் அரசவையில் நடந்த சிலவற்றை கூறினான். முன்னதாக மன்னனிடம் தனது காதல் பற்றி சொல்லி இவளை மனம் முடிக்க அனுமதி கேட்க்க போவதாக சொல்லியிருந்தான் அவள் அதை வினவினாள்.
இவன் இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு, நமக்கும் வார்சுழிக்கு போர் மூளும் நிலை இருக்கிறது அந்த போரில் வெற்றி கண்டு மன்னனிடம் இது பற்றி பேசுகிறேன் என்றான்.

ஏன் திடீரெண போர் என மீண்டும் வினவினாள்??

அவன் பதில் கூறாது நேரம் ஆகிவிட்டது நீ உனது இல்லத்திற்கு செல், மீண்டும் உன்னை மற்றொரு நாள் சந்திக்கின்றேன் என்று வழியனுப்பினான்.

அவளை அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

***

றுநாள், சுமவனை காண இருவரும் சென்றனர். அப்போது தான் எடுத்த முடிவை அவர்களிடம் சொல்ல துவங்கினார்.

கூடிய விரைவில் பவதனிக்கு மணம் முடித்துவிட்டு , தவம் புரிய வனம் புக போவதாக சொல்லி நான் வனாந்திரத்தில் எனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

இப்போது குறுக்கிட்ட வம்திரன், நாட்டு மக்களுக்கு கேடு நேராமல் இருக்க தங்கள் உயிரை விடவும் துணிந்து விட்டீர்கள். வேண்டாம் மன்னா நான் இருக்கிறேன், வார்சுழியை போரில் வென்று காணிக்கை ஆக்குகிறேன். பின்பு நீங்கள் அங்கு சென்று பூஜை செய்யலாம்.
வேண்டாம் வம்திரா, அவர்களது படை பலம் , நம்மை காட்டிலும் அதிகம், அவர்களை வெல்வது கடினம்.

எண்ணிக்கை இருந்தால் என்ன? என்னிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது. எனது உயிர் போகும் முன்னர் அவர்களை வெல்வேன்,தங்களது ஆசிர்வாதத்துடன்.

வாழ்த்தி அனுப்புங்கள் மன்னா…

***

ன்னரும் வாழ்த்தி அனுப்பினார், அன்றே தனது சகாக்களுடன், தாக்குதல் திட்டத்தை வகுக்க துவங்கினான்.

வார்சுழி ஒரு பக்கம் மலை, அதன் பக்கவாட்டு பக்கத்தில் கடல் அதனால் இரு திசை தாக்குதலில் ஈடுபட்டால் போதுமானது என்றான் ஒருவன்.

பொதுவான இடத்தில் போர் நடைபெற இரு நாட்டு மன்னர்களின் ஒப்புதல் அவசியம். சுமவன் சம்மதித்து விட்டார், வார்சுழி இதற்கு உடன்படாத பட்ச்சத்தில் , இரு திசை தாக்குதல் நடத்துவோம் என்று முடிவு செய்தான்.

சங்ககால தமிழ் மரபுபடி எதிரி நாட்டிற்கு முரசறைந்து, போர் புரிய வருவதை தெரிவித்தான் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, வம்திரன் மற்றும் பதினைந்து பேர் கொண்ட குழு வெட்சிப்பூ அணிந்து ஆநிரை கவர்தலில் ஈடு பட்டனர். இதற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.

அவர்கள், ஆநிரையை மீட்க்க கரந்தை பூ அணிந்து வந்தனர், வந்தவர்களை, தனது படை பலத்தால் தோற்கடித்து அனுப்பினான்.

பின்னர் , வார்சிழியின் தூதுவன் வந்தான், தங்கள் மன்னர் போர் புரிய நாட்டம் தெரிவித்திருப்பதையும், இடத்தை நீங்களே தேர்வு செய்யலாம் என்றான்.

வந்தவனிடம், பொதுவான சமவெளி பகுதியை தேர்வு செய்து அனுப்பிவைத்தான் வம்திரன்.

***

று நாள் விடிந்தது, சங்குகள் முழங்க போர்கலம் சென்றான் வம்திரன் தனது படை வீரர்களுடன்.

எதிரிகளின் படை இவர்களைவிட பெரிதாகவே இருந்தது. அவர்கள் சக்கரவியூகத்தில் படைகளை அணிவகுத்து களம் புகுந்தனர். அதை முறியடிக்க ஊசிமுனை வியூகத்தை வம்திரன் பயன்படுத்தின்.

இங்கே வியூகம் என்பது படை வீரர்கள், அணிவகுத்து போர்புரியும் தோற்றத்தை குறிக்கும்.
ஆரம்பத்தில் புழுதி பறந்த போர்களம், நேரம் ஆக ஆக இரத்த சகதியில் புழுதி அமுங்கியது. மதிய பழுது வரை நடைபெற்ற போரில் வார்சுழியின் பக்கமே இழப்பு அதிகமாக இருந்தது.
மதிய பொழுதுவரை நிலையாக போர் செய்த வம்திரனால், அதன் பிறகு நிலையாக போர் புரிய இயலவில்லை.

இதற்கு காரணம் , மெதுவாக கொல்லும் நஞ்சை எதிரி நாட்டு அரசன் இவனுக்கு குடுக்க சொல்லியிருக்கிறான் என்பதை தாமதமாகத் தான் அறிந்தார்கள் ஒற்றர்கள்.

விவரம் அறிந்ததும் உடனடியாக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மாற்று மருந்து அளிக்கப்பட்டு மீண்டெழுந்தான் வம்திரன்.

இந்த நிலைமையில் அவனை போர் புரிய வேண்டாம் என்று தடுத்தனர் அவனது சகாக்கள், “வீழ்வது இழிவாக விழுந்து கிடப்பது இழிவே” என்று சொல்லி அவர்களிடம் ஒரு புன்னகையை உதி்ர்த்தான்.

நஞ்சிட்ட துரோகியை பிடிக்க தன் சகாக்களிடம் உததரவிட்டு, ஆவேசமாக போர்களம் புகுந்தான்.

அம்புகளை மழையென பொழிந்து முன்னேறினான், இந்த முயற்ச்சியில் வார்சுழி சேனாதிபதியை சொர்கத்திற்கு அனுப்பினான். பின்பு வார்சுழி மன்னனை நோக்கி தனது கவனத்தை திருப்பினான். அவனை ஆக்ரோஷமாக நெருங்கினான்.

இவனது வேகம் கண்டு சரணடைய முற்ச்சிப்பது போல் அவனிடம் மண்டியிட்டு வேண்டலானான். வம்திரன் யோசித்து நின்ற நேரத்தில் தன்னிடம் இருந்த நஞ்சில் தோய்ந்த கத்தியால் வம்திரனது வலது மார்பில் குத்தினான்.

இதை எதிர்பாரதபோதும் சுதாரித்து பின் தனது வாளைக்கொண்டு ஒரே வீச்சில் அவனது தலையய் கொய்தான்.

ஏற்கனவே உணவில் இருந்த நஞ்சுடன் இப்போது கத்தில் இருந்ததும் சேர்ந்து கொண்டதால் அவனால் நிலைகொள்ள முடியவில்லை.

இருந்தும் உயிர் போகும் முன் வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன் என்று வாக்கு குடுத்திருந்ததால் தனது புரவில் தாவி ஏறி வாசுகாறை நோக்கி விரையத் துவங்கினான்.

***

ரத்தம் வழியும் தேகத்துடன் அரசவைக்குள் நுழைந்தான், மன்னை கண்டு தான் வெற்றி கண்டதை சொன்னான். பின்பு தனது காதல் பற்றியும் கஷ்டப்பட்டு சொல்லி முடித்து மயங்கி விழுந்து விட்டான்.

உடனே அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார், வம்திரனுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அவன் கண்விழிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றார் வைத்தியர்.
மன்னன் போரில் வெற்றி பெற்றாலும் வருத்தத்துடனே காணப்பட்டார். இதை கண்ட ஒரு அரசவை அமைச்சர் தனிமையில் காரணம் வினவினார்.

எல்லாம் , இளவரசியை பற்றியது தான் அவளை வம்திரனுக்கு மனம் முடித்து வைத்து விட்டால். நாடும் நன்றாக இருக்கும் , அவளும் சந்தோஷமாக இருப்பாள் என்று எண்ணியிருந்தேன். ஆனால், வம்திரனோ இன்னொருத்தியை காதலிப்பதாக சொல்கிறான்.
இதில் என்ன முடிவெடுக்க என்று எனக்கு தெரியவில்லை.

இதற்கு நான் வழி சொல்கிறேன். இந்த அமைச்சருக்கும் வம்திரனுக்கும் பனி போர் நடந்து கொண்டிருக்கிறது. என்பதை அறியாத மன்னன். அமைச்சரின் ஆலோசனைக்கு செவிசாய்த்தான்.

வம்திரனின் சந்தோஷத்தை கெடுக்க நினைத்த அமைச்சர், சுமவனிடம் அவன் காதல் கொள்ளும் பெண்ணை நாடு கடத்திவிடலாம் அல்லது அவளை கொலை செய்து விடலாம்.
ஒரு நாட்டின் வருங்காலத்திற்காக , ஒரு உயிரை கொல்வதில் எந்த பாவமும் இல்லை என்றார்.

முதலில் மறுத்த மன்னன் பின்னர் சமதித்தார். அதுவும் வம்திரன் கண்விழிப்பதர்க்குள் நிகழவேண்டும்.

இந்த முடிவின் படி மறு நாளே மத்தமிழ் வீட்டுடன் நெருப்பி்ன் நக்குகளுக்கு இரையாக்கப்பட்டாள்.அது கொலையாக இல்லாமல் விபத்தென ஆக்கப்பட்டது.

***

குணமடைந்த வம்திரன் கண்விழித்தான், தடு மாற்றத்துடன் நடந்து மன்னனை பார்க்க சென்றான்.

இவனிடம் மத்தமிழிக்கு ஏற்ப்பட்டதை எப்படி சொல்வது என்று குழப்பத்தில் இருந்தான். இவனது குழப்பத்தை உணர்ந்த வம்திரன் அவனே கேட்டான்.

என்ன மன்னா? இன்னும் என்ன வருத்தம்? என்றான்

தயங்கி தயங்கி துயரசெய்தியை சொன்னான்.

கேட்டவுடன் நொருங்கி போன் வம்திரன், தான் உடனடியா துறவரத்தில் ஈடுபடபோவதாக தனது போர் வாளை சுமவனின் பாதத்தில் வைத்தான்.

இதை சற்றும் எதிர் பாராத மன்னன் அவனது தோழ் தொட்டு “வம்திரா.. நட்டின் பாதுகாப்பே உனது கையில் தான் இருக்கிறது. இதை நிரந்தரமாக்கவும் நாட்டின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் நான் பவதனியை உனக்கு மணம் முடடித்து வைக்க முடிவு செய்திரு்க்கிறேன். இந்த நேரத்தில் நீ வனம் புக போவதாக செல்கிறாய். இத்தனை நாள் நீ கட்டி காத்த வாசுகாறையை இனி யார் பார்த்து கொள்வார்”

என்னை தடுக்காதீர்கள் மன்னா..

அப்படி சொல்லாதே வம்திரா உனக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவும் இந்த நாட்டிற்காகவும் நீ இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

உடனே நீ மாற வேண்டாம் , நான் தெற்கே கட்டி வரும் ஆலயத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது அது முடிந்து. ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உங்களது திருமணத்தை நடத்தலாம் என்றார்.

வம்திரனுக்கு இஷ்டம் இல்ல விட்டாலும், மன்னரின் வார்த்தையை தட்ட முடியாத காரணத்தால் சம்மதித்தான்.

***

நாட்கள், கடந்தன ஆலய திருப்பணிகள் முடிந்தன, ஆகம விதிகளின் படி பூஜைகள் மேற்கொள்ள, மிக பெரும் யாகங்களுக்கு ஏற்ப்பாடு செய்ய பட்டது.

இதற்கிடையில் மத்தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி வம்திரனின் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. கடும் கோபம் கொண்டான்.

என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான், மன்னரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். மறு கணம் வேண்டாம் துறவு மேற்கொள்ளுவோம் என்று முடிவு செய்தான். இப்படி ஏகப்பட்ட சிந்தனைகள் அவனது மூளைக்குள் சுற்றி திரிந்தன.

இறுதியாக ஒரு முடிவெடுத்தான் , மன்னனுக்கு மடல் ஒன்றை எழுதினான், அவனுக்கு விசுவாசமான ஒருவனை அழைத்து மன்னரிம் சேர்க்க சொன்னான்.

பின்பு ஆலயம் நோக்கி சென்றான் , அங்கே எறிந்து கொண்டிருக்கும் யாக குண்டத்தில் விழுந்து இவனும் நெருப்புக்கு இரையானான்.

அந்த மடலில்,

மன்னா,
மத்தமிழுக்கு ஏற்ப்பட்ட உன்மை நிலையை நான் அறிவேன். அதானல், என்னுள் ஏகப்பட்ட குழப்பமான எண்ணங்கள் தோன்றின. இறுதியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். என்னவளை தீண்டிய நெருப்பின் நாவில் நானும் விழ ஆசைப்படுகிறேன். இதற்கு மற்றுமொரு காரணம் இருக்கிறது. பஞ்ச பூதங்களில் நெருப்பிர்க்கு மட்டுமே நேரடியாக வானுலுகத்தில் சேர்க்கும் சக்தி உள்ளது. வையத்தில் சேராத எங்கள் காதல் வானத்திலாவது சேரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தியுங்கள்.

முக்கியமாக, எனக்கு தெரிந்த அனைத்து ராஜ ரகசியுங்களும் என்னுடனே இருக்கிறது. நீங்கள் என்னை வஞ்சித்ததால் நானும் அப்படி செய்வேன் என்று நீங்கள் நினைத்து பயம் கொள்ள வேண்டாம்.

நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் நான் வையத்தை விட்டு சென்றிருப்பேன்.

இது ஒரு ராஜ விசுவாசியின் இறுதி மடல்.

படித்த மன்னர் தன்னையும் அறியாது கண்ணீர் வடித்து அழத்துவங்கினார்.

இரண்டாம் பீஷ்மன்

அர்ச்சுனன் இருளில் விற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். துரோணர் தீவட்டி வெளிச்சத்துடன் அவனை நோக்கி வருகிறார்.

துரோணர்: அர்ச்சுனா, வில்லின் நாண் உன் உள்ளங்கையில் உராய்ந்த ஒலி கேட்டு இங்கே வருகிறேன். இவ்விருளில் என்ன செய்துகொண்டிரு- க்கிறாய் வீரனே ?

அர்ச்சுனன்: வணக்கம் குருதேவா!விற் பயிற்சிதான் செய்து கொண்டிரு க்கிறேன். அன்றொரு நாள் இரவில் உணவருந்திக்கொண்டிருக்கும்போது

காற்றடித்ததில் விளக்குகள் அணைந்து போயின. ஆனால் நான் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. என் கை வாயைத்தவிர வேறிடத்தில் செல்லவில்லை. அதேபோல உணவை எடுத்த இடத்திலும் கை மாறவில்லை. இதற்கெல்லாம் காரணம் தினம் உண்டதால் ஏற்பட்ட கைப்பயிற்சிதானே என்று உணர்ந்தேன். அதே பயிற்சியை வில்லிலும் இரவில் தொடர எண்ணியே இங்கே வந்தேன். தங்களிடம் கூறாமல் வந்துவிட்டதை மன்னிக்க வேண்டுகிறேன்.

துரோணர்: ( அர்ச்சுனனைத் தழுவிக்கொண்டே) மகிழ்ச்சி, அர்ச்சுனா மெத்த மகிழ்ச்சி. உன்னைப்போன்ற சிறந்த பயிற்சி உடையவனைக் காணேன். இனி உலகில் உனக்குச் சமமான வில்லாளி இல்லை எனும் அளவுக்கு உனக்குப் பயிற்சி தரப்போகிறேன். இது உண்மை.

அர்ச்சுனன்: நன்றி குருதேவா! நான் பெரும் பாக்கியம் செய்தவன்! அதற்கான தகுதி எனக்குண்டாக ஆசீர்வதியுங்கள் பெருமானே!

துரோணர்: அங்ஙனமே ஆகுக, என் பிரிய சீடனே!

காட்சி:2

காலம்: ஒரு பகல்

களம் : துரோணர் இல்லம்

கதை மாந்தர் : ஏகலைவன், துரோணர்

ஏகலைவன்: வணக்கம் குருதேவா!

துரோணர்: யாரது மகனே, உன் தேடல் யாது ?

ஏகலைவன்: குருதேவரே, பக்கத்துக்காட்டில் வாழும் வேடர்களின் தலைவனான இரண்யதனுஸ் என்பவரின் மகன் நான். என் பெயர் ஏகலைவன். வில் வித்தையைச் சிறப்பாகக் கற்றுக்கொள்ளவிழைகிறேன். அவ்வித்தையைக் கற்பிப்பதில் தங்களைவிடச் சிறந்த ஆசிரியர் எவரும் இலர் என்று கேள்விப்பட்டு த் தங்களையே குருவாக வரிக்க வந்திருக்கிறேன். என்னையும் தங்கள் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக் கடாட்சிக்கவேண்டும் மகாகுருவே! (மீண்டும் வணங்குகிறான்)

துரோணர்: எழுந்திரு வேடன் மகனே! கல்வி தேடி குருவை நாடி வந்தவனை உதாசீனப்படுத்தக்கூடாது. ஆனால் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கே எனக்கு நேரம் காணவில்லை. என்றாலும் உன்னையும் என் சீடனாகக் கருதுகின்றேன். எப்போதும் விற்பயிற்சி செய்பவனாய் இரு. அதில் மிக்க பலம் உள்ளவனாவாய். இப்போது வீட்டிற்குத் திரும்பச்செல். என் மனமார்ந்த ஆசிகள்.

ஏகலைவன்: தங்கள் கட்டளைப்படியே ஆகட்டும் குருதேவா! (வணங்கித் திரும்புகிறான்)(மனதுக்குள்): தங்களையே குருவாக வரித்து தங்கள் பதுமையின் முன் என் பயிற்சிகளை ஆரம்பிப்பேன், வழிகாட்டுவீராக!

காட்சி:3

காலம்: சில மாதங்கள் கழித்து ஒரு பகல்

களம் : துரோணர் இல்லம்

கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன்

அர்ச்சுனன்: (துரோணரைப் பார்த்து) வணக்கம் ஐயனே! ‘உனக்கு மேம்பட்ட சீடன் எனக்கில்லை ‘ என்று என்னைத் தழுவிக்கொண்டு ஒரு முறை அன்புடன் கூறி இருக்கிறீர்கள். அப்படியிருக்க தங்களுக்கு என்னைவிட மேம்பட்ட சீடன் ஒருவன் இருக்கிறானே, அதெப்படி குருவே ?

துரோணர்: என்ன கூறுகிறாய் அர்ச்சுனா, சற்று விளக்கமாய்ச் சொல்.

அர்ச்சுனன்: குருதேவா, நேற்று உங்களிடம் அனுமதி பெற்று நாங்களும் கெளரவர்களும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றோமில்லையா ? எங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த நாய் ஒன்று பலமாகக் குரைத்துக்கொண்டே ஒரு கரிய வேடுவச் சிறுவனை நோக்கி ஓடியது.ஆனால் சிறிதே நேரத்தில் ஏழு பாணங்களால் நிரப்பப்பட்ட வாயுடன்

குரைக்கமுடியாமல் அந்நாய் எங்களிடம் ஓடி வந்தது. யார் இவ்வளவு திறமையுடன் அம்புகளை எய்தார்கள் என்று அவ்வேடச்சிறுவனைத்தேடிக் கேட்டதில், ‘ வீரர்களே, நான் இரண்யதனுஸ் என்பவனுடைய மகன். என் பெயர் ஏகலைவன்.தனுர் வேதத்தில் பயிற்சி பெற்றுவருகிறேன். துரோணரின் மாணவன் நான் ‘ என்று அவன் பதில் கூறினான். இப்போது கூறுங்கள், குருதேவரே, அவன் எவ்வாறு உங்கள் சீடனானான், எப்போது விற்பயிற்சி பெற்றான், எங்களுக்கும் தெரியாத வித்தைகளை அவன் எப்படிக் கற்றான் ?

துரோணர்: வீரனே, அவசரப்பட வேண்டாம். என்னுடன் வந்து அவனைக் காட்டு. அவன் முன்னிலையிலேயே நீதான் என் அத்யந்த சீடன் என்பதை நிரூபிக்கிறேன். வா, செல்லலாம்.

காட்சி:4

காலம்:மாலை.

களம் :வனம்

கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன், ஏகலைவன்

ஏகலைவன் துரோணரைப் போன்று மண்ணால் செய்யப்பட்ட பதுமையின் முன் வணங்கிவிட்டு தொடர்ந்து அம்புகளை எய்தவண்ணம் விற்பயிற்சியில் இருக்கிறான். துரோணர் வருவதைக்கண்டவுடன் ஓடிவந்து அவர் பாதங்களில் விழுந்து வணங்குகிறான். ஏகலைவன்: வணக்கம் குருதேவரே, நான் தங்கள் சீடன் ஏகலைவன். தங்கள் கிருபையால் தனுர்வித்தை ஒரளவு கைவரப் பெற்றிருக்கிறேன். மேலும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.அருள்பாலியுங்கள் குருநாதரே!

துரோணர்: மகிழ்ச்சி ஏகலைவனே, உன் திறமை கண்டு போற்றுகிறேன். அதிருக்கட்டும்; நீ என் சீடன் என்றால் எனக்கு குரு காணிக்கை கொடுக்கவேண்டுமல்லவாஅப்போதுதானே கற்ற வித்தைக்குப் பலன் உண்டாகும் ?

ஏகலைவன்: பெருமானே, நான் என்ன கொடுக்கவேண்டும் ?கட்டளை இடுங்கள்!

துரோணரின் முகம் நிறம் மாறுகிறது.தன் வஞ்சக எண்ணத்தை மறைத்து,

துரோணர்: என் பிரிய சீடனே, குரு காணிக்கையாக உன் வலக்கைக் கட்டை விரலைத் தருவாயா ?

ஏகலைவன்: குருதேவரே, என்னவோ என்று பயந்துபோய் விட்டேன். இதோ உங்கள் காணிக்கை, ஏற்றுக்கொள்வீர்களாக!(இவ்வாறு கூறிக்கொண்டே தன் வலக்கைக் கட்டை விரலை வெட்டி துரோணரிடம் தருகிறான் ஏகலைவன். துரோணரும் வாய்ப் பேச்சற்றவராக கைகளை உயர்த்தி ஏகலைவனை ஆசீர்வதித்தவண்ணம் அர்ச்சுனனைப் பார்க்கிறார், ‘உன் போட்டியை ஒழித்துவிட்டேன் பார்த்தாயா ‘ என்ற குறிப்பு தோன்ற)

அர்ச்சுனன்: ஏகலைவா, என்னே உன் குரு பக்தி! நீ நீடூழி வாழ்க! உன் வித்தையும் வாழ்க!

காட்சி: 5

காலம்:சில வாரங்கள் கழித்து ஒரு மாலை.

களம் :துரோணர் இல்லம்

கதை மாந்தர்:அர்ச்சுனன், துரோணர்.

அர்ச்சுனன் பதறிக்கொண்டே ஓடி வருகிறான். துரோணரைப் பார்த்து அர்ச்சுனன்: நாம் மோசம் போய்விட்டோம் குருதேவா! ஏகலைவன் உங்களை ஏமாற்றிவிட்டான்.

துரோணர்: என்ன பதட்டம் இது அர்ச்சுனா, எதைக் கண்டு இந்த முடிவு ?

அர்ச்சுனன்: ஆம் குருதேவரே, இன்னொரு முறையாக இப்போதுகூட ஏகலைவனின் வில் திறனை நான் பார்க்கநேர்ந்ததே காரணம். நேற்றிரவு ஏகலைவன் கானகத்தினோரம் ஒரு பசுவைக் கொல்ல வந்த புலியின் வாயை அம்புகளால் கட்டி விரட்டியடித்த விந்தையை நட்சத்திர ஒளிக்கிடையே நான் கண்டேன். இருளிலும் சப்தங்களைக்கேட்டே அம்பைக்குறி வைக்கும் திறனை அவனிடம் பார்த்தேன். ஆனால் அவனிடம் நேரில் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். இது எப்படி சாத்தியமாயிற்று அவனுக்கு ? அவன் எதோ ஏமாற்று வேலை செய்திருக்கிறான் என்றே நினைக்கிறேன் குருதேவா!

துரோணர்: இருக்காது வீரனே, என்னை நம்பு. என் சீடர்கள் எவரும் பொய்யர்கள் அல்லர். இன்னமும் நீதான் என் தலையாய சீடன். எனினும் நீ கூறியது என்னை சங்கடப்படுத்துகிறது. நாமிருவரும் நாளை ஏகலைவனைச் சந்தித்து உண்மையை அறிவோம்.அதுவரை பொறுமை காத்திரு.

அர்ச்சுனன்: குருதேவா, என்னைவிடச் சிறந்த வில்லாளி என்னிடம் ஏற்படுத்திய மன உளைச்சலில் தங்கள் மனதை சங்கடப்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள் பெருமானே!

துரோணர்: சென்று வா வீரனே, வீரம் வெல்லட்டும்!

அர்ச்சுனன் வணங்கி விடை பெறுகிறான்.

காட்சி:6

காலம்: மறு நாள் காலை

களம் :கானகம்

கதை மாந்தர்: ஏகலைவன், துரோணர், அர்ச்சுனன்

ஏகலைவன் குருவின் பதுமையின் முன் வணங்கி கண்களை மூடித் தியானத்தில் இருக்கிறான். துரோணரும் அர்ச்சுனனும் வரும் சலசலப்பு சத்தம் கேட்க, கண் திறந்து துரோணரைப் பர்த்துவிட்டு அவரை வணங்குகிறான்.

துரோணர்(ஏகலைவனைப் பார்த்து): வாழ்க குழந்தாய்,ஒன்பது விரல்களைக் கொண்டு கைகூப்பி வணங்கும்படி உன்னைச் செய்துவிட்டேனே,என் விபரீதகோரிக்கையை பொறுத்துக்கொள்வாயாக! இன்னமும் உன் வில் வித்தை ஆசை போகவில்லைபோலிருக்கிறதே. நேற்று முன் தினம் இரவு நீ ஒரு புலியின் வாயைக்கட்டி விரட்டியதை அர்ச்சுனன் பார்த்தானாம். என்னிடம் சொன்னான். வலக்கை கட்டைவிரல் இழந்தும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று எனக்கே வியப்பாக இருக்கிறது!

ஏகலைவன்: குருதேவரே! உங்கள் பரிபூரண ஆசி இருக்கும்போது எதுதான் சாத்தியமாகாது ? மேலும் நீங்கள் வலக்கை கட்டை விரலைத் தானே பெற்றுப்போனீர்கள் ? நான் இடக்கைப் பழக்கம் உள்ளவனாயிற்றே! அதனால் என் வில் வித்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை; இனியும் இருக்காது.அது இருக்கட்டும், தாங்கள் இப்போது என்னைக் காண வந்த காரணம் நான் அறியலாமோ பெருமானே ?

எகலைவன் கூற்றைக் கேட்ட துரோணரும் அர்ச்சுனனும் திகைத்துப் போகிறார்கள்.முகத்தில் குற்ற உணர்வுடன், துரோணர்: என்னை மன்னித்துவிடு , என் பிரிய சீடனே, நான் முதலிலேயே உன்னிடம் உண்மையைக் கூறியிருக்கவேண்டும். அர்ச்சுனன்தான் என்றும் என் சிறந்த சீடன் என்று அவனிடம் வாக்களித்திருந்தேன். ஆனால் சத்திரியனான அவனைவிட வேடனான நீ வில் வித்தையில் சிறந்து விளங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. என் வாக்கும் பொய்த்துப்போய் விடும்போலிருந்தது. எனவேதான் உன்னைச் செயலிழக்கச் செய்ய உன் வலக்கை கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்றேன். ஆனால் என் பொய் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது.உன் இடக்கைப் பழக்கம் உன் வித்தையைக் காப்பாற்றிவிட்டது. (அர்ச்சுனனைப் பார்த்தவாறே) அர்ச்சுனனும் என்னை மன்னிக்கட்டும்! நான் வருகிறேன்.(திரும்ப யத்தனிக்கிறார்)

ஏகலைவன் (அவரை இடைமறித்து) :குருசிரேஷ்டரே,அபசாரம்,அபசாரம். இவ்வார்த்தைகள் தங்கள் திருவாயிலிருந்து வரலாமா ? தாங்கள் என்னிடம்காணிக்கை கேட்டபோதே தங்கள் நோக்கத்தை நான் உணர்ந்திருக்கவேண்டும். அதற்கேற்ப என் இடக்கைக் கட்டை விரலை தங்களுக்குக் காணிக்கையாக தந்திருக்கவேண்டும். நான் வேட்டுவன்தானே, அரசாளும் சத்தியர்களுக்கும் அவ்ர்கள் பேணும் அந்தணர்களுக்கும் உள்ள சாமர்த்திய புத்தி எனக்கில்லையல்லவா ? இப்போதும் கேளுங்கள். இன்னொருமுறை காணிக்கையாக என் இடக்கை க் கட்டை விரலையும் தரத் தயார்!…….

துரோணர் இடை மறிக்கிறார்: வேண்டாம் குழந்தாய், வேண்டாம். நான் இழைத்த ஒரு குற்றமே போதும்!

அர்ச்சுனனும் இடைமறித்து:நண்பனே ஏகலைவா,போதும். உன் குரு பக்தியையும் விற்திறனையும் கண்டு நான் வெட்கப்படுகிறேன், பொறாமைப்படுகிறேன். என் தகுதி எனக்குத் தெரிந்துவிட்டது. நீ மேலும் உன்னை வருத்திக்கொள்ளவேண்டாம்.

ஏகலைவன்: மன்னிக்கவேண்டும் குருதேவரே! நான் இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும். உங்களுக்கு என் இடக்கை கட்டைவிரலைக் காணிக்கையாக்கிவிட்டு நான் சும்மா இருக்கமாட்டேன். வில் வித்தையின் மேலுள்ள என் ஆர்வம் என்றுமே தீராதது.ஆகவே கை கட்டைவிரல்களை இழந்தாலும் கால் விரல்களால் பயிற்சி செய்ய ஆரம்பிப்பேன். குருவருளால் வெற்றியும் பெறுவேன். ஆனால் குருவின் எண்ணங்களை நிறைவேற்றாத பாவியாகிவிடுவேன். ஆகவே என் கை கால்களில் உள்ள எல்லா விரல்களையுமே உங்களுக்குக் காணிக்கையாக்கத் தயாராகயிருக்கிறேன்.கட்டளை இடுங்கள் குருநாதரே!

துரோணர்(திடுக்கிட்டு ஏகலைவா, என்ன விபரீதம் இது ? எங்களை மேலும் கொடூரர்களாக ஆக்க முயற்சிக்காதே. என் வாக்கு பொய்த்ததாகவே இருக்கட்டும்.அர்ச்சுனனை நான் வேறு வழிகளில் சமாதானப்படுத்துகிறேன். எல்லாம் விதிப்படிஅன்றோ நடக்கும் ? குழந்தாய், உன் குரு பக்தி இணயில்லாதது.எங்களை மீண்டும் மன்னித்துவிடு. நாங்கள் விடை பெறுகிறோம்.

ஏகலைவன்: குருதேவரே, உங்கள் பெரிய மனது எனக்குப் புரிகிறது. ஆனால் என்னைக் கடமை தவறியவனாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய நான் கடமைப் பட்டுள்ளேன். அதை உங்கள் மீது பழியில்லாவண்ணம் என் விரல்களை வெட்டிக் கொள்ளாமலேயே நிறைவேற்றும் வழி உண்டு என்று நினைக்கையில் எனக்கு மகிழ்ச்சி மேலிடுகிறது. உங்கள் வாக்கு பொய்க்காதபடி இனி அர்ச்சுனனே உங்களின் தலை சிறந்த சீடனாக விளங்குவான். ஆம்,இக்கணம் முதல் நான் வில்லைத் தொடமாட்டேன். என் வேட்டுவத் தொழிலுக்காக ஈட்டி,கத்தி,கம்பு, கை போன்றவைகளையே பயன் படுத்துவேன். இது உறுதி, அந்தணரும் சத்திரியரும் அறிய, கானும் வானும் அறிய, என் வில்லும் அம்புகளும் அறிய உறுதி. இச் சபதம்தான் குருவுக்கான என் காணிக்கை. மன மகிழ்வுடன்ஏற்று என்னை வாழ்த்தி அருளுங்கள் முனிபுங்கவரே! (துரோணரின் கால்களில் விழுகிறான்)

துரோணர்(ஏகலைவனை தூக்கி நிறுத்தி மார்புடன் அணைத்து): குழந்தாய் ஏகலைவா! உன் சபதம் என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது. எவர் வேண்டுமானாலும் என் தலை சிறந்த சீடனாகயிருக்கலாம், ஆனால் குருபக்தியில் எந்தச்சீடனும் உன்னை மிஞ்சமுடியாது. இது சத்தியம். சத்திரியர்களையும், அந்தணர்களையும் இன்று வெட்கப்படச் செய்துவிட்ட வேட்டுவ வீரனே, வீரத்துக்கும் நற்பண்புகளுக்கும் குலம் தடையல்ல என்று நீ நிரூபித்துவிட்டாய்.பிதாமகர் பீஷ்மரும் பொறாமைப் படக்கூடிய இரண்டாவது பீஷ்மன் நீ! வாழ்க உன்னனையோர்! ஐயனே, எங்களுக்கு விடை கொடு!

துரோணரும் அர்ச்சுனனும் வெட்கம் சூழ வெளியேறுகின்றனர்.

சூஃபி ஞானி கதைகள் – ஈசா நபியும் சில சந்தேகிகளும்

 

புனித மரியாளின் மகனான ஈசா, விஷயங்களைஅறியத் துடிக்கும் ஆர்வக் குறுகுறுப்பை கட்டுக்குள் அடக்காத சில நபர்களுடன் ஜெருசலேம் அருகிலிருந்த பாலைவனப் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்,

அம் மனிதர்கள், இறந்தோரை உயிர்ப்பிக்கும் அந்த ரககிய பெயரை தங்களுக்குச் சொல்லித் தருமாறு ஈசாவை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களிடம், ” நான் அதை உங்களுக்குச் சொன்னால், நீங்கள் அதை துஷ்பிரயோகம் பண்ணுவீர்கள் , என்று ஈசா சொன்னார்.

இல்லை, அது குறித்த அறிவைப் பெறுவதற்கான தகுதியுடன், நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் அதைத் தெரிந்து கொள்வது எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவே செய்யும்’ என்றனர் அந்நபர்கள் .

நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பது உங்க்ளுக்கு தெரியவில்லை’ என்று சொல்லி விட்டு, ஈசா நபி அதை அவர்களுக்குத் தெரிவித்து விட்டார்.

அதன் பிறகு அந் நபர்கள் பாலைவனத்தில் தொடர்ந்து சென்றார்கள். சற்று தூரத்தில் வெள்ளையாக எலும்புக் குவியல்கள் கிடந்ததை அவர்கள் கண்டனர்.

நாம் கற்றுக் கொண்ட வார்த்தையை இப்போது பரீட்சித்துப் பார்ப்போம் என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.அதன் படி செய்யவும் செய்தனர்.

அந்த எலும்புக் குவியல்கள் ரத்தமும் சதையும் பெற்று, கோரமான,. வெறிபிடித்த மிருகமாகி, அந் நபர்களைக் கடித்து குதறி நார் நாராகக் கிழித்து விட்டது.

இதை அறிவுள்ள விவேகிகள் புரிந்து கொள்ளுவார்கள். குறைந்த அறிவுள்ளவர்கள் இக் கதையைப் படிப்பதன் வழி தன்னை நிறைப் படுத்திக் கொள்வார்கள்.

சூஃபி ஞானி கதைகள் – சூஃபியும் கொடிய அரக்கனும்

சூஃபி ஞானி ஒருவர், ஆளரவமற்ற மலைப்பாங்கான பகுதியில் தனியாகப் பயணம் போய்க் கொண்டிருந்தார்.

அவர் முன் திடீரென ஒரு அரக்கன் தோன்றி “உன்னைக் கபளீகரம் பண்ணப் போகிறேன்” என்று அவரிடம் சொன்னான்.

“அப்படியா சரி. உன்னால் முடிந்தால் முயற்சி செய்து பார். ஆனால் நான் உன்னை எளிதாக வென்றுவிட முடியும். நீ நினைப்பது போலில்லாமல், நான் உன்னைவிட அதிக பலசாலி” என்று பதில் சொன்னார் அந்த சூஃபி.

“நீ சொல்வது முட்டாள்தனமான பேச்சு. நீ ஒரு சூஃபி. உனக்கு ஆன்மீக விஷயங்களில்தான் அக்கறை இருக்கும். நீ என்னை வெல்ல முடியாது. என்னிடம் அசுர மிருகபலம் இருக்கிறது. உன்னைவிட முப்பது மடங்கு பெரியவன்” என்று பதில் சொன்னான் அந்தப் பிணந்தின்னி அரக்கன்.

“உனக்கு பலப்பரீட்சை செய்து பார்க்கும் ஆசையிருந்தால் இந்தக் கல்லை எடுத்துச் சாறாகப் பிழி பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஒரு சிறு பாறாங்கல்லை எடுத்து அந்த அரக்கனிடம் கொடுத்தார் சூஃபி.

எவ்வளவு முயன்றும், சூஃபி சொன்னபடி, அந்த அரக்கனால் செய்ய முடியவில்லை.

“அது சாத்தியமில்லை. இந்தக் கல்லில் எந்த நீரும் கிடையாது. இருந்தால் அதை எனக்கு நீ காட்டும்” என்று சொன்னான் அரக்கன். சூஃபி அந்த அரையிருட்டு நேரத்தில் அந்தக் கல்லைத் திரும்ப வாங்கினார். தன் பையிலிருந்து ஒரு முட்டையை எடுத்து, கல்லையும் முட்டையையும் சேர்த்துப் பிழிந்தார் சூஃபி.

நீர் வழிவதைக்கண்ட அரக்கன் ஆச்சரியப்பட்டுப் போனான். மக்கள் புரியாத விஷயத்தினைக் கண்டு அசந்து போய் அதன்மேல் அளவுக்கதிகமாக மதிப்பு வைக்கத் தொடங்குவர்.

“நான் இதைப் பற்றி யோசிக்கவேண்டும். என்னுடைய விருந்தாளியாக இன்றிரவு என் குகையில் தங்குங்கள்” என்று சூஃபிக்கு உபச்சார வார்த்தைகள் சொன்னான் அரக்கன்.

சூஃபியும் அரக்கனுடன் போனார். அரக்கனின் குகை அவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான வழிப் பயணிகளின் வைர வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாயக் கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புதக் குகை போலவே அது இருந்தது.

“என்னுடைய பக்கத்தில் படுத்துத் தூங்கு. காலையில் மற்ற விஷயங்களைப் பேசிக் கொள்வோம்” என்று சூஃபியிடம் சொல்லி விட்டு படுத்தவுடன் தூங்கிவிட்டான் அரக்கன்.

தான் ஏமாற்றப் படுவோம் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்த சூஃபி, தந்திரமாக தான் படுக்கையில் இருப்பது போன்ற ஏற்பாடுகளைப் பண்ணி விட்டுத் தூரப்போய் ஒளிந்து கொண்டார்.

அவர் போனதுதான் தாமதம், அரக்கன் படுக்கையிலிருந்து எழுந்தான். பெரிய மரக் கட்டையை எடுத்து சூஃபி படுத்திருந்த இடத்தைப் பார்த்து ஏழு விளாசு விளாசினான்.

அதன் பின் படுத்து மறுபடியும் உறங்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து சூஃபி தனது படுக்கைக்குத் திரும்பினார், அரக்கனைக் கூப்பிட்டார்,

“ஓ அரக்கனே! உனது குகை சௌகரியமாயிருக்கிறது. ஆனால் ஒரு சிறு கொசு மட்டும் என்னை ஏழு தடவை கடித்தது. அதை மட்டும் போக்குவதற்கு நீ எதாவது செய்தாக வேண்டும்” என்றார்.

பெரிய மரக்கட்டையால் அசுர பலத்தில் ஏழு தடவை அடி வாங்கிய பின்பும்.. சூஃபி பேசியது அரக்கனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது .

காலை புலர்ந்தவுடன், அரக்கன் எருமைத் தோலாலான பையை எடுத்து சூஃபியை நோக்கி எறிந்து “கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா. காலைச் சமையல் செய்யலாம்” என்றான்.

சூஃபி அந்தப் பையை எடுக்காமல் – உண்மையில் அந்தப் பையை அவரால் தூக்கி நடக்க முடியாது – பக்கத்திலிருந்த நீர்ச் சுனைக்குச் சென்றார். நீர்ச் சுனையிலிருந்து குகைக்கு ஒரு சிறிய கால்வாயைத் தோண்டினார்.

அரக்கன் தாகத்தால் துடித்தான்.

“ஏன் தண்ணீரை சுமந்து வரவில்லை?” என்று அரக்கன் கேட்டான்.

“பொறுமையோடிரு, நண்பனே! வசந்த கால நீருற்றின் தண்ணீர், உன் குகையின் முகத்துவாரத்துக்கே நிரந்தரமாக வர, கால்வாய் வெட்டியுள்ளேன். அதனால் உனக்கு தண்ணீரைச் சுமந்து வர வேண்டிய அவசியமிருக்காது” என்று பதில் சொன்னார் சூஃபி.

தாக விடாயினால் அரக்கனுக்குப் பொறுக்க முடியவில்லை. எருமைப் பையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போய் நீரைத் தானே நிரப்பிக் கொண்டான் அரக்கன்.

காலைத் தேனீர் தயாரிக்கப்பட்டவுடன், அதைப் பல பீப்பாய்கள் குடித்து முடித்தான் அரக்கன். தேனீர் குடித்தவுடன் அரக்கனுக்கு புத்தி லேசான தெளிவுடன் வேலை செய்ய ஆரம்பித்தது.

“நீங்கள் பலவானாக இருந்தால் – ஏற்கனவே அதை எனக்கு நிரூபித்துவிட்டீர்கள் – இருந்தும் ஏன் அந்தக் கால்வாயை அங்குலம் அங்குலமாக வெட்டுவதற்கு பதில் வேகமாக வெட்டக்கூடாது?” என்று சூஃபியிடம் கேட்டது அரக்கன்.

“உண்மையில் செய்ய வேண்டிய அர்த்தமிக்க வேலைகளை அதற்குரிய உழைப்பைப் போடாமல் செய்து முடிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் அதனளவுக்கு ஏற்றவாறு முயற்சிகள் தேவை. நான் கால்வாயைத் தோண்ட எவ்வளவு அத்தியாவசியமான முயற்சி தேவைப்படுமோ அதை மட்டும் செலவிடுகிறேன். ஆனால், பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஜந்துவான நீ , அந்த எருமைத் தோல் பையைத்தான் எப்போதும் பயன்படுத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும்” என்றார் சூஃபி.

நீதிக் கதைகள் – குரங்கு அறிஞர்

ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.

அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

ஜென் கதைகள் – புழுதிச் சாலையில் ஒரு வைரம்

ரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.

ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார்.

மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன.

சரி, ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்… நனையாத உடை, ஒரு ஜோடி ஷூ வாங்கி அணிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார்.

உள்ளேயிருந்து வந்த ஒரு பெண்மணி, குருவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தந்தார். அவர் உடை நனைந்திருப்பதைப் பார்த்து, வேறு உடை மாற்றிக் கொள்ளுமாறும், இரவை அங்கேயே கழிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

வீட்டு முகப்பில் ஒரு சிறு கோயில். அங்கு சிறிது நேரம் கண்மூடி நின்ற குருவுக்கு,
பின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார்.

ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை அவர் கண்டார். ஏதோ சரியில்லை என்பது புரிந்ததும், “என்ன அம்மா உங்கள் பிரச்சினை?” என்று கேட்டார்.

“அய்யா… என் கணவர் ஒரு சூதாடி, குடிகாரர்.. எப்போதெல்லாம் சூதாட்டத்தில் ஜெயிக்கிறாரோ, அப்போது இருக்கும் பணத்தையெல்லாம் குடித்துவிடுவார். தோற்கும்போது, வீட்டிலிருப்பதை எடுத்துப்போய் விடுவார். அல்லது கடன் மேல் கடன் வாங்குகிறார். சமயத்தில் குடித்துவிட்டு எங்கேயோ விழுந்துகிடந்து பின் வருகிறார்… என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றார்.

கவலை வேண்டாம்… நான் உதவுகிறேன்… இதோ என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது. நல்ல ஒயினையும், சாப்பிட உணவும் வாங்கி வாருங்கள். அதன் பிறகு நீங்கள் படுக்கப் போங்கள்… நான் அந்தக் கோயிலில் சற்று நேரம் தியானம் செய்கிறேன்”, என்று அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து அனுப்பினார்.

சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்துவிட்டான். மித மிஞ்சிய போதையில் இருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை…

“ஏய்… இங்க வாடி… நான் வந்துட்டேன்டி… என்ன பண்ற.. சாப்பாடு கொண்டா” என்று சத்தமாகக் கேட்டான்.

உடனே அவனிடம் வந்த குரு, “இதோ நான் தருகிறேன், நீ கேட்டதை,” என்றார்.

பின்னர், “மழையில் மாட்டிக் கொண்டேன். உன் மனைவிதான் இங்கு தங்க அன்போடு அனுமதித்தார். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல ஒயினும் சாப்பிட மீனும் கொண்டு வந்துள்ளேன்,” என்றார் குரு.

குடிகார கணவனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த ஒயினையும் குடித்தான். சாப்பிட்டான். அப்படியே தரையில் சரிந்து விழுந்து தூங்கிவிட்டான்.

குருவோ, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

விடிந்தது.

கணவன் எழுந்து பார்த்தான். முந்தைய இரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவிலில்லை.

குருவைப் பார்த்தான். “யார் நீ.. எங்கிருந்து வருகிறாய்? என் வீட்டில் என்ன வேலை?” என்று கேள்விகளை வீசினான்.

புன்னகை மாறாத முகத்துடன் அவனது கேள்விகளை எதிர்கொண்ட குரு, “நான் இந்த நாட்டு மன்னனின் குரு. பக்கத்து நகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

ராஜகுரு என்றதும், அந்த குடிகார கணவன் திடுக்கிட்டான். தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமடைந்தான். தனது செயல் மற்றும் பேச்சுக்காக மன்னிப்பு கோரினான்.

குருவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. வாழ்க்கை குறுகியது. அந்த குறுகிய காலத்தில், குடி, சூதாட்டம் என இருந்தால், உடனிருக்கும் நல்ல உறவுகளை இழந்துவிடுவாய்.. குடும்பமே இல்லாமல் போய்விடும் என்பது தெரியவில்லையா?”, என்றார்.

ஏதோ ஒரு ஆழ்ந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல திடுக்கிட்டு எழுந்தான் குடிகார கணவன்.

“ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் குருவே…”, என்றவன், ” உங்களின் இந்த அற்புதமான அறிவுரைக்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன்,” என உருகினான்.

“கொஞ்ச தூரம் உங்களின் பொருள்களைத் தூக்கிக் கொண்டு உடன் வருகிறேன். ஒரு சிறிய சேவகம் செய்த திருப்தியாவது கிடைக்கும்,” என்றான் திருந்திய அந்த குடிகாரன்.

“சரி… உன் விருப்பம்,” என்றார் குரு.

இருவரும் நடக்க ஆரம்பித்தனர். மூன்று மைல்கள் தாண்டியாயிற்று. அவனை திரும்பிப் போகச் சொன்னார் குரு. இன்னும் 5 மைல்கள் உடன் வருவதாய் அவன் தெரிவித்தான்.

ஐந்து மைல்கள் கடந்தது. ‘சரி.. நீ போகலாம்’ என்றார் குரு.

“இன்னும் ஒரு பத்து மைல்கள் வருகிறேனே…” என்று மன்றாடினான்.

பத்து மைல்கள் கடந்ததும், கொஞ்சம் கண்டிப்பான குரலில், “நீ இப்போது வீட்டுக்குத் திரும்பலாம்,” என்றார் குரு.

“குருவே, இனி நான் பழைய பாதைக்கு திரும்புவதாக இல்லை. மிச்சமிருக்கும் நாளெல்லாம் தங்கள் வழியைப் பின்பற்றி நடப்பேன்!,” என்றான் உறுதியான குரலில்…

ஜென் கதைகள் – வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?

ரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.

எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?

கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”

“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”

நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.

தலை…!

வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.

அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!

துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.

“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!

ஜென் கதைகள் – மூன்று தலைகள்

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில்  என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது.  உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.

ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.

ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.

மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.

புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.

இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.

மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

அமைச்சர் மவுனம் காத்தார்.

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்…  இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

ஜென் கதைகள் – குரு சிஷ்யன்

ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.

ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’

‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம்  அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.

‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’

‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”

குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.

‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.

மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.

சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.

குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.

எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!

குழப்பம் குருவே குழப்பம்!

புகழ்பெற்ற துறவி அவர்.

அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.

பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.

‘என்ன?’

‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’

‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’

‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!”

குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?’

‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’

‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’

‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’

‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!”

ஜென் கதைகள் – மணல் எழுத்தும் கல்லெழுத்தும்!

இரு நண்பர்கள்…

பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.

அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.

விரல்களால் இப்படி எழுதினான்:

“இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!”

மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.

வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.

நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்.

கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா.. புதைகுழியில் சிக்கிக் கொண்டான் அவன்.

நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்.

உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.

“இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”

இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்..

“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏனிப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?”

நண்பனின் பதில்…

“யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!”

ஜென் கதைகள் – கடவுளுடன் ஒரு பேட்டி

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.

“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”

“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.

கடவுள் சிரித்தார்.

“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”

“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”

கடவுள் சொன்னார்…

“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.

பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…

எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!

சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”

கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.

“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”

-மீண்டும் கேட்டான்.

கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…

“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.

வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…

ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.

எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!

நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்…  ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…

நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…

பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.

இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.

ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!

அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…

நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”

-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…

தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!

ஜென் கதைகள் – இந்தாப்பா உன் சந்தோஷம்!


ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.

சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!

சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…

சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.

உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.

அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.

அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா…  இந்தா  உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.

சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.

இப்போது அந்த துறவி கேட்டார்…

“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

ஜென் கதைகள் – இரண்டே இரண்டு வார்த்தைகள்

அது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல… மாபெரும் தடை.

யாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு… பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம்… அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்!

அந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கழித்தார். பின்னர்  தலைமைப் பிஷுவிடம் வந்தார்.

‘சொல்லு… நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’

‘படுக்கை… கடினம்’

‘ஓ… அப்படியா…’ என்று பதிலளித்தார் தலைமை குரு.

பத்தாண்டுகள் கழித்து, அந்த பிஷு திரும்பி தலைமை குருவிடம் வந்தார்.

‘ஓ அதற்குள் பத்தாண்டுகள் போய்விட்டதா…’ – கேட்டார் தலைமை குரு.

‘சரி… இந்த முறை நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’

‘சாப்பாடு… நாத்தம்..’

‘ஓ… அப்படியா’ என்று கேட்டுக் கொண்டார் தலைமை குரு.

மேலும் பத்தாண்டுகள் கழிந்தன. பிஷு வந்தார்.

தலைமை பிஷூ, “ம்.. பத்துவருடங்கள் ஓடிவிட்டன… இப்போது நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’ என்றார்.

‘நான்… போகிறேன்’

‘நல்லது…’ என்றார் குரு.

பின்னர், ‘கண்ணா… இது நான் எதிர்ப்பார்த்த ஒண்ணுதான்…’, என்ற தலைமை குரு, ‘இந்த முப்பது வருடங்களும் நீ ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்தாய்… அது புகார்.. கிளம்பு!’ என்றார்.

சூஃபி ஞானி கதைகள் – மூன்று பொம்மைகள்

அந்தப் புதிய இளம் மாணவனின் பெயர் மக்தூம். அறிவிலும், பயபக்தியிலும் (தக்வா), அடக்கத்திலும் சிறந்து விளங்கிய அவனை சூஃபி மகான் பெரிதும் நேசித்தார்.

இதனால் மூத்த மாணவர்கள் பொறாமைப்பட்டனர். எப்பொழுது பார்த்தாலும் மக்தூமைப் பற்றி சூஃபி மகானிடம் ஏதேனும் புகார் சொல்லி, கோள் மூட்டிக்கொண்டே இருந்தனர். மக்தூமை விரட்டியடிக்க பல சூழ்ச்சிகள் செய்தனர்.

மூத்த மாணவர்களுக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்த மகான், ஒருநாள் எல்லா மாணவர்களையும் அழைத்தார். “அன்புச் செல்வங்களே! உங்கள் அறிவாற்றலுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் என் வாரிசாவார்” என்றார்.

எல்லா மாணவர்களும் போட்டிக்குத் தயார் ஆயினர்.

அவர்களுக்கு எதிரே, ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று மனித பொம்மைகள் வைக்கப்பட்டன. அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து சொல்லும்படி மகான் ஆணையிட்டார்.
மூத்த மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து பொம்மைகளைப் பல கோணங்களில் பார்த்தனர்; யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னரும் சிறந்த பொம்மையைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் குருவிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.

இப்பொழுது மக்தூமின் முறை! அவன் மெல்லிய, நீண்டதொரு கம்பியைக் கொண்டு வந்து முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். கம்பி, பொம்மையின் மறு காது வழியே வெளியானது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது வாய் வழியே கம்பி வெளியானது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது கம்பி வயிற்றுக்குள் சென்றது.

மூன்றாவது பொம்மையே சிறந்த பொம்மை என அறிவித்து, அதற்கான காரணத்தையும் மக்தூம் சொன்னான்!
“முதல் பொம்மை எந்த அறிவுரையைக் கேட்டாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடும். இரண்டாவது பொம்மை, அறிவுரையைப் பிரச்சாரம் செய்யுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ள முயலாது. மூன்றாவது பொம்மையோ, அறிவுரையை ஜீரணித்து தன் வாழ்வை சீர் செய்துகொள்ளும் சீர்மை மிக்கது. ஆகவே மூன்றாவது பொம்மையே சிறந்தது.”

மாணவன் மக்தூமின் விளக்கத்தைக் கேட்டு சூஃபி மகான் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.

பொறாமைப்பட்ட மூத்த மாணவர்கள் வாயடைத்துப் போயினர்.

ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்


கங்கைக் கரை. குகன் வழக்கம்போல படகைத் தொட்டுக் கும்பிட்டு, ஆற்று நீரில் காலை அலம்பிக்கொண்டு படகில் ஏறினான். ராமன், சீதை, லட்சுமணனை சுமந்து சென்ற, புனிதப் படகல்லவா அது!

படகில் அன்றைய தினம் நாலைந்த புதிய நபர்கள் வந்தார்கள். அவர்களில் ஓர் இளைஞன், குகனிடம் பேச்சுக் கொடுத்தான்.

‘‘அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் அமர்க்களப்பட்டு கொண்டிருக்கின்றன. நீ என்னடாவென்றால் இங்கே படகில் துடுப்பு இழுத்துக் கொண்டிருக்கிறாயே! ஏன், உன்னை ராமர் அழைக்கவில்லையா? நீ அந்த வைபவத்தில் கலந்துகொள்ளத் தகுதியில்லாதவனா?’’ என்றான்.

குகன் அமைதியாகச் சொன்னான். ‘‘ஐயா! ராமபிரானுக்கு என் நினைவு வராதிருக்குமா? ‘உன்னோடு சேர்த்து ஐவரானோம்’ என்று என்னைத் தன்னுடைய நான்காவது தம்பியாக பாவித்தாரே… அவருக்கா என்னை மறக்கும்?’’ நெகிழ்ச்சியுடன் சொன்னான்.

‘‘அப்படியென்றால் ஏன் உனக்கு அழைப்பு விடுக்கவில்லை?’’

‘‘பொதுவாக ஒரு திருமணம், ஒரு விசேஷம் என்றால் நெருங்கினவர்களுக்கெல்லாம் ஒரு சில பொறுப்புகளைக் கொடுத்து நிறைவேற்றச் சொல்வார்கள் இல்லையா, அதுபோல எனக்கும் ராமர் பட்டாபிஷேகத்துக்கு வரும் மக்களை
அக்கரையில் இருந்து படகில் அழைத்துவரும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. திருமணத்தின்போது இதுபோன்ற பொறுப்பை நிர்வகிக்கும் ஒருவரால் மணமேடைக்குச் சென்று திருமணத்தைப் பார்க்க முடியாத நிலைமை ஏற்படும். அதுபோலத்தான் எனக்கும். நான் மானசீகமாக ராமர் பட்டாபிஷேகத்தைப் பார்க்கிறேன். என் ராமர் என்னைப் பார்க்கிறார். நட்புடன் புன்னகைக்கிறார். ‘சாப்பிட்டு விட்டு வெகு
மதிகளை வாங்கிச் செல்’ என்று பாசத்துடன் சைகை செய்கிறார். அந்த நிறைவை நான் இங்கேயே பெற்றுவிடுகிறேன். வேறு என்ன
வேண்டும் எனக்கு?’’

அந்த இளைஞன் மட்டுமின்றி, பயணித்த அனைவருக்குமே குகனுடைய பதிலால்
கண்களில் நீர் திரண்டது.

ஜென் கதைகள் – ஒன்பது திருடர்கள்

ஜப்பானில் ஒரு சிறு கிராமம் அது.. இங்கு வசித்து வந்த மக்களுக்கு பெரும் தொல்லையாய் இருந்தார்கள் ஒன்பது திருடர்கள்.

இவர்களை அடக்கி, தங்களைக் காக்க பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஜென் குரு ஒருவரை அழைத்து வந்தனர்.

கிராமத்திற்கு வந்த குரு அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக ஒரு கிண்ணத்தில் அரிசி சாதம் எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டுக் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.

விஷயம் அறிந்த ஒன்பது திருடர்களும் ஜென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர். குருவுக்கு அது தெரிந்துவிட்டது.

அப்போது அவர் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஜென் குரு தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பறந்து கொண்டிருந்த ஈயினை அடித்தார், பார்க்காமலே. ஒவ்வொரு முறையும் ஒரு ஈ செத்து விழுந்தது. ஒரு முறை கூட குறி தவறவே இல்லை.

ஒன்பது முறை…  ஒன்பது ஈக்களை மிகத் துல்லியமாக அடித்துக் கொன்றார். பின்பு திரும்பிப் பார்த்தார்.

மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை!

ஜென் கதைகள் – தானம்

ஒருவனுக்கு தாமும் தன்னாலான தான தருமத்தைச் செய்ய வேண்டும் என்று ஆசை வந்தது.

அடுத்த நாளிலிருந்து தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்ய ஆரம்பித்தான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அவன் மனைவி “தினமும் கடுகளவு தங்கம் தானம் செய்வதால் யாருக்கு என்ன லாபம்? தினம் கடுகளவு தங்கம் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைங்க.. மொத்தமாகச் சேர்ந்ததும் அதை உருக்கி யாருக்காவது கொடுக்கலாம்,” என்றாள்.

மனைவி பேச்சைக் கேட்டு அவனும் அவ்வாறே செய்ய ஆரம்பித்தான். கடுகு சைசிலிருந்த தங்கம், போகப்போக விளாம்பழ அளவுக்கு அதிகமாகிக் கொண்டே போனது. அவ்வப்போது உருக்கி உருண்டையாக்கிக் கொண்டே வந்தான்.

ஒருநாள் அவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் விழுந்தான்.  பேச்சு வரவில்லை.

தான் இறப்பதற்கு முன்பாக அந்தப் பொன் உருண்டையை யாருக்காவது தானமாக்க கொடுத்துவிட விரும்பினான்.

தன் விருப்பத்தை அவன் தன் மனைவிக்கு சைகை மூலம் தெரிவித்தான்.

அவன் சொல்வது அவளுக்குப் புரிந்தது. ஆனாலும் அவ்வளவு பொன்னை தானமாகக் கொடுக்க அவளுக்கு மனமில்லை.

“அப்பா என்ன சொல்கிறார்?” என்று மகன்கள் கேட்க, அவளும் சாமர்த்தியமாக “உங்க அப்பாவிற்கு விளாம்பழம் சாப்பிட ஆசையாக இருக்கிறதாம்..” என்று கூறி மழுப்பினாள்.

உடனே மகன்களும் வாங்கி வந்து, அப்பாவுக்கு ஊட்டினார்கள். மனைவியின் துர் எண்ணம் புரிந்தது. மறுக்காமல் சாப்பிட ஆரம்பித்தான். விளாம்பழம் தொண்டையில் சிக்கி அவன் இறந்தே போனான்!

சூஃபி ஞானி கதைகள் – குரு யார்

மிகச் சிறந்த சூஃபி ஞானிகளில் ஒருவரான ஹாசன் என்பவரிடம் இறக்கும் சமயத்தில் உங்களது குரு யார் என்று யாரோ ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், மிக தாமதமாக இந்த கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நேரம் இல்லை. நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்று கூறினார். அதற்கு கேள்வி கேட்டவர், நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது. நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கிறீர்கள், இன்னும் சுவாசித்து கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கிறீர்கள். நீங்கள் பெயரை மட்டும் சொன்னால் போதுமானது என்று கேட்டார்.

அதற்கு ஹாசன் எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் இருக்கிறார்கள். நான் அவர்களது பெயரை சொல்வதற்கே எனக்கு பல மாதங்கள் பிடிக்கும் அவர்களைப் பற்றி பேச வருடங்கள் ஆகும். இருப்பினும் மூன்று பேர்களை மட்டும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

அதில் ஒன்று ஒரு திருடர். ஒருமுறை நான் பாலைவனத்தில் தொலைந்து போய் வழி கண்டுபிடித்து கிராமத்தை போய் சேரும்போது நடு இரவாகி விட்டது. பாதி இரவு சென்று விட்டது. கடைகள் அனைத்தும் மூடிக் கிடந்தன. கதவுகள் அனைத்தும் அடைபட்டுக் கிடந்தன. ரோட்டில் மனித நடமாட்டமே இல்லை. நான் விசாரிப்பதற்காக யாராவது இருக்கிறார்களா என்று தேடினேன். இறுதியில் சுவற்றில் உள்ளே நுழைவதற்காக கன்னம் வைத்துக் கொண்டிருந்த ஒரு திருடனை பார்த்தேன்.

நான் அவரிடம், நான் தங்க இங்கே ஏதாவது இடம் இருக்குமா என்று கேட்டேன். அவர், நான் ஒரு திருடன், நீங்களோ ஒரு சுஃபி ஞானி போல தோன்றுகிறீர்கள். இப்போது தங்க இடம் கண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால் நீங்கள் விருப்ப்பட்டால் என் வீட்டிற்கு வரலாம், திருடனுடன் தங்க உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையென்றால் என்னுடன் வாருங்கள். என்று அழைத்தார்.

நான் கொஞ்சம் ஒரு வினாடி தயங்கினேன். பின் எனக்கு உரைத்தது. ஒரு திருடன் சூஃபியை பார்த்து பயப்படாத போது ஏன் சூஃபி திருடனைக் கண்டு அஞ்ச வேண்டும். உண்மையில் அவன்தான் என்னைக் கண்டு அஞ்ச வேண்டும். அதனால் நான் அவனிடம் சரி நான் உன் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறினேன். நான் அவனுடன் சென்று அவன் வீட்டில் தங்கினேன். அந்த மனிதன் மிகவும் அன்பானவன், மிகவும் அருமையான மனிதர். நான் அவருடைய வீட்டில் ஒரு மாதம் தங்கினேன். ஒவ்வொரு இரவும் அவர் திருடுவதற்கு கிளம்பும்போதும், சரி, நீங்கள் உங்கள் வேலையை பாருங்கள், தியானம் செய்யுங்கள், ஓய்வெடுங்கள், நான் என் வேலையை பார்க்கப் போகிறேன் என்பார். அவர் திரும்பி வரும்போது, ஏதாவது கிடைத்ததா என்று நான் கேட்பேன். இன்று எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் நாளை திரும்பவும் முயற்சிப்பேன். என்று கூறுவார். ஒருநாளும் அவர் நம்பிக்கையிழந்து நான் பார்க்கவேயில்லை.

ஒரு மாதம் முழுவதும் அவர் வெறும் கையுடன்தான் திரும்பி வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் நாளை முயற்சி செய்வேன். கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும். நீங்களும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள். இந்த ஏழைக்கு உதவி செய்யுங்கள் என்று நீங்கள் கடவுளிடம் சொல்லுங்கள். என்று கூறுவார்.

மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லுகையில் நான் பல வருடங்கள் தொடர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில் எதுவும் நிகழவில்லை. நான் மிகவும் மனமுடைந்து நம்பிக்கையிழந்து இது எல்லாவற்றையும் நிறுத்திவிடலாமா என்று பல சமயங்களில் நினைத்ததுண்டு. கடவுள் என்று ஒருவரும் இல்லை, எல்லா பிரார்த்தனைகளும் மடத்தனம், எல்லா தியானங்களும் பொய் என்று நினைப்பேன் – அப்போது திடீரென அந்த திருடனின் நினைவு வரும். அவர் ஒவ்வொரு நாள் இரவும் கடவுள் விருப்பபட்டால் நாளை ஏதாவது கிடைக்கும் என்று கூறியதை நினைத்துக் கொள்வேன்.

அதனால் மேலும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். திருடன்கூட அந்த அளவு நம்பிக்கையுடனும் அந்த அளவு நம்பிக்கையுணர்வுடனும் இருக்கும்போது நான் ஏன் இன்னும் ஒருநாள் முயற்சி செய்து பார்க்கக் கூடாது என்று தோன்றும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அந்த திருடனும் அவனைப் பற்றிய நினைவும் நான் இன்னும் ஒருநாள் என்று முயல உதவி செய்திருக்கிறது. ஒருநாள் அது நிகழ்ந்து விட்டது. அது நிகழ்ந்தே விட்டது. நான் அந்த திருடனின் வீட்டை விட்டும் அவனை விட்டும் பலஆயிரம் மைல் தூரம் அப்பால் இருந்தேன். ஆயினும் நான் அந்த திசையில் வணங்கினேன். அவர்தான் எனது முதல் குரு.

எனது இரண்டாவது குரு ஒரு நாய். நான் மிகவும் தாகமாக இருந்தேன். தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி போய்க் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நாயும் தண்ணீர் குடிப்பதற்காக நதியை நோக்கி வந்தது. அதற்கும் மிகவும் தாகமாக இருந்தது. அது நதிக்குள் பார்த்தது. அங்கே வேறொரு நாய் இருப்பதை பார்த்தது. – அதனுடைய பிம்பம்தான் – அதைப் பார்த்து பயந்தது. அது குரைத்தது உடனே அந்த நாயும் குரைத்தது. இது மிகவும் பயந்து போய் தயங்கிக் கொண்டே திரும்பி போனது. ஆனால் தாகம் மிகவும் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்தது, தண்ணீரில் பார்த்தது, அந்த நாய் அங்கேயே இருப்பதை பார்த்தது. ஆனாலும் தாகத்தினால் தண்ணீரில் எட்டிக் குதித்தது, அந்த பிம்பம் கலைந்து போய் விட்டது. தண்ணீரை குடித்து அது ஒரு கோடை காலமாக இருந்ததால் தண்ணீரில் நீச்சலடித்து ஆனந்தப்பட்டது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். அதன்மூலம் கடவுளிடமிருந்து எனக்கு ஒரு செய்தி வந்ததை புரிந்து கொண்டேன். ஒருவர் எல்லா பயங்களோடும் எட்டிக் குதித்து விடவேண்டும் என்பதை புரிந்து கொண்டேன்.

நான் அறியாததற்குள் குதித்து விடும் ஒரு சமயம் வந்த போது ஒரு பயம் வந்தது. அந்த எல்லை வரை போய்விட்டு தயக்கப் பட்டுக் கொண்டு திரும்பி வந்து விடுவேன். அப்போது அந்த நாயின் நினைவுதான் வந்தது எனக்கு. நாய் எட்டிக் குதிக்கும்போது நான் ஏன் எட்டிக் குதிக்கக் கூடாது என்று தோன்றியது. ஒருநாள் நான் அறியாததற்குள் எட்டிக் குதித்துவிட்டேன். நான் கரைந்து அறியாதது மட்டுமே இருந்தது. அந்த நாய்தான் எனது இரண்டாவது குரு.

எனது மூன்றாவது குரு ஒரு சிறு குழந்தை. நான் ஒரு நகரத்தினுள் சென்றபோது அந்த குழந்தை ஒரு மெழுகுவர்த்தியை ஏந்திக்கொண்டு சென்றது அதன் திரி ஏற்றப்பட்டிருந்தது, மசூதியில் வைப்பதற்காக ஏற்றப்பட்ட அந்த மெழுகுவர்த்தியை கைகளில் எடுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தது அந்த குழந்தை. ஒரு கிண்டலுக்காக நான் அந்த குழந்தையை நீயா இந்த மெழுகுவர்த்தியை ஏற்றினாய் என்று கேட்டேன். அவன் ஆமாம் என்று கூறினான். நான் தொடர்ந்து, அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா மெழுகுவர்த்தி எரியாமல் இருந்தது, நீ ஏற்றினாய் ஒளி வந்தது. நீ ஏற்றியபோது பார்த்தாய் அல்லவா அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று உன்னால் கூற முடியுமா என்று கேட்டேன். அந்த பையன் சிரித்துவிட்டு, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, இப்போது நீங்கள் இந்த ஒளி எங்கு போனது என்று பார்த்தீர்கள் அல்லவா அது எங்கு போனது என்று எனக்கு கூறுங்கள் என்று கேட்டான். என்னுடைய ஆணவம் சுக்குநூறானது, எனது அறிவு அனைத்தும் பொடிபொடியானது. அந்த வினாடியில் நான் எனது முட்டாள்தனத்தை உணர்ந்தேன். அப்போதிலிருந்து நான் அறிந்தவன் என்பதை விட்டு விட்டேன். என்றார்.

ஆன்மிகக் கதைகள் – கலியுகத்தில் கடைத்தேற்றும் கிருஷ்ண நாமம்


பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் எழுந்தருள்வதை சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்தின் மனக் கண்களில் நிறுத்தினார்.

‘‘என் பிரிய ராஜனே, அப்போது கிருஷ்ணரின் தேகம் புகை சூழா அக்கினிபோல ஜொலித்தது. தேகத்திலிருந்து பரவிய ஒளி, எண் திக்கையும் பிரகாசப்படுத்தியது. பவழம் போன்ற சிவந்த உள்ளங்கால். முத்துகளைப் பதித்தாற்போல நகங்கள். அழகுக்கு அழகு செய்யும் பீதாம்பரம். மேகலை எனும் ரத்தின ஆபரணங்கள் கோர்த்த தங்க அரைஞாண் இடுப்பை அலங்கரித்தது. மெல்லிய ஓடையாக, ஆலிலைபோல மென்மையான திருவயிறு.

விசாலமான மார்பு, அதில் உறைந்த தாயார். பஞ்சவர்ண புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட வைஜெயந்தி எனும் மாலை, பகவானின் கழுத்திலிருந்து மேனியில் படர்ந்து அசைந்தாடியது. பச்சைப் பசேலென்று துளசி மாலையின் சுகந்தமும் மார்புச் சந்தனம் பரப்பிய நறுமணமும் அந்தப் பகுதியையே கமழ வைத்தன.

கழுத்தில் தொங்கும் கௌஸ்துபம் என்ற சிறு மணியும் தோள் வளையங்களும் திண்மையான புஜங்களிலே கங்கணங்களும் கம்பீரத்தை கூட்டின. நீண்ட விரல்களுக்கு மெருகூட்டின மோதிரங்கள். சுருண்ட கேசங்கள் தோளில் புரள, பிரகாசமான முகத்தையும் அங்கும் இங்கும் அலையும் தாமரை போன்ற கண்களையும் அவை பொழிவிக்கும் கருணையையும் விவரிக்க வார்த்தைகள்தான் இல்லை! தீர்க்கமான நாசியும் கோவைப் பழ உதடுகளும் விசாலமான நெற்றியில் துலங்கும் கஸ்தூரி திலகமும் காதுகளில் கிணுகிணுக்கும் மகர குண்டலங்களும் சிரசில் ஜொலிக்கும் ரத்தின கிரீடங்களும் வெறும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எழில் கோலம் காட்டின. சதுர் புஜங்களில் சங்கு, சக்கரம், கதை, தாமரை என ஏந்தி நிற்கும் கம்பீர தோற்றத்தை, அந்த மங்கள மூர்த்தியை, ஜரன் எனும் வேடன் கைகூப்பி தரிசித்து, திகைத்து கிடந்தான். மாபெரும் போர்களில் அநாயசமாக எதிரிகளை துவம்சம் செய்த பகவான் இங்கு என் சிறு அம்புக்கு கட்டுப்படுகிறாரே என்று கருணையின் விந்தையை எண்ணி கண்ணீர் விட்டான்.

பகவான் அவனுக்கு பாகவத தர்மங்கள் அனைத்தையும் உபதேசித்தார். நிறைவாக, ‘‘ஒன்றும் கவலைப்படாதே ஜரா. நான் விரும்பியதைத்தான் நீ செய்திருக்கிறாய். மகா புண்ணியசாலிகள் சென்று சேரும் சொர்க்க லோகத்திற்கு நீ போவாய்’’ என்று ஆசி அளித்தார்.

ஜரன் விண்ணுலகம் ஏகினான். அங்கே பிரம்மா, சிவன், பார்வதி, இந்திரன் மற்றும் தேவர்கள், மாமுனிவர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், யட்சகர்கள், கின்னரர்கள் என அனைவரும் குழுமியிருந்தனர். பகவான் வைகுண்டத்திற்கு எழுந்தருளும் திவ்ய காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தனர். யோகிகள் யோக தாரணையாக தம் சரீரத்தை, தாமே எரித்து விடுவர். ஆனால், பகவானோ மங்களமான திருமேனியோடே வைகுண்டத்திற்கு புறப்பட்டார். வானத்தில் துந்துபிகள் முழங்கின. மலர்கள் மாரியாகப் பொழிந்தன. சத்தியம், தர்மம், தைரியம், கீர்த்தி, ஸ்ரீதேவி ஆகிய பெருஞ் சக்திகள் பகவானை தொடர்ந்தன. பிரம்மாவும் ஈசனும் பகவானின் இந்த யோகப் பிரபாவத்தைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். பிறகு அவரவர் லோகங்களுக்குச் சென்றனர்.

ஒரு நடிகன் பற்பல வேஷங்களை போட்டுக் கொண்டு நடித்தாலும் தான் யார் என்பதை மறக்காதிருப்பான். அதுபோல ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தது முதல் வைகுண்டத்திற்கு எழுந்தருளியது வரை எல்லாவற்றையுமே லீலைகளாக நிகழ்த்தி விட்டார். இன்னொரு முக்கிய விஷயம். ஆத்ம நிஷ்டர்களான ஞானிகளுக்கு அவர் முன் உதாரணமாக திகழ்ந்தார். அதாவது, தான் எந்த உடலை எடுத்தாலும் இந்த உடல் தான் அல்ல; தான் என்பது அந்த ஆத்மாவே என்று உடலின் மீது பற்றை அறுத்தல் வேண்டும் என்று ஞானிகளுக்கு காட்டிவிட்டுச் சென்றார்.

கிருஷ்ணர் வைகுண்டத்திற்குச் சென்றார் என்று கேள்வியுற்றதும் துவாரகை நகரமே கண்ணீர் விட்டு அழுதது. தேவகி, ரோகிணி, வசுதேவர் போன்றோர் மூர்ச்சையுற்றனர். கிருஷ்ணரின் பட்டத்தரசிகள் தியானத்தில் ஆழ்ந்தனர். பலர் யோகாக்னி மூட்டி, அக்கினியில் பிரவேசித்தார்கள். பாண்டவர்கள் இந்தத் துக்கம் தாங்காமல் அலறித் துடித்தார்கள்.

அர்ஜுனன் பைத்தியம் பிடித்தவன்போல் அலைந்தான். ‘‘இருக்கவே இருக்காது. என் நண்பன் கிருஷ்ணன் எங்கேயும் போகவில்லை. நாளையே வந்து விடுவான்’’ என்று அரற்றினான். மற்ற சகோதரர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக அவனைத் தேற்றினர். அர்ஜுனனுக்கு கீதையின் ஒவ்வொரு ஸ்லோகமும் நினைவிற்கு வந்தது. மெல்ல அவனுக்குள் தெளிவு பிறந்தது.

வேறொரு பக்கம் துவாரகையை ஆழிப் பேரலைகள் சூழ்ந்து நொடிப் பொழுதில் மூழ்கடித்தது. அர்ஜுனன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு இந்திர பிரஸ்தம் என்று அழைக்கப்பட்ட பாரத தலைநகருக்கு வந்தான். எல்லோருடைய நீத்தார் கடன்களையும் பாண்டவர்கள் முன்நின்று முடித்து வைத்தனர். பகவான் வைகுண்டம் சென்ற அந்தக் கணத்தில் கலியுகம் தொடங்கியது என்று பெரியோர்கள் சொல்கிறார்கள்.

சுகப்பிரம்ம ரிஷி பரீட்சித்துக்கு கலி காலத்தினுடைய ஆரம்பம் முதல் முடிவு வரை அதன் தன்மைகளை எடுத்துக் கூறினார்.
கலியில் எத்தனை மன்னர்கள் ஆள்வார்கள் என்றும் அதர்மம் எப்படி தழைத்தோங்கும் என்றும் ஆணித்தரமாக கூறினார். கலிகால மனிதர்களின் சுபாவத்தை அங்குலம் அங்குலமாக விவரித்தார். தோஷங்களின் மொத்த உருவமே கலிகாலம் என்றும் தயவு தாட்சண்யத்துக்கு சற்றும் இடம் கொடுக்காத வகையில் கலி வளரும். பொய், சோம்பல், தூக்கம், ஹிம்சை, துக்கம், பயம் போன்ற சகல தமோ குணங்களையும் கலி புருஷன் பிரதானமாகக் கொண்டு செயல்படுவான். வேத மார்க்கங்களை சீர்குலைக்க பல்வேறு பாஷண்ட மதங்கள் தோன்றும். பிரம்மச்சர்யம், கிரகஸ்த தர்மம், சந்யாச தர்மம் போன்றவை தலைகீழாகும்.

பரீட்சித் மகாராஜனே, கலி வேண்டுமானால் தோஷங்களின் மொத்த உருவமாக இருக்கலாம். மனிதர்கள் மிருகங்கள் ஆகலாம். கிரகஸ்தர்கள் கருமியாகலாம். பிரம்மச்சாரிகளை காமம் பீடிக்கலாம். சந்யாசிகள் பெரும் செல்வத்தைத் தேடி ஓடலாம். ஆனால், கலியுகம் தன்னிடத்தே மிகப்பெரிய குணம் ஒன்றை கொண்டிருக்கிறது. அதுதான், பகவானின் நாமங்களைச் சொல்வது.  பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திவ்ய ரூபத்தை தரிசிக்காது கூட இருக்கலாம். ஆனால் பகவானின் திவ்ய நாமங்களை கலியுகத்தில் உச்சரிப்பவன் உத்தம கதியை அடைந்து விடுகிறான். நாவினால் நாமங்களை சொல்லச் சொல்ல கிருஷ்ணர் ஓடிவந்து விடுகிறார். எல்லா யுகத்தையும் விட, கலியுகம் பகவானை அடைய எளிய மார்க்கத்தைக் கொண்டிருக்கிறது’’ என்று சுகாச்சாரியார் பரீட்சித்துக்கு கலியுகத்தின் பெருமைகளை ஆனந்தமாக உபதேசித்தார்.

இங்கு பாகவதத்தின் தொடக்கமான சில விஷயங்களை நினைவுகூற வேண்டும். சமீகர் என்கிற முனிவர், பரீட்சித்தை தட்சகன் என்கிற நாகம் தீண்டி இறக்கட்டும் என்று சாபமிட்டார். ஏனெனில், சமீகர் தியானம் செய்யும்பொழுது விளையாட்டாக பாம்பை மாலையாகப் போட்டவன் அவன். அது எவ்வளவு பெரிய தவறு என்று உடனே உணர்ந்தான். சாப விமோசனத்தைத் தேடி அவன் அலையவில்லை. தான் ஏன் அவ்வாறு செய்தோம் என்று யோசித்தான். கலியுகம் தொடங்கியதாலேயே, கலிபுருஷன் தன்னை தீண்டியதாலேயே இப்படியொரு மகாபாவமான செயலை செய்ய நேர்ந்தது என்று உணர்ந்து கண்ணீர் உகுத்தான்.

ஜென் கதைகள் – ஒரு கை ஓசை கேட்குதா!

ஜப்பானில் ஒரு புகழ்பெற்ற ஜென் குரு அவர். அவருக்கு சுவோ என்று ஒரு சீடர். அவர் நல்ல ஆசிரியரும்கூட.

ஒரு கோடையில், ஜப்பானின் தென் தீவிலிருந்து ஒரு மாணவன் வந்தான், தத்துவம் பயில.

அவனை சுவோவிடம் அனுப்பினார் தலைமை குரு. மாணவனுக்கு முதல் பரீட்சை வைத்தார் சுவோ.

“உனக்கு ஒரு கை ஓசை கேட்கிறதா?” – இதுதான் அந்த சோதனை.

அவனுக்குக் கேட்கவில்லை. அந்த சோதனையில் தேர்ந்தால்தான் சுவோவிடம் பயிற்சி பெற முடியும். எனவே ஒரு கை ஓசையைக் கேட்க அவன் காத்திருந்தான்…. வாரக் கணக்கில் அல்ல… மாதக் கணக்கில் அல்ல.. ஆண்டுக் கணக்கில். ஆண்டுகள் மூன்று முழுசாய் ஓடின!

ஒரு இரவில், சுவோவிடம் வந்தான் மாணவன்.

“என்னால் உங்கள் சோதனையில் தேர்ச்சி பெற முடியவில்லை. அவமானம், தர்மசங்கடத்தைச் சுமந்தபடி என் தீவுக்குச் செல்கிறேன்…” என்றான்.

“தம்பி.. அவசரப்படாதே.. இன்னும் ஒரு வாரம் எடுத்துக் கொள். நன்றாக தியானம் செய்..” என்றார் சுவோ.

ஒரு வாரம் கழிந்தது. மாணவனுக்கு ஒரு கை ஓசை கேட்கவே இல்லை. மீண்டும் சுவோவிடம் வந்தான். அவர் “இன்னும் ஒரு வாரம் முயற்சி பண்ணுப்பா” என்றார். ஆனால் அவன் முயற்சிக்கு வெற்றி கிட்டவில்லை.

மேலும் ஒரு வாரம் கெடு கொடுத்தார் சுவோ. அப்போதும் விடை கிடைக்கவில்லை மாணவனுக்கு.

மிகுந்த ஏமாற்றமும் சோர்வுமாக வந்த மாணவன், ‘போதும் குருவே, நான் போகிறேன்’, என்றான்.

சரி, ஒரு ஐந்து நாள் மட்டும் இருந்து பார்த்துவிட்டுப் போ என்றார் சுவோ. அந்த ஐந்து நாட்களில் அவனால் எதையும் உணர முடியவில்லை. மீண்டும் சுவோவிடம் வந்து உதட்டைப் பிதுக்கினான்.

இந்த முறை சுவோ இப்படிச் சொன்னார்:

“சரி, கடைசியாக மூன்று தினங்கள். இந்த மூன்று தினங்களில் உன்னால் இந்த சோதனைக்கான விடையைக் காண முடியாவிட்டால், செத்துப் போ,” என்றார் கண்டிப்பு மிக்க குரலில்.

மாணவன் தன் அறைக்குத் திரும்பினான். இரண்டாம் நாள் வந்தான்.. “குருவே.. ஒரு கை ஓசை கேட்டது… நான் தேடி வந்தது கிடைத்தது,” என்றான்.

சூஃபி ஞானி கதைகள் – இறந்த பாம்பு வளர்ந்தது

சூஃபி ஞானி தங்கியிருந்த ஓர் ஊரில் அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி ஒருவன், தன் வீட்டுக்குப் பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றான். உடனே தன் வீட்டிற்குள் வந்து தன் மனைவி, மகனிடம், ‘‘நான்  மூன்றடி நீளமுள்ள பாம்பைக் கொன்றேன்’’ என்று சொன்னான்.

அதைக் கேட்டு அதிசயித்த மனைவி, பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம், ‘‘என் கணவர் ஐந்தடி நீள பாம்பை தனியொருவராகவே அடித்துக் கொன்றார், தெரியுமா?’’ என்று பெருமையுடன் சொன்னாள். அந்தப் பெண்மணியோ, பக்கத்து தெருவிலுள்ள தன் தோழியிடம், ‘‘எங்கள் தெருவில் ஒருவர் பத்தடி நீள பாம்பைக் கொன்றிருக்கிறார்” என்று தெரிவித்தாள். அதைக் கேட்ட தோழி, பக்கத்து ஊரிலிருந்து வந்த தன் உறவினரிடம், ‘‘எங்கள் ஊர்க்காரர் ஒருவர் முப்பதடி பாம்பை  சாகடித்திருக்கிறார்!’’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாள்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி ‘‘மிகைப்படுத்துவதால் கற்பனை திறன் வேண்டுமானால் வளருமே தவிர, உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்’’ என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அதைக் கேட்ட விவசாயி, தான் இரண்டை மூன்றாக்கியது, இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான். ஆனாலும் ‘முப்பதடி பாம்பைக் கொன்ற’ பெருமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனசில்லை. அதனால், தன் வீரம் பற்றி புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும் என்று அலட்சியமாகக் கேட்டான்.

உடனே ஞானி, விவசாயியின் ஐந்து வயது மகனை அழைத்தார். “உன் அப்பா முப்பதடி பாம்பைக் கொன்றாராமே” என்று கேட்டார். ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்துவிட்டு, “செத்த பாம்பு வளருமா ஐயா?” என்று கேட்டான்.

அதைக் கேட்டுப் பெரிதாக சிரித்தார் ஞானி. தந்தையார் பாம்பைக் கொன்ற தாக சொன்னவுடனேயே அவன் ஓடிப்போய் பார்த்திருக்கிறான். அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பது அவனுக்கு தெரிந்திருக்கிறது. ‘அந்தப் பையனை போல எல்லோரும் உண்மையை ஆராய்ந்திருந்தால் வீண் வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா?’ என்று அவர் ஊர் மக்களை பார்த்துக் கேட்டார். மக்கள் அனைவரும் தலை குனிந்து கொண்டனர்.

சூஃபி ஞானி கதைகள் – பசி தணிக்கும் பழம்


ஒரு குறிப்பிட்ட ஊரில் பல சிறப்புகளை கொண்ட சுவையான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதைப் புசித்தால் நெடுநாளைக்கு பசியே எடுக்காது என்றும் முந்தின ஊரில் சூஃபி ஞானிக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால், அந்த ஊருக்குப் போன அவருக்கு, காய்கனி சந்தையில் அந்தப் பழம் கண்களில் படவில்லை. தயங்கியபடியே பார்த்துக்கொண்டு வந்தார்.

அவருடைய தயக்கத்தை பார்த்த ஓர் இளைஞன், அவரிடம் வந்தான். “நீங்கள் எதையோ தேடுவதுபோல தெரிகிறது. நான் உங்களுக்கு உதவலாமா?” என்று கேட்டான்.

அவனிடம் “இந்த ஊரில் அபூர்வமான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதை உட்கொண்டால் சில நாட்கள் வரை பசியே எடுக்காது என்றும் சொன்னார்கள். அந்தப் பழம் கிடைத்தால் அல்லது அதன் விதை கிடைத்தால் அதை எடுத்துப் போய் பட்டினியால் வாடும் மக்கள் உள்ள பகுதியில் பயிரிட முயன்று அந்தப் பகுதி மக்களின் பசியைப் போக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று பதில் சொன்னார் ஞானி.

இளைஞன் உடனே பரபரத்தான். “சற்று இருங்கள், வருகிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனான். சிறிது நேரம் கழித்து வந்தான். அவன் கையில் ஒரு பழம். “நீங்கள் கேட்ட பழம் இதுதான், இந்தாருங்கள்” என்று சொல்லி அதை ஞானியிடம் கொடுத்தான்.

“இந்த ஊரில் இந்தப் பழம் நிறையவே கிடைக்கும் என்று சொன்னார்களே” என்று கேட்டார் ஞானி.

“உண்மைதான். இந்த ஊரில் இந்த பழம் நிறையதான் கிடைத்துக்கொண்டு வந்தது. ஆனால், மக்கள் சுயநலமிகள் ஆகிவிட்டார்கள். தாம் அனுபவிக்கும் பலனை பிற யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற சுயநல நோக்கில் இந்தப் பழத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பயிரிடும் முறையையும் மிக ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். என் வீட்டில் இருந்த ஒரு பழத்தை உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக இந்தப் பழத்தை நீங்கள் பயன்படுத்த போவதாக சொன்னதைக் கேட்டதும் உங்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது” என்று சொன்னான் அந்த இளைஞன்.

அவனுடைய செயலாலும், சொற்களாலும் நெகிழ்ந்த ஞானி, அவனை வாழ்த்தினார்: “உன்னைப் போல பிறருக்காக உதவ முன்வரும் இளைஞர்கள் பெருகினார்களானால், அவர்கள் வாழும் பகுதியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது.”

சூஃபி ஞானி கதைகள் – அரு மருந்து


ஒர் சூஃபி மரணப் படுக்கையில் இருக்கும் போது, தனது மாணவரொருவரைக் கூப்பிட்டு. அவரிடம் கத்தையாக சில காகிதங்களை கொடுத்து விட்டுச் சொன்னார்:

“இதை வைத்துக் கொள்ளுங்கள். சில காகிதங்கள் எழுதப் பட்டுள்ளன. சில காகிதங்களில் எதுவும் எழுதப்படவில்லை. எழுதப்படாத பக்கங்கள், எழுதப்பட்டவை போலவே மதிப்பு மிக்கவை தான்’

சீடரும் காகிதங்களை எடுத்துக் கொண்டார். எழுதப்பட்டவைகளைக் கவனமாக படித்துக் கொண்டார். மற்ற காகிதங்களின் மதிப்பு பின்னாளில் உறுதிப்படும் வரை அவற்றை கவனமாகப் பாதுகாத்துக் கொண்டார்.

ஒரு நாள் சத்திரத்தில் அந்த சீடர் நோய்வாய்ப்பட்டு படுத்திருந்தார். குளிர் காய்ச்சலால் நடுங்கிக் கொண்டிருந்தார். அவர் மரணப் புள்ளியை நெருங்கிக் கொண்டிருக்கிறார் எனப் பட்டதால் அவரைப் பரிசோதிக்க மருத்துவர் வரவழைக்கப்பட்டார்.

“காத்துக் கொண்டிருப்பதற்கு நமக்கு நேரமில்லை . தரமான தாள்களை எனக்கு கொண்டு வந்து தாருங்கள். அதில் அவர் சிகிச்சைக்கான மந்திரத்தை நான் எழுதவேண்டும் ” என்று மருத்துவர் சொன்னார்.

அங்கு கூடியிருந்தவர்கள் சுற்றுமுற்றும் தேடினார்கள். சீடரின் பையைத் துழாவிய போது, சூஃபி ஞானி, சீடருக்குக் கொடுத்த காகிதங்களில் சில எழுதப்படாதவைகளாக இருப்பதைக் கண்டு அக் காகிதங்களை மருத்துவரிடம் கொடுத்தனர்.

மருத்தவர் தன்னிடம் கொடுக்கப்பட்ட காகிதத்தைக் கிழித்தார். அதன் மீது வினோதமான ஒரு படத்தை வரைந்தார்,

” இக் காகிதத்தைத் தண்ணீரில் முக்குங்கள். காகித்தலிருக்கும் மை நீரில் கரைந்ததும், அந்நீரை நோயாளிக்குக் குடிக்கக் கொடுங்கள்” என்று மருத்துவர் சொன்னார்.

மருத்துவர் சொன்ன மாதிரியே கூடியிருந்தோர் செய்தனர்.

சீடரும் உடனே சரியானார்.

உண்மையில் சீடர் குணமடைந்ததற்கான கரணம், எழுதப் படாத காகிதங்களில் சூஃபி ஞானி நோய்க்கான மருந்தைத் தடவி பூசியிருந்தார். இது ஒருவருக்கும் தெரியாது .

சீடர் குணமாகி, மரியாதைக்குரிய சூஃபி ஞானி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். தன்னுடைய அனுபவங்களை அவரிடம் சொன்னார். எழுதாத பக்கத்தின் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார் சீடர்.

” காகிதத்திலிருந்த “உண்மையால் தான்’ நீ குணமானாய் மருத்துவர் வரைந்த வினோத உருவத்தால அல்ல’ என்றார் சீடரிடம் சூஃபி .

“நீங்கள் ஓரு உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் போது காப்பாற்றுவதுதான் முக்கியம். அது பற்றிய பேச்சு பின்னால் தான்’ என்று பேச்சை முடித்துக் கொண்டார் சூஃபி.

சீடர் அதைக் கேட்டு பின் வாங்கினார். தனக்கு சிகிச்சையளித்த மருத்துவரை தேடத் தொடங்கினார். எங்கெல்லாமோ சுற்றியலைந்து மருத்துவரைக் கண்டு பிடித்தார் சீடர்.

“எந்த நிலைமை , காகிதத்தில் வேறு மந்திரங்களை ஆய்ந்து எழுதித் தரச் செய்தது ? ‘ என்று மருந்துவரிடம் கேட்டார் சீடர்.

அதற்கு , ” தனது அற்புதங்களை இரகசியமாக மூடி மறைத்துக் கொள்ளும் அந்த சூஃபியிடம் நான் மாணவனாக இருந்த போது ,

“ஒரு நாள் சத்திரத்தில் நோய்வாய்பட்டிருக்கும் மனிதனைக் காண நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவருக்கு இன்னின்ன வகையில் நோய்க் குறிகள் இருந்தால். வெற்றுக் காதிதத்தை எடுத்து வரச் செய்து அதில் ஒரு வரைபடம் வரை. பின் அந்த வரைபடத்தின் மை கலக்கப்பட்ட தண்ணீரை நோயாளியைக் குடிக்கச் செய்தால் , காய்ச்சல் மூன்று மணி நேரத்தில் போய்விடும் ‘ என்று தன்னிடம் சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

“அந்தக் காகிதங்கள் இல்லாவிட்டால், மாற்றாக என்ன செய்ய வேண்டும் என்ற விஷயங்கள் உங்களுக்கு சொல்லப்பட்டனவா? என்று மருத்துவரிடம் மேலும் கேட்டார் சீடர்.

காகிதங்கள் கண்டிப்பாக அங்கு இருக்க வேண்டும். காகிதங்கள் அங்கில்லா விட்டால், அது தனது கடமையினை அஜாக்கிரதையாக ஒதுக்கிய மனிதனின் செயலாகும். துறவிகளின் ஆணைகளை கண்டு கொள்ளாததற்கு அந்த செயல் ஓப்பாகும். அப்படிப்பட்ட மனிதன் தனக்குத்தானே மரணத்தை வருவித்துக் கொள்ளுவான். அந்தத் தருணத்தில் காகிதம் அங்கில்லாவிட்டால். நோயாளி இறந்து விடுவான்” என்று சூஃபி சொன்னதாகச் சொன்னார் மருத்துவர்.

ஆன்மிகக் கதைகள் – தீமைக்கும் நன்மை செய்!

சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன  இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை.

ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான்.

தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான்.  உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.

பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.

என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின.

அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும்  சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது!

பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது.

ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான்.
கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை.

உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது.

சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது?  ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான்.

‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன்.

‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.

‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது!

விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார்.

தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள்.

மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது.
மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.

ஆன்மிகக் கதைகள் – ஏன் திறக்கவில்லை சொர்க்கவாசல்?

கரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம் புகும் ஆசை தவிர வேறு எந்த ஆசையும் கிடையாது. ஜொலிக்கும் விழிகளும் வெண்ணிறத் தாடியும் ஜடாமுடியுமாய் நாளுக்குநாள் அவரது வசீகரம் கூடியது. மந்தபாலர் தம் தவ வாழ்வில் நிறைவுகண்டு, தாமே விரும்பி சொர்க்கம் புக முடிவு செய்தார். அக்கினியை வளர்த்த மந்தபாலர், தன் இறுதி வேண்டுகோளைச் சமர்ப்பித்தார்: ‘‘ஏ அக்கினியே! எத்தனையோ முறை வேள்வித் தீ வளர்த்து, சமித்துக்களை ஆகுதியாகப் பெய்து உன்னை ஆராதித்திருக்கிறேன். இன்று நான் உன்னை வளர்ப்பது என்னையே ஆகுதியாக நீ ஏற்பதன் பொருட்டே. மனத்தாலும் முழு பிரம்மச்சாரியாக வாழ்ந்த என்னை ஏற்று என் ஆன்மாவை சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக!’’

இவ்விதம் முழங்கிய அவர், நெருப்பில் சடாரெனக் குதித்தார். சக முனிவர்கள் சடசடவென அவர் உடல் எரிவதைப் பார்த்துக் கைகூப்பி அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். அவரது ஆன்மா நட்சத்திரம் போல் ஒளி வீசியவாறு விண்ணில் பறந்தது. சொர்க்கத்திற்குச் சென்ற மந்தபாலர், சொர்க்க வாசல்முன் நின்றார். ஆனால் சொர்க்கத்தின் கதவுகள் அவருக்குத் திறக்கவில்லை. தடதடவென அதன் தங்கக் கதவுகளைத் தட்டினார். கதவைத் திறந்துகொண்டு உள்ளிருந்து வந்தான் ஒரு தேவன். ‘‘யார் நீங்கள்? என்ன வேண்டும்?’’ என்று அதட்டினான்.

‘‘நான் மகரிஷி மந்தபாலன். சொர்க்கம் புக வந்திருக்கிறேன், கதவைத் திறவுங்கள்’’ என்றார் முனிவர். தேவன் கடகடவென்று சிரித்தான். ‘‘மந்தபாலரே! சொர்க்கத்தின் கதவுகள் தட்டித் திறக்கப்படுவதல்ல; தானாய்த் திறந்தால்தான் உண்டு. நீங்கள் சொர்க்கம் புகத் தகுதியானவர் என்றால் இந்தக் கதவுகள் உங்களுக்காகத் திறந்து உங்களின் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கும். அப்படித் திறவாததால் உங்களுக்கு சொர்க்கம் புகத் தகுதி இல்லை என்றே பொருள்!’’

மந்தபாலர் வியப்படைந்தார். தவ சிரேஷ்டரான தனக்கு சொர்க்கம் புக அனுமதி கிடையாதா? தம் தவ வலிமையின் அர்த்தம்தான் என்ன? ‘‘தேவனே! தவத்தை அன்றி வேறெதையும் நான் செய்ததில்லை. ஏன் எனக்கு சொர்க்கம் மறுக்கப்படுகிறது?’’ தேவன் நகைத்தபடிச் சொல்லலானான்: ‘‘மந்தபாலரே! ஒவ்வோர் உயிரும் பூமிக்கு அனுப்பப்படும்போது படைப்பாற்றலுடன்தான் அனுப்பப்படுகிறது. பூமி தொடர்ந்து இயங்க வேண்டும் இல்லையா? படைப்பாற்றலைப் பயன்படுத்த வேண்டியது ஒவ்வோர் உயிரின் அடிப்படைக் கடமை. இயற்கையிலேயே ஒருவருக்கு மக்கட் செல்வம் கிட்டவில்லை என்றால் அது ஒப்புக் கொள்ளக் கூடியதே. ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒருவர் பிரம்மச்சரிய விரதம் பூண்டால் அதுவும் கூட ஏற்கக் கூடியதே.

ஆனால் எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் இல்லாமல் சொர்க்கம் புகத் தவம் செய்கிறேன் என்று சொல்லிக் கொண்டு பிரம்மச்சரிய விரதம் பூணுபவர்களை சொர்க்கம் விரும்புவதில்லை. படைப்பாற்றல் சக்தி அளிக்கப்பட்டும் தர்மநெறிப்படி வாழ்ந்து ஆனால் ஓர் உயிரைக் கூடப் படைக்காமல் சொர்க்கம் புக எண்ணுவது சரியல்ல. உங்களுக்கு இயற்கை வழங்கிய படைப்பாற்றலுக்கு நீங்கள் நியாயம் செய்யவில்லையே! உங்கள் வாரிசு என பூமியில் யாரையாவது காட்டுங்கள். உங்களுக்காக சொர்க்கத்தின் கதவுகள் இப்போதே திறக்கும்.’’

மந்தபாலர் திகைத்தார். இப்படியொரு கோணத்தில் தாம் எண்ணிப் பார்க்கவே இல்லையே என வருந்தினார். தம் தவ ஆற்றலால் தாம் மறுபிறவி எடுத்து தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்தால் அதன் பின் சொர்க்கக் கதவுகள் தமக்குத் திறக்குமல்லவா என்று யோசித்தார். தேவன், ‘‘ஒரு பிறவியின் தவ ஆற்றல் மறுபிறவிக்கும் தொடரும், மறுபிறவியில் அவர் தவம் ஏதும் நிகழ்த்த வேண்டாம், தம் படைப்பாற்றலுக்கு நியாயம் செய்து தம் இனத்தைப் பெருக்க உதவினால் அது போதும்’’ என்று விளக்கம் தந்தான். மந்தபாலர் தன்னை விரைவில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு சாரங்கப் பறவையாக உருமாறும்படி மனத்தில் சங்கல்பம் செய்துகொண்டார். அப்போதுதானே சீக்கிரத்தில் சொர்க்கம் வர முடியும்?

மறுகணம் மாபெரும் காண்டவ வனத்தில் ஒரு மரக்கிளையில் அந்த அழகிய சாரங்கப் பறவை போய் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டது. இயற்கையின் நியதிப்படி, அது மறுபிறவி எடுத்த கணத்திலேயே அதன் முற்பிறவி நினைவுகள் மறைந்தன. அதே மரத்தின் கிளையில் சிறகுகளைத் தன் கூரிய அலகால் கோதிக் கொண்டு ஜரிதா என்ற ஒரு சாரங்கி அமர்ந்திருந்தது. அது, தான் அமர்ந்த மரத்தின் இன்னொரு கிளையில் உட்கார்ந்த சாரங்கத்தை வியப்போடு பார்த்தது. ஜரிதாவின் எழிலும் கனிவான பார்வையும் மந்தபால சாரங்கத்தைக் கிறக்கம் கொள்ள வைத்தன. அந்தப் பெண் பறவையிடம் மந்தபால சாரங்கத்திற்குத் தீராக் காதல் தோன்றியது.

மெல்ல மெல்ல அவற்றினிடையே காதல் வளர்ந்தது. அவை இல்லற வாழ்வை மேற்கொண்டு ஒரே கூட்டில் இணைபிரியாமல் வசிக்கலாயின. ஜரிதா நான்கு முட்டைகளை இட்டது. அவற்றை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதற்குள் அந்த இனிய இல்லற வாழ்வில் ஒரு விபரீதம்! லபிதா என்ற இன்னொரு சாரங்கி மந்தபால சாரங்கனை வட்டமிட்டது. அதனுடைய ஆண்மை நிறைந்த பேரழகு லபிதாவை மயக்கிக் கொள்ளை கொண்டது. லபிதா பறந்து சென்று அதன் அருகே அமர்ந்து எதையோ தேடுவதுபோல் பாவனை செய்தது.

‘‘யார் நீ? என்ன தேடுகிறாய்?’’ விசாரித்தது மந்தபாலம்.

‘‘உங்கள் அலகின் வளைவிலும் சிறகுகளின் அடர்த்தியிலும் என்னையறியாமல் என் உள்ளத்தைத் தொலைத்துவிட்டேன். அது இங்கே எங்கேயாவது விழுந்து கிடக்கிறதா என்று தேடுகிறேன்!’’

லபிதாவின் மயக்கும் கவிதை மொழி மந்தபாலத்தைக் காந்தம் போல் இழுத்தது. தன்னை வட்டமிட்ட லபிதாவின் அழகில் லயித்த மந்தபாலம் தேடிவந்த வாய்ப்பை நழுவவிட விரும்பவில்லை. ஏற்கெனவே மணமாகி ஒரு மனைவியும் தனக்கு உண்டு என்பதையோ மனைவி இப்போது நான்கு முட்டைகள் இட்டு அடைகாத்து வருகிறது என்பதையோ நான்கு ஆண் குஞ்சுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன என்பதையோ மந்தபாலம் எண்ணிப் பார்க்கவில்லை. காமம் அதன் கண்ணை மறைத்தது.

மனைவி ஜரிதாவிடம் ஏதொன்றும் கூறாமல் ஒருநாள் லபிதாவோடு இணைந்து, விண்ணில் பறந்து, தனியே இல்வாழ்வைத் தொடங்கின.

‘‘அப்பா எங்கே?’’ என்று கேட்டன அப்போது தான் உருப்பெறத் தொடங்கியிருந்த நான்கு ஆண் குஞ்சுகள்.

‘‘உங்கள் அப்பா மனிதர்களைப் பார்த்துக் கெட்ட பழக்கத்தைக் கற்றுக் கொண்டிருக்கிறார். இரண்டாம் கல்யாணம் செய்துகொண்டு விட்டார். போகட்டும், நம்மை மறந்தவர்களை நாம் நினைப்பது நம் சுயமரியாதைக்கு அழகல்ல. உங்கள் நால்வருக்கும் நானே இனித் தாயாகவும் தந்தையாகவும் இருப்பேன். வெளியே சென்று உங்களுக்குத் தேவையான உணவை நானே சம்பாதித்து வருவேன். நான் உணவு பெறுவதற்காகக் கூட்டை விட்டு வெளியே செல்லும்போது மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!’’ என்றது, ஜரிதா. ஆண் குஞ்சுகள் மனம் தேறி தாய்ப்பறவை சொன்னதை ஏற்றுக் கொண்டன.

ஒருநாள் திடீரெனக் காண்டவ வனத்தில் தீப்பிடித்துக் கொண்டது. இரண்டாம் மனைவி லபிதாவுடன் சுற்றிக் கொண்டிருந்த மந்தபாலம், நெருப்பைப் பார்த்துத் திகைத்தது. சரிவரச் சிறகு கூட முளைக்காத தன் நான்கு ஆண் குஞ்சுகளும் என்ன பாடுபடுமோ என்று அதன் தந்தை மனத்தில் கவலை எழுந்தது. ‘‘ஏ அக்கினியே! என் நான்கு மகன்களையும் நீ எரிக்காமல் காப்பாற்றுவாயாக!’’ என்று அது மனமாரப் பிரார்த்தனை செய்தது. அதன்முன் அக்கினி பகவான் தோன்றி, ‘‘மந்தபாலமே! உன் முற்பிறப்பில் உன் உடலையே எனக்கு ஆகுதியாக்கினாய். அந்த உன் தியாகத்தை மெச்சி உன் இப்பிறப்பில் உனது ஆண் குஞ்சுகளை நான் ஒன்றும் செய்யமாட்டேன்’’ என வாக்குக் கொடுத்து மறைந்தார்.

இதைக் கண்ட இரண்டாம் மனைவி லபிதா, ‘‘இன்னும் உனக்கு ஜரிதாவிடம் காதல் இருக்கிறது’’ என்று ஊடல்கொண்டு இன்னொரு மரக்கிளையில் தனியே போய் உட்கார்ந்து கொண்டது.

அக்கினியின் வாக்குறுதி பற்றி ஏதும் அறியாத தாய்ப்பறவை ஜரிதாவைக் கலக்கம் கவ்வியது. அக்கினியிடமிருந்து இறகு சரிவர முளைக்காத பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது?

குஞ்சுகள் பயத்தில் நடுநடுங்கின. ‘‘அம்மா! நீங்கள் தப்பித்துப் போங்கள். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீங்கள் இருந்தால் வம்சம் விருத்தியாக வாய்ப்புண்டு. நாங்கள் நெருப்பிலேயே மடிந்தாலும் பரவாயில்லை!’’ என்றன.

தாய்ப்பறவை ஜரிதா வேறு வழி
தெரியாமல் அழுதுகொண்டே விண்ணில் சுற்றிக்
கொண்டிருந்தது.

மூத்த ஆண் குஞ்சான ஜரிதாரி, ‘‘வரப்போகும் கஷ்டத்தை முன்கூட்டியே உணர்ந்து கடவுளைப் பிரார்த்திப்பவனே புத்திசாலி. அவன் கடவுள் அருளால் கஷ்டத்தைக் கடந்துவிடுவான்!” என்றது. சாரி, ஸ்தம்பமித்திரன், துரோணன் ஆகிய பிற மூன்று குஞ்சுகளும் அதை ஆமோதித்தன. அண்ணனுடன் சேர்ந்து பிரார்த்திக்கத் தொடங்கின. ‘‘அக்கினி பகவானே! நீயே சூரியன். நீயே மழை தருபவன். உன்னாலேயே உயிர்கள் உண்ட உணவு ஜீரணமாகிறது. நாங்கள் இளம் குழந்தைகள். எங்களிடம் இரக்கம் காட்டு. எங்களை அழிக்காதே!’’

இளம் குழந்தைகளின் மழலைப் பிரார்த்தனை அக்கினி பகவானைக் குளிரச் செய்தது. ‘‘உங்கள் தந்தைக்கு வரம் கொடுத்திருக்கிறேன். உங்களை அழிக்கமாட்டேன். உங்களுக்கென்று என்ன வரம் வேண்டும்?’’ என்று வெகு பிரியமாகக் கேட்டார்.

‘‘எங்கள் தந்தையை எங்களிடமிருந்து பிரித்த லபிதாவை நாங்கள் வெறுக்கிறோம். எங்கள் தந்தை எங்களுக்கு வேண்டும்!’’ என்றன அவை.
அக்கினி பகவான் சிரித்துக் கொண்டே ‘‘அப்படியே நடக்கும்’’ என்று சொல்லி படபடத்துப் பாய்ந்தார். அதோடு, தனியே மரக்கிளையில் அமர்ந்திருந்த லபிதாவைப் போகிற போக்கில் அள்ளி விழுங்கிச் சென்றுவிட்டார்!

தாய்ப்பறவை ஜரிதா அக்கினி அடங்கியதும் பாய்ந்தோடி வந்தது. சேதமில்லாமல் தன் குஞ்சுகள் இருப்பதைப் பார்த்ததும் அவற்றை அரவணைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் அரற்றியது.
அப்போது மந்தபாலமும் அங்கே வந்துசேர்ந்தது. மனைவி, பிள்ளைகளைக் கண்டு அழுதது. ஜரிதா கணவனை வெறுப்புடன் நோக்க, பிள்ளைகளோ பாசத்தோடு தங்கள் தந்தையிடம் சென்று அமர்ந்தன.
‘‘இந்தப் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் தான் அக்கினி பகவானிடம் வரம் கேட்டேன். அத்தோடு அந்த சாகசக்காரி லபிதாவை இப்போது முற்றிலுமாகத் தலைமுழுகி விட்டேன்! என்னை மன்னிக்கக் கூடாதா?’’ என்று உருகியது மந்தபாலம்.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது ஜரிதா. குழந்தைகளுக்குத் தந்தை முக்கியமல்லவா; திருந்தி மன்னிப்புக் கேட்பவரை ஏற்பதுதான் தர்மமல்லவா என்று சிந்தித்தது. மெல்லப் பறந்துபோய்த் தன் கணவன் அருகில் அது அமர்ந்தபோது குழந்தைகள் அப்போதுதான் முளைக்கத் தொடங்கிய தங்கள் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்து ஆர்ப்பரித்தன. ஜரிதாவின் முகத்தில் வெட்கம் படர்ந்த அழகை ரசித்தது மந்தபாலம்.
மேலிருந்து இந்தக் காட்சியைப் பார்த்த அக்கினி பகவான் சிரித்துக் கொண்டார். முதல் மனைவியின் வாழ்வைக் கெடுக்கும் இரண்டாம் மனைவியை வாழ்க்கை நெருப்பு எரிக்கக் கடவது என்று அவர் விதி வகுத்தார்.
காலப்போக்கில் மந்தபாலம் மூப்படைந்து தளர்ந்து உயிர் விட்டபோது அதன் ஆன்மா சொர்க்கம் நோக்கிச் சென்றது. என்ன ஆச்சரியம்! மந்தபால ஆன்மாவை வரவேற்க சொர்க்கத்தின் கதவுகள் தயாராய்த் திறந்திருந்தன. இரு தேவிகள் அந்த ஆன்மாவை வரவேற்கப் பூரண கும்பத்தோடு காத்திருந்தார்கள். இயல்பிலேயே வழங்கப்பட்ட படைப்பாற்றலுக்கு நியாயம் செய்த மந்தபால ஆன்மா அப்படித்தான் சொர்க்கத்தைச்
சென்றடைந்தது.

(கிளையில் அமர்ந்து குடும்பம் நடத்திய சாரங்கப் பறவை பற்றிய இக்கதை, மகாபாரதத்தில் வரும் ஒரு கிளைக்கதை!)

ஆன்மிகக் கதைகள் – வளர்ப்புத் தந்தை வால்மீகி


மக்களுக்கு உரிய நீதியே மன்னருக்கும் பொருந்தும் என்ற கருத்தை நிலைநாட்ட, ஸ்ரீராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். அப்போது கர்ப்பிணியாக இருந்த சீதாபிராட்டி, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் லவன் என்ற மகனைப் பெற்றாள். ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களைப் போலவே சீதையும் ஆசிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒருநாள், வால்மீகி முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் சீதை தண்ணீர் கொணரச் சென்றாள். குழந்தை லவனையும் சீதை தன்னுடன் எடுத்துச் சென்றாள். வால்மீகி தியானத்திலிருந்து விழித்து எழுந்தபொழுது, குழந்தையைக் காணாது திடுக்கிட்டார்.

ஆசிரமவாசிகளும் துணுக்குற்றனர். சீதை திரும்புவதற்குள் வால்மீகி, தன்னுடைய தவத்தின் ஆற்றலால், ஒரு தர்ப்பைத் துண்டை லவனைப் போன்ற ஒரு குழந்தையாகச் செய்தார்! சீதை ஆசிரமம் திரும்பினாள்! அவள் கையில் குழந்தை லவன் இருந்தான்! அவனைப் போன்ற மற்றொரு குழந்தை இருந்ததைக் கண்டாள்! நடந்ததை வால்மீகி முனிவர் விளக்கியுரைத்தார். ‘குசம்’ என்ற சொல் தர்ப்பைப் புல்லைக் குறிக்கும். தர்ப்பைப் புல்லிலிருந்து தோன்றிய குழந்தைக்கு, ‘குசன்’ என்று பெயரிட்டார் வால்மீகி. லவனும் குசனும் ஒருதாய் மக்களாகவே ஆசிரமத்தில் வளர்ந்தனர்.

வசிஷ்டர் ஆசிரமத்தில் ராமனும் லட்சுமணனும் சகல கலைகளையும் கற்றனர் அல்லவா? அதுபோல், வால்மீகியின் ஆசிரமத்தில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த லவனும் குசனும் ராமரின் அசுவமேதக் குதிரையை அடக்கிப் பிடித்தனர்! பின்னர், ராமரின் அசுவமேத வேள்விச் சாலையிலேயே ராம கதையைப் பாடி அரங்கேற்றினர் என்பது ராமாயண உத்தர காண்டம் உரைக்கும் செய்தியாகும்.

‘‘இருமன்னர் பெற்றேனோ
வால்மீகரைப் போலே?’’

– என்று இதனைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை குறிப்பிட்டார். வால்மீகி முனிவர் இரண்டு மன்னர்களை, அதாவது கோசல நாட்டு இளவரசர்களான லவ-குசர்களை வளர்த்த பெருமைக்குரியவர் என்பது உள்ளீடு.

இருமாலை ஈந்தவர்

சோழ நாட்டில் பூதங்குடி என்ற தலத்திற்கு அருகில் உள்ள மண்டங்குடி என்ற ஊரில் மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். பெற்றோர் அவருக்கு விப்ரநாராயணர் என்று பெயர் சூட்டினர். விப்ரநாராயணர் திருவரங்கப் பெருமாளிடம் தனி ஈடுபாடு கொண்டார். அங்கு தங்கி, பெரியாழ்வாரைப்போல் மலர் மாலை சமர்ப்பிக்கும் தொண்டு செய்து வந்தார்.

விப்ரநாராயணரின் நந்தவனத்திற்கு வந்த தேவதேவி என்ற நடனமாது அவரிடம் மையல் கொண்டாள். பெருமுயற்சிக்குப் பிறகு தேவதேவி விப்ர நாராயணரை மையலில் சிக்க வைத்தாள். பிராட்டியின் வேண்டுகோளின்படி, உரிய நேரத்தில் நிகழ்த்திய திருவிளையாடல் வழியே பெருமாள் விப்ரநாராயணரை மீண்டும் தன்பால் ஈர்த்தார். விப்ர நாராயணர் மாதர் மையலால் மாதவனை மறந்த குற்றத்தை உணர்ந்து வருந்தினார்.

அக்குற்றத்திற்குப் பரிகாரம் யாதென்று சான்றோர்களிடம் வினவினார், விப்ரநாராயணர். திருமாலடியார்களின் பாதங்கழுவிய புனித நீரே அவருக்கு உயர்வளிக்கும் என்றனர். அவ்வாறே செய்த விப்ரநாராயணர் தொண்டரடிப் பொடியாழ்வாராக உயர்ந்தார். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார்.
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கனுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தில்லைக் கூத்தனின் இனிய தரிசனம் கிடைக்கப் பெற்றால் மனிதப் பிறவியும் பயனுள்ளதே என்றார் திருநாவுக்கரசர்.

அரங்கனை, ‘அச்சுதா! அமரர் ஏறே!’ என்று அழைத்து, ‘அச்சுவை கிடைக்கப் பெற்றால் இந்திரலோகம் ஆளும் அச்சுவையையும் வேண்டேன்’ என்றார், தொண்டரடிப் பொடியாழ்வார்.
‘இருமாலை ஈந்தேனோ
தொண்டரடிப் பொடியார் போலே?’

-என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் மலர்மாலைத் தொண்டை நினைவு கூர்ந்தார், திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. தொண்டரடிப் பொடியாழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்தார். திருத்துழாய் (துளசி) மற்றும் நறுமண மலர்களைப் பறித்துத் திருமாலுக்கு மாலைகள் கட்டிச் சமர்ப்பித்தார்.
‘இருமாலை’ என்ற சொல் மூன்று விதமாகப் பொருள் தருகிறது:

1. அவர் பெருமாளுக்குப் பூமாலை, பாமாலை என்ற இரண்டு வகையான மாலைகளை ஈந்தார்.
2. துழாய் மாலை, மற்ற மலர் மாலைகள் என்ற இருண்டு வகையான மாலைகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார்.
3. திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற இரண்டு பிரபந்தங்களை இயற்றிப் பெருமாளுக்குப் பாமாலைத் தொண்டு செய்தார்.
திருக்கோளூர்ப் பெண் பிள்ளையின் சிறிய சொற்றொடர்களில் அரிய இலக்கிய நயமும் கருத்தாழமும் பொதிந்துள்ளதைக் காணமுடிகிறது, அல்லவா?

ஆன்மிகக் கதைகள் – பணிப்பெண்ணான பட்டத்து ராணி


அரசரும் அரசியும் வீற்றிருக்க, அந்தக் கோயில் மண்டபத்தில் ஓர் அழகிய, பதியிலார் மனைப் பெண் தேவாரப் பண்ணுக்குப் பதம் படித்து அற்புதமாக நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.  இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அரசர், ஓர் அருமையான ஜதியில் மெய் சிலிர்த்துப் போய், ‘‘ஹா! ஆஹா! அதி உன்னதம்,’’ என வாய் விட்டுப் பாராட்டி கை தட்டுகிறார். அங்கே மண்டபத்தில் கூடியிருந்த பக்த ஜனக் கூட்டத்திலிருந்து ஒரு குரல், ‘‘தெய்வ கைங்கர்யத்திற்கே தன்னை அர்ப்பணித்த அடியாளாகிய பதியிலார் மனைப் பெண் பரதம் ஆடினால் இத்தனை ரசிக்கின்ற நீ, உன் மனையாளாகிய அரசியை இதேபோன்று இக்கோயில் ஒன்றிலே ஆட விடுவாயா? அரன் தொண்டே இனி அரசி தொண்டு என்று உன்னால் அறிவிக்க இயலுமா?’’ என ஒலிக்கிறது. கூட்டத்தில் ஒரே பரபரப்பு.

‘‘யார்… யார் இப்படி அநாகரிக  வினாக்கணை தொடுத்தது?’’

ஆலய அதிகாரிகள் ஆவேசம் கொள்கின்றனர். பக்தர் கூட்டத்தில் பதற்றம் பரவுகிறது. ‘‘நான் இல்லை… நீ இல்லை… அவர் இல்லை. அதோ அந்தப் பக்கம் இருந்துதான் குரல் எழுந்தது. இதோ இப்போதுதான் ஒரு பரதேசி கையில் திருவோட்டுடன் மெல்ல நழுவினான். அவனாகத்தான் இருக்கும்…’’ ஆளாளுக்கு ஏதேதோ பேச, ஒவ்வொருவரும் தங்களை நிரபராதி என நிரூபிக்க முயல, ‘பிராகாரம் முழுக்கத் தேடியும் நழுவிய ஆள் அகப்படவில்லை…’ என்று அதற்கு ஒரு மாயா சமாதானம் கற்பிக்க முயல, நொடிக்குள் ஏகப்பட்ட களேபரம்….

‘‘அமைதி… அமைதி…’’ என்ற கம்பீரக் குரல் கேட்டு, அனைவர் தலைகளும் கவனமும் திரும்புகின்றன. அங்கே அரசர் எழுந்து நின்று, ‘‘பக்த மகா ஜனங்களே, அக்குரல் எழுப்பியது யார் என்கிற ஆராய்ச்சி தேவையில்லை. அதை நான் ஈசன் கட்டளையாக ஏற்கிறேன். இன்று… இக்கணம் முதல் என் மனைவி இத்திருவிடைமருதூர், மகாலிங்கேஸ்வர சுவாமி ஆலயத்தின் அடிமை; இனி அவள் அரசியல்ல. இந்த ஆலய மண்டபத்திலேயே அவள் பக்தர்களை மகிழ்விக்க ஆடலாம்; தேவாரப்பண் பாடலாம். இதர தேவரடியார் பெண்கள் தங்கியிருக்கும் பதிவிலார் மனை வளாகத்திலேயே அவள் தங்குவாள்.

அதிகாலையில் எழுந்து வந்து, இறைவன்-இறைவி சந்நதிகளை நீர் தெளித்துக் கூட்டிப் பெருக்கிக் கோலமிடுவாள். மலர்கள் பறித்து, மாலை கட்டித் தருவாள். ஆலயம் அளிக்கும் நிவேதனம் பட்டை சாதம்தான் இனி அவள் உணவு’’ எனக் கூறிவிட்டு, எதுவுமே நடவாதது போன்று அமைதியாக நடந்து சென்று விட்டார்.
அரசியாரும் இதை ஏற்பது போன்று மௌனம் சாதித்தார். அவர் முகத்தில் மகிழ்ச்சியோ, மலர்ச்சியோ குன்றவில்லை. அரசர் செல்லும் திசை நோக்கி, இருகரம் கூப்பித் தொழுதபடி இருந்தார். கூட்டத்தினருக்கோ அதிர்ச்சி, ஆச்சர்யம். பிரமிப்பு பிடரி பிடித்து உலுக்கிற்று.

‘‘உலகில் யார் செய்யக்கூடும் இச்செயல்! என்ன அரசர் இவர்… என்ன மனிதர் இவர்! யாரோ ஒரு அநாமதேயம்… எங்கிருந்து பேசுகிறான் என்பதே புலப்படாத உளறல் பேச்சுக்கு இவர் ஏன் இத்தனை முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? கட்டிய மனைவியை அதுவும் பட்டத்தரசியைப் போய் தேவரடியார் பெண்களில் ஒருத்தியாக்குவதா? அநீதி… அடுக்கவே அடுக்காது இச்செயல்…!’’ என்று வாய்விட்டே குமுறினர் பலரும். அவர்கள், வரகுண பாண்டியனின் உன்னத உள்ளம், உயரிய சிவபக்தி பற்றி ஏதும் அறியாதவர்கள்.

மணிவாசகப் பெருமானுக்கு அவருடைய அதியற்புத சிவபக்தியை அறியாத நிலையில், தாம் பெருந்தீங்கு விளைவித்து விட்டதாக எண்ணி, நெடு நாட்கள் உளம் நலிந்து கிடந்தார், பாண்டிய மன்னர் வரகுணர். இந்த சமயத்தில்தான் ஒருநாள் அவர், வைகைக் கரை வனப்பகுதியில் வேட்டைக்குச் சென்று திரும்பும் அந்தி வேளையில், ஒரு வன்னி மரத்தினடியில் சோர்வுடன் சரிந்து கிடந்த கிழ வேதியன் மீது புரவி ஏறி மிதிக்கக் காரணமாய் இருந்து விட்டார். அவர் அறியாது நிகழ்ந்த செயல்தான் அது. புரவியின் கால்கள் அந்த வயது முதிர்ந்த வேதியனின் உடலில் படக் கூடாத இடத்தில் வேகமாகப் பதிந்து விட்டதால், பயங்கர அலறல் எழுப்பி, அரை நொடியில் உயிரை விட்டு விட்டார் அவர்.

புரவியிலிருந்து கீழே குதித்த வரகுண பாண்டியர், நெற்றி, மார்பு, புஜங்களில் விபூதிக் கீற்றுகள் ஒளிர, ஆவி துறந்து கிடந்த அம்முதியவரின் உடல் கண்டு துடித்துப் போனார். ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து, அவ்வேதியர் குடும்பத்துக்கு இழப்பீடுகள் வழங்க ஆணை பிறப்பித்தார். சகலமும் செய்த பிறகும் அரசரின் உள்ளத்தை வேதனை வாட்டியது. கண்களை எப்போது மூடினாலும், சிவச் சின்னங்களோடு வாய் பிளந்து மல்லாந்து கிடந்த அம்முதியவரின் முகமும் உடலும்தான் தோன்றின. காதுகளில் அவர் எழுப்பிய இறுதி அலறல், உயிரைப் பிடுங்கியெறிவதுபோல் ஒலித்தது.

‘ஏன்… ஏன் இத்தனை சிவ அபசாரம் என் வாழ்வில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது! நானும் என் முன்னோர்கள் காட்டிய வழியில், குறைவற்ற சிவபக்தியோடுதானே இருக்கிறேன்… இருந்தும் ஈசன் உள்ளம் இளகவில்லையே! எனக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்திருப்பதாகப் பலரும் கூறுகின்றனர். இந்த மனச்சோர்வே என்னை மாளச் செய்துவிடும் போலிருக்கிறதே!’ என உளம் வெதும்பினார், வரகுணர்.

அன்றிரவு அவர் கனவில், சோம சுந்தரப் பெருமானைப் பூஜிக்கும் அர்ச்சகர் வடிவில் ஈசன் தோன்றி, ‘‘மன்னா, நீ திருவிடைமருதூர் செல்லப் போகிறாய். அங்கு உனைப் பீடித்த பிரம்மஹத்தி விலகும். உன் சிவபக்தியை உலகறியும். ஈசன் உனை அங்கேதான் ஆட்கொள்ளப் போகிறார்…’’ என்று உரைத்தார்.
வரகுண பாண்டியர் இதை எப்படி நம்புவது என்று புரியாமல், சந்தேகமும் குழப்பமும் அடைந்தார். காரணம், திருவிடைமருதூர் இருப்பது சோழ தேசத்தில். அங்கே இப்போது செல்ல வேண்டிய அவசியம் என்ன நேரப் போகிறது?

பல்லவ மன்னன் நிருபதுங்கனுக்குப் பின் காஞ்சியில் அரியணை ஏறிய அபராஜிதன், பாண்டியர் நட்பை மதிக்கவில்லை. எல்லைப் பிரச்னைகள் எழுந்தன. கங்க மன்னன் பிரதிவீபதியின் துணையுடன் படை திரட்டுகிறான். பாண்டியரை வெல்ல என்று செய்தி. விஜயாலய சோழன் புதல்வன் ஆதித்தனும் இதில் கூட்டு சேருகிறானாம். சோழர் எழுச்சியை ஆரம்பத்திலேயே ஒரு தட்டு தட்டி வைக்க வேண்டும் என்றனர் பாண்டிய நாட்டின் அரசியல் ஆலோசகர்கள்.
துவங்கியது போர். பாண்டிய சைன்யம் சூறாவளியெனத் தாக்கிற்று, சோழ பூமியை.  குடமூக்கை முட மூக்காக்கி, வடகரையின் இடவையில் மையம் கொண்டது போர்ப் புயல்.

வேம்பில் மதிள்களைத் தகர்த்து, வெற்றிப் பதாகையுடன் திருப்புறம்பியத்தில், கங்க மன்னனைக் களத்தில் வென்று, வீழ்த்தியும் ஆயிற்று. அப்போது பார்த்தா அப்படியொரு திருப்பம் நிகழ வேண்டும்? பாண்டியர் படை தங்கியிருந்த காவிரிக் கரையில் ஒரு சிவாலயம் தென்பட்டது. மன்னர் அந்த ஊர் பற்றியும் ஆலயம் பற்றியும் விசாரித்தார். அதுதான் திருவிடைமருதூர் என்றும் அங்கிருப்பது மத்தியார்ஜுனம் என்று புராணங்கள் போற்றும் மருதவாணர் ஆலயம் என்றும் கூறினர் மக்கள்.

அவ்வளவுதான்… ஈசனின் கனவுக் கட்டளை நினைவில் எழ, பாண்டிய மன்னர் மருத மாணிக்கம் எனப்படும் மகாலிங்கப் பெருமானைத் தரிசிக்க வந்து அந்த ஆலயத்தில் புகுந்தவர்தான். அதன் பிறகு அவரை அந்தத் திருவிடைமருதூரிலிருந்து வெளியேற்ற யாராலும் முடியவில்லை. பாண்டியர் படை மறுநாள் போரில் தோற்றன. திருப்புறம்பியத்திலிருந்து மதுரைக்கு விரட்டப்பட்டன. ஆனால், வரகுண பாண்டியனை என்ன செய்வதென்றுதான் ஆதித்த சோழனுக்குப் புரியவில்லை. அவன் ஒருநாள் பாண்டிய மன்னரை வந்து சந்தித்தான்.

‘‘என்னைச் சிறைப்படுத்த வந்திருக்கிறாயா?’’ என்றார் அவனிடம், வரகுண பாண்டியர்.

ஆதித்த சோழன் நன்றாகவே அறிவான், வரகுணரின் இளவல் பராந்தக பாண்டியன் எவ்வளவு பயங்கரமானவன், பலசாலி என்பதை. மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் அண்ணன் இங்கு வந்திருக்கிறான். உள்நோக்கம்தான் புரியவில்லை. ‘நரி வலம் போனாலும் சரி, இடம் போனாலும் சரி, மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி’ என்றெண்ணிக் கொண்டான்.

‘‘தங்களை நான் இப்போது போர்க்களத்திலா சந்திக்கிறேன், அரசியல் பேச? அப்படியும்கூட பாண்டிய மாமன்னரை சிறைப்படுத்துவதாக நான் பகற்கனவு கண்டதில்லை. பக்தியோடு மருதவாணர் ஆலயத்தில் தங்கியிருக்கும் தங்களுக்கு நான் ஏதும் உதவி செய்ய வேண்டுமா எனக் கேட்கவே வந்தேன்…’’ என்றான்.
‘‘உதவி! நான் தங்க ஓரிடம் வேண்டும். மதுரையிலிருந்து என் துணைவி இங்கு வந்து தங்க ஒப்புதல் கொடு. மகாலிங்க ஈசனைத் தரிசித்தபடி இங்கேயே தங்கியிருக்க விரும்புகிறேன். நீ தஞ்சையில் கோட்டை கட்டு. உன் ஆட்சியைப் பலப்படுத்து. சோழ தேச அரசியலில் நான் தலையிட மாட்டேன்…’’
ஆதித்த சோழன், அரசியல் நாகரிகம் உணர்ந்தவன். பாண்டிய வேந்தனின் பக்தி உணர்வைப் புரிந்துகொண்டான். வரகுணர் தங்க மாபெரும் மாளிகை ஒன்றினை அளித்தான். பாண்டிமா தேவியாரையும் உரிய மரியாதைகளுடன் அழைத்துவரச் செய்தான்.

பராந்தக பாண்டியன், அண்ணனை மீண்டும் மதுரைக்கு வரவழைக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ‘‘தம்பி! இனி நீயே மதுரை மகுடம் சூடி ஆட்சி செய். நான் மருதவாணர் ஆலய சேவையிலேயே நிம்மதி காண்கிறேன்’’ என்று கூறிவிட்டார். ஈசன் திருக்கோயிலைப் புதுப்பித்து, பிரமாண்ட மதிற்சுவர் எழுப்பி, புதிய கோபுரமும் அமைத்தார். அது ‘வரகுணபாண்டியன் திருநிலை’ என்றே பெயர் பெற்று விட்டது.

பாண்டியன் தங்கியிருந்த மாளிகையில் புகுந்த திருடன் ஒருவன் கையும் மெய்யுமாகப் பிடிபட்டான். அவன் நெற்றியில் திருநீறு துலங்குவது கண்ட வரகுணர், தளை நீக்கி அவனை விடுவிக்க உத்தரவிட்டார், காவலர்களிடம் வேண்டிய பொருளும் நல்கினார். இரவில் கேட்ட நரிகளின் ஊளை, திருக்குளத்தில் கத்தும் தவளைகளின் ஒலி அனைத்தும் சிவநாம ஜபமாகவே அவருக்குத் தோன்றியதாம். வேப்பம்பழம் ஒவ்வொன்றும் சிவலிங்கம்போல் தோன்றியதால் அவை மண்ணில் விழா வண்ணம் பட்டு விதானம் அமைத்தார். தெருவில் திரியும் நாய்கள் நிழலில் படுக்கச்  சில மண்டபங்களை எழுப்பிய கருணாமூர்த்தி அவர்.

பாண்டிமாதேவியையே மருதவாணர் ஆலயப் பணிப்பெண்ணாக்கி, தனிச்சேரிப் பெண்டிருடன் தங்க அனுமதித்தது வரகுணரின் சிவபக்திக்கு உயரிய அத்தாட்சி.
(இம்மன்னன் கி.பி.862ல் அரியணை ஏறியவன், இரண்டாம் வரகுணம் என வரலாறு பேசும். மாணிக்கவாசகரின் சம காலத்தவன். அவர் தமது திருச்சிற்றம்பலக் கோவையாரில் இம்மன்னனைக் குறிப்பிட்டுள்ளார். பட்டினத்தார் தமது, ‘திருவிடை மருதூர் மும்மணிக்கோவை’யில் இவ்வாறு குறிப்பிடுகிறார்):

வெள்ளை நீறு மெய்யிற் கண்டு
கள்ளனை கையிற் கட்டவிழ்ப் பித்தும்
ஓடும் பன்னரி யூளை கேட்டரனைப்
பாடினவென்று படாம் பல வளித்தும்
குவளைப் புனலிற் றவளை யரற்ற
ஈசன் றன்னை யேத்தின வென்று
காசும் பொன்னுங் கலந்து தூவியும்…
– என்னும் அப்பாடலின் இறுதி வரிகளில்
காம்பவிழ்ந் துதிர்ந்த கனியுருக் கண்டு
வேம்புகட் கெல்லாம் விதான மமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று
புரிகுழற் றேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவரும்…

-என இவ்வரலாற்றின் சாரம் அனைத்தையும் பதிவு செய்துள்ளார், பட்டினத்தடிகள். அப்பாண்டிமாதேவியின் சிலை இன்றளவும் திருவிடைமருதூர் மகாலிங்க ஈசன் ஆலயத்தில் உள்ளது.

ஆன்மீகக் கதைகள் – ஊழியம் பார்த்த ஊழி முதல்வன்

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன், சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ‘‘தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா; நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே…’’ என்று உறுதிபடக் கூறிவிட்டான். ‘‘அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்?’’ என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி.

ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு, ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான்.

வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தபோது, இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான், சோழன். அப்போது எங்கிருந்தோ திடீரென வந்து நின்ற ஓர் ஓடக்காரன், வைகையைக் கடக்க சோழனுக்கு உதவினான். அதுமட்டுமல்ல, ஆலயம் வரை வழிகாட்டியபடி வந்தான். ஆனால் ஆலயமோ அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. சிவநேசன் பரிதவிப்பதைக் கண்ட ஓடக்காரன் மனமிரங்கி, ‘‘கவலை வேண்டாம். ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கேசப் பெருமானைத் தரிசிக்காமல் ஊர்  திரும்ப நேராது’’ என்றான்.

அவ்வாறே திறவுகோலை வாங்கி வந்து, ஆலயக் கதவுகளைத்  திறந்து விட்டான். அர்த்தஜாம வழிபாடு முடிந்து, ஆலய நடை சார்த்தப்பட்டால், அதை இரவில் மீண்டும் திறக்கும் வழக்கமில்லை. அப்படி வழிபடுவதும் தவறு. எல்லாம் தெரிந்திருந்தும் சிவநேசச் சோழன் ஆர்வ மிகுதியால், சொக்கேசனை மகிழ்வுடன் வணங்கினான். ஆலயக் கதவை பழையபடி மூடிச் சாவியை ஒப்படைத்துவிட்டு வந்த ஓடக்காரன், சோழனை வைகையின் மறுகரையில் கொண்டு விட்டான். சோழன் கொடுத்த பொற்காசுகளையும் வாங்க மறுத்துவிட்டான், அந்த அதிசய ஓடக்காரன்.

மறுநாள் ஆலயத்தைத் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய இலச்சினையான மீன முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால், அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை! அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். ‘‘எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம்? இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும்’’ முழங்கி, படைதிரட்ட உத்தரவிட்டான்.

போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன், சோழநாட்டை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்… இரவு ஒரு கனவு. அதில் சோமசுந்தரப் பெருமான் தோன்றினார். ‘‘குலபூஷணா! சோழன் மீதுள்ள சினத்தை விடு, பகையை மற. அவனும் உன்போல் ஒரு சிவபக்தன். அவன் பக்தியை மெச்சி, நான்தான் ஓடக்காரனாகச் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி, முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து, சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி, முத்திரையிட்டபோது, நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா, நீ நினைப்பதுபோல் ‘நந்தி முத்திரை’ பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜதானியின் சிறப்பு அடையாளம்.

இதை ஒரு காரணமாக்கி, நீ சோழன் மீது போர்த்தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல; என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும்!’’ கனவில் வந்து சிவன் பேசப்பேச, மெய் சிலிர்த்து விதிர் விதிர்த்துப்போனார், பாண்டிய வேந்தர். பிறகு போராவது, பூசலாவது! சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி, நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன், பாண்டிய மன்னன் ஆனான். ஆனால், ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை.

இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான். சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன், ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து, ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி, ‘‘பிரபு! பழசையெல்லாம் மறந்துவிடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதால், உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி, உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க்கிடக்கிறாரே; பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள்’’ என்றாள்.

‘‘இல்லை தேவி! தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக்கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்துவிட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். என் தந்தையின் கனவில் தோன்றினார் – அதுவும் சோழனுக்காக வாதிட. எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து, மரணத்தில் தள்ளியது. இவ்வளவு  வருந்துகிறேனே, என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன்.’’
இந்த முறையீடு மதுரைச் சொக்கநாதப் பெருமானின் செவிகளில் விழாமலா இருக்கும்?

சோழன் மகளை மணந்து, உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன், மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால், மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம்.
முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசைமொழிகளை அர்ச்சித்துவிட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். ‘‘குலபூஷண பாண்டியனின் புதல்வனே! என் மீது சினம் கொண்டு, பிணங்கிக் கிடக்கும் பிள்ளையே! எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல.

அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து, அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக்கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர்தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி, உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு, விழி, போராடு. என் எதிரியை வெற்றிக் கொள்…’’ சிவபிரான் பேசக்கேட்டு, சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும்வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப்படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டான். சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம்.

வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும், தீப்பந்தங்களும் ஏந்தி நின்று, காத்திருந்து, மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்! மதுரைப்படை ஒரு போர்ப்பயணம் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன். எங்கும், எல்லோரும் கூறியது ஒரே தகவல்: ‘‘ஆஜானுபாகுவான ஒரு மனிதர் பாயும் புரவிமீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி, சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து, ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார்.

அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம்…’’ யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழவேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். ‘யார் அந்த மாய மனிதன்?’ என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம்! ‘‘பிரபோ! தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான்’’ என்றான்.

‘‘யார் நீ? என் ஊழியரில் எவரும் உன்போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்…?’’
‘‘இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும்…’’

புரவி நந்தியாக மாற, பாண்டிய வீரன் சிவனாகிறார்! ‘‘ஆ! ஐயனே! தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்?’’

‘‘பதற்றம் வேண்டாம், பாண்டிய மன்னா! ‘பரிகாரம்’ என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று, பக்தனுக்காக இறைவனும் செய்யலாம்! நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன்; உன் ராஜ இலச்சினைகளை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா, இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா?’’

‘‘சிவ சிவா! என்ன பேச்சு சுவாமி இது… தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள்…’’

‘‘நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து, மன்னித்து ஏற்றுக்கொள்.’’

‘‘அப்படியே ஆகட்டும் ஐயனே! இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா?’’

விண்ணும் மண்ணும் அதிர வாய்விட்டு நகைத்தார் அரன். பிறகு, ‘‘ராஜசேகரா! என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? ‘சிவன் என் கனவில் வரவேண்டும்’ என்றுதானே? வந்து விட்டேன்! சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான்; கனவு ஒரு வாழ்வுதான். கவலையைவிடு கடமையைச் செய்…’’

சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து, பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று, சொக்கேசப்பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவு விருத்தாந்தங்கள், வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 15
பாபா சற்றுநேரம், அந்த இளைஞனைக்கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். தந்தையைக் குழந்தை அதட்டுவது மாதிரி அவருக்குத்தோன்றியிருக்க வேண்டும். தயக்கமே இல்லாமல் தன்இருக்கையிலிருந்து எழுந்தார். நானாவலியைஅதில் அமர்த்தினார்.சிறிதுநேரம் பாபாவின் இருக்கையில் அமர்ந்திருந்த நானாவலி, பிறகு இருக்கையை விட்டு எழுந்தான். பாபாவை மீண்டும் அவரது இருக்கையில் அமருமாறு வேண்டினான். பிறகு, பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்!தம் ஆசனத்தில் மறுபடி அமர்ந்துகொண்ட பாபா,கடகடவென்று நகைத்தார்.கூடியிருந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சி எதை உணர்த்துகிறது என்று மனத்தில் ஆராய்ந்தார்கள். பாபாவின் லீலைகள்ஒவ்வொன்றுக்கும் ஓர்உட்பொருள் இருக்குமே? மனிதர்கள் தங்கள் பதவி ஆசை, நாற்காலி ஆசை போன்றவற்றை எந்நேரத்திலும் துறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை பாபா உணர்த்துகிறாரா? தம் பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தாம்எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கிவரத் தயார் என்று அறிவிக்கிறாரா?எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும்பக்தர்களுக்குப் புரிந்தது. ஆன்மிகவாதிகளில், சிலர்செல்வச் செருக்கோடும் அகங்காரத்தோடும்இயங்குகிறார்களே! அவர்களைப் போன்றவர்அல்ல பாபா. உண்மையிலேயே பதவி ஆசைஉள்ளிட்ட எந்த ஆசையும் அற்ற தூய துறவி அவர் என்பதை உணர்ந்து பக்தர்கள் நெகிழ்ந்தார்கள்.

பாபாவின் பக்தர்கள், அவரைத் தங்கள் விருப்பம்போல் கொண்டாடினார்கள். அதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். சிலர் அவர் முன் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவார்கள். ஒருசிலர் இசைக்கருவிகளை வாசிப்பார்கள். பலர் மெய்மறந்து, தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.வேறு சிலர் அவருக்குச் சாமரம் வீசுவார்கள். பாபாவை, ராமபிரானின் அவதாரமாகவே சில அடியவர்கள் கருதுவதும் உண்டு. ராமனுக்குப்பட்டாபிஷேக வைபவத்தின் போது,  லட்சுமணனும் சத்துருக்கனனும் கவரி வீசி சேவை புரிந்ததுபோலவே, தாங்கள் பாபாவுக்கு விசிறி  வீசுவதாக நினைத்து அவர்கள் ஆனந்தம்  அடைவதுண்டு. தங்கள் வீட்டில் செய்த  உணவுப் பொருளையும் கல்கண்டு, திராட்சை  போன்றவற்றையும் பாபாவுக்கு நிவேதனமாகக் கொண்டு வருபவர்களும் உண்டு.பக்தி உணர்வின் மேலீட்டால் எல்லாவகைப்பட்ட ஆனந்தங்களையும் பக்தர்கள் அடைவதற்கு  பாபா வழிவகுத்திருந்தார். எதற்கும்  தடை சொன்னதில்லை, ஒன்றே  ஒன்றைத் தவிர.  தமது பாதங்களை பக்தர்கள்  தண்ணீரால் கழுவுவதற்கும், தமக்கு மங்கள ஆரத்தி எடுப்பதற்கும்  அனுமதித்திருந்த பாபா, யாரேனும் தம் நெற்றியில் சந்தனம் பூச வந்தால் மட்டும், சிரித்தவாறே தவிர்த்து விடுவார். பாபாவின் தீவிர அடியவரான மகல்சாபதி மட்டும், பாபாவின் கழுத்தில் சந்தனம்  பூச அனுமதிக்கப்பட்டிருந்தார். மற்றபடி, பாபாவின் நெற்றியில் யாருமே சந்தனம் பூசியதில்லை.பாபா ஏன் அதை அனுமதித்ததில்லை என்பதற்கு என்ன காரணம் கூற முடியும்? அதெல்லாம்,பாபா மட்டுமே அறிந்த பரம ரகசியம்.

ஒருவேளை பாபா சிவனின் அவதாரம் தானோ? தமது நெற்றிக் கண்ணின் சூடு, சந்தனத்தால்குளிர்ச்சி அடைவதை அவர் விரும்பவில்லையோ? மண்ணுலகின் கீழான தீமைகளைச் சுட்டெரிக்க அவதரித்த அவருக்கு, தம் செயல்பாட்டுக்காக நெற்றிக் கண்ணின் உஷ்ணம் தேவைப்பட்டதோ? அந்த ரகசியங்களை எல்லாம் யாரறிவார்?ஆனால், அன்று அது நிகழ்ந்தது. அதுவரை யாரும் காணாத அபூர்வக் காட்சி. பாபாவின்நெற்றியில்  சந்தனம் பூச அவர் அனுமதித்த,அதுவரை  நடவாத விந்தையான சம்பவம்….டாக்டர் பண்டிட் என்பவர், பாபாவை முதல்முறையாக தரிசிப்பதற்காக ஷிர்டி வந்தார்.  பாபாவைக் கீழே விழுந்து வணங்கியபின், மசூதியில் பாபாவின் திருமுகத்தை தரிசனம் செய்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார். வாழும் தெய்வம் பாபா என்பதை அவர் உள்மனம் புரிந்துகொண்டதாகவே தோன்றியது. அவர் விழிகள் பக்திப் பரவசத்தால் பளபளத்தன. தம்மை முதல் முறையாக தரிசிக்க வந்திருக்கும்பண்டிட்டை, சிறிதுநேரம் பிரியமாகப்பார்த்துக் கொண்டிருந்தார் பாபா. அவரின்மனத்திற்குள்  ஊடுருவி அவரைப் பார்ப்பது போல் இருந்தது  பாபாவின் தீட்சண்யமான பார்வை.

பிறகு  பண்டிட்டிடம்,  தாதாபட் கேல்கர் வீடு எங்கிருக்கிறது என்று  விசாரித்து, நான் அனுப்பியதாக அவனைச் சென்று பார்த்துவா! நீ போகும்போதுசந்தனம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களோடு அவன் என்  தரிசனத்திற்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பான். நீ அவனோடு மசூதிக்குத்திரும்பி வா! என்று கூறி அனுப்பி வைத்தார்.பாபாவின் வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்ட பண்டிட், மசூதியை விட்டு எழுந்துசென்று, தாதாபட் கேல்கர் வீட்டை விசாரித்து,அங்குபோய் நின்றார். பாபா தம்மை அவரிடம் அனுப்பியதாகத் தெரிவித்தார். அவரை அன்போடு வரவேற்ற கேல்கர்,பூஜைக்கான ஊதுபத்தி, கற்பூரம், சந்தனம், மலர்கள், நிவேதனப் பொருட்களான திராட்சை, கல்கண்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு பண்டிட்டையும் அழைத்துக் கொண்டு பாபாவின் மசூதிக்கு வந்து சேர்ந்தார். பூஜைப் பொருட்களை பாபாவின் எதிரில் வைத்துவிட்டு கேல்கர் அமர்ந்தபோது, பண்டிட்டும் அருகே அமர்ந்தார்.பாபாவையே மெய்மறந்து  பார்த்துக் கொண்டிருந்த பண்டிட், உணர்ச்சி  வசப்பட்டவராய்  திடீரென்று எழுந்தார். பூஜைப் பொருட்களில்இருந்த சந்தனத்தை எடுத்துத் தண்ணீர் விட்டு நன்கு குழைத்தார்.

அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார்என பக்தர்கள்  வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். பண்டிட், பாபா  அருகே சென்று குழைத்த சந்தனத்தை  முப்பட்டைத் திருநீறுபோல்  பாபாவின் நெற்றியில் இட்டுவிட்டார். அவர் இந்த உலகையே மறந்துஇயங்குவதாய்த் தோன்றியது. பாபா ஏதொன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.பக்தர்களுக்கு வியப்பு. முக்கியமாக,மகல்சாபதிக்குப் பெரும் வியப்பு. கழுத்தில்மட்டுமே சந்தனம் பூச அனுமதித்து வந்த பாபா,எப்படி இன்று நெற்றியில் பூச அனுமதி தந்தார்?இரவு நெடுநேரம் வரை அந்தக் கேள்விக்கு பதில் கிட்டாமலே இருந்தது. பண்டிட் விடைபெற்றுச்சென்றுவிட்டார். பாபா, அந்த முப்பட்டைச் சந்தனம் துலங்கும் நெற்றியுடன் சிரித்தவாறே வீற்றிருந்தார்.கேல்கர் வியப்போடு, பாபாவிடம் பலரும்கேட்க விரும்பிய அந்தக் கேள்வியை நேரடியாகக் கேட்டே விட்டார்: பாபா! நீங்கள் உங்கள் நெற்றியில் சந்தனம்பூச அனுமதித்ததில்லையே? இன்று மட்டும் பண்டிட்டுக்கு அந்த அனுமதியை எப்படி அளித்தீர்கள்? அனைவரும் பாபாவின்பதிலுக்காக ஆவலாய்க் காத்துக்கொண்டிருந்தார்கள்.நகைத்தவாறே பாபா பதில் சொல்லத்தொடங்கினார். பாபாவின் பதிலைக் கேட்டகேல்கர் உள்ளிட்ட அத்தனை அன்பர்களும்வியப்பின் உச்சிக்கே சென்றார்கள்.அவ்வளவு  அற்புதமான பதில் அது. அப்படியொரு பதிலை  பாபா சொல்வார் என யாருமேஎதிர்பார்க்கவில்லை…

-அருள்மழை கொட்டும்

ஷிர்டி சாய் பாபா பகுதி – 14
ஆம்…அந்த சமயத்தில்,ஷிர்டி மசூதியில் பாபாவைதரிசித்துக் கொண்டிருந்தவர்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.திடீரென பாபா ஆவேசத்தோடு எழுந்து நின்றார். ஏன் இவர்இப்படி ஆவேசப்படுகிறார் என்று பக்தர்களுக்கு புரியவில்லை. அவர்களின் ஆச்சர்யம் மேலும், அதிகமாகும் வகையில், பாபாதன் கைகளையும், கால்களையும் யாரோடோ சண்டையிடுவது போல் காற்றில் வீசத்தொடங்கினார். எதன்பொருட்டு இது நடக்கிறது?பக்தர்கள் திகைப்போடு பாபாவையே பார்த்துக் கொண்டு இருந்தார்கள். பாபா உக்கிரத்தோடு காற்றில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். விழிகள் கோவைப் பழமாய்ச்சிவந்திருந்தன. முகம் குங்குமப்பூப்போல் சீற்றத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. திருடர்கள் முன் பயத்தோடுநின்றுகொண்டிருந்த காஷிராமின் உடலில் ஒரு கணம் ஆவேசம்வந்தது போல் தோன்றியது. தன் கையில் பற்றிக் கொண்டிருந்த பையை இன்னும் இறுகப்பிடித்துக் கொண்டார்.தன் கைகளாலும், கால்களாலும் திருடர்களை ஆக்ரோஷமாகத்தாக்கத் தொடங்கினார்.அவரோ அதிக பலமில்லாத நோஞ்சான். ஒரே ஒருவர் தான் அவர். திருடர்கள் பலசாலிகள். அவர்கள் எண்ணிக்கையில் நான்கைந்து பேர்!ஆனால், காஷிராமின் உடலில் தென்பட்ட அசாத்தியமான வலிமையைப் பார்த்துத் திருடர்கள் விக்கித்துப் போனார்கள்.

கடுக்கன், சங்கிலி எல்லாவற்றையும்அங்கேயே போட்டுவிட்டு தப்பித்தால் போதும் என்று ஓடலானார்கள்! காஷிராம் விடுவதாக இல்லை. காற்றை விட வேகமாக ஓடி,அவர்கள் முன்னால் போய்மீண்டும் நின்றார். அவர்களை ஒரு கொத்தாகப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின் சங்கிலி, கடுக்கன் இவற்றோடு முக்கியமாக நிவேதனச் சர்க்கரையையும் எடுத்துக்கொண்டுமசூதி நோக்கி நடக்கலானார். திருடர்கள் அச்சத்தோடும், காவல்துறையினர்பிரமிப்போடும் அவரைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர் மசூதியில் நுழைந்துபாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார். சர்க்கரைப் பையை அவரிடம் கொடுத்து சர்க்கரையை ஏற்குமாறு வேண்டினார்.அப்போதுதான் பாபாவின்ஆவேசம் தணிந்தது. அன்பனே! திருடர்களைக் காவல் துறையினரிடம்ஒப்படைத்து விட்டாயல்லவா? என்று அமைதியாக, அவர் கேட்டபோதுதான் காஷிராமுக்கே, சண்டையிட்டது தான் அல்ல, பாபா என்பது புரிந்தது.பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார் அவர். தம் அடியவர்களைக் காப்பாற்ற பாபா எப்படியெல்லாம் ஓடோடி வருகிறார் என்றறிந்து நெக்குருகி நின்றார்கள் பக்தர்கள்.

அவரவரும் அவரவர் உடம்பை நன்கு பராமரிக்க வேண்டும் என்பது பாபாவின் விருப்பம். அடியவர்கள், தீய பழக்கங்கள் அற்றவர்களாய், நல்ல உணவைச் சாப்பிட்டு உடல் நலத்தைப் பேண வேண்டியது அவசியம் என்பதை பாபாஅடிக்கடி அறிவுறுத்தினார். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே! என்ற திருமூலர் தத்துவமே, பாபாவின்உபதேசமாகவும் இருந்தது. உடம்பைப் புறக்கணிக்கவும் வேண்டாம். கொஞ்சிக் கொஞ்சி செல்லமாகக் கொண்டாடவும் வேண்டாம். ஆனால், முறையாக அதைப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.உடல் என்கிற குதிரையில் தான் ஆன்மா சவாரி செய்கிறது. வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஆன்மா சவாரி செய்யும் இந்த உடல் நலமாக இருக்க வேண்டியது அவசியம். குதிரையில் சவாரி செய்யும் பயணி, குதிரையின் நலனைஎவ்வளவு எச்சரிக்கையோடுபாதுகாப்பானோ, அதுபோல் நாமும் உடலைக் காக்கவேண்டும்.கடவுளை அடைதல் என்ற உயர்ந்த லட்சியத்தை சாத்தியப்படுத்தவே உடல் அருளப்பட்டுள்ளது. ஆன்ம ஞானம் பெறுவதற்கு உடலின் ஆரோக்கியம் முக்கியமானது. பாபா, உடலை வருத்திக் கொண்டு பக்தி செய்யுமாறுகூறியதில்லை. அன்பர்களைத் தாயன்போடு நேசித்த அவர், அவர்களது உடல் நலனிலும்தாய்மைக் கனிவோடு அக்கறை செலுத்தினார்.

அதுமட்டுமல்ல, எல்லாஜீவராசிகளிலும் பாபாவேகுடிகொண்டிருப்பதை அறிந்து, ஜீவகாருண்யத்தோடு வாழவேண்டியது அவசியம்என்பதையும் வலியுறுத்தினார். பாபாவின் தீவிர பக்தையான திருமதி தர்கட், ஷிர்டியில் ஒருவீட்டில் தங்கியிருந்தார். ஒருமுறை, அவர் மதிய உணவு தயார் செய்துகொண்டிருந்தார். கரண்டியால் ரசத்தை அவர்கலக்கிக் கொண்டிருந்த போது,பசியுள்ள ஒரு நாய் விடாமல் குரைக்கத் தொடங்கியது. நாய்பசியால் தான் குரைக்கிறதுஎன்பதை உணர்ந்த தர்கட்டின் மனம் உருகியது. கையில் கிடைத்த ரொட்டித் துண்டை எடுத்துக் கொண்டு வாசலுக்குவந்தார். காய்ந்த ரொட்டித்துண்டைப் பரிவோடு நாயின் முன் வீசினார். வாலைக் குழைத்து ஓடிவந்த அந்த நாய், ரொட்டித் துண்டை வாயால் கவ்விக் கொண்டது. தன் பசி தீர அதை மொறுமொறுவென உண்ணத் தொடங்கியது. தர்கட்டை நன்றியோடு பார்த்தது. ஷிர்டி பாபாவின் கண்கள் ஒளியால் மின்னுவதைப் போல் அதன் கண்களும் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன.நாய் உண்பதைப் பார்த்து நிறைவடைந்த தர்கட், சமையலறை நோக்கிச் சென்றார். சமையல் முடித்துச் சாப்பிட்டுவிட்டு, பாபாவைப் பார்ப்பதற்காகமசூதிக்குச் சென்றார்.

தர்கட்டை அன்போடு பார்த்த பாபா பேசலானார்.அம்மா! நான் மிகுந்த பசியோடு இருந்தேன். நீ கொடுத்த உணவால் பசியாறினேன். என் வயிறு நிறைந்தது. எப்போதும், இன்று நீ நடந்து கொண்ட விதத்தை நினைவில் கொள்.இப்படியே தொடர்ந்துநடப்பாயாக. என் பசிக்குஉணவிட மறந்துவிடாதே!தர்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபாவுக்கு அவள் இன்று உணவிடவேஇல்லையே? அவள் தயக்கத்தோடு பாபாவிடம் விளக்கம்கேட்டாள்:  சுவாமி! நான் இன்றுஉங்களுக்கு உணவு வழங்கவே இல்லையே? நீ அன்போடு அளித்த மொறுமொறுப்பான காய்ந்த ரொட்டியை நான் தானே அம்மா சாப்பிட்டேன்? நீ என் பசியைக் கண்டு இரக்கத்தோடு அதை எனக்கு வீசிப் போட்டாயே? அதற்குள்ளாகவா மறந்துபோனாய்? எல்லா உயிரினங்களிலும் நான் தானே இருக்கிறேன்? எல்லாமாகவும் நான்தானே உலவிக் கொண்டிருக்கிறேன்?பசிக்கும் ஜீவன் எதற்குஉணவளித்தாலும், அதுஎன்னையே வந்து சேரும். நீ அளித்த ரொட்டி என்னை வந்து சேர்ந்துவிட்டது! இதைக் கேட்ட திருமதி தர்கட் மெய் சிலிர்த்தார். எங்கும் நிறை ஞானப் பிரம்மத்தின் முன் தான் அமர்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டார். ஷிர்டியில் நானாவலிஎன்கிற பாபா பக்தன் இருந்தான். பாபாவுக்கான தேவைகள் அனைத்தையும் கவனித்துக் கொள்வான் அவன்.திடீரென்று ஒருநாள் பக்தர்கள் கூடியிருக்கும் சந்தர்ப்பத்தில் நேரே பாபாவிடம் வந்தான்.இப்போது உங்கள் ஆசனத்தில் நான் அமரவேண்டும். உடனே எழுந்திருங்கள்!என்று பாபாவை அதட்டினான்! பக்தர்கள்திகைப்போடு பாபாவைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 13
நீதிபதியின் தலைசுற்றிய காரணத்தைக் கேட்டால், நமக்கும் தலை சுற்றும். காரணம், ஓய்வெடுக்கப் போவதாகச் சொன்ன பாபா, தாவி ஏறி, ஒரு நூலில் படுத்துக் கொண்டு ஆனந்தமாக உறங்கலானார். ஒரு மனிதர் தரையில் படுக்கலாம். பாயில் படுக்கலாம். கட்டிலில் படுக்கலாம். ஆனால், ஒரு மெல்லிய நூலில் எப்படிப் படுக்க முடியும்? நீதிபதிக்குத் தன் கண்ணையே நம்ப முடியவில்லை.ஆனால், நம்ப முடியாததைஎல்லாம் நிகழ்த்திக் காட்டுவதுதானே பாபாவின் மகிமை!ஒரு நூலில் படுக்குமளவு, தம்மை எப்படி கனமே இல்லாதவராகஆக்கிக் கொண்டார்? நீதிபதிக்கு எதுவும் புரியவில்லை.கண்களில் பக்திக் கண்ணீர் பெருக, நெடுநேரம் அக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நீதிபதி, பாபாவைக் கீழே விழுந்து வணங்கி மனத்தில் அவரைபூஜித்தவாறே இல்லம் திரும்பினார்.பாரததேசம்சுதந்திரம் அடைவதற்கு முன், ஷிர்டியில்தரிசனம் தந்த பாபாவை, திலகர்உள்ளிட்டசுதந்திரத் தியாகிகள்பலரும் சென்றுசந்தித்திருக்கிறார்கள்.

நாட்டு மக்களிடம் சுதந்திர எழுச்சியை ஊட்டியவர்களில் மிக முக்கியமானவர் அல்லவா லோகமான்ய பால கங்காதர திலகர்! இந்து மதத்தின் எல்லாப் பிரிவினரும் விநாயகரை வழிபடுவதால், விநாயகர்வழிபாட்டின் மூலம் பாரத மக்களிடையேஒற்றுமையை உருவாக்க முடியும்என்பதை உணர்ந்தார் அவர். நாடெங்கும்விநாயகர்சதுர்த்தியை விமரிசையாகக் கொண்டாட வழிவகுத்து,ஊர்வலங்கள் நடத்தி, அதன்மூலம் பாரத மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியைத்தூண்டினார். பகவத் கீதைக்கு உரை எழுதி அதன்மூலம்பெரும்புகழ் பெற்றார். பாபாவின் மகிமை குறித்து அறிந்த அவர், பாபாவை நேரில் சென்று சந்தித்தார். 1912 மார்ச் 12ல், அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மகாத்மா காந்தியும் பரமாச் சாரியாரும் (காஞ்சிப்பெரியவர்)  சந்தித்த சந்திப்பைப் போல்,  பாபாவும், திலகரும்சந்தித்த  சந்திப்பும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.தாதா சாஹப் கபார்டே என்ற வழக்கறிஞர், பாபாவின்அடியவராகவும் திலகரின் நண்பராகவும் இருந்தார்.அவர்தான், திலகரை பாபாவிடம் அழைத்து வந்தார். பாபாவைப் பரவசத்தோடு தரிசித்த திலகர், அவரது கமலப்பூம் பாதங்களில் தலை வைத்து வணங்கினார்.

பாபாவை  தத்தாத்ரேயரின்அவதாரம்  (சிவன், திருமால், பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் அம்சம்  கொண்டவர்தத்தாத்ரேயர்) என்றேதிலகர் நம்பினார்.பாபா, திலகருக்கு அந்தரங்கமாகச் சில அறிவுரைகள் கூறினார்.இந்தியா சுதந்திரம் பெற்றதில், பாபாவின் அருளாசியும்அறிவுரைகளும் கூடப் பின்னணியில் இருந்தன என்பதை இந்தச்சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.திலகர் பாபாவைச் சந்தித்துச் சென்ற பின்னர், பாபா வசித்தபிரதேசமான அகமத் நகர்மாவட்டத்தின் ஆணையர், அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார். சுதந்திரப் போரில் பாபாவுக்கு என்ன பங்கு என்று கண்காணிக்க விரும்பினார். பாபாவின் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, ரகசிய அறிக்கைகளைத் தமக்கு அனுப்புமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். எல்லோரையும் கண்காணிக்கும் கடவுளையே, கண்காணிக்க முயன்ற அந்த அதிகாரியின் பேதைமையை என்னென்பது! கட்டாயம் இந்தியா சுதந்திரம் அடையும் என்று பாபா ஆசிகூறியதாகவும், ஆனால் அகிம்சை முறையிலேயே அது நிகழும் என்று பாபா திட்டவட்டமாகத்திலகரிடம் அறிவித்ததாக கூறுகிறார்கள். எனினும், பாபா – திலகர் சந்திப்பு பற்றி ஓரளவு அறிய  முடிகிறதேயன்றி, அவர்கள்  என்ன பேசிக் கொண்டார்கள்  என்பது பற்றிய முழுமையான விவரங்கள் கிட்டவில்லை.

அப்போது நடந்தது பிரிட்டிஷ்அரசாங்கமாதலால், பாபாவும்திலகரும் பேசிய பேச்சின்விபரங்கள், மிக ரகசியமாகப்பாதுகாக்கப்பட்டதேஇதற்குக் காரணம்.ஷிர்டியில், காஷிராம்என்றொரு துணி வியாபாரிஇருந்தார். பாபாவின் தீவிர பக்தர். உண்ணும் போதும், உறங்கும்போதும், துணி விற்கும்போதும் பாபாவை நினைத்தவாறே வாழ்ந்து வந்தார். பாபா மனிதவடிவில் வந்துள்ள தெய்வம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டிருந்தார். பாபாவை அடிக்கடித்தரிசிப்பதில் அவருக்குத் தீராதஆர்வமுண்டு. பாபாவின் புனிதத் திருமுகத்தையும், அதில்பொங்கும் கருணையையும்திகட்டத் திகட்டப் பார்த்துக்கொண்டே இருப்பதில் அவருக்கு ஒரு தனி ஆனந்தம். நிவேதனப் பொருள் எதையேனும் ஆழ்ந்த பக்தியோடு எடுத்துக் கொண்டு பாபாவைப் பார்க்கச் செல்வது அவர் வழக்கம்.அப்படித்தான் ஒருமுறை,ஒரு சிறு துணிப்பையில்,பாபாவுக்காகக் கொஞ்சம் சர்க்கரை எடுத்துக் கொண்டு, பாபாவைதரிசிக்கப் புறப்பட்டார். பாபாவை நினைக்கும் போதெல்லாம், மனமேசர்க்கரையாய்த் தித்திக்கிறதே!இந்தச் சர்க்கரையை பாபாஉண்ணும் அழகைக் கண்ணால் பருக வேண்டும்… இவ்விதம் நினைத்தவராய், துணிக்கடையைப் பூட்டிவிட்டு, பாபாதங்கியிருந்த மசூதி நோக்கி,சர்க்கரைப் பையுடன் சாலையில் நடக்கலானார்.

பாபா நினைவே துணையாக அவர் நடந்தபோது, வழியில் தன்னைச் சிலர்ரகசியமாகப் பின்தொடர்வதை அவர் கவனிக்கவில்லை.பின் தொடர்ந்தவர்கள்திருடர்கள்! துணி வியாபாரி, கையில் ஏதோ ஒரு சிறு பையை இறுகப் பற்றியவாறு நடப்பதைப் பார்த்த அவர்கள், அந்தப் பையில் அந்தப் பையில் அன்றைய துணி வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணமோ, வேறு விலை உயர்ந்த பொருளோ இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.பாபா நினைத்தால் சர்க்கரையைக் கூடத் தங்கமாகவோ பணக் கற்றையாகவோ மாற்றக் கூடியவர்தான். ஆனால், அப்போது அந்தப் பையில் இருந்தது வெறும் சர்க்கரைதான். இதை அந்தத் திருடர்கள் அறியவில்லை.வெறும் சர்க்கரைப் பையையா, இப்படி ஒருவன் மார்போடு சேர்த்து இறுகக் கையில் பிடித்துக் கொண்டு நடப்பான்?சந்தேகமில்லால் பையில்ஏதோ விலைமதிப்புள்ள பொருள் இருக்கிறது என்று திருடர்கள் தவறாக முடிவு கட்டினார்கள்.துணைக்கு யாருமில்லாத பகுதியில், துணி வியாபாரி நடந்தபோது அவர்கள் துணிவோடு வியாபாரியை வழிமறித்தார்கள். கத்தியைக் காட்டி காஷிராம்காதுகளில் இருந்த கடுக்கன்களைக் கழற்றித் தரச் சொன்னார்கள்.பயந்துபோன, காஷிராம் உடனே கடுக்கன்களைக் கழற்றிக் கொடுத்து விட்டார். பின்னர்,கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியைக் கழற்றித் தரச்சொன்னார்கள். கையில்கத்தியோடு வந்திருக்கிறார்களே? உயிர் பிழைத்தால் போதும் என்று சங்கிலியையும் கொடுத்து விட்டார். அதன்பின், அவர் இறுகப்பற்றியிருந்த அந்தச் சிறுபையைத் தருமாறு அதட்டினார்கள் அவர்கள்.என்னது! இந்தப் பையை இவர்களிடம் கொடுப்பதா? பாபாவுக்கான சர்க்கரை அல்லவா இது? தெய்வத்திற்கான நிவேதனப் பொருளை யாராவது பன்றிகளுக்குப் போடுவார்களா? நகையும், கடுக்கனும் போனால் போகிறது. கடவுளுக்கான நிவேதனப் பொருள்பறி போகலாமா?இப்படி எண்ணியதுகாஷிராமின் மனம்.  அடுத்த கணம் முற்றிலும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 12

ஆனால், அடுத்த கணம்தான் மாதவராவுக்கும் சரி… கூடியிருந்த மக்களுக்கும் சரி… பாபா சொன்ன வார்த்தைகளின் பொருள் புரியத் தொடங்கியது. உண்மையில் பாபா ஏறாதே! இறங்கு! என்று ஆணையிட்டது மாதவராவுக்கல்ல! மாதவராவின் உடலில் கிடுகிடுவென ஏறிக் கொண்டிருந்த கடுமையான விஷத்திற்கு! பஞ்ச பூதங்களுமே பாபாவின் சொல்லுக்குக் கட்டுப்படும்  என்னும்போது விஷம் என்ன பிரமாதம்? அதுவும் கட்டுப்பட்டுத்தானே ஆகவேண்டும்? பாபாவின் ஆணைக்குப் பணிந்து, அடுத்த கணமே மாதவராவின் உடலில் ஏறிக்கொண்டிருந்த விஷம் சரசரவென இறங்கத் தொடங்கியது. கொட்டுவாயின் வழியாக விஷம் வெளியேறியதையும், மாதவராவ் உடல் நீல நிறம் மாறிப் பழைய நிறம் பெறத் தொடங்கியதையும் பார்த்துப் பொதுமக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். படிகளில் தடதடவென மேலே ஏறிச்சென்ற மாதவராவ், என்னைக் காப்பாற்றிய தெய்வமே! என்று பாபாவின் பாதங்களில் பணிந்தார்.

அடியவர்களைக்  காக்கும் அந்தத் தாமரைப்பூம் பாதங்களைத் தன் கண்ணீரால் கழுவினார். அவரை அள்ளியெடுத்த பாபா, என் குழந்தைகளைத் தந்தையான நான் காப்பாற்றாமல் வேறு யார் காப்பாற்றுவார்! என்றவாறே மாதவராவின் விழிகளில் வழிந்த கண்ணீரைத் தம் விரல்களால் துடைத்து விட்டார். அன்பே வடிவான பாபாவின் அளப்பரிய கருணையைக் கண்டு பக்தர்கள் நெகிழ்ந்தார்கள். இவ்விதம் பாபாவின் மகிமைகள் பரவினாலும், தொடக்க காலத்தில் ஷிர்டியிலும் சிலர் பாபாவைப் பைத்தியக்காரர் என நினைத்ததுண்டு! கானகத்தில் திரிவது, உடை பற்றி அக்கறை கொள்ளாமல் இருப்பது, பித்துப் பிடித்தாற்போல் மரத்தடிகளில் பல மணிநேரம் கண்மூடி அமர்ந்திருப்பது இதெல்லாம் பைத்தியக்காரரின் அடையாளங்கள் என்பது அவர்களின் எண்ணம். மகான்களுக்கும், பைத்தியக்காரர்களுக்கும் வெளித்தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை என்பதை அவர்கள் அறியவில்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரைக் கூடப் பைத்தியம் என்றுதானே தொடக்கத்தில் மக்கள் கருதினார்கள்! அவர் சாதாரணப் பைத்தியம் அல்ல, ஆன்மிகப் பைத்தியம்.. கடவுளை நேரில் தரிசித்துக் கடவுளாகவே மாறியவர் அவர் என்பதெல்லாம் மக்களுக்கு மெல்ல மெல்லத் தானே புரிய வந்தன! பாபாவைப் பைத்தியம் என நினைத்தார்கள் சில எண்ணெய் வியாபாரிகள்.

பாபாவைத் தேடி வெளியூரிலிருந்தெல்லாம் அடியவர்கள் வருவதைப் பார்த்து அவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொள்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த அற்புதமும் நிகழ்த்திக் காட்டப்படவில்லை. எனவே அவர்கள் பாபாவைத் தெய்வம் என நம்ப மறுத்தார்கள். ஆனால், அவர்களும் பாபாவைப் பூரணமாக நம்பி ஏற்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. பாபா, தன் மசூதியில் திசைக்கு ஒன்றாக நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது வழக்கம். விளக்குகள் எரிய எண்ணெய் வேண்டுமே! தமக்கான உணவை யாசிப்பதுபோல, விளக்கிற்கான எண்ணெயையும் அவர் பல கடைகளில் யாசித்துப் பெறுவதுண்டு. தொடர்ந்து பாபாவுக்கு எண்ணெய் வணிகர்கள் மூலம் எண்ணெய் கிடைத்து வந்தது. ஒருமுறை பாபா எண்ணெய் கேட்டு வந்தபோது, அந்த வணிகர்கள் யோசித்தார்கள். இந்தப் பைத்தியத்திற்கு எண்ணெய் கொடுக்க வேண்டிய அவசியமென்ன? தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, எல்லா வியாபாரிகளுமே எண்ணெய் தர மறுத்துவிட்டார்கள். பாபாவின் மசூதியில் விளக்கெரிய எண்ணெய் தருவது மாபெரும் புண்ணியச் செயல் என்பதை அந்த அறிவிலிகள் அறியவில்லை. பாபா ஏற்றும் விளக்குகளால் தான் அந்த ஊரின் தீமைகள் சுட்டெரிக்கப்படுகின்றன என்பதையும் அவர்கள் உணரவில்லை.

பாபா தமக்கு எண்ணெய் தரப்படாததைப் பற்றி எதுவும் கூறவில்லை. புன்முறுவலோடு மசூதியை நோக்கி நடந்தார். வியாபாரிகள் கண்சிமிட்டித் தங்களுக்குள் நகைத்துக் கொண்டார்கள். இவர் இன்று எப்படி விளக்குகளை ஏற்றுவார் பார்க்கலாம் என்று சில வணிகர்கள் மசூதிக்கு வேடிக்கை பார்க்க வந்தார்கள். பாபா மண்பானையில் குடிப்பதற்காக வைத்திருந்த தண்ணீரைக் குவளையில் எடுத்தார். பின் அந்தத் தண்ணீரை எல்லா விளக்குகளிலும் ஊற்றினார். அதன்பின் திரியை ஏற்றினார். பாபாவின் கட்டளைக்கு அந்தத் திரிகள் பணிந்தன. தண்ணீரை அவை எண்ணெயாகக் கருதத் தொடங்கின. எல்லா விளக்குகளும் தண்ணீரால் சுடர்விட்டு எரிய ஆரம்பித்தன. இதைப் பார்த்த எண்ணெய் வணிகர்கள் மனத்தில் அச்சம் தோன்றியது. ஊருக்குள் ஓடிச் சென்று மக்களிடமும் சக வணிகர்களிடமும் இந்த அற்புதம் பற்றி திகைப்புடன் விவரித்தார்கள். மக்களும் வணிகர்களும் பெருந்திரளாக ஓடோடி வந்து தண்ணீரால் விளக்குகள் எரியும் அதிசயத்தைக் கண்டு பிரமித்துப் போனார்கள். எல்லா வணிகர்களும் பாபாவின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். பாபா எண்ணெய் கேட்டது தனக்காக அல்ல. தங்களின் பாவங்களைப் போக்குவதற்காகத்தான் என்பதை அவர்கள் அப்போதுதான் புரிந்து கொண்டார்கள். நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களும் பாபாவுக்குக் கட்டுப்பட்டவை என்ற பேருண்மையையும் அறிந்துகொண்டார்கள்.

பாபா கலகலவென்று நகைத்தார். எல்லோரையும் தட்டிக் கொடுத்தார். வேறு எதுவும் பேசவில்லை. அவர் பேசாத விஷயங்களையெல்லாம் தண்ணீரால் எரிந்துகொண்டிருந்த தீபங்கள் ஒளிமொழியில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தன. தென்னகத்து மகானான வள்ளலார் வாழ்வில் கூட, அவர் தண்ணீரால் விளக்கேற்றிய சம்பவம் வருகிறதே! பக்தி என்னும் எண்ணெய் ஊற்றி அறியாமை என்னும் இருளைப் போக்கி ஞானம் என்னும் சுடரை எரியச் செய்பவர்கள் அல்லவா மகான்கள்? ஒருநாள் மாலை மயங்கும் நேரம். ஒரு நீதிபதி பாபாவை தரிசிக்க வந்தார். பாபா உண்பதற்குஎன்று பிரியத்தோடு போண்டா பொட்டலம் வாங்கி வந்திருந்தார் அவர். போண்டாவை ருசித்துச் சாப்பிட்டார் பாபா. பொட்டலத்தில் கட்டப்பட்டிருந்த மெல்லிய நூலை ஞாபகமாகத் தன் ஆள்காட்டி விரலில் சுற்றிக் கொண்டார். போண்டா சாப்பிட்டு முடித்ததும் அந்த நூலை தான் தங்கியிருந்த மசூதியின் வெளியே தள்ளித் தள்ளி இருந்த இரு தென்னை மரங்களின் இடையே இணைத்துக் கட்டினார். அப்போது அங்கே நீதிபதியையும், பாபாவையும் தவிர வேறு யாருமில்லை. அந்த நூலால், இரண்டு தென்னை மரங்களை இணைத்துக் கட்ட வேண்டிய அவசியமென்ன என்று நீதிபதிக்குப் புரியவில்லை. நான் ஓய்வெடுக்கப் போகிறேன். நீங்கள் புறப்பட்டுப் போவதானால் போகலாம்! என்றார் பாபா. அடுத்த கணம் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்த்து நீதிபதிக்குக் கிறுகிறுவென்று தலை சுற்றியது….!

ஷிர்டி சாய் பாபா பகுதி – 11

திருடன், தான் திருடிய வைர நகைகளெல்லாம் பாபாவுடையது என்று கூறுகிறானே! என்ன செய்வது இப்போது? பாபாவின் மகிமைகளை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்த நீதிபதி சற்றுத் தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்:பாபா! திருடன் திருடிய நகைகளெல்லாம் உங்களுடைய வைதானா? திருடன் அப்படித்தான் சொல்கிறான்! நீதிபதி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, பாபா கலகலவென்று நகைத்தார். என்ன மனோகரமான சிரிப்பு! மக்களும் நீதிபதியும் அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் மயங்கினார்கள். பாபா பேசலானார்:ஆம் நீதிபதி அவர்களே! திருடன் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான். அவன் வைத்திருக்கும் நகைகள் அத்தனையும் என்னுடையவைதான்! பாபாவின் பேச்சைக் கேட்ட பொதுமக்கள் திகைத்து நின்றார்கள். திருடனும் திகைப்பில் ஆழ்ந்தான். அவனுக்குத் தெரியுமே அந்த நகைகள் பாபாவுடையது இல்லை என்று! தப்பிக்கத் தானே அவன் பொய் சொன்னான்? ஆனால், பாபா திருட்டு நகைகள் தம்முடையவை என்கிறாரே? பாபா தொடர்ந்து பேசலானார்:இவன் திருடிய நகைகள் மட்டுமல்ல, உலகில் உள்ள தங்கம் வெள்ளி வைரம் வைடூர்யம் எல்லாமே என்னுடையவைதான். ஏன், இந்த ஊர், இந்த நதி, இந்தக் காற்று, கூடியிருக்கும் மக்கள், ஆகாயத்தில் தென்படும் நட்சத்திரக் கூட்டங்கள், சந்திரன், சூரியன் என அண்ட பகிரண்டத்தில் உள்ள அனைத்தும் என்னுடையவைதான்.

நான் படைத்தவை என்னுடையவையாகத் தானே இருக்கும்? இதுகூட உங்களுக்குப் புரியவில்லையா? ஒன்று சொல்கிறேன், கேட்டுக் கொள்ளுங்கள் நீதிபதி அவர்களே! நீங்களும் கூட என்னுடையவர்தான்! ஞாபகம் இருக்கட்டும்! இந்த வாக்கியங்களைச் சொல்லும்போது பாபாவின் முகம் தேஜோமயமாய்ப் பிரகாசித்தது. அவரின் ஆலய மணிக் குரல் கணீரென்று இந்த வாக்கியங்களைப் பிரகடனம் செய்தது. அப்போது பாபாவின் திருமுகத்தில் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களைச் செய்யும் தெய்வத்தையே தரிசித்தார்கள் மக்கள். நீதிபதி பரவசத்தோடு பாபாவை இருகரம் கூப்பி வணங்கினார். அதன்பின் நீதிமன்ற முறைப்படித் திருடனுக்குத் தண்டனை தரப்பட்டது. ஆனால், பாபாவின் அறிவிப்பைக் கேட்ட அந்தத் திருடன், பின்னாளில் பாபாவின் தீவிர அடியவனாக மாறினான். இந்த விசாரணையில் பாபா கூறிய பதில்களால் பாபா புகழ் மேலும் பரவலாயிற்று. ஷிர்டியை அடுத்து ஒரு சிறிய பள்ளிக்கூடம் இருந்தது. அங்கு பணியாற்றி வந்தார் ஓர் ஆசிரியர்.

பரம ஏழை அவர். மாதவராவ் மல்வந்த் தேஷ் பாண்டே என்பது அவரது பெயர். பாபா ஓர் அவதார புருஷர் என்பதை மிக நல்லவரான அவரது மனம் எளிதில் உணர்ந்து கொண்டது. பாபாவைக் கண்கண்ட தெய்வமாகக் கருதி  இதயத்தில் பூஜித்து வந்தார் அவர். தாம் எதுசெய்தாலும் அந்தச் செயலை மனத்தால் பாபாவுக்கு சமர்ப்பணம் செய்து விடுவார். தமக்கு எந்தத் தீங்கு வந்தாலும் அதிலிருந்து பாபா தம்மைக் காப்பாற்றி விடுவார் என்பது அவரது பரிபூரண நம்பிக்கை. அவரது குடும்ப வாழ்விலும் பணி வாழ்விலும் சின்னச் சின்னப் பிரச்னைகள் வரத்தான் வந்தன. பிரச்னையே இல்லாத வாழ்க்கை ஏது? ஆனால், அந்த எல்லாப் பிரச்னைகளும், பாபாவின் அருளால் சுமுகமாக முடிந்தன. ஒவ்வொரு பிரச்னையும் தனக்கு சாதகமாகத் தீரும்போது மனத்தால் பாபாவுக்கு நன்றி சொல்லிக் கொள்வார் அவர். இயன்ற போதெல்லாம் பாபாவை நேரில் சென்று தரிசித்து அவரது அருளுரைகளைக் கேட்டு மகிழ்வார். ஒருநாள் அவர் வாழ்வில் அவர் முற்றிலும் எதிர்பாராத ஒரு திடுக்கிடும் சம்பவம் திடீரென நடந்தது. பாபாவின் மசூதிக்குச் சென்று அவரை தரிசிக்கும் நோக்கத்துடன் சாலையில் அமைதியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென்று எங்கிருந்தோ சாலையின் குறுக்காக ஊர்ந்து வந்தது ஒரு கருநாகம்! அவரைச் சடாரென ஒரு கொத்துக் கொத்தி விட்டு, விறுவிறுவெனச் சாலையைக் கடந்து சென்று மறைந்துவிட்டது. நாகப் பாம்பின் கொடிய விஷம் அவரது உடலெங்கும் கிடுகிடுவெனப் பரவத் தொடங்கியது. ஒரு கணத்தில் அவர் மேனி நீலம் பாரித்தது.

அவரது வாயில் நுரை தள்ளத் தொடங்கியது. அவர், தனக்கு என்ன நடந்ததென்றே அப்போதுதான் புரிந்து கொண்டார். சாலையில் நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடோடி வந்தார்கள். பார்த்தவர்கள்  அத்தனை பேரும் பதறித் துடித்தார்கள். யாருக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தக் கொடிய விஷத்தின் பாதிப்பால் அவர் சிறிது நேரத்தில் இறந்துவிடுவார் என்பது  மட்டும் எல்லோருக்கும் தெரிந்தது. ஆனால் என்ன செய்வது இப்போது? அதிர்ச்சியில் தத்தளித்தார்கள் அவர்கள். ஆனால், மாதவராவுக்குத் தான் பாபா மேல் தீவிர நம்பிக்கை உண்டே? இதுவரை தன் வாழ்வின் எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் தன்னைக் காப்பாற்றியவர் மனித வடிவில் வந்திருக்கும் அந்தக் கடவுள் தானே! இந்தச் சிக்கலில் இருந்தும் அந்தக் கடவுள் தன்னைக் காப்பாற்ற மாட்டாரா என்ன! பாபாவிடம் சரணடைந்தால்  தப்பித்துவிடலாம் என அவர்  சரியாகவே முடிவெடுத்தார்.  ஒருகணம் கூடத் தாமதிக்காமல் உடனடியாக பாபா தங்கியிருந்த மசூதிக்கு வாயில் நுரை தள்ளத் தள்ள ஓடி வந்தார். அவருடன் மற்றவர்களும் கவலையோடு அவரைப் பின்தொடர்ந்து ஓடிவந்தார்கள். என்னைக் காப்பாற்றுங்கள் பாபா. என்னைக் காப்பாற் றுங்கள்! உங்களையே சரணடைந்திருக்கும் என்னைக் கைவிட்டு விடாதீர்கள்! என்று கதறியவாறே அவர் மசூதிப் படிகளில் தன்னால் இயன்றவரை வேகமாக ஏறத் தொடங்கினார். கொட்டியதோ கொடிய விஷமுள்ள கருநாகம்.

அது கடித்தால் மரணம் என்பது நிச்சயம். கடும் விஷத்தின் பாதிப்பிலிருந்து பாபா எப்படி இவரைக் காப்பாற்ற முடியும்? சிலர் சந்தேகப்பட்டார்கள். பலர், பாபா நினைத்தால் இவரைக் காப்பாற்றி விட முடியும் என்று முழுமையாக நம்பினார்கள். மசூதியில் படிமேல் ஏறிக் கொண்டிருந்தவரைக் கூர்மையாகப் பார்த்தார் பாபா. வாயில் நுரை தள்ளத் தள்ளப் படிகளில் மேலேறி வரும் தன் அடியவனைப் பாம்பு கடித்திருக்கிறது என்பது உடனேயே அவருக்குத் தெரிந்து விட்டது. அவரது கண்பார்வையின் கூர்மை பார்த்தவர் களைத் திகைக்க வைத்தது. அடுத்த கணம் தன்னையே நம்பி வந்த அந்த அடியவரைப் பார்த்து, ஏறாதே! நான் கட்டளையிடுகிறேன். ஏறாதே! நில்! இறங்கு! உடனடியாகக் கீழே இறங்கு! என்று பாபா ஆக்ரோஷமாகக் கூச்சலிட்டார். அவரது உரத்த கூச்சல் திடுக்கிடும் அளவு அச்சம் தருவதாக இருந்தது. கேட்ட மக்கள் அனைவரும் வெலவெலத்தார்கள்.  தான் எந்தத் தவறும் செய்யவில்லையே! பாபா தன்னைக் காப்பாற்றுவார் என்றல்லவோ தேடிவந்தோம், இப்போது நாம் நம்பி வந்த பாபா இப்படிச் சொல்கிறாரே, என்ன செய்வது என பாபாவின் தீவிர அடியவரான மாதவராவ் திகைத்துச் செய்வதறியாது அப்படியே படிகளில் மேலே ஏறாது நடுவில் நின்றார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனப் பொழிந்து கொண்டிருந்தது. கூட்டத்தினரும் கூட அருளேவடிவான பாபா, இப்படிச் சொல்ல என்ன காரணம் என்றறியாமல் விக்கித்து நின்றனர்.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 10

பாபா பேச ஆரம்பித்தார்.  நாம் எல்லோரும் இப்போது பஜனை செய்வோம். அதோ என் மனக்கண்ணால் நான் பார்க்கிறேன். என் அடியவனுக்காகப் பண்டரிபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன! பண்டரிநாதன் என் கண்முன் தோன்றுகிறான்! இப்படிச் சொன்ன பாபா, நான் பண்டரிபுரம் போகவேண்டும், அங்கே தங்க வேண்டும். ஏனெனில், அதுவல்லவோ என் பரமனின் வீடு! அங்கேயல்லவோ நான் வாழவேண்டும்! என்று சப்தம் போட்டுப் பாடலானார். அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வந்த சாந்தோர்க்கர் மெய்சிலிர்த்தார். அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது. தமக்கு மாற்றல் உத்தரவு வந்தது பற்றி பாபா ஏற்கனவே அறிந்திருப்பதையும், அதை ஏற்கச் சொல்லியே பாபா இவ்விதம் பாடுகிறார் என்பதையும் அவர் உள்மனம் உணர்ந்துகொண்டது. கண்களில் கண்ணீர் வழிய, பண்டரிநாதன் வடிவில் பாபா தொடர்ந்து தம்மை ரட்சிக்க வேண்டும் என்று அவர் கீழே விழுந்து நமஸ்கரித்து வேண்டியபோது, பாபாவின் கரம் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தது…. ஒருமுறை ஒரு திருடன் கொஞ்சம் நகைகளைத் திருடி பிடிபட்டு விட்டான். காவல் துறையினர் அவனை உதைத்து விசாரித்தார்கள்.

எப்படியாவது தப்பிக்க வேண்டுமே? தான் வைத்திருந்த திருட்டு நகைகள் எல்லாமே பாபாவுடையவை என்று கூசாமல் பொய் சொன்னான் அவன்! அப்படிச் சொன்னால் பாபா சிக்கிக் கொள்வார், தான் தப்பித்து விடலாம் என அவன் மனப்பால் குடித்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி திகைத்தார். அவருக்கு பாபா மேல் மரியாதை உண்டு. ஆனால், இந்தத் திருடன் இப்படிச் சொல்கிறானே? இவன் சொல்படி நாம் பாபாவையல்லவா விசாரணை செய்ய வேண்டியிருக்கும்? அடேய்! உண்மையைச் சொல்! என அதட்டினார் நீதிபதி. திருடனோ, தான் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி, அதை உண்மையாக்கப் பார்த்தான். நீதிபதி சீற்றமடைந்தார். சரி. வா. பாபாவிடமே விசாரிக்கலாம்! என்றுசொல்லி, பாபா தங்கியிருந்த மசூதிக்கு வந்தார் நீதிபதி. காவல் துறையினர் திருடனுக்கு விலங்கிட்டு உடன் அழைத்து வந்தார்கள். மசூதியில் பெருங்கூட்டம் கூடிவிட்டது. பாபா எதற்கு நகையைத் திருடப் போகிறார்? அவர் பக்தர்களின் மனங்களைத் திருடுபவர் அல்லவா? பாபா நகையைத் திருடியதாக நிரூபணமாகி சிறைத்தண்டனை கொடுத்து விடுவார்களோ? பாபாவுக்குச் சிறைவாசம் புதிதல்லவே? அவர் ஏற்கனவே பக்தர்களின் மனச்சிறையில் வாசம் செய்பவர் தானே? இப்படியெல்லாம் எண்ணியவாறே பக்தர்கள் பாபாவைப் பார்த்து நெக்குருக நின்றார்கள்.

ஆனால், கல்லுளிமங்கனைப் போல் இருந்த அந்தத் திருடன் மட்டும், நகைகள் பாபாவுடையவைதான் என்பதைக் கிளிப்பிள்ளை போல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். நீதிபதி பாபாவிடம் விசாரணையை ஆரம்பித்தார்:பாபாஜி! தங்கள் உண்மையான பெயர் என்னவோ? என்னை என் அன்பர்கள் சாய்பாபா என்கிறார்கள். எனவே, அதுதான் என் பெயராக இருக்கும் என்று ரொம்ப காலமாக நம்பி வருகிறேன்! உங்கள் தந்தையின் பெயரையாவது, உங்களால் சரியாகச் சொல்ல முடியுமா? என் தந்தை பெயரும் சாய்பாபா தான். நான் சாய்பாபாவுக்குப் பிறந்த சாயிபாபா! நீதிபதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கூட்டம் கிளுகிளுவென்று நகைத்துக் கொண்டிருந்தது! நீதிபதி கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார். பின் நம்பிக்கையோடு கேட்டார்:உங்கள் குருநாதர் யார்? வெங்குசா தான் என் குரு! ( வெங்குசா என்று பாபா குறிப்பிட்டது திருப்பதி வெங்கடாஜலபதியை என்று சிலர் கூறுகிறார்கள்.) நீதிபதி அடுத்த கேள்வியைத் தயக்கத்தோடு கேட்டார். தாங்கள் இந்துவா! இல்லை முஸ்லிமா? பாபா கணீரென்று அறிவித்தார்: நான் கபீர் வம்சத்தைச் சார்ந்தவன்!(கபீர்தாசர், அந்தணராய்ப் பிறந்து, முஸ்லிம் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர். ராம் ரஹீம் இருவரும் ஒருவரே என்று கருதியவர்.

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர்.) நீதிபதி, எச்சிலை விழுங்கிக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்கலானார்: பாபாஜி! நீங்கள் என்ன தொழில் செய்து வருகிறீர்கள்? இந்தக் கேள்வியைக் கேட்டு, பாபா கடகடவென்று நகைத்தார். கூடியிருந்த அன்பர்கள் அந்த நகைப்பில் தென்பட்ட கம்பீரத்தால் கவரப்பட்டு மெய்சிலிர்த்தார்கள். பாபா அறிவித்தார்: படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்றும் என் தொழில்கள்! இவற்றை நான் பல்லாண்டு காலமாகச் செய்து வருகிறேன்! நீதிபதிக்கு இப்போது தலை சுற்றியது! அது பைத்தியக்காரத்தனமான பதில்போல் தோன்றியது. ஆனால், பாபாவைப் பைத்தியம் என்று கருத முடியவில்லை. அவர் அவ்வளவு தெளிவோடு நகைத்தவாறே பேசிக் கொண்டிருந்தார். என்ன செய்வதென தெரியாத நீதிபதி, தொண்டையைச் செருமிக் கொண்ட தொடர்ந்து கேட்கலானார்:  உங்கள் வயது என்ன? விசாரணைப் பதிவேட்டில் உங்கள் வயதைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது! என் வயது சுமார் பல லட்சம் வருடங்கள். சரியாகக் கணக்கிட இயலவில்லை. இப்போது கொஞ்சம் வயோதிகம் அடைந்துவிட்டேன் இல்லையா? அதனால் கணக்கு தடுமாறுகிறது.

உங்கள் பதிவேட்டில் பாபாவின் வயது பல லட்சம் ஆண்டுகள் என்று குறித்துக் கொள்ளுங்கள்! இந்த பதிலைக் கேட்டுக் கூடியிருந்த கூட்டத்தினரில் பலர் கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். சிலர் முகத்தில் மெல்லிய முறுவல் அரும்பியது. மொத்தத்தில் நீதிபதியைப் பரிதாபமாகப் பார்த்தார்கள் எல்லோரும்! நீதிபதி தன் குரலை இயன்றவரை கடுமையாக்கிக் கொண்டு கேட்டார்: பாபா! இப்போது தாங்கள் என்னிடம் சொல்வதெல்லாம் உண்மைதானே? நீங்கள் ஏதும் என்னிடம் விளையாடவில்லையே? பாபா ஆகாயத்தைச் சுட்டிக் காட்டிவிட்டுச் சொன்னார்: ஆகாயம் சாட்சியாக நான் இப்போது சொன்னதனைத்தும் முக்காலும் உண்மை! நான் சொன்னவற்றில் இம்மியளவு சந்தேகமும் தேவையில்லை! அடுத்த மிக முக்கியமான கேள்வியை, நீதிபதி தயக்கத்தோடு பாபாவிடம் கேட்டார்: பாபா! இந்த வைர நகைகளெல்லாம் உங்களுடையவை என்கிறான் இந்தத் திருடன். இந்த நகைகளெல்லாம் இவன் சொல்வது போல் உங்களுடையவை தானா? பாபா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்றறிய நீதிபதியும் பொதுமக்களும் ஆவலோடு காத்திருந்தார்கள். பாபா கணீரென்று தெரிவித்தார்: ஆம். அவன் சொல்வது உண்மைதான். இந்த நகைகளெல்லாம் என்னுடையவைதான்! திருடன் மிகுந்த ஆச்சரியத்தோடு பாபாவைப் பார்த்தான். பொதுமக்கள் திகைத்து நின்றார்கள். நீதிபதியும் விக்கித்துப் போனார். பாபா தொடர்ந்து பேசலானார்…

ஷிர்டி சாய் பாபா பகுதி – 9

நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாபா, திடீரென விறகிற்குப் பதிலாகத் தம் கரத்தையே நெருப்பின் உள்ளே வைத்தது ஏன்? பக்தர்கள் கண்ணீருடன் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா… நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என் பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள். கண்மூடி என்னையே நினைத்தவாறிருந்தாள். தன் குழந்தை பளபளவெனப் பிரகாசிக்கும் நெருப்பை நோக்கி நகர்வதையோ, அதில் விழுவதையோ அவள் கவனிக்கவே இல்லை.  என் மேல் கொண்ட பக்தியால் தானே தன் குழந்தையை கவனிக்க மறந்தாள்? அப்போது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு ஆகிறதல்லவா? நெருப்பில் கையைவிட்டுக் குழந்தையைச் சடாரென எடுத்துவிட்டேன். நல்லவேளை, குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை. அதன் உயிர் காப்பாற்றப் பட்டுவிட்டது. என் கரம் கொஞ்சம் கருகிவிட்டது. அதனால் பாதகமில்லை!.

பாபாவின் விளக்கத்தைக் கேட்ட அடியவர்கள் உருகினர். எங்கோ இருக்கும் தன் பக்தையின் குழந்தையை இங்கிருந்தே காப்பாற்றத்தான் பாபா தன் கரத்தைச் சுட்டுக் கொண்டார் என்றறிந்து அவர்களின் நெஞ்சம் விம்மியது. மாதவராஜ் தேஷ்பாண்டேயிடமிருந்து இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டார் பாபாவின் அடியவரான நானா சாஹேப் சாந்தோர்கர். கடவுள் மனித உடல் எடுத்தால், அந்த உடலின் உபாதைகள் அவருக்கும் இருக்குமே! வெந்துபோன கரத்தின் வேதனையை பாபா தாங்கவேண்டி இருக்குமே! என் தெய்வமே! ஏன் இப்படி உன்கரத்தையே நீ சுட்டுக் கொண்டாய்! அவர் உள்மனம் அழுது  அரற்றியது. பரமானந்த் என்ற மும்பையைச் சேர்ந்த மருத்துவரை அவருக்குத் தெரியும். நெருப்புக் காயங்களுக்குச் சிகிச்சை செய்வதில் வல்லவர் அவர். அவரிடம் விஷயத்தைச் சொல்லி பாபாவுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக உடனே அவரை அழைத்து வந்தார் சாந்தோர்கர். நெருப்புச் சுட்ட கையின் மேல் தடவுவதற்கான களிம்பு, கையைச் சுற்றிக் கட்டுவதற்கான துணி போன்ற மருத்துவ உபகரணங்களோடு மருத்துவர் பரமானந்த், ஷிர்டி வந்து சேர்ந்தார். பாபாவின் தீய்ந்த கரத்திற்கு மருந்திட வேண்டி கையைக் காட்டுமாறு பாபாவிடம் பக்தியோடு விண்ணப்பித்தார்.  ஆனால், பாபாவிடமிருந்து கலகலவென ஒரு சிரிப்புத்தான் எழுந்தது.

அவர் மருத்துவரிடம் கையைக் காட்டவில்லை. பக்தர்களின் பிறவிப் பிணியையே தீர்க்கும் பாபாவுக்குத் தன் உடல் பிணி ஒரு பொருட்டாகப் படவில்லை போலும்! பக்தர்களின் நோயையெல்லாம் தீர்க்கும் பாபா விரும்பியிருந்தால் தன் கைக் காயத்தையும் உடனே சரி செய்துகொண்டிருக்க முடியும். ஏனோ அதையும் அவர் விரும்பவில்லை. அன்பர்களே! மனித உடல் நிலையில்லாதது. ஆன்மா மட்டுமே நிலையானது. முழு உடலும் ஒருநாள் அழியத்தானே போகிறது! ஒரு கரம் நெருப்பில் கொஞ்சம் காயம் அடைந்தால், அதனால் என்ன இப்போது? நான் வேதனைப் பட்டாலும் அதில் தவறில்லையே? ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்ற முடியும்போது, இந்தச் சாதாரண உடல் வேதனை பெரிதா என்ன? நிலையற்ற உடலை மறந்து நிலையான ஆன்மாவைச் சிந்தியுங்கள். கடவுளே நம் அனைவருக்குமான மருத்துவர். நம் உடலில் வரும் நோய்கள் ஒன்றுமே இல்லை. உள்ளத்தில் வரும் காமம் கோபம் போன்ற நோய்களை கடவுள் மேல் கொண்ட பக்தியால் குணப்படுத்திக் கொள்ள முயலுங்கள்!. கற்கண்டைப் போல் தித்திக்கும் பாபாவின் அருள்மொழிகளைக் கேட்டு பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள். பாபாவின் அடியவர்களில் ஒருவர் பாகோஜி ஷிண்டே. அவர் ஒரு குஷ்டரோகி. முன்வினை குஷ்டரோகமாக வந்து அவரைப் பீடித்திருந்தது. பாபாவின் சந்நிதியில் தன் வேதனைகளை மறந்து அவர் வாழ்ந்து வந்தார்.

நோயுற்ற உடல் காரணமாக அவர் துரதிர்ஷ்டசாலி என்றாலும், இன்னொரு வகையில் அவர் பெரும் அதிர்ஷ்டசாலி. பாபாவை அடிக்கடி தரிசிக்கவும், பாபாவின் அருள் மொழிகளைக் காதாரக் கேட்கவும், அவர் பாக்கியம் பெற்றிருந்தார். அவர் தன்னால் இயன்ற பணிவிடைகளைச் செய்யும் பொருட்டு பாபாவின் திருக்கரத்தை அணுகினார். வெந்திருந்த அதில் நெய்பூசி நன்றாகத் துடைத்துவிட்டார். பாபா மலர்ந்த முகத்துடன் அவர் செய்யும் பணிவிடைகளை ஏற்றுக் கொண்டார். ஒரு வாழை இலையை அந்தக் கரத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டார். இது ஏதோ அவருக்குத் தெரிந்த எளிய சிகிச்சை முறை. மருத்துவர் பரமானந்திடம் கையைக் காட்ட மறுத்த தெய்வம், தம் தீவிர அன்பரான ஷிண்டேயின் எளிய சிகிச்சையை ஏற்றுக் கொண்டது. தொடர்ந்து பக்தர்கள் விண்ணப்பித்ததன் பேரில், பாபா தம் கரத்தையும் குணப்படுத்திக் கொண்டார்.  பாபா முழுமையான ஒரு சித்தர். அவர் விரும்பியிருந்தால் தம் கரத்தை ஒரு நொடியில் சரிசெய்து கொண்டிருக்க முடியும். ஆனால், தம் பக்தர்கள் சுயநலத்தைத் துறந்து பிறரின் பொருட்டாக வேதனைகளைத் தாங்க முன்வரவேண்டும் என்று போதிக்க விரும்பினார். வார்த்தைகளால் அல்லாமல், ஒரு நிகழ்ச்சி மூலமே அந்த போதனையை நிகழ்த்திக் காட்டி விட்டார்.

பாபாவின் அடியவர்கள், சுயநலத்தைத் துறந்து பிறர் நலனுக்காக வாழவேண்டும் என்ற படிப்பினையைப் பெற்றார்கள். அருட்சோதி தெய்வம் என்னை ஆண்டுகொண்ட தெய்வம் என்ற பாடலில் எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் என அருட்பெரும் ஜோதியின் தனிப்பெருங் கருணையைப் பாடிப் பரவுகிறார் வள்ளலார். அடியவர் எண்ணியதை எண்ணியவாறு நிறைவேற்றிக் கொடுப்பதல்லவா கடவுளின் கருணை! அப்படி அடியவர்கள் வேண்டிய வரத்தை அவர்களுக்கு வழங்கும்போது இறைவன் புரியும் லீலைகள் பல. அத்தகைய ஒரு லீலை பாபாவால், நானா சாஹேப் சாந்தோர்கரின் வாழ்வில் நிகழ்த்தப்பட்டது. திடீரென சாந்தோர்கருக்கு பண்டரிபுரத்திற்கு மாற்றலாகும் உத்தரவு வந்து சேர்ந்தது. அவரைப் பொறுத்தவரை அவருக்குக் கைலாயம், வைகுண்டம் எல்லாம் ஷிர்டிதான். இப்போது பண்டரிபுரம் போக வேண்டியிருக்கிறதே? பகவான் பாபாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு போகலாம். அவர் எண்ணப்படித் தானே எல்லாம் நடக்கிறது? பாபா, தாம் பண்டரிபுரம் போக வேண்டும் என்று விரும்புகிறாரா! இல்லையா? இந்த ஊர் மாற்றம் எனக்கு நல்லதுதானா? நான் என்ன செய்ய வேண்டும்? உடனே பண்டரிபுரம் புறப்பட வேண்டியதுதானா? எதுவும் முடிவுசெய்ய இயலாத அவர் ஷிர்டி நோக்கி நடக்கலானார். ஷிர்டியிலிருந்து சில மைல் தொலைவில் உள்ள நீம்காவன் என்ற ஊரை அவர் அடைந்தார். சாந்தோர்கர் ஷிர்டியை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வேளையில், பாபா தங்கியிருந்த ஷிர்டி மசூதியில் திடீரென ஒரு பரபரப்பான சூழல் தோன்றியது. மகல்ஸாபதி, அப்பாஷிண்டே, காஷிராம் உள்ளிட்ட அடியவர்களோடு உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்த பாபா, சட்டெனப் பேச்சை நிறுத்தினார். அடியவர்கள் வியப்போடு பாபாவை கவனிக்கத் தொடங்கினார்கள்…

ஷிர்டி சாய் பாபா பகுதி – 8

சென்ற அந்தப் பிரமுகர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தன் நடுக்கத்தைச் சற்றுக் குறைத்துக் கொள்ள முயன்றார். ஒரு குவளை குளிர்ந்த நீரைக் குடித்தார். மெல்லத் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மசூதி நோக்கி நடந்தார். எப்படியும் நடந்த விஷயத்தை ஊரில் உள்ள அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும் அல்லவா? அல்லது அதற்குள் விஷயம் தெரிந்து ஊரே மசூதியில் கூடியிருக்கிறதோ என்னவோ? ஆனால், அவர் மீண்டும் தயங்கித் தயங்கி மசூதிக்குச் சென்றபோது அங்கே எந்தக் கூட்டமும் இல்லை. மசூதி வழக்கம்போல் அமைதியாகத் தான் இருந்தது. எச்சரிக்கையோடு உள்ளே சென்று பார்த்தார் அவர். என்ன ஆச்சரியம்! பாபா வழக்கம்போல் சலனமே இல்லாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்! அப்படியானால் தாம் கண்ட காட்சி பொய்யா? கனவா? தன் கண்ணே தன்னை ஏமாற்றுமா? முன்னர் பாபாவின் அங்கங்கள் சிதறிக் கிடந்ததாகத் தாம் கண்ட காட்சி தான் பிரமையா? இல்லை… இப்போது தாம் கண்டுகொண்டிருக்கும் இது பிரமையா? அவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், பாபாவை மீண்டும் முழுமையாக தரிசிக்க முடிந்ததில், அவர் அடைந்த பரவசத்திற்கு அளவே இல்லை. பாபா! நீங்கள் இருக்கிறீர்கள்! நீங்கள் இருக்கிறீர்கள்! என்று நாக்குழறச் சொல்லியவாறே பாபாவை நமஸ்கரித்தார்.

விழிகளிலிருந்து பரவசத்தில் பொலபொலவெனக் கண்ணீர் கொட்டியது. அவரைப் பரிவோடு பார்த்தார் பாபா. ஆம்… நான் என்றும் இருக்கிறேன்! என்றும் இருப்பேன்! என்று கம்பீரமாக அறிவித்தார். என்றும் இருப்பவர் கடவுள் ஒருவர் தானே! உடலைத் தனித்தனியாகக் கழற்றி ஓய்வெடுப்பது என்பது யோக சாதனைகளில் ஒன்று. பாபா பல்வேறு யோகங்களில் தேர்ந்தவர். ஓர் இடத்தில் இருந்துகொண்டே இன்னோர் இடத்திலும் தோன்றுவது, தன் உடலை மிக மெலிதாக்கிக் கொண்டு ஆகாயத்தில் பறந்து விருப்பமான இடத்திற்குச் செல்வது, உடலை மாபெரும் உடலாக மலைபோல் ஆக்கிக் கொண்டு பார்ப்பவர்களை பிரமிக்க வைப்பது என யோகத்தால் ஒருவர் அடையும் திறன்கள் பலப் பல. அணிமா, மகிமா, லகிமா என அஷ்டமா ஸித்திகள் அடையப் பெற்றவர்கள் யோகிகள்.  அணிமா, மகிமா போன்ற ஸித்திகளில் அனுமன் தேர்ந்தவன். சீதாதேவி முன் உலகளந்த பெருமாள் போல், சூரியனும் சந்திரனும் தன் செவிகளில் இரு குண்டலங்கள் மாதிரித் தோன்றும் வகையில் பேருருவம் எடுத்தான் அவன். அவனே மிகச் சிறிய உருவையும் எடுக்கும் வல்லமை பெற்றிருந்தான்.

சோவெனப் பெய்யும் பெருமழையின் இடையே, மழைநீர் தன்மேல் படாதவாறு மிக மெல்லிய உருவெடுத்து இடைநடக்கும் ஆற்றல் உடையவன் அனுமன், என்று புகழ்ந்து எழுதுகிறார் கம்ப ராமாயணத்திற்கு உரை எழுதிய வை.மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார். யோகிகளால் முடியாதது எதுவுமில்லை. திருவண்ணாமலையில் சேஷாத்திரி பரப்பிரும்மம் இத்தகைய யோக சாதனையில் ஈடுபட்டபோது, அங்கங்கள் தனித்தனியாகக் கிடந்ததைச் சில அன்பர்கள் பார்த்ததாகத் தெரிவித்திருக்கிறார்கள். ஆதிசங்கரருக்கு எரிந்த வலக்கரம் வளர்ந்ததும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் வலக்கரத்தை வெட்டிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் அதைத் தன் உடலில் ஒட்ட வைத்துக் கொண்டதும் எல்லாம் இத்தகைய யோக ஸித்திகளின் விளைவே. எல்லோரையும் படைத்துக் காக்கும் பகவான் பாபாவுக்கு, தம் அங்கங்களைப் பிரித்துச் சேர்ப்பது ஒரு பொருட்டா என்ன! பிரிந்த மனங்களை ஒன்று சேர்ப்பதும், பிரிந்த வாழ்க்கையை ஒன்றாக்குவதும் பாபாவின் அருளால் முடியும் என்கிறபோது, தன் பிரிந்த அங்கங்களை ஒன்றுசேர்த்துக் கொள்வது பாபாவால் இயலாதா? பாபா மசூதியிலிருந்து நெடுந்தொலைவில் உள்ள ஓர் ஆலமரத்தின் அருகே இருந்த கிணற்று நீரில் தான் குளிப்பது வழக்கம். ஆனால், அவர் குளிக்கும் விதம் விந்தையானது.

உடலின் புற உறுப்புகளைத் தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்வதுபோலவே, அக உறுப்புகளையும் தண்ணீரால் சுத்தம் செய்வார் பாபா. தம் குடலை, வாய் வழியாக வெளியே எடுத்து நீரால் நன்கு கழுவி, அருகே இருந்த நாவல் மரத்தின் கிளையில் தொங்கவிட்டு உலர்த்துவார்! பின் அந்தக் குடலை மறுபடி தன் உடலுக்குள் பொருத்திக் கொண்டுவிடுவார். இதைப் பார்த்த அடியவர்கள் ஷிர்டியில் இருந்தார்கள். அவர்கள் மூலம் பாபாவின் இத்தகைய செயல்கள் வெளியுலகிற்குத் தெரியவந்தன. பாபாவின் மகிமை பரவலாயிற்று. ஆனால், பாபா தனக்கு கிடைத்த புகழை ஒருபோதும் லட்சியம் செய்ததே இல்லை. எப்போதும் எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். உடல் வேதனையால் தவிக்கும் அடியவர்கள் அவரைச் சரணடைவது உண்டு. பாபாவுக்குத் தம் அடியவர்கள் படும் உடல் வேதனையைப் பொறுத்துக் கொள்ள இயலாது. அந்த வேதனை அவர்களின் முன்வினைகளால் அவர்களுக்கு நேர்ந்திருக்கிறது என்பதை அவர் அறிவார். அந்த முன்வினைப் பயன்களைத் தாம் ஏற்றுக் கொண்டு அவர்களின் உடல்வேதனை யைத் தீர்த்து வைத்துவிடுவார். அந்த வேதனையை அடியவர்களின் பொருட்டாகத் தாங்கும் கருணையும், அதைத் தாங்கிக் கொள்ளும் தவ வலிமையும் பாபாவுக்கிருந்தது. ஆண்டு 1910…. தீபாவளி விடுமுறைக் காலம்.

பாபா மசூதியில் எப்போதும் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருப்பார். அந்த நெருப்பை துனி என்று சொல்வர். அன்றும் நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார் அவர். சடசடவென ஜ்வாலையுடன்  பிரகாசமாக எரிந்துகொண்டிருந்தது துனி நெருப்பு. விறகுகளை ஒவ்வொன்றாக நெருப்பில் வைத்துத் தீயை வளர்த்துக் கொண்டிருந்தார். மசூதியின் வேலையாட்களான மாதவாலும், மாதவ்ராவ் தேஷ்பாண்டேயாலும் தொலைவில் தங்கள் பணிகளைச் செய்தவாறே பாபாவையும் பார்த்துக் கொண்டிருந்தனர். திடீரென விறகை எடுத்துத் துனியில் வைப்பதற்கு பதிலாகத் தம் கரத்தையே துனியின் உள்ளே வைத்தார் பாபா. மாதவாலும், மாதவ்ராவ் தேஷ் பாண்டேயும் பாபாவின் செயலைப் பார்த்துப் பதறினார்கள். அவர் அருகே ஓடோடிச் சென்றார்கள். அதற்குள் பாபாவின் திருக்கரம் முழுவதுமாகக் கருகிவிட்டது…. நெருப்பில் இருந்த அவரது கரத்தை இழுத்து பாபாவைத் தரையில் படுக்க வைத்தார்கள். பாபா அப்போது உணர்வோடு இருக்கவில்லை. மெல்ல அவர் முகத்தில் தண்ணீர் தெளித்தபோது அவர் உணர்வு நிலையை அடைந்தார். பாபா! ஏன் இப்படி உங்கள் கையையே துனிநெருப்பில் நுழைத்தீர்கள்? என்று அங்கு கூடிய பக்தர்கள் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா…

ஷிர்டி சாய் பாபா பகுதி – 7

பாபவின் அனுமதியின் பேரில் உருஸ் விழாவும், ராமநவமி விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்ட நாள் அது. இந்து பக்தர்கள் ராம ஜனனத்தை உணர்த்தும் வகையில் பாபா முன்னிலையில் ஒரு தொட்டிலைக் கொண்டுவந்து வைத்தார்கள். ராம சரிதக் கீர்த்தனைகளைப் பாடலானார்கள். தொட்டிலையே பார்த்தவாறிருந்த பாபாவின் விழிகள் செக்கச் செவேலெனக் கனலாய்ச் சிவந்தன. அவரிடமிருந்து உலகையே நடுங்கச் செய்யும் ஒரு கம்பீரமான கர்ஜனை புறப்பட்டது…….. அண்ட பகிரண்டங்களும் அந்த கர்ஜனையைக் கேட்டு நடுநடுங்கின. பூமி நடுங்கி பூகம்பம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பக்தர்கள் திகைத்தார்கள். தாங்கள் செய்த தவறென்ன? ராம நவமி கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர் பாபா தானே? அப்படியிருக்க அவருக்கு ஏன் இத்தனை கோபம்? மெல்ல மெல்லத்தான் அவர்களுக்கு விஷயம் விளங்கியது. தொட்டிலில் ராமக் குழந்தை படுத்திருப்பதாகக் கருதி, அவர்கள் பாடிய பாடல்களின் பொருள்தான் பாபாவின் சீற்றத்தைத் தூண்டியிருக்கிறது. கிருஷ்ணக் குழந்தையைப் போல் ராமக் குழந்தைக்கு பால லீலைகள் என்று அதிகம் எதுவுமில்லையே? கண்ணன் என்றால் கோகுலத்தில் அவன் நிகழ்த்திய ஏராளமான விளையாட்டுகளைப் பாடலாம்.

காளியமர்த்தனத்தையும், கோவர்த்தன கிரியை அவன் தூக்கியதையும் பாடலாம். கண்ணன் வெண்ணெய் திருடியது உள்பட இன்னும் எத்தனையோ செயல்களைச் சொல்லி அவனைத் தாலாட்டலாம். ஆனால், ராமக் குழந்தைக்குத் தாலாட்டுப் பாட வேண்டுமானால் கூட, ராமன் பிற்காலத்தில் செய்த ராவண வதம் உள்ளிட்ட சாகசங்களைச் சொல்லித்தானே தாலாட்ட வேண்டியிருக்கிறது? அப்படியெல்லாம் அசுரர்களை வதம் செய்யப் போகிறாய் நீ என்றுதானே எதிர்காலத்தை முன்வைத்து நிகழ்காலத்தில் பாட வேண்டியிருக்கிறது? ராமனுக்குத் தாலாட்டுப் பாடிய குலசேகர ஆழ்வார் கூட, மன்னுபுகழ் கோசலை மணிவயிறு வாய்த்தவனே! என்று பாடியபின், தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் என்று ராவண வதம் குறித்துச் சொல்லித்தானே தாலாட்டுகிறார்! பக்தர்கள் பாடிய பாடல்களில் ராவண வதம் உள்ளிட்ட செய்திகள் வருவதைக் கூர்ந்து கேட்டார் பாபா. அதையெல்லாம் நிகழ்த்தக் கூடிய ராமக் குழந்தை தொட்டிலில் படுத்திருப்பதாகவே உணர்ந்தார். பாடல்களைக் கேட்கக் கேட்கச் சற்றுநேரத்தில் அவர் ராம பாவனையில் தோய்ந்து ராமனாகவே மாறிவிட்டார். ராவண வதம் நிகழ்த்தப் போகிறவனே! என்று பக்தர்கள் பாடியவுடன் பாபா ராமனாக மாறி ராவண வதம் நிகழ்த்தத் தயாராகிவிட்டார். ராவண வதத்தின் முன்பாக ராமனுக்கு ஏற்பட்ட அதே அளவுகடந்த சீற்றம், பாபாவிடமும் தோன்றிவிட்டது. அதனால் தான் அந்த கர்ஜனை! பக்தர்கள் பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார்கள்.

அவர் சீற்றம் தணிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். மெல்ல மெல்ல பாபா அமைதியானார். ஒரு விஷயம் அங்கிருந்த பக்தர்களில் சிலருக்குத் தெளிவாகப் புரிந்தது. ராவணன் என்பதென்ன? காமம் குரோதம் முதலிய பகை உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவகம் தானே! பாபா ராமனாக மாறிச் சீற்றம் கொண்டதன் மூலம் பக்தர்களின் மனத்தில் உள்ளே பதுங்கியிருந்த ராவண உணர்வுகளை வதம் செய்துவிட்டார். தங்கள் மனம் தீய நினைவுகளை அகற்றித் தூய நினைவுகளில் தோய்வதை உணர்ந்து அவர்கள் நெக்குருகினார்கள். பாபாவின் அருளாவேசத்தால் ராவண உணர்வுகளின் ஆதிக்கம் ஷிர்டியை விட்டு விரட்டப்பட்டு, அது புனிதத் திருத்தலமாக மாறியிருப்பதை உணர்ந்தார்கள். ஆக, அங்கே கொண்டாடப்பட்ட உருஸ் மற்றும் ராம நவமி விழா மூலம் சொர்க்கத்தின் பவித்திர உணர்வலைகள் ஷிர்டியில் நிலைகொண்டன. பாபாவின் பக்தர்களின் மனங்களிலெல்லாம் சாந்தியும், இன்னதென்று அறியாத ஆனந்த உணர்வும் நிலவத் தொடங்கின. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஞ்சநேய உபாசனை நிகழ்த்தியதைப் பற்றி பரமஹம்சர் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதுகிறார், அவரது நேரடிச் சீடரான சாரதானந்தர். அந்தக் காலங்களில் பரமஹம்சர் மரங்களின் மேலேயே வசித்ததாகவும் தேங்காயையே சாப்பிட்டதாகவும், மரத்தின் மேலிருந்தே சிறுநீர் கழித்ததாகவும் எழுதும் அவர் சொல்லும் ஒரு தகவல் விந்தையானது. பாபாவின் உணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது.

பரமஹம்சர் ஆஞ்சநேய உபாசனை முடிந்து மரத்தை விட்டு இறங்கி வந்தபின், அவரது முதுகுத் தண்டின் கீழே வால்போல் ஒரு பகுதி வளர்ந்திருந்ததாகவும் பின்னர் நாள்பட நாள்பட அது மறைந்ததாகவும் எழுதுகிறார் சாரதானந்தர். கடவுள் சக்தியைத் தங்களில் இறக்கிக் கொண்டு கடவுளாகவே வாழும் மகான்களின் உணர்வுநிலையின் உச்சம் அத்தகையது. அத்தகைய உணர்வின் உச்ச நிலையைத் தான், ஷிர்டி பாபாவின் மன நிலையும் பிரதிபலித்தது. பாபா ஷிர்டியில் உள்ள எல்லா ஆலயங்களையும் பழுதுபார்க்கச் செய்தார். பிள்ளையார் கோயில், சிவன் கோயில், கிராம தேவதைக்கான கோயில், மாருதி கோயில் என எல்லாக் கோயில் மேலும் அக்கறை செலுத்தினார். தாத்யா பாடீல் என்ற அன்பர் மூலமாக, பழுதுபார்க்கும் பணிகளை நிர்வகித்தார். பாபா, பக்தர்களிடம் தட்சணை கேட்பதுண்டு. தட்சணை காலணா அரையணாவாகக் கூட இருக்கும். ஆனால், கேட்டு வாங்கிப் பெற்றுக் கொள்வார். ஒருவேளை தட்சணை மூலமாக அடியவர்களின் முன்வினைகளைத் தாம் வாங்கி, அழிக்கிறாரோ என்னவோ? அப்படிப் பெற்ற தட்சணைத் தொகையை பாபா தாம் வைத்துக் கொள்வதில்லை.

பதினைந்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் என மற்றவர்களுக்கு வினியோகித்து விடுவார். சிலரிடம், அவர் அதட்டி தட்சணை வாங்கியதும் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகவே! தம் அடியவர்கள் யாரும் எந்தக் கஷ்டமும் படக் கூடாது என்பதில் பாபா தீவிரமாக இருந்தார். அவரைச் சரணடைந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி, எந்தத் துன்பத்தையும் அடைந்ததில்லை. பாபாவின் அருள் ஒரு கவசமாய் அவரின் அடியவர்களைத் துயரம் தாக்காதவாறு காத்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒரு பிரமுகர் பாபாவை தரிசிப்பதற்காக, அதிகாலையில் மசூதிக்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திக்பிரமை அடையச் செய்தது. இறைவா, இதைக் காணவா எனக்குக் கண்கொடுத்தாய்? என்று அவர் மனம் பதறியது. மசூதியில் பாபாவின் தலை ஒருபுறமும், கை கால்கள், உடல் ஆகியவை வேறுபுறங்களிலும் தனித்தனியே சிதறிக் கிடந்தன. பாபாவை இப்படிச் செய்யுமளவு அவருக்கு விரோதிகள் யாருமில்லையே? பக்தரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது.  அவர் பெரும் பீதியடைந்தார். உடன் இத்தகவலை ஷிர்டி கிராம அதிகாரிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படித் தெரிவித்தால் அது தன் தரப்பில் நல்லதாக இருக்குமா? முதலில் பார்த்தவன் என்பதால், அந்தச் சம்பவத்திற்கான பொறுப்பு தன்மேல் சுமத்தப்பட்டு விடுமோ? அவர் அச்சத்தோடும் குழப்பத்தோடும் தம் வீடுநோக்கி நடந்தார். பயத்தில் அவர் கைகால்கள் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தன.

ஷிர்டி சாய் பாபா பகுதி – 6

சாயிபாபாவை தமது தூப்காவன் கிராமத்திலிருந்து ஷிர்டிக்கு அழைத்துவந்தசாந்த்படீல், எதிர்பாராதஒரு விஷயத்தைஏற்றுக்கொண்டு ஜீரணிக்க வேண்டியிருந்தது…. பாபா, தாம் தூப்காவன் திரும்பப் போவதில்லை என்றும், ஷிர்டியிலேயே நிரந்தரமாய்த் தங்கப் போவதாகவும் உறுதிபடத் தெரிவித்துவிட்டார். ஷிர்டி செய்தஅதிர்ஷ்டத்தைஎண்ணி சாந்த்படீல் ஆச்சரியம் அடைந்தார். இனி கைலாசமாகவும், வைகுண்டமாகவும், கோகுலமாகவும், அயோத்தியாகவும் விளங்கப் போவது ஷிர்டி தான் என்பதைஅவர் உள்மனம் புரிந்துகொண்டது. அதனால் என்ன? இனி வாய்ப்புதகிட்டும்போதெல்லாம் அடிக்கடி ஷிர்டி வந்து இந்தவிந்தையான யோகியைத் தரிசிக்க வேண்டியதுதான். அருகில்தானே இருக்கிறது ஷிர்டி? அதல்லாமல் தம் மனத்தில், பாபாவைப் பிரதிஷ்டை செய்து, அவரை நாள்தோறும் மனக்கண்ணால் கண்டு வழிபடுவதையார்தான் தடுக்க இயலும்? ஓடிப்போன தம் குதிரையை ஞான திருஷ்டியால் கண்டு பிடித்துதகொடுத்தவரும், உட்கார்ந்த இடத்திலிருந்தேதாம் பருகத் தேவையான தண்ணீரை மண்ணிலிருந்து ஊற்றாய்ப் பெருகச் செய்தவருமான சாயிபாபாவின் பாதங்களில் தலைவைத்து வணங்கி விடைபெற்றார் சாந்த்படீல். தாய்ப்பசுவைப் பிரிந்தகன்றைப் போல அவர் கண்களில் கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.

ஆனால், நான் எப்போதும் உன்னுடன் தானே இருக்கிறேன்! என்பதுபோல் கையுயர்த்தி, ஆசி கூறிய பாபாவின் திருக்கரம் அவர் துயரத்தைத் துடைத்தது. துறவிகள் ஒரே ஊரில் இருப்பதில்லை. பந்தபாசம் ஏற்படாமல் இருக்கவேண்டி ஊர்ஊராய்ச் சுற்றுவது வழக்கம். ஆனால், பாபா ஷிர்டியை விட்டு எந்தஊருக்கும் செல்லவில்லை. காரணம் அவர் துறவியல்ல. பகவான்! கடவுளால் ஒரே இடத்தில் இருக்கவும் முடியும். அப்படி இருந்துகொண்டே எல்லா இடங்களிலும் காட்சி தரவும் முடியும். அவ்விதம் எங்கும் நிறைபரப்பிரம்மம் ஷிர்டியில் மனிதஉரு எடுத்துத் தங்கியது. ஷிர்டியில் இரண்டு கிணறுகள் இருந்தன. ஒன்றில் தண்ணீர் வற்றி விட்டது. அதுதான் நல்ல தண்ணீர் தந்தகிணறு. இன்னொரு கிணற்று நீரோ கடல் நீரை விட அதிகமாக உப்புதகரித்தது. அந்ததகிணற்றில் நீர் எடுத்தபெண்கள் அதன் உப்புச் சுவையைதகண்டு திகைத்தனர். இதுபற்றி பாபாவிடம் சொன்னால் என்ன? சில பெண்மணிகள் பாபாவைத் தேடிப் போனார்கள். பஞ்ச பூதங்களையும் பாபா தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படியிருக்க உப்பாய் இருக்கும் கிணற்றின் நீரைத் தித்திப்பாய் மாற்ற அவரால் முடியாதா என்ன? குடங்களோடு தம்மைத் தேடி வந்தபெண்மணிகளிடம் பாபா, குடம் நிறையப் பிரச்னையோடு வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே? என்று சொல்லிச் சிரித்தார்.

பிரச்னை என்னவென்று பாபாவுக்குத் தெரியாதா? முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா அவர்! ஆனாலும், பக்தர்கள் கடவுளிடம் நேரடியாகப் பிரார்த்திக்க வேண்டும் என்பதல்லவா அவர் விருப்பம்? தம்மை முற்றிலும் சரணடைந்திருப்பவர்களும், எளியவர்களுமான அந்தப் பெண்மணிகளின் மேல் பாபாவுக்குதகருணை பொங்கியது. பல மூட்டை உப்பை அள்ளி யாரோ கிணற்று நீரில் கலந்ததுபோல் நீர் உப்புதகரிக்கிறதேபாபா? நீங்கள் ஏதாவது செய்யதகூடாதா? அவர்களின் அன்பான வேண்டுகோளை பாபா ஏற்றார். அருகே உள்ள நந்தவனத்தில்இருந்து கொஞ்சம் மலர்களைப் பறித்துவரச் சொன்னார். மலர்களைதகையில் வைத்துதகொண்டு கண்மூடிச் சற்றுநேரம் பிரார்த்தனை செய்தார். வாருங்கள்! என்று அவர்களை அழைத்துக்கொண்டு உப்புதகிணற்றை நோக்கிப் புறப்பட்டார். கையிலுள்ள மலர்களைதகிணற்று நீரில் அர்ச்சிப்பதுபோல் தூவினார். உடனே காற்று வெளியில் வருண பகவான் தோன்றியிருக்க வேண்டும். வருணனிடம் இந்ததகிணற்று நீரை நன்னீராக மாற்று என்று பாபா கட்டளையிட்டிருக்க வேண்டும். ஆனால், என்ன நடந்தது என்பதைஅந்தப் பெண்கள் அறியவில்லை. அவர்கள் கண்மூடிப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள்.

இனிமேல் என்ன? உங்கள் பிரார்த்தனைதான் நிறைவேறிவிட்டதே? என்றவாறே நகைத்தார் பாபா. பெண்மணிகள் ஆச்சரியத்தோடு கிணற்று நீரைதகுடங்களில் எடுத்தார்கள். கொஞ்சம் வாயில் விட்டு பார்த்தார்கள். அடடா! முன்னர் பல மூட்டை உப்பு கலந்தகிணற்றில், இப்போது பாபா பல மூட்டை கல்கண்டை அல்லவா கலந்திருக்கிறார்! ஜெய் சாயிநாத்! என்றவாறே பெண்மணிகள் பாபாவை வணங்கினார்கள். பாபா புன்முறுவல் பூத்தவாறே பேசலானார்: என் பக்தர்களது இல்லங்களில் உணவு உடை இவற்றிற்கு எந்ததகுறைவும் வராது. உங்கள் மனத்தைஎன்னிடமே எப்போதும் செலுத்துங்கள். அடியவர்களின் நலன்களை கவனிப்பதேஎன் வேலை. கீதையில் கிருஷ்ணரும் இதைத் தானே சொல்கிறார்! தாம் தங்கியிருந்தமசூதி நோக்கி நடந்தார் பாபா. அந்தப் பெண்மணிகள் நன்றிப் பெருக்கில் கண்கள் பளபளக்க தண்ணீர்தகுடத்தைத் தூக்கிக்கொண்டு திரும்பித் திரும்பி பாபாவைப் பார்த்தவாறே இல்லம் நோக்கி நடந்தார்கள். கண்ணனைப் பிரிய முடியாமல் தவித்தபக்தைகளான கோபிகைகளின் நிலையைப் போன்றிருந்தது அவர்கள் மனநிலை. இவ்விவரம் கிராமம் முழுவதும் விறுவிறுவென்று பரவியது. அக்கம்பக்கத்துதகிராமங்களிலும் கூட இந்தச் செய்தி பரவலாயிற்று. செய்தியின் உண்மைத் தன்மைக்குச் சாட்சியாக நேற்று வரை உப்புதகரித்தகிணற்று நீர் அன்று தொட்டுத் தித்தித்தது.

பாபாவை தியானித்தஅடியவர்களின் மனமெல்லாம், அவரது அருட்கருணையை எண்ணி எண்ணித் தித்தித்தது. பாபாவின் தீவிர பக்தரான கோபால்ராவ் குண்ட் என்பவருக்கு குழந்தைப் பேறு இல்லாதிருந்தது. அவர் பாபாவை மனமாரப் பிரார்த்தித்து மக்கட்செல்வம் அடையப் பெற்றார். தம் நன்றியைத் தெரிவிக்கும் முகமாக பாபா தங்கியிருந்தமசூதியில் உருஸ் விழா கொண்டாட விரும்பினார். உருஸ் விழாவை ராமநவமி அன்று கொண்டாடச் சொல்லி பாபா அனுமதி அளித்தார். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற உண்மையைச் சொல்லி இந்து முஸ்லிம் ஒற்றுமையை வளர்ப்பதுதான் பாபா அப்படிச் சொன்னதன் பின்னணியாக இருக்க வேண்டும். சந்தனதகூடு விழாவாகிய உருஸ் விழா விமரிசையாக நடந்தது. பாபாவின் மசூதியில் சுவரெல்லாம் சந்தனம் அரைத்துப் பூசப்பட்டது. பாபாவின் இந்து பக்தர்கள், ராமநவமி உற்சவத்தையும் கொண்டாட விரும்பினார்கள். பாபா சிரித்துக்கொண்டே அதற்கும் அனுமதி அளித்தார். ராம ஜனனத்தைஉணர்த்தும் வகையில், பாபா முன்னிலையில் ஒரு தொட்டிலைதகொண்டு வைத்தார்கள். ராமக்குழந்தைஎன்ற அந்ததகருநீல மாணிக்கம் அவதரித்து, அந்தத் தொட்டிலில் படுத்திருப்பதான பாவனையில் ராம சரிததகீர்த்தனைகளை உணர்ச்சியோடு பாடலானார்கள். தொட்டிலையே பார்த்தவாறுஇருந்தபாபாவின் விழிகள் திடீரெனதகோவைப் பழமாகச் செக்கச் செவேல் எனச் சிவந்தன. அவரிடமிருந்து அளவு கடந்தசீற்றத்தோடு உலகையே நடுங்கச்செய்யும் ஒரு கர்ஜனை புறப்பட்டது. அந்தகர்ஜனை சுற்றுப் புறங்களில் எல்லாம் எதிரொலித்தது. தாங்கள் என்ன தவறு செய்தோம், எதனால் பாபாவுக்கு இத்தகைய சீற்றம்? என்றறியாமல் அடியவர்கள் திகைத்தார்கள்…

ஷிர்டி சாய் பாபா பகுதி – 5

கானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த சாந்த் படீலுக்கு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. கடுமையான தாகம். என்னப்பா! தண்ணீர் வேண்டுமா? பரிவோடு கேட்ட பக்கிரி, கையில் இருந்த சிறிய தடியால் தரையில் ஒரு தட்டுத் தட்டினார். அடுத்த கணம் தரையிலிருந்து நீர் ஊற்று குபீரெனப் பொங்கியது! பஞ்சபூதங்களும் அவர் கட்டளைக்குப் பணிவதைப் பார்த்து சாந்த்படீலுக்கு மயக்கமே வந்தது. தங்களைப் படைத்தவருக்குத்தான் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற அந்தப் பஞ்சபூதங்கள் கட்டுப்படுகின்றன என்னும் ரகசியத்தை அவரால் உணர இயலவில்லை. ஆனால், தன் முன்னே அமர்ந்திருப்பவர் மாபெரும் ஆற்றல் படைத்த மெய்ஞ்ஞானி என்பதை மட்டும் அவர் புரிந்துகொண்டார். ம்… தண்ணீரைக் குடி! முதலில் உன் தாகம் தீரட்டும்! என்றார் பக்கிரி. சாந்த்படீல் விழிகளால் புனிதப் பக்கிரியின் தெய்வீக அழகைப் பருகியவாறே, கைகளால் அள்ளி நீரைப் பருகினார். அது தண்ணீரா இல்லை அமிர்தமா? அப்படித் தித்தித்தது அது.

சாந்த்படீல் உடலில் புத்துணர்ச்சி தோன்றியது. முன் எப்போதும் இல்லாத நிம்மதியும் சாந்தியும் மனத்தில் எழுந்தன. அந்த அதிசயப் பக்கிரியைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் போல் ஓர் ஏக்கமும் ஏற்பட்டது. காந்தம் இரும்பை இழுப்பதுபோல் பரமாத்மா, ஜீவாத்மாவை இழுப்பது இயல்புதானே! மனித வடிவில் இருக்கும் மூலப் பரம்பொருள் தான், தன்னிடம் பக்தி செய்யச் சொல்லித் தன்னை ஈர்க்கிறது என்ற உண்மையை சாந்த்படீலால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதேநேரம், அவரை தரிசித்துக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆவலையும் அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. சுவாமி! என் இல்லத்திற்கு வாருங்களேன்!  மிகுந்த பணிவோடும் பரம பக்தியோடும் அழைத்தார். தன் மனைவிக்கும் குடும்பத்தினர்க்கும் இவரது தரிசனத்தால் மங்கலங்கள் உண்டாகவேண்டும் என ஆசைப்பட்டார். பகட்டே இல்லாத எளிமையும், அப்பழுக்கற்ற தூய பக்தியும் குன்றாத ஆர்வமும் எங்கிருக்கிறதோ அந்த இடம்நோக்கித் தன்னிச்சையாக இறைவனின் திருப்பாதங்கள் நடக்கும் என்பது உண்மைதானோ! சாந்த்படீல் தம்மை அழைத்ததும், அதற்கென்ன! போகலாமே! என்றவாறே அவருடன் நடந்தார் பக்கிரி.

சாந்த்படீல் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. யசோதையின் இல்லத்தில் வெண்ணெய் திருடப் பதுங்கிப் பதுங்கி நடந்த பாதங்கள், கைகேயியின் கட்டளைப்படி வனத்தில் பதினான்கு ஆண்டுகள் கல்லிலும் முள்ளிலும் நடந்த பாதங்கள், இன்று அன்போடு அழைத்த சாந்த்படீலின் அழைப்பையும் ஏற்றுக்கொண்டன. தன்னுடன் வருவது தன்னிகரற்ற பரம்பொருளின் மானிட வடிவம் என்பதை அறியாவிட்டாலும் அவர் ஒரு புண்ணிய புருஷர் என்ற பக்தி உணர்வோடு அவரைத் தம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்றார் சாந்த்படீல். கோயிலில் இறைவன் உறைவான் என்றால், இறைவன் உறையும் இடமெல்லாம் கோயில் தானே! அன்று அந்த எளிய இல்லம் கோயிலாயிற்று. விதுரர் வசித்த குடிசைக்குக் கிருஷ்ணர் வருகை தந்ததுபோல், அந்தப் பக்கிரியும் அந்த இல்லத்திற்கு வருகை தந்தார். அவருக்கு விருந்துபசாரம் செய்து மகிழ்ந்தாள் சாந்த்படீலின் மனைவி. சாந்த்படீல் தூப்காவன் என்ற அந்த கிராமத்தின் அதிகாரி. அங்கிருந்த மக்களெல்லாம் வியப்போடு அவர் இல்லத்திற்கு வந்து அந்த அதிசயப் பக்கிரியை தரிசித்தார்கள். அவரைப் பார்க்கும்போது மனத்தில் இனந்தெரியாத சாந்தி பிறப்பதை உணர்ந்தார்கள்.

தாம் பெற்ற புண்ணியம் மற்றவர்களுக்கும் கிட்டட்டும் என எல்லோரிடமும் சாந்த்படீல் இல்லத்திற்கு ஒரு யோகி வந்திருப்பதை அறிவித்தார்கள். அக்கம் பக்கமிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. வைரக்கல்லைக் கண்ணாடிப் பெட்டியில் வைத்து மூட முடியுமா? அந்தப் பக்கிரி அந்த இல்லத்திற்குள் இருந்தாலும், அவரது புனிதப் பிரகாசம் சுற்றுப்புறத்தைஎல்லாம் வெளிச்சப்படுத்தியது. அவர் அருட்செல்வம் படைத்த ஆண்டவனின் மனித வடிவம் அல்லவா! அவர் படங்கள் இருக்கும் இல்லத்திலேயே இன்று ஏராளமான மங்கலங்கள் நடைபெறுகின்றன என்றால், அவர் மானிட உரு எடுத்துக் கொஞ்சகாலம் தங்கிய அந்த இல்லத்திற்கு மங்கலச் சேதிகள் உடனே வந்து எட்டாமல் இருக்குமா? அப்படியொரு சேதி மிக விரைவில் அந்த இல்லத்தாரை எட்டியது. சாந்த்படீலின் மைத்துனனுக்குத் திருமணம் நிச்சயமாயிற்று. பல காலமாகத் தள்ளிப் போன திருமணம் இப்போது உடனடியாகக் கூடிவந்தது, பக்கிரியின் அருளால்தான் என்று சாந்த்படீல் எண்ணினார். திருமணத்திற்கு வண்டி கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். ஏராளமான உறவினர்கள் கூட்டம் தூப்காவன் கிராமத்திலிருந்து திருமணத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்டது. அந்தப் பக்கிரியையும் தங்களோடு வரவேண்டும் என சாந்தபடீல் பக்தியோடு வேண்டினார். முக்காலமும் உணர்ந்த பக்கிரி, எதுவுமே தெரியாதமாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, திருமணம் எங்கு நடக்கிறது என்று விசாரித்தார்.

மணப்பெண் ஷிர்டியைச் சேர்ந்தவள். திருமணம் ஷிர்டியில்தான் நடக்கிறது என்றார்கள் அவர்கள். இதைக் கேட்டவுடன் சப்தம் போட்டுச் சிரித்தார் அவர். அந்தச் சிரிப்பின் பொருள் யாருக்கும் புரியவில்லை. தம்மை ஷிர்டி நிரந்தரமாக அழைக்கிறது என்ற ரகசியம், அவருக்குத் தெரிந்ததுபோல் மற்றவர்க்குத் தெரிய வாய்ப்பில்லையே! ஷிர்டி கிராமத்தின் எல்லையில், கண்டோபா தெய்வத்திற்கான ஆலயம் இருந்தது. திருமண கோஷ்டி சென்ற மாட்டு வண்டிகள், கண்டோபா கோயிலுக்கு வந்து சேர்ந்தன. ஒரு பெரிய ஆலமரத்தடியில் வண்டிகளை நிறுத்தி, ஷிர்டியின் உள்ளே செல்வதற்காக அனைவரும் இறங்கினார்கள். அந்தப் பக்கிரி தானும் ஷிர்டி எல்லையில் கால்பதித்து கம்பீரமாக நின்றார். அப்போது கண்டோபா கோயிலில் மங்கல ஆரத்தி நடந்து கொண்டிருந்தது. ஆரத்தித் தட்டைக் கையில் ஏந்தியவாறு கோயிலுக்கு வெளியே வந்தார் கோயிலின் பூஜாரியான மகல்சாபதி. பக்கிரியைப் பார்த்த மாத்திரத்தில் அவர் விழிகளில் கரகரவென ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. இந்தப் பெருமகனை வாழ்வில் இன்னொரு முறை  தரிசிப்பேனா என்று தவமிருந்தேனே! சில ஆண்டுகளுக்கு முன் ஷிர்டியில் வேப்ப மரத்தடியில் தோன்றிய அதே பால யோகியல்லவா இவர்!  ஆகா…! மறுபடியும் ஷிர்டி வந்துவிட்டார்! இவரின் வருகையால் ஷிர்டி புனிதமடையப் போகிறது!  இறைவனுக்கான மங்கல ஆரத்தியை அந்தப் பக்கிரிக்குக் காட்டி, ஆவோ சாயி ஆவோ! என ஆனந்தக் கண்ணீர் மல்க வரவேற்றார் அவர். சாயி என்றால் சுவாமி. பாபா என்றால் அப்பா என்ற பொருள்தரும் சொல்.  சாயிபாபா மீண்டும் ஷிர்டி வந்துள்ள செய்தி ஒரு கணத்தில் ஷிர்டி ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் ஷிர்டி எல்லைக்கே வந்து வரவேற்றார்கள். திருமண வீட்டிற்குள் சாயிபாபா சென்றதும், அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.  சாந்த்படீல், தங்கள் இல்லத்தில் தங்கியவர் முன்னரே ஷிர்டிக்கு வந்த யோகிதான் என்றறிந்து வியப்பில் ஆழ்ந்தார். தூப்காவன்  மக்களும் ஷிர்டி மக்களும் சாயிபாபா கி ஜெய்! என முழக்கமிட்டார்கள். அன்று தொட்டு அவர் சாயிபாபா ஆனார்.  அன்று அளவற்ற நிறைவில் ஆழ்ந்த சாந்த்படீல், திருமணம் முடிந்த பின்னர் எதிர்பாராத ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டு ஜீரணிக்க வேண்டியிருந்தது…..!

ஷிர்டி சாய் பாபா பகுதி – 4
ஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்! அவனை மறுநாள் காணோம். அதை அறிந்து, சொந்த மகனைத் தொலைத்தது போல், பாய்ஜா மாயி கண்களிலிருந்து கரகர வெனக் கண்ணீர் வழிந்தது. எங்கே போனான் அவன்? தாயுள்ளம் கொண்ட அந்த பக்தையின் கண்ணீரைக் காலம் தன் பேரேட்டில் குறித்துக்கொண்டது. அழுதால் அவனைப் பெறலாம் என்பதல்லவா சத்திய வாசகம்! இறைவனுக்காக அழுபவரைத் தேடி இறைவன் வராவிட்டால் அப்புறம் அவன் எப்படி இறைவனாவான்? ஷிர்டிக்கு மீண்டும் அந்த இளைஞன் வருவான் என்பதை அவள் கண்ணீரே உறுதி செய்கிறதே! 1854ல் ஷிர்டியில் நடந்த சம்பவம் இது…… சூரியதேவன் தன் ஏழுவண்ணக் குதிரைகளின் லகானைப் பிடித்துச் சுளீரென்று ஒரு சொடுக்குச் சொடுக்கினான். குதிரைகள் வேகமெடுத்துப் பாய்ந்தன. நான்கு ஆண்டுகள் கிடுகிடுவெனப் பஞ்சாய்ப் பறந்தன. அதன்பின் இன்னொரு கிராமத்தில் இன்னொரு நாள்… நைஜாம் சமஸ்தானத்தைச் சேர்ந்த அவுரங்காபாத் பகுதியில், தூப்காவன் என்றொரு சிறிய கிராமம்.

சாந்த்படீல் என்ற முஸ்லிம் பெருமகன் அங்கே வாழ்ந்து வந்தார். இறைநம்பிக்கை உடைய நல்ல மனிதர். யாரையும் ஏமாற்றாமல் நியாயமாக வணிகம் செய்து வாழ்பவர். ஐந்துவேளை தொழுகை நிகழ்த்துபவர். அன்பு மயமான அவர், ஒருநாள் சில குதிரைகளுடன் ஒரு வேலை நிமித்தம் அருகேயிருந்த அவுரங்காபாத் நகருக்குச் சென்றார். பார்த்துப் பார்த்துத்தான் பயணம் செய்தார். குதிரைகள் அவரது செல்வம் அல்லவா? அவற்றை மிக எச்சரிக்கையாகத் தான் கூட்டி வந்தார். ஆனால், வந்து சேர்ந்தபின், கணக்கிட்ட போதுதான் தெரிந்தது, அவற்றில் ஒரு பெண்குதிரையைக் காணோம்! என்ன ஆச்சரியம்! எங்கே போயிற்று அது? ஒரு குதிரை தொலைவது என்பது அவரது செல்வத்தின் ஒரு பகுதி தொலைவதுபோல் அல்லவா? மீண்டும் ஒரு குதிரையை விலைக்கு வாங்க அவர் எவ்வளவு செலவு செய்ய வேண்டியிருக்கும்? அவர் பதட்டத்தோடு, தான் வந்த வழியே தொலைந்துபோன குதிரையைத் தேடிச் சென்றார். ஆனால், என்ன சோதனை! குதிரை எங்கும் தென்படவே இல்லை. என்ன மாயம் இது! யார் அந்தக் குதிரையை மறைத்தார்கள்? இரண்டு மாதங்கள் மிகுந்த முயற்சியுடன் தேடித் தேடிப் பார்த்தார்.

கண்டுபிடிக்க இயலவில்லை. உண்ணும்போதும் உறங்கும்போதும் தொலைந்துபோன குதிரையைப் பற்றித்தான் அவருக்குச் சிந்தனை. மிகவும் சோர்வடைந்தார். யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், என் குதிரை இப்படித் தொலைவானேன்! என்று அவர் உள்ளம் மருகியது. அவர் உடல் மெலியத் தொடங்கியது. ஒருநாள் இன்று எப்படியும் குதிரையைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னந்தனியாய், மீண்டும் முன்னர் தேடிச் சென்ற பாதையிலேயே நடந்து தேடலானார். காட்டுப் பாதை. கல்லும் முள்ளும் காலைக் குத்திக் கிழித்தன. எங்கேதான் போயிருக்கும் குதிரை? ஏதாவது மரத்தடியில் புல் மேய்ந்து கொண்டிருக்குமோ என்று பல இடங்களில் தேடினார். குளம் குட்டைகளில் தண்ணீர் அருந்திக் கொண்டிருக்குமோ என்று அங்கெல்லாம் போய்ப் பார்த்தார். எங்கு தேடியும் காணவில்லை. நடந்து நடந்து கால்கள் வலிகண்டதுதான் மிச்சம். மிகுந்த ஏமாற்றத்துடன் தளர்ந்த நடையோடு வந்த வழியே திரும்பி நடக்கலானார். இனி, தன் குதிரை மீண்டும் தனக்குக் கிடைக்கும் என்ற எண்ணம் அவர் மனத்திலிருந்து விடைபெறத் தொடங்கியது. அப்போது ஒரு மாமரத்தின் நிழலில் ஒரு பக்கிரி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். தலையில் ஒரு குல்லாய். நீண்ட அங்கி. கையில் சட்கா என்னும் குட்டையான ஒரு தடி.

ஏ சாந்த்படீல்! என்று கூவி அழைத்தார் பக்கிரி. சாந்த்படீலுக்குத் தூக்கிவாரிப் போட்டது. யார் இவர்? கானகத்தில் தன்னந்தனியே அமர்ந்திருக்கும் இவருக்குத் தன் பெயர் எப்படித் தெரியும்? அந்த அழைப்பில் தென்பட்ட அளவற்ற கம்பீரமும், குரலில் தென்பட்ட இனிமையும், உடனடியாக அந்தக் குரலுக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தின. வியந்தவாறே அந்த அதிசயப் பக்கிரியின் அருகே வந்தார் அவர். நெருங்க நெருங்கக் காந்தம் இரும்பை இழுப்பதுபோல் அவர் தன்னை இழுப்பதாக உணர்ந்தார். அவர் பக்கத்தில் செல்லும்போது மனத்தில் ஒரு சாந்தி தோன்றுவதையும், தன் உள்ளச் சுமை குறைந்து இதயமே லேசாவதையும் உணர்ந்தார். அந்தக் கானகத்திற்கு அந்தப் பக்கிரி எப்போது எப்படி வந்தார் என்று தெரியவில்லை. பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாக அதே கானகத்தில் வசிப்பவர் போல் தோன்றினார். அவரைச் சுற்றி இனம் புரியாத ஒரு புனித ஒளி பரவியிருந்தது. அவரது பால்வடியும் முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பரவசம் ஏற்பட்டது. என்ன தூய்மையான முகம்! எந்த மனிதரிடமும் இத்தகைய பளிங்குபோன்ற முகத்தை சாந்த்படீல் பார்த்ததே இல்லை. இந்த முகம் உடையவரைப் பளிங்குச் சிலையாகவே ஆக்கி, பின்னால் மக்கள் வழிபட்டுப் பலன் பெறப் போகிறார்கள் என்றெல்லாம் சாந்த்படீலுக்கு அப்போது தெரியாது. ஹரே சாந்த்படீல்! உன் காணாமல் போன பெண்குதிரையை இங்கே தேடினால் எப்படியப்பா கிடைக்கும்? வடக்குப் பக்கமாகப் போ.

ஒரு பெரிய ஆலமரத்தடியில் நின்று கொண்டிருக்கிறது உன் குதிரை. போய்ப் பார்! சாந்த்படீல் ஏதொன்றும் பேசாமல் அவரை வணங்கிவிட்டு அவர் சொன்னபடியே, விசை முடுக்கப்பட்ட பொம்மை மாதிரி, வடக்குப் பக்கம் நோக்கி நடந்தார். கொஞ்ச தூரம் நடந்ததும் அவர் கண்ட காட்சி! மகிழ்ச்சியில் அவருக்குத் தொண்டை அடைத்தது. அந்தப் பக்கிரி சொன்னது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மைதான். குதிரை அங்கேதான் சாதுவாய்த் தன் எசமானனை எதிர்பார்த்துக் காத்திருந்தது! அவரைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் கனைத்தது. தான் முன்னரே இந்த இடத்தில் தேடினோமே? அப்போது குதிரை இங்கே இருந்ததாய்த் தெரியவில்லையே? குதிரை இங்கிருப்பதை இடத்தை விட்டு நகராமலே எப்படிக் கண்டுபிடித்தார் அந்தப் பக்கிரி? அது இருக்கட்டும். தான் யார் என்பதும், குதிரையைத் தான் தேடும் விவரமும் அவருக்கு எப்படித் தெரிந்தன? சந்தேகமில்லாமல் அவர் பெரிய மகானாகத் தான் இருக்க வேண்டும். சாதுவாய்த் தன்னைத் தொடர்ந்த குதிரையை அழைத்துக் கொண்டு, மீண்டும் பக்கிரியை நோக்கி நடந்தார் சாந்த்படீல். தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அவருக்கு பணிவு கலந்த வணக்கம் தெரிவித்தார். அவருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வெகுதூரம் நடந்த களைப்பு. கடுமையான தாகம் தொண்டையை வாட்டியது. என்னப்பா! தாகத்தால் தவிக்கிறாய் போலிருக்கிறதே? தண்ணீர் வேண்டுமா உனக்கு? பரிவோடு கேட்டார் அந்த அதிசயப் பக்கிரி. அடுத்த கணம் நடந்த சம்பவத்தைப் பார்த்து ஏறக்குறைய மயங்கிவிழும் நிலைக்கு ஆளானார் சாந்த்படீல்…அருள்மழை கொட்டும்

ஷிர்டி சாய் பாபா பகுதி – 3
ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி  சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் தொடங்கினார்களே சிலர்! அப்போதுதான் யாரோ சீற்றத்தோடு பெருமூச்சு விடும் ஒலி கேட்டது… வேப்பமரத்தின் அருகாக இருந்த பாம்புப் புற்றிலிருந்து ஒரு ராஜநாகம் பெருமூச்சோடு உர்ரென்று தலையைத் தூக்கிச் சீறியது.  அத்தனை பெரிய நாகப்பாம்பை யாரும் அதுவரை பார்த்ததில்லை. அதன் குடைபோல் விரிந்தபடத்தையும் பளபளவென மின்னும் வழவழப்பான வசீகரத் தோற்றத்தையும் வியந்து பார்த்த மக்கள், நாகராஜா! எங்களைக் காப்பாற்று! என்று முணுமுணுத்தவாறே கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். வேப்ப மரத்தடியிலிருந்து இப்போது சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இளைஞன், நாகராஜாவைக் கனிவோடு பார்த்தான். சரி.. சரி… நான் சொல்லித்தான் இவர்கள் தோண்டுகிறார்கள்.

நீ கோபம் கொள்ள வேண்டாம்! அமைதியாக இரு! என்று நாகப்பாம்பிடம் சொன்னான்! பாம்போடு பேச முடியுமா? அவன் பேசினானே! அந்தப் பாம்பும் அவன் பேச்சைப் புரிந்துகொண்டதே! புற்றைவிட்டு மெல்ல ஊர்ந்து வெளிப்பட்ட ராஜநாகம், இளைஞன் அமர்ந்திருந்த இடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வலம் வந்தது. பின் அவன் பாதங்களில் தலைவைத்து நமஸ்கரித்தது. பிறகு மறுபடி அதே புற்றுக்குள் போய் மறைந்துவிட்டது! இந்த விந்தையான காட்சியைப் பார்த்த பெண்மணிகள் கன்னத்தில் கைவைத்து, என்னடியம்மா இது! அதிசயமாக இருக்கிறது! என்று வியப்பில் ஆழ்ந்தார்கள். இளைஞன் கலகலவெனச் சிரித்துக் கொண்டே நடக்கட்டும்! வேப்ப மரத்தின் வேரை வெட்டிவிடாதீர்கள். அது இந்த ஊரின் காவல் மரம்! என்று எச்சரித்து, தோண்டுகிறவர்களுக்கு உத்தரவு கொடுத்தான். மணிநாதம் போன்ற இளைஞனின் சிரிப்பில் மயங்கிய அவர்கள், பின் சுதாரித்துக் கொண்டு மறுபடி தோண்டத் தொடங்கினார்கள். மண்ணுக்குள்ளே அவர்களுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மண்ணை மெல்ல மெல்லத் தள்ளிவிட்டுப் பார்த்தபோது, உள்ளே தென்பட்டது ஒரு குகை. அந்த அழகிய குகையில் நான்கு மாடங்கள் இருந்தன. நான்கு மாடங்களிலும் நான்கு தனித்தனி அகல் விளக்குகள் வைக்கப்பட்டிருந்தன.

அதை விட  ஆச்சரியம்! அந்த விளக்குகள் ஒவ்வொன்றும்  அப்போதுதான் ஏற்றி வைக்கப்பட்டதுபோல்  சுடர்விட்டு எரிந்துகொண்டிருந்தன.  மூடிய குகைக்குள் விளக்கை ஏற்றிவைத்தது  யார்? மண்மூடிய குகைக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது எப்படி?  குகை நடுவே ஒரு மரப் பலகை வைக்கப் பட்டிருந்தது. மிகச் சில கணங்கள் முன்னால்  வரை, யாரோ ஒரு ரிஷி அதில் அமர்ந்து தவம்  செய்திருக்க வேண்டும்.  அந்த ரிஷி யார்? இப்போது அவர் எங்கே போனார்?  அன்றலர்ந்த மலர்களால் அந்தப் பலகை  அலங்கரிக்கப்பட்டிருந்தது. பலகையின் மேலே  ஒரு ஜபமாலை. அந்த ரிஷி பயன்படுத்திய  ஜபமாலையாக இருக்கலாம்.  குகை முழுவதும் கமகமவென ஒரு மனோகரமான நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மண்ணால்  மூடியிருந்த குகை இப்போது திறக்கப்பட்டதால் அந்த மணம் வெளியேயும் பரவி, கிராமம்  முழுவதையும் வாசனை நிறைந்ததாக மாற்றியது.  மண்ணைத் தோண்டி குகையைக் கண்டு பிடித்தவர்கள் மேலே ஏறி வெளியே வந்து தாங்கள் கண்ட அதிசயக் காட்சியை இளைஞனிடமும்  மக்களிடமும் சொன்னார்கள். ஏற்கனவே  தெரிந்த விஷயத்தைக் கேட்பதுமாதிரி, அவர்கள் சொன்னவற்றைச் சிரித்துக் கொண்டே கேட்டான் இளைஞன்.  சரி…. பூஜாரி சொன்னபடி மண்ணைத்  தோண்டிப் பார்த்தாயிற்று அல்லவா? இனி அந்த இடத்தை முன்போல் மண்போட்டு மூடிவிடுங்கள்! இனி எக்காரணம் கொண்டும் இந்த இடத்தைத்  திறக்காதீர்கள்! ஒரே ஒருமுறை திறந்து பார்க்க மட்டும்தான் உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அவன் எச்சரிப்பதுபோல் கூறினான்.

குகை மிகுந்த கவனத்தோடு மறுபடி மண்போட்டு மூடப்பட்டது. மக்களின் முகங்களில் தென்பட்ட கேள்விக்குறியைப் பார்த்து, இளைஞன் விளக்கம் தருவதுபோல் பேசலானான்:  உள்ளே இருக்கும் குகை, குருநாதர் தவம்  செய்யும் குகை. உலக ÷க்ஷமத்திற்காக அவர்  எப்போதும் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார். அடிக்கடி மண்ணைத் திறந்து குருநாதர் தவத்தைக்  கலைக்கலாகாது. இந்த வேப்ப மரத்தின் வெளியில் நாள்தோறும் விளக்கேற்றி வையுங்கள். வியாழக்கிழமை மறக்காமல் ஊதுபத்தி ஏற்றி வழிபடுங்கள். இச் செயல்கள் காரணமாக கிராமத்திற்கு  மங்கலங்கள் பெருகும். அனைவரும் சுபிட்சமாக வாழ்வீர்கள். சரி… நீங்கள் எல்லோரும் இப்போது வீட்டுக்குச்  செல்லலாம். நாளை அதிகாலை வரை யாரும் மறுபடி இங்கு வரவேண்டாம்!  இளைஞனின் கண்டிப்பான குரலைக் கேட்டும், அந்தக் குகை பற்றிய வியப்பில் தோய்ந்தும் மக்கள் மெல்ல மெல்லக் கலைந்தார்கள். இளைஞன் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து நிர்ச்சலனமான தியானத்தில் ஆழ்ந்தான்.  மக்கள் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றார்கள். குகையில் குருநாதர் தவம் செய்வதாய்ச் சொன்னானே? யார் அந்த குருநாதர்? இவனே தானா?  நினைத்தாலே சாந்தி தரும் அவன் திருமுகத்தை மனத்தில் தேக்கியவர்களாய் அனைவரும்  மனமில்லாமல் தங்கள் இல்லம் நோக்கி நடந்தார்கள்.  அந்த இளைஞனுக்குச் சாப்பிடச் சப்பாத்தி கொடுத்த பாய்ஜா மாயி, இரவில் தன்னந்தனியே இவன் இங்கே தியானத்தில் ஆழ்ந்திருக்கப்  போகிறான் போலிருக்கிறதே? பாம்புப் புற்று வேறு அருகில் இருக்கிறதே! இறைவா! எந்த ஆபத்தும்  வராமல் இவனைக் காப்பாற்று! என்று உளமார வேண்டிக்கொண்டாள்.

இறைவனைக் காப்பாற்ற வேண்டும் என்று இறைவனிடமே வேண்டிக்  கொள்ளும் அவளின் வெகுளித்தனத்தை  என்னென்பது!  மறுநாள் அதிகாலை எழுந்தவுடன், இளைஞனை மீண்டும் தரிசிக்கும் ஆவலில் ஓடோடி வந்தாள் பாய்ஜாமாயி. ஊர்மக்கள் அனைவரும் அவளைத் தொடர்ந்து வந்து அதே வேப்பமரத்தடியில் மறுபடி கூடினார்கள்.  ஆனால், அந்த இளைஞன் அங்கே இல்லை.  அதுமட்டுமல்ல, அவன் நேற்று அங்கே  இருந்ததற்கான சுவடு கூட இல்லை. ஏன்… நேற்று வேப்ப மரத்தடியில் தோண்டிப் பார்த்து பின் புதுமண்ணைப் போட்டு மூடினார்களே? வேப்ப  மரத்தடி பழையபடி தான் இருந்ததே தவிர,  தோண்டிப் பார்த்து மறுபடி மூடியதற்கான அறிகுறி எதுவுமே அங்கு தென்படவில்லை! அப்படியானால் நேற்று நடந்ததுதான் என்ன? அது உண்மையா… இல்லை.. மாயத் தோற்றமா? ஏராளமான மக்கள் ஒன்று சேர்ந்து பார்த்தது மாயத் தோற்றமாக இருக்குமா? ஆனால், இப்போது நினைத்துப் பார்த்தால், இந்த உலகமே மாயத் தோற்றம் என்றும், அந்த இளைஞன் ஒருவன் மட்டும் தான் உண்மை என்றும் அல்லவா தோன்றுகிறது? இந்த வேப்பமரத்தடியை மீண்டும் தோண்டிப் பார்த்தால் என்ன? அந்த இளைஞன் மரத்தடியை மறுபடி தோண்டக் கூடாது என்றல்லவா உத்தரவு போல் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான்? அந்த தெய்வீக இளைஞன் மறுபடி வருவானா? ஷிர்டி மக்கள் அனைவரும் அவன் மறுபடி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலானார்கள். நாள்தோறும் அவன் சொன்னபடி அந்த வேப்பமரத்தடியில் விளக்கேற்றி வைத்து அவனது தரிசனத்திற்காக ஏங்கிக் காத்திருந்தார்கள். அந்த இளைஞன் வந்தானா?

ஷிர்டி சாய் பாபா பகுதி – 2

ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபாவடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர் அதிகாலை… வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கலானார்கள். காலையில் சூரியன் தோன்றும். ஆனால், இன்று அங்கே ஒரு வெண்ணிலவல்லவா தோன்றியிருக்கிறது! பளீரென்று பிரகாசமாக ஓர் இளைஞன் மர நிழலில் சாந்தி தவழும் முகத்தோடு அமர்ந்திருந்தான். மானிடனா… இல்லை தேவனா… இத்தனை பேரழகை மனிதர்களிடம் பார்க்க முடியுமா! கண்ணும் மூக்கும் பிற அங்கங்களும் சேர்ந்து யாரோ சிற்பி சர்வ லட்சணமான ஒரு சிற்பத்தைச் செய்து அங்கே கொண்டுவைத்த மாதிரியல்லவா இருக்கிறது!

அவனைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. பார்த்த கண்கள் தித்தித்தன. அந்த வாலிபன் முகத்தில் தென்பட்ட தூய்மையும் குழந்தைத்தனமும் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளிச் சாப்பிட்டன. அப்படியொருவன் அங்கே அமர்ந்திருக்கிறான் என்ற செய்தி விறுவிறுவென அந்தச் சிற்றூரில் எங்கும் பரவியது. எல்லோரும் வேப்ப மரத்தடியில் ஒன்றுகூடி விட்டார்கள். இந்த அழகான பெரிய பொம்மை பேசுமா? வியப்போடு சில குழந்தைகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை எங்கிருந்தான்? இப்போது திடீரென்று எங்கிருந்து இங்கு வந்தான்? இவன் யார்? மனத்தை மயக்குகிறதே இவன் தோற்றம்? வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்குமா? இப்போது இவன் இங்கே வந்திருப்பதன் நோக்கமென்ன?நேரம் கடந்து கொண்டிருந்தது. வெய்யில் ஏறத் தொடங்கிவிட்டது. அவன் எல்லோரையும் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தவாறே அமர்ந்திருந்தான். யாரப்பா நீ? என்று யாராவது விசாரிக்க வேண்டாமோ? யாருக்கும் என்ன கேட்பதென்றே தோன்றவில்லை. திகட்டத் திகட்ட அவனது அருள்பொங்கும் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள் அனைவரும். அவர்களிடையே கணபதிராவ் கோட்டி படேல் என்பவரும் அவரது மனைவி பாய்ஜா பாயியும் நின்றிருந்தார்கள்.

திடீரென பாய்ஜா பாயி பதட்டம் அடைந்தாள். அவனைப் பார்க்கும்போது குழந்தைஇல்லாத அவள் மனத்தில் தாயன்பு பொங்கியது. இந்தப் பிள்ளை சாப்பிட்டானோ! இல்லையோ! பசிக்குமே இவனுக்கு! அவள் தன் கணவரிடம், ஒருநிமிஷம், இதோ வந்துவிட்டேன்! என்றவாறே வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைத் தயார் செய்தாள். தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் சப்ஜியும் தயாரித்தாள். அவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு லோட்டாவில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மீண்டும் வேப்பமரத்தடிக்கு ஓடி வந்தாள். கூட்டத்தின் நடுவே புகுந்து இளைஞன் அரு@க வந்து சேர்ந்தாள். வியர்வை வழிந்த முகத்தை முந்தானையால் ஒற்றிக்கொண்ட அவள், மகனே! நீ எப்போது சாப்பிட்டாயோ.. என்னவோ? கொஞ்சம் சப்பாத்தி எடுத்துக்கொள் அப்பா! என்றவாறே பாத்திரத்தைத் திறந்து அவன்முன் வைத்தாள். அவன் அவளையே பாசம் பொங்கப் பார்த்தவாறிருந்தான். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறாளே! இவளின் இந்த உணர்வில் அல்லவா இறைவன் குடியிருக்கிறான்! அவன் தேனை விட இனிமையான தெய்வீகக் குரலில் பேசலானான்: பாய்ஜாபாயி! நீ செய்த சப்பாத்தியைச் சாப்பிடக் கசக்குமா? உன்னைப்போல் சமைக்க இந்த ஊரில் யாருண்டு? என்றவாறே சப்பாத்திப் பாத்திரத்தைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டான்.

பாய்ஜாபாயிக்கு மட்டுமல்ல, கூட்டத்தினர் அனைவருக்குமே மயக்கம் வரும்போல் இருந்தது. பாய்ஜாபாயியின் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது! அகில உலகங்கள் அனைத்தையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுக்குத் தன் குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரும் தெரியாமலா இருக்கும்! இளைஞன் தொடர்ந்து பேசலானான்: அம்மா! உன் சப்பாத்தியை எனக்கும் முன்னால், என் அண்ணா சாப்பிட வேண்டாமா? அவனுக்கும் பசிக்குமே? அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதியை நான் சாப்பிடுகிறேன்! இவனுக்கு ஓர் அண்ணாவா? யார் அந்த அண்ணா? கூட்டம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் கூவினான்:அண்ணா! ஓடிவா. வந்து சாப்பிட்டு விட்டுப் போ! அடுத்த கணம் வெள்ளைவெளேர் என்ற ஒரு பன்றி காட்டுக்குள்ளிருந்து பாய்ந்து ஓடிவந்தது. கூட்டம் விலகி வழிவிட்டது. அவ்வளவு அழகான பன்றியை யாரும் அதற்குமுன் பார்த்ததே கிடையாது. இது பன்றியா! இல்லை வராக அவதாரமே தானா! வாலைக் குழைத்துக்கொண்டு நின்ற பன்றி, இளைஞன் தூக்கிப்போட்ட இரண்டு சப்பாத்திகளைத் தாவிப் பிடித்துத் தின்றது. பின் ஒரே ஓட்டமாகக்காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது! இந்த இளைஞன் யார்? கடவுளே தானா? அப்படியானால் இந்தச் சம்பவத்தின் மூலம் கடவுள் எதை உணர்த்த விரும்புகிறார்? மனிதர்கள் மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்துமே தன் குழந்தைகள் தான் என்கிறாரா? விலங்குகளிடமும் நீங்கள் அன்பாயிருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறாரா? எஞ்சியிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட்ட இளைஞன் லோட்டாவில் இருந்த நீரால் கைகழுவினான்.

பின் மிகுந்த சொந்தத்தோடு சிரித்தவாறே, பாய்ஜாபாயியின் சேலை முந்தானையில் ஈரக் கையைத் துடைத்துக் கொண்டான். அந்த முந்தானை பெற்ற பாக்கியமே பாக்கியம். அந்தக் காட்சியைப் பார்த்த பிற பெண்கள், பாய்ஜா பாயியைப் போல் தங்களுக்கு சப்பாத்தி எடுத்துவரத் தோன்றவில்லையே என ஏங்கினார்கள். அங்கிருந்த அத்தனை பெண்மணிகளும் கோகுலத்தில் குழந்தைக் கண்ணனைக் கண்ட தாய்மார்களின் மனநிலையை அடைந்தார்கள். வந்திருப்பது யார்? கண்ணனே தானா? ஆனால், கையில் குழலைக் காணோமே? கையில் இல்லாத குழல் அவன் குரலில் இருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு இனிமையாக அவன் பேசலானான்: பாய்ஜா பாயி! இவ்வளவு ருசியான சப்பாத்தியை நாள்தோறும் சாப்பிடும் உன் கணவர் கணபதிராவ் கொடுத்துவைத்தவர்தான்! அடடே. கணபதிராவ் பெயரும் இவனுக்குத் தெரிந்திருக்கிறதே? அடுத்த கணம் அங்கே வந்து கூட்டத்தோடு நின்றிருந்த அவ்வூர்க் கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட எத்தனித்தார்கள். அப்போது யாரோ பெருமூச்சோடும் கோபத்தோடும் சீறும் ஒலி கேட்டது. கடப்பாரையைத் தூக்கியவர்கள் திகைத்துப் பின்வாங்கினார்கள்….!

ஷிர்டி சாய் பாபா பகுதி – 1

உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலை… காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில நாட்களாகவே காலரா அந்த கிராமத்தில் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டல்லவா அது! அப்போது காலராவிலிருந்து மக்களைக் காப்பாற்றும் மருத்துவ வழி முறைகள் பிரபலமாகவில்லை. ஷிர்டி மக்கள், தங்கள் கிராமத்தில் வாழும் பாபாவையே சரணடைந்து வாழ்ந்தார்கள். தெய்வசக்தி, இந்த மண்ணில் பாபா என்ற மனித உடலில் இறங்கிப் பல திருவிளையாடல்களைப் புரிந்து வருகிறது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். நேற்றிரவு ஏராளமான பேர் அவர் வசிக்கும் மசூதிக்குச் சென்று தங்களைக் காலராவில் இருந்து காப்பாற்றுமாறு பிரார்த்தனை செய்தார்கள். பிறவிப் பிணியிலிருந்தே மக்களைக் காப்பாற்றக் கூடியவர், உடல் பிணியிலிருந்து காப்பாற்ற மாட்டாரா? பாபா தெய்வீகப் புன்முறுவலோடு பேசலானார்: நீங்களெல்லாம் என் குழந்தைகள் இல்லையா! உங்களைக் காப்பாற்றத் தானே உலகிற்கு வந்திருக்கிறேன்!

படைத்தல், காத்தல், அழித்தல் என்று நான் செய்யும் முத்தொழிலில் காத்தல் தொழிலை நான் நிகழ்த்துவதற்கான காலம் அல்லவா இது! குழந்தைகளே! தீய சக்திகள் தான் உலகில் நோயைப் பரப்புகின்றன. நோய்க்கு மருந்து சாப்பிட்டால் மட்டும் போதாது. கிளையை வெட்டினாலும் மரம் மீண்டும் வளரும். மரத்தை அழிக்க மரத்தின் வேரை அழிக்க வேண்டும். நீங்கள் நோய்க்கு உங்களால் இயன்ற மருந்து சாப்பிடுங்கள். அது கிளையை வெட்டும் வேலை. ஆனால், நோயை உண்டுபண்ணும் பகைச் சக்தி என்ற மரத்தின் வேரை அல்லவா வெட்ட வேண்டுமல்லவா! அந்தச் செயலை நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் மனத்தில் உள்ள காமம், குரோதம் முதலிய பகைச் சக்திகளை நீங்கள் வெட்டிச் சாய்த்துவிட்டால் உடல் பிணி மட்டுமல்ல, பிறவிப் பிணியே குணமாகிவிடும்,. அமிர்தத் துளிகள் போல் பாபா பேசிய பேச்சைக் கேட்டு மக்கள் நிம்மதியோடு வீடு  திரும்பினார்கள். இதெல்லாம் நேற்றின் கதை. ஆனால், இன்று அதிகாலை பாபாவைப் பற்றி விந்தையான அந்தச் செய்தியைக் கொண்டு வந்திருக்கிறாள் அவரைக் காலையில் தரிசித்த பெண்மணி. அடியவர் கூட்டம் பாபா முன் குழுமியது. அவர் மாவரைக்கும் கல் இயந்திரத்தின் முன்னால் கால்நீட்டி அமர்ந்திருந்தார். பக்கத்தில் முறத்தில் கோதுமை குவிக்கப்பட்டிருந்தது.

அவர் ஒரு சாக்கைத் தரையில் விரித்து, அதன் மேல் திருகையை வைத்திருந்தார். இந்த யந்திரம், இந்தச் சாக்கு, இந்தக் கோதுமை எல்லாம் எங்கிருந்து தான் வந்ததோ! அவர் காற்றிலிருந்து கூட எதையும் வரவழைக்கும் ஆற்றல் உள்ளவர் அல்லவா! தன் நீண்ட அங்கியின் கைப்புறத்தை மடித்துவிட்டுக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக கோதுமையை எடுத்துத் திருகையின் மேலிருந்த குழியில் போட்டார் பாபா. பின் கோதுமையை மாவாக அரைக்கலானார். அரைபட்ட மாவு வழிந்து கீழே கொட்டத் தொடங்கியது. பாபாவின் முகத்தில் சீற்றம். அவர் அழுத்தி அழுத்தி திருகையின் மரக் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டே கோதுமையோடு பேசத் தொடங்கினார்.ம்! ஓடு! இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விடு! என் குழந்தைகளையா துன்புறுத்துகிறாய்? என்ன தைரியம் உனக்கு? இவர்கள் பக்கம் நீ கையை நீட்டினால், நீதான் அரைபட்டுச் சாகவேண்டும். புரிகிறதா? இப்போது மன்னிப்புக் கேட்டு என்ன செய்வது? முதலிலேயே அல்லவா புத்தி வந்திருக்க வேண்டும்? இந்த எல்லைக்குள் இனி வரக்கூடாது. சத்தியம் செய்துகொடு. ம். ஓடியே போய்விடு! – பாபா இப்படி ஏதேதோ சொன்னவாறே, அந்த யந்திரத்தின் கைப்பிடியைப் பிடித்துச் சுற்றிக் கொண்டிருந்தார். அரைபட்ட கோதுமை மாவு சரசரவெனக் கீழே கொட்டியது.

பாபா கைவலிக்க மாவரைப்பதைப் பார்த்துக் கூட்டத்திலிருந்த சில பெண்மணிகள் ஓடோடி வந்தார்கள். பாபா! இந்த வேலை எல்லாம் உங்களுக்குப் பழக்கமில்லை. உங்களுக்குக் கைவலிக்கும். சற்றுத் தள்ளிக்கொள்ளுங்கள். நாங்கள் அரைக்கிறோம். அவர்கள் அன்பால் விளைந்த உரிமையோடு பாபாவின் கையைப் பிடித்து நகர்த்தி விட்டு, திருகையின் மரப்பிடியைப் பிடித்து அரைக்கலானார்கள். பாபா சிரித்தவாறே அவர்கள் மாவரைக்க அனுமதி அளித்துவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். பாபா சிரிக்காமல் என்ன செய்வார்? அண்ட சராசரங்களையும் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளுக்கு மாவரைக்கும்போது கைவலிக்கும் என்று பதறுகிறார்களே இந்தப் பெண்கள்! ஆனால், அந்தப் பெண்கள் தன்மேல் செலுத்திய பக்தி, பாபாவின் மனத்தில் கல்கண்டாய்த் தித்தித்தது. பாபா அடியவர்களிடமிருந்து பக்தியை மட்டும் தானே எதிர்பார்க்கிறார்! எத்தனையோ அடியவர்கள் அவருக்கு என்னென்ன பொருட்களையோ காணிக்கையாய்க் கொண்டு வருகிறார்கள். ஜகஜ்ஜோதியாய் அகில உலகையும் தன் பிரகாசத்தால் துலங்கச் செய்யும் சூரியனுக்கு, கற்பூர ஆரத்தி காண்பிப்பது மாதிரி! அடேய். நான் கேட்பது உன் தீய குணங்களை.

அதைக் கொண்டுவந்து என் காலடியில் போடு. இனித் தீய நினைவுகளில் கூட ஆழமாட்டேன் என்று எனக்கு வாக்குறுதி கொடு!- பாபாவின் கண் பார்வை பக்தர்களை அதட்டுகிறது…. எல்லா கோதுமையும் அரைபட்டதும் மாவை என்ன செய்யவேண்டும் எனப் பணிவோடு கேட்கிறார்கள் பெண்கள். மாவை நான்கு கூறாகப் பிரியுங்கள். ஷிர்டி கிராமத்தின் நான்கு எல்லைகளிலும், இந்த மாவை வேலி போல் தூவிவிட்டு வாருங்கள். உடனடியாக இதைச் செய்யுங்கள்! வந்த கூட்டம் மொத்தமுமே நான்காகப் பிரிந்தது. அந்த மாவு பயபக்தியோடு கிராமத்தின் நான்கு எல்லைகளிலும் வேலிபோல் தூவப்பட்டது. மறுகணம் காலரா அந்த எல்லையைத் தாண்டி வெளியேறிவிட்டது. காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆரோக்கியம் அடைந்தார்கள். பாபாவின் பாதங்களில் பணிந்து கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். பாபா அரைத்தது கோதுமையை அல்ல. காலராவைத் தூண்டிய தீய சக்தியை! இப்படி ஷிர்டி பாபா செய்த அற்புதங்கள் எத்தனையோ…பாபாவின் புனிதத் திருச்சரிதமே அற்புதமானது. சுந்தரகாண்டம் போல், நாராயணீயம்போல் ஷிர்டி பாபாவின் சரித்திரமும் பாராயணம் செய்வதற்கு உரியது. அந்தச் சரிதத்தைப் படிக்கும் அனைவருக்கும் எல்லா மங்கலங்களையும் தரக் கூடியது. கடவுளே மனித வடிவெடுத்த அந்த மகானின் புனிதத் திருச்சரிதம் இனி…..

சுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது!

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா?

இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்கு பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு!…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன? எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும்! அன்பின் வடிவான அவன் புகழ் ஓங்கட்டும்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – வேதாந்தமும் தனிச்சலுகையும்!

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து, துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற, அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது, தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து, எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.

இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது, எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம், ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர, நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை, அல்லது தனியுரிமை, யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். ஆனால் நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோயிலே. தனிச் சலுகை என்னும் கருத்து ஒழிந்தால் தான் மதம் என்பதே தோன்றும். எனவே, ஒவ்வொரு சலுகையையும், அதற்குக் காரணமாக நம்முள் இருக்கும் சுயநலப்போக்கையும் தூக்கியெறிந்துவிட்டு, எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என நமக்கு அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று. கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம். நூற்றாண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உடைய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இத்தகைய பதவி பெறுவதென்பது சாமான்யமானதல்ல. ஆனால் சுவாமிஜியோ, நான் ஒரு துறவி துறவி பட்டமோ பதவியோ பெறுவது அழகல்ல என்று கூறி பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளை மறுத்து விட்டார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – நாகரீகம் என்பது நன்னடத்தையில்

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார். சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார். தமது சொந்த மண்ணின் மீது சுவாமிஜிக்குத்தான் எத்துணை மதிப்பு!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!

அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் இந்த சம்பவத்தினை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.

அன்றைய தினம் 12 பேர் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு பேரொளி வானத்திலிருந்து மெல்ல இறங்கி சுவாமிஜியின் திருப்பாதங்களைத் தீண்டியது போல் இருந்தது. அன்று மதியம் சுவாமிஜி துறவின் பெருமையைப் பற்றியும் காவி அணிவதால் வரும் ஆனந்தம், மற்றும் சுதந்திரம் பற்றியும் விவரித்துக் கொண்டே இருந்தார். திடீரென்று அங்கிருந்து சென்று விட்டார் அவர் பின் சிறிது நேரத்திற்குள் தியாகத்தையும் துறவையும் போற்றும் சந்நியாசி கீதம் என்ற கவிதையை எழுதி முடித்தார். அறுபது ஆண்டுகளுக்காகப் பிறகு 1995 ஆம் வருடம் செப்டம்பர் மாத வாக்கில்தான் சுவாமிஜி கைப்பட எழுதிய சந்நியாசி கீதத்தின் பேப்பர்கள் திரும்பக்கிடைத்தன. இது ஒரு விந்தையான விஷயம் 1948 ஆம் ஆண்டு நியூயார்க் ராமகிருஷ்ண விவேகானந்த மையம் ஆயிரம் தீவுப் பகுதியில் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டில் மறுசீரமைப்புப் பணிக்கு ஏற்பாடு செய்தது.

சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் அங்கிருப்பது யாருக்கும் தெரியாததால் அது மற்ற பயனற்ற பொருள்களோடு வெளியே தன் குடும்பத்துடன் வழக்கமாக மடத்திற்குச் சென்று வரும் எலக்ட்ரீஷியனான மிஸ்டர் ஹரால்டு கோல் என்பவர் அந்த சந்நியாசி கீதத்தின் பெருமையை உணர்ந்து அந்தக் கவிதையை எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தார். சுவாமிஜியின் ஞாபகார்த்தமாக அவர் அதை வைத்திருந்தாலும் தன்னிடம் சுவாமிஜியின் கவிதை இருக்கும் தகவலை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955 செப்படம்பர் மாதம் அவர் அதை நியூயார்க்கில் உள்ள ராமகிருஷ்ண விவேகானந்த மையத்தின் தலைவரான சுவாமி நிகிலானந்த மகராஜிடம் ஒப்படைத்தார்.

சுவாமி சத்பிரகாஷானந்தர் எழுதிய என்ற நூலில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. சுவாமிஜியின் திருக்கரங்களினால் எழுதப்பட்ட சந்நியாச கீதத்தைப் பற்றி அவரது சீடர் சிறப்பித்துக் கூறுவதைக் காண்போம். சுவாமி விவேகானந்தரின் சீடர் சுவாமி ஆத்மானந்தர் தன் குருவான சுவாமிஜியிடம் அவர் கொண்டிருந்த பக்தி அளவிடற்கரியது. சுவாமிஜி எழுதிய கவிதைகளை பாடல்களை அவர் பாடும் போது அந்த இடம் முழுமையும் ஆன்மிக அதிர்வுகளால் நிரம்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தது சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் என்ற பாடல்கள்.

புதிதாகத் துறவறம்மேற்கொண்டவர்களிடம் ஆத்மானந்தர் நீங்கள் உண்மையிலேயே துறவியாக வாழ விரும்பினால் இன்று முதல் இந்தப் பாடல்களின் ஒவ்வொரு வார்த்தையையும் இன்று முதல் தியானம் செய்யுங்கள் என்று கூறுவார். சுவாமிஜி கூறிய கருத்துக்கள் சந்நியாசிகளுக்கு மட்டும்தானா? வாழ்வை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்கள் அனைவருக்குமே அவை வழிகாட்டு அல்லவா! அவற்றின் ஒரு சிறிய பகுதியை நாமும் காண்போமே!

உறுதி உடைய நற்றுறவீ உம்மைப் பிணைத்துக் கீழ்ப்படுத்தி
இறுக்கும் தளைகளை நீர் நொறுக்கி எறிந்து விடுங்கள் இக்கணமே
மின்னும் தங்கத்தளையெனினும் மிகவும் கரிய இரும்பெனினும்
மன்றும் அன்பே ஆயிடினும் மனத்தில் வளரும் வெறுப்பெனினும்
எல்லாம் இடுக்கிப் பிடிபோல என்றும் உம்மை நெருக்குபவை
தங்கத் தளைகள் ஆனாலும் சற்றும் வலிமை குறைந்தனவா?
சிங்கத் துறவீ தளைமுற்றும் சிதைத் தெறியுங்கள் இப்போதே
ஓம்தத்ஸத் என நீங்கள் உள்ளம் உருகச் சொல்லுங்கள்.

என்ன அற்புதமான பொருள் பொதிந்த கவிதைகளை சுவாமிஜி வழங்கியிருக்கிறார்.

உண்மையான துறவியாக வாழ விரும்பும் சந்நியாசியாக இருந்தாலும் சரி இறைவனை அடைய விரும்பும் சாதகனாக இருந்தாலும் சரி நம்மைப் பிணைத்துள்ள தளைகளிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமல்லவா!

தினமும் சுவாமிஜியின் இக் கவிதைகளின் பொருளைத் தியானிக்கும் போது, தளைகளிலிருந்து விடுபடவேண்டுமென்ற ஆர்வத்தையும், அதற்குரிய ஆற்றலையும் சுவாமிஜி வழங்குவார்.

முல்லா கதைகள் – கோழியால் வந்த குழப்பம்

ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்…. இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய்? நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல….அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய்? தொழுகை இல்லையா? ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே! இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும்.

நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா? உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்?அவர் செய்தது பிரார்த்தனை அல்ல….அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்…அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள்

முல்லா வந்து முன்னால் நின்றார். அவர் கையில் ஒரு புனித குர் ஆனைக்கொண்டு வந்து கொடுங்கள் என்றார் குருநானக் கொடுத்தார்கள். இப்போது சொல்லுங்கள்….. உங்கள் உதடுகள் அல்லாவை உச்சரித்த வேளையில் உங்கள் மனம் வீட்டிலே விட்டு வந்த கோழிகளை நினைத்ததா? இல்லையா? முல்லா கையில் குர் ஆன் இருந்தது. உண்மைதான் என்று முல்லா ஒப்புக் கொண்டார். குருநானக் விடப்பட்டார். குருநானக் முல்லாவை விடவில்லை. நீதிபதி சொன்னார் : முல்லா அவர்களே ! பள்ளி வாசலுக்குப் போய் ஏமாற்றுவதை விட அங்கே போகாமல் இருந்து விடுவது மேல். அங்கே ஒரு வேடதாரியாக இருக்காதீர்கள்.

கருணைமயமான இறைவனது திருநாமத்தைச் சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள் உள்ளே இருக்கிற ஒன்றைத் தேடிச் செல்கிற போது வெளியே இருக்கிற ஒன்று நினைவுக்கு வரலாமா?

ஆன்மிகக் கதைகள் – இறுதி மூச்சு வரை உன் பணியே!

ராம லக்ஷ்மணர்கள் சுக்ரீவன் உள்ளிட்ட வானரசேனை, அத்துடன் பராக்கிரம அனுமன் இத்தனை பேரும் ஒன்று கூடி ராவணேஸ்வரன் பிடியிலுள்ள சீதையை எவ்வாறு மீட்பது என்று ஆலோசித்தனர். சுக்ரீவன் வானரங்களை திசைக்கொருவராய்ச் செல்ல உத்தரவிட்டான் பின் அனுமனைப் பார்த்து. பலம், புத்தி நன்னெறி, இடத்திற்கும் காலத்திற்கும் உகந்த வண்ணம் நடத்தல் ஆகிய எல்லா குணங்களும் கொண்டவரே சீதையை மீட்கும் வழியைச் சொல்லுங்கள் என்றான். சுக்ரீவனின் வார்த்தைகளும் அனுமனின் தோற்றமும் ஸ்ரீராமபிரானுக்கு , இவரே தம் காரியத்தை முடிக்க வல்லவர் என்ற எண்ணத்தைத் தந்தது. உடனே தனது மோதிரத்தை ஓர் அடையாளமாக ராமன் அனுமனிடம் அளித்தார். தன் பிரபுவின் எண்ணப்படியே சீதையைக் கண்டு. நல்ல சேதியுடன் ராமனிடம் வந்து அவரது விஸ்வாசமான வேலைக்காரனாக அனுமன் ஆனான்.

எஜமானன் அளிக்கும் வேலையை ஒருவன் சிரத்தையாகச் செய்யும் அளவிற்கு உண்மையான வேலைக்காரனாக ஆகலாம் இறைவனுடைய பணிகளில் நம்மை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டு அதற்கென்றே நாம் உழைக்க வேண்டும். இவ்வாறு செய்யச் செய்ய, நமது மூச்சும் பேச்சும் அவனது வேலைகளைப் பற்றியதாகவே இருக்கும் இதன் பலன் என்ன தெரியுமா? நாம் அவனது வேலைக்காரனாகி விடும்போது. அவனை வேலை வாங்கவே மாட்டோம். இறைவன் வருவதும் தெரியாது நமக்காக வேலை பார்ப்பதும் தெரியாது. அப்படி ஒரு நிலை இது. இரு எடுத்துக்காட்டுகளைக் காணலாம். சிறந்த பக்தர். தனது கிழிந்த துணியைத் தைக்கிறார் அவரது குணத்தில் மகிழ்ந்து சிவனும், பார்வதியும் பக்தருக்கு தரிசனம் தந்து ஏதாவது வரம் கேட்கும்படி அவரிடம் கூறுகின்றனர்.

அவர் எனக்கு எதுவுமே வேண்டாம் என்றாலும் இறைவனும் இறைவியும் திரும்பத் திரும்ப வற்புறுத்துகின்றனர் வரம் கேட்குமாறு. நான் தைக்கும் போது ஊசியின் பின்னாலே நூலும் வரவேண்டும் – இது பக்தர் கேட்ட வரம். இறைவன் சிரித்தவாறே, ஊசியின் பின்னால் நூல் வரத்தானே செய்யும்! இதற்கு எதற்கு வரம் ? என்று கேட்டார். பக்தர் கூறினார் : இந்த உலகில் எல்லாச் செயல்களும் உங்கள் இச்சைப்படியே நடக்கும் பொழுது எனக்கு எதற்கு வரம்? பின் சிவ பார்வதி தம்பதியினர் புன்னகைத்தவாறே மறைந்தனர். இன்ப துன்பங்களைக் கடந்த நிலை இது . மற்றொரு கதை அம்பிகை தனது பக்தன் ஒருவனுக்கு காட்சிகொடுத்து வரம்கேட்குமாறு கூறினாள். என் வலது காலில் உள்ள வீக்கத்தை இடது காலுக்கு மாற்று என்றான் பக்தன் இதெல்லாம் என்னால் முடியாது. வேறு வரம் கேள் என்று கூறினாள் அன்னை. பக்தன் சிரித்தவாறே, வேறு வரம் எனக்கெதற்கு எனக்கென்று உள்ளதை நான் அனுபவித்துத்தானே தீர வேண்டும் என்றதும் தனக்கு இனி வேலையில்லை என்றெண்ணிவாறே அங்கிருந்து அம்பிகை அகன்றாள்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – ஸ்ரீராமகிருஷ்ண சீடர்களின் தவம்!

சுவாமி நித்யாத்மானந்தா எழுதிய M-The Apostle and the Evangelist (ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளை எழுதிய மகேந்திரநாத் குப்தர் என்ற ம) என்ற நூலில் உள்ள 16 ஜூலை 1924-ல் நடந்த உரையாடலிலிருந்து தொகுத்தது.

அபய்பாபு: சுவாமி விவேகானந்தரும் அவரது சகோதரத் துறவிகளும் எதற்கு அவ்வளவு தவம் மேற்கொண்டார்கள்? ஸ்ரீராமகிருஷ்ணர்தான் ஏற்கனவே அவர்களையெல்லாம் சித்தியடைந்த வர்களாக உயர்நிலைக்கு அழைத்துப் போய்விட்டாரே! அப்படியிருந்தும், உணவு, தூக்கம் இவற்றையெல்லாம் துறந்து எதற்கு அவ்வளவு கடுமையான தவம் செய்தார்கள்?

ம: கடவுளை அடைந்த பிறகும் அவர்கள் ஏன் தவம் செய்கிறார்கள் என்றால், தாம் பெற்ற இறையுணர்வைத் திடப்படுத்திக் கொள்வதற்காக என்பதுதான் பதில். புராணத்தில் படித்திருக்கி றோம், முசுகுந்த மகாராஜா இறையனுபவம் கிட்டிய பிறகும் தவம் மேற்கொண்டார் என்று. ஏன்? அந்த உயர் அனுபவ நிலைக்குப் பிறகும் அவருக்கு மனம் அமைதியற்றுச் சலித்துக் கொண்டே இருந்தது. அதனாலேயே அவருக்கு, தவம் செய் என்ற ஆணை கிடைத்தது. அலை பாய்வது மனதின் சுபாவம்; அதைத் தவத்தின் மூலம் அமைதிப்படுத்த முடியும்.இன்னொரு காரணம். இறையுணர்வை அனுபவத்தில் அடைந்த பின்னும் அதிலிருந்து சறுக்கி விழ வாய்ப்புண்டு. ஏன் தினமும் தியானம் செய்கிறீர்கள்? என்று ஸ்ரீராமகிருஷ்ணர், தமக்கு அத்வைத சாதனையைக் கற்றுத் தந்த குருவான தோதாபுரியைக் கேட்டார். அதற்கு தோதாபுரி, பாத்திரத்தைத் தினமும் துலக்க வேண்டும்; இல்லாவிட்டால் அதில் களிம்பு ஏறிக் கறுத்துவிடும் என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் விடாமல், பாத்திரமாக இருந்தால்தானே தினம் தினம் துலக்க வேண்டும்? அதுவே தங்கமாகிவிட்டால் தினமும் துலக்க வேண்டியதில்லை அல்லவா? என்று கேட்டாராம். உண்மை என்னவெனில், எல்லோராலும் தங்கப் பாத்திரமாய் ஆகிவிட முடியாது. ஸ்ரீராம கிருஷ்ணர் ஓர் அவதார புருஷர்; அவர் சொக்கத் தங்கம்தான்.

எல்லோரையும் அவர் நிலைக்கு ஒப்பிட முடியுமா? ஸ்ரீராமகிருஷ்ணரைச் சரணடைந்தவர்கள் முக்தியடைவார்கள் என்பது உண்மைதான். இதுபற்றி அன்னை ஸ்ரீசாரதாதேவி ஒரு சாதுவிடம் விளக்குகையில், கடைசி மூச்சை விடுகையில், குருதேவர் வந்து அழைத்துப் போவார் என்பதில் ஐயமில்லை; ஆனால், நீ உயிரோடிருக்கும்போதே, சாந்தியில் நிலைபெற்று இருக்க வேண்டுமானால், தவம் செய்ய வேண்டும்; குருதேவரைத் தியானிக் கத்தான் வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுவாக, தவம் செய்பவனுக்கே இறைவ னின் கருணை கிட்டுகிறது. தவத்தின் மூலம் மனம் தூய்மையாகிறது; அதன் மூலம் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாவது எளிதாகிறது. அதே சமயம், கடவுளின் கருணை கிட்டுவதற்கு எந்தச் சட்டதிட்டமும் கிடையாது என்பதும் உண்மையே. அவர் நியதிகளுக்கு அப்பாற்பட்டவர்; அருளுவதும் அருளாதிருப்பதும் அவரது விருப்பம். அப்படியென்றால் என்னதான் வழி? செய்தால் அவரை வளைத்துப் போட்டு விட முடியும் என்ற கணக்கு ஏதும் போடாமல், தவம் செய்ய வேண்டும்.அப்படியானால், வாழ்நாள் பூராவும் ஒருவன் தவம் செய்து கொண்டே இருக்க வேண்டுமா? படகோட்டி, பயண தூரம் முழுவதும் துடுப்பு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? அப்படியல்ல.

அலை அதிகமாகப் பொங்குகையில், காற்று வேகமாகச் சுழன்றடிக்கையில், படகோட்டி துடுப்பைக் கவனமாகப் போடத்தான் வேண்டும். சற்று நேரம் பொறுத்து, கடல் அமைதியாகும்; காற்று சாதகமாய் வீசும். அப்போது, படகோட்டி பாய்மரத்தைச் சரியாகக் கட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகைபிடிக்கிறான். படகு, தானே ஒழுங்காகப் பயணிக்கிறது. இப்போது படகோட்டிக்கு, ஓய்வு, அமைதி, ஆனந்தம்தான். அதுபோலவே ஒரு சாதகன், மனதின் கொந்தளிப்புகளையும், ஆசாபாசங்களையும் சமாளிக்கக் கடுந்தவம் செய்கிறான்; மனம் அமைதியாகும்போது தவமும் முடிவுக்கு வருகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதாரபுருஷராக இருந்தும், அவரே எத்தனை தவம் செய்தார்! எத்தனை வித ஆன்மிகச் சாதனைகள், எத்தனை பஜனை! சாதுசங்கத்தின் அவசியத்தைத் திரும்பத் திரும்ப உபதேசித்த அவர், தாமே சாதுக்களையும் உருவாக்கித் தந்தார். தன் அந்தரங்கச் சீடர்களைப் பூரணத்துவம் அடைந்தவர்களாக ஆக்கித் தந்தார். இறைவனை உருவமுள்ளவராகவும் உருவமற்றவராகவும் காணும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கினார். அப்படியிருந்தும், அவர்களை இப்படி கடும் தவத்துக்கு ஏன் உட்படுத்தினார் என்றால், அதற்கு மற்றொரு முக்கிய காரணம், அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதால்தான். அவர்களைப் பார்த்துத்தான் பிறரும் சாதனையும் தவமும் செய்யக் கற்றுக் கொள்வார்கள்.குருதேவரின் மறைவுக்குப் பிறகு, தனித்து விடப்பட்ட அந்த இளம்சாதுக்கள், பாராநகர் மடத்தில் எத்தகைய விவேக வைராக்கியத்தோடு தவம் மேற்கொண்டார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேனே.

அவர்கள் இடுப்பில் கோவணம் மட்டும்தான் இருந்தது. நாள் முழுவதும் ஜபத்திலும் தியானத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். உடம்பைப் பற்றியோ, உணவைப் பற்றியோ கவலையே படமாட்டார்கள். சில நாட்கள் தொடர்ந்து உண்ண ஒன்றுமே இருக்காது. அவர்களிடம் மொத்தத்தில் உருப்படியாய் இருந்தது ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும்தான். அவர்களில் யாருக்கு வெளியே போகும் வேலை இருக்கிறதோ, அவர்கள் அதை உடுத்திக் கொண்டு போய் வருவார்கள்.அவர்கள் உலகுக்கே உபதேசிக்கப் பிறந்தவர்கள். ஒரு முறை கண்டவர்கள் என்ற தகுதி அதற்குப் போதாது. பிரம்மஞானத்தில் நிலைபெற்றவர்களாக அவர்கள் உறுதி பெற வேண்டியிருந்தது. அதற்குத்தான் இத்தனை கடின தவம். ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கின்றேன் என்றோ கல்விதம் பிரம்மா (இருப்பதெல்லாம் பிரம்மம் ஒன்றே) என்றோ, வெறுமனே கிளிப்பிள்ளைபோல் வாயால் சொல்லாமல், அதை அனுபவப்பூர்வமாக, எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு வணங்கும் நிலையைப் பெறுவதற்குத்தான் இத்தனை கடினமான தவம். மொத்தத்தில், ஆரம்ப நிலையில் கடவுளை அடைவதற்குத் தவம் வேண்டியிருக்கிறது; அடுத்த நிலையில், அனுபூதியில் பெற்றதை நிலைத்த ஆனந்தமாக ஆக்கவும், தாம் பெற்ற ஆனந்தத்தை அடுத்தவர்களுக்கு வழங்கும் தகுதியைப் பெறவும் தவம் அவசியமாகிறது.- தமிழாக்கம்: சி. வரதராஜன்

சுவாமி விவேகானந்தர் கதைகள் – எது உண்மையான வழிபாடு?

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான். நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும். திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன்தான் உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டும் சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் – அவனிடம் சிவபெருமானைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் சிவபெருமான் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் யஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி யஜமானனிடம், ஓ, என் யஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய யஜமானனின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை யஜமானன் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் அந்த யஜமானன். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள் – ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும். நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி – அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி – அவனே மற்ற எல்லோரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.
சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் – அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

(சுவாமி விவேகானந்தர், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் 27.1.1897-ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவு.)

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்!

இந்தியாவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள். அவரிடம் எல்லாமே ஆக்கபூர்வமானவை; அவரிடம் எதிர்மறையாக எதுவும் இல்லை என்று, கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் கூறினார். சுவாமி விவேகானந்தரிடம் குறுகிய மனப்பான்மை, எதிர்மறைக் கருத்துகள் ஆகியவை ஒருபோதும் இருந்ததில்லை. அவர் மற்றவர்களும் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நடைமுறையில் நன்மை தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும்; பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்து தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒரு கதையைக் கூறினார்: ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.

தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.

இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது? என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்கு காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனத்தை ஒருமுகப்படுத்தினால் வெற்றி!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர், காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு, பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன, சில குரங்குகள் அவரைப் பிறாண்டின, சில குரங்குகள் அவரைக் கடித்தன, சில குரங்குகள் அவரது உடையைப் பிடித்திழுத்தன! எனவே இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர், குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்! ஆனால் அவர் ஓடினாலும், குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக் குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை! என்று அவர் நினைத்தார். விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும், ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து, நில்! குரங்குகளை எதிர்த்து நில்! என்று உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன. அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி, துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வீறுடன் குரங்குகளை எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான்! அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது! இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது! இவர் நம்மைத் தாக்குவார்! இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும் தப்பிக்க வேண்டும்! இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும்! என்று குரங்குகள் நினைத்து, அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட ஆரம்பித்தன! இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப் பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர், இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில்! தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில்! ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே! இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால், அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும், பிரச்னைகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள்! துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள்! அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – இளைஞர்கள் வைத்த சோதனை!

ஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை – பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்! என்று முடிவு செய்தார்கள்.

எனவே அவர்கள் விவேகானந்தரை, ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவேகானந்தர், சொற்பொழிவு செய்ய வேண்டிய இடத்திற்குச் சென்றார். ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞர்கள், விவேகானந்தரைச் சோதிப்பது போலவே நடந்துகொண்டார்கள். ஒரு மரத்தொட்டியைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை – இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்கள்.
விவேகானந்தர் எந்த மறுப்பும் கூறாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டார். அவர் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் சொல்லிக்கொண்டிருந்த கருத்தில் மனம் ஒன்றிய நிலையில், சூழ்நிலையை மறந்து பேசினார். திடீரென்று அவரைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன! காதைப் பிளக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை அங்கு பலமாக எழுந்தது! சில குண்டுகள் விவேகானந்தரின் காதின் அருகிலும் பாய்ந்து சென்றன! ஆதலால் சுற்றிலும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தன.

ஆனால் இவ்விதம் சூழ்நிலை மாறியது காரணமாக, விவேகானந்தரிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். இப்போது, விவேகானந்தரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்! என்று நினைத்த இளைஞர்கள் தோற்றார்கள். எதுவுமே அங்கு நடக்காததுபோல், விவேகானந்தர் உரிய நேரத்தில் தன் சொற்பொழிவை முடித்தார்.அந்த இளைஞர்கள் விவேகானந்தரிடம், உண்மைதான் சுவாமிஜி, நீங்கள் அப்பழுக்கற்றவர். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள் என்று கூறி, அழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – கடமையைச் செய், உயர்வை அடைவாய்!

கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம்! கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்துகொண்டேன். இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.

அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக்கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து, வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து, இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்

நியூயார்க்
19.11.1894

என் வீர இளைஞர்களுக்கு,

அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும்.
முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! – கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள்! – இதையே இப்போதும் நான் சொல்கிறேன்.

என்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள்! என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள்! என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை – அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் – ஒரு வார்த்தையில் சொல்வதானால் – மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள்! அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்!

வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் தர வேண்டும்! மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும்? அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே! எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது – இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.
சலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – முன்னேறிச் செல்லுங்கள்!

உங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா? முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்!

ஆசீர்வாதங்கள்.
அன்புள்ள,
விவேகானந்த

சுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார். அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார். இந்த நிலையில் ஒருநாள் அவர், எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள். அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மை? அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே! அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது? எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது! என்று தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.

அங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது, மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம்! அவை… சந்தேகமேயில்லை! ஒரு புலியின் கண்கள்தாம்! அதோ, அந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தன; இதோ அருகில் வந்துவிட்டன! விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது. புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும்! இருவரும் பட்டினியாக இருக்கிறோம். இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார். இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாக, அசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.

கண்களை மூடி அவர், இதோ! இப்போது புலி என்மீது பாயப் போகிறது! என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா! இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார்! என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எவையும் அவர் உடலில் இல்லை. உடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தன. அவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – ராக்ஃபெல்லருக்கு வழங்கிய அறிவுரை!

அப்போது சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார். ராக்ஃபெல்லர், பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். விவேகானந்தரைச் சந்தித்தபோது, ராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை. ராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர், விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள். எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார். என்றாலும் ஏனோ அவர், விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார். விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் திடீரென்று, விவேகானந்தரைச் சந்திக்க வேண்டும்! என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.

அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான். அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர் முன்அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார். விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கி, வந்தது யார்? என்று பார்க்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் கழிந்தது. தலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் – தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் – திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவர், உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.

அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார். இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதா? என்று அவருக்குத் தோன்றியது. எனவே அவர், நன்றி, வணக்கம், சென்று வருகிறேன் என்றுகூட எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார். ஆனால் விவேகானந்தரின் ஆன்மிகசக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்தது. ஒரு வாரம் கழிந்திருக்கும். ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார். முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன்அனுமதியின்றி, விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசி, இதோ, இதைப் படித்துப் பாருங்கள்! இப்போது உங்களுக்குத் திருப்திதானே! நீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்! என்று கூறினார். விவேகானந்தர் அசையவும் இல்லை; ராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை; அவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார். படித்து முடித்ததும் அவர், நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. நீங்கள்தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும். ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார். எனவே அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சிகாகோ சொற்பொழிவுகள்

1. வரவேற்புக்கு மறுமொழி – செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

    எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
         இறுதியிலே கடலில் சென்று
    சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
         பின்பற்றும் தன்மை யாலே
    துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
         வளைவாயும் தோன்றி னாலும்
    அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
    அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.’

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? – செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், ‘நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

‘நீ எங்கிருந்து வருகிறாய்?’

‘கடலிலிருந்து’

‘கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?’ என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

‘நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?’ என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, ‘உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?’ என்று கேட்டது.

‘சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?’

‘நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!’ என்று கத்தியது கிணற்றுத் தவளை.
காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

3. இந்து மதம் – செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.
யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.
தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: ‘பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.’ இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.
இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, ‘நான், நான், நான்’ என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? ‘இல்லை’ என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.
அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?
ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?
வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன – ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.
பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.
இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: ‘நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!’
தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.
சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?
இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: ‘எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.’ உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. ‘எனக்குத் தெரியாது’ என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.
ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?
இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ‘நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா’ என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: ‘ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.’
‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.
இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். ‘அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது’ என்றுகூறுகின்றன.
அவனது இயல்புதான் என்ன? அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். ‘அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்!’- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது? அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.
மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் – இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. ‘எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்’ என்கிறது ஒரு பிரர்த்தனை.
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், ‘அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?’ என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், ‘தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது’ என்றார்.
ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, ‘நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்’ என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.
இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். ‘காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்’.
நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.
எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.
ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.
அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.
தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் – இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. ‘ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்’. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், ‘நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?’ என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், ‘உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?’ என்றுகேட்டார், ‘இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்’ என்று பதிலளித்தார் பாதிரி. ‘அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்’ என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து!
பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, ‘பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். ‘எங்கும் நிறைந்தது’ என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? ‘எங்கும் நிறைந்தவர்’ என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.
எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.
அவன் எங்குமே நின்று விடக்கூடாது. ‘புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை’. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : ‘அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.’
இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். ‘குழந்தை, மனிதனின் தந்தை.’ குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.
சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.
ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், ‘முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி’ என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். ‘நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்’ என்கிறார் வியாசர்.

இன்னொன்று: ‘அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?’ பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.
இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.

4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று – செப்டம்பர் 20, 1893

நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.
இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.

5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு – செப்டம்பர் 26, 1893

நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.
ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.
ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.

இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.
மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.
எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் தேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், ‘நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.
தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.
தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.
அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், ‘பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை’ என்று கூறுகிறார்.
புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!

6. நிறைவு நாள் உரை – செப்டம்பர் 27, 1893

சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
இந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.
சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா! உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!
விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.
இந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், ‘உதவி செய், சண்டை போடாதே’, ‘ஒன்றுபடுத்து, அழிக்காதே’, ‘சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்றுஅவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Share this:

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சமுதாய உணர்வில் போலித்தனம் கூடாது!

சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று பேசினால் மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டும் என்பதை, சுவாமி விவேகானந்தர் ஒரு கதை மூலம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நாம் இப்போது பார்க்கலாமா? அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய அரசவையில் அதிகாரிகள் பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், நான்தான் அரசனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன். நான் அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம், இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது என்று கூறினான். துறவி புன்சிரிப்புடன், நீ சொல்வதை நான் நம்பவில்லை என்றார். அரசன், நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்கொள்ளலாம் என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார் துறவி – அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா சோதனை? என்று இகழ்ச்சியாகக் கேட்டான்.

பின்னர் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என்பது தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அதிகாரிகள் செய்தது போலவே, நாமும் நம் பங்குக்கு உரிய வேலையைச் செய்து வருகிறோம். உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை யாருக்குத் தெரியப் போகிறது? என்கிறார் ஒருவர். இப்படித்தான் பணக்காரர்களும் கொடுங்கோலர்களும் சொல்கிறார்கள். எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்வோம்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு!

1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமற் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.

அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; சக்கிலியன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும் மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.

காரணம், சக்கிலியனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் – அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார்: நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!

இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது விவேகானந்தர், செருப்புத்தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்புத்தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சுயமரியாதை வேண்டும்!

ஒரு நாள் புவனேசுவரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாக இரு. சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு; ஆனால் தேவையேற்படும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக்கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார். தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். இது தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியை இங்கு இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார். மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணி புரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்னையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.

வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்? விவேகானந்தர்:முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

வெள்ளைக்காரர்:தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man) …

விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார். பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார்: வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி!

நரேந்திரன் பதினோரு வயது சிறுவன். தலைமைப் பண்பு அவனிடம் இயல்பாகவே இருந்தது. எனவே தன் வயதுடைய சிறுவர்களுக்கு எப்போதும் அவன்தான் தலைவனாக இருந்தான். கொல்கத்தாவுக்கு சிராபிஸ் என்ற ஒரு போர்க்கப்பல் வந்தது. அதை மக்கள் சென்று பார்த்தார்கள். நரேந்திரனும் அவனது நண்பர்களும், அந்தப் போர்க்கப்பலைத் தாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். நரேந்திரன் விசாரித்தபோது, சிராபீஸ் கப்பலைப் பார்க்க வேண்டுமானால், அதற்கு ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் முன்அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தெரிந்தது. எனவே நரேந்திரன் உரிய விண்ணப்படிவத்துடன், ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்குச் சென்றான். ஆங்கிலேய அதிகாரியின் அலுவலகம் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்தது. அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், மாடிப்படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

மாடிப்படி அருகில் காவல்காரன் ஒருவன் நின்றிருந்தான். அங்கு அவன் அனுமதித்தால்தான், மக்கள் மாடிப்படியில் ஏறிச் சென்று ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்க முடியும். எனவே காவல்காரனிடம் நரேந்திரன், சிராபீஸ் போர்க்கப்பலை நானும் என் நண்பர்களும் சென்று பார்க்க விரும்புகிறோம். அதற்கு ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து அனுமதி சீட்டு பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்று தெரிவித்துக்கொண்டான். காவல்காரன், நரேந்திரன் சிறுவன் என்பதால், அவனை மாடிப்படி ஏறிச் செல்வதற்கே அனுமதிக்கவில்லை. காவல்காரனின் அனுமதியில்லாமல் மாடிப்படிகளில் ஏறிச் செல்லவும் முடியாது, ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வது? என்று யோசித்தான் நரேந்திரன். சரி… மாடியில் இருக்கும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்கு, இங்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவன் கட்டிடத்தைச் சுற்றி வந்தான். நரேந்திரனின் எண்ணம் வீண் போகவில்லை. கட்டிடத்தின் பின்னால், பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் சிறிய ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் நரேந்திரன் ஏறிச் சென்று, அங்கிலேய அதிகாரியைச் சந்தித்து தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.

ஆங்கிலேய அதிகாரி நரேந்திரன் எதிர்பார்த்தபடியே, அவனும் அவனுடைய நண்பர்களும் சிரபீஸ் போர்க்கப்பலைச் சென்று பார்ப்பதற்கு அனுமதிசீட்டு கொடுத்தார். நரேந்திரன் அங்கு வந்த வேலை நல்லவிதமாக முடிந்தது. பிறகு நரேந்திரன், காவல்காரன் தன்னைத் தடுத்த முன்படிக்கட்டு வழியாகத் திரும்பி வந்தான். நரேந்திரனைப் பார்த்த காவல்காரன், இந்தச் சிறுவன் மாடிக்கு எப்படிச் சென்றான்? என்று நினைத்தான். எனவே அவன் நரேந்திரனிடம், நீ எப்படி மாடிக்குச் சென்றாய்? என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு நரேந்திரன், நான் ஒரு மந்திரவாதி! என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான். இந்த நரேந்திரன் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் ஆனார். அவர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார். எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணர முடிந்தால் – நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால் – நீயும் என்னைப்போல் ஆக முடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – விவேகானந்தர் ஒரு சாதாரணத் துறவியல்ல!

சுவாமி விவேகானந்தருக்கு அப்போது இருபத்தி எட்டு வயது. அவர், ராஜஸ்தான் அபு மலையில் பாழடைந்த ஒரு குகையில் தங்கித் தவம் செய்துகொண்டிருந்தார். அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு நாள் அவர் மாலையில் உலவச் சென்றார். அங்கு அவரை அரசாங்க வழக்கறிஞரான முஸ்லிம் ஒருவர் சந்தித்தார். அவரை விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம் பெரிதும் ஈர்த்தது. எனவே வழக்கறிஞர் தாமாகவே விவேகானந்தரிடம் சென்று பேசினார். அவ்விதம் பேசியபோது அவர், இவர் ஒரு சாதாரண துறவியல்ல; அறிவிலும் ஆன்மிகத்திலும் மிகவும் உயர்ந்தவர் என்று சில நிமிடங்களில் புரிந்துகொண்டார். அதன்பிறகு முஸ்லிம் வழக்கறிஞர், அடிக்கடி விவேகானந்தரைச் சந்தித்து உரையாடினார். ஒரு நாள் அவர் விவேகானந்தரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சுவாமிஜி, நான் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா? என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

அதற்கு விவேகானந்தர், இப்போது மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் குகைக்குக் கதவுகள் இல்லை. எனவே மழை பெய்தால் குகைக்குள் தண்ணீர் வந்து தேங்கிவிடும். நீங்கள் விரும்பினால் இந்தக் குகைக்குக் கதவுகள் செய்து கொடுங்கள் என்றார். அதைக் கேட்ட வழக்கறிஞர், சுவாமிஜி, நீங்கள் எனக்கு அத்தகைய ஒரு வாய்ப்புக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்தக் குகைக்குக் கதவுகள் போட்டாலும்கூட இந்த இடம் மிகவும் வசதியற்றது. நீங்கள் ஏன் இங்கே இருக்க வேண்டும்? ஆதலால் என்னுடைய பணிவான ஒரு வேண்டுகோளை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்: எனக்குப் பெரிய ஒரு பங்களா இருக்கிறது. அங்கே நான் ஒருவன்தான் தனியாக வாழ்ந்து வருகிறேன். உங்களுக்குச் சம்மதம் என்றால், நீங்கள் அந்த பங்களாவில் வந்து தங்கலாம் என்று கூறினார். விவேகானந்தர் வழக்கறிஞரின் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

மேலும் வழக்கறிஞர், ஆனால் சுவாமிஜி! நான் ஒரு முஸ்லிம். எனவே உங்கள் உணவிற்கு நான் தனியாக ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் தெரிவித்துக்கொண்டார். விவேகானந்தர், வழக்கறிஞர் உணவு பற்றி கூறியதைப் பொருட்படுத்தவில்லை. அவர் வழக்கறிஞருடன் அவரது பங்களாவிற்குச் சென்றார். அங்கு விவேகானந்தருக்குப் பலர் அறிமுகமானார்கள். அவர்களில் ஜக்மோகன் என்பவரும் ஒருவர். அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த கேத்ரி மன்னரின் தனிச் செயலாளராக இருந்தார். ஜக்மோகன் வந்தபோது, விவேகானந்தர் வெறும் கௌபீனம் மட்டும் அணிந்து தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நிலையில் விவேகானந்தரைப் பார்த்ததும் ஜக்மோகன், ஓ! இவர் பத்தோடு ஒன்று பதினொன்று என்ற வகையைச் சேர்ந்த ஒரு சாதாரண துறவி! போக்கிரி, திருட்டுக் கூட்டம், ஏமாற்றுக் கும்பல் போன்றவற்றைச் சேர்ந்த ஒருவர்! என்று தமக்குள் நினைத்துக்கொண்டார். விவேகானந்தர் தூக்கம் கலைந்து கண் விழித்தார். உடனே ஜக்மோகன் முதல் கேள்வியாக அவரிடம், சுவாமிஜி! நீங்கள் ஓர் இந்துத் துறவி. அப்படியிருக்கும்போது முஸ்லிம் ஒருவருடன் தங்கியிருக்கிறீர்களே! அது எப்படி? உங்கள் உணவை அவர் அடிக்கடி தொட நேரிடுமே! என்று வினவினார்.

இந்தக் கேள்வி விவேகானந்தருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் நெருப்புச்சுடர்கள் தெறித்துக்கிளம்புவதுபோல் பேசினார்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் ஒரு துறவி. உங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் நான் கடந்தவன். நான் ஒரு துப்புரவுத் தொழிலாளியுடன்கூட அமர்ந்து உணவு உட்கொள்ளலாம். அதற்காக எனக்கு இறைவனிடம் பயமில்லை; ஏனென்றால் அவர் அதை அனுமதிக்கிறார். எனக்கு சாஸ்திரங்களிடமும் பயமில்லை; ஏனென்றால் அவையும் அதை அனுமதிக்கின்றன. ஆனால் நான் உங்களுக்குத்தான் பயப்படுகிறேன், இந்தச் சமுதாயத்திற்குத்தான் பயப்படுகிறேன். உங்களுக்கு இறைவனைப் பற்றியும் தெரியாது, சாஸ்திரங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது. நான் எங்கும் இறைவனைப் பார்க்கிறேன்; மிகவும் சாதாரண ஓர் உயிரிடம்கூட இறைவனே நிறைந்திருப்பதைப் பார்க்கிறேன்.

எனக்கு உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது! இப்படி விவேகானந்தர் கூறியதைக் கேட்டு ஜக்மோகன் அதிர்ந்து போனார். அவருக்கு விவேகானந்தரிடம் பெரிய மதிப்பு ஏற்பட்டது. அவர், நமது கேத்ரி மன்னர் இந்தத் துறவியைச் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அதனால் அவர் விவேகானந்தரிடம், உங்களை எங்கள் கேத்ரி அரசர் அவசியம் பார்க்க வேண்டும். நீங்கள் எங்கள் அரண்மனைக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். விவேகானந்தர், நாளைய மறுநாள் வருகிறேன் என்று வாக்களித்தார். அதன்படி விவேகானந்தர் 1891 ஜூன் 4-ஆம் தேதி கேத்ரி மன்னரைச் சென்று சந்தித்தார். கேத்ரி மன்னர் அஜீத்சிங், விவேகானந்தரை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டார். அதனால் அவர் விவேகானந்தரின் சீடர்களில் ஒருவராகவும் ஆனார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – நரேந்திரன் கண்ட தீர்வு!

சிறுவன் நரேந்திரனிடம் “தலைமைப் பண்பு’ என்பது இயல்பாகவே அமைந்திருந்தது. அவன் தன் நண்பர்களை பொருட்காட்சி, கண்காட்சி, நினைவுச் சின்னம், பூங்கா போன்ற இடங்களுக்கு அவ்வப்போது சுற்றுலாவாக அழைத்துச் செல்வான். கொல்கத்தா, புறநகர் பகுதியில் உயிரியில் பூங்கா ஒன்று இருந்தது. ஒரு நாள் நரேந்திரன் தன் நண்பர்களை, அந்த உயிரியில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவர்களுக்கு மகிழ்ச்சியாக பொழுது போயிற்று. அங்கிருந்து அவர்கள், கங்கையில் படகில் கொல்கத்தாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். படகில் வந்துகொண்டிருந்தபோது, நரேந்திரனின் நண்பன் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிற்று. அதனால் அவன் படகிலேயே வாந்தி எடுத்தான்.

அதைப் பார்த்த படகோட்டிகள் சிறுவர்களிடம், “”நீங்களே உங்கள் கையால் படகை சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் இங்கிருந்து போக முடியாது!”” என்று கண்டிப்புடன் கூறினர். அதை மறுத்து நரேந்திரனும் அவனது நண்பர்களும், “”படகுப் பயணத்திற்கு இரண்டு மடங்குக் கட்டணம் தருகிறோம்” என்று படகோட்டிகளிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு படகோட்டிகள் ஒப்புக்கொள்ளாமல் தகராறு செய்தனர். படகு கரையை அடைந்தது. படகோட்டிகள் சிறுவர்களிடம், “”நீங்கள்தான் படகைச் சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் படகிலிருந்து இறங்க முடியாது!” என்று கடுமையாகக் கூறி பயமுறுத்தினார்கள். அப்போது யாரும் கவனிக்காத சமயத்தில், நரேந்திரன் படகிலிருந்து இறங்கிக் கரைக்குச் சென்றான். அங்கு கங்கைக் கரையில் இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நரேந்திரன் அணுகி, தனக்கும் தன் நண்பர்களுக்கும் படகோட்டிகளால் ஏற்பட்டிருக்கும் சங்கடத்தைத் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டான்.

மேலும் அவன் ஆங்கிலேய சிப்பாய்களின் கைகளை மெல்லப் பற்றி, அவர்களைப் படகு இருந்த இடத்திற்கே அழைத்தும் வந்துவிட்டான். ஆங்கிலேய சிப்பாய்கள் படகோட்டிகளிடம், சிறுவர்களைப் படகிலிருந்து இறங்கவிடுங்கள்!” என்று கடிந்து கூறினர். இப்படி ஆங்கிலேய சிப்பாய்கள் கூறியதும், மறு பேச்சில்லாமல் படகோட்டிகள் சிறுவர்கள் படகிலிருந்து இறங்கிச் செல்ல அனுமதித்தனர். நரேந்திரனின் துணிவு ஆங்கிலேய சிப்பாய்களை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நரேந்திரனை ஏதோ ஒரு பொழுபோக்கு நிகழ்ச்சிக்குத் தங்களுடன் வருமாறு அழைத்தனர். அதற்கு நரேந்திரன் ஒப்புக்கொள்ளாமல், “”மிகவும் நன்றி, நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றான். இந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவராகி, “சுவாமி விவேகானந்தர்’ என்ற உலக புகழ்பெற்ற துறவியாக விளங்கினார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சூழ்நிலையால் தடுமாறாதே!

சிறுவன் நரேந்திரன் கொல்கத்தாவைச் சேர்ந்தவன். அப்போது அவனுக்கு பத்து வயது நடந்துகொண்டிருந்தது. அவன் தன் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு நாடக்குழுவை அமைத்தான். அதில் அவனும் அவனது நண்பர்களும் பல நாடகங்கள் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு நரேந்திரன், தன் வீட்டு முற்றத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓர் உடற்பயிற்சி குழுவை அமைத்தான். பின்னர் நரேந்திரனும் அவனது நண்பர்களும், முறைப்படி உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். எனவே அவர்கள், நவகோபால் மித்ரா என்பவர் நடத்தி வந்த உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். அங்கு நரேந்திரன் கபடி, சிலம்பம், மல்யுத்தம், நீச்சல் பயிற்சி, படகு செலுத்துதல், கத்திச்சண்டை, கிரிக்கெட், லத்திச்சண்டை ஆகியவற்றைப் பெரிதும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். அவனுடைய ஆர்வத்தை நவகோபால் மித்ரா கவனித்தார். எனவே அவர், தன்னுடைய உடற்பயிற்சி நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை நரேந்திரனிடமே ஒப்படைத்தார்.

ட்ரபீஸ் (tணூச்ணீஞுத்ஞு) என்பது ஒரு வகையான உடற்பயிற்சியாகும். கூரையில் இரண்டு கயிறுகளுக்கு இடையில் கனமான மரக்கட்டையைத் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வதுதான் ட்ரபீஸ் உடற்பயிற்சியாகும். ஒரு நாள் நரேந்திரனும் அவனது நண்பர்களும் சேர்ந்து, ட்ரபீஸ் மரக்கட்டையைக் கூரையில் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அதைப் பார்ப்பதற்கு அங்கு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அந்தக் கூட்டத்தில் ஆங்கிலேய மாலுமி ஒருவரும் இருந்தார். அவரை நரேந்திரன் உதவிக்கு அழைத்தான்.
ஆங்கிலேய மாலுமியும் நரேந்திரனும் அவனது நண்பர்களும் ஒன்றுசேர்ந்து, கனமான மரக்கட்டையைக் கூரையில் பொறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். ஒரு தருணத்தில் மரக்கட்டை நழுவி, நேராக மாலுமியின் தலையில் விழுந்தது. மாலுமி சுயநினைவு இழந்து விழுந்துவிட்டார். அவர் தலையில் பலமாக அடிபட்டு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து, மாலுமி இறந்துவிட்டார்! என்று நினைத்து, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் வேகமாகக் கலைந்து போயிற்று.

நரேந்திரனும் அவனுடைய ஒன்றிரண்டு நண்பர்களையும் தவிர, மற்ற நண்பர்கள் அங்கிருந்து நழுவிவிட்டார்கள். இந்தக் குழப்ப நிலையில் நரேந்திரனின் மனம் ஒரு சிறிதும் தடுமாறவில்லை. அவன் தன் வேட்டியைக் கிழித்து, ஆங்கிலேய மாலுமியின் தலையில் அடிபட்ட இடத்தில் கட்டினான்; மாலுமியின் முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, மெல்ல விசிறி தேவையான முதலுதவி சிகிச்சை செய்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு மாலுமிக்கு சுயநினைவு திரும்பியது. உடனே நரேந்திரனும் அவனது நண்பர்களும், கைத்தாங்கலாக மாலுமியை அருகில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தார்கள். அங்கு நரேந்திரன் டாக்டர் ஒருவரை அழைத்து வந்து, மாலுமிக்கு உரிய சிகிச்சை அளித்தான்.
மாலுமிக்கு அங்கு ஒரு வாரம் சிகிச்சை நடந்தது. மாலுமி உடல் நலம் தேறியதும், நரேந்திரனுக்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் புறப்பட்டபோது நரேந்திரன், தன் நண்பர்களிடம் திரட்டிய பணத்துடன் தன் பங்கையும் சேர்த்து மாலுமிக்குச் சிறிது பணம் தந்தான். இந்த நரேந்திரன் வளர்ந்து பெரியவனாகி, சுவாமி விவேகானந்தர் என்ற புகழ் பெற்ற துறவியானார். அவர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து நீ தப்பியோட முயற்சி செய்யாதே. இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். – சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவும் வீரமும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – குறள் -423

இதற்கு, எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும், கூறியவர் யார் என்று பாராமல் அந்தச் செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்பது பொருள். திருவள்ளுவரின் இந்தக் கருத்துக்கு, எடுத்துக்காட்டாக நரேந்திரன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது: சிறுவன் நரேந்திரன் சுறுசுறுப்பானவன், எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவன். ஓடி விளையாடு பாப்பா! என்று பாரதியார் கூறியதுபோல், விளையாட்டுகளில் நரேந்திரனுக்கு ஆர்வம் அதிகம். நரேந்திரனின் நண்பர்களில் ஒருவனுடைய வீட்டில் ஒரு செண்பகமரம் இருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அங்கு சென்று, செண்பகமரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டிருப்பான்; அப்படியே குட்டிக்கரணம் போட்டுத் தரையில் குதிப்பான். இந்த விளையாட்டு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அடிக்கடி இப்படி செண்பகமரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருப்பதை, அந்த வீட்டிலிருந்த தாத்தா ஒருவர் பார்த்தார்.

அவர், இந்தச் சிறுவர்கள் மரத்தில் இப்படி தலைகீழாகத் தொங்கி விளையாடப்போய், கைகால்களை உடைத்துக்கொண்டால் என்ன செய்வது? நரேந்திரன் விளையாடினால், மற்ற சிறுவர்களும் அவனுடன் சேர்ந்து விளையாடத்தான் செய்வார்கள். எனவே நரேந்திரன் இங்கு விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே அவர், செண்பகமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த நரேந்திரனை அருகில் அழைத்தார். நரேந்திரன் அவர் முன்பு சென்று நின்றான். தாத்தா, நரேந்திரா! நீ இப்படி உன் நண்பர்களுடன் இந்த மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்கி விளையாடாதே! என்றார். ஏன் விளையாடக் கூடாது? என்று கேட்டான் நரேந்திரன். இவனுக்கு என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி இப்போது இவனைப் பயமுறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தார் தாத்தா. எனவே அவர், இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது! அந்த பூதம் இரவில் வெள்ளையுடை உடுத்திக்கொண்டுச் செல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கும். அந்த பூதம் மரத்தில் ஏறுபவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும்! என்று கூறினார்.

தாத்தா கூறியதைப் பணிவுடன் அமைதியாக இருந்து, நரேந்திரன் கேட்டுக்கொண்டான். தாத்தா, ஒருவிதமாக நரேந்திரனை ஏமாற்றிவிட்டோம்! என்று மனதிற்குள் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார். தாத்தா அந்த இடத்தைவிட்டு சென்றாரோ இல்லையோ, உடனே நரேந்திரன் மீண்டும் கிடுகிடுவென்று மரத்தில் ஏறி, முன்புபோல் தலைகீழாகத் தொங்கி விளையாட ஆரம்பித்தான். நரேந்திரனின் இந்தச் செயலை, தாத்தா அது வரையில் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் பார்த்தான். அவன் பதற்றத்துடன், நரேந்திரா! தாத்தா இப்போதுதானே இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது என்று சொன்னார்! அது உன் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடப் போகிறது! சீக்கிரம் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துவிடு! என்று கூவினான். பயந்து போயிருந்த நண்பனைப் பார்த்து கண் சிமிட்டி கலகலவென்று சிரித்துக்கொண்டே நரேந்திரன், நீ ஒரு முட்டாள்! யாரோ கதை கட்டினால் அதை நாம் நம்பி விடுவதா? தாத்தா நாம் மரத்தில் ஏறக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறார்! நாம் முன்பு எத்தனை முறை இந்த மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி விளையாடியிருக்கிறோம்? தாத்தா சொன்னது உண்மையாக இருந்தால், அந்த பூதம் எப்போதோ என் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்குமே! என்று கூறினான்.

நரேந்திரனிடம் துணிச்சலும் இருந்தது, வீரமும் இருந்தது. ஆனால் அவனுடைய துணிச்சலும் வீரமும் எப்போதும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. இந்த நரேந்திரன்தான் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று புகழ் பெற்றார். அப்போது அவர் கூறியவை இவை: நாம் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதன் உள்நோக்கத்தையும் அடிப்படைத் தன்மையையும் கண்டறிய வேண்டும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் – முதலில் நீ உன்னிடத்தில் நம்பிக்கை வை. நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக நம்புபவனை மன்னிப்பதைவிட, தன்னுடைய பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தி நம்பாமல் இருக்கும் ஒருவனை இறைவன் மன்னித்துவிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் 1893-ஆம் ஆண்டு சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரவை நிகழ்ச்சிகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவை நிகழ்ச்சிகளில், சுவாமி விவேகானந்தர் இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு சுமார் நாலரை ஆண்டுகள், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திருத்தலப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்விதம் அவர் பயணம் செய்தபோது, ஒருமுறை அவருடன் சுவாமி அகண்டானந்தரும் இருந்தார். சுவாமி அகண்டானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் ஒருவர்.

இருவரும் இமயமலையில் இருக்கும் அல்மோரா என்ற இடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். இருவரும் உணவு சாப்பிட்டு பல மணி நேரங்கள் ஆகியிருந்தது. அல்மோராவை அடைவதற்கு முன்பு, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முஸ்லிம்களின் இடுகாடு இருந்தது. அந்த இடத்தை அடைந்தபோது, பசி தாகம் காரணமாக விவேகானந்தருக்கு மிகுந்த களைப்பும் சோர்வும் ஏற்பட்டது. அதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. மயங்கிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டார். எனவே அவரை அங்கேயே படுக்க வைத்துவிட்டு, பக்கத்தில் எங்காவது உணவோ, தண்ணீரோ கிடைக்குமா? என்று பார்ப்பதற்கு அகண்டானந்தர் சென்றார். அந்த இடுகாட்டில் ஜுல்பிகர் அலி என்ற முஸ்லிம் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் இடுகாட்டிற்கு அருகில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரிடம் அன்றைய தினம் உணவு என்று சொல்வதற்கு, ஒரே ஒரு வெள்ளரிக்காய் மட்டும்தான் இருந்தது. விவேகானந்தரின் மோசமான உடல் நிலை ஜுல்பிகர் அலிக்குப் புரிந்தது. எனவே அவர் ஓடிச் சென்று, தம்மிடமிருந்த வெள்ளரிக்காயை விவேகானந்தருக்குக் கொடுத்தார். மிகவும் பலவீனமாக இருந்த விவேகானந்தர், அதைத் தமது வாயில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜுல்பிகர் அலி, சுவாமிஜி, நான் ஒரு முஸ்லிம் ஆயிற்றே! என்றார். அதனால் என்ன! நாம் அனைவரும் சகோதரர்களே அல்லவா? என்று புன்முறுவலுடன் கேட்டார் விவேகானந்தர். முஸ்லிம் வெள்ளரிக்காயை விவேகானந்தர் வாயில் வைத்து சாப்பிடும்படி செய்தார். அதனால் விவேகானந்தரின் களைப்பு ஒரு சிறிது நீங்கியது. இதைப் பற்றி பிற்காலத்தில் விவேகானந்தர், அந்த முஸ்லிம் உண்மையிலேயே அப்போது என் உயிரைக் காப்பாற்றினார். அதுபோல் என் வாழ்நாளில் எப்போதும் நான் களைப்படைந்ததில்லை என்று கூறினார். பின்னர் விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிகக் கருத்துகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்து புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை அல்மோராவிற்குச் சென்றார். அப்போது அல்மோராவில் விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மிகவும் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, ஜுல்பிகர் அலி ஓர் ஓரமாக நின்று விவேகானந்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவேகானந்தரை இன்னார் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால் விவேகானந்தர், ஜுல்பிகர் அலியைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டார். உடனே அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தையும் பரபரப்பையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக ஜுல்பிகர் அலியிடம் சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். மேலும் விவேகானந்தர் அருகில் இருந்தவர்களிடம் ஜுல்பிகர் அலியைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ஜுல்பிகருக்கு விவேகானந்தர் பணமும் கொடுத்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்!

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.

அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது: மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூவினர். பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மூன்று வரங்கள்!

ஏழை ஒருவன் ஒரு தேவதைக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்து கொண்டான். அந்தத் தேவதை அவன் முன்னர்த் தோன்றி, மூன்று சொக்கட்டான் காய்களைக் கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காகக் காயை உருட்டும்படிச் சொன்னாள். அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊரார் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். முதலில் அழகான மூக்கு வேண்டும் என்று காயை உருட்டுவோம் என்றான். ஆனால் பணத்தை விரும்பிய மனைவியோ காயை உருட்ட விடாமல் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். கணவனோ திமிறிக் கையை விடுவித்துக் கொண்டு எங்கள் இருவருக்கும் அழகான மூக்குகள் அமையட்டும்’ மூக்குகளைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று காயை உருட்டி விட்டான்.

உடனே அவர்கள் இருவர் உடம்பிலும், அழகிய ஆனால் பல மூக்குகள் தோன்றி விட்டன. பல மூக்குகள் இருப்பது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் மூக்குகளே வேண்டாம் என்று காயை உருட்ட அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள். அதன்படி உருட்டியப் போது மூக்குகளே இல்லாமல் போய்விட்டன. இப்படி இரண்டு வரங்கள் வீணாகிவிட்டன. என்ன செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்பதற்கு இனி ஒரே ஒரு வரம் தான் மீதி இருந்தது. மூக்குகள் இல்லாத காரணத்தால் அதிக விகாரமாக இருந்தது. இந்த நிலையில் வெளியில் போக அவர்கள் மிகவும் நாணினார்கள். அழகிய மூக்குடன் எப்படி வந்தது என்று ஊரார் கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்வது என்று அஞசினார்கள். தங்கள் மடமையை நினைத்து வருத்தப் பட்டார்கள். அதனால் அழகற்ற பழைய மூக்கு தங்களுக்கு வந்தால் போதும் என்று காயை உருட்டினார்கள். ஆசைப்படாதே ஆசைப்படுவது உனக்கு கிட்டும். அதோடு கூட, பந்தமும் வரும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிச்சைக்கார அரசன்

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?

சுவாமி விவேகானந்தர் கதைகள் – கங்கை ஜாடி

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர்.

சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் சசி மகராஜ் ஒரு படகை அமர்த்திக் கொண்டு கப்பலுக்கு அருகில் சென்றார். சுவாமிஜிக்காகத் தான் அன்புடன் கொண்டு சென்றிருந்த இனிப்புக்களையும் உணவு வகைகளையும் ஒரு கூடையில் வைத்தார். கூடை மேலே ஏற்றப்பட்டது. அதே கூடையில் கங்கை நீர் நிறைந்த பீங்கான் ஜாடி கீழே இறக்கப்பட்டது. அந்த ஜாடியை சுவாமிஜி ஒரு கயிற்றினால் அழுத்தமாகக் கட்டியிருந்தார்; அதை சசி மகராஜால் அவிழ்க்க முடியவில்லை. ஆகவே, சுவாமிஜி அதை அறுப்பதற்காக ஒரு கத்தியையும் கீழே போட்டார்.

திரும்புவதற்கு முன்னால் சசி மகராஜ் படகுக்காரனிடம் கப்பலை மூன்று முறை வலம் வருமாறு பணித்தார். இரண்டு பெரிய மகான்களின் பாதங்களை இன்று நம்மால் பணிய முடியவில்லை கப்பலை வலம் வந்தாவது நாம் திருப்தி அடைவோம் என்றார். சுவாமிஜி கொண்டுவந்தது என்பதற்காக அந்த ஜாடியையும் அவரது திருக்கரங்கள் பட்டது என்பதற்காக அந்தக் கத்தியையும் சசி மகராஜ் பூஜையறையில் வைத்து வழிபடத் தொடங்கினார். அவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். “சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

Tamil Language Resources

There are a number of resources available for learning Tamil. Sometimes it can be hard to navigate or find things at the correct level. This is my current list of resources, which I update regularly.

I have them sorted first by what is available free online and which are hard copy books. Within those categories, I have tried to sort resources by type, author, etc.

[toggle] [item title=”Word editor/Transliteration Software“]
  • Azhagi is both a word processing software as well as a transliterating software. I love this program. You can type in Tamil and it has a large number of other languages in “beta.” You can save your work as an rtf or convert to unicode and post online. Having the program open and hitting F10 allows you to type in any application in Tamil. Very useful for google searches, email, chat etc.
  • NHM This one installs in the bottom tray in windows, you click a bell icon to toggle between Tamil and English. Sometimes I can’t convince this one to give me the right “n.”
  • Google now has download-able software as well as what is built into your blogger and gmail accounts. Since the top two work fine for me, I have not tried this yet.
[/item] [item title=”Online lessons courtesy of the S. Asia Inst and Univ of Pennsylvania“]
  • The Tamil Language in Context — This page has great videos with transcripts to follow! Huge asset! They also have a page with the alphabet in a chart format. Print it, paste a copy into the cover of your notebook and refer back to it often. Recommended for Beginners!
  • TamilWeb  — I think this was the original page before the video one was produced, still lots of audio recordings of words to help you out.   
[/item] [item title=”Tamil Virtual University“]

Originally I found the page hard to navigate, I am starting to use it more now. Tamil VU has a number of videos, click through lessons and workbooks. Here are some direct links to some of their free resources.

[/item][item title=”Tamil textbooks available online“] [/item][item title=”Online Dictionaries“] [/item][item title=”Social Networking Sites for Language Learning“]

It is important to me to have many contacts for language learning, because when you are dealing with native speakers, they don’t always know the grammar rules, they just know the language. Asking lots of people the same question can give you some great insight into language variations that you don’t get from a text book.

  • Livemocha — free to join, free to contact members, no Tamil course available, but you can create your own flashcards and chat with members.
  • Lingo Friends — free to join, free to contact members, people don’t seem very active on the site
  • My Language Exchange — free to join and post a profile, but costs $6 a month to contact other members. If you are lucky, you can post for free and hope someone contacts you.
  • italki has a Tamil section as well.
[/item][item title=”Google Books“]

Learn Tamil in 30 Days

A Reference Grammar of Spoken Tamil— this book is written by one of the professors at U. of Penn.


G.U. Pope has a number of out of print Tamil language books on Google Books. The problem is that language is fluid, and books from the 1800’s don’t necessarily give a good idea of modern language…

Tamil Self Taught, reprinted by Amazon , free from google This seems to be a good book for vocabulary lists. It also uses some archaic language which modern native speakers would not understand.

[/item][item title=”Authentic Materials/Resources:“]

These are resources for more Intermediate and Advanced students who are able to read Tamil materials intended for Tamil readers (as opposed to intended for learners)

[/item] [item title=”Hard Copy Books“]
  • Colloquial Tamil: The Complete Course for Beginners (Colloquial Series) Asher’s Colloquial Tamil focuses on the spoken language and often leaves me wondering which Tamil characters would be used to represent what is written on the page. The CDs that go along with the book are helpful in learning pronunciation, but they go very fast. It is hard for me as a beginner to really catch what is going on. I don’t process spoken language that quickly!
  • Tamil for Beginners by Hart: This textbook is used by the author in her Tamil courses at UC Berkeley. The grammar book is very straightforward in explaining rules.
  • Tamil: A Foundation Course by Balasubramaniam (out of print) This is the best I have seen for teaching the written language. It introduces a few letters at a time with words that use those letters. These units are then followed by a grammar section.
  • An Intensive Course in Tamil Rajaram assumes you can read Devanagari before learning Tamil and uses that to teach you pronunciation. Once you already know how to read the orthography, you read having new grammar rules introduced with each chapter’s conversation. Printed in India, sometimes imported to the US.
  • The Lifco Tamil-Tamil-English Dictionary (English and Tamil Edition) — Somewhat hard to find since it is published in India, but if you live in India or the US, you can order books directly from the publisher. Tamil-Tamil-English means you have the words only listed in Tamil, with Tamil definitions, followed by English definitions.
[/item][/toggle]
சிறுவர் கதைகள் – மலைப்பாம்பும் மான் குட்டியும்

குறட்டி என்ற பெயர் கேட்டால் மஞ்சளாறு காட்டில் சிறுத்தைகளும், புலிகளும் கூட பயப்படும்.

இருபது அடிக்கும் நீளமாக மரங்களின் கிளைகளில் படர்ந்து இருக்கும் தனது அழகிய உடம்பும், கரும்புள்ளிகளும் அதற்கு பெருமையாக இருந்தது.

கரும்பழுப்பு, பழுப்பு என்று பல நிறங்களில் மலைப்பாம்புகள் இருக்குமே தவிர இப்படி லட்சணமான கரும்புள்ளிகளுடன் பார்ப்பது ரொம்பவும் அரிது.

மலைப்பாம்புகள் பொதுவாக பறவைகள், முயல் போன்ற சிறிய பிராணிகளைப் பிடித்து உண்ணும். சில சமயம் மான் போன்ற சற்றுப் பெரிய விலங்குகளைக் கூடத் தாக்கும்.

ஆனால் குறட்டி சற்று வித்தியாசமானது. காட்டெருமைக்கன்று, சிறுத்தை போன்றவற்றைக் கூட தனது குறட்டிப்பிடியில நொறுக்கி எடுத்துவிடும். அதனால் அதற்கு குறட்டி என்று பெயர் வழங்கி வந்தது.

குறட்டி தனது தலையை ஒரு கிளையின் மீது வைத்தபடி ஆற்றங்கரையையே பார்த்துக் கொண்டு இருந்தது.

மிரண்டு மிரண்டு ஆற்றங்கரையில் வரும் மிளா மான் குட்டி அதன் கண்ணில் பட்டது.

நீண்டு கிடந்த தனது உடலை வேகமாக தன்னை நோக்கி இழுத்தது.

அநேகமாக அந்த மான்குட்டி மிகவும் குறுகலாக ஓடும், அந்த ஆற்றைக் கடந்து வரலாம். அப்படிக் கடந்து வந்தால் குறட்டி இருக்கும் வழியாகத்தான் வரவேண்டும்.

அந்த மிளா மான் ஆற்றில் இறங்கியது. குறட்டியில் வாயில் நீர் சுரந்தது.

மீதமுள்ள குறட்டி தனது உடலை கிளையில் சுற்றி தனது தலையை மட்டும் தொங்க வைத்தபடி அசையாமல் இருந்தது. பார்வை மட்டும் ஆற்றில் இறங்கிய மான் மீது இருந்தது.

ஆற்றில் மான் நீந்தியது. இதே மரத்திலிருந்துதான் குறட்டி ஒரு நாள் ஒரு சிறுத்தையை மடக்கிப் பிடித்தது. ரப்பர் போன்ற தனது உடம்பை கயிறு போல் பாவித்து இறுக்கிய வேகத்தில் சிறுத்தையின் எலும்புகள் மடமடவென்று முறிந்தன.

மான் கரையேறி விட்டது. குறட்டி அசையாமல் இருந்தது. அந்த மரத்திற்கு அருகாமையில வந்த பாதையில் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தது அந்த மான்.

சொல்லி வைத்ததுபோல் அந்த மரத்தடியில் வந்து நின்றது. குறட்டி மான்குட்டியில் கழுத்தில் மாலையாய் விழுந்தது.

“அம்மா” என்று கதறியது மான்குட்டி. எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்து போனது. அப்படி இப்படி கூட அசையாமல் நின்றது.

குறட்டிக்குக் கூட ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. குறட்டி அதன் முகத்தைப் பார்த்தது பாவமாக இருந்தது. அதற்குள் குறட்டி ரப்பர் போன்ற நீண்ட தனது உடலால் மானைச் சுற்றிது.

மான் தேம்பி அழுதது. அதன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

குறட்டி இப்படி திடீர் தாக்குதல் நடத்தும் போது எந்த ஒரு மிருகமும் இதனிடம் தப்பிக்க போராட்டம் நடத்துமே தவிர இப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்யாது.

“ஆமாம்…. ஏன் அழுகிறாய்” என்றது குறட்டி.

மான் தனது அழுகையை நிறுத்திவிட்டு உறுதியான குரலில் சொன்னது.

“இப்போது சாவு என்பது நிச்சயமாகி விட்டது. சாகும் முன்னர் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பெருமையாவது என்னைச் சேரும். நீங்கள் மனது வைத்தால் எனக்கு உதவலாம்” என்றது.

“நான் எப்படி உதவ முடியும்?” என்றது.

“மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்று நாவல் பழங்களை எடுத்து என் அம்மாவிற்கு கொடுத்துவிட்டு மீண்டும் இங்கு வந்து சேருகிறேன். பின்னர் உன் இஷ்டப்படி என்னைக் கொன்று சாப்பிடு” என்றது மான்.

“நீ மீண்டும் என்னிடம் திரும்பி வருவாய் என்பதற்கு என்ன உத்திரவாதம்?”

“நான் சொல்வதில் உனக்கு நம்பிக்கை இல்லை என்றால் நீ என் கூடவே வா.. நாவல் பழங்களை என் தாயிடம் சேர்த்ததும் நீ என்னைக் கொன்று சாப்பிடு”

“உன்னை விட்டால் என்னால் பிடிக்கமுடியாது? உன் வேகம் என்ன, என் வேகம் என்ன?” என்றது குறட்டி.

“என் மீது நம்பிக்கை இல்லை என்றால் நீ என்ன சொல்கிறாயே அதற்கு நான் கட்டுப்படுகிறேன்”

“நான் உன் உடலை சுற்றியபடியே இருப்பேன். என்னை சுமந்த படியே செல்ல வேண்டும்” என்று சொன்னது குறட்டி. அது அதற்கு ஒத்துக் கொண்டது. குறட்டியை சுமந்தபடியே சென்றது மான்.

மொட்டச்சி அம்மன் பாறைக்குச் சென்றது. நாவல் பழங்களை சேகரித்துக் கொண்டது.

மலைப்பாம்பு தன் உடலைச் சுற்றியிருக்க உற்சாகத்துடன் நடந்தது.

தனது அம்மாவுக்காக தன்னுடைய உயிரைக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது அதற்கு சந்தோஷமாக இருந்தது.

மான் தன் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்தது. தன் இருப்பிடத்தையும் படுத்துக்கிடக்கும் அம்மாவையும் காட்டியது. குறட்டி அதன் உடம்பிலிருந்து மெல்ல இறங்கியது.

“நாவல் பழங்களைக் கொடுத்துவிட்டு தப்பிக்கலாம் என்று நினைத்தால்…. அப்புறம் நோய் வாய்ப்பட்டிருக்கும் உனது அம்மா எனக்கு உணவாக நேரிடும்” என்றது குறட்டி.

“நீ செய்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன். என் வார்த்தையை மீறமாட்டேன்” என்று சொல்லிவிட்டு துள்ளி ஓடியது மான் குட்டி.

குறட்டி மெல்ல ஊர்ந்து மரங்களின் ஊடே மறைந்து கொண்டது.

அங்கு அதற்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு பதினைந்து இருபது மான்கள் உடல் நலம் விசாரித்தபடி இருந்தன.

அதில் இரண்டு மூன்று மான்கள் ஒன்று சேர்ந்தால் கூட அவற்றின் கொம்புகளால் தனது தலையைக் குத்திக் கிழித்து விட முடியும்.

இப்படித்தான் சென்ற வாரம் ஒரு மலைப்பாம்பை இரண்டு பெரிய மிளா மான்கள் கொம்பினால் நசுக்கி எடுத்துவிட்டன. அந்த மாலைப் பாம்பு அங்கேயே உயிரை விட்டது.

பயம் என்றால் என்னவென்று தெரியாத குறட்டிக்குக் கூட கொஞ்சம் நடுக்கமாக இருந்தது.

“கையில் கிடைத்ததை விட்டு விட்டோமோ?” என்று கூட ஆதங்கமாக இருந்தது.

எதற்கும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. குறட்டி பெரிய தனது உடலை வளைத்து நெளிந்தபடி மறைவிடம் நோக்கி நகர ஏதோ அரவம் கேட்டது.

அதே மான்குட்டி தனியாக வந்தது.

“என் கடமை முடிந்தது… எனது வார்த்தையை நான் காப்பாற்றி விட்டேன்…..உனக்கு எனது நன்றி” என்று சொன்னவாறு குறட்டியின் முன்னால் வந்து நின்றது மான்குட்டி.

குறட்டியின் முரட்டுத் தோலையும் மீறி அதன் உடல் புல்லரித்தது.
“என்னைப் பற்றியா சொன்னாய்” என்றது குறட்டி

“இல்லை எனக்கு உதவி செய்த உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன்.”

“உன்னை கொன்று தின்னப் போகும் நான் எப்படி உனக்கு உதவியவன் ஆவேன்?”

“நீ சொன்னது சரிதான்.. ஆனால் நீ உதவாவிட்டால் என் அம்மாவைக் காப்பாற்ற முடியாது போயிருக்கும். பெற்றோருக்காக தனது உயிரைத் தருவதைவிட பெருமை தரக்கூடிய விஷயம் உலகத்தில் வேறு என்ன இருக்க முடியும்?”

குறட்டி தனது தலையை மெல்ல உயர்த்தி மான்குட்டியின் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தது.

“தாய்க்காக தனது உயிரை தரத்துணிந்த உன்னை வணங்கினாலே ….எனக்குப் பெருமை” என்று சொல்லியபடி குறட்டி அதனை உயிரோடு விட்டுச் சென்றது.

மான்குட்டி குறட்டியை ஆச்சரியமாகப் பார்த்துது.

மரக்கிளைகளில் தவழ அதன் உடம்பின் கரும்புள்ளிகள் வைரமாக மின்னின.

அரசர் கதைகள் – மானமே பெரிது

சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப் பூம்பட்டினம்.

அரசவை கூடியுள்ளது. அரியணையில் அரசர் பெருவளத்தான் பெருமிதத்துடன் அமர்ந்து உள்ளார். அமைச்சர்களும் படைத் தலைவனும் அவையினரும் இருக்கைகளில் அமர்ந்து உள்ளனர்.

“அமைச்சரே! சேர நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தோம். முறைப்படி நம் தூதரை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். எங்கு எப்பொழுது இரு நாட்டுப் படைகளும் போரிடுவது? இது குறித்து சேர நாட்டு அரசரே முடிவு செய்ய வேண்டும் என்றோம். இதுவரை அந்த அரசரிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை.”

“வெற்றி வேந்தே! சேர அரசரும் போருக்கு அஞ்சுபவர் அல்லர். எங்கு போர் செய்வது? ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பதில் தாமதம் என்று நினைக்கிறேன். விரைவில் செய்தி வரும்” என்றார் அமைச்சர்.

அப்பொழுது வீரன் ஒருவன் அரசவைக்குள் வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.

“காவிரி நாட வாழி! வெற்றி வேந்தே வாழி! நீதிநெறி தவறாத வேந்தே வாழி” என்று வணங்கினான்.

“வீரனே! என்ன செய்தி?”

“அரசே! சேர நாட்டுத் தூதர் வந்திருக்கிறார். உங்கள் அனுமதிக்காக வாயிலில் காத்திருக்கிறார்.”

“தூதனை உடனே இங்கு அழைத்து வா.”

“கட்டளை அரசே” என்று வணங்கிவிட்டு வீரன் சென்றான்.

தூதன் உள்ளே நுழைந்தான். அரசரைப் பணிவா வணங்கினான்.

“அரசே! வாழி! எங்கள் பேரரசர் சேரமான் நெடுஞ்சேரலாதன் செய்தி அனுப்பி உள்ளார்.”

“தூதனே! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல். எங்களுக்குத் திறை செலுத்த உங்கள் அரசர் ஒப்புக் கொண்டாரா? அல்லது சோழர் பெரும்படையைச் சந்திக்க உள்ளாரா? எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்?”

“அரசே! எங்கள் அரசர் பெருமான் வீரர்களுக்கு எல்லாம் வீரர். பகை அரசர்கள் நடுங்கும் பேராற்றல் வாய்ந்தவர். எம் நாட்டு மக்களும் வீர மறவர்கள். போர் வேண்டி எங்கள் நாட்டிற்கு ஓலை வந்தது இல்லை.

உங்கள் ஓலையைக் கண்டு எங்கள் அரசர் மகிழ்ச்சி அடைந்தார். வீரர்களோ நல்விருந்து கிடைத்தது என்று ஆரவாரம் செய்தார்கள்.

போர் என்று முடிவு செய்து விட்டார் எங்கள் அரசர். போரிடுவதற்கு ஏற்ற இடத்தையும் தெரிவு செய்து விட்டார்.

வெண்ணிப் பறந்தலை என்ற இடம் தான் அது. வரும் முழுமதி நாளன்று இரு படைகளும் அங்கே சந்திக்கலாம். இதுதான் எங்கள் அரசர் அனுப்பிய செய்தி” என்றான் தூதன்.

சோழ அரசரை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.

“அமைச்சரே! கடல் போன்ற பெரும்படை நம்மிடம் உள்ளது. போர்ப் பயிற்சி மிக்க எண்ணற்ற வீரர்கள் உள்ளனர். நம்மை வெல்லும் ஆற்றல் யாருக்கு உள்ளது? நம் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசனாக சேரன் இருந்து இருக்கலாம். வீணாக நம்முடன் போரிட்டு அழியப் போகிறான்.”

“அரசே! சேர அரசரின் தன்மானம் நமக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது. வரும் முழுமதி நாள் நம் நாட்டிற்கு வெற்றி நாள். உங்கள் வீரச் சிறப்பை உலகமே அறியும் நன்னாள்” என்றார் அமைச்சர்.

“நன்று சொன்னீர்! அமைச்சரே! படைத்தலைவரே! நம் பெரும்படை நாளையே வெண்ணிப் பறந்தலை நோக்கிப் புறப்படட்டும். சேரர் படையின் வருகைக்காக நாம் அங்கே காத்திருப்போம்.

வீரம் பேசிய அந்தச் சேரனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறேன். என் வேலுக்கு அவன் பதில் சொல்லட்டும்.”

“கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன்” என்றார் படைத்தலைவர். அரசரை வணங்கி விட்டுச் சென்றார்.

சோழர் படை வெண்ணிப் பறந்தலையை அடைந்தது.

“படைத் தலைவரே! இந்த இடம் தான் வெண்ணிப் பறந்தலையா? கண்ணுக்கு எட்டிய தொலைவு மணற் பரப்பு தான் உள்ளது. செடிகளோ கொடிகளோ மரங்களோ எதுவும் இல்லை.

நல்ல இடத்தைத்தான் சேர அரசர் தேர்ந்து எடுத்து உள்ளார்” என்றார் சோழ அரசர்.

“ஆம் அரசே” என்றார் படைத்தலைவர்.

முழுமதி நாள் வந்தது.

காலை நேரம். இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன.

சோழர் பெரும்படை முன் சேரர் படை சிறுத்துக் காட்சி அளித்தது.

கரிகாற் பெருவளத்தான் சோழர் படைக்குத் தலைமை தாங்கித் தேரில் அமர்ந்தார்.

அதே போலச் சேரமான் நெடுஞ்சேரலாதனும் தன் தேரில் அமர்ந்தார்.

இரு நாட்டு முரசங்களும் ஒரே நேரத்தில் முழங்கின. போர் தொடங்கியது.

வீரர்கள் வீர முழக்கம் செய்தனர். ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போரிட்டனர்.

யானைகளின் பிளிறல் ஒரு பக்கம் கேட்டது. குதிரைகளின் கனைப்பொலி இன்னொரு பக்கம் கேட்டது. வாளோடு வாள் மோதும் ஓசை பல இடங்களில் கேட்டது.

எங்கும் ஆரவாரம் இருந்தது.

கரிகாற் பெருவளத்தானும் நெடுஞ்சேரலாதனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். சினத்தால் இருவர் கண்களும் தீ உமிழ்ந்தன.

இருவரும் போர் செய்யத் தொடங்கினர்.

வெற்றி தோல்வி அறியவே முடியவில்லை. இருவரும் இணையாகப் போர் செய்து கொண்டிருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.

சோழ அரசர் தன் வேலைச் சேர அரசரின் மார்பில் பாய்ச்சினார். சேர அரசரின் மார்பை ஊடுருவிப் பாய்ந்தது அந்த வேல். அப்படியே மண்ணில் சாய்ந்தார் சேர அரசர். அவர் உடலிலிருந்து வழிந்த குருதி நிலத்தைச் செம்மை ஆக்கியது.

“ஆ! நம் அரசர் வீழ்ந்து விட்டார்” என்ற சேர வீரர்களின் அவலக் குரல் எங்கும் கேட்டது.

“நாம் வெற்றி அடைந்து விட்டோம். நம் வீரத்திற்குப் பெருமை சேர்ந்து விட்டது. வீரத்துடன் போரிட்டான் சேர அரசன். என்ன பயன். என்னிடம் தோற்று வீழ்ந்தான்.

வெற்றி அடைந்த நம் படை போரிடுவதை நிறுத்தட்டும். ஆரவாரத்துடன் நாடு திரும்பட்டும்” என்று கட்டளை இட்டார் சோழ அரசர்.

வேல் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைப் பாசறைக்குக் கொண்டு சென்றனர்.

அரசரைச் சோதித்த மருத்துவர் “அரசரின் மார்பில் பாய்ந்த வேல் முதுகைத் துளைத்து உள்ளது. ஏராளமான குருதி வெளியேறி விட்டது.

வேலைப் பிடுங்கி விட்டேன். மேலும் குருதி வெளியேறா வண்ணம் மருந்திட்டு உள்ளேன்.

உடனே நம் அரசரை அரண்மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள். ஆற்றல் வாய்ந்த மூலிகைகள் பல அங்கு உள்ளன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நாடித்து துடிப்பு அடங்கிக் கொண்டே வருகிறது. விரைந்து செயல்படுங்கள்.”

மயங்கிக் கிடந்த சேர அரசரைப் பல்லக்கில் வைத்தார்கள் வீரர்கள். பல்லக்கு விரைந்து கருவூரை அடைந்தது.

சோழ நாடெங்கும் விழாக் கோலம் பூண்டது. வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன.

வெற்றியுடன் திரும்பும் அரசரையும் வீரர்களையும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர் மக்கள்.

எங்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
வெண்ணிப் பறந்தலைப் போர் நிகழ்ந்து சில திங்கள் கழிந்தன.

வழக்கம் போல அரசவை கூடி இருந்தது. அரியணையில் கரிகாற் பெருவளத்தான் அமர்ந்து இருந்தார். அவையினர் அவரவர் இருக்கையில் இருந்தனர்.

வீரன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கினான்.

“வெற்றி வேந்தே வாழி! பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் வந்து கொண்டிருக்கிறார்” என்றான்.

“ஆ! பெரும்புலவர் வெண்ணியக் குயத்தியாரா? இங்கு வருகிறாரா? அவர் வருகையால் நம் நாடே பெருமை பெற்றது” என்று அரியணையில் இருந்து இறங்கினார் அரசர்.

புலவர் வெண்ணியக் குயத்தியார் உள்ளே நுழைந்தார்.

அவரை வரவேற்ற அரசர் “வாருங்கள்! வெண்ணிக் குயத்தியாரே! வாருங்கள்” என்ற மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.

அவையினர் எல்லோரும் எழுந்து “புலவர் வெண்ணிக் குயத்தியார் வாழ்க” என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

உயர்ந்த இருக்கை ஒன்றைக் காட்டிய அரசர் “புலவரே! இதில் அமருங்கள்” என்று வேண்டினார்.

தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அந்த இருக்கையில் அமர்ந்தார்.

அரசரும் அரியணையில் அமர்ந்தார்.

புலவர் எழுந்து நின்று “நானிலம் காக்கும் அரசே வாழி! செங்கோல் தவறாத அரசே வாழி! பகை நடுங்கும் வெற்றி வேந்தே வாழி! தமிழின் மீது நீர் கொண்டிருக்கும் பேரன்பை உலகமே போற்றுகிறது. உம்மைப் போல் புலவர்களை மதிக்கும் அரசர் யார் இருக்கிறார்கள்? உம்மோடு உரையாடி மகிழவே இங்கு வந்தேன். என் சில நாட்கள் இங்கே தங்குவதாகத் திட்டம்” என்றார்.

“தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் புலவர் பெருந்தகையே! கிடைத்தற்கு அரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். உங்கள் வருகையால் இந்தச் சோழ நாடே சிறப்புப் பெற்றது. நீங்கள் இங்கேயே நிலையாகத் தங்கினால் பெரிதும் மகிழ்வோம்” என்றார் அரசர்.

“வெற்றி வேந்தே! எங்கள் அறிவுச் செல்வம் ஒரு நாட்டிற்கு உரியது அல்ல. உலகிற்குப் பயன்பட வேண்டும். பல நாடுகளையும் சுற்றி விட்டுச் சேர நாடு சென்றேன். அங்கே சில நாட்கள் தங்கினேன். அங்கிருந்து இங்கு வந்தேன்” என்றார் அவர்.

“சேர நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? எனக்கும் சேர அரசனுக்கும் நிகழ்ந்த போரைப் பற்றிக் கேட்டு இருப்பீர்கள்.

அதைப் போன்று கடுமையான போர் எங்கும் நிகழ்ந்தது இல்லை.

அந்தப் போரில் அடைந்த வெற்றி எனக்குப் பெரும்புகழைத் தந்தது. அதைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை.

அந்தப் போரைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் அரசர்.

“அரசே! போர் முடிந்து விட்டது. சேர நாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் உமக்குத் தெரியாதா?”

“புலவரே! சேரரின் படையைப் போர்க்களத்தில் சந்தித்தேன். என் வேலால் தாக்கப்பட்ட ரே அரசன் நிலத்தில் வீழ்ந்தார். வெற்றிக்காகப் போர் செய்தேன். என் எண்ணம் நிறைவேறியது.

தோல்வி அடைந்த அவர்களால் பல ஆண்டுகள் போரிட முடியாது. அதனால் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை.”

“அரசே! உங்கள் வேலால் தாக்கப்பட்டார் அரசர் நெடுஞ்சேரலாதன். அவர் உயிர் பிழைத்து விட்டார். அந்தச் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா?”

“புலவரே” என்னால் நம்ப இயலவில்லையே. என் வேல் நெடுஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்து ஆழமாகப் பாய்ந்தது. அப்படியே நிலத்தில் அவர் வீழ்ந்தார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையே.”

“அரசே! சேர நாட்டு மூலிகைகளின் ஆற்றல் அளவிட முடியாதது. அவை இறந்தவரின் உயிரையே மீட்கும். அப்படி இருக்கையில் படுகாயம் அடைந்த அரசரின் உயிரையா மீட்காது?”

“மூலிகைகளால் சேர அரசர் உயிர் பிழைக்கட்டும். என்னிடம் தோற்ற பழி அவரை விட்டு நீங்காதே. அதற்கு அவர் போர்க்களத்திலேயே இறந்து இருக்கலாம். உயிர் பிழைத்துப் பழி சுமக்கின்ற கொடுமை யாருக்கு வேண்டும்?”

“அரசே! சேர அரசர் உயிர் பிழைத்ததால் புகழில் உயர்ந்து விட்டார். புலவர்கள், சான்றோர்கள் எல்லோரும் சேர அரசரையே புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்கள் போரில் அடைந்த வெற்றிப் புகழும் மங்கி விட்டது.”

“புலவரே! போரில் பெருவீரம் காட்டி வென்றவன் நான். என்னிடம் தோற்று உயிர் பிழைத்தவன் சேர அரசன். அவனை இந்த உலகம் புகழ்கிறதா? கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளதே?”

“அரசே! உங்கள் வேல் சேர அரசரின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது. முதுகைத் துளைத்து வெளியே வந்தது.”

“என் வீரத்திற்கும் வலிமைக்கும் அந்த வேலே சான்று ஆகிறதே.”

“அரசே! உங்கள் வேலால் நிலத்தில் வீழ்ந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைக் கருவூருக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அரிய பச்சிலைகள் கட்டினார்கள்.

ஒரே திங்களில் அவர் மீண்டும் பழைய வலிமையைப் பெற்றார்.

மார்பிலும் முதுகிலும் வேல் குத்திய வடு இருப்பை அறிந்து துடித்தார்.”

“இதில் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? புலவரே”

“அரசே! விழுப்புண் பட்ட வடு மார்பில் இருந்தால் பெருமை. நேருக்கு நேர் நின்று போர் செய்தவர். எதிரியின் படைக் கலங்களை மார்பில் தாங்கியவர் என்று புகழ்வார்கள். முதுகில் வடு இருந்தால் புறமுதுகு காட்டி ஓடி வந்தது ஆகாதா? அது வீரர்களுக்கு மாறாப் பழி தரும் செயல் அல்லவா?”

“ஆம் புலவரே! புறமுதுகிட்டு ஓடுவது மிக இழிவான செயல். அப்படிப்பட்டவனை ஈன்ற தாய் வேண்டாள். மனைவி விரும்பாள். உற்றாரும் மற்றோரும் வெறுப்பார்கள்.

இதில் சேர அரசர் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? என் வேலை அவர் மார்பில் தாங்கியதை எல்லோரும் அறிவார்களே. அதே வடுதானே முதுகில் உள்ளது.”

“அரசே! சேர அரசர் மானம் மிக்கவர். முதுகில் வடு உள்ளது. உண்மை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள்? புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட வடு என்று தானே நினைப்பார்கள். என்ன செய்வது என்று கலங்கினார்.

அந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தார்.”

“என்ன! செய்யாத பழிக்காக வடக்கிருக்க நினைத்தாரா? இதைப் புலவர்களும் சான்றோர்களும் தடுக்க வில்லையா?”

அரசே! சேர அரசரின் செயலை எல்லோரும் தடுக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால் அவரோ எம் சேரர் குடி மானம் மிக்க குடி. என் முன்னோன் ஒருவன் பகைவரால் சிறையிடப்பட்டான் காலந்தாழ்த்து வந்த நீரைப் பருகாமல் உயிரை விட்டான்.

அப்படிப்பட்ட உயர்ந்த மரபில் வந்தவன் நான். என்னைப் புறப்புண் கண்டவன் என்றால் குடிக்கே இழுக்கு நேருமே. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் வடக்கிருந்து உயிரைத் துறப்பது உறுதி என்றார்.

“பிறகு என்ன நடந்தது புலவரே?”

“வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அரசர் வடக்கிருப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தார் அவர்.”

“ஆ! என்ன சேர அரசரின் மானச் சிறப்பு! செயற்கருஞ் செயலை அல்லவா அவர் செய்து விட்டார். செய்யாத பழிக்காக இதுவரை யார் உயிரைத் துறந்து இருக்கிறார்கள்? அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்”.

“அரசே! போரில் பெரு வீரம் காட்டி வெற்றி பெற்றவர் நீங்கள். உங்களிடம் தோற்ற சேர அரசரோ புறப்புண்ணுக்கு நாணினார். வடக்கிருந்து உயிர் துறந்தார். உங்கள் புகழை விட அவர் புகழையே சிறப்பித்துப் பாடுகிறார்கள் புலவர்கள்.”

“புலவரே! என் வீரத்தினும் சேர அரசரின் மானம் உயர்ந்து நிற்கிறது. வென்ற நான் தோற்றவனாகி விட்டேன். தோற்றும் அவர் புகழில் என்னை வென்று விட்டார். வாழ்க அவர் புகழ்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் கரிகாற் பெருவளத்தான்.

1. “நனியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
செனறமர்க் கடந்தனின் னாற்றற் றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாகி வடக்கிருந் தோனே”

(புறநானூற்றுப் பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது)

அரசர் கதைகள் – உயர்ந்த நட்பு

சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது.

நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர்.

“முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?”

“இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது.”

“முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்.”

“எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை.”

“இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர்.

ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்.”

“நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது.”

“இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள்.

அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர்.
இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார்.

“என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன்” என்று போருக்கு எழுந்தார்.

சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்.”

“முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார். அவர் என்ன சொன்னார்.?”

“அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்? உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே.

அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்?
இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா? போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும்.
நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்.”

“முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?”
“கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

“புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போ‘ரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை.என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்று உறுதியுடன் சொன்னார்.”
“ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?”

“அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்.”
“முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?”

“பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர்.
வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள்.அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்.”
“முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே.”
“இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார்.
அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர்.
செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.”

“முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே.”
“இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன்” என்று புறப்பட்டார் முத்தனார்.

வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள்.
அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.

திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர்.
“அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று” என்றார் பொத்தியார்.

“பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்.”
அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர்.

“அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம்” என்றார் பொத்தியார்.

“புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள்” என்றார் அரசர்.

இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.
“அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை.

பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.

“நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை.”
“அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள்.
உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.
“பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?”

“அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை.”

“பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்.
நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.”
“அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும்.

அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது.
இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?”

“பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்.”

“அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே.”
“மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன்.

உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?”
“அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு.”
“பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே.

திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது.
வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும்.
மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்.”

“அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும்.”
“மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்.”

“அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன். என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்.”

“பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை.”

“அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும்.

அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன்” என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார்.
கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள்.

கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர்.
சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர்.

மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொதியார் அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார்.

கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே” என்று கலங்கினார்.
“ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே!

கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்?
இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே.

காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்” என்று புலம்பினார் அவர்.

அங்கிருந்த பெரியவர் ஒருவர், “புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம்.
இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம்.

நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம்” என்றார்.

“பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன்.

நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார்.

மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார்.
அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர்.
வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர்.

“மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம்” என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார்.

“பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும்” என்றார் பொத்தியார்.

“ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்.”

“ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் “காய்நெல் அறுத்து” என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே.”

“நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?”
“பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்.”

“புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.”

“நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார்.

“என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்.”

கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம்.”
“பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்.”
“என் அருகில் உள்ள இந்த இடம்தான்.”
பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார்.

அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.
பொத்தியார் தயக்கத்துடன் “பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?” என்று கேட்டார்.
“எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.”

“நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை.
உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது.”
“பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு.

நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம்.

அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல” என்றார் பிசிராந்தையார்.
“புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்.”
“பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?”

“என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார்.
அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்.”

“பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது?
என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன்.

நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உணிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார்.

காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை.
அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயல வில்லை.

என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல்” என்றார் பிசிராந்தையார்.

“பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார் பொத்தியார்.

1. “எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
(புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது).

2. வடக்கிருத்தல்: – வடக்கிருத்தலாவது ஊர்ப் புறத்தே
தனியிடங்கண்டு அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப்
புல்லைப் பரப்பி அதன் மீதிருந்து உண்ணா நோன்பு
மேற்கொண்டு அறங்கூறும் தவம் செய்தலாகும்.
(புறநானூறு – இரண்டாம் தொகுதி – ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரை – கழக வெளியீடு)

3. தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே
(புறநானூற்றுப் பாடல் 215, பாடல் அடிகள் 6 முதல் 10 வரை)

4. இசை மரபாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே
(புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)

சிறுவர் கதைகள் – பெரிய சோம்பேறி யார் ?

முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன செய்கிறார்களோ அதற்கு எதிராக செய்வதே அவன் வழக்கமாக இருந்தது.

மற்றவர்கள் தாடையில் தாடி வைத்திருப்பதைப் பார்த்தான் அவன். உடனே அவன் தன் புருவத்தில் தாடி வளர்க்கத் தொடங்கினான். அதுவும் நீண்டு வளர்ந்து கழுத்து வரை தொங்கியது. குளிர்காலத்தில் சட்டையே இல்லாமல் உலாவுவான். கோடை காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல சட்டைகளை அணிந்து கொள்வான். காலில் அணிய வேண்டிய உடைகளை உடம்புக்கு அணிந்து கொள்வான். உடம்புக்கு அணியும் உடைகளைக் காலுக்கு அணிந்து கொள்வான். முன்புறம் அணிய வேண்டியதைப் பின்புறமாக அணிந்து கொள்வான். பின்புறம் அணிய வேண்டியதை முன்புறம் அணிந்து கொள்வான். எப்பொழுதும் பின்பக்கமாக நடப்பானே தவிர முன்பக்கமாக நடக்க மாட்டான். இரவு முழுவதும் விழித்து இருப்பான். பகல் முழுவதும் தூங்குவான்.

அவனுக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். தன் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான் அவன். அமைச்சர்கள் ஐந்து பேரையும் அரசவைக்கு வரவழைத்தான்.

இளவரசிக்குத் திருமணம் செய்ய எண்ணி உள்ளேன். மற்ற அரசர்கள் விரும்புவதைப் போல எனக்கு மருமகனாக வீரன் வேண்டாம். அறிவுள்ளவன் வேண்டாம். நல்ல பண்புள்ளவன் வேண்டாம். அழகானவனும் வேண்டாம், என்றான் அரசன். இதைக் கேட்ட அமைச்சர்கள் திகைப்பு அடைந்தனர்.

இளவரசியார்க்கு யார் கணவனாக வர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டார் ஓர் அமைச்சர்.

சோம்பேறியான ஒருவன் தான் எனக்கு மருமகனாக வர வேண்டும். மிகப் பெரிய சோம்பேறியைத் தேடும் வேலையை உங்களிடம் ஒப்படைக்கப் போகிறேன். அதற்காகத்தான் உங்களை வரவழைத்தேன், என்றான் அரசன்.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அரசே! என்று கேட்டார் இன்னொரு அமைச்சர்.

உங்க ஒவ்வொருவருக்கும் ஓராண்டு தவணை தருகிறேன். நீங்கள் பல நாடுகளுக்கும் சென்று சிறந்த சோம்பேறியைக் கண்டுபிடிக்க வேண்டும். தேவையான பணத்தை கருவூலத்தில் பெற்றுக் கொள்ளுங்கள், என்றான் அரசன். ஐந்து அமைச்சர்களும் அரசனிடம் விடைபெற்றுப் புறப்பட்டார்கள். ஐவரும் வெவ்வேறு திரைகளில் பிரிந்தார்கள்.

ஓராண்டு கழிந்தது. ஐந்து அமைச்சர்களும் நாடு திரும்பினார்கள். அவர்களை வரவேற்றான் அரசன்.

முதலாம் அமைச்சனைப் பார்த்து, உம் அனுபவங்களைச் சொல்லும். எனக்கு மருமகனாகும் சோம்பேறியை எங்கே கண்டுபிடித்தீர்? சொல்லும், என்று ஆர்வத்துடன் கேட்டான் அவன்.

அரசே! நான் பல நாடுகளுக்குச் சென்றேன். எத்தனையோ விந்தையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டன. இருந்தும் சோம்பேறிகளைத் தேடி அலைந்தேன். எத்தனையோ சோம்பேறிகளைச் சந்தித்தேன். யாருமே நம் இளவரசியார்க்குப் பொருத்தமானவராகத் தெரியவில்லை. பெரிய சோம்பேறியைச் சந்திக்கும் பேறு பெற்றேன். என்றான் அமைச்சன். அவன் என்ன செய்தான்? என்று கேட்டான் அரசன்.

அந்தச் சோம்பேறியை வழியில் சந்தித்தேன். அரசே! அவனுடைய ஒரு கால் சேற்றிலும் மற்றொரு கால் சாலையிலும் இருந்தது. அப்படியே நின்று கொண்டிருந்தான். நான் அவனைப் பார்த்து, ஏன் இப்படி நிற்கிறாய்? என்று கேட்டேன். இரண்டு மாதமாக நான் இப்படித்தான் நின்று கொண்டிருக்கிறேன். சேற்றில் உள்ள காலை எடுக்க எனக்குச் சோம்பலாக உள்ளது, என்று பதில் தந்தான் அவன், என்றான் அமைச்சன்.

இளவரசிக்குப் பொருத்தமான பெரிய சோம்பேறி தான் அவன், என்று மகிழ்ச்சியாகச் சொன்னான் அரசன்.

குறுக்கிட்ட இரண்டாம் அமைச்சன், அரசே! நானும் ஒரு சோம்பேறியைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறேன், என்றான். உன் அனுபவங்களைச் சொல், என்றான் அரசன்.

அரசே! உங்கள் கட்டளையை நிறைவேற்றுவதற்காகப் பல மலைகளையும் ஆறுகளையும் கடந்து சென்றேன். ஓர் ஊரில் மிகப் பெரிய சோம்பேறியைக் கண்டேன். அவனுக்கு மிக நீண்ட தாடி இருந்தது. அந்தத் தாடி ஊர் முழுவதும் பரவிக் கிடந்தது- பார்ப்பதற்கு மேகக் கூட்டம் போல இருந்தது. இரண்டு மீசைகளும் நீண்டு இருந்தன. ஒரு மீசையில் குருவி ஒன்று கூடு கட்டி இருந்தது. இன்னொரு மீசையில் எறும்புப் புற்று வளர்ந்து இருந்தது. நான் அவனைப் பார்த்து, எதற்காக இவ்வளவு நீண்ட தாடியும் மீசையும் வளர்த்து இருக்கிறாய்? என்று கேட்டேன்.

சோம்பேறியான அவன் எனக்கு எந்தப் பதிலும் தரவில்லை. அவன் அருகில் முக சவரம் செய்யும் கத்தி துருப்பிடித்துக் கிடந்தது. அங்கிருந்தவர்கள் அவன் முக சவரம் செய்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றார்கள். நல்ல சோம்பேறிதான், என்ற அரசன், அவன் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறானா அல்லது அதற்கும் சோம்பலா? என்று கேட்டான். அவன் சில சமயங்களில் தாடி மீசையைச் சொரிந்து கொள்கிறான். அது மட்டும் அல்ல. தன் மீசையில் அமர வரும் காக்கைகளை விரட்டுவதற்காக கூழாங்கற்களை அவற்றின் மேல் எறிகிறான், என்றான்.

மூன்றாம் அமைச்சனைப் பார்த்து, நீ பார்த்து வந்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்று கேட்டான், அரசன்.

அரசே! நானும் பல நாடுகளுக்குச் சென்றேன், ஓர் ஊரில் சோம்பேறி ஒருவனைக் கண்டேன். உங்களுக்கு மருமகனாக மிகவும் பொருத்தம் உடையவன். சோம்பல் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளாக அவன் வீட்டை விட்டு வெளியே சென்றது இல்லை. நாற்காலியில் அமர்ந்து இருந்தபடியே எல்லோருக்கும் அவன் அறிவுரை வழங்குவான். நான் சென்றிருந்த சமயம் அவன் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டது. அவன் உடையிலும் தீப்பிடித்துக் கொண்டது. இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை அவன். வெளியே இருந்தவர்கள் எல்லோரும் கத்தினார்கள். எந்தப் பயனும் இல்லை. வீட்டிற்குள் நுழைந்த சிலர் அவனை அப்படியே வெளியே தூக்கி வந்து காப்பாற்றினார்கள், என்றான்.

உண்மையிலேயே இவன் பெரிய சோம்பேறிதான், என்ற அரசன் நான்காம் அமைச்சனைப் பார்த்தான்.

அரசே! நான் காடு மலைகளில் அலைந்தேன். முட்புதர்களில் சிக்கி என் உடைகள் கிழிந்து விட்டன. அதுவும் நல்லதற்குத்தான். அதனால்தான் அந்தச் சோம்பேறியைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, என்றான் அவன். அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான் அரசன். அரசே! அவன் தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மரத்தடியில் பதினைந்து ஆண்டுகளாகப்படுத்திருக்கிறான். தன் வாயிற்கு அருகே காரட் முள்ளங்கி ஏதேனும் முளையாதா என்று காத்துக் கொண்டிருக்கிறான். அவன் நெற்றியில் உள்ள சுருக்கத்தில் இரண்டு முள்ளங்கிச் செடிகள் முளைத்துள்ளன. அதைப் பிடுங்கிப் போடக்கூட அவன் தன் கை விரல்களைப் பயன்படுத்தவில்லை. மரத்திலிருந்து அவன் வாயிற்கு நேராக ஏதேனும் பழங்கள் விழுந்தால் உண்பான். பக்கத்தில் விழுந்தால் அதை எடுத்து உண்ண மாட்டான், என்றான் அவன். அந்த வாழ்க்கை அவனுக்குப் பிடித்து இருக்கிறதா? என்று கேட்டான் அரசன்.

அவனிடம் நீண்ட நேரம் பேசினேன். அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினான். தன் மூக்கிலோ அல்லது வாயிலோ பழ மரம் முளைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பழத்திற்காக நான் வாயைத் திறந்து கொண்டு படுத்திருக்க வேண்டாமே என்றான் அவன், என்று விளக்கமாகச் சொன்னான், அமைச்சன். நான் கேட்டதிலேயே அற்புதமான சோம்பேறி இவன். என் மகளுக்கு ஏற்றவன், என்ற அரசன் ஐந்தாம் அமைச்சனைப் பார்த்தான்.

உடனே அந்த அமைச்சன், அரசே! நான் பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொன்னால் உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள். இவனுடைய சோம்பேறித்தனத்திற்கு மற்ற நால்வரும் கால் தூசி பெற மாட்டார்கள், என்றான். நீ பார்த்த சோம்பேறியைப் பற்றிச் சொல், என்றான் அரசன்.

அரசே! சோம்பேறியைத் தேடும் முயற்சியில் நான் பலமுறை உயிர் பிழைத்தேன். ஒரு நாட்டை அடைந்தேன். உலக மகா சோம்பேறி ஒருவனைக் கண்டேன், என்றான் அவன். ஆர்வத்தை அடக்க முடியாத அரசன், அவன் என்ன செய்தான்? என்று பரபரப்புடன் கேட்டான். சிலர் அவன் உயிரோடு இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் அவன் இறந்து விட்டதாகச் சொன்னார்கள். சிலர் அவனைத் துறவி என்றார்கள். சிலர் அவனைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்தார்கள். நானே சென்று அவனை நேரில் பார்த்தேன். அவனைச் சுற்றிலும் புற்று வளர்ந்து இருந்தது. எழுபது ஆண்டுகளாக அவன் சிறிதுகூட அசையவில்லை. யார் பேச்சையும் கேட்க விரும்பாத அவன் காதுகளில் மெழுகை அடைத்துகூ கொண்டான். பேச வேண்டி வரும் என்பதால் தன் நாக்கை ஒரு பாறாங்கல்லில் கட்டி இருந்தான். எதையும் அவன் சாப்பிடுவது இல்லை. காற்றை மட்டும் சுவாசித்துக் கொண்டு உயிர் வாழ்கிறான். யாராவது உணவைக் கொண்டு வந்தால்கூட அதைக் கையில் வாங்க அவனுக்குச் சோம்பல். பத்தாண்டுகளுக்கு முன் அவன் தன் உதடுகளைச் சிறிது அசைத்தானாம் அதனால்தான் அவன் உயிரோடு இருப்பது மற்றவர்க்குத் தெரிந்ததாம், என்று நடந்ததைச் சொன்னான் அந்த அமைச்சன்.

வியப்பு அடைந்த அரசன், இப்படி ஒரு சோம்பேறியா? அவனே என் மருமகன். அவனுக்கும் இளவரசிக்கும் விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள், என்று மகிழ்ச்சியுடன் சொன்னான். ஒரு நல்ல நாளில் அந்தச் சோம்பேறிக்கும் இளவரசிக்கும் திருமணம் நடந்தது.

சிறுவர் கதைகள் – திறமையான குள்ளன்

ஏழை விறகுவெட்டி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஏழு மகன்கள் இருந்தனர். அவன் எவ்வளவோ கடுமையாக உழைத்தும் அவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்தார்கள்.

ஒரு நாள் இரவு அவனுடைய மகன்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மனைவி அவனிடம், “நாம் எவ்வளவு காலம் துன்பப்படுவது? வயிறார உண்டு எத்தனை நாட்கள் ஆகிறது? நம் மகன்களைக் காட்டில் விட்டுவிட்டு வந்து விடுங்கள். இருப்பதைக் கொண்டு நாம் மகிழ்ச்சியாக வாழலாம்” என்றாள்.

“நீ சொன்னபடியே செய்கிறேன். நாளை அவர்களுக்கு உணவு சமைத்து வை” என்றான் அவன்.

கடைசி மகனான குள்ளன் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

விடிகாலையில் எல்லோருக்கும் முன் எழுந்தான் அவன். ஆற்றங்கரைக்குச் சென்று அங்கிருந்த சிறுசிறு கூழாங்கற்களை எடுத்தான். சட்டைப் பை நிறைய அவற்றைப் போட்டுக் கொண்டான். வீடு திரும்பினான் அவன். தாயும் தந்தையும் அண்ணன்களும் அவனுக்காகக் காத்திருந்தனர்.

” ஏன் இவ்வளவு நேரம்? அம்மாவிடம் உன் பங்கு அடையை வாங்கிக் கொள். காட்டில் சாப்பிடலாம். இன்று நாம் எல்லோரும் விறகு வெட்டச் செல்கிறோம்” என்றான் விறகுவெட்டி.

எல்லோரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார்கள். கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் பையிலிருந்த கூழாங்கல்லை வழி எங்கும் போட்டுக் கொண்டே வந்தான்.

நீண்ட தூரம் நடந்து காட்டின் நடுப்பகுதிக்கு வந்தார்கள்.

“இனி என்ன முயன்றாலும் தன் மகன்களால் வீட்டை அடைய முடியாது. அவர்களை ஏமாற்றி விட்டுப் புறப்பட வேண்டும்” என்று நினைத்தான் அவன்.

” நீங்கள் விளையாடிக் கொண்டிருங்கள். நான் சிறிது தூரம் சென்று நல்ல மரமாகப் பார்த்து வெட்டுகிறேன். இருட்டியதும் வீட்டிற்குப் புறப்படலாம்” என்றான் அவன்.

அவர்களும் மகிழ்ச்சியாக விளையாடத் தொடங்கினார்கள்.

அருகில் இருந்த மரத்தில் ஒரு கட்டையைத் தொங்க விட்டான் அவன். காற்று அடிக்கும் போதெல்லாம் மரத்தில் அது மோதியது. விறகு வெட்டுவது போல ஓசை கேட்டது. மகன்களுக்கத் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான் அவன்.

அவர்கள் நீண்ட நேரம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இருட்டத் தொடங்கியது.

” தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்வோம்” என்றான் மூத்தவன்.

எல்லோரும் விறகு வெட்டும் ஓசை கேட்ட இடத்திற்கு வந்தனர். ” ஐயோ! அப்பாவைக் காணோமே! இந்தக் காட்டிலிருந்து எப்படி வீட்டுக்குச் செல்வது? கொடிய விலங்குகள் நம்மைக் கொன்று விடுமே! என்ன செய்வது?” என்று அலறினான் இரண்டாமவன்.

” கவலைப்படாதீர்கள். இன்னும் சிறிது நேரத்தில் நிலவு வெளிச்சம் தெரியும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன். நாம் அனைவரும் வீட்டை அடையலாம்” என்று ஆறுதல் சொன்னான் குள்ளன்.

நிலவு வெளிச்சம் பட்டப் பகல் போலக் காய்ந்தது. வழி எங்கும் போட்டு வந்த கூழாங்கல்லை அடையாளமாகக் கொண்டு நடந்தான் குள்ளன். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.

” வீட்டில் தன் மனைவியிடம், நம் குழந்தைகள் காட்டில் எப்படித் தவிப்பார்களோ?” என்றான் அவன்.

” எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா? நம் கண் எதிரில் ஏன் அவர்கள் துன்பப்பட வேண்டும்? அதனால் தான் அவர்களைக் காட்டில் விட்டுவிட்டு வரச் சொன்னேன். அவர்கள் எங்காவது நலமாக இருக்கட்டும் நான் உணவு சமைக்கிறேன். இருவரும் சாப்பிடலாம்” என்றாள் அவள்.

நள்ளிரவு நேரம், இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

கதவு தட்டும் ஓசை கேட்டது. ” இந்த நேரத்தில் யார்? கதவைத் திற” என்றான் அவன். கதவைத் திறந்தாள் அவள். தன் மகன்களைக் கண்ட அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சமைத்து வைத்திருந்த உணவை அவர்களுக்குப் பரிமாறினாள்.

சாப்பாடு முடிந்தது. நடந்து வந்த களைப்பால் அவர்கள் தூங்கத் தொடங்கினார்கள்.

விறகுவெட்டிக்கும் அவன் மனைவிக்கும் சாப்பிட உணவில்லை.

” நம் மகன்கள் வந்து விட்டார்களே. இப்பொழுது என்ன செய்வது?” என்று கேட்டான் அவன்.

” நிலவு வெளிச்சத்தில் வழி கண்டுபிடித்து வந்து விட்டார்கள். அமாவாசையன்று மீண்டும் அவர்களை அழைத்துச் செல்லுங்கள். இன்னும் அதிக தூரம் சென்று விட்டுவிட்டு வாருங்கள். அவர்களால் திரும்ப முடியாது” என்றாள் அவள்.

அமாவாசை வந்தது. விடிகாலையில் தன் மகன்களை எழுப்பினாள் அவள். ” காட்டிற்கு விறகு வெட்டச் செல்லும் அப்பாவுடன் நீங்களும் செல்லுங்கள். மதிய உணவிற்காக ஆளுக்கு இரண்டு அடை சுட்டு வைத்து இருக்கிறேன்” என்றாள் அவள்.

குள்ளனுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. கூழாங்கல்லைப் பொறுக்கி வர நேரமில்லை. என்ன செய்வது” என்று குழம்பினான் அவன்.

“நேரமாகி விட்டது. புறப்படுங்கள்” என்று அவசரப் படுத்தினான் விறகுவெட்டி.

அவர்களுடன் கடைசியாகச் சென்றான் குள்ளன். தன் கையிலிருந்த அடையைச் சிறுசிறு துண்டுகள் ஆக்கினான். வழி எங்கும் அதைப் போட்டுக் கொண்டே வந்தான்.

அவன் போட்டு வந்த அடைகளைக் குருவிகளும் எறும்புகளும் சாப்பிட்டு விட்டன. விறகுவெட்டி அவர்களை வழக்கம் போல விளையாடச் சொன்னான். கட்டையைத் தொங்க விட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தான். இருட்டத் தொடங்கியது. எல்லோரும் தந்தையைக் காணாது திகைத்தனர்.

” நான் வழி காட்டுகிறேன். கவலைப்படாதீர்கள்” என்றான் குள்ளன். வழி தெரியாமல் அவன் அங்கும் இங்கும் அலைந்தான்.

பக்கத்தில் இருந்த பெரிய மரத்தின் மேல் ஏறினான். தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிவதைப் பார்த்தான்.

கீழே இறங்கிய அவன், ” அண்ணன்களே! சிறிது தொலைவில் வெளிச்சம் தெரிகிறது. கண்டிப்பாக அங்கே வீடு இருக்க வேண்டும். நாம் அங்கே சென்று இன்றிரவு தங்குவோம்” என்றான்.

எல்லோரும் வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி நடந்தார்கள். அவர்கள் கண்களுக்குப் பெரிய வீடு தெரிந்தது. அது ஒரு அரக்கனின் வீடு. அரக்கனும் அவனுடைய ஏழு மகன்களும் வெளியே சென்றிருந்தார்கள். அரக்கனின் தாய் மட்டும் அப்பொழுது வீட்டில் இருந்தாள்.

குள்ளன் கதவைத் தட்டினான். அரக்கி கதவைத் திறந்தாள். ஏழு சிறுவர்களைப் பார்த்ததும் அவள் நாக்கில் எச்சில் ஊறியது. ” பாட்டி ! இந்தக் காட்டில் நாங்கள் வழி தவறி விட்டோம்” இன்றிரவு மட்டும் இங்கே தங்கிச் செல்கிறோம்” என்றான் குள்ளன்.

” இங்கே நீங்கள் மகிழ்ச்சியாகக் தங்கலாம், இன்னும் சிறிது நேரத்தில் என் மகனும் ஏழு பேரனும் வந்து விடுவார்கள். உங்களைப் பார்த்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். நீங்கள் களைப்பாக இருக்கிறீர்கள். அந்த அறை என் பேரன்கள் தூங்கும் அறை. அங்கே சென்று நிம்மதியாகத் தூங்குங்கள்” என்று இனிமையாகப் பேசினாள் கிழவி. அவர்களும் அந்த அறையில் சென்று படுத்தார்கள்.

சிறிது நேரத்தில் அரக்கனும் ஏழு மகன்களும் அங்கே வந்தனர், ஏழு பேரன்களின் தலையிலும் கிரீடத்தை அணிவித்தாள் அவள்.

” நீங்கள் சென்று அவர்கள் பக்கத்தில் படுத்துத் தூங்குங்கள்” என்றாள். அவர்களும் சென்று சிறுவர் பக்கத்தில் படுத்தனர்.

தன் மகனைப் பார்த்துக் கிழவி, ” இன்று நமக்கு நல்ல வேட்டை ஏழு சிறுவர்கள் வழி தவறி இங்கே வந்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றி நம் பேரன்கள் தங்கும் அறையில் தூங்க வைத்திருக்கிறேன்.

பெரிய அண்டாவில் கறிக் குழம்பு வைக்கிறேன். குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கி வந்து அதில் போடு. அவர்கள் நன்றாக வெந்ததும் நாம் வயிறார உண்போம். மீதி உள்ளதைப் பொழுது விடிந்ததும் பேரன்கள் சாப்பிடட்டும்” என்றாள்.

” அம்மா! எனக்குப் பசி உயிர் போகிறது. சீக்கிரம் அண்டாவை அடுப்பில் வை. அந்த அறையில் என் மகன்களும் படுத்திருக்கிறார்களே? இருட்டில் எப்படி அந்தச் சிறுவர்களை மட்டும் தூக்கி வருவது? விழித்துக் கொண்டால் தப்பி விடுவார்களே?” என்று கேட்டான் அரக்கன்.

” நீ எளிதாக அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் அதற்காகத்தான் என் பேரன்களின் தலையில் மட்டும் கிரீடம் அணிந்து உள்ளேன்” என்றாள் அவள்.

குள்ளனுக்குத் திடீரென்று விழிப்பு வந்தது.

கிழவியின் ஏழு பேரன்களும் தலையில் கிரீடத்துடன் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது. “ஏன் இவர்கள் கிரீடத்துடன் தூங்க வேண்டும். ஏதோ சூழ்ச்சி நடக்கிறது” என்பதைப் புரிந்து கொண்டான் அவன். அவர்கள் தலையிலிருந்த கிரீடத்தை எடுத்தான், தன் அண்ணன்களின் தலையில் அவற்றை அணிவித்தான். தன் தலையிலும் கிரீடத்தை அணிந்து கொண்டான். என்ன நடக்கிறது என்பதை விழித்திருந்து பார்த்தான்.

சிறிது நேரத்தில் அரக்கன் உள்ளே நுழைந்தான். கிரீடம் அணிந்திராத சிறுவர்களை ஒவ்வொருவராகத் தூக்கிச் சென்றான். கொதிக்கும் குழம்பில் அவர்களைப் போட்டான்.

நடந்ததைப் பார்த்த குள்ளன் திகைத்தான். தன் அண்ணன்களை மெதுவாக எழுப்பிய அவன், ” அரக்கனின் வீட்டில் சிக்கிக் கொண்டோம். உடனே தப்பிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் நம்மைக் கொன்று விடுவார்கள்” என்றான்.

இதைக் கேட்டு எல்லோரும் பயந்தனர். அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். சமைத்த கறியை அரக்கனும் கிழவியும் சுவைத்துச் சாப்பிட்டார்கள். பிறகு இருவரும் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினார்கள்.

பொழுது விடிந்தது. அரக்கனை எழுப்பினாள் கிழவி. ” என் பேரன்களை அழைத்துவா. அவர்களும் மகிழ்ச்சியாகச் சாப்பிடட்டும்” என்றாள்.

அறைக்குள் நுழைந்த அவன், ” அம்மா! இங்கு யாருமே இல்லையே” என்று அலறினான்.

அங்கு வந்த அவளுக்கு உண்மை புரிந்தது. ” ஐயோ அந்தச் சிறுவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள். நம் குழந்தைகளைக் கொன்று நாமே தின்று இருக்கிறோம்” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். ” கொதிக்கும் குழும்பில் என் குழந்தைகளையா போட்டேன்? அவர்களையா சாப்பிட்டேன்? என்ன கொடுமை இது? இனி நான் என்ன செய்வேன்?” என்று சுவரில் மோதிக் கொண்டு அழுதான் அவன்.

இருவரும் நீண்ட நேரம் அழுதார்கள்.

ஒருவாறு மனம் தேறிய அரக்கன், ” என் குழந்தைகளைக் கொன்றவர்கள் அந்தச் சிறுவர்கள் தான். என்னிடம் இருந்து அவர்கள் தப்ப முடியாது. எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பேன். கொன்று தின்று பழி தீர்ப்பேன்” என்று கோபத்தில் பற்களை நறநறவென்று கடித்தான்.

” என் மந்திரச் செருப்பைக் கொண்டு வா” என்று கத்தினான் அவன்.

கிழவியும் செருப்பைக் கொண்டு வந்தாள். அதைப் போட்டுக் கொண்டு புறப்பட்டான் அவன்.

” அரக்கன் தேடி வருவான். நம்மைப் பிடித்தால் கொன்று விடுவான். வேகமாக ஓடுவோம்” என்றான் குள்ளன். எல்லோரும் நீண்ட தூரம் வந்தனர்.

” என்னால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை” என்றான் மூத்தவன்.

” அரக்கன் இனி நம்மைத் துரத்த முடியாது. எதற்கும் பாதுகாப்பாக இங்கிருக்கும் குகைக்குள் பதுங்கிக் கொள்வோம். யாராலும் கண்டுபிடிக்க முடியாது” என்றான் குள்ளன்.

எல்லோரும் பதுங்கிக் கொண்டனர். அரக்கனின் காலடி ஓசை அவர்களுக்கு கேட்டது. எல்லோரும் நடுங்கினார்கள். அங்கு வந்த அரக்கன் எல்லாத் திசைகளிலும் பார்த்தான். அவர்கள் பதுங்கி இருப்பது அவன் கண்களுக்குத் தெரியவில்லை.

” ஏ! மந்திரச் செருப்பே! இங்குதான் அவர்கள் இருப்பார்கள் என்று என்னை அழைத்து வந்தாயே! இங்கு அவர்களைக் காணோமே? நீயும் என்னை ஏமாற்றுகிறாயா?” என்று சொல்லிவிட்டு அங்கேயே படுத்தான். களைப்படைந்த அவன் குறட்டை விட்டுத் தூங்கத் தொடங்கினான்.

இதைப் பார்த்த குள்ளன், ” அரக்கன் தூங்குகிறான். அவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க மாட்டான். நீங்கள் சத்தம் போடாமல் இங்கேயே இருங்கள். மநதிரச் செருப்பை அணிந்து நான் அரக்கன் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கிருந்து ஏராளமான பொருள் கொண்டு வருகிறேன். பிறகு நாம் அனைவரும் நம் வீட்டிற்குச் செல்வோம்” என்றான்.

எல்லோரும், ” எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு நீ என்ன நினைக்கிறாயோ அப்படியே செய்” என்றார்கள்.

வெளியே வந்தான் குள்ளன். அரக்கனின் காலில் இருந்த செருப்பைக் கழற்றினான். அவற்றைத் தன் காலில் அணிந்து கொண்டான்.

“ஏ! மந்திரச் செருப்பே! நான் அரக்கனின் வீட்டை அடைய வேண்டும்” என்று சொல்லிவிட்டு நடந்தான். மந்திரச் செருப்பு அவனை அரக்கனின் வீட்டின் முன் நிறுத்தியது.

” பாட்டி! கதவைத் திற. உன் மகனுக்கு ஆபத்து” என்று கத்தினான் அவன்.

கதவைத் திறந்த கிழவி, ” என் மகனுக்கு என்ன?” என்று கேட்டாள்.

” உன் மகன் கொடிய திருடர்களிடம் சிக்கிக் கொண்டான். அவர்கள் அவனைக் கட்டி வைத்துத் துன்புறுத்துகிறார்கள் நிறைய பொருள் கொடுத்தால் உன் மகன் உயிர் பிழைப்பான். இல்லையேல் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள்.

மந்திரச் செருப்பை அடையாளத்திற்கு என்னிடம் தந்தான். ” இதைக் காட்டினால் என் தாய் நிறைய பொருள் தருவார். வாங்கிக் கொண்டு ஓடி வா. அப்பொழுது தான் நான் உயிர் பிழைப்பேன்” என்று என்னை அனுப்பினார்” என்று பரபரப்புடன் சொன்னான் அவன்.

” ஐயோ! மகனே! உனக்கு ஆபத்தா? உன்னைவிட எனக்குப் பொருளா பெரிது?” என்று அலறினாள் அவள். பெரிய சாக்குப் பையில் பொற்காசுகளை நிரப்பி அவனிடம் தந்தாள்.

அந்தப் பையை வாங்கிய அவன், ” இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மகன் கண்டிப்பாக வந்து சேருவார்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.

மந்திரச் செருப்பின் உதவியால் அண்ணன்கள் இருந்த இடத்தை அடைந்தான் அவன். அரக்கன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தான்.

” இனி இந்த அரக்கனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. மந்திரச் செருப்பை இழந்து விட்டான். அவன் தேடி வைத்த செல்வத்தையும் கொண்டு வந்து விட்டேன்.

எல்லோரும் என்னை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான் குள்ளன். அண்ணன்கள் எல்லோரும் குள்ளனை நன்றாகப் பிடித்துக் கொண்டார்கள்.

” மந்திரச் செருப்பே! நாங்கள் எங்கள் வீட்டை அடைய வேண்டும்” என்றான் அவன். சிறிது நேரத்தில் எல்லோரும் வீட்டை அடைந்தார்கள்.

அவர்கள் தந்தையும் தாயும், ” மகன்களே! காட்டில் என்ன பாடுபடுகிறீர்களோ? வறுமையினால் தான் இந்தக் கொடுமையைச் செய்து விட்டோம்” என்று அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

கதவு தட்டும் ஓசை கேட்டு அவர்கள் கதவைத் திறந்தார்கள். ஏழு மகன்களும் நிற்பதைக் கண்டு அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டார்கள்.

” அம்மா! இனி நமக்கு வறுமையே இல்லை. பல தலைமுறைக்குத் தேவையான பொற்காசுகளுடன் வந்து இருக்கிறோம்” என்றான் குள்ளன்.

சாக்கைப் பிரித்தான் விறகுவெட்டி. அதற்குள் ஏராளமான பொற்காசுகள் மின்னின. எதிர்பாராமல் கிடைத்த இந்த நல்வாழ்வை எண்ணி எல்லோரும் மகிழ்ந்தார்கள்.

தூக்கம் கலைந்து எழுந்தான் அரக்கன். தன் காலில் மந்திரச் செருப்பு இல்லாததைக் கண்டு திடுக்கிட்டான். எப்படியோ துன்பப்பட்டு தன் வீட்டை அடைந்தான் அவன்.

வாசலிலேயே காத்திருந்த அவன் தாய், ” மகனே! உன்னை விட்டு விட்டார்களா? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகளை அப்படியே கொடுத்து அனுப்பினேன்” என்றாள்.

” என்னம்மா சொல்கிறாய்? நாம் சேர்த்து வைத்த பொற்காசுகள் போய்விட்டனவா? என்ன நடந்தது?” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அவன்.

நடந்ததை எல்லாம் சொன்னாள் அவள்.

” அம்மா! அந்தச் சிறுவர்கள் நம்மை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். நாமே நம் அருமைக் குழந்தைகளைக் கொன்று விட்டோம். என் மந்திரச் செருப்பை இழந்து விட்டேன். சேர்த்து வைத்த பொற்காசுகளும் போய்விட்டன. என்ன செய்வது?” என்று அழுதுகொண்டே கேட்டான் அவன்.

“மகனே! ஒரே ஒருநாள் அவர்கள் இங்கே இருந்தார்கள். நமக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டு விட்டது? இனி அவர்கள் வழிக்கே போகாமல் இருப்பது நமக்கு நல்லது” என்று அறிவுரை சொன்னாள் அவள்.

” நீ சொன்னபடியே நடக்கிறேன்” என்றான் அவன்.

பிறகென்ன, விறகுவெட்டி தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்.

சிறுவர் கதைகள் – எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது!

ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.

புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன்.

அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். “நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்” என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான்.

அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின.

மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன.

பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான்.

கிழப்பேய் ஒன்று, “ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்” என்று கெஞ்சியது.

இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.

பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், “நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்” என்று கதை அளந்தான் அவன்.

“ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்” என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன.

“கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்” என்றான் அவன்.

கிழப்பேய் அவனைப் பார்த்து, “ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?” என்று கேட்டது.

“ஐம்பது மூட்டை எள்?” என்றான் அவன்.

“ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்” என்று கெஞ்சியது அது.

உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்” என்றான் அவன்.

“எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்” என்றது அந்தப் பேய்.

மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான்.

அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன.

பேய்களைப் பார்த்து அவன், “சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்” என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான்.

நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.

சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது.

“சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்” என்று கேட்டது அது.

நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய்.

“நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது” என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின.

புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?” என்று கேட்டது.

“அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்” என்றது ஒரு பேய்.

“போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்” என்று புறப்பட்டது புதுப்பேய்.

“வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்” என்று எச்சரித்தன மற்ற பேய்கள்.

உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.

வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது.

புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன்.

தன் வேலைக்காரனைப் பார்த்து, “டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்” என்று உரத்த குரலில் கத்தினான் அவன்.

பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. “ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?” என்று குழம்பியது அது.

மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான்.

அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், “ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்” என்று கெஞ்சியது.

தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், “என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடுன் கத்தினான்.

இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, “எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன” என்று பொய் சொன்னது.

“எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று இடிக்குரலில் முழங்கினான் அவன்.

“பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?” எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.

உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்” என்று நடுங்கியபடியே கேட்டது அது.

“இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு.” என்று விரட்டினான் அவன்.

எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது.

அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது.

“என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?” என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய்.

“உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது” என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய்.

“அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?” என்று கேட்டது ஒரு கிழப் பேய்.

“நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்” என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய்.

“என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது” என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.

எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன.

“தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது” என்று மகிழ்ந்தான் அவன்.

சிறுவர் கதைகள் – குருவி கொடுத்த விதை

ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.

அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.

பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்” என்றான்.

” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம். பண்ணையாராகும் ஆசையை விட்டு விடு. கூலியாளாகவே இரு. அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைக்கும்” என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோகத்துடன் வீடு திரும்பினான் அவன். தன் மனைவியிடம், ” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினான்.
அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.

இதைப் பார்த்த அவன் மனைவி ” நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்று கணவனிடம் சொன்னாள்.
” பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான் அவன்.
கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.

திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.

அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.

அதை அன்போடு எடுத்தான் அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.
சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.

” இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.
அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. ” இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு. சிறிது நேரத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.

மீண்டும் வந்தது அது. இன்னொரு விதையைத் தந்தது. ” இதை உன் வீட்டின் முன்புறத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.
மூன்றாம் முறையாக வந்த அது இன்னொரு விதையைத் தந்தது ” இதை சன்னல் ஓரம் நடு. என் மீது காட்டிய அன்பிற்கு நன்றி” என்று சொல்லிவிட்டுப் பறந்தது.

குருவி சொன்னபடியே மூன்று விதைகளையும் நட்டான் அவன்.
மறுநாள் காலையில் அங்கே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன. இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.

தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.
என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசனிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசனிக் காய் ஆனது.

மகிழ்ச்சி அடைந்த அவன், ” இது மந்திரப் பூசனிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றான்.
” வீட்டின் முன் புறத்தில் ஒரு பூசனிக் காய் உள்ளது. அதைக் கொண்டு வாருங்கள். அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்து விடலாம்” என்றாள் மனைவி.

அந்தப் பெரிய பூசனிக் காயை உருட்டிக் கொண்டு வந்தான் அவன். கத்தியால் அதை வெட்டினான். உள்ளிருந்து அழகான ஆடைகள், விலை உயர்ந்த மணிகள் கொட்டின.

சன்னலோரம் இருந்த மூன்றாவது பூசனிக் காயையும் கொண்டு வந்து வெட்டினான். அதற்குள் இருந்து பொற்காசுகள் கொட்டின.

அதன் பிறகு அவனும் மனைவியும் குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். விலை உயர்ந்த ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.
உழவன் சில நாள்களில் பெருஞ்செல்வனானதை அறிந்தார் பண்ணையார்.

அவனிடம் வந்த அவர், ” டேய்! முனியா! உனக்கு எங்கிருந்து இவ்வளவு செல்வம் கிடைத்தது? உண்மையைச் சொல்” என்று கேட்டார்.

அவனும் நடந்ததை எல்லாம் அப்படியே சொன்னான்.

தன் மாளிகைக்கு வந்தார் அவர். எப்படியாவது மேலும் செல்வம் சேர்க்க வேண்டுமென்று நினைத்தார். வீட்டில் மேல் பகுதியில் குருவிக் கூடு ஒன்றை அவரே செய்தார். குருவிகள் அவரும் அதில் தங்கும் என்று எதிர்பார்த்தார்.
அவர் எண்ணம் ஈடேறியது. ஒரு குருவி வந்து அந்தக் கூட்டில் தங்கியது. நான்கு முட்டைகள் இட்டது. நான்கு குஞ்சுகள் வெளியே வந்தன.

” பாம்பு வரவே இல்லை. பொறுமை இழந்த அவர் ஒரு பெரிய கம்புடன் குருவிக் கூட்டை நெருங்கினார். மூன்று குஞ்சுகளை அடித்துக் கொன்றார். ஒன்றன் காலை உடைத்துக் கீழே எறிந்தார்.
பிறகு கால் உடைந்த குருவியிடம் அன்பு காட்டுவது போல் நடித்தார். வேளை தவறாமல் உணவு அளித்தார்.
கால் சரியான அந்தக் குருவி கூட்டைவிட்டுப் பறந்து போனது.

” மூன்று விதைகளுடன் குருவி மீண்டும் வரும். அரசனைவிட செல்வன் ஆவேன்” என்ற எண்ணத்தில் காத்திருந்தார் அவர்.

அவர் எதிர்பார்த்தபடியே கதவைத் தட்டியது குருவி. அவரிடம் மூன்று விதைகளைத் தந்தது. ” ஒன்றை வீட்டின் பின்புறம் நடு. இரண்டாவதை வீட்டின் முன்புறம் நடு. மூன்றாவதைக் கிணற்றோரம் நடு” என்று சொல்லி விட்டுப் பறந்து சென்றது.

எண்ணம் நிறைவேறியது என்று மகிழ்ந்தார் அவர். மூன்று தானியங்களையும் நட்டார்.

மறுநாளே மூன்று பெரிய பூசனிக் காய்கள் காய்த்து இருந்தன.
தோட்டத்தில் இருந்த பூசனிக் காயை வீட்டுக்குள் கொண்டு வந்தார். அதை வெட்டினார்.
அதற்குள் இருந்து எண்ணற்ற பூச்சிகள் வெளிவந்தன. அவர் வயலில் விளைந்திருந்த பயிர்களை எல்லாம் ஒரு நொடிக்குள் தின்றுவிட்டு மறைந்தன.

வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார் அவர். முன்புறத்தில் இருந்த இரண்டாவது பூசனிக்காயை வெட்டினார்.
அதற்குள் இருந்து தீ வெளிப்பட்டது அது அவரையும் அந்த மாளிகையையும் ஒருநொடிக்குள் சாம்பல் ஆக்கியது.
கொடிய பண்ணையார் ஒழிந்தார் என்று ஊர் மக்கள் மகிழ்ந்தனர்.

மூன்றாவது பூசனிக்காயை உடைக்க யாருமே முன்வரவில்லை. அதற்குள் பாம்பு, தேள், பூரான் போன்ற எண்ணற்றவை இருப்பதாகப் பேசிக் கொண்டார்கள்.

சிறுவர் கதைகள் – பாடாதே! செத்தேன்!

ஓர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். வெளியூரில் இருந்து வந்த ஒருவன் அவனிடம் வேலைக் காரனாகச் சேர்ந்தான்.
கள்ளம் கபடம் இல்லாத அந்த வேலைக்காரன் உண்மையாக உழைத்தான். செல்வன் அவனுக்குக் கூலி எதுவும் தரவில்லை.

மூன்றாண்டுகள் கழிந்தன. செல்வனைப் பார்த்து அவன், ஐயா என் செந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறேன். எனக்குச் சேர வேண்டிய கூலியைத் தாருங்கள் என்று கேட்டான்.
கருமியான அந்தச் செல்வன் அவனை ஏமாற்ற நினைத்தான். தன் பையிலிருந்து மூன்று செப்புக் காசுகளை எடுத்து அவனிடம் தந்தான்.

நீ என்னிடம் மூன்று ஆண்டுகள் உழைத்தாய். ஒவ்வோர் ஆண்டிற்கும் ஒரு காசு கூலி, என்றான் செல்வன்.
வேலைக்காரனுக்குப் பணத்தின் மதிப்பு ஏதும் தெரியாது. நன்றி ஐயா! என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.

காட்டு வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் எதிரில் ஒரு குள்ளன் வந்தான்.
அந்தக் குள்ளன் இரண்டடி உயரமே இருந்தான். அவனின் நீண்ட வெள்ளைத் தாடி தரையில் புரண்டது தலையில் பல வண்ணத் தொப்பி அணிந்து இருந்தான். வேடிக்கையான தோற்றத்துடன் காட்சி அளித்தான் அவன்.
எதிரில் வந்தவனைப் பார்த்துக் குள்ளன், ஐயா! நான் ஏழை, குள்ளனாக இருப்பதால் யாரும் எனக்கு வேலை தருவது இல்லை. பசியாலும் பட்டினியாலும் வாடுகிறேன். என் மீது இரக்கப்பட்டு ஏதேனும் உதவி செய்யுங்கள், என்று கெஞ்சினான்.

உன்னைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நான் மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்ததற்குக் கிடைத்த கூலி இது. இதை நீ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இரு. எனக்கு வலிமை இருக்கிறது. மீண்டும் உழைத்து என்னால் பொருள் ஈட்ட முடியும், என்று சொல்லி விட்டுத் தன் பையில் கை விட்டான். மூன்று செப்புக் காசுகளை எடுத்துக் குள்ளனிடம் தந்தான்.

அதை பெற்றுக் கொண்ட குள்ளன், நீ நல்லவன் உன்னிடம் ஏழைக்கு இரக்கப்படும் பண்பு உள்ளது. மூன்று காசுகளை என்னிடம் தந்து உள்ளாய். என்னால் எதுவும் செய்ய முடியும். உன் மூன்று விருப்பங்களைச் சொல். எப்படிப் பட்டதாக இருந்தாலும் உடனே நிறைவேற்றி வைக்கிறேன், என்றான்.
சிந்தனையில் ஆழ்ந்த அவன், குறி வைத்தால் குறி தப்பவே கூடாது. அப்படிப்பட்ட வில்லும் அம்புகளும் தேவை. நான் புல்லாங்குழலை இசைத்தால் கேட்பவர் யாராக இருந்தாலும் ஆட வேண்டும் அத்தகைய புல்லாங்குழல் தேவை. நான் எதைக் கேட்டாலும் மற்றவர்கள் அதை மறுக்கக் கூடாது. இதுவே என் மூன்று விருப்பங்கள், என்றான்.

அடுத்த நொடியே குள்ளனின் கையில் வில்லும் அம்புகளும் புல்லாங்குழலும் இருந்தன. அவற்றை அவனிடம் தந்தான் குள்ளன். உன் விருப்பங்கள் நிறைவேறும், போய் வா, என்றான்.
குள்ளனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். சிறிது தூரம் சென்றிருப்பான்.
அங்கே ஒரு திருடன் கையில் பொற்காசுப் பையுடன் நின்று இருந்தான். அருகே இருந்த மரத்தில் ஒரு பறவை கத்திக் கொண்டிருந்தது.
இந்தப் பறவை மட்டும் என் கையில் கிடைத்தால் போதும். என் பசிக்கு நல்ல உணவாகும். என்ன செய்வேன்? அதை அடித்து வீழ்த்த வில்லோ அம்புகளோ என்னிடம் இல்லையே, என்று சொல்லிக் கொண்டு இருந்தான் திருடன்.

இதைக் கேட்டான் அவன் தன் வில்லில் அம்பு பூட்டிப் பறவைக்குக் குறி வைத்தான். குறி தவறவில்லை. பறவை அருகில் இருந்த புதரில் விழுந்தது.
திருடனே! அந்தப் பறவையை எடுத்துக் கொள், என்று கத்தினான் அவன்.
முள் நிறைந்த புதர் அருகே சென்றான் திருடன். பறவையை எடுப்பதற்காகக் குனிந்தான்.
உடனே அவன் புல்லாங்குழலை வாயில் வைத்து இசைக்கத் தொடங்கினான்.
தன்னை அறியாமல் பாட்டிற்கு ஏற்ப ஆடத் தொடங்கினான் திருடன். சிறிது சிறிதாக இசையை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான் அவன்.

இசைக்கு ஏற்ப திருடன் இங்கும் அங்கும் வேகமாக ஆடத் தொடங்கினான். சுற்றி இருந்த முட்கள் அவன் உடைகளைக் கிழித்தன. உடலுக்குள் தைத்து வேதனையை ஏற்படுத்தின.

திருடன் வலியைத் தாங்க முடியவில்லை. ஐயா! பாடுவதை நிறுத்துங்கள் என்று கெஞ்சினான்.
எத்தனை பேருக்கு நீ எவ்வளவு துன்பம் தந்து இருப்பாய்? யாருக்காவது இரக்கம் காட்டி இருக்கிறாயா? கொடியவனான உனக்குத் தக்க தண்டனை இதுதான், என்ற அவன் மேலும் வேகமாக இசைக்கத் தொடங்கினான்.
முட்கள் மேலும் மேலும் திருடனின் உடலைக் கிழித்தன.

ஐயா! இனிமேல் என்னால் தாங்க முடியாது. என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன். நல்லவனாகி விட்டேன். நான் திருடிச் சேர்த்த இந்த பொற்காசுகளை உங்களுக்குத் தந்து விடுகிறேன். பாடுவதை நிறுத்துங்கள், என்று பரிதாபமாகச் சொன்னான் திருடன்.

நீ திருந்தி விட்டதாகச் சொல்கிறாய். பெருந்தன்மையுடன் பொற்காசுகளை எனக்குத் தருவதாகச் சொல்கிறாய். பாட்டை நிறுத்துகிறேன், என்ற அவன் புல்லாங்குழலை வாயிலிருந்து எடுத்தான்.
உடலெங்கும் குருதி சொட்டச் சொட்ட எழுந்தான் திருடன். சொன்னபடியே அவனிடம் பொற்காசுப் பையைத் தந்தான்.

அதைப் பெற்றுக் கொண்ட அவன் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டான்.
அவன் கண்ணுக்கு மறைந்ததும் திருடன், டேய்! அயோக்கியப் பயலே! என்னிடம் உன் வேலையைக் காட்டுகிறாயா? நீ விரைவில் கொடுமையாக இறக்கப் போகிறாய், என்று திட்டினான். குறுக்கு வழியாகப் பக்கத்தில் இருந்த நகரத்தை அடைந்தான்.

நீதிபதியிடம் சென்ற திருடன், ஐயா! நான் உழைத்துத் தேடிய பொற்காசுகளைக் காட்டில் ஒரு திருடன் பறித்துக் கொண்டான். நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும், என்றான்.
அந்தத் திருடன் எப்படி இருப்பான்? என்று கேட்டார் நீதிபதி.

எப்படியும் இந்த நகரத்திற்கு அவன் வருவான். தோளில் வில், கையில் புல்லாங்குழல் வைத்திருப்பான். எளிதில் கண்டுபிடித்து விடலாம், என்றான் திருடன்.
வீரர்களை அழைத்தார் நீதிபதி. இவன் குறிப்பிடும் ஆள் கிடைத்தால் கைது செய்து இழுத்து வாருங்கள், என்று கட்டளை இட்டார்.

நடக்கப் போவதை அறியாத அவன் நகரத்திற்குள் நுழைந்தான். வீரர்கள் அவனைக் கைது செய்தனர். நீதிபதியின் முன்னர் அவனை இழுத்து வந்தனர்.
அவனைப் பார்த்ததும் திருடன், நீதிபதி அவர்களே! இவன் தான் திருடியவன், இவனிடம் என் பொற்காசுப் பை இருக்கலாம், என்று கத்தினான்.

வீரர்கள் அவனைச் சோதனை செய்தனர். பொற்காசுப் பை கிடைத்தது.
உடனே அவன், ஐயா! நான் திருடன் இல்லை. இவன்தான் திருடன். இவனே விருப்பப்பட்டு இந்தப் பொற்காசுகளை எனக்குத் தந்தான். நான் சொல்வதை நம்புங்கள், என்றான்.

முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர்க்கு யாராவது இவ்வளவு பொற்காசுகளைத் தருவார்களா? நீ பொய் சொல்கிறாய். நீ திருடன் தான். இவனைத் தூக்கில் போடுங்கள், என்று கட்டளை இட்டார் நீதிபதி.
அங்கிருந்த தூக்கு மேடைக்கு அவனை வீரர்கள் இழுத்துச் சென்றனர். அவன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்ட
ஒரு காவலன் வந்தான்.

நீதிபதி அவர்களே! இறப்பதற்கு முன் என் கடைசி ஆசை. இந்தப் புல்லாங்குழலை நான் சிறிது நேரம் இசைக்க வேண்டும்.. அனுமதி தாருங்கள், என்று கேட்டான் அவன்.
புல்லாங்குழலை அவனிடம் தருமாறு கட்டளை இட்டார் நீதிபதி.

அங்கிருந்த திருடன். ஐயோ! வேண்டாம். புல்லாங்குழலை அவனிடம் தராதீர்கள். எல்லோருக்கும் ஆபத்து என்று கத்தினான்.
சாகப் போகிறவனின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும். அவன் புல்லாங்குழலை இசைப்பதால் என்ன கெடுதி வந்துவிடப் போகிறது இசைக்கட்டும் என்றார் நீதிபதி.

அப்படியானால் என்னை இந்தத் தூணோடு சேர்த்துக் கட்டி விடுங்கள். பிறகு அனுமதி கொடுங்கள், என்றான் திருடன்.
உடனே திருடன் தூணில் கட்டப்பட்டான்.
புல்லாங்குழலை அவன் இசைக்கத் தொடங்கினான். இசைக்கு ஏற்ப எல்லோரும் ஆடத் தொடங்கினார்கள். காவலன் கையில் இருந்த தூக்குக் கயிறு நழுவிக் கீழே விழுந்தது.
அவன் இசைப்பதின் வேகம் அதிகரித்துக் கொண்டே சென்றது. எல்லோரும் வேகமாக ஆடினார்கள். தூணில்
கட்டப்பட்டு இருந்த திருடனும் கை கால்களை ஆட்டினான்.
பாடுவதை நிறுத்து. உன்னை விடுதலை செய்கிறேன், என்று ஆடிக் கொண்டே கெஞ்சினார், நீதிபதி.
பாடுவதை நிறுத்தினான் அவன். எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

திருடனின் அருகே சென்ற அவன், உண்மையைச் சொல்.. பொற்காசுகளை நான் உன்னிடம் இருந்து திருடினேனா? அல்லது நீயாக எனக்குத் தந்தாயா? மீண்டும் இசைக்கத் தொடங்குவேன், என்றான்.
கட்டப்பட்டு இருந்ததால் மூச்சுத் திணறிய திருடன், நானாகத்தான் தந்தேன். நான்தான் திருடன். வீணாக இவன் மீது பொய்க் குற்றம் சுமத்தினேன், என்றான்.

உண்மையை அறிந்த நீதிபதி அந்தத் திருடனுக்குத் தூக்குத் தண்டனை விதித்தார்.
எல்லோரையும் வணங்கிய அவன் அங்கிருந்து தன் ஊருக்குப் புறப்பட்டான்.

சிறுவர் கதைகள் – ஒருவர் மட்டும் போதாது

ஓர் ஊரில் கிழவன் ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். ஒரு பூனையை அவர்கள் அன்பாக வளர்த்து வந்தார்கள். முதுமையான அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
மகன் குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்.
அந்தக் குழந்தையை பூனை வளர்க்கத் தொடங்கியது. எங்கிருந்தோ பறவையின் மெல்லிய இறகுகளைக் கொண்டு வந்தது. அதில் மெத்தை செய்தது. குழந்தையை அந்த மெத்தையில் படுக்க வைத்தது. குழந்தையை வேளை தவறாமல் உணவு தந்தது. எப்பொழுதும் மெத்தையிலேயே அந்தக் குழந்தை இருந்ததால் அவனை இறகு இளவரசன் என்று அழைத்தது.

ஆண்டுகள் ஓடின, குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆனான்.
கட்டழகு வாய்ந்த அவனைக் கண்டு பூனை மகிழ்ந்தது. இறகு இளவரசனே! உனக்குத் திருமணம் செய்ய எண்ணியுள்ளேன், என்றது அது.

எனக்கு யாரைப் பெண் கேட்பாய்? என்று கேட்டான் அவன்.
இந்த நாட்டு அரசனிடம் செல்வேன். இளவரசியை உனக்காகப் பெண் கேட்பேன்.

ஏழையாகிய எனக்கு இளவரசி மனைவியா? நடக்கக் கூடிய செயலா இது? கனவு காண்கிறாயா?
உனக்கு ஏற்றவள் இளவரசிதான். நான் முடிவு செய்து விட்டேன். எப்படியும் இந்தத் திருமணத்தை முடிப்பேன். பொறுத்திருந்து பார். உனக்குப் பெண் கேட்டு நாளையே நான் அரசனிடம் செல்கிறேன், என்றது பூனை.
மறுநாள் விடிகாலையில் எழுந்தது. அரசனைக் காண்பதற்காகப் புறப்பட்டது. காட்டு வழியே சென்று கொண்டிருந்த அதன் எதிரில் ஒரு முயல் வந்தது.

முயலைப் பார்த்துப் பயந்து போன பூனை ஓட்டம் பிடித்தது. பூனையைப் பார்த்துப் பயந்து முயலும் ஓட்டம் பிடித்தது.
பக்கத்தில் இருந்த குன்றைச் சுற்றி வந்த இரண்டும் சந்தித்தன.

பூனையே! எங்கே போகிறாய்? என்று கேட்டது முயல்.
நான் அரசனிடம் செல்கிறேன். ஊரில் யாரும் என்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்கிறார்கள். என்னை எப்பொழுதும் துரத்துகிறார்கள். நான் பயந்து கொண்டே வாழ்கிறேன். இவர்கள் செயல் குறித்து அரசனிடம் குறை சொல்லப் போகிறேன். நீதி தவறாத அரசன் எனக்கு நல்லது செய்வான், என்று இனிமையாகச் சொன்னது பூனை.
கண்களில் கண்ணீர் வழிய, பூனையே! உன் நிலை பரவாயில்லை. அரசனின் வீரர்கள் வேட்டை நாய்களுடன் இங்கே வருகிறார்கள். எங்களை விரட்டுகிறார்கள். பொறி வைத்துப் பிடிக்கிறார்கள். சிறிது நேரம் கூட நாங்கள் நிம்மதியாகத் தங்க இங்கே இடம் இல்லை. நானும் உன்னுடன் வருகிறேன். அரசனிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி எங்களைக் காப்பாற்றும்படி வேண்டுகிறேன், என்றது முயல்.

நீ அரசனிடம் செல். ஆனால் உன் முயற்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
ஏன்?

எங்கள் ஊரில் நான் ஒரே ஒரு பூனைதான் இருக்கிறேன். நான் சொல்வதை அரசர் கேட்டு உதவி செய்வார். ஆனால் உன்னைப் பார்த்ததும் அவர், காட்டில் நூற்றுக்கணக்கான முயல்கள் உள்ளன. நீ மட்டும் தான் குறை சொல்ல வந்திருக்கிறாய், என்பார். குறைந்தது ஐம்பது முயல்களுடன் நீ அரசனிடம் சென்றால் அவர் கண்டிப்பாக உதவி செய்வார்.

பூனையே! இங்கேயே நில். நான் ஐம்பது முயல்களுடன் வருகிறேன், என்று அருகில் இருந்த புதருக்குள் மறைந்தது முயல்.

சிறிது நேரத்தில் ஐம்பது முயல்களுடன் வந்தது அது.
பூனை முன்னால் சென்றது. எல்லா முயல்களும் அதைப் பின் தொடர்ந்தன.
விந்தையான இந்த ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது.

இதைப் பார்த்த மக்கள், பூனை தலைமை தாங்கி ஐம்பது முயல்களை அழைத்துச் செல்கிறதே, என்று வியப்புடன் பேசிக் கொண்டார்கள்.

கடைசியாக அந்த ஊர்வலம் அரசனின் அரண்மனையை அடைந்தது.
அங்கு காவலுக்கு இருந்த வீரனைப் பார்த்து, நாங்கள் அரசனைப் பார்க்க வேண்டும், என்றது பூனை.
அரண்மனை வாயிலில் எல்லோரும் தங்க வைக்கப்பட்டனர்.

பூனையை மட்டும் அரசனிடம் அழைத்துச் சென்றான் ஒரு வீரன்.

அரசனைப் பணிவாக வணங்கிய பூனை, இறகு இளவரசன் ஐம்பது முயல்களை உங்களுக்குப் பரிசாக அனுப்பி உள்ளார். இளவரசியாரை மணந்து கொள்ள அவர் விரும்புகிறார். இளவரசியாருக்கு அவரை விடப் பொருத்தமானவர் யாரும் இருக்க முடியாது, என்றது.

வாயிலுக்கு வந்த அரசன் ஐம்பது முயல்களையும் பார்த்து வியப்பு அடைந்தான்.

இறகு இளவரசன் மிகவும் திறமையான வேட்டைக் காரனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது முயல்களை எப்படிப் பிடிக்க முடியும் என்று நினைத்தான். என் வீரர்களும் முயல் வேட்டைக்குச் செல்கிறார்கள். இரண்டு அல்லது மூன்று முயல்களுக்கு மேல் அவர்கள் பிடித்து வருவது இல்லை. உங்கள் இளவரசன் ஐம்பது முயல்களை அதுவும் உயிருடன் பிடித்து இருக்கிறான், என்றான் அவன்.

அரசே! இந்த முயல்களை எல்லாம் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்ட வேண்டும். அவற்றைக் காவல் காக்கின்றவர் யாரும் இல்லை, என்றது பூனை.

சமையல்காரனை அழைத்த அரசன், இனி நம் அரண்மனையில் நல்ல விருந்துதான். ஐம்பது முயல்களையும் அடைத்து வைக்க ஒரு அறையைத் திறந்து விடு, என்று கட்டளை இட்டான்.

முயல்களிடம் வந்தது பூனை. நாம் அனைவரும் தங்குவதற்கு அரசர் ஒரு அறையைத் தந்து உள்ளார். நமக்கு நல்ல சாப்பாடு அங்கே உள்ளது. அரசர் பிறகு வந்து நம் குறையைக் கேட்டு உதவி செய்வார், என்றது.

சமையல்காரன் ஓர் அறையைத் திறந்து விட்டான். எல்லா முயல்களும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டுப் போட்டான். வெளியே காவலுக்கு வீரர்கள் நின்றனர்.

பூனை தங்களை ஏமாற்றி விட்டதை முயல்கள் உணர்ந்தன. பாவம் அவை என்ன செய்யும்? தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி அவை அழுதன.

பூனைக்கு அரசன் சிறந்த விருந்து அளித்தான்.
இறகு இளவரசனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசியது அது.
இளவரசரை வந்து என்னைச் சந்திக்கச் சொல், என்றான் அரசன்.

அரசே! எங்கள் இளவரசர் தங்களைச் சந்திக்கக் கட்டாயம் வருவார். ஆனால் அவருக்கு இப்பொழுது ஏராளமான வேலைகள் உள்ளன, என்றது பூனை.

விருந்து முடிந்தது. அரசன் நிறைய பரிசுகளைப் பூனைக்குத் தந்தான்.
அரசனிடம் விடை பெற்ற பூனை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்கு வந்தது.

இளைஞனே! உனக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறேன், என்றது அது.
யாருடன்? என்று மீண்டும் கேட்டான் அவன்.
இளவரசிதான் மணமகள், என்றது அது.

ஒரு வாரம் சென்றது. மீண்டும் அது அரசனைக் காணக் காட்டு வழியே சென்றது. எதிரில் வந்த நரியை நேருக்கு நேர் பார்த்தது அது. இரண்டும் எதிர் எதிர் திசையில் ஓடின. மலைக்குப் பின்னால் இரண்டும் மீண்டும் சந்தித்தன.
பூனையே! எங்கே செல்கிறாய்?
அரசனிடம் என் நிலையை எடுத்துச் சொல்ல?
உனக்கு என்ன குறை?

ஊரில் எல்லோரும் என்னை அடித்து விரட்டுகிறார்கள். சரியாக சாப்பாடு போடுவது இல்லை. எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது. நீதி கேட்டு அரசரிடம் செல்கிறேன்.

நரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. இப்பொழுது, என்னால் இந்தக் காட்டில் இருக்கவே முடியவில்லை. வேட்டைக்காரர்கள் நாய்களுடன் வந்து எங்களை விரட்டுகிறார்கள். குழிக்குள் மறைந்தாலும் புகை போட்டு எங்களை வெளியே வரவழைக்கிறார்கள். அவர்களுடைய அம்புகளால் நாங்கள் பலர் சாகிறோம். உன்னுடன் நானும் வந்து அரசரிடம் நீதி கேட்கிறேன். என்னையும் அழைத்துச் செல், என்றது.

நரியாரே! நீர் தனியாக வருவது நல்லது அல்ல. எங்கள் ஊரில் நான் ஒருவன்தான் பூனை. அதனால் நான் சொல்வதை அரசர் கேட்பார். நீர் மட்டும் தனியே வந்து குறை சொன்னால் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். காட்டில் ஏராளமான நரிகள் உள்ளனவே. ஏன் அவை வந்து குறை சொல்லவில்லை! என்று கேட்பார். ஐம்பது நரிகள் ஒன்றாக வந்தால் அரசர் நீங்கள் சொல்வதை நம்புவார், என்றது.

சிறிது நேரம் காத்திரு, என்ற நரி அங்கும் இங்கும் ஓடியது. ஐம்பது நரிகளுடன் அங்கு வந்தது.
அரண்மனைக்குச் சென்றதும் யார் எப்படிப் பேச வேண்டும் என்று அவற்றிடம் விளக்கிச் சொன்னது பூனை.
நீ சொல்வது போலவே நாங்கள் நடந்து கொள்வோம், என்றது நரிகள்.

பூனை முன்னால் சென்றது. எல்லா நரிகளும் அதைப் பின் தொடர்ந்தன.
அவற்றின் ஊர்வலம் பல ஊர்கள் வழியாகச் சென்றது.

இதைப் பார்த்த மக்கள், என்ன வேடிக்கையாக இருக்கிறது. போன வாரம் தான் இந்த பூனை ஐம்பது முயல்களுடன் ஊர்வலம் போனது. இப்பொழுது ஐம்பது நரிகளுடன் ஊர்வலம் போகிறது, என்று பேசிக் கொண்டார்கள்.
ஊர்வலம் அரண்மனையை அடைந்தது. காவலுக்கு இருந்த வீரர்கள் பூனையை அரசனிடம் அழைத்துச் சென்றார்கள்.
பணிவாக வணங்கிய பூனை, அரசர் பெருமானே! இறகு இளவரசர் தங்களுக்கு அன்பளிப்பாக ஐம்பது நரிகளை அனுப்பி வைத்துள்ளார். இளவரசியாரை மணக்க விரும்புகிறார், என்றது.

வேலைக்காரர்களை அழைதூத அரசன், நரிகளை ஒரு அறையில் அடைத்து வையுங்கள். எவையும் தப்பிச் செல்லக் கூடாது. பூனைக்கு நல்ல விருந்து தர வேண்டும். அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள், என்று கட்டளை இட்டான்.
நரிகளை அரண்மனைக்குள் அழைத்து வந்தது பூனை.

அங்கே ஒரு அறையில் முயல்களைக் கொன்று தோல் உரித்துக் கொண்டிருந்தார்கள் வேலைக்காரர்கள். முயல்கள் அழுது புலம்பிக் கொண்டிருந்தன.
பெருங் கூச்சலையும் அலறலையும் கேட்ட நரிகள், அங்கே என்ன சத்தம்?, என்று பூனையைக் கேட்டன.
ஏழு நாட்களுக்கு முன் இங்கே சில முயல்கள் வந்தன. தங்கள் குறையை அரசரிடம் தெரிவித்தன. கவனமாகக் கேட்ட அவர் அவற்றிற்கு நீதி வழங்கினார். அது மட்டும் அல்ல. பெரிய விருந்திற்கும் ஏற்பாடு செய்தார். விருந்தில் முயல்கள் ஏராளமான மதுரைக் குடித்தன. மகிழ்ச்சியால் தலையே வெடித்து விடுவது போல அவை கூச்சல் போடுகின்றன. அந்த சத்தம் தான் இது, என்றது பூனை.

முயல்கள் இருக்கும் அறையில் எங்களைத் தங்க வைக்க வேண்டாம். அவை எப்பொழுதும் குடித்து விட்டுச் சண்டை போடும் இயல்புடையவை. எங்களையும் கெடுத்து விடும். வேறு அறையில் தங்க வையுங்கள், என்றன நரிகள்.
வேலைக்காரன் பக்கத்து அறையைத் திறந்து விட்டான். எல்லா நரிகளும் உள்ளே நுழைந்தன. உடனே அவன் கதவைத் தாழிட்டுப் பூட்டு போட்டான்.

தாங்கள் தவறை நரிகள் உணர்ந்தன. தங்களுக்கு ஏற்படப் போகும் கதியை எண்ணி வருந்தின.
விருந்திற்கு வந்த பூனையை அரசன் வரவேற்றார். விதவிதமான உணவு வகைகள் மேசையில் பரிமாறப்பட்டு இருந்தன.

உங்கள் இறகு இளவரசன் மிகச் சிறந்த வேட்டைக்காரனாக இருக்க வேண்டும். ஆற்றல் வாய்ந்தவனாகவும் திறமைசாலியாகவும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஐம்பது நரிகளை உயிருடன் பிடிக்க முடியுமா?
என்னுடைய வேட்டைக்காரர்களும் நரி வேட்டைக்குச் செல்கிறார்கள் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள். சில சமயம் ஒன்று அல்லது இரண்டு நரியைக் கொன்று எடுத்து வருவார்கள். அதன் மேல் தோல் எதற்கும் பயன்படாத வண்ணம் கிழிந்து வீணாகி இருக்கும், என்றான் அரசன்.
அரசே! எங்கள் இளவரசர் வீரம் உள்ளவர். வலிமை வாய்ந்தவர். இந்த உலகத்திலேயே அவரைப் போன்ற வீரம் யாரும் இல்லை. என்று புகழ்ந்தது பூனை.
அவர் எங்கள் அரண்மனைக்கு வந்தால் இந்த அரண்மனையே பெருமை பெறும். இளவரசிக்கு அவர் பொருத்தமானவர். நான் அவரைச் சந்தித்தால் திருமணம் பற்றிப் பேசலாம், என்றான் அரசன்.
கண்டிப்பாக அவரை அழைத்து வருகிறேன். மேன்மை தங்கிய தங்களைச் சந்திப்பதில் அவருக்கு மகிழ்ச்சி, என்றது பூனை.

விலை உயர்ந்த ஏராளமான பரிசுப் பொருள்களைப் பூனைக்கு வழங்கினார் அரசர்.
வீட்டிற்கு வந்தது அது. தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை எழுப்பியது.
உனக்கும் இளவரசிக்கும் திருமணம் உறுதியாகி விட்டது. நான் சொல்கிறபடி நட, என்றது அது.
மகிழ்ச்சியுடன் புறப்பட்டான் அவன். பூனை வழிகாட்டிக் கொண்டே நடந்தது. இருவரும் நெடுந்தூரம் நடந்தார்கள்.
வழியில் பாலம் ஒன்று வந்தது.

பாலத்திற்கு அடியில் நீ ஒளிந்து கொள். நான் சிறிது நேரத்தில் வருகிறேன், என்றது பூனை.
அவனும் ஒளிந்து கொண்டான்.
ஊருக்குள் சென்ற பூனை கவசங்கள், தொப்பிகள் பலவற்றை வாங்கியது. எல்லாவற்றையும் ஆற்றில் போட்டது.
இறகு இளவரசனே! இங்கேயே இரு. நான் அரசனுடன் இங்கே வருகிறேன். எங்களைப் பார்த்த உடன் வெளியே வந்து விடாதே. நான் நல்ல ஆடைகளை உன்னிடம் தருகிறேன். அதன் பிறகு வெளியே வரலாம், என்று சொன்னது.
அப்படியே செய்கிறேன், என்றான் அவன்.

அரண்மனைக்கு வேகமாக ஓடியது பூனை.
அதைப் பார்த்து அரசன், இப்பொழுதும் இறகு இளவரசன் வரவில்லையா? என்று ஆர்வத்துடன் கேட்டான்.
அரசே! இளவரசர் தங்களைக் காணப் பெரும் படையுடன் வந்தார். வழியில் ஆற்றைக் கடக்கும்போது எல்லா வீரர்களும் மூழ்கி விட்டனர். அவர்களின் தலைக் கவசங்களும் தொப்பிகளும் மிதக்கின்றன. நான் எப்படியோ இளவரசரைக் காப்பாற்றி விட்டேன். அவர் கொண்டு வந்த விலை உயர்ந்த பொருள்கள் எல்லாம் ஆற்றில் போய் விட்டன. உடைகள் ஏதுமின்றிப் பாலத்தின் கீழ் இருக்கிறார். இப்படி ஒரு கொடுமை நிகழுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை, என்று பரபரப்புடன் சொன்னது அது.

இளவரசருக்கு இப்படி ஒரு கொடுமை என் நாட்டிலா நடந்திருக்க வேண்டும்? விலை உயர்ந்த ஆடைகளை இப்பொழுதே கொண்டு செல்லுங்கள். வீரர்கள் அவருக்குத் துணையாக அணிவகுத்து வரட்டும். நானும் பூனையுடன் வருகிறேன், என்றான் அரசன்.

வீரர்கள் சூழ அரசனும் பூனையும் அந்தப் பாலத்தை அடைந்தார்கள். ஆற்றில் நிறைய கவசங்களும் தொப்பிகளும் மிதந்து செல்வதைப் பார்த்தான் அரசன்.

விலை உயர்ந்த ஆடைகளை இளவரசனிடம் தந்தது பூனை. அவன் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.
அரசன் அவனைச் சிறப்பாக வரவேற்றான். அழகான வண்டியில் அவனை அமரச் சொன்னான். கோலாகலத்துடன் இளவரசனின் ஊர்வலம் தொடங்கியது.
அரண்மனை வாயிலிலேயே அரசியும் இளவரசியும் காத்திருந்தனர்.
இளவரசனின் அழகைக் கண்டு இளவரசி மகிழ்ந்தாள்.
இருவருக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.

சில நாட்கள் சென்றன. பூனையை அழைத்த அரசன், உங்கள் இளவரசனின் செல்வச் செழிப்பைக் காண நினைக்கிறேன். எப்பொழுது உங்கள் நாட்டிற்குச் செல்லலாம்? நான் பெரிய படை சூழ வருகிறேன், என்றான்.
எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம், என்றது பூனை.
அடுத்த வாரம் புறப்படுவோம், என்றான் அரசன்.
என்ன செய்யலாம் என்று சிந்தித்தது பூனை.

சில அரக்கர்களுக்குச் சொந்தமாக ஏராளமான நிலங்களும் அரண்மனைகளும் இருப்பது அதன் நினைவுக்கு வந்தது.
எப்படியாவது அவற்றை இளவரசனுக்கு சொந்தமானது என்று சொல்லி அரசனை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது அது.

இளவரசன் தேரில் அமர்ந்தான். அரசனும் அருகில் அமர்ந்தான். பெரும்படை சூழ ஆரவாரத்துடன் புறப்பட்டனர்.
பூனை வழிகாட்டிக் கொண்டே முன்னால் சென்றது.
அங்கே நிலத்தில் நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் வந்த பூனை. இன்னும் சிறிது நேரத்தில் பெரும்படையுடன் அரசர் ஒருவர் இங்கே வருவார். இந்த நிலம் யாருடையது என்று உங்களைக் கேட்பார்? நீங்கள் இந்த நிலங்கள் எல்லாம் இறகு இளவரசர் உடையது என்று சொல்ல வேண்டும். இதைக் கேட்டால் அரசர் மகிழ்ச்சியுடன் உங்களுக்குப் பரிசு வழங்குவான். மாறாக அரக்கன் உடையது என்று உண்மையைச் சொன்னால் உங்களை எல்லாம் கொன்று விடுவார், என்றது.

அரசன் அங்கு வந்தான். உழவு வேலை செய்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, இந்த நிலம் யாருடையது? என்று கேட்டான்.
எல்லோரும் இறகு இளவரசர் உடையது, என்று சொன்னார்கள்.
மகிழ்ந்த அரசன் அவர்களுக்குப் பொற்காசுகளை வாரி வழங்கினான்.
வழியில் ஏராளமான ஆடுகளை நிறைய பேர் மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தது பூனை.
அவர்களிடமும் சென்று அதையே சொன்னது.
அரசன் வந்து கேட்ட போது, எல்லா மந்தையும் இறகு இளவரசர் உடையது, என்று அவர்கள் சொன்னார்கள்.
தன்னைவிட இளவரசனிடம் அதிக செல்வம் இருக்கிறது என்று மகிழ்ந்தான் அரசன்.
இனி இளவரசனின் அரண்மனைக்குச் செல்லலாம், என்றான் அரசன்.
அரக்கர்கள் தங்கி இருக்கும் அரண்மனைக்குள் நுழைந்தது பூனை.
அவர்களைப் பார்த்து, உங்களுக்கு ஆபத்து வந்து விட்டது. உங்களைக் கொல்வதற்காக அரசர் பெரும் படையுடன் வருகிறார், என்றது.
வெளியே பார்த்த அவர்களுக்குப் பெரும்படை வருவது தெரிந்தது. பூனையே! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும், என்று கெஞ்சினார்கள்.
தோட்டத்தில் உள்ள வைக்கோல் போருக்குள் நீங்கள் எல்லோரும் ஒளிந்து கொள்ளுங்கள், என்றது அது.
அவர்களும் அதற்குள் ஒளிந்து கொண்டார்கள். வைக்கோல் போருக்குத் தீ வைத்தது பூனை. தீயில் வெந்து எல்லா அரக்கர்களும் இறந்து போனார்கள்.
ஊர்வலம் அரக்கர்களின் அரண்மனையை அடைந்தது. எல்லோரையும் வரவேற்றது பூனை.
இளவரசரின் அரண்மனை மிக அழகாக உள்ளது, என்றான் அரசன்.
இளவரசனிடம் தனியே நடந்ததை எல்லாம் சொன்னது பூனை.
மகிழ்ச்சி அடைந்தான் அவன்.

இளவரசன் இளவரசியுடன் நீண்ட காலம் அந்த அரண்மனையில் வாழ்ந்தான். பூனை அவர்களுக்கு உறுதுணையாக இருந்தது.