Year: 2014

சிறுவர் கதைகள் – முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

நல்வழிப்படுத்தவும்.

Saturday, April 08, 2006

கதை எண் 91 – முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

 

 

எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன.

“நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.

அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது.

கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது.

“கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…” என்று அவர்கள் வாயை கிளறியது.

“ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!” என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின.

“கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…” என்று கூறியது ஆடு.

இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. “ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,” என்று கோபமாக கூறின.

“கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,” என்று கூறியது.

கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன.

கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.

சிறுவர் கதைகள் – நாட்டுப்பற்று

முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார்.

அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார்.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது.

எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார்.

ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர்.

முனிவர் மன்னரை நோக்கி, “”இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்” என்று கூறினார்.

அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் “இதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

மன்னர் அமைச்சரை நோக்கி, “”யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்” என்று முரசு அறிவிக்கச் சொன்னார்.

நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை.
நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர்.

அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது.

அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர்.

சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான்.
வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான்.

“குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்” என்றான்.

“அதற்கு நாம் என்ன செய்வது?” என்றாள் ரத்னா.

“நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றான்.

ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது – அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன்.

கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது.

ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள்.

இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, “வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்” என்றார் அரசர்.

வேலப்பன் மன்னரை வணங்கி, “பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்” என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான்.

மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது.

சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது.
வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது.

வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது..
திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான்.

ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, “நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்” என்று கூறி, ஆசி வழங்கினார்.

குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.

சிறுவர் கதைகள் – புத்திசாலி ராணுவவீரர்

அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு.

அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.

அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.

“இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார்.

இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.

“அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார்.

“நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.

“ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!”

“ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி.

“சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.

“இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன்.
இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.

“இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம்.

“சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி.

பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார்.

நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.

“இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

“இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’

இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது.
இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…?

நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது.

அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை.
ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

“கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது.

பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.

“இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார்.

ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார்.
புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

சிறுவர் கதைகள் – கொக்குவுக்கு எத்தனை கால்

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

“ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.

சிறுவர் கதைகள் – புத்தி பலம்

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

“தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

“எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.

“என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.

“உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

“நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.

“இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

“சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

சிறுவர் கதைகள் – தானத்தில் சிறந்தவர் கர்ணனே

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், “எங்களால் முடியாது கண்ணா!” என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

“கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,” என்று கூறினார்.

உடனே கர்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,” என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, “இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

சிறுவர் கதைகள் – கஞ்ச மகா பிரபு

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, “டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?” என்று கத்தினார்.

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். “ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,” என்றான்.

“முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,” என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.
கேசவனை பார்த்தக் கொல்லன், “உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,” என்றான்.

“என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?” என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

“எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,” என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, “சரி” என்றார்.

சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

“இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,” என்றான் அவன்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. “இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்’ என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.

கொல்லனைப் பார்த்து, “இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,” என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், “இனி நான் இங்கு வரமாட்டேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, “இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,” என்றார்.

“ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,” என்றான் அவன்.

“நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?” என்றார் அவர்.

“ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

“பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,” என்றான் அவன்.

அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.

“நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,” என்றார்.

பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.
உதவியாளைப் பார்த்து, “ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,” என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.

களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். “ஐயா! என்னால் முடியவில்லை,” என்றான்.

உழவனைப் பார்த்து அவர், “இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,” என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.

நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கிய அவர், “என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“சரி கோடரியே செய்து தாருங்கள், ” என்றான் அவன்.
மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.

மிகவும் சிறியதாக இருந்தது அது. “இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“ஏதாவது செய்யுங்கள்,” என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், “நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், “எதையாவது செய்து தாருங்கள்,” என்றான்.

அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், “இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,” என்று அதை உழவனிடம் தந்தார்.

“நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,” என்றார்.

“ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

“இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,” என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், “நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,” என்றார்.

உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.

வண்டியோட்டியைப் பார்த்து, “நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் “போதுமா’ என்று கேட்பான். நீ உடனே, “போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், “ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,” என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, “போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,” என்று உரத்த குரலில் கத்தினான்.

“கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,” என்றான் உழவன்.
எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.

உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.
வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.

“அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?”

“டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,” என்றுஅலறினார் செல்வந்தர்.

சிறுவர் கதைகள் – நயவஞ்சக நரி

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?” என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா… வாங்க… கூட யாரு? மன்னியா?” என்று கேட்டது.

“ஆமாம்!” “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!” என்று கேட்டது.

“ஆமாம்…! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்…! ஏன் கேட்கிறீர்?” என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!” என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது… முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!” என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?” என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!” என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!” என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை… இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்… கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!” என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!” என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்… பேஷ் பேஷ்…

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?” என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!” என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?” என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே… கவலையே படாதே…! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்…! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்…! நானிருக்க பயமேன்?” என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் “கர், கர்’ என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்…! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்… உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!” என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே…! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!” என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

சிறுவர் கதைகள் – பூதம் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, “ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,” எனக் கூறினான்.

“போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,” எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, “ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே…” என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். “இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?” என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, “அமுதா… நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

“அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்…” என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

சிறுவர் கதைகள் – தொலைந்த மூக்கு

அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்

“பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்”

“சரிங்க தாத்தா” – இருவரும்.

விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் “உஷ் உஷ்” என்று கத்தியபடி ஓடினான்.

“அண்ணா என்ன ஆச்சு?” பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

“ஒரு பருந்து வந்தது பார்த்தியா?”

“இல்லையே”

“பெரிய பருந்து”

”அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?”

“அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது”..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்..”அம்மா என் மூக்கு..என் மூக்கு” என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?”

தன் அழுகையை நிறுத்தி “தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை…” மீண்டும் அழுகை…

“அழாமல் சொன்னால் தானே புரியும்…”

“என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்”
நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. “ஓ உன் மூக்கு தானா அது? ” என்றார்.
அமைதியானாள் நந்தினி. “நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது.”

“இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்..”

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.

“ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்.” நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்..”படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்” என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

“ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு…ஜாலி ஜாலி…” மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.

சிறுவர் கதைகள் – பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது.

“மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

“அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி.

“என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

“சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி.

“அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி.

“நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.

சிறுவர் கதைகள் – கடவுளின் கருணை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது துõரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா.

சிறுவர் கதைகள் – தன்னலமற்ற சேவை

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.
இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.

சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.

அன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.

இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. “இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!’ என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், “”அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?” என்று கேட்டான்.

கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, “”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!”

“”இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்றான் அரசன்.

“”நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?” என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.

“”தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!” என்றான் அரசன்.

நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, “”மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,” என்றாள் கிழவி.

“”தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!” என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

சிறுவர் கதைகள் – புத்திசாலி பெலிக்ஸ்

ஒரு ஊரிலே ஏழைத் தாய் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள் நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாக அவன் வளர்ந்து வந்தான்.

அந்த ஊர் அரசன் மிகவும் கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன்.

எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன் சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள் எல்லாரும் அவனுக்கு “மகாவீரன்’ என்ற பட்டத்தைச் சூட்டினர். மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒரு போதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்தி வந்தான். கொடிய காட்டு மிருகங்கள் அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்து நாசஞ் செய்த போது அவன் அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன் மீது மேலும் அன்பு கொண்டனர்.

இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும் அழித்துவிட நினைத்தான் அரசன்.
பெலிக்ஸ்சை எப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்கு யாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்கு இதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான்.

பெலிக்ஸை அரசன் கொல்ல நினைத்த விஷயம் அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும் தாமதியாது அவன் தன்னுடைய தாயையும் அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களான சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்கு மிகவும் கவலையை அளித்தது.

ஒரு நாள்—
அந்த ஊருக்கு ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் மிகவும் பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகை புஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக் கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்த பனைமரம் போல அதன் வால் நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால் அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது.
இதனால் ஊர் மக்கள் வெளியே வர அஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர்.

அவர்கள் வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக் கொல்ல முடியும் என நினைத்த அரசன் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும் பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச் செய்தியை உடனே அறியப்படுத்தினர்.

உடனே அரசன், பெலிக்ஸ்சை தனது அரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்ய முயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் வீசி எறிந்தான். படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினர்.
அரண்மனையில் எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில் பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாங்கள் பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள் பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும் இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை அவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதை வெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான்.
பின்னர் அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டு வண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடு போய் நின்ற அவன், பூதத்தை தன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.

பூதம் ஆவென்று வாயைப் பிளந்து சீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க் குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும் வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல் செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தை எடுத்து அதன் முகம், உடலெங்கும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாத பூதம் தனக்கு இரக்கம் காட்டும்படி மன்றாடியது. தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாது என்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்த பூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின் வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான் பெலிக்ஸ்.

இவ்வளவு நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர்.
பிறகு பூதத்தை மன்னித்து அதை அந்த ஊரை விட்டே போய்விடும்படி கூறினான்.

பூதமும் அங்கிருந்து போய்விட்டது. இவ்வளவு காலமும் கொடியவனாக நடந்து வந்த அரசன் தனது குணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும் அவனையும் அவனது தாயாரையும் தனது ஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸை அரசன் தனது படைத் தளபதியாக நியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.

சிறுவர் கதைகள் – துணிச்சலான சிறுவன்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.

சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.

அவர்கள் வந்ததும், ” இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்” என்று பயமுறுத்தினார்.

இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.

அவனது நண்பர்கள், “ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்” என்று கத்தினார்கள். ” இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்.” என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.

அதற்கு மற்ற சிறுவர்கள், ” அது சரி…உன் தாத்தா சொன்னபோது…சரி என்று தலையை ஆட்டினாயே…அது ஏன்?” என்று கேட்டதற்கு, “எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்”.

குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?…..

எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.

சிறுவர் கதைகள் – குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு அப்பத்தை எடுத்தன. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.

இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது.

அப்பத்தை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது.

இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.

இப்படியே அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது.

ஒற்றுமையற்ற பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.

குழந்தைகளே! ஒரு பூனையாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இத்தனை நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? விட்டுக் கொடுத்தல் பிறரிடம் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், இறைவனுக்கும் அதுவே பிடிக்கும்.

சிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்

ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.

குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.

மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.

ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.

சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.

செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.

ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

“”ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.

தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.
ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.

திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.

சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.
சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?”

“”அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு.

“”உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?”

“”என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர்.

எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.

சிறுவர் கதைகள் – பேயால் வந்த வாழ்வு

முன்னொரு காலத்தில் மதின் என்ற இளைஞன் பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். உச்சி வெயில் அதிகமானது.

அப்போது ஆலமரத்தடியில் படுத்து துõங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது. துõக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்… பேய்… என்று அலறினான்.

“”தம்பி பயப்படாதே… நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன்.”

மதினுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

“”உன் பெயரென்ன தம்பி?”

“”மதின்!”

“”எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?”

“”வேலைத் தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.”

“”நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். நுõறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்த காட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம் அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார்.

“”பிறகு நான் அவரைப் பார்த்து மன்றாடினேன்.

“”ஐயா, தயவு செய்து இந்தச் சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது?” என்று கேட்டான்.

“”சரி, நீ கெஞ்சிக் கேட்டுக் கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்…” என்றார்.

“”பல காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்” என்று கூறிய பேய் மறைந்து போய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்து வானத்தை நோக்கிச் சென்றான். என்னை “”எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றி அடைவாய்,” என்ற பேய் மேகத்தின் நடுவில் மறைந்து போனது.

மதினுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது.

புதிய நகரை அடைந்தான். அங்கே நாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்று கேட்டான்.

“”உனக்குத் தெரியாதா? அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்,” என்றான்.

சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான்.

அவனுக்கு ஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டு தன் அறைக்குச் சென்றான் மதின்.

அங்கிருந்த அழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடு இரவில் விழித்த மதின், தன் அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப் பிடித்துப் பார்த்தபோது “கிர்ர்…’ என்ற சப்தம் கேட்டது.

அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான்.

கீழே பெரிய அறை ஒன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்க மாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன.

துõரத்தில் யார் நின்று கொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்… இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த வாளை உருவி, அவனை வெட்டச் சென்றான் மதின்.

அதற்குள் ரகசிய வழியில் தப்பி விட்டான் அமைச்சன்.
பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச் சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல மூடச் செய்தான்.

இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டான்.

இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான்.
பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல் போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர்.

குடும்பத்துடன் தப்ப இருந்த அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்த அமைச்சன், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம் இப்போது தான் புரிந்தது. மதினை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.

சிறுவர் கதைகள் – விவேகமான வெள்ளாடு

உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.

உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன, ஆனாலும் அவன் சரியாக சப்பாடு போடுவதில்லை, ஒரு நாள் தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை அவை கடித்து சாப்பிட்டன், அதை கண்டு கோபம் கொண்ட உழவர், ஆத்திரமாக “நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள்” என்று விரட்டினார்.

இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.

செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.

அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.

என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.

இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.

சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.

அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.

இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.

அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.

ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.

நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.

அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.

நண்பர்களா நாங்களா? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.

இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.

செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.

ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.

அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.

அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.

இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.

ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.

சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.

பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது.

செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.

இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.

ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.

நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.

மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.

புத்திசாலித்தனத்தால் ஆடுகள் உயிர் தப்பியதை கண்டு ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?

உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைத்துப் பார்த்தன, அவரிடம் இருந்தவரை உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை, எனவே அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தன, அதே நேரத்தில் ஆடுகளை பிரிந்த உழவர் தன் தவற்றை உணர்ந்து ஆடுகளுக்கு நன்றாக தீனி போடுவது என்று தீர்மானித்து ஆடுகளை தேடி காட்டிற்கு வந்தார், எதிரே வந்த ஆடுகள் ஓடி போய் உழவரிடம் மன்னிப்பு கேட்டது, உழவரும் மன்னிப்பு கேட்டு, ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து ருசியான இலைகளை கொடுத்தார்.

நீதிக் கதைகள் – சிங்கமும் நரியும்

ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.

இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.

இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.

சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.

அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.

 

 

நீதிக் கதைகள் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.

அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.

இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

 

நீதிக் கதைகள் – நரியின் தந்திரம் பாட்டி வடை

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள்.

பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி வைத்திருந்தாள். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை வந்தது.

பாட்டி வடைசுடும் கவனத்தில் இருந்தபோது அந்தக் காகம் சந்தற்பத்தை பயன் படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது உட்காந்தது.

இதனைக் ஒரு நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது.

நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பாத்து, நீ என்ன அழகாக இருக்கிறாய்.

உன் சொண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது இனிமையான குரலில் ஒரு பாட்டு கேட்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னது.

மிகவும் அழகான பறவை என்று தன்னை நரி கூறியதால் காகமும் நரியை சந்தோசப் படுத்த எண்ணியது. உடனே காகம் தன் வாயில் வடை இருப்பதை மறந்து தனது இனிமையான குரலில் :”கா” “கா” “கா” என்று கத்தியது.

அப்போது காகத்தின் வாயில் இருந்த வடை கீழே விழுந்து விட்டது. அதனைக் கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமாந்து விட்டது என நினைத்துக் கொண்டு வடையை கவ்வி எடுத்துக் கொண்டு பற்றை மறைவில் இருந்து உண்டது.

மற்றவர்களின் தந்திர வார்தையை நம்பி காகம் ஏமந்தது.

நீதிக் கதைகள் – முயலும் சிங்கமும்

சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராசா என்றும் கூறுவர்.

அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.

ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது.

இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும்.

அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது,

ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.

இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது.

சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதிக் கதைகள் – முதலையும் குரங்கும்

ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.

அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.

ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?’ எனக் கேட்டது.

குரங்கும்..”முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது

குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது.

அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.

அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.

வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது.

தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.

அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.

முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது

வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.

முதலையும் ஏமாந்து திரும்பியது.

நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.

நீதிக் கதைகள் – யுக்தியால் தாகம் தீர்த்த காகம்

ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது

பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.

அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.

அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது.

உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.

 

நீதிக் கதைகள் – உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

 

நீதிக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

பேராசை பெரும் நஷ்டம்

நீதிக் கதைகள் – விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.

 

நீதிக் கதைகள் – உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது.

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

நீதிக் கதைகள் – செய்யும் செயலில் அவதானம் வேண்டும்

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்டினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.

இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.

வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி ஸ்ரையிலாக நடக்க ஆரம்பித்தாள்.

என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே

செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.

நீதிக் கதைகள் – துஷ்ட்டருக்கு அறிவுரை கூறாக் கூடாது

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

 

நீதிக் கதைகள் – பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

நீதிக் கதைகள் – அன்பா, செல்வமா, வெற்றியா சிறந்தது?

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளேவரலாமா ‘ என்று கேட்டனர்.

தந்தை ‘வாருங்கள்’ என்றார்.

‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார்.

ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.

ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.

பின் மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.

உடன் குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார்.

அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.

ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்…அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

நீதிக் கதைகள் – சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்

நாய், சிறுத்தை, குரங்கு
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.

நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.

ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.

எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.

சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது….

”இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்” என்றது.

இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.

இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.

அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.

எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.

குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.

அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.

”இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “”குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.

இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.

அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.

”அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?” என்றது.

காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.

நீதி: வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்

நீதிக் கதைகள் – காகமும் மகாராணியின் நெக்கிளேசும்

ஒரு காட்டில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும் பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந்தது. பெண்காகம் முட்டைகளை அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து பெண்காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது, இருவரும் தமக்கு 5 பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.

அக் காட்டில் ஒரு நரியும் குடும்பமாக வசித்து வந்தது. அந்த நரியும் காகமும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் ஆண்காகம் இரைதேடி வரும் வழியில் வேட்டைக்காரர்கள் காட்டினுள் நுளைவதைக் கண்டது. உடனே காகம் நரி நண்பர் வசிக்கும் இடத்திற்கு சென்று வேட்டைக்காரர் காட்டில் வருவதையும் பாதுகாப்பாக எங்காவது மறைந்து இருக்கும் படியும் கூறியது. அத்துடன் தனக்கும் ஐந்து பிள்ளைகள் பிறக்க உள்ளார்கள் என்றும் நண்பனான நரிக்கு கூறியது. அப்போது நரி தங்களுக்கு பாட்டி வைக்கும்படி கேட்டது. காகமும் அன்று இரவு பாட்டி தர அழைக்க வருவதாக கூறியது. உடனே நரியார் குடும்பம் நன்றி கூறி விட்டு ஓடி ஒழித்துக் கொண்டது.

ஆண் காகம் இரையுடன் பெண்காகம் அடைகாத்துக் கொண்டிருந்த கூட்டுக்கு வந்தது. அப்போது பெண்காகம் அழுது கொண்டிருந்தது. காரணம் வினவிய போது. பாம்பொன்று வந்து தனது முட்டைகளை குடித்துவிட்டதாக கூறிப் புலம்பியது. அதனைக் கேட்ட ஆண்காகமும் விம்மி அழுத்துடன். அந்தப் பாம்பு தமது பிள்ளைகளை அழித்ததுடன் தமக்கு எனிமேலும் பிள்ளைகள் பிறக்க விடமாட்டாது அதனை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தது.

மறு நாள் நரியார் காகம் இருந்த கூட்டடிக்கு சென்று காகத்தை அழைத்தது. காகம்ம் இரண்டும் பறந்து வந்து சோகமாக இருந்தன. அதனை கண்ட நரி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டது. அப்போது ஆஅண் காகம் முழு விபரத்தையும் சொல்லி  புத்திசாலியான நரியிடம் பாம்பைக் கொல்ல ஒரு உபாயம் சொல்லும் படி கேட்டது. நரியும் அவர்களுக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் எண்ணத்துடன் ஆலோசித்தது. மறு நாள் நரி வெளியே சென்ற போது மகாராணியார் ஆற்றில் குழிப்பதற்காக தோழியருடனும் காவலருடனும் வருவதை அவதானித்தது. மகாராணி தனது நகைகள் கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குழித்துக் கொண்டிருந்தார்.

உடனே நரிக்கு உபாயம் தோன்றியது மாகாராணி நாளைக்கு குழிக்கும் போது கரையில் வைத்த நெக்ளெஸ்சை காகம் தூக்கிக் கொண்டு போய் பாம்பின் புற்றுக்குள் போட்டால் அரச காவலாளிகள் பாம்பைக் கொலை செய்து நகைகளை மீட்பார்கள் அப்போது எனது நண்பரின் எதிரி இறந்து விடுவான் என திட்டம் போட்டு, தனது திட்டத்தை காகங்களுக்கு கூறியது. மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காகங்களும் நரியும் அவ் ஆற்றங்கரைக்குச் சென்று சரியான சூழ்நிலை வரும் வரை காத்து இருந்தன.

மகாராணியாரும் வழ்காகம் போல் நகைகள்ல் லழட்டி ஆற்றங்கரையி; வைத்து விட்டு குழிக்கச் சென்றாள். இதனைக் கண்ட காகன் இதுதான் த்ருணம் என எண்ணி ராணி நகைகள் வைத்திருந்த இடத்திற்குச் சென்று நெக்ளெஸை தூக்கிச் சென்றது. காவலாளிகள் காகத்தைத் பின் தொடர்ந்தார்கள். காகம் அந்த நெக்கிளெஸ்சை எதிரியான பாம்பு இருந்த புற்றினுள் போட்டது.. காவலாளாளிகள் நெக்ளெஸ்சை எடுக்க முயற்சித்தார்கள் அப்போது அதனுள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. உடனே பாம்பை அடித்து கொலை செய்தபின் நெக்ளெஸ்சை மீட்டுச் சென்றார்கள். அதன் பின் காகங்கள் நின்மதியாக வாழ்ந்தது.

ஆபத்தான நேரத்தில் காகம் நரியின் குடும்பத்தைக் காப்பாற்றியதால் நரியின் உதவியுடன் காகம் தனது குடும்பத்தை காப்பாற்றியது.

 

நீதிக் கதைகள் – சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

நீதிக் கதைகள் – நேர்மை உயர்வு தரும்

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.

ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

நீதிக் கதைகள் – பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்

நீதிக் கதைகள் – ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா?

ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு  அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.

நீதிக் கதைகள்

வீரபாகுவின் பெருந்தன்மை
Veerabaghu
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது.
ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!” என்றது.
தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர்.
ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.
அப்போது, கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் மற்றவர்களை நோக்கி, “மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களின் மீது குறி பார்த்து அம்பு எய்து கொல்ல முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மற்றொருவன், “முடியவே முடியாது! தண்ணீருக்கு மேலே அவை ஒரு வினாடிக்கும் குறைவாக துள்ளிவிட்டு, உடனே தண்ணீரில் குதித்து விடுகின்றன. அந்த ஒரு வினாடி நேரத்தில், ஒரு மீன் கூட குறிபார்த்து அம்பு எய்த முடியாது” என்றான். மற்றவர்களில் பலர் அதை ஆமோதித்தனர். பிறகு அவர்களுக்குள்ளே விவாதம் ஏற்பட்டது.
அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீலிமா என்ற மிக அழகான இளம்பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனான பிரதாப் என்ற இளைஞனைப் பார்த்து “நீ மட்டும் ஒரு மீனைக் குறி பார்த்து அம்பு எய்தினால், உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்!” என்றாள். அவள் அவ்வாறு கூறியதும், கூட்டத்தில் பரபரப்பு உண்டாகியது. நீலிமாவின் அழகில் அத்தனை இளைஞர்களும் மயங்கி இருந்தனர். ஆனால் நீலிமாவின் மனத்தில் இடம் பிடித்தவன் பிரதாப் மட்டுமே! அவள் கூறியதைக் கேட்டதும் அவன் வில்லை நாணேற்றி, அம்பைத் தொடுத்து, குறிபார்த்து எய்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அவன் இலக்கு தவறியது.
உடனே, சற்று தொலைவில் அமர்ந்திருந்த வீரபாகு என்ற இளைஞன் தன் வில்லில் ஓர் அம்பினைத் தொடுத்து எய்தான். அவன் எய்திய அம்பு ஒரு மீனின் மீது பாய்ந்தது. வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவன் நீலிமாவின் அருகில் வந்தான்.
“ஏய் அழகு சுந்தரி! நீ அறிவித்த போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகவே என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். அதற்கு நீலிமா, “திருமணமா? உன்னுடனா? ஒருக்காலும் இல்லை! முதலில் நான் இதைக் கூறியது பிரதாப்பை நோக்கித்தான்! தவிர, இதை நான் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை” என்றாள்.
“இல்லை! நீ அப்படிச் சொல்லவில்லை!” என்று மறுத்தான். வீரபாகு, அவனது நண்பர்களும் அவன் சொல்வதையே ஆதரித்தனர். அதிலும் குறிப்பாக கங்கா என்ற வீரபாகுவின் நண்பன் நீலிமா தன் வாக்குறுதியை மீறாமல் வீரபாகுவைத்தான் மணம் புரிய வேண்டுமென்று அடித்துக் கூறினான். “முடியவே முடியாது!” என்று நீலிமா கூச்சலிட, “நீலிமா! உன்னை நான் திருமணம் செய்தேத் தீருவேன்!” என்று வீரபாகுவும் சவால் விட்டான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
காட்டுசாதி மக்களிடையே இவ்வாறு அவ்வப்போது சண்டையும், பூசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களில் ஒருவன் ஆபத்தில் சிக்கினால், மற்றவன் விரோதியாக இருந்தாலும், பகையை மறந்து அவனுக்கு உதவி செய்வான்.
ஒருமுறை, வீரபாகு மரத்திலேறி தேன் கூட்டைக் கலைத்து தேன் எடுக்க முயன்றபோது, திடீரென தேனீக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கியபோது, அவன் நிலை தடுமாறி மரத்திலிருந்து விழுந்து விடவிருந்தான்.
அந்த சமயம் பிரதாப் அங்கே தற்செயலாக வந்து சேர, அவன் வீரபாகுவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாகுவை ஆசுவாசப் படுத்திய பிறகு, பிரதாப் அவனிடம், “வீரபாகு! நீலிமா மீது உனக்கு மிகவும் ஆசை என்றால் அவளை நீயே மணந்து கொள்! ஆனால் அவள் உன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்!” என்றான்.
நீலிமாவின் பேச்சை எடுத்தவுடன், வீரபாகு கோபம் கொண்டான். “உன்னுடைய புத்திமதி எனக்குத் தேவையில்லை!” என்று விறைப்பாகக் கூறிவிட்டு அகன்றான். இது நடந்து சில நாள்களுக்குப் பின், இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து காட்டில் வேட்டையாடச் சென்றனர்.
அந்தக் கூட்டத்தில் நீலிமா, பிரதாப், வீரபாகு அனைவருமிருந்தனர். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். அப்போது திடீரென ஒரு புலி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தது. அந்த சமயம் புலியைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அங்கிருந்த குன்றின் மீது தாவியேறி தப்பிக்க முயன்றனர்.
கடைசியில் சென்று கொண்டிருந்த நீலிமா கால் தடுக்கிக் கீழே விழ, புலி அவள் மீது பாய இருந்தது. அதைப் பார்த்த வீரபாகு அங்கிருந்த ஒரு சிறிய பாறையைத் தூக்கி புலி மீது வீச, அடிபட்ட புலி சுருண்டது. வீரபாகு நீலிமாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, அடிபட்ட புலி மீண்டும் எழுந்தது. அதனிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் வீரபாகுவும், நீலிமாவும் குன்றிலிருந்து கீழே குதித்தனர். அதற்குள் அடிபட்ட புலி கீழே விழுந்து இறந்தது.
கீழே விழுந்த அதிர்ச்சியில், நீலிமா மயக்க மடைந்தாள். அவள் இடது முழங்கையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மயக்கத்தைத் தெளிவிப்பதற்காக வீரபாகு அருகில் உள்ள குளத்திற்கு நீர் எடுத்துவரச் சென்றான்.
அப்போது வீரபாகுவின் நேருங்கிய நண்பன் கங்கா குன்றின் மீது இருந்தபடியே வீரபாகுவிடம், “நண்பா! நீலிமாவின் இடது கையில் இரத்தம் கசிவதைப் பார். நீயும் உன் இடது கையில் கத்தியால் கீறி, இரத்தம் சொட்டச் செய்து அவளுடைய ரத்தத்துடன் கலந்து விடு. நம் இன வழக்கப்படி, ஓர் ஆண், ஒரு பெண் இருவரின் ரத்தமும் கலந்தால் அவர்கள் தம்பதி ஆவர்!
இந்த வாய்ப்பை நழுவ விடாதே!” விட்டு என்று சொல்லி ஓடிப் போனான். கங்கா மூலம் நடந்ததைக் கேள்விப் பட்ட பிரதாப் பேயறைந்தவன் போல் ஆனான். பிறகு, அவள் வீரபாகு நீலிமாவைக் கட்டாயத் திருமணம் புரிந்து கொண்டான் என்று வழக்குத் தொடுத்தான்.
பஞ்சாயத்தும் கூடியது! நீலிமா, வீரபாகு இருவரும் முன்னணியில் நிற்க, பஞ்சாயத்துத் தலைவர் அவளை நோக்கி, “பெண்ணே! உன் சம்மதத்துடன் உனது திருமணம் நடக்கவில்லையென்றும், உன்னை பலவந்தப்படுத்தி வீரபாகு அவ்வாறு செய்துள்ளான் என்றும் பிரதாப் வழக்குத் தொடுத்திருக்கிறான். அவன் சொல்வது உண்மையா என்று சொல்! அப்படியானால், வீரபாகு இந்த இடத்திலேயே கொல்லப் படுவான்! அதன் பிறகு, உனக்கு உண்மையிலேயே யார் மேல் பிரியமோ, அவனை நீ மணம் புரியலாம்!” என்றார்.
உடனே, அங்கே ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சற்று நேரம் யோசித்த நீலிமா, “என்னுடைய முழு சம்மதத்துடன் தான் வீரபாகு அவ்வாறு செய்தார்” என்றாள். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு முன் வந்து, “இல்லை! நான் உண்மையைக் கூறுகிறேன்.
கங்கா கூறியதும் எனக்கும் அவ்வாறு நீலிமா மயக்கமாக இருக்கும் போதே காரியத்தை முடித்துவிட ஆசை ஏற்பட்டது உண்மை! அதற்காக என் கையையும் கீறிக் கொண்டேன். ஆனால் நீலிமாவின் ரத்தத்துடன் கலக்க அவள் அருகே சென்ற போது, அவளுடைய முகத்தைப் பார்த்து என் மனம் மாறி விட்டது. ஆகவே நாங்கள் தம்பதி ஆகவில்லை. என்னுடைய குற்றத்திற்காக நான் என்னையே தண்டித்துக் கொள்கிறேன். நான் இந்த காட்டை விட்டு வெளியேறி விடுகிறேன்” என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
” இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா, வீரபாகுவும் நீலிமாவும் ஏன் சம்மந்தமில்லாமல் நடந்து கொண்டார்கள்? தலைவரிடம் நீலிமா, உண்மையைக் கூறி இருந்தால் அவள் விரும்பிய பிரதாபனையே திருமணம் செய்து இருந்திருக்கலாம்.
தவிர யாரை முதலிலிருந்து வெறுத்தாளோ அவனுடன் மனப்பூர்வமாகத் திருமணம் நடந்ததாகப் பொய் சொல்லிவிட்டாள். இவ்வாறு பொய் சொல்வதன் அவசியம் என்ன? அதே போல் வீரபாகு முன்பு, உன்னை என்றாவது ஒருநாள் திருமணம் செய்தே தீருவேன் என்று கூறினான்.
அப்படி இருக்கையில் நீலிமா ஒப்புக் கொண்டபிறகும், எங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டே சென்று விட்டான். இருவரது செயல்களும் எனக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்” என்றது.
அதற்கு விக்கிரமன், நீலிமா சுய நினைவில்லாமல் இருந்ததால் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தாள். அதேபோல் வீரபாகுவுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டது என்று அவள் கூறியது அவளது இனத்திற்கே உரிய நன்றி உணர்வைத்தான் காட்டுகிறது. அதாவது அவர்கள் இன வழக்கின்படி எவனொருவரின் உயிர் ஆபத்தில் இருக்கிறதோ அவனை எவ்வித பாகுபாடும் இல்லாமல் காப்பாற்றுவார்கள்.
அவள் தனது விருப்பமின்றி இந்தத் திருமணம் நடந்தது என்று கூறினாள். வீரபாகுவைக் கொன்று விடுவார்கள். தன்னைக் காப்பாற்றிய ஒருவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவள் பொய் கூறினாள்.
ஆனால் வீரபாகு, நீலிமாவை நேசித்தானே தவிர மீறி கட்டாயத் திருமணம் புரிய நினைக்கவில்லை என்று உண்மையைக் கூறினான். இவ்வளவு நடந்த பிறகும் அவன் அந்தக் கிராமத்தில் இருந்தால் கிராமத்தில் ஒற்றுமை சீல்குலைந்து விடும். ஆகையால் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
சாப விமோசனம்
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! இந்த உலகில் சில சோதிடர்கள் தங்களிடம் வரும் மக்களை பரிகாரம் என்ற பெயரில் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
அப்படி யாரோ ஒரு சோதிடர் தான் உன்னையும் பரிகாரம் என்ற பெயரில் இவ்வாறு அலைய விட்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. அத்தகைய கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!” என்று சொல்லிவிட்டுக் கதை சொல்திவாகர் என்ற பெரும் செல்வர் மகாதானபுரத்தில் வசித்து வந்தார். அவருடைய ஒரே மகளான கலா திருமணப் பருவத்தை அடைந்தவுடன், அவர் மும்முரமாக வரன் தேடத் தொடங்கினார். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தின் பேரில், திருமணப் பேச்சு வார்த்தைகள் தடைப் பட்டுப் போயின. தன் மகளின் திருமணம் தள்ளிக் கொண்டே செல்வதைக் கண்டு திவாகர் கவலையில் ஆழ்ந்தார். அவருடைய மனைவி பிரபா தன் சகோதரன் கோபியின் உதவியை நாடினான். அவன்
கலாவின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோதிடத்தில் புகழ்பெற்ற தனது நண்பன் கௌசிகனிடம் அவளது ஜாதகத்தை காட்டினான். கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தபின், சோதிடன் கௌசிகன், “கலாவின் ஜாதகம் சாட்சாத் சீதா தேவியின் ஜாதகத்தை ஒத்திருக்கிறது. தேவிக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்பட்டது போல் கலாவிற்கும் பல சோதனைகள் ஏற்படவுள்ளன.
ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். நீ ஒரு காரியம் செய்! உன் சகோதரி குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் செல்! அங்குள்ள ராமர் கோயிலில் தேவியையும் ராமரையும் கலா தரிசிக்க வேண்டும். அங்கு தரப்படும் பிரசாதத்தை அந்த ஊரிலுள்ள ஒரு புண்ணியவானுக்கு அதை கலா வழங்கினால் விரைவில் அவள் திருமணம் நடைபெறும்!” என்றான்.
“சரிதான்! ஆனால் ஜெயபுரியில் புண்ணியவான் யார் என்று நாங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? நீயும் எங்களுடன் வந்து, அந்தப் புண்ணியவானை எங்களுக்கு அடையாளம் காட்டு!” என்றான் கோபி. அதற்கு கௌசிகன் சம்மதித்தான். பிறகு, கோபி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் சென்றான். அங்குள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, ராமரையும் சீதையையும் அனைவரும் வழிபட்டனர்.

லத் தொடங்கியது.

பிறகு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தைக் கலா எடுத்துக் கொள்ள, அனைவரும் ஒரு குதிரை வண்டியில் ஜெயபுரியின் தெருக்களை வலம் வந்தனர். ஒரு பெரிய வீட்டின் வாயிலில் கௌசிகன் வண்டியை நிறுத்தச் சொன்னான். பிறகு கலாவிடம் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பிரசாதத்தை அளிக்குமாறு கூறினான். கலாவும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள்.
அவள் நுழையும்போது, வீட்டுக்குள்இருந்து ஓர் அழகான வாலிபன் வெளியே வந்தான். கலாவைப் பார்த்தவுடன் அப்படியே பிரமித்துப் போய் நின்று அவளைக் கண்இமைக்காமல் பார்த்தபடியே நின்றான். அதனால் வெட்கமடைந்த கலா தலையைக் குனிந்து கொண்டு, “நாங்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். பிரசாதம் கொடுக்க வந்தேன். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள்.
அவள் மீது செலுத்திய பார்வையை அகற்றாமல் அந்த வாலிபன், “என் பெற்றோரிடம் இதைக் கொடு!” என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் பெற்றோரை அழைத்தான். அவர்களும் வெளியே வந்தனர். கலாவைக் கண்டு ஆச்சரியமுற்ற அவர்கள் அவளை வரவேற்று உபசரித்தனர்.
பிறகு அவளுடைய நோக்கமறிந்து, வண்டியிலிருந்த அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தனர். கலாவை மிகவும் பிடித்து விட்டதால், அவர்கள் தாங்களாகவே திருமணப் பேச்சைத் தொடங்க, கௌசிகன் அந்த வாலிபனது ஜாதகத்தைப் பரிசீலனை செய்து, பெண்ணின் ஜாதகம் அவனுடன் பொருந்துவதாக அறிவித்தான். அந்த வாலிபனும் சம்மதிக்க, திருமணம் உடனே நிச்சயிக்கப் பட்டது.
வாலிபன் பெயர் வீரபத்திரன் என்றும், தந்தை பெயர் சிவராமன் என்றும் தாயின் பெயர் காமினி என்றும் அறிந்தனர். திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு மறுநாள் ஊர் திரும்புகையில் இரவில் ஒரு சத்திரத்தில் தங்கினர். மறுநாள் காலை கௌசிகன் அருகிலிருந்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது, திடீரென ஒரு ராட்சசன் மரத்திலிருந்து குதித்து, கௌசிகனிடம், “என் கேள்விகளுக்கு பதில் சொல்! இல்லைஎன்றால் கொன்று விடுவேன்!” என்றான்.
கௌசிகன் சோதிடர் மட்டுமன்றி, உலக ஞானமும், துணிச்சலும் உடையவன். அதனால் அவன் சற்றும் பயப்படாமல் ராட்சசனை நோக்கி, “நீ ஏதோ ஒரு சாபத்தினால் இவ்வாறு ராட்சசனாக உலவுகிறாய்! உனக்கு சாப விமோசனம் தான் தேவை! அதற்கான வழியைச் சொல்லுகிறேன். வீணாகக் கேள்வி கேட்காதே!” என்றவுடன் ராட்சசன் அவனை வணங்கி, “நான் மீண்டும் மனிதனாக மாற என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.அதற்கு கௌசிகன், “உனக்கு அபூர்வ சக்தி உள்ளது. அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால், சாப விமோசனம் கிட்டும்!” என்றான். “ஆம்! எனக்கு ஒரு அபூர்வ மந்திரம் தெரியும். ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை உச்சரித்தால், அந்தப் பழம் சக்தி வாய்ந்ததாகி விடும். அதை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்!” என்றான். “அந்த சக்தியை குழந்தை பாக்கியம்அற்ற ஒரு புண்ணியவதியான பெண்ணுக்குக் கொடு!” என்று கௌசிகன் சொல்ல, “எனக்குப் புண்ணியவதி யார், பாவி யார் என்று தெரியாது. நீங்கள் தான் கூற வேண்டும்” என்றான்.சற்று நேரம் தீவிர சிந்தனையில்ஆழ்ந்த கௌசிகன், “அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. நீ இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!” என்று கூறிவிட்டுச் சென்றான். பிறகு அனைவரும் ஊர் திரும்பினர். சில நாள்களுக்குப் பிறகு கலா-வீரபத்திரன் விவாகம் இனிதாக நடந்தது. கலா கணவன் வீடு சென்று தன் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினாள்.

ஆனால், அவளது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. மணமாகி ஓராண்டு முடிந்தும் அவளுக்குக் குழந்தைப் பேறு உண்டாகாததால் அவளுடைய மாமியார் அவளை மிகவும் கடுமையான சொற்களால் வாட்டி வதைத்தாள். மாமனாரும் அவளுடைய உதவிக்கு வரவில்லை. கணவனும் அவளை உதாசீனம் செய்தான். இவ்வாறு, மூன்று ஆண்டுகள் கழிந்தன. வீரபத்திரனின் தூரத்து உறவினரான ராமநாதன் என்பவர் தன் பெண்ணை அவனுக்கு இரண்டாம் தாரமாகத் தர விரும்பினார்.

ஆகையால் அவர், சீதாராமன் என்ற சோதிடரை அணுகி, “நீ சிவராமன் வீட்டிற்குச் சென்று அவருடைய மருமகள் கலாவின் ஜாதகத்தைக் கேட்டு வாங்கு! அதை ஆராய்வது போல் பாசாங்கு செய்தபின் ஜாதகப்படி கலாவிற்குக் குழந்தையே பிறக்காது என்று அடித்துச் சொல்! என் பெண் சுபத்ராவை வீரபத்திரன் மணந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்! இதை நீ ஒழுங்காக செய்தால், உனக்கு நிறையப் பணம் தருவேன்!” என்று ஆசை காட்டினார்.

அவர் கூறியதுபோலவே சீதாராமன் வீரபத்திரனிடம் சென்று கூற, ஏற்கெனவே கலாவை விஷமாக வெறுத்த வீரபத்திரன் பெற்றோர் அவனுக்கு இரண்டாம் தாரமாக சுபத்ராவை மணம் முடிப்பதற்குத் தீர்மானித்தனர்.
விஷயமறிந்த கலாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கௌசிகனை அணுக, அவர் வீரபத்திரனின் வீட்டை அடைந்தார். கலாவின் ஜாதகப்படி அவளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு என்று கூறினார். தொடர்ந்து “அது தாமதமானதற்குக் காரணம் நீங்கள் இருவரும் புரிந்திருக்கும் பாவங்களே! ஆனால், கலாவிற்குக் குழந்தை பிறக்கும் நல்ல வேளை பிறந்து விட்டது” என்றார்.
உடனே சிவராமன் சோதிடர் சீதாராமனின் சோதிடக்கணிப்பை பற்றிக்கூற, கௌசிகன் உடனே சீதாராமனை வரவழைத்தார். அவர் வந்ததும் அவரை நோக்கி, “நாம் இருவரும் பந்தயம் கட்டுவோம். நான் கூறும் சோதிடம் கட்டாயம் பலிக்கும் என்கிறேன். இரண்டு மாதத்தில் அது பலிக்காவிட்டால் நான் தோல்வியை ஏற்பேன். ஆனால் கலா கருவுற்றால், உங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வேன்! சம்மதமா?” என்று சவால் விட, பயந்து போன சீதாராமன் ஊரை விட்டே ஓடிப்போனார்.
உடனே கௌசிகன் ராட்சசனை சந்தித்து, “உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அந்த மகிமை வாய்ந்த பழத்தை இப்போது தா!” என்று கேட்க, அவனும் ஒரு பழத்தை மந்திரம் உச்சரித்துக் கொடுத்தான். கொடுத்த மறுகணமே அவன் கீழே விழுந்து உயிர் நீத்தான். அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்த கௌசிகன் கலாவிடம் அதைத் தந்து உண்ணச் சொன்னார்.
 இரண்டே மாதத்தில் கருத்தரித்த கலா, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கலாவிற்கு திருமணம் நடந்தவுடனே மகிமைவாய்ந்த பழத்தை கௌசிகன் கொடுத்து இருந்தால் அவள் துன்பப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா? அவளை மட்டுமா தவிக்கவிட்டான்?
அந்த ராட்சசனையும் மூன்று ஆண்டுகள் காக்க வைத்தான். அவனை சந்தித்த போதே அந்தப் பழத்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருந்தால் கலாவும் உடனே கருத்தரித்திருப்பாள். ராட்சசனுக்கும் சாப விமோசனம் கிட்டியிருக்கும். கௌசிகனின் இந்த தாமதத்திற்குக் காரணம் தெரிந்தும் நீ மௌமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “கௌசிகன் சோதிடர் மட்டுமே! கடவுள் அல்ல! அவனால் விதியைப் பற்றிக் கூற முடியுமே தவிர விதியை மாற்ற முடியாது. ஒருவருடைய ஜாதக ராசிப்படி, சில நல்ல காரியங்கள் குறிப்பிட்ட நல்ல காலம் வரும் போதுதான் நடக்கும். கலாவின் ஜாதகப்படி அவளுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும் என்றும், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்று முன்னமே கௌசிகன் கணித்துக் கூறினான்.
அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால், அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது. எனவே, அவன் உரிய நல்ல காலம் வரும் வரைக் காத்திருந்து, பிறகே பழத்தை அவளுக்கு அளித்தான். அதேபோல், ராட்சசனுக்கும் அவன் விதிப்படி மூன்று ஆண்டுகள் மேலும் காக்க நேரிட்டது.
ஆகவே கௌசிகன் தாமதம் செய்தான் என்பது தவறு. அவன் நல்ல வேளை கூடி வரும் வரை காத்திருந்தான் என்பதே சரி” என்றான். விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
கடுமையான முயற்சி
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! இரவு, பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக?

உன்னுடைய ஏதாவது லட்சியம் நிறைவேறுவதற்கா, அல்லது வேறு யாருக்காகவோ செய்கிறாயா? கிருபானந்தா என்ற வஞ்சக யோகி ஒருமுறை மூவரை சிரமப்படச் செய்தான்.அவன் கதையைக் கூறுகிறேன், கேள்!” என்றது. ஒரு கிராமத்தில் ராமன், பீமன், சோமன் என்று மூன்று வாலிபர்கள் நண்பர்களாக இருந்தனர். ராமன் கல்வியறிவு உள்ளவன்! பீமன் மல்யுத்தத்தில் கெட்டிக்காரன்.

சோமன் தண்ணீரில் மூழ்கிப் பல வித்தைகளை செய்யக் கூடியவன்! மூவரும் தங்களுடைய பலவித வித்தைகளின் திறமையினால் அந்த கிராமத்து மக்களின் ஆதரவுடன் சொற்ப வருமானம் பெற்றுக் காலம் கழித்தனர். ஒரு சமயம் கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டதால், அவர்கள் வேலை தேடி ஸ்ரீநகரை அடைந்தனர்.

ஸ்ரீநகரில் ஈஸ்வரன் என்ற ஜமீன்தார் வசித்து வந்தார். ஒரு சமயம் அவர் வீட்டிற்கு கிருபானந்தா என்ற யோகி வருகை தந்தார். ஜமீன்தாரின் உபசாரங்களினால் திருப்தியடைந்த யோகி “உன் மருமகள் விரைவிலேயே ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பாள்” என்று வாழ்த்தினார். உடனே, ஈஸ்வரனின் மனைவி, “சுவாமி! எங்களுக்குக் குழந்தையே இல்லை. அப்படியிருக்க பேரன் எப்படிப் பிறப்பான்?” என்று கேட்டாள்.
சற்று நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்த யோகி, “அம்மா! அது தெய்வ வாக்கு. நீங்கள் யாராவது ஒரு வயது வந்த வாலிபனை தத்து எடுத்து அவனுக்குத் திருமணம் செய்து வையுங்கள். அவனுக்கு விரைவிலேயே குழந்தை பிறக்கும்!” என்றார் யோகி. சரியாக அந்த சமயத்தில் ராமன், பீமன், சோமன் ஆகிய மூவரும் ஈஸ்வரன் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.
ஈஸ்வரன் கதவைத் திறந்ததும், அந்த மூவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பாகவே, கிருபானந்த யோகி அவர்களைப் பெயரிட்டு அழைத்து அவர்கள் அங்கு வந்திருப்பதன் நோக்கத்தையும் கூறினார். அதை அவர்கள் மூவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருக்க யோகி தொடர்ந்து, “இந்த ஜமீன்தாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
அவருடைய மனைவி கர்ப்பமாக தசரத மலையில் உள்ள வசிஷ்ட மரத்திலிருந்து பழம் கொண்டு வந்து கொடுங்கள். அதை சாப்பிட்டால் அவள் தாயாவாள்! ஆனால் தசரத மலையைப் பற்றிய ஒரு சிறிய தகவல் மட்டும் என்னால் தரமுடியும். அது மேற்குத் திசையில் இல்லை.
அதனால் மற்ற மூன்று திசைகளிலும் ஆளுக்கு ஒரு திசையாகச் சென்று தேடுங்கள். இரண்டு மாதக்காலத்திற்குள் யார் முதலில் அந்த வசிஷ்டமரத்திலிருந்து பழம் கொண்டு வருகிறானோ, அவனுக்கு ஜமீன்தார் தனது சொத்தில் பாதியையேக் கொடுத்து விடுவார். மூன்று மாதக் காலத்திற்குள் ஒருவராலும் கொண்டு வர முடியவில்லையெனில், மூவரும் திரும்பி வந்து விடுங்கள்.
மூவரில் யார் மிகவும் கடுமையாக முயற்சி செய்தானோ அல்லது கஷ்டமான வேலை செய்தானோ, அவனை ஜமீன்தார் தனது சுவிகாரப் புத்திரனாகத் தத்து எடுத்துக் கொள்வார்” என்றார். அவர்கள் உடனே யோகியை விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். ராமன் வடக்குத் திசையில் சென்றான். போகுமிடமெல்லாம் தசரத மலையைப் பற்றி விசாரித்துக் கொண்டே சென்றான்.
ஆனால் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. வழியில் ஒரு கிராமத்தில் கோவிந்தன் என்ற வியாபாரி தனக்கு அந்த மலையைப் பற்றித் தெரியும் என்றான். உடனே ஆவலுடன் ராமன் அவனை விசாரிக்க, அவன், “என் வீட்டில் ஆறு வாரங்கள் எடுபிடி வேலை செய்! நீ நன்றாக வேலை செய்பவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பதாகத் தெரிந்தால், பிறகு நான் அந்த மலையைப் பற்றி விவரம் கூறுவேன்!” என்றான்.
உடனே, ராமன் வியாபாரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தான். நன்கு கல்வி கற்றிருந்த அவனை, அந்த வியாபாரி வேலைகளில் ஈடுபடுத்தினான். தனது தகுதியையும், செய்யும் வேலையையும் நினைத்து ராமன் தினமும் மனம் வருந்தினான். இருந்தாலும் தசரத மலையைப் பற்றிய விவரத்தை அறிய வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டான்.
ஆறு வாரங்கள் வேலை செய்து முடித்தப்பின், வியாபாரியிடம் தசரத மலையைப் பற்றி ராமன் கேட்டதும், “நீ உழைப்பாளி என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் மாடு போல் உழைத்த உன்னை எப்படி புத்திசாலி என்று கூறுவது? அதனால் உனக்கு சொல்ல மாட்டேன்” என்றான் வியாபாரி.
காலக்கெடுவில் பாதி முடிந்து விட்டதை அலைவதில் பயனில்லை என்று உணர்ந்த அவன் ஸ்ரீநகர் திரும்பத் தீர்மானித்தான். மூவரில் இரண்டாமவன் ஆன பீமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றான். விசித்திரபுரி என்ற கிராமத்தில் அவன் தன் மல்யுத்தத் திறமையைக் காட்டியபோது, அந்த கிராமத்து ஆட்களில் ஒருவனான சூலபாணி “தம்பி! உன்னைப் போன்ற ஓர் ஆள் நான் பல நாள்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன்.
நான் மலை ஏறுவதில் விருப்பம் உள்ளவன்! அஞ்சனமலை என்று ஒன்று அருகில் உள்ளது. அதன்மீது ஏறிப்பார்க்க எனக்கு ஆசை! ஆனால் உன்னைப் போன்ற ஓர் ஆள் என்னுடன் வந்தால் தைரியமாகச் செல்வேன். யார் கண்டது? நீ தேடும் தசரத மலைகூட அங்கிருக்கலாம்!” என்றான்.
உடனே, பீமன் உற்சாகத்துடன் சூலபாணியோடு கிளம்பினான். அந்த மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட பல இடையூறுகளை பீமன் தனது புஜபலத்தினாலும், மல்யுத்தத் திறமையினாலும் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் வெற்றிகரமாக சமாளித்தான். அதற்குள் ஆறு வாரங்கள் ஆகிவிடவே, பீமன் ஸ்ரீநகருக்கு வந்தான். மூன்றாமவன் சோமன் கிழக்குத் திசையை நோக்கிச் சென்றான்.
செல்லும் இடமெங்கும் தசரத மலையைப் பற்றி விசாரித்தும் அவனுக்குத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒருநாள், முல்லையாற்றங்கரையில் அமைந்திருந்த மல்லிகாபுரி கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்ட சோமன், ஆற்றில் குதித்து நீச்சலடித்துப் பல வித்தைகளைக் காட்டி அங்கிருந்தவர்களை பிரமிக்க வைத்தான். அங்கு இருந்தவர்களில் மேகநாதன் என்பவன், “தம்பி! முல்லையாறு கடலில் கலக்கும் இடத்தில், கடலில் மகரத்தீவு என்று ஒரு மிக அழகான தீவு உள்ளது.
அங்கு செல்லவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை! ஆனால் சங்கமப் பிரதேசத்தில் ஏராளமான முதலைகள் இருப்பதால், யாரும் என்னுடன் வரத்தயாராக இல்லை. நீ வருகிறாயா? ஒருக்கால், மகரத்தீவின் அருகிலே நீ தேடும் தசரத மலை இருக்கலாம்!” என்றான். அது கேட்ட சோமன் உற்சாகத்துடன் மேகநாதனோடுப் புறப்பட்டான்.
இரண்டு நாள்கள் முல்லையாற்றில் மேகநாதனுடன் படகில் பயணம் செய்த பிறகு, ஆறு கடலில் சேருமிடம் வந்தது. திடீரென ஏராளமான முதலைகள் அவ்விருவரையும் சூழ்ந்து கொண்டுத் தாக்க ஆரம்பித்தன. சோமன் அத்தனை முதலைகளையும் படகோட்டும் துடுப்பினால் அடித்துப் படுகாயப் படுத்தினான். முதலைகள் இடமிருந்துத் தப்பி, இருவரும் மகரத்தீவை அடைந்தனர்.
அந்தத்தீவில் வாழ்ந்தப் பழங்குடியினர் இருவரையும் சிறைப் பிடித்துத் தங்கள் தலைவன் முன் நிறுத்தினர். பழங்குடியினத்தினரின் தலைவன் அவர்கள் இருவரையும் நோக்கி, “மகர தேவி எங்கள் குலதேவதை! அவளுக்கு நாங்கள் நரபலி கொடுப்பது வழக்கம்! உங்களைப் போல் பயணிகளைத்தான் நாங்கள் பிடித்து வந்து பலியிடுவோம்! இங்கு ஒரு முதலைக்குளம் உள்ளது. உங்கள் இருவரையும் அதில் வீசி எறிவோம்! மகரதேவி முதலையின் உருவில் வந்து உங்களைக் கடித்து உண்ணுவாள்!” என்றான்.
அதைக்கேட்டு, இருவருக்கும் இதயமே நின்று விடும் போலிருந்தது. ஆனால் சற்று நேரத்தில் சமாளித்துக் கொண்ட சோமன், “தலைவா! முதலில் என்னைக் குளத்தில் அனுப்பு! அங்குள்ள முதலைகளிடமிருந்து நான் தப்பி விட்டால், எங்களை எங்களை விட்டுவிடு!” என்றான். அதற்குத் தலைவனும் சம்மதித்தான்.
உடனே, சோமன் முதலைக் குளத்தில் வீசி எறியப் பட்டான். அங்கு பல முதலைகள் அவனைக் கடித்துத் தின்ன முயன்றும், சோமன் அவற்றுக்கு மிக சாமர்த்தியமாகப் போக்குக் காட்டி மின்னலென நீந்திக் கரைக்கு வந்துவிட்டான். தலைவனும் மகரதேவி அவர்களை பலியாக விரும்பவில்லை என்று நம்பி விட்டுவிட, இருவரும் மல்லிகாபுரி திரும்பினர். அங்கிருந்து சோமன் ஸ்ரீநகர் திரும்பினான்.
ஆக, தசரத மலையைக் கண்டு பிடிக்க முடியாமல், மூவரும் ஸ்ரீநகர் திரும்பினர். நடந்ததை எல்லாம் கேட்ட பின்னர் யோகி, “முன்னமே நான் சொன்னபடி, தசரத மலையைக் கண்டு பிடிக்க மிகக் கடுமையாக முயற்சிசெய்தவனை, ஜமீன்தார் தத்து எடுத்துக் கொள்வார் என்று சொல்லி இருந்தேன்.
அதன்படி, உங்களில் ராமன்தான் மிகவும் கஷ்டப்பட்டவன்! ஆகவே, அவனையே தத்து எடுத்துக் கொள்ள ஜமீன்தார் சிபாரிசு செய்கிறேன்!” என்றார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! தசரத மலையைக் கண்டு பிடிக்க பீமனும், சோமனும் தான் மிகக் கடினமாகப் பாடுபட்டார்கள். உயிருக்கே அபாயம் விளைவிக்கக் கூடிய சாதனைகளைப் புரிந்தார்கள். அப்படியிருக்க, கேவலம் எடுபிடி வேலை செய்த ராமனைப் போய் எவ்வாறு யோகி தேர்ந்தெடுத்தார்? என் சந்தேகத்திற்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.
அதற்கு விக்கிரமன், “பீமன், சோமன் இருவரும் உண்மையாகவே பாடுபட்டார்கள் என்றாலும், அவர்கள் செய்தது அவர்களுடைய திறமைக்குப் பொருத்தமான செயல்களே! அபாயகரமான சாதனைகளை அவர்கள் உற்சாகத்துடன் செய்தார்கள். ஒருவன் தனது மனத்திற்குப் பிடித்த வேலையை செய்யும்போது சிரமம் தெரிவதில்லை.
ஆனால் ராமனின் நிலை வேறு! நன்கு படித்திருந்த அவனை ஒரு கொத்தடிமை போல் ஈனமான வேலைகளைச் செய்யச் சொன்னான் அந்த வியாபாரி! அவனுடைய மனத்திற்குப் பிடிக்காத, வேலையை அவனுக்கு செய்ய நேரிட்டது. எதனால்? தசரத மலையைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால்தான்! மூவரின் நோக்கம் ஒன்றானாலும், அவர்களுக்கு செய்ய நேரிட்ட முயற்சிகள் வேறுபட்டவை!
ஆகவே, மூவரில் ராமன்தான் அதிக சிரமப்பட்டான் என்று யோகி தேர்வு செய்தது சரியே!” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
நம்பமுடியாத உண்மை
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை.

உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை வீணாக்குகின்றனர். அத்தகைய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.

ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன்! வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான்.

ஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான்.
அவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், “மகாராஜா! சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது.
அதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது!” என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது “ஆகா! இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை” என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார்.
அடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், “மகாராஜா! ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா? அந்தப் பூ இன்று வரை வாடவில்லை” என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.
அதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. “இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான்! இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை!” என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.
அடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, “மகாராஜா! என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்!” என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.
அதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, “மகாராஜா! என் பெயர் சிவதாஸ்! நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா?” என்று மன்னரையே கேள்வி கேட்டான். “எந்த வாயில் வழியாக?” என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்.
“நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்!” என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். “லஞ்ச வாயிலா? அது என்ன?” என்று மன்னன் கேட்டான். “மகாராஜா! வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு?” என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்.
“என்ன?” என்று துள்ளிக்குதித்த மன்னன் “என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா? என்னால் நம்ப முடியவில்லை!” என்று அதிர்ச்சி யுடன் கூறினான். “மகாராஜா! உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள்? ஆம்! அது நம்ப முடியாத உண்மை தான்! நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல!” என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.
பல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, “இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை!” என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, “உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்!” என்றும் அறிவித்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா!
ரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள்! ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள்! சர்மாவின் நாணயமும் அப்படியே! அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.
அதற்கு விக்கிரமன், “முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம்! முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.
ஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவப்பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
குணசேகரின் கதை
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதை தன் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா, உன்னைப் போல் சிலர் வாழ்க்கையில் லட்சியவாதியாகத் திகழ்பவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைய அரும் முயற்சி செய்வார்கள்.

ஆனால் சிலர் வாழ்க்கையில் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் ஞானிபோல் திரிபவர்கள் திடீரென தடம்மாறி பயங்கர முயற்சி செய்து பல ஆண்டுகளாய் அடைய நினைத்ததை சில நாள்களிலேயே பெற்றுவிடுவர். அப்படிப்பட்ட குணசேகரனின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்றது.

விராக நாட்டை ஆண்டு வந்த சந்திரவர்மன் என்ற சிற்றரசருக்கு இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். பெரியவன் குலசேகரன் இளையவன் குணசேகரனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தான். சிறு வயது முதல் தான் மன்னனாவது பற்றி குலசேகரன் கற்பனை செய்வதுண்டு. தனக்கு சமமான அந்தஸ்து படைத்தவர்களுடன் மட்டுமே பழகுவான். ஆனால் குணசேரகன் ஆசாபாசங்கள் அற்றவன். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதங்கள் அவனுக்குக் கிடையாது. அவனுக்கு ஆட்சிபுரியும் ஆசை சிறிதுமில்லை.

இருவருடைய பிறந்தநாளையும் சந்திரவர்மர் மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அவ்வாறு அவர்களின் பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவர்கள்இருவருக்கும் ஒரு கருடனின் பொம்மை பரிசாகக் கிடைத்தது. அதை அனுப்பியவர் சந்திரவர்மரின் குலகுரு சம்புநாதர்! அந்த பொம்மை பெரிதாக இருந்தது. அது மட்டும்இன்றி, அதன் காதருகில் பொருத்தப் பட்டிருந்த சாவியைத் திருகினால் அது சற்று நேரம் வானில் பறந்து சென்று திரும்பியது. அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செலுத்த முடியும்.
தங்களுக்குப் பரிசாகக் கிடைத்த பொம்மையை எடுத்துக் கொண்டு இருவரும் நந்தவனத்திற்குச் சென்றனர். முதலில் குலசேகரன் அதன் மீதேறி அமர்ந்து சாவியை முடுக்க, அது பறந்தது. சற்று நேரம் பறவையில் பறந்து களித்தபின், தன் தம்பிக்கு அதை அளித்தான். அப்போது அரண்மனை வேலைக்காரி ஒருத்தியின் மகனான சாரதி அந்தப் பறவையில் தானும் அமர்ந்துப் பறப்பதற்கு விரும்பினான்.
அவனுக்கு அது தகுதியற்ற ஆசை என்று அவன் தாய் உணர்த்தினாள். அதைத் தற்செயலாக கவனித்த குணசேகரன் அவளிடம் “உன் மகன் சாரதி எனக்கு சமமான வயதுடையவன். இந்த வயதில் இத்தகைய ஆசை தோன்றுவது நியாயமே! ஆகவே, பொம்மை மீது அமர்ந்து பறக்க அவனுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் பறவை மீது ஏறாமல் சாரதியை ஏறச் சொன்னான். அதைக்கண்ட குலசேகரன் ஓடி வந்து அவனைத் தடுத்தான்.
அவன் செய்கையை அனைவரும் ஆதரித்தது குணசேகரனுக்கு வியப்பையும் வருத்தத்தையும் அளித்தது. “சாரதி குதிரையில் உட்காரக்கூடாது என்றால் நானும் அதில் உட்கார மாட்டேன்” என்ற குணசேகரன் “நான் குலகுரு சம்புநாதரிடம் சிஷ்யனாகச் சேர்ந்து, இதேபோல் ஒரு பொம்மையைப் படைத்து அதில் சாரதியை உட்காரச் செய்வேன்” என்றான்.
அப்போது, சந்திரவர்மருக்கும் அதே யோசனை தோன்றியது. தன் புதல்வர்கள் இருவரையும் தன் குருகுல சம்புநாதரிடம் சீடர்களாக அமர்த்தி ராஜநீதி, பொறியியல், பொருளாதாரம் போன்ற அறிவியல் பாடங்களைக் கற்கட்டும் என்று எண்ணி, சம்புநாதரின் குருகுலத்தில் சேர்த்தார். சேர்ந்த நாள் முதல், குலசேகரன் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள, குணசேகரன் பொறியியலில் மிக்க ஆர்வம் காட்டினான். சில நாள்களில் குணசேகரன் தான் கூறியது போல் ஒரு கருட பறவையைத் தயாரித்து அதில் சாரதியை ஏறச் சொன்னான். அவனுடைய சமத்துவ மனப்பான்மையைக் கண்டு வியந்து பாராட்டிய சம்புநாதர், “நீ சாதாரண மனிதன்னல்ல, நீ ஒரு மகான்!” என்று விமரிசனம் செய்தார்.
குருகுல சம்புநாதரிடம் கல்வி பயின்று முடித்தபின் இருவரும் அரண்மனை திரும்பினர். ஆனால் இருவரின் போக்கும் முற்றிலும் வேறுபட்டிருந்ததைக் கண்டு கவலையுற்ற சந்திரவர்மர் சம்புநாதரிடம், “குலசேகரன் தங்களிடம்இருந்து அரசியலை நன்குக் கற்றுக் கொண்டு விட்டான் ஆனால் குணசேகரன் அரசியலைப் பற்றிக் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லையே!” என்றார் மன்னர்.
“அவனுக்கு ஆட்சி புரிவதில் ஆர்வமில்லை. அதனால்தான் அவன் அரசியலை ஆர்வத்துடன் கற்கவில்லை” என்றார் சம்புநாதர். “குருநாதரே! என் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவனை மன்னன் ஆக்க விரும்புகிறேன்” என்றார் சந்திரவர்மர். ஆனால் சந்திரவர்மருடைய யோசனை அவருடைய தந்தைக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் சரியாகத் தோன்றவில்லை.
ஆகையால் அவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் சந்திரவர்மர் அயல் ராஜ்யத்தின் மீது படையெடுத்து, வெற்றி கண்டு, அதை குணசேகரனுக்கு உரிமையாக்கி விடலாம் என்று கருதினார்.
அப்போது, விசால ராஜ்யத்து இளவரசி சந்திரகலாவின் சுயம்வரம் அறிவிக்கப்பட்டு, அதற்கு பல நாட்டு இளவரசர்கள் அழைக்கப்பட்டுஇருந்தனர். உடனே, மன்னர் மூத்தவன் குலசேகரனுக்கு பதிலாக குணசேகரனையே சுயம்வரத்திற்கு அனுப்ப எண்ணினார். சந்திரகலா விசாலராஜாவிற்கு ஒரே பெண்! அதனால், அவளை மணம் புரிந்தால், குணசேரன் எதிர்காலத்தில் விசாலராஜ மன்னன் ஆகிவிடுவான் என்ற நப்பாசைதான் காரணம்! அதைப்பற்றி மன்னர் சந்திரவர்மர் குணசேகரனிடம் கூறியபோது, அவனும் முதலில் சுயம்வரத்திற்குச் செல்லவே விரும்பினான். ஆனால் குலசேகரன் சந்திரகலாவை விரும்புவதையறிந்த அவன், உடனே தன் விருப்பத்தை கைவிட்டு விட்டாள். அதனால் குலசேகரன் மட்டும் சுயம்வரத்திற்குச் சென்றான்.
பல ராஜ்யங்களில் இருந்து மன்னர்களும், இளவரசர்களும் சந்திரகலாவின் கரம் பற்ற விரும்பி சுயம்வரத்தில் கூடியிருந்தனர். சந்திரகலா தன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்த போது, திடீரென ஒருவன் முன்னே வந்து அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு, “என் பெயர் மித்ரபிந்தன்! நான் சந்திரகலாவை மிகவும் நேசிக்கிறேன். அவள் எனக்குத்தான் உரியவள்! அதனால் நான் இவளை என்னுடைய மகாபர்வத ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு வீரம் இருந்தால், போரில் என்னைத் தோற்கடித்தப் பிறகு, சந்திரகலாவை அழைத்துச் செல்லுங்கள்!” என்று சவால் விட்டுவிட்டு, அங்கு தயாராக இருந்த தன் குதிரைமீது அவளை பலவந்தமாக ஏற்றிக் கொண்டு, விரைந்து வெளிஏறினான்.
சந்திரகலாவின் தந்தை வீரகுப்தர், தன் மகளை கயவன் மித்ரபிந்தனிடம்இருந்து மீட்டு வரும் இளவரசனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துத் தருவதுடன், தன் ராஜ்யத்தையும் அளிப்பதாக அறிவித்தார். உடனே சில நாள்களிலேயே, பல மன்னர்கள் மகாபர்வதத்தின் மீது படையெடுத்து, சந்திரகலாவை மீட்க முயன்றனர்.
ஆனால், மலைப்பிரதேசமான மகாபர்வத ராஜ்யத்தோடு போரிடுவது மிகக் கடினமாக இருந்தது. படைஎடுத்துச் சென்ற மன்னர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அவ்வாறு, போர்க்களத்தில் உயிர் நீத்தவர்களில் குலசேகரனும் ஒருவன்!
தன் சகோரதன் கொல்லப்பட்டதையறிந்த குணசேகரன் மித்ரபிந்தன் மீது தானே போர்தொடுக்க முடிவு செய்தான். ஆனால், மற்றவர்களைப் போல் உடனே படையெடுத்துச் செல்லாமல், முதலில் மித்ரபிந்தனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முற்பட்டான்.
மித்ரபிந்தன் மகாபர்வதக் கோயிலின் அம்மன் ருத்ரபைரவியை சிறு வயது முதல் ஆராதனை செய்து, அம்மனிடமிருந்து பல விசேஷ சக்திகளைப் பெற்றிருந்ததாகத் தெரிந்து கொண்டான். ஒருமுறை ருத்ரபைரவி அவனுடைய கனவில் தோன்றி தனக்கு இரத்த தாகம் ஏற்பட்டுள்ளதாகவும், நூறு மன்னர்களை அவளுக்குப் பலியிட்டால், அவன் மகா பலம் பொருந்தியவனாகத் திகழ வரம் தருவதாகவும் கூறினாளாம்! ருத்ரபைரவியின் சூலாயுதத்தைக் கொண்டு மித்ரபிந்தனை யாராவது தாக்கினால் மட்டுமே அவன் இறப்பான் என்றும் கூறினாள்.
மேற்கூறிய தகவல்களை அறிந்த பிறகு, குணசேகரன் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டபின், அவன் தனியாக மாறுவேடத்தில் மகாபர்வதம் சென்றான். ஒருநாள் நள்ளிரவில், மித்ரபிந்தன் சந்திரகலாவுடன் ருத்ரபைரவியின் கோயிலுக்குச் சென்றபோது, அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தான். அம்மனின் சன்னிதிக்கு மித்ரபிந்தன் சென்றதும் குணசேகரன், விரைந்து கருவறைக்குள் புகுந்தான். அம்மனின் கையிலிருந்த சூலத்தை எடுத்து, அவள் முன்னிலையில் மித்ரபிந்தன் மார்பில் சூலத்தைப் பாய்ச்சி, அவனைக் கொன்றான். உடனே குணசேகரன் முன் தோன்றிய அம்மன், “இத்துடன் நூறு இளவரசர்கள் பலியாகி விட்டனர். இறுதியாக நூறாவது இளவரசனை பலிகொடுத்த உனக்கு நான் வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ, கேள்!” என்று சொல்ல, மித்ரபிந்தனைத் தவிர அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும் என வரம் கேட்க, அம்மனும் அவ்வாறே வரம் தந்தாள்.
உயிர் பெற்று எழுந்த மற்ற மன்னர்களையும் இளவரசர்களையும் நோக்கி “உங்களுக்கு உயிர் கொடுத்த குணசேகரனை உங்கள் சக்கரவர்த்தியாகக் கருதுங்கள்!” என்று கூறி மறைந்தாள்.
கதையை இந்த இடத்தில் நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! குணசேகரனின் செயலைப் பார்த்தால் வியப்பாக இல்லையா? அரசாள்வதில் ஆசையே இல்லை என்று ஆரம்ப முதல் சொல்லி வந்தவன் இறுதியில் எப்படி மாறி விட்டான் பார்த்தாயா? தவிர, மித்ரபிந்தனை சாதாரண மனிதர்களினால் கொல்ல முடியாது என்று அம்மன் கூறியிருக்க, அவனை குணசேகரனால் எவ்வாறு கொல்ல முடிந்தது? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “ராஜ்யம் ஆளும் ஆசையினால் குணசேகரன் மித்ரபிந்தனைக் கொல்லவில்லை. தன் சகோதரனைக் கொன்றவனைப் பழி தீர்க்க எண்ணியே அவன் மித்ரபிந்தனைக் கொன்றான். தன் சகோதரன் மட்டுமன்றி, மற்றும் பல மன்னர்களை அநியாயமாகக் கொன்று பலியிட்ட மித்ரபிந்தனை பழிவாங்கவே அவன் அவ்வாறு செய்தான். சாதாரண மனிதர்களினால் மித்ரபிந்தனைக் கொல்ல முடியாது என்று ருத்ரபைரவி கூறியிருந்தது உண்மையே! ஆனால் குணசேகரன் மற்றவர்களைப் போல் சராசரி மனிதன் அல்ல! நற்குணங்கள் பொருந்திய உத்தம புருஷன்! ஆகவே, சராசரி மனிதர்களிலிருந்து அப்பாற்பட்ட குணசேகரனால் மித்ரபிந்தனைக் கொல்ல முடிந்ததில் வியப்பில்லை!” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
சுயநலத்தின் விளைவு

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.

 

ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி என்பவனின் கதையைக் கூறுகிறேன்” என்று கதை சொல்லலாயிற்று: மாணிக்கபுரியில் வசித்து வந்த பிரபல வியாபாரி பத்மநாபன் தன் ஒரே மகளான பிரத்யுஷாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்.

தன்னுடைய  நண்பரின் மகனான ஆனந்தனுக்கேத் தன் மகளை மணமுடிக்க முடிவும் செய்தார். ஆனால், திடீரென, திருமணத்திற்கு சில தினங்கள் முன் பிரத்யுஷாவிற்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது. அவளால் பேசவே முடியாமல் வாய் அடைத்துப் போனது. இதனால் பத்மநாபன் துடிதுடித்துப் போனார். பல ஊர்களில்இருந்து தலைசிறந்த வைத்தியர்களை வரவழைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. கடைசியில் ஒருநாள் தனஞ்சயன் என்ற வைத்தியர் அவளைப் பரிசோதித்து அவளுடைய நோய் என்னவென்று கண்டு பிடித்தார். அவர் பத்மநாபனை நோக்கி, “உங்கள் மகளின் குரல்வளை நரம்புகள் செயலற்று விட்டன.

 

அதனால் அவளால் பேச முடியவில்லை. இந்த நோயை தசமூலம் எனும் மூலிகையினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மூலிகை வங்காளக் கடலில் உள்ள நாகத்தீவில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அங்கு செல்வது மிகவும் கடினம்!” என்றார்.
வைத்தியர் சொன்னதைக் கேட்டு ஆனந்தன், “வைத்தியரே! நான் பிரத்யுஷாவிற்காக தசமூல மூலிகையை உலகின் எந்தத் திசையிலிருந்தாலும் எடுத்து வருவேன். அந்த முயற்சியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை!” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான்.
அவனைப் பெருமிதத்துடன் பார்த்த தனஞ்செயர், “நீ அந்த மூலிகையை நீ எப்பாடுபட்டாவது எடுத்து வந்தால், அது பிரத்யுஷாவிற்கு மட்டுமன்றி, அதே நோயால் பீடிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கும் பலன் கிடைக்கும். நீ தனியாகச் செல்ல வேண்டாம். உன்னுடன் என் சீடன் சஞ்சய் வருவான். அவனையும் அழைத்துச் செல்!” என்றார்.
ஆனந்தனின் நண்பன் சிவநாதனும் அவனுடன் செல்ல முன் வந்தான். அங்கு இருந்தவர்களில் ஒருவனான கபாலி, “எனக்கு வீரதீர சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் பயணத்தில் நானும் கலந்து கொள்வேன். நால்வருமாகச் செல்வோம்! வெற்றியுடன் திரும்புவோம்!”

ஒரு நல்ல நாளில் நால்வரும் மாணிக்கபுரியை விட்டுக் கிளம்பினர். கால்நடையாகப் பல நாள்கள் சென்றபின் கிழக்குக் கடற்கரையான வங்கக் கடலை அடைந்தனர். ஒரு கட்டுமரப் படகில் நால்வரும் நாகத்தீவை நோக்கிப் பயணித்தனர். முதல் ஐந்து நாள்கள், பயணத்தில் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆறாம் நாளன்று திடீரென ஒரு திமிங்கிலம் தன் வாலைச் சுழற்றி அவர்களுடைய கட்டுமரத்தையடிக்க, அது துண்டு துண்டாக உடைந்தது. நால்வரும் கடலில் மூழ்கினர். ஆனந்தன் கடலுக்குள் மூழ்கவிருந்த சமயம், அவன் நண்பன் சிவநாதன் உடைந்த படகின் ஒரு துண்டை அவனிடம் தள்ளிவிட்டான். தனக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறத் திரும்பினான்.

 

ஆனால் சிவநாதனைக் காணவில்லை. மற்ற இருவரும் சற்றுத் தொலைவில் உடைந்தப் படகுத்துண்டுகளைப் பிடித்துக் கொண்டு மிதப்பது தெரிந்தது. தனக்குதவி செய்த நண்பன் மட்டும் காணாமற்போனதைக் கண்டு ஆனந்தன் வருந்தினான். மிதந்து கொண்டே சென்ற மூவரும், கடலின் நடுவில் இருந்த குன்றுகள் சூழ்ந்த ஒரு தீவில் ஒதுங்கினர். அப்போது வானில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்தது.
அந்தப் பறக்கும் தட்டு அவர்கள் இருக்குமிடத்தில் கீழே இறங்கியது. அதில் மிகவும் வயதான ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் மூவரும் நோக்க, அவர், “பயப்படாதீர்கள்! நானும் உங்களைப் போல் மனிதன்தான்! வானில் பறக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு! அதற்காகக் காலமெல்லாம் முயன்று இந்தப் பறக்கும் தட்டை உருவாக்கினேன்” என்றார். “ஐயா! தசமூலம் எனும் மூலிகையைத் தேடி நாங்கள் நாகத் தீவிற்குப் புறப்பட்டோம். அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று ஆனந்தன் கேட்டான்.

 

“இதுதான் நாகத்தீவு! மலையின் மீது வஞ்சிநகர் என்ற ஊர் உள்ளது. அங்கு இந்தப் பறக்கும் தட்டில்தான் செல்ல வேண்டும்! உங்களில் யாராவது தன் இளமையை எனக்குத் தியாகம் செய்தால், இதை நீங்கள் எடுத்து உபயோகிக்கலாம்!” என்றார் அந்த கிழவர்! உடனே சஞ்சய் தன் இளமையைத் தியாகம் செய்ய முன் வந்தான். ஆனந்தன் அவனைத் தடுத்தும் சஞ்சய் கேட்கவில்லை.

உடனே, கிழவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை சஞ்சய் உச்சரிக்க, அவன் சிறிது நேரத்தில் கிழவனாக மாறினான். கிழவர் குமரனாக மாறினார். குமரனான கிழவர் ஆனந்தனிடம் பறக்கும் தட்டைக் கொடுத்தார்.
பிறகு ஆனந்தன், கபாலி இருவர் மட்டும் பறக்கும் தட்டில் ஏறி வஞ்சிநகரை சேர்ந்தனர்.
வஞ்சிநகரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. அந்த ஊரிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் மிருகங்களின் தலைகளுடனும், மனிதர்களின் உடலுடனும் தென்பட்டனர். கிழவர்களும், கிழவிகளும் மட்டும் முழு மனித வடிவத்தில் இருந்தனர். அங்கு யாரை என்ன கேட்பது, தசமூல மூலிகையை எப்படித் தேடுவது என்று புரியாமல் அவர்கள் அலைந்து
திரிந்து கடைசியில் ஒரு கிழவியின் குடிசையை அடைந்தனர்.
அந்தக் கிழவியிடம் தசமூல மூலிகையைப் பற்றிக் கேட்டனர். அதற்குக் கிழவி, “அந்த மூலிகை இளவரசியின் நந்தவனத்தில் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பெற முடியாது. இளவரசியே இப்போது ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள்” என்றாள்.
“யார் அந்த மந்திரவாதி? ஏன் இந்த ஊரில் இளவயதினர் விசித்திரமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்?” என்று கபாலி கேட்டான். “அது பெரிய கதை! மகாதம்பன் என்ற மந்திரவாதி இளவரசி நந்தினியை அடைய விரும்பினான். ஆனால் இளவரசிக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட மந்திரவாதி இந்த ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் மிருகத்தலைகளுடன் தோன்றுமாறு சபித்து விட்டான். எங்களைப் போன்ற வயதானவர்களை விட்டுவிட்டான். இளவரசி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே, சாபத்தை நீக்கிக் கொள்வான் என்று கிழவி சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக மந்திரவாதி சென்று கொண்டிருந்தான்.

உடனே கபாலி அவன் எதிரில் போய் நின்று, “ஏய் மந்திரவாதி! உன் அக்கிரமத்தை ஒடுக்க நான் வந்துஇருக்கிறேன். மரியாதையாக, உன் சாபத்தைத் திரும்பப் பெறு!” என்று துணிச்சலுடன் கூறினான். “யாரடா நீ? நான் மந்திரவாதி மகாதம்பன்! என்னிடமா விளைாயடுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடன் கூவிக் கொண்டே, அவன் தன் மந்திரக்கோலை உயர்த்தினான். உடனே, சற்றும் எதிர்பாராதவிதமாய், கபாலி அவன் மீது பாய்ந்து அவன் மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டான்.

 

மந்திரக்கோல் கை மாறியதும் தன் சக்தியை இழந்த மந்திரவாதி தப்பியோட முயலுகையில், அவனை ஆனந்தனும், கபாலியும் பிடித்துக் கட்டிப்போட்டனர். உடனே, செய்தி அறிந்த இளவரசி அங்கு வந்து மந்திரவாதியை சிறையிட கட்டளை இட்டாள். பிறகு, ஆனந்தனையும், கபாலியையும் ராஜமரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரம் செய்தாள். அவர்கள் அங்கு வந்ததன் நோக்கத்தையறிந்து, தசமூல மூலிகைகளை வேண்டிய அளவு தன் நந்தவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.
செல்லுமுன், கபாலி அங்குள்ள மக்களுக்கு மந்திரக்கோலைப் பயன்படுத்தி சில மந்திர உச்சாடனங்கள் செய்து சுய உருவம் கொடுத்தான்.

வஞ்சிநகரை விட்டுச் செல்லும் போது ஆனந்தன், “கபாலி!  இனி அந்த மந்திரக்கோல் தேவை இல்லை. அதைத் தூக்கி எறிந்து விடு!” என்றான்.

ஆனால் கபாலி மந்திரக்கோலை தன்னிடமே வைத்துக் கொண்டான். பிறகு, இருவரும் தாங்கள் கிழவரையும், சஞ்சயையும் விட்டு வந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. சிவநாதன் அங்கு உயிருடன் காணப்பட்டான். சஞ்சய் பழையபடி வாலிபனாக மாறிஇருந்தான். கிழவர் பழையபடி கிழவராகவே இருந்தார்.

ஆனந்தனைக் கட்டித் தழுவிய சிவநாதன், “நண்பா! கடல் அலைகள் என்னை வேறு திசையில் தள்ளிவிட்டதால் நான் உங்களைப் பிரிந்து விட்டேன். பிறகு, சிரமப்பட்டு இங்கு வந்து விட்டேன்!” என்றான். கிழவரிடம் பறக்கும் தட்டை ஒப்படைத்துவிட்டு, நால்வரும் மாணிக்கபுரிக்குத் திரும்பினர்.

தசமூல மூலிகையின் மகிமையினால் பிரத்யுஷா விரைவிலேயே குணமடைந்தாள். ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஆனந்தன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியின் மந்திரக்கோலைக் கைப்பற்றித் தன்னுடைமையாக்கிக் கொண்ட கபாலி அதை வைத்து மந்திரவித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்க முயன்றான். ஆனால் அந்த மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி, கபாலியை நன்றாக அடித்துத் துவைக்க, அவன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான்.
இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கபாலியின் கதியைப் பார்த்தாயா? கபாலியின் மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி அவனையே நையப் புடைத்தது. இவ்வாறு நடக்கக் காரணம் என்ன? வாள் பிடித்தவனுக்கு வாளினால்தான் சாவு என்பதுபோல் மந்திரசக்திகளினால் என்றாவது ஒருநாள் அவற்றைக் கையாள்பவனுக்கே தீங்கு நேரும் என்பது உண்மையா? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “நீ சொல்வது சரியல்ல! ஆனந்தனுக்கு  உதவி புரிவதற்காகவே முதலில் அவனுடன் சிவநாதன், சஞ்சய், கபாலி ஆகியோர் சென்றனர். சிவநாதன் தன் நண்பன் கடலில் மூழ்க இருக்கையில் அவனுக்கு உதவி செய்து உயிரைக் காப்பாற்றினான். சஞ்சய் ஆனந்தனின் நோக்கம் நிறைவேற தன் இளமையையே தியாகம் செய்தான். கபாலி மந்திரவாதியிடமிருந்து மந்திரக் கோலை பறித்த பிறகு, அவன் மனத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. மந்திரக்கோலைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்த எண்ணியதால் வந்த விளைவுதான் அது!” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கெண்டது.

ராமு சுயநலவாதியா?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கிச் செல்கையில், அதனுளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! நீ இந்த பயங்கர மயானத்தில் எதற்காக கஷ்டப்படுகிறாய்?  பரோபகாரச் சிந்தையுடன் பொது நலத்திற்காக இப்படிப் பாடுபடுகிறாயா? ஏன் என்றால் உலகில் பலர் பரோபகாரம், பொதுநலம் என்று பேசுவார்கள். ஆனால் சுயநலவாதிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராமு என்பவனின் கதையை இப்போது சொல்லப் போகிறேன். கதை சொல்லத் தொடங்கியது.

விஜயபுரியில் ரத்னாகரன் என்ற பணக்கார வியாபாரிக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். முதல் இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு தங்கள் தந்தையுடன் கூட இருந்து அவருடைய வியாபாரத்தில் உதவி செய்து வந்தனர். ஆனால் அவருடைய மூன்றாவது பிள்ளையான ராமுவிற்கு மட்டும் வியாபாரத்தில் நாட்டமேயில்லை. இயற்கையிலேயே மிகவும் தயாள குணம் படைத்த ராமு அவனை நாடி யார் எந்த உதவி கேட்டாலும் உடனே செய்து விடுவான். ராமுவின் போக்கு அவன் பெற்றோருக்குக் கவலையளித்தது.

 

ஒருநாள் ராமுவைப் பற்றி ரத்னாகரன் கவலையுடன் தன் நேருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய நண்பர், “எனக்கு ராமுவைப் பற்றி நன்றகாத் தெரியும். மிகவும் தயாள குணம் படைத்தவன். என்னுடைய பெண் மனோரமா மிகவும் புத்திசாலி. அவளை ராமுவிற்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் அவனைத் திருத்தி விடுவாள்” என்றார். நண்பருடைய யோசனை சரியென்று தோன்றவே, ரத்னாகரன் அதற்கு சம்மதிக்க விரைவிலேயே ராமுவின் திருமணம் மனோரமாவுடன் இனிதே நடைபெற்றது. ஒருநாள் மனோரமா ராமுவிடம், “உங்களை உதவி செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் உதவியினால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று நீங்கள் யாருக்கெல்லாம் தானம் கொடுத்தீர்களோ அவர்களிடம் சென்று ஆராய்ச்சி செய்யுங்கள். அவர்கள் உங்கள் உதவியினால் சரியானபடி பயன் அடைந்தார்கள் என்று தோன்றினால், நீங்கள் தானம் செய்து கொண்டேயிருங்கள். இல்லையேல் உங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்” என்றாள்.

 

அதை ஒப்புக் கொண்ட ராமு, முதலில் சமீபத்தில் தான் பண உதவி செய்திருந்த சங்கரன் வீட்டிற்குச் சென்றான். அங்கு சங்கரன் கவலையுடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தான். ராமுவைப் பார்த்து அவன், “நீ தந்த பணத்தில் விருந்து தயாரித்து உண்டதில், என் பிள்ளைக்கும், தந்தைக்கும் உடல் நலம் கெட்டு விட்டது. பணமெல்லாம் விருந்தில் கரைத்து விட்டோம். இப்போது மருத்துவருக்கு வேறு தண்டச் செலவு” என்றான்.

இதுபோல் இன்னும் சிலர் வீடுகளுக்குச் சென்றான். ஆனால்  ஒருவர் கூட ராமு கொடுத்தப் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்தவில்லையென்று தெரிந்தது. ராமு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.

தன் மனைவியிடம் தான் கண்டறிந்ததைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, “நீ சொன்னபடியே தான் நடந்திருக்கிறது. இனிமேலும், நான் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே விரும்புகிறேன். அது அவர்களுக்குப் பயன்படும்படி எந்த முறையில் உதவி செய்யலாம்?” என்று கேட்டான் ராமு. அதற்கு அவள், “மனிதர்களுக்கு மிக முக்கியமானது உடல் நலம்! மருத்துவத் தொழில் மூலம் மற்றவர்களுக்குப் படி உதவி செய்யலாமே!” என்றாள்.

“மருத்துவத் தொழிலா? அதை நான் கற்றுக் கொள்ளவே பல ஆண்டுகள் பிடிக்குமே?” என்று கவலையுடன் கேட்டான் ராமு. “வேதாரண்யத்தில் வைத்தியானந்தா என்ற யோகி இருக்கிறார். அவரிடம் கற்றுக் கொண்டால் ஒரே ஆண்டில் நீங்கள் நல்ல மருத்துவர் ஆக முடியும்” என்றாள் மனோரமா.

 

ராமு உடனே வேதாரண்யம் சென்று வைத்தியானந்தாவிடம் சீடனானான். மனோரமா கூறியதுபோல், ஒரே ஆண்டில் மருத்துவத்தை அவனுக்குக் கற்பித்த யோகி, ஆண்டு முடிவில் அவனிடம், “நீ மிகச் சிறந்த சீடனாக விளங்கினாய். எனக்குத் தெரிந்த அனைத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன். மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் என்னிடம் உள்ளன. அதை இப்போது உனக்குத் தர மாட்டேன்.

 

நீ சுயநலநோக்கமே இல்லாமல், நேர்மையான மருத்துவனாகத் திகழ்கிறாய் என்பது நிரூபணம் ஆன பின்னரே, அதை உனக்குத் தருவேன். சென்று வா!” என்று கூறி அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

விஜயபுரி திரும்பிய ராமு தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறினான். அதற்கு அவள் அவனை நேர்மையாக மருத்துவத் தொழிலைச் செய்யுமாறு கூறினாள். அதன்படியே, ராமு தன் மருத்துவத் தொழிலை புனிதத் தொண்டாகக் கருதி செய்யலானான்.ஓராண்டிற்குப் பிறகு, ஒருநாள் ஒரு சன்னியாசி அவன் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் வரவேற்பறையை அவன் மருத்துவ சாலையாகப் பயன்படுத்தி வந்தான். வாயிலிலே நின்று, சன்னியாசி உள்ளே நடப்பதை கூர்ந்து கவனித்தார். ராமு ஓர் ஏழை நோயாளியை சோதித்துக் கொண்டுஇருக்கையில், தடபுடலாக வந்துஇறங்கிய ஒரு பணக்கார ஆசாமி, “வைத்தியரே! முதலில் என்னை கவனியுங்கள். எத்தனை பணம் வேண்டுமானாலும் தருகிறேன்!” என்றார்.

 

அவரை ஒருமுறை கூர்ந்து பார்த்த ராமு, “ஐயா! இப்போது என்னை இந்த நோயாளியை சோதிக்க அனுமதியுங்கள். உங்களுடைய முறை வரும்போது உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றான்.தற்செயலாக வாயிலில் காத்துக் கொண்டிருந்த சன்னியாசியை நோக்கிய ராமு, “சுவாமி! நீங்கள் சிகிச்சைக்காக வரவில்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து என்னுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்” என்றான்.

 

அதற்கு சன்னியாசி, “அவசரம் இல்லையப்பா! நீ எல்லா நோயாளிகளையும் கவனித்து விட்டு வரும் வரை நான் காத்திருக்கிறேன்!” என்றார். அதன்படியே, ராமு எல்லா நோயாளிகளையும் கவனிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த சன்னியாசி, பிறகு அவனுடன் போஜனம் செய்ய அமர்ந்தார். உண்டு முடித்த பிறகு அவர் ராமுவை நோக்கி, “மகனே! நீ சிகிச்சை செய்யும் முறையை ஆரம்பத்திலிருந்தே கூர்ந்து கவனித்தேன். சுயநல நோக்கு சிறிதுமின்றி, நீ தொழில் புரிந்த விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளைப் பெறத் தகுதியானவன்தான் நீ! உடனே, நீ வேதாரண்யம் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்!” என்றார்.

 

அவர் தன் குருநாதர் வைத்தியானந்தா அனுப்பி வைத்தவர் என்று ராமு புரிந்து கொண்டான். வேதாரண்யம் செல்வதைப் பற்றித் தன் மனைவியுடன் கலந்தாலோசித்து விட்டு வந்தவன். சன்னியாசியிடம், “சுவாமி! என்னைத் தேடி தினமும் இங்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். நான் இல்லாமற்போனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். என்றைய தினம் நோயாளிகள் யாரும் வரவில்லையோ, அன்று வேதாரண்யம் செல்வேன்!” என்றான் ராமு.

இதற்கிடையில் மன்னரின் தாயார் நோய்வாய்ப்பட, அரண்மனையிலிருந்து ஆட்கள் அவனை அழைத்துச் செல்ல வந்தனர். அவர்களிடம், “நான் விஜயபுரியை விட்டுச் சென்று அரண்மனையில் தங்கி மன்னரின் தாய்க்கு வைத்தியம் செய்தால், என்னை நம்பியுள்ள நோயாளிகள் திண்டாடிப் போவார்கள். அதனால், மன்னரின் தாயை இங்கு அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.

 

அதையறிந்த சன்னியாசி மீண்டும் ராமுவிடம் வந்து, “மன்னரின் தாய் என்று அறிந்தும், அவருடைய அதிகாரத்திற்குத் தலை வணங்காமல் நீ உன்னுடைய நோயாளிகளின் நிலைமையே மிகவும் முக்கியமாகக் கருதினாய். நீ தலை சிறந்த மருத்துவனாக மாறத் தகுதியானவன். ஆகவே, நீ உடனே சென்று உன் குருவை சந்தித்து ஓலைச்சுவடிகளைப் பெறுவாய்!” என்றார். அப்போது ராமு மறுத்து விட்டான்.

 

ராமுவின் மனைவி மனோரமா நாளாவட்டத்தில் கவலையுற்றாள். நோயாளிகள் ராமுவை நாடி வராத நாள்களே இல்லை. இப்படியே சென்றால், ராமு எப்போதுதான் தன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெறுவார்? மந்திர  சிகிச்சையும் தன் கணவன் கற்றுக் கொண்டால், இன்னும் பல நோயாளிகள் பலம் அடைவார்கள் எனத் தோன்றியது. ராமுவை வேதாரண்யம் செல்லுமாறு பலமுறை கூறத் தொடங்கினாள். ஆனால் ராமு மறுத்து விட்டான்.

 

மனோரமா சன்னியாசியை அழைத்து ராமுவை எவ்வாறு வேதாரண்யத்திற்கு அனுப்புவது என்று ஆலோசிக்க, அவருடைய யோசனைப்படி தான் நோய்வாய்ப் பட்டது போல் பாசாங்கு செய்தாள். ராமு தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளை அளித்தும், அவள் குணமாகாதது போல் நடித்தாள். சன்னியாசி ராமுவை அழைத்து, “உன் மனைவியின் நோய் மருந்தினால் தீராது மந்திரத்தினால்தான் தீரும்! இப்போதாவது நீ உடனே உன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்று வா!” என்றார். ராமுவும் உடனே வேதாரண்யம் சென்று தன் குருவிடமிருந்து ஓலைச்சுவடிகளை வாங்கி வந்தான்.

அவற்றைக் கற்றுத் தேர்ந்து, தன் மனைவியின் நோய்க்கு மந்திரம் ஓத, அவளும் குணமானதுபோல் நடித்தாள். அன்றுமுதல் ராமு மருந்தினால் தீராத நோய்களையும் மந்திரத்தினால் தீர்த்து வைத்து, அந்தப் பகுதியில் தலைசிறந்த வைத்தியனாகத் திகழ்ந்தான்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! இந்த ராமுவின் சுயநலத்தை என்னவென்று சொல்வது? பலமுறை சன்னியாசி குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லியும் போகாதவன், தன் மனைவியின் பொருட்டு தனது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டான். சுயநல நோக்கம் இன்றி நேர்மையாக மருத்துவத் தொழில் செய்தால் மட்டுமே ஒலைச் சுவடிகளைத் தருவேன் என்று சொல்லிய அவன் குரு அவனுக்கு அவற்றை எப்படித் தந்தார்? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ராமுவை சுயநலக்காரன் என்று சொல்வது முற்றிலும் தவறு. தன் நோயாளிகளை பரிதவிக்க விட்டுவிட்டு குருவிடம் செல்ல மறுத்தது அவன் தன் நோயாளிகளின் மீது கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது. ஆனால் மனைவிக்கே தீராத நோய் எனும் போது எந்தக் கணவனால் சும்மா இருக்க முடியும்? அவளைக் குணப்படுத்த அவன் தன் கொள்கையிலிருந்து விலகி குருவிடம் சென்றது ஒரு போதும் தவறு ஆகாது. ராமுவின் நேர்மையை நன்கு அறிந்து  வைத்து இருந்த குருவும் அதனால்தான் சிறிதுகூட தயக்கமின்றி ஓலைச்
சுவடிகளை அவனுக்கு அளித்தார்” என்றான்.

 

விக்கிரமனுடைய சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 

வாரிசாகத் தகுதியானவன் யார் ?

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து கொண்டுசெல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா? நீவீரமும், பராக்கிரமும் மிகுந்தவன் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு மன்னனுக்கு வீரமும், பராக்கிரமும் எவ்வளவு தேவை என்று உன்னைப்பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஆனால் அறிவில் சிறந்தவர்கள் என்றுகருதப்படுபவர்கள் சிலருக்கு இந்த சாதாரண உண்மை புலப்படுவதில்லை.அவர்களுடைய தவறான ஆலோசனைகளினால் நாட்டிற்கே பெரிய தீங்கு உண்டாகக் கூடும்.

விக்ரமன் – வேதாளம் கதைகளில் , விக்ரமன் வேதாளத்திற்கு அளித்த பதில்களில் நீங்கள் ஏற்றுக்கொள்ளாத பதிலைக் கொண்ட கதை எது ? ஏன் ?

அத்தகைய அறிவிற்சிறந்த ஒருவரின் கதையைக் கூறுகிறேன் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று. மன்னர் சுதட்சிணர் ஆட்சிக்காலத்தில் நாட்டில் சுபிட்சம் நிலவியது. மக்கள் மனநிறைவுடன் வாழ்க்கை நடத்தினார். ஆனால் மன்னருக்கு வாரிசு இல்லாதது ஒரு பெருங்குறையாக இருந்தது. தனக்குப் பிறகு ராஜ்யத்தை ஆளப்போவது யார் என்று பெருங்கவலையில் மூழ்கிய மன்னர் ஒருநாள் தன் முதன்மந்திரி கங்காதரரை அழைத்து அதைப்பற்றி ஆலோசித்தார்.

 

“மந்திரியாரே! இந்த ராஜ்யத்தை நான் ஒழுங்காக நிர்வாகம் செய்து வருகிறேன். ஆனால் எனக்குப் பிறகு யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் என்பது எனக்குப் பெரும் கவலையை அளிக்கிறது. எனக்குப்பிறகு சிம்மாசனத்தில் அமரப் போவது யார் என்பதை இப்போதே நாம் தீர்மானித்தால் நல்லது. ராணியைக் கலந்து ஆலோசித்தால் அவள் தன்னுடைய உறவினர்களின் பிள்ளைகள் யாரையாவது தத்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறாள். அதில் எனக்கு விருப்பமில்லை. எனக்குப் பிறகு முடிசூட்டிக் கொள்பவன் வீரதீரப் பராக்கிரமனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீரனை நாம் எப்படித் தேடுவது?” என்றார்.

 

அதற்கு மந்திரி, “பிரபு! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது தலைநகரில் உள்ள குருகுலத்தில் வித்யாசாகர் அவர்கள் பல க்ஷத்திரிய மாணவர்களுக்கு வில் வித்தை, வாட்போர், மல்யுத்தம் ஆகியவற்றையும், ராஜாங்க நிர்வாகத்தையும், போர்த்தந்திரங்களையும் கற்பித்து வருகிறார். அவரிடம் சென்றால், நம் ராஜ்யத்தின் எதிர்கால வாரிசை நாம் தேர்ந்தெடுக்கலாம்” என்றார். மன்னருக்கு அது சரியான யோசனை என்ற தோன்றவே, இருவரும் மறுநாளே குருகுலத்திற்குச் சென்று, வித்யாசாகரை சந்தித்து, தாங்கள் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினர்.

 

அதற்கு குரு வித்யாசாகர், “மகாராஜா! நீங்கள் சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறீர்கள். விஜயதசமியையொட்டி, குரு குலத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தப் போட்டிகளைப் பார்வை இட்டால், உங்களுக்குத் தேவையான வீரனை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்” என்றார்.

மறுநாள், போட்டியில் பங்கேற்ற மூன்று பேர் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டும் என குரு உத்தரவிட்டார்.இதன் படி தங்கள் பயணத்தைத் தொடங்கிய மூன்று பேரும் ஒருமாதப் பயணத்திற்குப்பின் குருகுலத்திற்குத் திரும்பினர். அவர்கள் திரும்பி வந்தபோது, குருகுலத்தில் குரு வித்யாசாகருடன், மன்னரும், மந்திரியும் அமர்ந்திருந்தனர்.
அவர்களை வரவேற்ற குரு, மூவரையும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பயண அனுபவங்களைக் கூறும்படிச் சொன்னார். முதலில் முன்வந்த வில்வித்தை நிபுணனான ஜெயன் “குருவே! நான் வடக்குதிசையை நோக்கிப் பயணமானேன். வழியில் எனக்கு எந்தவிதத் தடங்கலும் ஏற்படவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் தென்பட்டனர். ஆனால் நம் ராஜ்யத்து எல்லையில் உள்ள காட்டுப்பிரதேசத்தில் நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. அங்கு சில இளைஞர்கள் இரகசியமாக ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.

 

மறைந்திருந்துத் தாக்குவது, அரசாங்க ஆயுதங்களைத் திருடுவது, ரகசிய ஆயுதத் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞர்கள் பக்கத்து ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் அந்த இளைஞர்களை யாரோ ஒருவன் சைகாட்டி அவ்வாறு ஆயுதப் பயிற்சி அளிப்பதைப் பார்த்தேன். நமது ராஜ்யத்தில் இவ்வாறு தீயசக்திகள் உருவாவதைப் பொறுக்க முடியாமல், இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற பயிற்சியாளனை அம்பெய்திக் கொன்று விட்டேன். என்னுடைய கடமையை நிறைவேற்றியதற்காகப் பெருமைப்படுகிறேன்” என்றான்.
அடுத்து வந்த விஜயன், “நான் தென்திசை நோக்கிப் பயணம் சென்றேன். தென்திசைப் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு சரியான முறையில் இல்லை என்பதை அறிந்தேன். அங்குள்ள அரசாங்க அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அறிந்தேன். எங்கு பார்த்தாலும் வழிப்பறி கொள்ளைகள் நடந்து கொண்டிருந்தன. அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொள்ளைக்காரர்களை எதிர்த்துப் போரிட தைரியம் இல்லை. அந்த நிலைமையை மாற்ற எண்ணிய நான் அங்கிருந்த இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு வாள் சண்டை கற்றுக் கொடுத்தேன். இப்போது அங்குள்ள இளைஞர்கள் எனது முயற்சியினால் வீரம் மிகுந்தவர்களாக மாறிவிட்டனர்.” என்றான்.

அடுத்து, மூன்றாமவன் கௌதமன் முன் வந்து, “நான் கிழக்கு திசையில் பயணம் சென்றேன். ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி சுபிட்சமாகவும், அமைதியாகவும் இருந்தது. அதனால் என்னுடைய போர்க்கலைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒருநாள் அங்குள்ள கோயில் ஒன்றில் வடித்திருந்த சிற்பத்தின் விரல்களுக்குள் ஒரு பல்லி சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. எப்படி சிக்கியது என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடத்தை விட்டு மீள முடியாமல் தவித்ததைக் கண்டேன். அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். மற்ற பல்லிகள் தங்கள் வாயில் உணவைக் கவ்விக் கொண்டு வந்து சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு அளித்துக் கொண்டிருந்தன. ஓரறிவு படைத்த சாதாரண பல்லிகளுக்குள் நிலவிய அந்த நல்லிணக்கத்தைக் கண்டு வியந்த நான், ஒரு சிற்பியை வரவழைத்து, சிற்பங்களின் விரல்களை உடைத்து, அது தப்பிக்க வழி செய்தேன்.
திரும்பி வரும் வழியில், ஒரு காட்டில் கிணற்றினுள் ஒரு யானைக் குட்டி விழுந்திருந்ததைக் கண்டேன். நான் காட்டுவாசி மக்களை அங்கு அழைத்து வந்து, அந்த யானைக் குட்டியை கிணற்றிலிருந்து வெளியே மீட்க ஏற்பாடு செய்தேன். பிறகு, அந்த ஆட்களிடம் பல்லிகள், யானைகள் போன்ற மிருகங்கள் தங்களுக்குள் உதவி செய்து கொள்வதை சுட்டிக்காட்டி, மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்தேன். பொறாமை, பேராசை ஆகியவற்றின் காரணமாக, மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது எத்தகைய அறிவீனம் என்பதை எடுத்துரைத்தேன்” என்றான்.

 

உடனே, மன்னரும், மந்திரியும் தனியே சென்று தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். தாங்கள் தேடிக் கொண்டிருந்த வீரமும், பராக்கிரமும் ஜெயனிடமும், விஜயனிடமும் பரிபூரணமாக இருந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவனையே இளவரசனாகத் தேர்வு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தபின், குரு வித்யாசாகரின் கருத்தினை அறிய அவரிடம் சென்றனர்.
வித்யாசாகர் மன்னரை நோக்கி, “மகாராஜா! என்னுடைய அபிப்பிராயப்படி மூவரில் கௌதமன்தான் உங்களுடைய வாரிசாகத் தகுதியானவன். அவனிடம் வீரம், பராக்கிரமம் ஆகியவற்றுடன், மனிதகுலத்திற்குத் தேவையான ஜீவகாருண்யமும் நிரம்பியுள்ளது. அத்தகைய ஜீவகாருண்யச் சிந்தனை உள்ளவனே எதிர்கால மன்னனாகத் தகுதியானவன்” என்றார்.
குருவின் கருத்தினைக் கேட்ட மன்னரும், மந்திரியும் மிகுந்த ஆச்சரியப்பட்டனர். நீண்டநேரம் யோசித்த பிறகு மன்னர், “குருதேவரே! உங்கள் கருத்தினை ஏற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மந்திரியுடன் திரும்பிச் சென்றார்.
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! மிகவும் அறிவாளியான குரு வித்யாசாகர் சரியானபடி முடிவு செய்வார் என்று நம்பி அவரை மன்னர் அணுகியது எவ்வளவு தவறாகப் போயிற்று? வீரதீர சாகசங்கள் புரிந்த ஜெயனையும், விஜயனையும் ஒதுக்கிவிட்டு, புத்தரைப் போல் ஜீவகாருண்யத்தை போதித்த கௌதமனைப் போய் யாராவது இளவரசனாக சிபாரிசு செய்வார்களா? இவை யாவும் தெரிந்தும், மன்னர் ஏன் குருவின் முடிவை ஏற்றுக் கொண்டார்? என்

சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “அரசவை ஆட்சி பீடத்தில் அமரப் போகும் இளவரசனுக்கு வீரமும், பராக்கிரமமும் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை! அதைத்தான் மன்னர் சுதட்சிணர் எதிர்பார்த்தார். ஆனால் அவையிரண்டும் மட்டும்  ளவரசனிடமிருந்தால் போதாது. மன்னன் என்பவன் யார்? தன் குடிமக்களின் நலத்திற்காக அல்லும் பகலும் பாடுபடுபவனே மன்னன். சட்டம், அமைதியை நிலைநாட்ட எவ்வாறு வீரம் தேவையோ, அவ்வாறு மக்களின் நலம் காக்க நெஞ்சில் ஈரமும் தேவை! ஜெயன், விஜயன் இருவரிடம் வீரத்தை மட்டுமே கண்ட குரு, கௌதமனிடம் வீரத்துடன், ஜீவகாருண்யத்தையும் கண்டார்.

 

தங்களுக்குள் ஒற்றுமையின்றி சண்டையிடும் மக்களை நல்லிணக்கத்துடன் வாழ, அன்புக்கரம் நீட்டுவதே மேல்! நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வருமுன் காப்பது சிறந்ததல்லவா! கௌதமனின் அணுகுமுறையினால் நாட்டில், அமைதியும், நல்லிணக்கமும் நிலவும் என்பதை குரு புரிந்து கொண்டார். மற்றொன்றையும் நோக்க வேண்டும். தனத வீர, தீரப் பராக்கிரமத்தைக் காட்ட கௌதமனுக்குப் பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லையே தவிர, அவனுக்கு வீரமேயில்லை என்று சொல்ல முடியாதே! அவன் சிறந்த மல்யுத்த வீரன்! தேவைப்படும் போது வீரத்தைக் காட்டவும், மற்ற சமயங்களில் அன்பினைப் பொழியவும் அவனால் முடியும் என்பதால் தான் குரு அவனைத் தேர்வு செய்தார். நீண்ட சிந்தனைக்குப் பிறகு, மன்னருக்கு அது விளங்கவே அவரும் குருவின் கருத்தினை ஒப்புக்கொண்டார்” என்றான்.

 

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

சேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! எந்த இலட்சியத்தை நாடி, இவ்வாறு நடு இரவில் மயானத்தில் என்னை சுமந்து கொண்டு திரிகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை.

சில சமயங்களில் அறிவில் சிறந்தவர்கள் என்று நாம் கருதும் சிலரது ஆலோசனைகள் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடும்! அவ்வாறு, அறிவிற்சிறந்தவர் என்று தான் கருதிய மந்திரியின் சொல் கேட்டு, தவறிழைத்த மன்னன் ஒருவனது கதையை உனக்குக் கூறகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தன் கதையைத் தொடங்கியது.
மகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான். ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான்.

உடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் தலைநகரத்திற்கு வந்து வாட்போர், வில் வித்தை, மல்யுத்தம் படைகளை இயக்கும் ஆற்றல், யுத்தத் தந்திரங்கள் ஆகியவற்றில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த அழைத்தார். அந்த அறிவிப்பின்படி, ஏராளமான வீரர்கள் தலைநகரில் கூடினர். ஒவ்வொரு நாளும், பலருடைய திறமைகளையும் உன்னிப்பாக கவனித்த தர்மசீலர் இறுதியில் ரூபசேனன், பராக்கிரமன் ஆகிய இருவரைத் தேர்வு செய்தார். இருவருமே அனைத்து கலைகளிலும் சமமாக இருந்தனர்.

அதனால், இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்துஎடுப்பதில் தர்மசீலருக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்களை நேரிலே அழைத்த மந்திரி, “நீங்கள் இருவரும் அனைத்து கலைகளிலும் சரிசமமாக இருக்கிறீர்கள். சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள் இன்னும் சில உள்ளன. அவற்றை சோதிக்க, நான் உங்களிடம் சபையில் எல்லார் முன்னிலையிலும் மூன்று கேள்விகள் கேட்பேன். அவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்து உங்களில் ஒருவரைத் தேர்வு செய்வேன். சம்மதமா?” என்று கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர்.

அதன்படி, மறுநாள் இருவரும் சபைக்கு வந்தனர். சபை நரம்பியிருக்க, மன்னரும் மந்திரியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தர்மசீலர் எழுந்து இருவரையும் நோக்கி, “சேனாதிபதி பதவிக்குரிய மற்றும் சில குணாதிசயங்களை சோதிக்க நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கப் போவதாகக் கூறினேன். என்னுடைய முதல் கேள்வி: பிரதான சாலையில், இரு இளைஞர்கள் ஒருவரோடு  சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்! உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.

உடனே பராக்கிரமன், “என்னிலும் வயதில் சிறியவன் ரூபசேனன்! முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள்!” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா! பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம்! அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். பிறகு அவர்கள்  இருவரிடம் சண்டையின் காரணத்தை அறிந்து அவர்களை மன்னர் முன் தீர்ப்பு வழங்குவதற்காக நிறுத்துவேன்” என்றான்.

பராக்கிரமனோ, “இருவர் பிரதான சாலையில் சண்டையிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும்! நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன்! தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக இருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ரூபசேனன், “எனது திறமைவாய்ந்த ஒற்றர்கள் மூலம் அந்த சதிகாரர்களைக் கண்டு பிடித்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். அவர்களுடைய தலைவன் யார், அவர்கள் எந்த மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கும் நமது பகைவர்களுக்கும் தொடர்பு உள்ளதா, என்பது போன்ற ரகசியங்களைக் கண்டு பிடித்து விட்டு சேனையின் உதவியோடு அவர்களை அழித்து விடுவேன்” என்று ஆவேசமாகக் கூறினான்.

பராக்கிரமன், “ராஜதுரோக வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்! சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அவர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன்!” என்றான்.

பராக்கிரமனின் அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையினர் கரகோஷம் செய்தனர். பிறகு தர்மசீலர் தனது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். “மன்னருடன் வேட்டையாடச் செல்லும்போது, அவர் மீது ஒரு சிங்கம் திடீரெனப் பாய்ந்தால், என்ன செய்வீர்கள்?” என்றார்.
“என் உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றுவேன்!” என்றான் ரூபசேனன்.

“நான் உடனிருந்தால் மன்னர் மீது சிங்கம் பாய்வதற்கான சூழ்நிலையே உண்டாகாது!” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன்றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்?” என்றார்.

உடனே ரூபசேனன், “இந்த விஷயத்தில் மன்னரின் தீர்மானமே இறுதியானது. மந்திரியுடன் ஆலோசித்து அவர் எந்த ராஜ்யத்தின் மீது படையெடுக்கக் கூறுகிறாரோ, அதன் மீது படை எடுப்பேன்!” என்றான்.

“படையை பலப்படுத்துவது சேனாதிபதியின் முதல் கடமையாகும். அதற்கு ஆயுதங்கள் மிகவும் அவசியம். ஆயுதங்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம்மால் எளிதில் மற்ற இரண்டு ராஜ்யத்தையும் கைப்பற்றி விடலாம். தைரிய லஷ்மி எங்கிருக்கிறாளோ அங்குதான் மற்ற ஏழு லட்சுமிகளும் வசிக்கும் என்று உங்களுக்குத்தான் தெரியுமே! ஆகையால் நான் முதலில் எந்த ராஜ்யத்தில் ஆயுதங்கள் உள்ளனவோ அதன் மீது தான் படையெடுப்பேன்” என்று மிகவும் கம்பீரமாகப் அளித்தான்.

பராக்கிரமனுடைய அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையில் கரகோஷம் உண்டாகியது. மன்னர் கண்டிப்பாக பராக்கிரமனைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று சபையோருக்கு தெரிந்து விட்டது. அப்படி இருக்கையில் அவர் ரூபசேனனை சேனாதிபதியாக தேர்ந்தெடுப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா!  பராக்கிரமன், ரூபசேனன் இருவருமே போர்க் கலைகளில் சரிசமமாகக் காணப்பட்டார்கள். ஆகையினால், அவர்களுடைய மற்ற தகுதிகளைப் பரிசீலிக்க மந்திரி தர்மசீலர் முயன்றது தவறில்லை.

ஆனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் “மன்னரிடம் அறிவிப்பேன்! அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா? அவனுடைய பதில்களை சபையோர் மட்டுமன்றி, தர்மசீலரும் பாராட்டினார். அப்படிஇருந்தும், தர்மசீலர் கடைசியில் ரூபசேனனைத் தேர்ந்தெடுத்து அவரது தவறான முடிவைக் காட்டுகிறதல்லவா?

இதிலிருந்து, தர்மசீலர் மதிநுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒரு சாதாரண வீரனை சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது, அவர் நடுநிலையிலிருந்து தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது அல்லவா? ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார்? என்னுடைய இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்குநூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “மதிநுட்பத்தை மட்டும் வைத்து இருவரையும் பரிசீலித்தால், பராக்கிரமன் நிச்சயமாக ரூபசேனனை விடச் சிறந்தவன்தான்! ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான்! மற்றபடி, எந்தப் பிரச்சினைக்கும் முடிவு எடுப்பது அவனுடைய அதிகாரத்தில் இல்லை.
எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம் செய்வது மன்னருக்கே உரித்தான உரிமை. அதில் சேனாதிபதி தலையிடக்கூடாது. அரசாங்க விஷயங்களில் ஆலோசனை கூறும் உரிமை மந்திரிக்கு மட்டுமே உண்டு. அவரை ஆலோசனை கேட்பதும், அதன்படி, நடப்பதும், நடக்காததும் மன்னருடைய உரிமை. எல்லா விஷயங்களிலும் தான் நுழைந்து தானே முடிவெடுக்கும் சேனாதிபதி ஆபத்தானவன்! மன்னருடைய அதிகாரத்தை அவன் தன் கையில் எடுத்துக் கொள்வது சற்றும் சரியல்ல!

பராக்கிரமன் அளித்த விடைகளில் இருந்து அவன் மேதாவி என்பது தெளிவானாலும், அத்தகைய மேதாவிகள் மன்னருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள் என்று மந்திரி நம்பினார். அதனால்தான் கீழ்படிந்து நடக்கும் சுபாவம் கொண்ட ரூபசேனனை சேனாதிபதியாகப் பரிந்துரை செய்தார். மந்திரியின் கருத்து அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. ஆகவே, அவர் எடுத்த முடிவே சரியானது!” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

புரிந்து கொள்ளாத மக்கள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “”மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் மயானத்தில் அலைந்து திரிந்து உன்னை நீயே வருத்திக் கொள்கிறாயா? உன் நோக்கம் தான் என்ன? உன்னைப் போல் சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் அவர்களுடைய ஆவேசம் தணிந்து போய் விடுகிறது.

குணவீரமன்  என்ற இளைஞன் தனது சிந்தனைகளைப் புரிந்து கொள்ளாத கிராமத்தினரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன் இறுதியில் அவர்களிடமே மீண்டும் திரும்பி வந்தான். அவனுடைய கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்!” என்றது. அன்னாவரம் என்ற கிராமம் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் நறைந்த கிராமம். அங்கிருந்த விவசாயிகள் பல நூதனமான பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். பலவிதமான கிழங்குகளையும், பழமரங்களையும் மூலிகைகளையும் பயிர்செய்து, அவற்றையே தங்கள் முக்கிய உணவாகவும் கொண்டு இருந்தனர்.

அந்த கிராமத்தில் குணவர்மன் என்ற இளைஞன் வசித்து வந்தான். சிறுவயது முதலே, அவன் தீவிர சிந்தனையாளனாக இருந்தான். எப்போதும், எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருந்தவனை, கிராமத்தினர் சோம்பேறி என்று இளக்காரம் செய்தனர். அவனுடைய வாழ்க்கையின் கண்ணோட்டமே வேறுவிதமாக இருந்தது. கிராமத்து மனிதர்களுடைய வாழ்க்கைமுறை அவனுக்குப் பிடிக்கவில்லை.

“கடவுள் கொடுத்த பகுத்தறிவை நன்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன” என்பது போன்ற அவனுடைய புதுமையான சிந்தனைகள் கிராமத்தினரின் மூளையில் நுழையவில்லை.

தன்னுடைய புதிய கருத்துகளை யாரும் ஏற்காததால் சலிப்படைந்த குணவர்மன் ஒருநாள் தன் தந்தையிடம், “அப்பா! இங்குள்ள மக்கள் இயந்திரம்போல் இயங்குகின்றனர். இங்கிருந்தால் என் வாழ்க்கை வீணாகிவிடும்! தண்டகாரண்யக் காட்டில் புஜங்கர் என்பவர் நடத்தும் குருகுலத்தில் சேர்ந்து, என் கல்வி அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள விரும்புகிறேன். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து, எந்த கிராமத்தினர் என்னை ஏளனம் செய்கின்றனரோ, அவர்கள் எனக்கு மரியாதை செலுத்துமாறு செய்வேன்!” என்று கூறி விட்டு, தண்டகாரண்யத்தை நோக்கிச் சென்றான்.

புஜங்கரின் ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டுஇருக்கையில், ஒரு தேர் அவன் பின்னால் வந்தது. அவனிடம் வந்து தேரை நிறுத்திய தேரோட்டி, “தம்பி! நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்க, குணவர்மன் பதில் சொல்லவும், அவன், “நானும் அங்குதான் செல்கிறேன்! நீயும் தேரில் ஏறிக்கொள்! மன்னரின் தாய்க்கு உடல் நலை சரியில்லாததால், புஜங்கரை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன்!” என்று கூறிவிட்டு குணவர்மனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
குருகுலத்தை அடைந்ததும், குணவர்மன் புஜங்கரை கால்களில் விழுந்து வணங்கித் தன் விருப்பத்தை வெளியிட்டான்.

அதற்கு அவர், “மகனே! என்னிடம் சீடனாகச் சேர வேண்டுமெனில், அதற்குமுன் ஜம்புகாரண்யத்தில் என் பழைய மாணவர் வினயர் ஒரு குருகுலம் நடத்தி வருகிறார். அங்கு சென்று இரண்டு ஆண்டுகள் பயின்ற பிறகு நீ இங்கு வா!” என்றார். “குருவே! உங்களுக்கு என் அறிவுத் திறமையில் சந்தேகம் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், நீங்கள் என் அறிவை சோதித்துப் பாருங்கள்!” என்றான்.

“மகனே! இப்போது நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டிஇருக்கிறது. திரும்பி வர எனக்கு ஒரு வாரம் ஆகும்! அதுவரை இந்த இரண்டு கிரந்தங்களை உன்னிடம் தருகிறேன். இவற்றை கவனமாகப் படி! இவற்றினுடைய கருத்தை நீ நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, நீ என் சீடனாக அமையத் தகுதியுள்ளவன்!” என்று கூறிவிட்டு அரண்மனை தேரில் ஏறிச் சென்று விட்டார்.

உடனே, மற்ற சீடர்கள் அவனிடம், “இரண்டு ஆண்டுகளாக இவற்றைப் புரிந்து கொள்ள நாங்கள் படாதபாடு படுகிறோம். அப்படி இருக்க, உன்னால் ஒரு வாரத்தில் புரிந்து கொள்ள முடியுமா?” என்று அவனை பயமுறுத்தினர்.
ஆனால் குணவர்மணா, “இதை நான் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, கிரந்தங்கள் இயற்றப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினான். நான்கே நாள்களில், அவற்றின் சாரத்தை குணவர்மன் நன்றாக கிரகித்துக் கொண்டான்.

மற்ற சீடர்களை அழைத்துத் தான் புரிந்து கொண்ட விஷயங்களை அவர்களுக்கு விளக்கினான். ஆனால் அவர்கள் அவனுடைய அறிவுத்திறமையை தாழ்வாக மதிப்பிட்டு எள்ளி நகையாடினர். கோபங்கொண்ட, குணவர்மன், “உங்களுக்கும் என் கிராமத்து மக்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. அவர்கள் படிக்காத முட்டாள்கள்! நீங்கள் படித்த முட்டாள்கள்!” என்று சினந்தான்.

அரண்மனையிலிருந்து திரும்பிய புஜங்கர், வந்ததும் உடனே குணவர்மனை கிரந்தங்களின் விளக்கம் கேட்டார். குணவர்மன் கூறிய விளக்கங்களைக் கேட்டு அவர் வியந்து போனார். “மகனே!  உன்னைப் போல் ஒரு புத்திசாலி எனக்கு சீடனாகக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று மனமாரப் புகழ்ந்தார். அதன்பின் அவர் அரண்மனையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினார்.

மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது.

 

அதைப் படித்துக் காட்டிய கவிஞர், “மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!” என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

“மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!” என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. “குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். “ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!” என்றார் புஜங்கர்.

“அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!” என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார்.

மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது.

 

அதைப் படித்துக் காட்டிய கவிஞர், “மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!” என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

“மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!” என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. “குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். “ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!” என்றார் புஜங்கர்.

“அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!” என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார்.

குருவுக்கு காணிக்கை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! உன்னுடைய ராஜ்யத்தின் ஏதோ மிகக் கடினமான பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காண்பதற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறாய் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் மிக அறிவாளிகள் என்று நாம் நனைக்கும் சிலர் சாதாரண பிரச்சினையைக் கூட மிகக் கடினமான ஒன்றாக மாற்றி விடுகின்றனர்.  அத்தகைய குரு ஒருவரின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்று சொல்லிக் கதை சொல்லத் தொடங்கியது.

 

அவந்திபுரத்தை ஆண்டு வந்த சூரசேனருக்கு வஜ்ரசேனன், விக்கிரமசேனன் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். முதுமைப் பருவத்தை அடைந்ததும், தன் மூத்த மகன் வஜ்ரசேனனுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, தன் மனைவியுடன் வானப்பிரஸ்தம் மேற்கொண்டு, அடர்ந்த காட்டினில் வாசம் செய்தார்.தன் தந்தையைப் போலவே வஜ்ர சேனனும் செங்கோல் ஆட்சி புரிந்து குடிமக்களின் நலனைப் பேணி வந்தான். அவனுடன் குருகுலத்தில் பயின்ற மணிதரன் என்ற பக்கத்து நாட்டு இளவரசனுடன் சிறு வயது முதல் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

 

வஜ்ரசேனன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும், மணிதரன் தன் தங்கையை வஜ்ரசேனனுக்குத் திருமணம் செய்து வைத்துத் தானும் அவந்திபுரத்திலேயே தங்கி விட்டான். அவந்திபுரத்தைத் தனதாக்கிக் கொள்ளத் திட்டமிட்ட மணிதரன் சிறிது சிறிதாக வஜ்ரசேனனிடமிருந்து அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டான்.  இசை, சிற்பம், நடனம் என்று அருங்கலைகளில் தன் நேரத்தை செலவிட்ட வஜ்ரசேனன் நாளடைவில் ஆட்சியின் முழு அதிகாரத்தையும் மணிதரனிடமே ஒப்படைத்து விட்டான்.

 

மணிதரனின் ஆதிக்கத்தில் அவந்திபுரத்தில் அராஜகம் தாண்டவம் ஆடியது.  மணிதரனின் கொடுங்கோலாட்சி யைக் கண்டு கலக்கமுற்ற பிரமுகர்கள் பலமுறை வஜ்ரசேனனை சந்தித்து உண்மை நலவரத்தைத் தெரிவிக்க முயன்றபோது,  மணிதரன் அவர்களைத் தடுத்துவிட்டான். அதனால் இளையவன் விக்கிரமசேனனிடம் சென்று பிரமுகர்கள் நாட்டின் நலைமையை எடுத்துக் கூறி,  அவனை மன்னனாகப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். ஆனால் தன் அண்ணன் ஆட்சி செய்வதுதான் சரியென்றும், மறுத்து விட்டான். வேறு வழியின்றி, அவர்கள் காட்டினை அடைந்து பெரியவரான சூரசேனரை சந்தித்து முறையிட்டனர்.

அனைத்தையும் கேட்ட பிறகு சூரசேனர், “ஒருமுறை ஆட்சிப் பொறுப்பை என் மூத்த மகனிடம் ஒப்படைத்து விட்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிய பிறகு, எனக்கு அரசாங்க விஷயங்களில் தலையிட உரிமை இல்லை. சிறிதுகாலம் பொறுத்து இருங்கள்! உங்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படும்!” என்று சொல்லி அனுப்பினார். ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டாரே தவிர, தன் ராஜ்யத்தின் நலைமை சீர்குலைந்து போனதை அறிந்து சூரசேனன் மிகவும் வருந்தினார்.

 

இதற்கு வேறு ஏதாவது வழி உள்ளதா என்று தீவிர யோசனை செய்தார். வழி ஏதும் தோன்றாததால், அவர் தன் பிள்ளைகள் பயின்ற குருகுலத்தை அடைந்து அங்கிருந்த வயதில் மூத்த குருவை சந்தித்து, தன் ராஜ்யத்தின் பிரச்சினைகளைக் கூறி, உதவி செய்யுமாறு வேண்டினார். “மகாராஜா! அவந்திபுரத்தில் நடக்கும் ஆட்சியைப் பற்றி நானும் அறிவேன்! அதற்கெல்லாம் மூலகாரணம் வஜ்ரசேனனின் மைத்துனன் மணிதரன்தான்! கவலைப்படாதீர்கள்! இதை நான் தீர்த்து வைக்கிறேன்!” என்று குரு வாக்குறுதி அளித்தார்.

 

மறுநாள் குரு அவந்திபுரம் தர்பாரை அடைந்தார். தனது குரு தன்னைத் தேடி வந்திருப்பதைக் கண்டு உவகையுற்ற வஜ்ரசேனன் பலத்த உபசாரத்துடன் அவரை வரவேற்றான். பிறகு குரு, “வஜ்ரசேனா! குருகுலத்தில் வித்யாப்யாசம் முடிந்ததும், மாணவர்கள் குரு தட்சிணை  தருவது வழக்கம்! ஆனால், நான் உன்னிடம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. பிற்காலத்தில் எனக்குத் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்! அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

 

“ஆகா, ஞாபகம் இருக்கிறது! குருதேவரே! தாங்கள் எதைக் கேட்டாலும், அதை அளிக்க சித்தமாகஇருக்கிறேன்” என்றான் வஜ்ரசேனன் பணிவுடன். “வாக்களித்தபின், மறுக்க மாட்டாயே!” என்று குரு கேட்க, “குருதேவரே! ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? வாக்குத்தவறுவது மரணத்திற்கு சமம்! தயங்காமல் கேளுங்கள்” என்றான் வஜ்ரசேனன்.
“அப்படியானால் உனக்கு சொந்தமான இந்த அவந்திபுர ராஜ்யத்தை எனக்கு குரு தட்சிணையாகக் கொடுத்து விடு!” என்றார்.

 

ஒரு கணம் திடுக்கிட்டாலும், விரைவிலேயே சமாளித்துக் கொண்ட வஜ்ரசேனன் “கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டேன்! எனது இந்த ராஜ்யம்…” என்று சொல்லி முடிப்பதற்குள், மணிதரன் ஆத்திரத்துடன் அவசரமாகக் குறுக்கிட்டு, “அவசரப்பட்டு ராஜ்யத்தை தானம் செய்யாதே வஜ்ரசேனா! அவருக்குப் பொன், பொருள், நலம் எது வேண்டுமானாலும் கொடு!”  என்று தடுக்க முயன்றான்.
அதற்கு வஜ்ரசேனன் “ஒருமுறை வாக்களித்தப்பிறகு அதிலிருந்து தவறுவது மிகப் பெரிய குற்றம்!” என்றவன், குருவை நோக்கி, “குரு தேவரே! தாங்கள் விரும்பியபடி என்னுடைய ராஜ்யத்தைத் தங்களுக்கு குரு தட்சிணையாக அளிக்கிறேன்!” என்று கூறிவிட்டு, தனது கி·டத்தை  கீழே வைத்துவிட்டு, சிம்மாசனத்தை விட்டு இறங்கி விட்டான்.

குரு வஜ்ரசேனனை நோக்கி, “வஜ்ரசேனா! உன்னுடைய அபாரமான குருபக்தியை மெச்சுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை.  கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உனக்குள்ள அக்கறையில் பத்தில் ஒரு பங்காவது குடிமக்களின் நலனில் செலுத்தி இருக்கலாம்,”  என்று கூறிய பிறகு, தன் சீடர்களை அனுப்பி காட்டில் வசிக்கும் சூரசேனரை அழைத்து வரச் சொன்னார்.

 

சூரசேனர் வந்தவுடன், குரு அவரை நோக்கி, “மகாராஜா! உங்கள் மூத்த மகன் தன் ராஜ்யத்தையே எனக்கு தட்சிணையாக அளித்து விட்டான். நான் அதை தங்களிடம் தருகிறேன். நீங்கள் ராஜ்யத்தை இரண்டாகப் பிரிந்து, உங்கள் புதல்வர்கள் இருவருக்கும் சமமாக அளியுங்கள்! இதன்மூலம் நாட்டில் மீண்டும் அமைதி நலவும்!” என்றார். அவருடைய கட்டளையை சூரசேனரும் அவருடைய இரு பிள்ளைகளும் ஒப்புக் கொண்டனர். விரைவிலேயே சூரசேனர் ராஜ்யத்தை இரு மகன்களுக்கும் சமமாக பிரித்து அளித்து இருவரையும் மன்னர்களாக்கி விட்டார்.

 

இந்த இடத்தில் கதையை நறுத்திய வேதாளம், “மன்னா! வஜ்ரசேனன் நாட்டை ஆளத் தகுதியில்லாதவன் என்று தெரிந்த பிறகும் அவனுக்கு ஒரு பாதியைக் கொடுத்தது முட்டாள்தனம் இல்லையா? இளையவன் விக்கிரமசேனன் முதலில் அண்ணன் விஷயத்தில் தலையிடமாட்டேன். ஆட்சியில் தான் அமருவது தவறு என்றவன் பாதி

ராஜ்யம் கிடைத்ததும்  ஒப்புக் கொண்டான். அது ஏன்? சூரசேனரும் தான் நர்வாகத்தில் தலையிடமாட்டேன் என்று கூறியவர் பிறகு குருவின் மூலமாக நர்வாகத்தில் தலையிட்டு ராஜ்யத்தை சரிபாதியாக பிரித்து இருவருக்கும் அளித்தது எந்த விதத்தில் நயாயம்? எனது இந்த சந்தேகங்களுக்குப் பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.

அதற்கு விக்கிரமன், மன்னர் ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகும்போது, மூத்த மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது தொன்றுதொட்டு இருந்து வரும் ராஜபரம்பரை வழக்கம்! ஆகவே, அதற்குப் புறம்பாக நடக்க விக்கிரமசேனன் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் தன் தந்தை, அண்ணன் மற்றும் குரு வற்புறுத்திய பின்னர் பாதி ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டான். வஜ்ரசேனன் சுபாவத்தில் மிகவும் நல்லவன். அதனால்தான் அவன் தன் தந்தையின் கட்டளையை உடனே ஏற்றுக் கொண்டான். மணிதரனை ராஜ்யத்தை விட்டு வெளியேறச் சொன்னால், தானும் தன் தம்பியைப் போல் நல்லாட்சி புரியலாம் என்று எண்ணினான். வனவாசத்திலிருந்து ஆசிரமத்திற்கு வந்த மன்னர் மறுபடியும் தன் ராஜ்யத்தை குருவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

 

அதன்பின் அதை தன் பிள்ளைகளுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கும்படி குரு கூறியதும் அவ்வாறே செய்தார். அவர் மக்கள் நலன் கருதியே இவ்வாறு செய்தார். இதில் அவரது சுயநலம் என்ற பேச்சிற்கே இடமில்லை மக்கள் நலன் கருதி அனைவரின் விருப்பத்திற்கேற்ப மன்னனும் குருவும் சேர்ந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் இருவரும் பாராட்டுக்குஉரியவர்களே!” என்றான்.

 

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன், மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

பூலோகத்தில் கந்தர்வப் பெண்

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் உனக்கு இப்போது கூறப் போகிறேன். கவனமாகக் கதையைக் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.

 

வைசாலி ராஜ்யத்தில் திரிசங்கம் எனும் ஊரில் கலாதரன் என்ற ஒரு தெய்வீக சிற்பி வசித்து வந்தான். அவன் கல்லில் வடிக்கும் சிற்பங்கள் உயிருள்ளவைபோல் தத்ரூபமாக இருக்கும். ஒருநாள் இரவில் பௌர்ணமி நிலவொளியில் மொட்டை மாடியில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் மிக அழகான ஓர் இளமங்கை தோன்றி “சிற்பியே! என்னுடைய உருவச்சிலையை நீ கல்லில் செதுக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா?” என்று கேட்டாள்.

 

அதிரூப சுந்தரியான அந்தப் பெண்ணின் அழகில் தன் மனத்தைப் பறிகொடுத்த கலாதரன், “கண்டிப்பாக வடிக்கிறேன். அடுத்த பௌர்ணமி இதே நேரம் உன் சிலையை நீ காண்பாய்!” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான். அக்கணமே அவன் கனவும், தூக்கமும் கலைந்தன. கனவுதான் கலைந்ததே தவிர அந்த ரூபவதியின் அழகு அவன் மனத்திரையில் நன்றாகப் பதிந்து விட்டது. உடனே, தன் ஊரின் எல்லையில், மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு நீர் வீழ்ச்சியருகே அமர்ந்து ஒரு பாறையில் இரவும், பகலுமாகப் பாடுபட்டு அடுத்த பௌர்ணமிக்குள் அவளுடைய உருவச்சிலையை செய்து முடித்தான்.

கலாதரனின் கனவில் தோன்றிய அந்த அழகி ஒரு கந்தர்வ லோகத்துப் பெண். அவள் பெயர் நீலாஞ்சனா! ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் அவள் தன் தோழிகளுடன் பூலோகத்தில் சஞ்சாரம் செய்வதுண்டு. அத்தகைய ஓர் இரவில்தான் உறங்கிக் கொண்டிருந்த கலாதரனின் கனவில் தோன்றித் தன்னை சிலை வடிக்குமாறு வேண்டினாள். பிறகு அடுத்த பௌர்ணமி இரவில் வழக்கப்படி அவள் தன் தோழிகளுடன் பூலோக சஞ்சாரத்திற்குப் புறப்பட்டாள். நேராகத் தன் தோழிகளுடன் வைசாலி ராஜ்யத்துத் திரிசங்கத்தை அடைந்து, கலாதரன் வடித்திருந்த சிற்பத்தைக் காட்டி நடந்தவற்றைக் கூறினாள்.

சிலையைக் கண்டு வியந்த நீலாஞ்சனாவின் தோழிகளில் ஒருத்தி, “இதற்கு உயிர் இருந்தால் இன்னொரு நீலாஞ்சனா பூலோகத்தில் தோன்றி விடுவாள்,” என்றாள். மற்றொருத்தி, “நீலா… நீ இதற்கு உயிர் கொடுத்து விடு!” என்றாள். மற்றொருத்தி, “உன்னுடைய அறிவையும்,  மனத்தையும் இதற்கு அளித்து விடு!” என்றாள். அதற்கு நீலாஞ்சனா, “சிலைக்கு என் உயிரைத் தந்து விட்டால் நான் என்ன ஆவது?” என்றாள்.

 

“இல்லை. கந்தர்வர்களாகிய நமக்கு அபூர்வ சக்திகள் உண்டு. நீ சிறிது காலம் உன் உயிரையும், மனத்தையும், புத்தியையும் சிலைக்கு அளிப்பாய். அதே சமயம் உன் உயிர், மனம், புத்தி ஆகியவை உன்னிடமும் இருக்கும். கந்தர்வலோகத்திலும் பூலோகத்திலும் இரட்டைப் பிறவிகள் போல் இருப்பீர்கள்!” என்றாள் இன்னொரு தோழி.

 

“இது என்ன விபரீத விளையாட்டு?” என்று நீலாஞ்சனா கூற, “சிறிது காலம் நீ உன் அறிவினால் பல காரியங்களை சாதித்தபின், பூலோக நீலாஞ்சனாவை அழித்துவிடு!” என்றனர் தோழிகள் அனைவரும். நீலாஞ்சனாவிற்கு அந்த யோசனை பிடித்திருந்தது. உடனே அவள் தன் சக்தியினால் சிலைக்கு உயிர் கொடுத்து, அதனுடன் தன் புத்தியையும், மனத்தையும் பகிர்ந்து கொண்டாள்.

 

சிலை உயிர் பெற்று பூலோக நீலாஞ்சனாவாக மாறியது. உறக்கத்திலிருந்து எழுந்தவள் போல் உயிர்த்தெழுந்த பூலோக நீலாஞ்சனா, நகரத்திற்குச் சென்று தன் திறமையைக் காட்டுவோம் என்று எண்ணி இரவு முழுவதும் நடந்தாள். காலையில் ஒரு காட்டை அடைந்தாள். அங்கு புதரிலிருந்து ஒரு புலி அவள் மீது பாய, அடுத்த கணம் புலியின் மீது ஓர் அம்பு பாய்ந்தது. தன்னைக் காப்பாற்றியது யார் என்று நீலாஞ்சனா சுற்றுமுற்றும் பார்க்க, தொலைவில் வில், அம்புகள் ஏந்தி ஓர் இளைஞன் குதிரையின் மீது வருவதைக் கண்டாள். அவளருகில் வந்ததும் அவன், “நீ இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.

முதல் பார்வையிலேயே அவனிடம் மனத்தைப் பறிகொடுத்த நீலாஞ்சனா, “நான் பிழைப்பைத் தேடி தலைநகரம் செல்லும் வழியில் இந்தப் புலி குறுக்கிட்டது. என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி! ஆனால் என்னிடம் வாள் இருந்திருந்தால், நானே புலியைக் கொன்று இருப்பேன்” என்றாள்.

 

“அட! பெண்ணான உனக்கு வாள் வீசத் தெரியுமா?” என்று வியப்புடன் அவன் கேட்க, “என் பெயர் நீலாஞ்சனா! எனக்கு எல்லாப் போர்க்கலைகளும் தெரியும். நான் வைசாலி மன்னரை சந்தித்து என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுவேன்! உங்கள் பெயர் என்ன?” என்று அவள் கேட்டாள்.

 

“என் பெயர் பிரபாகரன்!” என்ற அந்த இளைஞன், “நீ மிகவும் அறிவாளி என்று தோன்றுகிறது. ஆனால் பெண்ணான உன்னைப் படையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நீ ஆண் வேடம் தரித்துக் கொள்! நானும் படையில் சேரத்தான் செல்கிறேன். அவந்தி ராஜ்ஜிய மன்னர் நமது ராஜ்யத்தின் மீது படையெடுத்துள்ளார். அதனால் நம் மன்னர் ஏராளமான வீரர்களைத் திரட்டுகிறார். என்னுடன் வா! உன்னை அழைத்துச் செல்கிறேன்!” என்றான்.

 

பிறகு இருவரும் தலைநகரம் சென்று சேனாதிபதியை சந்தித்து, படையில் சேர்ந்தனர். ஒருநாள் யுத்தகளத்தில் மன்னர் சேனாதிபதியுடன் யுத்தம் நடத்தும் விதத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டுஇருக்கையில், நீலாஞ்சனா அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து, “மகாராஜா! பகைவர்களின் படை நம்முடையதை விடப் பலமடங்கு பெரியது! அவர்களை நேருக்கு நேர் மோதி வெற்றி காண முடியாது. எதிரிப்படையில் குழப்பம் உண்டாக்கினால் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது” என்று தன் திட்டத்தை மன்னருக்கு விளக்கினாள்.

 

அதைக் கேட்டு மன்னர் வியந்து போனார். உடனே, தன் படையில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்தெடுத்து, அதற்கு அவளை உபதளபதி ஆக்கினார். அவளும் தன் படையை வழிநடத்திச் சென்று, போர்க்களத்தின் இருபுறமும் இருந்த மலைகள் மீதேறிப் பதுங்கிக் கொண்டாள். மறுநாள் போர் தொடங்கியதும், பகைவர் படை மீது எங்கிருந்தோ பாம்புகளும், தேள்களும் வந்து விழுந்தன.

 

மற்றொரு மலையில்இருந்து, தீப்பந்தங்கள் அவர்கள் மீது விழுந்தன. இதனால் பகைவர் படையில் ஒரே குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயம், வைசாலி ராஜ்ய வீரர்கள் அவர்களைத் தாக்க, பகைவர்கள் சரிவர போர்புரியாமல் பின்வாங்கி ஓடிப் போயினர். அந்த வெற்றிக்கு முழுக்காரணமான புத்திசாலி இளைஞனைப் பாராட்ட மன்னர் அவனைத் தன் அரண்மனைக்கு அழைத்தார். மன்னர் தனிமையில் இருந்தபோது, தன் ஆண்வேடத்தைக் கலைத்தாள் நீலாஞ்சனா.

“மகாராஜா! உண்மையில் நான் ஒரு பெண்! உங்களிடம் வேலைக்கு சேர்வதற்காக ஆண் வேடம் போட்டேன். என்னை மன்னிக்கவும்” என்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மன்னருக்கு அபார வியப்பும், மகிழ்ச்சியும் உண்டாக, வாரிசில்லாமலிருந்த அவர் நீலாஞ்சனாவைத் தன் மகளாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அவளை இளவரசியாக்கி அவள் விரும்புவதை அறிந்து பிரபாரகரை திருமணமும் செய்வித்தார்.

 

இவ்வாறு, தன் புத்திகூர்மையினால் பூலோகத்தில் வைசாலி ராஜ்யத்தின் இளவரசியான நீலாஞ்சனாவைப் பார்த்து, கந்தர்வலோக நீலாஞ்சனா மனம் பூரித்தாள். தன் தோழிகளிடம் தன்னுடைய பிரதிநிதியைப் பற்றிக் கர்வத்துடன் கூறினாள். ஆக, தாங்கள் ஆரம்பித்த விளையாட்டு முடிவுற்றது என்று கந்தர்வலோகப் பெண்கள் கருதினர். அவளை மீண்டும் பழையபடி சிலையாக்குவதற்காக,  கந்தர்வலோக நீலாஞ்சனா இளவரசியிடம் வந்தாள். அவள் யார் என்ற உண்மையை இளவரசிக்கு எடுத்துரைத்து, அவளது உயிரை எடுக்கப் போவதாகக் கூறினாள். ஆனால் அவள் அதற்கு இளவரசி மறுத்துவிட்டாள்.

 

“சொல்வதைக் கேள்! நாம் இருவரும் நிரந்தரமாக ஒரே சமயத்தில் வாழ முடியாது. நான் என் உயிரை தற்காலிகமாக உனக்குக் கொடுத்தேன். அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள என்னை அனுமதி!” என்றாள் கந்தர்வ நீலாஞ்சனா. “கந்தர்வப் பெண்ணே! நீ தனிமையாக வாழ்கிறாய். ஆனால் நான் என் வாழ்வை என் கணவடன் பிணைத்துள்ளேன். என் மீது அன்பைப் பொழியும் என் கணவர் நானின்றி உயிர் வாழ மாட்டார். நான் இப்போது வைசாலியின் இளவரசி! நான் மறைந்து போவதை குடிமக்களும் விரும்ப மாட்டார்கள்!” என்றாள் பூலோக நீலாஞ்சனா.

 

அவள் கடைசியாகக் கூறிய சொற்கள் கந்தர்வ நீலாஞ்சனாவின் மனத்தை உருக்கி விட்டன. ஆகையால் தனது இதயத்திலிருந்து தீ உருவாக்கி, அந்தத் தீயில் எரிந்து மறைந்து போனாள்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! கந்தர்வப் பெண் நீலாஞ்சனாவின் மதிகெட்ட செயலைப் பார்! பூலோக நீலாஞ்சனாவிற்கு உயிர் கொடுத்ததே அவள்தான். அதுவும் தற்காலிகமாகத்தான். தன்னுடைய புத்திகூர்மையை தன் பிரதிபிம்பத்தின் மூலம் பூவுலகில் நிரூபித்துக் காட்டியபின், மீண்டும் அதைத் திருப்பி எடுத்துக் கொள்வதாக இருந்தாள்.

 

ஆனால் கடைசி நிமிடத்தில் புத்தி பேதலித்து, தன் பிரதிபிம்பத்தை உயிருடன் வாழ அனுமதித்து விட்டு, தான் உயிர் நீத்தாள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “கந்தர்வப் பெண்ணான நீலாஞ்சனா தன் புத்தி சாதுர்யத்தை நிரூபிப்பதற்காக சிலைக்குத் தன் உயிரை தற்காலிகமாகக் கொடுத்தது உண்மைதான்! ஆனால் கடைசி நிமிடத்தில் அவள் மனம் மாறி தன்னுயிரைத் தியாகம் செய்தது முட்டாள்தனத்தினால் அல்ல, அவளுடைய தயாள குணத்தினால்தான்! விளையாட்டாகத் தொடங்கிய நாடகத்தில், பூலோக நீலாஞ்சனா போர்க்களத்தில் தன் தந்திரமான திட்டத்தால் வெற்றி பெற்றாள்.

 

அவள் தான் விரும்பிய பிரபாகரனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மன்னருக்கும், பட்டத்து ராணிக்கும் ஸ்வீகாரப் பெண்ணாகி விட்டாள். குடிமக்களின் மனம் கவர்ந்த இளவரசியாகி விட்டாள். அவள் உயிரைப் பறித்தால் அவளைச் சார்ந்துள்ள அனைவரும் பெரும் துக்கத்தில் மூழ்குவர். ஆகையால் தான் உயிர் நீப்பதே சிறந்தது என்றும், தன் பிரதிபிம்பமாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் என்றே அவள் மேற்கூறிய முடிவெடுத்தாள்” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலால் அவன் மவுனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

நாகரத்தினத்தை திருடியது நியாயமா?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் பாலானவர்களின் விஷயத்தில் நயவஞ்சகமே வெல்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதை நிரூபிக்கும் ஒரு கதையை நான் கூறுகிறேன், கேள்” என்றது.

 

கடம்பவனம் எனும் கிராமத்தில் கண்ணன், ரங்கன் என்ற இரு மாடுமேய்க்கும் இளைஞர்கள் வசித்து வந்தனர். ஒரு நாள் மாலையில் ரங்கனுடைய மாடுகளில் ஒன்றைக் காணவில்லை. அதனால் அவன் கண்ணனைத் தன் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிப் போகச் சொல்லி விட்டு, தான் தொலைந்து போன மாட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றான். மாலை மங்கும் நேரத்தில், தீடீரென ஒரு புலி எதிரே வர, ரங்கன் பயந்து போய் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.

 

சிறிது நேரத்தில், காட்டில் இருள் சூழ்ந்தது. இனி, தொலைந்து போன மாட்டைத் தேடிப் பயனில்லை என்று கருதிய ரங்கன் வீடு திரும்ப எண்ணியபோது, அவன் அமர்ந்து இருந்த பெரிய மரத்திற்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதரில் இருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த நாகத்தின் தலையில் கண்ணைப் பறிக்கும் ஒரு இரத்தினக் கல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

 

சரசரவென வெளியே வந்த நாகம் ரங்கனிருந்த மரத்தையணுகித் தன் தலையில் இருந்த இரத்தினத்தை எடுத்து, மரத்தின் அடியில் இருந்த ஒரு பொந்தினுள் வைத்து விட்டு, சற்றுத் தள்ளிப்போய் இன்னொரு மரத்தினடியில் அமர்ந்ததும் திடீரென ஒரு மனிதனாக மாறியது. நாகதேவனைப் போல் தோற்றமளித்த அந்த மனிதன் மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தான். இதைக் கண்ட ரங்கன் இனியும் அங்கு இருந்தால் ஆபத்து எனக் கருதி, சத்தமின்றி மரத்திலிருந்து இறங்கி, ஊரை நோக்கி ஓடிப்போனான்.

மறுநாள் அதைப்பற்றித் தன் தோழன் கண்ணணிடம் சொல்ல, கண்ணனின் விழிகள் வியப்பினால் விரிந்தன. அவன் ரங்கனை நோக்கி, “அடப்பாவி! சரியான முட்டாளாக இருக்கிறாயே! நாகரத்தினம் மட்டும் நம் கையில் இருந்தால், பாம்பு தீண்டிய பிறகு இறக்கும் நிலையில் இருப்பவர்களை நாம் காப்பாற்றி விடலாமே! நாம் அதையே ஒரு தொழிலாக வைத்துக் கொண்டால், நிறையப் பணம் சம்பாதித்துப் பணக்காரர்களாகி விடலாமே! சரி, சரி! இப்போது ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இன்று இரவு அந்த இடத்திற்கு நாமிருவரும் சேர்ந்து செல்வோம். இன்றும் நேற்று நடந்தது போல் நடந்தால் நாம் இரத்தினத்தைத் திருடிக் கொண்டு வந்து விடலாம்!” என்று கூறினான்.

 

ரங்கன் வர மறுத்ததால் கண்ணன் மட்டும் தனியாக காட்டுக்குச் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அன்று நாகம் வந்தது. நாகதேவன் தீவிர தவத்தில் ஆழ்ந்து விட்டான் என்று தெரிந்ததும், கண்ணன் சத்தமின்றி கீழே இறங்கி, இரத்தினத்தைத் திருடிக்கொண்டு, ஊரை நோக்கித் திரும்பினான்.

 

மறுநாள் காலையிலேயே, அவன் கடம்பவனம் கிராமத்தைவிட்டு வெகுதூரம் சென்று மற்றொரு பெரிய கிராமத்தை அடைந்தான். அந்த ஊரின் ஜமீன்தாரின் பெண்ணை ஒருநாள் நாகம் தீண்டிவிட, கண்ணன் தன்னிடம் உள்ள  இரத்தினத்தைக் கொண்டு அவளை உயிர் பிழைக்கச் செய்தான். அதனால் மகிழ்வுற்ற ஜமீன்தார் அவனுக்கு அந்த கிராமத்திலேயே வீடு அமைத்துதர, அவன் அந்த ஊரிலேயே தங்கிவிட்டான்.

 

வயல்களும், காடுகளும் நிறைந்த அந்தப் பிரதேசத்தில் தினமும் பலர் பாம்பு தீண்டி விஷமேறி அவனைத்தேடி வர அவன் அவர்களை குணப்படுத்தி வந்தான். காப்பாற்றப்பட்டவர்கள் அவனுக்குக் கொடுத்த பல வெகுமதிகளினால் அவனிடம் குவிந்த செல்வமும் ஏராளமாக ஆயிற்று.

கண்ணனால் வஞ்சிக்கப்பட்ட நாகதேவன் மறுநாள் காலையில் தவங்கலைந்து எழுந்த பிறகு தன் இரத்தினத்தைத் தேட, அது காணவில்லை.சுதேந்திரன் என்ற அந்த நாகதேவன் தன் இரத்தினத்தை இழந்துத் துடித்துப் போனான். எதிர்காலத்தில் இந்து என்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பி அந்த நாகதேவன் கட்டிய மணக்கோட்டை இடிந்து போயிற்று. அவன் அந்தப்பெண்ணை சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி!

 

ஒரு விவசாயியின் பெண்ணான இந்து பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். ஒரு நாள் அவள் தன் குடிசை வாயிலில் நெல்லைக் காயவைத்துவிட்டு, அவற்றைப் பறவைகள் கொத்தாமல் விரட்டிக் கொண்டு இருக்கையில், திடீரென
அந்தப்பக்கம் ஓர் இளைஞன் வந்தான். இந்துவைக் கண்டதும் அவள் அழகில் மயங்கிய அவன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவளை வேண்ட, அவள் மறுத்தாள்.

 

கோபங்கொண்ட அவன் அவளிடம் வம்பு செய்ய, அவள் கூச்சலிட்டாள். ஆனால், அவள் கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் யாருமில்லை அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சுதேந்திரன் என்ற நாகதேவன் நிராதரவான இந்துவின் மீது மிகவும் பரிதாபப்பட்டு, அந்த இளைஞனின் மீது படமெடுத்து சீறிப்பாய, அவன் பயந்தோடிப் போனான். தனக்கு உதவி செய்த அந்த நாகத்தினை நன்றியுடன் இந்து நோக்க, திடீரென அந்த நாகம் மனிதனாக மாறியது.

 

அவள்முன் வசீகரமான தோற்றத்துடன் நின்ற சுதேந்திரன், “பெண்ணே! என் பெயர் சுதேந்திரன்! நான் நாகலோகத்தைச் சேர்ந்த நாகதேவன்! என்னிடம் இரத்தினம் உள்ளது. அதன் சக்தியினால்தான் நான் இப்போது மனித உருவம் எடுத்து உன் முன் நிற்கிறேன். “என்னால் அதிக நேரம் மனித உருவில் இருக்க முடியாது. ஆனால் நிரந்தரமாக மனிதனாக மாற முயற்சி செய்வேன். அதுவரை நீ எனக்காகக் காத்திருப்பாயா?” எனவும் இந்து சம்மதித்தாள்.

உடனே மட்டிலா மகிழ்ச்சியுற்ற சுதேந்திரன் சுக்ரானந்தர் என்ற முனிவரின் ஆசிரமத்தையடைந்து தன்னுடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். சற்று நேரம் யோசித்த முனிவர், “சுதேந்திரா! கடவுள் ஏதாவது ஒரு காரணத்தினால் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு குறிப்பிட்ட உருவத்தைத் தந்து இருக்கிறார். நீ நாகலோகத்தைச் சேர்ந்தவன்! அதனால் நீ நாகத்தின் உருவத்தில் இருப்பதுதான் நியாயம் ஆனது. ஆகையால் உன் ஆசையை விட்டுவிடு!” என்றார்.

 

சுதேந்திரன் இந்துவின் மீது தான் கொண்டுள்ள அன்பைப் பற்றிக் கூறினான். ஆகையால் முனிவர், “அவள் மீதுள்ள உன்னுடைய அன்பு மிக ஆழமானது என்று தெரிந்து கொண்டேன். ஆகவே, நான் உன் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்ற முயல்கிறேன். என்னுடைய தவ வலிமையினால் நீ இரவு முழுவதும் மனித உருவில் இருப்பாய், இரவு நேரங்களில் நீ பரம்பொருளை தியானித்துத் தவம் செய்து வா! உன் மூலம் பல ஜீவராசிகளுக்கு நன்மை ஏற்படும் விதத்தில் நடந்து கொள். சில நாள்களிலேயே, நீ நிரந்தரமாக மனிதனாக மாறுவாய்!” என்றார்.

 

அவ்வாறு தவம் புரிந்துவந்த இரவுகளில் ஓரிரவில் அவனுடைய இரத்தினம் திருட்டுப் போயிற்று. அதனால் அவனுடைய சக்திகளை இழந்து அவன் ஒரு சாதாரண நாகம் ஆனான். மிகவும் சக்தி வாய்ந்த அந்த இரத்தினத்தைத் தன்னிடம் இருந்து திருடியவனைப் பழி வாங்குவதற்குத் துடித்தான்.

 

அந்த நேரம், வேறோரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த கண்ணன். தன் பழைய நண்பன் ரங்கனைப் பார்க்க விரும்பி கடம்பவனம் வந்தான். ரங்கனை சந்தித்த அவன், நடந்த அனைத்ததையும் கூறிவிட்டு, “இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த நன்றியை நான் மறக்கவில்லை, என்னுடைய செல்வத்தில் பாதியை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்து விடு!” என்றான்.

 

அதற்கு ரங்கன், “நன்றி கண்ணா! ஆனால், நியாயமாக உழைத்துக் கிடைக்கும் கூலியையே நான் விரும்புகிறேன். ஆகவே, நீ சென்று வா!” என்றான். அதன்பிறகு கண்ணன் தன் ஊர் திரும்பினான். அப்போது வழியில் சுதேந்திரன் கண்களில் கண்ணன் தென்பட்டான். கண்ணனிடம் உள்ள இரத்தினத்தின் சக்தி சுதேந்திரனை ஈர்க்க, உடனே அது தன்னுடையதுதான் என்றும், அதை எடுத்துச் செல்பவனே திருடிச் சென்றவன் என்றும் உணர்ந்த நாகம் மிகுந்த கோபத்துடன் கண்ணனின் மீது சீறிப்பாய்ந்து அவனைக் கொத்தியது. என்ன ஆச்சரியம்? சுதேந்திரன் தானாகவே மனித உருவம் பெற்று நின்றான். அதே சமயம் கண்ணணுக்கும் நாகம் தீண்டியதால் விஷம் ஏறவில்லை.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா? சுயநலவாதியான கண்ணன் நாகம் தீண்டியும் எவ்வாறு விஷம் ஏறாமல் உயிரோடு இருந்தான்? அதைவிட வியப்பானது என்னவெனில், சுதேந்திரன் எவ்வாறு கண்ணனைத் தீண்டியதும் மனித உருவம் பெற்றான்? ரங்கன் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்வதே தருமம் என எண்ணி அதன் வழியே நடந்தான். ஆனால் அவன் முன்னேறவே இல்லை. தருமத்தின் வழியில் நடப்பவர்களுக்கு இந்த கதிதான ஏற்படுமா? என்னுடைய கேள்விக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு வேலையும் அது அதன் பலனின் அடிப்படையினால் மட்டுமன்றி, அந்த வேலையைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமையும் சூழ்நிலை மற்றும் வேலை செய்பவர்களின் பாவம் புண்ணியங்களின் அடிப்படையினாலும் அமையும். ரங்கன் மிகவும் கடுமையாக உழைத்து வாழும் வழ்கையை தேர்ந்தெடுத்தான். அதனால் அவனால் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ முடிந்தது. இரத்தினத்தை திருடினாலும், அதை வைத்து, பாம்பு தீண்டிய பலரின் உயிரைக் காப்பாற்றும் புண்ணியச் செயலைத்தான் அவன் செய்து இருக்கிறான்.

 

தவிர, செல்வம் சேர்ந்தவுடன் அதைத் தன் நண்பனுடன் பகிர்ந்தளிக்க அவனைத் தேடி வந்த நல்ல உள்ளம் படைத்தவன் கண்ணன். ஆகையால் சுதேந்திரன் என்ற நாகம் தீண்டியதும் அவன் இறக்கவில்லை. சுதேந்திரன் முனிவர் கூறியபடி  தானே நேரடியாக எந்த ஜீவராசிக்கும் உதவி புரிய வில்லை எனினும், அவனுடைய இரத்தினத்தின் மூலமே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆகவே அவன் நிரந்தர மனித உருவத்தைப் பெற்றான்.” என்றான்.

 

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

நல்ல பகைவன்

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன.

 

ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று.

 

விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார்.

 

நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன்.

அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார்.

 

அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.
ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான்.

சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை.
சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார்.

 

நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான்.

முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
“குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும்,  முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான்.

 

“ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான்.

 

சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர்.

 

இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார்.

 

அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார்.

அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார்.

 

அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான்.

 

நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும்.

 

“சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான்.

 

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

செல்வம் வேண்டாமா?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள அரும்பாடுபட்டான். ஆனால் அது நிறைவேறிய பிறகு அதை அனுபவிக்காமல் தியாகம் செய்துவிட்டான். அந்த ராமநாதனின் கதையைக் கேள்!” என்று கதை சொல்லாயிற்று.

 

மாயனூர் என்ற கிராமத்தில் ராமநாதன் என்ற இளைஞன் இருந்தான். ஒரு நாள் கிராமத்திற்கு வருகை தந்த சாமியார் ஒருவர் அவன் கை ரேகைகளைப் பார்த்துவிட்டு, “அதிருஷ்டம் உன்னைத் தானே தேடிவரும்” என்று சொன்னார். அதில் இருந்து ராமநாதன் வேலை செய்வதை விட்டு விட்டு தான் பணக்காரன் ஆவது பற்றியே எப்போதும் மனக்கோட்டைக் கட்ட ஆரம்பித்தான். ஒருநாள் அவனைத்தேடி வந்த வாலிபன் ஒருவன் “நான் சொல்லும் இடத்தில் நீ ஐந்து வருஷம் வேலை செய்தால், உனக்கு நிறைய செல்வம் கிடைக்கும். சம்மதமா?” என்று கேட்டதும், ராமநாதனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது.

 

ஆயினும் அவன் முழு விவரங்களை அறிய விரும்பியதால், ஆனந்தன் விளக்கிக் கூறினான். ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் அதே கிராமத்திலிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் அவளுடைய தகப்பன் அவளை மணக்க விரும்புபவர்களிடம், ஆயிரம் பொன் வரதட்சணை கேட்டான். ஆனந்தனிடம் அத்தனை பணம் இல்லை. அப்போது அந்தக் கிராமத்து வியாபாரியான சரவணன் ஆனந்தனை அழைத்துத் தன் வீட்டில் குறைந்தது ஐந்து வருஷம் வேலை செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் ஆயிரம் பொன் தருவதாகவும் கூறினான்.

 

உடனே ஆனந்தனும் அவனிடம் வேலை செய்ய ஒப்புக் கொண்டான். ஆனால் வேலைக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே விசித்திரமான நோயின் காரணமாக அவன் விகாரமாக மாறினான். இதனால் அவன் விரும்பிய பெண்ணும் அவனை நிராகரித்து விட்டாள். ஆகையால் ஆனந்தன் சன்னியாசியாக முடிவு செய்தான். அந்த முடிவை சரவணன் ஏற்கவில்லை. இருப்பினும் ஆனந்தன் தான் தீர்த்த யாத்திரை சென்று வருவதாகவும், அதன்பின் தன் பணியைத் தொடர்வதாகவும் ஊறுதி அளித்துவிட்டுச் சென்றான்.

பிருஹதாரண்யத்தில் ஆனந்தன் பிரகாண்டர் என்ற ரிஷியை சந்தித்தான். அவரிடம் தன்னைப் பற்றிக் கூறி தனக்கு சந்நியாசியாக விருப்பம் என்றும், அவரைத் தனக்கு தீட்சை அளிக்குமாறும் வேண்டினான்.

 

அதற்கு பிரகாண்டர், “உனக்கு ஏற்பட்டுள்ள விரக்தி தற்காலிகமானது. அதனால் நான் உனக்கு தனமந்திரம் ஒன்று சொல்லித்தருகிறேன். அதை இடைவிடாமல் ஜெபித்தால் உனக்குப் புதையல் கிடைக்கும். புதையல் கிடைத்த பின்னும் அதை அனுபவிக்க ஆசை ஏற்படவில்லை எனில், நீ சந்நியாசியாகத் தகுதியானவன். ஆனால் ஒரு வருடத்திற்குள் உன் தவப்பலனை உணர்ச்சிவசப்பட்டு வீணாக்கினால், நீ சந்நியாசி ஆகமுடியாது” என்று கூறி அவனுக்கு தன மந்திரத்தை உபதேசித்தார்.

 

ஆனந்தன் தனியாக தனக்கென ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இடைவிடாமல் தனமந்திரத்தை ஜெபித்தான். சில நாள்களிலேயே, அவனுடைய மனக்கண்ணில் ஒரு அரசமரத்தடியில் உள்ள புதையல் புலனாகியது. ஆனாலும் இறைவனை தியானம் செய்ய ஆரம்பித்தான். அப்படியிருக்கையில் ஒரு நாள் அவனைத் தேடி நீலாம்பரி என்ற இளம்பெண் ஆசிரமத்துக்கு வந்தாள்.

 

ஆனந்தனிடம் அடைக்கலம் கேட்ட அவள் தன் பிரச்சினையை விளக்கினாள். அவள் ஏழையாக இருந்தாலும், சிறுவயது முதல் செல்வத்திலும், சுகபோகங்களிலும் அபார ஈடுபாடு இருந்தது. அவளை சோமு என்ற வாலிபன் வரதட்சணை ஏதுமின்றி திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

 

அவன் ஏழை என்பதால் அவனை மணம் செய்ய நிராகரித்துவிட்டாள். ஆனால் அவள் தந்தை அதற்கு சம்மதித்து விட்டார். அதனால் வீட்டை விட்டு ஓடி வந்த அவள் ஆனந்தனிடம் தனக்கு  புகலிடம் தருமாறு வேண்டினாள். அதற்கு சம்மதித்த ஆனந்தன், “நீலாம்பரி! ஒரு வருடம்வரை புதையலைப் பாதுகாத்தவாறு எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தால், உனக்கு அந்தப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினான். அவளும் அதற்குச் சம்மதித்தாள்.

ஒருநாள் அவளை மணதார விரும்பிய சோமு அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்து விட்டான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் அவளை நச்சரித்தான். அதற்கு அவள், “ஆனந்தனை நீ கொன்று விட்டால். அந்தப் புதையலை நாம் எடுத்துக் கொண்டு திருமணம் புரிந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்” என்றாள். நீலாம்பரி பேசியதை ஆற்றில் நீராடச் சென்று திரும்பிய ஆனந்தன் கேட்டு திடுக்கிட்டான். உடனே அவள் முன் வந்து, “பணத்திற்காக உனக்குப் புகலிடம் தந்த என்னையே நீ கொல்ல எண்ணினாய்! அதனால் நீ ராட்சஸியாக மாறுவாய்” என்று சாபம் கொடுக்க, நீலாம்பரி ராட்சஸியாக மாறிவிட்டாள்.

அப்போது அங்கே வந்த பிரகாண்ட ரிஷி ஆனந்தனைப் பார்த்து, “நீலாம்பரிக்கு சாபம் கொடுத்ததனால் உன் தவ வலிமையை நீ இழந்து விட்டாய்!” என்றார்.  “சுவாமி! மனித குலத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன். என்னை உடனே சந்நியாசியாக மாற்றுங்கள்” என்று ஆனந்தன் வேண்டினான்.

 

“சரவணனுக்கு நீ கொடுத்த வாக்கு என்னாவது? உனக்குப் பதிலாக வேறு யாரையாவது அவனிடம் வேலைக்கு அமர்த்து! உன்னால் சாபமிடப்பட்ட நீலாம்பரிக்கு சாப விமோசனம் அளி! அதன்பிறகு சந்நியாசத்தைப் பற்றி யோசிக்கலாம்” என்றார் ரிஷி. “நீங்கள் எனக்குச் சற்று உதவி செய்யக்கூடாதா?” என்று ஆனந்தன் வேண்ட, அவர் “பணத்தின் மீதுள்ள ஆசையினால்தானே நீலாம்பரி உன்னைக் கொலை செய்யவும் துணிந்தாள். அதே பணத்தை துச்சமாகக் கருதி எவன் ஒருவன் தியாகம் செய்கிறானோ, அவன் மூலம் நீலாம்பரிக்கு விமோசனம் அடைய, உன்னுடைய கடமையும் முழுமையடையும்” என்றார்.

 

மேற்கூறிய தன் வரலாற்றை விளக்கியபின், ராமநாதனை சரவணனிடம் அழைத்துச் செல்லவே தான் வந்ததாக ஆனந்தன் கூறினான். இதைக் கேட்டதும் ராமநாதன் மிகுந்த உற்சாகத்துடன் சரவணனிடம் வேலைக்கு அமர்ந்தான். பிறகுதான் அவனுக்கு அந்த வீட்டில் வேலை செய்வது எத்தனை கடினம் என்று புரிந்தது. ஒருநாள், எஜமானி “இந்த கிராமத்தில் சந்திரா என்ற சமையற்காரி ஒருத்தி இருக்கிறாள். அவள் மிகப் பிரமாதமாக சமைப்பாள். அவளை எப்படியாவது இங்கு சமையல் செய்ய அழைத்து வா! முடியவில்லை எனில் உன்னை வேலை விட்டு நீக்கி விடுவேன்” என்று பயமுறுத்தினாள்.

 

ஆனால் சந்திரா மறுத்துவிட்டாள். ராமநாதன் விடாமல், “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு ஆயிரம் பொன் கிடைக்கும். அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். தயவு செய்து எனக்கு உதவி செய்!” என்று கெஞ்சினான். அவனைக் கண்டு இரக்கமுற்ற சந்திரா, “எனக்கு உன்னுடைய பணம் தேவையில்லை. உன்னுடைய நிலைமை பரிதாபமாக இருப்பதால் உனக்கு உதவி செய்ய ஒத்துக் கொள்கிறேன்” என்று கூறினாள்.

 

அவனுடன் சரவணன் வீட்டுக்கு வந்து சமையல் வேலை மட்டுமன்றி, மற்ற எல்லா வீட்டு வேலைகளிலும் ராமநாதனின் தோளாடு தோள் நின்று உதவி செய்தாள். நாளடைவில் பணத்தைப் பற்றிய அவன் கருத்து மாறியது. அவன் தன் வாழ்வில் சந்திராவை வாழ்க்கைத் துணைவியாக அடைந்தால் அதுவே பெரிய பொக்கிஷம் கிடைப்பது போல் என்று எண்ண ஆரம்பித்தான்.

ஐந்து ஆண்டுகள் சென்றபிறகு அவன் ஆனந்தனை அடைந்து, “உன் பொருட்டு, நான் அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்து முடித்து விட்டேன். ஆனால் எனக்கு அந்த ஆயிரம் பொன் தேவையில்லை. அதை நீயே வைத்துக்கொள்! என் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் சந்திரா ஒருத்தியே என்று உணருகிறேன்!” என்று ராமநாதன் கூறியதும், ஆனந்தன் ஆச்சரியப்பட்டான். அந்த சமயம் அங்கு வந்த பிரகாண்ட ரிஷி, ராமநாதனை மனதார வாழ்த்தினார். நீலாம்பரியும் அக்கணத்திலேயே சாப விமோசனம் பெற்று சுய உருவத்தைப் பெற்றாள்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமனிடம், “மன்னா! பணம் வேண்டும் என்று ராமநாதன் ஐந்து வருடம் சரவணன் வீட்டில் மிகக் கடுமையாக உழைத்த பின், கடைசியில் ஆயிரம் பொன்னை வேண்டாம் என்று தியாகம் செய்தது ஏன்? ஆனந்தன் ஒன்றுமே செய்யாமல் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் எப்படிக் கிடைத்தது? கடைசியில் பிரகாண்ட ரிஷி ராமநாதனை மனதார வாழ்த்துமளவிற்கு அவன் அப்படியென்ன செய்துவிட்டான்? என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ராமநாதனுக்குப் பணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது உண்மைதான்! ஆனால் சந்திராவை சந்தித்தது முதல் அவன் மனத்தில் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. தான் அளிப்பதாகக் கூறிய பணத்தை நிராகரித்து விட்டு, தன் மீதுள்ள இரக்கம் காரணமாக தனக்கு உதவி செய்ய வந்த சந்திராவைக் கண்டது முதல் அவனுக்குப் பணத்தின் மீது மோகம் குறைந்தது. அதனால் தனக்கு வரவேண்டிய ஆயிரம் பொன்னையும் தியாகம் செய்தான். ராமநாதன் செய்த தியாகத்தினால் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் கிட்டியது. மகத்தான தியாகம் செய்த ராமநாதனை பிரகாண்ட ரிஷி வாழ்த்தாமல் வேறு என்ன செய்வார்?” என்றான்.

 

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

கந்தர்வனின் சாபம்

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்ளிருந்த வேதாளம், விக்கிரமனை நோக்கி, “மன்னா! இந்த நள்ளிரவில், இந்த பயங்கரக் காட்டில் நீ எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய் என்பது புரியவில்லை. யசோதரன் எனும் மன்னன் தனக்கு சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு கந்தர்வன் தனக்குக் கொடுத்த சாபத்தினால் மிகவும் துன்புற்றான். அந்த யசோதரனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்” என்று கதை சொல்லத் தொடங்கியது.

 

நிஷாதபுரியின் மன்னன் யாசோதரன் தன் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். ராஜ்யத்தின் எல்லையிலிருந்த காடுகளிலிருந்து கொடிய மிருகங்கள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால், அவற்றை வேட்டையாடத் திட்டமிட்டு ஒருநாள் அவன் தன் பரிவாரங்களுடன் எல்லையோரக் காடுகளுக்குள் புகுந்தான்.

 

யசோதரன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், வானிலிருந்து ஒரு கந்தர்வனும் ஒரு கந்தர்வப் பெண்ணும் மலையுச்சியில் இறங்கி சற்றே இளைப்பாற அமர்ந்தனர். அமரன் என்ற அந்த கந்தர்வன், கந்தர்வப் பெண்ணான சர்மிளா மீது மிகவும் அன்பு கொண்டிருந்தான். மலை உச்சியில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, அவன் அவளை நோக்கி, “சர்மிளா! இந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள காட்சிகளைப்பார்! ஒவ்வொன்றும் இயற்கையின் எழிலைப் பறைசாற்றுகின்றன. ஆனால் அவை ஒன்றுகூட உன் அழகுக்கு இணையாகாது” என்று கூறினான்.

 

ஆனால் அவள் அவன் சொல்வதைச் சிறிதும் கவனிக்கவில்லை. காட்டில் தன் புரவியில் அமர்ந்து காட்டு விலங்குளைத் துரத்தும் யசோதரனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்து ரசிப்பதைக் கண்டதும், பொறாமையினால் அவன் இதயம் பற்றி எரிந்தது. “நான் உன் அழகில் மயங்கி உன்னை வர்ணித்துக் கொண்டு இருக்கும்போது, நீ ஒரு மனிதனின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாய். பார், இப்போது அவனை என்ன செய்கிறேன் என்று!” என்று சீறிக்கொண்டே யசோதரனுக்கு சாபம் கொடுத்தான்.

திடீரென யசோதரன் ஒரு சித்திரக் குள்ளனாக மாறிவிட்டான். தன் உருவம் மாறிப் போனதைக் கண்ட யசோதரன் பலத்த அதிர்ச்சியடைந்தான். அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு முயல் அவனை மோதித் தள்ளிக் குட்டிக்கரணமடிக்கச் செய்தது. அதைக் கண்டு அமரன் விழுந்து விழுந்து சிரித்தான். “சர்மிளா! பார்த்தாயா அந்த மனிதனின் கதியை?” என்று பரிகாசம் செய்தான்.

 

“அடப்பாவி! என்ன காரியம் செய்து விட்டாய்?” என்று அலறினாள் சர்மிளா. “அவன் குதிரை மீது வாயுவேகமாச் செல்லும் காட்சியைத்தான் ரசித்தேனே தவிர, அவன் அழகில் மயங்கி விடவில்லை. இத்தனை பொறாமை பிடித்தவனா நீ?”  என்று சொல்லிவிட்டு வானில் பறந்து விட, திடுக்கிட்டு போன அமர அவளை சமாதானப்படுத்தியவாறே வானில் அவளைப் பின் தொடர்ந்தான்.

 

அதற்குள் காட்டில் ஒரு சூறாவளிக் காற்றுவீச, சாண் உயரமேயான யசோதரனைக் காற்று மேலே தூக்கிச் சென்றது. பயந்து நடுங்கிப் போன யசோதரன், அந்த சமயம் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு கிளியின் வாலினைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கிளி அண்டை ராஜ்யமான அனந்தபுரியின் இளவரசி ராகலதாவின் வளர்ப்புக்கிளி. தன் தோழிகளுடன் அந்தப்புரத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்த ராகலதா தன் வளர்ப்புக்கிளியின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்த உருவத்தைப் பார்த்து வியப்பு அடைந்தாள்.

சாண் உயரமேயான உருவம், தலையில் சுண்டைக்காய் போல் ஒரு கிரீடம், கடுகுகள் போன்ற விழிகளைக் கொண்ட அந்த விசித்திரமான மனித உருவத்தை அவள் அதுவரை பார்த்ததேயில்லை. அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அதற்குள் அவளது தோழிகள், “ஆகா! இது என்ன அதிசயம்?” என்று கூச்சலிட, ராகலதா யசோதரனைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். அந்த உருவம் அசைவதைக் கண்டு இளவரசி, “ஆகா! இது உயிருள்ள பொம்மை போலிருக்கிறது” என்றாள்.

 

மிக அருகில் ராகலதாவைப் பார்த்த யசோதரன் அவளுடைய அழகில் மதிமயங்கிப் போனான். மணந்தால் அவளையே மணப்பது என்ற தீர்மானித்தான்.
“ராஜகுமாரி! நான் நிஷாதபுரி மன்னன்! நான் எப்படி இத்தகைய உருவத்தைப் பெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் வீராதி வீரன்தான்! என்றாவது ஒருநாள் நான் சுயஉருவம் பெறுவேன்” என்றான் யசோதரன்.

“சாண் உயரத்தில் இருந்து கொண்டு பேச்சைப்பார்!” என்று தோழிகள் கேலி செய்ய, ராகலதா அவர்களை அடக்கினாள்.

 

இளவரசி அவனைத் தன்னுடன் அந்தப்புரத்தில் வைத்துக்கொள்ளத் தீர்மானித்தாள். தினமும் அவனுடன் இரகசியமாகப் பொழுதுபோக்கினாள். ராகலதா நன்றாக ஓவியம் வரையக் கூடியவள்! யசோதரன் எல்லாரையும் போல் சராசரி உயரத்தில் இருந்தால் எப்படியிருப்பான் என்று கற்பனை செய்து, அவனுடைய ஓவியத்தைத் தீட்டினாள்.

 

ஓவியத்தை அவள் பூர்த்தி செய்தபோது, பின்னாலிருந்து அதை கவனித்த யசோதரன், “ராகலதா! நீ ஓவியத்தில் வரைந்துள்ளதை போல் ஒரு நாள் கட்டாயம் மாறுவேன். அன்று என் மனத்தைத் திறந்து சொல்வதாக இருந்தேன். ஆனால் இப்போதே அதைச் சொல்கிறேன். நான் உன்னிடம் அன்பு கொண்டு உள்ளேன். சுயஉருவம் பெற்றபின் உன்னையே மணப்பேன்” என்றான். ராகலதா அதைக் கேட்டு நாணத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

கடல்கன்னியை சிறைவைத்த மன்னன்

அதற்குள், பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜலேந்திரன் கடலுக்குத் திரும்பினான். அங்கு ஹிசிகாவைக் காணாமல் தேடிஅலைந்து, அவள் பூலோகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ரத்னகிரியில் அவளைத் தேடியலைந்தான். இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னரின் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் மணிதரனை சந்தித்தான்.

 

மன்னனிடம் ஹிசிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினான். அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் மணிதரன் தன் மந்திரியை நோக்கினான். மன்னனின் மனத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ஜலேந்திரனை நோக்கி, “ஜலேந்திரா! எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை!” என்றார்.

 

“மந்திரியாரே! உங்கள் மன்னரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மன்னரேயானாலும், தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவருக்கு அதிகாரமில்லை” என்றான்.

“வார்த்தையை அளந்து பேசு! உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்கிடவில்லை. ஹிசிகா ஒரு குற்றவாளி! கடலில் வசிப்பவர்கள் பூலோகத்தில் மன்னரின் அனுமதியின்றி நுழையக் கூடாது. அதனால்தான் அவளை சிறை வைத்து இருக்கிறோம். அதே குற்றத்திற்காக உன்னையும் சிறைப்பிடிக்க முடியும். நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் ஒரு நிபந்தனை உள்ளது” என்றார் மந்திரி.

அந்த நிபந்தனை என்னவென்று சொல்லுங்கள்!” என்றான் ஜலேந்திரன். “கடலில் முத்துகளும், இரத்தினங்களும் மிகுந்துள்ளன என்பது உனக்குத் தெரியும். நீ எங்களுக்கு ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் கொண்டு வந்து கொடுத்தால், ஹிசிகா விடுதலை செய்யப்படுவாள்” என்றார் மந்திரி.
அதற்கு அவன் ஒப்புக் கொண்டு, கடலுக்குள் சென்று ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் சேகரித்துக் கொண்டு வந்து மணிதரனிடம் அளித்தான். ஆனால் அப்படியும் ராஜா ஹிசிகாவை விடுதலை செய்யவில்லை. மாறாக, இரத்தினக்கற்களை விற்ற பணத்தை தன் படை பலத்தைப் பெருக்கவும், ஏராளமான ஆயுதங்கள் வாங்கவும் செலவழித்தான்.

 

இந்த செய்தி ஒற்றர்களின் மூலம் வராககிரி மன்னன் பூஷணனை எட்டியது. உடனே பூஷணன் ஒரு பெரும் படையுடன் திடீரென கூர்மகிரியின் மீது படையெடுத்தான்.  கடுமையாக மூண்ட போரில் மணிதரன் கொல்லப்பட்டான். கூர்மகிரி பூஷணன் வசம் வந்தது.
சிறைப்பட்டிருந்த ஹிசிகாவை விடுதலை செய்த மன்னன் பூஷணன், ஜலேந்திரனை அழைத்து, “அன்பினால் இணைந்த உங்களை சேர்த்து வைக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உலகத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறினான்.

மன்னன் பூஷணன் தங்களை என்ன செய்வானோ என்று கலங்கிய ஹிசிகாவிற்கும், ஜலேந்திரனுக்கும் அவனுடைய பெருந்தன்மை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. “மகாராஜா! உங்கள் உதவிக்காக உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு முத்துகளும், இரத்தினமும் தரவிரும்புகிறோம்” என்றனர். அதைக் கேட்டுப் புன்னகைத்த பூஷணன், “நீங்கள் எனக்கு எதுவும் தர வேண்டாம். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று வளமுடன் வாழங்கள்” என்று கூறி விடை கொடுத்தான்.

கடல்கன்னி ஹிசிகா

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்!” என்று கதை சொல்லத் தொடங்கியது.

 

வராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனோ அதற்கு நேர்மாறானவன்! நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். அதனால் அவனுடைய படைபலம் குன்றியது. ஆனால் வராககிரி மன்னன் பூஷணனும், கூர்மகிரியின் மணிதரனும் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

 

கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், சாமந்தன் என்ற இளம் வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தையான மணிகண்டன் மிகப் பெரிய வியாபாரி. அவர் திடீரென ஒருநாள் இறந்துபோக, அதுவரை தந்தையின் வியாபாரத்தில் கவனம் செலுத்தாத சாமந்தன் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் திக்கு முக்காடிப் போனான். இதனால் பலத்த நட்டம் ஏற்பட்டது. கடன்காரர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தொந்தரவு செய்ய, சாமந்தன் கவலையில் ஆழ்ந்தான்.

 

ஒருநாள் இரவு உறக்கம் பிடிக்காமல் கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கையில், திடீரென்ற ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. கடலிலிருந்து அழகே உருவான ஓர் இளம்பெண் எழுந்து வந்தாள்.

அவள் சாமந்தனை நோக்கி வந்து, “நான் ஒரு கடற்கன்னி! என் பெயர் ஹிசிகா! நான் இந்தக் கடலுக்குள் பாதாள லோகத்தில் வசிப்பவள். எங்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் ஜலேந்திரன் என்ற வாலிபன் மீது நான் பிரியம் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். அதற்கு முன் அவன் பூலோகத்தில் உள்ள நகரங்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு மூன்று மாதங்கள் முன் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. எனக்கும் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது. எனக்கு உதவி செய்வீர்களா?” என்றாள்.

 

“ஹிசிகா! தற்சமயம் நான் பெரிய சிக்கலில் மூழ்கியிருக்கிறேன். எனக்கு வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய பணம் தேவை! அதற்கு உன்னால் உதவி செய்ய முடியுமெனில், நானும் நீ கேட்பதை செய்வேன்” என்றான். உடனே ஹிசிகா கடலுள் மூழ்கிச் சென்று, விலையுயர்ந்த முத்துகளை அள்ளிக் கொண்டு வந்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்ட சாமந்தன், அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்குத் தங்குவதற்கு சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

 

முத்துகளை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தை சரிசெய்து, மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான். தன் வீட்டுப் பெண்களுடன் ஹிசிகாவை தினந்தோறும் நகரில் நிடைபெறும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைத்தான். ஹிசிகா அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தாள். ஒருநாள் ஹிசிகா சாமந்தன் வீட்டுப் பெண்களுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, அதே நிகழ்ச்சிக்கு கூர்மகிரி மன்னன் மணிதரனும் வந்திருந்தான். அழகே உருவான ஹிசிகாவைக் கண்டதும் மன்னன் மயங்கிப் போனான்.

 

தன்னுடைய வீரர்களை அவளை அந்த இடத்திலேயே பலவந்தமாகப் பிடித்து, தன் அரண்மனைக்கு இழுத்து வரச் செய்தான். சாமந்தன் வீட்டுப் பெண்கள் சாமந்தனிடம் விஷயத்தைச் சொல்ல, செய்வதறியாமல் திகைத்துப் போய் அவன் சும்மாயிருந்து விட்டான். அரண்மனைக்கு இழுத்து வரப்பட்ட ஹிசிகாவிடம், “பெண்ணே! நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கண்டவுடன் உன் அழகில் மதி மயங்கிப் போனேன். என்னைத் திருமணம் செய்து கொள்! உன்னை மகாராணியாக்குகிறேன்” என்றான் மணிதரன்.

 

“ராஜா! நான் ஒரு கடற்கன்னி! நான் எப்படி பூலோகவாசியைக் திருமணம் செய்து கொள்ள முடியும்? தவிர, நான் ஏற்கெனவே எங்கள் உலகத்தைச் சேர்ந்த ஜலேந்திரனை மணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள்!” என்று கெஞ்சினாள். “உன்னிடம் என் மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். இனி உன்னை விடுவதாக இல்லை!” என்று கூறிவிட்டு, ஹிசிகாவின் மனம் மாறும் வரை அவளை அந்தப்புரத்தில் சிறை வைக்க உத்தரவிட்டான்.

அக்பர் பீர்பால் கதைகள் – ஆந்தைகளின் மொழி

அன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார்.

அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார்.
சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், “மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பல்.
 “பொய் சொல்லாதே, பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டைஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?” என்றார். “தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!” என்றார் பீர்பல். “அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்!” என்றார் அக்பர்.
“தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்” என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார். “பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றார். “ஆகட்டும் பிரபு!” என்றார் பீர்பல்.
சற்று நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர்.
திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்துஇருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின.
அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், “இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார் பீர்பல். “பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!” என்றார் பீர்பல்.
“அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!” என்றார் அக்பர். “பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று பிள்ளையின் தந்தை! அவை வரதட்சிணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது,” என்றார் பீர்பல்.
தொடர்ந்து, “பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது,” என்றார். “இது என்ன உளறல்? மிருகங்களேஇல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?” என்றார் அக்பர்.
“அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!” என்றார் பீர்பல். “சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!” என்றார் அக்பர். “நான் உளறவில்லை, பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில்உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது.
அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!” என்றார் பீர்பல்.
பளீரென முகத்தில் அறைந்ததுபோல் இருந்த பீர்பலின் விளக்கம் அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், “பீர்பல்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்” என்றார் அக்பர்.
பீர்பலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை. “பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!” என்றார் அக்பர்.
“சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள்அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!” என்று பீர்பல் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.
அக்பர் பீர்பால் கதைகள் – சிறிய தவறும் பெரிய தண்டனையும்!

அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி தயாரிக்கும் பீடா அவருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர் அடிக்கடி அவனிடமே புகழ்ந்து பேசுவதுண்டு! அந்த சமயங்களில் சௌகத் அலி அக்பருக்கு சலாம் செய்து விட்டு, “பீடா தயாரிப்பது எனக்கு கை வந்த கலை! என்னுடைய எட்டாவது வயது முதல் இந்தத் தொழிலை நான் செய்து கொண்டு இருக்கிறேன். சக்கரவர்த்தியான உங்களுக்கு நான் பீடா தயாரித்து கொடுப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்” என்றான்.

அக்பர் அன்றுமுதல் தான் எங்கு சென்றாலும் தன்னுடன் சௌகத் அலியையும் உடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார். இவ்வாறு மூன்றாண்டுகள் கழிந்தன!
ஒருநாள் அலி பீடாவில் கை தவறி சிறிது அதிகமாக சுண்ணாம்பினைக் கலந்து விட்டான். அதைத் தின்ற அக்பரின் நாக்கு வெந்து விட்டது. உடனே பீடாவைத் துப்பியவாறே, “முட்டாள்! உன்னுடைய பீடாவைத் தின்று என் நாக்கு வெந்து விட்டது. பீடா தயாரிப்பதில் தலை சிறந்தவன் என்று ஓயாமல் பெருமையடித்துக் கொண்டாயே! இதுவா நீ தயாரிக்கும் லட்சணம்?” என்று சீறினார்.
அலி பயத்தினால் மிகவும் நடுங்க ஆரம்பித்து விட்டான். மிகக் கோபத்துடன் அவனை முறைத்துப் பார்த்தவாறே, “உடனே சென்று ஒரு பை நிறைய சுண்ணாம்பு கொண்டு வா!” என்று கட்டளையிட்டார். அலி கடைக்குப் போய் ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கினான். அப்போது அங்கே வந்த மகேஷ்தாஸ் “அலி! என்ன விஷயம்? எதற்கு இத்தனை சுண்ணாம்பு?” என்று கேட்டான்.
“இதை சக்கரவர்த்தி வாங்கி வரச் சொன்னார். ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!” என்றான் அலி. “தெரியவில்லையா? எந்த சந்தர்ப்பத்தில் இதை வாங்கச் சொன்னார்?” என்று மகேஷ் கேட்க, அலியும் நடந்ததைக் கூறினான்.
சக்கரவர்த்தி எதற்காக ஒரு பை நிறைய சுண்ணாம்பு வாங்கச் சொன்னார் என்று மகேஷுக்குப் புரிந்து விட்டது. உடனே அவன் அலியிடம், “வயிறு நிறைய நெய் குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் செல்!” என்றான்.
“என்னப்பா! ஏற்கெனவே நான் யானைக் குட்டி போல் பருமனாக இருக்கிறேன். இந்த லட்சணத்தில் நான் வயிறு நிறைய நெய் தின்றால் பூதம் போல் ஆகிவிடுவேன்!” என்றான் அலி!
“இன்று ஒருநாள் மட்டும் செய்” என்று சொல்லிவிட்டு மகேஷ் சென்று விட்டான்.
மகேஷ் சொன்னால் அதில் ஏதோ காரணம் இருக்கும் என்று நம்பிய அலி, வீட்டிற்குச் சென்று ஒரு செம்பு நிறைய நெய் எடுத்து வயிறு முட்ட குடித்த பிறகு அவன் அக்பரை நாடிப் போனான்.
சபையில் அமர்ந்திருந்த அக்பர் அலியைப் பார்த்து, “ஒரு பை சுண்ணாம்பு வாங்க இத்தனை நேரமா?” என்று கடிந்து கொண்ட பிறகு, ஒரு காவலனை நோக்கி “இவனை சபைக்கு வெளியே அழைத்துச் சென்று பையிலுள்ள சுண்ணாம்பு முழுவதையும் அவன் வாய்க்குள் போட்டு அடைத்து விடு!” என்றார். அப்போதுதான் அக்பர் தனக்குத் தந்த தண்டனையின் கொடூரம் அலிக்குப் புரிந்தது.
கதறக் கதற அலியை வெளியே இழுத்துப் போன காவலன், அலியின் பையிலிருந்து சுண்ணாம்பை எடுத்து அலியின் வாயில் போட்டு விழுங்கச் செய்தான். ஒரு கவளம் சுண்ணாம்பு தின்ற உடனேயே, வாய், தொண்டை, வயிறு வெந்து போக அலி சுருண்டு விழுந்தான். தண்டனைக்குள்ளான அலி என்ன ஆனான் என்று பார்க்க அங்கு வந்த அக்பர், அலி தரையில் விழுந்திருந்தும் சுயநினைவுடன் இருப்பதைப் பார்த்து, “நீ இன்னும் சாகவில்லையா?” என்று கேட்டார்.
“இல்லை, பிரபு!” என்ற அலி சிரமப்பட்டு எழுந்து நின்று, “வயிறு நிறைய நெய் சாப்பிட்டதாலோ என்னவோ, நான் உயிருடன் இருக்கிறேன்!” என்றான். “உன்னை யார் நெய் உண்ணச் சொன்னார்கள்?” என்று அக்பர் கேட்க, அலி மகேஷின் பெயரைக் கூறினான். உடனே மகேஷ் அங்கு அழைத்து வரப்பட்டான். அவனைப் பார்த்ததும், “பீர்பல்! உன் வேலைதானா இது? அவனை ஏன் நெய் சாப்பிடச் சொன்னாய்?” என்று அக்பர் கேட்டார்.
“பிரபு! அலியிடம் நடந்தைக் கேட்ட பிறகு நீங்கள் அவனை சுண்ணாம்பை விழுங்க வைக்கப் போகிறீர்கள் என்று தெரிந்து கொண்டேன். நெய் தின்ற பிறகு சுண்ணாம்பை விழுங்கினால் உடலுக்குத் தீங்கு ஏற்படாது என்று எனக்குத் தெரியும்! அதனால்தான் அவ்வாறு அவனை செய்யச் சொன்னேன்” என்றான் பீர்பல்.
“அவன் மீது உனக்கு என்ன அவ்வளவு அக்கறை?” என்று அக்பர் கேட்க, “அக்கறை அவன் மீதில்லை, உங்கள் மீதுதான் பிரபு. அவன் தயாரிக்கும் பீடாவை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். ஏதோ தெரியாமல் அவன் ஒருநாள் செய்த தவறுக்காக அத்தனை பெரிய தண்டனையை அவன் பெறப் போவதைத் தவிர்க்க விரும்பினேன். நீங்கள் அவன் செய்த சிறிய தவறை மன்னித்து விட வேண்டும். அக்பர் சக்கரவர்த்தி மிகவும் இரக்க குணம் படைத்தவர் என்பதை நிரூபிக்க இதை விட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?” என்று கேட்டான் பீர்பல்.
அவனுடைய சாமர்த்தியமான பேச்சினால் கவரப்பட்ட அக்பர், “நீ சொல்வது சரிதான். மூன்று ஆண்டுகளாக அருமையாக பீடா தயாரித்தவன் ஒருநாள் தெரியாமல் செய்த தவறுக்காக தண்டனை பெறுவது சரியல்ல. அவனை நான் மன்னித்து விடுகிறேன்” என்றவர் அலியைப் பார்த்து, “பிழைத்துப் போ” என்றார்.
அக்பர் பீர்பால் கதைகள் – சத்தியமே வெல்லும்!

அக்பருடைய சபையில் இருந்தவர்கள் அனைவரிலும், பீர்பால் மட்டுமே அக்பரின் பிரியத்திற்குப் பாத்திரமானவராக  இருந்தார். இதனால் பீர்பால் மீது சபையில் பலர் பொறாமை கொண்டிருந்தனர்.

ஒருநாள், பீர்பால் மீது பொறாமை கொண்டவர்கள் ஒன்று கூடி அவருக்கு எதிராக சதி ஆலோசனை செய்தனர். அவருக்கு எப்படியாவது கெட்ட பெயரை உண்டாக்கிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். ஒவ்வொருவரும் ஒரு யோசனை கூற, தாவூத் என்பவர் பீர்பாலை அவமானப்படுத்த தன்னிடம் ஓர் அருமையான திட்டம் இருப்பதாகக் கூறினார்.
 “பீர்பாலைப்பற்றி தவறாக எது சொன்னாலும் சக்கரவர்த்தி நம்பமாட்டாரே!” என்று மற்றவர்கள் சந்தேகம் எழுப்ப, “சொல்கிற விதத்தில் சொன்னால், சக்கரவர்த்தி கட்டாயம் நம்புவார்” என்று தாவூத் அடித்துக் கூறினார். உடனே மற்றவர்கள் தாவூதை உற்சாகப்படுத்தினர்.
“என் திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், நீங்கள் எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும்!” என்று தாவூத் கூற, “அது என்ன?” என்று மற்றவர்கள் கேட்டனர்.
“நாளைக்கு நீங்கள் அனைவரும் வழக்கப்படி குறித்த நேரத்தில் தர்பார் வந்து சேருங்கள்.
நான் மட்டும் தாமதமாக வருவேன். நான் ஏன் வரவில்லை என்று சக்கரவர்த்தி உங்களைக் கேட்பார். உடனே நீங்கள், “தாவூத் ஒரு பயங்கரமான குற்றத்தைத் தன் கண்களால் பார்த்து விட்டார். அது அவருடைய மனத்தை மிகவும் பாதித்து விட்டது. அதனால் அவர் தாமதமாக வருவார்” என்று சொல்லிவிடுங்கள். பிறகு நான் வந்து அது என்ன என்று அவரிடம் விளக்கிக் கூறுவேன்” என்று கூறினார் தாவூத்.
அனைவரும் அதற்கு சம்மதித்தப்பின் வீடு திரும்பினர். மறுநாள், தர்பார் கூடியது. பீர்பல் உட்பட அனைவரும் குறித்த நேரத்தில் தர்பாருக்கு வந்து விட்டனர். தாவூத் மட்டும் வரவில்லை. அக்பர் தர்பாரில் நுழைந்ததும் அனைவரும் எழுந்து சலாம் செய்தனர். அக்பரும் புன்னகைத்தபடி தன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அனைவர் மீதும், தன் பார்வையை செலுத்தினர்.
அதற்குள் ஒருவன் எழுந்து, “பிரபு! தாவூத் இன்று தாமதமாக வருவதற்குத் தங்களிடம் அனுமதி கோரியுள்ளார்!” என்றார்.
“தாமதமாக வர என்ன காரணம்?” என்று அக்பர் கேட்டார். “ஒரு பயங்கரமான குற்றத்தை தன் கண் முன்னே நடக்கக் கண்டார். இதனால் அவருடைய உடல் சோர்ந்து விட்டது. ஆகையால் சிறிது தாமதமாக வருவதாகக் கூறியுள்ளார்!” என்றார் அவர்.
சற்றுநேரத்தில் தாவூதே வந்து சேர்ந்து விட்டார். உடனே அக்பர் அவரைப் பார்த்து, “ஒரு பயங்கரமான குற்றம் நிகழ்வதை நீ பார்த்தாயாமே!” என்று கேட்டார்.
“ஆம் பிரபு!” என்றார் தாவூத். “அது என்ன குற்றம்? உடனே சொல்! யார் அந்தக் குற்றவாளி?” என்று அக்பர் சீறினார்.
 “அதை எப்படி என் வாயால் சொல்வேன் பிரபு? உங்களுடைய மிகுந்த நம்பிக்கைக்கும், அபிமானத்திற்கும் பாத்திரமான அவரைப் பற்றி என் வாயினால் எப்படிச் சொல்வேன் பிரபு? அதைக் கேட்டால், உங்கள் மனம் மிகவும் புண்படுமே!” என்று தாவூத் நாடகமாடினார்.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம்! அவன் யாராயிருந்தாலும் சரிதான்! அவன் யாரென்று உடனே சொல்!” என்று அக்பர் உறுமினார்.
“வேறு யாருமில்லை பிரபு! உங்களுடைய பீர்பல்தான் அது!” என்றதும் அக்பர் அதிர்ச்சியுற்றார். பீர்பலும் அதிர்ச்சியுற்றார். ஆனால் பீர்பல் உடனே விஷயத்தைப் புரிந்து கொண்டார். தன் மீது வீண் பழி சுமத்த தாவூத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிந்து விட்டது.
“என்ன பீர்பலா?” என்று மிகுந்த வியப்புடன் அக்பர் கேட்டார்.
“ஆம், பிரபு! நான் என் கண்களினால் கண்டதைச் சொல்கிறேன்! நேற்று மாலை நான் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், எனக்கு சற்றுத் தொலைவில் பீர்பல் வந்து கொண்டு இருந்தார். திடீரென அவர் குனிந்து தரையில் கிடந்த ஒரு தங்க மாலையைப் எடுத்தார். பிறகு தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்று முற்றும் பார்த்தபின், மாலையைத் தன் பையில் போட்டுக் கொண்டு சென்று விட்டார். சிறிது நேரங்கழித்து அங்கு மிகுந்த பதற்றத்துடன் வந்த ஓர் இளைஞன் “என் தங்க மாலை வழியில் இங்கே எங்கோ விழுந்து விட்டது. அதைப் பார்த்தீர்களா?” என்று எல்லாரையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவனிடம் உண்மையைச் சொல்ல நினைத்தேன். அதற்குள் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்று தாவூத் அழகாகத் தான் கற்பனை செய்து வந்த கதையைக் கூறினார்.
அக்பர் கோபமாக, “பீர்பல், இவர் உன்னைப் பற்றிக் கூறுவது உண்மையா?” என்று கத்தினார். “இல்லை பிரபு! நான் மாலை நேரத்தில் அங்கு வந்தது உண்மை! ஆனால் இவர் குறிப்பிட்டது போன்ற சம்பவம் எதுவும் அப்போது நிகழவில்லை” என்றார் பீர்பல்.
“பிரபு! பின் நான் என்ன பொய்யா சொல்கிறேன்? பீர்பல் மறைக்கிறார். நான் சொல்வது சத்தியம்!” என்றார் தாவூத்.
“பீர்பல் எடுத்ததை நிரூபிக்க வேறு சாட்சிகள் இல்லாதபோது, நீ கூறுவதை நான் எப்படி நம்ப முடியும்?” என்று அக்பர் தாவூதை கேட்டான்.
“அதற்கு ஒரு சோதனை செய்து பார்க்கலாம். பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை நான் எடுத்து வருகிறேன்.
அதை தன் கையில் பீர்பல் பிடித்துக் கொள்ளட்டும். அவர் சத்தியவான் என்பது உண்மையானால், அந்தக் கம்பி  அவரைச் சுடாது!” என்றார் தாவூத்.
அதைக் கேட்ட பிறகு பீர்பலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பல், நீ இந்த சத்திய சோதனைக்கு உட்பட்டேயாக வேண்டும்! நீ ஒரு நிரபராதி என்பதை நிரூபித்துக் காட்டு! நீ சொல்வது சத்தியம் என்பதை அப்போதுதான் எல்லாரும் நம்புவார்கள்” என்றார்.
பீர்பலின் மூளை வெகு விரைவாக வேலை செய்தது. உடனே அவர், “பிரபு! அந்த சத்திய சோதனைக்கு நான் தயார்! ஆனால் என் மீது குற்றம் சாட்டும் தாவூத் அவர்களும் தான் சொல்வது சத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும்” என்றார்.
“அது எப்படி? அவர் என்ன செய்ய வேண்டும்?” என்று அக்பர் கேட்டார். “பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை தாவூத் முதலில் தன் கைகளில் பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு என்னிடம் தர வேண்டும்!” என்றார் பீர்பல்.
அதுகேட்டு, அடிபட்ட நாயைப் போல் தாவூத் வீல் என்று கத்தினார்.
“ஐயோ! அது என்னால் முடியாது!” என்று அலறினார்.
“ஏன் முடியாது? நீ சொல்வதை நிரூபிக்க நீயும் அந்த சோதனைக்கு ஆளாக வேண்டும்” என்றார் பீர்பல்.
உடனே தாவூத் அக்பரை நோக்கி, “பிரபு! என்னை மன்னித்து விடுங்கள்! சங்கிலியை எடுத்தது பீர்பல் இல்லை. நான் தவறாகச் சொல்லிவிட்டேன்” என்று கூறி அவர் கால்களில் விழுந்து புலம்பினார்.
“பீர்பல் மீது பொய்க்குற்றம் சாட்டிய இந்த அயோக்கியன் தாவூதை சிறையில் அடையுங்கள்” என்று காவலர்களுக்கு உத்தரவிட்ட அக்பர், பிறகு பீர்பல் பக்கம் திரும்பி, “என்னை மன்னித்து விடு பீர்பல்! நான் கூட உன்னை ஒருக்கணம் சந்தேகப்பட்டுவிட்டேன்” என்றார்.
அக்பர் பீர்பால் கதைகள் – முதல் வழக்கில் வெற்றி!

ஒருநாள் சக்கரவர்த்தி அக்பர் தர்பாரில் கூடியிருந்தவர்களை நோக்கி, “நமது நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் ஒழுங்காக நடை பெறுகின்றனவா?” என்று கேட்டார். “மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன, பிரபு! நமது நீதிபதி ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காமல் நியாயமாக நீதி வழங்குகிறார்!” என்று ஒரு அதிகாரி நீதிபதியைப் புகழ்ந்தார்.

பிறகு தர்பாரில் இருந்த அனைவரும் அதை ஆமோதிக்க, நீதிபதிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. ஆனால் பீர்பல் மட்டும் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், “பீர்பல்! நீ மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய்? மற்றவர்கள் கூறியது முற்றிலும் தவறு என்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
“முற்றிலும் தவறு என்று சொல்ல மாட்டேன். ஆனால் நமது வழக்கு விசாரணைகளும், நீதி வழங்குதலும் திருப்திகரமாக உள்ளது என்று நான் சொல்ல மாட்டேன்” என்றார் பீர்பல்.
அக்பர் அவரை மேலும் விளக்கம் கேட்க நினைக்கையில், வாயிற்காவலன் உள்ளே நுழைந்து, “பிரபு! ஒரு கிழவரும், இளைஞரும் நியாயம் கேட்டு வந்திருக்கிறார்கள்” என்றான். “அவர்களை வரச்சொல்!” என்றார் அக்பர்.
 உடனே, தர்பாரில் ஒரு கிழவரும், ஓர் இளைஞனும் உள்ளே நுழைந்து சக்கரவர்த்தியை வணங்கினர். “என்ன விஷயம்? உங்களில் யாருக்கு என்ன குறை?” என்று கேட்டார் அக்பர்.
“பிரபு! என் பெயர் அப்துல் ரஹ்மான்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கிழவர் தொடர்ந்து, “நான் ஒரு சட்ட நிபுணன்! மாணவர்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களையும், வழக்கு விசாரணைகளைப்பற்றியும் கற்பிக்கிறேன்.
இதோ நிற்கிறானே பிரமோத் பிஹாரி! இவன் என் மாணவனாக இருந்தவன்! இவன் மீது நான் குற்றம் சாட்ட வந்துள்ளேன்” என்றார். அந்த இளைஞன் செய்த குற்றம் குறித்து அக்பர் கேட்டார். “பிரபு! இவன் என்னிடம் மாணவனாக சேர விரும்பிய போது, நான் மாதம் மூன்று பொற்காசு வீதம் குரு தட்சிணை தர வேண்டுமென்றும், ஓராண்டு காலம் சட்டம் படிக்க வேண்டும் என்றும் கூறினேன்.
ஆனால் இவன் தான் பரம ஏழை என்றும், தட்சிணை கொடுக்க இயலாது என்றும் கூறினான். படிப்பு முடிந்ததும் வழக்கறிஞனாகி முதல் வழக்கில் வெற்றி பெற்றவுடன், முப்பத்தாறு பொற்காசுகள் சேர்த்து தருவதாகவும் வாக்களித்தான். அதை நம்பி இவனுக்கு ஓராண்டு காலம் கற்பித்தேன்.
இவன் மிகவும் கெட்டிக்கார மாணவன் என்பதால் ஓராண்டிலேயே மிகச் சிறப்பாக சட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு விட்டான். நானும் இவன் வழக்கறிஞனாகி, முதல் வழக்கிலேயே வெற்றி பெறுவான் என்றும், தட்சிணையை மொத்தமாகக் கொடுப்பான் என்றும் நம்பினேன்” என்று சொல்லி நிறுத்தினார் கிழவர். “இப்போது பணம் தராமல் ஏமாற்றுகிறானா?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லை பிரபு! இவன் திடீரென வழக்கறிஞனாகப் பணி புரியும் யோசனையை கை விட்டு விட்டான். அந்தத் தொழிலில் ஈடுபடப் போவதில்லையாம்!” என்றார். உடனே அக்பர் அந்த இளைஞனை நோக்கி, “எதற்காக உன்னுடைய உத்தேசத்தை நீ மாற்றிக் கொண்டாய்?” என்று கேட்டார்.
“பிரபு! நான் சட்டம் பயின்று முடித்ததும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதாகத்தான் இருந்தேன். ஆனால் என் சித்தப்பா திடீரென இறந்து போனார். அவர் தன்னுடைய உயிலில் அவருடைய அனைத்து சொத்துகளுக்கும் என்னை வாரிசாக்கி விட்டார். இப்போது நான் லட்சாதிபதி. அதனால் எந்த வேலையும் செய்யத் தேவையில்லை,” என்றான்.
“அப்படியானால் இவருடைய தட்சிணை என்ன ஆவது?” என்று கேட்டார் அக்பர். “நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன். எனக்கு என்று வழக்கறிஞனாக ஆக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்போதுதான் தட்சிணையும் தர முடியும்” என்றான்.
பிரமோத் பிஹாரி கூறுவது சரியே என்று நினைத்தார் அக்பர். உடனே அவர் நீதிபதியை நோக்கித் தீர்ப்பு வழங்கக் கூறினார்.
நீதிபதி அவர்கள் இருவரையும் நோக்கி, “இரு தரப்பினரின் வாதத்தையும் கூர்ந்து கவனித்தேன். என்னைப் பொறுத்தவரை இந்த வழக்கில் பிரமோத் பிஹாரியின் பக்கமே நியாயம் இருக்கிறது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன் என்று இந்த தர்பாரில் அவன் உறுதி அளித்துள்ளான்.
அவன் சொல்லை ஏற்றுக் கொண்டு, அவனுக்கு என்று வழக்கறிஞராக வேண்டும் என்று தோன்றுகிறதோ, அன்று அந்தத் தொழிலில் ஈடுபட்டு குருவின் தட்சிணையைத் திருப்பித் தரலாம். அதுவரை குரு காத்திருக்க வேண்டும். இதுவே என் தீர்ப்பு!” என்றார். அக்பர் உட்பட தர்பாரில் அனைவரும் இந்தத் தீர்ப்பைப் பாராட்டினர். இதை எதிர்பார்க்காத கிழவர் ஏமாற்றத்தினாலும், வருத்தத்தினாலும் உடல் குறுகிப் போனார்.
ஆனால் பீர்பல் மட்டும் தீர்ப்பைப் பாராட்டாமல் மிகவும் மௌனமாக இருந்ததை கவனித்த அக்பர், இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு பீர்பலிடம் கூறினார். அதைக்கேட்டதுமே கிழவரின் முகம் மலர்ந்தது. மிகவும் புத்திசாலியான பீர்பல் சரியான தீர்ப்பு வழங்குவார் என்று அவர் உறுதியாக நம்பினார்.
பீர்பல் இளைஞனை நோக்கி, “நீ கொடுத்த வாக்கில் உறுதியாக இருக்கிறாய் அல்லவா?” என்றார். “அதில் என்ன சந்தேகம்? கண்டிப்பாக அப்போது அதில் கிடைக்கும் வருமானத்திலிருந்து என் குருநாதருக்கு சேர வேண்டிய தட்சிணையைக் கட்டாயம் தந்து விடுவேன்” என்றான் இளைஞன்.
பிறகு கிழவரை நோக்கி, “பிஹாரியின் நிபந்தனையை நீங்கள் ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா?” என்று கேட்டார் பீர்பல் “ஆம் ஐயா!” என்றார் கிழவர்.
“அப்படியானால் சட்டப்படி இளைஞனின் தரப்பில்தான் நியாயம் உள்ளது. அவன் வழக்கில் வெற்றி பெற்று தட்சிணை தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதுதான்” என்றார் பீர்பல். பீல்பலையும், அக்பரையும் வணங்கிவிட்டு அவர் தள்ளாடித் தள்ளாடி வெளியேற, இளைஞன் பிஹாரி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறினான்.
திடீரென பீர்பல் பிஹாரியை அழைத்து, “பிஹாரி! இதுதான் சக்கரவர்த்தியின் நீதிமன்றத்தில் உன்னுடைய முதல் வழக்கு! உன்னுடைய வழக்கை விசாரிக்க வேறு வழக்கறிஞரை நியமிக்காமல் நீயே உன் தரப்பு நியாயத்தை வெகு அழகாக எடுத்துக் கூறினாய்” என்றார் பீர்பல். பிஹாரி மகிழ்ச்சியுடன், “நன்றி ஐயா!” என்றான்.
பீர்பல் தொடர்ந்து, “அதாவது உன்னுடைய முதல் வழக்கில் நீயே வழக்கறிஞராக இருந்து வாதாடி அதில் வெற்றி பெற்று விட்டாய். இல்லையா?” என்று பீர்பல் கேட்டார். “ஆம் ஐயா!” என்றான் பிஹாரி மகிழ்ச்சியுடன்.
“அப்படியானால் நீ வழக்கறிஞராக இருந்து வெற்றி பெற்ற முதல் வழக்கு இது! நீ வாக்களித்தபடியே, குருதட்சிணையை உன் குருவிற்கு இப்போதே இங்கேயே கொடுத்து விடு!” என்றார்.
ஒருகணம் திகைத்துப் போன அனைவரும், மறுகணமே கைதட்டி ஆர்ப்பரித்தனர். கிழவர் பீர்பலுக்கு மனமார நன்றிகூற, அக்பர் பீர்பலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தழுவிக் கொண்டார்.
அக்பர் பீர்பால் கதைகள் – காவல்காரர்கள் பெற்ற பரிசு

ஒருநாள், சக்கரவர்த்தி அக்பர் தன் சபையில் அமர்ந்திருக்கையில், அவரை நாடி ஓர் இளைஞன் அங்கு வந்தான். அவன் அக்பரை பணிவுடன் வணங்கியபோது, அக்பர் அவனை நோக்கி, “நீ யாரப்பா? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

 

“பிரபு! என் பெயர் மகேஷ்தாஸ்! நான் ஒரு குக்கிராமத்தில் வசிக்கிறேன். வேலை தேடி உங்களிடம் வந்தேன்!” என்றான் அவன்.

“உனக்கு யார் சொன்னார்கள் இங்கே உனக்கு வேலை கிடைக்குமென்று?” என்று அக்பர் கேட்டார்.

“என் ஆசிரியர் சொன்னார், பிரபு! என்னுடைய அறிவைக் கண்டு வியந்த அவர் என் தகுதிக்குரிய வேலை உங்களிடம் தான் கிடைக்கும் என்றார். அவருடைய வார்த்தையை நம்பி என் கிராமத்திலிருந்து வெகு தூரம் காலால் நடந்துத் தங்களைத் தேடி வந்துஇருக்கிறேன்” என்றான் மகேஷ்.

“எல்லா ஆசிரியர்களும் தங்கள் மாணவர்களை அறிவாளிகள் என்று தான் நினைப்பார்கள். உண்மையிலேயே நீ புத்தி சாதுரியம் உடையவனாக இருந்தால் மட்டுமே உனக்கு வேலை கிடைக்கும்!” என்றார் அக்பர்.

“பிரபு! நீங்கள் எதிர்பார்க்கும் தகுதியை விட நூறு மடங்கு தகுதியுடையவன் நான்!” என்று மகேஷ் பெருமையுடன் கூறினான்.

“அப்படியானால், அதை நிரூபித்துக் காட்டு!” என்றார் அக்பர்.

“பிரபு! அதைக் காட்டுவதற்கு முன் எனக்கு ஒரு பரிசு தருவீர்களா?” என்று மகேஷ் கேட்டான்.

 

“முதலில் உன் சாமர்த்தியத்தை நிரூபித்துக் காட்டு! பிறகு பரிசைப் பற்றிப் பேசு!” என்றார் அக்பர்.

“நான் கேட்கும் பரிசினால் உங்களுக்கு ஒரு பைசா கூட செலவாகாது!” என்றான் மகேஷ்.

 

“அது என்னப்பா அப்படிப்பட்ட பரிசு?” என்றார் அக்பர்.

“முப்பது சவுக்கடி கொடுங்கள்!” என்றான் மகேஷ். அவனுடைய அந்த விபரீதமான வேண்டுகோளைக் கேட்டு அக்பர் உட்பட சபையிலிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.

 

“உனக்கென்ன பைத்தியமா?” என்று அக்பர் கோபத்துடன் கேட்டார்.

“அதைப் பற்றி பின்னால் தெரிந்து கொள்வீர்கள்! தயவு செய்து நான் வேண்டியதைக் கொடுங்கள்!” என்றான் மகேஷ்.
உடனே, அக்பர் ஒரு காவலனைச் சாட்டையெடுத்து வரச் சொன்னார். பின்னர் அவன் செவிகளில் “அவனை அடித்து விடாதே! அடிப்பது போல் பாவனை செய்!” என்றார்.

 

மகேஷ் தன் முதுகைக் காட்டியவாறே அவனை “நீ அடிக்கத் தொடங்கு!” என்றான். அந்த ஆளும் பலமாக அடிப்பது போல் ஓங்கி மெதுவாகவே அடித்தான். பத்துமுறை அவ்வாறு சாட்டையடிப் பட்டதும், மகேஷ் “நிறுத்து!” என்று கூவினான். பிறகு நிமிர்ந்து அக்பரை நோக்கி, “பிரபு! பரிசில் எனக்குக் கிடைக்க வேண்டிய பாகம் கிடைத்து விட்டது. மீதியிருப்பதை உங்களுடைய பிரதான வாயிற்காப்போர்கள் இருவருக்கும் பகிர்ந்து கொடுங்கள்!” என்றான்.
அவன் சொல்வதன் பொருள் புரியாத அக்பர், “என்ன உளறுகிறாய்?” என்று கோபத்துடன் கேட்டார்.

அவர்களையே் கூப்பிட்டுக் கேளுங்கள்” என்றான். உடனே, அக்பர் அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்தார். அவர்கள் வந்ததும், மகேஷ் அவர்களை நோக்கி, “தோழர்களே! சக்கரவர்த்தி தரும் பரிசை நாம் மூவரும் பங்கு பிரித்துக் கொள்வோம் என்று உங்களுக்கு வாக்களித்தேன் அல்லவா? என்னுடைய பங்கை நான் பெற்றுக் கொண்டு விட்டேன். இனி, நீங்கள் பெறுங்கள்” என்றான்.

 

இரு காவல்காரர்களும் மகிழ்ச்சியுடன் பரிசை எதிர்பார்க்க, இருவர் முதுகிலும் பலமாக பத்து சாட்டைஅடி விழுந்தது. வலி பொறுக்க முடியாமல் இருவரும் கதற, அக்பர் அவர்களை நோக்கி, “இந்த நிமிடமே, உங்களை வேலையிலிருந்து நீக்குகிறேன்!” என்று உத்தரவிட்ட பிறகு, மகேஷிடம், “நீ மிகவும் சாமர்த்தியசாலி என்பதை நிரூபித்து விட்டாய்! இந்த நிமிடமே உனக்கு பீர்பால் என்ற பெயர் சூட்டி, உன்னை இந்த சபையில் உயர்ந்த பதவியில் நியமிக்கிறேன்” என்றார்.

அக்பர் பீர்பால் கதைகள் – கிணற்றுக்குள் வைர மோதிரம்

அந்த ஆண்டுக் கோடைக்காலம் மிகக் கடுமையாக இருந்தது. ஆறு, குளங்கள், கிணறுகள் வற்றிப் போயின. செடி, கொடிகள் வாடி வதங்கின. நண்பகலில் தெருக்கள் வெறிச்சோடிப் போயின. வெயிலுக்கு பயந்து மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.

 

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார். அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், “தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

 

“இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை” என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், “பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,” என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

 

“பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

“பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?” என்று பீர்பால் கேட்க, “வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்” என்றார் அக்பர். “ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?” என்று பீர்பால் கேட்டார்.

 

“அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து
விட்டால் போகிறது!” என்ற அக்பர் தொடர்ந்து, “கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?” என்று கேட்டார்.

 

“முடியவே முடியாது, பிரபு!” என்றார் கூட இருந்த பிரமுகர் ஒருவர். “முடியாதது என்று ஒரு காரியமும் இல்லை. முயன்று பாருங்களேன்” என்று அக்பர் சொல்ல, “பிரபு! அது யாராலும் செய்ய முடியாத காரியம்” என்றார் அதே பிரமுகர். மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

 

“பீர்பால்! நீ என்ன நினைக்கிறாய்?” என்று அக்பர் கேட்க, “அதைப் பற்றித்தான் நானும் யோசிக்கிறேன்” என்ற பீர்பால், தன் தலைப்பாகையை அவிழ்த்துவிட்டுத் தனது தலையைச் சொறிந்தார்.”தலையைச் சொறிந்தால் மட்டும் யோசனை தோன்றிவிடுமா?” என்று மிட்டாலால் என்ற அதிகாரி பீர்பலை நோக்கி ஏளனத்துடன் கேட்டார். “தலையைச் சொறிந்தால் எனக்கு நல்ல யோசனை தோன்றும்.

 

ஆனால் உங்களுக்குத் தோன்றாது!” என்று பீர்பால் லாலை நோக்கிக் கூறினார். “எனக்குத் தோன்றாது, ஆனால் உனக்குத் தோன்றுமோ? அது எப்படி?” என்று மிட்டாலால் கேலியாகக் கேட்க, “எனக்கு மூளைஇருக்கிறது. அதனால் தலையைச் சொறிந்ததால் மூளை வேலை செய்யும். ஆனால் உங்களுக்கு என்ன செய்தாலும் யோசனை தோன்றாது” என்று பீர்பால் அவனுக்கு பதிலடி கொடுத்தார். “பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!” என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, “அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

நூலின் மறுமுனையை திணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். பிறகு, வைரக்கல்லைக் குறிபார்த்து ஏற்கெனவே கிணற்றின் உள்ளேஇருந்த சாணத்தின் மீது வீசியெறிந்தார். கல் சரியாக சாணத்தின் மீது விழுந்தது.

 

தன்னுடைய வேலைக்குத் தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டு, அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது. பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

 

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், “பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்”  என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

 

“கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?” என்று அக்பர் ஆவலுடன் கேட்க “மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்” என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார். “பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!” என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

அக்பர் பீர்பால் கதைகள் – தண்டனைக்குத் தகுந்த குற்றம்

ஒருநாள் காலையில் அக்பர் தன் அரண்மனை உப்பரிகையில் உலவிக் கொண்டிருக்கையில், அவர் பார்வை நந்தவனத்தின் மீது சென்றது. அது வசந்த காலம் என்பதால் மரங்களும், செடிகளும் வண்ண மலர்களுடன் பூத்துக் குலுங்க, அவற்றிலிருந்து வீசிய நிறுமணம் மனத்தைக் கிறங்கச் செய்தது. இளங்காலையில் வீசிய தென்றல் அவர் உடலை இதமாக வருடிச் செல்ல, அவர் காற்றில் மிதப்பதைப் போல் உணர்ந்தார்.
இவ்வாறு தன்னை மறந்த நலையில் உலவிக் கொண்டிருந்த அக்பர், நந்தவனத்தில் நடந்து செல்லும் வழியில் கல் ஒன்று இருப்பதை கவனிக்கத் தவறி விட்டார். அதில் கால் இடறி இடித்துக் கொள்ள, கால் கட்டை விரலிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அதுவரை அவர் மனத்தில் பொங்கிய உற்சாகம் கணத்தில் மறைந்து போக, கோபமும், எரிச்சலும் குடி கொள்ள, அவர் “தோட்டக்காரன் எங்கே? எங்கே இருந்தாலும் வா!” என்று கத்தினார். தோட்டக்காரன் மண்வெட்டியை எடுக்கக் குடிசைக்குள் சென்று இருந்ததால், அக்பரின் கூக்குரல் அவன் காதில் விழவில்லை. கூப்பிட்ட குரலுக்கு தோட்டக்காரன் வராததால், அக்பரின் கோபம் தலைக்கு ஏறியது. அரண்மனையை அடைந்தவுடன் காவல் அதிகாரியை அழைத்தவர், நடந்தவற்றைக் கூறி தோட்டக்காரனை தூக்கிலுடும் படி உத்தரவிட்டார்.
காவல் அதிகாரிக்கு அதைக் கேட்டு தூக்கி வாரிப் போட்டது. ஒரு சாதாரணத் தவறுக்கு மரண தண்டனையா என்று அதிர்ந்து போனார். ஆனால் சக்கரவர்த்தி மிகவும் கோபமாக இருந்ததால், அவரிடம் எதுவும் கேட்கத் துணிச்சலின்றி, அவர் பின் வாங்கினார். பின்னர் தன்னுடைய இரு காவலர்களை அழைத்துக் கொண்டு, தோட்டக்காரனை நோக்கிச் சென்றார். காலை நேரத்தில் காவல் அதிகாரி தன் ஆட்களுடன் தன்னைத் தேடி வருவது கண்டு தோட்டக்காரன் திடுக்கிட்டான். “என்ன விஷயம் ஐயா?” என்று நடுங்கும் குரலில் கேட்க, “தோட்டத்தில் சக்கரவர்த்தி உலவும் போது ஒரு கல்லில் அவர் காலை இடித்துக் கொண்டார். அது உன்னுடைய தவறு என்பதால் உனக்கு நாளைக் காலை தூக்கு தண்டனை!” என்றார் அதிகாரி.

இதைக் கேட்டதும் தோட்டக்காரன் துடித்தான். அவன் மனைவியோ அதைக் கேட்டு அலறி அழுதாள். “கால் இடித்துக் கொண்டதற்கு தூக்கு தண்டனையா? இது என்ன அநியாயம்? நீங்கள் சக்கரவர்த்தியிடம் எடுத்துச் சொல்லக் கூடாதா?” என்றாள். “எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கணவன் தோட்டத்தில் விட்டு வைத்த கல் இப்போது அவன் தலையிலேயே விழப் போகிறது” என்ற அதிகாரி சற்று யோசித்தபின், “தூக்குதண்டனை நாளைக்குத்தான், இன்னும் ஒருநாள் சமயம் உள்ளது. நீ பீர்பாலிடம் போய் உன் கணவனைப் பற்றிக் கூறி விடுவிக்க முயற்சி செய்” என்று சொல்லிவிட்டு, தோட்டக்காரனின் கைகளில் விலங்கு மாட்டி இழுத்துச் சென்றனர்.

உடனே, தோட்டக்காரனின் மனைவி தலைவிரி கோலமாக பீர்பல் வீட்டிற்கு ஓடிப்போய் அவரை சந்தித்துத் தன் கணவனை எப்படியாவது விடுவிக்குமாறு மன்றாடினாள். அவள் மீது இரக்கம் கொண்ட பீர்பால் “கவலைப்படாதே, உன் கணவனை விடுதலை செய்ய முயற்சிக்கிறேன்” என்று சிறைச்சாலையை நோக்கிச் சென்றார்.

சிறை அதிகாரியிடம் தோட்டக்காரன் எங்கே சிறை வைக்கப்பட்டிருக்கிறான் என்ற விவரத்தை அறிந்தபின், அவனைச் சந்திக்க அனுமதி கேட்டார். பீர்பால் சக்கரவர்த்திக்கு மிகவும் நெருங்கியவர் என்பதால், தோட்டக்காரனை சந்திக்க உடனே அனுமதி கிடைத்தது. அவனுக்கு தைரிமூட்டிய பீர்பால் அவனிடம் ரகசியமாக ஏதோ கூறினார். அதைக் கேட்ட தோட்டக்காரன் “ஐயோ, உயிர் பிழைக்க வழி சொல்வீர்கள் என்று பார்த்தால் உயிர் போக வழி சொல்கிறீர்களே” என்று அலற, “நான் சொல்வது போல் செய், ஒன்றும் ஆகாது” என்று கூறிவிட்டு பீர்பால் சிறைச்சாலையை விட்டு அகன்றார்.

மறுநாள் காலை தர்பார் கூடியது. அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அப்போது காவலர்கள் உள்ளே நுழைந்து, தோட்டக்காரன் தூக்கிலிடுமுன் அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அக்பரும் அதற்கு சம்மதிக்க, கை விலங்குடன் உள்ளே நுழைந்த தோட்டக்காரன் அக்பருக்கு சலாம் செய்துவிட்டு, பின்னர் திடீரென சபையில் காறி உமிழ்ந்தான்.

அதைக் கண்ட அக்பருக்கு பயங்கர கோபம் உண்டாகியது. உடனே, தோட்டக்காரன் பணிவுடன், “மன்னிக்கவும் பிரபு, என்னுடைய சாதாரணத் தவறுக்காக நீங்கள் தூக்கு தண்டனை விதித்திருப்பது நியாயம் அல்ல என்று மக்கள் உங்களை எதிர்காலத்தில் அவதூறாகப் பேசலாம். அப்படி உங்களைக் குறை கூறக் கூடாது என்பதற்காகத்தான் தர்பாரில் காறி உமிழ்ந்தேன். இனி உங்களை யாரும் குறை கூற மாட்டார்கள். நான் நிம்மதியாக சாகலாம்” என்றான்.
உடனே அக்பருக்கு அவன் தன் நியாயமற்ற தண்டனையை குத்திக்காட்டுகிறான் என்று விளங்கிவிட்டது. அதேசமயம், இந்த யோசனையை அவனுடையதல்ல வேறு யாரோ அவனுக்கு சொல்லிக் கொடுத்துஇருக்கிறார்கள் என்றும் புரிந்தது.

“இந்த யோசனையை உனக்கு யாரப்பா சொல்லிக் கொடுத்தார்கள்?” என்று அக்பர் கேட்க, தோட்டக்காரன் பீர்பால் பக்கம் நோக்கினான். உடனே அக்பருக்கு புரிந்து விட்டது. “பீர்பால், ஏதோ கோபத்தில் தெரியாமல் அவனுக்கு தூக்குதண்டனை விதித்து விட்டேன். அந்தத் தவறு நிகழாமல் தடுத்ததற்கு உனக்கு நன்றி” என்றார் அக்பர். அத்துடன் தோட்டக்காரனை விடுதலை செய்வதாக அறிவித்தார்.

 

அக்பர் பீர்பால் கதைகள் – வெயிலும், நிழலும்

அன்று சக்கரவர்த்தி அக்பர் ஏதோ காரணத்தால் காலையிலிருந்தே எரிச்சலுடன் இருந்தார். அவருடைய கோபத்தைத் தணிக்க விரும்பிய பீர்பல், “பிரபு! நீங்கள் இவ்வாறு இருப்பது சிறிதும் நன்றாகயில்லை. சிறிது சாந்தமாக இருக்கக்கூடாதா?” என்று பணிவாகக் கூறினார்.

“எப்போது சாந்தமாக இருக்க வேண்டும், எப்போது கோபமாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டிது இல்லை!” என்று அக்பர் பீர்பல் மீது எரிந்து விழுந்தார். “அதற்கு சொல்லவில்லை பிரபு! சிடுசிடுவென்று இருந்தால் இயற்கையில் அழகான உங்கள் முகம் விகாரமாக மாறிவிடுகிறது!
அதனால்…” பீர்பலை இடைமறித்த அக்பர் “என்ன தைரியம் இருந்தால் என்னை சிடுமூஞ்சி என்றும் விகாரமானவன் என்றும் குறிப்பிடுவாய்? இனி, உன் முகத்தில் விழிக்க நான் விரும்பவில்லை! எங்காவது கண்காணாத இடத்திற்கு ஒழிந்து போ!” என்றார். இதைக் கேட்டு மனமுடைந்த பீர்பல் உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட்டார்.
அடுத்த நாள் அக்பர் தர்பாருக்கு வந்ததும் சபையில் பீர்பல் மட்டும் காணப்படாததை கவனித்த அக்பர் அவரைப்பற்றி விசாரித்தார். தர்பாரில் ஒருவர் எழுந்து நின்று, “பிரபு! நேற்று நீங்கள் அவர்மீது கோபமுற்று இந்த நகரத்தை விட்டுக் கண்காணாத இடத்திற்குச் சென்று விடுமாறு கட்டளையிட்டீர்களாம்!
 அதனால் பீர்பல் தலைநகரை விட்டுச் சென்று விட்டார்!” என்றார். “அடடா! பீர்பல் உண்மையாகவே சென்று விட்டாரா?” என்று அக்பர் வருந்தினார். தான் அவ்வளவு கடுமையாகத் பேசியிருக்கக்கூடாது என்று உணர்ந்த அக்பர் தன் தவறுக்காக வருந்தினார்.
பீர்பலை மீண்டும் சந்திக்க வேண்டுமென்று அவர் மனம் அடித்துக் கொண்டது. ஆனால் பீர்பல் எங்கு சென்று விட்டார் என்று யாருக்கும் தெரியவில்லை. அன்று முழுவதும் பீர்பல் எங்கு சென்றிருக்கக்கூடும் என்பது பற்றியும், அவரை எவ்வாறு மீண்டும் திரும்பி வரவழைப்பது என்றும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்த அக்பருக்கு, இறுதியாக ஒரு யோசனை தோன்றியது.
உடனே அவர் மந்திரியை அழைத்து “மந்திரியாரே! கொளுத்தும் நடுப்பகல் வெயிலில் குடையின்றி ஒருவன் பிரதான சாலையில் நடந்து வரவேண்டும். அப்படி வருபவனுக்கு நூறு பொற்காசுகள் தரப்படும் என்று ராஜ்யமெங்கும் தண்டோராப் போடுங்கள்!” என்றார்.
“பிரபு! இப்போது கடுங்கோடை காலம்! குடையில்லாமல் அரை மணிநேரம் நடந்தாலும் நடப்பவன் சுருண்டு விழுந்து விடுவான். அப்படிஇருக்க யார் தங்கள் உயிரை நூறு பொற்காசுக்காக விட முன்வருவார்கள்?” என்றார். “நான் சொல்வது போல் தண்டோராப் போட்டு அறிவியுங்கள்! போதும்!” என்றார் அக்பர். உடனே மந்திரியும் அக்பரின் விருப்பப்படி ராஜ்யமெங்கும் தண்டோராப் போட்டு அறிவித்தார்.
அக்பரின் அறிக்கையைக் கேட்ட பொதுமக்கள் ஆச்சரியமமுற்றனர். “சக்கரவர்த்திக்கு என்ன இப்படி ஒரு வினோதமான ஆசை? இந்த சவாலை யார்தான் ஏற்பார்கள்?” என்று தங்களுக்குள் கூடிக்கூடிப் பேசிக் கொண்டார்கள். தலைநகருக்கு அருகேயிருந்த ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த ஒரு பரம ஏழை இந்த செய்தியைக் கேட்டு பரபரப்படைந்தான்.
வாழ்க்கையில் பொற்காசுகளையே பார்த்திராத அவன் ஒரே சமயத்தில் நூறு பொற்காசுகள் கிடைக்கும் என்ற அறிக்கை அவன் ஆசையைத் தூண்டியது. அந்தத் தொகை மட்டும் கிடைத்தால், அவனுடைய ஏழைமை பரிபூரணமாக விலகிவிடும்.
அதைப்பற்றி அவன் தன் மனைவியிடம் விவாதித்த போது, அவள், “நமக்குப் பக்கத்து வீட்டில் சில நாள்களுக்கு முன் குடிவந்துஇருக்கும் வீரேந்திரனைக் கேட்டுப் பாருங்களேன்! அவன் அதிபுத்திசாலியாகக் காணப்படுகிறான். அவன் நிச்சயம் இதற்கு ஏதாவது ஒருவழி கூறுவான்” என்றாள்.
அவ்வாறே அவன் தன்னுடையப் பக்கத்து வீட்டுக்காரனான வீரேந்திரனை யோசனை கேட்டவுடன் அவன் உடனே, “அது ஒன்றும் கஷ்டம்இல்லையே! நீ ஒரு நாற்காலியை அல்லது சோபாவைத் தலைக்கு மேல் சுமந்து போ! உன் மேல் வெயில்படாது!” என்று வீரேந்திரன் கூறினான்.
“ஆகா! என்ன அருமையான யோசனை? இது ஏன் யாருக்குமே தோன்றவில்லை!” என்று மகிழ்ச்சியுடன் கூவிய அந்த ஏழை, “நான் நீ கூறியவாறு நாளைக்கே தலைநகர் ஆக்ராவிற்குச் செல்லப் போகிறேன்” என்றான். அவ்வாறே மறுநாள் கிளம்பிய அவன் தலைக்குமேல் ஒரு சிறிய சோபாவைத் தூக்கிக் கொண்டு கால்நடையாகவே அக்பரின் தர்பாரை அடைந்தான்.
“பிரபு! குடை இல்லாமலே கொளுத்தும் வெயிலில் என் கிராமத்தில் இருந்து இங்கு கால்நடையாக வந்துதிருக்கிறேன்!” என்று பரபரப்புடன் அறிவித்தான். “சபாஷ்! யாருக்குமே தோன்றாத இந்த யோசனை உனக்கு மட்டும் எப்படித் தோன்றியது?” என்று அக்பர் ஆவலுடன் கேட்டார்.
“பிரபு! உண்மையில் எனக்கு இந்த யோசனையை சொல்லிக் கொடுத்தது என் பக்கத்து வீட்டுக்கார வீரேந்திரன்!” என்றான் ஏழை! அது பீர்பல் தான் என்றும் யூகித்துக் கொண்ட அக்பர் தன் திட்டம் பலித்ததையெண்ணி மிக மகிழ்ச்சியுற்றார். நான் அறிவித்தபடியே உனக்கு நூறு பொற்காசுகள் தருகிறேன். அந்தப் பணத்தை உன் கிராமத்திற்கு பத்திரமாக எடுத்துச் செல்ல உன்னுடன் இரு காவலர்களையும் அனுப்புகிறேன்.
நீ உன் வீட்டை அடைந்ததும், அந்த புத்திசாலி வீரேந்திரனை காவலர்களிடம் ஒப்படைத்து விடு!” என்றார். அவ்வாறே மிக்க மகிழ்ச்சியுடன் அந்த ஏழை இருவீரர்களின் துணையுடன் தன் வீட்டை அடைந்தான். அவன் அடையாளம் காட்டிய வீரேந்திரனைக் காவலர்கள் தங்களுடன் அழைத்துக் கொண்டு ஆக்ரா திரும்பினர்.
தர்பாரில் நுழைந்த வீரேந்திரன் தன் முகத்தை ஒரு பையினால் மூடிக் கொண்டு வந்தான். “வீரேந்திரா! உன் முகத்தை ஏன் மூடிக் கொண்டிருக்கிறாய்? பையை அகற்று!” என்றார் அக்பர். “பிரபு! நான் வீரேந்திரன் இல்லை! நான்தான் பீர்பல்! உங்கள் முகத்தில் இனி நான் விழிக்கக் கூடாது என்ற உங்கள் கட்டளைப்படியே நான் எனது முகத்தை மூடிக்கொண்டு வந்து உள்ளேன்!” என்றான்.
“பீர்பல்! உன் முகத்தை நான் இப்போதே பார்க்க விரும்புகிறேன்! இதுவும் என் கட்டளையே!” என்று கூறிய அக்பர் தானே முன்சென்று பையை அகற்றி விட்டு, பீர்பலை மிகுந்தப் பிரியத்துடன் கட்டித் தழுவிக் கொண்டார்.
அக்பர் பீர்பால் கதைகள் – யாருக்கு மரண தண்டனை?

அன்றும் வழக்கம் போல் தர்பார் கூடியிருக்க, அக்பர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கையில் அவருடைய பணியாள் ஒருவன் ஒரு கூண்டுக் கிளியை அங்கு கொண்டுவந்து வைத்தான். கூண்டினுள்ளிருந்த பச்சைக்கிளி சிறகுகளை அடித்துக் கொண்டு ‘கீ’ ‘கீ’ என்று கத்தியது. அந்தக் கிளியை அன்புடன் பார்த்துக் கொண்டு இருந்த அக்பர், பின்னர் சபையோர் பக்கம் திரும்பி, “என்னுடைய நெருங்கிய நண்பன் இந்தக் கிளியை எனக்குப் பரிசாக அளித்திருக்கிறான். இந்தக் கிளி அழகாக இருக்கிறதல்லவா?” என்று கேட்டார்.

 

“ஆம், பிரபு! நானும் எத்தனையோ கிளிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால், உங்களுடைய கிளியைப் போன்ற அழகான கிளியை இதுவரை நான் பார்த்ததில்லை” என்றார் தர்பாரில் இருந்த அக்பரின் அதிகாரிகளில் ஒருவரான ஃபயிஸ்கான்!

 

உடனே அவர் பக்கம் பார்வையைத் திருப்பிய அக்பர்,“உனக்குக் கிளிகளைப் பற்றி தெரியுமா? எப்போதாவது கிளி வளர்த்தது உண்டா?” என்று கேட்டார்.

 

“இன்று வரை நான் பதினைந்திற்கு மேற்பட்ட கிளிகளை வீட்டில் வளர்த்து இருக்கிறேன். ஆனால் அவற்றை விட உங்களுடைய கிளி மிகவும் அழகாக இருக்கிறது” என்றான் ஃபயிஸ்கான். இவ்வாறு சொல்லி அக்பரின் மனத்தைக் குளிரச் செய்ய முயன்றான்!

 

“மிகவும் நல்லதாகப் போயிற்று. உன்னை மாதிரி கிளி வளர்ப்பதில் அனுபவமுள்ள ஒருவனைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். இதை வளர்க்கும் பொறுப்பை உன்னிடம் தர விரும்புகிறேன். இதை நீ உன் வீட்டுக்கு எடுத்துச் செல்! ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்! இந்தக்கிளி இறந்துவிட்டதாக எவன் செய்தி சொல்கிறானோ, அவனுக்கு மரணதண்டனை விதிப்பேன்!” என்று சொல்லி கிளிக்கூண்டை அவன் கையில் தந்தார்.

அதைக்கேட்டு ஃபயிஸ்கானுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவன் மனத்திற்குள் தன்னைத் திட்டிக் கொண்டே “பிரபு! என்னிடம் ஒப்படைத்துள்ள பொறுப்பை நான் மனமுவந்து ஏற்கிறேன்” என்று மிகவும் மகிழ்ச்சியுற்றவன் போல் அவரை வணங்கி எழுந்தான்.

 

பின்னர் அவன் கிளிக்கூண்டை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். ஏற்கெனவே சிடுசிடுவென்றிருந்த அவன் மனைவி கிளிக்கூண்டைப் பார்த்து “இது ஏது? எதற்காக இதைப்போய் வீட்டுக்கு எடுத்து வந்தாய்?” என்றாள். “இதை நம் வீட்டில் வைத்து பாலூட்டி வளர்க்க வேண்டும்” என்றான் ஃபயிஸ்கான்.“சரிதான்! யார் இதை வளர்ப்பது?” என்று கேட்டதற்கு, “நீதான்!” என்று ஃபயிஸ்கான் கூறியதும், அவளுக்குக் கோபம் பற்றிக் கொண்டு வந்தது. பின்னர் ஒரு கணம் நிதானித்து,“இதை சக்கரவர்த்தி உனக்குப் பரிசாக அளித்தாரா?” என்று கேட்டாள்.

 

அதற்கு ‘ஆமாம்’ என்று அவன் தலையாட்டினான். “வேறு யாரிடமாவது இதைக் கொடுத்துவிடு!” என்று அவள் அலட்சியமாகச் சொல்ல, “இதை வேறு யாரிடமும் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதை நம் வீட்டில் வைத்து வளர்க்கும் பொறுப்பை என்னிடம் சக்கரவர்த்தி கொடுத்து விட்டார். இதற்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், என் தலை உருளும்” என்று சொல்லிவிட்டு, தர்பாரில் நடந்ததை விளக்கினான்.

 

“எத்தனை பெரிய ஆபத்தை விலைக்கு வாங்கியிருக்கிறாய்?” என்று கூறிய அவன் மனைவி, வேறு வழியின்றி அதை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். அன்று முதல், ஜாக்கிரதையாக அவள் அந்தக் கிளியைப் பராமரித்து வந்தாள்.

 

ஒருநாள் காலை, பயிஸ்கான் கூண்டினுள் நோக்கியபோது, கிளி மல்லாந்து விழுந்திருந்தது, அதைக் குரல் கொடுத்து அழைத்துப், தொட்டுப் பார்த்தும் அது எழுந்திருக்கவேயில்லை. உடனே அவன் தன் மனைவியைக் கூவி அழைத்தான். அவளும் ஓடிவந்து, கிளியை சோதித்துப் பார்த்தவள்,“ஐயோ! கிளி இறந்து விட்டதே!” என்று கூச்சலிட்டாள்.   –

அதைக் கேட்டு ஃபயிஸ்கான், “ஐயோ! என் தலை உருளப்போகிறதே!” என்று தலையில் ‘படீர்’ ‘படீர்’ என்று அடித்துக் கொண்டு அழுதான். அவன் மனைவி அவனைத் தேற்றினாள். “நான் சொல்வதைக் கேளுங்கள். பீர்பாலிடம் சென்று முழு விவரத்தையும் சொல்லுங்கள். அவர் எப்படியாவது உங்களைக் காப்பாற்றி விடுவார்” என்று யோசனை கூறினாள். டனே, ஃபயிஸ்கான் கூண்டைத் தூக்கிக்கொண்டு பீர்பால் வீட்டை நோக்கி ஓடினான். அவனைக்கண்ட பீர்பால், கூண்டைக் கையில் எடுத்து வந்திருக்கிறாயே! இந்தக் கிளியை வளர்ப்பதற்கு உன்னிடம் சக்கரவர்த்தி ஒப்படைத்திருந்தார் அல்லவா?” என்றார்.

 

“அதை நான் எப்படிச் சொல்வேன் பீர்பால்! ஜாக்கிரதையாக இதை வளர்த்தும், இன்று காலை இது திடீரென இறந்து விட்டது. இந்த செய்தியைக் கேட்டால், சக்கரவர்த்தி எனக்கு மரண தண்டனைதான் அளிப்பார்! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!” என்று கூறினான் ஃபயிஸ்கான்.

 

“கடவுளே! நீ நன்றாக ஆபத்தில் சிக்கிக் கொண்டாயே! சரி, எனக்கு ஒரு நல்ல யோசனை தோன்றி விட்டது. நீ வா என்னுடன்! சக்கரவர்த்தியை சந்திப்போம்” என்று கூறிய பீர்பால் முன்னே செல்ல, பின்னால் ஃபயிஸ்கான் நடுங்கிக் கொண்டே கூண்டைச் சுமந்து கொண்டு நடந்தான்.

 

அக்பர் தர்பாருக்கு வருமுன்னரே இருவரும் அங்கு வந்து விட்டனர். அக்பர் தர்பாரில் நுழைந்து, ஆசனத்தில் அமர்ந்ததும் அக்பர் அவரை நோக்கி “என்ன விஷயம்?” என்று கேட்டார்.

உடனே, கிளிக்கூண்டை எடுத்துக் கொண்டு அவரை அணுகிய பீர்பால், கிளியைச் சுட்டிக்காட்டி, “பிரபு! உங்களுடைய கிளி யோகாசனம் கற்றுக் கொண்டு இருக்கிறது. பாருங்களேன்!” என்றார்.

 

உற்றுப் பார்த்த அக்பர் கோபத்துடன் “என்ன உளறுகிறாய்? கிளி இறந்து விட்டது! எங்கே அந்த முட்டாள் ஃபயிஸ்கான்? அவனுக்கு மரண தண்டனை விதிக்கப் போகிறேன்!” என்றதும், பயந்து கொண்டே ஃபயிஸ்கான் முன்னே வந்தான். “தயவு செய்து நான் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்” என்ற பீர்பால் தொடர்ந்து, “பிரபு! அன்று ஒருநாள் இந்தக் கிளியை வளர்க்கும் மிகப்பெரிய பொறுப்பை ஃபயிஸ்கானிடம் ஒப்படைத்தபோது நீங்கள் சொன்னது நினைவு இருக்கிறதா? “இந்தக் கிளி இறந்துவிட்டது என்ற தகவலைச் சொல்பவனுக்கு மரண தண்டனை” என்றீர்கள். அவ்வாறு சொன்னது நீங்கள்தானே!” என்றார்.

 

“ஆம்! அப்படித்தான் சொன்னேன்!  இன்றும் அதையே சொல்கிறேன். என்னுடைய கிளி இறந்து விட்டது.
அதனால்…” என்ற அக்பரை இடை மறித்தார் பீர்பால்.

 

“கிளி இறந்து விட்டது என்று சொன்னது நீங்கள்தான்! அதை ஃபயிஸ்கான் சொல்லவில்லை. அதனால் இப்போது யாருக்கு மரண தண்டனை தரவேண்டும்?” என்றார் பீர்பால். இதைக் கேட்டு அக்பர் உரக்கச் சிரித்தார்.

 

“பீர்பால்! நல்ல சமயத்தில் என் கண்களைத் திறந்து விட்டாய். ஒரு கிளிக்காக என் நல்ல அதிகாரிகளில் ஒருவனுக்கு மரண தண்டனை அளிப்பது சரியல்ல!” என்றார். ஃபயிஸ்கானுக்குப் போன உயிர் திரும்பி வர, பீர்பாலுக்கு நன்றி  கூறினான்

அக்பர் பீர்பால் கதைகள் – சிறந்த ஆயுதம்

சக்கரவர்த்தி அக்பர் சில பிரமுகர்களுடன் நந்தவனத்தைச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தார். அவருடன் பீர்பலும் இருந்தார். நந்தவனத்தில் மலர்ந்திருந்த ரோஜாப்பூக்களைப் பார்த்துப் பரவசமான அக்பர், “ஆகா! பூமியில் ஒரு சொர்க்கம் உண்டு எனில் அது இந்த நந்தவனம்தான்!” என்றார்.

“ஆம், பிரபு! நீங்கள் கூறுவது சரி!” என்று அனைவரும் ஆமோதிக்க, பீர்பல் மட்டும் மௌனமாக இருந்தார். அதைக் கவனித்த அக்பர், “பீர்பல்! சற்று முன் நான் கூறியதில் உனக்கு உடன்பாடு இல்லையா?” என்று கேட்டார்.
“பிரபு! இந்த நந்தவனத்திற்கு அழகைத் தருவது இந்த ரோஜா மலர்கள் தான். ஆனால் அழகு எங்கே உள்ளதோ, அங்கே அபாயமும் உண்டு!” என்றார் பீர்பல். “ஓகோ! ரோஜாப்பூக்களில் உள்ள முட்களைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லை, பிரபு! நான் அவற்றைச் சொல்லவில்லை!” என்று பீர்பல் சொல்ல, “அப்படியானால், ரோஜாச் செடிகளின் உள்ளே மறைந்திருக்கும் பாம்புகளைக் குறிப்பிடுகிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“மனிதனால்தான் பாம்புகளுக்கு அபாயம்! நம் காலடியோசையைக் கேட்டவுடனேயே அவை பயந்து ஓடி விடுகின்றன!” என்றார் பீர்பல்.
“பின் நீ எதைத்தான் அபாயம் என்று குறிப்பிடுகிறாய்?” என்று சலிப்புடன் அக்பர் கேட்க, “பிரபு! அபாயம் என்பது அழகை மட்டுமல்ல; வலிமை, செல்வம், புகழ் ஆகிய அனைத்தையும் அபாயம் சூழ்ந்து உள்ளது.
 தாங்கள் பாரதத்தின் மிக வலிமை பொருந்திய, மிகப் புகழ்பெற்ற, சகல செல்வங்களையும் ஒருங்கே பெற்ற சக்கரவர்த்தி! ஆனால், மேற்கூறிய விஷயங்களினால், அண்டை ராஜ்யத்து மன்னர்கள் தங்கள் மீது பொறாமை கொண்டுள்ளனர். தங்களை வீழ்த்தி வெற்றிவாகை சூட சதித்திட்டம் இட்டவாறு உள்ளனர்.
அதனால்தான், பூலோக சொர்க்கம் என்று ஒன்று இருப்பதாக நான் எண்ணவில்லை” என்றார். பீர்பலின் சொற்கள் அக்பரை சிந்திக்கத் தூண்டின. மறுநாள் சபையில் அக்பர், “திடீரென்று ஒருவனை அபாயம் சூழ்ந்தால், அவனுடைய தற்காப்புக்காகப் பயன்படும் சிறந்த ஆயுதம் எது?” என்று சபையோர்களை நோக்கி ஒரு கேள்வி கேட்டார்.
“வாள்!” என்றார் ஒருவர். “இல்லை!” என்று மறுத்த பீர்பல், சில சமயங்களில் வாள் பிடித்த கரம் செயலற்றுப் போவதுண்டு!” என்றார். “எதிரி மீது தொலைவிலிருந்தே குறிபார்த்து ஈட்டியை வீசுவதன் மூலம் அபாயத்திலிருந்து தப்பலாம்!” என்றார் மற்றொருவர்.
“பதற்றத்தில் ஈட்டியின் குறி தவறினால், அது பயன்படாது!” என்றார் பீர்பல். “சரிதான்! வாள், ஈட்டி, என்று எந்த ஆயுதமுமே சரியில்லை என்றால், எதுதான் ஆபத்தில் பயன்படும்?” என்று அக்பர் கேட்க, “சூழ்நிலைக்கு ஏற்றவாறு சிந்தித்து செயற்படும் நமது அறிவே சிறந்த ஆயுதம் ஆகும்!” என்றார் பீர்பல்.
“வெறும் பிதற்றல்! நீ ஆபத்தில் சிக்கிக் கொள்ளும்போது உன் மூளை எப்படி வேலை செய்கிறது என்று பார்க்கிறேன்!” என்று அக்பர் கிண்டல் செய்ய, சபையோர் அவருடன் சேர்ந்து பீர்பலை எள்ளி நகையாடினர். “சமயம் வரும்போது நான் கூறியது உண்மை என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள்!” என்றார் பீர்பல்.
மறுநாள், அக்பர் சில பிரமுகர்களுடன் நதிக்கரையில் உலவிக் கொண்டிருந்தபோது, பீர்பலும் உடனிருந்தார். அப்போது, ஒரே கூச்சலும், கூக்குரலும் கேட்க, மக்கள் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர். சக்கரவர்த்தியைக் கண்ட அவர்கள் ஓடோடி வந்து, “பிரபு! ஆபத்து! அபாயம்! பட்டத்து யானைக்கு திடீரென மதம் பிடித்து விட்டது.
அது இந்தப் பக்கம்தான் ஓடி வந்து கொண்டிருக்கிறது. நீங்கள் உடனே ஓடி விடுங்கள்!” என்று கூச்சலிட்டனர். அவர்கள் கூறி முடிப்பதற்குள் தொலைவில் மதயானை ஓடி வருவது தெரிந்தது.
 உடனே, அக்பர் தன் இடையிலிருந்து வாளை உருவ, கூடியிருந்த அனைவரும் தங்கள் வாட்களை உருவிக் கொண்டனர். ஆனால், மதம் பிடித்த யானையை வாள் கொண்டு சமாளிக்க முடியாது என்று உணர்ந்ததும், அவர்கள் திக்பிரமை பிடித்து சிலைகளாக நின்றனர். தன்னைப் பெரிய ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதை அக்பரும் உணர்ந்தார்.
வாளினாலோ, ஈட்டியினாலோ யானையை ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிந்தது. ஆனால் கோழையைப் போல் பயந்து ஓடவும் அவருடைய தன்மானம் இடம் தரவில்லை. எல்லாரும் செய்வதறியாது செயலற்று நிற்க, பீர்பல் சட்டென்று அங்கிருந்த ஒரு பூனையைப் பிடித்து யானையின் முதுகில் வீசியெறிந்தார். யானையின் முதுகில் விழுந்ததால் மிரண்ட பூனை, தன் நகங்களினால் யானையைப் பிறாண்டியது.
வலி பொறுக்க முடியாத யானை, தன் தும்பிக்கையினால் பூனையைப் பிடிக்க முயல, அது தப்பித்துக் கீழேயிறங்கி ஓடியது. யானையின் கோபம் முழுவதும் பூனையின்பால் திரும்ப, அது பூனையைத் துரத்திக் கொண்டே எதிர் திசையில் ஓடியது.
தனது பருத்த உடலைத் தூக்கிக் கொண்டு யானையினால் விரைவாக ஓட முடியவில்லை. போக்குக் காட்டிக் கொண்டே ஓடிய பூனை, சாலையோரப் புதர்களின் உள்ளே மறைய, யானை புதர்களுக்குள் புகுந்து அதைத் தேடியது. இவ்வாறு, யானையின் கவனம் திசை திரும்ப, அக்பரும் மற்றவர்களும் யானையிடம் சிக்காமல் தப்பித்தனர்.
சற்றுநேரம் சிலையாய் நின்ற அக்பர் தெளிவடைந்தவுடன் பீர்பலைக் கட்டித் தழுவிக் கொண்டார். “பீர்பல்! சபாஷ்! அறிவுதான் சிறந்த ஆயுதம் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டாய்! சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளையைப் பயன்படுத்தி சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்தது என்ற உண்மையை எங்களுக்குப் புரிய வைத்து விட்டாய்! நீ சொன்னதே சரி! உன்னைப் போன்ற அறிவாளி அருகிலிருந்தால் எந்த அபாயத்தையும் எதிர் கொள்ளலாம்!” என்று மனதாரப் பாராட்டினார்.
அக்பர் பீர்பால் கதைகள் – குழந்தையின் அழுகை

அக்பர் சக்கரவர்த்தியைக் காக்காய் பிடிப்பதற்காக அவருடைய சில அதிகாரிகள் எப்போதும் அவரைச் சூழ்ந்து கொண்டு, அவர் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டுக் கொண்டிருந்தனர். அவர்களுடைய செயலைக் கண்டு முகம் சுளித்த பீர்பல், ‘இவர்கள் அக்பரின் பணிஆளர்களா, இல்லை எதற்கெடுத்தாலும் வாலையாட்டும் நாய்களா?’ என்று எண்ணினார். தன் மனத்தில் தோன்றியதை ஒருநாள் அவர்களிடம் பீர்பல் கூறிவிட, அவர்கள் வெகுண்டனர். “பீர்பல்! என்ன தைரியம் இருந்தால் எங்களை நாய்கள் என்று குறிப்பிடுவாய்! நீ எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்!” என்று கோபத்தில் எகிறிக் குதித்தனர்.

 “ஏன் உங்களை நாய்கள் என்று சொல்லக்கூடாது?” என்று பீர்பல் கேட்டதும், “நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள்!” என்றனர். “அதுதான் தெரிகிறதே!” என்றார் பீர்பல் ஏளனத்துடன்! “அப்படியெனில் ஏன் எங்களை நாய்கள் என்று சொல்கிறாய்?” என்று கேட்டனர்.
 “தவறுதான்! ஏனெனில் நாய்களுக்கு வால் உண்டு. உங்களுக்கில்லை!” என்றார் பீர்பல். “நாக்கை அடக்கிப் பேசு!” என்று அவர்கள் சீறி விழ, “நான் என்ன பிரமாதமாக சொல்லிவிட்டேன் என்று நீங்கள் இப்படி கோபத்தில் குதிக்கிறீர்கள்? உங்களுக்கு தைரியம் இல்லை என்றும், நீங்கள் கோழைகள் என்றும் கூறுகிறேன். அது தவறா?” என்றார் பீர்பல்.
 “சரி, அதைவிடு! நாங்கள் பயந்தாங்கொள்ளிகளாகவே இருந்து விட்டுப் போகிறோம். ஆனால் நீ எங்களை விட தைரியசாலியா?” என்று ஒருவன் பீர்பலிடம் கேட்டான். “ஆமாம், சந்தேகம் இல்லாமல்!” என்று மார்தட்டிய பீர்பல், “உங்களுக்கு என் தைரியத்தை நான் எந்த விதத்தில் நிரூபித்துக் காட்டவேண்டும் என்று என்னிடம் சொல்லுங்கள்!” என்றார். “முன்கூட்டியே சக்கரவர்த்தியிடம் அனுமதி பெறாமல் தர்பாருக்கு உன்னால் தாமதமாக வரமுடியுமா?” என்று ஒருவர் சவால் விட்டார்.
அக்பர் சபைக்கு வருமுன்னரே, மற்றவர்கள் வந்துவிட வேண்டும் என்பது அக்பரின் கட்டளை! அப்படி யாராவது குறித்த நேரத்தில் வர முடியவில்லையெனில், தாமதமாக வருவதற்கு முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும். அந்த நியதியை மீறுபவர்களின் மீது சக்கரவர்த்தி கடுமையான நடவடிக்கை எடுப்பதுஉண்டு. இந்த விஷயம் பீர்பலுக்கும் தெரியும். ஆயினும், முன் வைத்த காலைப் பின் வைக்க மனமின்றி, “சரி! நாளைக்கு நான் முன் அனுமதிஇன்றி தாமதமாக சபைக்கு வந்துக் காட்டுகிறேன்!” என்று கூறினார்.
நாளைக்கு பீர்பலுக்கு சக்கரவர்த்தி கடுமையான தண்டனை விதிப்பார் என்று எண்ணியவாறு அவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். மறுநாள் அக்பர் தர்பாரில் நுழைந்த போது, பீர்பலைத் தவிர மற்றவர் அனைவரும் ஏற்கெனவே வந்து இருந்தனர். அனைவரும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் செலுத்திய பிறகு தங்களுடைய ஆசனங்களில் அமர்ந்தனர். அக்பரும் தன் ஆசனத்தில் அமர்ந்தார். பிறகு சபையோரை ஒருமுறை பார்த்த அக்பர் அவர்களில் பீர்பல் மட்டும் இல்லாததை உணர்ந்தார்.
“பீர்பல் ஏன் வரவில்லை? ஏதாவது தகவல் அனுப்பியிருக்கிறாரா?” என்று அக்பர் சபையோரைக் கேட்டார். உடனே, சபையில் ஒருவர் எழுந்து, “இல்லை, பிரபு!” என்றார். “தர்பாருக்கும் வரவில்லை; தகவலும் அனுப்பவில்லை! அவரை இங்கு அழைத்து வர ஆள் அனுப்புங்கள்!” என்று அக்பர் உத்தரவிட்டார். பீர்பலை அழைத்து வரச் சென்ற ஆள் சிறிது நேரத்தில் திரும்பினான்.
“பிரபு! அவருடைய குழந்தை அழுது அடம் பிடிக்கிறதாம்! அதை சமாதானப்படுத்திய பிறகு வருவதாகக் கூறினார்!” என்றான் அவன். “என்ன திமிர் இருந்தால் பீர்பல் இப்படி ஒரு பதிலை அனுப்புவான்! மிகவும் கெட்டிக்காரனான பீர்பலுக்கு அழுகின்ற குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லையா? இது நம்புகிற மாதிரி இல்லையே!” என்றார் அக்பர்.
பிறகு கோபத்துடன், “பீர்பல் உடனே இங்கு ஆஜராக வேண்டும் என்று என் கட்டளையைத் தெரிவியுங்கள்! அப்படியும் ஏதாவது சமாதானம் கூறினால், அவரைக் கட்டியிழுத்து வாருங்கள்!” என்று என்று பணியாளரிடம் உத்தரவிட்டார். அவர் கோபத்துடன் கட்டளைப் பிறப்பிக்கும்போதே, பீர்பல் அவசர அவசரமாக சபைக்குள் நுழைந்தார். பீர்பலை தலையோடு கால்வரை உற்று அக்பர் உற்று நோக்கினார்.
“என்னை மன்னித்து விடுங்கள் பிரபு! என்னுடைய மூன்று வயதுக் குழந்தை காலையிலிருந்து தொடங்கி அடம் பிடித்து அழுது கொண்டேயிருக்கிறது. அதை என்னால் சமாதானப்படுத்தவே முடியவில்லை. அதனால்தான் என்னால் தர்பாருக்குக் குறித்த நேரத்தில் வர முடியவில்லை. என் குழந்தை இன்னமும் அழுது கொண்டேயிருக்கிறது!” என்றார் பீர்பல்.
“உன்னால் ஒரு குழந்தையை சமாதானப்படுத்த முடியவில்லை என்பதை நான் நம்ப மாட்டேன்!” என்றார் அக்பர். “நான் நடந்ததைக் கூறுகிறேன், கேளுங்கள்! காலையில் எழுந்தவுடன் என் குழந்தை கரும்பு கேட்டது, நானும் வாங்கித் தந்தேன். அதைப் பிழிந்து சாறு தரும்படிக் கேட்டது. நானும் அவ்வாறே செய்து ஒரு கோப்பையில் ஊற்றிக் கொடுத்தேன்.
உடனே கோப்பையிலிருந்த கரும்புச் சாற்றைத் தரையில் கொட்டிவிட்டு, தரையில் ஓடும் சாற்றை மீண்டும் கோப்பையில் எடுத்துத்தரச் சொல்லிப் பிடிவாதம் செய்தது. அது என்னால் எப்படி முடியும்? அது முடியாத காரியம் என்று சொன்னாலும் கேட்கவில்லை.
அதனால்தான் எனக்கு தாமதமாகி விட்டது!” என்று பீர்பல் பரிதாபமாகக் கூறினார். “ஒரு குழந்தையை சமாதானப் படுத்த சாமர்த்தியமற்ற உன்னைப் போய் பிரதம ஆலோசகனாக நியமித்துக் கொண்டேனே!” என்று அக்பர் விமரிசனம் செய்தார்.
“பிரபு! உலகிலேயே மிகக் கடினமான காரியம் அது ஒன்று தான்! நீங்கள் எப்போதாவது அழும் குழந்தையை சமாதானம் செய்து இருக்கிறீர்களா?” என்று பீர்பல் கேட்டார். தொடர்ந்து, “எங்கே! சற்று முயற்சி செய்து பாருங்களேன்! நான் இப்போது ஒரு குழந்தை போல் நடிக்கிறேன். நீங்கள் என்னை சிரிக்க வையுங்கள்!” என்றார். அதற்கு அக்பரும் சம்மதித்தார்.
உடனே, பீர்பல் தரையில் படுத்துக் கொண்டு குழந்தையைப் போல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுவது போல் நடித்தார். அக்பரும் சிம்மாசனத்தில்இருந்து இறங்கி வந்து “அழாதே பாப்பா! உனக்கு என்ன வேண்டும்?” என்று கெஞ்சினார். “ஹூ…ஹூ! எனக்கு தங்க மோதிரம் வேண்டும்!” என்று பீர்பல் குழந்தைக் குரலில் கேட்டார். உடனே, அக்பர் தன் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றி பீர்பலின் விரலில் அணிவித்தார். ஆனால், மறுபடியும் பீர்பல் குழந்தையின் குரலில் உரக்க அழுதார்.
“எனக்கு ஒரு யானை வேண்டும்!” என்று கத்த, அக்பர் உடனே ஒரு யானையை வரவழைக்கச் செய்தார். அதன்பிறகும், பீர்பல் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழுதார். “இந்த மோதிரத்தினுள் யானை நுழைந்து வெளியே வரவேண்டும்! ஹூ…ஹூ!” என்று கத்தினார். தலையைப் பிடித்துக் கொண்ட அக்பர், “ஐயோ! உன்னை என்னால் சமாதானப் படுத்த முடியாது!” என்று கூவ, “இப்போதாவது புரிந்ததா பிரபு! அடம் பிடித்து அழும் குழந்தையை சமாதானம் செய்வது மிகவும் கடினம்!” என்றார் பீர்பல்.
அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அக்பர், “பீர்பல்! நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை!” என்றார். பீர்பலுக்குக் கிடைக்கப் போகும் தண்டனையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அதிகாரிகளின் முகத்தில் அசடு வழிந்தது.
அக்பர் பீர்பால் கதைகள் – மக்கள் நேர்மையானவர்களா?

ஒருநாள் அக்பர் தனது அரசவையில் கூடியிருந்தவர்களிடம், “எனது அரசாட்சியில் மக்கள் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?” என்று கேட்டார்
உடனே சபையிலிருந்த அனைவரும் “ஆம் அரசே… உங்கள் பொன்னான ஆட்சியில் அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்கின்றனர். இதை யாரும் மறுக்கவே முடியாது.” என்றனர்.

ஆனால் பீர்பால் மட்டும் அமைதியாக இருப்பதைக் கண்ட அக்பர், “ஏன் மவுனமாக இருக்கிறாய் பீர்பால்…மக்கள் நேர்மையாக இருப்பதைப் பற்றி உன் கருத்து என்ன?” என்று கேட்டார். உடனே பீர்பால், “இதற்கு நான் பதிலளிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும் அரசே…மக்கள் அனைவருக்கும் நீங்கள் விருந்து வைக்க வேண்டும். விருந்துக்கு வரும்போது ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்,” என அக்பரிடம் வேண்டுகோள் வைத்தார்.

பீர்பால் கேட்பதில் ஓர் உள்ளர்த்தம் இருப்பதை உணர்ந்து கொண்ட அக்பர், உடனே விருந்து பற்றி பொதுமக்களிடம் தெரிவிக்கும்படி உத்தரவிட்டார்.

தண்டோரா போட்டபடியே அனைத்து வீதிகளுக்கும் சென்ற அரசவை அறிவிப்பாளர், “நமது பேரரசர் அனைவருக்கும் விருந்து வைக்கிறார். விருந்துக்கு வருவோர் கண்டிப்பாக ஒரு குடத்தில் பால் கொண்டு வர வேண்டும். இது அரசு உத்தரவு, ” என்று உரத்த குரலில் அறிவித்தார்.

இதைக் கேட்டு குழப்பமுற்ற மக்களில் பலர், “அரசர் விருந்தளிப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குய விஷயம் தான். ஆனால் குடத்தில் எதற்காக பால் கொண்டு செல்ல வேண்டும், ” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர். அங்கிருந்த பெண்கள், “சரி ஒரு குடம் பால் தானே…கொண்டு போய் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று குழப்பத்துடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

அரசர் அறிவித்த விருந்து நடைபெறும் நாள் வந்தது. அக்பர், பீர்பால் உள்பட அரசவையில் முக்கியப் பதவிகளில் இருப்போர் அனைவரும் கூடியிருந்தனர். பீர்பால் ஏற்பாட்டின் படி, திடலின் பிரதான வாசலில் மிகப் பெரிய பாத்திரம் மூடி போட்டு வைக்கப்பட்டிருந்தது. மூடியில் பெரிய ஓட்டை போடப்பட்டிருந்தது.
 

பொதுமக்கள் அனைவரும் உத்தரவின் படி தாங்கள் கொண்டுவந்த பாலை, மூடியிலிருந்த ஓட்டை வழியாக பாத்திரத்தில் கொட்டி விட்டு வெறும் குடத்துடன் திடலுக்குள் நுழைந்தனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அக்பர், “நீ சொன்னபடி செய்தாகிவிட்டது பீர்பால். இவ்வளவு பாலையும் என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்டார்.

உடனே பீர்பால் காவலர்களைப் பார்த்து, “பாத்திரத்தை மன்னருக்கு அருகில் கொண்டு வாருங்கள்” என உத்தரவிட்டார்.
பாத்திரம் அருகில் கொண்டுவரப்பட்டதும், அதன் மூடியை அகற்றச் சொன்னார் பீர்பால். மூடி அகற்றப்பட்டதும் பாத்திரத்தைப் பார்த்த மன்னர், அதில் வெறும் தண்ணீர் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.
“பீர்பால்…என்ன இது, பால் இருக்க வேண்டிய பாத்திரத்தில் வெறும் தண்ணீர் உள்ளதே?” என அதிர்ச்சி மாறாமல் கேட்டார்.

ஆனால் இதை முன்பே எதிர்பார்த்தது போல நிதானமாக பேசிய பீர்பால், “மக்களின் நேர்மை பற்றி என்னிடம் நீங்கள் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில் அரசே! மற்றவர்கள் பால் கொண்டு வரட்டும், நாம் தண்ணீர் கொண்டு போய் பாத்திரத்தில் கொட்டினால் யார் கண்டுபிடிக்க முடியும் என்று ஒவ்வொருவரும் நினைத்துள்ளனர். எனவே தான் பாத்திரம் முழுதும் தண்ணீர் உள்ளது. கூட இருப்பவர்களின் பேச்சைக் கேட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது அரசே..” என்று சிரித்தபடியே கூறினார்.

பீர்பாலின் அறிவுக்கூர்மையை மெச்சிய அக்பர், அவரை ஆரத் தழுவிக்கொண்டார்.

அக்பர் பீர்பால் கதைகள் – நெய் டப்பாவில் பொற்காசு

தன்னுடைய தர்பாருக்கு விசாரணைக்காக வரும் வழக்குகளில் பலவற்றை அக்பர் பீர்பாலிடம் ஒப்படைப்பதுண்டு. ஒருநாள், அக்பரின் அனுமதியுடன் தர்பாருக்கு வந்த மதுசூதன் என்ற வியாபாரி அவரை வணங்கியபின், “பிரபு! என் பெயர் மதுசூதன்! நான் ஒரு நெய் வியாபாரி! ஒரு மாதத்திற்கு முன் அஸ்லாம்கான் எனும் என் நண்பன் என்னிடம் வந்து 20 முகராக்கள் கடன் கேட்டான். பதினைந்து நாள் களுக்குள் திருப்பித் தருவதாகச் சொன்னவன் இதுவரை அதைத் திருப்பித் தரவேயில்லை” என்றார்.

“நீ கொடுத்த கடனுக்கு அவனிடம் இருந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியிருக்கிறாயா?” என்று அக்பர் கேட்டார்.
“அஸ்லாம்கானை எனக்கு இருபது வருடங்களாகத் தெரியும். அதனால் கடன் பத்திரத்தில் கையெழுத்து வாங்கவில்லை. ஆனால் நான் சொல்வது உண்மை!” என்றார்.

உடனே பீர்பாலின் பக்கம் திரும்பிய அக்பர், “பீர்பால்! இந்த வழக்கை நீ கவனிக்கிறாயா?” என்று கேட்டார். அதற்குச் சம்மதித்த பீர்பால் மாலையில் மதுசூதனைத் தன் வீட்டில் சந்திக்கச் சொன்னார். மாலையில் மதுசூதன் வீட்டிற்கு வந்ததும், அவரை நடந்தவற்றை மீண்டும் விளக்கச் சொன்னார். அவர் சொன்னதெல்லாம் கேட்டபிறகு, “ஆக, நீங்கள் அஸ்லாமுக்குக் கடன் கொடுத்ததற்கு அத்தாட்சி எதுவும் இல்லை. சாட்சிகளும் இல்லை” என்றார் பீர்பால்.

 

அதற்கு மதுசூதன், “ஆமாம்!” என்றார். அவருக்கு தைரியமளித்து அனுப்பியபின், பீர்பால் அஸ்லாம் கானைத் தன்னை சந்திக்கும்படி தகவல் அனுப்பினார். சற்று நேரத்தில் நல்ல உடை அணிந்த வாட்டசாட்டமான ஓர் ஆள் பீர்பாலைத் தேடி வந்தார்.  “நான் தான் அஸ்லாம்கான்! என்னை வரச் சொன்னீர்களாமே!” என்றார்.

“உங்களைத் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். உங்கள் மீது ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். அதைப்பற்றி உங்களை விசாரிக்க வேண்டும்” என்றார் பீர்பால். “என் மீது புகாரா? நான் மிகவும் நாணயமானவன்! என் மீது புகார் வர சிறிதும் வாய்ப்பு இல்லையே!” என்றான் அஸ்லாம்.

மதுசூதன் அவர் மீது தொடுத்து உள்ள வழக்கைப்பற்றி பீர்பால் விவரித்ததும், “நான் ஏன் அவரிடம் இருந்து கடன் வாங்க வேண்டும்? எனக்கு ஏராளமாக சொத்து இருக்கிறது. நெய் வியாபாரத்தில் நல்ல லாபமும் சம்பாதிக்கிறேன். மதுசூதன் என் மீது வீணாகப் பழி சுமத்துகிறான்” என்றான் அஸ்லாம். “இருக்கலாம்! ஆனால் வழக்கு என்று வந்து விட்டபின் அதை நன்கு விசாரிக்க வேண்டியிருக்கிறது” என்றார் பீர்பால். “அல்லா எனக்கு ஏராளமான செல்வத்தை வழங்கி இருக்கிறார். எனக்கு யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அஸ்லாம் அடித்துக் கூறினார்.

உடனே பேச்சை மாற்றிய பீர்பால், “அஸ்லாம்! உங்களால் எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?” என்றார்.
“சொல்லுங்கள்” என்று அஸ்லாம் கூற, “கிராமத்திலுள்ள என் நண்பனிடம் எனக்கு ஒரு டின் நெய் அனுப்பச் சொன்னேன். அவன் இரண்டு டின் அனுப்பி விட்டான். ஒரு டின் நெய்யை எங்காவது விற்று விட்டால் நல்லது” என்றார் பீர்பால்.
“அதை என்னிடம் கொடுங்கள். அதை விற்றுப் பணத்தை உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றான் அஸ்லாம்.
“நன்றி! நாளைக்கே உங்கள் கடைக்கு ஒரு டின் அனுப்பி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் அவரை அனுப்பி வைத்தார். மறுநாள், மதுசூதன் வீட்டுக்குச் சென்ற பீர்பால், அஸ்லாம்கானிடம் கூறியதுபோல் கூறிவிட்டு நெய்யை விற்றுத்தரமுடியுமா என்று கேட்டார். மதுசூதனும் அதற்கு ஓப்புக் கொண்டதும், இரண்டு பேர் கடைக்கும் இரண்டு நெய் டின்கள் அனுப்பப்பட்டன.

 

மறுநாள் பீர்பால் தன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கையில், மதுசூதன் மூச்சிரைக்க ஓடிவந்தார். “பீர்பால்! நீங்கள் அனுப்பியிருந்த டின்னில் ஒரு பொற்காசு இருந்தது. அதைக் கொடுக்க வந்தேன். நெய் விற்ற பணம் இதோ!” என்று அவர் மொத்தத்தையும் பீர்பாலிடம் தந்தார்.
“அட! நான் அனுப்பிய டின்னில் பொற்காசு இருந்ததா?  நான் மிகவும் அதிருஷ்டசாலி! நன்றி, மதுசூதன்” என்றார் பீர்பால்.
“அதிருக்கட்டும். என்னுடைய வழக்கு என்ன ஆயிற்று?” என்று மதுசூதன் கேட்க, “அதுவா! நான் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறேன். நாளைக்கு முடிவு தெரியும்” என்றார் பீர்பால்.

அடுத்த நாள் பீர்பால் வீட்டுக்கு வந்த அஸ்லாம் “உங்களுடைய நெய் விற்ற பணம் இதோ!” என்று பணத்தை அளித்தார். அவருக்கு நன்றி தெரிவித்தப்பின் அவரை உட்காரச் சொல்லிவிட்டு பீர்பால் தன் வேலைக்காரனை அழைத்து அவன் செவிகளில் ரகசியமாக ஏதோ கூறினார். அவர் என்ன கூறினார் என்று அஸ்லாமின் செவிகளில் விழவில்லை. அதைப்பற்றி அவன் பொருட்படுத்தவும் இல்லை.

பீர்பால் தன் வேலைக்காரனிடம் ரகசியமாகக் கூறியது இதுதான்! “நேராக நீ அஸ்லாமின் வீட்டுக்குப் போ! அவருடைய மகனைக் கூப்பிடு! அவனுடைய தந்தை பீர்பாலின் வீட்டிலிருப்பதாக கூறு! பிறகு நெய் டின்னில் இருந்த ஒரு பொற்காசை எடுத்துவர மறந்து விட்டதாகவும், அதை உடனடியாக எடுத்து வரவும் அவன் தந்தை கூறியதாகச் சொல்!” என்றார்.
வேலைக்காரனை அஸ்லாமின் வீட்டுக்கு ரகசியமாக அனுப்பியபின், பீர்பால் தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அஸ்லாமிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு வேண்டும் என்றே காலத்தைக் கடத்தினார்.

சற்று நேரத்தில் அஸ்லாமின் மகனுடன் பீர்பாலின் வேலைக்காரன் திரும்பினான்.  அந்தச் சிறுவன் அஸ்லாமை நோக்கி ஓடிவந்து, “அப்பா! நீங்கள் எடுத்துவரச் சொன்ன பொற்காசு இதோ! இது நமக்கு நேற்று நெய் டின்னில் கிடைத்தது” என்று உண்மையை உளறிவிட, அஸ்லாம் கோபத்துடன் “அதிகப்பிரசங்கி! உன்னை யார் இங்கே வரச்சொன்னது? நெய் டின்னில் பொற்காசா? நீ என்ன மடத்தனமாய் உளறுகிறாய்?” என்று உண்மையை மறைக்க அரும்பாடு பட்டார்.

“அவனை ஏன் மிரட்டுகிறீர்கள் அஸ்லாம்? பையன் உண்மையைத் தான் கூறுகிறான். நீங்கள்தான் மூடி மறைக்கிறீர்கள். இந்தப் பொற்காசை நான்தான் நெய் டின்னில் வைத்தேன். உங்களை சோதிப்பதற்காகத்தான் அதைச் செய்தேன். இனியும் பொய் பேச முயன்றால், உங்கள் தலை போய்விடும்”  என்று பீர்பால் மிரட்ட, அஸ்லாம் உண்மையை ஒப்புக்
கொண்டு பொற்காசை பீர்பாலிடம் திருப்பித் தந்தார்.

“சரிதான்! நீங்கள் மதுசூதனிடம் கடன் வாங்கிய 20 முகராக்களையும் இதேபோல் என்னிடம் திருப்பித் தந்துவிடுங்கள்” என்றார் பீர்பால். “நான் மதுசூதனிடம் கடன் வாங்கவே இல்லை” என்று அஸ்லாம் பழைய பல்லவியைப் பாட, இதைக் கேட்டதும் பீர்பால் “அஸ்லாம்! இனியும் பொய் பேசினால், உங்களுக்கு தூக்கு தண்டனை நிச்சயம்!” என்று அஸ்லாம் கானை பயமுறுத்த, அவன் உண்மையை ஒப்புக்கொண்டு கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறி பீர்பாலிடம் மன்னிப்புக் கேட்டு, வாங்கிய கடனை மொத்தமாக திருப்பி அளித்தான். பீர்பாலின் புத்திசாலித்தனத்தை, அக்பர் வெகுவாகப் பாராட்டினார்.

அக்பர் பீர்பால் கதைகள் – கதைகள் காளை மாட்டின் பால்

சக்ரவர்த்தி அக்பருக்கு பீர்பாலை மிகவும் பிடித்திருந்தது. அதைக்கண்டு தர்பாரில் பலருக்கு பீர்பால் மீது பொறாமை ஏற்பட்டது. அவர்களில் அரண்மனை வைத்தியரான ஹகீம் ஜாலிம்கானும் ஒருவர்! அவரும், பீர்பால் மீது பொறாமை கொண்ட மற்றவர்களும், பீர்பாலை சிக்கலில் ஆழ்த்த நல்லதொரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தனர்.
ஒரு நாள் அக்பருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அரண்மனை வைத்தியர் ஜாலிம்கான் அவசரமாக வரவழைக்கப்பட்டார். அவர் பரபரப்புடன் அரண்மனையில் நுழைந்து கொண்டிருக்கையில் பீர்பால் மீது பொறாமை கொண்டிருந்த சிலர் அவரை வழி மறித்தனர்.

“வழியை விடுங்கள்! சக்ரவர்த்திக்கு உடல் சரியில்லை. நான் அவரை உடனே பார்க்க வேண்டும்” என்றார் ஜாலிம்கான்.
“நீங்கள் சக்ரவர்த்தியைப் பார்க்கப் போகிறீர்கள் என்பதால் தான் உங்களிடம் அவசரமாக வந்துஇருக்கிறோம்” என்ற அவர்கள், “பீர்பாலைக் காலை வாரிவிட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது” என்றனர்.

“பீர்பாலை படுகுழியில் தள்ள நான் எது வேண்டுமானாலும் செய்யத்தயார்! உடனே சொல்லுங்கள்!” என்றார் ஜாலிம்கான்.
வயதான ஒருவர் ஜாலிம்கானின் காதில் தங்களுடைய ரகசியத் திட்டத்தைக் கூறினார். அதைக்கேட்டதும் ஜாலிம்கான் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தார். தனக்கு யோசனை கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின், அக்பருக்கு சிகிச்சையளிக்கச் சென்றார்.  அக்பர் தனது படுக்கை அறையில் தலை வரை கம்பளியினால் போர்த்திக் கொண்டு முனகிக் கொண்டிருந்தார்.

 

‘ஜாலிம்கான் அக்பரை கவனமாக சோதித்தார். அவருக்கு ஏற்பட்டு இருப்பது சாதாரண காய்ச்சல்தான் என்று தெரிந்துவிட்டது. ஆனாலும் வெகு நேரம் அக்பரை சோதித்துப் பார்த்தபின், மிகவும் கவலைப்படுவது போல் சற்று நேரம் பாசாங்கு செய்தார். அதன் பிறகு அவர் அக்பரிடம், “பிரபு! உங்களுக்கு வந்திருப்பது விஷக்காய்ச்சல்! அதற்கு மருந்து என்னிடம் இருக்கிறது. ஆனால் காளை மாட்டின் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்தான் விரைவில் குணம் அடைவீர்கள் அதனால் தான் கவலைப்படுகிறேன்” என்றார்

“காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்டார் அக்பர்.
“பால் தரும் காளை மாடுகளும் இருக்கின்றன பிரபு! ஆனால் அவற்றைக் கண்டு பிடிப்பது மிகவும் கஷ்டம்” என்றார் ஜாலிம்கான். “யார் அதைக் கண்டு பிடிப்பது?” என்று அக்பர் கவலையுடன் கேட்க, “ஏன் பிரபு? நமது பீர்பால் மிகவும் புத்திசாலி! அவரால் முடியாத காரியமே எதுவும் இல்லை”என்றார் ஜாலிம்கான்.

“பீர்பாலால் பால் தரும் காளை மாட்டை எப்படி கண்டுபிடிக்க முடியும்?” என்று அக்பர் சந்தேகத்துடன் ஜாலிம்கானிடம் கேட்டார். “அத்தகைய காளை மாட்டை இந்த உலகில் யாராவது ஒருத்தரால் கண்டு பிடிக்க முடியும் எனில் அது பீர்பால் மட்டுமே!” என்று கூறிய வைத்தியர், “பிரபு! நீங்கள் ஒரு வாரம் ஓய்வெடுங்கள். இந்த மருந்தை ஒரு நாளைக்கு நான்கு முறை காளை மாட்டுப் பாலில் கலக்கிச் சாப்பிடுங்கள். நீங்கள் குணமாகிவிடுவீர்கள்” என்று சொல்லிவிட்டு மருந்தைக் கொடுத்து விட்டு சென்றார் ஜாலிம்கான்.

உடனே, பீர்பால் அக்பர் முன் வரவழைக்கப்பட்டார். “எப்படிஇருக்கிறீர்கள், பிரபு?” என்று பீர்பால் கேட்க, “நீதான் பார்க்கிறாயே பீர்பால்! எனக்குக் கடுமையான காய்ச்சல்! வைத்தியர் மருந்து தந்திருக்கிறார். ஆனால் அதைக் காளை மாட்டுப் பாலில் குழைத்து சாப்பிட வேண்டுமாம்,” என்றார் அக்பர். “காளை மாட்டின் பாலா?” என்று வியப்புடன் கேட்ட பீர்பால், “காளை மாடு பால்தரும் என்று எந்த மடையன் சொன்னான்?” என்று கேட்டார்.

“ஏன்? வைத்தியர் ஜாலிம்கான் சொன்னார்! அதுவும் உன் ஒருவனால்தான் காளை மாட்டின் பால் கொண்டுவரமுடியும் என்பதையும் உறுதியாகச் சொன்னார்” என்றார் அக்பர். “அப்படியென்று ஜாலிம்கான் சொன்னாரா?” என்று பீர்பால் கேட்டார். “ஆம்!” என்றார் அக்பர்.

தன்னை சிக்கலில் ஆழ்த்தி அவமானப்பட வைக்க ஜாலிம்கான் செய்த சூழ்ச்சி என்று பீர்பாலுக்கு உடனே தெரிந்து விட்டது. பீர்பால் வீட்டுக்குப் போகும் வழியெல்லாம் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு சென்றார். விரைவிலேயே அவர் மனத்தில் ஓர் அருமையான யோசனை தோன்றியது. உடனே, வீட்டுக்குச் சென்ற பீர்பால் புத்திசாலியான தன் மகளை அழைத்து அரண்மனையில் நடந்ததைக் கூறி, சிக்கலிலிருந்துத் தப்பிக்கத் தான் யோசனை செய்துள்ள திட்டத்தையும் கூறினார்.

அதைக் கேட்ட அவரது மகள் “கட்டாயம் செய்கிறேன் அப்பா!” என்றவள் “அந்த ஜாலிம்கானுக்கு உங்கள் மீது பொறாமையா?” என்று கேட்க, “அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பலருக்குப் பொறாமை! இருக்கட்டும்! நீ நான் சொன்னபடி இன்றிரவே செய்!” என்றார் பிர்பால்.

நடு இரவும் வந்தது. பீர்பாலின் மகள் ஒரு வேலைக்காரியை உடன் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றாள்.  அக்பருடைய அரண்மனைக்கருகே உள்ள படித்துறையைத் தேர்ந்தெடுத்த அவள், தன்னுடன் கொண்டு வந்திருந்த துணிகளை ஆற்றில் அலசித் துவைக்கத் தொடங்கினாள். அக்பரின் படுக்கை அறைக்கு மிக சமீபத்தில் அந்தப் படித்துறை இருந்ததால், பீர்பாலின் மகள் ஓங்கி ஓங்கித் துணிகளை படியில் அடித்த சத்தம் நடுநிசி வேளையில் மிகவும் உரக்கக் கேட்டது. அது போதாதென்று, வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துக்கொண்டே பேசினாள்.

அந்த சத்தத்தில் அக்பரின் தூக்கம் கலைந்து போயிற்று. நடு இரவில் யார் இப்படி சத்தம் போடுவது என்று கோபமுற்ற அக்பர் உடனே ஒரு காவற்காரனை அனுப்பினார். காவற்காரனும் யார் அவ்வாறு சத்தம் போடுவது என்றறிய அரண்மனையை விட்டு வெளியே வந்தான். ஆற்றங்கரையில், நடு இரவில், ஓர் இளம்பெண் வேலைக்காரியுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததையும், துணிகளை அடித்துத் துவைத்துக் கொண்டுஇருந்ததையும் பார்த்து கோபமுற்றான்.

அவன் அவளைத் திட்டிக் கொண்டே நெருங்கி, “முட்டாளே, நீ என்ன பைத்தியமா? இரவு நேரத்தில் யாராவது துணி துவைப்பார்களா?” என்று தன் ஈட்டியை ஆட்டிக் கொண்டே கேட்டான்.
“ஏன்? இரவு நேரத்தில் ஆற்றில் தண்ணீர் இருக்காதா? பகலில்தான் இருக்குமா? இரவில் ஏன் துவைக்கக் கூடாது?” என்று பீர்பாலின் மகள் வாதம் செய்தாள். “உனக்கு அறிவில்லையா? பக்கத்தில் சக்ரவத்தியின் மாளிகை இருக்கிறது. பாவம், உன்னால் அவர் தூக்கம் கலைந்து விட்டது. நீ உடனே இங்கிருந்து போய்விடு” என்றான் காவலன்.

‘அப்புறம் துணிகளை யார் துவைப்பது? நீ செய்வாயா?” என்றாள் அவள். காவலன் கோபத்துடன், “அதிகப்பிரசங்கி! யார் நீ?” என்று கத்தினான். உடனே, அவள் சிரித்துக் கொண்டே “நான் ஒரு பெண்!” என்றாள். “திமிர் பிடித்தவளே! நீ யாருடைய பெண்?” என்றான் காவலன். “நான் என் அப்பாவுடைய பெண்!” என்று இடக்காக அவள் பதில் சொல்ல, காவலன் பொறுமையிழந்தான்.

“உன்னை சக்ரவத்தியிடம் இழுத்துப் போகிறேன். இதேபோல் அங்க பதிலளித்தால், அவர் உனக்கு சவுக்கடி கொடுப்பார்” என்று காவலன் அவளை இழுத்துக் கொண்டு அக்பரிடம் சென்றான். அக்பரின் முன் நிறுத்தப்பட்ட பீர்பாலின் மகளின் முகத்தில் பயம் துளிக்கூட இல்லை. புன்சிரிப்புடன் தைரியமாக அவள் நிற்க, காவலன் அவள் இரவில் துணி துவைப்பதைப் பற்றி அக்பரிடம் கூறினான். அக்பர் கோபத்துடன் “என்னம்மா? இரவில்தான் துணி துவைக்க நேரம் கிடைத்ததா? என்றார். “ஆமாம் பிரபு! பகலில் நேரம் கிடைக்கவில்லை. இன்று மாலைதான் என் அப்பாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஒரு குழந்தை பிறந்தது. இருவருக்கும் வேண்டிய பணிவிடைகள் செய்துவிட்டு, துணிகளை துவைக்க இப்போது வந்தேன்” என்றாள் அவள்.

“என்ன உளறுகிறாய்?” என்றார் அக்பர் கோபத்துடன். “நான் உளறவில்லை பிரபு! உண்மையைத்தான் சொல்கிறேன். இன்று மாலைதான் என் அப்பாவுக்குக் குழந்தை பிறந்தது” என்றாள் அவள். “முட்டாளே! மறுபடியும் பைத்தியம் போல் உளறாதே! உன் அம்மாவுக்குக் குழந்தை பிறந்தது என்று சரியாகச் சொல்!” என்று சீறினார் அக்பர். “இல்லை பிரபு! என் அப்பாவுக்குத்தான் குழந்தை பிறந்தது” என்று தான் சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னாள் அவள். “உனக்கு என்ன பைத்தியமா? உன் அப்பாவுக்கு எப்படி குழந்தை பிறக்கும்?” என்று எரிமலை போல் அக்பர் வெடித்தார்.

“இதில் கோபப்பட என்ன இருக்கிறது பிரபு? காளை மாடு பால் கொடுக்க முடியும் என்றால், ஓர் ஆணினால் குழந்தையைப் பெற முடியாதா?” என்று அவள் கேட்டவுடன், அக்பருக்கு ‘சுரீர்’ என்று உறைத்தது. உடனே, அவருக்கு விளங்கிவிட்டது. அவர் கோபம் எல்லாம் குறைந்து விட்டது.
“பெண்ணே! நீ பீர்பாலின் மகளா?” என்று அக்பர் கேட்டார். “ஆம், பிரபு!” என்றாள்.
“பீர்பாலைத் தவிர வேறு யாருக்கு இப்படியெல்லாம் யோசனை தோன்றும்… பெண்ணே! பீர்பாலை வீணாக காளை மாட்டின் பாலைத் தேடி அலையவேண்டாம் என்று சொல்! அதை நீயே கொடுத்து விட்டதாக சொல்!” என்ற அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பை ஒன்றை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அவள் அவரை வணங்கி விட்டு வீடு சென்றாள்.

அவள் சென்றபின் அக்பர் தனக்குத்தானே நினைத்தக் கொண்டார். “சே! இந்த ஜாலிம்கான் பீர்பாலை சிக்க வைக்க வேண்டும் என்றே காளை மாட்டின் பால் கொண்டு வரச் செல்லி என்னையும் முட்டாள் ஆக்கி விட்டான்” ஒரு பொண்ணின் முன்னால் மூக்கு உடைபட்டது தான் மிச்சம்” என்று எண்ணிய அக்பருக்கு அவன் மீது கோபம் கோபமாய் வந்தது.
மறுநாள் ஜாலிம்கான் வாழ்நாளில் கேட்டிராத வார்த்தைகளால் அக்பரிடம் திட்டு வாங்கினார்.

அக்பர் பீர்பால் கதைகள் – திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி?

அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால் அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தார். அவருடைய மணிக்கட்டு வீங்கியிருந்தது. அதைப் பார்த்த பீர்பால் சிரித்தார்.

 

“நான் வலியால் துடிக்கையில் உனக்கு சிரிக்கத் தோன்றுகிறதா?” என்று அக்பர்.
“மன்னிக்கவும் பிரபு! நான் ஏன் சிரித்தேன் என்று சொல்கிறேன்” என்ற பீர்பால் தோட்டத்திலிருந்த எலுமிச்சைச் செடிகளிலிருந்து ஒரு பழம் பறித்து வந்து அதை வெட்டி, அதன் சாறை வீக்கத்தில் தடவித் தேய்த்தார். வலி சற்றுக் குறைந்தாற்போல் போல் தோன்ற, அக்பர் “எலுமிச்சைச் சாறை குளவிக் கொட்டின இடத்தில் தடவினால் வலி குறையும் என்பது இன்றுதான் புரிந்தது” என்றார்.

 

“உங்களுக்கு அந்த உண்மை இன்று புரிந்தது. எனக்கு இன்று மற்றொரு உண்மை புரிந்தது. அதனால்தான் சிரித்தேன்” என்றார் பீர்பால். “அது என்ன?” என்று அக்பர் கேட்டார்.

“பிரபு! உங்களைக் கண்டு நாங்கள் அனைவரும் பய, பக்தியுடன் மரியாதை செய்கிறோம். ஆனால் ஒரு அற்பக் குளவி தைரியமாக உங்களிடம் பறந்து வந்து உங்களைக் கொட்டிவிட்டு சென்று விட்டதே! அதை நினைத்துத் தான் சிரித்தேன்” என்றார் பீர்பால்.

 

“நீ சொல்வது உண்மைதான்! என்னுடைய அதிகாரம் மனிதர்களிடம்தான் செல்லும். குளவி, வண்டு, எறும்பு ஆகிய சிறிய ஜீவராசிகள் கூட என்னைக் கண்டு பயப்படுவதில்லை. ஏனெனில் அவை தங்களுக்கு ஏதாவது ஆபத்து என்று தோன்றினால் மட்டுமே தங்கள் தற்காப்புக்காக சண்டையிடுகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே ஆசை, பொறாமை, கோபம் ஆகிய உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, மற்றவர்களைத் துன்புறுத்துகிறான். அவ்வாறு குற்றமிழைப்பர்களை தண்டிப்பதுதான் என் கடமை?” என்றார்.

 

அவ்வாறு உரையாடிக் கொண்டே தோட்டத்தின் சிறிய கதவருகே வந்தனர். பிறகு கதவைத் திறந்து கொண்டு அரண்மனைக்குச் செல்ல நினைக்கையில் கதவருகே ஒரு பொற்கொல்லன் நின்று கொண்டு இருந்தான். அக்பரைக் கண்டதும் பணிவுடன் வணங்கினான்.
“யார் நீ?” என்றார் அக்பர்.
“நான் பொற்கொல்லன் பஜ்ரிதாஸ்!” என்றான் அவன்.
“உனக்கு என்ன வேண்டும்?” என்று அக்பர் கேட்டார்.

“ஐயா, என் வேலைக்குத் தேவையான அனைத்துத் தங்கத்தையும் ஓர் இரும்பு அலமாரியில் பத்திரமாக வைத்திருப்பது என் வழக்கம்! பூட்டியிருக்கும் அந்த அலமாரியின் சாவி என்னிடம்தான் இருக்கும். நான் வேலையில் மும்முரமாக இருந்தால், என் பணியாளர்கள் நால்வரில் ஒருவனை அனுப்பி, அலமாரிப் பூட்டைத் திறந்துத் தங்கத்தை எடுத்து வரச் சொல்வேன். என்னுடைய நான்கு பணியாளர்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்” என்றான்.

 

“சரிதான்! அப்படியிருந்தும் உன்னுடைய அலமாரியிலிருந்து தங்கம் திருட்டுப் போய்விட்டதாக்கும்! உன் பணியாளர்களில் ஒருவன்தான் அதைத் திருடியிருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் அக்பர்.
“ஆம் பிரபு!” என்றான் பஜ்ரிதாஸ்.
“திருட்டுப் போனத் தங்கத்தின் மதிப்பு என்ன?” என்று அக்பர் கேட்டார்.
“பத்து தங்கக் கட்டிகள்! அவற்றின் விலை ஒரு லட்சத்திற்கும் மேல்!” என்றான் பஜ்ரிதாஸ்.
“கவலைப்படாதே! மூன்றே நாளில் உன் தங்கம் உனக்குத் திரும்பிக் கிடைத்து விடும்” என்று சொல்லிவிட்டு அக்பர் நகர்ந்தார். “பிரபு? குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை யாரிடம் தரப் போகிறீர்கள்?” என்று பீர்பால் கேட்டார்.

“ஏன்? நகரக்காவல் தலைவர் இருக்கிறாரே.. அவரிடம்தான!” என்றார் அக்பர்.
திருடனைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை அக்பரிடமிருந்து ஏற்றுக்கொண்ட நகரக்காவல் தலைவர், உடனடியாக பஜ்ரிதாசின் நான்கு பணியாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார். அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சவுக்கால் அடித்து உடலை நாறாகக் கிழித்து விடுவதாக பயமுறுத்தி, உண்மையைக் கூறச் சொல்லி வற்புறுத்தினார்.
ஆனால் இரண்டு நாள்களாக அவர்களை அடித்து, உதைத்தும் அவர்கள் தாங்கள் நிரபராதி என்றே சாதித்தனர். இரண்டு நாட்களாகியும் தன்னால் உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடித்து, தங்கத்தை மீட்க முடியாமற் போனதை நினைத்து காவல்தலைவருக்கு பயம் உண்டாயிற்று. தன் தோல்வியை ஒப்புக்கொண்டால் சக்கரவர்த்தியின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர் கலங்கிப் பரிதவித்தார்.

 

திடீரென பீர்பாலின் ஞாபகம் வந்தது. “அட! இது முன்னமே ஏன் எனக்குத் தோன்றவில்லை? இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியவர் பீர்பால் ஒருவரே!” என்று சொல்லிக் கொண்டே, பொழுது விடிந்ததும் அவசரமாக பீர்பாலைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை பீர்பாலுக்கு விளக்கத் தொடங்கியவுடன், “இதைப்பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்றார் பீர்பால்.

 

“நீங்கள்தான் எப்படியாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்!” என்று காவல் தலைவர் கெஞ்ச, பீர்பால் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு, காவல் தலைவரை நோக்கி, “எனக்கு மூன்று அடி நீளமுள்ள குச்சிகள் நான்கு தேவைப்படுகிறது. அவற்றை நீங்கள் ஏற்பாடு செய்து சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லுங்கள். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வந்து அந்த நால்வரையும் சந்திக்கிறேன்” என்றார்.

பிறகு பீர்பால் சிறைச்சாலையை அடைந்த போது, காவல்தலைவர் குச்சிகளைக் கொடுத்து, அந்த நான்கு கைதிகளையும் அழைத்து வந்தார். வாடி, வதங்கிப் போய் அவர்கள் பீர்பால் முன் நின்றனர். அவர்களை நோக்கிய பீர்பால், “உங்கள் எசமானர் பஜ்ரிதாசின் அலமாரியிலிருந்து பத்துத் தங்கக் கட்டிகள் காணமற் போய்விட்டன. உங்களில் ஒருவர் தான் திருடியிருக்க வேண்டும்என அவர் புகார் செய்து இருக்கிறார்” என்றார்.
உடனே, அவர்களில் ஒருவன், “அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன் நான்! ஒருபோதும் அவருக்கு துரோகம் நினைக்க மாட்டேன்” என்றான். இரண்டாமவன், “நேர்மையை உயிராக மதிப்பவன் நான்! இத்தகைய ஈனச்செயலை கனவில் கூட என்னால் நினைக்க முடியாது” என்றான். “நான் இருபது ஆண்டுகளாக அவரிடம் வேலை செய்கிறேன். பணத்துக்கு ஆசைப்படுபவன் நானில்லை” என்றான் மூன்றாமவன். “நாயை விட நன்றி விசுவாசமானவன் நான்!” என்றான் நான்காமவன்.

 

“நீங்கள் சொல்வதை நம்புகிறேன். உங்களுக்காக இந்த மந்திரம் ஜெபித்த குச்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஆளுக்கொன்றாகக் கொடுத்த பீர்பால், “யார் திருடினவனோ, அவன் கையிலுள்ள குச்சி இரவில் அவன் உறங்கும்போது மூன்று அங்குலம் வளர்ந்து விடும். உங்களை நாளைக்காலை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் விடைபெற்றார்.

 

மறுநாள் பீர்பால் சிறைச்சாலைக்கு வந்ததும், அந்த நால்வரும் தங்களுடைய குச்சிகளுடன் வந்தனர். முதலில் ஒருவனுடைய குச்சியை வாங்கிக் கொண்ட பீர்பால் அதன் நீளத்தை சோதித்தார். பிறகு வரிசையாக அனைவரது குச்சியையும் பரிசோதித்தார். பரிசோதனை முடிந்ததும் மூன்றாவதாகக் குச்சியைத் தந்த ஆளை நோக்கி, “நீதான் தங்கத்தைத் திருடியவன்” என்றார் பீர்பால். அவன் உடனே அதை பலமாக மறுத்தான். ஆனால் திருப்பித் திருப்பிக் கேட்டபின் தான் திருடியதாக ஒப்புக் கொண்டான்.

 

“நீதான் திருடினாய் என்று எனக்குத் தெரிந்து விட்டது. ஏனெனில், உண்மையிலேயே நீ திருடியிருந்ததால், உனக்குக் கொடுத்த மந்திரக்குச்சி மூன்று அங்குலம் அதிகமாக வளர்ந்து விடும் என்று நம்பிக்கொண்டு, நேற்றிரவு சிறையில் மூன்று அங்குல நீளத்துக்கு உன் குச்சியை வெட்டி விட்டாய். ஆனால் குச்சியில மத்திரமும் இல்லை, மாயமும் இல்லை?
இதோ பார்! உன்னுடையது மற்ற குச்சிகளை விடக் குட்டையாக இருக்கிறது” என்று குச்சியைக் காண்பித்தார்.
காவலர்கள் அவனிடமிருந்து பிறகு தங்கத்தை மீட்டு பஜ்ரிதாசிடம் கொடுத்தனர். திருடியவன் சிறைக்கு அனுப்பப்பட்டான். பிறகு, காவல் தலைவர் தர்பாருக்கு வந்த அக்பரிடம் உண்மையான திருடனைக் கண்டுபிடிப்பதற்கு பீர்பால்தான் அவருக்கு உதவினார் என்பதைக் கூறினார்.“அட! பீர்பாால்! உனக்கு துப்பறியும் வேலை கூடத் தெரியும் என்று எனக்கு இதுநாள்வரை தெரியாதே!” என்று பாராட்டிய அக்பர், தன் கையிலிருந்த தங்க வளையம் ஒன்றைக் கழற்றி பீர்பாலுக்குப் பரிசாகத் தந்தார்.

அக்பர் பீர்பால் கதைகள் – அறிவுப் பானை

வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர்.

 

சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின் அமைதிக்காக, முகலாயர்களின் அடிமைகளாகத் திகழ்வது அவமானம் என்றும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். அதற்கு வீரசிம்மன், “நானும் சுதந்திரத்தை விரும்புகிறேன். ஆனால் அதைப் பெறுவதற்காக, இரத்த ஆறு ஓடுவதை நான் விரும்பவில்லை, முகலாயர்கள் மிகப்பலம் பொருந்தியவர்கள். அவர்களுடைய படைப்பலத்திற்கு முன் குறுநல மன்னனாகிய என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்றார்.

 

அதற்கு அவர்கள் “படைப்பலத்தை மட்டும் ஏன் ஒப்பிடுகிறீர்கள்? நம்முடைய அறிவினால் முகலாயர்களை வெற்றி கொள்ள முடியாதா?” என்றனர். “நம்மிடம் அத்தகைய அறிஞர்கள் இருக்கிறார்களா?” என்றார் வீரசிம்மன்.
“ஏன் இல்லாமல்?” என்றனர் இளைஞர்கள்.

 

“ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்! அக்பரின் சபையில் உள்ள அறிஞர்களைப் போல் வேறு எங்குமே காண முடியாது” என்றார். “அவர்களுடைய அறிவுத்திறமையை சோதித்துப் பார்த்து விடலாமே!” என்று சவால் விட்ட ஓர் இளைஞன் “நான் ஒரு சோதனை சொல்கிறேன். நீங்கள் அக்பரிடம் அவருடைய தர்பாரிலிருந்து அறிவு நிரம்பிய ஒரு பானையை அனுப்பச் சொல்லி வேண்டுங்கள்” என்றான். “அறிவு நிரம்பிய பானையா? அது ஏன்? தண்ணீரைப் பிடிப்பதுபோல் பானையில் அறிவை நிரப்ப முடியுமா?” என்று கேட்டார் மன்னர்.

“அது இயலாது என்று நினைக்கிறீர்களா?” என்றான் அவன்.
“ஆம்! அது முடியாத ஒன்று!” என்றார் மன்னர்.
“இயலாததை செய்து முடிப்பவன்தான் அறிவாளி! அக்பரின் தர்பாரில் உலகிலேயே சிறந்த அறிவாளிகள் உள்ளனர் என்று சொன்னீர்களே! அத்தகைய தலைசிறந்த அறிவாளிகள் நாங்கள் கேட்டதை செய்யட்டுமே!” என்று திமிராகக் கேட்டான் அவன். மன்னரும் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக் கொண்டார்.

 

சில நாள்கள் கழித்து, வீரசிம்மன் நன்கு பேசவல்ல ஒரு தூதனை கை நிறைய வெகுமதிகளுடன் அக்பரிடம் அனுப்பினார். வீரசிம்மனின் தூதன் அக்பரின் தர்பாரில் நுழைந்து அவரை வணங்கி விட்டு, தனது மன்னர் கொடுத்தனுப்பியிருந்த வெகுமதிகளை அக்பரிடம் சமர்ப்பித்துவிட்டு, மன்னரின் வாழ்த்துகளையும் தெரிவித்தான்.
“வீரசிம்மன் நலமாக இருக்கிறாரா?” என்று அக்பர் வினவினார். “சக்கரவர்த்தியின் தயவு இருக்கும் போது எங்கள் மன்னரின் நலத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா!” என்றான் தூதன் பணிவுடன்.

 

“உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவிப்பாய்!” என்ற அக்பர், “மன்னரிடமிருந்து எனக்கு ஏதாவது செய்தி உண்டா?” என்று கேட்டார். “பிரபு! உங்கள் தர்பாரில் பல அறிஞர்கள் நிறைந்துள்ளனர். அதனால் அறிவு நிரம்பிய ஒரு பானையை தயவு செய்து நீங்கள் கொடுத்தருளும் படி எங்கள் மன்னர் வேண்டிக் கொள்கிறார்“ என்றான் தூதன். அதைக் கேட்டு தர்பாரில் இருந்தவர் வியப்படைந்தனர்.
அறிவை எப்படிப் பானையிலிட்டு நிரப்ப முடியும்? ஆனால் அக்பர் அதைப் பற்றி தீவிரமாக சிந்திக்கவில்லை. தன் தர்பாரில் ஏராளமான அறிஞர்கள் இருக்கையில், இந்த விஷயத்தை அவர்களே கவனித்துக் கொள்வார்கள் என்று விட்டு விட்டார். அதனால் அவர் வீரசிம்மன் விரும்பிய பொருள் ஒரு மாதத்திற்குள் அனுப்பப்படும் என்று தூதனிடம் சொன்னார்.

 

“பிரபு! உங்கள் கருணைக்கு எல்லையே இல்லை! உங்களுடைய ஆதிக்கத்திலிருப்பதை எண்ணி எங்கள் மன்னர் பெருமைப்படுகிறார்” என்று தூதனும் சாமர்த்தியமாக அக்பர் மனம் குளிரும்படி பேசிவிட்டு, திரும்பிச் சென்றான்.
அவன் சென்ற பிறகு, அக்பர் தன் தர்பாரிலிருந்த அறிஞர்களை நோக்க அவர்களுள் ஒருவர் “பிரபு! வீரசிம்மன் கேட்டிருப்பதை கொடுக்க முடியவே முடியாது” என்றார். “முடியாதது என்று ஒன்றுமே கிடையாது. அதைக் கொடுத்தே ஆக வேண்டும்” என்று அக்பர் கோபத்துடன் கூறியதும், அனைவரும் பயத்தினால் ஒன்றும் பேசாமல் இருந்து விட்டனர்.
“பிரபு!” என்று மெதுவாக அழைத்தவாறே எழுந்த பீர்பால், “எனக்கு ஒரு பதினைந்து நாள் அவகாசம் கொடுங்கள். இந்த சவாலை நான் சமாளிக்கிறேன்” என்றார்.

“நிச்சயமாக இதை வெற்றிகொள்ள முடியுமா?” என்று அக்பர் கேட்டார்.
“நான் எப்போதாவது சொல்லிவிட்டு செய்யாமல் இருந்திருக்கிறேனா?” என்று பீர்பால் திருப்பிக் கேட்டதும்,
“நல்லவேளை! என்னுடைய தர்பாரில் நீ ஒருத்தனாவது அறிவாளியாக இருக்கிறாயே!” என்று பீர்பாலைப் புகழ்ந்து விட்டு மற்றவர்களை ஏளனத்துடன் பார்த்தார்.

 

அன்று மாலை வீடு திரும்பிய பீர்பால், தன் தோட்டத்தை நன்றாகப் பார்வையிட்டார். மற்ற காய்கறிச் செடிகளுடன், ஒரு பரங்கிக் கொடியையும் பார்த்தார். அதில் பல பூக்கள், பிஞ்சுகள், காய்கள் இருந்தன. உடனே வீட்டிற்குள் சென்ற அவர் ஒரு காலிப் பானையை எடுத்து வந்தார். அதைத் தரையில் வைத்து விட்டு, பரங்கிக் கொடியில் பிஞ்சுடன் கூடிய ஒரு பகுதியை அந்தப் பானையினுள் நுழைத்து பரங்கிப் பிஞ்சு பானைக்குள் இருக்குமாறு செய்துவிட்டு, கொடியின் நுனியை வெளிப்புறம் நோக்கி இழுத்து விட்டார். பார்ப்பதற்கு, பறங்கிக் கொடி பானையினுள் புகுந்து, பிறகு வெளியே வந்தது போல் இருந்தது.

 

“சரியாக இருக்கிறது!” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்ட பீர்பால், தன் மனைவியிடமும், தோட்டக்காரனிடமும் அந்தப் பானையையும், பரங்கிக் கொடியையும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கச் சொன்னார். தினமும் அவர் தோட்டத்திற்கு வந்து பானையினுள் இருந்தப் பரங்கிப் பிஞ்சைப் பார்வையிட்டு வந்தார். பத்து நாள்களில் பிஞ்சு காயாகிப் பெருத்தது. அப்படியே விட்டு வைத்தால் காய் இன்னும் பெரிதாக வளர்ந்து பானையை உடைத்து விடும் என்ற நிலை வந்த போது, பீர்பால் பானைக்குள் சென்று, வெளியே வந்த கொடியின் பாகங்களைக் கத்தியால் அறுத்து விட்டார். இப்போது பானைக்குள் நன்கு வளர்ந்த பறங்கிக்காய் மட்டுமே இருந்தது. பானையின் வாயினை துணியினால் இறுக மூடி அடைத்த பீர்பால் பின்னர், அதை தர்பாருக்கு எடுத்துச் சென்றார்.

 

அக்பரிடம் பானையை அளித்த பீர்பால், “பிரபு… இதுதான் மன்னர் வீரசிம்மன் விரும்பிய அறிவுப்பானை! இதை அவரிடம் அனுப்பி வையுங்கள்” என்றார். அதைக் கண்ட அக்பர், “என்ன, பீர்பால்! விளையாடுகிறாயா? பானையில் எப்படி அறிவை நிரப்ப முடியும்? இதற்குள் உண்மையில் என்ன இருக்கிறது?” என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.
“பிரபு, அறிவுப்பானைக்குள் அறிவுதான் இருக்கும். வீரசிம்மன் பானைக்குள் இருக்கும் அறிவை எடுத்துக் கொண்டு, பானையை திருப்பி நமக்கு அனுப்பி விட வேண்டும். அதை வெளியில் எடுக்கும் போது அது நசுங்கக் கூடாது. பானையும் உடையக் கூடாது. ஒருக்கால் பானை உடைந்து போனால், வீரசிம்மன் பத்தாயிரம் பொற்காசு அபராதம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் அவருக்குத் தெரிவித்து விடுங்கள்” என்றார் பீர்பால்.

“என்ன? அபராதம் பத்தாயிரம் பொற்காசுகளா?” என்று அக்பர் கேட்டார்.

“அறிவின் விலை மிகவும் அதிகம் பிரபு” என்றார் பீர்பால்.

அவ்வாறே பானையை தூதன் மூலம் கொடுத்தனுப்பியபின், ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர், “பீர்பால்! பானைக்குள் என்னதான் வைத்திருக்கிறாய் என்று எனக்கு கூறு” என அவசரப்படுத்தினார்.
உடனே பீர்பால் தான் செய்ததைச் சொன்னார். “பிரபு, வீரசிம்மன் தனது குறும்புத்தனமான கேள்விக்கு சரியாக மூக்குடைப்படுவார். பானைக்குள் இருக்கும் பரங்கிக்காயை அவரால் பானையை உடைக்காமல் முழுதாக வெளியே எடுக்க முடியாது. பரங்கிக்காயை அறுத்து வெளியே எடுப்பதும் கூடாது. அதனால் அவர் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

 

“அடப்போக்கிரி!” என்று பீர்பால் முதுகில் செல்லமாகத் தட்டினார் அக்பர். பானையைப் பெற்ற வீரசிம்மன் பானையினுள் ஒரு பெரிய பரங்கிக்காய் இருப்பதைப் பார்த்தார். கூடவே அந்த இரண்டு நிபந்தனைகளையும் கேட்டார். பரங்கிக்காயை அறுக்கவும் கூடாது. அதே சமயம் முழுதாக வெளியே எடுக்க முயன்றால் பானை உடையும். உடனே அந்த அதிகப் பிரசங்கி இளைஞர்களை அழைத்த மன்னர், அறிவுப்பானையை அவர்களிடம் காட்டி விளக்க, அவர்கள் முகத்தில் அசடு வழிந்தது

“உங்கள் பேச்சைக் கேட்டு நானும் முட்டாள் ஆனேன். முன்னமே சொன்னேன், அக்பரின் சபையில் அறிஞர்களுக்குப் பஞ்சமில்லை என்று. என் பேச்சை நீங்கள் கேட்கவில்லை. அபராதத் தொகையை ஈடுகட்ட, நீங்கள் காலம் முழுவதும் என்னிடம் சம்பளமின்றி உழைக்க வேண்டும்” என்றார்.

 

பிறகு தலைவிதியை நொந்து கொண்டு, அபராதத் தொகையை அக்பருக்கு அனுப்ப, அவர் அதில் பாதியை பீர்பாலுக்கு வழங்கினார்.

அக்பர் பீர்பால் கதைகள் – முத்திரை மோதிரத்தின் மகிமை

அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர். வழக்கப்படி அவர் ஒருநாள் அக்பரை சிரிக்க வைத்தபோது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்திவாய்ந்தவனாக இருப்பதன் காரணம் உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே!” என்று விமரிசித்தார்.

 

“பிரபு! அதுதான் உங்களுக்கும், எனக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள் ஒரு சக்ரவர்த்தியின் பிள்ளை என்ற ஒரே காரணத்தினால் எந்த சாதனையும் புரியாமல் சக்ரவர்த்தி ஆகிவிட்டீர்கள். ஆற்றல் மிக்கவராக இருக்கிறீர்கள். ஆனால், என்னுடைய பெருமைக்கும், பெயருக்கும் காரணம் திறமை மட்டுமே! உங்களைப் போல் பிறப்பினால் அடையவில்லை. உழைத்துப் பெற்றவன் நான்!” என்று பெருமை பேச அக்பருக்கு இலேசாகக் கோபம் வந்தது. “என்ன உளறுகிறாய்?” என்று கேட்டார் அக்பர்.

 

“சரியாகத்தான் சொல்கிறேன். என் மூளையை யாரும் என்னிடம் இருந்து திருட முடியாது? அதனால் என் சக்தியும், பெருமையும் என்றென்றும் இருக்கும். ஆனால், உங்கள் மகுடமும், முத்திரை மோதிரமும் உங்களிடம் இருக்கும் வரைதான் உங்களுக்கு சக்தி உண்டு. அவற்றைப் பறித்து விட்டால் நீங்கள் செல்லாக் காசு! உங்களுக்கு மதிப்பே கிடையாது” என்றார் பீர்பால்.
சினம் தலைக்கேறிய அக்பர், “நீ சொல்வதை நிரூபித்துக் காட்டு! இல்லை என்றால் உனக்கு மரண தண்டனை!” என்று பீர்பாலைப் பார்த்து சீறினார். அன்றிரவு பீர்பால் படுக்கையில் படுத்தவாறே அக்பரின் சவாலை சமாளிப்பது எப்படியென்று சிந்தனை செய்தார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

அன்றிரவு பீர்பால் படுக்கையில் படுத்தவாறே அக்பரின் சவாலை சமாளிப்பது எப்படியென்று சிந்தனை செய்தார். கடைசியில் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. அடுத்த நாள் வழக்கப்படி பீர்பால் தர்பாருக்கு வந்தார். அக்பர் வழக்கப்படி பீர்பாலுடன் பேசினாலும், அன்று அவர் இயல்பான பிரியத்துடன் பேசவில்லை. தான் நேற்று கூறியது அவருடைய மனத்தை பாதித்து இருக்கிறது என்று பீர்பால் உணர்ந்து கொண்டார்.

 

இரண்டு வாரங்கள் சென்றன. வாரத்திற்கு ஒருமுறை அக்பர் இரவு நேரத்தில் மாறுவேடமணிந்து தனியாக நகர்வலம் வருவது வழக்கம்! நாட்டில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது. மக்கள் மனநிறைவுடன் இருக்கின்றனரா என்றெல்லாம் நேரில் கண்டறியவே அவர் அவ்வாறு செய்வார்.

 

மாறுவேடமணிந்து செல்லும்போது, அக்பரை யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு அஷ்ரப் எனும் ஒப்பனைக் கலைஞர் மிக அழகாக வேடம் அணிவிப்பார். அஷ்ரப்பும், பீர்பாலும் நண்பர்கள். ஒவ்வொரு முறை அக்பருக்குப் புதிய வேடம் அணிவிக்கும்போது அஷ்ரப் பீர்பாலைக் கலந்து ஆலோசிப்பார். இந்த வாரத்தில் இந்த மாறுவேடம் அணியப்போகிறார் என்பதை பீர்பால் முன்கூட்டியே ஊகித்து விடுவார். அக்பருக்கு எப்படி ஒப்பனை செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற உத்திகள் பீர்பாலுக்கு நன்றாகத் தெரியும். அவற்றை அவர் அஷ்ரப்புக்குச் சொல்லிக் கொடுப்பார்.

 

ஒருநாள் மாலை அஷ்ரப் பீர்பாலைத் தேடி வந்தார். “இன்றிரவு அக்பர் மாறுவேடம் அணியப்போகிறார். அவருக்குப் பிச்சைக்காரர் வேடம் போட்டு விடலாமா?” என்று பீர்பாலைக் கேட்டார்.

 

“தாராளமாகச் செய்! சக்ரவர்த்தியையை பிச்சைக்காரனாக்கும் சக்தி உனக்குத்தான் உண்டு” என்ற பீர்பால் தொடர்ந்து, “அவருக்கு ஒட்டுப்போட்ட சட்டையும், பைஜாமாவும் அணிவிப்பாய். பழைய, கிழிந்த துணியினால் தலைப்பாகை செய்! தேய்ந்து போன செருப்புகளைக் கொடு. முகத்திலும், கழுத்திலும், கைகளிலும் கறுப்பு வண்ணக் கோடுகள் போட்டு, சாயம்பூசி சுருங்கிய தோலும், வெயில்பட்டுக் கன்றிய முகமுமாக இருப்பதுபோல் செய்!” என்றார்.

அஷ்ரப் பீர்பால் கூறிய அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்டபின் அங்கிருந்து அகன்றார். “நான் நினைப்பது நடக்கும் என்று தோன்றுகிறது” என்று பீர்பால் புன்னகைத்தார். பிறகு தன் மனைவியை அழைத்துத் தனக்கும் பிச்சைக்காரன் வேடம் அணிவிக்க வேண்டினார்.

 

“இந்த நேரத்தில் உங்களுக்கு எதற்குப் பிச்சைக்காரன் வேடம்?” என்று அவள் கேட்டாள்.

 

“ஊர் முழுவதும் சுற்றி பிச்சை எடுக்கப் போகிறேன். அப்போது தான் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை எத்தனை கஷ்டமானது என்று உணர முடியும்” என்றார் பீர்பால்.

 

“நீங்களும், உங்கள் யோசனையும்!” என்று அவள் ஏளனமாகப் பேசினாலும், பீர்பாலுக்குப் பிச்சைக்காரன் வேடம் போட்டுவிட மும்முரமாக முயன்றாள். பழைய, ஒட்டுப்போட்ட துணிகளைத் தேர்ந்தெடுத்து அணிவித்தாள். பழைய, பிய்ந்து போன செருப்புகளை அணிவித்தப்பின்-, முகத்திலும், கழுத்திலும் சாயங்கள் பூசி அசல் பிச்சைக்காரனைப் போல் தோற்றமளிக்குமாறு செய்தாள். வேடம் நன்றாகப் பொருந்தி இருக்கிறது என்று திருப்தி அடைந்தபின் அவரை அனுப்பி வைத்தாள்.

 

வீட்டை விட்டுப் பிச்சைக்காரன் வேடத்தில் வெளியேறிய பீர்பால் நேராக அரண்மனையை நோக்கி நடந்தார். அரண்மனை வாயிலில் இருந்து ஒதுங்கி ஒரு மறைவான இடத்தில் நின்று கொண்டு காத்து இருந்தார். சிறிது நேரத்தில் அரண்மனை வாயிற்கதவுகள் திறக்க ஒரு பிச்சைக்காரன் வெளியே வந்தான். அவனை காவலர்கள் வணங்கினர்.

 

‘பிச்சைக்காரன் உண்மையில் யார் என்று இவர்களேக் காட்டிக் கொடுத்துவிட்டனர்’ என்று எண்ணிய பீர்பால் “ஏய், பிச்சைக்காரா? உன்னுடன் நானும் சேர்ந்து கொள்ளட்டுமா?” என்று கேட்டார். “யாரடா நீ?” என்று குரலில் அதிகாரம் தொனிக்க பிச்சைக்காரன் வேடத்திலிருந்த அக்பர் பீர்பாலைப் பார்த்துக் கேட்டார்.

 

“நானும் உன்னைப் போல் பிச்சைக்காரன்தான்” என்று பீர்பால் சொல்ல, “நான் பிக்சைக்காரன் இல்லை” என்று அக்பர் மறுத்தார்.

 

“பின்னே என்ன, நீ சக்ரவர்த்தியா?” என்று பீர்பால் வேண்டும் என்றே விஷமமாகக் கேட்க, “ஆம்! நான் அக்பர்! மாறுவேடத்தில் இருக்கிறேன்” என்றார் அக்பர்.

 

“யாரிடம் கதை விடுகிறாய்? அக்பர் நீதான் என்றால் உன் முத்திரை மோதிரம் எங்கே?” என்று பீர்பால் வம்பு செய்தார்.
“என்னிடம் முத்திரை மோதிரம் இருக்கிறது. ஆனால், அதை உன்னிடம் நான் ஏன் காட்ட வேண்டும்?” என்று அக்பர் கேட்டார்.
“இல்லையானால் நீ சொல்வதை எப்படி நம்புவது? நானும் உன்னைப் போல் பிச்சைக்காரன்! அந்த உரிமையில் கேட்கிறேன்” என்றார் பீர்பால்.

“சந்தேகமிருந்தால் இதோ பார்!” என்று முத்திரை மோதிரத்தை தன் விரலில் இருந்து கழற்றி அக்பர் காட்டினார்.
“அது உண்மையா இல்லை போலியா? கொடு, பார்க்கலாம்” என்று அதை சோதிப்பவர் போல் பீர்பால் அக்பரிடமிருந்து மோதிரத்தை வாங்கிக் கொண்டார்.

 

“அட! நிஜமாகவே இது சக்ரவர்த்தியின் முத்திரை மோதிரம்தான்! ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது?” என்று பீர்பால் ஆச்சரியப்படுபவர் போல் நடித்தார். “முட்டாளே! நான்தான் அக்பர் என்று சொல்கிறேனே! என்னிடமில்லாமல் வேறு யாரிடம் இது இருக்கும்?” என்று அக்பர் சீறிவிழ, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, அங்கு சில காவல் வீரர்கள் வந்தனர். “இவனைப் பிடித்துச் செல்லுங்கள்! இவன் ஒரு திருடன்!” என்று பீர்பால் கூச்சலிட அவர்கள் அக்பரைப் பிடிக்க வர, “முட்டாள்களா! நான்தான் சக்ரவர்த்தி!” என்று அக்பர் கூச்சலிட்டார்.

 

“அவன் பொய் சொல்கிறான். நான்தான் சக்ரவர்த்தி!” என்று சொல்லி பீர்பால் முத்திரை மோதிரத்தைக் காட்ட, அவர்கள் அக்பரைக் கைது செய்ய முயன்றனர்.“சரி சரி! அவனை விட்டுவிடுங்கள்” என்று பீர்பால் கூற அவர்கள் பீர்பாலுக்கு சலாம் செய்துவிட்டுச் சென்றனர்.

 

மறுநாள் அரண்மனையில் அக்பரைத் தனியாக சந்தித்த பீர்பால், “பிரபு! நேற்று உங்கள் மோதிரத்தைத் தொலைத்து விட்டீர்களா?” என்று கேட்க, அக்பர் ‘ஆம்’ என்று தலை அசைத்தார்.

 

“இதோ, உங்களுடைய மோதிரம்!” என்று பீர்பால் மோதிரத்தை அக்பரிடம் கொடுத்தார். உடனே நேற்றிரவு தான் மாறுவேடத்திலிருந்த போது தன்னுடன் தகராறு செய்து அவமானப்படுத்தியது பீர்பால்தான் என்று தெரியவர, அக்பர் கோபத்தில் துடித்தார்.

 

உடனே பீர்பால், “பிரபு! தயவு செய்து கோபப்படாதீர்கள்! உங்களை அவமானப்படுத்துவது என் நோக்கமல்ல! சில நாள்களுக்கு முன் நமக்குள் நடந்த விவாதம் நினைவிருக்கிறதா? என்னுடைய பெருமை, கௌரவம் ஆகியவை என் திறமையினால் பெற்றவை என்றும், உங்களிடம் அதிகாரச் சின்னங்களான மகுடமும், மோதிரமும் இருக்கும் வரைதான் உங்கள் அதிகாரம் செல்லுமென்றும் கூறினேன். அதை நீங்கள் நிரூபித்துக் காட்டச் சொன்னீர்கள், அதைத்தான் நான் நேற்று நிரூபித்துக் காட்டினேன். உங்களிடம் உள்ள முத்திரை மோதிரத்திற்குள்ள சக்தி உங்களுக்கில்லை என்று காட்டி விட்டேன்” என்றார்.

 

ஒரு கணம் கோபத்தில் துடித்தாலும், மறுகணமே அக்பருடைய கோபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. பலமாக சிரித்த அக்பர், “போக்கிரிப் பயலே! சாமார்த்தியமாக என்னை மடக்கி விட்டாயா? உன்னுடன் சவாலிட்டு ஜெயிக்க முடியுமா? நீ அதிபுத்திசாலி ஆயிற்றே!” என்று புகழ்ந்தவர், பீர்பாலுக்கு பொற்காசுகள் நிரம்பிய ஒரு பட்டுப் பையை பரிசளித்தார்.

அக்பர் பீர்பால் கதைகள் – முட்டாள்களின் கேள்விகள்

பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்றும்,அவமானப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆவலாயிருந்தனர். அவர்களில் சைதான்கான் முதன்மையானவர்.

 

சைதான்கான் தன்னைப்போலவே பீர்பாலின் மீது பொறாமை கொண்ட மற்றவர்களுடன் சேர்ந்து அவரை அவமானப்படுத்தத் திட்டங்கள் தீட்டினார். அவற்றுள் ஒரு திட்டம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் அதை செயலாற்ற முடிவு செய்தனர்.

மறுநாள் வழக்கம் போல் தர்பார் கூடியது. முக்கியமான அலுவல்கள் முடிந்தபின், அக்பர் சிம்மாசனத்தில் நன்றாக சாய்ந்து கொண்டு அமர்ந்தார். பொதுவாக அந்த சமயத்தில்தான் அவர் சபையோரிடமிருந்து அறிவுரைகள், யோசனைகள் ஆகியவற்றைக் கேட்பது வழக்கம்.

 

உடனே சைதான்கான் எழுந்து நின்று அக்பரை வணங்க, அவரும் பேசுவதற்கு அனுமதி தந்தார். உடனே சைதான்கான் பீர்பாலைப் பார்த்துக் கொண்டே, “சக்கரவர்த்தி! நமது பீர்பாலைப் போல் புத்திசாலி யாருமே இல்லை. அவருக்கு அபார மூளை!” என்று பீர்பாலுக்கு ஐஸ் வைத்தார்.

 

“உங்களுக்கு மட்டும் புத்தி குறைவா? நீங்களும் தான் புத்திசாலி!” என்றார் பீர்பால்.

 

“என்ன இருந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்திற்கு ஈடாகுமா?” என்ற சைதான்கான் சக்கரவர்த்தியை நோக்கி விஷமமாக, “சக்கரவர்த்தி! பீர்பாலே இத்தனை புத்திசாலியாக இருந்தால் அவருடைய தகப்பனார் இன்னும் எத்தனை புத்திசாலியாக இருப்பார்?” என்றார்.

 

அதைக்கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்த அக்பர், “அட, ஆமாம்! இது ஏன் எனக்குத் தோன்றவில்லை?” என்றார்.

“அப்படியானால் உடனே பீர்பாலின் தகப்பனாரை தர்பாருக்கு வரவழைப்போம் பிரபு!” என்றார் சைதான்கான். தன்னுடைய திட்டம் இத்தனை சீக்கிரம் பலிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அதைக் கேட்ட பீர்பால் திடுக்கிட்டார். சைதான்கான் ஆரம்பத்தில் இருந்தே தன்னைக் கவிழ்ப்பதற்காகத்தான் திட்டம் போட்டிருக்கிறான் என்று உணர்ந்தார். ஆனால் இவ்வளவு சாமர்த்தியமான திட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

 

பீர்பாலின் தகப்பனார் அவ்வளவாகப் படிப்பறிவு இல்லாதவர். கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி. அவரை தர்பாரில் அழைத்து வந்து, தாறுமாறாக அவரை கேள்விகள் கேட்டு, அவரை அவமானப்படுத்துவதன் மூலம், அவர்கள் தன்னை அவமானப்படுத்த நினைக்கிறார்கள் என்று பீர்பால் புரிந்து கொண்டார்.

 

இதற்கிடையில் அக்பர், “பீர்பால்! நீ உடனே கிராமத்திற்குச் சென்று உன் தகப்பனாரை அழைத்து வா!” என்று கட்டளை இட்டார்.  அக்பரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு ரதத்திலேறி உடனே பீர்பால் தன் தகப்பனார் வசித்து வந்த கிராமத்தை அடைந்தார். அவர் கால்களில் விழுந்து வணங்க, அவரும் தன் மகனை ஆசீர்வதித்தார். பிறகு இருவரும் உணவருந்தினர்.

 

இரவில் அவர் படுக்கைக்குச் செல்லுமுன், பீர்பால் தான் வந்த நோக்கத்தைத் தன் தந்தையிடம் மெதுவாக வெளியிட்டார். பரபரப்படைந்த அந்த முதியவர், “நானா… தர்பாருக்கு வருவதா! நான் படிக்காதவன்! தர்பாரில் சக்கரவர்த்திமுன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றோ, எப்படி பேசுவதென்றோ அறியாதவன்!” என்று பதைபதைத்தார்.

“கவலைப்படாதீர்கள்! எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றும், என்ன பேசவேண்டுமென்றும் நான் சொல்லித் தருகிறேன். தர்பாரில் நுழைந்ததும் சக்கரவர்த்தி முன் தலை தரையில் படும்படி விழுந்து சலாம் செய்யுங்கள். அவருடன் பேசும் போது, பணிவுடன் தலையை குனிந்தப்படி பதில் சொல்லுங்கள். யார் உங்களிடம் எது கேட்டாலும், தலையசைத்துப் புன்னகை மட்டும் செய்யுங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார் பீர்பால்.

 

“மௌனம் சர்வார்த்த சாதகம்” என்று கூறிய பெரியவர் சிரித்துக் கொண்டே, “அப்படியே ஆகட்டும்!” என்றார்.

 

“எல்லாம் முடிந்த பிறகு யாராவது உங்களைப் பார்த்து ஏன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லவில்லை என்று கேட்டால், உடனே நீங்கள்…” என்று பீர்பால் முதியவர் காதில் ரகசியமாகக் கூற, அவர் விழுந்து விழுந்து சிரித்தார். அதன்பிறகு பீர்பால் தன் தகப்பனாரை அழைத்துக்கொண்டு தலைநகரை அடைந்து, தர்பாருக்குள் நுழைந்தார்.
தர்பாரில் ஏற்கெனவே அக்பரும், மற்றவர்களும் வந்திருந்தனர். முதலில் பீர்பால் தனது தலை தரையில் படும்படி அக்பரை விழுந்து வணங்க, அவருடைய தகப்பனாரும் அப்படியே செய்தார். “வாருங்கள் பெரியவரே! உட்காருங்கள்!” என்று அக்பர் மரியாதையுடன் கூற முதியவரும் பீர்பாலுக்கருகே ஓர் இருக்கையில் அமர்ந்தார்.

அக்பர் பீர்பால் கதைகள் – செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்

சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.

 

மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன வேண்டும் என்று வினவியபோது, தான் சக்கரவர்த்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக அவள் கூறினாள். உடனே, ஒரு காவலன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தர்பாருக்குள் நுழைந்தான்.

 

சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம் செய்ய அவள் முயன்றபோது, அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல் இருக்க சைகை செய்தார். பிறகு, “அம்மா! உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அதற்கு அவள் அக்பரை நோக்கி, “பிரபு! நான் சுந்தரி பாய்! மிக ஏழையானவள்! என்றாள்.

 

அதற்கு அக்பர், “ஏழையாயினும், பணக்காரராயினும் என் முன் சமநீதி கிடைக்கும். உன் குறையென்ன சொல். தாயே!” என்றார்.

 

“பிரபு! ஓராண்டு முன் நான் பத்ரிநாத் யாத்திரை செல்ல விரும்பினேன். என்னிடமுள்ள பணத்தையெல்லாம் அதுவரை யாரிடமாவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமே என்று திட்டமிட்டேன். என்னுடைய உடைமைகளைப் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டு, வாயை இறுகக் கயிற்றினால் கட்டி விட்டேன்.

பிறகு, கயிற்றின் முடிச்சின் மேல் மெழுகை உருக்கி ஊற்றினேன். புறாச்சின்னம் உள்ள என் மோதிரத்தை உருகிய மெழுகில் அழுத்தி, முடிச்சை சீல் செய்தேன். சீலில் என் மோதிரத்தின் புறாச்சின்னம் தெளிவாகக் காணப்பட்டது” என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனவளை அக்பர், “அம்மா! நீ மிகவும் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு இருக்கிறாயே! சபாஷ்!” என்று பாராட்டினார்.

 

“என்ன பயன், பிரபு? அந்தப் பையை மிக கௌரவமான மனிதர் என்று கருதப்படும் குல்ஷாவிடம் நேரில் சென்று கொடுத்தேன். நான் பத்ரிநாத் சென்று வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கும்படி வேண்டினேன். அந்தசமயம் கூட யாருமில்லை. என்னுடைய பையை அவர் தன் கையினால் தொடக்கூட இல்லை.

 

என்னை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கு ஒரு குழியைத் தோண்டி, அதனுள் அந்தப் பையைப் போடும்படி சொன்னார். நானும் அப்படியே செய்ய, பிறகு அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார். பிறகு என்னிடம் பிரயாணம் முடிந்து வந்த பிறகு நானே குழியைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

 

“மிக உத்தமமான மனிதர் என்று மனத்தில் அவளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, நேரில் அவருக்கு நன்றி கூறித் திரும்பினேன். பிறகு பத்ரிநாத் யாத்திரை முடிந்தபின், நான் அவரிடம் செல்ல அதே இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். நான் குழியைத் தோண்டி, புதைத்து வைத்திருந்த என் பையை எடுத்துக் கொண்டேன். குலுக்கினால் உள்ளே நாணயங்கள் குலுங்கும் ஒலிகேட்டு திருப்தி அடைந்து வீட்டுக்குத் திரும்பினேன். பையின் கயிற்றின் முடிச்சும், அதில் நான் வைத்திருந்த சீலும் அப்படியே இருந்தது.

 

“ஆனால், என்னவென்று சொல்வது! வீட்டுக்கு வந்து, பையைத் திறந்து பார்த்தால் உள்ளே தங்க நாணயங்களுக்கு பதிலாக செப்பு நாணயங்கள் இருந்தன. குல்ஷா போன்ற கௌரவமான மனிதர் இப்படி ஓர் ஏழைக்கிழவியை மோசம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று கண்ணீர் வடித்தாள்.

பையிலுள்ள கயிற்றின் முடிச்சை அவிழ்க்காமல் உள்ளிருக்கும் பொற்காசுகளை எப்படி வெளியே எடுத்து செப்புக்காசுகளை நிரப்ப முடிந்தது என்று அக்பருக்குப் புரியவில்லை. அதேசமயம் கிழவி பொய் சொல்கிறாளோ என்று சந்தேகமும் எழ,அக்பர் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப் போய் பீர்பாலை நோக்க, பீர்பால் “பிரபு! இதை நான் தீர்த்து வைக்கிறேன்” என்றார். அக்பர் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டார்.

 

அடுத்து பீர்பால், “பிரபு! பொற்காசுகள் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பையினை நான் பார்க்க விரும்புகிறேன்!” என்று கூறி, அதைக் கிழவியிடமிருந்து வாங்கிக் கொண்டார். அதை மேலுங் கீழுமாகப் புரட்டி உற்று கவனித்த பீர்பாலின் புருவங்கள் நெரிந்தன. அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் புரிந்தது.

 

அக்பர் பீர்பால் கதைகள் – கதைகள் பொற்காசுகளை திருடிய செல்வந்தர்

 

உடனே கிழவியை நோக்கி, “அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார். “அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!” என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, “அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்” என்றார் அக்பர். கிழவியும் சலாம் செய்துவிட்டுச் சென்றாள்.

அதன்பிறகு தர்பார் கலைந்தது. அனைவரும் எழுந்து செல்ல, பீர்பால் பையைக் கையில் ஏந்திக் கொண்டு தீவிரமாக யோசித்தவாறே சென்றார். பீர்பால் மீது பொறாமை கொண்ட சிலர் இந்த வழக்கைத் தீர்க்க முடியாமல் பீர்பால் தோல்வியடைவார் என்றும், அதன்பிறகு அவர் தலை நிமிர்ந்து நடக்க முடியாதென்றும் பீர்பாலை கேலி செய்தவாறு சென்றனர்.

அவர்கள் தன்னை ஏளனம் செய்வதைப் பொருட்படுத்தாமல் பீர்பால் வீட்டுக்குச் சென்றார். கிழவி கூறியது உண்மை என்று அவருடைய உள்ளுணர்வு கூறினாலும், பையில் இருந்து குல்ஷா எப்படி பொற்காசுகளைத் திருடியிருக்க முடியும் என்பதை மட்டும் ஊகிக்கவே முடியவில்லை.

தன் மனைவி தன்னை புன்னகையுடன் வரவேற்றதைக் கூட அவர் கவனிக்கவில்லை. மௌனமாக சாப்பிட உட்கார்ந்தார். கைகள் உணவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டாலும், மனம் அந்த வழக்கைப் பற்றி யோசிப்பதிலேயே விரமாக ஆழ்ந்து இருந்தது.

திடீரென பீர்பாலுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று. உடனே தன் படுக்கை அறைக்குச் சென்ற அவர், விலையுர்ந்த படுக்கை விரிப்பு ஒன்றை எடுத்து, அதைக் கத்திரிக்கோலால் சரசரவெனக் கிழித்தார். அதைப்பார்த்த அவர் மனைவி ஓடி வந்து “ஐயோ, உங்களுக்குப் பைத்தியாமா? என்ன காரியம் செய்கிறீர்கள்?” என்று கூச்சலிட்டாள்.
“உஷ்” என்று அவளை அடக்கிவிட்டுத் தன் வேலையாளை அழைத்த பீர்பால், “இந்த படுக்கை விரிப்பு கிழிந்ததே தெரியாமல் அருமையாகத் தைக்க வேண்டும். அப்படிப்பட்ட திறமையான தையற்காரர் யாராவது தெரியுமா?” என்று கேட்க அவன், “ஐயா! மன்சூர் அலி எனும் தையற்காரன் ஒரு மேதாவி! அவனிடம் கொடுத்தால், கிழிந்ததே தெரியாமல் தைத்து விடுவான்” என்றான்.

உடனே அவனிடம் பீர்பால் அதைக் கொடுத்தனுப்பினார். மறுநாள் மாலை, வேலைக்காரன் கொடுத்த வேலையைக் கச்சிதமாக முடித்து விட்டுத் திரும்பினான். படுக்கைவிரிப்பைப் புரட்டிப் பார்த்ததும் அது முன்பு கிழிந்திருந்த இடத்தை பீர்பாலினால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நன்றாக மன்சூர் அலி தைத்திருந்தான்.

“ஆகா! மிகப் பிரமாதமாகத் தைத்து இருக்கிறானே! இந்த மன்சூர் அலியை நேரில் சந்தித்துப் பாராட்ட விரும்புகிறேன்” என்று கூறிவிட்டு, பீர்பால் தன் வேலைக்காரனுடன் மன்சூர் அலியின் கடைக்குச் சென்றார்.

“அடடா! பிரபு! நீங்களா! சொல்லிஇருந்தால் நானே உங்களைத் தேடி வந்திருப்பேனே!” என்று மன்சூர் அலி ஓடி வந்தான்.

“மன்சூர்! உன் கடைக்கு வந்து உன்னை நேரிலே பாராட்ட வேண்டும்என்று தோன்றியது. அதனால்தான் நானே இங்கு வந்து விட்டேன்” என்றார் பீர்பால். உங்கள் பாதம் என் கடையில் பட நான் என்ன பாக்கியம் செய்து இருக்கிறேன்!” என்று மன்சூர் உணர்ச்சிவசப்பட்டான்.

“இந்தா! நீ செய்த அருமையான வேலைக்குக் கூலி!” என்று பீர்பால் ஒரு தங்கக் காசைக் கொடுத்தார்.

“இருங்கள்! மீதிப்பணத்தைத் தருகிறேன்” என்று மன்சூர் தன் சட்டைப் பையைத் துழாவ, உடனே பீர்பால் அவனைத் தடுத்தப்படி “அவசியமில்லை நீயே வைத்துக் கொள் என்று அடுத்துக் கிழவியின் பையைக் காட்டினார்.

“மன்சூர்! இந்தப் பையை சமீபத்தில் நீ தையல் போட்டாயா?” என்று பீர்பால் கேட்டதும், அவன் அதை அடையாளம் கண்டு கொண்டான். “ஆம், பிரபு!” என்ற மன்சூர், பையில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி, “இந்த இடம் கிழிந்திருந்தது. இதைத் தையல் போட்டு சரி செய்தேன். ஒரு மாதம் முன்பாக குல்ஷா என்னிடம் இந்த வேலையைச் செய்யச் சொன்னார்” என்றான்.

பீர்பாலுக்குத் தேவையான தகவல் கிடைத்துவிட, அவர் மன்சூரிடம் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் தர்பார் கூடியது. பீர்பால் ஏற்பாடு செய்திருந்தபடி, கிழவியும், குல்ஷாவும் தர்பாருக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அக்பர் பீர்பாலை நோக்கி, “இந்தக் கிழவி கூறியது உண்மைதானா இல்லை வீணாக குல்ஷா மீது பழி சுமத்துகிறாளா?” என்று கேட்டார். “கிழவி கூறியதுதான் உண்மை” என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிய பீர்பால் தான் உண்மையைக் கண்டறிந்த விதத்தை விளக்கினார்.

அதைக் கேட்ட குல்ஷாவின் முகம் பீதியினால் வெளுத்துக் கை, கால்கள் நடுங்கின. கோபமடைந்த அக்பர், “குல்ஷா! பீர்பால் கூறுவது உண்மைதானா மோசடி செய்தது நீதானா? பொய் சொன்னால் உன்னை இங்கேயே கொன்று விடுவேன்” என்று சீற, குல்ஷா, “பிரபு! பீர்பால் கூறுவது உண்மையே! பேராசை என் கண்களை மறைத்துவிட்டது” என்று அழுதான்.

கிழவிக்கு அவள் பொற்காசுகள் திரும்பக் கிடைத்தன. பாவம், குல்ஷாவுக்குச் சிறையில் கம்பி எண்ண நேரிட்டது. பீர்பாலின் புத்திசாலித்தனத்தைக் கண்ட அக்பர், அவருக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். அனைவரும் வியந்து பாராட்டினர்.

அக்பர் பீர்பால் கதைகள் – விலைமதிப்புள்ள பொருள்

சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும்.

தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப் பொருட்படுத்தாமல் பல சமயங்களில் அவரைக் கிண்டல் செய்வதுண்டு. சிலசமயம் அவளுடைய கேலிப் பேச்சினால் கோபமடைந்தாலும், சக்கரவர்த்தி உடனே அவளிடம் சாந்தமாகி விடுவார் என்ற அனுபவம்தான் காரணம்!

ஒருநாள் மாலை நேரம், அக்பரும் பேகமும் அந்தப்புரத்தில் அருகருகே அமர்ந்திருந்தனர். சாளரத்தின் வழியே வீசிய தென்றல் காற்றில் மல்லிகை மணம் தவழ்ந்தது. அதை அக்பர் வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கிண்டல் செய்ய வேண்டுமென்று பேகத்திற்குத் தோன்றியது. “ஏது! மல்லிகை மணம் உங்களை மயக்குகிறதோ? என்னிடம் இல்லாதது மல்லிகையில் அப்படி என்ன இருக்கிறது?” என்று வாயைக் கிண்டினாள்.

“ஆம்! மல்லிகை மணம் என்னை மயக்குகிறது. அதிலுள்ள மயக்கம் உன்னிடம் இல்லை!” என்றார் திடீரென எரிச்சலுற்ற அக்பர். “என்னைத்தான் நேசிக்கிறீர்கள் என்று நினைத்தேன். என்னைவிட மல்லிகை மீதுதான் மோகமா?” என்று பேகம் மீண்டும் வம்புக்கிழுத்தாள்.

“ஆமாம்! உன் மீது மோகம் இருக்கவேண்டுமென்று என்ன அவசியம்?” என்றார் மேலும் கோபமுற்ற அக்பர்.

“மனைவி என்ற முறையில் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க எனக்கு உரிமை உண்டு!” என்று பதிலளித்தார் பேகம்.

“அந்த உரிமை யாருக்கும் கிடையாது. நான் மற்றவர்களைப் போல் சாதாரண மனிதனில்லை. ஏனெனில் நான் சக்கரவர்த்தி!” என்று உரக்க முழங்கினார் அக்பர்.

“என்ன? எனக்குக்கூட கிடையாதா? நான் என்ன சாதாரணப் பெண்ணா?” என்றார் பேகம். அக்பர் தான் கேலியாகக் கேட்டதில் கோபமடைந்து விட்டார் என்று உணர்ந்த அவளுடைய கண்கள் பனித்தன.

“அந்த ஸ்தானத்தை நீ இழக்கும் வேளை நெருங்கிவிட்டது!” என்று அக்பர் ஒரு குண்டைத் தூக்கிப் போட, அதை சற்றும் எதிர்பாராத பேகம் அழுதே விட்டாள். ஆனால், அவள் கண்ணிரைப் பொருட்படுத்தாத அக்பர், “என்னுடன் உனக்கான உறவு இன்றுடன் முடிந்தது. நீ உன் பிறந்தவீட்டுக்கு நாளைக்கே போய்விடு! உனக்குப் பிடித்த பொருள்களை நீ எடுத்துச் செல்லலாம்” என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி விட்டார்.

தன்னுடைய விளையாட்டு இப்படி வினையாகும் என்று சற்றும் எதிர்பாராத பேகம் துடிதுடித்துப் போனாள். ஏதோ கோபத்தில் கூறிவிட்டாரென்றும், விரைவில் அவர் கோபம் தணிந்து விடுமென்றும் தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால், அன்றிரவு அக்பர் அவளைத்தேடி அந்தப்புரத்திற்கு வரவேயில்லை. ‘ஐயோ, விஷயம் விபரீதமாகி விட்டதே!’ என்று பதைபதைத்துப் போன பேகம், மறுநாள் தன் தாதி மூலம் “நான் உங்களுடைய மனத்தை என் கேலிப்பேச்சினால் புண்படுத்தியதற்கு மிகவும் வருந்துகிறேன். தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று கடிதம் எழுதிஅனுப்பினாள்.

ஆனால், அக்பர் “உங்கள் பேகத்தைப் பெட்டி, படுக்கைகளுடன் நாளையே கிளம்பச் சொல்!” என்று இரக்கமின்றி பதில் சொல்லி அனுப்பினார். அதைக்கேட்டு இடி விழுந்தது போலான பேகம், அளவற்ற கோபமடைந்தத் தன் கணவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று வழிதெரியாமல் தவித்தாள். கடைசியில் அவளுக்கு பீர்பால் ஞாபகம்வர, அவரை உடனே வரவழைத்தாள்.

உடனே பேகத்தைத் தேடிவந்த பீர்பால் அவள் முன்னிலையில் வணக்கம் தெரிவித்தபின் தன்னை அழைத்தக் காரணம் கேட்க, பேகம் கண்களில் நீர் தளும்ப நடந்த விஷயத்தைக் கூறியவுடன் “நான் சொல்வதை அப்படியே செய்யுங்கள்! உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும்!” என்று பீர்பால் பேகத்திற்கு தைரியம் கூறிவிட்டு வீடு திரும்பினார்.

 

உடனே பீர்பாலின் யோசனைப்படி, தன் பொருள்களை எடுத்துப் பெட்டியில்வைத்துக் கொள்ளத் தொடங்கினாள். தன்னுடையது மட்டுமின்றி, அக்பரின்பொருள்களையும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். பிறகு தன் தாதி மூலம்அக்பருக்கு, “பிரபு! நான் பிறந்த வீடு செல்லத் தயாராகி விட்டேன். ஆனால்,போவதற்கு முன் உங்களை ஒரேயோரு முறை சந்தித்து மன்னிப்புக் கோரவிரும்புகிறேன்” என்று செய்தி அனுப்பினாள்.

 

அதற்கு சம்மதித்த அக்பர், ஒரு மணி நேரம் சென்றபின் அந்தப்புரத்தை அடைந்தார். அவரை வாயிலில் நின்று புன்னகையுடன் வரவேற்ற பேகம் அவருக்கு இருக்கையளித்து உபசரித்தாள். ஆனால், அவளுடைய உபசரிப்பை அலட்சியம் செய்த அக்பர், கடுமையான குரலில் “நீ எப்போது போகப் போகிறாய் என்று மட்டும் சொல்!” என்றார். “இதோ கிளம்பிக் கொண்டே இருக்கிறேன். ஆனால், போவதற்கு முன், நான் இதுவரை உங்கள் மனத்தைப் புண்படுத்திய அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மன்னிப்புக் கேட்கிறேன். மன்னித்தேன் என்று உங்கள் வாயினால் கேட்ட பின்னரே, என்னால் நிம்மதியாகப் பிறந்த வீடு செல்ல முடியும்” என்று பேகம் உருகினாள்.

“சரி, மன்னித்து விட்டேன்! இப்போது புறப்படுகிறாயா?” என்று வேண்டா வெறுப்புடன் கூறிய அக்பர் எழுந்து செல்லத் தயாரானார். உடனே அவரை அமரச் சொன்ன பேகம், “தயவு செய்து நான் அன்புடன் அளிக்கும் இந்தப் பழச்சாறை அருந்துங்கள்” என்று ஒரு கோப்பையை நீட்டிய பின், “இதுதான் நான் உங்களுக்கு அளிக்கப் போகும் கடைசி பானம்!” என்று விம்மியழ, அக்பரும் சற்றே மனமிளகி, அந்தப் பழச்சாறைக் குடித்தார்.

 

குடித்த பிறகு பேகத்தை நோக்கி, “உனக்கு மிகவும் பிடித்தமான பொருள்கள் எதுவானாலும் நீ இங்கிருந்து எடுத்துச் செல்ல உனக்கு ஏற்கெனவே அனுமதி அளித்துவிட்டேன். நான் வருகிறேன்” என்று விறைப்புடன் அக்பர் கூற, பேகத்தின் இதழ்களில் ஒரு விஷமப் புன்னகை அரும்பியது. பிறகு, எழுந்து இருந்து செல்ல முற்பட்ட அக்பருக்கு திடீரென உடலை என்னவோ செய்ய, “எனக்கு ஒரே தூக்கமாக வருகிறது” என்று தள்ளாடினார்.

உடனே விரைந்து சென்று அவரைத் தாங்கிப் பிடித்த பேகம், “ஐயோ! ஏன் இப்படித் தடுமாறுகிறீர்கள்? சற்று நேரம் உட்கார்ந்து விட்டுச் செல்லுங்கள்” என்று அவரைக் கையைப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் உட்காரச் செய்தாள். அடுத்தகணம் தன்னை அறியாமல் படுக்கையில் சாய்ந்த அக்பர், அப்படியே தூங்கி விட்டார்.

 

தான் பழச்சாறில் கலந்த மருந்து வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்த பேகம், உடனே தன் கைகளைத் தட்டி சில காவலர்களை அழைத்து, அக்பரை படுக்கையோடு சேர்த்து எடுத்துச் சென்று பல்லக்கில் வைக்கும்படி உத்தரவிட்டாள். அப்படியே அவர்கள் செய்ய, உடனே பேகம் தங்கள் இருவரது உடைமைகளையும் மற்றொரு பல்லக்கில் ஏற்றித் தானும் ஏறிக்கொள்ள, உடனே இரண்டு பல்லக்குகளும் ஆள்களால் சுமக்கப்பட்டு, பேகத்தின் பிறந்த வீட்டை அடைந்தன.

தன் வீட்டையடைந்ததும், பேகம் அங்கிருந்த பணியாட்களுக்கு இட்டக் கட்டளையின்படி, அவர்கள்  அக்பரைப் படுக்கையோடு தூக்கிக் கொண்டு வந்து படுக்கையறையில் கிடத்தினார்கள்.

“ஐயோ! ஏன் இப்படி சக்கரவர்த்தியை தூக்கி வருகின்றனர்? அவருக்கு உடல் சரியில்லையா?” என்று பேகத்தின் பெற்றோர் பதறிப்போக, “ஒன்றுமில்லை. கடந்த சிலநாள்களாக இருந்த மிக அதிகமான வேலையினால், பல்லக்கில் வரும்போது தூங்கிக் கொண்டே வந்தார். உண்மையில் ஒரு நாள் ஒய்வு எடுக்கவே அவர் இங்கு வந்துள்ளார்” என்று பேகம் பதிலளித்தாள்.

ஒரு மணி நேரம் கழித்து கண்களைத் திறந்த அக்பர், பேகத்தை நோக்கி, “நான் எங்கிருக்கிறேன்?” என்று கேட்டார். “நீங்கள் என் பிறந்த வீட்டில்தான் இருக்கிறீர்கள்” என்று பேகம் புன்னகையுடன் கூற, அக்பருக்கு சுரீர் என்று கோபம் தலைக்கேறியது.

“நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை இங்கு தூக்கி வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது?” என்று அவர் சீறினார்.

“நீங்கள் தான் பிரபு!” என்று அவர் சீறினார்.

“என்ன உளறுகிறாய்? நான் எப்போது அனுமதி தந்தேன்?” என்று அக்பர் கேட்க, அதற்கு பேகம், “உனக்குப் பிடித்த பொருள் எதுவானாலும் நீ இங்கிருந்து அதை எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்ததே நீங்கள்தான்! எனக்கு உலகிலேயே மிகவும் பிடித்த பொருள் நீங்கள்தான்! அதனால் உங்களை என்னுடன் எடுத்து வந்ததில் என்ன தவறு?” என்று சாமர்த்தியமாக மடக்கினாள்.

“ஓ!” என்ற அக்பர் திடீரென வாய்விட்டு சிரித்தார். “நீ மிகவும் சாமர்த்தியமாக செயற்பட்டு இருக்கிறாய். சரி வா! நாம் நம் அரண்மனைக்குப் போவோம்!” என்ற அக்பர், தொடர்ந்து, “அதிருக்கட்டும்! உனக்கு இந்த அபாரமான யோசனையை சொல்லிக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்.

அதற்கு பேகம் “நீங்கள்தான் மிகவும் புத்திசாலியாயிற்றே! கண்டுபிடியுங்களேன்!” என்றாள் .

“அது நிச்சயம் பீர்பாலாகத் தானிருக்கும்” என்றார் அக்பர்.

முல்லாவின் கதைகள் – கீழே விழுந்த சட்டை

ஒரு நாள் முல்லா தமது மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார்.

மாடியிலிருந்த முல்லா திடீரெனக் கால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.

தடால் என்ற சப்தத்துடன் எதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்ட மனைவி திடுக்கிட்டு அது என்ன சப்தம் என்று கேட்டாள்.

கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒள்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார்.

ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது? என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா கமாளித்தார். அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.

முல்லாவின் கதைகள் – கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?” என ஒரு சந்தேகத்தைக் கேட்டார்.

நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா.

உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.

பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

முல்லாவின் கதைகள் – புதுப்பானை

முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒருநாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார்.

” பையா! இந்தப் பானையை எடுத்து கொண்டு கிணற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா”  எனக் கூறினார்.

பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டான்.

முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார்.

பையன் திரும்பி வந்து, ” என்ன எஜமானே” என்று கேட்டான்.

இந்தப் பானை புத்தம் புதியது. அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாகக் கையாண்டு உடைத்தாயானால் அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஒங்கி அறைந்தார்.

பையன் திடுக்கிட்டுத் திரும்பி, ” எஜமானே, பானையை உடைத்தால்தானே அடி கொடுப்பேன் என்று கூறினீர்கள். நான் பானையை உடைக்கவில்லையே என்னை எதற்காக அடித்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு முல்லா, ” பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன் உடைந்து போன பானை திரும்பியா வரும்? அதற்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்தேன். இந்த அடியை நினைவில் வைத்தக் கொண்டு நீ பானை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாய் அல்லவா?” என்று பதிலளித்தார்.

முல்லாவின் கதைகள் – பதிலுக்குப் பதில்

ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார்.

பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார்.

அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகைகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார்.

உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா.

அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார்.

கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.

முல்லாவின் கதைகள் – சூரியனா-சந்திரனா

அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர்.

அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.

அவர் உடனே எழுந்து ” அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா?” என்று கேட்டார்.

இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம். முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றார் முல்லா.

அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர்.

பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது என்றார் முல்லா.

முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.

முல்லாவின் கதைகள் – கழுதையால் கிடைத்த பாடம்

ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார்.

” முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் ” என்றார் நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார்.

அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார். நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார்.

நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது.

” முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே” என்ற நண்பர் வியப்புடன் கேட்டார். முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது.

” நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். ஏன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன் ” என்றார்.

நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

முல்லாவின் கதைகள் – முல்லா அணைத்த நெருப்பு

ஒரு தடவை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்

வியாபார அலுவல்கள் முடிந்து பிறகு அன்று இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் தங்கினார். மிகவும் சாதாரணமாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. சரியானபடி உபசரிக்கவில்லை.

இரவு திடீரென அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது.

வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை. கும்பலாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.

முல்லாவுக்கோ நாவறட்சி அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அவருக்கு யோசனையொன்று தோன்றியது.

திடீரென அவர் ” நெருப்பு! – நெருப்பு! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது” எனக் கூக்குரல் போட்டார்.

வேலைக்காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார்கள்.

முல்லாவைப் பார்த்து ” எங்கே தீப்பற்றிக் கொண்டது?” என்று பரபரப்புடன் கேட்டார்கள். முல்லா சாவதானமாக ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார். அவர் தாகம் அடங்கியது.

” நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே?” என்று வேலைக்காரர்கள் கேட்டார்கள். நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது. இப்போது தண்ணீர் விட்டு அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா.

முல்லாவின் கதைகள் – மீன் பிடித்த முல்லா

முல்லா வசித்த ஊரில் நெடுநாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர்.

” தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் என் கண்களில் படவில்லை . அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதியாக யாரையும் நியமிக்கவில்லை” என்றார் மன்னர்.

இந்தச் செய்தியை முல்லா அறிந்தார்.

ஒரு நாள் காலையில் முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக் கொண்டிருந்தார்.

அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் முல்லா மீன் வலையை போர்த்திக் கொண்டு உலாவுவது கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பணியாளன் ஒருவனை அனுப்பி முல்லாவை அழைத்து வரச் சொன்னார்.

” முல்லா நீர் ஏன் இப்படி மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?” என்று வினவினார்.

” மன்னர் அவர்களே, நான் ஆதி நாளில் மீன் பிடிக்கும் தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகச் கருதக் கூடாது என்பதற்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன் ” என்றார் முல்லா.

இத்தனைக் காலமாகத் தாம் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் முல்லாதான் என்று மன்னருக்குத் தோன்றியது.

அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார்.

சில நாட்கள் சென்ற பிறகு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்த முல்லாவை அரண்மனை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாததை அவர் கவனித்தார்.

” என்ன முல்லா மீன் வலையைக் காணோம் ” என்று மன்னர் கேட்டார்.

” மன்னர் பெருமானே, மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு” என்றார் முல்லா. முல்லா மீன் என்று குறிப்பிட்டது நீதிபதி பதவியை.மன்னர் அதைப் புரிந்து கொள்ளவில்லை.

முல்லாவின் கதைகள் – சொன்ன சொல் மாறதவர்

வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார்.

இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேச்சின் இடையே வெளியூர் அன்பர் ” முல்லா அவர்களே தங்களது வயது என்ன?” என்று கேட்டார்.

” நாற்பது வயது” என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக ” என்ன முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே! அது எப்படி?” என்று கேட்டார்.

” நான் சொன்ன சொல் மாறாதவன். ஓரு தடவை சொன்ன சொல்லை மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது” என்று சிரித்துக் கொண்டே கூறினார் முல்லா.

முல்லாவின் கதைகள் – குட்டி போட்ட பாத்திரம்

ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து ” என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் ” என்று கேட்டார்.

முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம்.

முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார்.

அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள் கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

” நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?” என வியப்புடன் கேட்டார் முல்லா.

” முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன் ” என்றார் அண்டை வீட்டுக்காரர்.

சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார் என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

” ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன் ” என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா.

சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில் ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்காாரிடம் சென்றார்.

” உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள” ் என்றார்.

” நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ?” என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க ” நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து விட்டது. தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன் ” என்றார்.

முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

” இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பித் கொடுத்து விடுங்களஞ் என்று வேண்டிக் கொண்டார். முல்லா அவரடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

முல்லாவின் கதைகள் – வேதாந்த நூல்

ஓரு தடவை முல்லா ஒரு திருமணத்துக்குச் சென்றார். இரண்டொரு தடவை அவர் திருமணத்திற்கு சென்று திரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது. அதனால் அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் வரவில்லை.

அந்தக் காலத்தில் செருப்பணிந்த காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது. செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டார்.

முல்லாவின் கையில் ஏதோ காகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண விட்டுக்காரர், ” முல்லா அவர்களே ஏதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே, அதில் என்ன இருக்கிறது ? மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசா?” என்று கேட்டார்.

அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்று முல்லா பதிலளித்தார். ” வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்? ” என திருமண வீட்டுக்காரன் வினவினான். செருப்புக் கடையில் வாங்கினேன் என்று முல்லா பதிலளித்தார்.

அவர் என்ன பதிலளித்தார் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் திருமண வீட்டுக்காரர் தத்தளித்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லாவின் திருமண ஆசை

தனது மனைவி இறந்து போய் விட்டதால் முல்லா மறுமணம் செய்து கொள்வது என்று
தீர்மானித்தார்.

அப்பொழுது அவர் 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.

முதுமைக் காலத்தில் அவருக்குத் திருமண ஆசை ஏற்பட்டது. அவருடைய நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் நண்பர்கள் முல்லாவிடம் உரையாடிக் கொண்டீருந்தபோது தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.

” முல்லா இந்த முதுமைப் பிராயத்தில் உங்களுக்குத் திருமணம் அவசியம்தானா? உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டது?” என நண்பர்கள் கேட்டனர்.

முல்லா வழக்கமான சிரிப்புடன் பேசத் தொடங்கினார்.

” நண்பர்களே, உங்கள் அன்பான கருத்துக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும். இளமைப் பருவமோ – முதுமைப் பருவமோ ஆணுக்கு ஒரு பெண் துணை தேவை நான் முதுமைக் காலத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு இது ஒரு காரணம் எனக்கு வாய்க்கும் மனைவி நல்லவளாக என்னிடம் அன்பும் ஆதரவும் உள்ளவளாக இருந்தால் முதுமைக் காலத்திலும் நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழி பிறக்கும் அல்லவா?”

முல்லாவின் இந்தப் பதிலைப் கேட்ட நண்பர்கள் ” முல்லா அவர்களே! நீங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக முதுமைக் காலத்தில் உங்களுக்கு வந்து வாய்க்கும் மனைவி பொல்லாதவளாக இருந்து விட்டால்?” என்று கேட்டனர்.

” வயதுதான் ஆகி விட்டதே? இன்னும் கொஞ்ச காலந்தானே அவளுடன் வாழப் போகிறோம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வேன்” என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் கதைகள் – யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

அவர்கள் முல்;லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி ” நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்” என்றார்.

” ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்” என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.

நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.

முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.

” என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?” என்று கோபத்துடன் கேட்டார்.

முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி ” மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் ” என்றார்.

” என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?” என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.

மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.

வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.

மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார்.

முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.

முல்லாவின் கதைகள் – எதிர்கால வாழ்க்கை

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.

” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.

” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.
அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.

” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.

முல்லாவின் கதைகள் – பாவத்தின் பலன்

ஓரு தடவை முல்லா தெருவழியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஒரு வீட்டின் கூரையில் நின்று கொண்டு வீட்டைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தன் ஒருவன் கால் தவறிக் கீழே விழுந்தான்.

அந்த நேரமாகப் பார்த்து அங்கே நடந்து சென்று கொண்டிருந்த முல்லாவின் மீது அந்த மனிதன் வந்து விழுந்தான்.

விழுந்தவனுக்கு எந்தவித அடியோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் முல்லா பயங்கரமான அடிபட்டுப் படுகாயமடைந்தார்.

முல்லாவை அருகிலிருந்த மருத்தவனைக்கு சிலர் எடுத்துச் சென்று சிகிக்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.

முல்லாவுக்கு பலமாக அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கிறார் என்ற செய்தியறிந்து நண்பர்களும் பொதுமக்களும் திரளாகச் சென்று முல்லாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

” என்ன நடந்தது?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார்.

” எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது. உலகத்தில் யாரோ ஒருவன் பாவமோ குற்றமோ செய்ய அவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபாரதி பாவத்தின் பலனை அல்லது குற்றத்திற்கான தண்டணையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும் நான் கூரை மேலிருந்து விழவில்லை ஆனால் விழுந்தவனுக்குக் காயம் இல்லை விழாத எனக்கு காயம் ஏற்பட்டது” என்று சிரித்துக் கொண்டே முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லா வசூலிக்கும் கடன்

முல்லா ஒருநாள் ஒரு பெரிய பணக்காரிடம் சென்றார் ஒரு மனிதனுடைய கஷ்ட நிலையைக்
கண்டு மனம் பொறாமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு மனிதரிடம் கொஞ்சம்

பணத்தை கடனாக வாங்கி விட்டான். கடன் வட்டிக்கு வட்டியாக பல மடங்கு பெரிய தொகையாக வளர்ந்து விட்டது. அந்தக் கடனைக் கொடுக்க முடியாமல் அவன் மிகவும் சங்கடப்படுகிறான். கடன் தொல்லை தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்து கொள்வானோ
என்று கூட எனக்கு அச்சமாக இருக்கின்றது. அந்த மனிதனின் கடனை அடைக்க ஒரு ஆயிரம் பொற்காசுகள் இருந்தால் கொடுங்;கள். உரிய காலத்தில் உங்கள் தொகையை அவன் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று முல்லா மிகவும் உருக்கமாக கூறினார்.

அதைக் கேட்டு மனமுருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து ” அவ்வளவு கஷ்ப்படும் மனிதன் யார்?” என்று கேட்டார்.

” வேறு யாருமில்லை, நான்தான் ” என்று கூறிச் சிரித்தவாறு முல்லா சென்று விட்டார்.

இரண்டொரு மாதங்கள் கழித்து செல்வந்தரிடம் வாங்கிய பணத்தை முல்லா திருப்பித் கொடுத்து விட்டார்.

இரண்டொரு மாதங்கள் கழித்த பிறகு ஒரு நாள் அதே பணக்காரரிடம் வந்தார்.;

” யாரோ ஒருவர் கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறாராக்கும். அவருக்கு உதவ என்னிடம் கடன் வாங்;க வந்திருக்கிறீர் போலிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் செல்வந்தர்.

” ஆமாம் ” என்று முல்லா பதில் சொன்னார்.

” அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே” என்று செல்வந்தர் கேட்டார்.

” இல்லை , உண்மையாகவே ஒர் ஏழை தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் ” என்றார் முல்லா.

” உம்மை எவ்வாறு நம்ப முடியும்? பணத்தை வாங்;கிக் கொண்ட பிறகு நான்தான் அந்த ஏழை என்று கூறமாட்டீர் என்பது என்ன நிச்சயம்?” என்று செல்வந்தர் கேட்டார்.

” நீங்கள் இவ்வாறு சந்தேகப்படுவீர் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறனே” என்றார் முல்லா.

பிறகு வாசல் பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார்.

” நீர்தான் கடன் வாங்கிக் கஷ்டப்படும் ஏழையா?” என்று செல்வந்தர் கேட்டார்.

” ஆமாம் ” என்ற அந்த ஏழை பதில் சொன்னான்.

செல்வந்தர் முல்லா சொன்ன தொகையை ஏழையிடம் நீட்டினார்.

அதனை முல்லா கைநீட்டி வாங்கிக் கொண்டார்.

” என்ன பணத்தை நீர் வாங்கிக் கொண்டிர் பழையபடி என்னை ஏமாற்றுகிறீரா?” என செல்வந்தர் கேட்டார்.

” நான் பொய் சொல்லவில்லையே கடன் வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் அவனுக்குக் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடன் இப்போது வசூல் செய்கிறேன் ” என்று கூறியவாறு ஏழையை அழைத்துக் கொண்டு முல்லா நடந்தார்.

முல்லாவின் கதைகள் – சந்தேகப்பிராணி

வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்கத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான்.

அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது.

அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.

சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில் மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.

அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்ற தங்கினார்.

அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள்.

” காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் ” சந்தேகப் பிராணி.

முல்லா சிரித்துக் கொண்டே ” நண்பரே கவலைப்படாதீர். ஒரு கருப்புத் துணியை உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் ” என்றார். சந்தேகப் பிராணிக்கு அது நல்ல யோசனையாகப்படவே தன் காலில் ஒரு கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

அவனுக்கு அருகே படுத்திருந்த முல்லா அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்துத் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார்.

” ஐயோ நான் காணாமல் போய் விட்டேனே. ஏன் காலில் இருந்த துணியைக் காணோமே” என்று கூக்குரல் போட்ட சந்தேகப் பிராணி முல்லாவின் காலைப் பார்த்து விட்டு ” நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் ” என்று சத்தம் போட்டான்.

அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என வினவினர்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார்.

சந்தேகப்பிராணியைப் பார்த்து அந்த விடுதியில் தங்கியிருந்த எல்லா பிரயாணிகளும் வாய் விட்டுச் சிரித்தனர்.

பிறகு முல்லா அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.

முல்லாவின் கதைகள் – நாத்திகன் பட்ட அவஸ்த்தை

முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான்.

கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான்.

ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான்.

அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.

முல்லா அருகே வந்ததும், ” முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர் ” என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான்.

” எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!” என்றார் முல்லா.

நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது.

முல்லாவையும்விட மேலான தறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை.

நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து ” முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாயந்த துறவி யார்?” என்ற கேட்டான்.

” அந்தத் துறவி நீர் தான் ” என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான்.

” நானா அந்தத் துறவி அது எப்படி?” என்று கேட்டான்.

” என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது?” என்று முல்லா பதிலளித்தார். அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான்.

முல்லாவின் கதைகள் – முல்லா கற்ற இசை

முல்லாவுக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திடீரென ஆசை வந்து விட்டது.

சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஒரு பாட்டு வாத்தியாரிடம் சென்றார்.

” ஐயா எனக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. எனக்குச் சங்கீதம் கற்றக் கொடுப்பீர்களா?” என முல்லா அவரிடம் கேட்டார்.

” சங்கீதம் கற்றுக் கொடுப்பது தானே என் தொழில் நிச்சயம் தங்களுக்குக் சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன் ” என்றார் பாட்டு வாத்தியார்.

” நான் என்ன கட்டணம் தரவேண்டும்?” என்று முல்லா கேட்டார்.

” முதல் மாதம் 100 பொற்காசுகள் தரவேண்டும் அடுத்த மாதம் அறுபது பொற்காசு கொடுத்தால் போதும், மூன்றாவது மாதம் ஐம்பது பொற்காசுகள் கொடுங்கள். இவ்வாறு கட்டணம் குறைந்து கொண்டே போகும் ” என்றார் பாட்டு வாத்தியார்.

” சரி வருகிறேன் ” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் முல்லா.

” ஏன் புறப்பட்டு விட்டீர்கள்? சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையா?” என பாட்டு வாத்தியார் கேட்டார்.

” ஒரு பத்து மாதம் கழித்து வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாதா குறையும் உமது கட்டண முறையில் பத்த மாதம் கழித்து நீர் இலவசமாகவே எனக்குக் கல்வி கற்றுத் தரவேண்டியிருக்கும். அதனால் பத்து மாதம் கழித்தே வருகிறேன் ” என்று கூறிவிட்டு முல்லா நடந்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லாவின் உயில்

முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.

உயிலை எழுவதால் அவருக்கு சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்குனை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும்.

ஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதை செல்வந்தர் கண்டார்.

” இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்?” என்று செல்வந்தர் கேட்டார்.

” என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் தயாரித்து முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறது. ஒரே குழப்பம் சிக்கல் ” என்றார் முல்லா.

” நீரும் உயில் எழுதுகிறீரா? உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது? ஒன்றும் இல்லாதபோது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது?” என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.

” சொத்தோ செல்வமோ இல்லாததனால்தானே உயில் எழுதுவதில் சிக்கல் இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு விளங்கவில்லை” என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

தம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்தார்.

முல்லாவின் கதைகள் – மகிழ்ச்சியின் எல்லை

முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. அவனிடம் ஏராளமான பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், ” என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது. நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக் கூடாதா?” என்று பரிதாபமாகக் கேட்டார்.

செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தான்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து வைப்பான்.

முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம்.

அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார்.

அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டிருந்தார்.

” என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை நோக்கி நடந்தார் முல்லா.

முல்லா வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான்.

அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு அருகாமையில் விழுந்து விட்டது.

செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் முல்லா கவனித்தார்.

உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார்.

” ஐயோ என் பணப்பை போய் விட்டதே” என்று கூக்குரலிட்டவாறு முல்லாவைத் துரத்திக் கொண்டு செல்வந்தன் ஒடினான்.

முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார்.

செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் முல்லாவைப் பின்
தொடர்ந்து ஒடினான்.

முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார்.

செல்வந்தன் ஒடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான்.

பிறகு ” முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினீர். இந்தப் பணம் கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் ” என்றார்.

” இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?” என்று முல்லா கேட்டார்.

” மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை முல்லா பறிபோய் விட்டது என்று நான் நினைத்த பணம் திரும்பக் கிடைத்து விட்டதே! என் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா?” என்று கூறினான் செல்வந்தன்.

” எதற்காகப் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் என்று கேட்டீரல்லவா? உமக்கு கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியை ஊட்டலாமே என்பதற்காகத் தான் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறினீர் அல்லவா
? அதற்காகத்தான் உமக்கு மகிழச்சியை ஏற்படுத்த வேண்டுமே என்று பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் ” என்றார் முல்லா.

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனை

ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை.

உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன.

கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது.

அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர் சொன்னார்.

மற்றொரு பிரயாணி தாம் உயிர் பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பிரயாணியும் தம்மிடமிருக்கம் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர்.

இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா.

திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார்.

பிரயாணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்.

முல்லா உடனே உரத்த குரலில் அன்பர்களே நமக்கு உயிர்ப்பிச்சை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தம் வித்தத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்றார்.

அவர் பேச்சுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. உயிர்பிழைப்பது உறுதியாகி விட்டதால் இனி கடவுளின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதினார்கள்.

சற்றுமுன் அவர்கள் செய்த வாக்குறுதிகளையெல்லாம் மற்ந்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம். ஓரேயடியாக சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட முடியுமா? என்றெல்லாம் பேசத் தலைப்பட்டார்கள்.

முல்லா அட்டகாசமாக் கலகலவென நகைத்தார்.

” ஏன் சிரிக்கிறீர்?” என்று பிரயாணிகள் வினவினார்கள்.

” கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன் ” என்றார் முல்லா.

பிரயாணிகள் நாலாபுறமம் கடலில் கண்களை ஒட்டினர். முல்லா சொன்னது உண்மைதான் கரை எந்தப் பக்கமும் கண்களுக்கத் தெரியவே இல்லை.

உடனே பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர்.

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனை

ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை.

உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன.

கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது.

அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர் சொன்னார்.

மற்றொரு பிரயாணி தாம் உயிர் பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பிரயாணியும் தம்மிடமிருக்கம் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர்.

இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா.

திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார்.

பிரயாணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்.

முல்லா உடனே உரத்த குரலில் அன்பர்களே நமக்கு உயிர்ப்பிச்சை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தம் வித்தத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்றார்.

அவர் பேச்சுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. உயிர்பிழைப்பது உறுதியாகி விட்டதால் இனி கடவுளின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதினார்கள்.

சற்றுமுன் அவர்கள் செய்த வாக்குறுதிகளையெல்லாம் மற்ந்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம். ஓரேயடியாக சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட முடியுமா? என்றெல்லாம் பேசத் தலைப்பட்டார்கள்.

முல்லா அட்டகாசமாக் கலகலவென நகைத்தார்.

” ஏன் சிரிக்கிறீர்?” என்று பிரயாணிகள் வினவினார்கள்.

” கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன் ” என்றார் முல்லா.

பிரயாணிகள் நாலாபுறமம் கடலில் கண்களை ஒட்டினர். முல்லா சொன்னது உண்மைதான் கரை எந்தப் பக்கமும் கண்களுக்கத் தெரியவே இல்லை.

உடனே பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர்.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

பிரார்த்தனை – முல்லாவின் கதைகள் – Moral Stories – நீதிக் கதைகள் – முல்லா, பிரயாணிகள், பிரார்த்தனை, செய்து