நாகரத்தினத்தை திருடியது நியாயமா?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் பாலானவர்களின் விஷயத்தில் நயவஞ்சகமே வெல்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதை நிரூபிக்கும் ஒரு கதையை நான் கூறுகிறேன், கேள்” என்றது.

 

கடம்பவனம் எனும் கிராமத்தில் கண்ணன், ரங்கன் என்ற இரு மாடுமேய்க்கும் இளைஞர்கள் வசித்து வந்தனர். ஒரு நாள் மாலையில் ரங்கனுடைய மாடுகளில் ஒன்றைக் காணவில்லை. அதனால் அவன் கண்ணனைத் தன் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிப் போகச் சொல்லி விட்டு, தான் தொலைந்து போன மாட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றான். மாலை மங்கும் நேரத்தில், தீடீரென ஒரு புலி எதிரே வர, ரங்கன் பயந்து போய் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.

 

சிறிது நேரத்தில், காட்டில் இருள் சூழ்ந்தது. இனி, தொலைந்து போன மாட்டைத் தேடிப் பயனில்லை என்று கருதிய ரங்கன் வீடு திரும்ப எண்ணியபோது, அவன் அமர்ந்து இருந்த பெரிய மரத்திற்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதரில் இருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த நாகத்தின் தலையில் கண்ணைப் பறிக்கும் ஒரு இரத்தினக் கல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

 

சரசரவென வெளியே வந்த நாகம் ரங்கனிருந்த மரத்தையணுகித் தன் தலையில் இருந்த இரத்தினத்தை எடுத்து, மரத்தின் அடியில் இருந்த ஒரு பொந்தினுள் வைத்து விட்டு, சற்றுத் தள்ளிப்போய் இன்னொரு மரத்தினடியில் அமர்ந்ததும் திடீரென ஒரு மனிதனாக மாறியது. நாகதேவனைப் போல் தோற்றமளித்த அந்த மனிதன் மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தான். இதைக் கண்ட ரங்கன் இனியும் அங்கு இருந்தால் ஆபத்து எனக் கருதி, சத்தமின்றி மரத்திலிருந்து இறங்கி, ஊரை நோக்கி ஓடிப்போனான்.

மறுநாள் அதைப்பற்றித் தன் தோழன் கண்ணணிடம் சொல்ல, கண்ணனின் விழிகள் வியப்பினால் விரிந்தன. அவன் ரங்கனை நோக்கி, “அடப்பாவி! சரியான முட்டாளாக இருக்கிறாயே! நாகரத்தினம் மட்டும் நம் கையில் இருந்தால், பாம்பு தீண்டிய பிறகு இறக்கும் நிலையில் இருப்பவர்களை நாம் காப்பாற்றி விடலாமே! நாம் அதையே ஒரு தொழிலாக வைத்துக் கொண்டால், நிறையப் பணம் சம்பாதித்துப் பணக்காரர்களாகி விடலாமே! சரி, சரி! இப்போது ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இன்று இரவு அந்த இடத்திற்கு நாமிருவரும் சேர்ந்து செல்வோம். இன்றும் நேற்று நடந்தது போல் நடந்தால் நாம் இரத்தினத்தைத் திருடிக் கொண்டு வந்து விடலாம்!” என்று கூறினான்.

 

ரங்கன் வர மறுத்ததால் கண்ணன் மட்டும் தனியாக காட்டுக்குச் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அன்று நாகம் வந்தது. நாகதேவன் தீவிர தவத்தில் ஆழ்ந்து விட்டான் என்று தெரிந்ததும், கண்ணன் சத்தமின்றி கீழே இறங்கி, இரத்தினத்தைத் திருடிக்கொண்டு, ஊரை நோக்கித் திரும்பினான்.

 

மறுநாள் காலையிலேயே, அவன் கடம்பவனம் கிராமத்தைவிட்டு வெகுதூரம் சென்று மற்றொரு பெரிய கிராமத்தை அடைந்தான். அந்த ஊரின் ஜமீன்தாரின் பெண்ணை ஒருநாள் நாகம் தீண்டிவிட, கண்ணன் தன்னிடம் உள்ள  இரத்தினத்தைக் கொண்டு அவளை உயிர் பிழைக்கச் செய்தான். அதனால் மகிழ்வுற்ற ஜமீன்தார் அவனுக்கு அந்த கிராமத்திலேயே வீடு அமைத்துதர, அவன் அந்த ஊரிலேயே தங்கிவிட்டான்.

 

வயல்களும், காடுகளும் நிறைந்த அந்தப் பிரதேசத்தில் தினமும் பலர் பாம்பு தீண்டி விஷமேறி அவனைத்தேடி வர அவன் அவர்களை குணப்படுத்தி வந்தான். காப்பாற்றப்பட்டவர்கள் அவனுக்குக் கொடுத்த பல வெகுமதிகளினால் அவனிடம் குவிந்த செல்வமும் ஏராளமாக ஆயிற்று.

கண்ணனால் வஞ்சிக்கப்பட்ட நாகதேவன் மறுநாள் காலையில் தவங்கலைந்து எழுந்த பிறகு தன் இரத்தினத்தைத் தேட, அது காணவில்லை.சுதேந்திரன் என்ற அந்த நாகதேவன் தன் இரத்தினத்தை இழந்துத் துடித்துப் போனான். எதிர்காலத்தில் இந்து என்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பி அந்த நாகதேவன் கட்டிய மணக்கோட்டை இடிந்து போயிற்று. அவன் அந்தப்பெண்ணை சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி!

 

ஒரு விவசாயியின் பெண்ணான இந்து பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். ஒரு நாள் அவள் தன் குடிசை வாயிலில் நெல்லைக் காயவைத்துவிட்டு, அவற்றைப் பறவைகள் கொத்தாமல் விரட்டிக் கொண்டு இருக்கையில், திடீரென
அந்தப்பக்கம் ஓர் இளைஞன் வந்தான். இந்துவைக் கண்டதும் அவள் அழகில் மயங்கிய அவன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவளை வேண்ட, அவள் மறுத்தாள்.

 

கோபங்கொண்ட அவன் அவளிடம் வம்பு செய்ய, அவள் கூச்சலிட்டாள். ஆனால், அவள் கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் யாருமில்லை அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சுதேந்திரன் என்ற நாகதேவன் நிராதரவான இந்துவின் மீது மிகவும் பரிதாபப்பட்டு, அந்த இளைஞனின் மீது படமெடுத்து சீறிப்பாய, அவன் பயந்தோடிப் போனான். தனக்கு உதவி செய்த அந்த நாகத்தினை நன்றியுடன் இந்து நோக்க, திடீரென அந்த நாகம் மனிதனாக மாறியது.

 

அவள்முன் வசீகரமான தோற்றத்துடன் நின்ற சுதேந்திரன், “பெண்ணே! என் பெயர் சுதேந்திரன்! நான் நாகலோகத்தைச் சேர்ந்த நாகதேவன்! என்னிடம் இரத்தினம் உள்ளது. அதன் சக்தியினால்தான் நான் இப்போது மனித உருவம் எடுத்து உன் முன் நிற்கிறேன். “என்னால் அதிக நேரம் மனித உருவில் இருக்க முடியாது. ஆனால் நிரந்தரமாக மனிதனாக மாற முயற்சி செய்வேன். அதுவரை நீ எனக்காகக் காத்திருப்பாயா?” எனவும் இந்து சம்மதித்தாள்.

உடனே மட்டிலா மகிழ்ச்சியுற்ற சுதேந்திரன் சுக்ரானந்தர் என்ற முனிவரின் ஆசிரமத்தையடைந்து தன்னுடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். சற்று நேரம் யோசித்த முனிவர், “சுதேந்திரா! கடவுள் ஏதாவது ஒரு காரணத்தினால் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு குறிப்பிட்ட உருவத்தைத் தந்து இருக்கிறார். நீ நாகலோகத்தைச் சேர்ந்தவன்! அதனால் நீ நாகத்தின் உருவத்தில் இருப்பதுதான் நியாயம் ஆனது. ஆகையால் உன் ஆசையை விட்டுவிடு!” என்றார்.

 

சுதேந்திரன் இந்துவின் மீது தான் கொண்டுள்ள அன்பைப் பற்றிக் கூறினான். ஆகையால் முனிவர், “அவள் மீதுள்ள உன்னுடைய அன்பு மிக ஆழமானது என்று தெரிந்து கொண்டேன். ஆகவே, நான் உன் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்ற முயல்கிறேன். என்னுடைய தவ வலிமையினால் நீ இரவு முழுவதும் மனித உருவில் இருப்பாய், இரவு நேரங்களில் நீ பரம்பொருளை தியானித்துத் தவம் செய்து வா! உன் மூலம் பல ஜீவராசிகளுக்கு நன்மை ஏற்படும் விதத்தில் நடந்து கொள். சில நாள்களிலேயே, நீ நிரந்தரமாக மனிதனாக மாறுவாய்!” என்றார்.

 

அவ்வாறு தவம் புரிந்துவந்த இரவுகளில் ஓரிரவில் அவனுடைய இரத்தினம் திருட்டுப் போயிற்று. அதனால் அவனுடைய சக்திகளை இழந்து அவன் ஒரு சாதாரண நாகம் ஆனான். மிகவும் சக்தி வாய்ந்த அந்த இரத்தினத்தைத் தன்னிடம் இருந்து திருடியவனைப் பழி வாங்குவதற்குத் துடித்தான்.

 

அந்த நேரம், வேறோரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த கண்ணன். தன் பழைய நண்பன் ரங்கனைப் பார்க்க விரும்பி கடம்பவனம் வந்தான். ரங்கனை சந்தித்த அவன், நடந்த அனைத்ததையும் கூறிவிட்டு, “இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த நன்றியை நான் மறக்கவில்லை, என்னுடைய செல்வத்தில் பாதியை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்து விடு!” என்றான்.

 

அதற்கு ரங்கன், “நன்றி கண்ணா! ஆனால், நியாயமாக உழைத்துக் கிடைக்கும் கூலியையே நான் விரும்புகிறேன். ஆகவே, நீ சென்று வா!” என்றான். அதன்பிறகு கண்ணன் தன் ஊர் திரும்பினான். அப்போது வழியில் சுதேந்திரன் கண்களில் கண்ணன் தென்பட்டான். கண்ணனிடம் உள்ள இரத்தினத்தின் சக்தி சுதேந்திரனை ஈர்க்க, உடனே அது தன்னுடையதுதான் என்றும், அதை எடுத்துச் செல்பவனே திருடிச் சென்றவன் என்றும் உணர்ந்த நாகம் மிகுந்த கோபத்துடன் கண்ணனின் மீது சீறிப்பாய்ந்து அவனைக் கொத்தியது. என்ன ஆச்சரியம்? சுதேந்திரன் தானாகவே மனித உருவம் பெற்று நின்றான். அதே சமயம் கண்ணணுக்கும் நாகம் தீண்டியதால் விஷம் ஏறவில்லை.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா? சுயநலவாதியான கண்ணன் நாகம் தீண்டியும் எவ்வாறு விஷம் ஏறாமல் உயிரோடு இருந்தான்? அதைவிட வியப்பானது என்னவெனில், சுதேந்திரன் எவ்வாறு கண்ணனைத் தீண்டியதும் மனித உருவம் பெற்றான்? ரங்கன் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்வதே தருமம் என எண்ணி அதன் வழியே நடந்தான். ஆனால் அவன் முன்னேறவே இல்லை. தருமத்தின் வழியில் நடப்பவர்களுக்கு இந்த கதிதான ஏற்படுமா? என்னுடைய கேள்விக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு வேலையும் அது அதன் பலனின் அடிப்படையினால் மட்டுமன்றி, அந்த வேலையைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமையும் சூழ்நிலை மற்றும் வேலை செய்பவர்களின் பாவம் புண்ணியங்களின் அடிப்படையினாலும் அமையும். ரங்கன் மிகவும் கடுமையாக உழைத்து வாழும் வழ்கையை தேர்ந்தெடுத்தான். அதனால் அவனால் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ முடிந்தது. இரத்தினத்தை திருடினாலும், அதை வைத்து, பாம்பு தீண்டிய பலரின் உயிரைக் காப்பாற்றும் புண்ணியச் செயலைத்தான் அவன் செய்து இருக்கிறான்.

 

தவிர, செல்வம் சேர்ந்தவுடன் அதைத் தன் நண்பனுடன் பகிர்ந்தளிக்க அவனைத் தேடி வந்த நல்ல உள்ளம் படைத்தவன் கண்ணன். ஆகையால் சுதேந்திரன் என்ற நாகம் தீண்டியதும் அவன் இறக்கவில்லை. சுதேந்திரன் முனிவர் கூறியபடி  தானே நேரடியாக எந்த ஜீவராசிக்கும் உதவி புரிய வில்லை எனினும், அவனுடைய இரத்தினத்தின் மூலமே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆகவே அவன் நிரந்தர மனித உருவத்தைப் பெற்றான்.” என்றான்.

 

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.