சூஃபி ஞானி கதைகள் (Shoofi Gnani Stories in Tamil)

பயணம் எந்த ஒரு சாதாரண மனிதனையும் கூடப் புடம் போட்டுவிடும் வல்லமை கொண்டது. பயணத்தின் புதிய இடம், புதிய பண்பாடு, புதிய வடிவங்கள், புதிய மனிதர், புதிய அனுபவம் என்று பல புதுமைகளை சந்தித்து மானிடர்கள் புதிய சிந்தனைத் தளத்திற்கு செல்கின்றனர். ஒரு சூஃபியின் பயணம் இரண்டு தளங்களில் இயங்குகிறது.அது உடல் பயணமாகவும்(PHYSICAL TRAVEL) ஞானப்பயணமாகவும்(MYSTIC TRAVEL) அமைகின்றது. ஒரு பயணி, பயணித்து தனது இலக்கான சேர வேண்டிய இடத்தை அடைவது போல ஒரு சூஃபியானவன் தனது ஞானப் பயணத்தால் சூஃபிய படிநிலை ஞானத்தை அடைகின்றான்.

சூஃபி என்ற வார்த்தை அரபி மொழியிலுள்ள வார்த்தை. சூஃபிதத்துவம் என்பது காலதேச வர்த்தமானங்களை கடந்தது. ஒரு சூஃபி எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம். விழித்துக்கொண்ட எந்த மனிதனும் சூஃபிதான். ஹிந்துமதத்தின் அத்வைதத்துக்கும் பௌத்தத்தின் ஜென்னுக்கும் மிக நெருக்கமாக உள்ளது சூஃபித்துவம்.

yanliz_sufi_web

சூஃபி இசையின் முக்கிய நோக்கமே தன்னிலை மறந்து இறைஅனுபவத்தில் இரண்டற கலப்பதேயாகும். கர்நாடக இசை எப்படி இறைவனை அடைவதையே தனது ஆதார நோக்கமாக கொண்டதோ அதேபோல்தான் சூஃபி இசையும். ஆனால் கர்நாடக இசை சுருதி மற்றும் தாளம் போன்ற இலக்கண விதிமுறைகளுக்கு உட்பட்டது. ஆனால் சூஃபி இசையில் இதுபோன்ற இலக்கண விதிமுறைகள் இல்லை. அது தியான நிலைக்குள் மனதை கொண்டு சென்று பிரபஞ்ச வெளியில் இரண்டற கலக்கும் ஒரு பயணம்.

sufiney1lr6

ஞெ (NYE) எனப்படும் குழல் இசை சூஃபி இசையின் அடிப்படை நாதம். தேவாலயத்தில் இசைக்கப்படும் ஆர்கன் இசைப்போல, கர்நாடக இசையில் இசைக்கப்படும் இசைக்கருவி. சூஃபிமார்கள் உலகம் முழுக்க பயணம் மேற்கொண்டு இஸ்லாத்தை பரப்பியபோது இந்த சூஃபி இசை அந்தந்த நாட்டு கலைவடிவத்தை உள்வாங்கிக்கொண்டு பல்வேறு பிரிவுகளில் விரிந்தது. இந்தியாவில் கஜலாகவும் கவாலியாகவும் திரிபடைந்தது. சூஃபி ஞானம் விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டது. நீ எந்த பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் தொடர்ந்து பயணித்தால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக்கொணர்ந்து சூஃபிக்கள் ஆகி விடுகின்றனர். மனித வாழ்வின் முழுமைக்கு சூஃபிமார்கள் ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை. எனினும், கடலின் அடியில் கிடக்கும் முத்துகள் போல அவை மக்களால் உணரப்படாமலே உள்ளன. மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டுமே முத்துக்களை அள்ளிக்கொண்டு வரமுடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபிமொழிதான். நூற்றாண்டு காலங்களாக சூஃபி மரபின் அடிப்படைகளை கற்பிக்கும் வழிமுறையாக சூஃபி கதைகள் இருந்திருக்கின்றன. சூஃபி கதைகள் அங்கதமும் மறைபொருளும் ஆழ்ந்த தத்துவ நோக்கமும் கொண்டவை மட்டுமல்ல, நம் மனதின் இருண்ட மூலைகளில் வெளிச்சம் ஏற்படுத்துபவை.

சூஃபி ஞானி கதைகள் (Shoofi Gnani Stories)

Leave a comment