சூஃபி ஞானி கதைகள் – சூஃபியும் கொடிய அரக்கனும்

sufi

சூஃபி ஞானி ஒருவர், ஆளரவமற்ற மலைப்பாங்கான பகுதியில் தனியாகப் பயணம் போய்க் கொண்டிருந்தார்.

அவர் முன் திடீரென ஒரு அரக்கன் தோன்றி “உன்னைக் கபளீகரம் பண்ணப் போகிறேன்” என்று அவரிடம் சொன்னான்.

“அப்படியா சரி. உன்னால் முடிந்தால் முயற்சி செய்து பார். ஆனால் நான் உன்னை எளிதாக வென்றுவிட முடியும். நீ நினைப்பது போலில்லாமல், நான் உன்னைவிட அதிக பலசாலி” என்று பதில் சொன்னார் அந்த சூஃபி.

“நீ சொல்வது முட்டாள்தனமான பேச்சு. நீ ஒரு சூஃபி. உனக்கு ஆன்மீக விஷயங்களில்தான் அக்கறை இருக்கும். நீ என்னை வெல்ல முடியாது. என்னிடம் அசுர மிருகபலம் இருக்கிறது. உன்னைவிட முப்பது மடங்கு பெரியவன்” என்று பதில் சொன்னான் அந்தப் பிணந்தின்னி அரக்கன்.

“உனக்கு பலப்பரீட்சை செய்து பார்க்கும் ஆசையிருந்தால் இந்தக் கல்லை எடுத்துச் சாறாகப் பிழி பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஒரு சிறு பாறாங்கல்லை எடுத்து அந்த அரக்கனிடம் கொடுத்தார் சூஃபி.

எவ்வளவு முயன்றும், சூஃபி சொன்னபடி, அந்த அரக்கனால் செய்ய முடியவில்லை.

“அது சாத்தியமில்லை. இந்தக் கல்லில் எந்த நீரும் கிடையாது. இருந்தால் அதை எனக்கு நீ காட்டும்” என்று சொன்னான் அரக்கன். சூஃபி அந்த அரையிருட்டு நேரத்தில் அந்தக் கல்லைத் திரும்ப வாங்கினார். தன் பையிலிருந்து ஒரு முட்டையை எடுத்து, கல்லையும் முட்டையையும் சேர்த்துப் பிழிந்தார் சூஃபி.

நீர் வழிவதைக்கண்ட அரக்கன் ஆச்சரியப்பட்டுப் போனான். மக்கள் புரியாத விஷயத்தினைக் கண்டு அசந்து போய் அதன்மேல் அளவுக்கதிகமாக மதிப்பு வைக்கத் தொடங்குவர்.

“நான் இதைப் பற்றி யோசிக்கவேண்டும். என்னுடைய விருந்தாளியாக இன்றிரவு என் குகையில் தங்குங்கள்” என்று சூஃபிக்கு உபச்சார வார்த்தைகள் சொன்னான் அரக்கன்.

சூஃபியும் அரக்கனுடன் போனார். அரக்கனின் குகை அவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான வழிப் பயணிகளின் வைர வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாயக் கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புதக் குகை போலவே அது இருந்தது.

“என்னுடைய பக்கத்தில் படுத்துத் தூங்கு. காலையில் மற்ற விஷயங்களைப் பேசிக் கொள்வோம்” என்று சூஃபியிடம் சொல்லி விட்டு படுத்தவுடன் தூங்கிவிட்டான் அரக்கன்.

தான் ஏமாற்றப் படுவோம் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்த சூஃபி, தந்திரமாக தான் படுக்கையில் இருப்பது போன்ற ஏற்பாடுகளைப் பண்ணி விட்டுத் தூரப்போய் ஒளிந்து கொண்டார்.

அவர் போனதுதான் தாமதம், அரக்கன் படுக்கையிலிருந்து எழுந்தான். பெரிய மரக் கட்டையை எடுத்து சூஃபி படுத்திருந்த இடத்தைப் பார்த்து ஏழு விளாசு விளாசினான்.

அதன் பின் படுத்து மறுபடியும் உறங்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து சூஃபி தனது படுக்கைக்குத் திரும்பினார், அரக்கனைக் கூப்பிட்டார்,

“ஓ அரக்கனே! உனது குகை சௌகரியமாயிருக்கிறது. ஆனால் ஒரு சிறு கொசு மட்டும் என்னை ஏழு தடவை கடித்தது. அதை மட்டும் போக்குவதற்கு நீ எதாவது செய்தாக வேண்டும்” என்றார்.

பெரிய மரக்கட்டையால் அசுர பலத்தில் ஏழு தடவை அடி வாங்கிய பின்பும்.. சூஃபி பேசியது அரக்கனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது .

காலை புலர்ந்தவுடன், அரக்கன் எருமைத் தோலாலான பையை எடுத்து சூஃபியை நோக்கி எறிந்து “கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா. காலைச் சமையல் செய்யலாம்” என்றான்.

சூஃபி அந்தப் பையை எடுக்காமல் – உண்மையில் அந்தப் பையை அவரால் தூக்கி நடக்க முடியாது – பக்கத்திலிருந்த நீர்ச் சுனைக்குச் சென்றார். நீர்ச் சுனையிலிருந்து குகைக்கு ஒரு சிறிய கால்வாயைத் தோண்டினார்.

அரக்கன் தாகத்தால் துடித்தான்.

“ஏன் தண்ணீரை சுமந்து வரவில்லை?” என்று அரக்கன் கேட்டான்.

“பொறுமையோடிரு, நண்பனே! வசந்த கால நீருற்றின் தண்ணீர், உன் குகையின் முகத்துவாரத்துக்கே நிரந்தரமாக வர, கால்வாய் வெட்டியுள்ளேன். அதனால் உனக்கு தண்ணீரைச் சுமந்து வர வேண்டிய அவசியமிருக்காது” என்று பதில் சொன்னார் சூஃபி.

தாக விடாயினால் அரக்கனுக்குப் பொறுக்க முடியவில்லை. எருமைப் பையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போய் நீரைத் தானே நிரப்பிக் கொண்டான் அரக்கன்.

காலைத் தேனீர் தயாரிக்கப்பட்டவுடன், அதைப் பல பீப்பாய்கள் குடித்து முடித்தான் அரக்கன். தேனீர் குடித்தவுடன் அரக்கனுக்கு புத்தி லேசான தெளிவுடன் வேலை செய்ய ஆரம்பித்தது.

“நீங்கள் பலவானாக இருந்தால் – ஏற்கனவே அதை எனக்கு நிரூபித்துவிட்டீர்கள் – இருந்தும் ஏன் அந்தக் கால்வாயை அங்குலம் அங்குலமாக வெட்டுவதற்கு பதில் வேகமாக வெட்டக்கூடாது?” என்று சூஃபியிடம் கேட்டது அரக்கன்.

“உண்மையில் செய்ய வேண்டிய அர்த்தமிக்க வேலைகளை அதற்குரிய உழைப்பைப் போடாமல் செய்து முடிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் அதனளவுக்கு ஏற்றவாறு முயற்சிகள் தேவை. நான் கால்வாயைத் தோண்ட எவ்வளவு அத்தியாவசியமான முயற்சி தேவைப்படுமோ அதை மட்டும் செலவிடுகிறேன். ஆனால், பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஜந்துவான நீ , அந்த எருமைத் தோல் பையைத்தான் எப்போதும் பயன்படுத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும்” என்றார் சூஃபி.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.