ராமு சுயநலவாதியா?

4.3/5 - (11 votes)

ramu-suyanalavathiya

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கிச் செல்கையில், அதனுளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! நீ இந்த பயங்கர மயானத்தில் எதற்காக கஷ்டப்படுகிறாய்?  பரோபகாரச் சிந்தையுடன் பொது நலத்திற்காக இப்படிப் பாடுபடுகிறாயா? ஏன் என்றால் உலகில் பலர் பரோபகாரம், பொதுநலம் என்று பேசுவார்கள். ஆனால் சுயநலவாதிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராமு என்பவனின் கதையை இப்போது சொல்லப் போகிறேன். கதை சொல்லத் தொடங்கியது.

விஜயபுரியில் ரத்னாகரன் என்ற பணக்கார வியாபாரிக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். முதல் இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு தங்கள் தந்தையுடன் கூட இருந்து அவருடைய வியாபாரத்தில் உதவி செய்து வந்தனர். ஆனால் அவருடைய மூன்றாவது பிள்ளையான ராமுவிற்கு மட்டும் வியாபாரத்தில் நாட்டமேயில்லை. இயற்கையிலேயே மிகவும் தயாள குணம் படைத்த ராமு அவனை நாடி யார் எந்த உதவி கேட்டாலும் உடனே செய்து விடுவான். ராமுவின் போக்கு அவன் பெற்றோருக்குக் கவலையளித்தது.

 

ஒருநாள் ராமுவைப் பற்றி ரத்னாகரன் கவலையுடன் தன் நேருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய நண்பர், “எனக்கு ராமுவைப் பற்றி நன்றகாத் தெரியும். மிகவும் தயாள குணம் படைத்தவன். என்னுடைய பெண் மனோரமா மிகவும் புத்திசாலி. அவளை ராமுவிற்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் அவனைத் திருத்தி விடுவாள்” என்றார். நண்பருடைய யோசனை சரியென்று தோன்றவே, ரத்னாகரன் அதற்கு சம்மதிக்க விரைவிலேயே ராமுவின் திருமணம் மனோரமாவுடன் இனிதே நடைபெற்றது. ஒருநாள் மனோரமா ராமுவிடம், “உங்களை உதவி செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் உதவியினால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று நீங்கள் யாருக்கெல்லாம் தானம் கொடுத்தீர்களோ அவர்களிடம் சென்று ஆராய்ச்சி செய்யுங்கள். அவர்கள் உங்கள் உதவியினால் சரியானபடி பயன் அடைந்தார்கள் என்று தோன்றினால், நீங்கள் தானம் செய்து கொண்டேயிருங்கள். இல்லையேல் உங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்” என்றாள்.

 

அதை ஒப்புக் கொண்ட ராமு, முதலில் சமீபத்தில் தான் பண உதவி செய்திருந்த சங்கரன் வீட்டிற்குச் சென்றான். அங்கு சங்கரன் கவலையுடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தான். ராமுவைப் பார்த்து அவன், “நீ தந்த பணத்தில் விருந்து தயாரித்து உண்டதில், என் பிள்ளைக்கும், தந்தைக்கும் உடல் நலம் கெட்டு விட்டது. பணமெல்லாம் விருந்தில் கரைத்து விட்டோம். இப்போது மருத்துவருக்கு வேறு தண்டச் செலவு” என்றான்.

இதுபோல் இன்னும் சிலர் வீடுகளுக்குச் சென்றான். ஆனால்  ஒருவர் கூட ராமு கொடுத்தப் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்தவில்லையென்று தெரிந்தது. ராமு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.

தன் மனைவியிடம் தான் கண்டறிந்ததைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, “நீ சொன்னபடியே தான் நடந்திருக்கிறது. இனிமேலும், நான் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே விரும்புகிறேன். அது அவர்களுக்குப் பயன்படும்படி எந்த முறையில் உதவி செய்யலாம்?” என்று கேட்டான் ராமு. அதற்கு அவள், “மனிதர்களுக்கு மிக முக்கியமானது உடல் நலம்! மருத்துவத் தொழில் மூலம் மற்றவர்களுக்குப் படி உதவி செய்யலாமே!” என்றாள்.

“மருத்துவத் தொழிலா? அதை நான் கற்றுக் கொள்ளவே பல ஆண்டுகள் பிடிக்குமே?” என்று கவலையுடன் கேட்டான் ராமு. “வேதாரண்யத்தில் வைத்தியானந்தா என்ற யோகி இருக்கிறார். அவரிடம் கற்றுக் கொண்டால் ஒரே ஆண்டில் நீங்கள் நல்ல மருத்துவர் ஆக முடியும்” என்றாள் மனோரமா.

 

ராமு உடனே வேதாரண்யம் சென்று வைத்தியானந்தாவிடம் சீடனானான். மனோரமா கூறியதுபோல், ஒரே ஆண்டில் மருத்துவத்தை அவனுக்குக் கற்பித்த யோகி, ஆண்டு முடிவில் அவனிடம், “நீ மிகச் சிறந்த சீடனாக விளங்கினாய். எனக்குத் தெரிந்த அனைத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன். மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் என்னிடம் உள்ளன. அதை இப்போது உனக்குத் தர மாட்டேன்.

 

நீ சுயநலநோக்கமே இல்லாமல், நேர்மையான மருத்துவனாகத் திகழ்கிறாய் என்பது நிரூபணம் ஆன பின்னரே, அதை உனக்குத் தருவேன். சென்று வா!” என்று கூறி அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

விஜயபுரி திரும்பிய ராமு தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறினான். அதற்கு அவள் அவனை நேர்மையாக மருத்துவத் தொழிலைச் செய்யுமாறு கூறினாள். அதன்படியே, ராமு தன் மருத்துவத் தொழிலை புனிதத் தொண்டாகக் கருதி செய்யலானான்.ஓராண்டிற்குப் பிறகு, ஒருநாள் ஒரு சன்னியாசி அவன் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் வரவேற்பறையை அவன் மருத்துவ சாலையாகப் பயன்படுத்தி வந்தான். வாயிலிலே நின்று, சன்னியாசி உள்ளே நடப்பதை கூர்ந்து கவனித்தார். ராமு ஓர் ஏழை நோயாளியை சோதித்துக் கொண்டுஇருக்கையில், தடபுடலாக வந்துஇறங்கிய ஒரு பணக்கார ஆசாமி, “வைத்தியரே! முதலில் என்னை கவனியுங்கள். எத்தனை பணம் வேண்டுமானாலும் தருகிறேன்!” என்றார்.

 

அவரை ஒருமுறை கூர்ந்து பார்த்த ராமு, “ஐயா! இப்போது என்னை இந்த நோயாளியை சோதிக்க அனுமதியுங்கள். உங்களுடைய முறை வரும்போது உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றான்.தற்செயலாக வாயிலில் காத்துக் கொண்டிருந்த சன்னியாசியை நோக்கிய ராமு, “சுவாமி! நீங்கள் சிகிச்சைக்காக வரவில்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து என்னுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்” என்றான்.

 

அதற்கு சன்னியாசி, “அவசரம் இல்லையப்பா! நீ எல்லா நோயாளிகளையும் கவனித்து விட்டு வரும் வரை நான் காத்திருக்கிறேன்!” என்றார். அதன்படியே, ராமு எல்லா நோயாளிகளையும் கவனிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த சன்னியாசி, பிறகு அவனுடன் போஜனம் செய்ய அமர்ந்தார். உண்டு முடித்த பிறகு அவர் ராமுவை நோக்கி, “மகனே! நீ சிகிச்சை செய்யும் முறையை ஆரம்பத்திலிருந்தே கூர்ந்து கவனித்தேன். சுயநல நோக்கு சிறிதுமின்றி, நீ தொழில் புரிந்த விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளைப் பெறத் தகுதியானவன்தான் நீ! உடனே, நீ வேதாரண்யம் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்!” என்றார்.

 

அவர் தன் குருநாதர் வைத்தியானந்தா அனுப்பி வைத்தவர் என்று ராமு புரிந்து கொண்டான். வேதாரண்யம் செல்வதைப் பற்றித் தன் மனைவியுடன் கலந்தாலோசித்து விட்டு வந்தவன். சன்னியாசியிடம், “சுவாமி! என்னைத் தேடி தினமும் இங்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். நான் இல்லாமற்போனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். என்றைய தினம் நோயாளிகள் யாரும் வரவில்லையோ, அன்று வேதாரண்யம் செல்வேன்!” என்றான் ராமு.

இதற்கிடையில் மன்னரின் தாயார் நோய்வாய்ப்பட, அரண்மனையிலிருந்து ஆட்கள் அவனை அழைத்துச் செல்ல வந்தனர். அவர்களிடம், “நான் விஜயபுரியை விட்டுச் சென்று அரண்மனையில் தங்கி மன்னரின் தாய்க்கு வைத்தியம் செய்தால், என்னை நம்பியுள்ள நோயாளிகள் திண்டாடிப் போவார்கள். அதனால், மன்னரின் தாயை இங்கு அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.

 

அதையறிந்த சன்னியாசி மீண்டும் ராமுவிடம் வந்து, “மன்னரின் தாய் என்று அறிந்தும், அவருடைய அதிகாரத்திற்குத் தலை வணங்காமல் நீ உன்னுடைய நோயாளிகளின் நிலைமையே மிகவும் முக்கியமாகக் கருதினாய். நீ தலை சிறந்த மருத்துவனாக மாறத் தகுதியானவன். ஆகவே, நீ உடனே சென்று உன் குருவை சந்தித்து ஓலைச்சுவடிகளைப் பெறுவாய்!” என்றார். அப்போது ராமு மறுத்து விட்டான்.

 

ராமுவின் மனைவி மனோரமா நாளாவட்டத்தில் கவலையுற்றாள். நோயாளிகள் ராமுவை நாடி வராத நாள்களே இல்லை. இப்படியே சென்றால், ராமு எப்போதுதான் தன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெறுவார்? மந்திர  சிகிச்சையும் தன் கணவன் கற்றுக் கொண்டால், இன்னும் பல நோயாளிகள் பலம் அடைவார்கள் எனத் தோன்றியது. ராமுவை வேதாரண்யம் செல்லுமாறு பலமுறை கூறத் தொடங்கினாள். ஆனால் ராமு மறுத்து விட்டான்.

 

மனோரமா சன்னியாசியை அழைத்து ராமுவை எவ்வாறு வேதாரண்யத்திற்கு அனுப்புவது என்று ஆலோசிக்க, அவருடைய யோசனைப்படி தான் நோய்வாய்ப் பட்டது போல் பாசாங்கு செய்தாள். ராமு தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளை அளித்தும், அவள் குணமாகாதது போல் நடித்தாள். சன்னியாசி ராமுவை அழைத்து, “உன் மனைவியின் நோய் மருந்தினால் தீராது மந்திரத்தினால்தான் தீரும்! இப்போதாவது நீ உடனே உன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்று வா!” என்றார். ராமுவும் உடனே வேதாரண்யம் சென்று தன் குருவிடமிருந்து ஓலைச்சுவடிகளை வாங்கி வந்தான்.

அவற்றைக் கற்றுத் தேர்ந்து, தன் மனைவியின் நோய்க்கு மந்திரம் ஓத, அவளும் குணமானதுபோல் நடித்தாள். அன்றுமுதல் ராமு மருந்தினால் தீராத நோய்களையும் மந்திரத்தினால் தீர்த்து வைத்து, அந்தப் பகுதியில் தலைசிறந்த வைத்தியனாகத் திகழ்ந்தான்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! இந்த ராமுவின் சுயநலத்தை என்னவென்று சொல்வது? பலமுறை சன்னியாசி குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லியும் போகாதவன், தன் மனைவியின் பொருட்டு தனது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டான். சுயநல நோக்கம் இன்றி நேர்மையாக மருத்துவத் தொழில் செய்தால் மட்டுமே ஒலைச் சுவடிகளைத் தருவேன் என்று சொல்லிய அவன் குரு அவனுக்கு அவற்றை எப்படித் தந்தார்? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ராமுவை சுயநலக்காரன் என்று சொல்வது முற்றிலும் தவறு. தன் நோயாளிகளை பரிதவிக்க விட்டுவிட்டு குருவிடம் செல்ல மறுத்தது அவன் தன் நோயாளிகளின் மீது கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது. ஆனால் மனைவிக்கே தீராத நோய் எனும் போது எந்தக் கணவனால் சும்மா இருக்க முடியும்? அவளைக் குணப்படுத்த அவன் தன் கொள்கையிலிருந்து விலகி குருவிடம் சென்றது ஒரு போதும் தவறு ஆகாது. ராமுவின் நேர்மையை நன்கு அறிந்து  வைத்து இருந்த குருவும் அதனால்தான் சிறிதுகூட தயக்கமின்றி ஓலைச்
சுவடிகளை அவனுக்கு அளித்தார்” என்றான்.

 

விக்கிரமனுடைய சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 

One Comment

  1. பார்த்தசாரதி
    இந்த இடத்தில் வித்தியாசமான பார்வை விக்கிரமாதித்தருக்கு உள்ளதை வேதாளம் தெரிந்துதான் கேள்வி கேட்கிறது.சரியான பதிலை விக்ரமாதித்தர் கூறினாலும் சரியான காரணம் வேதாளம் கண்டதல்ல.அதாவது பாரபட்சமில்லாமல் மருத்துவம் செய்யும் ராமு ஒரு நோயாளி என்ற வகையில்தான் மனைவிக்கு மருத்துவம் செய்தாரே தவிர மனைவியாக கருதியிருந்தால் உடனடியாக குருவிடம் ஓலைச்சுவடி வாங்க ஓடியிருக்கமாட்டார்.நோயாளிகள் வராத அன்று போகலாம் எனத் தைள்ளிப்போட்டிருப்பார்.நோயாளியை யாராயினும் அவர் நோயைப் போக்கும் மருத்துவராகவே அணுகுவதோடு தான்இந்த மருத்துவத் தொழிலை ஏற்கவே காரணமாயிருந்த மனைவிக்கு நோய் குணமாவது அந்தத்தொழிலுக்கு செய்யும் சேவையாக கருதி உடனே சென்று சுவடிகள் வாங்கிவந்தார்!என்னுடைய இந்தப் பதிலைக் கேட்ட வேதாளம் விக்ரமாதித்தர் சுமந்துவந்த உடலை விட்டுவிட்டு முருங்கைமரத்தில் அதுமட்டும் ஏறிக்கொண்டு விட்டது!
    Reply May 25, 2020 at 4:03 pm

Leave a comment