சுயநலத்தின் விளைவு

4.1/5 - (24 votes)

sunalathain-vilaivu

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.

 

ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி என்பவனின் கதையைக் கூறுகிறேன்” என்று கதை சொல்லலாயிற்று: மாணிக்கபுரியில் வசித்து வந்த பிரபல வியாபாரி பத்மநாபன் தன் ஒரே மகளான பிரத்யுஷாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்.

தன்னுடைய  நண்பரின் மகனான ஆனந்தனுக்கேத் தன் மகளை மணமுடிக்க முடிவும் செய்தார். ஆனால், திடீரென, திருமணத்திற்கு சில தினங்கள் முன் பிரத்யுஷாவிற்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது. அவளால் பேசவே முடியாமல் வாய் அடைத்துப் போனது. இதனால் பத்மநாபன் துடிதுடித்துப் போனார். பல ஊர்களில்இருந்து தலைசிறந்த வைத்தியர்களை வரவழைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. கடைசியில் ஒருநாள் தனஞ்சயன் என்ற வைத்தியர் அவளைப் பரிசோதித்து அவளுடைய நோய் என்னவென்று கண்டு பிடித்தார். அவர் பத்மநாபனை நோக்கி, “உங்கள் மகளின் குரல்வளை நரம்புகள் செயலற்று விட்டன.

 

அதனால் அவளால் பேச முடியவில்லை. இந்த நோயை தசமூலம் எனும் மூலிகையினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மூலிகை வங்காளக் கடலில் உள்ள நாகத்தீவில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அங்கு செல்வது மிகவும் கடினம்!” என்றார்.
வைத்தியர் சொன்னதைக் கேட்டு ஆனந்தன், “வைத்தியரே! நான் பிரத்யுஷாவிற்காக தசமூல மூலிகையை உலகின் எந்தத் திசையிலிருந்தாலும் எடுத்து வருவேன். அந்த முயற்சியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை!” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான்.
அவனைப் பெருமிதத்துடன் பார்த்த தனஞ்செயர், “நீ அந்த மூலிகையை நீ எப்பாடுபட்டாவது எடுத்து வந்தால், அது பிரத்யுஷாவிற்கு மட்டுமன்றி, அதே நோயால் பீடிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கும் பலன் கிடைக்கும். நீ தனியாகச் செல்ல வேண்டாம். உன்னுடன் என் சீடன் சஞ்சய் வருவான். அவனையும் அழைத்துச் செல்!” என்றார்.
ஆனந்தனின் நண்பன் சிவநாதனும் அவனுடன் செல்ல முன் வந்தான். அங்கு இருந்தவர்களில் ஒருவனான கபாலி, “எனக்கு வீரதீர சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் பயணத்தில் நானும் கலந்து கொள்வேன். நால்வருமாகச் செல்வோம்! வெற்றியுடன் திரும்புவோம்!”

ஒரு நல்ல நாளில் நால்வரும் மாணிக்கபுரியை விட்டுக் கிளம்பினர். கால்நடையாகப் பல நாள்கள் சென்றபின் கிழக்குக் கடற்கரையான வங்கக் கடலை அடைந்தனர். ஒரு கட்டுமரப் படகில் நால்வரும் நாகத்தீவை நோக்கிப் பயணித்தனர். முதல் ஐந்து நாள்கள், பயணத்தில் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆறாம் நாளன்று திடீரென ஒரு திமிங்கிலம் தன் வாலைச் சுழற்றி அவர்களுடைய கட்டுமரத்தையடிக்க, அது துண்டு துண்டாக உடைந்தது. நால்வரும் கடலில் மூழ்கினர். ஆனந்தன் கடலுக்குள் மூழ்கவிருந்த சமயம், அவன் நண்பன் சிவநாதன் உடைந்த படகின் ஒரு துண்டை அவனிடம் தள்ளிவிட்டான். தனக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறத் திரும்பினான்.

 

ஆனால் சிவநாதனைக் காணவில்லை. மற்ற இருவரும் சற்றுத் தொலைவில் உடைந்தப் படகுத்துண்டுகளைப் பிடித்துக் கொண்டு மிதப்பது தெரிந்தது. தனக்குதவி செய்த நண்பன் மட்டும் காணாமற்போனதைக் கண்டு ஆனந்தன் வருந்தினான். மிதந்து கொண்டே சென்ற மூவரும், கடலின் நடுவில் இருந்த குன்றுகள் சூழ்ந்த ஒரு தீவில் ஒதுங்கினர். அப்போது வானில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்தது.
அந்தப் பறக்கும் தட்டு அவர்கள் இருக்குமிடத்தில் கீழே இறங்கியது. அதில் மிகவும் வயதான ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் மூவரும் நோக்க, அவர், “பயப்படாதீர்கள்! நானும் உங்களைப் போல் மனிதன்தான்! வானில் பறக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு! அதற்காகக் காலமெல்லாம் முயன்று இந்தப் பறக்கும் தட்டை உருவாக்கினேன்” என்றார். “ஐயா! தசமூலம் எனும் மூலிகையைத் தேடி நாங்கள் நாகத் தீவிற்குப் புறப்பட்டோம். அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று ஆனந்தன் கேட்டான்.

 

“இதுதான் நாகத்தீவு! மலையின் மீது வஞ்சிநகர் என்ற ஊர் உள்ளது. அங்கு இந்தப் பறக்கும் தட்டில்தான் செல்ல வேண்டும்! உங்களில் யாராவது தன் இளமையை எனக்குத் தியாகம் செய்தால், இதை நீங்கள் எடுத்து உபயோகிக்கலாம்!” என்றார் அந்த கிழவர்! உடனே சஞ்சய் தன் இளமையைத் தியாகம் செய்ய முன் வந்தான். ஆனந்தன் அவனைத் தடுத்தும் சஞ்சய் கேட்கவில்லை.

உடனே, கிழவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை சஞ்சய் உச்சரிக்க, அவன் சிறிது நேரத்தில் கிழவனாக மாறினான். கிழவர் குமரனாக மாறினார். குமரனான கிழவர் ஆனந்தனிடம் பறக்கும் தட்டைக் கொடுத்தார்.
பிறகு ஆனந்தன், கபாலி இருவர் மட்டும் பறக்கும் தட்டில் ஏறி வஞ்சிநகரை சேர்ந்தனர்.
வஞ்சிநகரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. அந்த ஊரிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் மிருகங்களின் தலைகளுடனும், மனிதர்களின் உடலுடனும் தென்பட்டனர். கிழவர்களும், கிழவிகளும் மட்டும் முழு மனித வடிவத்தில் இருந்தனர். அங்கு யாரை என்ன கேட்பது, தசமூல மூலிகையை எப்படித் தேடுவது என்று புரியாமல் அவர்கள் அலைந்து
திரிந்து கடைசியில் ஒரு கிழவியின் குடிசையை அடைந்தனர்.
அந்தக் கிழவியிடம் தசமூல மூலிகையைப் பற்றிக் கேட்டனர். அதற்குக் கிழவி, “அந்த மூலிகை இளவரசியின் நந்தவனத்தில் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பெற முடியாது. இளவரசியே இப்போது ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள்” என்றாள்.
“யார் அந்த மந்திரவாதி? ஏன் இந்த ஊரில் இளவயதினர் விசித்திரமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்?” என்று கபாலி கேட்டான். “அது பெரிய கதை! மகாதம்பன் என்ற மந்திரவாதி இளவரசி நந்தினியை அடைய விரும்பினான். ஆனால் இளவரசிக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட மந்திரவாதி இந்த ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் மிருகத்தலைகளுடன் தோன்றுமாறு சபித்து விட்டான். எங்களைப் போன்ற வயதானவர்களை விட்டுவிட்டான். இளவரசி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே, சாபத்தை நீக்கிக் கொள்வான் என்று கிழவி சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக மந்திரவாதி சென்று கொண்டிருந்தான்.

உடனே கபாலி அவன் எதிரில் போய் நின்று, “ஏய் மந்திரவாதி! உன் அக்கிரமத்தை ஒடுக்க நான் வந்துஇருக்கிறேன். மரியாதையாக, உன் சாபத்தைத் திரும்பப் பெறு!” என்று துணிச்சலுடன் கூறினான். “யாரடா நீ? நான் மந்திரவாதி மகாதம்பன்! என்னிடமா விளைாயடுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடன் கூவிக் கொண்டே, அவன் தன் மந்திரக்கோலை உயர்த்தினான். உடனே, சற்றும் எதிர்பாராதவிதமாய், கபாலி அவன் மீது பாய்ந்து அவன் மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டான்.

 

மந்திரக்கோல் கை மாறியதும் தன் சக்தியை இழந்த மந்திரவாதி தப்பியோட முயலுகையில், அவனை ஆனந்தனும், கபாலியும் பிடித்துக் கட்டிப்போட்டனர். உடனே, செய்தி அறிந்த இளவரசி அங்கு வந்து மந்திரவாதியை சிறையிட கட்டளை இட்டாள். பிறகு, ஆனந்தனையும், கபாலியையும் ராஜமரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரம் செய்தாள். அவர்கள் அங்கு வந்ததன் நோக்கத்தையறிந்து, தசமூல மூலிகைகளை வேண்டிய அளவு தன் நந்தவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.
செல்லுமுன், கபாலி அங்குள்ள மக்களுக்கு மந்திரக்கோலைப் பயன்படுத்தி சில மந்திர உச்சாடனங்கள் செய்து சுய உருவம் கொடுத்தான்.

வஞ்சிநகரை விட்டுச் செல்லும் போது ஆனந்தன், “கபாலி!  இனி அந்த மந்திரக்கோல் தேவை இல்லை. அதைத் தூக்கி எறிந்து விடு!” என்றான்.

ஆனால் கபாலி மந்திரக்கோலை தன்னிடமே வைத்துக் கொண்டான். பிறகு, இருவரும் தாங்கள் கிழவரையும், சஞ்சயையும் விட்டு வந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. சிவநாதன் அங்கு உயிருடன் காணப்பட்டான். சஞ்சய் பழையபடி வாலிபனாக மாறிஇருந்தான். கிழவர் பழையபடி கிழவராகவே இருந்தார்.

ஆனந்தனைக் கட்டித் தழுவிய சிவநாதன், “நண்பா! கடல் அலைகள் என்னை வேறு திசையில் தள்ளிவிட்டதால் நான் உங்களைப் பிரிந்து விட்டேன். பிறகு, சிரமப்பட்டு இங்கு வந்து விட்டேன்!” என்றான். கிழவரிடம் பறக்கும் தட்டை ஒப்படைத்துவிட்டு, நால்வரும் மாணிக்கபுரிக்குத் திரும்பினர்.

தசமூல மூலிகையின் மகிமையினால் பிரத்யுஷா விரைவிலேயே குணமடைந்தாள். ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஆனந்தன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியின் மந்திரக்கோலைக் கைப்பற்றித் தன்னுடைமையாக்கிக் கொண்ட கபாலி அதை வைத்து மந்திரவித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்க முயன்றான். ஆனால் அந்த மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி, கபாலியை நன்றாக அடித்துத் துவைக்க, அவன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான்.
இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கபாலியின் கதியைப் பார்த்தாயா? கபாலியின் மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி அவனையே நையப் புடைத்தது. இவ்வாறு நடக்கக் காரணம் என்ன? வாள் பிடித்தவனுக்கு வாளினால்தான் சாவு என்பதுபோல் மந்திரசக்திகளினால் என்றாவது ஒருநாள் அவற்றைக் கையாள்பவனுக்கே தீங்கு நேரும் என்பது உண்மையா? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “நீ சொல்வது சரியல்ல! ஆனந்தனுக்கு  உதவி புரிவதற்காகவே முதலில் அவனுடன் சிவநாதன், சஞ்சய், கபாலி ஆகியோர் சென்றனர். சிவநாதன் தன் நண்பன் கடலில் மூழ்க இருக்கையில் அவனுக்கு உதவி செய்து உயிரைக் காப்பாற்றினான். சஞ்சய் ஆனந்தனின் நோக்கம் நிறைவேற தன் இளமையையே தியாகம் செய்தான். கபாலி மந்திரவாதியிடமிருந்து மந்திரக் கோலை பறித்த பிறகு, அவன் மனத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. மந்திரக்கோலைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்த எண்ணியதால் வந்த விளைவுதான் அது!” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கெண்டது.

3 Comments

  1. sangee
    good
    Reply September 15, 2016 at 3:11 pm
  2. venkat
    super
    Reply November 13, 2018 at 8:26 pm
  3. பார்த்தசாரதி
    விடை அது அல்ல!அந்த மந்திரக் கோல் மனித உருவங்களில் மாற்றம் முதலில் உண்டு பண்ணவும் பிறகு உண்டுபண்ணியதை மாற்றவுமே உபயோகப்பட்டது தான் .மந்திரம் கால் மதி முக்கால் என்பதால் உயிர்உள்ள உடலுக்கு அது (மந்திரக்கோல்) கட்டுப்படும்..மந்திரவாதியிடமிருந்து பிடுங்கிய கபாலி அதைப் பணம் சம்பாதிக்க உபயோகப்படுத்தியபோது பணம் பேயாக்ககூடிய பொருள் என்பதைமறந்தான்.ஆகவே பண ஆசையால் பேயான அவனுக்கு "பிணம் வாயைத் திறக்கும் "என்பது நினைவிலில்லை..பணத்தோடு போகப்போனவன் பிணம்போகும் நீலைக்கு போனவுடன் உடலை மந்திரக்கோல்அடித்துத்துவைத்து விட்டது.வேதாளத்தின் கூற்று ஒரளவு சரி.மந்திரசக்தியைக் கையாள்பவன் அதில் அபரிமித நம்பிக்கைவைத்தால் அறிவை இழந்து அதை உபயோகித்து அழிவைத் தேடிக்கொள்வான்!ஆனால் அதை லட்சியம் செய்யாமலிருந்தால் அது அவனுக்கு அத்தியாவசியத்தில் உதைவும்!
    Reply May 25, 2020 at 3:31 pm

Leave a comment