கந்தர்வனின் சாபம்

3.8/5 - (20 votes)

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்ளிருந்த வேதாளம், விக்கிரமனை நோக்கி, “மன்னா! இந்த நள்ளிரவில், இந்த பயங்கரக் காட்டில் நீ எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய் என்பது புரியவில்லை. யசோதரன் எனும் மன்னன் தனக்கு சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு கந்தர்வன் தனக்குக் கொடுத்த சாபத்தினால் மிகவும் துன்புற்றான். அந்த யசோதரனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்” என்று கதை சொல்லத் தொடங்கியது.

 

நிஷாதபுரியின் மன்னன் யாசோதரன் தன் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். ராஜ்யத்தின் எல்லையிலிருந்த காடுகளிலிருந்து கொடிய மிருகங்கள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால், அவற்றை வேட்டையாடத் திட்டமிட்டு ஒருநாள் அவன் தன் பரிவாரங்களுடன் எல்லையோரக் காடுகளுக்குள் புகுந்தான்.

 

யசோதரன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், வானிலிருந்து ஒரு கந்தர்வனும் ஒரு கந்தர்வப் பெண்ணும் மலையுச்சியில் இறங்கி சற்றே இளைப்பாற அமர்ந்தனர். அமரன் என்ற அந்த கந்தர்வன், கந்தர்வப் பெண்ணான சர்மிளா மீது மிகவும் அன்பு கொண்டிருந்தான். மலை உச்சியில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, அவன் அவளை நோக்கி, “சர்மிளா! இந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள காட்சிகளைப்பார்! ஒவ்வொன்றும் இயற்கையின் எழிலைப் பறைசாற்றுகின்றன. ஆனால் அவை ஒன்றுகூட உன் அழகுக்கு இணையாகாது” என்று கூறினான்.

 

ஆனால் அவள் அவன் சொல்வதைச் சிறிதும் கவனிக்கவில்லை. காட்டில் தன் புரவியில் அமர்ந்து காட்டு விலங்குளைத் துரத்தும் யசோதரனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்து ரசிப்பதைக் கண்டதும், பொறாமையினால் அவன் இதயம் பற்றி எரிந்தது. “நான் உன் அழகில் மயங்கி உன்னை வர்ணித்துக் கொண்டு இருக்கும்போது, நீ ஒரு மனிதனின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாய். பார், இப்போது அவனை என்ன செய்கிறேன் என்று!” என்று சீறிக்கொண்டே யசோதரனுக்கு சாபம் கொடுத்தான்.

திடீரென யசோதரன் ஒரு சித்திரக் குள்ளனாக மாறிவிட்டான். தன் உருவம் மாறிப் போனதைக் கண்ட யசோதரன் பலத்த அதிர்ச்சியடைந்தான். அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு முயல் அவனை மோதித் தள்ளிக் குட்டிக்கரணமடிக்கச் செய்தது. அதைக் கண்டு அமரன் விழுந்து விழுந்து சிரித்தான். “சர்மிளா! பார்த்தாயா அந்த மனிதனின் கதியை?” என்று பரிகாசம் செய்தான்.

 

“அடப்பாவி! என்ன காரியம் செய்து விட்டாய்?” என்று அலறினாள் சர்மிளா. “அவன் குதிரை மீது வாயுவேகமாச் செல்லும் காட்சியைத்தான் ரசித்தேனே தவிர, அவன் அழகில் மயங்கி விடவில்லை. இத்தனை பொறாமை பிடித்தவனா நீ?”  என்று சொல்லிவிட்டு வானில் பறந்து விட, திடுக்கிட்டு போன அமர அவளை சமாதானப்படுத்தியவாறே வானில் அவளைப் பின் தொடர்ந்தான்.

 

அதற்குள் காட்டில் ஒரு சூறாவளிக் காற்றுவீச, சாண் உயரமேயான யசோதரனைக் காற்று மேலே தூக்கிச் சென்றது. பயந்து நடுங்கிப் போன யசோதரன், அந்த சமயம் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு கிளியின் வாலினைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கிளி அண்டை ராஜ்யமான அனந்தபுரியின் இளவரசி ராகலதாவின் வளர்ப்புக்கிளி. தன் தோழிகளுடன் அந்தப்புரத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்த ராகலதா தன் வளர்ப்புக்கிளியின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்த உருவத்தைப் பார்த்து வியப்பு அடைந்தாள்.

சாண் உயரமேயான உருவம், தலையில் சுண்டைக்காய் போல் ஒரு கிரீடம், கடுகுகள் போன்ற விழிகளைக் கொண்ட அந்த விசித்திரமான மனித உருவத்தை அவள் அதுவரை பார்த்ததேயில்லை. அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அதற்குள் அவளது தோழிகள், “ஆகா! இது என்ன அதிசயம்?” என்று கூச்சலிட, ராகலதா யசோதரனைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். அந்த உருவம் அசைவதைக் கண்டு இளவரசி, “ஆகா! இது உயிருள்ள பொம்மை போலிருக்கிறது” என்றாள்.

 

மிக அருகில் ராகலதாவைப் பார்த்த யசோதரன் அவளுடைய அழகில் மதிமயங்கிப் போனான். மணந்தால் அவளையே மணப்பது என்ற தீர்மானித்தான்.
“ராஜகுமாரி! நான் நிஷாதபுரி மன்னன்! நான் எப்படி இத்தகைய உருவத்தைப் பெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் வீராதி வீரன்தான்! என்றாவது ஒருநாள் நான் சுயஉருவம் பெறுவேன்” என்றான் யசோதரன்.

“சாண் உயரத்தில் இருந்து கொண்டு பேச்சைப்பார்!” என்று தோழிகள் கேலி செய்ய, ராகலதா அவர்களை அடக்கினாள்.

 

இளவரசி அவனைத் தன்னுடன் அந்தப்புரத்தில் வைத்துக்கொள்ளத் தீர்மானித்தாள். தினமும் அவனுடன் இரகசியமாகப் பொழுதுபோக்கினாள். ராகலதா நன்றாக ஓவியம் வரையக் கூடியவள்! யசோதரன் எல்லாரையும் போல் சராசரி உயரத்தில் இருந்தால் எப்படியிருப்பான் என்று கற்பனை செய்து, அவனுடைய ஓவியத்தைத் தீட்டினாள்.

 

ஓவியத்தை அவள் பூர்த்தி செய்தபோது, பின்னாலிருந்து அதை கவனித்த யசோதரன், “ராகலதா! நீ ஓவியத்தில் வரைந்துள்ளதை போல் ஒரு நாள் கட்டாயம் மாறுவேன். அன்று என் மனத்தைத் திறந்து சொல்வதாக இருந்தேன். ஆனால் இப்போதே அதைச் சொல்கிறேன். நான் உன்னிடம் அன்பு கொண்டு உள்ளேன். சுயஉருவம் பெற்றபின் உன்னையே மணப்பேன்” என்றான். ராகலதா அதைக் கேட்டு நாணத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

One Comment

  1. பார்த்தசாரதி
    கதையின் முடிவு காணப்படாததால் கதையை நாம்தான் முடிக்கவேண்டும்!கந்தர்வப் பெண் ஷர்மிளாவின் கோபத்துக்கு ஆளான கந்தர்வன் அமரன் எப்படி அவனை அடைவது எனயோசித்தவாறே பூலோகம் வந்தான்.நிஷாதபுரி மக்கள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னன் திரும்பவராதது குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு அவன்யார் எங்கிருக்கிறான் என உணர்ந்து ராகவதா இல்லாத சமயம் அவள் அந்தப்புரத்தை அடைந்து யசோதரனைச் சந்தித்தான்.தான்தான் சாபமிட்டது எனக்கூறாமல் தனக்கு ஷர்மிளாவை அடைய வழிசொன்னால் அவனை பழைய வடிவத்தில் மாற உதவுவதாக கூறினான்.வழி சொல்வதாக கூறி மறுநாள் வரச்சொல்லி கந்தர்வனை அனுப்பிவிட்டு ராகவதா வந்தவுடன் அவளிடம் கந்தர்வனைப் பற்றிக் கூறி அவனுடன் கந்தர்வலோகம் சென்று ஷர்மிளாவின் மனத்தை மாற்றினால் தனக்கு பழயவடிவம் கிடைக்கும் என்று கூற அவள் சம்மதித்தாள்.மூவரும் கந்தர்வலோகம் செல்ல ஷர்மிளா அவர்கள் வந்த காரணத்தை தெரிந்து கொண்டு யசோதரன் சித்திரக்குள்ளனாக மாறியது எப்படி எனக் கூறிவிட்டாள்.உடனே அமரன் தலைகுனிந்தான்!ராகவதா ஷர்மிளாவிடம் அமரனை மன்னிக்குமாறு வேண்ட அதற்குள் அமரன் சித்திரக்குள்ளனாகினான்.யசோதரன் மீண்டு பழயவடிவம் பெற்றான். அதைக் கண்ட ஷர்மிளா அமரனை மன்னிக்குமாறு யாசோதரனை வேண்ட அவனும் மன்னித்தான்.உடனே அமரன் பழயபடி ஆனான்.கதையைச் சட்டென்று நிறுத்திய வேதாளம் விக்ரமனிடம்"ஷர்மிளா யைசோதரன் சாபக்கதையை கூறியதும் எப்படி அவன் பழயவடிவம் பெற்றான்.பிறகு யசோதரன் மன்னித்ததும் அமரன் எப்படி பழயவடிவத்துக்கு வந்தான்?இந்தக் கேள்விக்கான சரியானவிடையை நீ கூறிவிட்டால் நான் மீண்டும் மரத்தில் ஏறி விடுவேன்.விடைதெரீந்தும் கூறாவிட்டால் உன் தலைவெடித்து சுக்கலாகிவிடும்"என்றது.உடனே விக்ரமன் "ஷர்மிளா உண்மையை கூறியதை சித்திரக்குள்ளனாக இருந்த யாசோதரன் மற்றும் ராகவதா இருவரும் கேட்டனர்.அவள் ஷர்மிளாவிடம் அமரனை மன்னிக்க வேண்டினாள்.அப்போது அமரன் முன்பு அவள்மேல் கொண்ட தவறான எண்ணம் கழலவே அதற்குமேல் யசோதரனிடம் சாபம் வேலைசெய்யமுடியாமல் அமரனுக்காக ராகவதா பரித்ததை சாக்காக வைத்து யசோதரனிடம் விடுபட்டு அமரனை இலக்காக வைத்தது.ஏனெனில் சாபத்தைப் பொறுத்தவரை இலக்கு என்பது முந்தைய காரணம் தற்போது எந்த மனிதனுக்கு பொருந்துகிறதோ அதான்.முன்பு யசோதரன் மேல் ஷர்மிளா பரிவுகாட்டியதாக கருதப்பட்டதைப்போல் இம்முறை அமரன்மேல் ராகவதா பரிவுகாட்டியதாக கருதப்பட்டு பாய்ந்தது.ஆனால் மசோதரனின் அப்பழுக்கற்ற குணத்தினால் முன்பு அமரன் செய்த தவறு மறையவே அந்தத் தவறினால் வந்த சாபம் அழிந்தது!"விக்ரமனின் இந்த சரியான பதிலால் அவனது மௌனம் கலைய வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு கிளம்பி மீண்டும் மரத்தின்மேல் ஏறிக்கொண்டது.
    Reply May 26, 2020 at 11:23 am

Leave a comment