சிறுவர் கதைகள் – எள்ளு போச்சு! எண்ணெய் வந்தது!

ஓர் ஊரில் உழவன் ஒருவன் இருந்தான். அவன் பெரிய மீசையுடன் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தான். உழுவதற்காக அவன் வைத்திருந்த கலப்பை உடைந்து விட்டது.

புதிய கலப்பை செய்வதற்கு மரம் வெட்டுவதற்காகப் பக்கத்திலிருந்த காட்டுக்குள் நுழைந்தான் அவன்.

அங்கிருந்த பெரிய மரம் ஒன்றைத் தேர்ந்து எடுத்தான். “நல்ல வைரம் பாய்ந்த மரம். இதில் கலப்பை செய்தால் நீண்ட காலம் உழைக்கும்” என்று சொல்லிக் கொண்டே கோடரியால் உதை வெட்டத் தொடங்கினான்.

அந்த மரத்தில் நிறைய பேய்கள் குடி இருந்தன. அந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு அவை பயந்து நடுங்கின.

மரத்தை விட்டுக் கீழே இறங்கிய எல்லாப் பேய்களும் அவன் காலில் விழுந்தன.

பேய்களைக் கண்ட அவனுக்கு அச்சத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று நடுங்கியபடியே இருந்தான்.

கிழப்பேய் ஒன்று, “ஐயா! இந்த மரத்தில் நாங்கள் பரம்பரையாக வாழ்ந்து வருகிறோம். எதற்காக இதை வெட்டுகிறீர்கள்? எங்களுக்கு வாழ்வு கொடுங்கள்” என்று கெஞ்சியது.

இதைக் கேட்டதும் அவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது. தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்டான்.

பேய்களைப் பார்த்து அதிகாரக் குரலில், “நிலத்தில் எள் விதைக்க வேண்டும் புதிய கலப்பை செய்வதற்காக இந்த மரத்தை வெட்டுகிறேன். நீங்கள் என் காலில் விழுந்ததால் பிழைத்தீர்கள். இல்லையேல் உங்களை எல்லாம் ஒழித்து இருப்பேன். என் வீட்டுத் தோட்டத்தில் பத்துப் பேய்களைக் கட்டி வைத்து இருக்கிறேன்” என்று கதை அளந்தான் அவன்.

“ஐயா! மரத்தை வெட்டாதீர்கள். நாங்கள் வேறு எங்கே போவோம்? எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்” என்று எல்லாப் பேய்களும் அவன் காலைப் பிடித்துக் கொண்டு அழுதன.

“கலப்பை இல்லாமல் நான் என்ன செய்வேன்? என்னிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள். மரத்தை வெட்டியே தீருவேன்” என்றான் அவன்.

கிழப்பேய் அவனைப் பார்த்து, “ஐயா! உங்கள் நிலத்தில் ஓராண்டிற்கு எவ்வளவு எள் விளைகிறது?” என்று கேட்டது.

“ஐம்பது மூட்டை எள்?” என்றான் அவன்.

“ஆண்டிற்கு நூறு மூட்டை எள் நாங்கள் தருகிறோம். இந்த மரத்தை வெட்டாதீர்கள்” என்று கெஞ்சியது அது.

உங்கள் மீது இரக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாமல் விடுகிறேன். ஒவ்வோர் ஆண்டும் அறுவடை நேரத்தில் நூறு மூட்டை எள் வந்தாக வேண்டும். வரத் தவறினால் இந்த மரத்தை வெட்டுவதோடு நிற்க மாட்டேன். உங்களையும் அழித்து விடுவேன்” என்றான் அவன்.

“எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. நாங்கள் சொன்ன சொல் தவற மாட்டோம்” என்றது அந்தப் பேய்.

மகிழ்ச்சியுடன் அவனும் வீடு வந்து சேர்ந்தான்.

அறுவடைக் காலம் வந்தது. பல இடங்களில் விளைந்த எள்ளைப் பேய்கள் திருடின. எப்படியோ நூறு மூட்டை எள்ளைச் சேர்த்து அவனிடம் கொண்டு வந்தன.

பேய்களைப் பார்த்து அவன், “சொன்னபடியே எள் கொண்டு வந்து இருக்கிறீர்கள். என்னை ஏமாற்ற முயன்றால் நான் பொல்லாதவனாகி விடுவேன். ஆண்டு தோறும் இப்படியே வர வேண்டும்” என்று மிரட்டி அவற்றை அனுப்பி வைத்தான்.

நடுங்கியபடியே பேய்கள் அங்கிருந்து சென்றன.

சில நாட்கள் கழிந்தன. புதுப்பேய் என்ற பெயருடைய பேய் தன் உறவினர்களைப் பார்க்க அங்கு வந்தது. எல்லாப் பேய்களும் இளைத்துத் துரும்பாக இருப்பதைக் கண்டது அது.

“சென்ற ஆண்டு உங்களைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இன்றோ மெலிந்து சோகத்துடன் காட்சி அளிக்கிறீர்கள். என்ன நடந்தது? சொல்லுங்கள்” என்று கேட்டது அது.

நடந்தது அனைத்தையும் சொன்னது ஒரு பேய்.

“நூறு மூட்டை எள்ளைத் தேடி அலைவதிலேயே எங்கள் காலம் கழிகிறது” என்று எல்லாப் பேய்களும் வருத்தத்துடன் சொல்லின.

புதுப்பேயால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “நீங்கள் இவ்வளவு முட்டாள்களா? நாம் பேய்கள் அல்லவா? நமக்குத்தான் மனிதர்கள் பயப்பட வேண்டும். நாம் அவர்களுக்குப் பயப்படலாமா?” என்று கேட்டது.

“அவன் சாதாரண மனிதன் அல்ல. எத்தனையோ பெரிய பேய்களை வீட்டில் கட்டி வைத்து இருக்கிறான். எதற்கும் அஞ்சாத முரடன். அதனால்தான் நூறு மூட்டை எள் தர ஒப்புக் கொண்டோம்” என்றது ஒரு பேய்.

“போயும் போயும் ஒரு மனிதனுக்கா அஞ்சுகிறீர்கள்? வெட்கம்! வெட்கம்! இன்றே அவனைக் கொன்றுவிட்டுத் திரும்புகிறேன்” என்று புறப்பட்டது புதுப்பேய்.

“வேண்டாம். நாங்கள் சொல்வதைக் கேள். நீ அவனிடம் மாட்டிக் கொண்டு துன்பப்படப் போகிறாய்” என்று எச்சரித்தன மற்ற பேய்கள்.

உழவனின் வீட்டிற்குச் சென்றது புதுப்பேய். வாய்ப்பை எதிர்பார்த்து மாட்டுத் தொழுவத்தில் பதுங்கி இருந்தது அது.

வெளியூரில் இருந்து வாங்கி வந்த பல மாடுகள் அங்கே கட்டப்பட்டு இருந்தன. புதுப்பேய் என்ற ஊரில் வாங்கிய மாடும் அவற்றுள் ஒன்று. அது முரட்டு மாடாக இருந்தது.

புதிய மாடுகளுக்கு அடையாளம் தெரிவதற்காக சூடு வைக்க நினைத்தான் அவன்.

தன் வேலைக்காரனைப் பார்த்து, “டேய்! அந்தப் புதுப்பேயை இழுத்து வந்து கட்டு. பழுக்கக் காய்ச்சிய இரும்புத் துண்டால் பெரிய சூடு போட வேண்டும். வெளியூர் என்பதால் நம்மைப் பற்றித் தெரியாமல் ஆட்டம் போடுகிறது. சூடு போட்டவுடன் அதுவும் இங்குள்ளவை போல ஆகிவிடும். ஒழுங்காகப் பணிந்து நடக்கும்” என்று உரத்த குரலில் கத்தினான் அவன்.

பதுங்கி இருந்த புதுப்பேய் இதை கேட்டு நடுங்கியது. “ஐயோ! எல்லாப் பேய்களும் தடுத்தனவே! என் ஆணவத்தால் அவற்றை மீறி வந்தேனே! பெரிய மீசையுடன் இருக்கும் இவனைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே. சிறிதும் இரக்கம் இல்லாதவன் போலத் தோன்றுகிறான். நாம் நன்றாக மாட்டிக் கொண்டோம். தப்பிக்க வழியே இல்லை. நமக்குப் பெரிய சூடு போடத்தான் போகிறான். என்ன செய்வது?” என்று குழம்பியது அது.

மாட்டைக் கட்டுவதற்காக உழவன் பெரிய கயிற்றுடன் வந்தான்.

அவன் கால்களில் விழுந்த புதுப்பேய், “ஐயா! என்னை மன்னித்து விடுங்கள். தெரியாமல் நான் இங்கே வந்து விட்டேன். எனக்குச் சூடு போட்டு விடாதீர்கள்” என்று கெஞ்சியது.

தன் நடுக்கத்தை மறைத்துக் கொண்ட அவன், “என் எதிரில் வர உனக்கு என்ன துணிச்சல்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடுன் கத்தினான்.

இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது அது, “எல்லாப் பேய்களும் என்னை உங்களிடம் அனுப்பி வைத்தன” என்று பொய் சொன்னது.

“எதற்காக அனுப்பினார்கள்? உண்மையைச் சொல். இல்லையேல் உன்னைத் தொலைத்து விடுவேன்” என்று இடிக்குரலில் முழங்கினான் அவன்.

“பேய்கள் உங்களுக்கு ஆண்டுதோறும் நூறு மூட்டை எள் தருகின்றன. நீங்கள் அவற்றை எண்ணெய் ஆக்குவதற்காக ஏன் துன்பப்பட வேண்டும்?” எள்ளுக்குப் பதில் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாக அவை முடிவு எடுத்தன.

உங்களுக்கு எள் வேண்டுமா? எண்ணெய் வேண்டுமா? இதைத் தெரிந்து வருவதற்காக என்னை அனுப்பி வைத்தன. உங்களுக்கு என்ன வேண்டும்? சொல்லுங்கள்” என்று நடுங்கியபடியே கேட்டது அது.

“இனிமேல் எனக்கு எள் வேண்டாம். எண்ணெயாகவே தாருங்கள். ஏதேனும் தவறு நடக்குமானால் உங்கள் அனைவரையும் தொலைத்து விடுவேன். ஓடு.” என்று விரட்டினான் அவன்.

எப்படியோ தப்பித்தோம் என்று ஒரே ஓட்டமாக ஓடியது அது. மூச்சு வாங்கக் காட்டை அடைந்தது.

அதன் நிலையைப் பார்த்த மற்ற பேய்களும் என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது.

“என்ன புதுப்பேயே? வீரம் பேசிவிட்டுச் சென்றாயே? அவனைக் கொன்று விட்டாயா?” என்று கேலியாகக் கேட்டது ஒரு பேய்.

“உங்கள் பேச்சைக் கேட்காதது தப்புதான். முரடனான அவனிடம் நான் நன்றாகச் சிக்கிக் கொண்டேன். எனக்குப் பெரிய சூடு வைத்து இருப்பான். அதை இப்பொழுது நினைத்தாலும் என் உள்ளம் நடுங்குகிறது” என் அறிவு வேலை செய்தது. எப்படியோ அவனிடம் இருந்து தப்பி விட்டேன்? என்றது புதுப்பேய்.

“அவன் பெரிய ஆளாயிற்றே! அவனிடம் என்ன சொல்லித் தப்பினாய்?” என்று கேட்டது ஒரு கிழப் பேய்.

“நூறு மூட்டை எள்ளாகத் தருவதா? அல்லது நூறு பீப்பாய் எண்ணெயாகத் தருவதா? என்று கேட்டு வர நீங்கள் அனுப்பியதாகச் சொன்னேன். அவனும் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெயே தருமாறு கட்டளை இட்டான்” என்று நடந்ததைச் சொன்னது புதுப்பேய்.

“என்ன காரியம் செய்துவிட்டாய். நூறு மூட்டை எள்ளைக் கொடுத்துவிட்டு நிம்மதியாக இருந்தோம் இனிமேல் நூறு பீப்பாய் எண்ணெய் தருவதாகச் சொல்லி விட்டு வந்திருக்கிறாய். அவ்வளவு எண்ணெயைச் சேர்ப்பதற்காக நாங்கள் தூக்கம் இல்லாமல் துன்பப்பட வேண்டும். நாங்கள் தடுத்தும் நீ கேட்கவில்லையே. இனி என்ன செய்வது” என்று வருத்தத்துடன் புலம்பின அங்கிருந்த பேய்கள்.

எல்லாப் பேய்களும் தங்கள் தலைவிதியை நொந்து கொண்டன. ஆண்டுதோறும் உழவனுக்கு நூறு பீப்பாய் எண்ணெயைத் தந்து வந்தன.

“தன் அறிவுக்கூர்மை தன்னைக் காப்பாற்றியது. உழைக்காமலேயே வளமாக வாழும் வாய்ப்பும் வந்தது” என்று மகிழ்ந்தான் அவன்.

One Comment

  1. manikandan
    enaku intha kathai than romba pudichuruku. itha mathiri inum creative,interesting,funny kathaikal panna continue pannunga. nivu shetty. 4th standard.
    Reply November 28, 2018 at 9:09 pm

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.