ஷிர்டி சாய் பாபா பகுதி – 7

3.7/5 - (4 votes)
TN_20140305120302001286

பாபவின் அனுமதியின் பேரில் உருஸ் விழாவும், ராமநவமி விழாவும் சேர்ந்து கொண்டாடப்பட்ட நாள் அது. இந்து பக்தர்கள் ராம ஜனனத்தை உணர்த்தும் வகையில் பாபா முன்னிலையில் ஒரு தொட்டிலைக் கொண்டுவந்து வைத்தார்கள். ராம சரிதக் கீர்த்தனைகளைப் பாடலானார்கள். தொட்டிலையே பார்த்தவாறிருந்த பாபாவின் விழிகள் செக்கச் செவேலெனக் கனலாய்ச் சிவந்தன. அவரிடமிருந்து உலகையே நடுங்கச் செய்யும் ஒரு கம்பீரமான கர்ஜனை புறப்பட்டது…….. அண்ட பகிரண்டங்களும் அந்த கர்ஜனையைக் கேட்டு நடுநடுங்கின. பூமி நடுங்கி பூகம்பம் வருமோ என்ற அச்சம் ஏற்பட்டது. பக்தர்கள் திகைத்தார்கள். தாங்கள் செய்த தவறென்ன? ராம நவமி கொண்டாட்டத்திற்கு அனுமதி கொடுத்தவர் பாபா தானே? அப்படியிருக்க அவருக்கு ஏன் இத்தனை கோபம்? மெல்ல மெல்லத்தான் அவர்களுக்கு விஷயம் விளங்கியது. தொட்டிலில் ராமக் குழந்தை படுத்திருப்பதாகக் கருதி, அவர்கள் பாடிய பாடல்களின் பொருள்தான் பாபாவின் சீற்றத்தைத் தூண்டியிருக்கிறது. கிருஷ்ணக் குழந்தையைப் போல் ராமக் குழந்தைக்கு பால லீலைகள் என்று அதிகம் எதுவுமில்லையே? கண்ணன் என்றால் கோகுலத்தில் அவன் நிகழ்த்திய ஏராளமான விளையாட்டுகளைப் பாடலாம்.

காளியமர்த்தனத்தையும், கோவர்த்தன கிரியை அவன் தூக்கியதையும் பாடலாம். கண்ணன் வெண்ணெய் திருடியது உள்பட இன்னும் எத்தனையோ செயல்களைச் சொல்லி அவனைத் தாலாட்டலாம். ஆனால், ராமக் குழந்தைக்குத் தாலாட்டுப் பாட வேண்டுமானால் கூட, ராமன் பிற்காலத்தில் செய்த ராவண வதம் உள்ளிட்ட சாகசங்களைச் சொல்லித்தானே தாலாட்ட வேண்டியிருக்கிறது? அப்படியெல்லாம் அசுரர்களை வதம் செய்யப் போகிறாய் நீ என்றுதானே எதிர்காலத்தை முன்வைத்து நிகழ்காலத்தில் பாட வேண்டியிருக்கிறது? ராமனுக்குத் தாலாட்டுப் பாடிய குலசேகர ஆழ்வார் கூட, மன்னுபுகழ் கோசலை மணிவயிறு வாய்த்தவனே! என்று பாடியபின், தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் என்று ராவண வதம் குறித்துச் சொல்லித்தானே தாலாட்டுகிறார்! பக்தர்கள் பாடிய பாடல்களில் ராவண வதம் உள்ளிட்ட செய்திகள் வருவதைக் கூர்ந்து கேட்டார் பாபா. அதையெல்லாம் நிகழ்த்தக் கூடிய ராமக் குழந்தை தொட்டிலில் படுத்திருப்பதாகவே உணர்ந்தார். பாடல்களைக் கேட்கக் கேட்கச் சற்றுநேரத்தில் அவர் ராம பாவனையில் தோய்ந்து ராமனாகவே மாறிவிட்டார். ராவண வதம் நிகழ்த்தப் போகிறவனே! என்று பக்தர்கள் பாடியவுடன் பாபா ராமனாக மாறி ராவண வதம் நிகழ்த்தத் தயாராகிவிட்டார். ராவண வதத்தின் முன்பாக ராமனுக்கு ஏற்பட்ட அதே அளவுகடந்த சீற்றம், பாபாவிடமும் தோன்றிவிட்டது. அதனால் தான் அந்த கர்ஜனை! பக்தர்கள் பாபாவின் பாதங்களில் விழுந்து பணிந்தார்கள்.

அவர் சீற்றம் தணிய வேண்டும் என்று பிரார்த்தித்தார்கள். மெல்ல மெல்ல பாபா அமைதியானார். ஒரு விஷயம் அங்கிருந்த பக்தர்களில் சிலருக்குத் தெளிவாகப் புரிந்தது. ராவணன் என்பதென்ன? காமம் குரோதம் முதலிய பகை உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவகம் தானே! பாபா ராமனாக மாறிச் சீற்றம் கொண்டதன் மூலம் பக்தர்களின் மனத்தில் உள்ளே பதுங்கியிருந்த ராவண உணர்வுகளை வதம் செய்துவிட்டார். தங்கள் மனம் தீய நினைவுகளை அகற்றித் தூய நினைவுகளில் தோய்வதை உணர்ந்து அவர்கள் நெக்குருகினார்கள். பாபாவின் அருளாவேசத்தால் ராவண உணர்வுகளின் ஆதிக்கம் ஷிர்டியை விட்டு விரட்டப்பட்டு, அது புனிதத் திருத்தலமாக மாறியிருப்பதை உணர்ந்தார்கள். ஆக, அங்கே கொண்டாடப்பட்ட உருஸ் மற்றும் ராம நவமி விழா மூலம் சொர்க்கத்தின் பவித்திர உணர்வலைகள் ஷிர்டியில் நிலைகொண்டன. பாபாவின் பக்தர்களின் மனங்களிலெல்லாம் சாந்தியும், இன்னதென்று அறியாத ஆனந்த உணர்வும் நிலவத் தொடங்கின. ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஞ்சநேய உபாசனை நிகழ்த்தியதைப் பற்றி பரமஹம்சர் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதுகிறார், அவரது நேரடிச் சீடரான சாரதானந்தர். அந்தக் காலங்களில் பரமஹம்சர் மரங்களின் மேலேயே வசித்ததாகவும் தேங்காயையே சாப்பிட்டதாகவும், மரத்தின் மேலிருந்தே சிறுநீர் கழித்ததாகவும் எழுதும் அவர் சொல்லும் ஒரு தகவல் விந்தையானது. பாபாவின் உணர்வோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியது.

பரமஹம்சர் ஆஞ்சநேய உபாசனை முடிந்து மரத்தை விட்டு இறங்கி வந்தபின், அவரது முதுகுத் தண்டின் கீழே வால்போல் ஒரு பகுதி வளர்ந்திருந்ததாகவும் பின்னர் நாள்பட நாள்பட அது மறைந்ததாகவும் எழுதுகிறார் சாரதானந்தர். கடவுள் சக்தியைத் தங்களில் இறக்கிக் கொண்டு கடவுளாகவே வாழும் மகான்களின் உணர்வுநிலையின் உச்சம் அத்தகையது. அத்தகைய உணர்வின் உச்ச நிலையைத் தான், ஷிர்டி பாபாவின் மன நிலையும் பிரதிபலித்தது. பாபா ஷிர்டியில் உள்ள எல்லா ஆலயங்களையும் பழுதுபார்க்கச் செய்தார். பிள்ளையார் கோயில், சிவன் கோயில், கிராம தேவதைக்கான கோயில், மாருதி கோயில் என எல்லாக் கோயில் மேலும் அக்கறை செலுத்தினார். தாத்யா பாடீல் என்ற அன்பர் மூலமாக, பழுதுபார்க்கும் பணிகளை நிர்வகித்தார். பாபா, பக்தர்களிடம் தட்சணை கேட்பதுண்டு. தட்சணை காலணா அரையணாவாகக் கூட இருக்கும். ஆனால், கேட்டு வாங்கிப் பெற்றுக் கொள்வார். ஒருவேளை தட்சணை மூலமாக அடியவர்களின் முன்வினைகளைத் தாம் வாங்கி, அழிக்கிறாரோ என்னவோ? அப்படிப் பெற்ற தட்சணைத் தொகையை பாபா தாம் வைத்துக் கொள்வதில்லை.

பதினைந்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய் என மற்றவர்களுக்கு வினியோகித்து விடுவார். சிலரிடம், அவர் அதட்டி தட்சணை வாங்கியதும் மற்றவர்களைக் காப்பாற்றுவதற்காகவே! தம் அடியவர்கள் யாரும் எந்தக் கஷ்டமும் படக் கூடாது என்பதில் பாபா தீவிரமாக இருந்தார். அவரைச் சரணடைந்தவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி, எந்தத் துன்பத்தையும் அடைந்ததில்லை. பாபாவின் அருள் ஒரு கவசமாய் அவரின் அடியவர்களைத் துயரம் தாக்காதவாறு காத்துக் கொண்டிருக்கிறது. ஒருமுறை ஒரு பிரமுகர் பாபாவை தரிசிப்பதற்காக, அதிகாலையில் மசூதிக்குச் சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி அவரைத் திக்பிரமை அடையச் செய்தது. இறைவா, இதைக் காணவா எனக்குக் கண்கொடுத்தாய்? என்று அவர் மனம் பதறியது. மசூதியில் பாபாவின் தலை ஒருபுறமும், கை கால்கள், உடல் ஆகியவை வேறுபுறங்களிலும் தனித்தனியே சிதறிக் கிடந்தன. பாபாவை இப்படிச் செய்யுமளவு அவருக்கு விரோதிகள் யாருமில்லையே? பக்தரின் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் பெருகியது.  அவர் பெரும் பீதியடைந்தார். உடன் இத்தகவலை ஷிர்டி கிராம அதிகாரிகளிடம் சென்று தெரிவிக்க வேண்டும். ஆனால், அப்படித் தெரிவித்தால் அது தன் தரப்பில் நல்லதாக இருக்குமா? முதலில் பார்த்தவன் என்பதால், அந்தச் சம்பவத்திற்கான பொறுப்பு தன்மேல் சுமத்தப்பட்டு விடுமோ? அவர் அச்சத்தோடும் குழப்பத்தோடும் தம் வீடுநோக்கி நடந்தார். பயத்தில் அவர் கைகால்கள் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தன.

Leave a comment