ஷிர்டி சாய் பாபா பகுதி – 2

TN_20140304174739471852

ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபாவடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர் அதிகாலை… வேப்ப மரத்தடிக்கு வந்த சிலர் வியப்போடு மரத்தடியை வைத்த கண் வாங்காமல் பார்க்கலானார்கள். காலையில் சூரியன் தோன்றும். ஆனால், இன்று அங்கே ஒரு வெண்ணிலவல்லவா தோன்றியிருக்கிறது! பளீரென்று பிரகாசமாக ஓர் இளைஞன் மர நிழலில் சாந்தி தவழும் முகத்தோடு அமர்ந்திருந்தான். மானிடனா… இல்லை தேவனா… இத்தனை பேரழகை மனிதர்களிடம் பார்க்க முடியுமா! கண்ணும் மூக்கும் பிற அங்கங்களும் சேர்ந்து யாரோ சிற்பி சர்வ லட்சணமான ஒரு சிற்பத்தைச் செய்து அங்கே கொண்டுவைத்த மாதிரியல்லவா இருக்கிறது!

அவனைப் பார்க்கப் பார்க்கப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது. பார்த்த கண்கள் தித்தித்தன. அந்த வாலிபன் முகத்தில் தென்பட்ட தூய்மையும் குழந்தைத்தனமும் பார்ப்பவர் நெஞ்சங்களை அள்ளிச் சாப்பிட்டன. அப்படியொருவன் அங்கே அமர்ந்திருக்கிறான் என்ற செய்தி விறுவிறுவென அந்தச் சிற்றூரில் எங்கும் பரவியது. எல்லோரும் வேப்ப மரத்தடியில் ஒன்றுகூடி விட்டார்கள். இந்த அழகான பெரிய பொம்மை பேசுமா? வியப்போடு சில குழந்தைகள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதுவரை எங்கிருந்தான்? இப்போது திடீரென்று எங்கிருந்து இங்கு வந்தான்? இவன் யார்? மனத்தை மயக்குகிறதே இவன் தோற்றம்? வயது பதினைந்து அல்லது பதினாறு இருக்குமா? இப்போது இவன் இங்கே வந்திருப்பதன் நோக்கமென்ன?நேரம் கடந்து கொண்டிருந்தது. வெய்யில் ஏறத் தொடங்கிவிட்டது. அவன் எல்லோரையும் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தவாறே அமர்ந்திருந்தான். யாரப்பா நீ? என்று யாராவது விசாரிக்க வேண்டாமோ? யாருக்கும் என்ன கேட்பதென்றே தோன்றவில்லை. திகட்டத் திகட்ட அவனது அருள்பொங்கும் முகத்தைப் பார்த்துக்கொண்டே நின்றார்கள் அனைவரும். அவர்களிடையே கணபதிராவ் கோட்டி படேல் என்பவரும் அவரது மனைவி பாய்ஜா பாயியும் நின்றிருந்தார்கள்.

திடீரென பாய்ஜா பாயி பதட்டம் அடைந்தாள். அவனைப் பார்க்கும்போது குழந்தைஇல்லாத அவள் மனத்தில் தாயன்பு பொங்கியது. இந்தப் பிள்ளை சாப்பிட்டானோ! இல்லையோ! பசிக்குமே இவனுக்கு! அவள் தன் கணவரிடம், ஒருநிமிஷம், இதோ வந்துவிட்டேன்! என்றவாறே வீட்டுக்கு ஓடினாள். அவசர அவசரமாக நான்கைந்து சப்பாத்திகளைத் தயார் செய்தாள். தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் சப்ஜியும் தயாரித்தாள். அவற்றை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, ஒரு லோட்டாவில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு மீண்டும் வேப்பமரத்தடிக்கு ஓடி வந்தாள். கூட்டத்தின் நடுவே புகுந்து இளைஞன் அரு@க வந்து சேர்ந்தாள். வியர்வை வழிந்த முகத்தை முந்தானையால் ஒற்றிக்கொண்ட அவள், மகனே! நீ எப்போது சாப்பிட்டாயோ.. என்னவோ? கொஞ்சம் சப்பாத்தி எடுத்துக்கொள் அப்பா! என்றவாறே பாத்திரத்தைத் திறந்து அவன்முன் வைத்தாள். அவன் அவளையே பாசம் பொங்கப் பார்த்தவாறிருந்தான். முன்பின் அறிமுகமில்லாத மனிதர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களின் பசியைப் போக்க வேண்டும் என்று நினைக்கிறாளே! இவளின் இந்த உணர்வில் அல்லவா இறைவன் குடியிருக்கிறான்! அவன் தேனை விட இனிமையான தெய்வீகக் குரலில் பேசலானான்: பாய்ஜாபாயி! நீ செய்த சப்பாத்தியைச் சாப்பிடக் கசக்குமா? உன்னைப்போல் சமைக்க இந்த ஊரில் யாருண்டு? என்றவாறே சப்பாத்திப் பாத்திரத்தைத் தன்பக்கம் இழுத்துக் கொண்டான்.

பாய்ஜாபாயிக்கு மட்டுமல்ல, கூட்டத்தினர் அனைவருக்குமே மயக்கம் வரும்போல் இருந்தது. பாய்ஜாபாயியின் பெயர் இவனுக்கு எப்படித் தெரிந்தது! அகில உலகங்கள் அனைத்தையும் படைத்து ரட்சிக்கும் ஆண்டவனுக்குத் தன் குழந்தைகள் ஒவ்வொருவர் பெயரும் தெரியாமலா இருக்கும்! இளைஞன் தொடர்ந்து பேசலானான்: அம்மா! உன் சப்பாத்தியை எனக்கும் முன்னால், என் அண்ணா சாப்பிட வேண்டாமா? அவனுக்கும் பசிக்குமே? அவனுக்குக் கொடுத்துவிட்டு மீதியை நான் சாப்பிடுகிறேன்! இவனுக்கு ஓர் அண்ணாவா? யார் அந்த அண்ணா? கூட்டம் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தபோது, இளைஞன் ஊரை ஒட்டியிருந்த காட்டுப் பகுதியை நோக்கிக் கூவினான்:அண்ணா! ஓடிவா. வந்து சாப்பிட்டு விட்டுப் போ! அடுத்த கணம் வெள்ளைவெளேர் என்ற ஒரு பன்றி காட்டுக்குள்ளிருந்து பாய்ந்து ஓடிவந்தது. கூட்டம் விலகி வழிவிட்டது. அவ்வளவு அழகான பன்றியை யாரும் அதற்குமுன் பார்த்ததே கிடையாது. இது பன்றியா! இல்லை வராக அவதாரமே தானா! வாலைக் குழைத்துக்கொண்டு நின்ற பன்றி, இளைஞன் தூக்கிப்போட்ட இரண்டு சப்பாத்திகளைத் தாவிப் பிடித்துத் தின்றது. பின் ஒரே ஓட்டமாகக்காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டது! இந்த இளைஞன் யார்? கடவுளே தானா? அப்படியானால் இந்தச் சம்பவத்தின் மூலம் கடவுள் எதை உணர்த்த விரும்புகிறார்? மனிதர்கள் மட்டுமல்ல, ஜீவராசிகள் அனைத்துமே தன் குழந்தைகள் தான் என்கிறாரா? விலங்குகளிடமும் நீங்கள் அன்பாயிருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறாரா? எஞ்சியிருந்த சப்பாத்திகளைச் சாப்பிட்ட இளைஞன் லோட்டாவில் இருந்த நீரால் கைகழுவினான்.

பின் மிகுந்த சொந்தத்தோடு சிரித்தவாறே, பாய்ஜாபாயியின் சேலை முந்தானையில் ஈரக் கையைத் துடைத்துக் கொண்டான். அந்த முந்தானை பெற்ற பாக்கியமே பாக்கியம். அந்தக் காட்சியைப் பார்த்த பிற பெண்கள், பாய்ஜா பாயியைப் போல் தங்களுக்கு சப்பாத்தி எடுத்துவரத் தோன்றவில்லையே என ஏங்கினார்கள். அங்கிருந்த அத்தனை பெண்மணிகளும் கோகுலத்தில் குழந்தைக் கண்ணனைக் கண்ட தாய்மார்களின் மனநிலையை அடைந்தார்கள். வந்திருப்பது யார்? கண்ணனே தானா? ஆனால், கையில் குழலைக் காணோமே? கையில் இல்லாத குழல் அவன் குரலில் இருந்ததுபோல் தோன்றியது. அவ்வளவு இனிமையாக அவன் பேசலானான்: பாய்ஜா பாயி! இவ்வளவு ருசியான சப்பாத்தியை நாள்தோறும் சாப்பிடும் உன் கணவர் கணபதிராவ் கொடுத்துவைத்தவர்தான்! அடடே. கணபதிராவ் பெயரும் இவனுக்குத் தெரிந்திருக்கிறதே? அடுத்த கணம் அங்கே வந்து கூட்டத்தோடு நின்றிருந்த அவ்வூர்க் கோயில் பூஜாரிமேல் அருளாவேசம் வந்தது. மக்கள் படபடவென்று கன்னத்தில் போட்டுக் கொண்டே பூஜாரியைப் பார்த்தார்கள். பூஜாரி முழங்கினார். இந்த இளைஞன் யார் என்று தெரிந்துகொள்ள, இவன் அமர்ந்திருக்கும் இந்த வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டிப் பாருங்கள்! இதைக் கேட்ட இளைஞன் கலகலவென்று நகைத்தான். அப்படியே ஆகட்டும். தோண்டுங்கள்! என்றவாறே வேப்பமரத்தை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டான். சிலர் ஓடோடிப்போய் கடப்பாரையை எடுத்துவந்து வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்ட எத்தனித்தார்கள். அப்போது யாரோ பெருமூச்சோடும் கோபத்தோடும் சீறும் ஒலி கேட்டது. கடப்பாரையைத் தூக்கியவர்கள் திகைத்துப் பின்வாங்கினார்கள்….!

One Comment

  1. sairakeshsarma
    Baba Sairam kurusarithram Sri sathsarithram
    Reply November 27, 2016 at 11:24 pm

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.