ஆன்மிகக் கதைகள் – வளர்ப்புத் தந்தை வால்மீகி

4.4/5 - (9 votes)

Tamil-Daily-News-Paper_85590326787
மக்களுக்கு உரிய நீதியே மன்னருக்கும் பொருந்தும் என்ற கருத்தை நிலைநாட்ட, ஸ்ரீராமர் சீதையைக் காட்டிற்கு அனுப்பினார். அப்போது கர்ப்பிணியாக இருந்த சீதாபிராட்டி, வால்மீகி முனிவர் ஆசிரமத்தில் லவன் என்ற மகனைப் பெற்றாள். ஆசிரமத்தைச் சேர்ந்த மற்ற பெண்களைப் போலவே சீதையும் ஆசிரமப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். ஒருநாள், வால்மீகி முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் சீதை தண்ணீர் கொணரச் சென்றாள். குழந்தை லவனையும் சீதை தன்னுடன் எடுத்துச் சென்றாள். வால்மீகி தியானத்திலிருந்து விழித்து எழுந்தபொழுது, குழந்தையைக் காணாது திடுக்கிட்டார்.

ஆசிரமவாசிகளும் துணுக்குற்றனர். சீதை திரும்புவதற்குள் வால்மீகி, தன்னுடைய தவத்தின் ஆற்றலால், ஒரு தர்ப்பைத் துண்டை லவனைப் போன்ற ஒரு குழந்தையாகச் செய்தார்! சீதை ஆசிரமம் திரும்பினாள்! அவள் கையில் குழந்தை லவன் இருந்தான்! அவனைப் போன்ற மற்றொரு குழந்தை இருந்ததைக் கண்டாள்! நடந்ததை வால்மீகி முனிவர் விளக்கியுரைத்தார். ‘குசம்’ என்ற சொல் தர்ப்பைப் புல்லைக் குறிக்கும். தர்ப்பைப் புல்லிலிருந்து தோன்றிய குழந்தைக்கு, ‘குசன்’ என்று பெயரிட்டார் வால்மீகி. லவனும் குசனும் ஒருதாய் மக்களாகவே ஆசிரமத்தில் வளர்ந்தனர்.

வசிஷ்டர் ஆசிரமத்தில் ராமனும் லட்சுமணனும் சகல கலைகளையும் கற்றனர் அல்லவா? அதுபோல், வால்மீகியின் ஆசிரமத்தில் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த லவனும் குசனும் ராமரின் அசுவமேதக் குதிரையை அடக்கிப் பிடித்தனர்! பின்னர், ராமரின் அசுவமேத வேள்விச் சாலையிலேயே ராம கதையைப் பாடி அரங்கேற்றினர் என்பது ராமாயண உத்தர காண்டம் உரைக்கும் செய்தியாகும்.

‘‘இருமன்னர் பெற்றேனோ
வால்மீகரைப் போலே?’’

– என்று இதனைத் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை குறிப்பிட்டார். வால்மீகி முனிவர் இரண்டு மன்னர்களை, அதாவது கோசல நாட்டு இளவரசர்களான லவ-குசர்களை வளர்த்த பெருமைக்குரியவர் என்பது உள்ளீடு.

இருமாலை ஈந்தவர்

சோழ நாட்டில் பூதங்குடி என்ற தலத்திற்கு அருகில் உள்ள மண்டங்குடி என்ற ஊரில் மார்கழி மாதம், கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். பெற்றோர் அவருக்கு விப்ரநாராயணர் என்று பெயர் சூட்டினர். விப்ரநாராயணர் திருவரங்கப் பெருமாளிடம் தனி ஈடுபாடு கொண்டார். அங்கு தங்கி, பெரியாழ்வாரைப்போல் மலர் மாலை சமர்ப்பிக்கும் தொண்டு செய்து வந்தார்.

விப்ரநாராயணரின் நந்தவனத்திற்கு வந்த தேவதேவி என்ற நடனமாது அவரிடம் மையல் கொண்டாள். பெருமுயற்சிக்குப் பிறகு தேவதேவி விப்ர நாராயணரை மையலில் சிக்க வைத்தாள். பிராட்டியின் வேண்டுகோளின்படி, உரிய நேரத்தில் நிகழ்த்திய திருவிளையாடல் வழியே பெருமாள் விப்ரநாராயணரை மீண்டும் தன்பால் ஈர்த்தார். விப்ர நாராயணர் மாதர் மையலால் மாதவனை மறந்த குற்றத்தை உணர்ந்து வருந்தினார்.

அக்குற்றத்திற்குப் பரிகாரம் யாதென்று சான்றோர்களிடம் வினவினார், விப்ரநாராயணர். திருமாலடியார்களின் பாதங்கழுவிய புனித நீரே அவருக்கு உயர்வளிக்கும் என்றனர். அவ்வாறே செய்த விப்ரநாராயணர் தொண்டரடிப் பொடியாழ்வாராக உயர்ந்தார். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களை இயற்றினார்.
மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தொண்டரடிப் பொடியாழ்வார் திருவரங்கனுக்குப் பள்ளியெழுச்சி பாடினார். தில்லைக் கூத்தனின் இனிய தரிசனம் கிடைக்கப் பெற்றால் மனிதப் பிறவியும் பயனுள்ளதே என்றார் திருநாவுக்கரசர்.

அரங்கனை, ‘அச்சுதா! அமரர் ஏறே!’ என்று அழைத்து, ‘அச்சுவை கிடைக்கப் பெற்றால் இந்திரலோகம் ஆளும் அச்சுவையையும் வேண்டேன்’ என்றார், தொண்டரடிப் பொடியாழ்வார்.
‘இருமாலை ஈந்தேனோ
தொண்டரடிப் பொடியார் போலே?’

-என்று தொண்டரடிப் பொடியாழ்வாரின் மலர்மாலைத் தொண்டை நினைவு கூர்ந்தார், திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. தொண்டரடிப் பொடியாழ்வார், திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்தார். திருத்துழாய் (துளசி) மற்றும் நறுமண மலர்களைப் பறித்துத் திருமாலுக்கு மாலைகள் கட்டிச் சமர்ப்பித்தார்.
‘இருமாலை’ என்ற சொல் மூன்று விதமாகப் பொருள் தருகிறது:

1. அவர் பெருமாளுக்குப் பூமாலை, பாமாலை என்ற இரண்டு வகையான மாலைகளை ஈந்தார்.
2. துழாய் மாலை, மற்ற மலர் மாலைகள் என்ற இருண்டு வகையான மாலைகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தார்.
3. திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற இரண்டு பிரபந்தங்களை இயற்றிப் பெருமாளுக்குப் பாமாலைத் தொண்டு செய்தார்.
திருக்கோளூர்ப் பெண் பிள்ளையின் சிறிய சொற்றொடர்களில் அரிய இலக்கிய நயமும் கருத்தாழமும் பொதிந்துள்ளதைக் காணமுடிகிறது, அல்லவா?

Leave a comment