சுவாமி விவேகானந்தர் கதைகள் – எது உண்மையான வழிபாடு?

4.3/5 - (6 votes)

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான். நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும். திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன்தான் உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டும் சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் – அவனிடம் சிவபெருமானைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் சிவபெருமான் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் யஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி யஜமானனிடம், ஓ, என் யஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய யஜமானனின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை யஜமானன் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் அந்த யஜமானன். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள் – ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும். நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி – அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி – அவனே மற்ற எல்லோரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.
சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் – அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

(சுவாமி விவேகானந்தர், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் 27.1.1897-ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவு.)

Leave a comment