Category: கோவில்கள்

அருள்மிகு ஜெகந்நாதர் கோவில்…
அருள்மிகு ஜெகந்நாதர் கோவில்…

thiurmazhisai-kovil

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், திருமழிசையை “துணை நகரம்” ஆக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இன்னும் சில ஆண்டுகளில் திருமழிசை எனும் பெயர் தினமும் மக்கள் உச்சரிக்கும் பெயராக மாற உள்ளது.

ஆனால் இந்த ஊர் ஆதி காலத்தில் வைணவமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமியாக இருந்தது என்பது பலருக்கு தெரியாது. ஈசனும், மகா விஷ்ணுவும், அம்பிகையும் அருள்புரியும் தலங்கள் எத்தனையோ ஆயிரம் உள்ள போதிலும் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாக, தன்னிரகற்றத் தலமாக திருமழிசை கருதப்படுகிறது.

இத்தலத்தில் ஜெகநாத பெருமாள் ஆலயம், ஒத்தாண்டேஸ்வரர் ஆலயம் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் 4-வது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் இத்தலத்தில்தான் தோன்றினார். துவார யுகத்தில் இத்தலம், “மகிசாரசேத்திரம்” என்றழைக்கப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் இது திருமழிசை சதுர்வேதி மங்கலம், என்றும் 13-ம் நூற்றாண்டில் திருமழிசை அகரம் என்றும் அழைக்கப்பட்டது.

அதன் பிறகு சுருங்கி திருமழிசை ஆகிவிட்டது. இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மிகப் பழமையான இங்கு வழிபாடு செய்தால், 2 திவ்ய தேசங்களில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். 5 நிலை 7 கலசங்களுடன் உள்ள கோபுரத்தை பயபக்தியுடன் வணங்கி விட்டு உள்ளே சென்றால் 2 பிரகாரங்களுடன் கோவில் அமைந்திருப்பதை காணலாம்.

கருவறையில் ருக்மணி- சத்யபாமா சமேத ஜெகந்நாதன் பெருமாள் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கும் அவரது அழகு பக்தர்களை நிச்சயம் ஈர்க்கும். அவருக்கு ஆகாசன அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இத்தலத்தில்தான் மார்க்கண்டேய முனிவருக்கும், பிருகு முனிவருக்கும் பெருமாள் காட்சிக்கொடுத்து அருளினார். இதை பிரதிபலிக்கும் வகையில் மூலவர் அருகில் 2 முனிவர்களும் அமர்ந்து வணங்கியபடி உள்ளனர். உள் பிரகாரத்தின் ஒரு பகுதியில் திருமழிசை ஆழ்வார் சன்னதியும் பெரிய அளவில் உள்ளது.

இதன் காரணமாக இந்த தலத்தை திருமழிசை ஆழ்வார் கோவில் என்றும் சொல்வதுண்டு. இவரையடுத்து நவநீத கிருஷ்ணர் சன்னதி உள்ளது. வெளி பிரகாரத்தில் திருமங்கை வல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனிவர், விநாயகர், வைஷ்ணவி ஆகியோர் தனி தனி சன்னதிகளில் உள்ளனர்.

இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திருமங்கை வல்லித்தாயார், தம்மை நம்பிக்கையுடன் அணுகும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அள்ளி, அள்ளி கொடுப்பதாக கருதப்படுகிறது. இத்தாயாருக்கு உரிய முறையில் வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நிறைவான வாழ்க்கையை பெற முடியும்.

அது போல இத்தலத்தின் பிரகார தேவதையான ஸ்ரீவைஷ்ணவியும் பக்தர்களுக்கு வரங்களை வாரி, வாரி வழங்குகிறாள். திருமாலின் சங்கு, சக்கரத்தை ஏந்தியுள்ள அவள் கருணை வடிவாக நின்று சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைஷணவிக்கு “பூ மாலை வழிபாடு” செய்தால் உடனே திருமணம் நடைபெறும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைஷ்ணவிக்கு திருமஞ்சனம் செய்து வணங்கினால், எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் நீங்கி திருமணம் நடைபெறும். இத்தல விநாயகரும் சிறப்பம்சம் கொண்டவர். இந்த விநாயகரின் வயிற்றில் ராகு-கேது இணைந்துள்ளனர்.

எனவே இந்த விநாயகரை வழிபட்டால், நாக தோஷம் நிவர்த்தியாகும். பிரார்த்தனை தலமான இங்கு நடத்தப்பட்டு வரும் 6 வார வழிபாடு தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. அதாவது மக நட்சத்திரம் வரும் நாளில் 6 தடவை ஜெகந்நாதரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் பெறுவதோடு, சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

இத்தலத்தின் விருட்சமாக பாரிஜாத மரம் உள்ளது. அதை வழிபட்டால் சொர்க்கத்தில் இடம் உண்டு. ஆதிகாலத்தில் இப்புனித தலத்தை சுற்றி 7-க்கும் மேற்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் இருந்தன. அவை மறைந்த நிலையில் பிருகு தீர்த்தம் மட்டும் உள்ளது.

இத்தீர்த்தத்தில் நீராடினால் பாவம் விலகும் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் ஆனி மாதம் ஸ்ரீஜெகந்நாத பெருமாளுக்கு பிரம்மோற்சவமும், ஐப்பசி மாதம் வைணவர்களின் குருவான ஸ்ரீமணவாள மாமுனிவர்- உற்சவமும், தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருமழிசை ஆழ்வாரின் அவதார மகோத்சவமும், மாசி மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

முனிவர்கள் தவம் செய்த இடம்:

ஒரு தடவை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவ ஆகிய ரிஷிகள் பிரம்மாவை சந்தித்து, “நாங்கள் தவம் செய்ய உயர்வான ஒரு இடத்தை காட்டுங்கள்” என்றனர். உடனே பிரம்மா, தராசின் ஒரு தட்டில் திருமழிசை தலத்தையும் மற்றொரு தட்டில் உலகின் மற்ற எல்லா புனித தலங்களையும் வைத்தார்.

திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து இருந்தது. இதையடுத்து உலகில் உள்ள எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் கொண்டது திருமழிசையே என்பதை ரிஷிகள் உணர்ந்தனர். இதனால் ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர். எனவே இத்தல பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும். மறுபிறவி இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஞானக்கண் பெற்ற திருமழிசை ஆழ்வார்:

திருமழிசை ஆழ்வார் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் சக்கர அம்சமாக தோன்றியவர். 4-வது ஆழ்வாரான இவர் சைவம், வைணவம் இரண்டிலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றினார். சைவத்தில் சிவவாக்கியர் ஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார். இவரது சொல்லாற்றாலை கண்டு வியந்த சிவன் இவருக்கு “பக்திசாரர்” என்ற சிறப்பை அளித்தார்.

கால் கட்டை விரலில் இவர் ஞானக்கண் பெற்றிருந்தார். இவரது பாசுரங்களில் பெருமாள் மனம் லயித்ததாக பல சான்றுகள் உள்ளன. ஸ்ரீரங்கம், அன்பில், திருப்பேர்நகர், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெக்கா, திருவள்ளூர், திருப்பதி, திருபாற்கடல், துவாரகை, பரமபதம் ஆகியவை இவர் பாடல் பெற்ற தலங்களாகும்.

ஒரு தடவை இவர் தன் சீடர் கனி கண்ணனுடன் காஞ்சியில் தங்கி இருந்தார். அப்போது அந்நகரின் மன்னன் பல்லவராயன் தன்னை வாலிபனாக்கும்படி ஆழ்வாரிடம் கேட்டார். ஆழ்வார் மறுக்கவே அவரை நகரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். உடனே திருமழிசை ஆழ்வார், “துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன்.

நீயுமுன் கைநாகப்பாய் சுருட்டிக் கொள்” என்று பாடி விட்டு சென்றார். இதனால் காஞ்சியில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஆழ்வார் பின்னாடியே சென்று விட்டதாக வரலாறு உள்ளது.

திருமலையில் இருந்த பேயாழ்வார் கேட்டுக் கொண்டபடி இவர் தன் இறுதி காலத்தில் திருமழிசையில் தங்கி இருந்து 200 பாசுரங்கள் பாடினார். பிறகு கும்பகோணத்தில் முக்தியானார். திருமழிசை தலத்தில் இவரை வழிபட்டால் சைவ, வைணவ தலங்களில் பெறக்கூடிய பலன்களை பெறலாம்.

கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனம்…
கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனம்…

mathura

கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில்

இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக `விரஜபூமி’ என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது.

சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த `விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா’ எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர்.

உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா’வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள்.

பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம். கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி’யில் உள்ளன. `பிருந்தா’ என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர்.

பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன. பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன.

கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே! பிருந்தாவனத்தில் நூற்றுக் கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.

யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

பரமேஸ்வரி கோவில்
பரமேஸ்வரி கோவில்

iii-150x150

பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. ஒரு ஓலைக்குடிசையில் அன்னை அமர்ந்திருக்க அருகே பெரிய சூலத்தில் ஒரு மஞ்சள் துணி சாத்தப்பட்டுள்ளது. அருகே ஒரு மரப்பெட்டி. ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் ஏராளமான குடிசை வீடுகள்.

ஒரு நாள் திடீரென்று ஒரு குடிசையில் தீப்பற்றிக் கொள்ள அந்தத் தீ மளமளவென அனைத்து குடிசைகளுக்கும் பரவுகிறது. தீயை அணைக்க போதுமான வசதி இல்லாததால் அனைத்து குடிசைகளும் தீயில் எரிந்து சாம்பலாகின்றன.

ஆனால் அந்த குடிசைகளுக்கு நடுவே இருந்த குடிசை கோவிலான அன்னை பரமேஸ்வரியின் ஆலயத்தை மட்டும் தீ அரக்கன் தீண்டவில்லை.

ஓரிடத்தில் கூட அந்த ஓலைக் குடிசையின் மீது அந்த அரக்கனின் விரல்கள் படவில்லை. சூலத்தின் மீது இருந்த மஞ்சள் துணிக்கோ, அருகே இருந்த மரப்பெட்டிக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை.

மக்களின் பார்வை அன்னையின் ஆலயத்தின் மீது திரும்புகிறது. அவர்கள் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து நிற்கின்றனர்.

அவர்கள் அன்னையின் அதீத சக்தியை உணரத் தொடங்குகின்றனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அதன் பின்- ஓலைக் குடிசை ஓட்டு கட்டிடமாக மாறியது.

பின்னர் அதுவும் மாறி அன்னையின் ஆலயம் புதிய கட்டிடமாக உருவெடுத்தது.

அன்னையின் கருவறையில் ஒரு மரப்பெட்டி உள்ளது. மார்கழி மாதம் முதல் நாள் இந்தப் பெட்டி திறக்கப்படும். பெட்டியில் இருக்கும் பவழ காளி, பச்சைக் காளி என்ற இரண்டு திருமேனிகளும் வெளியே எடுக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

இந்த இரண்டு திருமேனிகளும் அத்தி மரத்தால் ஆனவை. பெட்டி திறக்கப்பட்ட நாள் முதல் 48 நாட்கள் இரண்டு காளி திருமேனிகளும் அலங்கார தேவதைகளாக மகா மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் தை மாதம் குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமை காப்பு கட்டும் வைபவம் நடைபெறும்.

மறுவாரம் செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு அன்னையர் புறப்பட்டு காவிரி நதிக்கரை சென்று விட்டு இரவு 10 மணிக்கு காவிரி நதிக்கரையிலிருந்து அக்னி, ஸ்ரீ சக்தி கரம், அக்னி கொப்பறை, தீப்பந்தம் ஆகியவைகள் சூழ நடனமாடியபடி வீதி வலம் வந்து பின்னர் ஆலயம் வந்து சேருவர்.

இந்தத் திருவிழாவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து வருகை தந்து விழாவை கண்குளிரக் கண்டு மகிழ்வர்.

48 நாட்கள் நிறைவு பெற்றதும் பச்சைக் காளி, பவழ காளி திருமேனிகள் இரண்டும் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு அன்னையின் கருவறையில் வைக்கப்படும்.

பின்னர் மறு ஆண்டுதான் அந்தப் பெட்டி திறக்கப்படும். அன்னை பரமேஸ்வரி தனது கருவறையின் படியை தாண்டாது அன்னையின் சார்பாக பச்சைக் காளி, பவழ காளி என இருவரும் திருவிழா நாயகிகளாய் இருந்து வீதி உலா வருவதால் அன்னைக்கு ‘படிதாண்டா பரமேஸ்வரி’ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது செவி வழி தகவல்.

பூஜை முடிந்து ஆலயம் பூட்டப்பட்ட பின் உள்ளேயிருந்து சன்னமான சலங்கை ஒலி இன்றும் கேட்பதாக ஆலயம் அருகே விளையாடும் சிறுவர்களும் அருகே குடியிருக்கும் மக்களும் கூறுகின்றனர்.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆடி அமாவாசை, மாத பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருவிழாவின் போது மணமாலை வேண்டும் கன்னியருக்கும், மகப்பேறு வேண்டும் மகளிருக்கும், அன்னைக்கு சாத்தப்படும் வளையல்களை பிரசாதமாக தருகின்றனர்.

ஓராண்டுக்குள் அந்தக் கன்னியர் மற்றும் மகளிர்களின் வேண்டுதல்கள் பலிப்பது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள். கந்த சஷ்டி அன்று முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அன்று நடை பெறும் அன்னதானத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமியில் அன்னையின் முன் மகா மண்டபத்தில் அருள் பாலிக்கும் பைரவருக்கு தனிச் சிறப்புடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

அன்னை படிதாண்டா பரமேஸ்வரி, தங்களது துயரைக் கூறும் பக்தர்களின் குறையை உடனுக்குடன் களைந்து அவர்களை மகிழ்வோடு வாழ வைப்பதில் அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.

அம்பர்நாத்தில் சிவலிங்கம் இல்லாத சிவன் கோவில்
அம்பர்நாத்தில் சிவலிங்கம் இல்லாத சிவன் கோவில்

SDC10732-150x150

மகாராஷ்டிர மாநிலத்தில் முக்கிய பெருநகரான மும்பைக்கு புறநகராக விளங்கும் அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது. தலத்தின் பெயரும் அம்பர்நாத். அம்பர் என்றால் ஆகாயவெளி நாதர் என்றால் இறைவன்.

இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராசர் சிலையோ காணப்படவில்லை. ஈசன் அணியும் புலித்தோல் போலத் தரையை அமைத்திருக்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் மாமரங்கள், நான்கு வாயில்களில் மேற்கு வாயிலில் மட்டும் நந்தி தேவர் உள்ளார்.

இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்களுக்கு அர்ச்சகர் மஞ்சள் கயிறைக் கட்டி விடுகிறார். சுற்றிலும் சாம்பிராணி ஊதுபத்தி வாசனை வருகிறது. கருவறை என்று சொல்லப்படும் இடத்தில் சிறிய பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளத்தை தான் சிவபெருமான் என்று கூறுகின்றனர்.

கருவறை சுற்று தாழ்வான பகுதியில் உள்ளது. பள்ளத்திற்கு பூ ஜைகள் எதுவுமே கிடையாது. அருகில் உள்ள வெட்ட வெளிமேடையில் சிவபக்தர்கள் பாடிக் கொண்டே ஆலயத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் கொங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த சில்காரா அரச பரம்பரையில் வந்த சித்தராஜன் கடம்பவன அரசர்களைப் போர் செய்து வெற்றி பெற்றான். அந்த வெற்றிக்குக் காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060 -ல் அமைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிற இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கும். மும்பை வாசிகள் அனைவரும் இங்கே கூடுவார்கள். அம்பர்நாத் ரெயிலடியிலிருந்து மிக அருகில் உள்ளது. மும்பை செல்வோர் வணங்கி வர வேண்டிய அதிசய கல்வெட்டுக் கோயில் இது.

சோமநாதம் ஸ்ரீசோமேஸ்வரர் கோவில்
சோமநாதம் ஸ்ரீசோமேஸ்வரர் கோவில்

som-150x150

பல்லாயிரக்கணக்கான ல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்து உலகத்தின் மிகப்பழமையான திருத்தலங்களுள் ஒன்றாக விளங்ஞகும் சோமநாதத்திற்கு பிரபாசபட்டினம், சோமபுரி, சோமநாதபுரம், அரசநகரம், சிவநகரம், வில்வப்புரிப்பட்டினம், சூரப்பட்டினம் என்று காலந்தோறும் ஏற்பட்ட பலப்பல பெயர்கள் உள்ளன.

இங்கு எழுந்தருளிப் பாதுகாக்கும் பரப்பிரும்மத்திற்கு சோமநாதர், சோமேஸ்வரர் சந்திரசேகரர், சந்திர மவுலீஸ்வரர் என்று பெயர்கள் உள்ளன. சோமேஸ்வரர் என்றால் சந்திரனுக்கு இறைவன் என்று பெயர்.

சயரோகத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் இத்தலத்தில் லிங்கப் பரம்பொருளை பிரதிட்டை செய்து வழிபட்டு நோய் நீங்கி நல்வாழ்வும் ஒளியும் பெற்றதால் இத்தலம் சோமநாதம், சோமேஸ்வரர் என்று பெயர் பெற்றது.

சந்திரனை பாதுகாத்து வாழ்வளித்து ஒளிவழங்கிய பரமேஸ்வரனுக்கு சோமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மதேவனின் புதல்வனான தட்சனுக்கு அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு மகள்களும் சந்திரதேவனை மணம் புரிந்து கொள்ள விரும்பினர்.

தட்சன் இருபத்தேழு புதல்விகளையும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். இருபத்தேழு புதல்விகளும் சென்னையிலுள்ள திருவொற்றியூர் என்ற தலத்தில் தியாகேசர் கோயிலில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு நட்சத்திரங்களாகும் பேறு பெற்றனர்.

இந்திருக்கோயிலில் இருபத்தெழு நட்சத்திர லிங்க சந்நிதிகள் உள்ளன. இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொண்ட சந்திரன் ரோகினியுடன் மட்டும் அதிக ஆசையுடன் இருந்து மற்றவர்களை உதாசீனப் படுத்தினான். இருபத்தாறு பேர்களும் சந்திரனின் முறைகேடான நடவடிக்கை பற்றி தட்சனிடம் முறையிட்டனர்.

மனைவியர் களிடையே பாரபட்சம் காட்டி அவர்களை துன்பப்படுத்தியதற்காக தேய்ந்து தேய்ந்து அழிந்து போகுமாறு தட்சன் சாபமிட்டான். இதனால் சந்திரனைநோய் பற்றியது. அவன் ஒளி குறைந்து நாளுக்குநாள் தேய்ந்து வரலானான்.

தேவமருத்துவர் களான அசுவினி குமாரர்களும், தன்வந்திரியும் எவ்வளவு வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. தனது நிலை கண்டு வருத்தம் அடைந்த சந்திரன் பூவுலகை அடைந்தான். சவுராஷ்டிரத்தில் சரஸ்வதி நதி கடலில் கலக்கும் இடத்தில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை ஆராதனை புரிந்து வழிபட்டான்.

கயிலைநாதனை நாள்தோறும் நீராடி விரதம் இருந்து பூஜை செய்தான். தேவர்களும் சந்திரனுக்காக சர்வேஸ்வரனைப் பூஜை செய்து சந்திரனை காப்பாற்ற வேண்டினர்.

பதினாறு கலைகளிலே பதினைந்து கலைகள் அழிந்து விட்ட சந்திரன் வைத்தியர்களுக்கெல்லாம் மிகப்பெரிய வைத்தியனான மருந்தீஸ்வரனை தொழுது போற்றி தன்னை பாதுகாத்து முக்தி அருள வேண்டினான்.

உடனே ஈசன், சந்திரனின் ஒரு கலையைத் தன் திருமுடியில் அணிந்து கொண்டு சந்திரனுக்கு அருள் புரிந்தார். பேரருள் பெற்ற சந்திரன் இழந்த ஒளியை மீண்டும் பெற்று நாளுக்கு நாள் வளர்ந்து முழுப்பிரகாசத்தை அடைந்தான்.

சந்திரனது தலையை திருச்சடையில் முடிந்து கொண்டு சந்திரனுக்கு வாழ்வு அளித்ததால் பரப்பிரும்மத்திற்கும் சந்திர கலாதரர், பிறைச்சடையன், பிறைமதியன், பிறைசூடி சோமசுந்தரர், மதியழகன், நிலவணிந்தோன் என்ற பலப்பல பெயர்கள் உண்டாயின.

லிங்கப்பரம் பொருளுக்கு சோமலிங்கம், சந்திரலிங்கம் என்று திருப்பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறு தட்சனின் சாபத்தால் தேய்பிறையும் பரம் பொருளின் திருவருளாள் வளர்பிறையும் உலகில் மாறி மாறி ஏற்படுகின்றன.

சிவபூஜை புரிந்து உடல்நோய் குணமாகி நலம்பெற்ற சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் வேறு பல தலங்களிலும் பரம்பொருளை வழிபட்டு பூஜை செய்தான். அத்தகைய திருத்தலங்களில் ஒன்று தமிழ்நாட்டிலுள்ள திங்களூர்.

அப்பூதியடிகளின் இறந்த மகனைத் திருநாவுக்கரசர் மீண்டும் உயிரோடு எழுப்பிக் கொடுத்த தலமாகிய திங்களூரில் சிவபூஜை புரிந்த சந்திரனுக்கு தனி சந்நிதியுள்ளது. கும்பகோணத்தில் வியாழபகவானுகிய பிரகஸ்பதியும், சந்திரனும் வழிபட்டு பூஜை செய்த வியாழ சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பேஸ்வரர் கோவிலுக்கு அருகே இத்திருக்கோயில் உள்ளது.

முக்கண்ணனது கண்களிலிருந்து ஒளியை பெறும் சூரிய பகவானுக்கும், சந்திர பகவானுக்கும் எல்லா சிவாலயங்களிலும் சுற்றுப் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது. எட்டு வகையான திருக்கோவில்களில் சோமநாதம் பெருங்கோவிலாகவும் மணிக்கோவிலாகவும் விளங்குகிறது.

இராவணன் சோமேஸ்வரர் ஆலயத்தைத் தங்கத்தால் அமைத்துப் பொன்மயமாக்கினான். கிருஷ்ணன் சோமநாதர் ஆலயத்தை வெள்ளியால் புதுப்பித்தான். வெள்ளித் தோரண வாயிலை அமைத்து திருப்பணி செய்தான்.

இத்திருக்கோவிலானது தங்கமணி, தங்க சங்கிலிகள், தங்க விக்கரங்கள், தங்க தாம்பாளங்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றையெல்லாம் கொண்டு மாபெரும் பொன்மணி கோவிலாக திகழ்ந்தது. மிக்க புகழும் பெருமையும் கொண்ட சோமநாதர் ஆலயம் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டிருந்த ஆலயம் என்பதை கல்வெட்டு கூறுகின்றது.

புண்ணிய பாரதப் பண்பாட்டின் வடிவமாக விளங்கும் சோமநாதர் கோவிலில் எண்ணற்ற இசை நடனக் கலைஞர்கள் இருந்தனர். ஆயிரம் இசை கலைஞர்களும் இருநூற்று ஐம்பது நடனக் கலைஞர்களும் ஆயிரம் புரோகிதர்களும் இருந்தனர்.

நாள் தோறும் சோமலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கையிலிருந்து நீரும் காஷ்மீரிலிருந்து மலர்களும் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு அளவற்ற பெருமையும் புகழும் கொண்ட சோமநாதரை நாள்தோறும் ஒரு முறையாவது தரிசனம் செய்து வழிபடுதல், சோமவாரங்களில் பூஜை செய்தல், அமாவாசை இரவு அன்று சிவநாமம் ஒதி ஆராதனை செய்தல்,

விசேஷ நாட்களிலும் பிரதோஷம், சிவராத்திரி போன்ற தினங்களிலும் விரதம் இருத்தல், சரஸ்வதி சங்கமத்தில் நீராடுதல் ஆகிய ஐந்து வகை வழிபாடுகளையும் முறைப்படி செய்து வருபவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறுகின்றன என்று புராணங்கள் போற்றுகின்றன.

இவ்வாறு கோடிக்கணக்கான ஆண்டுகளாக சீரும் சிறப்பும் பெற்று பலப்பல மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு பலப்பல நூல்களில் போற்றப்பட்டு வந்த சோமநாதர் திருக்கோவில் சென்ற ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக முகம்மதிய மன்னர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது.

சோமநாதர் ஆலயம் இருந்த பழைய இடத்திலேயே கோவில் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. பின்னர் லிங்க பரம்பொருள் பிரதிட்டை செய்யப்பட்டது. கி.பி. 1965-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது. பாரதத் தாயைத் தலை நிமர்ந்து நிற்க செய்யும் புண்ணிய பூமியாக சோமநாதம் திகழ்கின்றது.

அகலமான மண்டபங்களையும் வானுயர்ந்த விமானங்களையும் அழகுமிக்க கூரைகளையும் தோரணவாயில் களையும் கொண்டுள்ள சோமநாதர் திருக்கோவில் இராமநாதர் திருக்கோவிலைப் போன்று கடலுக்கு அருகே அமைந்துள்ளது. கடலே புனிதத் தீர்த்தமாக விளங்குகின்றது.

உஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரி கோவில்
உஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரி கோவில்

3943dcaf-c12b-49fc-ad8f-ce96479658e0_S_secvpf-150x150

உஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரிகளில் ஒன்றாகும். காலத்தை வென்ற மகாகாலராக உஜ்ஜைனியில் ஜோதிர்லிங்கமாகத் சிவபெருமான் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. புனித நதியாகக் கருதப்படும் சிப்ரா நதித்கரையில் அவந்திபுரி என்ற நகரம் இருந்தது.

இந்த நகரத்தில் வாழ்ந்த வேதப்ரியன் இரவும், பகலும் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு நான்கு புதல்வர்கள். தேவப்ரியன் மேதன், சுவிரதன், தருமவாதி என்ற பெயர்கள் கொண்ட அந்த நால்வரும் தந்தைக்கு அனுசரணையாக இருந்ததோடு அவர்களும் தீவிர சிவபக்தர்களாகத் திகழ்ந்தனர்.

அவந்திபுரி அருகில் ரத்தனமாலா என்ற பருவதம் உண்டு. அங்கு துஷணன் எனும் அரக்க அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பிரம்மனைக் நோக்கி கடும்தவம் செய்து அளவிலாப் பராக்கிரமத்தை அடைந்திருந்தான்.

இதனால் மிக்க கர்வம் அடைந்த அந்த அரக்கன், அப்பகுதியிலிருந்த அனைவரையும் இம்சை செய்தும், அடித்தும், துன்புறுத்தியும் வந்தான். கடவுளை வணங்குவோரை மிரட்டினான். பூஜைகளில் ஈடுபடுபவர்களை உடனே அவற்றை கைவிடுமாறு வற்புறுத்தினான்.

அந்த அரக்கனை அடியோடு ஒழிக்க சகோதரர்கள் நால்வரும் முன்வரவேண்டும் என்று மக்கள் கண்ணீர் மல்க கூறி வேண்டினர். பிறகு மக்கள் அந்த நால்வருடன் சேர்ந்து அனுதினமும், தவறாமல், தீவிரமாக சிவபூஜையில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களது செயல்களை அறிந்த தூஷணன், அவர்களைத் தாக்க தன் மந்திரிகளோடு அங்கு வந்து சேர்ந்தான். அவர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று தன்னுடன் வந்தவர்களுக்கு கட்டளை இட்டான் அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பார்த்திவ சிவலிங்கங்கள் செய்ய மண் எடுத்த இடம் பெரியகுளமாக இருந்தது.

அக்குளத்தில் இருந்து கிளம்பிய கிடுகிடுக்கும் முழக்கம் ஈரேழு உலகங்களை அதிரச் செய்தது. பெரும் சப்தத்துடன் குளத்தின் மையத்தில் குபீரென்று ஒரு ஜோதி எழும்பி, பிழம்பாக மாறி படிப்படியாக பெரும் சிவலிங்கமாகத் தோன்றியது! இறுதியில் படாரென்ற விண்அதிரும் சப்தத்துடன் அச்சிவலிங்கம் இரு பிரிவாகப் பிளந்தது.

அந்த லிங்கத்தில் இருந்து ஜடாமகுட தாரியாக, புலித்தோல் போர்த்திய சூலாயுதபாணியாக பரமேஸ்வரன் கோபத்தோடு வெளிப்பட்டார். அரக்கன் தூஷணனையும், அவனோடு வந்த அனைவரையும் அவர் சம்காரம் செய்தார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். இந்த அபூர்வக் காட்சியை வானத்தில் இருந்து கண்டு களித்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அவந்தி மக்கள் பகவானை நோக்கி எங்களது இன்னல்களைத் தீர்த்த இறைவனே இங்கு வரும் பக்தர்களின் குறைகளையும் தீர்க்க தாங்கள் என்றென்றும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி வீழ்ந்து வணங்கினர்.

அவர்களது ஆசையைப் பூர்த்தி செய்ய ஈசனும் மீண்டும் லிங்கத்தினுள் ஐக்கியமாகி மகாகாலர் என்ற நாமம் ஏற்று அவந்திபுரி எனும் உஜ்ஜைனி நகரத்தின் நடுவில் இன்றும் ஜோதிர்லிங்கமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

அவந்தி நாட்டின் தலைநகரான உஜ்ஜைனியில் அரசு புரிந்த ராஜா விக்ரமாதித்யன் காலத்திலும், தார் நகரிலிருந்த போஜராஜன் புத்திரன் உதயாதித்யன் காலத்திலும் மகாகாலேஸ்வரர் ஆலயம் மிக உன்னத நிலையில் இருந்தது.

பொன்னும் மணியும், ஆலய சுவர்களைப் பலவாறு அலங்கரித்தன. ஆலயத்தின் சொத்து பல கோடிகளாக இருந்தது. ஆலயமணியும், அதனைச் சார்ந்த சங்லியும், கோபுர கலசங்களும் பொன்னால் செய்யப்பட்டு ஜொலித்தன.

அங்கிருந்த ஆள் உயர விக்ரமாதித்யன் சிலையும் தங்கத்தால் வடிக்கப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஈஸ்வரனுக்கு நவரத்தினங்களில் ஒவ்வொரு ரத்தினம் முழுமையாகப் பதிக்கப்பட்ட ஒன்பது கிரீடங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், வெள்ளிக்கதவுகள், வெள்ளி நிலைப்படிகள், தங்கமும் வெள்ளியும் கலந்த பூஜாபாத்திரங்கள் என்று கோவிலின் செல்வ நிலையைப் பாரெங்கும் பகிரங்கப்படுத்தின.

மகாகாலேஸ்வரர் ஆலயப் பொக்கிஷ விவரங்கள், தில்லி சுல்தான் இல்டுட்மிஷ் கவனத்திற்கு வரவே, அவன் கி.பி. 1235-ம் ஆண்டில் அவந்தி நாட்டின் மீது படையெடுத்து ஆலயத்தின் பொக்கிஷங்களைக் கொள்ளை அடித்ததோடு, ஆலயத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்கினான்.

ஜோதிர்லிங்கமான மகாகாலேஸ்வரரைப் பெயர்த்து ஆலயத்தினுள் இருந்த கோடி தீர்த்தம் என்ற புஷ்கரணியில் வீசி எறிந்து விட்டனர். அடிக்கடி அன்னிய மதத்தினரின் படையெடுப்புகளால் உஜ்ஜைனி நகர் பெருமளவில் பாழடைந்து விட்டது.

மகாகாலேஸ்வரர் ஆலயமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதால் சுமார் 500 ஆண்டுகள் வரை அவரைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. மிக்க கீர்த்தி பெற்ற மராட்டா சேனைத் தலைவன் ரானோனி சிந்தியா தன் புஜ பலத்தால் மாளவ நாட்டைக் கைப்பற்றி உஜ்ஜைனியைத் தலைநகராக்கி தானே ஆளத் தொடங்கினான்.

அவனது அவையில் திவானாக இருந்த ராமசந்திரராவ் ஷேண்பாய் என்பவர், ரானோனி சிந்தியா கட்டளைப்படி ஆலயம் இருந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து புது ஆலயம் நிர்மாணித்தார். நகரின் பண்டித குடும்பங்களில் பரம்பரையாக பேசப்பட்டு வந்த வாய்ச் சொல்லை ஆதாரமாகக் கொண்டு குப்பைகளை அகற்றி, நன்கு சுத்தப்படுத்திய போது கோவில் புஷ்கரணியில் புதைந்திருந்த ஜோதிர்லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

அதை வெளியில் எடுத்து மீண்டும் கோலாகத்துடன் பழைய இடத்திலேயே பிரதிஷ்டை செய்தனர். அதன் பயனாக ஒரு புது ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. ருத்ரசாகர் எனும் ஏரியை ஒட்டி கம்பீரமாக விளங்கும் மகாகாலேஸ்வரர் ஆலயத்தின் பிரதான வாயில் கிழக்கில் உள்ளது.

ஐந்து தளங்களுக்கும், ஐந்து சபா மண்டபங்களும், கோபுரத்தில் பல கலசங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் உயரம் 88 அடிகளாகும். கோவிலைச் சுற்றி வலம் வர அகண்ட பிரகாரம் உள்ளது. மகாகாலேஸ்வரரைக் காண நம் மேற்கு வாயில் வழியாக நுழைந்தால், தெற்கு நோக்கியுள்ளள சன்னதியில் இரண்டு அடி உயரமுள்ள ஜோதிர்லிங்கமாக தரிசனம் தருகிறார்.

விசேஷ தினங்களில் பலப்பல அலங்காரங்களோடு கண் குளிரக் காட்சி அளிக்கிறார். இக் கருவறையில் 24 மணி நேரமும் இரண்டு நெய்விளக்குகள் எரிகின்றன. வட இந்திய பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி காலையில் ஜோதிர்லிங்கத்திற்கு பாங் எனும் அபினை அரைத்து காப்பாக அமைத்திருப்பார்கள்.

இக்காப்பு காலை 10 மணி வரை சார்த்தப்பட்டிருக்கும். இதன் பின் லிங்கத்திற்கு வெந்நீரினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் தான் இவ்வித விசேஷ காப்பும் அபிஷேகமும் நடைபெறுகின்றன. அன்றுதான் நமக்கு நரக சதுர்த்தி எனும் தீபாவளிப் பண்டிகை.

ஆலயத்தினுள்ளே காணப்படும் புஷ்கரணிக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். நான்கு மூலைகளிலும் பெருங்கிணறுகள் கொண்ட இக்குளத்தின் நீரின் நிறம் காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வருகிறதாம். உஜ்ஜைனியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா எனும் பெருந்திருவிழா ஒரு மாதக் காலம் நடை பெறுகிறது.

அப்போது லட்சக் கணக்கான பக்தர்கள், உலகின் பல பாகங்களிலிருந்து உஜ்ஜைனிக்கு வருவார்கள். சிப்ராநதியில் புனித நீராடி, மகாகாலேஸ்வரரை வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரியும் கார்த்திகை பவுர்ணமியும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள திரிம்பகேஸ்வரர் கோயில்-நாசிக்
பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள திரிம்பகேஸ்வரர் கோயில்-நாசிக்

images-1-150x150

திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோயில் ஆகும். இது மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

இது இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.

பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது. மும்மூர்த்திகள் வழிபட்டு பரப்பிரும்மத்தின் அருள்பெற்ற திரியம்பகேஸ்வரத்தில் கவுதம முனிவர் வசித்து வந்தார்.

நாள்தோறும் புனிதக்குளத்தில் நீராடி திரியம்பகேஸ்வரரைப் பூஜை செய்து வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் தூய வாழ்க்கை வாழ்ந்தார். ஒருமுறை நாட்டில் வறட்சியும், பஞ்சமும் உண்டாயின. எல்லா இடங்களிலும் நீர் வற்றிப்போய் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று.

ஆனால் கங்காதரனை நினைந்து உள்ளன்போடு சிவசிவ என்றே வாழ்ந்த கவுதமரின் ஆசிரமத்தில் எந்தவிதமான பஞ்சமும் இல்லை. திரியம்பகேஸ்வரத்தில் இருந்த நீர்நிலைகளில் நீர்வளம் பெருகியிருந்தது. இதையறிந்து நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த முனிவர்கள் திரியம்பகேஸ்வரத்தில் குடியேறினர்.

உலகத்தை வலம் வருபவனுக்குத் தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பதாக அகல்யையின் தந்தை நிபந்தனை விதித்திருந்தார். கன்றுபோடும் நிலையில் உள்ள பசுவை அதாவது இரண்டு முகங்கள் கொண்ட பசுவை வலம் வந்தால் உலகத்தை வலம் வருவதற்கு ஒப்பாகும் என்று ஒழுக்க நூல்கள் உரைக்கின்றன.

இந்த சாத்திரப்படி கவுதம முனிவர் கன்று போடும் நிலையில் இருந்த தாய்ப்பசுவை வலம் வந்து வணங்கி அகல்யையைத் திருமணம் செய்து கொண்டார். அத்தகைய கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தாய்ப்பசு ஒன்று இறந்து கிடந்தது. அதைக் கண்ட கவுதம முனிவர் மனம் துடிதுடித்தார்.

இறந்த பசுவிற்கு எப்படியாவது உயிர் கொடுக்க வேண்டும் என்று முனிவர்கள் விரும்பினர். மற்ற உயிரினங்கள் எல்லாம் தமக்காக வாழ்கின்றன. ஆனால் மாடுகளோ உலக மக்கள் அனைவரையும் பாலூட்டி வளர்க்கின்றன. தேசத்தின் செல்வங்களாக இருந்து வருவாயைப் பெருக்குகின்றன.

உழுவதற்குப் பாடுபட்டும் பயிர்வளர் எருவைத் தந்தும் மனித இனத்திற்கு மகத்தான உதவி புரிந்து உண்டி கொடுத்து உயிர் காக்கின்றன. சிவபெருமானின் திருமுழுக்காட்டிற்காகப் பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு ஆகிய பஞ்ச கவ்வியம் எனப்படும் ஐந்து அபிஷேகப் பொருட்களைக் கொடுக்கும் புனிதப் பிறவிகளாகப் பசு மாடுகள் உள்ளன.

இத்தகைய பசுமாடுகள் முனிவர்களும் தேவர்களும் தெய்வங்களும் வந்து வணங்கும் புண்ணியம் வாய்ந்தவை. இனிய குணங்கள் கொண்ட பாலைத் தரும் நல்ல பண்புள்ள சொந்தமான பசுக்கள் மெய்ப்பொருளின் வாகனமும் தரும தேவனுமான நந்தியின் குலத்தைச் சேர்ந்தவை.

அத்தகைய புண்ணிய ஆத்மாவான இந்தப் பசுவை எப்படியாவது உயிர்பிழைக்கச் செய்ய வேண்டும் என்று முனிவர்கள் முடிவெடுத்தனர். கோடிலிங்கார்ச்சனை செய்து பரம்பொருளை வழிபட்டுக் கங்கை நதியைப் பசுவின் உடலில் பாயச் செய்தால் கோமாதா மீண்டும் உயிர் பெற்று எழுவார் என்று மாதவ முனிவர் ஆலோசனை கூறினார்.

அவர் வண்ண மகாமுனிவரான கவுதமர் கோடி சிவநாமம் ஓம் லிங்கார்ச்சனை செய்தார். கோடி சிவராமங்களை உச்சரித்து லிங்கப் பரம்பொருளைப் பூஜை செய்தார். கங்காதரனிடமிருந்து கங்கை நீரைப் பெறுவதற்காகக் கடுமையாகத் தவம் புரிந்தார்.

கங்காதரனை நெஞ்சில் நிறுத்தி ஓம் நமச்சிவாயா மகா மந்திரத்தை உச்சரித்து திரியம்பகேஸ்வரரை தியானம் செய்து அன்ன ஆகாரம் இல்லாமல் தவம் புரிந்தார். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து வைக்கின்ற தவத்தின் மகிமை உணர்ந்த தவ முனிவர்கள் எல்லோரும் கவுதம முனிவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

கடுகளவு புண்ணியம் செய்தாலும் மலையளவில் பலனை வாரி வழங்கும் அருள் வள்ளலாரை திரியம்பகேஸ்வரர் கவுதம முனிவருக்கு வெளிப்பட்டுத் திருக்காட்சி தந்தார். பலகாலங்கள் தேடித் திரிந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாமல் மறைந்து இருந்த பரஞ்சோதிப் பெருமானின் திருக்காட்சி கண்ட கவுதம முனிவர் அளவில்லா ஆனந்தம் அடைந்து விழுந்து எழுந்து போற்றித் துதி செய்து வணங்கினார்.

திருமுடியிலிருந்து கங்காதரன் கங்கை நீர்த்துளிகளைச் சந்தி அருளினார். அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. கங்கை நதி பசுவின் உடலில் பாய்ந்தபோது பசு உயிர்பெற்று எழுந்தது. கவுதம முனிவர் பசுபதீஸ்வரனின் மாப்பெருங்கருணைக்கு மனம் நெகிழ்ந்தார். கோமாதாவின் காரணமாக உற்பத்தியான நதி கோதாவரி என்று பெயர் பெற்றது.

கோதாவரி நதிக்கு கவுதமி என்ற பெயரும் உண்டு. பகீதரதனுக் காகப் பாய்ந்த கங்கை பாகீரதி என்று அழைக்கப்பட்டது போன்றே கவுதமருக்காகப் பாய்ந்த கங்கை கவுதமி என்று பெயர் பெற்றாள்.

இம்முறையில் தவம் செய்யும் முனிவர்களின் புனிதமான வாழ்க்கையானது அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி யுகம் யுகமாக மக்கள் எல்லோருக்கும் பயன்படும் மகத்தான தொண்டு செய்யும் பொதுநலம் காக்கும் வாழ்க்கையாக இருந்தது. சமுதாயம் முழுவதையும் சிறப்பாக்கும் சீரிய வாழ்க்கையாக விளங்கியது.

மும்மூர்த்திகள் உண்டாக்கிய குளத்தோடு கவுதம் முனிவர் ஏற்படுத்திய கோதாவரி நதியும் திரியம்பகேஸ்வரம் திருக்கோவிலின் புனிதத் தீர்த்தம் ஆயிற்று. கவுதமர் செய்த கோடியர்ச்சனைக்கும் தவத்திற்கும் கருணை கூர்ந்து ஒரு நதியையே புதியதாகப் படைத்து அருளி கவுதம முனிவருக்கு அளவற்ற ஆனந்தம் அளித்த பராபரனுக்கு கவுதமேஸ்வரர் என்று திருப்பெயர் உண்டாயிற்று.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் புரியும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. வாழ்க்கையில் தண்ணீர் பஞ்சம் உண்டாவது இல்லை. வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் எனும் ரெயில் நிலையத்தில் இறங்கி 28 கி.மீ. தூரத்தில் உள்ள திரயம் பகத்தை அடையப் பல வசதிகள் உள்ளன.

பேருந்து அடர்ந்த காடுகளிடையேயும் மலைப்பாதைகளைக் கடக்கும்போதும் இயற்கை அள்ளித்தரும், மனத்தை கொள்ளைக் கொள்ளும் ஈடில்லா காட்சிகள் நம்மைக்கிறங்க வைக்கும். படைக்கும் தெய்வம் பிரம்மன், காக்கும் தெய்வம் விஷ்ணு, அழிக்கும் தெய்வம் ருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து லிங்கப்பரம்பொருளைப் பிரதிஷ்டை செய்து பிரும்மத்தைப் பூஜை செய்தனர்.

இதனால் இத்தலம் திரியம்பகேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. மூவருக்கும் அருள்புரிந்த பரமேஸ்வரனுக்குத் திரியம்பகேஸ்வரர் என்று பெயர். திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்.

மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர்
வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர்

images-10-150x144

மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத்தலம் வைத்தீஸ்வரன் கோவில். செவ்வாய் தோஷம் நீக்கும் அங்காரகனுக்குரிய திருகோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம்.

வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி இத்தலத்திற்கு உரியவர்.

அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத்தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத்தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.

தண்டீஸ்வரர் கோவில்
தண்டீஸ்வரர் கோவில்

temble-150x150

சென்னையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவத்தலங்களில் சிறப்பு வாய்ந்தது, வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயமாகும். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. சோமுகாசுரன் எனும் அரக்கன் 4 வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து கடலுக்கு அடியில் சென்று சேற்றில் மறைத்து வைத்தான்.

இதனால் பிரம்மா நடத்தி வந்த படைப்புத் தொழில் நின்று போனது. இது பற்றி மகா விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். உடனே விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சென்று சோமுக சுரனை அழித்து 4 வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.

சேற்றில் புதைந்திருந்ததால், 4 வேதங்களும், தங்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பிரம்மனிடம் கேட்டன. அவர் கூறியபடி 4 வேதங்களும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றன. அது முதல் வேதங்கள் வணங்கிய தலம் என்பதால் வேதச்சேரி என்றானது. நாளடைவில் அது வேளச்சேரி என மருவியது.

முனிவர்கள் வேள்வி நடத்தியதால் இத்தலம் வேளச்சேரி ஆனதாகவும் சொல்கிறார்கள். இத்தலத்து ஈசனுக்கு தண்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு புராண நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது. துவாரபயுகத்தில் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான்.

உடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார். என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு லிங்கம் மீது பட்டது. உடனே ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்தார். அதோடு எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் பறித்தார்.

இழந்த பதவியைப் பெற எமன் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பிறகு அவனது தண்டத்தையும் திருப்பிக் கொடுத்தார். அன்று முதல் எமன் கேட்டுக் கொண்டபடி இத்தலத்து ஈசன் தண்டீஸ்வரர் ஆனார்.

இத்தலத்துக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன் இங்கு 10-ம் நூற்றாண்டில் தண்டீஸ்வரருக்கு கோவில் கட்டினார். அதை உறுதிபடுத்தும் கல்வெட்டுக்கள் கருவறை சுவர்களில் உள்ளன. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது.

கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் இடது பக்கம் பெரிய மண்டபத்தில் விநாயகரை காணலாம். அவரை வணங்கிவிட்டு வழக்கம் போல கொடிமரம், பலி பீடம், சற்று தலை குனிந்த நந்தியை தரிசனம் செய்து கருவறை நோக்கி சென்றால் இரு புறமும் விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகரை காணலாம்.

கருவறையில் தண்டீஸ்வரர் கிழக்குப் பார்த்து இருக்கிறார். அவரை கண்குளிர தரிசனம் செய்துவிட்டு கோஷ்டத்தை சுற்றி வந்தால் முதலில் வேத விநாயகரைப் பார்க்கலாம். கையில் 4 வேதங்களுடன் இருப்பதால் இவரை வேதவிநாயகர் என்கிறார்கள். அடுத்து குபேர மூலையில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.

இவரை குபேர தெட்சிணாமூர்த்தி என்றும், யோக தெட்சிணாமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அதற்கு முன்னதாக சண்டீகேஸ்வரர் அருகில் இருந்து பார்த்தால் மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியரை ஒருசேர தரிசிக்கலாம்.

அதோடு மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளின் விமானங்களை கண்டு களிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் அறுபத்து மூவர், நால்வர் உள்ளனர். மூன்றாம் கோபுர வாசல் அருகே கணேசர், கார்த்திகேயன், நந்தியுடன் வைத்தீஸ்வரர், மீனாட்சி சோமசுந்தரர் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.

அங்குள்ள சொற் பொழிவு மண்டபம் அருகில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் நாகர் சிலைகள், நர்த்தன கண்ணன் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். 16-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் அப்பைய தீட்சிதர் தனி சன்னதி கட்டி தாயார் ஸ்ரீகருணாம்பிகையை நிறுவினார்.

அம்பாள் தெற்கு நோக்கி காட்சித் தருகிறாள். தாயார் சன்னதியில் திருவேற்காடு, மாங்காடு தலத்தில் பதிக்கப்பட்டிருப்பது போன்று ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கு வாசல் மூடப்பட்டே இருக்கும். பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் திறக்கிறார்கள்.

மேற்கு பகுதியில் எமன் ஏற்படுத்திய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரு தடவை காஞ்சி பெரியவர் இத்தீர்த்த குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து தன் கனகாபிஷேகத்துக்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்காக வேளச்சேரியை சுற்றிலும் ஏராளமான சொத்துக்களை சோழ மன்னர்கள் கொடுத்திருந்தனர்.

சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், நடராஜர் திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவார கார்த்திகை சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி என எல்லா பண்டிகைகளும் இங்கு சிறப்பாக நடக்கின்றன.

பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வரும் திங்கட்கிழமை முதல் மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் அதிகாலை 5 மணிக்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தை மாதம் முதல் தேதி இத்தலத்தில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது.

எமன் இத்தலத்தில் மீண்டும் தன் தண்டம் பெற்றதால், பதவி இழந்தவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்தால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இத்தலத்தில் அறுபது, எண்பதாம் திருமணம் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதோடு ஆயுள் விருத்திக்கான ஹோமங்கள் உள்பட எல்லா வகை ஹோமங்களும் இங்கு செய்யப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேற தண்டீஸ்வரர், கருணாம் பிக்கை, வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபடலாம். வழிபாடு மற்றும் பலன்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை ஆலய குருக்கள் குமார சாமி சிவாச்சாரியாரை 9884402525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

சிதம்பரம் சுவாமிகள் ஜீவசமாதி:

சிதம்பரம் சுவாமிகள் என்ற மகான் 18-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் தங்கி இருந்து பல திருப்பணிகள் செய்து வந்தார். இந்த ஆலயத்தின் தேரை உருவாக்கியது இவர்தான். இவர் ஒரு தடவை மற்ற கோவில்களுக்கும் செல்லலாம் என்று தலயாத்திரை புறப்பட்டார்.

அப்போது மிகப் பெரிய பாம்பு ஒன்று தோன்றி அவரைத் தடுத்ததாம். இதனால் சிதம்பரம் சுவாமிகள் தன் கடைசி மூச்சுவரை இத்தலத்திலேயே சேவை செய்து இறந்து விட்டார். அவரது ஜீவசமாதி இத்தலத்தினுள் உள்ளது.

கன்னிபெண்களை காப்பற்ற அமர்ந்த நிலையில் வீரபத்திரர்:

எல்லா சிவாலயங்களிலும் வீரபத்திரர் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பாளர். ஆனால் இத்தலத்தில் கைகளில் மான், மழு தாங்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவர் கன்னிப் பெண்களை பாதுகாப்பவராக கருதப் படுகிறார். ஒரு தடவை சப்த கன்னியர்கள் அசுரனை அழிக்கச் சென்றனர்.

தவறுதலாக அவர்கள் ஒரு மகரிஷியை கொன்று விட்டனர். இதை அறிந்த அந்த அசுரன் சப்த கன்னியர்களை கொல்ல முயன்றான். அவர்களை காப்பாற்ற சிவபெருமான் வீரப்பத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் அந்த அசுரனை அழித்து சப்த கன்னியர்களைக் காப்பற்றினார்.

அதை பிரதிதிபலிக்கும் வகையில் சப்த கன்னியர்கள் அருகில் வீரபத்திரர் அமர்ந்த நிலையில் உள்ளார். பீடத்தில் நந்தி உள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிராக தயார், எத்தகைய அநீதிதி இழைத்தாலும், இந்த வீரபத்திரருக்கு பாலாபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், தங்களுக்கு நேர்ந்த துயரம் தீரும் என்று நம்புகிறார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை, சப்தகன்னியர் சன்னிதியை “செல்லியம்மன் சன்னதி” என்று பெண்கள் அழைக்கிறார்கள்.

பாசிகுல விநாயகர் கோயில்
பாசிகுல விநாயகர் கோயில்

2f7ca7b3-0881-4f3f-849b-70a2ccdb1eb3_S_secvpf.gif-150x150

நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி என்ற கிராமத்தில் பாசிகுல விநாயகர் கோயில் அமைந்துள்ளது.

இந்த விநாயகருக்கு 4 கைகள் உள்ளது. இரண்டு கைகள் மறைந்து இருக்கும், இரண்டு கைகள் வெளியில் தெரியும், ஒரு லிங்க வடிவில் விநாயகர் அமர்ந்து காட்சியளிப்பார்.

பால் அபிஷேகம் செய்யும் போது சிறிய குட்டியானை எப்படி உட்க்கார்ந்து இருக்குமோ அப்படியே உட்கார்ந்து காட்சியளிக்கிறார். பாசிகுல விநாயகர். சாஸ்தா (ஐயனார்) என்பவர் பாசிகுல விநாயகரை பூஜை செய்ததால் சாத்தனூர் என பெயர் பெற்றது.

அதோடு மட்டுமில்லாமல் எமனை சிவபெருமான் திருக்கடையூரில் சம்ஹாரம் செய்தார். பூமாதேவி உடன் எழுந்து வந்து சிவபெருமானியிடம் உலகத்தை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது, எனவே எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சொல்லி மன்றாடியிருக்கிறார்.

அப்போது எமனுக்கு உயிர்கொடுத்த இடம்தான் எடுத்துக்கட்டி. தற்போது எடுத்துக்கட்டி சாத்தனூர் என்று அழைக்கப்படுகிறது. ஓவ்வொரு ஊரிலும் விநாகர் கோயில் தெரு நுழைவாயிலும், தெரு கடைசியிலும் இருப்பது வழக்கம், ஆனால் இந்த பாசிகுல விநாயகர் சன்னதி மட்டும் ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது.

பெரும்பாலும் விநாயகருக்கு தலைவிருச்சம் அரசமரம், அல்லது ஆலமரம் தான் ஏராளமாக கோயில்களில் அமைந்து இருக்கும். இந்த கோயிலுக்கு மட்டும் வன்னி மரம் தான் தலைவிருச்சம் மரமாக அமைந்துள்ளது. பாசிகுல விநாயகரை வழிபட்டால் வறுமை நீங்கும்.

ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றால் அடுத்த கணமே பலன்கிடைக்கும். நவகிரக தோஷத்தால் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல் இருப்பார்கள். அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால் அவர்களுக்கு இருந்த அத்தனை தடைகளும் நீங்கும்.

மேலும் திருமண தடை, வேலை கிடைப்பதில் உள்ள தடை, எடுத்த காரியங்கள் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவது, குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்கள் எல்லோரும் இந்த பாசிகுல விநாயகரை தரிசித்து சென்றால் போதும். அவர்கள் வாழ்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து வாழ்வார்கள்.

சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில்

ஸ்தல வரலாறு:T_500_713-150x150

கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் உள்ளது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.

பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் எழிலாக அருள்பாலிக்கிறாள் தேவி.

சர்வேஸ்வரியும், அன்னபூரணியும், அபயம் தேடி வருபவர்களுக்கு அருளை வாரி வழங்கும் கலியுகத்து தெய்வமுமான சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் பலர் புண்ணிய சுமையாக இருமுடி கட்டி விரதம் இருந்து சக்குளத்து அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.

அதேபோல் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து சக்குளத்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தேவி சந்தோஷத்தோடு அருள் புரிகிற கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் தேவியின் இஷ்ட நைவேத்தியமான பொங்கல் வைத்து தேவியின் அருளை பெறுகிறார்கள்.

இந்த நாளில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண்பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரிய தரிசி ராதா கிருஷ்ணன் நம்பூதிரி சுபமுகூர்த்த வேளையில் தீயை பற்ற வைத்து இந்த பொங்கல் விழாவை தொடங்கி வைப்பார்.

அப்போது பருந்து (கருடன்) கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும். அதைத் தொடர்ந்து லட்சணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டங்களை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள்.

இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.

இதனால் ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை ஸ்தம்பம் (சொக்கப்பனை) கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றி தேவியை எழுந்தருளச் செய்வதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் என்பது ஐதீகம்.

சிறப்புமிக்க சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் திருவிழா 16ந் தேதி (நேற்று) தொடங்கியது. இந்த விழா வருகிற 27ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து தேவியை வழிபாடு செய்வார்கள்.

டிசம்பர் 26ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள்ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கு வித்யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலசம் ஆகிய பூஜைகள் உண்டு. அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது, வேறு எங்கும் நடை பெறுவதில்லை.

அன்றைய தினத்தில் தங்கத் திருவாபரணங்கள், மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தேவிக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும்.

நாவில் தேவியின் மந்திரமும், மனதில் தேவியின் ரூபமுமாய் இந்த நாளில் பக்தர்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் பறந்துவிடும் என்பது நம்பிக்கை.

முதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து ஜாதி மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறும். இந்த வழிபாட்டினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க வழிகாட்டுகிறது. குடிகாரர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் அழைத்து வரப்படுகிறார்கள்.

தலைமை பூசாரி சில மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, தேவியின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பின் குடிகாரர்கள் குடியை நிறுத்தி விடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் இது இன்றும் நடந்து வருகிறது. சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக அதற்குரிய தண்டனை கிடைக்கிறது.

இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்படுகிறது. தேவியின் அருள்பெற்ற இந்தக் கோவிலின் முக்கிய காரியதரிசியான ராதாகிருஷ்ணன் நம்பூதிரி 7 வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு மிக துல்லியமாக சொல்லும் வெற்றிலை ஜோதிட பிரசன்னம் மிகவும் பிரபலமானதாகும்.

கேரளாவில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரமுகர்களும் தங்களது எதிர்காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள இங்கு வருகை தருகிறார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட மக்களும் வந்து அம்மனை வழிபட்டு செல்லும் புண்ணிய தலமாக சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது.

தனது சொந்த அனுபவங்களை ஒருவர் மற்றவரிடம் சொல்லி தகவல் பரவுவதால் இன்று தேவியின் புகழ் கேரளாவில் மட்டும் இன்றி பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகிறது.

திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது.

சித்ரகுப்தர் திருக்கோவில்
சித்ரகுப்தர் திருக்கோவில்

chit-150x150

தமிழ்நாட்டில் சித்ரகுப்தருக்கு என்று அமைந்துள்ள ஒரே கோவில் காஞ்சீபுரத்தில் தான் உள்ளது. இந்த தலத்தில் செல்வ விநாயகர் சன்னதி, இராமலிங்க அடிகள் சன்னதி, ஐயப்பன் சன்னதி, விஷ்ணு துர்க்கை சன்னதி, நவக்கிரகங்களின் தனிச்சன்னதி ஆகிய சன்னதிகள் கோவிலினுள் அமைந்துள்ளன.

காஞ்சீபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கில், நெல்லுக்காரத் தெருவின் மையத்தில் மெயின் ரோட்டோரத்திலேயே இத்தலம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட நடைப்பயணத்தில் நடந்தே வந்தடைந்து விடலாம். மூலவர் சித்ரகுப்தர் தெற்கு பார்த்த வண்ணம் எழுந்தருளியுள்ளார்.

எமதர்மன் ஒரு சமயம் கயிலாயத்தில் சிவபெருமானைச் சந்தித்து, பிரம்மதேவனால் படைக்கப்படும் உயிர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டுத் தண்டனை வழங்குவதில் சற்று சிரமமாக இருப்பதாகவும், அதற்கென்று தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்றும் கூறினார்.

உடனே சிவபெருமான், பிரம்மதேவனை வரச்செய்து எமதர்மனின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார். ஒருநாள் சூரியன் ஆகாய மார்க்கமாகத் தன் பயணத்தை தொடரும்போது, ஒளிக் கதிர்கள் கடல் நீரில் விழுந்து பல வண்ண ஜாலங்களை ஏற்படுத்தின.

அப்போது கடல் நீர்ப்பரப்பில் நீலாதேவி என்னும் பெண் தோன்றி, சூரியனின் மீது ஆசைப்பட்டு சூரிய பகவானைத் தழுவினாள். இதனால் அவளுக்கு ஓர் ஆண்குழந்தைப் பிறந்தது. குழந்தைப் பிறந்தவுடன் நீலாதேவி அந்த கடல் நீர் பரப்பினுள் மறைந்தாள்.

அந்த குழந்தைப்பிறந்த நேரம்-சித்திரை மாதம் பவுணர்மி தினம் (சித்ரா பவுர்ணமி நன்னாள்) சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அக்குழந்தையே சித்திரகுப்தர் ஆவார். இவர் பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார். இவர் இமயமலை சாரலில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார்.

பிறகு தந்தை சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து பணியாற்றுகிறார் என்று ஆன்மீக அறிஞர்கள் கூறியுள்ளனர். தென் இந்தியாவில் உள்ள ஒரே திருக்கோவில் என்று பெருமையைப் பெறுகிறது இத்திருக்கோவில்.

நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்திரகுப்தர் விளங்குகிறார் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர் தான் சித்ரகுப்தர் ஆவார்.

இத்தலம் மிகச்சிறந்த ராகு-கேது பரிகார தலமாக விளங்குகிறது. அந்த பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? கொள்ளு, உளுந்து (கொள்ளு-கேது, உளுந்து- ராகு), வண்ணத்துணி (அவரவர் சக்திக்கு ஏற்ப) தட்டில் வைத்து அர்ச்சனை செய்து, துணியை ஆலயத்தில் கொடுத்துவிட வேண்டும்.

அதன்பிறகு கொள்ளு, உளுந்தை பசுவிற்குத் தந்துவிடவேண்டும். இதனால் ராகு, கேது, தோஷம், அகலும். இத்திருக்கோவில் கருணீகர் மரபினர்களால் கணக்குப் பிள்ளைமார்களால் நிர்வகிக்கப்படுகிறது. காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருள்மிகு சூரியனார் திருக்கோயில்
அருள்மிகு சூரியனார் திருக்கோயில்

images-4

தலபெருமை:

இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை.

ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.

சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம்.அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார்.

அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.

* நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.

* இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.

* உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்படித்தக்கது.

* இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.

* இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.

* இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.

திருவிழா:

ரதசப்தமி உற்சவம்: தை மாதம் – 10 நாட்கள் திருவிழா – இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும்.

சிறப்பு வழிபாடு:

பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள். சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.

பிரார்த்தனை :

நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.

தோஷ நிவர்த்தி :

ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும்.

அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து பன்னிரெண்டாவது ஞாயிற்றுகிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நாடோறும் நவதீர்த்தங்களிலும் நீராடி உபவாசமிருந்து திருமங்கலகுடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும். தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.

* சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.

* இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.

போக்குவரத்து வசதி :

சென்னை கோயம்பேட்டில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல நேரடி போக்குவரத்து வசதி உள்ளது. அல்லது சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலம் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லாம்.

கும்பகோணம் –அணைக்கரை-ஆடுதுறை –மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உண்டு.

சிவயோகிநாதர் திருக்கோவில்
சிவயோகிநாதர் திருக்கோவில்

20c5028b-32bf-482b-aca8-0663a077c73b_S_secvpf

கும்பகோணம் அருகே அமைந்துள்ளது சிவயோகிநாதர் திருக்கோவில். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியபடி உள்ளது இந்தத் திருத்தலம். படைப்புக் கடவுளான பிரம்மதேவர், விஷ்ணுசர்மா என்பவருக்கு மகனாக பிறந்தார். விஷ்ணுசர்மாவுக்கு மேலும் ஆறு பேர் இருந்தனர். பிரம்மதேவர் தன்னுடன் பிறந்த ஆறுபேருடனும் சிவனை நோக்கி தவம் புரிந்தார்.

ஒரு சிவராத்திரி தினத்தில் தவம் புரிந்த 7 பேருக்கும் சிவபெருமான் தரிசனம் கொடுத்து அவர்களை 7 ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வரலாற்றை விளக்கும் வகையில் இங்குள்ள சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இருக்கின்றன.

பொதுவாக சிவாலயங்களில் கொடிமரத்திற்கு முன்பாக நந்தி உருவம் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் கொடிமரத்திற்கு வெளியே நந்தி சிலை அமைந்துள்ளது. இதற்கு தல வரலாற்று கதை உள்ளது. ஒரு காலத்தில் பல பாவங்களைச் செய்த ஒருவன், தன் இறுதி காலத்தில் கோவிலுக்கு வந்து இத்தல இறைவனான சிவயோகிநாதரை நோக்கி அழைத்தான்.

இவ்வாறு பாவம் செய்தவன், இறைவனை அழைத்த தினம் பிரதோஷ தினமாகும். அப்போது சிவபெருமான் நந்தியிடம் ‘என்னை அழைப்பது யார்?’ என்று கேட்க, நந்தி திரும்பிப் பார்த்தது. நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்து போனது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆலயத்தில் உள்ள நந்தி சிலை திரும்பிப் பார்த்த நிலையில் காணப்படுகிறது.

பாவம் செய்திருந்தாலும், இறைவனை நினைத்ததன் பலனாக அவனது பாவம் தொலைந்து அவன் சுகமாகிவிட்டான். ஆனால் அவனது விதி முடிய இருந்த காரணத்தால், எமன் அவனை கொண்டு செல்ல அங்கு வந்தான். எமனை நந்தி பகவான் தடுத்தார். அப்போது நந்தீஸ்வரருக்கும், எமதர்மனுக்கும் பயங்கரமான சண்டை நடந்தது.

இறுதியில் நந்தீஸ்வரர், எமனை வென்று கோவில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பினார். இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி சிலை இருப்பதை இன்றும் காணலாம். இத்தல இறைவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். சுயம்பு லிங்கமான சிவயோகிநாதரின் திருமேனியில் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் பட்டு ஒளிவீசும்.

கோவிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதில் இருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதையே நேரம் ஆகும். இத்தலத்தில் சவுந்திரநாயகி அம்மன் சன்னிதி தனியாக உள்ளது. தல விருட்சம் வில்வம் ஆகும்.

கோவிலை சுற்றிலும் 8 தீர்த்தங்கள் உள்ளன. அதில் ஜடாயு தீர்த்தம் முக்கியமானதாகும். காவிரி வடகரை தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற 43–வது தலம் இதுவாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தன் வீட்டில் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பசியால் வீட்டு வாசலில் யாசகம் கேட்டு ஒருவன் வந்தான்.

திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்தவனுக்கு அந்த வீட்டு உரிமையாளர் உணவளித்தார். இதனால் அந்த ஊர் மக்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். தண்டனைக்கான பரிகாரம் கேட்டபோது, கங்கையில் குளிக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கூறிவிட்டார்கள்.

இதையடுத்து அந்த நபர், சிவயோகிநாதரை நோக்கி வேண்டினார். பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கையை பொங்க வைத்தார் ஈசன். இதனைக் கண்டு வாயடைத்து போய்விட்டனர் அந்த ஊர் மக்கள். மனிதநேயம் கொண்ட பக்தனுக்கு உதவ எப்போதும் இறைவன் உதவுவான் என்பதை இந்த கதை உணர்த்துகிறது.

கும்பகோணத்தில் இருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருவிசநல்லூர் சிவயோகிநாதர் திருக்கோவில். சென்னையில் இருந்து பேருந்து மூலம் கும்பகோணம் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலை அடையலாம்.

காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில்
காரைக்குடி கொப்புடை அம்மன் கோயில்

Koppudai-amman-temple

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலமானது பழமை வாய்ந்து திகழ்கிறது. கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.

தல சிறப்பு:

சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

பரிகாரம்:

சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். பூரண நம்பிக்கை கொண்டு இங்கு வருவோரின் குறைகள் யாவும் நிவர்த்தியடைகிறது என்பது நம்பிக்கை.

திருவிழா:

சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

நடை திறக்கும் நேரம்:

இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருமண வரம் அருளும் வரமூர்த்தீஸ்வரர் கோவில்
திருமண வரம் அருளும் வரமூர்த்தீஸ்வரர் கோவில்

varamurtheeswar-temple

வற்றாத காசித் தீர்த்தம் கொண்ட தலம், பிரம்மன் தோற்றுவித்த ஆரணி ஆற்றோரம் அமைந்த பஞ்ச பிரம்மத் தலம், ரோம மகரிஷி நிறுவிய சிவன், பாரிஜாத மரத்தின் சாபத்தால் கண்ணன் அரச மரமாகி நின்ற பூமி, மன்னன் மகளையே மணம் புரிந்த இறைவன் வாழும் கோவில்,

இந்திரனின் சாபம் நீக்கிய தலம் என பல பெருமைகளை தனக்குள் கொண்டு, ஆலயமாக உயர்ந்து நிற்கிறது, திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில். பிரம்மன் உருவாக்கிய ஆரணியாற்றில் ஐந்து ஆலயங்கள் தோன்றின.

அவற்றில் ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் தவம் இயற்றினர். அவை பஞ்சபிரம்மத் தலங்கள் எனப் போற்றப்படும் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஆரணி, அரியத்துறை மற்றும் பழவேற்காடு கோவிலடி ஆகியவை ஆகும். ரோம மகரிஷி, தான் தவமிருக்க தகுந்த இடத்தினைக் காட்டியருளுமாறு பிரம்மனை வேண்டி நின்றார்.

அதற்கு செவி சாய்த்த பிரம்மன் தன் கையிலிருந்த தர்ப்பையை ஒரு பந்து போல ஆக்கி, அதனை தூக்கி வீசினார். அது உருண்டோடி பிரிந்த இடமே நதியாக உருவாகி ஆரணி நதி என பெயர் பெற்றது. அதன் கரையோரம் ரோம மகரிஷி தவமியற்றிய இடமே அரியத்துறையாகும்.

பலநூறு ஆண்டுகள் தவமியற்றிய ரோம மகரிஷிக்கு, இறைவனும் இறைவியும் காட்சி தந்து வரமளித்தனர். அதன் பின் ரோம மகரிஷி அத்தலத்திலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலானார்.

அது முதல் இறைவன் வரமூர்த்தீஸ்ரர் என அழைக்கப்படுகிறார். அத்திரி முனிவர் – அனுசுயா தம்பதியரின் ஐந்து புதல்வர்களுள், இளையவர் முகுந்தன் ஆவார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்.

காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தரிசிக்க விரும்பினார். அப்போது அவர் ரோம மகரிஷியை சந்திக்க நேர்ந்தது. முகுந்தன் தனது ஆசையை முனிவரிடம் கூறினார்.

அதற்கு ரோம மகரிஷி, ‘கங்கைக்கு இணையான மகத்துவம் கொண்ட ஆரணி ஆற்றில் குளித்து, அருகேயுள்ள வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் போதும். உனக்கு காசிக்கு இணையான புண்ணியம் கிட்டும்’ என்றார்.

முகுந்தனும் அதன்படியே செய்ய, அங்கே சிவபெருமான் காட்சி தந்தார். மேலும் பைரவரும் அவரின் பின்னே கங்கையும் தோன்றினர். அப்போது கங்கையிடம் இருந்து நீர் சுரந்து ஆரணியாற்றில் கலந்தது.

இந்த அதிசயத்தைக் கண்ட முகுந்தன் ‘அரியத்துறை! அரியத்துறை!’ என கூவி மகிழ்ந்தார். அதுமுதல் இவ்விடம் அரியத்துறை என்றே வழங்கப்படுகிறது. அரிய என்பதற்கு ‘அரிதான’ என்பதும், துறை என்பதற்கு ‘ஆற்றில் குளிக்கும் இடம்’ என்பதும் பொருளாகும்.

இதற்குச் சாட்சியாக இந்த கங்கையின் காசித் தீர்த்தம் இன்றளவும் சிவாலயத்தின் பின்புறம் காணப்படுகிறது. அதனைக் கவுரவிக்கும் வகையில் தற்போது தனி மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.

ஆற்றில் நீர் இல்லாத நிலையிலும், ஆற்றின் கரை மீதுள்ள இத்தீர்த்தம் தொடர்ந்து நீரை சுரந்து கொண்டே இருப்பது, அதிசயமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சித்திரசேனன் என்ற மன்னனுக்கு முதலில் ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. பிறகு நான்கு குழந்தைகள் பிறந்து, அவைகளும் இறந்து விட்டன.

இதனால் மனம் வெறுத்த மன்னன் ஆட்சியை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் வெளியேறினான். அப்போது அங்கே நந்தவனத்தில் கொடிகளின் மீது மரகத ஒளி வீசிய குழந்தை ஒன்று சிரித்த முகத்துடன் கைகால்களை உதைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட சித்திரசேனனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளிவீசும் இக்குழந்தை வரமூர்த்தீஸ்வரரின் கொடையே என மகிழ்ந்தார். அக்குழந்தையை இரு கரங்களால் தாங்கி மன மகிழ்ச்சியுடன் தன் அரண்மனை திரும்பினான். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்து, அவனையும் குழந்தையையும் வரவேற்றனர்.

மீண்டும் மன்னர் நல்லாட்சி புரியத் தொடங்கினார். அப்பெண் குழந்தைக்கு மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். மரகதவல்லி திருமண வயதை அடைந்தாள்.

சுயம்வரம் நடத்த அனைத்து மன்னர் களுக்கும் ஓலை அனுப்பினான். சுயம்வரம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒளிவீசும் அழகு பொருந்திய ஆண்மகன் ஒருவன் குதிரையில் வந்து மரகதவல்லியின் கரம் பற்றி தன் குதிரையில் ஏற்றி தப்பி ஓடினான்.

உடனே மன்னன் தன் படை வீரர்களை ஏவி அவனைப் பிடிக்க ஆணையிட்டான். ஆனால், எவரும் எவரையும் பிடித்ததாகத் தகவல் இல்லை. மனம் வருந்திய மன்னன் வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் சென்று மனமருகி வேண்டி நின்றான்.

மக்களும் அவன் பின்னே சென்றனர். அப்போது வானில் மரகதவல்லியோடு, வரமூர்த்தீஸ்வரர் வானில் காட்சி தந்தார். ‘உனக்கு மகப்பேறு தரவே யாம் எம் துணைவியை உனக்கு மகளாக அனுப்பி வைத்தோம்.

இப்போது இவளுக்கு நீ தந்தை என்ற நிலையை அடைந்து விட்டாய். இனி இவளை நான் துணையாக ஏற்கின்றேன்’ எனக் கூறினார். மன்னன் உட்பட அனைவரும் மனம் மகிழ்ந்தனர். அன்னை மரகதவல்லி யும் அத்தலத்தில் நிலைத்து நின்று அருள் வழங்கி வருகின்றார்.

பாரிஜாத மரத்தின் சாபத்தால், அரச மரமாக மாறிய கண்ணன், அரியத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சாபம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

அதற்குச் சாட்சியாக பிரம்மாண்ட அரச மரமும், அதன் அடியில் ரோம மகரிஷியின் சன்னிதியும் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளன. இதனை மூன்று முறை வலம் வருவோருக்கு தோஷமும், சாபமும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

கிழக்கில் சிறிய வாசலும், தெற்கே பெரிய நுழைவு வாசலையும் கொண்டு ஆலயம் விளங்குகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னிதி, தென்கிழக்கில் மடப்பள்ளி மற்றும் யாகசாலை, இதன் எதிரே கல்யாண மண்டபம் ஆகியன அமைந்துள்ளன.

பஞ்சகோட்டம் கொண்ட கருவறைச் சுவரில், நின்ற நிலையில் விநாயகர், நாகத்தின் தலை மீது முட்டியை வைத்துள்ள அபூர்வ தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அதன் கீழ் சண்டிகேசுவரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

ஆலய அமைப்பு :

கருவறையின் பின்புறம் பாலசுப்பிரமணியரும், கிழக்கே கொடிமரம், பலிபீடம், எளிய வடிவில் நந்திதேவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இதன் வலதுபுறம் சுயம்பு பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

இதில் மண்ணால் ஆன சுயம்பு பைரவர் மற்றும் சிலா வடிவ பைரவர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் தென்புற வாசலில் நுழைந்ததும், எதிரே அன்னை மரகதவல்லி எளிய வடிவில் எழிலான கோலத்தில் அருளாட்சி செய்து வருகின்றாள்.

அதன் அருகே நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இதில் அன்னை சிவகாமியுடன் மாணிக்கவாசகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் வடிவங்கள் உற்சவமூர்த்திகளாகக் காட்சி தருகின்றன.

இதுதவிர, திருமணஞ்சேரியின் வடிவத்தை ஒத்த கல்யாண சுந்தரேஸ்வரர், சோமாஸ்கந்தர் ஆகிய உற்சவ மூர்த்திகளும் உள்ளன. கோவிலின் நாயகர் வரமூர்த்தீஸ்வரர், கிழக்கு முகமாய் எளிய வடிவில் சதுர வடிவ ஆவுடையாராக காட்சி தருகின்றார்.

அரியத்துறையில் எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்த்திவிட்டு, எதுவும் அறியாதவர் போல இறைவன் அமர்ந்திருப்பது, நம்மை வியக்க வைக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம் :

சிறப்புமிக்க அரியத்துறை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கவரைப்பேட்டை என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி, ஆட்டோ மூலம் அரியத்துறை செல்லலாம். பஸ் வசதி இல்லை என்பதால், கவரைப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் மட்டுமே செல்ல முடியும்.

லட்சுமி கோவில்கள்
லட்சுமி கோவில்கள்

lakshmi-temple

சென்னையில் காமக் கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் அலைகடல் ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கோவில், திருவான்மியூருக்கு அருகிலுள்ள ஓடைக் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வாஷிக்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள். கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.

இவர்களைத் தரிசித்து விட்டு பிரதஷணமாக வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம். மீண்டும் மகாலட்சுமி சந்நிதிக்குள் சென்று இடது கைப்பிடிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்துக்குச் செல்லலாம்.

இந்தத் தளத்தில் கிழக்கு நோக்கி கஜலட்சுமி, தெற்கு நோக்கி சந்தான லட்சுமி, மேற்கு நோக்கி விஜயலட்சுமி, வடக்கு நோக்கி வித்யா லட்சுமி காட்சி தருகிறார்கள். அங்கேயிருந்து மூன்றாவது தளத்திற்குச் செல்லலாம்.

அங்கே கிழக்கே பார்த்தபடி தனலட்சுமியைத் தரிசிக்கலாம். ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தளங்கள் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு விசேஷம் இக்கோவிலில் குருவாயூரப்பனுக்கும், ஆஞ்சநேயருக்கும், கணபதிக்கும் தனித் தனியே சந்நதிகள் அமைந்துள்ளன.

நாச்சியார் கோவில் :

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார் கோவில் என்னும் தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.

துறையூர் :

துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம். பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும். இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.

தலச்சங்காடு (மாயவரம்) :

மாயவரம் தரங்கம்பாடி வழிதடத்தில் உள்ள தலைச்சங் காடு என்ற திருத்தலத்தில் தாயார் தலைச்சங்க நாச்சியார் செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் :

பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திருவிடத்தில் வடபத்திர சாயியான பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலிக்கிறாள்.

திருக்கண்ணமங்கை :

திருவாரூருக்கு அடுத்துள்ள கண்ண மங்கையில் தாயார் அபிஷேகவல்லி என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டுள்ளாள். இங்கு தாயார் சந்நிதிக்குள் ஒரு பெரிய தேன்கூடு இருப்பதைக் காணலாம். இக்கூடு பல்லாண்டு காலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

முனிவர்கள் தேனீ ரூபத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவிப்பதாகக் கூறுகிறார்கள். திருவாரூரில் ஸ்ரீலட்சுமியின் மற்றொரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருஷமான புன்ன புரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதிகம். புன்னைப் பிராட்டியார் என்பது திருநாமம்!

பிச்சாண்டார் கோவில் :

திருச்சிக்கு அருகே பிச்சாண்டார் கோவிலில் தாயாரைச் சேவிக்கலாம். இங்குள்ள தாயாருக்கு பூரணவல்லி என்று திருநாமம். இக்கோவிலுள்ள மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உண்டு.

சிவபெருமான் கபாலம் ஏந்தி பிசைக்கு வந்த போது முதலில் தாயார் பிசை இட்டார் என்றும் அதனால் அவரது கபாலம் நிரம்பி வழிந்தது என்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பைச் சொல்லும் புராண வரலாறாகும்.

லால்குடி :

தற்போது லால்குடி என்று அழைக்கப்படும் திருவத்துறை என்னும் இத்தலத்தில் தாயார் எம்பெருமானைத் தவமிருந்து கணவராகப் பெற்றார் என்பது புராணமாகும்.

நாமக்கல் :

நாமக்கல் என்னும் தலத்தில் தவமிருந்து விஷ்ணுவை அடைந்தார் தாயார்! இத்தலத்தில் தாயாருக்கு ஹரி என்று திருநாமம். இங்கு தாயாருக்கு, நாயகரான நரசிம்ம சுவாமியை விட சிறப்பு அதிகம்.

திருக்கண்ணபுரம் :

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கண்ணபுரத்தில் எம்பெருமாளுக்கு நான்கு தேவியர்கள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்பவர் ஆவர். பத்மினி தாயார், “வலைய நாச்சியார்” என்று அழைக்கப் படுகிறார்கள்.

கர்ப்பக் கிரகத்தில் எம்பெருமான் சௌரிராஜன் என்ற கோலத்துடன் எழுந்தருளுகிறார். நான்கு தேவியரும் இருவர்கள் ஒரு பக்கமாக எழுந்தருளி உள்ளனர்.

அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் – அரியமங்கலம்
அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் – அரியமங்கலம்

thayal-nayaki

சில அம்மன் ஆலயங்களில் விழாக் காலங்களில், சிலருக்கு அருள்வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதுண்டு. சிலருக்கு தான் வணங்கும் அம்மனே கனவில் காட்சி தருவதும் உண்டு.

ஆனால், அந்த அம்மனே நேரில் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி நடந்த சம்பவம் தான் இது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது.

கோவில் தல வரலாறு :

ஒரு பக்தர். அவருக்கு சகலமும் தையல் நாயகி அம்மன் தான். அந்த அம்மன் மேல் தீராத பக்தி கொண்டவர். தையல் நாயகி அம்மனை தரிசிக்க வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வருவார்.

அவருக்கு ரெயில்வேயில் என்ஜின் டிரைவராகப் பணி. திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் மனதில் எப்போதும் அன்னை தையல் நாயகியின் நினைவுதான். ஒருநாள் பணியில் இருந்த அவர் ரெயிலை ஓட்டிக் கொண்டிருந்தார்.

என்ஜின் ஓரம் அமர்ந்து, எதிரே உள்ள ரெயில் பாதையைப்பார்த்துக் கொண்டே ரெயிலை ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த பக்தர். ரெயில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே, யாரோ நிற்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ரெயிலின் வேகத்தைக் குறைத்தார். தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி, சிவப்பு துணி ஒன்றை கையில் வைத்து அசைத்தப்படி நின்று கொண்டிருந்தாள்.

பகீரென்றது அவருக்கு. அவசர அவசரமாக ரெயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரெயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே, தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது.

ரெயில் நின்றதும் பயணிகள் பலரும் என்னவோ, ஏதோ என்று பதறியபடி இறங்கி ஓடிவந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரெயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும்.

பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டினர். மனதாரப் புகழ்ந்தனர். டிரைவர் இந்த விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினார். ஆனால் அந்தச் சிறுமியை காணோம்.

கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு, சுற்றிலும் தேடியும் காணவில்லை. டிரைவருக்கு ஏதும் புரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ‘நான் வேறு யாருமில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்’ என்றாள். மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார்.

கரங்கூப்பி அந்தச் சிறுமியை, இல்லை.. இல்லை.. தான் தினமும் வழிபடும் தையல் நாயகியை வணங்கினார். ‘தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்’ என்றார்.

‘எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு’ என்றாள் சிறுமியின் உருவில் இருந்த அம்மன். ‘அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்’ என்றார் அந்த பக்தர்.

அம்மன் பிரதிஷ்டை :

ஆனால் அம்மனோ, நீ சிலை செய்ய வேண்டாம் என்றாள். ‘எனக்காக, நீ சிலை செய்யவேண்டாம். நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும் போது உன்னுடன் நெல் மூட்டையை எடுத்துச் செல்.

அங்குள்ள சித்தரிடம் பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும்.

எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ, அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்’ என்று சொன்ன சிறுமி மறைந்தாள். அவர் கனவு கலைந்தது. மறுநாளே கொல்லிமலைக்குப் புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது.

வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே, தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் ஆகும்.

ஆலய அமைப்பு :

ஆரம்பத்தில் தகரக் கொட்டகையாக இருந்த ஆலயம், தற்போது அழகான ஆலயமாக கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளுடன் காணப்படுகிறது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம். அர்த்த மண்டபம் நுழை வாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடனும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டப தென்  திசையில் துர்க்கை அருள்பாலிக்கிறாள்.

அடுத்துள்ள கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள்.

அன்னையின் தேவக் கோட்டத்தின் வடபகுதியில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் வலதுபுறம் அருள்மிகு வைத்தீஸ்வரன் தனிக்கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

இறைவனின் முன் மகாமண்டபத்தில் நந்தியும், பலி பீடமும் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் கீழ் திசையில் கால பைரவரும், தெற்கில் சைவக் குறவர்கள் நால்வரும் அருள்பாலிக்க, தேவக் கோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரருக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலின் தென் திசையில் நாகம்மாவுக்கும், கருப்பண்ணசாமிக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.

சிறப்பு பூஜைகள் :

நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயக பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர்.

துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அன்று காவேரியில் இருந்து 100–க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள்.

பாதயாத்திரை :

ஆலயத்தின் வளாகம் மிகவும் விஸ்தாரமானது. சபரிமலை, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முதலிய புண்ணிய தலங்களுக்கு இந்த வழியாக பாத யாத்திரை செல்வோர், பகல் நேரங்களில் இங்கு வந்து தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.

காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் சூடம் பயன்படுத்துவது கிடையாது.

தீபம் மட்டுமே. நோய்களை குணமாக்கி தருவதிலும் சொத்துப் பிரச்சினைகள், தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே!

ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள்.

இந்த அலங்காரத்தைக் காணவே ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மாத பவுர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னிதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள்.

பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனைகள் :

உடல் சரும நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகாமண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர்.

இவ்வாறு 5 செவ்வாய்க்கிழமைகள் பிரார்த்தனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். இந்த பிரார்த்தனைப் பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர்.

குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னிதியில் இருக்கும், அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

போக்குவரத்து வசதி :

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூர், துவாக்குடி, பெல் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த ஆலயம் வழியே செல்லும். ஆட்டோ வசதியும் உண்டு.