உஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரி கோவில்

Rate this post

3943dcaf-c12b-49fc-ad8f-ce96479658e0_S_secvpf-150x150

உஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரிகளில் ஒன்றாகும். காலத்தை வென்ற மகாகாலராக உஜ்ஜைனியில் ஜோதிர்லிங்கமாகத் சிவபெருமான் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. புனித நதியாகக் கருதப்படும் சிப்ரா நதித்கரையில் அவந்திபுரி என்ற நகரம் இருந்தது.

இந்த நகரத்தில் வாழ்ந்த வேதப்ரியன் இரவும், பகலும் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு நான்கு புதல்வர்கள். தேவப்ரியன் மேதன், சுவிரதன், தருமவாதி என்ற பெயர்கள் கொண்ட அந்த நால்வரும் தந்தைக்கு அனுசரணையாக இருந்ததோடு அவர்களும் தீவிர சிவபக்தர்களாகத் திகழ்ந்தனர்.

அவந்திபுரி அருகில் ரத்தனமாலா என்ற பருவதம் உண்டு. அங்கு துஷணன் எனும் அரக்க அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பிரம்மனைக் நோக்கி கடும்தவம் செய்து அளவிலாப் பராக்கிரமத்தை அடைந்திருந்தான்.

இதனால் மிக்க கர்வம் அடைந்த அந்த அரக்கன், அப்பகுதியிலிருந்த அனைவரையும் இம்சை செய்தும், அடித்தும், துன்புறுத்தியும் வந்தான். கடவுளை வணங்குவோரை மிரட்டினான். பூஜைகளில் ஈடுபடுபவர்களை உடனே அவற்றை கைவிடுமாறு வற்புறுத்தினான்.

அந்த அரக்கனை அடியோடு ஒழிக்க சகோதரர்கள் நால்வரும் முன்வரவேண்டும் என்று மக்கள் கண்ணீர் மல்க கூறி வேண்டினர். பிறகு மக்கள் அந்த நால்வருடன் சேர்ந்து அனுதினமும், தவறாமல், தீவிரமாக சிவபூஜையில் ஈடுபட்டு வந்தனர்.

இவர்களது செயல்களை அறிந்த தூஷணன், அவர்களைத் தாக்க தன் மந்திரிகளோடு அங்கு வந்து சேர்ந்தான். அவர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று தன்னுடன் வந்தவர்களுக்கு கட்டளை இட்டான் அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பார்த்திவ சிவலிங்கங்கள் செய்ய மண் எடுத்த இடம் பெரியகுளமாக இருந்தது.

அக்குளத்தில் இருந்து கிளம்பிய கிடுகிடுக்கும் முழக்கம் ஈரேழு உலகங்களை அதிரச் செய்தது. பெரும் சப்தத்துடன் குளத்தின் மையத்தில் குபீரென்று ஒரு ஜோதி எழும்பி, பிழம்பாக மாறி படிப்படியாக பெரும் சிவலிங்கமாகத் தோன்றியது! இறுதியில் படாரென்ற விண்அதிரும் சப்தத்துடன் அச்சிவலிங்கம் இரு பிரிவாகப் பிளந்தது.

அந்த லிங்கத்தில் இருந்து ஜடாமகுட தாரியாக, புலித்தோல் போர்த்திய சூலாயுதபாணியாக பரமேஸ்வரன் கோபத்தோடு வெளிப்பட்டார். அரக்கன் தூஷணனையும், அவனோடு வந்த அனைவரையும் அவர் சம்காரம் செய்தார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். இந்த அபூர்வக் காட்சியை வானத்தில் இருந்து கண்டு களித்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அவந்தி மக்கள் பகவானை நோக்கி எங்களது இன்னல்களைத் தீர்த்த இறைவனே இங்கு வரும் பக்தர்களின் குறைகளையும் தீர்க்க தாங்கள் என்றென்றும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி வீழ்ந்து வணங்கினர்.

அவர்களது ஆசையைப் பூர்த்தி செய்ய ஈசனும் மீண்டும் லிங்கத்தினுள் ஐக்கியமாகி மகாகாலர் என்ற நாமம் ஏற்று அவந்திபுரி எனும் உஜ்ஜைனி நகரத்தின் நடுவில் இன்றும் ஜோதிர்லிங்கமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.

அவந்தி நாட்டின் தலைநகரான உஜ்ஜைனியில் அரசு புரிந்த ராஜா விக்ரமாதித்யன் காலத்திலும், தார் நகரிலிருந்த போஜராஜன் புத்திரன் உதயாதித்யன் காலத்திலும் மகாகாலேஸ்வரர் ஆலயம் மிக உன்னத நிலையில் இருந்தது.

பொன்னும் மணியும், ஆலய சுவர்களைப் பலவாறு அலங்கரித்தன. ஆலயத்தின் சொத்து பல கோடிகளாக இருந்தது. ஆலயமணியும், அதனைச் சார்ந்த சங்லியும், கோபுர கலசங்களும் பொன்னால் செய்யப்பட்டு ஜொலித்தன.

அங்கிருந்த ஆள் உயர விக்ரமாதித்யன் சிலையும் தங்கத்தால் வடிக்கப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஈஸ்வரனுக்கு நவரத்தினங்களில் ஒவ்வொரு ரத்தினம் முழுமையாகப் பதிக்கப்பட்ட ஒன்பது கிரீடங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், வெள்ளிக்கதவுகள், வெள்ளி நிலைப்படிகள், தங்கமும் வெள்ளியும் கலந்த பூஜாபாத்திரங்கள் என்று கோவிலின் செல்வ நிலையைப் பாரெங்கும் பகிரங்கப்படுத்தின.

மகாகாலேஸ்வரர் ஆலயப் பொக்கிஷ விவரங்கள், தில்லி சுல்தான் இல்டுட்மிஷ் கவனத்திற்கு வரவே, அவன் கி.பி. 1235-ம் ஆண்டில் அவந்தி நாட்டின் மீது படையெடுத்து ஆலயத்தின் பொக்கிஷங்களைக் கொள்ளை அடித்ததோடு, ஆலயத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்கினான்.

ஜோதிர்லிங்கமான மகாகாலேஸ்வரரைப் பெயர்த்து ஆலயத்தினுள் இருந்த கோடி தீர்த்தம் என்ற புஷ்கரணியில் வீசி எறிந்து விட்டனர். அடிக்கடி அன்னிய மதத்தினரின் படையெடுப்புகளால் உஜ்ஜைனி நகர் பெருமளவில் பாழடைந்து விட்டது.

மகாகாலேஸ்வரர் ஆலயமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதால் சுமார் 500 ஆண்டுகள் வரை அவரைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. மிக்க கீர்த்தி பெற்ற மராட்டா சேனைத் தலைவன் ரானோனி சிந்தியா தன் புஜ பலத்தால் மாளவ நாட்டைக் கைப்பற்றி உஜ்ஜைனியைத் தலைநகராக்கி தானே ஆளத் தொடங்கினான்.

அவனது அவையில் திவானாக இருந்த ராமசந்திரராவ் ஷேண்பாய் என்பவர், ரானோனி சிந்தியா கட்டளைப்படி ஆலயம் இருந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து புது ஆலயம் நிர்மாணித்தார். நகரின் பண்டித குடும்பங்களில் பரம்பரையாக பேசப்பட்டு வந்த வாய்ச் சொல்லை ஆதாரமாகக் கொண்டு குப்பைகளை அகற்றி, நன்கு சுத்தப்படுத்திய போது கோவில் புஷ்கரணியில் புதைந்திருந்த ஜோதிர்லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.

அதை வெளியில் எடுத்து மீண்டும் கோலாகத்துடன் பழைய இடத்திலேயே பிரதிஷ்டை செய்தனர். அதன் பயனாக ஒரு புது ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. ருத்ரசாகர் எனும் ஏரியை ஒட்டி கம்பீரமாக விளங்கும் மகாகாலேஸ்வரர் ஆலயத்தின் பிரதான வாயில் கிழக்கில் உள்ளது.

ஐந்து தளங்களுக்கும், ஐந்து சபா மண்டபங்களும், கோபுரத்தில் பல கலசங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் உயரம் 88 அடிகளாகும். கோவிலைச் சுற்றி வலம் வர அகண்ட பிரகாரம் உள்ளது. மகாகாலேஸ்வரரைக் காண நம் மேற்கு வாயில் வழியாக நுழைந்தால், தெற்கு நோக்கியுள்ளள சன்னதியில் இரண்டு அடி உயரமுள்ள ஜோதிர்லிங்கமாக தரிசனம் தருகிறார்.

விசேஷ தினங்களில் பலப்பல அலங்காரங்களோடு கண் குளிரக் காட்சி அளிக்கிறார். இக் கருவறையில் 24 மணி நேரமும் இரண்டு நெய்விளக்குகள் எரிகின்றன. வட இந்திய பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி காலையில் ஜோதிர்லிங்கத்திற்கு பாங் எனும் அபினை அரைத்து காப்பாக அமைத்திருப்பார்கள்.

இக்காப்பு காலை 10 மணி வரை சார்த்தப்பட்டிருக்கும். இதன் பின் லிங்கத்திற்கு வெந்நீரினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் தான் இவ்வித விசேஷ காப்பும் அபிஷேகமும் நடைபெறுகின்றன. அன்றுதான் நமக்கு நரக சதுர்த்தி எனும் தீபாவளிப் பண்டிகை.

ஆலயத்தினுள்ளே காணப்படும் புஷ்கரணிக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். நான்கு மூலைகளிலும் பெருங்கிணறுகள் கொண்ட இக்குளத்தின் நீரின் நிறம் காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வருகிறதாம். உஜ்ஜைனியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா எனும் பெருந்திருவிழா ஒரு மாதக் காலம் நடை பெறுகிறது.

அப்போது லட்சக் கணக்கான பக்தர்கள், உலகின் பல பாகங்களிலிருந்து உஜ்ஜைனிக்கு வருவார்கள். சிப்ராநதியில் புனித நீராடி, மகாகாலேஸ்வரரை வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரியும் கார்த்திகை பவுர்ணமியும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.

Leave a comment