அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் – அரியமங்கலம்

thayal-nayaki

சில அம்மன் ஆலயங்களில் விழாக் காலங்களில், சிலருக்கு அருள்வந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்வதுண்டு. சிலருக்கு தான் வணங்கும் அம்மனே கனவில் காட்சி தருவதும் உண்டு.

ஆனால், அந்த அம்மனே நேரில் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி நடந்த சம்பவம் தான் இது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது.

கோவில் தல வரலாறு :

ஒரு பக்தர். அவருக்கு சகலமும் தையல் நாயகி அம்மன் தான். அந்த அம்மன் மேல் தீராத பக்தி கொண்டவர். தையல் நாயகி அம்மனை தரிசிக்க வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வருவார்.

அவருக்கு ரெயில்வேயில் என்ஜின் டிரைவராகப் பணி. திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் மனதில் எப்போதும் அன்னை தையல் நாயகியின் நினைவுதான். ஒருநாள் பணியில் இருந்த அவர் ரெயிலை ஓட்டிக் கொண்டிருந்தார்.

என்ஜின் ஓரம் அமர்ந்து, எதிரே உள்ள ரெயில் பாதையைப்பார்த்துக் கொண்டே ரெயிலை ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த பக்தர். ரெயில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே, யாரோ நிற்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ரெயிலின் வேகத்தைக் குறைத்தார். தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி, சிவப்பு துணி ஒன்றை கையில் வைத்து அசைத்தப்படி நின்று கொண்டிருந்தாள்.

பகீரென்றது அவருக்கு. அவசர அவசரமாக ரெயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரெயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே, தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது.

ரெயில் நின்றதும் பயணிகள் பலரும் என்னவோ, ஏதோ என்று பதறியபடி இறங்கி ஓடிவந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரெயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும்.

பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டினர். மனதாரப் புகழ்ந்தனர். டிரைவர் இந்த விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினார். ஆனால் அந்தச் சிறுமியை காணோம்.

கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு, சுற்றிலும் தேடியும் காணவில்லை. டிரைவருக்கு ஏதும் புரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ‘நான் வேறு யாருமில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்’ என்றாள். மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார்.

கரங்கூப்பி அந்தச் சிறுமியை, இல்லை.. இல்லை.. தான் தினமும் வழிபடும் தையல் நாயகியை வணங்கினார். ‘தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்’ என்றார்.

‘எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு’ என்றாள் சிறுமியின் உருவில் இருந்த அம்மன். ‘அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்’ என்றார் அந்த பக்தர்.

அம்மன் பிரதிஷ்டை :

ஆனால் அம்மனோ, நீ சிலை செய்ய வேண்டாம் என்றாள். ‘எனக்காக, நீ சிலை செய்யவேண்டாம். நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும் போது உன்னுடன் நெல் மூட்டையை எடுத்துச் செல்.

அங்குள்ள சித்தரிடம் பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும்.

எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ, அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்’ என்று சொன்ன சிறுமி மறைந்தாள். அவர் கனவு கலைந்தது. மறுநாளே கொல்லிமலைக்குப் புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது.

வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே, தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் ஆகும்.

ஆலய அமைப்பு :

ஆரம்பத்தில் தகரக் கொட்டகையாக இருந்த ஆலயம், தற்போது அழகான ஆலயமாக கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளுடன் காணப்படுகிறது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம். அர்த்த மண்டபம் நுழை வாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடனும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டப தென்  திசையில் துர்க்கை அருள்பாலிக்கிறாள்.

அடுத்துள்ள கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள்.

அன்னையின் தேவக் கோட்டத்தின் வடபகுதியில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் வலதுபுறம் அருள்மிகு வைத்தீஸ்வரன் தனிக்கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

இறைவனின் முன் மகாமண்டபத்தில் நந்தியும், பலி பீடமும் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் கீழ் திசையில் கால பைரவரும், தெற்கில் சைவக் குறவர்கள் நால்வரும் அருள்பாலிக்க, தேவக் கோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.

வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரருக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலின் தென் திசையில் நாகம்மாவுக்கும், கருப்பண்ணசாமிக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.

சிறப்பு பூஜைகள் :

நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயக பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர்.

துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.

அன்று காவேரியில் இருந்து 100–க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள்.

பாதயாத்திரை :

ஆலயத்தின் வளாகம் மிகவும் விஸ்தாரமானது. சபரிமலை, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முதலிய புண்ணிய தலங்களுக்கு இந்த வழியாக பாத யாத்திரை செல்வோர், பகல் நேரங்களில் இங்கு வந்து தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.

காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் சூடம் பயன்படுத்துவது கிடையாது.

தீபம் மட்டுமே. நோய்களை குணமாக்கி தருவதிலும் சொத்துப் பிரச்சினைகள், தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே!

ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள்.

இந்த அலங்காரத்தைக் காணவே ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மாத பவுர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னிதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள்.

பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பிரார்த்தனைகள் :

உடல் சரும நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகாமண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர்.

இவ்வாறு 5 செவ்வாய்க்கிழமைகள் பிரார்த்தனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். இந்த பிரார்த்தனைப் பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர்.

குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னிதியில் இருக்கும், அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.

போக்குவரத்து வசதி :

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூர், துவாக்குடி, பெல் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த ஆலயம் வழியே செல்லும். ஆட்டோ வசதியும் உண்டு.

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.