சிவயோகிநாதர் திருக்கோவில்

5/5 - (1 vote)

20c5028b-32bf-482b-aca8-0663a077c73b_S_secvpf

கும்பகோணம் அருகே அமைந்துள்ளது சிவயோகிநாதர் திருக்கோவில். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியபடி உள்ளது இந்தத் திருத்தலம். படைப்புக் கடவுளான பிரம்மதேவர், விஷ்ணுசர்மா என்பவருக்கு மகனாக பிறந்தார். விஷ்ணுசர்மாவுக்கு மேலும் ஆறு பேர் இருந்தனர். பிரம்மதேவர் தன்னுடன் பிறந்த ஆறுபேருடனும் சிவனை நோக்கி தவம் புரிந்தார்.

ஒரு சிவராத்திரி தினத்தில் தவம் புரிந்த 7 பேருக்கும் சிவபெருமான் தரிசனம் கொடுத்து அவர்களை 7 ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வரலாற்றை விளக்கும் வகையில் இங்குள்ள சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இருக்கின்றன.

பொதுவாக சிவாலயங்களில் கொடிமரத்திற்கு முன்பாக நந்தி உருவம் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் கொடிமரத்திற்கு வெளியே நந்தி சிலை அமைந்துள்ளது. இதற்கு தல வரலாற்று கதை உள்ளது. ஒரு காலத்தில் பல பாவங்களைச் செய்த ஒருவன், தன் இறுதி காலத்தில் கோவிலுக்கு வந்து இத்தல இறைவனான சிவயோகிநாதரை நோக்கி அழைத்தான்.

இவ்வாறு பாவம் செய்தவன், இறைவனை அழைத்த தினம் பிரதோஷ தினமாகும். அப்போது சிவபெருமான் நந்தியிடம் ‘என்னை அழைப்பது யார்?’ என்று கேட்க, நந்தி திரும்பிப் பார்த்தது. நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்து போனது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆலயத்தில் உள்ள நந்தி சிலை திரும்பிப் பார்த்த நிலையில் காணப்படுகிறது.

பாவம் செய்திருந்தாலும், இறைவனை நினைத்ததன் பலனாக அவனது பாவம் தொலைந்து அவன் சுகமாகிவிட்டான். ஆனால் அவனது விதி முடிய இருந்த காரணத்தால், எமன் அவனை கொண்டு செல்ல அங்கு வந்தான். எமனை நந்தி பகவான் தடுத்தார். அப்போது நந்தீஸ்வரருக்கும், எமதர்மனுக்கும் பயங்கரமான சண்டை நடந்தது.

இறுதியில் நந்தீஸ்வரர், எமனை வென்று கோவில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பினார். இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி சிலை இருப்பதை இன்றும் காணலாம். இத்தல இறைவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். சுயம்பு லிங்கமான சிவயோகிநாதரின் திருமேனியில் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் பட்டு ஒளிவீசும்.

கோவிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதில் இருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன.

இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதையே நேரம் ஆகும். இத்தலத்தில் சவுந்திரநாயகி அம்மன் சன்னிதி தனியாக உள்ளது. தல விருட்சம் வில்வம் ஆகும்.

கோவிலை சுற்றிலும் 8 தீர்த்தங்கள் உள்ளன. அதில் ஜடாயு தீர்த்தம் முக்கியமானதாகும். காவிரி வடகரை தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற 43–வது தலம் இதுவாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தன் வீட்டில் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பசியால் வீட்டு வாசலில் யாசகம் கேட்டு ஒருவன் வந்தான்.

திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்தவனுக்கு அந்த வீட்டு உரிமையாளர் உணவளித்தார். இதனால் அந்த ஊர் மக்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். தண்டனைக்கான பரிகாரம் கேட்டபோது, கங்கையில் குளிக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கூறிவிட்டார்கள்.

இதையடுத்து அந்த நபர், சிவயோகிநாதரை நோக்கி வேண்டினார். பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கையை பொங்க வைத்தார் ஈசன். இதனைக் கண்டு வாயடைத்து போய்விட்டனர் அந்த ஊர் மக்கள். மனிதநேயம் கொண்ட பக்தனுக்கு உதவ எப்போதும் இறைவன் உதவுவான் என்பதை இந்த கதை உணர்த்துகிறது.

கும்பகோணத்தில் இருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருவிசநல்லூர் சிவயோகிநாதர் திருக்கோவில். சென்னையில் இருந்து பேருந்து மூலம் கும்பகோணம் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலை அடையலாம்.

Leave a comment