சோமநாதம் ஸ்ரீசோமேஸ்வரர் கோவில்

som-150x150

பல்லாயிரக்கணக்கான ல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்து உலகத்தின் மிகப்பழமையான திருத்தலங்களுள் ஒன்றாக விளங்ஞகும் சோமநாதத்திற்கு பிரபாசபட்டினம், சோமபுரி, சோமநாதபுரம், அரசநகரம், சிவநகரம், வில்வப்புரிப்பட்டினம், சூரப்பட்டினம் என்று காலந்தோறும் ஏற்பட்ட பலப்பல பெயர்கள் உள்ளன.

இங்கு எழுந்தருளிப் பாதுகாக்கும் பரப்பிரும்மத்திற்கு சோமநாதர், சோமேஸ்வரர் சந்திரசேகரர், சந்திர மவுலீஸ்வரர் என்று பெயர்கள் உள்ளன. சோமேஸ்வரர் என்றால் சந்திரனுக்கு இறைவன் என்று பெயர்.

சயரோகத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் இத்தலத்தில் லிங்கப் பரம்பொருளை பிரதிட்டை செய்து வழிபட்டு நோய் நீங்கி நல்வாழ்வும் ஒளியும் பெற்றதால் இத்தலம் சோமநாதம், சோமேஸ்வரர் என்று பெயர் பெற்றது.

சந்திரனை பாதுகாத்து வாழ்வளித்து ஒளிவழங்கிய பரமேஸ்வரனுக்கு சோமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மதேவனின் புதல்வனான தட்சனுக்கு அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு மகள்களும் சந்திரதேவனை மணம் புரிந்து கொள்ள விரும்பினர்.

தட்சன் இருபத்தேழு புதல்விகளையும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். இருபத்தேழு புதல்விகளும் சென்னையிலுள்ள திருவொற்றியூர் என்ற தலத்தில் தியாகேசர் கோயிலில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு நட்சத்திரங்களாகும் பேறு பெற்றனர்.

இந்திருக்கோயிலில் இருபத்தெழு நட்சத்திர லிங்க சந்நிதிகள் உள்ளன. இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொண்ட சந்திரன் ரோகினியுடன் மட்டும் அதிக ஆசையுடன் இருந்து மற்றவர்களை உதாசீனப் படுத்தினான். இருபத்தாறு பேர்களும் சந்திரனின் முறைகேடான நடவடிக்கை பற்றி தட்சனிடம் முறையிட்டனர்.

மனைவியர் களிடையே பாரபட்சம் காட்டி அவர்களை துன்பப்படுத்தியதற்காக தேய்ந்து தேய்ந்து அழிந்து போகுமாறு தட்சன் சாபமிட்டான். இதனால் சந்திரனைநோய் பற்றியது. அவன் ஒளி குறைந்து நாளுக்குநாள் தேய்ந்து வரலானான்.

தேவமருத்துவர் களான அசுவினி குமாரர்களும், தன்வந்திரியும் எவ்வளவு வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. தனது நிலை கண்டு வருத்தம் அடைந்த சந்திரன் பூவுலகை அடைந்தான். சவுராஷ்டிரத்தில் சரஸ்வதி நதி கடலில் கலக்கும் இடத்தில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை ஆராதனை புரிந்து வழிபட்டான்.

கயிலைநாதனை நாள்தோறும் நீராடி விரதம் இருந்து பூஜை செய்தான். தேவர்களும் சந்திரனுக்காக சர்வேஸ்வரனைப் பூஜை செய்து சந்திரனை காப்பாற்ற வேண்டினர்.

பதினாறு கலைகளிலே பதினைந்து கலைகள் அழிந்து விட்ட சந்திரன் வைத்தியர்களுக்கெல்லாம் மிகப்பெரிய வைத்தியனான மருந்தீஸ்வரனை தொழுது போற்றி தன்னை பாதுகாத்து முக்தி அருள வேண்டினான்.

உடனே ஈசன், சந்திரனின் ஒரு கலையைத் தன் திருமுடியில் அணிந்து கொண்டு சந்திரனுக்கு அருள் புரிந்தார். பேரருள் பெற்ற சந்திரன் இழந்த ஒளியை மீண்டும் பெற்று நாளுக்கு நாள் வளர்ந்து முழுப்பிரகாசத்தை அடைந்தான்.

சந்திரனது தலையை திருச்சடையில் முடிந்து கொண்டு சந்திரனுக்கு வாழ்வு அளித்ததால் பரப்பிரும்மத்திற்கும் சந்திர கலாதரர், பிறைச்சடையன், பிறைமதியன், பிறைசூடி சோமசுந்தரர், மதியழகன், நிலவணிந்தோன் என்ற பலப்பல பெயர்கள் உண்டாயின.

லிங்கப்பரம் பொருளுக்கு சோமலிங்கம், சந்திரலிங்கம் என்று திருப்பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறு தட்சனின் சாபத்தால் தேய்பிறையும் பரம் பொருளின் திருவருளாள் வளர்பிறையும் உலகில் மாறி மாறி ஏற்படுகின்றன.

சிவபூஜை புரிந்து உடல்நோய் குணமாகி நலம்பெற்ற சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் வேறு பல தலங்களிலும் பரம்பொருளை வழிபட்டு பூஜை செய்தான். அத்தகைய திருத்தலங்களில் ஒன்று தமிழ்நாட்டிலுள்ள திங்களூர்.

அப்பூதியடிகளின் இறந்த மகனைத் திருநாவுக்கரசர் மீண்டும் உயிரோடு எழுப்பிக் கொடுத்த தலமாகிய திங்களூரில் சிவபூஜை புரிந்த சந்திரனுக்கு தனி சந்நிதியுள்ளது. கும்பகோணத்தில் வியாழபகவானுகிய பிரகஸ்பதியும், சந்திரனும் வழிபட்டு பூஜை செய்த வியாழ சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பேஸ்வரர் கோவிலுக்கு அருகே இத்திருக்கோயில் உள்ளது.

முக்கண்ணனது கண்களிலிருந்து ஒளியை பெறும் சூரிய பகவானுக்கும், சந்திர பகவானுக்கும் எல்லா சிவாலயங்களிலும் சுற்றுப் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது. எட்டு வகையான திருக்கோவில்களில் சோமநாதம் பெருங்கோவிலாகவும் மணிக்கோவிலாகவும் விளங்குகிறது.

இராவணன் சோமேஸ்வரர் ஆலயத்தைத் தங்கத்தால் அமைத்துப் பொன்மயமாக்கினான். கிருஷ்ணன் சோமநாதர் ஆலயத்தை வெள்ளியால் புதுப்பித்தான். வெள்ளித் தோரண வாயிலை அமைத்து திருப்பணி செய்தான்.

இத்திருக்கோவிலானது தங்கமணி, தங்க சங்கிலிகள், தங்க விக்கரங்கள், தங்க தாம்பாளங்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றையெல்லாம் கொண்டு மாபெரும் பொன்மணி கோவிலாக திகழ்ந்தது. மிக்க புகழும் பெருமையும் கொண்ட சோமநாதர் ஆலயம் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டிருந்த ஆலயம் என்பதை கல்வெட்டு கூறுகின்றது.

புண்ணிய பாரதப் பண்பாட்டின் வடிவமாக விளங்கும் சோமநாதர் கோவிலில் எண்ணற்ற இசை நடனக் கலைஞர்கள் இருந்தனர். ஆயிரம் இசை கலைஞர்களும் இருநூற்று ஐம்பது நடனக் கலைஞர்களும் ஆயிரம் புரோகிதர்களும் இருந்தனர்.

நாள் தோறும் சோமலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கையிலிருந்து நீரும் காஷ்மீரிலிருந்து மலர்களும் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு அளவற்ற பெருமையும் புகழும் கொண்ட சோமநாதரை நாள்தோறும் ஒரு முறையாவது தரிசனம் செய்து வழிபடுதல், சோமவாரங்களில் பூஜை செய்தல், அமாவாசை இரவு அன்று சிவநாமம் ஒதி ஆராதனை செய்தல்,

விசேஷ நாட்களிலும் பிரதோஷம், சிவராத்திரி போன்ற தினங்களிலும் விரதம் இருத்தல், சரஸ்வதி சங்கமத்தில் நீராடுதல் ஆகிய ஐந்து வகை வழிபாடுகளையும் முறைப்படி செய்து வருபவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறுகின்றன என்று புராணங்கள் போற்றுகின்றன.

இவ்வாறு கோடிக்கணக்கான ஆண்டுகளாக சீரும் சிறப்பும் பெற்று பலப்பல மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு பலப்பல நூல்களில் போற்றப்பட்டு வந்த சோமநாதர் திருக்கோவில் சென்ற ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக முகம்மதிய மன்னர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது.

சோமநாதர் ஆலயம் இருந்த பழைய இடத்திலேயே கோவில் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. பின்னர் லிங்க பரம்பொருள் பிரதிட்டை செய்யப்பட்டது. கி.பி. 1965-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது. பாரதத் தாயைத் தலை நிமர்ந்து நிற்க செய்யும் புண்ணிய பூமியாக சோமநாதம் திகழ்கின்றது.

அகலமான மண்டபங்களையும் வானுயர்ந்த விமானங்களையும் அழகுமிக்க கூரைகளையும் தோரணவாயில் களையும் கொண்டுள்ள சோமநாதர் திருக்கோவில் இராமநாதர் திருக்கோவிலைப் போன்று கடலுக்கு அருகே அமைந்துள்ளது. கடலே புனிதத் தீர்த்தமாக விளங்குகின்றது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.