பிரம்மகிரி மலையின் அடிவாரத்தில் உள்ள திரிம்பகேஸ்வரர் கோயில்-நாசிக்

4/5 - (1 vote)

images-1-150x150

திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோயில் ஆகும். இது மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

இது இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.

பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது. மும்மூர்த்திகள் வழிபட்டு பரப்பிரும்மத்தின் அருள்பெற்ற திரியம்பகேஸ்வரத்தில் கவுதம முனிவர் வசித்து வந்தார்.

நாள்தோறும் புனிதக்குளத்தில் நீராடி திரியம்பகேஸ்வரரைப் பூஜை செய்து வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் தூய வாழ்க்கை வாழ்ந்தார். ஒருமுறை நாட்டில் வறட்சியும், பஞ்சமும் உண்டாயின. எல்லா இடங்களிலும் நீர் வற்றிப்போய் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று.

ஆனால் கங்காதரனை நினைந்து உள்ளன்போடு சிவசிவ என்றே வாழ்ந்த கவுதமரின் ஆசிரமத்தில் எந்தவிதமான பஞ்சமும் இல்லை. திரியம்பகேஸ்வரத்தில் இருந்த நீர்நிலைகளில் நீர்வளம் பெருகியிருந்தது. இதையறிந்து நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த முனிவர்கள் திரியம்பகேஸ்வரத்தில் குடியேறினர்.

உலகத்தை வலம் வருபவனுக்குத் தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பதாக அகல்யையின் தந்தை நிபந்தனை விதித்திருந்தார். கன்றுபோடும் நிலையில் உள்ள பசுவை அதாவது இரண்டு முகங்கள் கொண்ட பசுவை வலம் வந்தால் உலகத்தை வலம் வருவதற்கு ஒப்பாகும் என்று ஒழுக்க நூல்கள் உரைக்கின்றன.

இந்த சாத்திரப்படி கவுதம முனிவர் கன்று போடும் நிலையில் இருந்த தாய்ப்பசுவை வலம் வந்து வணங்கி அகல்யையைத் திருமணம் செய்து கொண்டார். அத்தகைய கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தாய்ப்பசு ஒன்று இறந்து கிடந்தது. அதைக் கண்ட கவுதம முனிவர் மனம் துடிதுடித்தார்.

இறந்த பசுவிற்கு எப்படியாவது உயிர் கொடுக்க வேண்டும் என்று முனிவர்கள் விரும்பினர். மற்ற உயிரினங்கள் எல்லாம் தமக்காக வாழ்கின்றன. ஆனால் மாடுகளோ உலக மக்கள் அனைவரையும் பாலூட்டி வளர்க்கின்றன. தேசத்தின் செல்வங்களாக இருந்து வருவாயைப் பெருக்குகின்றன.

உழுவதற்குப் பாடுபட்டும் பயிர்வளர் எருவைத் தந்தும் மனித இனத்திற்கு மகத்தான உதவி புரிந்து உண்டி கொடுத்து உயிர் காக்கின்றன. சிவபெருமானின் திருமுழுக்காட்டிற்காகப் பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு ஆகிய பஞ்ச கவ்வியம் எனப்படும் ஐந்து அபிஷேகப் பொருட்களைக் கொடுக்கும் புனிதப் பிறவிகளாகப் பசு மாடுகள் உள்ளன.

இத்தகைய பசுமாடுகள் முனிவர்களும் தேவர்களும் தெய்வங்களும் வந்து வணங்கும் புண்ணியம் வாய்ந்தவை. இனிய குணங்கள் கொண்ட பாலைத் தரும் நல்ல பண்புள்ள சொந்தமான பசுக்கள் மெய்ப்பொருளின் வாகனமும் தரும தேவனுமான நந்தியின் குலத்தைச் சேர்ந்தவை.

அத்தகைய புண்ணிய ஆத்மாவான இந்தப் பசுவை எப்படியாவது உயிர்பிழைக்கச் செய்ய வேண்டும் என்று முனிவர்கள் முடிவெடுத்தனர். கோடிலிங்கார்ச்சனை செய்து பரம்பொருளை வழிபட்டுக் கங்கை நதியைப் பசுவின் உடலில் பாயச் செய்தால் கோமாதா மீண்டும் உயிர் பெற்று எழுவார் என்று மாதவ முனிவர் ஆலோசனை கூறினார்.

அவர் வண்ண மகாமுனிவரான கவுதமர் கோடி சிவநாமம் ஓம் லிங்கார்ச்சனை செய்தார். கோடி சிவராமங்களை உச்சரித்து லிங்கப் பரம்பொருளைப் பூஜை செய்தார். கங்காதரனிடமிருந்து கங்கை நீரைப் பெறுவதற்காகக் கடுமையாகத் தவம் புரிந்தார்.

கங்காதரனை நெஞ்சில் நிறுத்தி ஓம் நமச்சிவாயா மகா மந்திரத்தை உச்சரித்து திரியம்பகேஸ்வரரை தியானம் செய்து அன்ன ஆகாரம் இல்லாமல் தவம் புரிந்தார். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து வைக்கின்ற தவத்தின் மகிமை உணர்ந்த தவ முனிவர்கள் எல்லோரும் கவுதம முனிவருக்கு உறுதுணையாக இருந்தனர்.

கடுகளவு புண்ணியம் செய்தாலும் மலையளவில் பலனை வாரி வழங்கும் அருள் வள்ளலாரை திரியம்பகேஸ்வரர் கவுதம முனிவருக்கு வெளிப்பட்டுத் திருக்காட்சி தந்தார். பலகாலங்கள் தேடித் திரிந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாமல் மறைந்து இருந்த பரஞ்சோதிப் பெருமானின் திருக்காட்சி கண்ட கவுதம முனிவர் அளவில்லா ஆனந்தம் அடைந்து விழுந்து எழுந்து போற்றித் துதி செய்து வணங்கினார்.

திருமுடியிலிருந்து கங்காதரன் கங்கை நீர்த்துளிகளைச் சந்தி அருளினார். அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. கங்கை நதி பசுவின் உடலில் பாய்ந்தபோது பசு உயிர்பெற்று எழுந்தது. கவுதம முனிவர் பசுபதீஸ்வரனின் மாப்பெருங்கருணைக்கு மனம் நெகிழ்ந்தார். கோமாதாவின் காரணமாக உற்பத்தியான நதி கோதாவரி என்று பெயர் பெற்றது.

கோதாவரி நதிக்கு கவுதமி என்ற பெயரும் உண்டு. பகீதரதனுக் காகப் பாய்ந்த கங்கை பாகீரதி என்று அழைக்கப்பட்டது போன்றே கவுதமருக்காகப் பாய்ந்த கங்கை கவுதமி என்று பெயர் பெற்றாள்.

இம்முறையில் தவம் செய்யும் முனிவர்களின் புனிதமான வாழ்க்கையானது அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி யுகம் யுகமாக மக்கள் எல்லோருக்கும் பயன்படும் மகத்தான தொண்டு செய்யும் பொதுநலம் காக்கும் வாழ்க்கையாக இருந்தது. சமுதாயம் முழுவதையும் சிறப்பாக்கும் சீரிய வாழ்க்கையாக விளங்கியது.

மும்மூர்த்திகள் உண்டாக்கிய குளத்தோடு கவுதம் முனிவர் ஏற்படுத்திய கோதாவரி நதியும் திரியம்பகேஸ்வரம் திருக்கோவிலின் புனிதத் தீர்த்தம் ஆயிற்று. கவுதமர் செய்த கோடியர்ச்சனைக்கும் தவத்திற்கும் கருணை கூர்ந்து ஒரு நதியையே புதியதாகப் படைத்து அருளி கவுதம முனிவருக்கு அளவற்ற ஆனந்தம் அளித்த பராபரனுக்கு கவுதமேஸ்வரர் என்று திருப்பெயர் உண்டாயிற்று.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் புரியும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. வாழ்க்கையில் தண்ணீர் பஞ்சம் உண்டாவது இல்லை. வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் எனும் ரெயில் நிலையத்தில் இறங்கி 28 கி.மீ. தூரத்தில் உள்ள திரயம் பகத்தை அடையப் பல வசதிகள் உள்ளன.

பேருந்து அடர்ந்த காடுகளிடையேயும் மலைப்பாதைகளைக் கடக்கும்போதும் இயற்கை அள்ளித்தரும், மனத்தை கொள்ளைக் கொள்ளும் ஈடில்லா காட்சிகள் நம்மைக்கிறங்க வைக்கும். படைக்கும் தெய்வம் பிரம்மன், காக்கும் தெய்வம் விஷ்ணு, அழிக்கும் தெய்வம் ருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து லிங்கப்பரம்பொருளைப் பிரதிஷ்டை செய்து பிரும்மத்தைப் பூஜை செய்தனர்.

இதனால் இத்தலம் திரியம்பகேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. மூவருக்கும் அருள்புரிந்த பரமேஸ்வரனுக்குத் திரியம்பகேஸ்வரர் என்று பெயர். திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்.

மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.

Leave a comment