பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள்.

krishnabalaram-madhura2

தையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு ஸாருப்ய முக்தி அளித்தார். அதாவது, அவன் உடலை நீத்தபின் வைகுண்டத்தில் நான்கு கைகளுடைய நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். அவன் வாழ்நாள் முழுவதும் புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வத்தைப் பெறுவானென்றும் கிருஷ்ணர் வரம் அருளினார்.

இந் நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்கள் இகவுலக இன்பங்களிலோ, புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்களென்பதைக் கிருஷ்ணர் நிரூபித்துக் காட்டினார். இவ்வுலகில் அவர்கள், இகவுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கிருஷ்ணலோகம், அல்லது கோலோக விருந்தாவனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.