கம்சனுக்கு எட்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் கங்கர். எல்லோரும் கம்சனுக்கு இளையவர்கள். தம் மூத்த சகோதரனான கம்சன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப் பட்டதை அறிந்ததும் அவர்கள் ஒன்று கூடிப் பெருங் கோபத்துடன் கிருஷ்ணரைத் தாக்கிக் கொல்ல விரைந்தார்கள். கம்சனும் அவனின் சகோதரர்களும் கிருஷ்ணரின் தாய் மாமன்மார் ஆவார்கள். அதாவது தேவகியின் சகோதரர்கள். எனவே கிருஷ்ணர் கொன்றது தனது தாய்மாமனான கம்சனை. இது வேதப் பண்பாடுகளுக்குப் புறம்பானது. கிருஷ்ணர் வேதக் கட்டளைகளுக்கு அப்பாற் பட்டவரென்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அவர் வேதக் கோட்பாடுகளை மீறுகிறார்.

கம்சனை வேறு யாராலும் கொல்ல முடியாதாகையால் கிருஷ்ணர் அவனைக் கொல்ல வேண்டியதாயிற்று. கம்சனின் எட்டு சகோதரர்களைப் பொறுத்தவரை பலராமர் அவர்களைக் கொன்றார். பலராமரின் தாயாகிய ரோகிணி வசுதேவரின் மனைவியானாலும் கம்சனின் சகோதரி அல்ல. பலராமர் கைக்கெட்டிய ஆயதத்தைக் கொண்டு, சிங்கம், மான் கூட்டத்தை கொல்வது போல் கம்சனின் சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொன்றார். இவ்வாறு கிருஷ்ணரும் பலராமரும், பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷணர் உறுதி செய்ததுபோல், பக்தர்களைக் காத்து, தேவர்களின் பகைவர்களான துஷ்ட அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக முழுமுதற் கடவுள் அவதரிக்கிறார் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

kamsan

உயர் நிலைக் கிரகங்களில் இருந்த தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் பாராட்டி மலர் மாரி பொழிந்தார்கள். கம்சன் மற்றும் அவனின் எட்டு சகோதரர்களின் மனைவியர் தம் கணவர்களின் திடீர் மரணத்தால் துக்கமடைந்து, கண்ணீர் வடித்தார்கள். தங்கள் கணவர்களின் உடல்களைக் கைகளில் அணைத்தபடி உரக்கக் கதறி அழுதார்கள். இறந்த சடலங்களுடன் அவர்கள் இவ்வாறு பேசினார்கள்:

அண்பார்ந்த கணவரே, நீங்கள் அன்பு மிகுந்து உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாயிருந்தீர்கள். இப்போது உங்கள் மரணத்துக்குப் பின் நாங்களும் இறந்தவர்களாகி விட்டோம். எங்கள் மங்கலம் பறிக்கப்பட்டு விட்டது. உங்களது மரணத்தால் தனுர் யாகம் போன்ற மங்கள காரியங்களெல்லாம் தடைப்பட்டிருக்கின்றன. அன்புள்ள கணவர்களே, குற்றம் அற்றவர்களிடம் நீங்கள் அநியாயமாக நடந்து கொண்டீர்கள், அதனால் கொல்லப்பட்டீர்கள். நல்லவர்களுக்குத் தொல்லை தருபவர்கள் தண்டிக்கப்படுவது இயற்கை விதி.

கிருஷ்ணர் முழுமுதற் கடவுளென்பது தெரிந்ததே. அவரே எல்லாவற்றின் உன்னத அதிகாரி, உன்னத அனுபவிப்பாளர். எனவே அவரது அதிகாரத்துக்குப் பணியாத எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவனுக்கு உங்களுக்கு நேர்ந்தது போல் மரணம் சம்பவிக்கும். என்று புலம்பினார்கள். தன் மாமிகளிடம் அனுதாபம் கொண்ட கிருஷ்ணர் இயன்றவரை அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இறந்த அரச குமாரர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சகோதரியின் மகனாகையால் ஈமச் சடங்குகளை அவரே நேரில் கவனித்தார்.