பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்; மல்யுத்தக் களத்தினுள் மாபெரும் மல்லர்கள் யாவரையும் கொன்றபின் எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.

கம்சன் மட்டும் வாளாவிருந்தான். அவன் கைதட்டவுமில்லை, கிருஷ்ணரையும் பலராமரையும் வாழ்த்தவுமில்லை. கிருஷ்ண பலராமரின் வெற்றியைப் பாராட்டும் வகையில் முரசுகள் ஒலித்ததை அவன் விரும்பவில்லை. மல்லர்கள் கொல்லப்பட்டதும் எஞ்சியவர்கள் உயிருக்குப் பயந்து ஓடியதும் அவனுக்கு மன வருத்த்தைத் தந்தது. அவன் உடனே முரசுகள் ஒலிக்கப் படுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு, தன் நண்பர்களை நோக்கிப் பின் வருமாறு பேசினான்:

வசுதேவரின் இந்த இரு மகன்களும் உடனடியாக மதுராவிலிருந்து விரட்டப்பட வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். அவர்களுடன் வந்திருக்கும் ஆயர்குலச் சிறுவர்களும் விரட்டப்பட்டு அவர்களின் உடமைகளெல்லாம் பறிக்கப்பட வேண்டும். நந்த மகராஜாவை அவரின் தந்திரமான நடத்தைக்காக உடனே கைது செய்து கொல்ல வேண்டும். அயோக்கியனான வசுதேவனும் உடனடியாகக் கொல்லப் படவேண்டும். என் விருப்பத்திற்கு எதிராக எப்போதும் என் எதிரிகளை ஆதரித்த என் தந்தையான உக்கிரசேனரும் உடனே கொல்லப்பட வேண்டும்.

OLYMPUS DIGITAL CAMERA

இவ்வாறு கம்சன் பேசியதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் கோபமடைந்து, கணப்பொழுதில் கம்சனின் காவலர்களைக் கடந்து கம்சனை அணுகினார். இதை எதிர்பார்த்திருந்த கம்சன் தன் வாளை உறையிலிருந்து எடுத்துக் கிருஷ்ணரை தாக்க முற்பட்டான். அவன் அப்படியும் இப்படியுமாக வாள் வீசியபோது மிகுந்த பலத்துடன் கிருஷ்ணர் அவனைப் பிடித்துக் கொண்டார். சிருஷ்டி முழுவதற்கும் துணையானவரும், தம் தொப்புளிலிருந்து பிரபஞ்சத்தை உண்டுபண்ணியவருமான முழுமுதற் கடவுள் கம்சனின் கிரீடத்தைக் கீழே தள்ளித் தரையில் உருளச் செய்தார்.

அதன்பின் கம்சனின் நீண்ட தலைமுடியைத் தம் கையில் பிடித்துக் கொண்டு, அவனை ஆசனத்திலிருந்து இழுத்து வந்து மல்யுத்த மேடையின் மீது எறிந்தார். அதன்பின் கிருஷ்ணர் உடனடியாகக் கம்சனின் மார்பின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவனை மீண்டும் மீண்டும் ஓங்கி அடித்தார். அவரின் முஷ்டியிலிருந்து புறப்பட்ட அடிகளைத் தாங்க மாட்டாமல் கம்சன் உயிர் நீத்தான்.