பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையைக் கொன்றபின் பலராமருடனும் நண்பர்களுடனும் மல்யுத்தக் களத்தினுள் பிரவேசித்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் செய்த செயல்கள் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மல்யுத்தப் போட்டி தொடங்க இருப்பதை அறிவிக்கும் வாத்ய முழக்கங்கள் அவர்களின் செவிகளில் விழுந்தன. பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரனான சாணூரன் கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் பேசினான்:

அன்பான கிருஷ்ணா, பலராமா, உங்கள் முந்திய செயல்கள் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்கள் பெரும் வீரர்கள். எனவே அரசர் உங்களை அழைத்துள்ளார். அரசரும் இங்கு கூடியுள்ளவர்களும் உங்களின் மல்யுத்த திறமைகளைக் கான ஆவலாயிருக்கிறார்கள். ஒரு குடிமகன் எப்போதும் அரசனின் மனதையறிந்து பணிவுடன் நடக்க வேண்டும்.

அவ்வாறு நடக்கும் குடிமகன் எல்லா நலன்களையும் பெறுவான். பணியாமல் நடப்பவன் அரசனின் கோபத்திற்கு ஆளாகித் துன்பம் அனுபவிக்கிறான். நீங்கள் ஆயர் குலச் சிறுவர்கள். பசுக்கள் மேய்க்கும்போது ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்து மகிழ்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே எங்களுடன் நீங்கள் மல்யுத்தப் போட்டியயில் கலந்து கொண்டால் இங்குள்ள மக்களும் அரசனும் மகிழ்ச்சியடைவார்கள். என்று சாணூரன் கூறினான்.

சாணூரன் கூறியதன் நோக்கத்தைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். ஆனால் காலத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு கிருஷ்ணர் பேசினார்: நீ போஜராஜனின் பிரஜை, காட்டில் வாழும் நாங்களும் அவர்களின் பிரஜைகளே. இயன்றவரை அரசனைத் திருப்திப் படுத்த முயல்கிறோம். மல்யுத்தத்திற்கு அவர் எங்களுக்கு வாய்ப்பளித்தது அவர் எங்களிடம் காட்டும் கருணையாகும். ஆனால் நாங்கள் சிறுவர்கள். சில வேளைகளில் விருந்தாவனத்தில் எங்கள் வயதினரான நண்பர்களுடன் நாங்கள் விளையாடியதுண்டு. ஒரே வயதும் பலமும் கொண்டவர்களோடு போட்டியிடுவதில் நன்மையுண்டு. ஆனால் உங்களைப் போன்ற மாமல்லர்களோடு நாங்கள் போட்டியிடுவது பார்ப்பவர்களுக்கு நன்றாயிருக்காது. அவர்களின் தர்மத்துக்கும் அது முரண்படுவதாகும். என்று கூறினார்.

krishna_and_balarama_overpower_the_wrestlers_hj51

பிரசித்தி பெற்றவர்களும் பலவான்களுமான அந்த மல்லர்கள் சிறுவர்களான பலராமரையும் கிருஷ்ணரையும் போட்டிக்கு அழைப்பது முறையல்லவென்பதைக் கிருஷ்ணர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலாக சாணூரன் கூறினான்: அன்பான கிருஷ்ணா, நீர் குழந்தையோ இளைஞனே அல்லவென்பதை நாங்கள் அறிவோம். நீரும் உமது மூத்த சகோதரனான பலராமரும் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள். குவாலயபீட என்ற யானையைக் கொன்றிருக்கிறீர்கள். மற்ற யானைகளிடம் சண்டையிட்டு அவற்றைத் தோற்கடிக்கக் கூடிய யானையை அதிசயிக்கத் தக்க வகையில் நீர் கொன்றீர். இதிலிருந்து நீர் பலம் மிக்கவரென்பது தெரியவருகிறது.

எனவே எங்களில் பலம் மிகுந்தவர்களுடன் யுத்தம் செய்யும் தகுதி உமக்கும் உமது மூத்த சகோதரனான பலராமருக்கும் உண்டு. நான் உம்முடனும் பலராமர் முஷ்டிகனுடனும் சண்டையிடலாம். என்று சாணூரன் கூறினான். கம்சனின் மல்லர்கள் தம் விருப்பத்தைத் தெரிவித்ததும், மது என்ற அரக்கனைக் கொன்றவராகிய முழுமுதற் கடவுள் சாணூரனை எதிர்த்தும், ரோகிணியின் மகனான பலராமர் முஷ்டிகனை எதிர்த்தும் மல்யுத்தம் செய்தார்கள். கிருஷ்ணரும் சாணூரனும், அதேபோல் பலராமரும் முஷ்டிகனும், கையோடு கை, காலோடு கால் பின்னிக் கொண்டு, வெற்றி பெறும் நோக்கத்தோடு ஒருவரை மற்றவர் அழுத்த முயற்சித்தார்கள்.

உள்ளங் கைகளையும் கால்களையும், தலைகளையும், மர்ர்புகளையும் பிணைத்துக் கொண்டு, ஒருவரையொருவர் அடித்துத் தள்ளியபோது சண்டையின் வேகம் அதிகரித்தது. ஒருவர் மற்றவரைப் பிடித்துத் தரையின் மீது வீழ்த்தினால், மற்றவர் பின்னிருந்து பிடித்து அழுத்த முயற்சித்தனர். படிப்படியாக யுத்தத்தின் வேகம் அதிகரித்தது. பிடிப்பதும், இழுப்பதும், தள்ளுவதுமாக கைகளையும் கால்களையும் பிணைத்துக் கொண்டு சண்டையிட்டார்கள். ஒருவரையொருவர் தோற்கடிக்க முயன்றபோது மல்யுத்தக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் அங்கு வெளிப்படுத்தப்பட்டன.

malyuththam

ஆனால் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் திருப்தியில்லை. ஏனெனில் கிருஷ்ணரையும் பலராமரையும் எதிர்த்து மலைபோன்ற உருவமும் பலமும் கொண்ட முஷ்டிகனும் சாணூரனும் போரிடுவது நியாயமல்லவென்று பலர் கருதினார்கள். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் அனுதாபம் கொண்ட சிலர், இது அபாயகரமானது. அரசனின் முன்னிலையில் சமமில்லாதவர்களிடையே இப்படி ஒரு போட்டி நடக்கலாகாது, என்று பேசிக் கொண்டார்கள். பார்வையாளர்கள் உற்சாகமின்றி இருந்தார்கள். சபையிலிருந்தவர்கள் தமக்காக கவலைப் படுகிறார்கள் என்பதை அறிந்த பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் யுத்தத்தைத் தொடராமல் உடனே மல்லர்களை கொல்வதென்று முடிவு செய்தார். கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பெற்றோர்களான நந்த மகாராஜா, யசோதை, வசுதேவர், தேவகி ஆகியோரும் தம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்று கவலையடைந்திருந்தார்கள்.

கிருஷ்ணர் மிகக் கடுமையாக சாணூரனை தன் முஷ்டியால் அடித்தார். சபையோர் ஆச்சரியப்படும் வகையில் அந்த மாபெரும் மல்லன் அதிர்ந்து போனான். கடைசி முறையாக சாணூரன் ஒரு பருந்து மற்றொன்றைத் தாக்குவது போல் கிருஷ்ணரைத் தாக்கினான். ஆனால் மலர்மாலையால் அடிபட்ட யானைபோல் கிருஷ்ணர் சிறிதும் பாதிக்கப் படாமல் இருந்தார். அவர் வேகமாகச் சாணூரனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு அவனைச் சக்கரம் போல் சுழற்றியபோது, சாணூரன் உயிரிழந்தான். கிருஷ்ணர் அவனைத் தரையில் எறிந்தார். இந்திரனின் கொடியைப் போல் சாணூரன் வீழ்ந்தான்.

malyuththam1

அவன் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் அங்குமிங்குமாகச் சிதறின. முஷ்டிகனும் பலராமரை அடித்தபோது அவர் மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுத்தார். முஷ்டிகன் நடுக்கம் கொண்டு இரத்தமாகக் கக்கினான். மிகவும் துன்பப் பட்டவனாய் அவன் உயிரிழந்து புயலில் சரியும் மரம் போலக் கீழே விழுந்தான். மேலும் இரு மல்லர்கள் சண்டையிட முன் வந்தார்கள். பலராமர் அவனை உடனடியாகத் தனது இடது கையால் பிடித்து அனாயாசமாகக் கொன்றார். சாலன் என்ற மல்லன் முன்வந்த போது கிருஷ்ணர் அவனை உதைத்து, அவனின் தலையை உடைத்தார். தோசாலா என்ற மல்லன் சண்டையிட வந்தபோது அவனும் அதே முறையில் கொல்லப் பட்டான்.

இவ்வாறு மாபெரும் மல்லர்கள் யாவரும் கிருஷ்ணர் மற்றும் பலராமரால் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.