கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். இந்த யாகத்தின் நோக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்காக கம்சன் யாக பீடத்தினருகில் மாபெரும் வில் ஒன்றை வைத்திருந்தான். அந்த வில் மிகப் பெரிதாகவும், அதிசயமாகவும், வானவில்லைப் போன்றதாகவும் இருந்தது. யாகப் பிரதேசத்தினுள் அந்த வில் கம்சனால் நியமிக்கப்பட்ட காவலர்களின் பாதுகாப்பில் இருந்தது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் வில்லின் அருகில் சென்றபோது, காவலர்கள் அவர்களை எச்சரித்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அதைச் சட்டை செய்யவில்லை. அவர் பலவந்தமாக உள்ளே சென்று வில்லைத் தனது இடது கையில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களின் முன்பு கிருஷ்ணர் வில்லில் நாணை ஏற்றி, வில்லை வழைத்து இரு பகுதிகளாக, யானை கரும்பை ஒடிப்பது போல் ஒடித்தார். கிருஷ்ணரின் சக்தியை மக்கள் வியந்து பாராட்டினார்கள்.

yaagamedaiyil_vil_muriththal

வில் ஒடிந்த போது எழுந்த ஒலி பூமியிலும் ஆகாயத்திலும் எங்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் கம்சனும் கேட்டான். நடந்ததை அறிந்தபோது அவன் தன் உயிருக்காக அஞ்சினான். வில்லைக் காவல் காத்தவன் மிகுந்த கோபமடைந்து, கிருஷ்ணரைப் பிடிக்குமாறு ஏவலர்களுக்குக் கட்டளையிட்டபடி தானும் அவரை நோக்கிப் பாய்ந்தான். பிடியுங்கள், கொல்லுங்கள் என்று கத்தினான்.

கிருஷ்ணரையும் பலராமரையும் அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காவலர்களின் அபாயகரமான எண்ணங்களை உணர்ந்ததும் கிருஷ்ணரும் பலராமரும் மிகுந்த கோபம் கொண்டு, ஒடிந்த வில்லின் இரு பகுதிகளையும் கையில் ஏந்தியபடி காவலர்களின் தாக்குதலைச் சமாளித்தார்கள்.

இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காவலர்களுக்கு உதவியாக கம்சன் மேலும் சில படைவீரர்களை அனுப்பி வைத்தான். கிருஷ்ணரும் பலராமரும் அவர்கள் எல்லோரையும் போரில் கொன்றார்கள். இதன் பின் கிருஷ்ணரும் பலராமரும் யாகப் பகுதிக்குள் மேலும் பிரவேசிக்காமல் வாயிலின் வழியாகத் தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.