பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத் தர எல்லோரும் முன் வர வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு.

துரதிஷ்ட வசமாக அவன் கம்சனின் வேலையாளாக இருந்ததால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் வேண்டுகோளை அவன் புரிந்து கொள்ளவில்லை. இது சகவாச தோஷத்தால் ஏற்படுவது. அவனுக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்களித்த முழுமுதற் கடவுளுக்கு அவன் உடனே உடுப்பைக் கொடுத்திருக்கலாம். பாவாத்மாவான அந்த அரக்கன் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அவன் கோபம் கொண்டு அரசனுக்குரிய ஆடையை நீ எப்படிக் கேட்கலாம்? என்று கேட்டான். பின் அவன் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஆலோசனை கூறினான்: சிறுவர்களே, இனி இவ்வாறு அரசனுக்குரிய ஆடையைக் கேட்கும் அகம்பாவச் செயலைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அரசனின் ஆட்கள் உங்களைக் கைது செய்து தண்டனை வழங்குவார்கள். நீங்கள் மிகவும் துன்பப்பட நேரிடும். எனக்கு இந்த அனுபவம் உண்டு என்று கூறினான்.

இதைக் கேட்டதும் தேவகி நந்தனான கிருஷ்ணர், சலவையாளிடம் மிகுந்த கோபம் கொண்டு அவனைத் தம் கையால் ஓங்கி அடித்து, அவனைச் சிரச் சேதம் செய்தார். அவன் பூமியில் இறந்து விழுந்தான். கிருஷ்ணரின் ஒவ்வொரு அங்கமும் அவர் விரும்புவது போல் செயல் படக்கூடியதென்பதை இது நிரூபிக்கின்றது. வாளின் உதவியின்றி கையாலேயே அவனின் தலையை அவர் கொய்தார். அவர் எது செய்ய நினைத்தாலும் வெளிப் பொருட்களின் உதவியின்றிச் செய்யக் கூடியவர். இந்தக் கோர நிகழ்சி;சிக்குப் பின் அவனது நண்பர்கள் துணிகளைக் கீழே போட்டுவிட்டுக் கலைந்து சென்றார்கள். கிருஷ்ணரும் பலராமரும் அவற்றை எடுத்துத் தம் விருப்பம்போல் அணிந்து கொண்டு, மற்றவற்றைத் தம் கோபால நண்பர்களுக்கு வழங்கினார்கள். வேண்டாத உடுப்புக்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்கள்.