கம்சன் தனுர் யாகம் ஒன்றினைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதென்று முடிவெடுத்தான். அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார். அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தருமாவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார்.

கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த கோபியர்கள் கவலையடைந்தார்கள். தம்மை விட்டுக் கிருஷ்ணர் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினார்கள். கிருஷ்ண, பலராமர் ஆகியோருடன் மேலும் சில கோபாலர்களும் தனுர் யாகத்தைக் காண்பதற்காக மதுரா செல்லப் புறப்பட்டார்கள். சூரியன் உதயமானதும் அக்ரூரர் நீராடி முடித்து, தேரில் ஏறி, கிருஷ்ணருடனும் பலராமருடனும் மதுராவுக்குப் புறப்பட்டார். நந்த மகாராஜாவும் மற்ற ஆயர்களும் மாட்டு வண்டிகளில் தயிர், பால், நெய் போன்ற பால் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணர் மற்றும் பலராமர் சென்ற தேரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA

கோபியர்களெல்லாம் கிருஷ்ணரும் பலராமரும் வீற்றிருந்த தேரைச் சூழ்ந்து கொண்டு வழியை மறைக்க வேண்டாமென்று அவர்கள் கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், கண்களில் பரிதாபத்துடன் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோபியரின் துயரம் கிருஷ்ணரை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மதுராவிற்குச் செல்வதை அவர் தன் முக்கிய கடமையாகக் கருதினார். ஏனெனில் கிருஷ்ணர் மதுரா சென்றால்தான் கம்சனை வதம் செய்ய முடியும். எனவே கிருஷ்ணர் கோபியருக்கு சமாதான வார்த்தைகள் கூறி, அவர்கள் வருந்தத் தேவையில்லை, தன் கடமையை முடித்துவிட்டு விரைவில் திரும்புவதாகவும் கூறினார். ஆனாலும் அவர்கள் வழியை விட்டு விலகுவதாகக் காணவில்லை.

என்றாலும் தேர் புறப்படத் தொடங்கி, மேற்கு நோக்கிச் சென்றது. தேரின் மேலிருந்த கொடி கண்ணுக்குத் தெரிந்த வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அக்ரூரரும் பலராமரும் உடனிருக்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனை நதியின் கரையை நோக்கி மிகுந்த வேகத்துடன் தேரைச் செலுத்தினார். யமுனையில் நீராடிய மாத்திரத்தில் ஒருவன் தன் பாவச் சுமைகளைக் களையலாம்.

கிருஷ்ணரும் பலராமரும் நதியில் நீராடி முகம் கழுவிக் கொண்டார்கள். யமுனையின் பளிங்கு போன்ற தெளிவான நீரைச் சிறிது அருந்தி விட்டு, அவர்கள் இருவரும் மீண்டும் தேரில் அமர்ந்திருந்தார்கள். உயர்ந்த மரங்களின் நிழலில் தேர் நின்று கொண்டிருந்தது. பின்னர் அக்ரூரர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனையில் நீராடச் சென்றார். வேத முறையின் படி ஒருவன் நதியில் நீராடியபின் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

akrurar

அக்ரூரர் இவ்வாறு நதியில் நின்ற போது அவர் திடீரென்று கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் கிருஷ்ணரும் பலராமரும் தேரில் உட்கார்ந்திருப்பதை அவர் நன்கறிவார். எனவே அவர் குழப்படடைந்து, அவ்விரு சிறுவர்களும் எற்கிருந்தார்களென்பதைப் பார்க்க நீரிலிருந்து வெளியேறினார். அவர்களிருவரும் முன்பு போலவே தேரில் அமர்ந்திருக்கக் கண்டு அவர் மேலும் ஆச்சரியமடைந்தார். அவர்களைத் தேரின் மேல் பார்த்தபோது, நீரில் அவர்களைக் கண்டது உண்மைதானா என்று அவர் எண்ணமிடலானார்.

எனவே அவர் மீண்டும் நதிக்குச் சென்றார். இம்முறை அவர் நதியில் கிருஷ்ணரையும் பலராமரையும் தவிர பல்வேறான தேவர்களையும், சித்தர்களையும், சாரணர்களையும், கந்தவர்களையும் கண்டார். அவர்கள் எல்லோரும் பிரபுவின் முன் நின்றிருந்தார்கள். பிரபு நீரில் படுத்திருந்தார். ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷ நாகரையும் அக்ரூரர் கண்டார். சேஷ நாகப் பிரபு நீல நிற ஆடைகளை அணிந்திருந்தார். அவரின் கழுத்துக்கள் பால் வண்ணமாகக் காட்சியளித்தன. சேஷ நாகரின் வெள்ளைக் கழுத்துக்கள் பனி மூடிய மலைச் சிகரங்களைப் போலவும் தோன்றின. சேஷ நாகரின் வளைவான மடியின் மேல் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் நிதானமாக அமர்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார்.

பலராமர் சேஷ நாகராவும் கிருஷ்ணர் மகா விஷ்ணுவாகவும் உரு மாறி அக்ரூரருக்குக் காட்சியளித்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நான்கு கைகளுடன் மிக அழகாகப் புன்னகைத்திருப்பதை அக்ரூரர் கண்டார். பிரபுவின் தரிசனத்தால் எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள். அவரும் மிகுந்த பிரியத்துடன் எல்லேரையும் நோக்கிக் கொண்டிருந்தார். விஷ்ணு மூத்திக்குரிய விசேஷ சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்தி அவர் மிக அழகாகக் காட்சியளித்தார். விஷ்ணுவுக்கு உரித்தான குறிகள் அவரின் மார்பில் விளங்கின.

akrura_worships_footsteps

பிரபுவின் நெருங்கிய தோழர்களும், நான்கு குமாரர்களுமான, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோரும், சுனந்தர், நந்தர் போன்ற மற்றத் தோழர்களும், பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பிரபுவைச் சூழ்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார். மகா பண்டிதர்களான ஒன்பது மகரிஷிகளும் அங்கிருந்தார்கள். பிரகலாதர், நாரதர் போன்ற பெரும் பக்தர்கள் திறந்த உள்ளங்களுடனும், புனிதமான சொற்களாலும் பிரபுவைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பரமான ரூபத்தைக் கண்டவுடன் அக்ரூரர் மகிழ்ச்சியில் திளைத்தவராய் பக்தி மேலீட்டால் உடல் முழுவதும் பரமாhனந்தம் பரவுவதை உணர்ந்தார். அவர் கண நேரம் திகைப்படைந்தாலும், உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு பகவானின் முன் தலை வணங்கிக், கைகளைக் கூப்பியபடி, நெகிழ்ந்த குரலில் பிரார்த்திக்கலானார்.