பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.

அவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.

OLYMPUS DIGITAL CAMERA

அவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.

அவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவில் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.