
ஒரு நாள் அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து, காலால் பூமியைக் கிளறியபடி குழப்பம் விளைவிக்கலானான். பெரும் பூகம்பம் ஏற்பட்டது போல் நிலம் அதிர்ந்தது. அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறிய பின் கிராமத்தினுள் நுழைந்தான். அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாக இருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும், சினையுற்றிருந்த பசுக்களுக்கும் கர்ப்ப சேதம் ஏற்பட்டது. எருதின் உடல் மிகப் பெரியதாகவும், பலமுள்ளதாகவும் இருந்ததால், மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் காணப்பட்டது. அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண், பெண், யாவரும் பெரும் அச்சம் கொண்டனர். பசுக்களும் மற்ற மிருகங்களும் கிராமத்தை விட்டு ஓடின.
நிலமை மிகவும் பயங்கரமாயிற்று. விருந்தாவன வாசிகள் எல்லோரும், கிருஷ்ணா, எங்களைக் காப்பாற்றும் என்று ஓலமிட்டனர். பசுக்களும் ஓடுவதைக் கண்ட கிருஷ்ணர், பயப்படாதீர்கள், என்று எல்லோருக்கும் அபயமளித்தார். அரிஷ்டாசுரனைக் கிருஷ்ணர் விளித்துக் கூறினார்: நீ மிகவும் இழிந்த பிராணி. கோகுல வாசிகளை ஏன் பயமுறுத்துகிறாய்? இதனால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன? என் அதிகாரத்திற்கு நீ சவால் விட எண்ணியிருந்தால் நான் உன்னோடு யுத்தம் செய்யத் தயார். இவ்வாறு கிருஷ்ணர் அசுரனுக்கு சவால் விட்டார்.
கிருஷ்ணரின் சொற்களைக் கேட்ட அசுரன் மிகவும் கோபமுற்றான். கிருஷ்ணர் ஒரு நண்பனின் தோளில் கை வைத்தபடி எருதின் முன் வந்து நின்றார். எருது மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை நோக்கி முன்னோறியது. நிலத்தைத் தன் கால்களால் கிளறியபடி அரிஷ்டாசுரன் வாலை உயர்த்தினான். வாலின் நுனியின் மேல், மேகம் ஒன்று சுற்றி வருவது போல் தோன்றியது. அவனின் கண்கள் சிவந்து கோபத்தால் சுழன்றன. கிருஷ்ணரை நோக்கி கொம்புகளைக் குறி வைத்தபடி இந்திரனின் வஜ்ராயுதம் போல் அசுரன் அவரைத் தாக்கினான். ஆனால் கிருஷ்ணர் உடனே அசுரனின் கொம்புளைப் பிடித்து, பெரிய யானை ஒன்று சிறிய எதிரி யானையைத் தாக்குவது போல், அசுரனைத் தூக்கி எறிந்தார்.
அசுரன் மிகவும் களைப்படைந்தான். அவனுக்கு வியர்த்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலத்திலிருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடனும் பலத்துடனும் மீண்டும் கிருஷ்ணரைத் தாக்கினான். கிருஷ்ணரைத் தாக்க விரைந்த போது அவனுக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. மீண்டும் கிருஷ்ணர் அவனின் கொம்புகளைப் பிடித்து அவனைத் தரையில் எறிந்த போது, கொம்புகள் உடைந்தன. ஈரத்துணியைத் தரையில் துவைப்பது போல் கிருஷ்ணர் அசுரனைக் காலால் உதைத்தார். உதை பட்ட அரிஷ்டாசுரன், புரண்டு விழுந்ததும் அவனின் உடலில் இருந்து ரத்தம் வெளி;யேறி, கண்கள் பிதுங்கி அவன் மரணமடைந்தான். கிருஷ்ணரின் வியத்தகு சாதனையைப் பாராட்டி தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள்.
Category: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
Leave a comment
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
No Comments