ஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற் கடமை. நீராடிய பின் அவர்கள் அங்குள்ள தெய்வங்களை வணங்கித் தானங்கள் வழங்குவார்கள்.

விருந்தாவனத்திலிருந்து வந்திருந்த ஆயர்கள், தங்க ஆபரணங்களையும் அழகிய மாலைகளையும் அணிந்திருந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். நந்தமகாராஜாவும் மற்றவர்களும் அன்றிரவை சரஸ்வதி நதியின் கரையில் கழித்தார்கள். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த வனத்திலிருந்து வந்த ஒரு பெரிய பாம்பு நந்தரைப் பிடித்து விழுங்கத் தொடங்கியது. நந்தர் பரிதாபமாகக் கத்தலானார்: என் அருமை மகனே, கிருஷ்ணா, நீ உடனே வந்து என்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். என்று நந்த மகாராஜா கூக்குரலிட்டதைக் கேட்ட ஆயர்கள் எழுந்து வந்து அங்கு நடந்ததைக் கண்டார்கள். அவர்கள் உடனே எரியும் நெருப்பு கொள்ளிகளைக் கொண்டு பாம்பை அடித்துக் கொல்ல முயற்சித்தார்கள். அப்படியும் பாம்பு நந்தரை விடுவதாயில்லை.

vidyadharan-mukthi

அப்போது கிருஷ்ணர் அங்கு தோன்றித் தனது பாத கமலங்களால் பாம்பைத் தொட்டார். கிருஷ்ணரின் திருப்பாதங்கள் பட்டதும் பாம்பு தன் சர்ப்ப உடலை நீக்கி மிகவும் அழகான, வித்யாதரன் என்ற பெயருடைய தேவனாக உருவெடுத்தது. உன்னத அழகுடன் அவன் காட்சி அளித்தான். அந்த தேவன் கிருஷ்ணருக்கு வணக்கத்தினைத் தெரிவித்து மிகுந்த பணிவுடன் நின்றிருந்தான். அப்போது அந்தத் தேவனைப் பார்த்து கிருஷ்ணர் கேட்டார்: நீ நல்ல தேவனாகத் தோன்றுகிhய். நீ இந்த வெறுக்கத் தக்க செயலைச் செய்ததெப்படி? பாம்பின் உடல் உனக்கு எப்படி வாய்த்தது? என்று கிருஷ்ணர் கேட்டபோது அந்தத் தேவன் தன் முந்திய வாழ்வின் கதையைக் கூறலானான்.

அன்பான பிரபுவே, முந்திய பிறவியில் என் பெயர் வித்யாதரன். உலகம் முழுவதும் என் பேரழகிற்காக நான் பிரசித்தி பெற்றிருந்தேன். புகழ் வாய்ந்தவன் என்பதால் நான் எங்கும் என் விமானத்தில் பறந்து செல்வது வழக்கம். அவ்வாறு பறந்து செல்லும்போது ஒருநாள் ஆங்கிரா என்ற மகா முனிவரைக் கண்டேன். அவர் அழகில்லாதவராக இருந்தார். நான் என் அழகில் மிகுந்த கர்வம் கொண்டிருந்ததால் அவரைக் கண்டதும் சிரித்து விட்டேன். அந்தப் பாவத்திற்காக முனிவர் என்னை பாம்பாகும்படி சாபமிட்டார், நான் பாம்பானேன். என்று கூறிய அந்தத் தேவன் மேலும் கூறினான்: முனிவர் எனக்கிட்ட சாபம் ஒரு சாபமேயல்ல என்பதை இப்போது நான் உணர்கிறேன். அவர் என்னைச் சபித்திருக்காவிடில் நான் பாம்பின் உடலைப் பெற்று, உமது பாத கமலங்களால் உதைக்கப் படாமலிருந்தால், நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டிருக்க மாட்டேன்.

இப்போது நான் பாவங்களின் விளைவுகளில் இருந்து விடுபட்டிருப்பதாக எண்ணுகிறேன். யோகிகளில் எல்லாம் சிறந்தவர், ஆதி புருஷனான முழுமுதற் கடவுள், பக்தர்களின் எஜமானர். நீர் பிரபஞ்சங்களைப் பரிபாலிப்பவர். உமது நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் சுவர்க்கத்திலுள்ள என் இருப்பிடத்துக்குச் செல்ல உம் அனுமதியை வேண்டுகிறேன். என்று கூறி, வித்யாதரன் சுவர்க்கத்திற்குத் திரும்பச் செல்வதற்கான அனுமதியை கிருஷ்ணரிடமிருந்து பெற்று, கிருஷ்ணரை வலம் வந்து பணிவுடன் வணங்கி, சுவர்க்கத்திற்குத் திரும்பினான்.

நந்த மகாராஜாவும் பாம்பினால் விழுங்கப்பட இருந்த அபாயத்திலிருந்து தப்பினார். சிவபெருமானை வழிபடுவதற்காக அம்பிகா வனம் வந்திருந்த ஆயர்கள் தம் காரியத்தை முடித்துக் கொண்டு விருந்தாவனத்துக்குத் திரும்பிச் செல்லத் தயாரானார்கள். திரும்பும் வழியில் அவர்கள் கிருஷ்ணரின் லீலைகளை எண்ணியபடி சென்றார்கள்.