கோவர்த்தன பூஜை அமாவாசையன்று நடைபெற்றது. அதன் பின் இந்திரன் ஏழு நாட்களுக்குப் பலத்த மழையும் புயலும் விழைவித்தான். சுக்ல பஷத்தின் ஒன்பது நாட்களுக்குப் பின் பத்தாவது நாள் தேவேந்திரன் கிருஷ்ணரை வழிபட்டபின் எல்லாம் திருப்தியாக முடிவடைந்தது. பின், பதினொன்றாம் நாள் ஏகாதசி வந்தது. அன்று முழுவதும் நந்தமகாராஜா உபவாசமிருந்து, மறுநாள் துவாதசியன்று அதிகாலை யமுனை நதியில் நீராடச் சென்றார். அவர் நதியின் ஆழமான இடத்துக்குச் சென்றபோது வருணதேவனின் ஆள் ஒருவன் அவரைத் தடுத்து, வருணதேவனின் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். தவறான நேரத்தில் நதியில் நீராடியதாக நந்தரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. வான சாஸ்திரத்தின் படி அவர் நீராடியவேளை அசுர வேளையாகும். அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பு நதியில் நீராட வேண்டுமென்று விரும்பிய நந்தர் எப்படியோ, மேலும் முன்பாகவே வந்துவிட்டதால், அசுப வேளையில் நீராடி விட்டார். அதனால் அவர் வருணனின் சிறையில் அடைக்கப் பட்டார்.

வருணனின் ஆட்கள் நந்த மகாராஜாவைப் பிடித்துச் சென்றபோது அவரது நண்பர்கள், கிருஷ்ணரையும் பலராமரையும் கூவி அழைத்தார்கள். நந்த மகாராஜாவை வருணன் பிடித்துச் சென்றிருப்பதை கிருஷ்ணரும் பலராமரும் அறிந்து, உடனே வருணனின் இருப்பிடத்துக்குச் சென்றார்கள். வருணதேவன் கிருஷ்ணரையும் பலராமரையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று இவ்வாறு கூறினான்: அன்பான பிரபுவே, உமது வருகையால் நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டு நிற்கிறேன். நீருனுள் இருக்கும் எல்லாச் செல்வங்களுக்கும் நானே அதிகாரியென்றாலும் வாழ்வின் வெற்றி, அவற்றில் அடங்கி இருக்கவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உம்மைக் காணும் இந்நேரத்தில் என் வாழ்வு வெற்றியடைந்து விட்டதாக நான் உணர்கிறேன்.

OLYMPUS DIGITAL CAMERA

ஏனெனில் உம்மைக் காணும் எவரும் மேற்கொண்டு ஜடப்பிறவியை அடைவதில்லை. எல்லா உயிர்களிலும் உள்ள பரமாத்மாவே, எனது பணிவான வணக்கங்கள் உமக்கு உரித்தாகுக. எனது மடமையால் எது செய்யலாம், எது செய்யக் கூடாதென்பதை அறியாமல், உமது தந்தையான நந்த மகாராஜாவை நான் சிறைப் பிடித்து விட்டேன். எனது ஏவலர்களின் தவறுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இங்கு வந்து உமது கருணையை எனக்கு வழங்க வேண்டுமென்பதற்காக நீர் இதைத் திட்டமிட்டு செய்திருக்கிறீர் போலும். அன்பான கிருஷ்ணா, என் மீது கருணை காட்டும்- இதோ உம் தந்தை. அவரை நீர் உடனே அழைத்துச் செல்லலாம். என்று வருணதேவன் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டான்.

இவ்வாறு கிருஷ்ணர் தம் தந்தையை வருணனிடம் இருந்து விடுவித்து, அவரின் நண்பர்களிடம் கொண்டு வந்தார். எல்லோரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். செல்வச் சிறப்பு மிக்க வருணதேவன், கிருஷ்ணரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டது நந்த மகாராஜாவுக்கு வியப்பை அளித்தது. அவர் அந்நிகழ்ச்சியைத் தம் நண்பர்களிடம் ஆச்சரியத்துடன் விபரித்தார்.