விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவன வாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்தமகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும்.

விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டபோது அப்பொறுப்பை ஏற்க அவை மிகவும் அஞ்சின. ஆனால் தேவேந்திரன், நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள் நானும் என் யானை மீது ஆரோகணித்து பெரும் புயல்கள் புடை சூழ உங்களுடன் வருகிறேன். விருந்தாவன வாசிகளைத் தண்டிப்பதில் என் சக்தி முழுவதையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறேன். என்று உறுதியளித்து மேகங்களை ஊக்குவித்தான்.

OLYMPUS DIGITAL CAMERA

இந்திரனின் கட்டளைப்படி பலவகையான, மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசிற்று. கூரிய அம்புகள் போல் நீர் தாரைதாரையாக வர்ஷித்தது. சற்று நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலமை மிக மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அத் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் கோவிந்தனின் பாத கமலங்களில் சரணடைந்தனர். அப்போது விருந்தாவன வாசிகள் எல்லோரும் கிருஷ்ணரை நோக்கி அன்புள்ள கிருஷ்ணா, நீர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இந்திரனின் கோபத்துக்கு ஆளாகித் தவிக்கும் எங்களைக் காப்பாற்றுவீராக. எனப் பிரார்த்தித்தார்கள்.

இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும் காற்று வீசியதும் தனக்குச் சேரவேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின் செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார். இந்திரன் திட்டமிட்டு தன் கோபத்தை இவ்வாறு காட்டுகிறான். இந்த தேவன் தானே மிகப் பெரியவன் என்று எண்ணிக்கொண்டு தன் பலத்தைக் காட்டுகிறான். ஆகையால் என் தகுதியை நான் அவனுக்கு உணர்த்த வேண்டும். பிரபஞ்சக் காரியங்களை நடத்துவதில் அவன் தனியுரிமை பெற்றவனல்ல என்பதையும், நானே மேலாளரான உயரதிகாரி என்பதையும் உணர்த்தி, அவனது கர்வத்தை அடக்கி, விருந்தாவனத்திலுள்ள என் தூய பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும். எனக் கிருஷ்ணர் நினைத்தார்.

govardhanpuja

பின்பு பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஒரு குழந்தை தரையில் இருந்து குடைக் காளானைப் பிடுங்குவதுபோல், கோவர்த்தன கிரியைத் தன் ஒரு கையில் தூக்கிக் கொண்டார். இது கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைத் தூக்கிய பரமான லீலையாகும். மலையைக் கையில் ஏந்தியவாறு தம் பக்தர்களிடம் கிருஷ்ணர் கூறினார்: அன்புள்ள சகோதரர்களே, அன்புள்ள தந்தையே, எனதருமை விருந்தாவன வாசிகளே, இப்போது நீங்கள் பத்திரமாக இந்த கோவர்த்தன கிரியாகிய குடையின் கீழ் வரலாம். என் கையிலிருந்து மலை நழுவி விழுந்து விடலாமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பலத்த மழையாலும் சூறாவளிக் காற்றாலும் நீங்கள் பெருத்த அவதிக்குள்ளாகி இருக்கிறீர்கள். எனவே நான் இந்த மலையைத் தூக்கி அதை உங்களுக்காக குடையாகப் பிடித்திருக்கிறேன். இந்தக் குடையின் கீழ் உங்களின் பசுக்களுடன் இப்போது நின்மதியாக இருங்கள். என்று கிருஷ்ணர் கூறியதும் விருந்தாவன வாசிகள் அப்பெரிய மலையினடியில் ஒன்று கூடி, தங்கள் உடைமைகளுடனும் மிருகங்களுடனும் பத்திரமாக இருந்தார்கள்.

விருந்தாவன வாசிகளும் அவர்களது பசுக்களும் அம்மலையின் அடியில் ஒரு கிழமை பசி, தாகம் இன்றி, வேறு எவ்விதமான கவலையும் இல்லாமல் இருந்தார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அவ்வளவு பெரிய மலையை ஒரு வார காலம் நிறுத்தியிருந்ததைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது கிருஷ்ணருக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது. கிருஷ்ணரின் அசாதாரணமான யோக சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன், இடியால் தாக்கப்பட்டவனைப் போல் திகைப்படைந்து உறுதி குலைந்தான். உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றதும் பலத்த காற்று வீசுவது நின்றது. அப்போது கோவர்த்தன கிரிதாரி என்ற பெயரைப் பெற்ற முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் கூறினார்: என்னருமை ஆயர்குல மக்களே, இப்போது நீங்கள் உங்கள் மனைவியரையும், குழந்தைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு உங்கள் உடமைகளுடன் வீட்டுக்குச் செல்லலாம். வெள்ளம் குறைந்து விட்டது. எனவே, நீங்கள் இங்கிருந்து செல்லலாம். என்று கூறினார். எல்லா மக்களும் தத்தம் உடைமைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் பிரபுவாகிய கிருஷ்ணர் மெதுவாக கோவர்த்தன கிரியை கீழே இறக்கி அதன் உரிய இடத்தில் முன்பிருந்தபடி வைத்தார்.

OLYMPUS DIGITAL CAMERA

எல்லாம் முடிந்த பின்பு விருந்தாவன வாசிகள் அனைவரும் கிருஷ்ணரை அணுகி அவரை மனமாரத் தழுவிப் பேருவகை அடைந்தார்கள். சுவர்க்கத்தில் ஸித்தலோகம், கந்தர்வ லோகம், சாரணலோகம் ஆகியவற்றைச் சேந்தவர்கள் தம் திருப்தியைத் தெரிவித்து பூமியின் மீது மலர் மாரி பொழிந்து பல வகையான சங்குகளையும் வாத்தியங்களையும் இசைத்தனர். இறுதியில் சுவர்க்க லோகத்தில் இருந்து தேவேந்திரன் வந்து, தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து, கிருஷ்ணரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கி, அவரைத் துதித்ததும் இந்தினின் கர்வம் அடங்கியது. பின் கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இந்திரன் சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் சென்றான்.

goverdhan%20hill_pic2

இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள், விருந்தாவனத்திலிருந்து ஏறக்குறைய 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இடது கையின் சுண்டுவிரலின் நுணியில் குடையாகத் தூக்கி வைத்திருந்த கோவர்த்தன கிரியைத் தரிசிக்கலாம்.