ஷிர்டி பாபா பகுதி -25

Sai Baba
4.1/5 - (34 votes)

பாபா சொன்னால் சொன்னபடி நடக்குமே? சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, பக்தர் ஆவலோடு காத்திருந்தார். தெய்வத்தின் திட்டங்கள்தான் எத்தனை ஆச்சரியமானவை! ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தாய்ப்பாசம் இருக்கிறது. தாய்ப்பால் கொடுத்துக் குழந்தையைத் தாய் வளர்ப்பதும், இயல்பாகவே அவளிடம் தோன்றும் அளவற்ற பாசத்தால்தான். தாயின் பெருமையை அறிவுபூர்வமாக உணர்ந்து அவளை அவளது வயோதிக காலத்தில் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை. தாய்தந்தையை முதியோர் இல்லத்தில் கொண்டு தள்ளுபவர்கள் அந்தப் பெரும் பாக்கியத்தை இழக்கிறார்கள். பிராயச்சித்தமே இல்லாத மாபெரும் பாவத்தைச் செய்கிறார்கள். விலங்குகளிடமும் பறவைகளிடமும் இயற்கை தேவையான நேரத்தில் மட்டும் தாய்ப்பாசத்தை உண்டு பண்ணுகிறது. எப்பேர்ப்பட்ட விந்தை அது! ஐந்தறிவே உள்ள அவற்றிடம் அப்படியொரு பாசம் தோன்றுவது எத்தனை ஆச்சரியம்! ஒரு தாய்க்கோழி தான் இட்ட முட்டையை எந்தக் கட்டளைக்குப் பணிந்து தொடர்ந்து அடை காக்கிறது? முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும், எதிரிகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வீர உணர்ச்சியைத் தாய்க்கோழியின் மனத்தில் புகட்டியவர் யார்? இறைவன் திட்டத்தில் பறவைகளிடமும் விலங்குகளிடமும் தோன்றும் தாய்ப்பாசம் மனிதர்களிடம் உள்ளது போல் நீண்டநாள் இருப்பதில்லை. பறவைகளின் குஞ்சுக்கு இறக்கை முளைத்த பிறகோ, விலங்கின் குட்டி சற்று வளர்ந்த பிறகோ தாய்ப்பாசம் மறைந்து விடுகிறது. அவைகள் தனித்தனி வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிடுகின்றன.

அபூர்வமாக அப்படி அல்லாமலும் விலங்குகளிடம் பாசம் தொடர்ந்து இருக்கும் போலும்! இதோ! இந்தப் பல்லியைத் தேடி இதன் சகோதரி வரப்போகிறதாமே? பக்தர் வியப்போடு கேட்டார்: பாபா! வெறும் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்குகள் எப்படி இவற்றையெல்லாம் அறிகின்றன? பாபா பக்தரைக் கூர்மையாகப் பார்த்தார். அவர் பார்வை பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிற்று. உண்மையில் ஐந்தறிவு என்பது நம் ஆறறிவை விடக் குறைவானது என்று நினைக்கிறோம். ஆனால், ஐந்தறிவு கொண்டவை நம்மை விடக் கூடுதல் சக்தி பெற்றிருப்பதை நாம் உணர்வதில்லை. இயற்கையின் ஆற்றலை முன்கூட்டியே தெளிவாக உணர்ந்துகொள்ளும் சக்தி நமக்கு இருப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அந்தச் சக்தி இருக்கிறது. நிலநடுக்கம் வருவதற்கு முன்பாகவே விலங்குகள் அதை உணர்ந்து நிலநடுக்கம் வராத பிரதேசத்திற்குத் தாவுகின்றன. சுனாமி வருவதற்கும் முன்பாகவே, அவை அச்சத்தோடு குரல் கொடுத்து மனிதர்களை எச்சரிக்கின்றன. விலங்குகளோ, பறவைகளோ எந்த வானிலை ஆராய்ச்சி மையத்தையும் சார்ந்து தம் அறிவைப் பெறுவதில்லை.

சம்பவம் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றை உணரும் நுண்ணறிவு இயல்பிலேயே அவற்றிடம் அடங்கியிருக்கிறது. மனிதர்களை விட விலங்குகளும் பறவைகளும் எத்தனையோ வகைகளில் உயர்ந்தவைதான். அந்த பக்தருக்கு ஒன்று புரிந்தது. பாபாவைப் பொறுத்தவரை விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். எல்லாமே அவரது படைப்புத்தான் என்பதால், எல்லாவற்றின் மீதும் பாபாவுக்கு நிரந்தரமான தாய்ப்பாசம் உண்டு! ஒரு தாய் தன் குழந்தை மீது பாசம் செலுத்துவது இயல்புதான் என்றால், பாபா தான் படைத்த அத்தனை உயிரினங்கள் மேலும் அளவற்ற பாசம் செலுத்துவதும் இயல்புதானே? ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பதற்கும் மேலாகத் தானே பாபா தன் பக்தர்களைக் கனிவுடன் காப்பாற்றுகிறார்? இப்படி அந்த பக்தர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஜல் ஜல் என்ற சப்தத்துடன் ஒரு குதிரை ஷிர்டி மசூதியின் வாசலில் வந்து நின்றது. பாபாவை தரிசிக்கும் ஆவலோடு அவுரங்காபாத்தில்இருந்து வந்த ஒரு பிரமுகர் குதிரை மேலிருந்து தாவிக் கீழே இறங்கினார். பாபாவை தரிசித்த பின், அதே குதிரையில் தனது பயணத்தைத் தொடர விரும்பினார் அவர். ஆனால் என்ன சங்கடம்? குதிரை நகர மறுத்தது. ஓர் அடி கூட எடுத்துவைக்க அதற்கு மனமில்லை. அது சரி.

ஏற்கனவே பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட திட்டப்படி எல்லாம் நடந்தால் தானே குதிரை நகரும்? குதிரைக்கு நல்ல பசி போலிருக்கிறது என்று நினைத்தார் பிரமுகர். அதற்கு கொள்ளு கொடுத்தால் அது பசியாறும். பின் மீண்டும் பயணத்திற்குத் தயாராகிவிடும். ஷிர்டியில் எங்கிருந்தாவது கொள்ளை வாங்கி வர வேண்டும். கொள்ளை எதில் வாங்கி வருவது? பிரமுகரின் தோளில் ஒரு காலிப் பை இருந்தது. அதில் கொள்ளை வாங்கிவர எண்ணினார். அதன் பொருட்டு காலிப் பையைத் தோளிலிருந்து எடுத்தார். துõசியைப் போக்குவதற்காகக் கீழே உதறினார். சடாரென்று பையிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. தன்னிடம் கேள்வி கேட்ட பக்தரைப் பார்த்தார் பாபா. கீழே விழுந்த பல்லியின் அடுத்த செயல்பாடுகளைக் கவனிக்குமாறு கண்ணாலேயே கட்டளை இட்டார். சரசரவென வேகமாக ஊர்ந்து சென்ற அந்தப் பல்லி, சுவரில் ஏறியது. சுவரில் ஏற்கெனவே அதன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லியின் அருகே போய் நின்றது. அடுத்த கணம் இரண்டு பல்லிகளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. நீண்டநாள் கழித்தல்லவா அந்த சகோதரிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்? பல்லிகள் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. மகிழ்ச்சியோடு முத்தம் கொடுத்துக் கொண்டன. பாபாவின் சந்நிதானத்தில் அவை மிகுந்த மன நிறைவை அடைந்தன.

இந்த அபூர்வமான காட்சியைப் பார்த்த பக்தர் பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஆகிவிட்டதே? அவுரங்காபாத் எங்கே? ஷிர்டி எங்கே? இந்தப் பல்லி சகோதரிகள் எப்படிப் பிரிந்தார்கள்? இப்போது எப்படி இணைந்தார்கள்? எல்லாமே பாபாவின் திட்டப்படித் தான் நடக்கிறது என்றால், பாபாவைச் சரண்புகுந்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாமே? அனைத்தையும் பாபா பார்த்துக் கொள்வார் என்று நம்பிவிட்டால் ஒருவனுக்கு ரத்த அழுத்தமே தோன்றாதே! பிரமுகர் குதிரைக்குக் கொள்ளை வாங்கிக் கொடுத்துவிட்டு, தாம் வந்த அதே குதிரையிலேயே திரும்பிச் சென்றுவிட்டார். அவர் திரும்பிச் செல்லும்போது புதிதாய் ஷிர்டி வந்த பல்லி டிக்டிக் எனக் குரல் கொடுத்தது. பாபா சிரித்துக் கொண்டார். தன் சகோதரியைப் பார்க்கக் குதிரைச் சவாரி செய்து வந்த பெருமிதமல்லவா அதன் குரலில் தொனிக்கிறது? பாபாவின் லீலைகளில் இன்னொரு சம்பவம். தெய்வத்தை உணர விரும்பிய ஒரு செல்வந்தருக்கு, அவர் பணத்தைத்தான் தெய்வமாக எண்ணுகிறார் என்ற உண்மையை உணர்த்தி அவரைத் திருத்தினார் பாபா. அந்தப் பணக்காரர் மாறியது எப்படி?..

Leave a comment