ஷிர்டி பாபா பகுதி -23

Sai Baba

தெய்வமேயான அவருக்கு அகில உலகமும் உரிமை உடையது என்கிறபோது, அனைவரின் பணமும் அவருடையதுதானே! சூரியனைக் கற்பூர ஆரத்தியால் வழிபடுவது மாதிரி தான் இதுவும். நம் பணமெல்லாம் பாபா கொடுத்த செல்வம்தான். அதில் ஏதோ கொஞ்சம் பணத்தை என்ன காரணத்திற்காகவோ தமக்குக் காணிக்கையாக பாபா உரிமையுடன் கேட்கிறார் என்பதை அடியவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்வதுபோல், பாபா பணத்தில் கொஞ்சத்தைக் கிள்ளி அவருக்கே காணிக்கையாக்கினார்கள். திருவண்ணாமலை மகான் சேஷாத்ரி சுவாமிகள், எந்தக் கடைக்குச் சென்று பொருட்களை வாரி இறைத்தாலும், அந்தக் கடையில் அன்று வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பார்களே? அதன்பொருட்டு கடைக்காரர்கள் சேஷாத்ரி சுவாமி தங்கள் கடைக்கு வரமாட்டாரா என்று காத்திருப்பார்களாமே? அதுபோல் பாபா தங்களிடம் காணிக்கை கேட்க மாட்டாரா என்று அடியவர்களும் காத்திருந்தார்கள். அவர் காணிக்கை கேட்டு அதைக் கொடுத்துவிட்டால், தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பினார்கள்.

இல்லாவிட்டாலும் தங்களுக்கு நிகழவிருந்த ஒரு கெடுதலை பாபா தங்களிடம் காணிக்கை வாங்கிக் கொண்டதன் மூலம் நீக்குகிறார் என்று புரிந்து கொண்டார்கள். எரிந்த தீக்குச்சிகள் கீழே கிடந்தால் அவற்றை எடுத்துச் சேமித்துத் தம் பைகளில் வைத்துக் கொள்வார் பாபா! பணத்தையும் எரிந்த தீக்குச்சியையும் அவர் ஒன்றாகத்தான் கருதுகிறார் என்பதை அடியவர்கள் புரிந்துகொள்வதற்காக இப்படிச் செய்தாரா? இல்லை, இந்த எரிந்த தீக்குச்சிபோல் மனித உடலும் ஒருநாள் எரிந்து பயனற்றதாகப் போகப்போகிறது எனக் காட்டி அடியவர்களுக்கு வாழ்வின் நிலையாமையை போதித்தாரா? யார் அறிவார்! தொடக்க காலத்தில் பாபா யாரிடமும் காணிக்கை கேட்டதில்லை. ஆனால், யாராவது ஒரு பைசா கொடுத்தால் அதை வாங்கி ஞாபகமாகத் தம் பையில் போட்டுக் கொள்வார். இரண்டு பைசா கொடுத்தாலோ திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு அதை கொடுத்தவரிடமே திரும்பக் கொடுத்துவிடுவார். யோகி ராம்சுரத்குமார் தம்மைப் பிச்சைக்காரர் என்று சொல்லிக்கொள்வாரே? அதுபோல் பாபாவும் தம்மைக் கருதினாரா? ஒரு பிச்சைக்காரர் ஒரு பைசா பெற்றுக் கொள்வதுதான் சரி என்பது அவர் கருத்தா? இதெல்லாம் விளங்கிக் கொள்ள இயலாத புதிர்கள்.

பாபா தாம் பெற்ற காணிக்கைக் காசில் விளக்கெரிக்க எண்ணெய் வாங்குவதுண்டு. தண்ணீராலேயே விளக்கெரிக்க முடிந்தவர் ஏன் காசு கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பது ஒரு கேள்வி. இயற்கையின் நியதிகளை சில விசேஷ சந்தர்ப்பங்களில் மீறலாமே அன்றி மற்றபடி இயற்கை நியதிகளுக்குக் கீழ்ப்படிவதே சரி என அவர் கருதியிருக்கலாம். தாம் வகுத்த விதிகளுக்குத் தாமே கீழ்ப்படியாவிட்டால் எப்படி என்றும் அவர் எண்ணியிருக்கலாம். அவர் பிச்சை எடுத்துத்தான் உணவுண்டார். எனவே அவருக்குச் செலவு என்று எதுவும் கிடையாது. பணத்தைக் காணிக்கையாகப் பெற்றாலும் பணத்தால் அவர் அடைந்த தனிப்பட்ட பயன் ஒன்றுமில்லை. தாம் பெற்ற பணத்தையெல்லாம் பணம் தேவைப்படும் எளியவர்களுக்கு அவர் உடனுக்குடன் வழங்கிவிடுவார். ஒருநாளில் அவர் எவ்வளவு காணிக்கை பெற்றாலும் அவற்றையெல்லாம் உடனே தேவைப்படுபவர்களுக்கு வழங்கிவிடுவதால், மறுநாள் பொழுது விடிந்ததும் மீண்டும் பழையபடி அவர் ஏழைப் பக்கிரிதான். பின்னாட்களில் ஆயிரமாயிரம் ரூபாய்களைக் காணிக்கையாகப் பெற்றார் பாபா. ஆனால், அவர் ஸித்தி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன. துறவி, குழந்தை, நோயாளி மூவரையும் வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என்று இந்திய மரபு சொல்கிறது. துறவியைப் பராமரிக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை. குழந்தை, பெற்றோரின் சொத்து மட்டுமல்ல, சமுதாயத்தின் சொத்து. நோயாளிக்கு திடீர்ச் செலவு வரும். எனவே இம்மூவரையும் பார்க்கும்போது ஏதேனும் கையில் கொடுத்துப் பார்ப்பதை ஒரு வழக்கமாக நாம் பின்பற்றி வருகிறோம்.

அதன்படி துறவியான பாபாவைப் பார்க்க வருபவர்கள் பூ, பழம், இனிப்பு போன்றவற்றையோ காணிக்கைப் பணத்தையோ கொண்டுவந்து  தருவது உண்டு. காணிக்கைப் பணத்தை பாபா அடியவர்கள் முன்னிலையிலேயே தர்மம் செய்தது ஏன்? தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை அடியவர்களுக்கு போதிக்கத்தான். தாங்கள் பெரிதும் நேசிக்கும் பணத்தைக் காணிக்கையாகக் கொடுக்க முன்வருவதன் மூலம், பணத்தின் மேல் உள்ள பற்று அடியவர்களுக்குக் குறைய வேண்டும் என்பதும் பாபாவின் எண்ணம். பாபாவுக்குக் காணிக்கை கொடுத்தவர்களுக்கு ஏராளமான செல்வம் வந்துசேரும். பாபா சிலரிடம் வற்புறுத்திக் காணிக்கை கேட்டு வாங்கினால் கொடுத்தவருக்கு மிகச் சில நாட்களில் பதவி உயர்வு வரும். இதையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்த அடியவர்கள் பாபா கேட்ட காணிக்கைப் பணத்தை மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள். மராத்திய நடிகரான கணபதிராவ் போடஸ், சுயசரிதை எழுதியிருக்கிறார். அதில் அவர் தம் குரு பாபாவைப் பற்றிய பல செய்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பாபா அவரிடம் திரும்பத் திரும்ப தட்சிணை கேட்டது. போகும்போதெல்லாம் அதட்டி தட்சிணை வாங்கிக் கொள்வாராம். வாங்கிய பணத்தையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம்.

ஏறக்குறைய அவரின் பணப் பையையே பாபா காலியாக்கி விட்டாராம். ஆனால், பின்னாளில் பாபாவுக்குக் காணிக்கை கொடுத்ததைப் போல் ஆயிரம் மடங்கு செல்வம் அவரிடம் தேடி வந்து குவிந்ததாம். தன்னிடம் அதிகப் பணம் சேர்வதற்குத் தடையாக இருந்த முன் வினையைத் தனக்குக்காணிக்கை கேட்டுப் பெற்றுக் கொண்டதன் மூலம் பாபா அழித்து விட்டார் என்றும், அதனால்தான் தன்னால் மாபெரும் செல்வந்தனாக முடிந்தது என்றும் அந்த நடிகர் குறிப்பிட்டிருக்கிறார். சிலர் என்ன வற்புறுத்தி தட்சிணை கொடுக்க முயன்றாலும் பாபா  சீற்றத்தோடு அதை மறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. விலை மதிப்புள்ள தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை யாரேனும் காணிக்கையாகக் கொண்டுவந்தால் பாபா சீறுவார். அவற்றை ஏற்க மாட்டார். வீட்டில் இவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும் என நினைத்து நேரில் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் முதலில் அந்த அன்பர் மனத்தில் நினைத்ததைக் கூறி அதை மட்டுமே ஏற்பார். சிலர் பாபாவைச் சந்திக்க சந்தர்ப்பம் அமையாவிட்டால், நண்பர்களிடம் காணிக்கை கொடுத்தனுப்புவார்கள். கொடுத்தனுப்பப்பட்ட காணிக்கைப் பணத்தைத் தர அந்த நண்பர் மறந்துவிட்டால் பாபா நினைவுபடுத்தி காணிக்கையைப் பெற்றுக் கொள்வார். ஒருமுறை தட்கட் என்ற பெண்மணி, தம் கணவருடன் பாபாவை தரிசிக்க வந்தாள். ஆறு ரூபாய் தட்சிணை கொடு! எனக் கேட்டார் பாபா. பணம் இல்லையே என்ற அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. பாபா, அவள் கணவரைப் பார்த்து, ம்! நீ சொல்! என்று கட்டளையிட்டார். பாபாவின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட கணவர் என்ன சொன்னார்?…

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.