ஷிர்டி பாபா பகுதி -19

Sai Baba
4.7/5 - (4 votes)

பாவின் உருவம் காற்றில் கரைந்து மறைந்தது. பாபாவுக்கு பதிலாக, பாபா அமர்ந்திருந்த அதே இடத்தில், சாஸ்திரியின் குருவான அமரர் கோலப் ஸ்வாமியின் திருவுருவம் திடீரென்று தோன்றியது! கோலப் ஸ்வாமி எப்போதும் குங்குமப் பூ நிற உடை அணிவது வழக்கம். இப்போதும் அதே குங்கும வர்ண உடையில் தோன்றினார் அவர். பாபா ஏற்கனவே அணிந்திருந்த குங்குமப்பூ நிற உடை இப்போது கோலப் ஸ்வாமிக்கு என்னமாய்ப் பொருந்துகிறது! குங்குமப் பூ வண்ணத்தில் பாபா அன்று ஏன் உடை அணிய விரும்பினார் என்பதன் சூட்சுமம் இப்போதல்லவா புரிகிறது! சாஸ்திரியின் கண்களில் அருவிபோல் கண்ணீர்! ஆகா! என் குரு கோலப் ஸ்வாமி அமரராகி விட்டார் என்று வருந்தினேனே! அவர் ஸித்தி அடையவில்லை. பாபா வடிவில் உரு மாறியிருக்கிறார். அவ்வளவுதான். இதை  இத்தனை காலம் புரிந்து கொள்ளாமல் போனேனே? இதோ! நானும் பாபாவும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் தன் முந்தைய வடிவிலேயே காட்சி தருகிறாரே என் குரு! மெய்மறந்து நின்ற சாஸ்திரி, பாபாவைப் பார்த்துப் படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

நகைத்தவாறே, சாஸ்திரி அருகில் வந்தார் பாபா. இப்போது எனக்கு தட்சணை தருவதில் ஆட்சேபணை ஒன்றுமில்லையே? என்று கேட்பதுபோல் ஒரு பார்வை பார்த்து சாஸ்திரியை நோக்கிக் கைநீட்டினார். ரேகை பார்ப்பதற்காக நீட்டப்படாத கை, இப்போது தனக்குரிய தட்சணையைப் பெறுவதற்காக சாஸ்திரி முன் உரிமையுடன் நீண்டது. அந்த மலர்க்கரத்தில் சாஸ்திரி தன்னிடமிருந்த தட்சணை அனைத்தையும் கலகலவெனக் கொட்டினார். தட்சணைக் காசுகள் அவரது கண்ணீரால் நீராட்டப் பட்டிருந்தன. மசூதி என்றும், ஆலயம் என்றும் சாஸ்திரி மனத்தில் இருந்த வேறுபாட்டு உணர்வு முற்றிலுமாய் மறைந்தது. அன்றுமுதல் அவர் பாபாவை வழிபடலானார். அவர் நெஞ்சில் தம் குரு கோலப் ஸ்வாமி ஸித்தி அடைந்தது பற்றிய துயரம் மறைந்து, அவரே சாய்பாபாவாக உருமாறியிருக்கிறார் என்ற எண்ணத்தால் ஒரு நிம்மதி பரவியது. பாபாவின் இனிய மொழிகளைப் பற்றி என்ன சொல்ல! அவர் பல நேரங்களில் கண்ணால் பேசுவார். மவுனத்தாலும் பேசுவார். சில நேரங்களில் சொற்களாலும் பேசுவார். அவர் பயன்படுத்தும் சொற்களைப் பற்றி என்னென்பது! அவை தேனில் ஊறவைத்து வெளிப்படுத்தியதுபோல் செவிகளில் தித்திக்கும். உரையாடலின்போது அதிரப் பேசமாட்டார். மிருதுவாகப் பேசுவார். வார்த்தைகளுக்கு வலிக்குமோ, என்று யோசித்துப் பேசுவதுபோல் இருக்கும்.

சுருக்கமாக, எளிமையாக இருந்தாலும், அது ஆழமான கருத்துகளைக் கொண்டிருக்கும். மேற்பார்வைக்குப் புரியாததுபோல் தோன்றும் சில வார்த்தைகள், பின்னர்  யோசித்தால் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டதாய் விரிவடையும். பாபா பேசியவை அனைத்துமே கீதைதான். என்றும் நிலைத்திருக்கும் நீதிகளை அவரது பேச்சு புலப்படுத்தும். பேச்சில் தென்படும் உண்மையின் பேரொளி கேட்பவர்களின் இருண்ட மனங்களில்  வெளிச்சத்தைத் தோற்றுவிக்கும். பாமரர்க்கும் பண்டிதர்க்கும் ஒருசேரப் புரியும் ஆழமான பேச்சு அவர் பேச்சு. பண்டிதர்கள், பல ஆயிரம் நூல்களைப் படித்தாலும் கிடைக்காத அற்புதக் கருத்துகள் அவர் பேச்சில் கிடைப்பதைக் கண்டு வியப்பார்கள். பாமரர்கள் அவர் பேச்சையே வாழ்வின் வேதமாகக் கொண்டு அதன்படி வாழத் தலைப்படுவார்கள். பாபா, தம் பேச்சாலும், செய்கைகளாலும், நிகழ்த்திய அற்புதங்களாலும் மனிதர்களை மேலான வாழ்க்கை வாழுமாறு மாற்றிக் கொண்டே இருந்தார். இப்போதும் அவ்விதமே மாற்றிக் கொண்டிருக்கிறார். எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்தி உலகையே சொர்க்கமாக மாற்றிவிட வேண்டும் என்பதே பாபாவின் விருப்பம். என் அன்பர்களே! மாயைக்கு ஆட்பட்டு விடாதீர்கள். எது என்றும் உள்ளது, எது நிரந்தர ஆனந்தத்தைக் கொடுப்பது என்பதைத் தீவிரமாக யோசியுங்கள்.

அந்த வழியிலேயே சென்று உண்மையான பேரானந்தத்தைக் கண்டுகொள்ளுங்கள். முன்வினை காரணமாகத் துன்பங்கள் உங்களைப் பீடித்தால், சாயி சாயி என்று என் நாமத்தை விடாமல் சொல்லுங்கள். உங்கள் அனைவரையும், கர்மவினை சார்ந்து வருகிற துன்பங்களிலிருந்து மீட்கத்தானே நான் அவதரித்திருக்கிறேன். உங்களைத் துன்பங்களிலிருந்து காப்பதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? யார் அதிர்ஷ்டசாலியோ அவர்களே என்னை வழிபடுகிறார்கள். என்னைப் பூரணமாய் நம்புபவர்களை எந்தத் துயரும் வாட்டுவதில்லை! தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு பாபா கொடுக்கும் உறுதி மொழி இது. பாபா தம் அடியவர்களை ஒருபோதும் கஷ்டத்தில் இருக்க அனுமதித்ததில்லை. இக உலக நன்மைகள் அனைத்தையும் பக்தர்கள் விரும்பியதுபோல் வாரிவாரிக் கொடுத்து, பர உலக நன்மையையும் சேர்த்துத் தருவதே பாபாவின் அருள் நெறி. தம் அடியவர்கள், பக்தியால் தங்கள் உடலை வருத்திக் கொள்வதை பாபா அனுமதித்ததில்லை. அடியவர்கள் உள்ளன்போடு தன்னை வழிபட வேண்டும் என்பது மட்டுமே அவர் விரும்புவது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் தான், உண்மையான வழிபாடு என்பதே அவர் கருத்து.

ஒருமுறை மருத்துவர் ஒருவருடன் ஷிர்டிக்கு வந்தார் ஒரு பாபா பக்தர். அந்த மருத்துவர் அதுவரை ஷிர்டி வந்ததில்லை. அவரோ தீவிர ராம பக்தர். ராமரைத் தவிர வேறு யாரையும் வழிபடுவதில்லை என்பதில் அவர் திட சித்தத்ததோடு இருந்தார். என் இஷ்ட தெய்வம் ராமனிருக்க, இன்னொரு தெய்வம் எனக்கு ஏன் என்பதே அவர் கருத்து. உண்மையில் ஷிர்டிக்கு வர அந்த மருத்துவருக்கு விருப்பமே இல்லை. சாயி பக்தர் தான் அவரை வற்புறுத்தி அழைத்து வந்தார். ஆனால், சாயி பக்தர் அவரிடம் தீர்மானமாய்ச் சொன்னார்: பாபாவை வணங்குமாறோ, அவரை நீங்கள் ஏற்க வேண்டும் என்றோ உங்களை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். நானும் நீங்களும் உற்ற நண்பர்கள் அல்லவா! நான் பாபாவைப் பார்க்கச் செல்லும்போது, நீங்களும் என் நண்பராக உடன் வருகிறீர்கள். அவ்வளவே. இது என் நட்பைக் கவுரவிக்க நீங்கள் செய்யும் செயல். உங்கள் இஷ்ட தெய்வம் ராமன்தான் என்பதையும், நீங்கள் ராமரைத் தவிர யாரையும் வணங்குவதில்லை  என்பதையும் நான் அறிவேனே! பிறகு நீங்கள் மசூதிக்கு என்னுடன் என் நண்பராய் வர ஏன் தயங்கவேண்டும்? அவர் சொன்ன வாதம் சரியாகத்தான் இருந்தது. அவருடன், அந்த மருத்துவர் மசூதி நோக்கி நடந்தார். மசூதி நெருங்கியது. திடீரென தன்னுடன் வந்த பக்தரைத் தள்ளிவிட்டு, பாபாவை நோக்கி ஓடினார் அந்த மருத்துவர். அடடா! என்ன செய்யப் போகிறார் அவர்? அனைவரும் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Leave a comment