Category: பரமார்த்த குரு கதைகள்

பரமார்த்த குரு கதைகள் – கிருஷ்ணா! புடவை கொடு!

பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர்.

அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள்.

“அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!” என்று குதித்தான் மட்டி.

“ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!” என்றான் மடையன்.

பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்!

“சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர்.

“புதுத் துணிகளைக் கிழிப்பதா?” ஏன் குருவே?” என்று கேட்டான், முடூடாள்.

“புத்தி கெட்டவனே! ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி! அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்!” என ஆணையிட்டார் பரமார்த்த குரு.

சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்!

உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார்!

“பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா! அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்!” என்று வேண்டினார் பரமார்த்தர்.

“குருவே! நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு.

“அதானே?” நமக்கு வேட்டி அல்லவா தேவை!” என்றான் மூடன்.

“கார்மேகக் கண்ணா!” இந்தா, பொரி! உன் இஷ்டம் போல் கொரி!” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான், மட்டி.

கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை! எனக்கு நேரமாகிறது; என்னைப் போகவிடுங்கள்” என்றார்.

“கண்ண பெருமானே! எங்களை ஏமாற்ற நினைக்காதிர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள்.

“கண்ணா! அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு.

“கோபாலா கோவிந்தா! தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன்.

“பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர்.

“பொரி கொடுத்ததற்கு நன்றி! நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர்.

“என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர்.

“வரமா?” அதென்ன?”

“ஆமாம்! குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்!” என்றான்.

“எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள்.

“வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்!” என்றான் மடையன்.

“சரி! நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது!” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர்.

“ஆஹா! பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா! உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.

“ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார்.”

“அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம்! அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்‘ம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்! அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது!” என்றான் மட்டி.

“எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன்.

போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு! இதையே விலைக்கு வாங்கி விடலாம்!” என்றான் மடையன்.

பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான்.

“இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன்.

“நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! இது பல்லக்கேதான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன்.

சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன்.

பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார்.

இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர்.

சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள்.

ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது.

திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.

மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது.

அவ்வளவுதான்! பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே!” என அலறினார்கள்.

“அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்!” என்றான் முட்டாள்.

“நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே!” என்று துக்கப்பட்டான் மண்டு.

அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே!” எனத் திட்டினார்.

“குருநாதா!” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்! அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ!” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள்.

பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்!.

பரமார்த்த குரு கதைகள் – கால் முளைத்த மீன்கள்

கடலுக்குச் சென்று மீன் பிடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டிக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தைக் குருவிடம் தெரிவித்தான்.

அதைக் கேட்ட மடையன், “குருவே! பகலில் போனால், பெரிய பெரிய அலைகள் நம்மைச் சாகடித்து விடும். அதனால் ராத்திரியில் தான் போக வேண்டும்” என்றான்.

“ஆமாம் குருவே! அப்போது தான் கடல் தூங்கிக் கொண்டு இருக்கும்!” என்றான், மண்டு

“ஒரே இருட்டாக இருக்குமே? என்ன செய்வது?” எனக் கேட்டான் மூடன்

“என் கையில் தான் கொள்ளிக்கட்டை இருக்கிறதே!” என்றான், முட்டாள்.

கடல் என்றதுமே பரமார்த்தருக்குப் பயமாக இருந்தது. இருந்தாலும், சீடர்கள் தன்னைக் கோழை என்று நினைத்து விடக்கூடாது என்பதால் சம்மதம் தெரிவித்தார்.

சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆளுக்கு ஒரு தூண்டில் தயார் செய்தனர்.

இரவு வந்தது. குருவும் சீடர்களும் கொள்ளிக்கட்டை வெளிச்சத்தில் மீன் பிடிக்கப் புறப்பட்டார்கள்.

கடற்கரை ஓரத்தில் படகு ஒன்று இருந்தது. அதில் பரமார்த்தரும், அவரது ஐந்து சீடர்களும் ஏறிக் கொண்டனர். மட்டியும், மடையனும் கண்டப துடுப்புப் போட்டனர்.

மூடன் தூண்டிலைப் போட்டான். அவன் போட்ட தூண்டிலில் தவளை ஒன்று மாட்டியது.

அதைக் கண்ட சீடர்கள், “இதென்ன? விசித்திரமாக இருக்கிறதே!” என்று கேட்டனர்.

அது தவளை என்பதை மறந்த பரமார்த்தர் “இதுவும் ஒரு வகை மீன்தான் அதிகமாக தின்று கொழுத்து விட்டால் இப்படிக் கால்கள் முளைத்து விடும்” என்று விளக்கம் கூறினார்.

“அப்படியானால் கால் முளைத்த மீன்களைக் கட்டிப் போட்டு, வீட்டிலேயே வளர்க்கலாம்!” என்றான் மட்டி

அதற்குப் பிறகு, மண்டு போட்ட தூண்டிலில் ஒரு சிறிய மீன் மட்டுமே மாட்டியது.

“குருநாதா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. படகுக்கு வெளியே நிறைய மீன்கள் இருந்தாலும் கொஞ்சம் தான் நமக்குக் கிடைக்கின்றன. அதனால் படகில் சில ஓட்டைகளைப் போட்டு, பக்கத்தில் கொஞ்சம் பூச்சிகளை வைத்து விடுவோம்! அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக, மீன்கள் ஓட்டை வழியாகப் படகுக்குள் வரும். உடனே லபக் என்று பிடித்துக் கொள்ளலாம்!” என்றான் முட்டாள்.

“சபாஷ்! சரியான யோசனை!” என்று முட்டாளைப் பாராட்டினார், பரமார்த்தர்.

அவன் யோசனைப்படி படகிலிருந்த ஆணிகளால், ஆளுக்கு ஒரு ஓட்டை போட்டனர்.

அவ்வளவு தான்! அப்போதே கடல் நீர் குபுகுபு என்று படகுக்குள் பாய்ந்து வந்தது.

அதைக் கண்ட சீடர்கள் “ஐயோ” என்று கத்திக் கொண்டு எகிறிக் குதித்தனர். அதனால் இன்னும் கொஞ்சம் ஆட்டம் கண்டது படகு

அதற்குள் படகு முழுவதும் நீர் நிரம்பி விடவே, படகு கடலுக்குள் மூழ்கியது. குருவும் சீடர்களும் லபோ திபோ என்று அலறியபடி நீருக்குள் தத்தளித்தனர்.

அவர்கள் போட்ட சப்தத்தைக் கேட்டு, அங்கு வந்த சில மீனவர்கள் நீந்திச் சென்று அனைவரையும் காப்பாற்றினர்.

மடத்துக்கு வந்து சேர்ந்த சீடர்கள், “நம் படகு எப்படிக் கவிழ்ந்தது?” என்று கேட்டனர்.

“கடலும், மீன்களும் சேர்ந்து சதித் திட்டம் செய்து தான் நம் படகைக் கவிழ்த்து விட்டன! என்றார் பரமார்த்தர்.

“அப்படியானால், எப்படியாவது கடலின் திமிரையும் மீன்களின் கொட்டத்தையும அடக்க வேண்டும்” என்றான் மட்டி

குருவே! முடிந்தவரை மீன்களைப் பிடித்துக் கொன்று விடுவோம்” என்றான் மடையன்.

“ஆமாம்! சும்மா விடக்கூடாது. மறுபடியும் மீன் பிடிப்போம், வாருங்கள்” என்றான் முட்டாள்.

மறுநாளும் மீன்பிடிக்கப் புறப்பட்டனர்.

கடலுக்குள் சென்றதும், “குருவே! எங்களை விட உங்கள் மீது தான் மீன்களுக்குக் கோபம் அதிகமாக இருக்கும். அதனால், தூண்டில் போடுவதற்குப் பதில், உங்களையே கயிற்றில் கட்டி கடலுக்குள் இறக்கி விடுகிறோம்” என்றான் மட்டி.

“உங்களைக் கடிப்பதற்காகக் கடலில் உள்ள எல்லா மீன்களும் வரும். உடனே நாங்கள் எல்லா மீன்களையும் பிடித்து விடுகிறோம்” என்றான் மடையன்.

குரு சற்று நேரம் யோசித்தார். “நீங்கள் சொல்வதும் சரியே” என்றார்.

உடனே சீடர்கள் அவரைக் கயிற்றில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டனர். நீச்சல் தெரியாத பரமார்த்தர், நீருக்குள் மூழ்கியதும் மூச்சுவிட முடியாமல் துடித்தார்.

நீரின் மேல் பரப்பில் காற்றுக் குமிழிகள் வருவதைக் கண்ட சீடர்கள், “அடேயப்பா! நம் குரு நிறைய மீன்களைப் பிடிக்கிறார் போலிருக்கிறது” என்றனர்.

பரமார்த்தரின் வயிறு முழுவதும் நீர் நிரம்பியதால் குமிழிகள் வருவது நின்றன.

எல்லா மீன்களையும் பிடித்து விட்டார் என்று நினைத்த சீடர்கள், நீரிலிருந்து குருவைத் தூக்கினர்.

ஆனால் பரமார்த்தரோ மயங்கிக் கிடந்தார்.

“மீன்களோடு நீண்ட நேரம் சண்டை போட்டதால் களைத்து விட்டார்!” என்றான் மட்டி.

கண் விழித்த பரமார்த்தர், “சீடர்களே! இன்னும் நம் மீது, கடலுக்கு இருக்கும் கோபம் தீரவில்லை. எப்படியோ இந்தத் தடவை தப்பித்துக் கொண்டோம். இனிமேல், கடல் பக்கமே போகவேண்டாம்!” என்றார்.

கடைசியில் கடலையும் மீன்களையும் திட்டிய படி அனைவரும் கரை சேர்ந்தனர்.

பரமார்த்த குரு கதைகள் – உதைக்கிற கழுதையே உழைக்கும்

குருதேவா! ஜமீன்தார் ஜம்புலிங்கம் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாம். அந்த வேலையைச் செய்தால் என்ன? என்று சீடர்கள் கேட்டனர்.

துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது? என்றார் பரமார்த்தர்.

கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே! என்று சீடர்கள் கூறினர்.

இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு.

அன்று மாலையே அவர் மடத்துகுக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது.

கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார்! கோபம் கொண்ட கழுதை, விலுக் கென்று ஒரு உதை விட்டது!

ஐயோ! என்று அலறியபடி தூரப் போய் விழுந்தார் பரமார்த்தர். முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார்.

குருதேவா! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ! என்றான் மடையன்.

ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம். என்று ஒத்து ஊதினான், மட்டி.

பரவாயில்லை. அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்! என்றார் பரமார்த்தர்.

குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல திட்டமிட்டான்.

ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் தூர ஓட்டிவிட்டு, அதன் இடத்தில் தான் நின்று கொண்டான்.

வெளியே வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது.

இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே! என்றான் மூடன்.

ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ! எனச் சந்தேகப்பட்டான் மண்டு.

அதற்குள் பரமார்த்தரும் வந்து சேர்ந்தார். உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதமாக மாறினாய்? என்று கேட்டான் முட்டாள்.

நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்! என்று புளுகினான், திருடன்.

திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்லகாலம்! தப்பித்தோம்! என்று மகிழ்ந்தார்.

சீடர்களும், விட்டது தொல்லை, என்று மகிழ்ந்தனர்.

கழுதை இல்லாமலேயே ஜமீன்தார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குட்டைக்கு எடுத்துச் சென்றார்கள்.

வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பது ஜமீன்தார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி.

வெள்ளையாக இருந்த வேஷ்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன்.

ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும்.

அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டனர்.

நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்! என்று பெருஐம அடித்துக் கொண்டான், முட்டாள்!

வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்! என்று குதித்தான் மடையன்.

சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த ஜமீன்தாருக்கு மயக்கமே வந்து விடும் போலிருந்தது.

அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்திகெட்டவர்களை நம்பி இந்தக் காரியத்தைச் செய்யச் சொன்னேனே! என்று புலம்பியபடி சீடர்களை விரட்டி அடித்தார்.

உம்… நம் தொழிலூ திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே! என்று வருத்தப்பட்டபடி மடத்துக்கே திரும்பினார்கள், ஐந்து சீடர்களும்.

பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை

ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள்.

அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர்.

“ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர்.

குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, “நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்” என்றனர்.

“வெளியூருக்கா? ஏன்?” என்று கேட்டான், மட்டி.

“இந்தச் சிலைகள் இங்கேயே இருப்பதால் என்ன பயன்? வெளியூருக்குப் போனால்தான் அங்கிருக்கும் மக்களும் பார்ப்பார்கள். அப்போதுதான் உங்கள் ஊரின் பெருமை மற்ற ஊருக்கும் தெரியும்” என்றான், திருடரில் ஒருவன்.

“ஆழ்வார்கள், நாயன்மார்கள் செய்த தொண்டைவிட, நீங்கள் செய்யும் தொண்டுதான் பெரியது. உங்கள் பக்தியை மெச்சுகிறேன்” என்று பாராட்டினார், பரமார்த்தர்.

ஆனால், மட்டிக்கு மட்டும் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. “இதை நீங்கள் திருடிக் கொண்டு போகிறீர்கள்” என்றான்.

அதைக் கேட்ட திருடர்கள், “சே, சே! திருடுவதாய் இருந்தால் யாருக்கும் தெரியாமல் அல்லவா திருட வேண்டும்? உங்களுக்குத் தெரிந்துதானே எடுத்துக் கொண்ட போகிறோம்? இது எப்படித் திருடுவது ஆகும்?” என்று கேட்டனர்.

“ஆமாம்! எங்கள் முன்னிலையில் நடப்பதால் இது திருட்டு இல்லைதான்!” என்று ஒப்புக் கொண்டான் மட்டி.

மறுபடியும் சாமி சிலைகளைப் பெயர்த்து எடுத்தனர், திருடர்கள்.

அவர்கள், கஷ்டப்படுவதைக் கண்ட மடையன் “குருதேவா! இவர்களுடன் சேர்ந்து நாமும் கொஞ்சம் தூக்கி விடலாமே” என்று கேட்டான்.

“ஓ! தாராளமாக உதவி செய்வோம்” என்று சொல்லியவாறு சிலைகளைத் தூக்கப் போனார் குரு.

ஒரு வழியாக இராமர் சிலை, சீதை சிலை, ஆஞ்சநேயர் சிலை எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்தனர்.

“குருவே! இவ்வளவு காலமாக இந்தச் சாமி சிலைகள் நம் ஊரில் இருந்தன. இப்போது வெளிநாடு எல்லாம் சுற்றிப் பார்க்கப் போகின்றன. ஆதலால் இன்று விசேஷ பூசை செய்துதான் அனுப்ப வேண்டும்” என்றான், முட்டாள்.

“யாராவது ஆள் வந்துவிடப் போகிறார்கள் என்று பயந்த திருடர்கள், “சீக்கிரம் செய்யுங்கள்” என்று அவசரப்படுத்தினர்.

பரமார்த்தரும் அவசரம் அவசரமாக மந்திரம் சொல்லியபடியே பூசை செய்தார். சீடர்களும் சிலைகளின் கால்களில் விழுந்து வணங்கி எழுந்தனர்.

பூசை முடிந்ததும் கோயிலுக்கு வெளியில் தயாராக இருந்த வண்டியில் சிலைகளைத் தூக்கிக் கொண்டு போக நினைத்தனர், திருடர்கள்.

அப்போது பரமார்த்தரும், மட்டி, மடையன், முட்டாள் ஆகிய மூன்று சீடர்களுக்கும் உற்சாகம் அதிகம் ஆயிற்று.

“சாமிக்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டும்” என்று சொல்லிக் கொண்டே வாழ்க இராமர்! வாழ்க சீதை! ஆஞ்சநேயருக்கு ஜே!” என்று காட்டுக் கத்தலாகக் கத்தினார்கள்.

அவர்கள் கத்துவதைக் கண்ட திருடர்களுக்குப் பொறுமை போய் விட்டது.

“அடப் பாவிகளா! கடைசி நேரத்தில் சத்தம் போட்டு எங்கள் காரியத்தையே கெடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே” என்று திட்டினார்கள்.

“சத்தம் போட்டால் என்ன தப்பு?” என்று கேட்டான் மடையன்.

குதிரை மீது ஏறிக் கொண்ட திருடர்கள், வண்டியை ஓட்டியபடியே, “முட்டாள்களே! நாங்கள் இந்தச் சிலைகளைத் திருடிக் கொண்டு போகிறோம். இது கூட உங்களுக்குத் தெரியவில்லையே!” என்று உண்மையைக் கூறினர்.

அதைக் கேட்டுப் பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“என்ன? திருடிக் கொண்டு போகிறீர்களா?” என்றபடி மயங்கி விழுந்தான், முட்டாள்.

“ஐயோ, திருடர்கள்! திருடர்கள்!” என்று கத்தினான், மட்டி.

அவர்களைப் பிடிப்பதற்குக் குதிரை வண்டியின் பின்னே ஓடிப்போய், கீழே விழுந்து உருண்டான், மடையன்.

பரமார்த்தரோ, அதிர்ச்சியில் சாமிபோல் சிலையாகி நின்றார்.

பரமார்த்தரின் மடத்தருகே வந்ததும், திருடர்கள் வண்டியை நிறுத்தினர். சிலைகளுடன் மடத்துக்கள் சென்றனர்.

உள்ளே மண்டுவும், மூடனும் இருந்தனர்.

“அடேய்! நாங்கள் கொஞ்ச நேரம் இங்கே தூங்கப் போகிறோம். அதுவரை இந்தச் சிலைகளைப் பத்திரமாக வைத்திருங்கள். தூங்கி எழுந்ததும் சிலைகளை எங்களிடமே ஒப்படைத்து விட வேண்டும்” என்று கட்டளை இட்டனர்.

அவர்களைப் பார்த்த பயந்து போன மண்டுவும், மூடனும், சரி என்று சம்மதித்தனர். சிறிது நேரத்தில் திருடர்கள் குறட்டை விட்டுத் தூங்கி விட்டனர்.

“சிலைகளைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டுமே? என்ன செய்வது?” எனக் கேட்டான் மண்டு.

“நம்மால் காவல் காக்க முடியாது. தொலைத்து விடுவோம். இல்லாவிட்டால் நாமும் தூங்கி விடுவோம். அதனால் நேராக மன்னரிடமே கொண்டு அரண்மனைக்குப் போனார்கள்.

அரண்மனையில் பரமார்த்தரும் மற்ற சீடர்களும் அழுது கொண்டு இருந்தனர்.

மண்டுவும், மூடனும் சிலைகளுடன் வருவதைக் கண்டு, அரசன் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். நடந்தவற்றை கேள்விப்பட்ட அரசன், “சிலைகள் திருடு போவதற்கு உதவியாக இருந்ததும் நீங்களே! அதனால் தண்டனையும் தராமல், பரிசும் தராமல் அனைவரையும் சும்மா விட்டு விடுகிறேன்” என்றான்.

குருவும், சீடர்களும் தப்பித்தால் போதும் என்று அரண்மனையை விட்டு ஓடிவந்தனர்.

பரமார்த்த குரு கதைகள் – தண்டச் சோற்றுத் தடிராமன்கள்

எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.

“நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்” என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும்

ஒருநாள், “நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?” என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன்.

இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். “மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!” என்று புளுகினார்.

சீடர்களும், “ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்” என்று ஒத்து ஊதினார்கள்.

அதைக் கேட்ட மன்னன், “அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டான்.

மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர்.

அதைப் பார்த்த அரசன், “சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?” என்று கேட்டான்.

முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. “இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?” என்று கேட்டான்.

“மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது” என்று விளக்கினார் பரமார்த்தர்.

“இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் மடமன்னன்.

“மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்” என்றார் குரு.

“நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!” என்றான் மூடன்.

அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன்.

மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும்

மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை.

“வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

“சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!” என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது

“அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!” என்றான் மண்டு.

“இதை வேண்டுமானால் செய்யலாம்!” என்றான் மடமன்னன்.

பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன.

எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன.

அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர்.

பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.

அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – பூதம் காத்த புதையல்

பரமார்த்த குருவும் சீடர்களும் படுத்துத் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.

தூக்கத்தில், “ஆகா! தங்கம்! வெள்ளி! வைடூரியம்!” என்று உளறிக் கொண்டு இருந்தார், பரமார்த்தர்.

திடுக்கிட்டு எழுந்த சீடர்கள், குரு உளறுவதைக் கண்டு அவரை தட்டி எழுப்பினார்கள்.

தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட பரமார்த்தர், “புத்தி கெட்டவர்களே! ஏன் என்னை எழுப்பினீர்கள்? அற்புதமான கனவு ஒன்று கண்டு கொண்டு இருந்தேன். கெடுத்து விட்டீர்களே!” என்று சீடர்களைத் திட்டினார்.

உடனே எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டு கனவா? என்ன கனவு கண்டீர்கள்?” என்று கேட்டார்கள்.

பரமார்த்தர், சிறிது நினைவுபடுத்தி, “புதையல்! புதையல்!” என்று கத்தினார்.

“புதையலா? எங்கே? எங்கே?” என்று குதித்தார்கள், சீடர்கள்.

பிறகு, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “சீடர்களே, இந்த அறையின் பின்னால் உள்ள தோட்டம் தான் என் கனவில் வந்தது. தோட்டத்தின் சனி மூலையில் ஒரு பானை நிறைய பொன்னும் வெள்ளியுமாய்க் கிடக்கிறது!” என்று மெல்ல கூறினார்.

“அடேயப்பா! பானை நிறைய தங்கமா?” என்று மகிழ்ச்சியால் கீழே விழுந்து புரண்டான் மட்டி.

“குருவே! இந்தப் புதையலை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது?” என்று கேட்டான் மூடன்.

அதற்குள் முட்டாள், “நம் குருவுக்குப் பெரிய குதிரையாக, அழகான குதிரையாக வாங்கலாமே!” என்று பதில் சொன்னான்.

“நாம் கூட ஆளுக்கு ஒரு குதிரை வாங்கிக் கொள்ளலாம்!” என்று மகிழ்ந்தான் மட்டி.

“குருவே! இந்த இடம் சரியில்லை. இதை இடித்து விட்டு ராஜாவுக்குப் போட்டியாக அரண்மனை கட்ட வேண்டும்!” என்று யோசனை சொன்னான் மூடன்.

“இனிமேல் நமக்குக் கவலையே இருக்காது. தினமும் வடையும் பாயாசமுமாகச் சாப்பிடலாம்!” என்று குதித்தான், மடையன்.

“குருவே! அப்படியானால் நாம் எல்லோரும் இப்போதே ஓடிப்போய் அந்த இடத்தைத் தோண்டிப்பார்ப்போம்” என்றான் முட்டாள்.

“ஆமாம்! அதுதான் நல்லது. பகலில் தோண்டினால் ஊர் பூராவும் தெரிந்து விடும். அப்புறம் எல்லோரும் பங்கு கேட்பார்களே!” என்றான் மடையன்.

“மடையன் சொல்வதும் சரிதான். வாருங்கள், எல்லோரும் போய் இப்போதே தோண்டுவோம்!” என்று தோட்டத்துக்குப் போனார்கள்.

வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையைப் பிடித்துக் கொண்டு நின்றான், முட்டாள்.

யாராவது பார்க்கிறார்களா? என்று பார்த்து விட்டு, தம்முடைய கைத்தடியால் ஓர் இடத்தில் வட்டமாகக் கோடு போட்டார், பரமார்த்தர். உடனே மட்டியும் மடையனும் வேகம் வேகமாக அந்த இடத்தைக் கையால் பரக் பரக் என்று தோண்ட ஆரம்பித்தார்கள்.

சிறிது நேரம் ஆனதும், “கை எல்லாம் வலிக்கிறதே!” என்று மூச்சு வாங்க உட்கார்ந்து விட்டனர்.

“குருவே! புதையலை விடக்கூடாது!” என்றபடி மூடனும், மண்டுவும் தொடர்ந்து பள்ளம் பறித்தார்கள்.

நான்கு பேரும் மாறி மாறி தோண்டிக் கொண்டே இருந்தபோது, திடீரென்று வெள்ளையாக ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.

“ஆ! புதையல்! புதையல்!” என்று குதித்தபடி இன்னும் வேகமாகத் தோண்டினான், மட்டி.

உடனே பரமார்த்தர் குழிக்குள் கையை விட்டுப் பார்த்தார். உருண்டையாக ஏதோ ஒன்று கிடைத்தது.

எல்லோரும் ஆசையோடு அதை வெளிச்சத்தில் காட்டிப் பார்த்தார்கள்.

பரமார்த்தரின் கையில் இருந்தது ஒரு மண்டை ஓடு!

அவ்வளவுதான்! “ஐயோ! ஐயோ!” என்று அலறியபடி ஆளுக்கொரு பக்கமாய் விழுந்தடித்து ஓடினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – தொப்பை கரைச்சான் லேகியம்!

திடீரென்று பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே போனது. உட்கார்ந்தால் நிற்க முடியவில்லை; நின்றால் உட்கார முடியவில்லை. இதைக் கண்ட சீடர்கள் மிகவும் கவலைப்பட ஆரம்பித்தனர்.

“குருவே! தினம் தினம் உங்கள் தொப்பை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டே போகிறதே! எங்களுக்கெல்லாம் பயமாக இருக்கிறது” என்றான் மட்டி.

“வயிறு இவ்வளவு பெரியதாய் இருக்கிறதே! ஒரு வேளை உங்களுக்குக் குழந்தை ஏதாவது பிறக்கப் போகிறதா?” என்று ஆச்சரியப்பட்டான், மூடன்.

“குருவே! இதை இப்படியே விட்டுவிடக் கூடாது. அப்புறம் ஒரு நாளைக்கு உங்கள் தொப்பை டமார் என்று வெடித்து விடும்!” என்று பயம் காட்டினான் மடையன்.

“ஐயையோ!” என்று அலறிய பரமார்த்தர், “இதற்கு என்ன செய்வது?” என்று கேட்டார்.

“சித்த வைத்தியர் யாரிடமாவது காட்டலாம்” என்று யோசனை சொன்னான் மண்டு.

“வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும். அதனால் நாங்களே காட்டுக்குச் சென்று மூலிகைகள் பறித்து வருகிறோம். அதிலிருந்து ஏதாவது லேகியம் தயாரித்துச் சாப்பிட்டால், தொப்பை கரைந்து விடும்!” என்று வேறொரு யோசனை சொன்னான், முட்டாள்.

உடனே மூடன், கிடுகிடு என்று பரண்மேல் ஏறி, செல்லரித்துப் போன பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தான்.

“குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள் கொண்டு வருகிறோம்” என்றபடி கீழே குதித்தான்.

எப்படியாவது தொப்பை கரைந்தால் போதும் என்று நினைத்த பரமார்த்தர், “சீடர்களே! சீக்கிரம் புறப்படுங்கள். நிறைய லேகியம் தயாரித்தால் அதை மற்றவர்களுக்கும் விற்று விடலாம்” என்று அனுப்பி வைத்தார்.

காட்டுக்குச் சென்ற சீடர்கள், “தொப்பை கரைச்சான் மூலிகை” எது என்று தெரியாமல் விழித்தார்கள். அப்போது சற்றுத் தூரத்தில் முனிவர் ஒருவ ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்ட மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.

“முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது என்று தெரியுமா?” என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.

கோபம் கொண்ட முனிவர், “எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ கேட்கும் செடி!” என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!

முனிவர் சொன்னதை நம்பிய சீடர்கள், கண்ட கண்ட இலைகளையும் பறிக்க ஆரம்பித்தார்கள். சாப்பிட்டால் பல வியாதிகளை உருவாக்குகிற இலைகளை எல்லாம் பறித்து மூட்டை கட்டினார்கள்.

சீடர்கள் பறித்து வந்த இலைகளை மோந்த பரமார்த்தர், முகத்தைச் சுளித்தார். “நன்றாக நாறுகிறது! எப்படியும் என் தொப்பை கரைந்து விடும்!” என்று மகிழ்ந்தார். அதன்பிறகு, “சீக்கிரம் ஆகட்டும்! எல்லாவற்றையும் கலந்து அரைத்து வாருங்கள்” என்று கட்டளையிட்டார்.

முட்டாளும் மூடனும் இலைகளைத் துண்டு துண்டாகக் கிள்ளிப் போட்டனர். மட்டியும் மடையனும் கல்லில் வைத்து அரைக்க ஆரம்பித்தனர். அப்போது இலையில் இருந்து நாற்றம் வரவே, ஒருவர் மூக்கை இன்னொருவர் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அரைத்தனர்.

எல்லாவற்றையும் வழித்துச் சட்டியில் போட்டனர். அதை அடுப்பில் வைத்துக் காய்ச்சினான்.

அதன்பிறகு சீடர்கள் அனைவரும் லேகியத்தை உருண்டை பிடித்து எடுத்துக் கொண்டு குருவிடம் போனார்கள். “எங்கள் அருமை குருவே! இதோ, தொப்பை கரைச்சான் லேகியம் தயார்! உடனே இதைச் சாப்பிடுங்கள்” என்று பரமார்த்தரை வேண்டினார்கள்.

“பார்ப்பதற்குக் கொழ கொழ என்றும் கன்னங்கரேல் என்றும் இருந்த லேகியத்தைக் கண்டதுமே பரமார்த்தரின் முகம் பல கோணலாக மாறியது.

முட்டளிடமிருந்து ஓர் உருண்டையை வாங்கி மூக்கருகே கொண்ட போனார். அதிலிருந்து வந்த நாற்றம் அவர் வயிற்றைக் கலக்கியது.

“குருவே! யோசிக்காதீர்கள். நீங்கள் உயிர் வாழ வேண்டுமானால் உங்கள் தொப்பை கரைய வேண்டும். உங்கள் தொப்பை கரைய வேண்டுமானால் இதைச் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை!” என்று கூறினான், மட்டி.

பரமார்த்தரும், வேறு வழியின்றி இரண்டு உருண்டைகள் விழுங்கினார்.

“குருவே! இதையும் சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் தொப்பை சீக்கிரம் கரையும்!” என்ற படி இன்னும் சில உருண்டைகளை அவர் வாயில் கட்டாயமாகத் திணித்தனர், முட்டாளும் மூடனும்.

பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம் சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும் அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.

அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும் பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.

நேரம் செல்லச் செல்ல, எல்லோருக்கும் வயிற்றைக் கலக்கியது. “ஐயோ! என் தொப்பை வலிக்கிறதே!” என்று பரமார்த்தரும், மற்ற தொப்பைக்காரர்களும் அலற ஆரம்பித்தனர்.

தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து கண்டதையும் சாப்பிட்டதால், அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது. எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.

மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம் கொண்டார்.

இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச் சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!” என்று ஆணையிட்டான்.

சிறையிலிருந்து தள்ளாடியபடி அந்தக் குருவைக் கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.

“குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக் கரைத்திருக்கிறது” என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.

“லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல் பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி ஆகிவிட்டேன்!” என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார், பரமார்த்தர்.

பரமார்த்த குரு கதைகள் – நொண்டிக் குதிரை

பரமார்த்த குருவுக்கு ஒரு பணக்காரன் இலவசமாக ஒரு குதிரையைக் கொடுத்தான்.

அந்தக் குதிரையோ கிழடு தட்டிப் போயிருந்தது. ஒரு கண் நொள்ளை! ஒரு காது மூளி! முன் கால்களில் ஒன்று நொண்டி! பின் கால்கள் வீங்கிப் போய் இருந்தன.

உடம்பு பூராவும் சொறிபிடித்து, பார்ப்பதற்கு அசிங்கமாக இருந்தது. இருந்தாலும், பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் பரம சந்தோஷம். “பணம் செலவு செய்யாமல் இலவசமாகக் கிடைத்ததே!” என்று நினைத்தனர்.

“குருவே! கடிவாளம் கட்டுவதற்கு வார் இல்லை. அதனால் வைக்கோல் பிரியைச் சுற்றி விடலாம்!” என்று அப்படியே செய்தான் மட்டி.

குரு உட்காருவதற்காக, கிழிந்து போன பழைய கந்தல் கோணி ஒன்றைக் குதிரைமேல் போட்டான் மண்டு. எருக்கம் பூவைப் பறித்து மாலையாக்கி குதிரையின் கழுத்தில் அணிவித்தான், முட்டாள்.

இவர்கள் செய்வதைப் பார்ப்பதற்கு ஊரே கூடி விட்டது. குதிரைக்கு எல்லா அலங்காரமும் முடிந்தது.

தொந்தியும், தொப்பையுமாய் இருக்கும் பரமார்த்தர், குதிரையின் மேல் பெருமையோடு ஏறி உட்கார்ந்தார். அவ்வளவுதான்!

கனம் தாங்காமல் வலியால் குதிரை அலற ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அப்படியே படுத்து விட்டது.

“சே, சே! இதென்ன சண்டித்தனம் பண்ணுகிறது?” என்று சலித்துக் கொண்டே கீழே இறங்கினார் குரு.

முட்டாளுக்கு ஒரு யோசனை தோன்றியது. கையில் வைத்திருந்த கொள்ளிக் கட்டையைக் கொண்டு போய் குதிரையின் காலில் வைத்தான். உடனே அது விலுக்கென்று உதைத்துக் கொண்டு எழுந்தது. இப்படியும் அப்படியுமாக கொஞ்ச தூரம் ஓடி நின்றது.

மறுபடியும் குரு அதன் மேல் உட்கார்ந்தார். இப்போது மட்டி, அதன் வாலைப் பிடித்து முறுக்கினான். கோபம் கொண்ட குதிரை எட்டி ஓர் உதை விட்டது.

அது உதைத்த உதையில் கீழே விழுந்து புரண்ட மட்டிக்கு நாலு பற்கள் உடைந்து விட்டன! வாயெல்லாம் ரத்தம்.

இதை எல்லாம் பார்த்த குருவுக்கு உதறல் எடுத்தது.

“சீடர்களே! எனக்குப் பயமாக இருக்கிறது. நான் கீழே இறங்கி விடுகிறேன்!” என்றார்.

“குருவே! நீங்கள் கவலையே பட வேண்டாம். அப்படியே உட்கார்ந்து இருங்கள். நாங்கள் கவனித்துக் கொள்கிறோம்!” என்று பதில் சொன்னான் முட்டாள்.

மண்டுவுக்கும் மடையனுக்கும் வேறு ஒரு யோசனை உதித்தது.

குதிரைக்கு முன்னால் நின்று கொண்டு, முகத்தைக் கோணலாக்கி, கண்களை உருட்டி, உதட்டைப் பிதுக்கி, “ஆ….ஊ….ஊ…” என்று ஊளையிட்டுப் பயம் காட்டினார்கள்.

இதனால் குதிரை ஒரேயடியாக மிரண்டு, மெல்ல மெல்லப் பின் பக்கமாக நடக்க ஆரம்பித்தது! குருவுக்கும், சீடர்களுக்கும் அதிசயமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. சுற்றி இருந்தவர்கள் கைதட்டிச் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

தொடர்ந்து பின்பக்கமாகவே குதிரை ஓடவும் தொடங்கியது.

“நொண்டிக் குதிரை! நொள்ளைக் குதிரை! குருவுக்கேற்ற குதிரை! கழுதைபோல எட்டி உதைக்கும்! நாயைப் போல் ஆளைக் கடிக்கும்! ஓரம் போங்கோ! வழியை விடுங்கோ!” என்று பாடியபடி சீடர்கள் போய்க் கொண்டு இருந்தனர்.

பின்பக்கமாகவே ஓடுவது குதிரைக்குப் பழகி விட்டது.

அப்போது அடுத்த ஊரின் எல்லை வந்தது. அங்கிருந்த மணியக்காரன் இவர்களை நிறுத்தினார்கள்.

“வெளியூர்க் குதிரைக்கு வரி கட்ட வேண்டும். பத்துப் பணம் எடுங்கள்” என்றான்.

“வரியா? நான் ஏறி வருகிற குதிரைக்கு வரிக வாங்கலாமா? அதுவும் இது இனாமாகவே வந்த குதிரை. இதற்கு வரி கட்ட மாட்டோம்!” என்று கூறினார் குரு.

“எதுவானாலும் சரி. வரி கொடுக்காவிட்டால் விடமாட்டேன்” என்று சொல்லி அவர்களை மடக்கினான், மணியக்காரன்.

“நாம் கொடாக்கண்டன் என்றால் இவன் விடாக்கண்டனாய் இருக்கிறானே!” என்று நினைத்து ஐந்து பணம் கொடுத்தனர்.

“இன்னும் ஐந்து பணம் கொடுங்கள்”

“ஒரு குதிரைக்கு ஐந்து பணம்தானே வரி?”

“ஒரு பக்கம் மட்டும் போகும் குதிரைக்குத்தான் ஐந்து பணம். உங்கள் குதிரை பின்னாலும் போகிறதே!”

“இதென்ன அநியாயம்?” என்று வருத்தப்பட்டு மேலும் ஐந்து பணம் தந்தனர்.

“இந்தக் குதிரையால் நமக்கு எவ்வளவு பணம் நஷ்டமாகிறது?” என்று சொன்னபடி பயணத்தைத் தொடர்ந்தனர்.

ஒரு வழியாக ஊருக்குள் நுழைந்து, ஒரு மடத்துக்குப் போனார்கள். அப்போது இரவு நேரம். எல்லோருக்கும் களைப்பாக இருந்ததால், குதிரையைக் கட்டிப்போட மறந்து, தூங்கி விட்டனர்.

காலையில் எழுந்து ஆளுக்கொரு பக்கமாகத் தேடிக் கொண்டு போனார்கள்.

கடைசியில் ஒரு வயலுக்குப் பக்கத்தில் அந்தக் குதிரை கட்டப்பட்டு இருந்தது!

“இது இரவு முழுவதும் என் வயலில் இறங்கி பயிர்களை எல்லாம் நாசம் செய்து விட்டது. அதற்குப் பதிலாகப் பத்துப் பணம் கொடுத்தால்தான் குதிரையை விடுவேன்” என்று சொன்னான், அதைக் கட்டி வைத்திருந்த உழவன்.

அவனிடம் பேரம் பேசி நான்கு பணம் கொடுத்து விட்டுக் குதிரையை ஓட்டி வந்தனர்.

“சீ…சீ…!” இந்தக் குதிரையால் நமக்குப் பெரும் தொல்லை. என் மானமே போகிறது.! பேசாமல் இதை விட்டு விடலாம்! என்று வருத்தப்பட்டார் குரு.

அப்போது அங்கிருந்த ஒருவன், குதிரைக்குப் பீடை பிடித்துள்ளது. அதனால்தான் இப்படி ஆகிறது. அந்தப் பீடையைக் கழித்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். செலவோடு செலவாக எனக்கும் ஐந்து பணம் கொடுங்கள் என்று யோசனை சொன்னான். குருவும், சீடர்களும் மூக்கால் அழுது கொண்டே அவனிடம் பணம் கொடுத்தனர்.

பிறகு, குதிரையின் ஒரு காதைப் பிடித்துக் கொண்டு “ஆ! பீடையெல்லாம் இந்தக் காதிலேதான் இருக்கிறது. இதனால்தான் ஏற்கனவே ஒரு காதை அறுத்திருக்கிறார்கள். இப்போது இந்தக் காதையும் அறுத்து விட்டால் சரியாகி விடும்!” என்றான், ஏமாற்றுக்காரன்.

உடனே மட்டி, மண்ணில் விழுந்து புரண்டு, “சீக்கிரம் காதை அறுங்கள்!” என்று குதித்தான். மூடனோ ஓர் அரிவாளைத் தீட்டிக் கொண்டு வந்து கொடுத்தான்.

எல்லோரும் பிடித்துக் கொள்ள, ஏமாற்றுக்காரன், குதிரையின் காதை அறுத்து எடுத்தான்! குதிரையோ வலி தாங்காமல் கீழே விழுந்து கதறியது. பிறகு உயிரை விட்டது!

எல்லோரும் அறுத்த காதைக் கொண்டு போய் ஆழக் குழி தோண்டிப் புதைத்தனர்.

“ஒழிந்தது பீடை! இனி மேல் கவலையில்லை!” என்றான், ஏமாற்றுக்காரன்.

பரமார்த்த குருவும் சீடர்களும் மகிழ்ச்சியோடு அடுத்த ஊருக்குப் புறப்பட்டார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – குரங்கு விடு தூது!

உழைக்காமல் உண்ண வேண்டும் என்ற ஆசை பரமார்த்த குருவுக்கு ஏற்பட்டது. அதற்காகத் தம்முடைய புத்திகெட்ட சீடர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

“குருதேவா! திருட்டுத் தொழில் செய்தால் என்ன?” என்று கேட்டான், மட்டி

“மாட்டிக் கொண்டால் உதைப்பார்களோ!” என்றான் மடையன்.

“அப்படியானால் ஒரு குரங்கைப் பிடித்து வந்து, அதற்குப் பயிற்சி கொடுக்கலாம். எல்லா பொருள்களையும் திருடிக் கொண்டு வர கற்றுத் தரலாம்!” என்று யோசனை கூறினான், முட்டாள்.

“ஆகா! அருமையான திட்டம்தான். ஆனால் எப்படிக் குரங்கைப் பிடிப்பது?” என்று கேட்டார், பரமார்த்தர்.

“பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது, என்று சொல்கிறார்களே! அதன் பொருள் என்ன?” எனக் கேட்டான், மண்டு.

“நமக்குக் குரங்கு வேண்டும் என்றால், முதலில் பிள்ளையாரைப் பிடிக்க வேண்டும். பிறகு அது தானாகவே குரங்காக ஆகிவிடும்” என்று விளக்கம் சொன்னான், மூடன்.

“இதுவும் சரிதான். ஆகவே, இப்பொழுதே சென்று பிள்ளையாரைப் பிடிப்போம், வாருங்கள்” என்றபடி புறப்பட்டார் பரமார்த்தர். சீடர்களும் அவருடன் சென்றனர்.

அரச மரத்தின் அடியில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டார் குரு. “சீடர்களே, இப்பொழுது பிள்ளையார் நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கிறார். அதனால் சப்தம் போடாமல் மெதுவாகச் சென்று, “லபக்” என்று பிள்ளையாரைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டார், பரமார்த்தர்.

சீடர்களும் மரத்தைச் சுற்றி வந்து பிள்ளையார் சிலை மேல் விழுந்து அதைக் கட்டிப் பிடித்து உருண்டனர்.

அப்போது, குரங்காட்டி ஒருவனிடம் இருந்து தப்பி வந்த குரங்கு ஒன்று அங்கே வந்தது.

அதைக் கண்ட பரமார்த்தர், “சீடர்களே! இதோ குரங்கு வந்து விட்டது! விடாதீர்கள், பிடியுங்கள்!” என்று கத்தினார்.

மட்டியும் மடையனும் வேகமாகத் துரத்திச் சென்று அந்தக் குரங்கைப் பிடித்து விட்டனர்.

அதைக் கண்ட பரமார்த்தர், இது சாதாரணமான குரங்கு அல்ல. இராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயரே தான்!” என்று சொன்னபடி அதன் கால்களில் விழுந்து வணங்கினார்.

சீடர்களும், “ரங்கா, ரங்கா!” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டனர்.

மடத்துக்கு வந்து சேர்ந்ததும், “நம் குரு மட்டும் அடிக்கடி சுருட்டு பிடிக்கிறார். ஆனால் அவர் சீடர்களான நமக்கோ ஒரு சுருட்டு கூடத் தருவதில்லை. அதனால் அவருக்கும் தெரியாமல் சுருட்டு திருடிக் கொண்டு வரும்படிக் குரங்கை அனுப்புவோம்” என்றான் மட்டி.

“குரங்கே! எங்கள் குரு பிடிப்பதைக் காட்டிலும் உயர்ந்த ரகமான சுருட்டுகளை எங்கிருந்தாலும் கொண்டு வா!” என்று அதை ஏவி விட்டான் முட்டாள்.

அடுத்த நிமிடம் குரங்கு மாயமாய் மறைந்தது.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்தது. அதன் இரண்டு கைகளிலும் நிறைய பட்டாசுகள் இருந்தன.

வாணக் கடைக்குச் சென்ற குரங்கு, அங்கிருந்த பட்டாசுகளைச் சுருட்டு என்று நினைத்துக் கொண்டு தூக்கிக் கொண்டு வந்து விட்டது.

அதைக் கண்ட மடையன், “சொன்னபடி சுருட்டுகளை சுருட்டிக் கொண்டு வந்து விட்டதே!” என்று மகிழ்ந்தான்.

“ஆஞ்சநேயா! வாழ்க நீ! வளர்க உன் தொழில், திறமை!” என்றான், முட்டாள்

பல வண்ணங்களில் இருந்த பட்டாசுகளைப் பார்த்து, “நம் குருநாதர் பிடிக்கும் சுருட்டுகள் புராவும் கருப்பு நிறம் தான். நாம் பிடிக்கப் போவதோ, சிவப்பு, பச்சை, நீலம் என்று பல நிறங்களில் இருக்கின்றன” என்று பெருமைப்பட்டுக் கொண்டான் மண்டு.

பட்டாசுகளில் இருந்த திரியைப் பார்த்த மூடன், “நெருப்பு வைப்பதற்காக என்றே தனியாக ஒரு திரி வைத்து இருக்கிறார்கள் அதனால் இதுதான் உலகத்திலேயே உயர்ந்த சாதி சுருட்டு” என்றான்.

சீடர்கள் அனைவரும் ஆளுக்கொரு வெடியை வாயில் வைத்துக் கொண்டனர். எல்லோர் திரிக்கும் கொள்ளிக் கட்டையால் நெருப்பு வைத்தான், முட்டாள்.

ஆனந்தமாகப் புகை விடலாம் என்ற கற்பனையில் மூழ்கினர் சீடர்கள்.

அடுத்த கணம், “டமால், டுமீல்” என்று ஒவ்வொருவர் வாயிலும் இருந்த பட்டாசு வெடித்தது.

வாய் இழந்த சீடர்கள், “ஐயோ, ஆஞ்சநேயா!” என்று அலறிக் கொண்டு உருண்டனர்.

நடந்ததைக் கேள்விப்பட்ட பரமார்த்தர், “இனி மேலாவது எனக்குத் தெரியாமல் எந்தக் காரியத்தையும் செய்யாதீர்கள்” என்று எச்சரிக்கை செய்தார்.

“குருவே! உங்கள் வேட்டி எல்லாம் கிழிந்து விட்டது. அதனால் கட்டிக் கொள்வதற்கு நல்ல பட்டுத் துணியாகத் திருடி வரச் சொல்லுங்கள்” என்றனர் சீடர்கள்.

பரமார்த்தரும், துணி திருடி வருவதற்குக் குரங்கை தூதனிப்பினார்.

அந்நாட்டு அரண்மனைக்குள் நுழைந்தது குரங்கு….

அரண்மனைக் குளத்தில் குளித்துக் கொண்டு இருந்தான் அரசன். படிக்கட்டுகளில் அவனது பட்டுத் துணிகளும், வைரக் கிரீடமும் வைக்கப்பட்டிருந்தன. யாருக்கும் தெரியாமல் அவற்றைத் தூக்கிக் கொண்டது, குரங்கு.

பட்டுத் துணிகளையும், வைரக் கிரீடத்தையும் பார்த்த குருவும் சீடர்களும் வியப்பு அடைந்தனர்.

“குரங்கே! சீக்கிரமே உனக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம்!” என்றான் மண்டு.

பட்டு வேட்டியை குருவுக்குக் கட்டி விட்டான், மூடன். மகுடத்தை அவர் தலையில் சூட்டினான், முட்டாள்.

“இப்போது பார்த்தால் முடிசூடிய மன்னரைப் போல் இருக்கிறீர்கள்” என்று புகழ்ந்தான் மட்டி.

மீதி இருந்த வேட்டிகளை சீடர்கள் கட்டிக் கொண்டனர்.

“வாருங்கள்! இந்த அரச கோலத்திலேயே ஊர்வலம் போய் வருவோம்!” என்று புறப்பட்டார், பரமார்த்தர்.

தெருவில் இறங்கிய மறு நிமிடமே, அரச காவலாளிகள் குருவையும் சீடர்களையும் கைது செய்தனர்.

அரசனின் பொருள்களைத் திருடிய குற்றத்திற்காகப் பத்து நாள் சிறைத்தண்டனை விதக்கப்பட்டது.

“குருவே! மனிதர்களால்தான் நமக்குத் தொல்லை என்று நினைத்தோம். கேவலம் ஒரு குரங்கு கூட நமக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டதே!” என்று புலம்பினார்கள் சீடர்கள்.

பரமார்த்த குரு கதைகள் – உப்புக்கு வந்த சோதனை, அதிசயித்த குரு
ஒரு கிராமம் ஒன்றில் சிறு ஆசிரமத்தில் பரமார்த்தர் என்னும் குரு இருந்தார். அவருக்கு 5 சீடர்கள் உள்ளனர்.அவர்கள் யாவருமே அடி முட்டாள்கள். எந்த ஒரு காரியத்தையும் முட்டாள் தனமாகவே செய்வார்கள். முட்டாள்தனமான காரியங்களால் சில சமயம் ஏமாந்தும் போவார்கள்.
இப்படிதான் ஒருநாள் அனைவரும் தலயாத்திரை செல்லவதற்காக ஆயத்தம் செய்து கொண்டு இருந்தனர். உணவை சமைத்து எடுத்து செல்ல எண்ணி பரமார்த்த குரு ஒரு சீடனை அழைத்தார். அவனிடம் சிறிது பணமும் துணி பையையும் கொடுத்து நீ சந்தைக்கு சென்று சமயலுக்கு தேவையான சுத்தமான உப்பு வாங்கிவா; என்று அனுப்பினார்.
சீடனும் சரியேன செல்லலானான். வழியில் ஆற்றை கடந்து சந்தையை சென்றடைந்தான். அங்கு ஒரு கடைக்கு சென்ற சீடன் ;ஐயா சுத்தமான உப்பு இருக்கிறதா; என்றான். கடைக்காரர் உப்பை அளந்து எடுத்து சீடனின் பையில் போட்டு கொடுத்தார். உப்பை பார்த்த சீடன் ;இது சுத்தமானதுதானே?; என வினாவினான்.
இதைக்கேட்ட கடைக்காரர் ஐயா உப்பில் சுத்தமானது சுத்தமற்றது என்று இல்லை உப்பு ஒரே மாதிரிதான் இருக்கும்; என்றார். கோபமாக ஆ… நீ என்ன இப்படி பேசுகிறாய்! உப்பில் சுத்தமானது இருக்கிறது. என் குரு எனக்கு கூறியிருக்கிறார். வேறோன்றும் பேசாமல் இது சுத்தமானதா என்று மட்டும் கூறு; என்று முட்டாள்தனமாக கேட்டான் சீடன்.
வியந்து போன கடைக்காரர் என்ன சொன்னாலும் புரியவைக்கயிலாத முட்டாள் இவன் என்று எண்ணி ;ஐயா உங்கள் குரு அறிவாளி! நான்தான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் வேண்டும்மென்றால் காய்கறிகளை சமைக்கும் முன் நீரில் கழுவி சுத்தம் செய்வது போல் உப்பையும் கழுவி சுத்தம் செய்துகொள்ளலாம்; என்றார். இதைக்கேட்ட சீடன் ;இப்போதுதான் நீர் சரியாக யோசித்து பேசியுள்ளாய், இந்தாருங்கள் பணம் என்று பணத்தை கொடுத்து விட்டு அவர் சொன்னதை நம்பி மகிழ்சியுடன் கிளம்பினான்.
போகும் வழியில் ஆற்றை கடந்து செல்லும் போது சீடனுக்கு ஒரு யோசனை தோன்றியது. ;இந்த உப்பை, அப்படியே எடுத்துச் சென்றால் குரு இது சுத்தமானதா என்று கேட்டு கோபமடைவார். அதை விட இந்த ஆற்று நீரில் உப்பை அலசிச்சென்றால் உப்பு சுத்தமாகிவிடும், குருவுக்கு இது சுத்தமானதுதான் என்று கூறலாம்,அவரும் பாராட்டுவார். என்றவாறே உப்பை துணியுடன் நீரில் முக்கி எடுத்துக தன் தோலில் போட்டுக்கொண்டு சென்றான்.
போகிற வழியில் உப்பு முழுவதுமாக நீரில் கரைந்தே போயிற்று.உப்பு கரைந்துபோனதை அவன் உணரவில்லை. வீடும் வந்தது சீடன் வருவதைக் கண்ட குரு “வாவா…ஏன் தாமதம் உப்பு வாங்கிவிட்டாயா?” என்றவாறு உள்ளிருந்து அவசரமாக வந்தார். ஆம் குருவே நீங்கள் கூறியதுபோல் சுத்தமான உப்பு வாங்கிவந்தேன்; என்று துணிபையை கொடுத்தான் சீடன். அதை வாங்கி பார்த்த குரு “என்னடா பை காலியாக உள்ளது எங்கேடா உப்பைக் காணோம்” என்றார்.
“இல்லை குருவே உப்பு வாங்கும்போது கடைக்காரனிடம் இது சுத்தமானதா என்று கேட்டப்பொழுது உப்பை நீரில் கழுவி சுத்தம் செய்யலாம் என்றான். நானும் வருகிற வழியில் ஆற்று நீரில் உப்பை அலசி எடுத்து வந்தேன். அவ்வளவுதான் என்றான். இதைக் கேட்ட குருவும்…உன் யோசனை நல்ல யோசனைதான், ஆனால் உப்பு எங்கு போனது என்று சமையலையும் மறந்துபோய் சிந்தனையில் ஆழ்ந்தனர் பரமார்த்த குருவும் சீடர்களும்.
பார்த்தீர்களா! இவர்கள் எவ்வளவு பெரிய முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று
பரமார்த்த குரு கதைகள் – புத்தியில்லாதவர்களின் வேலை

அந்த ஊர்ப் பண்ணையார் வீட்டில் துணி துவைப்பதற்கு ஆள் தேவையாக இருந்தது.

பரமார்த்த குருவின் சீடர்கள் “அந்த வேலையைச் செய்தால் என்ன?” என்று அவரிடம் கேட்டனர்.”துணி துவைக்கிற தொழிலுக்குப் பொதி சுமக்கும் கழுதை வைத்திருக்க வேண்டும். நம்மிடம் அது இல்லையே, என்ன செய்வது?” என்றார் பரமார்த்தர். “கழுதை இல்லாவிட்டால் என்ன? அதற்குப் பதில் தான் நாங்கள் இருக்கிறோமே!” என்றனர் சீடர்கள். இருந்தாலும், நிஜமான கழுதை இருந்தால் நல்லது! நல்ல கழுதையாக ஒன்று வாங்கி வாருங்கள், என்று உத்தரவிட்டார், பரமார்த்த குரு. அன்று மாலையே அவர் மடத்துக்குக் கழுதை ஒன்று வந்து சேர்ந்தது.

கழுதையைப் பார்வையிட்ட பரமார்த்தர், அதன் வாலைப் பிடித்து முறுக்கிப் பார்த்தார். கோபம் கொண்ட கழுதை, அவரை ஒரு உதை உதைத்தது. ஐயோ! என்று அலறியபடி தொலைவில் போய் விழுந்த பரமார்த்த குரு, ”முட்டாள்களே! என் பெருமைகளைப் பற்றி கழுதையிடம் ஒன்றுமே சொல்ல வில்லையா? என்று கோபமாகக் கேட்டார். “குருவே! உங்களைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெளிவாக எடுத்துச் சொன்னோம்! அதனால்தான் உதைத்ததோ என்னவோ?” என்றான் மடையன். “ஆமாம் குருவே! அப்படியும் இருக்கலாம்” என்று ஆமோதித்தான் மட்டி.

“பரவாயில்லை, அடிக்கிற கைதான் அணைக்கும். அதுபோல் உதைக்கிற கழுதைதான் உண்மையாய் உழைக்கும். ஆகையால் இந்தக் கழுதையே இருக்கட்டும்!” என்றார் பரமார்த்தர். குருவும் சீடர்களும் கழுதை வைத்திருப்பதை அறிந்த உள்ளூர் திருடன், அதை எப்படியாவது திருடிச் செல்ல வேண்டுமென்று திட்டமிட்டான். ஒருநாள், கழுதையின் கழுத்தில் கட்டப்பட்டு இருந்த கயிற்றை அவிழ்த்துக் கொண்டு இருந்தான், திருடன். ஆனால் அதற்குள் சீடர்கள் வரும் சப்தம் கேட்கவே அவசரம் அவசரமாகக் கழுதையை மட்டும் ஓட்டிவிட்டு, அந்த இடத்தில் தான் நின்று கொண்டான். அங்கு வந்து பார்த்த சீடர்களுக்கு வியப்பும் அதிர்ச்சியுமாக இருந்தது.

“இதென்ன? கழுதை இருந்த இடத்தில், மனிதன் இருக்கிறானே?” என்றான் மூடன். “ஒருவேளை இது மாயமந்திரம் தெரிந்த கழுதையாக இருக்குமோ?” எனச் சந்தேகப்பட்டான் மண்டு. அதற்குள் பரமார்த்த குருவும் வந்து சேர்ந்தார். “உன்னைக் கழுதையாகத்தானே வாங்கி வந்தோம். நீ எப்படி மனிதனாக மாறினாய்?” என்று கேட்டான் முட்டாள்.”நான் முதலில் மனிதனாகத்தான் இருந்தேன். ஒரு முனிவரின் கோபத்துக்கு ஆளாகி விட்டேன். அவர்தான் என்னைக் கழுதையாகப் போகும்படிச் சாபம் இட்டார்.. இப்போது சாபம் நீங்கி விட்டதால் மறுபடி மனிதனாக மாறி விட்டேன்!” என்று பொய் சொன்னான் அந்தத் திருடன். திருடனின் பொய்யைப் புரிந்து கொள்ளாத பரமார்த்தர், “மனிதனைக் கழுதையாக மாற்றியதால் தப்பித்தோம். அதே முனிவர் சிங்கத்தையோ, புலியையோ கழுதையாக மாற்றியிருந்தால் இந்நேரம் நம்மையெல்லாம் சாப்பிட்டிருக்கும். நல்ல வேளை, தப்பித்தோம்!” என்று மகிழ்ந்தார்.

“சீடர்களும், விட்டது தொல்லை.” என்று மகிழ்ந்தனர். கழுதை இல்லாமலேயே பண்ணையார் வீட்டில் வேலைக்குச் சேர்ந்த சீடர்கள், துணிகளை மூட்டை கட்டி, பாசி பிடித்த ஒரு குளத்துக்கு எடுத்துச் சென்றார்கள். பளீரென்று வெள்ளையாக என்று இருக்க வேண்டும் என்பது பண்ணையார் கட்டளை என்று சொல்லியபடி, வெவ்வேறு நிறங்களில் இருந்த துணிகளைக் கல்லில் தேய்த்துக் கிழித்தான், மட்டி. வெள்ளையாக இருந்த வேட்டியில் பாசியை தோய்த்துப் பச்சை நிறமாக மாற்றினான் மடையன். ஒரே துணியாக இருந்ததைக் கசக்கிப் பிழிந்து முறுக்கி, பல துண்டுகளாக ஆக்கினார்கள், முட்டாளும் மூடனும். அப்பாடா! ஒரு வழியாக நன்றாக வெளுத்துக் கட்டி விட்டோம்! என்று மகிழ்ந்தபடி பண்ணையார் வீட்டுக்குப் புறப்பட்டனர். “நீங்கள் ஒரு துணி போட்டீர்கள். நான் அதையே பத்தாக்கிக் கொண்டு வந்திருக்கிறேன்!” என்று பெருமை பேசினான் முட்டாள்.

“வெள்ளையைப் பச்சையாக்கி விட்டேன்.” என்று குதித்தான் மடையன். பரமார்த்த குருவின் சீடர்கள் கொண்டு வந்த துணிகளைப் பிரித்துப் பார்த்த பண்ணையாருக்கு கோபம் வந்தது.”அடப்பாவிகளா! முழுசாய் இருந்ததை எல்லாம் கிழித்துக் கோவணத் துணிகளாய் ஆக்கி விட்டீர்களே; புத்தி கெட்டவர்களை நம்பி இந்த வேலையைச் செய்யச் சொன்னேனே!” என்று புலம்பியபடி அவர்களை விரட்டி அடித்தார். “உம்… நம் தொழில் திறமையை யாருமே புரிந்து கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே!” என்று வருத்தப்பட்டு மடத்துக்குத் திரும்பினார்கள் அந்த சீடர்கள்.

பரமார்த்த குரு கதைகள் – தாடி சிறுத்தாலும் தொப்பை குறையாது

திடீரென்று பரமார்த்தரின் படுக்கை அறை தீப்பிடித்து எரிந்து போனது. அத்துடன் குருவின் தாடியும் கொஞ்சம் பொசுங்கி விட்டது! அதைக் கண்டு சீடர்கள் ஐவரும் கவலையுடன் இருந்தனர்.

குருதேவா! உங்கள் மூன்றடி நீளமுள்ள தாடி, இப்படிக் குறுந்தாடியாக ஆகிவிட்டதே! என்று அழுதான், மட்டி.

போனால் போகட்டும். இதற்காகக் கவலைப் படாதீர்கள். மீசை குறைந்தாலும் வீரம் குறையாது. தாடி குறைந்தாலும் தொப்பை குறையாது, என்ற பழமொழி உங்களுக்குத் தெரியாதா? இதோ என் தொப்பை அப்படியே இருக்கிறது பாருங்கள், என்றார், பரமார்த்தர்.

அதைக் கேட்டு சீடர்கள் மகிழ்ந்தனர்.

குருவே! இப்படியே இருந்தால் வயிற்றைக் கவனிப்பது எப்படி? எனக் கேட்டான் மடையன்.

குருநாதா! நேற்று அரசரின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. அப்போது, உடல் ஊனம் உள்ளவர்களுக்கு வேலைதரும் திட்டம் ஒன்றை அறிவித்தார்கள். அதனால் எப்படியாவது நாங்கள் உடல் ஊனம் உள்ளவர்கள் மாதிரி நடித்துச் சம்பாதித்து வருகிறோம், என்றான், முட்டாள்.

சரி. எல்லோரும் ஒன்றாகப் போனால்தான் தொல்லை வருகிறது. அதனால் தனித்தனியே போய் வாருங்கள். ஊமை மாதிரியும், செவிடு மாதிரியும், குருடாகவும், நொண்டியாகவும் நடியுங்கள். மண்டு மட்டும் எனக்குத் துணையாக இங்கேயே இருக்கட்டும், என்று கூறி, தம் தொப்பையில் வழிந்த வியர்வையைத் தொட்டு வீரத் திலகம் இட்டு அனுப்பினார், குரு.

படைத் தளபதியிடம் சென்ற மட்டி, ஏதாவது வேலை தரும்படி கேட்டான்.

நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அரசரிடம் சொல்லி விட்டு வா, என்றார், தளபதி.

செவிடனாக நடித்தால் வேலை கிடைக்கும் என்று நினைத்த மட்டி, என்ன? புடலங்காயா? நான் பார்த்தது இல்லையே! என்றான்.

தளபதி மறுபடி ரகசியத்தைச் சொன்னார்.

ஓகோ! மன்னருக்கு ஒரே ஒரு மூக்குதான் இருக்கிறதா? தெரியுமே! என்றான், மட்டி.

தலையில் அடித்துக் கொண்ட தளபதி, இந்தச் செவிட்டுப் பயலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று முணுமுணுத்தார்.

அதைக் கேட்ட மட்டிக்குக் கோபம் வந்தது. யார் செவிடன்? நீ செவிடன்! உங்க ராஜா செவிடன்! அவங்க தாத்தா செவிடன்! என்று திட்டினான்.

அவ்வளவுதான். அடுத்த நிமிடம், மட்டியின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுங்கள், என்று கட்டளையிட்டார், தளபதி.

பரமார்த்த குரு கதைகள் – தவளைக் குட்டிச் சீடன்

முட்டாளும் மூடனும் தவிர பரமார்த்த குருவும் மற்ற சீடர்களும் ராஜ வீதியில் காத்திருந்தனர். அந்த நாட்டு மன்னன் தேரில் ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தான்.

தங்கள் அருகே தேர் வந்ததும், கையில் தயாராக வைத்திருந்த செத்துப் போன தவளையையும், ஓணானையும் தேரின் சக்கத்தில் போட்டான், மட்டி.

அதன் மீது சக்கரம் ஏறி நகர்ந்ததும், நசுங்கிப் போன தவளையையும் ஓணானையும் தூக்கி வந்தான், மடையன்.

பரமார்த்தர், தேருக்கு முன்னால் சென்று, ஐயோ! என் சீடர்களைக் கொன்று விட்டாயே! இது தான் நீ குடிமக்களைக் காப்பாற்றும் முறையா? என்று கூச்சலிட்டார்.

மட்டியும் மடையனும் சேர்ந்து கொண்டு, ஐயோ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அதற்குள் இப்படி நசுங்கிக் கூழ் கூழாக ஆகிவிட்டீர்களே! என்று ஒப்பாரி வைத்தனர்.

அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. யாரைக் கொன்றேன்? எனக் கேட்டான், மன்னன்.

என் அருமையான சீடர்களான முட்டாளையும், மூடனையும் நீதான் தேர் ஏற்றிக் கொன்று விட்டாய்! என்று குற்றம் சாட்டினார், குரு.

அப்படியானால் எங்கே அவர்கள் உடல்கள்? என்று மந்திரி கேட்டார்.

இதோ இவைதான் என்றபடி, நசுங்கிப் போன தவளையையும், ஓணானையும் காட்டினார், பரமார்த்தர்!

எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

இது தவளை அல்லவா? இந்தக் தவளையா உன் சீடன்? எனக் கேட்டான், மன்னன்.

இது ஓணான்! இதுவா உன் சீடன்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என்று கோபமாகக் கேட்டார், ஓர் அமைச்சர்.

அரசே! நான் எதற்கு உன்னை ஏமாற்ற வேண்டும்? உண்மையாகவே இந்தத் தவளையும் ஓணானும் என் சீடர்கள்தாம். நம்மைப் போல மனிதர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டார்கள்! என்று பொய் கூறினார், பரமார்த்தர்.

தவளைதான் என்றாலும் மனிதர்களைப் போலவே பேசுவான்! ஓணான்தான் என்றாலும் தினம் நூறு பொற்காசு சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுப்பான்! என்று புளுகினான் மண்டு.

இதைக் கேட்டு, அரசனுக்கும் மந்திரிகளுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது.

சரி… நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார், அமைச்சர்.

என்ன செய்வதா? இவர்களை வைத்துத்தானே எங்கள் பிழைப்பே நடந்தது. அதனால், மறுபடியும் இதே தவளைக்கும் ஓணானுக்கும் உயிர் கொடுங்கள். இல்லாவிட்டால், தினம் நூறு பொற்காசுகளை நீங்கள் தான் தர வேண்டும், என்றார் பரமார்த்தர்.

வேறு வழி தெரியாத மன்னன், மறுபடியும் உயிர் கொடுக்க முடியாது. அதனால் தினம் நூறு பொற்காசு தந்து விடுகிறேன், என்று ஒப்புக் கொண்டான்.

மடத்துக்கு வந்ததும், செத்துப் போன தவளையையும் ஓணானையும் காட்டி ராஜாவையே ஏமாற்றி விட்டோம்! இனிமேல் தினமும் நூறு பொற்காசு கிடைக்கப் போகிறது, என்று குதித்தார்கள்.

முட்டாளையும் மூடனையும் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் செத்து விட்டதாகக் கூறி விட்டோம். ஆகையால் இனிமேல் மடத்தை விட்டு வெளியே போகவே கூடாது. தப்பித் தவறி வெளியே போனீர்களானால் மாட்டிக் கொள்வோம். ஜாக்கிரதை! என்று எச்சரிக்கை செய்தார், குரு.

ஒரே வாரம் கழிந்தது. இரவு நேரத்தில் எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

முட்டாளும் மூடனும் மட்டும் விழித்துக் கொண்டனர். சோ! ஊர் சுற்றி ஒரு வாரம் ஆகிறது! யாருக்கும் தெரியாமல் ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து விடலாம்! என்று ஆசைப்பட்டனர்.

கையில் கொள்ளிக் கட்டையுடன் இருவரும் வெளியே புறப்பட்டனர். இரண்டு தெரு சுற்றுவதற்குள், இரவுக் காவலர்கள் கண்ணில் பட்டு விட்டனர்!

உடனே இருவரையும் துரத்திப் பிடித்தனர். பொழுது விடிந்ததும், மற்ற சீடர்களும் குருவும் கைது செய்யப்பட்டனர்.

ஆளை உயிரோடு வைத்துக் கொண்டே செத்து விட்டதாக ஏமாற்றினீர்கள். அதனால், இப்போது உண்மையாகவே இவர்கள் இருவரையும் தேர் ஏற்றிச் சாகடிக்கப் போகிறேன்! என்றான், மன்னன்.

அதைக் கேட்ட குருவும் சீடர்களும், அலறினார்கள். ஐயோ, மன்னா! தெரியாமல் செய்து விட்டோம். உங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். மன்னித்து விட்டு விடுங்கள், என்று அரசனின் கால்களில் விழுந்தார்.

சீடர்களும் கீழே விழுந்து வேண்டினார்கள்.
மன்னனும் போனால் போகிறது என்று மன்னித்து அனைவரையும் விடுதலை செய்தான்!

பரமார்த்த குரு கதைகள் – ஓலைச் சுவடி பத்திரிகை

“குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?” என்று கேட்டான் முட்டாள்.

“பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?” என்றார் பரமார்த்தர்.

“தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்” என்றான் மூடன்.

“அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு’ என்று பெயர் வைக்கலாம்” என்றார் குரு.

“பெயருக்குக் கீழே “கெட்டிக்காரன் புளுகு – எட்டு நாள் உண்மை!” என்று போடலாம்” என்றான் மண்டு.

அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு’ நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர்.

இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான்.

அதைக் கண்ட மட்டி, “அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?” என்று கேட்டான்.

“திருடுவதற்காக இருக்கும்” என்றான் மடையன்.

“ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?” என்று சந்தேகம் கொண்டான், மட்டி.

“எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்” என்று விளக்கினான், மடையன்

“அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!” என்றான் மட்டி.

மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள்.

வேலியே பயிரை மேய்கிறது!

பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!!

இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார்.

இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள்.

“தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்” என்றான் மண்டு.

“மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்” என்று கத்தினான் மூடன்.

உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள்.

அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா!

அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார்.

ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன?

இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு!

இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள்.

“நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!” என்றான் முட்டாள்.

“என்ன எழுதுவது?” எனக் கேட்டான் மூடன்.

சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள்.

‘மண்ணில் புரளுவது எப்படி?’ என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி!

‘தொப்பை வளர்ப்பது எப்படி?’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்’ பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.

‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை’ பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!’

இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர்.

எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், “எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார்.

பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள்.

‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!’ என்று கத்தினான் முட்டாள்.

சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை’ வாசிக்கப்பட்டது.

“பரமார்த்தரோ, “இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு’ என்று தானே போட்டிருக்கிறோம்” என்று கூறினார்.

அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

பரமார்த்த குரு கதைகள் – சொர்க்கம் என்ற சோற்று மூட்டை

பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, “அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!” என்று கூறினான்.

அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. “அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!” என்றான் புளுகன்.

“அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?” எனக் கேட்டான், மடையன்.

“சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?” என்று விசாரித்தான் முட்டாள்.

“உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்” என்றான் புளுகன்.

“அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான் மண்டு.

“ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!” என்றான் புளுகன்.

“பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்….. அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன்.

“ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?” என்று மட்டி கேட்டதும், “ஓ நாளைக்கே போனாலும் போவேன்!” என்றான் புளுகன்.

“அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்.”

“புளுகனோ மகிழ்ச்சியோடு “சரி” என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர்.

“போகும் வழியில் சாப்பிடுங்கள்” என்று புளி சாதம் தந்தான் மட்டி.

எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான்.

வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். “குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்” என்று பெருமையோடு சொன்னான் மண்டு.

உங்கள் “குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!” என்றான் மூடன்.

“சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!” என்று முட்டாள் சொன்னான்.

பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், “அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” எனக் குதித்தார்.

“நாங்கள் நல்லது தானே செய்தோம்?” உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?” என்று மட்டி கேட்டான்.

“முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!” என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் ‘திரு திரு’ என்று விழித்தார்கள்.

“சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!” என்றார் பரமார்த்தர்.

அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள்.

“மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!” என்று புளுகினார்.

“ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?” என்று மட்டி கேட்டான்.

மடையனோ, “அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!” என்றான்.

“நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!” என்று புளுகினான் முட்டாள்.

“அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்” என்று தள்ளி விட்டான், மண்டு.

“எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!” என்றார் பரமார்த்தர்.

அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது.

“யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!” என்று கட்டளை இட்டான்.

“அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!” என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு.

அரசனோ, “யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!” என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான்.

“ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!” என்று குருவும் சீடர்களும் அழுதனர்.

பரமார்த்த குரு கதைகள் – நரபலி சாமியார்

பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள்.

அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்!

“குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?” என்று மட்டி கேட்டான்.

“நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னான், முட்டாள்.

குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள்.

“குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்” என்றான் மூடன்.

“அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்” என்றார் பரமார்த்தர்.

“நரபலியா? ஐயையோ!” என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள்.

“சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை” என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர்.

“அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?” என்று கேட்டான் மண்டு.

“வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?” என்றார் பரமார்த்தர்.

அவ்வளவுதான்!

“ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?” என்று அழ ஆரம்பித்தான் முட்டாள்.

“ஐயையோ நான் மாட்டேன்” என்று மூடனும் மூக்கால் அழுதான்.

“குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்” என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர்.

பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார்.

“சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்” என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர்.

மறுநாள், சீடர்கள் அனைவரும் “எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்” என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்.

அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான்.

“நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்” என்று ஆணையிட்டான்.

நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள்.

ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார்.

மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். “ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி” என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர்.

சீடர்களும் ‘தடால்’ என்று விழுந்து கும்பிட்டார்கள்.

நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது.

அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள்.

“சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!” என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர்.

சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர்.

“ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!” என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர்.

உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர்.

அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது.

அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

“சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்” என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள்.

மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?” என்றார் பரமார்த்தர்.

“நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்” என்றான் மன்னன்.

“நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்” என்று சொன்னார் பரமார்த்தர்.

“அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன்.

ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே” என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – காணாமல் போனது யார்?

பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார்.

ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறதா? தூங்கத் துவங்கிவிட்டதா? என்று பார்த்து வருமாறு அனுப்பினார்.

மட்டி, தன் குருவின் கட்டளையை ஏற்று கொள்ளிக் கட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றை நெருங்கினான்.

ஆற்று நீர் தன் மேல் பட்டுவிடாத படி, எட்டி நின்று கொண்டு, கொள்ளிக்கட்டையை நீரில் அமிழ்த்தினான். அது சுரீரென்று ஒலியுடன் அணைந்து விட்டது.

அந்த ஒலியைக் கேட்டதும் மட்டி பதறிப் போனான். வேகமாகக் குருவை நோக்கி ஓடி வந்தான்.

குருவே ஆறு விழித்துக் கொண்டிருக்கிறது. கொள்ளிக் கட்டையால் அதைக் தொட்டவுடன் சீறி விட்டது. நல்ல வேளை தப்பியோடி வந்து விட்டேன் என்று பயந்து கொண்டே கூறினான்.

அதனைக் கேட்ட குரு, “நீ போய்ச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று. ஆறு விழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் ஆற்றைக் கடந்தால் ஆற்றின் பொல்லாத கோபத்துக்குள்ளாகியிருப்போம். அது நன்றாகத் தூங்கும் வரை பொறுத்திருந்து, அதன்பின் பயணத்தைத் தொடர்வோம்” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

சீடர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறிப் பொழுதைப் போக்கிக்
கொண்டிருந்தனர். பொழுது வெளுக்க ஆரம்பித்தது. அயர்ந்து தூங்கிய குரு திடுக்கிட்டு எழுந்தார். மடையனை அழைத்தார். “மடையா! பொழுது, புலர ஆரம்பித்துவிட்டது. இப்போதாவது ஆறு தூங்குகிறதா, விழித்துக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா” என்று கூறினார்.

உடனே மடையன், மட்டி கொண்டு வந்த போட்ட அணைந்து போன கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றை நெருங்கினான். கட்டையை நீருக்குள் விட்டான். எந்தவித ஒலியும் ஏற்படவில்லை. அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேகமாக ஓடி வந்தான்.

“குரு! இப்போது ஆறு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறது” என்று கூறினான்.

“அப்படியா, இதுதான் சரியான வேளை யாரும் எந்த ஒலியும் எழுப்பாமல் மிகவுவம் அமைதியாக வாருங்கள். சப்தம் போட்டால் ஆறு விழித்துக் கொள்ளும்” என்று தன் சீடர்களை எச்சரித்து விட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குரு ஆற்றை நோக்கி நடக்க, சீடர்களும் பின் தொடாந்தனர். பயந்து கொண்டே ஆற்றைக் கடந்து, ஒரு வழியாக அக்கரை வந்து சேர்ந்தனர்.

தன்னுடைய சீடர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்களா என்று சரிபார்க்க குரு எண்ணினார். தனது சீடர்களில் ஒருவனை அழைத்து, “சீடனே! என்னையும் சேர்த்து நாம் ஆறு பேர். நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோமா? நம்மில் யாரையாவது அந்தப் பொல்லாத ஆறு விழுங்கிவிட்டதா? எனச் சரிபார்த்து எண்ணிக்கூறு?” என்று கூறினார்.

அபிஷ்டு தன் முன்னால் நிற்பவர்களை ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை மட்டும் எண்ணி, “குருவே, ஐந்து பேர்தான் உள்ளோம்” என்ற கூறினான்.

ஆறு பேரில் ஒருவரைக் காணோம் என்று குரு திடுக்கிட்டுப் போனார். தங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது என்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதனால், குரு மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு மற்றொரு சீடனிடம் கூறினார். அவனும் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் எண்ணி விட்டு, “குருவே, மோசம் போனோம். அபிஷ்டு எண்ணியது சரியே! நம்மில் ஒருவரைக் காணோம். ஐவர்தான் உள்ளோம் என்று அலறினான்.

இப்படியே மற்ற சீடர்களும், குருவும் தங்களைச் சேர்க்காமலேயே எண்ணி ஐவர்தான் என்று முடிவு செய்தனர். தங்களில் ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் அழுதுகொண்டிருந்தனர்.

குருவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் சீடர்களில் ஒருவரை அபகரித்துக் கொண்ட ஆற்றின் மீது கடுங் கோபம் கொண்டார். அதனைப் பலவாறு பழித்துக் கூறி சாபமிட்டார்.

குருவும் சீடர்களும் துயரம் தாங்காமல் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆற்றோடு போனவன் தங்களில் யார் என்று அறிந்து கொள்ளாமலேயே துக்கம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த நேரத்தில் வழிப்போக்கன் ஒருவன் குருவும், சீடர்களும் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அனுதாபம் கொண்டான். காரணம் என்ன என்று அவர்களிடம் விசாரித்தான். சீடர்கள் நடந்ததைக் கூறி மேலும் அழுதனர். வழிப் போக்கன் அவர்களை எண்ணிப் பார்த்தான். அவர்களின் மடமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

“அன்பர்களே! நடந்தது நடந்ததாக இருக்கட்டும். போனவர்களை மீட்கும் மந்திர சக்தி என்னிடம் உண்டு. உங்களில் ஆறு விழுங்கிய நபரை மீட்டுத் தருகிறேன். அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீர்கள்?” என்று வழிப்போக்கன் கேட்டான். “ஐயா, எங்களில் காணாமல் போனவரைத் தாங்கள் மீட்டுக் கொடுத்தால் எங்களிடம் உள்ள பணம் முழுவதையும் தந்து விடுகிறோம். தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்” என்று, குரு நெகிழ்ந்து கூறினார்.

வழிப்போக்கன் தன் கையில் ஒரு குறுந்தடி வைத்திருந்தான். அதனை எடுத்தவாறு, “இந்தக் கோலில்தான் மந்திர சக்தி இருக்கிறது. நீங்கள் வரிசையாக நில்லுங்கள். நான் இந்தத் தடியால் முதலில் நிற்பவர் முதுகில் தட்டுவேன். அவர் ‘ஒன்று’ என்று கூறிவிட்டுத் தன் பெயரைக் கூறவேண்டும்” என்று கூறினான்.

வழிப்போக்கன் கூறியவாறே, குரு வரிசையில் முதலிலும் அதனையடுத்து சீடர்களும் வரிசையாக நின்றனர். முதலில் குருவின் முதுகில் கம்பால் தட்டினான். அவர், “ஒன்று. என் பெயர் பரமார்த்த குரு” என்று கூறினார். அடுத்தவனைத் தட்டியதும் ‘இரண்டு’ என்று கூறித் தன் பெயரையும் சொன்னான். இவ்வாறே மற்றவர்களும் முதுகில் தட்டியதும் தங்கள் பெயருடன் எண்ணிக்கையையும் கூறினர். கடைசியாக நின்றவன் “ஆறு, என் பெயர் மூடம்” என்ற கூறியதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. காணாமல் போனவன் கிடைத்து விட்டான், இப்போது ஆறு பேர் உள்ளோம் என்று கூறி ஆனந்தக் கூத்தாடினர்.

தங்களில் ஒருவனை மீட்டுத் தந்த வழிபோக்கனின் அதிசய ஆற்றலை எண்ணி வியந்தனர். அவனைப் போற்றிப் புகழ்ந்து, தங்களிடமிருந்த பணம் முழுவதையும் தந்தனர்.

அதிருஷ்டத்தை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறினான் போக்கன்.

பரமார்த்த குரு கதைகள் – மருத்துவத் தொழில்

“குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள்.
“அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார்.

“பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன்.

“அப்படியே செய்வோம்” என்றார் குரு.

“மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு.

“மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி.

பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.

காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான்.

“அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!” என்றார் பரமார்த்தர்.

“அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள்.

“இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு.

உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.

நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள்.

“இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள்.

கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள்.

சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான்.

“சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர்.

முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.

கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான்.

அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.

வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.

“பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்

“வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர்.

சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!

“இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர்

சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.

“உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர்

யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான்.

“ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!” என்று கட்டளை இட்டார்.

குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.

“என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார்.

“வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன்.

கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.

அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.

பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்..

பரமார்த்த குரு கதைகள் – நரகலோகத்தில் பரமார்த்தர்

மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர்.

மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர்.

“இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!” என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள்

அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள்.

“செத்துப்போன நம் குரு, எங்கே போயிருப்பார்?” என்றான் மட்டி

“எமலோகத்துக்குப் போனால் பார்க்கலாம்”

“ஒரு வேளை, சொர்க்கத்துக்குப் போயிருப்பாரோ?”

“நம் குரு நிறைய பாவம் செய்தவர். அதனால் நரகத்துக்குத் தான் போயிருப்பார்”

முட்டாளும் மூடனும் இப்படிப் பேசிக் கொண்டு இருந்தனர்.

“நாமும் நரகத்துக்குப் போனால் நம் குருவைப் பார்க்கலாமே!” என்று யோசனை சொன்னான், மண்டு.

“நம் குருவை மீண்டும் பார்ப்பதற்கு இது தான் ஒரே வழி!” என்று குதித்தான் மடையன்.

உடனே மண்டுவும் மூடனும் கைகோர்த்தபடி, தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்தனர்.

முட்டாளோ, கையில் இருந்த கொள்ளிக் கட்டையால் தலையில் நெருப்பு வைத்துக் கொண்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம், பரமார்த்த குருவின் அருமைச் சீடர்கள் ஐந்து பேரும் உயிரை விட்டனர்.

எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயமாக இருந்தது. சீடர்களுக்கோ, ஒன்றுமே புரியவில்லை.

“நாம் தான் செத்து விட்டோமே, மறுபடியும் இப்போது எங்கே இருக்கிறோம்?” என்று கேட்டான் மட்டி.

அப்போது, “அதோ பாருங்கள், நரலோகம்!” என்று கத்தினான் மடையன்.

நரகத்திற்கு வந்து சேர்ந்து விட்டதை உணர்ந்த சீடர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

“வாருங்கள், நம் குருவைத் தேடிப் பார்ப்போம்!” என்று ஒவ்வொரு இடமாகப் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றார்கள்.

ஓரிடத்தில் பெரிய பெரிய செக்குகள் சுழன்று கொண்டு இருந்தன. பாவம் செய்த சிலரை அதனுள் போட்டு நசுக்கிக் கொண்டு இருந்தனர்.

அதைப் பார்த்த மட்டியும் மடையனும், “நம் குரு, இதன் உள்ளே இருந்தாலும் இருப்பார்!” என்று சொன்னபடி செக்குக்குள் தலையை விட்டார்கள்.

அவ்வளவுதான்! “ஐயோ! ஐயையோ!” என்று தலை நசுங்கி, ரத்தம் ஒழுகக் கீழே விழுந்தனர்.

இன்னொரு இடத்தில், உயரமான கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டு இருந்தது.

அதைப் பார்த்த முட்டாள், “நம் குருவை இந்தக் கொப்பரையில் தான் போட்டிருப்பார்கள்!” என்று கூறிக்கொண்டே, கொப்பரைக்குள் எகிறிக் குதித்தான்!

முட்டாள் விழுவதைக் கண்ட மூடன், தானும் ஓடிப் போய் ஒரு கொப்பரையில் குதித்தான்!

கொதிக்கும் எண்ணெய் உடல் முழுவதும் பட்டதும், லபோ திபோ என அலறியவாறு இருவரும் சுருண்டு விழுந்தனர்.

மண்டு மட்டும் பல இடங்களில் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றான்.

நரக லோகத்தின் சனி மூலையில் ஏராளமான விறகுக் கட்டைகளை வைத்துத் திகு திகு என்று எரியும் அடுப்பைக் கண்டான்.

நம் குரு இந்த நெருப்புக்கு உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தாலும் இருப்பார் என்றபடி அதற்குள் நுழைந்தான்.

அடுத்த கணம், “ஆ, நெருப்பு! அம்மாடி நெருப்பு!” என்று கதறியவாறு விழுந்து புரண்டான்.

இதே சமயத்தில், நரக லோகத்தில் கட்டப்பட்டு இருந்த விஷ மண்டலத்தில் பரமார்த்தர் அலறிக் கொண்டு இருந்தார்.

அவரைச் சுற்றிலும் ராட்சத தேள்களும், பாம்புகளும், நண்டுகளும் படையெடுத்து வந்தன.

“ஐயோ, தேளே! நீ வாழ்க! உன் கொடுக்கு வாழ்க! என்னை மட்டும் கொட்டாதே!” என்று கும்பிட்டார்.

அதற்குள் ஐந்து சீடர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

“ஐயோ! பாம்பு, பாம்பு!” என்று அலறியபடி திண்ணை மேலிருந்து தடால் என்று கீழே விழுந்தார், பரமார்த்தர்.

சீடர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்தார்கள்.

அப்பொழுதுதான் பரமார்த்தர் சுற்றும் முற்றும் பார்த்தார். “நல்ல காலம்! மடத்தில் தான் இருக்கிறேன். நரக லோகத்தில் மாட்டிக் கொண்டது போல வெறும் கனவுதான் கண்டிருக்கிறேன்!” என்று மகிழ்வுடன் தொப்பையைத் தடவிக் கொண்டார்.

சீடர்களும் மகிழ்ச்சியுடன் குதித்தார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – வெள்ளை யானை பறக்கிறது

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.

குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.

குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள்.

உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!

கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.

குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது… வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.

ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.

ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.

ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.

பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.

அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.

ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.

பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.

அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.

கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.

பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.

குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.

ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.

இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.

குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.

எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.

மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.

திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.

தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.

ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.

தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.

இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.

உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.

இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!

சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது – ஊகும் – கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை

பரமார்த்த குரு கதைகள் – தோட்டத்தில் மேயுது

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.

செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு! போச்சு!” என்று அலறினான்.

பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.

மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.

“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர்.

செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார்.

“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!” என்றான் முட்டாள்.

“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.

“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.

அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. “ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!” என்றான்.

இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார்.

“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!” என்று சொன்னான் மட்டி

“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.

வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன.

“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர்.

சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.

குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. “குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான் மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!” என்றபடி குதித்தான் மட்டி

மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.

இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது.

மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.

மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன்.

“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள்.

பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.

பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.

“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான்.

“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்” என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – பரமார்த்தரின் பக்தி

பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான்.

பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.

“குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே… அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு.

நல்லது! அப்படியே செய்வோம்” என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர்.

தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!” என்றான், மூடன்.

அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர்.

உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான்.

நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர்.

“மட்டியே! அவசரப்படுகிறாயே!” என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும்
மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.

அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. “அற்புதம், அற்புதம்” என்று குரு மகிழ்ந்தார்.

அப்போது மடையன் மட்டும் அலறினான்

“என்ன? என்ன?” என்று பதறினார் குரு.

“குளிர்கிறதே” என்றான் மடையன்.

“அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்” என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.

குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர்.

அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர்.

அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது.

அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, “குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்” என்று மூச்சு வாங்கக் கூறினான்.

“அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!” என்ற பரமார்த்தர், “எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்” என்றபடி இறங்கினார்.

எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது.

அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், “மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!” என்று கோபத்துடன் திட்டினார்.

வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள்.

அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர்.

ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், “அதோ…அதோ.. பிடியுங்கள்” என்று கத்தினான்.

பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, “அரசே! மந்திரியே! நீங்களா?!” என்று வியந்தனர்.

“எல்லோரும் அரசர் காலில் விழுந்து, “எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்” என்று நடுங்கியபடி கூறினர்.

பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர்.

உடனே அரசர், “பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!” என்று கூறினார்.

மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர்.

குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

பரமார்த்த குரு கதைகள் – பூவரசம் மரமே புத்திகொடு

மரத்தடியில், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்துக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்து எழுந்து, “சீடர்களே! புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததாம். அதுபோல் இப்போது எனக்கு இந்த பூவரசம் மரத்தடியில் புத்தி பிறந்து விட்டது!” என்று மகிழ்ச்சியுடன் கத்தினார்.

அதைக் கேட்ட சீடர்கள், “புத்தருக்கு ஒரு போதி; எங்கள் பரமார்த்தருக்கு ஒரு பூவரசம்! புத்தி கொடுத்த மரமே, நீ வாழ்க!” என்று அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கினார்கள்.

“சீடர்களே! நாம் யாருடனாவது கூட்டு சேர்ந்து பயிர் வைப்போம்; கொள்ளை லாபம் அடிப்போம்!” என்றார் குரு.

பரமார்த்தரின் யோசனையைக் கேள்விப்பட்ட ஒருவன், அவர்களுடன் கூட்டாகப் பயிர் செய்வதற்கு ஒப்புக் கொண்டான். எப்படியும் குருவும், சீடர்களும் ஏமாந்து விடுவார்கள் என்று நம்பினான்.

“கூட்டு வாணிகம் என்பதால், மண்ணுக்கு மேலே விளைவதை ஒருவரும், பூமிக்குக் கீழே கிடப்பதை இன்னொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் லாபம் சமமாக இருக்கும். உங்களுக்குப் பூமிக்குக் கீழே விளைவது வேண்டுமா? மேலே கிடைப்பது வேண்டுமா?” என்று கேட்டான், கூட்டாளி.

குருவும் சீடர்களும் தனியாகச் சென்று யோசித்தார்கள். “குருவே! பூமிக்கு மேலே இருப்பது வேண்டாம்! அதை யார் காவல் காப்பது? பூமிக்கு அடியில் இருப்பதையே எடுத்துக் கொள்வோம். எல்லாம் பத்திரமாக இருக்கும்!” என்றனர் சீடர்கள்.

சீடர்கள் பேச்சை நம்பிய பரமார்த்தரும், “பூமிக்குக் கீழே இருப்பது எல்லாம் எங்களுக்கே!” என்று கூறி விட்டார்.

ஏமாற்ற நினைத்த கூட்டாளியோ, சோளம், கம்பு, கேழ்வரகு என்று மண்ணுக்கு மேலே கிடைப்பவையாகப் பயிரிட்டான்!

செடிகள் நன்றாகச் செழித்து வளர்வதைக் கண்ட பரமார்த்தர், “பலே! மண்ணுக்கு மேலேயே இவ்வளவு செழிப்பாக இருந்தால், அடியில் இன்னும் வளமாகக் காய்க்குமே! இந்தத் தடவை நமக்கு நல்ல லாபம் நிச்சயமாகக் கிடைக்கப் போகிறது!” என்று மகிழ்ந்தார்.

சீடர்களும் நம் கூட்டாளியும் நன்றாக ஏமாந்து போனான். நம்முடைய திட்டம் அவனுக்குப் புரியவில்லை! என்று நினைத்தனர்.

அறுவடைக் காலம் வந்தது. குருவையும் சீடர்களையும் அழைத்து வந்த கூட்டாளி, “இதோ பாருங்கள்! பேசிய பேச்சை மீறக்கூடாது. பூமிக்கு அடியில் இருப்பதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மேலே இருப்பதை மட்டும் நான் கொண்டு போகிறேன்” என்று கூறினான்.

அவன் எல்லாவற்றையும் அறுத்துச் சென்ற பிறகு, குருவும் சீடர்களும் வெறும் மண்ணைக் கிளற ஆரம்பித்தார்கள்.

எங்கு தோண்டினாலும் வெறும் வேர் மட்டுமே இருந்தது.

“குருவே! மோசம் போனோம்!” என்று அலறினான் மட்டி.

“ஏதோ மாய வேலை நடந்து விட்டது!” என்று அழுதான் மடையன்.

“குருவே! பாதாள உலகத்தில் இருப்பவர்கள் தான் எல்லாவற்றையும் அடியிலிருந்தே திருடிக் கொண்டு போய் விட்டார்கள்!” என்றான் முட்டாள்.

“இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம். எல்லாம் பாழாகி விட்டதே!” என்று வருத்தப்பட்டார், பரமார்த்தர்.

“குருதேவா! அடுத்த முறை பயிர் செய்யும் போது மேலே இருப்பதை நாம் எடுத்துக் கொள்வோம். நாம் ஏமாந்தது போல அவனும் ஏமாற வேண்டும்!” என்றான் மூடன்.

அடுத்த முறை பயிர் செய்யும் காலம் வந்தது. இந்தத் தடவை மண்ணுக்கு மேலே இருப்பது எல்லாம் எங்களுக்கு!” என்று கூறிவிட்டனர், குருவும் சீடர்களும்.

மறுபடியும் ஏமாற்ற நினைத்த கூட்டாளி, இந்தத் தடவை வேர்க் கடலையும் மரவள்ளிக் கிழங்கும் பயிர் வைத்தான்.

குருவும் சீடர்களும் கடுமையாக உழைத்தார்கள். “குருவே! செடிகள் வளமாக வளர்கின்றன. கொள்ளை லாபம் கிடைக்கப் போகிறது!” என்றான் மண்டு. அறுவடை நேரம் வந்தது. “சீக்கிரம் மேலே இருப்பதை எல்லாம் கொண்டு போங்கள். நான் மண்ணை தோண்ட வேண்டும்” என்றான் ஏமாற்றுக்காரன்.

செடியில் ஒன்றுமே காய்க்காததைக் கண்ட சீடர்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டனர்.

“குருதேவா! இந்தத் தடவையும் மோசம் போய் விட்டோம்!” என்று கண்ணீர் விட்டான் மட்டி.

“இரவு பகலாகக் காவல் காத்தும் பயனில்லாமல் போச்சே!” என்றும் புலம்பினான் மடையன். இது ஏதோ சைத்தான் வேலையாகத்தான் இருக்கும்!” என்றான் முட்டாள்.

பரமார்த்தர், தனிமையில சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்! “சீடர்களே! இது சைத்தான் வேலையுமல்ல; சனீஸ்வரன் வேலையுமல்ல! எல்லாம் நான் செய்த தவறுதான்!” என்றார்.

“என்ன! நீங்கள் செய்த தவறா? என்ன அது?” என்று சீடர்கள் வியப்போடு கேட்டனர்.

“மரத்தடியில் படுத்துத் தூங்கியபோது, புத்தி வந்ததாகக் கூறினேன். அது தவறு. அந்த மரம் பூவரசம் மரம் இல்லை என்பது தான் நேற்று தான் தெரிந்தது. வேறு ஏதோ ஒரு மரத்தடியில் மாறிப் போய்த் தவறுதலாகத் தூங்கி விட்டேன்! வாருங்கள், உண்மையாக பூவரசம் மரத்தடிக்குப் போவோம்!” என்றார்.

சீடர்களும், “பூவரசம் மரமே! புத்தி கொடு!” என்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – மாடு பிடிப்போம், நாடு ஆள்வோம்

அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது.

பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.

மறுநாள் – மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது.

“குருவே…குருவே..” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. “இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!”

“பந்தயமா? என்ன அது?” என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள்.

“காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்” என்று சொன்னான் மண்டு.

இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது.

“சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்…. நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை”

குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர்.

“குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!” என்று முட்டாள் சொன்னான்.

“நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்… மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!” என்று கனவு கண்டான் மூடன்.

“அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!” என்று சிரித்தான், மட்டி.

“ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். “இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்” என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான்.

“சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்… ஓடுங்கள்…” என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார்.

“குருவுக்கு ஜே” என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.

“ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.

இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் “போக்கு” காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.

மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது.

பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது.

“இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!” என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!” என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது.

வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள்.

“இது மாடா? அல்லது கழுதையா?” என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து “பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!” என்று பதறியவாறே சொன்னார்.

முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது.

“ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!” என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்.

“ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள்.

“கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!” என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது.

ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன.

பரமார்த்த குரு கதைகள் – அன்புள்ள ஆவியே

“ஙொய்ய்ய்…” என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.

“குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!” என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

“குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?” எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், “ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன” என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், “அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்” என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள்.

“உஸ்ஸ்… சத்தம் போடாதே… ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்” என்று மெல்லக் கூறினான், முட்டாள்.

“குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!” என்று குதித்தான், மூடன்.

“அதைவிட, அதற்குக் “கிச்சு கிச்சு” மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!” என்றான் மண்டு.

“சரி…சரி… முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்” என்று கட்டளை இட்டார் குரு.

மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

மண்டையில நெருப்புப் பட்டதும், “ஐயோ…” என்று கதறினான் மண்டு.

மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.

சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.

“குருவே” இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன” என்றான்.

“வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்” என்றான், மண்டு.

“இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்” என்றான் முட்டாள்.

முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.

இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.

“சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?” என்று பரமார்த்தர் கேட்டார்.

“குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. “மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்” என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.

“ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!” என்றான் மடையன்.

“குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!” என்றான் மூடன்.

“அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?” என்றான் மண்டு.

“செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!” என்றான் மூடன்.

“பலே மூடா!” என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

“திகு, திகு” என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.

அப்போதும் “சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!” என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!