முல்லாவின் கதைகள் – வெற்றியின் ரகசியம்

3.5/5 - (6 votes)

முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி ” முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரசகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

” உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது, ஆனால் அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே” என்று முல்லா சொன்னார்.

” முல்லா அவர்களே, என்னிடம் எந்த ரசகசியத்தைச் சொன்னாலும் உண்மையிலே அது என்னை விட்டுத் தாண்டாது தயவு செய்து அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள் ” என்று நண்பர் வேண்டிக் கொண்டார்.

” நான் என் வெற்றியின் ரகசியத்தை உங்களிடம் கூறினால் யாரிடமும் கூற மாட்டீர்களே”  என்றார் முல்லா.

” என்னை நம்பலாம் என்னிடமிருந்து ரகசியம் ஒரு போதும் வெளியே போகாது” என்று உறுதியாகக் கூறினார் நண்பர்.

” யாராவது உம்மிடம் வந்து ஏராளமான பணம் தருகிறேன் என்று ஆசை காட்டினால்?” என்று கேட்டார் முல்லா.

” கோடிப் பொன் தருவதாக ஆசை காட்டினால் கூட யாரிடமும் கூற மாட்டேன்” என்று திடமாகக் கூறினார் நண்பர்.

” அப்படியானால் நம்பி உங்களிடம் ரகசியத்தைக் கூறலாம். மறந்துகூட இதைப் பிறரிடம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்பலாம் இல்லையா?” என்று முல்லா கேட்டார்.

” என்னை முழு அளவுக்கு நம்பலாம்” என்று வாக்குறுதி கொடுக்கும் விதத்தில் நண்பர் சொன்னார்.

” உண்மையிலேயே நீர் ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்தான், என் வெற்றிக்கான ரகசியத்தைக் கூறினால் நான் ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் ஆகிவிடுவேன். அதனால் அன்பு நண்பரே என் ரகசியத்தை உமக்குக் கூறத் தயாராக இல்லை. நானும் என் ரகசியத்தைக்
காப்பாற்ற வேண்டுமல்லவா?” எனக் கூறியவாறு முல்லா அந்த இடத்தை விட்டு அகன்றார்.

Leave a comment