அரசர் கதைகள் – முல்லைக்குத் தேர்

4/5 - (2 votes)

இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர்.
பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார்.

தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது.
பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.
அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள்.

வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர்.

புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்?
அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார்.
அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார்.
பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார்.

பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார்.
அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள்.
புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார்.

பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர்.
கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே.
ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார்.

பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும்.

கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார்.
பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை.
கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார்.

கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர்.
கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார்.

புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்?
நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர்.
இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர்.

கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும்.
மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார்.

கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார்.
புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார்.
தேரோட்டி அங்கு வந்தான்.
அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான்.

தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி.
அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர்.
தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார்.
அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன.

அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார்.
சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார்.

வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான்.
தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி.
தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது.

தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம்.
அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது.
இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே!
ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது.
தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன்.
அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா?
அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே!
அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு.
அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான்.
எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா?
அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள்.
தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே.
அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா?
செலுத்து .

தேர் மெல்ல நகர்கிறது.
ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே.
இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே.
என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது?

தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது.
ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே!
நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே.
உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே.
சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே.

தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.
ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது.
இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி.
அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார்.
எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான்.
தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான்.
ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய்.
இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.

மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே.
என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.
பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார்.
தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.

குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர்.
குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.

முல்லைக் கொடியின் அருகே நின்றார்.
அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது.
அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.

எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார்.
இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள்.
அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.
மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார்.

1. பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே!
(புறநானூற்றுப் பாடல் 107, கபிலர் பாடியது.)

 

2.இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி
(புறநானூற்றுப் பாடல் 200, அடிகள் 9 முதல் 12 வரை, கபிலர் பாடியது.)

Leave a comment