Category: சிறுவர் கதைகள்

சிறுவர் கதைகள் – முட்டாள் வேலைக்காரன்
ஓர் ஊரில், வணிகன் ஒருவன் இருந்தான். பணக்காரனான அவன் சரியான கஞ்சன். எனவே, முட்டாளான ஒருவனை வேலைக்காரனாக வைத்திருந்தான். வணிகன்
ஒருநாள் அவனை அழைத்து, “”நம் வண்டியை எடுத்துக்கொண்டு பனங்காட்டுக்குப் போ… அங்கே பலர் பனைமரங்களை வெட்டி வண்டியில் ஏற்றிக்கொண்டு இருப்பர். அதேபோல் நீயும் மரங்களை வெட்டிக்கொண்டு வா!” என்றான்.
அப்படியே அவனும் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றான். அங்கே சிலர் மரங்களை வெட்டி வீழ்த்திக் கொண்டு இருந்தனர். சிலர், கீழே கிடக்கும் மரங்களை முயன்று வண்டியில் தூக்கிப் போட்டுக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்ததும் வேலைக்காரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“என்ன இவர்கள் எல்லாரும் முட்டாள்களாக இருக்கின்றனர். மரம் வெட்டும் போதே அதற்குக் கீழாக வண்டியை வைத்தால் மரம் அதில் சரியாக விழும். வீனாக ஒரு முறை பூமியில் கிடக்கும் மரத்தை வண்டியில் ஏற்ற வேண்டாமே!’ என்று நினைத்தான்.
“என் திட்டத்தை இவர்கள் கண் முன்னாலேயே செய்து காட்டி, நான் எத்தகைய அறிவாளி என்பதைப் புரிய வைப்பேன்’ என்ற எண்ணத்தில், தான் வெட்ட வேண்டிய பெரிய மரத்தை தேர்ந்தெடுத்தான்.
கோடாரியால் அந்தப் பனை மரத்தின் அடிப்பகுதியைப் பாதி அளவு வெட்டி முடித்தான். பிறகு, அந்த மரம் விழக்கூடிய இடத்திற்கு நேராக மாட்டுடன் வண்டியை நிறுத்தினான். மரம் வெட்டிக் கொண்டிருந்த மற்றவர்கள், “ஏன் இவன் இப்படிப் பைத்தியக்கார வேலை செய்கிறான்!’ என்று நினைத்தனர்.
சிறிது நேரத்தில் அந்த மரம், “சடசட’வென்ற சத்தத்துடன் வண்டியின் மீது வேகமாக விழுந்தது. அவ்வளவுதான், வண்டி தூள் தூளானது. கால் உடைந்து குற்றுயிரும் குலை உயிருமாக மாடு துடித்துக் கொண்டிருந்தது. இதைக்கண்டு அவன் திகைத்து விட்டான். தன் திட்டத்தில் என்ன குறை என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
“என் திட்டம் நல்ல திட்டம் தான். வண்டிக்குத்தான் வலிமை இல்லாமல் போய்விட்டது’ என்ற முடிவுடன் வீடு திரும்பினான். நடந்ததை அறிந்த வணிகன், முட்டாளாக இருக்கிறாயே! இப்படி செய்யலாமா? என்று வேலைக்காரனைத் திட்டினான்.
சில நாட்கள் சென்றன. திடீரென்று அந்த ஊரில் மண்ணெண்ணெய் பஞ்சம் வந்துவிட்டது.
“தன்னிடம் இருக்கும் இருபத்தைந்து பீப்பாய் எண்ணெயைப் பதுக்கி வைத்தால் நிறைய லாபம் கிடைக்கும்!’ என்று நினைத்தான் வணிகன். உடனே வேலைக்காரனை அழைத்து, “”கடையில் இருக்கும் மண்ணெண்ணெய் எல்லாவற்றையும் இன்றிரவு நம் தோட்டத்தில் பள்ளம் தோண்டிப் புதைத்துவிடு. யாருக்கும் தெரியக் கூடாது!” என்றான்.
வணிகன் சொன்னபடியே, நள்ளிரவில் பெரிய பள்ளம் தோண்டினான் வேலைக்காரன். ஒவ்வொரு பீப்பாயாக உருட்டிச் சென்று அதிலுள்ள எண்ணெயைப் பள்ளத்தில் ஊற்றினான். இப்படியே எல்லாப் பீப்பாய்களில் உள்ள எண்ணெயையும் ஊற்றி முடித்தான்.
இப்போது அவன் உள்ளத்தில், “இந்தக் காலிப் பீப்பாய்களை என்ன செய்வது? இது குறித்து முதலாளி ஒன்று சொல்லவில்யலையே!’ என்ற சிந்தனை எழுந்தது.
“சரி, அவரையே கேட்டு விடுவோம்’ என்ற எண்ணத்தில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த வணிகனை எழுப்பினான்.

“”ஐயா! நீங்கள் சொன்னபடி மண்ணெண்ணெயைப் பள்ளம் தோண்டிப் புதைத்துவிட்டேன். காலி பீப்பாய்களை என்ன செய்வது என்று கேட்டான். வணிகனுக்குச் சிறிது சிறதாக உண்மை புலப்படத் தொடங்கியது. ஐயோ, “மண்ணெண்ணெய் எல்லாம் பேச்சே!’ என்று அலறிய வணிகன், அன்றே அவனை வேலையிலிருந்து நீக்கினான்.

சிறுவர் கதைகள் – அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டம்
இங்கிலாந்து நாட்டை அப்போது மன்னர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மூன்றாம் ஜார்ஜ்.
ஒருமுறை தன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் ஒழுங்காக வேலை செய்கிறார்களா, சோம்பேறிகளாக வாழ்கிறார்களா? என்று அறிய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதை அறிந்து கொள்ளும் பொருட்டு, திடீரென்று விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். எல்லா மக்களும் விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவிப்புச் செய்திருந்தார்.
விருந்துக்குக் கூட்டம் கூட்டமாக மக்கள் சென்ற வேளையில் மன்னர் மட்டும், மாறுவேடம் போட்டுக் கொண்டு நகரைச் சுற்றி வந்தார்.
அவர் ஒரு கிராமத்துக்குள் தம்முடைய குதிரையைச் செலுத்தி கொண்டு வந்து பார்த்தபோது, அக்கிராமத்தில் ஒருவருமே இல்லை. எல்லாரும் மன்னரின் விருந்துக்காக அரண்மனைக்குச் சென்றிருந்தனர்.
ஆனால், ஓரிடத்தில் ஒரேயொரு பெண் மட்டும் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தாள். இதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட மன்னர் அவளிடம் நெருங்கிச் சென்று, “”பெண்ணே, இந்தக் கிராமமே காலியாக இருக்கிறதே… இங்குள்ளவர்கள் என்னவானார்கள்?” என்று கேட்டார்.
அவளோ தன் வேலையிலேயே மும்முரமாக மூழ்கி இருந்த காரணத்தினால், தன் பார்வையைத் திருப்பாமலேயே சொன்னாள்.
“”உங்களுக்கு விஷயமே தெரியாதா? இன்று நம் மன்னரின் அரண்மனையில் திடீர் விருந்துக்கு ஏற்பாடாகி உள்ளது. அதில் மன்னர் பரிசு கொடுப்பார் என்றும் அறிவிப்பு செய்து இருந்தனர். ஆகவே, விருந்து சாப்பிடும் பொருட்டும், தங்களுக்கு ஏதாவது அதிர்ஷ்டவசமாகப் பரிசு கிடைக்காதா… என்ற நப்பாசையாலும் மக்கள் அங்கே சென்றிருக்கின்றனர்!” என்றாள்.
“”இவ்வளவு விபரங்களைத் தெரிந்து வைத்திருக்கக் கூடிய நீ, விருந்துக்குப் போக வில்லையா? அதிர்ஷ்டமிருந்தால் உனக்கும் மன்னரின் பரிசு கிடைக்குமில்லையா?” என்று கேட்டார்.
அந்தப் பெண் வேலையைச் செய்து கொண்டே சொன்னாள்.
“”ஐயா, எனக்கு அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை இல்லை. ஆனால், நான் செய்யும் இந்த வேலைக்குத் தக்க கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. மேலும், நான் விருந்துக்குப் போய்விட்டால், இன்றைய தினத்தில் செய்யும் வேலையை இழந்து விடுவேன். அதனால், கிடைக்கும் கூலியை இழந்து விடுவேன். எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் எனக்குண்டு. ஆகவேதான், நான் போக விரும்பவில்லை!” என்றாள்.
இதைக் கேட்ட மன்னர் மனமகிழ்ந்தார்.
“”பெண்ணே, என்னை நிமிர்ந்து பார். உன் சக மக்களிடம் நீ கூறு. நீங்கள் அதிர்ஷ்டத்தை விரும்பி மன்னரைப் போய்ப் பார்க்கச் சென்றீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால், வேலையை விட மனதின்றிக் கடுமையான வேலை செய்து கொண்டிருந்தேன். என் உழைப்பு அதிர்ஷ்டமாக மாறி, மன்னரையே இங்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டது. மன்னரே தேடி வந்து பரிசுகள் தந்தார் என்று கூறு,” என கூறி, ஒரு பணமூட்டையை அவள் கையில் தந்துவிட்டு சென்றார் மூன்றாம் ஜார்ஜ்.
கடுமையான உழைப்பு அதிர்ஷ்டத்தை அழைத்து வரும். அதிர்ஷ்டத்தைக் தேடிக் கொண்டு நாம் போகக் கூடாது. அதிர்ஷ்டம் நம்மைத் தேடிக்கொண்டு வர வேண்டும். அதுதான் உண்மையான அதிர்ஷ்டம்.
சிறுவர் கதைகள் – கடவுள் எங்கே

கடவுள் எங்கே

ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர்.
அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், “”எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்!” என்றார்.
“”ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான் ராஜேஷ்.
“”காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை,” என்றார் முடிதிருத்துபவர்.
ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார்.
முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார்.
அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார்.
அந்த ஆளைப் பார்த்தால், முடிதிருத்தும் கடையை மாதக் கணக்கில் எட்டிப் பார்க்காதவர் போலத் தோன்றியது. அவ்வளவு அடர்ந்தும், சடைபிடித்த முடியும் தாடியும் இருந்தன.
அப்போது முன்னால் வந்து போன ராஜேஷ் மீண்டும் கடைக்கு வந்தார்.
“”என்ன?” என்று கேட்டார் முடிதிருத்துபவர்.
“”ஒரு விஷயம்! முடிதிருத்துபவர் யாருமே இல்லை என்று சொல்லலாம்,” என்று வந்தேன்.
“”என்ன உளறுகிறீர்? இதோ! நான் இருக்கிறேன். நானும் ஒரு முடிதிருத்துபவன் தானே? அப்படி இருக்க முடிதிருத்துபவரே இல்லை என்று எப்படி நீங்கள் சொல்லலாம்?” என்று எரிச்சலாக கேட்டார் முடிதிருத்துபவர் .
“”இல்லை! முடிதிருத்துபவர் இருப்பது உண்மை என்றால் அதோ தெருவில் நிற்கிற அந்த ஆசாமி இப்படி அலங்கோலமான தலைமுடி, சிக்குப்பிடித்த தாடியுடன் இருப்பானேன்?” என்று கேட்டார் ராஜேஷ்.
“”ஓ! அதுவா? விஷயம் என்னவென்றால், அந்த ஆசாமி என்னிடம் வருவதில்லை!” என்றார் முடிதிருத்துபவர்.
“”சரியாகச் சொன்னீர்கள். அதுதான் விஷயம். கடவுளும் இருக்கவே செய்கிறார். ஆனால், என்ன நடக்கிறது என்றால், மக்கள் அவரை அணுகுவதில்லை. அவரைத் தேடிப் போவதில்லை. அதனால்தான் எங்கும் நிறைய துன்பமும், வேதனையும் உலகில் நிறைந்துள்ளன!” என்றார் ராஜேஷ்.
உண்மையை உணர்ந்தார் முடிதிருத்துபவர்.
சிறுவர் கதைகள் – ஒண்ணு தா
ஒண்ணு தா
அண்ணனூர் என்ற ஊரில் தினேஷ் என்பவன் இருந்தான். அவனுக்கு சந்துரு என்ற நண்பன் இருந்தான்.
ஒருநாள் சந்துருவை சந்தித்தான் தினேஷ்.
“”நண்பரே, நீர் ஒருநாள் எனது வீட்டுக்கு வரவேண்டும்,” என்று அவனுக்கு அழைப்பு விடுத்தான் தினேஷ்.
“”வரும் ஞாயிற்றுக்கிழமை நான் உமது வீட்டுக்கு வருகிறேன்,” என்று உறுதி கூறினான் சந்துரு.
அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான் தினேஷ்.
“”ஞாயிற்றுக்கிழமை நம் வீட்டுக்கு ஒரு நண்பர் வருவார். இந்த மாம்பழம் அவருக்காகத்தான் வாங்கி வந்தேன். காலையில் இதன் தோலை சீவி, கீற்றுக் கீற்றாக வெட்டி தட்டில் தயாராய் வைத்திரு,” என்று வேலைக்காரனிடம் கூறினான் தினேஷ்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் வேலைக்காரன் மாம்பழத்தை வெட்டினான். தோலை சீவி எடுத்து பழத்தை கீற்றுக் கீற்றாக துண்டு போட்டான். பழத்தின் மணம் அவன் மூக்கைத் துளைத்து எடுத்தது. வேலைக்காரனால் தன் நாவை அடக்க முடியவில்லை. ஒரு துண்டு பழத்தை எடுத்து வாயில் போட்டான். அதன் சுவை அவன் நாக்கில் நீர் ஊறச் செய்தது.
அவன் இன்னொரு துண்டை எடுத்து தின்றான். அவன் ஆசை அடங்கவில்லை. ஒரு பழம் முழுவதையும் தின்றான். இரண்டாவது பழத்திலும் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டான். இப்படியே இரண்டாவது பழமும் காலியானது. இரு பழங்களின் கொட்டைகளையும் சூப்பி அதில் ஒட்டியிருந்த சதையையும் தின்றான். பின்னர் கொட்டைகளை வெளியே எறிந்தான்.
வேலைக்காரன் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். அங்கு ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார். அவர்தான் முதலாளி அழைத்த மனிதர் என அறிந்தான். அவன் மூளை துரிதமாக வேலை செய்தது. உடனே ஒரு துருப்பிடித்த கத்தியை எடுத்தான். அதை முதலாளியிடம் கொடுத்தான்.
“”ஐயா, இந்த கத்தியால் மாம்பழத்தை அறுக்க முடியவில்லை,” என்றான்.
“”கத்தியை, நான் தீட்டித் தருகிறேன்,” என்று சொல்லி, அதை வாங்கிக் கொண்டு தோட்டத்துக்குச் சென்றான் முதலாளி.
அங்கிருந்த கல்லில் அதை தீட்டினான். “”கூர்மையாக தீட்டி வையுங்கள்,” என்று சொல்லி விட்டு வேலைக்காரன் வீட்டுக்குள் சென்றான். புதிதாக வந்த மனிதர் அதற்குள் நண்பன் வீட்டின் முன் வந்து நின்றான். அவன் வந்ததும், “”எச்சரிக்கை, எச்சரிக்கை! வீட்டுக்குள் நுழைய வேண்டாம். என் முதலாளிக்கு பைத்தியம் பிடித்துள்ளது. உமது இரு காதுகளையும் அறுக்க அவர் திட்டமிட்டுள்ளார்,” என்று அவன் காதில் மட்டும் படும்படிக் கூறினான்.
வேலைக்காரன் ரகசியமாகச் சொன்னதைக் கேட்டதும், சந்துருவுக்கு கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
“”எனது காதை அறுக்கத் திட்டமிட்டுள்ளாரா! ஏன்?” என்று கேட்டான்.
“”அதோ பாருங்கள், அவர் கத்தியை தீட்டிக் கொண்டு இருக்கிறார்,” என்றான் வேலைக்காரன்.
வேலைக்காரன் காட்டிய திசையில் பார்த்தான். அங்கே தினேஷ் கையில் ஒரு கத்தி இருந்தது. அவன் ஆவேசம் வந்தவன் போல் அதை ஒரு கல்லில் தீட்டிக் கொண்டிருந்தான்.
“அவனுக்கு பித்துப் பிடித்துள்ளதா? ஏன் அப்படிச் செய்கிறான்?”சந்துருவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
“எனது காதை அவன் ஏன் அறுக்க வேண்டும்?’ அவனால் காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், தினேஷ் இன்னும் கத்தியை தீட்டிக் கொண்டுதான் இருந்தான்.
“சரி, வலிய வந்து மாட்டிக் கொள்ள தலைவிதியா? நமக்கேன் வம்பு?’ என்று எண்ணிய சந்துரு புறப்பட்டான். தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன் எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக நடந்தான்.
உடனே வேலைக்காரன் தினேஷிடம் சென்றான்.
“”ஐயா, நீங்கள் அழைத்த மனிதர் இரண்டு மாம்பழங்களையும் எடுத்துக் கொண்டு வேகமாக ஓடுகிறார்!” என்றான்.
“”பேராசைக்கார சந்துரு இரண்டு பழங்களையும் எடுத்துக் கொண்டானா?”
“”ஆம் ஐயா, இரண்டையும் எடுத்துக் கொண்டார்!”
உடனே தினேஷ் கையில் கத்தியுடன் எழுந்து சந்துரு பின்னால் ஓடினான்.
“”எனக்கு ஒன்று கொடு; ஒன்றை மட்டும் கொடு,” என்று கத்தினான்.
“என்ன, என்னோட ஒரு காதையாவது தா என்கிறானே? அகப்பட்டால் இரண்டு காதையும் அறுத்து விடுவான்’ என்று எண்ணிய சந்துரு உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் வேகமாக ஓடி மறைந்தான்.
தன் திட்டம் பலித்ததை எண்ணி மகிழ்ந்தான் வேலைக்காரன்.
சிறுவர் கதைகள் – குறை
தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.
முதல்நாள் வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பினான். “”இங்கே யாருமே சரி இல்லை. எல்லாரும் நம்மைப் பார்த்து பொறாமைப்படுகின்றனர். என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். யாரும் என்னுடன் பேசுவது இல்லை!” என்று குறை சொன்னாள்.
“”நீ இப்போதுதான் இங்கே வந்திருக்கிறாய். உன்னுடன் பழக அவர்கள் தயக்கம் காட்டியிருக்கலாம். நீ அதைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பாய். நாளாக நாளாக எல்லாம் சரியாகி விடும். சிறிது பொறுமையாக இரு!” என்றான் அவன்.
அடுத்த நாள் அவன் வேலை முடித்து வீடு திரும்பினான். “”அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் நம்மைக் குறை சொல்லிக் கொண்டிருந்தனர். நான் வருவதைப் பார்த்ததும் பேசுவதை நிறுத்தி விட்டனர். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!” என்றாள் அவள்.
இப்படியே அவள் நாள்தோறும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களைப் பற்றி குறை சொன்னாள். “”இனி நம்மால் இங்கே குடி இருக்க முடியாது. வேறு இடம் பாருங்கள்,” என்று நச்சரிக்கத் தொடங்கினாள். “நாம் அதிகம் பழகாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் குறை தெரியாமல் போயிற்றா? மனைவி சொல்வது போல அவர்கள் பொல்லாதவர்கள்தானா?’ என்று குழம்பினான் அவன்.
அப்போது பெற்றோர்களிடம் இருந்து அவனுக்கு ஒரு மடல் வந்தது. அதில், “ஊர்த் திருவிழா ஒருவாரம் நிகழ உள்ளது. நீ குடும்பத்துடன் வர வேண்டும்’ என்று எழுதி இருந்தது.
மனைவியிடம் அந்த மடலைக் காட்டினான். “”என் பெற்றோர்கள் ஊர்த் திருவிழாவிற்கு நம்மை அழைத்திருக்கின்றனர். எனக்கு அலுவலகத்தில் நிறைய வேலை உள்ளது. என்னால் வர முடியாது. நீ மட்டும் சென்று திருவிழா முடியும் வரை இருந்துவிட்டு வா!” என்றான்.
அவளும் அவன் சொன்னது போலவே ஊருக்குச் சென்றாள். அங்கே ஒருவாரம் தங்கிவிட்டு வந்தாள்.
“”பயணம் எப்படி இருந்தது? என் வீட்டில் உள்ளவர்கள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொண்டார்களா?” என்று கேட்டான் அவன்.
“”அங்கே மாடு மேய்க்கும் சுப்பனே என்னை எதிரியைப் போலப் பார்த்தான். மற்றவர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? இனி என்னை அங்கே போகச் சொல்லாதீர்கள்!” என்று சலித்துக் கொண்டாள் அவள். “சுப்பன் மாடுகளை மேய்ப்பதற்காக அதிகாலையில் வீட்டைவிட்டுச் செல்வான். இரவில்தான் வீடு திரும்புவான். பகலில் அவனை பார்ப்பதே அரிது. இரவிலும் எப்போதாவதுதான் கண்ணில் படுவான். அவன் இவளை எதிரி போலப் பார்த்ததாகச் சொல்கிறாள்.
“யாரைக் கண்டாலும் அவர்கள் தன்னை பார்ப்பதாகவும், தன்னைப் பற்றிதான் பேசுவதாகவும் நினைப்பதுடன், அடுத்தவர்களை குறை கூறும் இயல்பு இவளுக்கு அதிகம் உண்டு. நல்ல வேளை, இவள் பேச்சை நம்பி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சண்டை போடாமல் இருந்தேனே. இந்தக் கெட்ட பழக்கத்தை இவள் விடும்படி செய்ய வேண்டும். அதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்!’ என்ற முடிவுக்கு வந்தான் சாந்தனு.
சிறுவர் கதைகள் – வச்சிராயுதம் கதை
வச்சிராயுதம் கதை
வெகு காலத்திற்கு முன் தேவர்களும், அசுரர்களும் தீராப் பகை கொண்டிருந்தனர். அவர்கள் எப்போதும் போர் செய்தபடியே இருந்தனர். போரில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை வைத்திருந்தனர்.
இந்நிலையில், “பாற்கடலில் அமுதம் உள்ளது. அதைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அந்த அமுதத்தை உண்பவர்கள் என்றும் சாகாமல் இருப்பர்,’ என்ற செய்தியைத் தேவர்களும், அசுரர்களும் அறிந்தனர். பாற்கடலைக் கடைவது பெரிய முயற்சி. தேவர்களும், அசுரர்களும் ஒன்றாகச் சேர்ந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பது அசுரர்களுக்குப் புரிந்தது. எதிரிகளான அவர்கள் தேவை கருதி ஒன்று சேர்ந்தனர்.
“பாற்கடலைக் கடைய எவ்வளவு காலம் ஆகுமோ? அதுவரை தங்களிடம் உள்ள வலிமையான ஆயுதங்களை எங்கே பாதுகாப்பாக வைப்பது?’ என்று அவர்கள் சிந்தித்தனர்.
இரு தரப்பினரும் தனித்தனியே ததீசி முனிவரிடம் வந்தனர். தங்களிடம் இருந்த ஆயுதங்களை அவரிடம் தந்தனர். “”இவற்றைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். பாற்கடலைக் கடைந்து முடித்ததும் பெற்றுக் கொள்கிறோம்,” என்று சொல்லிவிட்டுச் சென்றனர். வலிமையான அந்த ஆயுதங்களை எப்படிப் பாதுகாப்பது என்று சிந்தித்தார் அவர். வேறு வழி தெரியாத அவர் அவற்றை விழுங்கிவிட்டார்.
அந்த ஆயுதங்கள் அனைத்தும் அவருடைய முதுகுத் தண்டில் சேர்ந்தன. பாற்கடலைக் கடைவதற்கு எண்ணற்ற ஆண்டுகள் ஆயின. அந்த முயற்சியில் தடைகள் பல ஏற்பட்டன. ததீசி முனிவரிடம் ஆயுதங்கள் கொடுத்ததையே தேவர்களும், அசுரர்களும் மறந்துவிட்டனர். அவரிடம் திரும்ப வந்து கேட்கவேயில்லை.
அசுரர் தலைவனான விருத்திராசுரன் தேவர்களை அழிப்பதற்காகக் கடுமையான தவம் செய்தான். அவன் தவத்தை மெச்சிய படைப்புக் கடவுள் அவன் முன் தோன்றினார். அவன் கேட்ட வரங்களைத் தந்தார். இதனால் வலிமை பெற்ற அவன் தேவர் தலைவனான இந்திரனோடு போர் செய்தான். அவனை எதிர்த்து நிற்க முடியாத இந்திரன் தோற்று ஓடினான். மூவுலகங்களையும் வென்றான் அவன்.
“என்ன செய்வது? எப்படி விருத்திராசுரனைக் கொல்வது?’ என்று சிந்தித்தான் இந்திரன். இது குறித்து முனிவர்களிடம் அறிவுரை கேட்டான். “”விருத்திராசுரனைக் கொல்வது எளிய செயல் அல்ல. மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதத்தால்தான் அவனை வீழ்த்த முடியும். அப்படிப்பட்ட ஆயுதம் ததீசி முனிவரின் முதுகு எலும்புதான். அந்த எலும்பில் தேவ அசுர ஆயுதங்கள் அனைத்தும் சேர்ந்து உள்ளன.
அவர் உயிர்த் தியாகம் செய்தால்தான் அந்த எலும்பு கிடைக்கும்,” என்றனர் அவர்கள். ததீசி முனிவரிடம் சென்றான் அவன். “”விருத்திராசுரனின் கொடுமைகளைத் தாங்காது மூவுலகங்களும் துன்பப்படுகின்றன. நீங்கள் நினைத்தால் அந்த அசுரனைக் கொன்று மூவுலகங்களையும் காப்பாற்ற முடியும்,” என்றான்.
“”நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள் செய்கிறேன்!” “”உங்கள் முதுகெலும்பு தேவ அசுரர்களின் ஆயுதங்கள் சேர்ந்து மிக வலிமையாக உள்ளது. அந்த எலும்பால் செய்த ஆயுதத்தால்தான் அவனைக் கொல்ல முடியும்,” என்று தயக்கத்துடன் சொன்னான் அவன். இதைக் கேட்ட அவர் உலகம் வாழத் தன் உயிரை இழக்கத் துணிந்தார். அவர் முதுகெலும்பில் ஆயுதம் செய்தான் அவன். அதற்கு வச்சிராயுதம் என்று பெயர் வைத்தான்.
அதை விருத்திராசுரனின் மீது விட்டான். அது அசுரனின் மார்பில் பாய்ந்து அவன் உயிரைக் குடித்தது. கொடிய அசுரன் மாண்டதை அறிந்து எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறுவர் கதைகள் – சிரித்த முகம் வேணும்

சிரித்த முகம் வேணும்

“இந்த பஸ்ல எத்தனை வருஷமா நீங்க கண்டக்டரா இருக்கீங்க?”

“ஐந்து வருஷமா இருக்கேங்க!”

“நானும் பலகாலமா இந்த பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டிருக்கேன். எவ்ளோ நெருக்கடியான நேரங்களில் கூட பதட்டப்படாம, சிரிச்ச முகத்தோட பயணிகள் கிட்ட நடந்துக்கிற உங்கள மாதிரி கண்டக்டரை பார்த்ததே இல்லை”

“தொழில்ல எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், மனசை லேசா வச்சிக்கணும் சார். அமெரிக்காவுல உள்ள ‘நியூரோசைக்யட்ரிக்’ நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?”

“என்ன சார் சொல்றாங்க?”

“மனுஷன் புன்னகைக்கும் போது, சிரிக்கும் போது, மகிழ்ச்சிகரமா இருக்கும் போது உடம்புல ஒருவித அலைகளை உண்டாக்கி, நியூரோ பெப்டைடுகளை உண்டாக்குமாம். இது உடம்புல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இப்படிப்பட்டவங்க தான் அதிக நாள் ஆரோக்கியமா வாழுறாங்களாம். அதுமட்டுமில்ல…பொறாமை, ஆசை, கோபம் எல்லாத்தையும் கட்டுப்படுத்தினா, ஆயுள் இன்னும் கூடும்னு ஆய்வுகள் சொல்லுது. உயிர் போற நேரத்துல கூட பதட்டப்படக் கூடாது சார்”

“அடேங்கப்பா…இவ்ளோ தெரிஞ்சி வச்சிருக்கறதால தான் நீங்க எப்பவும் பதட்டப்படாம சிரிச்ச முகத்தோட வேலை செய்யிறீங்க போல!”

“ஆமாங்க!”

“ஆனா உங்க கிட்ட இருக்குற இந்த நிதானம் உங்க டிரைவர் கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன்”

“ஏன் அப்படி சொல்றீங்க?”

“இப்ப இந்த பஸ் எப்படி போய்க்கிட்டு இருக்குன்னு பாருங்களேன். தாறுமாறா தறிகெட்டு ஓடுற மாதிரி தெரியுது. நீங்களாவது முன் பக்கம் போய் பிரேக்-கிரேக் கழண்டு விழுந்துடுச்சான்னு பாத்துட்டு வாங்களேன், ப்ளீஸ்!”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்கே போய் பாத்துட்டு வந்து தான் உங்ககிட்ட பேசிக்கிட்டிருக்கேன். வர்ற வழியில தான் எங்கயோ விழுந்திருக்கணும்னு நினைக்கிறேன்!”

“எது…பிரேக்கா?”

“இல்ல…டிரைவர்!”

சிறுவர் கதைகள் – நட்புக்குத் துரோகம்
ஒரு காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகப் பழகத் தீர்மானித்தன. இரண்டும் சேர்ந்து ஓர் உடன்படிக்கையைச் செய்து கொண்டன.
நாள்தோறும் இருவரும் ஒன்றாகவே சேர்ந்து இரைதேடச் செல்ல வேண்டும் என்றும், இரண்டு பேரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும், நரியும், கழுதையும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உறுதி செய்து கொண்டன.
ஒருநாள் நரி, தன் நண்பனான கழுதையை இரை தேடுவதற்கு அழைத்துச் செல்வதற்காக தன் இருப்பிடத்தை விட்டு கழுதை இருக்குமிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சிறிது தூரம் சென்றதும், அந்தப் பக்கமாக சென்ற சிங்கத்தைக் கண்டு நடுங்கியது. எப்படியாவது உயிர்தப்ப வழியுண்டா என யோசித்தது.
ஒரு வழி நரிக்குப் புலப்பட்டது. அதாவது, தன் நண்பன் கழுதையைக் காட்டிக் கொடுத்துவிட்டு, தான் தப்பித்துக் கொள்வது என்பதுதான் அந்த வழி.
நரி உடனே சிங்கத்தை நோக்கி, “”மன்னாதி மன்னா! அற்பப் பிராணியாகிய என்னைக் கடித்துத் தின்பதால் உங்கள் பசி சற்றும் அடங்கப் போவதில்லை. உங்களுக்கு நான் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்ய முடியும். என் நண்பனாக, கொழுத்த கழுதை ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் சிரமமில்லாமல் பிடித்துக் கொள்வதற்கு ஓர் ஏற்பாட்டைச் செய்கிறேன். அந்தக் கழுதை, இரண்டு மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு ஆகும்!” என்று கூறிற்று.
அந்த ஏற்பாட்டுக்கு சிங்கம் ஒப்புக் கொண்டது.
நரி, சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையின் இருப்பிடத்திற்குச் சென்றது.
“”நண்பனே! இரை தேடச் செல்லலாமா?” என, கழுதையை அழைத்துக்கொண்டு சிங்கம் மறைந்திருந்த இடத்திற்கு வந்தது.
நட்புக்குத் துரோகம்
கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து நிறுத்தியது நரி. சிங்கம், கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. பிறகு சிங்கம், நரியின் மீதும் பாய்ந்து பிடித்துக் கொண்டது.
நரி பதறிப் போய், “”மகாராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையைக் காண்பிக்க வந்தேன். இப்போது என்னையே கொல்ல வந்து விட்டீர்களே!” என்று நரி நடுக்கத்துடன் கேட்டது.
“”நெருக்கமான நண்பனையே காட்டிக் கொடுக்கத் தயங்காத உன்னை நம்ப முடியாது. நாளை நீ உயிர் தப்புவதற்காக பலம் வாய்ந்த ஒரு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பது என்ன நிச்சயம். ஆகவே,
உன்னை உயிருடன் விட்டு வைக்கக்கூடாது,” என்று கூறிக் கொண்டே சிங்கம், நரியையும் கொன்று வீழ்த்தியது.
இதற்குத்தான் கெட்ட நண்பர்களுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களால் உங்களுக்கு தீமை தான் ஏற்படும்.
சிறுவர் கதைகள் – இளவரசி ஷெரில்
முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சோம்பேறி. எவ்வளவு சொன்னாலும் ஒரு வேலைகூடச் செய்ய மாட்டாள். தாய் சொன்ன அறிவுரையை அவள் கேட்கவில்லை.
நாளாக ஆகத் தாய்க்கு சினம் மிகுதி ஆயிற்று.
ஒருநாள் மிகுந்த கோபத்தோடு ஷெரில் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வலி தாங்காமல் ஷெரில் “ஓ’வென்று அழுதாள்.
அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே ஓசை ஒன்று கேட்டது. அரசி ஒருத்தி அந்த வழியாக ஒரு பல்லக்கில் போய்க் கொண்டிருந்தாள். ஷெரில் எழுப்பிய அழுகுரல் கேட்ட அரசி, பல்லக்கை நிறுத்தினாள்.
“”யாரோ அழுகிற ஓசை கேட்டேன்? யார் அது?” என்றாள்.
பல்லக்கில் இருந்து இறங்கிய அவள், குடிசையின் கதவைத் தட்டினாள்.
தாய் வெளியே வந்தபோது, “”என்ன நடந்தது? யார் அழுவது?” என்று கேட்டாள்.
அரசியைப் பார்த்தவுடன் அவள்.
“”என் மகள் மிகவும் நல்லவள். நூல் நூற்பது போதும் என்றால் கேட்க மறுக் கிறாள். அதோடு, அவளை அப்படியே விட்டால், நூற்றுக்கொண்டே இருப்பாள். என்னிடம் அந்த அளவிற்குப் பஞ்சு இல்லை. நான் என்ன செய்வேன்?” என்றாள்.
அரசி பார்த்தாள்.
“”வியப்பாக இருக்கிறதே… எனக்குக் கூட நூற்பது பிடிக்கும். நூற்பு இயந்திரச் சக்கரம் சுழன்று கொண்டு இருப்பதை நான் விரும்புவேன். உங்கள் மகளை என்னோடு அரண்மனைக்கு அனுப்புங்கள். அவள் விரும்புகிற வரைக்கும் நூற்றுக்கொண்டே இருக்கட்டும். அங்கே பஞ்சுக்கு பஞ்சமே இல்லை,” என்றாள்.
“ஷெரிலை எப்படியாவது துரத்தினால் போதும் என்று நினைத்த அவள்’ அரசியோடு அவளை அனுப்பி விட்டாள்.
ஷெரில் அரண்மனைக்கு சென்றாள். ஒரு மாளிகையின் மேல்பகுதிக்கு அவளை அழைத்துச் சென்ற அரசி, அவளுக்கு ஓர் அறையைக் காட்டினாள். அது அவள் தங்குவதற்கு. பக்கத்தில் இரண்டு அறைகளில் மிகச்சிறந்த பஞ்சு மூட்டைகள் குவிந்திருந்தன.
அரசி அவளைப் பார்த்து, “”பெண்ணே, இங்கே நிறைய பஞ்சுப் பொதிகள் உள்ளன. இவற்றை நன்றாக நூற்றால், என் அன்பு மகனை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன். நீ ஏழைப் பெண் என்பதும், உன் தாய் தந்தையர் மிகவும் எளியவர் என்பதும் எனக்குத் தெரியும். அதற்காக, நான் உன்னை வெறுக்கமாட்டேன். உன் உழைப்பே உனது திறமை,” என்று சொன்னாள்.
தனியே விடப்பட்ட ஷெரில், பஞ்சுப் பொதிகளைப் பார்த்து அஞ்சினாள். காலையில் இருந்து இரவு வரையில் நூற்றாலும் இவற்றை நூற்று முடிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இதை நினைத்தவுடன் அவளுக்கு அழுகையாக வந்தது. கன்னங்களில் நீர் வழிய ஷெரில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. வேலை செய்ய மனம் வரவில்லை.
மூன்றாம் நாள் அரசி வந்தபோது பஞ்சு அப்படியே இருந்தது. வியப்போடு, “”என்ன ஆயிற்று? ஏன் ஒன்றும் செய்யவில்லை?” என்று கேட்டாள்.
அச்சம் கொண்ட ஷெரில், அரசியைப் பார்த்து மன்னிப்பு வேண்டினாள். வீட்டு நினைவும், தாயின் நினைவும் வந்ததால், வேலை செய்ய முடியவில்லை என்று சொன்னாள்.
அரசி, “”அப்படியா… ஆனால், நீ நாளைக்கு வேலையைத் தொடங்கி விட வேண்டும்,” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
தனிமையில் ஷெரில் மீண்டும் அழுதாள். முகத்தை மூடிய கைகளின் விரல்களைச் சற்றுத் தளர்த்தியபோது விரல்களின் இடையே மூன்று கிழவிகள் தன் எதிரே நிற்பதைப் பார்த்தாள். இதுவரை அப்படிப்பட்ட பெண்களை அவள் பார்த்ததில்லை. விந்தையான தோற்றத்தில் அவர்கள் இருந்தனர்.
முதல் கிழவியின் வலதுக்கால், ஏறத்தாழ அகன்ற சதுரமாக இருந்தது.
இண்டாவது கிழவியின் கீழ் உதடு, மோவாய்க் கட்டை வரை மிகவும் தொங்கி இருந்தது.
மூன்றாவது கிழவியின் கையின் கட்டை விரல் மண்வெட்டி போலப் பெரிதாக இருந்தது.
எதிரே நின்ற மூவரும் ஷெரிலைப் பார்த்து, “”உன் கவலை என்ன?” என்று கேட்டனர்.
தன் நிலையை அவள் எடுத்துச் சொன்னாள்.
“”எல்லாவற்றையும் நாங்கள் செய்து கொடுத்தால் எங்களுக்கு நீ என்ன தருவாய்?” என்று அவர்கள் கேட்டனர்.
அவள் எதையும் தருவதற்குத் தயாராக இருந்தாள்.
பின்னர், அந்த மூவரும், “”உன் திருமணத்திற்கு எங்களை அழைக்க வேண்டும். அனைவரிடமும் இவர்கள் என் அத்தைகள் என்று அறிமுகம் செய்ய வேண்டும். எங்களோடு நீயும், உன் கணவனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்,” என்றனர்.
எதைப்பற்றியும் எண்ணிப் பார்க்காமல், ஷெரில் ஒப்புக் கொண்டாள்.
மூன்று கிழவிகளும் தங்கள் வேலையைத் தொடங்கினர். முதல் கிழவி நூலைச் சக்கரத்தில் செலுத்திச் சுற்றிவிட்டாள். இரண்டாவது கிழவி நூலை எச்சிலால் ஈரமாக்கினாள். மூன்றாவது கிழவி மற்ற வேலைகளைச் செய்தாள்.
இப்படி மூவரும் வேலை செய்வதைக் கண்ட ஷெரில் வியப்புற்றாள். இதுவரை வேறு எவரும் இவ்வளவு வேகமாகவும், திறமையாகவும் வேலை செய்ததில்லை.
ஓசை கேட்டு மேலே வந்தாள் அரசி. அப்போது அருகிலிருந்த அலமாரியில் மூவரையும் ஒளித்து வைத்தாள்.
அரசி அவளது வேலையைக் கண்டு, மன நிறைவு கொண்டாள். அவளைப் பெரிதும் பாராட்டினாள்.
அரசி திரும்பிப் போன பிறகு அவர்கள் வெளியே வந்து வேலையைத் தொடர்ந்தனர். அவர்கள் இருப்பது அரசிக்குத் தெரியவே தெரியாது.
சில நாட்களில் இரண்டு அறைகளிலிருந்த பஞ்சு மூட்டைகளும் தீர்ந்துவிட்டன. வேலை முடிந்த பின்னர் ஒருநாள் மாலை இருட்டும் வேளையில் அந்த மூவரும் போய் விட்டனர். போகும்போது, “”பெண்ணே, நீ எங்களுக்குத் தந்த உறுதிமொழியை நினைவில் வைத்துக் கொள். நாங்கள் திரும்ப வருவோம்,” என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.
அடுத்த நாள் காலை வழக்கப்படி அரசி வந்தாள். மூட்டை மூட்டையாக இருந்த பஞ்சு அனைத்தும் நூல் கண்டுகளாக மாறி இருந்தன. சொன்ன சொல் தவறாத அரசி, ஷெரிலின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
ஷெரில் அரசியைப் பார்த்து, “”எனக்கு மூன்று அத்தைகள் இருக்கின்றனர். என்னை மிகவும் அன்பாகப் போற்றி வளர்த்தவர்கள் அவர்கள். அவர்களைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டும்,” என்றாள். அரசியும் ஒப்புக் கொண்டாள்.
திருமணம் நடந்தது. விருந்தின் போது மணமகன், மேஜையில் ஆடை அலங்காரத்துடன் அமர்ந்திருந்த அவர்களை, “”யார்’ என்று கேட்டார். ஷெரில் அவர்களை அறிமுகப்படுத்தினாள்.
முதல் கிழவியைப் பார்த்து இளவரசன், “”உங்கள் பாதம் ஏன் இவ்வளவு பெரிதாக உள்ளது?” என்று கேட்டான்.
“”நான் எப்போதும் நூற்பு இயந்திரத்தைக் காலால் மிதிப்பதால்,” என்றாள் அவள்.
இரண்டாமவளைப் பார்த்து, “”வியப்பாக இருக்கிறதே, இவ்வளவு நீண்ட உதடுகள். ஏன் இப்படி?” என்று கேட்ட போது, அவள், “”எப்போதும் நூலை இதழால் தடவுவதால்,” என்றாள்.
மூன்றாவது கிழவியைப் பார்த்து அவன், “”உங்களுக்கு இவ்வளவு பெரிய கட்டை விரல் எப்படி வந்தது?” என்றான்.
அதற்கு அவள், “”என் வாழ்க்கை முழுவதும் நூல்களை அழுத்தி வேலை செய்வதால்,” என்றாள்.
நூற்பதால் இந்தப் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று நினைத்தான் இளவரசன். தன் பக்கத்தில் இருந்த புதிய மனைவி யாகிய ஷெரிலைப் பார்த்து, “”இனிமேல் என் அழகிய இளவரசி ஷெரில் நூல் நூற்கவே கூடாது,” என்று உத்தரவிட்டான்.
அன்று முதல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
சிறுவர் கதைகள் – வேட்டை நாய்

வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வைத்திருந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் சென்றுவரும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கும். ஒரு நாயின் கடமை வேட்டையாடுதல்; இன்னொரு நாயின் கடமை வீட்டைக் காவல் காத்தல்.

வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பியதும், வேட்டையில் கிடைத்தவற்றில் வீட்டு நாய்க்கே அதிகமாகக் கொடுப்பது வழக்கம். வேட்டை நாய் நீண்ட நாள்வரை அதைப் பொருட்படுத்தாமல் இருந்தது.

ஒருநாள் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வேட்டைக்காரன் வழக்கம்போல் செய்தான். அதைக் கண்ட வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம் ஏற்பட்டது.

வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து, “”வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? நீ அந்தத் துன்பத்தில் பங்கு கொள்ளவில்லை. ஆனால், நான் வேட்டையில் சம்பாதித்தவற்றில் மட்டும் பெரும் பகுதியைப் பங்காகப் பெற்றுக் கொள்கிறாய். இது முறையா? இது நியாயமா? உனக்கே இது நல்லதாகத் தெரிகிறதா?” என்று வருத்தத்துடன் கேட்டது.

அதைக் கேட்ட வீட்டு நாய் மெல்லச் சிரித்துக் கொண்டே, “”நண்பனே! அது என்னுடைய குற்றம் இல்லை. நீ என்மீது வருத்தப்படுவதில் பயனில்லை. இந்தக் குற்றம் நம் எஜமானனுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தரவில்லை. வேட்டையாடுவதில் என்னைப் பழக்கவில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்துப் பழக்கியிருக்கிறார்!” என்று பதில் கூறியது.

அதைக் கேட்டதும், வேட்டை நாயினால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. இந்த அநியாயக்கார உலகத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு என்பதை உணர்ந்து மவுனமாக இருந்தது.

சிறுவர் கதைகள் – கடவுளின் கணக்கு
சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா ஓடி வந்தால், அவன் பணம் கொடுக்க மாட்டான். பண்ட பாத்திரமோ, நகையோ கொண்டு வந்தால்தான் பணம் கொடுப்பான். அதுவும், பாதி விலைக்குத்தான் வாங்குவான்.
கடவுள் அவன் பக்கம் இருந்து, எல்லா மக்களுக்கும் கஷ்டத்தைக் கொடுத்து, அவனுக்கு லாபத்தை வாரிக் கொடுத்தார்.
“”இதெல்லாம் ரொம்பப் பாவம். நம் மகனுக்குப் பாவத்தைச் சேர்த்து வைக்காதீர்கள்,” என்று அவன் மனைவி கமலா கண்டிப்பாள்.
“”போடி, போடி பிழைக்கத் தெரியாதவளே, பணம்தான் உலகம்… பணம் இல்லை என்றால் ஒருவனும் நம்மை மதிக்க மாட்டான்,” என்று அவளைக் கிண்டல் செய்வான் சரவணன்.
ஒருநாள் புதிய ஆள் ஒருவன் சரவணனிடம் வந்தான்.
“”என் மனைவிக்கு ஒரு பெரிய ஆபரேசன் செய்ய வேண்டும். அதற்குப் பணம் தேவைப்படுகிறது என்னிடம் உள்ள நகைகளை வாங்கிக் கொள்கிறீர்களா?” என்று கேட்டான்.
“”அவனைப் பார்த்தால், திருட்டுப் பயல் போல இருக்கிறது. ஒரு மூட்டை நகை கொண்டு வந்து இருக்கிறான். நிச்சயமாக எங்காவது திருடிக் கொண்டு வந்திருப்பான். அவனைப் போகச் சொல்லுங்கள் வீண் வம்பு வேண்டாம்,” என்றாள்.
ஆனால், நகையைக் கண்டதும் பேராசையும் பொங்கியது சரவணனுக்கு. இவ்ளோ நகை எங்கே கிடைக்கும்? என்று நினைத்து யோசிக்க மறந்தான்.
“”கமலா! நீ இந்த விஷயத்தில் தலை இடாதே… உனக்கு என்ன தெரியும்!” என்று அவளைத் திட்டி அனுப்பி விட்டு, மூட்டையுடன் வந்த ஆளை உள்ளே அழைத்தான்.
அந்த ஆள் மூட்டையைப் பிரித்தான். ஏராளமான தங்க நகைகள் மின்னின. மாற்று உறைத்துப் பார்த்தான் சரவணன். எல்லாமே சுத்தத் தங்கம். லட்ச ரூபாய்க்கு மேல் பெறும்.
“”பத்தாயிர ரூபாய் தான் கொடுப்பேன். இஷ்டம் இருந்தால் கொடு. இல்லாவிட்டால் போ,” என்று கண்டிப்பாகப் பேசினான்.
“”சரி ஐயா பணத்தைக் கொடுங்கள்,” என்று அழுது வடிந்தான் அந்த ஆள்.
உடனே, பணத்தைக் கொடுத்து, நகைகளை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டினான் சரவணன்.
மனம் முழுவதும் சந்தோஷம். இப்படி ஒரு அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கும். லட்சரூபாய் பெறுமானமுள்ள நகையை பத்தாயிரத்திற்கு சுருட்டிய தன்னுடைய திறமையை எண்ணி மகிழ்ந்தான்.
ஒருமாதம் சென்றது-
சரவணன் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இன்ஸ்பெக்டரும், காவலர்களும் கையில் விலங்கு பூட்டிய ஒருவனோடு கீழே இறங்கினார்கள். கையில் விலங்குடன் காணப்பட்டவன் ஒரு மாதத்திற்கு முன்னால் சரவணனிடம் நகைகளை விற்ற ஆசாமி.
சரவணன் பயத்துடன் வாசலுக்கு வந்தான்.
“”இவர்தான் என் திருட்டு நகைகளை வாங்கியவர்,” என்று சரவணனை அடையாளம் காட்டினான் திருடன்.
அவ்வளவுதான்! இன்ஸ்பெக்டரும், காவலர்களும் சரவணனின் வீட்டுக்குள் புகுந்து, அலமாரியைத் திறந்து திருட்டு நகைகளோடு மற்ற நகைகளையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, சரவணனை ஜீப்பில் அள்ளிப் போட்டுக் கொண்டு போனார்கள்.
கடவுள் சரவணனுக்கு உதவி செய்வது போலப் அவனை செழிக்க வைத்து, கடைசியில் பழி வாங்கி விட்டார். ஏழைகளின் வயிற்றெரிச்சல் சும்மா விடுமா?
நன்றி சிறுவர்மலர்