சிறுவர் கதைகள் – ஞான பண்டிதர்

ஒரு கற்றறிந்த பண்டிதர். அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.

ஒரு நாள் அவர் ஓரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது. பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

பரிசல் ஓட்டுபவன் ஒரு பரம ஏழை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாயிருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது.

பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் “அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா” என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார்.

பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரிசல் ஓட்டுபவன் மௌனமாக பரிசலை செலுத்திக் கொண்டிருந்தான்.

பண்டிதருக்குச் சும்மாயிருக்க முடியவில்லை. பரிசல்காரனைப் பார்த்து “நீ வேதம் படித்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

“அப்படின்னா என்ன சாமி?” என்று பரிசல்காரன் திருப்பிக் கேட்டான்.

“வேதம் படிக்காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?” என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார்.

பின்னரும் சும்மாயிருக்காமல் “சரி உனக்கு கீதை தெரியுமா?” என்றார்.

பரிசல்காரன் விழித்தான்.

“என்னப்பா உன் வாழ்க்கை? கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்” என்று மறுபடியும் பரிகசித்தார்.

இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது. உனக்கு “ராமாயணம், மஹாபாரதம் கதையாவது தெரியுமா?” என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார்.

அவன் பொறுமையாக “சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க!” என்று பதில் சொன்னான்.

“இப்படிப் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறாயே. நீ வாழ்ந்து என்ன பயன்?” என்று அவனை இகழ்ந்தார்.

இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டிருந்தது. ஆற்றின் வேகத்தில் பரிசல் திடிரென தத்தளிக்க ஆரம்பித்தது.

பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து “சாமி! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான்.

பண்டிதர் “தெரியாதே! ஏனப்பா?” என்று கேட்டார்.

பரிசல்காரன் “ஏன் சாமி? இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே. பரிசல் தாங்காது. நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத்தாச்சே!” என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.