சிறுவர் கதைகள் – எல்லாம் நன்மைக்கே

2.2/5 - (5 votes)

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் “எல்லாம் நன்மைக்கே!” என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. இரத்தம் வெளியேறி வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான்.

வழக்கம் போல் அமைச்சர், “அரசே! எல்லாம் நன்மைக்கே!” என்றான்.

இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், “நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்வதா?, காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடைத்து விடுங்கள்” என்று உத்தரவிட்டான்.

காவலர்களும் அமைச்சரை அரசனின் உத்தரவுப்படி சிறையில் கொண்டு போய் அடைத்து வைத்தனர்.

அப்போதும் அமைச்சர், “எல்லாம் நன்மைக்கே!” என்றார்.

நாட்கள் பல கடந்தன.

வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான்.

அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான்.

அங்கு வந்த கோவில் பூசாரி பலி கொடுப்பதற்காக மலைவாசிகள் கொண்டு வந்த அரசனை முழுமையாகச் சோதித்தான்.

பின்பு, “காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம்” என்றான்.

விடுதலை பெற்ற அரசன்! அரண்மனைக்கு வந்தான். உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான்.

நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், “சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மை உணர்ந்தேன். உம்மைச் சிறையில் அடைத்ததற்காக வருந்துகிறேன்” என்றான்.

அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் என்னையும் உங்களுடன் சிறைப்படுத்தி இருப்பார்கள். விரல் வெட்டுப் பட்டதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்கள். எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள்.

நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன்.

எல்லாம் நன்மைக்கே!” என்றார் அவர்.

Leave a comment