Category: அரசர் கதைகள்

அரசர் கதைகள் – மானமே பெரிது

சோழ நாட்டின் தலைநகரம் காவிரிப் பூம்பட்டினம்.

அரசவை கூடியுள்ளது. அரியணையில் அரசர் பெருவளத்தான் பெருமிதத்துடன் அமர்ந்து உள்ளார். அமைச்சர்களும் படைத் தலைவனும் அவையினரும் இருக்கைகளில் அமர்ந்து உள்ளனர்.

“அமைச்சரே! சேர நாட்டின் மீது போர் தொடுக்க முடிவு செய்தோம். முறைப்படி நம் தூதரை அந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தோம். எங்கு எப்பொழுது இரு நாட்டுப் படைகளும் போரிடுவது? இது குறித்து சேர நாட்டு அரசரே முடிவு செய்ய வேண்டும் என்றோம். இதுவரை அந்த அரசரிடம் இருந்து எந்தச் செய்தியும் இல்லை.”

“வெற்றி வேந்தே! சேர அரசரும் போருக்கு அஞ்சுபவர் அல்லர். எங்கு போர் செய்வது? ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பதில் தாமதம் என்று நினைக்கிறேன். விரைவில் செய்தி வரும்” என்றார் அமைச்சர்.

அப்பொழுது வீரன் ஒருவன் அரசவைக்குள் வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.

“காவிரி நாட வாழி! வெற்றி வேந்தே வாழி! நீதிநெறி தவறாத வேந்தே வாழி” என்று வணங்கினான்.

“வீரனே! என்ன செய்தி?”

“அரசே! சேர நாட்டுத் தூதர் வந்திருக்கிறார். உங்கள் அனுமதிக்காக வாயிலில் காத்திருக்கிறார்.”

“தூதனை உடனே இங்கு அழைத்து வா.”

“கட்டளை அரசே” என்று வணங்கிவிட்டு வீரன் சென்றான்.

தூதன் உள்ளே நுழைந்தான். அரசரைப் பணிவா வணங்கினான்.

“அரசே! வாழி! எங்கள் பேரரசர் சேரமான் நெடுஞ்சேரலாதன் செய்தி அனுப்பி உள்ளார்.”

“தூதனே! உன் வருகையைத் தான் எதிர்பார்த்து இருந்தோம். அந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல். எங்களுக்குத் திறை செலுத்த உங்கள் அரசர் ஒப்புக் கொண்டாரா? அல்லது சோழர் பெரும்படையைச் சந்திக்க உள்ளாரா? எதைத் தேர்ந்தெடுத்து இருக்கிறார்?”

“அரசே! எங்கள் அரசர் பெருமான் வீரர்களுக்கு எல்லாம் வீரர். பகை அரசர்கள் நடுங்கும் பேராற்றல் வாய்ந்தவர். எம் நாட்டு மக்களும் வீர மறவர்கள். போர் வேண்டி எங்கள் நாட்டிற்கு ஓலை வந்தது இல்லை.

உங்கள் ஓலையைக் கண்டு எங்கள் அரசர் மகிழ்ச்சி அடைந்தார். வீரர்களோ நல்விருந்து கிடைத்தது என்று ஆரவாரம் செய்தார்கள்.

போர் என்று முடிவு செய்து விட்டார் எங்கள் அரசர். போரிடுவதற்கு ஏற்ற இடத்தையும் தெரிவு செய்து விட்டார்.

வெண்ணிப் பறந்தலை என்ற இடம் தான் அது. வரும் முழுமதி நாளன்று இரு படைகளும் அங்கே சந்திக்கலாம். இதுதான் எங்கள் அரசர் அனுப்பிய செய்தி” என்றான் தூதன்.

சோழ அரசரை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.

“அமைச்சரே! கடல் போன்ற பெரும்படை நம்மிடம் உள்ளது. போர்ப் பயிற்சி மிக்க எண்ணற்ற வீரர்கள் உள்ளனர். நம்மை வெல்லும் ஆற்றல் யாருக்கு உள்ளது? நம் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசனாக சேரன் இருந்து இருக்கலாம். வீணாக நம்முடன் போரிட்டு அழியப் போகிறான்.”

“அரசே! சேர அரசரின் தன்மானம் நமக்குக் கீழ்ப்படிய மறுக்கிறது. வரும் முழுமதி நாள் நம் நாட்டிற்கு வெற்றி நாள். உங்கள் வீரச் சிறப்பை உலகமே அறியும் நன்னாள்” என்றார் அமைச்சர்.

“நன்று சொன்னீர்! அமைச்சரே! படைத்தலைவரே! நம் பெரும்படை நாளையே வெண்ணிப் பறந்தலை நோக்கிப் புறப்படட்டும். சேரர் படையின் வருகைக்காக நாம் அங்கே காத்திருப்போம்.

வீரம் பேசிய அந்தச் சேரனைப் போர்க்களத்தில் நேருக்கு நேர் சந்திக்கிறேன். என் வேலுக்கு அவன் பதில் சொல்லட்டும்.”

“கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன்” என்றார் படைத்தலைவர். அரசரை வணங்கி விட்டுச் சென்றார்.

சோழர் படை வெண்ணிப் பறந்தலையை அடைந்தது.

“படைத் தலைவரே! இந்த இடம் தான் வெண்ணிப் பறந்தலையா? கண்ணுக்கு எட்டிய தொலைவு மணற் பரப்பு தான் உள்ளது. செடிகளோ கொடிகளோ மரங்களோ எதுவும் இல்லை.

நல்ல இடத்தைத்தான் சேர அரசர் தேர்ந்து எடுத்து உள்ளார்” என்றார் சோழ அரசர்.

“ஆம் அரசே” என்றார் படைத்தலைவர்.

முழுமதி நாள் வந்தது.

காலை நேரம். இரு நாட்டுப் படைகளும் எதிரெதிரே அணிவகுத்து நின்றன.

சோழர் பெரும்படை முன் சேரர் படை சிறுத்துக் காட்சி அளித்தது.

கரிகாற் பெருவளத்தான் சோழர் படைக்குத் தலைமை தாங்கித் தேரில் அமர்ந்தார்.

அதே போலச் சேரமான் நெடுஞ்சேரலாதனும் தன் தேரில் அமர்ந்தார்.

இரு நாட்டு முரசங்களும் ஒரே நேரத்தில் முழங்கின. போர் தொடங்கியது.

வீரர்கள் வீர முழக்கம் செய்தனர். ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போரிட்டனர்.

யானைகளின் பிளிறல் ஒரு பக்கம் கேட்டது. குதிரைகளின் கனைப்பொலி இன்னொரு பக்கம் கேட்டது. வாளோடு வாள் மோதும் ஓசை பல இடங்களில் கேட்டது.

எங்கும் ஆரவாரம் இருந்தது.

கரிகாற் பெருவளத்தானும் நெடுஞ்சேரலாதனும் போர்க் களத்தில் நேருக்கு நேர் சந்தித்தனர். சினத்தால் இருவர் கண்களும் தீ உமிழ்ந்தன.

இருவரும் போர் செய்யத் தொடங்கினர்.

வெற்றி தோல்வி அறியவே முடியவில்லை. இருவரும் இணையாகப் போர் செய்து கொண்டிருந்தனர்.

கண் இமைக்கும் நேரத்தில் அது நடந்து முடிந்தது.

சோழ அரசர் தன் வேலைச் சேர அரசரின் மார்பில் பாய்ச்சினார். சேர அரசரின் மார்பை ஊடுருவிப் பாய்ந்தது அந்த வேல். அப்படியே மண்ணில் சாய்ந்தார் சேர அரசர். அவர் உடலிலிருந்து வழிந்த குருதி நிலத்தைச் செம்மை ஆக்கியது.

“ஆ! நம் அரசர் வீழ்ந்து விட்டார்” என்ற சேர வீரர்களின் அவலக் குரல் எங்கும் கேட்டது.

“நாம் வெற்றி அடைந்து விட்டோம். நம் வீரத்திற்குப் பெருமை சேர்ந்து விட்டது. வீரத்துடன் போரிட்டான் சேர அரசன். என்ன பயன். என்னிடம் தோற்று வீழ்ந்தான்.

வெற்றி அடைந்த நம் படை போரிடுவதை நிறுத்தட்டும். ஆரவாரத்துடன் நாடு திரும்பட்டும்” என்று கட்டளை இட்டார் சோழ அரசர்.

வேல் பாய்ந்ததால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைப் பாசறைக்குக் கொண்டு சென்றனர்.

அரசரைச் சோதித்த மருத்துவர் “அரசரின் மார்பில் பாய்ந்த வேல் முதுகைத் துளைத்து உள்ளது. ஏராளமான குருதி வெளியேறி விட்டது.

வேலைப் பிடுங்கி விட்டேன். மேலும் குருதி வெளியேறா வண்ணம் மருந்திட்டு உள்ளேன்.

உடனே நம் அரசரை அரண்மனைக்குத் தூக்கிச் செல்லுங்கள். ஆற்றல் வாய்ந்த மூலிகைகள் பல அங்கு உள்ளன. அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு. நாடித்து துடிப்பு அடங்கிக் கொண்டே வருகிறது. விரைந்து செயல்படுங்கள்.”

மயங்கிக் கிடந்த சேர அரசரைப் பல்லக்கில் வைத்தார்கள் வீரர்கள். பல்லக்கு விரைந்து கருவூரை அடைந்தது.

சோழ நாடெங்கும் விழாக் கோலம் பூண்டது. வீதியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டன.

வெற்றியுடன் திரும்பும் அரசரையும் வீரர்களையும் வாழ்த்தொலி எழுப்பி வரவேற்றனர் மக்கள்.

எங்கும் வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.
வெண்ணிப் பறந்தலைப் போர் நிகழ்ந்து சில திங்கள் கழிந்தன.

வழக்கம் போல அரசவை கூடி இருந்தது. அரியணையில் கரிகாற் பெருவளத்தான் அமர்ந்து இருந்தார். அவையினர் அவரவர் இருக்கையில் இருந்தனர்.

வீரன் ஒருவன் உள்ளே வந்து அரசரை வணங்கினான்.

“வெற்றி வேந்தே வாழி! பெரும்புலவர் வெண்ணிக் குயத்தியார் வந்து கொண்டிருக்கிறார்” என்றான்.

“ஆ! பெரும்புலவர் வெண்ணியக் குயத்தியாரா? இங்கு வருகிறாரா? அவர் வருகையால் நம் நாடே பெருமை பெற்றது” என்று அரியணையில் இருந்து இறங்கினார் அரசர்.

புலவர் வெண்ணியக் குயத்தியார் உள்ளே நுழைந்தார்.

அவரை வரவேற்ற அரசர் “வாருங்கள்! வெண்ணிக் குயத்தியாரே! வாருங்கள்” என்ற மலர்ந்த முகத்துடன் வரவேற்றார்.

அவையினர் எல்லோரும் எழுந்து “புலவர் வெண்ணிக் குயத்தியார் வாழ்க” என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

உயர்ந்த இருக்கை ஒன்றைக் காட்டிய அரசர் “புலவரே! இதில் அமருங்கள்” என்று வேண்டினார்.

தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பைக் கண்டு மகிழ்ந்தார் புலவர். அந்த இருக்கையில் அமர்ந்தார்.

அரசரும் அரியணையில் அமர்ந்தார்.

புலவர் எழுந்து நின்று “நானிலம் காக்கும் அரசே வாழி! செங்கோல் தவறாத அரசே வாழி! பகை நடுங்கும் வெற்றி வேந்தே வாழி! தமிழின் மீது நீர் கொண்டிருக்கும் பேரன்பை உலகமே போற்றுகிறது. உம்மைப் போல் புலவர்களை மதிக்கும் அரசர் யார் இருக்கிறார்கள்? உம்மோடு உரையாடி மகிழவே இங்கு வந்தேன். என் சில நாட்கள் இங்கே தங்குவதாகத் திட்டம்” என்றார்.

“தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் புலவர் பெருந்தகையே! கிடைத்தற்கு அரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். உங்கள் வருகையால் இந்தச் சோழ நாடே சிறப்புப் பெற்றது. நீங்கள் இங்கேயே நிலையாகத் தங்கினால் பெரிதும் மகிழ்வோம்” என்றார் அரசர்.

“வெற்றி வேந்தே! எங்கள் அறிவுச் செல்வம் ஒரு நாட்டிற்கு உரியது அல்ல. உலகிற்குப் பயன்பட வேண்டும். பல நாடுகளையும் சுற்றி விட்டுச் சேர நாடு சென்றேன். அங்கே சில நாட்கள் தங்கினேன். அங்கிருந்து இங்கு வந்தேன்” என்றார் அவர்.

“சேர நாட்டிலிருந்தா வருகிறீர்கள்? எனக்கும் சேர அரசனுக்கும் நிகழ்ந்த போரைப் பற்றிக் கேட்டு இருப்பீர்கள்.

அதைப் போன்று கடுமையான போர் எங்கும் நிகழ்ந்தது இல்லை.

அந்தப் போரில் அடைந்த வெற்றி எனக்குப் பெரும்புகழைத் தந்தது. அதைப் போற்றிப் புகழாத புலவர்களே இல்லை.

அந்தப் போரைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார் அரசர்.

“அரசே! போர் முடிந்து விட்டது. சேர நாட்டு நிகழ்ச்சிகள் எதுவும் உமக்குத் தெரியாதா?”

“புலவரே! சேரரின் படையைப் போர்க்களத்தில் சந்தித்தேன். என் வேலால் தாக்கப்பட்ட ரே அரசன் நிலத்தில் வீழ்ந்தார். வெற்றிக்காகப் போர் செய்தேன். என் எண்ணம் நிறைவேறியது.

தோல்வி அடைந்த அவர்களால் பல ஆண்டுகள் போரிட முடியாது. அதனால் அங்கு என்ன நிகழ்ந்தது என்பதை நான் பொருட்படுத்தவில்லை.”

“அரசே! உங்கள் வேலால் தாக்கப்பட்டார் அரசர் நெடுஞ்சேரலாதன். அவர் உயிர் பிழைத்து விட்டார். அந்தச் செய்தியாவது உங்களுக்குத் தெரியுமா?”

“புலவரே” என்னால் நம்ப இயலவில்லையே. என் வேல் நெடுஞ்சேரலாதனின் மார்பைத் துளைத்து ஆழமாகப் பாய்ந்தது. அப்படியே நிலத்தில் அவர் வீழ்ந்தார். அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லையே.”

“அரசே! சேர நாட்டு மூலிகைகளின் ஆற்றல் அளவிட முடியாதது. அவை இறந்தவரின் உயிரையே மீட்கும். அப்படி இருக்கையில் படுகாயம் அடைந்த அரசரின் உயிரையா மீட்காது?”

“மூலிகைகளால் சேர அரசர் உயிர் பிழைக்கட்டும். என்னிடம் தோற்ற பழி அவரை விட்டு நீங்காதே. அதற்கு அவர் போர்க்களத்திலேயே இறந்து இருக்கலாம். உயிர் பிழைத்துப் பழி சுமக்கின்ற கொடுமை யாருக்கு வேண்டும்?”

“அரசே! சேர அரசர் உயிர் பிழைத்ததால் புகழில் உயர்ந்து விட்டார். புலவர்கள், சான்றோர்கள் எல்லோரும் சேர அரசரையே புகழ்ந்து பேசுகிறார்கள். நீங்கள் போரில் அடைந்த வெற்றிப் புகழும் மங்கி விட்டது.”

“புலவரே! போரில் பெருவீரம் காட்டி வென்றவன் நான். என்னிடம் தோற்று உயிர் பிழைத்தவன் சேர அரசன். அவனை இந்த உலகம் புகழ்கிறதா? கேட்பதற்கு வேடிக்கையாக உள்ளதே?”

“அரசே! உங்கள் வேல் சேர அரசரின் மார்பில் ஆழமாகப் பாய்ந்தது. முதுகைத் துளைத்து வெளியே வந்தது.”

“என் வீரத்திற்கும் வலிமைக்கும் அந்த வேலே சான்று ஆகிறதே.”

“அரசே! உங்கள் வேலால் நிலத்தில் வீழ்ந்தார் சேர அரசர். வீரர்கள் அவரைக் கருவூருக்கு எடுத்துச் சென்றார்கள். மருத்துவர்கள் அரிய பச்சிலைகள் கட்டினார்கள்.

ஒரே திங்களில் அவர் மீண்டும் பழைய வலிமையைப் பெற்றார்.

மார்பிலும் முதுகிலும் வேல் குத்திய வடு இருப்பை அறிந்து துடித்தார்.”

“இதில் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? புலவரே”

“அரசே! விழுப்புண் பட்ட வடு மார்பில் இருந்தால் பெருமை. நேருக்கு நேர் நின்று போர் செய்தவர். எதிரியின் படைக் கலங்களை மார்பில் தாங்கியவர் என்று புகழ்வார்கள். முதுகில் வடு இருந்தால் புறமுதுகு காட்டி ஓடி வந்தது ஆகாதா? அது வீரர்களுக்கு மாறாப் பழி தரும் செயல் அல்லவா?”

“ஆம் புலவரே! புறமுதுகிட்டு ஓடுவது மிக இழிவான செயல். அப்படிப்பட்டவனை ஈன்ற தாய் வேண்டாள். மனைவி விரும்பாள். உற்றாரும் மற்றோரும் வெறுப்பார்கள்.

இதில் சேர அரசர் துடிப்பதற்கு என்ன இருக்கிறது? என் வேலை அவர் மார்பில் தாங்கியதை எல்லோரும் அறிவார்களே. அதே வடுதானே முதுகில் உள்ளது.”

“அரசே! சேர அரசர் மானம் மிக்கவர். முதுகில் வடு உள்ளது. உண்மை அறியாதவர்கள் என்ன நினைப்பார்கள்? புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட வடு என்று தானே நினைப்பார்கள். என்ன செய்வது என்று கலங்கினார்.

அந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கும் முடிவிற்கு வந்தார்.”

“என்ன! செய்யாத பழிக்காக வடக்கிருக்க நினைத்தாரா? இதைப் புலவர்களும் சான்றோர்களும் தடுக்க வில்லையா?”

அரசே! சேர அரசரின் செயலை எல்லோரும் தடுக்க முயற்சி செய்தார்கள்.

ஆனால் அவரோ எம் சேரர் குடி மானம் மிக்க குடி. என் முன்னோன் ஒருவன் பகைவரால் சிறையிடப்பட்டான் காலந்தாழ்த்து வந்த நீரைப் பருகாமல் உயிரை விட்டான்.

அப்படிப்பட்ட உயர்ந்த மரபில் வந்தவன் நான். என்னைப் புறப்புண் கண்டவன் என்றால் குடிக்கே இழுக்கு நேருமே. என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் வடக்கிருந்து உயிரைத் துறப்பது உறுதி என்றார்.

“பிறகு என்ன நடந்தது புலவரே?”

“வேறு வழி அவர்களுக்குத் தெரியவில்லை. அரசர் வடக்கிருப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். அங்கேயே வடக்கிருந்து உயிர் துறந்தார் அவர்.”

“ஆ! என்ன சேர அரசரின் மானச் சிறப்பு! செயற்கருஞ் செயலை அல்லவா அவர் செய்து விட்டார். செய்யாத பழிக்காக இதுவரை யார் உயிரைத் துறந்து இருக்கிறார்கள்? அவர் புகழ் என்றும் நிலைத்து நிற்கும்”.

“அரசே! போரில் பெரு வீரம் காட்டி வெற்றி பெற்றவர் நீங்கள். உங்களிடம் தோற்ற சேர அரசரோ புறப்புண்ணுக்கு நாணினார். வடக்கிருந்து உயிர் துறந்தார். உங்கள் புகழை விட அவர் புகழையே சிறப்பித்துப் பாடுகிறார்கள் புலவர்கள்.”

“புலவரே! என் வீரத்தினும் சேர அரசரின் மானம் உயர்ந்து நிற்கிறது. வென்ற நான் தோற்றவனாகி விட்டேன். தோற்றும் அவர் புகழில் என்னை வென்று விட்டார். வாழ்க அவர் புகழ்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் கரிகாற் பெருவளத்தான்.

1. “நனியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
செனறமர்க் கடந்தனின் னாற்றற் றோன்ற
வென்றோய் நின்னினு நல்ல னன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புக ழுலக மெய்திப்
புறப்புண் ணாகி வடக்கிருந் தோனே”

(புறநானூற்றுப் பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது)

அரசர் கதைகள் – உயர்ந்த நட்பு

சோழ நாட்டின் தலை நகரம் உறையூர். எப்பொழுதும் ஆரவாரமாக இருக்கும் அந்த நகரம் அன்று அமைதியாக இருந்தது.

நகர வீதியில் முதியவர்கள் இருவர் சந்தித்தனர்.

“முத்தனாரே! அரசவையில் இருந்துதானே வருகிறீர். ஏதேதோ தீய செய்திகளைக் கேள்விப் படுகிறோமே. மக்கள் கூட்டமாக அழுது புலம்புகிறார்களே. நாடெங்கும் இதே பேச்சாக உள்ளதே. உண்மையா?”

“இளவழகனாரே! நீங்கள் கேள்விப்பட்ட செய்தி உண்மைதான். அதனால்தான் சோழ நாடே அவலத்தில் ஆழ்ந்து உள்ளது. நகர வீதிகளில் எங்கும் அழுகை ஒலி கேட்கிறது.”

“முத்தனாரே! எல்லாம் அறிந்தவர் நீங்கள். அரசவையில் என்ன நிகழ்ந்தது? விளக்கமாகச் சொல்லுங்கள்.”
“தன்மானம் மிக்கவர் நம் அரசர். புதல்வர்களால் மானத்திற்கு இழுக்கு வந்து விட்டதாகக் கருதுகிறார். அதனால்தான் வடக்கிருந்து உயிர் விடும் முடிவுக்கு வந்து விட்டார்.”

“எங்கு தான் தந்தைக்கும் மைந்தர்களுக்கும் பிணக்கு இல்லை.”

“இளவழகனாரே! நம் அரசர் நீதிநெறி தவறாதவர். வீரம் மிக்கவர். எல்லா நாட்டு அரசர்களும் மதித்துப் போற்றும் நற்பண்பாளர்.

ஆனால் அவருக்குப் பிறந்த மக்கள் இருவருமே தீயவர்களாக உள்ளனர். அவர்களைத் திருத்த அரசரும் தம்மாலான முயற்சி செய்தார். முயற்சி பயன் ஏதும் தர வில்லை. தீயவர்களான அவர்கள் தந்தையையே வெறுக்கத் தொடங்கினார்கள்.”

“நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்த செய்திதானே இது.”

“இளவழகனாரே! இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நம் அரசரை எதிர்த்தனர் அவர் மக்கள். அவருடன் போர் செய்யத் துணிந்து விட்டார்கள்.

அந்தத் தீயவர்களுக்கு ஆதரவாகப் புல்லர்கள் சிலரும் துணை நின்றனர்.
இதைக் கேட்ட அரசர் கோபத்தால் துடித்தார்.

“என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டார்களா என் மக்கள்? அவர்களை இந்த வாளுக்கு இரையாக்குவேன்” என்று போருக்கு எழுந்தார்.

சினம் கொண்ட அவரைப் புலவர் புல்லாற்றூர் எயிற்றியனார் தடுத்தார்.”

“முத்தனாரே! தீயவர்களைக் கொன்று ஒழிப்பது அரச நீதிதானே. எதற்காகப் புலவர் எயிற்றியனார் குறுக்கிட்டார். அவர் என்ன சொன்னார்.?”

“அரசே! நீங்கள் யாரோடு போரிடச் செல்கிறீர்கள்? உங்கள் மக்களுடனா? உங்களுக்குப் பின் ஆட்சிக்கு உரியவர்கள் அவர்கள்தானே.

அவர்களை வென்ற பின் யாருக்கு இந்த நாட்டைத் தரப் போகிறீர்கள்?
இந்த வெற்றியால் உங்களுக்குப் புகழ் வருமா? போரில் தன் மக்களையே கொன்றான் சோழன். இப்படித்தான் உலகம் உங்களை ஏசும். இந்தப் போரில் தோற்றாலோ மாறாகப் பழிதான் உங்களைச் சூழும்.
நான் சொல்வதை எண்ணிப் பாருங்கள். போரில் வென்றாலும் பழிதான். தோற்றாலும் பழிதான் என்றார் எயிற்றியனார்.”

“முத்தனாரே! இதைக் கேட்ட அரசர் என்ன செய்தார்?”
“கோபத்தை அடக்கிக் கொண்ட அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.

“புலவரே! நீங்கள் சொன்னது உண்மைதான். நான் போ‘ரில் வெற்றி பெற்றாலும் தோற்றாலும் பழிக்கு ஆளாவேன். இதிலிருந்து நான் மீள வழியே இல்லை.என் மக்களின் பொருந்தாச் செய்கையினால் பழிக்கு ஆளாகிவிட்டேன். இந்தப் பழி நீங்க வடக்கிருந்து உயிர் துறக்கப் போகிறேன். என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்று உறுதியுடன் சொன்னார்.”
“ஆ! நம் அரசரா அப்படிச் சொன்னார்?”

“அரசர் சொன்னதைக் கேட்டு அவையில் இருந்த எல்லோரும் கலங்கி விட்டனர்.”
“முத்தனாரே! வடக்கிருத்தால் என்றால் என்ன?”

“பெரியவர்கள் தங்கள் மானமே பெரிது என்று கருதுவார்கள். மானத்திற்குச் சிறிது இழிவு வந்தாலும் உயிரை விடத் துணிவார்கள். அப்படி உயிரைத் துறக்கின்ற முறைக்கு வடக்கிருத்தல் என்று பெயர்.
வடக்கிருத்தலுக்கு ஏற்ற இடத்தைத் தேர்ந்து எடுப்பார்கள். அங்கே வடக்கு நோக்கி அமர்வார்கள். உண்ணா நோன்பு இருந்து உயிரை விடுவார்கள்.அது மட்டும் அல்ல. அவருக்காக உயிரை விட முன்வருபவர்களும் அவரோடு வடக்கு இருப்பார்கள்.”
“முத்தனாரே! உண்ணா நோம்பிருந்து உயிர்விடும் முறையா வடக்கிருத்தல். மிகக் கடுமையாக உள்ளதே.”
“இளவழகனாரே! அரசர் வடக்கிருக்கும் இடத்தைப் புலவர் பொத்தியார் தேர்ந்து எடுத்தார்.
அரசரும் அங்கே சென்று வடக்கிருக்க அமர்ந்து விட்டார். புலவர்கள் பலரும் அவருடன் சென்று விட்டனர்.
செய்தி அறிந்த மக்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று கொண்டிருக்கிறார்கள்.”

“முத்தனாரே! நம் அரசரின் பெருமை யாருக்கு வரும்? வடக்கிருக்கும் போதும் நண்பர்கள் சூழ இருக்கிறாரே.”
“இளவழகனாரே! நானும் அரசருடன் வடக்கிருக்கத்தான் செல்கிறேன்” என்று புறப்பட்டார் முத்தனார்.

வடக்கிருப்பதற்காகப் பெரிய திடலைத் தேர்ந்து எடுத்து இருந்தார்கள்.
அதன் ஒரு பக்கத்தில் கோப்பெருஞ் சோழன் அமர்ந்து இருந்தார். அவர் அருகே புலவர் பொத்தியார் உள்ளார். பல புலவர்கள் நெருக்கமாக அமர்ந்து இருக்கின்றனர்.

திடல் முழுவதும் மக்கள் கூட்டமாக அமர்ந்து உள்ளனர்.
“அரசே! இவ்வளவு பெரிய திடலில் எத்தனை பேர் என்று பாருங்கள். எல்லோரும் நெருக்கமாக அமர்ந்து உள்ளனர். நாட்டு மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர் நீங்கள். அதற்கு இதுவே நல்ல சான்று” என்றார் பொத்தியார்.

“பொத்தியாரே புலவர்கள் பலரும் என்னுடன் நெருக்கமாகவே அமர்ந்து உள்ளீர்கள். வடக்கிருக்கும் போதும் உங்களுடன் இலக்கியச் சுவை நுகருகின்றேனே. என் வாழ்வில் பெரும் பேறாகக் கருதுகின்றேன்.
என் வேண்டுகோள் ஒன்று. எனக்காக நீங்கள் அனைவரும் ஓர் உதவி செய்ய வேண்டும்.”
அங்கிருந்த புலவர்கள் திகைத்தனர்.

“அரசே! எங்களை வடக்கிருக்க வேண்டாம் என்று சொல்லி விடாதீர்கள். உங்கள் கட்டளை வேறு எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுகிறோம்” என்றார் பொத்தியார்.

“புலவர்களே! பெரும்புலவர் பிசிராந்தையார் என் உயிர் நண்பர். நான் வடக்கிருக்கும் செய்தி அறிந்ததும் அவர் இங்கே ஓடி வருவார். அவருக்கு என் அருகே ஓர் இடம் ஒதுக்கி வையுங்கள். இது என் வேண்டுகோள்” என்றார் அரசர்.

இதைக் கேட்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர்.
“அரசே! நீங்கள் சொல்வது பாண்டிய நாட்டுப் புலவராகிய பிசிராந்தையாரைத்தானே. அவர் தம் ஊராகிய பிசிரை விட்டு அதிகம் வெளியே வந்தது இல்லை.

பல ஊர்கள் சுற்றும் புலவர்கள் நாங்கள். அவர் பெயரைத்தான் கேட்டு இருக்கிறோம். அவரை நேரில் பார்த்தது இல்லை. அவர் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்ததாகவும் எனக்குத் தெரிய வில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.

“நீங்கள் சொல்வது உண்மைதான். பிசிராந்தையார் நம் சோழ நாட்டிற்கு வருகை தந்தது இல்லை. நானும் பாண்டிய நாட்டிற்குச் சென்றது இல்லை. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்ததும் இல்லை.”
“அரசே! நீங்களும் பிசிராந்தையாரும் சந்தித்தது இல்லை என்கிறீர்கள். பேசிப் பழகவில்லை என்கிறீர்கள்.
உங்களுக்காக வடக்கிருந்து உயிர் விட அவர் இங்கே வருவார். அவருக்கு இடம் ஒதுக்கி வையுங்கள் எனச் சொல்கிறீர்கள். அவர் இங்கே வருவாரா? எங்களால் நம்ப முடியவில்லையே” என்று கேட்டார் பொத்தியார்.
“பொத்தியாரே! நானும் பிசிராந்தையாரும் உள்ளம் ஒன்றுபட்ட உயிர் நண்பர்கள். என்னுடைய உள்ளம் அவர் அறிவார். அதே போல அவருடைய உள்ளத்தை நான் அறிவேன். நல்ல நட்பிற்கு, உயர்ந்த நட்பிற்குப் பேசிப் பழக வேண்டுமா?”

“அரசே! பேசாமல் பழகாமல் நட்பு எப்படி வளர முடியும்? உங்கள் பெருமையையும் புகழையும் பிசிராந்தையார் அறிந்து இருக்கலாம். அதே போல அவருடைய புலமைச்சிறப்பை நீங்கள் அறிந்து இருக்கலாம்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு கொண்டிருக்கலாம். இந்தச் சூழலில் அவர் உங்களுக்காக வடக்கிருக்க வருவார் என்கிறீர்களே. இதை என்னால் நம்ப முடியவில்லை.”

“பொத்தியாரே! பிசிராந்தையார் என்னை நண்பனாக விளித்துப் பாடல் எழுதி உள்ளார். நானும் அவருக்கு மடல் எழுதி உள்ளேன். மடல் வழியாக நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு அறிவோம்.
நல்ல நட்பிற்குப் புணர்ச்சி பழகுதல் வேண்டா. இது உங்களுக்குத் தெரியாதா? எனக்காக உயிரை விட பிசிராந்தையார் இங்கே வருவார். இது உறுதி. என் அருகில் அவருக்கு ஒரு இடம் ஒதுக்கி வையுங்கள்.”
“அரசே! பிசிராந்தையார் இங்கு வருவதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வடக்கிருக்கும் செய்தி அவரை அடைய இரண்டு திங்களாவது ஆகும். இல்லக் கடமைகளை எல்லாம் ஒழுங்கு செய்ய வேண்டும். அதன் பிறகே அவர் புறப்பட முடியும். இங்கு வர மேலும் சில நாட்கள் ஆகும்.

அதற்குள் நீங்கள் விண்ணுலகம் சென்று விடுவீர்கள். அவர் வந்தாலும் உங்களைச் சந்திக்க முடியாது.
இங்குள்ள இட நெருக்கடி உங்களுக்கே தெரியும். இந்தச் சூழலில் உங்களுக்கு அருகில் அவருக்கு இடம் ஒதுக்க வேண்டுமா?”

“பொத்தியாரே! எங்கள் நட்பின் ஆழத்தை நீங்கள் அறியவில்லை. அவருடைய வருகைக்காக என் உள்ளம் துடிப்பது எனக்குத்தான் தெரியும். என் உயிர் நண்பர் வளமான காலத்தில் சந்திக்காமல் இருந்து இருக்கலாம். இப்பொழுது என்னைக் காண ஓடோடி வருவார்.”

“அரசே! என்னை மன்னியுங்கள். இட நெருக்கடியால்தான் மறுத்துப் பேச வேண்டி வந்தது. உங்களுக்கு அடுத்தே பிசிராந்தையாருக்கு இடம் ஒதுக்கி உள்ளோம். இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிதானே.”
“மகிழ்ச்சி பொத்தியாரே! என் மக்கள் மீது கொண்ட பிணக்கு. அதனால் ஏற்பட்ட சூழல்களால் உங்களை மறந்து விட்டேன்.

உங்கள் மனைவி கருவுற்று இருப்பதாக மகிழ்ச்சியுடன் சொன்னீர்களே. குழவி பிறந்து விட்டதா? ஆண் குழவியா? பெண் குழவியா?”
“அரசே! பெற்ற மகவைப் பார்ப்பதா பேறு? உங்களுடன் உயிர் விடுவதே பெரும் பேறு.”
“பொத்தியாரே! வடக்கிருக்கும் மரபு உங்களுக்குத் தெரிந்து இருக்குமே. யார் யார் வடககிருக்கலாம். யார் யார் கூடாது என்ற விதி தெளிவாக உள்ளதே.

திருமணம் ஆகாதவர்கள். கருவுற்ற மனைவியை உடையவர்கள். அவர் வருவாயையே நம்பி இருக்கும் குடும்பத்தினர். இப்படிப்பட்டவர்கள் வடன்கிருத்தல் கூடாது.
வடக்கிருப்பவர்கள் இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்களாக இருக்க வேண்டும்.
மானத்திற்கு இழுக்கு வந்ததால் நான் வடக்கிருக்கிறேன். இல்லக் கடமைகளை நிறைவேற்றியவர்கள் மட்டுமே என்னுடன் வடக்கிருக்க வேண்டும்.”

“அரசே! வடக்கிருக்கும் மரபை நான் நன்கு அறிவேன். இருந்தாலும்.”
“மனைவி கருவுற்று இருக்கும் நிலையில் எப்படி இங்கு வந்தீர்? இதனால் எனக்குத்தானே பழி வந்து சேரும். உடனே இங்கிருந்து புறப்படுங்கள். மகவின் அழகிய திருமுகத்தைப் பாருங்கள். தமிழ்ப் பெயர் சூட்டுங்கள். உங்கள் மனைவிக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் சொல்லுங்கள். இல்லக் கடமைகளை நிறைவேற்றிய மகிழ்ச்சியில் இங்கே வந்து வடக்கிருங்கள்.”

“அரசே! அறநெறிகளை விதிமுறைகளைச் சொல்லி என்னை இங்கிருந்து அனுப்பி விடாதீர்கள். உங்களுடனேயே வடக்கிருந்து உயிர்விட விரும்புகிறேன். என் எண்ணத்திற்கு மாறாக நடந்து கொள்ளாதீர்கள். இது என் அன்பு வேண்டுகோள்.”

“பொத்தியாரே! நீங்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இல்லப் பொறுப்புகளை நிறைவேற்றிய பின்னரே வடக்கிருக்க வேண்டும். என் மீது உங்களுக்கு உண்மையான அன்பிருந்தால் இல்லத்திற்குச் சொல்லுங்கள். பிறக்கும் குழந்தையில் திருமுகத்தைக் கண்டு மகிழுங்கள். இல்லக் கடமைகளை முடித்து விட்டு இங்கே வாருங்கள். இது என் அன்புக் கட்டளை.”

“அரசே! உங்கள் அன்பை மீறும் ஆற்றல் எனக்கு இல்லை. இப்பொழுதே என் இல்லத்திற்குச் செல்கிறேன். நான் மீண்டும் இங்குத் திரும்பச் சில திங்கள் ஆகும்.

அப்பொழுது நீங்கள் விண்ணுலகம் சென்றிருப்பீர்கள். உங்கள் திருமுகத்தை என்னால் காண இயலாது. உங்கள் நினைவாகவே இங்கே வடக்கிருந்து உயிர் விடுவேன்” என்று கண்ணீர் வழிய புறப்பட்டார் பொத்தியார்.
கோப்பெருஞ் சோழனும் புலவர்களும் அவரை வழியனுப்பி வைத்தார்கள்.

கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி எங்க்ம் பரவியது. நாள்தோறும் பலர் அங்கு வந்து வடக்கிருந்தனர்.
சில நாட்களில் கோப்பெருஞ் சோழன் உயிர் துறந்தார். வடக்கிருந்த இடத்திலேயே அவரை நல்லடக்கம் செய்தார்கள். அங்கே நடுகல் நட்டார்கள். அவரோடு வடக்கிருப்பவர்களும் ஒவ்வொருவராக இறந்தனர்.

மூன்று திங்கள் கழிந்தது- புலவர் பொதியார் அங்கு வந்தார். வடக்கிருக்கும் பெரியவர்கள் சிலர் அவரை வரவேற்றார்கள். தமக்கு உரிய இடத்தில் அவர் அமர்ந்தார்.

கோப்பெருஞ் சோழனுடன் உயிர் துறக்க இயலவில்லையே” என்று கலங்கினார்.
“ஆ! நண்பனே! நற்பண்பாளனே! உலகம் போற்றும் புகழோனே! மானமே பெரிதென்று உயிர் துறந்தாயே! உன் புகழ் உலகு உள்ளளவும் நிலைத்து நிற்குமே!

கடமைகளை முடித்து விட்டு வரச் சொன்னாயே! அப்படியே வந்து விட்டேன். என்னை விட்டு எங்கே சென்றாய்?
இறக்கும் போது அருகில் இருக்கும் பேறு கிடைக்க வில்லையே. கொடியவனாகி விட்டேனே.

காலனே! நண்பன் இல்லாமல் நான் உயிர் வாழ்வேனா? என் உயிரையும் உடனே எடுத்துச் செல்” என்று புலம்பினார் அவர்.

அங்கிருந்த பெரியவர் ஒருவர், “புலவரே! உங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி எனக்கு இல்லை. மானத்தின் பெருமை காக்க உயிர் விட்டார் நம் அரசர். நாமும் அவருக்காக உயிரை விட வந்து உள்ளோம்.
இங்கே அழுகை ஒலியோ புலம்பல் ஒலியோ கேட்க வேண்டாம்.

நம் அரசரைப் பற்றிய இனிய நினைவுகளைச் சொல்லுங்கள். வாழ்க்கையின் உண்மை நிலையினை விளக்குங்கள். நல்ல அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டே நாங்கள் பெருமிதத்துடன் உயிர் விடுகிறோம்” என்றார்.

“பெரியவரே! மன்னியுங்கள். எல்லை மீறிய உணர்ச்சியில் என்னேயே மறந்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி. உயர்ந்த குறிக்கோளுக்காக இங்கே உயிர் விட வந்துள்ளோம். அழுது புலம்பி அதன் மதிப்பைக் குறைக்க மாட்டேன்.

நிலையான மெய்ப் பொருள்களைப் பற்றி இனி நாம் உரையாடுவோம். சாகும் போதும் இனிமையாகச் சாவோம்” என்று உணர்ச்சி பொங்கச் சொன்னார் பொத்தியார்.

மறுநாள் அங்கே பெரியவர் ஒருவர் வந்தார்.
அறிஞரைப் போல அவர் தோற்றம் இருந்தது. நீண்ட பயணம் செய்தவரைப் போலக் காட்சி அளித்தார் அவர்.
வடக்கிருக்கும் போலக் காட்சி அளித்தார் அவர்.

“மதிப்பிற்கு உரியவரைப் போல இவர் தோற்றம் உள்ளது. யார் என்று கேட்போம்” என்று நினைத்தார் பொத்தியார். எழுந்து அவரை வரவேற்றார்.

“பெரியவரே! நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? சொல்லுங்கள்? அப்பொழுதுதான் உங்களுக்கு உரிய இடத்தை ஒதுக்க முடியும்” என்றார் பொத்தியார்.

“ஐயா! நான் பாண்டிய நாட்டுப் புலவன். என் ஊர் பிசிர். பிசிராந்தையார் என்று என்னை அழைப்பார்கள். உயிர் நண்பர் கோப்பெருஞ் சோழன் வடக்கிருக்கும் செய்தி கிடைத்தது. வடக்கிருந்து உயிர் துறக்க நானும் இங்கு வந்தேன்.”

“ஆ! தமிழ் கூறும் நல்லுலகம் போற்றும் பெரும்புலவர் பிசிராந்தையாரா நீங்கள்? பாண்டியன் அறிவுடை நம்பி மக்களிடம் அதிக வரி வாங்கினான். அவனுக்கு அறிவுரை சொல்வதற்காகக் “காய்நெல் அறுத்து” என்ற பாடலை பாடினீர்களே? அரசர்கள் எப்படி வரி வாங்க வேண்டும். இதற்கு இலக்கணமாக அந்தப் பாடலையே பயன் படுத்துகிறார்களே.”

“நீங்கள் சொன்ன அத்தனைக்கும் உரியவன் அடியேன்தான். அன்பின் மிகுதியால் பலர் என்னை இப்படிப் புகழ்கிறார்கள். நீங்கள் யார் என்று சொல்ல வில்லையே?”
“பெரும்புலவரே! என் பெயர் பொத்தியார்.”

“புலவர் பொத்தியாரா! என் உயிர் நண்பருக்கு எல்லாமாக இருந்தவரா? உங்களைச் சந்திக்கும் பேறு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்க வில்லை. கோப்பெருஞ் சோழனுடன் நீங்களும் உயிர் துறந்து இருப்பீர்கள் என்று நினைத்தேன்.”

“நீங்கள் நினைத்தது போலத்தான் நடந்திருக்க வேண்டும். என் மனைவி கருவுற்று இருந்தாள். அவள் மகவு ஈன்ற பிறகு வருமாறு அரசர் கட்டளை இட்டார்.

“என் இல்லக் கடமைகளை முடித்து விட்டேன். வடக்கிருக்க நேற்றுத்தான் இங்கு வந்தேன். அப்படி நடந்ததும் நல்லதற்குத்தான் அதனால் உங்களைச் சந்திக்கும் பேறு பெற்றேன்.”

கோப்பெருஞ் சோழன் தமக்கு அருகிலேயே உங்களுக்கு இடம் ஒதுக்கி வைத்துள்ளார். நீங்கள் இங்கே அமரலாம்.”
“பொத்தியாரே! எந்த இடம்? காட்டுங்கள்.”
“என் அருகில் உள்ள இந்த இடம்தான்.”
பிசிராந்தையார் அந்த இடத்தில் அமர்ந்தார்.

அருகிருந்த மற்ற புலவர்கள் அவரை வியப்புடன் பார்த்தார்கள்.
பொத்தியார் தயக்கத்துடன் “பெரும் புலவரே! எனக்கு ஓர் ஐயம்?” என்று கேட்டார்.
“எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள்.”

“நான் கோப்பெருஞ் சோழனுக்கு நெருங்கிய நண்பன். நான் அவரைப் பிரிந்ததோ அவர் என்னைப் பிரிந்ததோ இல்லை. நான் அறிந்து கோப்பெருஞ் சோழனை நீ சந்தித்ததோ பேசியதோ இல்லை.
உங்கள் பெரும்புலமையைப் அவர் அறிந்து இருக்கலாம். அவருடைய வள்ளன்மையைப் பற்றியும் புலமையைப் பற்றியும் நீங்கள் கேட்டிருக்கலாம். ஒருவரை ஒருவர் அறியாமலே நட்பும் கொண்டிருக்கலாம். மடல் வழியாக இருவர் நட்பும் வளர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

பார்க்கலாம். பழகாமல் உங்கள் இருவருக்கும் நெருங்கிய நட்பு எப்படி மலர்ந்தது? எனக்கு வியப்பாக உள்ளது.”
“பொத்தியாரே! உயர்வுதான் நட்பிற்கு அடிப்படை. பேசுவதும் பழகுவதும் நட்பின் வெளிப்பாடுகள். உள்ளத்தால் கலப்பதே உயர்ந்த நட்பு.

நானும் கோப்பெருஞ் சோழனும் உள்ளத்தால் ஒன்றுபட்டு இருந்தோம். ஆனால் உடலால் பிரிக்கப்பட்டு இருந்தோம். நீண்ட தொலைவு எங்களைச் சந்திக்க இயலாமல் தடுத்தது. அதனால் என்ன? உள்ளம் ஒன்றுபட்ட நாங்கள் மடல் வழியாக உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டோம்.

அவர் உள்ளத்தை நான் அறிவேன். என் உள்ளத்தை அவர் அறிவார். இணைந்த எங்கள் உள்ளங்கள் காலத்தாலோ நாட்டாலோ பிரிக்கப் படுவன அல்ல” என்றார் பிசிராந்தையார்.
“புலவரே! உங்களை வியப்பதா? அல்லது கோப்பெருஞ் சோழனை வியப்பதா? யாரை வியப்பது என்று புரியாமல் குழம்பி நிற்கிறேன்.”
“பொத்தியாரே! என்ன சொல்கிறீர்?”

“என்னுடன் வடக்கிருந்து உயிர் துறக்கப் பிசிராந்தையார் வருவார். அவருக்காக என் அருகே ஓர் இடம் வையுங்கள் என்றார். நாங்கள் கோப்பெருஞ் சோழனிடம் எவ்வளவோ மறுத்து உரைத்தோம். ஆனால் அவரோ நீங்கள் இங்கே வருவீர்கள் என்று உறுதியுடன் சொன்னார்.
அவர் சொன்னது போலவே நீங்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். இருவரில் யார் செயலை வியப்பது என்று தான் குழப்பம்.”

“பொத்தியாரே! ஒருவர் உள்ளத்தை இன்னொருவர் அறிவதே உண்மை நட்பு. இதில் வியப்பதற்கு என்ன உள்ளது?
என் நண்பர் வடக்கிருக்கும் செய்தியைக் கேள்விப்பட்டேன்.

நான் செய்ய வேண்டிய இன்றியமையாக் கடமைகளை விரைந்து முடிந்தேன். இங்கு வந்தேன் அதற்குள் என் உணிர் நண்பர் விண்ணுலகம் சென்று விட்டார்.

காணாமலே காதல் என்பார்கள். பிறகு சந்தித்து உரையாடி மகிழ்வார்கள். என் நிலையைப் பாருங்கள். என் உயிர் நண்பரை நான் இதுவரை சந்தித்தது இல்லை.
அவருடைய உள்ளத்தை அறிவேன். அவர் தோற்றம் எப்படி இருக்கும் என்பதை அறியேன். இங்கு வந்ததும் அவரைச் சந்திக்க இயல வில்லை.

என் வருகைக்காக அவர் விண்ணுலகில் ஆவலுடன் காத்திருப்பார். விரைவில் என் உயிர் நீங்க வேண்டும். என் நண்பரைச் சந்தித்து மகிழ வேண்டும். இதுதான் என் ஆவல்” என்றார் பிசிராந்தையார்.

“பிசிராந்தையாரே! நீங்களும் கோப்பெருஞ் சோழனும் சிறந்த நட்பிற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறீர்கள். இனி இந்த உலகமே உங்கள் நட்பைப் போற்றிப் புகழப் போகிறது. உங்கள் இருவர் புகழும் என்றும் நிலைத்து நிற்கும். உங்கள் காலத்தில் வாழும் பேறு பெற்றதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார் பொத்தியார்.

1. “எண்ணில் காட்சி யிளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்கெஞ் சுவையே
அமர்வெஞ் செல்வ நீயவர்க் குலையின்
இகழுந ருவப்பப் பழியெஞ் சுவையே
(புறநானூற்றுப் பாடல் 212, அடிகள் 15 முதல் 18 வரை, புல்லாற்றூர், எயிற்றியனார் பாடியது).

2. வடக்கிருத்தல்: – வடக்கிருத்தலாவது ஊர்ப் புறத்தே
தனியிடங்கண்டு அறமுரைக்கும் சான்றோர் புடைசூழப்
புல்லைப் பரப்பி அதன் மீதிருந்து உண்ணா நோன்பு
மேற்கொண்டு அறங்கூறும் தவம் செய்தலாகும்.
(புறநானூறு – இரண்டாம் தொகுதி – ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை உரை – கழக வெளியீடு)

3. தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
பிசிரோ னென்பவென் னுயிரோம் புநனே
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே
(புறநானூற்றுப் பாடல் 215, பாடல் அடிகள் 6 முதல் 10 வரை)

4. இசை மரபாக நட்புக் கந்தாக
இனையதோர் காலை யீங்கு வருதல்
வருவ னென்ற கோனது பெருமையும்
அதுபழு தின்றி வந்தவ னறிவும்
வியத்தொறும் வியத்தொறும் யிப்பிறந் தன்றே
(புறநானூற்றுப் பாடல் 217, பாடல் அடிகள் 5 முதல் 9 வரை)

அரசர் கதைகள் – முல்லைக்குத் தேர்

இயற்கை வளம் நிறைந்த மலை பறம்பு மலை. அந்த மலையைச் சூழ்ந்து அழகான முந்நூறு ஊர்கள் இருந்தன. பறம்பு நாடு என்று அழைத்தனர்.
பறம்பு நாட்டைப் பாரி என்ற அரசர் ஆண்டு வந்தார். தமிழ் மீது பேரன்பு கொண்டிருந்தார் அவர். புலவர்களை மதித்துப் போற்றினார்.

தன்னை நாடி வந்தவர்களுக்கு இல்லை என்னாது வாரி வழங்கினார். வள்ளல் பாரி என்று அவரை எல்லோரும் புகழ்ந்தார்கள். அவர் புகழ் உலகெங்கும் பரவியது.
பெரும் புலவர் கபிலர் அவரின் நெருங்கிய நண்பராக விளங்கினார்.
அவருடைய அரசவையில் புலவர்கள் நிறைந்து இருந்தார்கள். அவரைப் புகழ்ந்து பாடுவதைப் புலவர்கள் பெருமையாகக் கருதினார்கள்.

வழக்கம் போல அரசவை கூடியிருந்தது. அரியணையில் அமர்ந்து இருந்தார் பாரி. புலவர்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
செல்வம் மிகுந்தவர்களைப் போலப் புலவர்கள் காட்சி தந்தனர்.

புலவர் எழிலனார் எழுந்தார். அரசர் பெருமான் வாழ்க! அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள்?
அவர் வள்ளன்மையால் இரவலர்களே இந்த நாட்டில் இல்லை! என்று புகழ்ந்தார்.
அடுத்ததாகப் புலவர் திண்ணனார் எழுந்தார். புலவர் எழிலனார் சொன்னது முக்காலத்திற்கும் பொருந்தும். வாரி வழங்கும் வள்ளல் என்றாலே அது பாரி தான். அவரைப் போன்று எந்த அரசரும் கடந்த காலத்தில் இருந்தது இல்லை. நிகழ் காலத்திலும் இல்லை. வரும் எதிர் காலத்திலும் இருக்கப் போவது இல்லை . இது உறுதி என்றார்.
பயன் நோக்காமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் விறலியர் வந்தால் போதும். தம் நாட்டையே பரிசாக நல்குவார். அது மட்டும் அல்ல. தம் உயிரையே கேட்டாலும் மகிழ்ச்சியுடன் தருவார்.

பழங்கள் நிறைந்த மரத்தைப் பறவைகள் தேடி வரும். அதே போலப் புலவர்கள் பாரியை நாடி வந்த வண்ணம் உள்ளார்கள் என்று புகழ்ந்தார் நன்னனார்.
அடுத்ததாகப் பெரும் புலவர் கபிலர் எழுந்தார். எப்பொழுதும் கருத்துகளில் மோதும் புலவர்கள் நீங்கள். என்ன வியப்பு! வள்ளல் பாரியைப் புகழ்வதில் ஒன்று பட்டு இருக்கிறீர்கள்.
புலவர்களிடம் பொது நோக்கு வேண்டாமா? பயன் கருதாமல் வாரி வழங்குபவர் வள்ளல் பாரி மட்டும் தானா? இன்னொருவரும் இருக்கின்றாரே. ஏன் நீங்கள் அவரை மறந்து விட்டீர்கள்? உங்களில் யாரும் அவரைப் புகழ வில்லையே. ஏன்? என்று கேட்டார்.

பாரியை இகழ்ந்து கபிலர் பேசுகிறாரே என்று புலவர்கள் திகைப்பு அடைந்தனர்.
கபிலரே! என்ன பேசுகின்றீர்? முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நன்னாடு. முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர். இவ்வாறு பாரியைப் புகழ்ந்து பாடியவர் நீங்கள் தானே.
ஆனால் இப்பொழுதோ பாரியை இகழ்ந்து பேசுகிறீர். இது முறையா? அவரைப் போன்று வாரி வழங்கும் வள்ளல் யார் இருக்கிறார்கள் என்றார் எழிலனார்.

பாரியின் அருள் உள்ளத்தை எல்லோரும் அறிவார்கள். அவரைப் போலவே வாரி வழங்க முடியுடை மூவேந்தர்களும் முயன்றனர். அவர்களால் வெற்றி பெற முடிய வில்லை. வள்ளல் என்று சொன்னாலே அது பாரியைத் தான் குறிக்கும். இதை இந்த உலகமே அறியும்.

கபிலரே! பாரியைப் போன்றே கைம்மாறு கருதாது உதவுபவர் இன்னொருவர் இருக்கிறாரா? யார் அவர்? பெயரைச் சொல்லும் என்று கோபத்துடன் கேட்டார் திண்ணனார்.
பெரும் புலவர் கபிலரே! வள்ளல் பாரியின் நெருங்கிய நண்பர் நீங்கள். அவரது வள்ளன்மையை நன்கு அறிந்தவர். பறம்பு மலைக்கு வந்து யாரும் பரிசில் பெறாமல் சென்றது இல்லை.
கைம்மாறு கருதாமல் வாரி வழங்கும் வள்ளல் பாரி ஒருவர் தான். இன்னொருவர் இருக்கவே இயலாது. அப்படி இருந்தால் சொல்லுங்கள் என்றார் நன்னனார்.

கபிலர் எழுந்தார். புலவர்களே! வள்ளல் பாரியிடம் நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பைக் கண்டு மகிழ்கிறேன். பாரியைப் போன்றே வாரி வழங்கும் வள்ளல் இன்னொருவர் இருக்கிறார். அவரை உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் அனைவரும் பாரி ஒருவரையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இன்னொருவரை மறந்து விட்டீர்கள் என்றார் அவர்.
கபிலரே! புதிர் போடாதீர்கள். பாரியைப் போன்றே வாரி வழங்கும் இன்னொரு வள்ளல் யார்? அவர் பெயரைச் சொல்லுங்கள என்று கேட்டார் எழிலனார்.

புலவர்களே! பாரி போன்றே மாரியும் கைம்மாறு கருதுவது இல்லை. மழை பொழிந்து இந்த உலகைக் காப்பாற்றுகிறது. மாரி மழை பொழிய வில்லை. பிறகு இந்த உலகின் நிலை என்ன ஆகும்?
நீங்கள் மாரியை மறந்து விட்டீர்கள். வாரி வழங்கும் வள்ளல் என்று பாரியையே புகழ்ந்து பாடுகிறீர்கள். இது தகுமா? அதனால் தான் இப்படிக் கேட்டேன் ! என்றார் கபிலர்.
இந்த விளக்கத்தைக் கேட்ட புலவர்கள் மகிழ்ந்தனர்.

கபிலரே! வள்ளல் பாரிக்கு இணையானவர் யாரும் இந்த நிலவுலகத்தில் இல்லை. கைம்மாறு கருதாமல் மழை பொழிந்து உலகத்தைக் காக்கிறது. மாரி. அந்த மாரி தான் அவருக்கு ஒப்பாகும்.
மாரி போன்றவர் பாரி எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர். உங்கள் புலமைக்கு என் பாராட்டுகள் என்றார் நன்னனார்.

கபிலரே! உம்மைப் பெரும் புலவர் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். அது உண்மை தான் என்றார் எழிலனார்.
புலவர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தார். பார். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைத்தது.

அரச உடை அணிந்து பெருமிதமாகக் காட்சி அளித்தார் பாரி. அரண்மனையில் உலாவிக் கொண்டிருந்தார்.
தேரோட்டி அங்கு வந்தான்.
அரசே! வாழ்க! நீதி நெறி தவறாத மன்னவ வாழ்க! குடிமக்களைக் காக்கும் கோவே வாழ்க! என்று பணிவாக வணங்கினான்.

தேரோட்டியே! உன் வருகைக்காகத் தான் காத்திருந்தேன். நம் நாட்டின் மலை வளம் காண விரும்புகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றார் பாரி.
அரசே! அரண்மனை வாயிலில் தேர் நிற்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் புறப்படலாம் என்றார் அவர்.
தேரோட்டி முன்னே செல்லப் பாரி பின்னால் வந்தார்.
அரண்மனை வாயிலில் அலங்கரிக்கப் படட அழகான தேர் இருந்தது. அதில் வலிமையான குதிரைகள் பூட்டப் பட்டு இருந்தன.

அரசரும் பெருமிதத்துடன் தேரில் ஏறி அமர்ந்தார்.
சூழ்ந்து நின்ற வீரர்களைப் பார்த்தார் அவர். நான்மலை வளம் காணச் செல்கிறேன். நீங்கள் யாரும் என்னுடன் வர வேண்டாம். நீங்கள் வந்தால் அங்கே பெரும் ஆரவாரம் எழும். நான் காண விரும்பும் இனிய சூழல் கெடும். என்றார்.

வீரத் தலைவன் அரசரைப் பணிவாக வணங்கினான். அரசே! உங்கள் கட்டளைப் படி நடப்போம் என்றான்.
தேரோட்டி! தேரைச் செலுத்து என்றார் அரசர் பாரி.
தேர் வேகமாகச் செல்லத் தொடங்கியது. சிறிது நேரத்தில் தலை நகரம் அவர்கள் கண்ணுக்கு மறைந்தது. மலைப் பாதையில் தேர் ஏறத் தொடங்கியது.

தேரோட்டி! தேரை மெல்ல செலுத்து. வளமான பறம்பு மலை எவ்வளவு அழகாகக் காட்சி தருகிறது. இதன் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமே. ஆட்சியைத் துறந்து இங்கேயே இருந்து விடலாம்.
அடிக்கடி இங்கு வர விரும்புகிறேன். அரச அலுவல்களால் அது முடிவது இல்லை. இந்த இயற்கைச் சூழலில் என் உள்ளம் புத்துணர்ச்சி பெறுகிறது. வெற்றுப் புகழுரைகளை அரண்மனையில் கேட்டுக் கேட்டு சலித்து விட்டது.
இங்கே என்ன அமைதியான சூழல்! எங்கும் பசுமை நிறைந்து வளமாகக் காட்சி அளிக்கிறதே!
ஆம் அரசே! இந்த மலை வளம் தான் நம் நாட்டிற்கு வற்றாத செல்வத்தைத் தருகிறது.
தேரோட்டி! நீயும் மற்றவர்களைப் போலத் தான் இருக்கிறாய். இந்த மலை தரும் செல்வத்தையே பெரிதாக எண்ணுகிறாய். ஆனால் நானோ இந்தச் செல்வத்தைப் பெரிதாக நினைக்கவில்லை. என்னை அறியாத ஏதோ ஒரு இன்ப வெள்ளத்தில் மூழ்குகிறேன்.
அருவி கொட்டும் ஓசை உன் செவிகளில் வீழ்கிறதா?
அரசே! என் செவிகளிலும் வீழ்கிறது. ஆ! என்ன சுவையான அருவி நீர். இதன் சுவையைப் புகழ்ந்து பாடாத புலவர்களே இல்லையே. இந்த அருவி நீரைக் குடித்தவர்க்குத் தேனும் துவர்க்குமே. நம் நாட்டை வளமாக்கும் வற்றாத அருவி ஆயிற்றே!
அந்த அருவி கொட்டும் ஓசை இனிய இசையாக என் செவிகளில் வீழ்கிறது. அந்த இசையில் என்னையே நான் மறந்து விடுகிறேன். மலைப் பகுதிக்கு வந்து விட்டோம். இனிமேல் தேர் அசைந்து மெல்ல செல்லட்டும். தேரில் கட்டியுள்ள மணிகளை எடுத்து விடு.
அப்படியே செய்கிறேன். அரசே என்ற தேரோட்டி மணிகளை எடுக்கிறான்.
எதற்காக மணிகளை எடுக்கச் சொன்னேன்? தெரியுமா?
அரசே! தேரின் மணியோசை கேட்டு இங்குள்ள உயிர்கள் அஞ்சும். அவற்றின் இனிமைக்கு எந்த இடையூரும் ஏற்படக் கூடாது. அதனால் தானே இங்கு வரும் போது தேரின் மணிகளை எடுக்கச் சொல்கிறீர்கள்.
தேரோட்டியே! என் உள்ளத்தைப் புரிந்து வைத்திருக்கிறாய். தேரை நிறுத்து. அதோ அங்கே பார். எவ்வளவு மகிழ்ச்சியாக மான் கூட்டங்கள் துள்ளிக் குதித்து ஓடுகின்றன. அந்த மான் குட்டியின் அழகைப் பார். அதன் மருண்ட பார்வைக்கு இந்த உலகத்தையே பரிசாக அளிக்கலாமே.
அரசே! இங்கேயே சிறிது நேரம் இருந்து விட்டோம். மான்கள் கூட்டமும் சென்று விட்டது. தேரை மெல்ல செலுத்தட்டுமா?
செலுத்து .

தேர் மெல்ல நகர்கிறது.
ஆ! மேகக் கூட்டங்களைக் கண்ட மயில்களுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி! தோகையை விரித்து ஆடுகின்றனவே.
இவற்றின் தோகைகள் வான வில்லின் வண்ணத்தையே மிஞ்சுகின்றனவே.
என்ன அழகிய காட்சி! இயற்கை தரும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது?

தேர் அங்கிருந்து மெல்ல நகர்கிறது.
ஆ! மான்களும் மயில்களும் என்னுடன் பேசுவதைப் போல் உணர்கிறேனே. வண்டுகளும் தும்பிகளும் தேனீக்களும் இசை எழுப்புகின்றனவே. அவை என்னை வாழ்த்துவதைப் போல் உள்ளதே!
நிழல் தரும் இந்த இனிய மரங்கள் காற்றில் அசைகின்றனவே. என்னிடம் ஏதோ பேச முற்படுவதைப் போல உள்ளதே. கொடிகள் அசைந்து ஆடுவது என்னிடம் கொஞ்சுவதைப் போல உள்ளதே.
உணர்வு எல்லா உயிரினங்களுக்கும் பொதுமையானது தானே. அதைச் சொல்ல நா வேண்டுமா? கேட்க செவி வேண்டுமா? நமக்கு உணர்வு இருந்தால் எல்லாவற்றின் உணர்வுகளையும் அறிந்து கொள்ளலாமே.
சூழ்ச்சி வஞ்சம் ஏதும் அறியாத இனிய உலகம் அல்லவா இது. மானாக மயிலாக நான் பிறக்க வில்லையே. அப்படிப் பிறந்து இருந்தால் இங்கேயே மகிழ்ச்சியாக இருப்பேனே.

தேர் மெல்ல சென்று கொண்டிருந்தது.
ஒரு முல்லைக் கொடிக்கு அருகில் கொழு கொம்பு இல்லை. அதனால் காற்றில் அங்கும் இங்கும் ஆடிக் கொண்டிருந்தது.
இந்த அவலக் காட்சியைக் கண்டார் பாரி.
அவர் உள்ளம் துடித்தது. ஆ என்று அலறினார். தேரிலிருந்து கீழே குதித்தார்.
எதிர்பாராதது நடந்ததைக் கண்டு திகைத்தான் தேரோட்டி, தேரை நிறுத்தினான்.
தேரை விட்டு இறங்கிய அவன் அரசே என்ன நிகழ்ந்தது? என்று பணிவாகக் கேட்டான். அவரைப் பின் தொடர்ந்தான்.
ஏதும் பேசாத அவர் அந்த முல்லைக் கொடியின் அருகே சென்றார். கொழுகொம்பு இல்லாததால் காற்றில் தள்ளாடித் தவிக்கும் அந்தக் கொடியை பார்த்தார். அருள் உள்ளம் கொண்ட அவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
முல்லைக் கொடியே! உன் நிலை இரங்கத் தக்கது. நீ படர்ந்து தழைக்க அருகே கொழு கொம்பில்லை. காற்று அலைக் கழிக்க நீ அங்கும் இங்கும அசைந்து துன்புறுகிறாய்.
இந்தக் காட்சி என்னிடம் முறையிடுவது போல உள்ளதே.

மன்னனே! எல்லோர்க்கும் நீதி வழங்குபவனே! என் அவல நிலையைப் பார்த்தாயா? கொழு கொம்பின்றித் தவிக்கிறேனே. எனக்கு அருள் செய்ய மாட்டாயா என்று கேட்கிறதே.
என்னிடம் வந்து யாரும் வெறுங்கையுடன் சென்றது இல்லை. அவர்கள் நினைத்ததற்கு அதிகமாகப் பரிசிலைப் பெறுவார்கள். மகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

முல்லைக் கொடியே! நீ இரந்தது வாரி வழங்கும் வள்ளல் பாரியிடம். பாரியின் வள்ளன்மையை நீ உணரப் போகிறாய் என்று உணர்ச்சியுடன் சொன்னார் அவர்.
பிறகு தேரோட்டியைப் பார்த்துத் தேரை இந்த முல்லைக் கொடியின் அருகே நிறுத்து என்று கட்டளை இட்டார்.
தேரை முல்லைக் கொடியின் அருகே இழுத்து வந்து நிறுத்தினான் தேரோட்டி.

குதிரைகளை அவிழ்த்து விடு. அவை நம் அரண்மனை சேரட்டும் என்றார் அவர்.
குதிரைகளை அவிழ்த்து விட்டான் தேரோட்டி. அவை தலை நகரத்தை நோக்கி ஓடத் தொடங்கின.

முல்லைக் கொடியின் அருகே நின்றார்.
அந்தக் கொடியை அன்புடன் தடவிக் கொடுத்தார். மெல்ல அதை எடுத்துத் தேரின் மேல் படர விட்டார்.
தன்னை மறந்து அங்கேயே நின்று இருந்தார். அதையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தக் கொடி இப்பொழுது காற்றில் அசையவில்லை. தேரில் நன்கு படர்ந்தது. அதன் துன்பத்தைத் தீர்த்ததை எண்ணி அவர் உள்ளம் மகிழ்ந்தது.
அந்தக் கொடியை மீண்டும் அன்புடன் தடவிக் கொடுத்தார். நன்றி தெரிவிப்பது போலத் தன் தளிரை அசைத்தது அது.

எழுந்த அவர், தேரோட்டி! நாம் நடந்தே அரண்மனை அடைவோம் என்றார்.
இருவரும் மெல்ல நடந்து தலை நகரத்தை நெருங்கினார்கள்.
அரசர் நடந்து வருவதை மக்கள் திகைப்புடன் பார்த்தார்கள். தோரோட்டி வாயிலாக நடந்ததை அறிந்தார்கள்.
மகிழ்ச்சி அடைந்த அவர்கள் வள்ளல் பாரி வாழ்க! முல்லைக்குத் தேரீந்த வள்ளல் வாழ்க! என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

வள்ளல் பாரி மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குச் சென்றார்.

1. பாரி பாரி யென்றுபல வேத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே!
(புறநானூற்றுப் பாடல் 107, கபிலர் பாடியது.)

 

2.இவரே, பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி
(புறநானூற்றுப் பாடல் 200, அடிகள் 9 முதல் 12 வரை, கபிலர் பாடியது.)

அரசர் கதைகள் – மந்திரியான காக்கை அண்ணாச்சி

மங்கள தேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியல் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன.

அன்று குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நடந்தது.

மிருகங்களும், பறவைகளும் மற்றும் புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன.

வேங்கைப்பள்ளம் என்ற இடத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல். தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இந்தத் தேர்தலில் சுகாதார மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும்.

சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றியும், பட்டாம் பூச்சியும், காக்கையும் போட்டியிட்டன.

போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்கு தேர்தலை நடத்தியது. பல ஆண்டுகள் பிரதமராக இருந்த சிங்கம் வயதான காரணத்தால் சபாநாயர் பதவிக்கு நின்று தோற்றுப் போனது.

காட்டரசுத் தலைவராக முயல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கு மட்டும் போட்டி கடுமையாக இருந்தது.

ஆரம்பத்தில் காட்டு எருமையை ஆதரித்த குரங்குகள் திடீரென்று செந்நாயை ஆதரித்தன. தவிர செந்நாய்கள் அராஜகத்திற்கு பயந்து மான்கள் முழுமையாக செந்நாயை ஆதரித்தன. செந்நாய் பிரதமராகி விட்டது.

நிதி மந்திரியாக வரிக்குதிரையும், பாதுகாப்பு மந்திரியாக ஓநாயும், உணவு மந்திரியாக கழுதையும், சொற்பமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தன.

வெளியுறவு மந்திரியாக எவ்வித போட்டியும் இன்றி நரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகர் குரங்கார் முதலில் பன்றியாரை அழைத்துத் தனது தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறும்படி பணித்தார்.

பன்றியார் வேகமாக மேடையை நோக்கி நடந்தார். வழியில் நின்றிருந்த யானையார் பட்டென்று நகர்ந்து அவருக்கு வழி விட்டார்.

பன்றியார் மேடைக்கு வந்ததும் காட்டரசுத் தலைவர் நாற்றம் தாள முடியாமல் தனது பெரிய காதுகளை தேய்த்துக் கெண்டார்.

“என்னுடைய வாழ்க்கையே சுகாதாரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவன். அது மட்டுமல்ல.. யானையார் போன்ற பெரியவர்கள் கூட என்னைக் கண்டதும் விலகி நிற்பார்கள். எனவே என்னை உங்கள் சுகாதார மந்திரியாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்…..” என்று சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தார்.

அடுத்து தனது சிவப்பு நிற இறக்கைகளை விரித்துப் பறந்து வந்தது பட்டாம்பூச்சி. முயலார் பட்டாம் பூச்சியின் வண்ணத்தைப் பார்த்து மயங்கினார்.

தனது சிறகுகளை அசைத்தபடி பேசியது பட்டாம்பூச்சி.

“அண்ணாச்சி பன்றியார் வந்து நின்று பேசிய இடத்தை சுத்தம் செய்யவே தனியாக ஒரு சுகாதார மந்திரியைப் போட வேண்டும்” என்றதும் கொல்லென்று எல்லாம் சிரித்தன.

“என்னைப் பாருங்கள்.. என் சிறகுகளைப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் அழகாக இருக்க உங்கள் வாக்குகளை எனக்கே போடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.

அடுத்து காகம் வந்தது….”பன்றியார் வந்தார் நான் சுகாதாரத்தின் அவதாரம் என்றார்.. நானே சுத்தம் செய்கிறேன் என்றார்….வாஸ்தவம் தான். அவர் இருக்கும் இடம் எப்படிப் பட்ட இடம் என்று நமக்குத் தெரியாதா? அது கிடக்கட்டும். நமது பட்டாம்பூச்சி அண்ணாச்சி குடிப்பது தேன்தான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் படுப்பது எங்கு என்று தெரியுமா? பிராணிகளின் மலம்.

மலத்தை உண்பவருக்கு உங்கள் ஓட்டா?

மலத்தில் உறங்குபவருக்கு உங்கள் ஓட்டா?”
என்ற கேள்வியுடன் பறந்து சென்றார் காக்கையார்.

அதன் பின்னர் பறவைகளும், மிருகங்களும் இவற்றை ஆதரித்தும், தாக்கியும் பேசி ஓட்டு வேட்டை ஆடின.

கடைசியாக நரியாரை எழுந்து பேசும்படி எல்லாம் வற்புறுத்தின.

நரியார் தனது வாலால் முகத்தைத் துடைத்தபடி மேடையில் ஏறினார். எப்போதும் நரியார் பேச்சுக்கு பரவலான மரியாதை இருந்தது.

“காட்டரசர் நாமம் வாழ்க” என்று பேச ஆரம்பித்தார் நரியார்.

“பன்றியார் சொன்னது போல்….. அவர் மலக்கழிவுகளை உண்டு சுகாதாரத்திற்கு வழி செய்கிறார் என்பது வாஸ்தவம்தான்…. பட்டாம் பூச்சியார் சுத்தமான தேனைக் குடிக்கிறார். பார்க்க அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் அதுவும் சரிதான்”

நரியார் சொன்னதை எல்லா பறவைகளும் மிருகங்களும் உன்னிப்பாய் கவனித்தன.

“காக்கையாரும் பன்றிகளைப் போல அசுத்தங்களை உண்டு சுத்தப்படுத்துகிறார்.. இது நமக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு நிறுத்தியது. முக்கியமான செய்தியைச் சொல்லும் போது நரியார் இப்படி நின்று நிதானித்துப் பேசுவார்.

“சுத்தம் என்பது தானும் சுத்தமாக இருக்க வேண்டும். தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூவரில் இதற்குப் பொருத்தமானவர்?” என்ற கேள்வியுடன் மீண்டும் ஒருமுறைத் தனது பேச்சை நிறுத்தினார்.

யானையார் கூட தனது காதுமடல்களை அசைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

“பன்றியாரின் உடம்பையும், உறைவிடத்தையும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. மலத்திலும் மூத்திரத்திலும் படுத்து உறங்கும் பட்டாம் பூச்சியாரும் சுகாதாரச் சூழலில் வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால்” கொக்கி போட்டு நிறுத்தினார் நரியார்.

இம்மியளவு இலை விழுந்தால் கூட இடிச்சத்தம் போல் கேட்கும் அளவுக்கு அமைதி.

மீண்டும் நரியார் ஆரம்பித்தார்.

“காக்கையார் உடல் சுத்தம். உள்ளம் சுத்தம். அவர் சுற்றுப் புறமும் சுத்தமானது. நாள் தவறினாலும் அவர் குளியல் தவராது. இனி ஓட்டுப் போடுவது உங்கள் சுதந்திரம்” என்று சொல்லிவிட்டு நடந்தார் நரியார்.

இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவான வழியைக் காட்டியது போல் தமக்குள் பேசிக் கொண்டனர்.

சற்று நேரத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. செந்நாய் அமைதிப் படை தில்லுமுல்லுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டன.

ஓட்டுகள் எண்ணப்பட்டன. காக்கையார் சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் தேர்தலில் ஜெயிக்கவைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று சபாநாயகர் குரங்கார் ஜோக் அடிக்க எல்லோரும் சிரிக்க குமுளி மலைக் காடே அதிர்ந்தது.

அரசர் கதைகள் – போர்க்களத்தில் எதிரி

மலைவளம் நிறைந்த நாடு சேர நாடு. அந்த நாட்டின் தலைநகரம் கருவூர். அங்கே இரும்பொறை என்ற அரசர் சிறப்புடன் ஆண்டு வந்தார். குல மரபையும் சேர்த்து அந்துவஞ் சேரல் இரும்பொறை, என்று அவரை அழைத்தார்கள்.

வீரம் நிறைந்த அவர் நீதிநெறி தவறாது ஆட்சி நடத்தினார். அவருடைய அரசவையில் புலவர்கள் பலர் சிறப்புப் பெற்றிருந்தனர்.

இரும்பொறையின் நெருங்கிய நண்பராக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் இருந்தார். இருவரும் இணை பிரியாது இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.

முடமோசியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்தார் இரும்பொறை.

வழக்கம் போல இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த இரும்பொறை ஏதும் பேசவில்லை.

அரசர் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்பது முடமோசியார்க்குப் புரிந்தது.

அரசே! உங்கள் ஆட்சி நல்லாட்சியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வீரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே. ஆட்சியில் ஏதேனும் குறை நேர்ந்து விட்டதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.

புலவரே! உங்கள் அறிவுரைப் படி ஆட்சி செய்து வருகிறேன், எப்படிக் குறை வர முடியும்?
அரசே! வாரி வழங்கியதால் கருவூலம் காலியாகி விட்டதா? மக்களின் மேல் அதிக வரி விதிக்கும் நிலை வந்து விட்டதா?

புலவரே! மலை வளம் மிக்க நாடு நம் சேர நாடு. எவ்வளவு வாரி வழங்கினாலும் இதன் வளம் குறையாது. மக்களும் உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நாட்டின் வளம் பெருகிக் கொண்டே செல்கிறது.

அரசே! ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே?

புலவரே! வளம் மிக மிக நம் நாட்டிற்குத் தீங்கு வருமோ? மக்கள் துன்பம் அடைவார்களோ? இதை நினைத்து என் உள்ளம் கலக்கம் கொள்கிறது.

அரசே! வீரம் மிகுந்த நீங்களா இப்படிக் கலங்குகிறீர்கள்? எனக்கு வியப்பாக உள்ளது.
புலவரே! சேரர் குடியில் பிறந்தவன் நான். அச்சம் என்ற சொல்லையே அறியாதவன். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. போர் மேகங்கள் நம் நாட்டைச் சூழ்ந்து வருகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம்.

மக்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு வருமோ என்று தான் கலங்குகிறேன்.

அரசே! வீரம் மிக்கவர் நீங்கள். நாட்டைக் காக்க வலிமை வாய்ந்த பெரும் படை உள்ளது. எல்லா நாட்டு அரசர்களும் இதை அறிவார்கள். தனக்கே அழிவைத் தேடும் வீண் முயற்சியில் இறங்கும் அந்த அரசன் யார்?
புலவரே! சோழன் தான் அந்த அரசன். சேர நாட்டைக் கைப்பற்ற பெரும்பாட்டை திரட்டி வருகிறானாம். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி இது.

சோழ அரசர் குடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியா. அவருக்கா நாடு பிடிக்கும் பேராசை? இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன? இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன? இதை அவர் அறிய வில்லையா?

புலவரே! புகழ் வெறி யாரை விட்டது? பெரும்படை இருக்கின்றது என்ற ஆணவம் அந்தச் சோழனுக்கு. இங்கே அவனுக்கும் நல்ல பாடம் கிடைக்கப் போகிறது.

அமைதியான இந்த நாட்டில் போர் ஆரவாரம் தான் எங்கும் கேட்கும். நாமும் வழக்கம் போல் அடிக்கடி சந்தித்து உரையாட இயலாது.

நாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். படைத் தலைவர்கள். வீரர்களோடு இது குறித்துப் பேச வேண்டும். நாம் அரண்மனை திரும்புவோம், என்றார் இரும்பொறை.
இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

சோழ நாட்டுத் தலை நகரம் உறையூர். அரசவை கூடியுள்ளது. அரியணையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி பெருமிதத்துடன் வீற்றிருந்தார்.

அமைச்சர்கள், படைத் தலைவர், அவையினர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
அவையினரே! என் முன்னோர்கள் இமயத்தை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் வீரத்தால் இந்தச் சோழ நாடே பெருமை பெற்றது. அவர்களைப் போன்று நானும் பெருமை பெற விரும்புகிறேன், என்றார் அரசர்.
படைத் தலைவர் எழுந்து, அரசே! கடல் போன்று சோழ நாட்டுப் படை உள்ளது. உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறது. விண்ணுலகையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் நம் வீரர்கள். இமயத்தை வெல்லுவதா அவர்களுக்கு அரிய செயல், என்றார்.

படைத் தலைவரே! என் எண்ணத்தை அண்மையில் தான் வெளியிட்டேன். உடனே பெரும்படை திரட்டி விட்டீர்களே. மிக்க மகிழ்ச்சி.

அரசே! நம் வீரர்கள் எப்பொழுது போர் வருமென்று ஆவலுடன் காத்திருந்தார்கள். செய்தி அறிந்தவுடன் எல்லோரும் போருக்குத் தயாராகி விட்டார்கள்.

சேர நாட்டின் மீது படை எடுக்க வேண்டும். அதை வெல்ல வேண்டும். இதுதான் முதல் முயற்சி.
அமைச்சர் எழுந்து அரசே! என் கருத்தை இங்கே சொல்லலாமா? என்று கேட்டார்.

அமைச்சரே! எல்லோர் கருத்தையும் கேட்பதற்காகத்தான் அரசவை உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள்.
அரசே! நமக்கும் சேர நாட்டிற்கும் பகை ஏதும் இல்லை. சேர நாட்டு அரசரும் உங்களைப் போலவே சிறந்த வீரர். அந்நாட்டு மக்களும் வீரம் மிக்கவர்கள். பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போர் தேவையா? சிந்தியுங்கள்.
அமைச்சரே! வலிமை வாய்ந்த அரசனோடு போரிட்டு வென்றால்தானே நமக்குப் பெருமை. பக்கத்தில் வலிமை வாய்ந்த நாடு இருப்பது நமக்கு எப்போதுமே தொல்லை. சேர அரசனை வென்றால் என் புகழ் உலகெங்கும் பரவும். அந்த நாட்டின் செல்வமும் நம் கருவூலத்தில் சேரும். நம் நாடு மேலும் வளம் பெறும்.

அரசே! அமைதியை விரும்பிய நான் என் எண்ணத்தைச் சொன்னேன். வீரம் மிக்கவராகிய நீங்கள் போர் செய்யவே துடிக்கிறீர்கள், என்று அமர்ந்தார் அமைச்சர்.

படைத் தலைவரே! ஒரு திங்களில் நம் படை சேர நாட்டிற்குப் புறப்பட வேண்டும். இந்தப் போருக்கு நானே தலைமை ஏற்கப் போகிறேன். என் வீரத்தை உலகமே அறிந்து போற்றப் போகிறது. எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடியுங்கள்.

அரசே! கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன், என்றார் படைத் தலைவர்.
என் எண்ணம் நிறைவேறும் நாள் வந்து விட்டது. சோழ நாட்டு வெற்றிக் கொடி பல நாடுகளில் பறக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அவையினர் உணர்ச்சிப் பெருக்குடன், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

கருவூர் நகர வீதிகளில் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமைதி தவழ்ந்த அந்த நகரத்தில் எங்கும் ஆரவாரம் கேட்டது.

அரண்மனையில் அரசனும் புலவர் முடமோசியாரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த படைத் தலைவர் பணிவாக அரசனை வணங்கினார்.

படைத் தலைவரே! என்ன செய்தி?

அரசே! சோழர் படை நம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது. நம் காப்பு அரண்களை எல்லாம் அழித்து விட்டார்கள். தலை நகரின் அருகே பாசறை அமைத்துத் தங்கி உள்ளார்கள். எங்கே எப்பொழுது போரிடலாம்? இது குறித்து நம் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

நாம் அவர்களைக் காக்க வைக்க வேண்டாம். விரைவில் போர் செய்வோம். எதிரிகளை விரட்டி அடிப்போம். நம் படைகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா?

அரசே! நம் நால்வகைப் படைகளும் போருக்குத் தயாராக உள்ளன. நம் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். நம் படைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்வையிட வேண்டும்.

படைத் தலைவரே! கோட்டைக்கு வெளியே நாளை நம் படை வீரர்கள் அணிவகுத்து நிற்கட்டும். நானும் முடமோசியாரும் கருவூர்க் கோட்டை வேண்மாடத்தில் இருந்து பார்வை இடுகிறோம். நாளை மறுநாள் படைக்குத்
தலைமை தாங்குகிறேன். எதிரிகளோடு போரிட்டு வெல்கிறேன்.
தங்கள் கட்டளை அரசே! என்ற படைத் தலைவர் வணங்கி விட்டுச் சென்றார்.

முடமாசியாரே! போர் நிகழ உள்ளது. நம் வீரர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். பார்த்தீரா?

ஆம் அரசே! நம் நாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். எத்தகைய பெரிய படையையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்.

புலவரே! சேரனின் வீரத்தை இந்த உலகமே வியந்து போற்றப் போகிறது. பகைவரின் செங்குருதி வெள்ளத்தில் நில மகள் நீராடப் போகிறாள், என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இரும்பொறை.

அரசே! நாம் நாளை சந்திப்போம், என்று சொல்லி விடை பெற்றார் முடிமோசியார்.

கருவூர்க் கோட்டைக்குச் சிறிது தொலைவில் சோழர் படையின் பாசறை இருந்தது.
காலை நேரம். சோழ வீரர்கள் ஆங்காங்கே போர்ப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.
சோழ அரசர் நற்கிள்ளி அவர்களைப் பாராட்டிக் கொண்டே சென்றார்.

குன்றுகளை ஒத்த யானைகள் இருந்த இடத்திற்கு வந்தார் அவர். வலிமை வாய்ந்த யானைப் படையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

எதிரிகளை வெல்ல இந்த யானைப் படையே போதுமே. நம்மை எதிர்த்து ஒரு நாள் கூட அவர்களால் போர் செய்ய முடியாது, என்று நினைத்தார் அவர்.

அங்கிருந்த பட்டத்து யானை பிளிறியது. அந்த யானையின் அருகே சென்றார் அவர்.
பாகன் பரபரப்புடன் ஓடி வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.
பாகனே! பட்டத்து யானையின் மேல் அமர்ந்து நம் படையை பார்வையிட விரும்புகிறேன்.

தயக்கத்துடன் பாகன், அரசர் பெருமானே! பட்டத்து யானை அடிக்கடி பிளிறுகிறது. இரண்டு நாட்களாக எனக்கும் கட்டுப்பட மறுக்கிறது. மதம் பிடித்தது போல உள்ளது.

பட்டத்து யானையின் மேல் அமர வேண்டாம். இன்று மாலைக்குள் பட்டத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவேன். என்னை மன்னியுங்கள், என்று பணிவுடன் சொன்னான்.

பாகனே! மதம் கொண்ட யானையை நான் அடக்குகிறேன், என்று சொன்னார் அவர். யானையின் மேல் ஏறி அமர்ந்தார்.

அரசே! வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள், என்று கெஞ்சினான் பாகன்.
யானையோ பிளிறியபடி வேகமாக ஓடத் தொடங்கியது.
பாகன் திகைத்து நின்றான்.

பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசரைச் சுமந்து ஓடுகிறது, என்ற கூக்குரல் பாசறை எங்கும் ஒலித்தது.
வீரர்கள் ஓடி வந்தார்கள்.

ஐயோ! பட்டத்து யானை கருவூர்க் கோட்டையை நோக்கிச் செல்கிறதே. அதைத் தடுப்பார் இல்லையே, என்று எல்லோரும் அலறினார்கள்.
வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர வீரர்களால் முடியவில்லை.
யானை அவர்கள் கண்களில் இருந்து மறைந்தது.
கருவூர்க் கோட்டைத் திடலில் சேர நாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

கோட்டையின் வேண்மாடத்தில் இரும்பொறையும் முடமோசியாரும் நின்று இருந்தனர். படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்தனர்.

புலவரே! கண்ணுக்கு எட்டிய தொலைவு நம் வீரர்களே உள்ளனர். சேர அரசர் வாழ்க! வெற்றி வேந்தர் வாழ்க, என்று விண்ணதிர முழக்கம் செய்கின்றனர். போர் வேண்டி அவர்கள் செய்யும் ஆரவாரம் உங்களுக்குக் கேட்கிறதா?
அரசே! சேர வீரர்களின் வீரத்தை எல்லோரும் அறிவார்கள். எங்களைப் போன்ற புலவர்கள் போரை விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களுக்கு அழிவுதான் ஏற்படுகிறது. ஒரு போர் மற்றொரு போருக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்து பெருந் துன்பத்தை அடைகிறார்கள்.

புலவரே! நாங்கள் போரையா விரும்பினோம்? சோழன் தூங்கும் புலியை எழுப்பி விட்டான். புலியின் சீற்றத்தையும் வலிமையையும் அவன் சந்தித்தே ஆக வேண்டும்.

அரசே! அதோ பாருங்கள். எங்கிருந்தோ யானை ஒன்று ஓடி வருகிறது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. தன் துதிக்கையால் வீரர்கள் சிலரைத் தூக்கி எறிந்து விட்டது. அந்த யானையின் மேல் ஒரு வீரன் அமர்ந்து உள்ளான்.

ஆம் புலவரே! அந்த யானையின் மேல் நம் எதிரி ஒருவன் உள்ளான். படை அணிவகுப்பிற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கிறான். என்ன துணிவு அவனுக்கு?

அரசே! நம் வீரர்கள் அந்த யானையைச் சூழ்ந்து விட்டனர். யானையும் கோட்டையின் அருகே வந்து விட்டது. இனி எந்த எதிரியால் தப்ப முடியாது. அவன் தோற்றம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.
புலவர் தனக்குள் ஆ! யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர் நற்கிள்ளி அல்லவா? எதற்காக அவர் யானையின் மேல் தனியே இங்கு வந்தார்?

மதம் கொண்ட யானையை அவர் அடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவருக்குக் கட்டுப்படாத யானை இங்கே வந்திருக்க வேண்டும். அரசர் இரும்பொறைக்கு உண்மையை உணர்த்த வேண்டும்? என்று நினைத்தார்.
புலவரே! ஏன் திடீரென்று அமைதியாகி விட்டீர்?

அரசே! அந்த யானையில் மேல் இருப்பவர் சோழ அரசர்.
புலவரே! நீங்கள் சொல்வது உண்மையா? யானையின் மேல் இருப்பது சோழ அரசனா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

அரசே! அவர் சோழ அரசர் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளிதான். நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன்.

அவர் ஏன் யானையின் மேல் அமர்ந்து தனியே இங்கே வந்தார்?
அரசே! யானைக்கு மதம் பிடித்திருக்க வேண்டும். அதை அடக்க அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்க்கு அடங்காமல் யானை இங்கே வந்திருக்க வேண்டும்.

புலவரே! நீங்கள் சொல்வது போலத்தான் நடந்திருக்க வேண்டும். அங்கே பாருங்கள். நம் வீரர்கள் அந்த யானையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

அரசே! யானையின் மேல் இருப்பவர் உங்கள் எதிரிதான். தனியே உங்களிடம் சிக்கி உள்ளார். அவருக்கு எந்தத் துன்பமும் செய்யாதீர்கள்.

அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் உலகம் என்ன சொல்லும்? தனியே தளர்ந்து வந்த அரசனைக் கொன்றான் சேரன். இவ்வாறு உலகமே உங்களை இகழும். புகழ் வாய்ந்த சேரர் குடிக்கே தீராப் பழி நேரும்.

புலவரே! என்னோடு இவ்வளவு காலம் பழகி இருக்கிறீர்கள். என் உள்ளத்தை அறிய வில்லையே. உண்மையான வீரர்கள் போர்க்களத்தில் தான் வீரத்தைக் காட்டுவார்கள். எந்தச் சூழலிலும் போர் அறத்தை விட மாட்டார்கள். தனியே சிக்கிய எதிரிக்குத் தொல்லை தருபவனா நான்?

அருகில் நின்றிருந்த வீரனைப் பார்த்து, யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர். அரசருக்கு உரிய சிறப்புடன் இங்கே அழைத்து வாருங்கள். என்று கட்டளை இட்டார்.

அரசர் வாழ்க, என்ற அந்த வீரன் சென்றான்.
சிறிது நேரத்தில் வீரர்கள் சூழச் சோழ அரசர் அங்கு வந்தார். தலை கவிழ்ந்த வண்ணம் அவர் இருந்தார்.
முகம் மலர அவரை வரவேற்றார் சேர அரசர்.
வாருங்கள்! சோழ அரசரே! எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு இது. உங்கள் வருகையால் இந்தக் கருவூர் நகரமே சிறப்புப் பெற்றது. என் அருகே இருப்பவர் பெரும்புலவர் ஏணிச்சேரி முடமோசியார். என் இனிய நண்பர். அவரால்தான் உங்களை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன், என்றார்.
ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றார் சோழ அரசர்.
இங்கு வந்த சூழலை எண்ணி நீங்கள் வருந்த வேண்டாம். எங்கள் விருந்தினராகச் சிறிது நேரம் இங்கே இருங்கள். பிறகு உங்கள் எண்ணம் போலச் செய்யுங்கள்.

இங்கே உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. நாளை நாம் இருவரும் போர்க்களத்தில் சந்திப்போம்.
போர்க்களத்தில் தான் நீங்கள் என் எதிரி. எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். தனியே நுழைந்த நீங்கள் என் நண்பர். எந்தச் சூழலிலும் போர் அறத்தை நான் மீற மாட்டேன், என்றார் இரும்பொறை.
நற்கிள்ளி தலை நிமிர்ந்து இரும்பொறையைப் பார்த்தார்.

நண்பரே! மண்ணாசையால் உங்களோடு போரிடப் பெரும் படையுடன் வந்தேன். யானை மதம் பட்டதால் உங்கள் பெருமித உள்ளத்தை அறிந்தேன்.

உங்களைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தேன். உண்மையில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான். இனி நமக்குள் போரே வேண்டாம். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், என்றார்.
இரு அரசர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

நண்பரே! நீங்களும் உங்கள் வீரர்களும் எங்களின் விருந்தினர்களாக இங்கே தங்க வேண்டும். சேர நாட்டு விருந்தோம்பலை நீங்கள் அறிய வேண்டும். இது என் வேண்டுகோள், என்றார் இரும்பொறை.
அப்படியே ஆகட்டும், என்றார் சோழ அரசர்.

அருகில் இருந்த புலவர் மகிழ்ச்சியுடன் போரே இல்லாத உலகத்தைக் கனவு கண்டேன். அப்படிப்பட்ட உலகத்தில் மக்கள் அமைதியாகவும். வளமாகவும் வாழ்வார்கள். நற்பண்புகள் கொண்ட உங்கள் இருவரால் என் எண்ணம் நிறைவேறியது. உங்களுக்கு என் பாராட்டுகள், என்றார்.

அணிவகுத்து நின்ற சேர வீரர்கள், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

இரண்டு அரசர்களும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார்கள்.

இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்று மிசையோனே
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

(புறநானூற்றுப் பாடல் 13, அடிகள் 1 முதல் 8 வரை. பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)