சேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்?

3.7/5 - (13 votes)

senathipathi-pathavi

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! எந்த இலட்சியத்தை நாடி, இவ்வாறு நடு இரவில் மயானத்தில் என்னை சுமந்து கொண்டு திரிகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை.

சில சமயங்களில் அறிவில் சிறந்தவர்கள் என்று நாம் கருதும் சிலரது ஆலோசனைகள் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடும்! அவ்வாறு, அறிவிற்சிறந்தவர் என்று தான் கருதிய மந்திரியின் சொல் கேட்டு, தவறிழைத்த மன்னன் ஒருவனது கதையை உனக்குக் கூறகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தன் கதையைத் தொடங்கியது.
மகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான். ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான்.

உடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் தலைநகரத்திற்கு வந்து வாட்போர், வில் வித்தை, மல்யுத்தம் படைகளை இயக்கும் ஆற்றல், யுத்தத் தந்திரங்கள் ஆகியவற்றில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த அழைத்தார். அந்த அறிவிப்பின்படி, ஏராளமான வீரர்கள் தலைநகரில் கூடினர். ஒவ்வொரு நாளும், பலருடைய திறமைகளையும் உன்னிப்பாக கவனித்த தர்மசீலர் இறுதியில் ரூபசேனன், பராக்கிரமன் ஆகிய இருவரைத் தேர்வு செய்தார். இருவருமே அனைத்து கலைகளிலும் சமமாக இருந்தனர்.

அதனால், இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்துஎடுப்பதில் தர்மசீலருக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்களை நேரிலே அழைத்த மந்திரி, “நீங்கள் இருவரும் அனைத்து கலைகளிலும் சரிசமமாக இருக்கிறீர்கள். சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள் இன்னும் சில உள்ளன. அவற்றை சோதிக்க, நான் உங்களிடம் சபையில் எல்லார் முன்னிலையிலும் மூன்று கேள்விகள் கேட்பேன். அவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்து உங்களில் ஒருவரைத் தேர்வு செய்வேன். சம்மதமா?” என்று கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர்.

அதன்படி, மறுநாள் இருவரும் சபைக்கு வந்தனர். சபை நரம்பியிருக்க, மன்னரும் மந்திரியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தர்மசீலர் எழுந்து இருவரையும் நோக்கி, “சேனாதிபதி பதவிக்குரிய மற்றும் சில குணாதிசயங்களை சோதிக்க நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கப் போவதாகக் கூறினேன். என்னுடைய முதல் கேள்வி: பிரதான சாலையில், இரு இளைஞர்கள் ஒருவரோடு  சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்! உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.

உடனே பராக்கிரமன், “என்னிலும் வயதில் சிறியவன் ரூபசேனன்! முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள்!” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா! பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம்! அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். பிறகு அவர்கள்  இருவரிடம் சண்டையின் காரணத்தை அறிந்து அவர்களை மன்னர் முன் தீர்ப்பு வழங்குவதற்காக நிறுத்துவேன்” என்றான்.

பராக்கிரமனோ, “இருவர் பிரதான சாலையில் சண்டையிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும்! நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன்! தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக இருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ரூபசேனன், “எனது திறமைவாய்ந்த ஒற்றர்கள் மூலம் அந்த சதிகாரர்களைக் கண்டு பிடித்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். அவர்களுடைய தலைவன் யார், அவர்கள் எந்த மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கும் நமது பகைவர்களுக்கும் தொடர்பு உள்ளதா, என்பது போன்ற ரகசியங்களைக் கண்டு பிடித்து விட்டு சேனையின் உதவியோடு அவர்களை அழித்து விடுவேன்” என்று ஆவேசமாகக் கூறினான்.

பராக்கிரமன், “ராஜதுரோக வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்! சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அவர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன்!” என்றான்.

பராக்கிரமனின் அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையினர் கரகோஷம் செய்தனர். பிறகு தர்மசீலர் தனது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். “மன்னருடன் வேட்டையாடச் செல்லும்போது, அவர் மீது ஒரு சிங்கம் திடீரெனப் பாய்ந்தால், என்ன செய்வீர்கள்?” என்றார்.
“என் உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றுவேன்!” என்றான் ரூபசேனன்.

“நான் உடனிருந்தால் மன்னர் மீது சிங்கம் பாய்வதற்கான சூழ்நிலையே உண்டாகாது!” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன்றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்?” என்றார்.

உடனே ரூபசேனன், “இந்த விஷயத்தில் மன்னரின் தீர்மானமே இறுதியானது. மந்திரியுடன் ஆலோசித்து அவர் எந்த ராஜ்யத்தின் மீது படையெடுக்கக் கூறுகிறாரோ, அதன் மீது படை எடுப்பேன்!” என்றான்.

“படையை பலப்படுத்துவது சேனாதிபதியின் முதல் கடமையாகும். அதற்கு ஆயுதங்கள் மிகவும் அவசியம். ஆயுதங்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம்மால் எளிதில் மற்ற இரண்டு ராஜ்யத்தையும் கைப்பற்றி விடலாம். தைரிய லஷ்மி எங்கிருக்கிறாளோ அங்குதான் மற்ற ஏழு லட்சுமிகளும் வசிக்கும் என்று உங்களுக்குத்தான் தெரியுமே! ஆகையால் நான் முதலில் எந்த ராஜ்யத்தில் ஆயுதங்கள் உள்ளனவோ அதன் மீது தான் படையெடுப்பேன்” என்று மிகவும் கம்பீரமாகப் அளித்தான்.

பராக்கிரமனுடைய அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையில் கரகோஷம் உண்டாகியது. மன்னர் கண்டிப்பாக பராக்கிரமனைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று சபையோருக்கு தெரிந்து விட்டது. அப்படி இருக்கையில் அவர் ரூபசேனனை சேனாதிபதியாக தேர்ந்தெடுப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா!  பராக்கிரமன், ரூபசேனன் இருவருமே போர்க் கலைகளில் சரிசமமாகக் காணப்பட்டார்கள். ஆகையினால், அவர்களுடைய மற்ற தகுதிகளைப் பரிசீலிக்க மந்திரி தர்மசீலர் முயன்றது தவறில்லை.

ஆனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் “மன்னரிடம் அறிவிப்பேன்! அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா? அவனுடைய பதில்களை சபையோர் மட்டுமன்றி, தர்மசீலரும் பாராட்டினார். அப்படிஇருந்தும், தர்மசீலர் கடைசியில் ரூபசேனனைத் தேர்ந்தெடுத்து அவரது தவறான முடிவைக் காட்டுகிறதல்லவா?

இதிலிருந்து, தர்மசீலர் மதிநுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒரு சாதாரண வீரனை சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது, அவர் நடுநிலையிலிருந்து தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது அல்லவா? ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார்? என்னுடைய இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்குநூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “மதிநுட்பத்தை மட்டும் வைத்து இருவரையும் பரிசீலித்தால், பராக்கிரமன் நிச்சயமாக ரூபசேனனை விடச் சிறந்தவன்தான்! ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான்! மற்றபடி, எந்தப் பிரச்சினைக்கும் முடிவு எடுப்பது அவனுடைய அதிகாரத்தில் இல்லை.
எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம் செய்வது மன்னருக்கே உரித்தான உரிமை. அதில் சேனாதிபதி தலையிடக்கூடாது. அரசாங்க விஷயங்களில் ஆலோசனை கூறும் உரிமை மந்திரிக்கு மட்டுமே உண்டு. அவரை ஆலோசனை கேட்பதும், அதன்படி, நடப்பதும், நடக்காததும் மன்னருடைய உரிமை. எல்லா விஷயங்களிலும் தான் நுழைந்து தானே முடிவெடுக்கும் சேனாதிபதி ஆபத்தானவன்! மன்னருடைய அதிகாரத்தை அவன் தன் கையில் எடுத்துக் கொள்வது சற்றும் சரியல்ல!

பராக்கிரமன் அளித்த விடைகளில் இருந்து அவன் மேதாவி என்பது தெளிவானாலும், அத்தகைய மேதாவிகள் மன்னருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள் என்று மந்திரி நம்பினார். அதனால்தான் கீழ்படிந்து நடக்கும் சுபாவம் கொண்ட ரூபசேனனை சேனாதிபதியாகப் பரிந்துரை செய்தார். மந்திரியின் கருத்து அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. ஆகவே, அவர் எடுத்த முடிவே சரியானது!” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

One Comment

  1. Very nice story. அருமை!
    Reply December 4, 2020 at 10:01 am

Leave a comment