லட்சுமி கோவில்கள்

5/5 - (1 vote)

lakshmi-temple

சென்னையில் காமக் கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் அலைகடல் ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கோவில், திருவான்மியூருக்கு அருகிலுள்ள ஓடைக் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

இந்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வாஷிக்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள். கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.

இவர்களைத் தரிசித்து விட்டு பிரதஷணமாக வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம். மீண்டும் மகாலட்சுமி சந்நிதிக்குள் சென்று இடது கைப்பிடிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்துக்குச் செல்லலாம்.

இந்தத் தளத்தில் கிழக்கு நோக்கி கஜலட்சுமி, தெற்கு நோக்கி சந்தான லட்சுமி, மேற்கு நோக்கி விஜயலட்சுமி, வடக்கு நோக்கி வித்யா லட்சுமி காட்சி தருகிறார்கள். அங்கேயிருந்து மூன்றாவது தளத்திற்குச் செல்லலாம்.

அங்கே கிழக்கே பார்த்தபடி தனலட்சுமியைத் தரிசிக்கலாம். ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தளங்கள் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு விசேஷம் இக்கோவிலில் குருவாயூரப்பனுக்கும், ஆஞ்சநேயருக்கும், கணபதிக்கும் தனித் தனியே சந்நதிகள் அமைந்துள்ளன.

நாச்சியார் கோவில் :

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார் கோவில் என்னும் தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.

துறையூர் :

துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம். பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும். இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.

தலச்சங்காடு (மாயவரம்) :

மாயவரம் தரங்கம்பாடி வழிதடத்தில் உள்ள தலைச்சங் காடு என்ற திருத்தலத்தில் தாயார் தலைச்சங்க நாச்சியார் செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் :

பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திருவிடத்தில் வடபத்திர சாயியான பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலிக்கிறாள்.

திருக்கண்ணமங்கை :

திருவாரூருக்கு அடுத்துள்ள கண்ண மங்கையில் தாயார் அபிஷேகவல்லி என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டுள்ளாள். இங்கு தாயார் சந்நிதிக்குள் ஒரு பெரிய தேன்கூடு இருப்பதைக் காணலாம். இக்கூடு பல்லாண்டு காலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

முனிவர்கள் தேனீ ரூபத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவிப்பதாகக் கூறுகிறார்கள். திருவாரூரில் ஸ்ரீலட்சுமியின் மற்றொரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருஷமான புன்ன புரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதிகம். புன்னைப் பிராட்டியார் என்பது திருநாமம்!

பிச்சாண்டார் கோவில் :

திருச்சிக்கு அருகே பிச்சாண்டார் கோவிலில் தாயாரைச் சேவிக்கலாம். இங்குள்ள தாயாருக்கு பூரணவல்லி என்று திருநாமம். இக்கோவிலுள்ள மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உண்டு.

சிவபெருமான் கபாலம் ஏந்தி பிசைக்கு வந்த போது முதலில் தாயார் பிசை இட்டார் என்றும் அதனால் அவரது கபாலம் நிரம்பி வழிந்தது என்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பைச் சொல்லும் புராண வரலாறாகும்.

லால்குடி :

தற்போது லால்குடி என்று அழைக்கப்படும் திருவத்துறை என்னும் இத்தலத்தில் தாயார் எம்பெருமானைத் தவமிருந்து கணவராகப் பெற்றார் என்பது புராணமாகும்.

நாமக்கல் :

நாமக்கல் என்னும் தலத்தில் தவமிருந்து விஷ்ணுவை அடைந்தார் தாயார்! இத்தலத்தில் தாயாருக்கு ஹரி என்று திருநாமம். இங்கு தாயாருக்கு, நாயகரான நரசிம்ம சுவாமியை விட சிறப்பு அதிகம்.

திருக்கண்ணபுரம் :

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கண்ணபுரத்தில் எம்பெருமாளுக்கு நான்கு தேவியர்கள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்பவர் ஆவர். பத்மினி தாயார், “வலைய நாச்சியார்” என்று அழைக்கப் படுகிறார்கள்.

கர்ப்பக் கிரகத்தில் எம்பெருமான் சௌரிராஜன் என்ற கோலத்துடன் எழுந்தருளுகிறார். நான்கு தேவியரும் இருவர்கள் ஒரு பக்கமாக எழுந்தருளி உள்ளனர்.

Leave a comment