அருள்மிகு ஜெகந்நாதர் கோவில்…

4/5 - (2 votes)

thiurmazhisai-kovil

சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், திருமழிசையை “துணை நகரம்” ஆக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இன்னும் சில ஆண்டுகளில் திருமழிசை எனும் பெயர் தினமும் மக்கள் உச்சரிக்கும் பெயராக மாற உள்ளது.

ஆனால் இந்த ஊர் ஆதி காலத்தில் வைணவமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமியாக இருந்தது என்பது பலருக்கு தெரியாது. ஈசனும், மகா விஷ்ணுவும், அம்பிகையும் அருள்புரியும் தலங்கள் எத்தனையோ ஆயிரம் உள்ள போதிலும் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாக, தன்னிரகற்றத் தலமாக திருமழிசை கருதப்படுகிறது.

இத்தலத்தில் ஜெகநாத பெருமாள் ஆலயம், ஒத்தாண்டேஸ்வரர் ஆலயம் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் 4-வது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் இத்தலத்தில்தான் தோன்றினார். துவார யுகத்தில் இத்தலம், “மகிசாரசேத்திரம்” என்றழைக்கப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் இது திருமழிசை சதுர்வேதி மங்கலம், என்றும் 13-ம் நூற்றாண்டில் திருமழிசை அகரம் என்றும் அழைக்கப்பட்டது.

அதன் பிறகு சுருங்கி திருமழிசை ஆகிவிட்டது. இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மிகப் பழமையான இங்கு வழிபாடு செய்தால், 2 திவ்ய தேசங்களில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். 5 நிலை 7 கலசங்களுடன் உள்ள கோபுரத்தை பயபக்தியுடன் வணங்கி விட்டு உள்ளே சென்றால் 2 பிரகாரங்களுடன் கோவில் அமைந்திருப்பதை காணலாம்.

கருவறையில் ருக்மணி- சத்யபாமா சமேத ஜெகந்நாதன் பெருமாள் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கும் அவரது அழகு பக்தர்களை நிச்சயம் ஈர்க்கும். அவருக்கு ஆகாசன அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

இத்தலத்தில்தான் மார்க்கண்டேய முனிவருக்கும், பிருகு முனிவருக்கும் பெருமாள் காட்சிக்கொடுத்து அருளினார். இதை பிரதிபலிக்கும் வகையில் மூலவர் அருகில் 2 முனிவர்களும் அமர்ந்து வணங்கியபடி உள்ளனர். உள் பிரகாரத்தின் ஒரு பகுதியில் திருமழிசை ஆழ்வார் சன்னதியும் பெரிய அளவில் உள்ளது.

இதன் காரணமாக இந்த தலத்தை திருமழிசை ஆழ்வார் கோவில் என்றும் சொல்வதுண்டு. இவரையடுத்து நவநீத கிருஷ்ணர் சன்னதி உள்ளது. வெளி பிரகாரத்தில் திருமங்கை வல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனிவர், விநாயகர், வைஷ்ணவி ஆகியோர் தனி தனி சன்னதிகளில் உள்ளனர்.

இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திருமங்கை வல்லித்தாயார், தம்மை நம்பிக்கையுடன் அணுகும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அள்ளி, அள்ளி கொடுப்பதாக கருதப்படுகிறது. இத்தாயாருக்கு உரிய முறையில் வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நிறைவான வாழ்க்கையை பெற முடியும்.

அது போல இத்தலத்தின் பிரகார தேவதையான ஸ்ரீவைஷ்ணவியும் பக்தர்களுக்கு வரங்களை வாரி, வாரி வழங்குகிறாள். திருமாலின் சங்கு, சக்கரத்தை ஏந்தியுள்ள அவள் கருணை வடிவாக நின்று சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைஷணவிக்கு “பூ மாலை வழிபாடு” செய்தால் உடனே திருமணம் நடைபெறும்.

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைஷ்ணவிக்கு திருமஞ்சனம் செய்து வணங்கினால், எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் நீங்கி திருமணம் நடைபெறும். இத்தல விநாயகரும் சிறப்பம்சம் கொண்டவர். இந்த விநாயகரின் வயிற்றில் ராகு-கேது இணைந்துள்ளனர்.

எனவே இந்த விநாயகரை வழிபட்டால், நாக தோஷம் நிவர்த்தியாகும். பிரார்த்தனை தலமான இங்கு நடத்தப்பட்டு வரும் 6 வார வழிபாடு தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. அதாவது மக நட்சத்திரம் வரும் நாளில் 6 தடவை ஜெகந்நாதரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் பெறுவதோடு, சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

இத்தலத்தின் விருட்சமாக பாரிஜாத மரம் உள்ளது. அதை வழிபட்டால் சொர்க்கத்தில் இடம் உண்டு. ஆதிகாலத்தில் இப்புனித தலத்தை சுற்றி 7-க்கும் மேற்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் இருந்தன. அவை மறைந்த நிலையில் பிருகு தீர்த்தம் மட்டும் உள்ளது.

இத்தீர்த்தத்தில் நீராடினால் பாவம் விலகும் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் ஆனி மாதம் ஸ்ரீஜெகந்நாத பெருமாளுக்கு பிரம்மோற்சவமும், ஐப்பசி மாதம் வைணவர்களின் குருவான ஸ்ரீமணவாள மாமுனிவர்- உற்சவமும், தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருமழிசை ஆழ்வாரின் அவதார மகோத்சவமும், மாசி மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

முனிவர்கள் தவம் செய்த இடம்:

ஒரு தடவை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவ ஆகிய ரிஷிகள் பிரம்மாவை சந்தித்து, “நாங்கள் தவம் செய்ய உயர்வான ஒரு இடத்தை காட்டுங்கள்” என்றனர். உடனே பிரம்மா, தராசின் ஒரு தட்டில் திருமழிசை தலத்தையும் மற்றொரு தட்டில் உலகின் மற்ற எல்லா புனித தலங்களையும் வைத்தார்.

திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து இருந்தது. இதையடுத்து உலகில் உள்ள எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் கொண்டது திருமழிசையே என்பதை ரிஷிகள் உணர்ந்தனர். இதனால் ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர். எனவே இத்தல பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும். மறுபிறவி இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

ஞானக்கண் பெற்ற திருமழிசை ஆழ்வார்:

திருமழிசை ஆழ்வார் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் சக்கர அம்சமாக தோன்றியவர். 4-வது ஆழ்வாரான இவர் சைவம், வைணவம் இரண்டிலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றினார். சைவத்தில் சிவவாக்கியர் ஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார். இவரது சொல்லாற்றாலை கண்டு வியந்த சிவன் இவருக்கு “பக்திசாரர்” என்ற சிறப்பை அளித்தார்.

கால் கட்டை விரலில் இவர் ஞானக்கண் பெற்றிருந்தார். இவரது பாசுரங்களில் பெருமாள் மனம் லயித்ததாக பல சான்றுகள் உள்ளன. ஸ்ரீரங்கம், அன்பில், திருப்பேர்நகர், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெக்கா, திருவள்ளூர், திருப்பதி, திருபாற்கடல், துவாரகை, பரமபதம் ஆகியவை இவர் பாடல் பெற்ற தலங்களாகும்.

ஒரு தடவை இவர் தன் சீடர் கனி கண்ணனுடன் காஞ்சியில் தங்கி இருந்தார். அப்போது அந்நகரின் மன்னன் பல்லவராயன் தன்னை வாலிபனாக்கும்படி ஆழ்வாரிடம் கேட்டார். ஆழ்வார் மறுக்கவே அவரை நகரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். உடனே திருமழிசை ஆழ்வார், “துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன்.

நீயுமுன் கைநாகப்பாய் சுருட்டிக் கொள்” என்று பாடி விட்டு சென்றார். இதனால் காஞ்சியில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஆழ்வார் பின்னாடியே சென்று விட்டதாக வரலாறு உள்ளது.

திருமலையில் இருந்த பேயாழ்வார் கேட்டுக் கொண்டபடி இவர் தன் இறுதி காலத்தில் திருமழிசையில் தங்கி இருந்து 200 பாசுரங்கள் பாடினார். பிறகு கும்பகோணத்தில் முக்தியானார். திருமழிசை தலத்தில் இவரை வழிபட்டால் சைவ, வைணவ தலங்களில் பெறக்கூடிய பலன்களை பெறலாம்.

Leave a comment