பரமார்த்த குரு கதைகள் – நரபலி சாமியார்

3.3/5 - (15 votes)

பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள்.

அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்!

“குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?” என்று மட்டி கேட்டான்.

“நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னான், முட்டாள்.

குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள்.

“குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்” என்றான் மூடன்.

“அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்” என்றார் பரமார்த்தர்.

“நரபலியா? ஐயையோ!” என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள்.

“சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை” என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர்.

“அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?” என்று கேட்டான் மண்டு.

“வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?” என்றார் பரமார்த்தர்.

அவ்வளவுதான்!

“ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?” என்று அழ ஆரம்பித்தான் முட்டாள்.

“ஐயையோ நான் மாட்டேன்” என்று மூடனும் மூக்கால் அழுதான்.

“குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்” என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர்.

பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார்.

“சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்” என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர்.

மறுநாள், சீடர்கள் அனைவரும் “எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்” என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்.

அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான்.

“நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்” என்று ஆணையிட்டான்.

நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள்.

ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார்.

மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். “ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி” என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர்.

சீடர்களும் ‘தடால்’ என்று விழுந்து கும்பிட்டார்கள்.

நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது.

அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள்.

“சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!” என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர்.

சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர்.

“ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!” என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர்.

உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர்.

அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது.

அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

“சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்” என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள்.

மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?” என்றார் பரமார்த்தர்.

“நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்” என்றான் மன்னன்.

“நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்” என்று சொன்னார் பரமார்த்தர்.

“அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன்.

ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே” என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள்.

Leave a comment