மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)

4/5 - (1 vote)

முடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத் திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆட்டிறைச்சி, தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.

அதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம், உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.

என் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர் அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும் அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும் இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார் ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியாது. என்னை மாமிசம் தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே, இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும்?

இந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான் சாக்குப் போக்குச் சொல்லும் போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் பொய் சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை அறிவேன். அதோடு நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும் தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத் தின்று கொண்டே இருந்தது.

ஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: ‘மாமிசம் சாப்பிவேண்டியது முக்கியம்தான்; நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால், அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். அப்பொழுது நான் மாமிசத்தைப் பகிரங்கமாகவே சாப்பிடுவேன். ஆனால், அச்சமயம் வரும் வரையில் நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.’

நான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன் பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.

இதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக் கொண்டேன். என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன. அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்தத்திலேதான்.

சில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது. அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான் முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம். இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன? மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது? என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்து வரும். இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என் கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க் கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன்.

என்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி இப்பொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத் தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன். ஓரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது? ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.

அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.

Leave a comment