மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – உயர்நிலைப் பள்ளியில்

Rate this post

எனக்கு மணமான போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிமார் மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம். மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால் எங்கள் இருவருக்கும் ஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான் என் அண்ணனுக்கு பின்னும் மோசமானதாகவே இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார். அவரைப் போல எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.

நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன் என்று யாருமே எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம் எப்பொழுதும் அன்போடு இருந்தார்கள். என் படிப்பின் அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை. உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் முறையே நான்கு ரூபாயும் பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில் இந்த உபகாரச் சம்பளம் எல்லோருக்கும் உரியதன்று. கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே அது உண்டு. அந்த நாட்களில் நாப்பது முதல் ஐம்பது பேர் வரையில் கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர் இருப்பதில்லை.

என் திறமையில் எனக்குப் பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப் பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான் ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது நன்னடத்தையை நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர் விட்டு அழுது விடுவேன். கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன் என்று உபாத்தியாயர் கருதினாலோ என்னால் சகிக்க முடியாது. ஒரு தடவை அடிப்பட்டதாக எனக்கு நினைவிருக்கிறது. அடிப்பட்டதற்காக நான் வருத்தப்படவில்லை, நான் அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக அழுதேன். முதல் வகுப்பிலோ, இரண்டாம் வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயம் தோராப்ஜி எதுல்ஜி ஜிமி தலைமையாசிரியராக இருந்தார். மாணவர்களுக்கெல்லாம் அவரிடம் அதிகப் பிரியம். அதே சமயத்தில் கட்டுத் திட்டங்களில் மிகக் கண்டிப்பானவர். குறிப்பிட்ட முறைப்படி காரியங்களைச் செய்பவர். நன்றாக போதிப்பவருங்கூட. அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத் தேகாப்பியாசத்தையும், கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார். இந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. இவை கட்டாயமாக்கப் படுவதற்கு முன்னால் நான் தேகாப்பியாசம் செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ இல்லை. ஒன்றிலும் சேராமல் நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி இருந்து விட்டது தவறு என்பதை இப்பொழுது அறிகிறேன். படிப்புக்கும் தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும் அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால், இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவேன்.

என்றாலும் தேகப் பயிற்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால் எனக்கு அதிகத் தீமை எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த யோசனை எனக்குப் பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம் இன்னும் எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது.

தேகாப்பியாச வகுப்புக்குப் போக நான் விரும்பாததற்குக் காரணம், என் தந்தைக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும், நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப் பணிவிடை செய்வேன். இந்தச் சேவை செய்வதற்குக் கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது. என் தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால் தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு. ஜிமிடம் கோரினேன். ஆனால் அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஒரு நாள் சனிக்கிழமை, அன்று காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4 மணிக்குத் தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும் பள்ளிக்கூடம் போக வேண்டும் நான் பள்ளிக்கூடம் போய் சேருவதற்கு முன்னால் அங்கிருந்து பிள்ளைகளெல்லாம். போய்விட்டார்கள். வந்திருந்தோரின் கணக்கை திரு. ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்த போது நான் வரவில்லை என்ற குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக் கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன். நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஒரணாவோ அல்லது இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச் சரியாக நினைவில்லை) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொய் சொன்னதாக நான் தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன் இருப்பவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச் சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்துச் செய்யப்பட்டு விட்டதில் நான் வெற்றி அடைந்தேன் என்று இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு நான் வந்துவிட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு என் தந்தையே எழுதியதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப் போகவேண்டும் என்பதில் இருந்து விலக்குப் பெற்றேன்.

தேகாப்பியாசத்தில் அசட்டையாக இருந்து விட்டதனால் எனக்குத் தீமை ஏற்படாது போனாலும் மற்றொரு விஷயத்தில் நான் அசட்டையாக இருந்து விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்த அபிப்பிராயமே எனக்கு இருந்தது. பிறகு, முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவில், இளம் வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக் குறித்து நானே வெட்கப் பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்து விட்டதற்காக வருந்தவும் செய்தேன். மோசமான கையெழுத்தை, அரைகுறையான படிப்புக்கு அறிகுறியாகக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்யப் பிறகு முயன்றேன். ஆனால் அதற்குக் காலம் கடந்து போய் விட்டது. இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. ஒவ்வொர் இளைஞரும் இளம்பெண்ணும், என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்; கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும். குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக் குழந்தை பார்த்தே தெரிந்து கொள்ளுவதைப் போல, எழுத்துக்களையும் அது பார்த்தே தெரிந்து கொள்ளட்டும். பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக் கொண்ட பிறகு எழுத்துக்களை எழுதக் கற்கட்டும். அப்போது அக்குழந்தையின் கையெழுத்து அழகாக அமையும்.

என் பள்ளிக்கூட நினைவுகளில் குறிப்பிடத்தக்கவை மற்றும் இரண்டு உண்டு. என் விவாகத்தினால் எனக்கு ஒரு வருடப் படிப்பு வீணாகி விட்டது. ஒரு வகுப்புத் தாண்டி மேல் வகுப்பில் என்னைத் தூக்கிப்போட்டு எனக்கு அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட ஆசிரியர் விரும்பினார். நன்றாக உழைத்துப் படிக்கும் பிள்ளைகளுக்கே இந்தச் சலுகையை அளிப்பது வழக்கம். நான் மூன்றாம் வகுப்பில் ஆறு மாதங்களே படித்தேன். கோடை விடுமுறைக்கு முன்னால் நடக்கும் பரீட்சைக்குப் பிறகு என்னை நான்காம் வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள். நான்காம் வகுப்பிலிருந்து பல பாடங்கள் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. எனக்கோ திக்குத்திசை தெரியவில்லை. ஷேத்திர கணிதம் புதுப்பாடம். ஏற்கனவே அது எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. அதை ஆங்கிலத்திலும் போதிக்க ஆரம்பித்து விட்டதால் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டமாயிற்று. ஆசிரியர் இப்பாடத்தை மிக நன்றாகவே சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்னால் விளக்கிக் கொள்ள இயலவில்லை. பன்முறையும் மனச்சோர்வடைந்து விடுவேன். மூன்றாம் வகுப்புக்கே திரும்பிப் போய்விடலாம் என்றும் எண்ணுவேன். இரண்டு வருடப் படிப்பை ஒரே வருடத்தில் படித்துவிடலாம் என்பது அதிகப்படியான ஆசை என்றும் எனக்குத் தோன்றும். ஆனால், அப்படி மூன்றாம் வகுப்புக்கே போய்விடுவது எனக்கு மாத்திரமல்ல, ஆசிரியருக்கும் அவமானம். ஏனெனில் கஷ்டப்பட்டுப் படிக்கக்கூடியவன் நான் என்று நம்பியே என்னை மேல் வகுப்பில் சேர்க்க அவர் சிபாரிசு செய்தார். இந்த இரண்டு அவமானங்களையும் குறித்து எனக்கு ஏற்பட்ட பயத்தினால் விடாப்பிடியாகப் படிக்கலானேன். அதிக சிரமத்தின் பேரில் யூக்ளிட்டின் பதிமூன்றாவது பாடத்திற்கு வந்த பிறகு அந்தப் பாடம் மிக எளிதானது என்று திடீரென்று எனக்கு தோன்றியது. பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு மாத்திரமே கற்றுவிட முடியும். ஒரு பாடம் கஷ்டமானதாகவே இருக்க முடியாது. அச்சமயத்திலிருந்து ஷேத்திர கணிதம் எனக்குச் சுலபமானதாகவும் சுவையுள்ளதாகவும் ஆயிற்று.

என்றாலும், சமஸ்கிருத பாடம் அதிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஷேத்திர கணிதத்தில் மனப்பாடம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால், சமஸ்கிருதத்திலோ ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இந்தப் பாடமும் நான்காம் வகுப்பிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் வகுப்புக்குப் போனதும் மனச்சோர்வு அடைந்து விட்டேன். அந்த ஆசிரியரோ கடுமையாக வேலை வாங்குகிறவர். பையன்களை நிர்ப்பந்தப் படுத்துவதில் அவருக்கு ஒரே ஆசை என்றும் நினைத்தேன். சமஸ்கிருத ஆசிரியருக்கும் பர்ஸிய ஆசிரியருக்கும் ஒருவகைப் போட்டியே இருந்து வந்தது. பர்ஸிய பாஷை போதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அப்படிக் கண்டிப்பில்லாதவர்; பர்ஸிய பாஷை இலகுவானது; அந்த ஆசிரியரும் நல்லவர்; மாணவர்களை வருத்துவதில்லை என்று பையன்கள் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்ளுவார்கள். சுலபம் என்பதில் மயங்கி விட்டேன்.

ஒருநாள் பர்ஸிய வகுப்பிலேயே போய் உட்கார்ந்து கொண்டேன். நான் இவ்விதம் செய்ததற்காகச் சமஸ்கிருத ஆசிரியர் வருத்தப்பட்டார். என்னை அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பினவருமாறு சொன்னார்: “நீ ஒரு வைஷ்ணவரின் மகன் என்பதை எப்படி மறந்து போனாய்? உன் மதத்தின் மொழியை நீ கற்க வேண்டாமா? இதில் உனக்கு ஏதேனும் கஷ்டமிருந்தால் என்னிடம் வந்து சொல்லுவதற்கென்ன? என்னால் ஆன வரையில் சிரமம்பட்டு மாணவர்களான உங்களுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலே போகப் போக மனத்தைக் கவரும் விஷயங்கள் இம்மொழியில் இருப்பதை நீ அறிவாய். நீ மனம் தளர்ந்து விடக்கூடாது. வா. திரும்பவும் சமஸ்கிருத வகுப்பிலேயே வந்து உட்கார்.”

அவர் காட்டிய அன்பினால் வெட்கிப் போனேன். ஆசிரியரின் அன்பை அலட்சியம் செய்து விட என்னால் முடியவில்லை. இந்த ஆசிரியரான கிருஷ்ண சங்கர பாண்டியாவை இன்று நான் நன்றியுடனேயே நினைக்கிறேன். ஏனெனில், அப்பொழுது நான் கற்றுக் கொண்ட கொஞ்ச சமஸ்கிருத ஞானமாவது எனக்கு இல்லாதிருக்குமாயின், நமது சமய நூல்களில் எனக்கு எந்த விதமான சிரத்தையும் இருந்திருப்பதற்கில்லை. அம்மொழியில் இன்னும் அதிக ஞானத்தை நான் அடையாது போனேனே என்பதற்காக இப்பொழுது மிகவும் வருந்துகிறேன். ஏனெனில், ஒவ்வொரு ஹிந்துப் பையனும் பெண்ணும், சமஸ்கிருதத்தை நன்றாக படித்திருப்பது அவசியம் என்பதை இப்பொழுது உணருகிறேன்.

இந்தியாவில் உள்ள எல்லா உயர்தரக் கல்வி முறையிலும் தாய்மொழியோடு ஹிந்தி, சமஸ்கிருதம், பர்ஸிய மொழி, அரபு, ஆங்கிலம் ஆகிய இத்தனை மொழிகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பது இப்பொழுது என் அபிப்பிராயம். இந்தப் பெரிய ஜாபிதாவைப் பார்த்த யாரும் பயந்துவிட வேண்டியதில்லை. நமது கல்வி, சரியான முறையில் இருந்து, அந்நிய மொழியின் மூலமே எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டி இருக்கும் சுமையும் பிள்ளைகளுக்கும் இல்லாதிருப்பின், இத்தனை மொழிகளையும் கற்பது சங்கடமாயிராது. அதற்குப் பதிலாகப் பெரிதும் சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கும் என்பது நிச்சயம். ஒரு மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு விட்டவர்களுக்கு மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டு விடுவது எளிதாகும்.

ஹிந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் உண்மையில் ஒரு மொழி என்றே சொல்லலாம். பர்ஸியமும் அரபும் அதே போல ஒரு மொழியே. பர்ஸிய மொழி ஆரிய மொழி இனத்தைச் சேர்ந்தாயினும், பர்ஸிய மொழிக்கும், அரபு மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஏனெனில், இவ்விரு மொழிகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியோடு முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. உருது ஒரு தனி மொழி என்று நான் கருதுவதில்லை. எனெனில், ஹிந்தி இலக்கணமே அதன் இலக்கணம்; பர்ஸிய, அரபுச் சொற்களே அதன் சொற்கள். நல்ல குஜராத்தி, நல்ல ஹிந்தி, நல்ல வங்காளி அல்லது நல்ல மராத்தி கற்க விரும்புவோர் சமஸ்கிருதத்தைக் கற்றாக வேண்டியது எப்படி முக்கியமோ, அப்படி நல்ல உருது கற்பதற்குப் பர்ஸிய, அரபு மொழிகளைப் படிப்பது அவசியம்.

Leave a comment