சிறுவர் கதைகள் – வேட்டை நாய்

3/5 - (2 votes)

வேட்டைக்காரன் ஒருவன் இரண்டு நாய்கள் வைத்திருந்தான். அவற்றில் ஒரு நாய் அவனுடன் வேட்டைக்குச் சென்றுவரும். மற்றொரு நாய் அவனது வீட்டைக் காவல் காத்துக் கொண்டிருக்கும். ஒரு நாயின் கடமை வேட்டையாடுதல்; இன்னொரு நாயின் கடமை வீட்டைக் காவல் காத்தல்.

வேட்டைக்காரன் வேட்டைக்குச் சென்று திரும்பியதும், வேட்டையில் கிடைத்தவற்றில் வீட்டு நாய்க்கே அதிகமாகக் கொடுப்பது வழக்கம். வேட்டை நாய் நீண்ட நாள்வரை அதைப் பொருட்படுத்தாமல் இருந்தது.

ஒருநாள் வேட்டையாடிவிட்டுத் திரும்பி வந்ததும், வேட்டைக்காரன் வழக்கம்போல் செய்தான். அதைக் கண்ட வேட்டை நாய்க்கு அப்போதுதான் வருத்தம் ஏற்பட்டது.

வருத்தம் கொண்ட வேட்டைநாய், வீட்டு நாயைப் பார்த்து, “”வேட்டையாடுவது எவ்வளவு கடினமான வேலை தெரியுமா? நீ அந்தத் துன்பத்தில் பங்கு கொள்ளவில்லை. ஆனால், நான் வேட்டையில் சம்பாதித்தவற்றில் மட்டும் பெரும் பகுதியைப் பங்காகப் பெற்றுக் கொள்கிறாய். இது முறையா? இது நியாயமா? உனக்கே இது நல்லதாகத் தெரிகிறதா?” என்று வருத்தத்துடன் கேட்டது.

அதைக் கேட்ட வீட்டு நாய் மெல்லச் சிரித்துக் கொண்டே, “”நண்பனே! அது என்னுடைய குற்றம் இல்லை. நீ என்மீது வருத்தப்படுவதில் பயனில்லை. இந்தக் குற்றம் நம் எஜமானனுடையது. அவர் எனக்கு வேட்டையாடச் சொல்லித்தரவில்லை. வேட்டையாடுவதில் என்னைப் பழக்கவில்லை. மற்றவர் சம்பாதித்த பொருளில் பங்கு பெறத்தான் சொல்லிக் கொடுத்துப் பழக்கியிருக்கிறார்!” என்று பதில் கூறியது.

அதைக் கேட்டதும், வேட்டை நாயினால் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியவில்லை. இந்த அநியாயக்கார உலகத்தில் நியாயத்தை எதிர்பார்ப்பது தவறு என்பதை உணர்ந்து மவுனமாக இருந்தது.

Leave a comment