Author: Siruvarmalar

பிறர் பொருளை விரும்பாதே!!!

சன்னாசிக்கிழவன் களைப்போடு வீட்டுக்குள் நுழைந்தான். நடுவீட்டின் உச்சியை அண்ணாந்து பார்த்தான். ஆகாயத்திலிருந்து நிலாவெளிச்சம் பளீரென்று வீட்டுக்குள் அடித்தது. பெருமூச்சு விட்டவாறே தன் முண்டாசை உதறித் தரைமீது போட்டுக் கீழே அமர்ந்தான்.

“என்னாப்பா, மோட்டுவளையைப் பாக்குறே? எதாச்சும் பணம் கொட்டுமான்னு பாக்குறியா?”

என்றவாறே அவன் மகன் சின்னச்சாமி உள்ளே நுழைந்தான்.

“பணம் கொட்டுதோ இல்லையோ மழை வந்தா தண்ணி கொட்டும்.”

” ஆமாம்பா, இந்த மழைக் காலம் வாரதுக்குள்ளே நம்ம வீட்டை இடிச்சுக் கட்டிடணும் அப்பா.”

“எனக்கும் ஆசைதான். ஆனா அதுக்கு  நீ சொன்ன மாதிரி பணம் கூரையிலேந்து கொட்டினாத்தான் உண்டு.”

“ஏம்பா அப்பிடிச் சொல்றே. வீட்டக் கட்டிடணும் அப்படீங்கற எண்ணத்தோட உழைச்சா கட்டாயம் நம்மாலே முடியும் அப்பா.”

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பச்சையம்மா “சரி சரி நேரத்தோட சோறு திங்க வாங்க. கெனா அல்லாம் அப்பால காங்களாம்” என்றாள் சலிப்போடு.

தந்தையும் மகனும் தங்கள் பேச்சை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றார்கள்.
மறுநாள் பொழுதோடு எழுந்து வேலைக்குச் சென்றான் சன்னாசி. அந்த ஊர் பூங்காவில் பழுது பார்க்கும் வேலையில் அவன் ஒரு தோட்டக்காரனாக வேலை பார்த்து வந்தான்.
முதல்நாள் விடுமுறை தினமாதலால் நிறைய பேர் பூங்காவுக்கு வந்து சென்றிருந்தனர். பூங்கா முழுவதும் குப்பையும் கூளமுமாக இருந்தது. அதைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தான் சன்னாசி.

செடியைக் கொத்தி சீர் படுத்தும் போது அதனுள்ளே பளபளவென்று தெரியவே என்னவென்று எடுத்துப் பார்த்தான். இரண்டு சவரன் தேறும் ஒரு தங்கச் சங்கிலி.
சட்டென அதைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டான். ஏதும் அறியாதவன்போல் வேலையில் ஈடுபட்டான்.

சற்று நேரத்தில் அழுது கொண்டிருக்கும்  ஒரு சிறுமியைக் கையைப் பிடித்து இழுத்து வ்ந்தார் அவள் தந்தை. அவளிடம் கடுமையாகக் கேட்டார். “எங்கே விளையாடினே?இங்கேயா, இங்கேயா, சொல்லித்தொலையேன். தேடிப்பார்க்கலாம்.” என்றவர் நான்கு தோட்டக்காரர்களையும் விசாரித்தார்.

“யாராவது ஏதேனும் நகை கிடப்பதைப் பார்த்தீர்களா?”

யாரும் பார்க்கவில்லை எனக் கூறிவிட்டனர். சன்னாசிக் கிழவனும் தன் தலையைப் பலமாக இல்லையென்று ஆட்டிவிட்டான். கண்களில் நீர் நிறைய “அய்யோ  ஆசையாக வாங்கியது போச்சே.

இந்தக் கடனை அடைக்க நான் இன்னும் எத்தனை கஷ்டப் படணுமோ.” என்று புலம்பியவாறே தன் பெண்ணை இழுத்துக் கொண்டு வெளியேறினார் அந்த அப்பாவி அப்பா.

சன்னாசிக்குப் பார்க்கப் பாவமாக இருந்தாலும் இதையெல்லாம் பார்த்தால் நாம் கல்லு வீட்டில் உக்கார முடியுமா என்ற எண்ணமும் கூடவே தோன்றியது.

வேகவேகமாக வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று அந்தச் சங்கிலியை பத்திரப் படுத்தி வைத்தான்.

ஒரு வாரத்தில் சன்னாசி நினைத்தவாறே கல்லு வீடு எழும்பத் தொடங்கிற்று. சின்னச்சாமிக்கும் அவன் அம்மாவுக்கும் ஆச்சரியம். என்ன கேட்டும் சன்னாசி “ஆண்டவன் கொடுத்தாண்டி” என்று சொல்லி அவள் வாயை அடைத்து வந்தான்.
ஒரு மாதம்  ஓடிவிட்டது. வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. ஈரமான தலையைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தான் சின்னச்சாமி.

“ஏண்டா தம்பி இம்மா நேரம்? வேலை எதுவும் கெடைக்கலியா?”

“அதில்லம்மா, ஒரு பெரியவரு பார்க்குல உக்காந்திருந்தாரு. எழுந்து போகையில பொட்டிய மறந்து வச்சுட்டுப் போயிட்டாரு. அதை எடுத்துக்கினு அவரு வீட்டத் தேடி கொண்டுபோய் கொடுத்திட்டு வாரதுக்குஇம்மா நேரமாயிடுச்சம்மா.”

சன்னாசி மெதுவாக, “அது என்னா பொட்டிடா?” என்று கேட்டான்.

“அது எனக்குத் தெரியாதுப்பா”

“பொழைக்கத் தெரியாத புள்ள” என்றபடியே வெளியே சென்றான் சன்னாசி.

வெளியே லேசாகத் தூறிக்கொண்டிருந்தது திடீரென்று பெரும் மழை பிடித்துக் கொண்டது. நடு இரவில் வெளியே ஒரே கூச்சலாயிருந்தது  கேட்டு சன்னாசி சின்னச்சாமி அவன் தாய் பச்சை  அனைவரும் கதவைத் திறந்து பார்த்தனர். வெளியே இருந்த குடிசை வீடுகள் எல்லாம் மழையில் அடித்துச் செல்லவே மக்கள் அனைவரும் தங்கள் உடமைகளோடு அருகே இருந்த பள்ளியை நோக்கி ஓடித் தஞ்சம் புகுந்தனர்.

சன்னாசி தான் கல்லு வீட்டில் இருப்பதால் மிகவும் பெருமையோடு மீண்டும் வந்து பாயில் படுத்துக் கொண்டான்.

ஒரு மணி நேரம் போயிருக்கும். திடீரென்று பச்சையம்மா “அய்யோ! எந்திரிங்க வீட்டுக்குள்ளாற தண்ணி வந்திருச்சு” என்று அலறியவாறே சன்னாசியை உலுக்கி எழுப்பினாள். அதற்குள் வீட்டுக்குள் மளமளவென தண்ணீர் உயரத் தொடங்கவே செய்வதறியாமல் உயிருக்கு அஞ்சி ஊர் மக்கள் அனைவரும் தங்கியிருக்கும் பள்ளிக்கூடத்திலேயே மூவரும் தஞ்சம் புகுந்தனர்.

சிறிய பள்ளிக்கூடம் மக்கள் ஏற்கனவே நிறைந்திருந்ததால் சன்னாசி குடும்பத்திற்கு ஒண்டிக் கொள்ளத்தான்  இடமிருந்தது. மீதி இரவை நின்று கொண்டே கழித்தனர் சன்னாசியும் அவன் மகன் மனைவியும்.

மறுநாளும் மழை விடவில்லை. வானம் பொத்துக்கொண்டு ஊற்றியது. வாயிலில் வெள்ளமாகத் தண்ணீர் ஓடியது. பலரது வீடுகள் நீரில் மிதந்து செல்வதைக் கண்டும் செய்வதறியாது அனைவரும் புலம்பிக்கொண்டு நின்றிருந்தனர்.

திடீரென்று சன்னாசியும் கதறினான். அவனுடைய கல்லுவீட்டின் கதவு மிதந்து சென்றதை கண்டுதான் அலறினான். யாருக்கு யார் சமாதானம் செய்வது.

அரசு கொடுத்த உணவை உண்டு அன்று பொழுது கடந்தது. மாலை நேரம் சற்றே மழை விட்டதும் அணைத்து ஆண்களும் தங்கள் வீட்டில் உடமைகள் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா என்று பார்க்க வீட்டுக்குச் சென்றனர். சன்னாசியும் ஓடினான். அந்தோ, பரிதாபம். அங்கே அவன் கட்டியிருந்த வீடு இடிந்து மண்மேடாகக் காட்சியளித்தது.

அப்படியே சரிந்து அமர்ந்தான். அவன் பின்னால் வந்த சின்னச்சாமி அவனைக் கைத்தாங்கலாக அழைத்து வந்தான்.

அப்போது ஒரு பெரியவர் வண்டிநிறைய துணிமணிகள் போர்வை ஆகியவற்றுடன் உணவுப் பொட்டலங்களும் ஏற்றிக் கொண்டு அங்கு வந்து நின்றார். இன்னும் தூறல் நின்றபாடில்லை. இருப்பினும் பள்ளியில் ஒதுங்கியிருந்த மக்கள் அனைவரும் உணவுப் பொட்டலத்துக்காக ஓடி வந்தனர்.

அவர்களை வரிசையில் வரும்படி பணியாளர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்தபடியே நின்றிருந்த பெரியவர் தன் முன்னே சின்னச்சாமியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார்.

“ஏய் தம்பி, நீதானே அன்னிக்கி என் பொட்டியைக் கொண்டுவந்து கொடுத்தது.” அவரைப் பார்த்து வணக்கம் கூறினான் சின்னச்சாமி.

“ஏம்பா, பொட்டியக் குடுத்துட்டு சொல்லாம போயிட்டியே. உன்னை எங்கெல்லாம் தேடினேன்.”

“ஏனுங்க ஐயா? என்னை ஏன் தேடினீங்க?”

“உன் பேர் என்ன சொன்னே,  ஆங் சின்னச்சாமி.எவ்வளவு பெரிய உதவி செஞ்சுட்டு நீ பாட்டுக்குப் போயிட்டியே. உனக்கு ஏதானும் பரிசு குடுக்கணுமே அப்படின்னுதான் தேடினேன்.”

“ஐயா, உங்க பொட்டியக் கொண்டாந்து குடுத்ததா பெரிய வேலைன்னு சொல்றீங்க. அது என்ன பெரிய காரியமா?”

“ஆமாம் சின்னச்சாமி அம்பது லட்ச ரூபா சொத்து அந்தப் பொட்டில இருந்துது. அதனாலே உனக்கு நான்கடமைப் பட்டிருக்கேன்.”

சின்னச்சாமி திகைத்து நின்றிருந்தான்   “சின்னச்சாமி, இந்த இருபதாயிரத்தை  வாங்கிக் கொள். பாவம், மழையில் வீடிழந்து இருப்பாய். இதை வைத்து கொள். உனக்கு உதவியாக இருக்கும். மழை நின்ற பிறகு என்னை வந்து பார்.” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.

தன் மகனின் கையில் ரூபாய் நோட்டுக்களைப் பார்த்த சன்னாசிக்குப் பேச நா எழவில்லை.

அவன் மனம் தான் செய்த செயலையும் தன் மகன் செய்த செயலையும் எண்ணிப் பார்த்தது. ஒரு ‘ஏழைத் தந்தை அழ அவரது பொருளைத் தான் எடுத்துக்  கொண்டதால்தான் தான் அழ அந்தப் பொருள் தன்னை விட்டுச் சென்று விட்டது. என்ற உண்மையும் ஒரு நல்ல வழியில் வந்த பொருள் நாம் இழந்து விட்டாலும்  நம்மை வந்து அடைந்தே தீரும்’ என்ற அறிவும் அவன் உள்ளத்தைச் சுட்டது. அவன் மனம் திருந்தியது போல் வானம் பளீரென ஒளிவிடத் தொடங்கியது.

வள்ளுவரின் வாக்கு எத்தனை சத்திய வாக்கு!

“அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
 பிற்பயக்கும் நற்பா லவை.”                                   

வேதாளத்தின் வரலாறு

உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன்தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதுதான் ஈசனுக்கும், பார்வதி தேவிக்கும் அழகிய உடை ஒன்றை தைத்து கொடுக்க வேண்டும் என்று. இன்னைக்கு இந்த பொருட்களை தானம் பண்ணுனா.. உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறுமாம்…

புட்பதத்தன் தான் நினைத்தது போலவே அழகிய ஆடைகளை தயாரித்து அதனை ஈசனுக்கு வழங்க கைலாயத்திற்கு சென்றான். அங்கு சென்று ஈசனை பார்த்த மகிழ்ச்சியில் வந்த வேலையை மறந்து விட்டு ஈசனை வணங்கியே நேரத்தை கழித்தி விட்டான். ஈசனிடம் விடை பெற்றுக்கொண்டு அவன் திரும்பிய போது இருள் சூழ்ந்துவிட்டது. பிறகுதான் அவனுக்கு ஆடையை ஈசனுக்கும், பார்வதிக்கும் தராமல் வந்துவிட்டது நியாபகம் வந்தது. இருட்டியும் விட்டதால் கைலாயத்தின் வாசலிலேயே படுக்க முடிவெடுத்தான்.

அன்று இரவு சிவபெருமான் பார்வதி தேவியிடம் ஒரு முக்கியமான தேவ ரகசியம் பற்றி கூறிக்கொண்டிருந்தார். அது கைலாயத்தின் வாசலில் படுத்திருந்த புட்பதத்தன் காதுகளில் விழுந்துவிட்டது. மறுநாள் ஈசனிடம் சென்று தான் கொண்டுவந்த ஆடைகளை கொடுத்துவிட்டு ஆசிபெற்ற புட்பதத்தன், நேற்று இரவு தான் கைலாய வாசலில் படுத்திருந்ததையும், சிவன் கூறிய தேவ ரகசியத்தை கேட்டு விட்டதையும், அப்போதிருந்தே தன் மனம் படாதபாடு படுவதையும் கூறினான். தேவ ரகசியத்தை கேட்டு விட்டதால் கோபமுற்றார் சிவபெருமான், இருப்பினும் அவன் உண்மையை கூறியதால் அதனை எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் கூறக்கூடாது என்று அவனை எச்சரித்து அனுப்பினார். சனி பகவானின் அருளைப் பெற சொல்ல வேண்டிய சனி மந்திரங்கள்! சிவனின் சாபம் கைலாயத்திலிருந்து திரும்பி வந்த புட்பதத்தன் பல நாட்கள் நிம்மதியின்றி தவித்து வந்தான். அவன் மனைவி பல முறை கேட்டும் காரணம் என்னவென்று சொல்லாத புட்பதத்தன் ஒருநாள் அழுத்தம் தாங்காமல் அந்த தேவ ரகசியத்தை தன் மனைவியிடம் கூறிவிட்டான். இது உடனே ஈசனுக்கு தெரிந்துவிட்டது. தன் பேச்சை மதிக்காத புட்பதத்தனை வேதாளமாக மாறி பூமியில் முருங்கை மரத்தில் தொங்கும்படியும், ரகசியத்தை காக்க முடியாத நீ இனி கேள்விகள் கேட்டுக்கொண்டே உன் வாழ்நாளை கழிப்பாய் என்றும், ரகசியத்தை கேட்ட தேவதத்தை வனத்தில் இரவு முழுவதும் வீணை வாசித்து மற்றவர் உறக்கத்தை கெடுத்து கொண்டே இருப்பாய் என்றும் சாபமளித்தார்.

பல ஆண்டுகளாக வேதாளமாக புட்பதத்தன் சுடுகாட்டில் உள்ள முருங்கை மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் முனிவன் ஒருவன் வேதாளத்தை தன் அடிமையாக்கி அதன் சக்திகள் மூலம் உலகத்தை ஆள நினைத்தான்.அதற்காக தவமிருந்த போது காளி தேவி 1000 அரசர்களின் தலையை தனக்கு காணிக்கையாக அளித்தால் உன் வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்று கூறினார். அந்த கொடூர முனிவனும் பல அரசர்களை ஏமாற்றி காளி கோவிலுக்கு அழைத்து வந்து அவர்களை பலிகொடுக்க தொடங்கினான். இப்படியே 999 அரசர்களின் தலையை காளிக்கு பலிகொடுத்தான். விக்கிரமாதித்தன் ஆயிரமாவது பலியாக விக்கிரமதித்தனை பலி கொடுக்க நினைத்த முனிவன் விக்கிரமாதித்தனின் அரசவைக்கு சென்று காட்டுக்குள் ஒரு காளி கோவில் இருப்பதாகவும், அங்கு வேண்டினால் உங்கள் நாடு வளம்பெறும் எனவும் கூறினான். விக்கிரமாதித்தனும் முனிவனின் பேச்சை நம்பி அவனுடன் செல்ல சம்மதித்தான். வீணை இசை முனிவனுடன் காளி கோவிலுக்கு சென்ற விக்கிரமாதித்தன் அன்று இரவு அந்த கோவில் மண்டபத்தில் தங்க முடிவெடுத்தான். முனிவனும் பூஜை முடிந்தவுடன் விக்கிரமாதித்தனை பலியிட முடிவெடுத்தான். அப்பொழுது தூரத்திலிருந்து கேட்ட மனதை மயக்கும் வீணை இசை அவனை ஈர்த்தது. இசை வந்த திசைநோக்கி நடந்தான். அங்கே ஒரு அழகிய பெண் இருட்டில் அமர்ந்துகொண்டு வீணை வாசித்து கொண்டிருந்தாள். அவளிடம் நீ யார் ஏன் வனத்திற்குள் அமர்ந்து வீணை வாசித்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான் விக்கிரமாதித்தன்.

அந்த பெண் வேறு யாருமல்ல தேவ ரகசியத்தை கேட்ட புட்பதத்தனின் மனைவி தேவதத்தை. அவள் தன் கதையை விக்கிரமதித்தனிடம் கூற அவள் மேல் இரக்கம் கொண்டான் விக்கிரமாதித்தன். தங்களுடைய சாபம் தீர என்ன செய்ய வேண்டுமென்று தேவதத்தையிடம் விரும்பினான். அதற்கு தேவதத்தை நானும் வேதாளமாக தொங்கிகொண்டிக்ருக்கும் என் கணவரும் காட்டிற்குள் இருக்கும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டால் எங்கள் சாபம் நீங்கும். ஆனால் என் கணவரை அந்த முருங்கை மரத்தில் இருந்து இறக்கி காளி கோவிலுக்கு அழைத்து வருவது இயலாத ஒன்று என்றுகூறி அழுதாள். அது எவ்வளவு பெரிய ஆபத்தாய் இருந்தாலும் நான் அதனை செய்கிறேன் என்று கூறி அங்கிருந்து சென்றான் விக்கிரமாதித்தன்.

சுடுகாட்டிற்கு சென்ற விக்கிரமாதித்தன் அங்கு தலைகீழாக தொங்கி கொண்டிருந்த வேதாளத்தை கட்டி முதுகில் போட்டுக்கொண்டான். அதுவரை அமைதியாக இருந்த வேதாளம் விக்கிரமாதித்தனிடம் பேச தொடங்கியது. ” நாம் கோவிலுக்கு செல்லும் வரை நீ ஒரு வார்த்தை பேசக்கூடாது, அதேநேரம் நான் ஒரு கதை சொல்லி அதிலிருந்து கேள்வி கேட்பேன். அதற்கு பதில் தெரிந்தும் நீ கூறவில்லை என்றால் உன் தலை வெடித்து சிதறிவிடும் ” என்று கூறியது. விக்கிரமாதித்தன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க அவர்களின் பயணம் தொடங்கியது.

விக்கிரமாதித்தன் முதுகில் ஏறிய வேதாளம் அவனிடம் கதை சொல்ல தொடங்கியது. விக்கிரமாதித்தனும் கதை கேட்க தொடங்கினான். இறுதியாக வேதாளம் கதையிலிருந்து ஒரு கேள்வி கேட்டது. அதற்கான விடை விக்கிரமாதித்தனுக்கு தெரிந்தே இருந்தது. பதில் கூறினால் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றுவிடும். பதில் கூறவில்லை என்றால் தலை வெடித்து சிதறிவிடும், என்ன செய்யலாம் என்று யோசித்த விக்கிரமாதித்தன் பதிலே கூறிவிடலாம் என்று வாய்திறந்து பதில் கூறிவிட்டான். தான் இட்ட நிபந்தனையை விக்கிரமாதித்தன் மீறிவிட்டதால் மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம். இதேபோல 24 முறை கதை சொல்லி மீண்டும் முருங்கை மரத்திற்கே சென்றது வேதாளம்.

மீண்டும் வேதாளத்தை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு கோவிலுக்கு கிளம்பினான் விக்கிரமாதித்தன். இம்முறையும் வேதாளம் கதை சொல்ல தொடங்கியது. ஆனால் விக்கிரமாதித்தன் வாயை திறந்து பேசவில்லை. கேள்விக்கு பதில் கூறுவது போலவே பாசாங்கு செய்துகொண்டு கோவில் வரை வந்துவிட்டான். விக்கிரமதித்தனையே கவனித்து வந்த வேதாளம் கோவில் வந்துவிட்டதை உணரவில்லை. சிவன் கூறியபடி கோவிலுக்கு புட்பதத்தனும், தேவதத்தையும் சேர்ந்து வந்தததால் அவர்களின் சாபம் நீங்கியது.

சாபம் நீங்கிய புட்பதத்தன் விக்கிரமாதித்தனுக்கு நன்றி கூறியதோடு முனிவனின் உண்மையான எண்ணத்தை பற்றியும் கூறினான். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த விக்கிரமாதித்தன் அந்த முனிவரின் தலையை காளி தேவி முன் வெட்டி வீழ்த்தினான். அப்போது அங்கு தோன்றிய காளி தேவி ” விக்கிரமாதித்தா நீ கொடுத்த பலியில் என் மனம் குளிர்ந்தது உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள் ” என்று கூறினார். அதற்கு விக்கிரமாதித்தன் முனிவனால் கொல்லப்பட்ட அணைத்து அரசர்களும் உயிர்பெற வேண்டும் என்று வரம் கேட்டார். காளி தேவியும் விக்கிரமாதித்தன் கேட்ட வரத்தை தந்ததோடு அவனையும், அவன் நாட்டு மக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார்.

Hanuman in Tamil – Full Cartoon Kids Movies and Stories

Ramayanam in Tamil – Full Cartoon Kids Movies and Stories

பாடும் பறவை… இறந்ததுபோல் ஏன் நடித்தது? – சூஃபி கதையின் தத்துவம்

சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை. அப்படிப்பட்ட ஒரு சூஃபி கதை இது…

சூஃபி

அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல… அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும் பறவை. வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கூண்டில், வேண்டிய அனைத்து வசதிகளுடன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். அந்தப் பறவைக்குப் பிடித்தமான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வளர்த்து வந்தான். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை பறவையிடம் அழைத்துச் செல்வான். பறவை பாடும். அதைக் கேட்டு, வந்தவர்கள் மெய் மறந்து நிற்பார்கள். வியாபாரி, பெருமையுடன் எல்லோரையும் பார்ப்பான். பிறகு, பறவைக்கு சுவையான நொறுக்குத்தீனிகளை அள்ளி வீசுவான். வீடு திரும்புவான்.

ஒரு நாள் வியாபாரி ஓர் அயல்நாட்டுப் பயணத்துக்காகக் கிளம்பினான். மனைவி, மகள்கள், பிள்ளைகளிடம், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என விசாரித்தான். நகைகள், பட்டு, பொம்மைகள், ஆபரணங்கள்… என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அத்தனையையும் கேட்டுக்கொண்டான். தோட்டத்துக்குப் போனான். அவனுடைய செல்லப் பறவையிடம், தான் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செல்வதைச் சொன்னான். “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! வாங்கி வருகிறேன்’’ என்றான்.

“எது கேட்டாலும் கிடைக்குமா?’’

“நிச்சயமாக… என்ன வேண்டும் கேள்!’’

“வெளிநாட்டில் அல்லது போகும் வழியில் என் இனத்தைச் சேர்ந்த பறவை எதையாவது பார்த்தால், ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்… முடியுமா?’’

“என்ன அது/’’

“நான் இங்கே எப்படி இருக்கிறேன், என் நிலை என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும்.’’

“அதற்கென்ன… சொல்லிவிடுகிறேன். வேறு ஒன்றும் வேண்டாமா? நீ உன்னைப் பார்த்து ரசிக்க தங்கத்தால் அலங்கரித்த கண்ணாடி, விலையுயர்ந்த சுவையான பருப்பு, தானியங்கள்..?’’

“வேண்டாம்.’’ சொல்லிவிட்டு பறவை கூண்டின் உயரே இருந்த மர ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டது.

சூஃபி கதை

வியாபாரி வெளிநாட்டுக்குப் போனான். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொருள்களைத் தேடித் தேடி வாங்கினான். எல்லா வேலைகளும் முடிந்தன. இறுதியாக அவன் வளர்த்த பறவையின் விருப்பம் நிறைவேற வேண்டுமே! அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எங்கேயாவது இருக்கின்றனவா எனத் தேடினான். ஊர் முழுக்க அலைந்த பிறகு, ஒரு நந்தவனத்தில் அவற்றைப் பார்த்தான். ஒரு மரத்தின் மேல், இவன் வளர்க்கும் பறவை இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் அருகே போனான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.

“என் மாளிகையில் உங்கள் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று இருக்கிறது. அது தன் இனத்தைச் சேர்ந்த பறவைகளைப் பார்த்தால் அதன் நிலைமையைச் சொல்லச் சொன்னது. சுகமான மெத்தை, ஊஞ்சல், வேளைக்கு அறுசுவை உணவுகள் அனைத்தையும் கொடுத்து, ஒரு கூண்டில் அதை வளர்த்துவருகிறேன்…’’

சூஃபி - பறவைகள்

அவன் முழுமையாகக்கூடச் சொல்லி முடிக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த பறவைகளில் ஒன்றின் உடல் நடுங்கியது. அது மரத்தின் உச்சியில் இருந்து `சொத்’தென்று தரையில் விழுந்தது. லேசாகத் துடித்து, பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப்போனது. வியாபாரியால் இதைத் தாங்க முடியவில்லை. அந்தப் பறவை இறந்துபோனதை உணர்ந்தான். `அது ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவன் மனதைப் பிசைந்தது. பெரும் துயரத்தோடு தான் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தான்.

திரும்பி வரும் வழியெல்லாம் `அந்தப் பறவை ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவனைத் துளைத்துக்கொண்டே இருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகளுக்காக அவன் கொண்டு செல்லும் விலையுயர்ந்த பொருள்கள்… எதுவும் அவன் நினைவில் இல்லை. மரத்தில் இருந்து அந்தப் பறவை இறந்த காட்சி மட்டுமே திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழித்தது. சாப்பாடு இறங்கவில்லை, கப்பலில் உடன் வந்தவர்களுடன் பேசக்கூடப் பிடிக்கவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான்.

மனைவி, மகள்கள், பிள்ளைகள் அவன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அவனைப் பாராட்டித் தள்ளினார்கள். அவன் எல்லாவற்றுக்கும் லேசாகத் தலையசைத்து, புன்னகைத்தானே தவிர,  பதில் பேசவில்லை. தன் வளர்ப்புப் பறவையை எப்படிப் பார்க்கப் போகிறோம், அதற்கு எப்படி நடந்ததைச் சொல்வது என்கிற வேதனை அவனை வதைத்துக்கொண்டிருந்தது.

அடுத்த நாள் ஒருவழியாக, தன்னைத் தேற்றிக்கொண்டு அந்தப் பறவையிடம் போனான். அது, கூண்டின் மேலே இருந்த சிறிய மரக்கட்டை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. வியாபாரி, தயங்கித் தயங்கி, பறவைகளைப் பார்த்ததையும் நடந்ததையும் சொன்னான். அவ்வளவுதான்… கேட்டுக்கொண்டிருந்த பறவையின் உடல் நடுங்கியது; அது ஊஞ்சலில் இருந்து `சொத்’தென்று கீழே கூண்டுக்குள் விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. அவன் பதறிப்போனான். அவசர அவசரமாகக் கூண்டைத் திறந்தான். நடுங்கும் கரங்களால் அந்தப் பறவையைத் தூக்கினான். உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தான். திடீரென்று அது நடந்தது… அந்தப் பறவை சட்டென்று தன் சிறகுகளை அசைத்து, அவன் கைகளில் இருந்து பறந்துபோய் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது.

சூஃபி - பறவை

பறவை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். பிறகு ஒருவாறாகத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதனிடம் கேட்டான்… “இது என்ன தந்திரம்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? இறந்ததுபோல் ஏன் நடித்தாய்? சொல்!’’

“நீ பார்த்தாயே… என் உறவுக்காரப் பறவை… அது என் அழகு, வாழ்க்கை மொத்தமும் இந்தக் கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதை எனக்கு உணர்த்திவிட்டது. என் குரலுக்கு மயங்கினாய். பாட வைத்தாய். நீ பாடச் சொல்வதும், அதற்கு இணங்கி நான் பாடுவதும்கூட எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், எந்தப் பறவையும் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை. அந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம். பறத்தல்தான் என் இயல்பு, எனக்கு வேண்டியது சுதந்திரம்…’’

அந்தப் பறவை வானில் கிளம்பி, சிறகசைத்துப் பறந்து அவன் கண்ணில் இருந்து மறைந்தது.

Live Darshan Video from Shirdi Sai Baba Samadhi Mandir
Live Darshan Video from Shirdi Sai Baba Samadhi Mandir

ஷிர்டி பாபா பகுதி -25
ஷிர்டி பாபா பகுதி -25

பாபா சொன்னால் சொன்னபடி நடக்குமே? சகோதரிப் பல்லியைப் பார்ப்பதற்காக, பக்தர் ஆவலோடு காத்திருந்தார். தெய்வத்தின் திட்டங்கள்தான் எத்தனை ஆச்சரியமானவை! ஆறறிவு படைத்த மனிதனுக்குத் தாய்ப்பாசம் இருக்கிறது. தாய்ப்பால் கொடுத்துக் குழந்தையைத் தாய் வளர்ப்பதும், இயல்பாகவே அவளிடம் தோன்றும் அளவற்ற பாசத்தால்தான். தாயின் பெருமையை அறிவுபூர்வமாக உணர்ந்து அவளை அவளது வயோதிக காலத்தில் பராமரிக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமை. தாய்தந்தையை முதியோர் இல்லத்தில் கொண்டு தள்ளுபவர்கள் அந்தப் பெரும் பாக்கியத்தை இழக்கிறார்கள். பிராயச்சித்தமே இல்லாத மாபெரும் பாவத்தைச் செய்கிறார்கள். விலங்குகளிடமும் பறவைகளிடமும் இயற்கை தேவையான நேரத்தில் மட்டும் தாய்ப்பாசத்தை உண்டு பண்ணுகிறது. எப்பேர்ப்பட்ட விந்தை அது! ஐந்தறிவே உள்ள அவற்றிடம் அப்படியொரு பாசம் தோன்றுவது எத்தனை ஆச்சரியம்! ஒரு தாய்க்கோழி தான் இட்ட முட்டையை எந்தக் கட்டளைக்குப் பணிந்து தொடர்ந்து அடை காக்கிறது? முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிவந்ததும், எதிரிகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற வீர உணர்ச்சியைத் தாய்க்கோழியின் மனத்தில் புகட்டியவர் யார்? இறைவன் திட்டத்தில் பறவைகளிடமும் விலங்குகளிடமும் தோன்றும் தாய்ப்பாசம் மனிதர்களிடம் உள்ளது போல் நீண்டநாள் இருப்பதில்லை. பறவைகளின் குஞ்சுக்கு இறக்கை முளைத்த பிறகோ, விலங்கின் குட்டி சற்று வளர்ந்த பிறகோ தாய்ப்பாசம் மறைந்து விடுகிறது. அவைகள் தனித்தனி வாழ்க்கையை நடத்தத் தொடங்கிவிடுகின்றன.

அபூர்வமாக அப்படி அல்லாமலும் விலங்குகளிடம் பாசம் தொடர்ந்து இருக்கும் போலும்! இதோ! இந்தப் பல்லியைத் தேடி இதன் சகோதரி வரப்போகிறதாமே? பக்தர் வியப்போடு கேட்டார்: பாபா! வெறும் ஐந்தறிவு மட்டுமே உள்ள விலங்குகள் எப்படி இவற்றையெல்லாம் அறிகின்றன? பாபா பக்தரைக் கூர்மையாகப் பார்த்தார். அவர் பார்வை பல விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிற்று. உண்மையில் ஐந்தறிவு என்பது நம் ஆறறிவை விடக் குறைவானது என்று நினைக்கிறோம். ஆனால், ஐந்தறிவு கொண்டவை நம்மை விடக் கூடுதல் சக்தி பெற்றிருப்பதை நாம் உணர்வதில்லை. இயற்கையின் ஆற்றலை முன்கூட்டியே தெளிவாக உணர்ந்துகொள்ளும் சக்தி நமக்கு இருப்பதில்லை. ஆனால் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அந்தச் சக்தி இருக்கிறது. நிலநடுக்கம் வருவதற்கு முன்பாகவே விலங்குகள் அதை உணர்ந்து நிலநடுக்கம் வராத பிரதேசத்திற்குத் தாவுகின்றன. சுனாமி வருவதற்கும் முன்பாகவே, அவை அச்சத்தோடு குரல் கொடுத்து மனிதர்களை எச்சரிக்கின்றன. விலங்குகளோ, பறவைகளோ எந்த வானிலை ஆராய்ச்சி மையத்தையும் சார்ந்து தம் அறிவைப் பெறுவதில்லை.

சம்பவம் நிகழ்வதற்கு முன்பாகவே அவற்றை உணரும் நுண்ணறிவு இயல்பிலேயே அவற்றிடம் அடங்கியிருக்கிறது. மனிதர்களை விட விலங்குகளும் பறவைகளும் எத்தனையோ வகைகளில் உயர்ந்தவைதான். அந்த பக்தருக்கு ஒன்று புரிந்தது. பாபாவைப் பொறுத்தவரை விலங்குகள், பறவைகள், மனிதர்கள், தாவரங்கள் எல்லாமே அவருக்கு ஒன்றுதான். எல்லாமே அவரது படைப்புத்தான் என்பதால், எல்லாவற்றின் மீதும் பாபாவுக்கு நிரந்தரமான தாய்ப்பாசம் உண்டு! ஒரு தாய் தன் குழந்தை மீது பாசம் செலுத்துவது இயல்புதான் என்றால், பாபா தான் படைத்த அத்தனை உயிரினங்கள் மேலும் அளவற்ற பாசம் செலுத்துவதும் இயல்புதானே? ஒரு தாய் தன் குழந்தையைக் காப்பதற்கும் மேலாகத் தானே பாபா தன் பக்தர்களைக் கனிவுடன் காப்பாற்றுகிறார்? இப்படி அந்த பக்தர் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான், ஜல் ஜல் என்ற சப்தத்துடன் ஒரு குதிரை ஷிர்டி மசூதியின் வாசலில் வந்து நின்றது. பாபாவை தரிசிக்கும் ஆவலோடு அவுரங்காபாத்தில்இருந்து வந்த ஒரு பிரமுகர் குதிரை மேலிருந்து தாவிக் கீழே இறங்கினார். பாபாவை தரிசித்த பின், அதே குதிரையில் தனது பயணத்தைத் தொடர விரும்பினார் அவர். ஆனால் என்ன சங்கடம்? குதிரை நகர மறுத்தது. ஓர் அடி கூட எடுத்துவைக்க அதற்கு மனமில்லை. அது சரி.

ஏற்கனவே பாபாவால் நிர்ணயிக்கப்பட்ட திட்டப்படி எல்லாம் நடந்தால் தானே குதிரை நகரும்? குதிரைக்கு நல்ல பசி போலிருக்கிறது என்று நினைத்தார் பிரமுகர். அதற்கு கொள்ளு கொடுத்தால் அது பசியாறும். பின் மீண்டும் பயணத்திற்குத் தயாராகிவிடும். ஷிர்டியில் எங்கிருந்தாவது கொள்ளை வாங்கி வர வேண்டும். கொள்ளை எதில் வாங்கி வருவது? பிரமுகரின் தோளில் ஒரு காலிப் பை இருந்தது. அதில் கொள்ளை வாங்கிவர எண்ணினார். அதன் பொருட்டு காலிப் பையைத் தோளிலிருந்து எடுத்தார். துõசியைப் போக்குவதற்காகக் கீழே உதறினார். சடாரென்று பையிலிருந்து ஒரு பல்லி கீழே விழுந்தது. தன்னிடம் கேள்வி கேட்ட பக்தரைப் பார்த்தார் பாபா. கீழே விழுந்த பல்லியின் அடுத்த செயல்பாடுகளைக் கவனிக்குமாறு கண்ணாலேயே கட்டளை இட்டார். சரசரவென வேகமாக ஊர்ந்து சென்ற அந்தப் பல்லி, சுவரில் ஏறியது. சுவரில் ஏற்கெனவே அதன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த பல்லியின் அருகே போய் நின்றது. அடுத்த கணம் இரண்டு பல்லிகளும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. நீண்டநாள் கழித்தல்லவா அந்த சகோதரிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்? பல்லிகள் ஒன்றையொன்று சுற்றிச் சுற்றி வந்தன. மகிழ்ச்சியோடு முத்தம் கொடுத்துக் கொண்டன. பாபாவின் சந்நிதானத்தில் அவை மிகுந்த மன நிறைவை அடைந்தன.

இந்த அபூர்வமான காட்சியைப் பார்த்த பக்தர் பிரமிப்பில் ஆழ்ந்தார். பாபா சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஆகிவிட்டதே? அவுரங்காபாத் எங்கே? ஷிர்டி எங்கே? இந்தப் பல்லி சகோதரிகள் எப்படிப் பிரிந்தார்கள்? இப்போது எப்படி இணைந்தார்கள்? எல்லாமே பாபாவின் திட்டப்படித் தான் நடக்கிறது என்றால், பாபாவைச் சரண்புகுந்து நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாமே? அனைத்தையும் பாபா பார்த்துக் கொள்வார் என்று நம்பிவிட்டால் ஒருவனுக்கு ரத்த அழுத்தமே தோன்றாதே! பிரமுகர் குதிரைக்குக் கொள்ளை வாங்கிக் கொடுத்துவிட்டு, தாம் வந்த அதே குதிரையிலேயே திரும்பிச் சென்றுவிட்டார். அவர் திரும்பிச் செல்லும்போது புதிதாய் ஷிர்டி வந்த பல்லி டிக்டிக் எனக் குரல் கொடுத்தது. பாபா சிரித்துக் கொண்டார். தன் சகோதரியைப் பார்க்கக் குதிரைச் சவாரி செய்து வந்த பெருமிதமல்லவா அதன் குரலில் தொனிக்கிறது? பாபாவின் லீலைகளில் இன்னொரு சம்பவம். தெய்வத்தை உணர விரும்பிய ஒரு செல்வந்தருக்கு, அவர் பணத்தைத்தான் தெய்வமாக எண்ணுகிறார் என்ற உண்மையை உணர்த்தி அவரைத் திருத்தினார் பாபா. அந்தப் பணக்காரர் மாறியது எப்படி?..

ஷிர்டி பாபா பகுதி -24
ஷிர்டி பாபா பகுதி -24

காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் ஆகிய ஆறு கெட்ட குணங்களையே பாபா தட்சிணையாகக் கேட்கிறார். பணத்தை அல்ல! உன்னிடம் பணம் இல்லையே என்று கவலைப்படாதே. இந்த ஆறு குணங்களை தட்சிணையாக பாபாவுக்குக் கொடுத்துவிடு. பின் அந்தக் கெட்ட குணங்கள் நிரந்தரமாக உன்னை விட்டுப் போய்விடும்! இந்த விளக்கத்தைக் கேட்ட பாபா, தட்கட்டின் கணவர் சொன்னதே சரி எனத் தலையாட்டினார். தட்கட்டின் விழிகளில் கண்ணீர்! பாபாவின் பாதங்களில் தனது ஆறு கெட்ட குணங்களையும் சமர்ப்பித்துவிட்டதாக அவள் நெகிழ்ச்சியுடன் அறிவித்தாள். பாபாவைப் பூரண நம்பிக்கையுடன் நமஸ்கரித்து எழுந்தாள். பின் அவள் வாழ்க்கை ஆனந்தமயமாக அமைந்தது என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? பேராசையே பெரும்பாலானவர்களின் வாழ்வில் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதை பாபா அறிந்து வைத்திருந்தார். பேராசையை இயன்றவரை குறைப்பதன் பொருட்டே பக்தர்களிடம் பணத்தைக் காணிக்கையாக அதட்டிப் பெற்றார். ஆனால், பல நல்ல மனிதர்களிடம் பணமல்லாததைக் காணிக்கையாகக் கேட்டுப் பெற்று அவர்களை மேலும் நல்லவர்களாக்கும் வித்தையும் பாபாவுக்குத் தெரியும். தமது அடியவரான பேராசிரியர் நார்கேயிடம் பதினைந்து ரூபாய் தட்சிணை கேட்டார் பாபா.

மறுகணம் நார்கேயின் கண்களில் கண்ணீர் வழியத்தொடங்கியது. அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. பாபா கேட்டுவிட்டார். ஆனால் தன்னால் கொடுக்க முடியவில்லையே? அரே! உன்னிடம் பணம் இல்லையென்று எனக்குத் தெரியாதா? அப்படியிருக்க உன்னிடம் பணத்தை தட்சிணையாகக் கேட்பேனா? பணத்தைவிட உயர்ந்த ஒன்றை தட்சிணையாகப் பெற விரும்புகிறேன். நீ நாள்தோறும் படிக்கும் யோக வாசிஷ்டத்திலிருந்து தட்சிணை கொடு! என்று அதட்டினார் பாபா. அதாவது யோக வாசிஷ்டம் என்ற தத்துவ நுõலிலிருந்து பதினைந்து நீதிபோதனைகளை எடுத்துக்கொண்டு அந்த அடியவர் தமது வாழ்வில் அவற்றைத் தவறாமல் அனுசரித்து வரவேண்டும் என்பதே பாபா கேட்ட காணிக்கை. நார்கே நெகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். தன்னை மேலும் மேலும் நல்லவனாக்க பாபா எத்தகைய யுக்திகளையெல்லாம் கையாள்கிறார் என்றெண்ணி அவரின் மனம் தழுதழுத்தது. பாபாவை முன்னிட்டுப் பலர் பல விதமான வேண்டுதல்களை மேற்கொள்வார்கள். பாபாவின் புகழ் எங்கும் பரவியிருந்ததால் வேண்டுதல்களை மேற்கொள்ளும் அன்பர்கள் எண்ணிக்கையும் வளரத் தொடங்கியிருந்தது.

ஷிர்டியில் பாபாவை தரிசிக்க வரும் அன்பர்களின் கூட்டமும் அதிகமாகத் தொடங்கியது. மும்பை பகுதியில் அமைந்த தானே என்ற பிரதேசத்தில் சோல்கர் என்றோர் அன்பர் வசித்துவந்தார். பாபாவின் பெருமைகளைக் கேள்விப்பட்ட அவர் மிகுந்த பரவசம் கொண்டார். அவர் சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதிக வசதியில்லாதவர். உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை. அவர் ஒருநாள் மனத்தில் திடீரென ஓர் உறுதி ஏற்படுத்திக் கொண்டார். தற்காலிக ஊழியராக இருந்த அவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்றால் நிரந்தர ஊழியராக்கப்படுவார். அப்போது அவரது சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும். பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றிபெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி ஷிர்டி வருவேன். உங்கள் நாமத்தைச் சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு ஷிர்டியில் கல்கண்டு வினியோகம் செய்வேன்! பாபாவைப் பூரணமாக நம்பிப் பிரார்த்தித்தவாறு தேர்வுக்குப் படிக்கலானார் சோல்கர். தேர்வுநாள் வந்தது. தேர்வு எழுதுவதற்கு முன்பும் தன் வேண்டுதலை ஒருமுறை மனத்தில் உறுதிப் படுத்திக்கொண்டார். பின் நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.

பாபாவை நம்பியவர்களை பாபா கைவிட்டதாகச் சரித்திரம் இல்லையே? தேர்வில் வெற்றிபெற்றார். அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சம்பள விகிதம் அமல்படுத்தப்பட்டு அவர் கைக்கு வரச் சில மாதங்கள் ஆகலாம். ஆனால், அதுவரை வேண்டுதலை நிறைவேற்றக் காத்திருப்பது சரியல்ல என்று சோல்கருக்குத் தோன்றியது. ஷிர்டி செல்லப் பணம் வேண்டுமே? அவ்வளவு பணம் எப்படி கிடைக்கும்? யோசித்து ஒரு முடிவுசெய்தார். செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க எண்ணினார். எனவே, தேநீரில் சர்க்கரை சேர்ப்பதில்லை என முடிவெடுத்தார். அதனால் சர்க்கரைக்கு ஆகும் செலவு மட்டுப்பட்டு அவரால் ஷிர்டிபயணத்திற்கான பணத்தைச் சிறிதுநாளில் சேகரிக்க முடிந்தது. தான் சேமித்த பணத்தின் மூலம் ஷிர்டி வந்த அவர், பாபாவைப் பார்த்தது பார்த்தபடி நின்றார். அவ்வளவு பரவசம் அவரைத் தொற்றிக் கொண்டது. மனித வடிவெடுத்த கடவுள் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது. பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார். பாபா அவரையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை. பின் பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் சோல்கர். பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை அழைத்தார். அதோ அங்கே என் அன்பர்களுக்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண்டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள்! என்றார் பாபா! கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த வாக்கியங்களின் முழுப்பொருள் புரியவில்லை.

ஆனால், புரிய வேண்டியவருக்கு அதன் உள்ளர்த்தம் முழுவதும் புரிந்தது. தாம் ஷிர்டி வருவதற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச்சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார். அவரை இரு கைகளால் துõக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்தார். இரவும் பகலும் எப்போதும் உன் இதயத்தில் தானே நான் இருக்கிறேன். நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்துக் கொண்டிருக்கிறேனே அப்பா! நீ என்னை நாடி வருவதற்காக இனிப்பைத் தியாகம் செய்தது எனக்குத் தெரியாதா என்ன? என்று அவரது பார்வை சொல்லாமல் சொல்லிற்று. ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்தபோது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. இதென்ன? கெட்ட சகுனமா நல்ல சகுனமா? என்று கேட்டார் அவர்முன் அமர்ந்திருந்த பக்தர். இரண்டுமில்லை. இந்தப் பல்லியைப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலிருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது. அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் பாபா! என்னது! பல்லிக்கு சகோதரியா? கேட்டவரின் தலை சுற்றியது. ஆனால், பாபா சொன்னபடி அந்த சகோதரிப் பல்லி ஷிர்டி வந்து சேர்ந்ததே, அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்..

ஷிர்டி பாபா பகுதி -23
ஷிர்டி பாபா பகுதி -23

தெய்வமேயான அவருக்கு அகில உலகமும் உரிமை உடையது என்கிறபோது, அனைவரின் பணமும் அவருடையதுதானே! சூரியனைக் கற்பூர ஆரத்தியால் வழிபடுவது மாதிரி தான் இதுவும். நம் பணமெல்லாம் பாபா கொடுத்த செல்வம்தான். அதில் ஏதோ கொஞ்சம் பணத்தை என்ன காரணத்திற்காகவோ தமக்குக் காணிக்கையாக பாபா உரிமையுடன் கேட்கிறார் என்பதை அடியவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்வதுபோல், பாபா பணத்தில் கொஞ்சத்தைக் கிள்ளி அவருக்கே காணிக்கையாக்கினார்கள். திருவண்ணாமலை மகான் சேஷாத்ரி சுவாமிகள், எந்தக் கடைக்குச் சென்று பொருட்களை வாரி இறைத்தாலும், அந்தக் கடையில் அன்று வியாபாரம் அமோகமாக நடக்கும் என்பார்களே? அதன்பொருட்டு கடைக்காரர்கள் சேஷாத்ரி சுவாமி தங்கள் கடைக்கு வரமாட்டாரா என்று காத்திருப்பார்களாமே? அதுபோல் பாபா தங்களிடம் காணிக்கை கேட்க மாட்டாரா என்று அடியவர்களும் காத்திருந்தார்கள். அவர் காணிக்கை கேட்டு அதைக் கொடுத்துவிட்டால், தங்களுக்கு நல்லது நடக்கும் என்று நம்பினார்கள்.

இல்லாவிட்டாலும் தங்களுக்கு நிகழவிருந்த ஒரு கெடுதலை பாபா தங்களிடம் காணிக்கை வாங்கிக் கொண்டதன் மூலம் நீக்குகிறார் என்று புரிந்து கொண்டார்கள். எரிந்த தீக்குச்சிகள் கீழே கிடந்தால் அவற்றை எடுத்துச் சேமித்துத் தம் பைகளில் வைத்துக் கொள்வார் பாபா! பணத்தையும் எரிந்த தீக்குச்சியையும் அவர் ஒன்றாகத்தான் கருதுகிறார் என்பதை அடியவர்கள் புரிந்துகொள்வதற்காக இப்படிச் செய்தாரா? இல்லை, இந்த எரிந்த தீக்குச்சிபோல் மனித உடலும் ஒருநாள் எரிந்து பயனற்றதாகப் போகப்போகிறது எனக் காட்டி அடியவர்களுக்கு வாழ்வின் நிலையாமையை போதித்தாரா? யார் அறிவார்! தொடக்க காலத்தில் பாபா யாரிடமும் காணிக்கை கேட்டதில்லை. ஆனால், யாராவது ஒரு பைசா கொடுத்தால் அதை வாங்கி ஞாபகமாகத் தம் பையில் போட்டுக் கொள்வார். இரண்டு பைசா கொடுத்தாலோ திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு அதை கொடுத்தவரிடமே திரும்பக் கொடுத்துவிடுவார். யோகி ராம்சுரத்குமார் தம்மைப் பிச்சைக்காரர் என்று சொல்லிக்கொள்வாரே? அதுபோல் பாபாவும் தம்மைக் கருதினாரா? ஒரு பிச்சைக்காரர் ஒரு பைசா பெற்றுக் கொள்வதுதான் சரி என்பது அவர் கருத்தா? இதெல்லாம் விளங்கிக் கொள்ள இயலாத புதிர்கள்.

பாபா தாம் பெற்ற காணிக்கைக் காசில் விளக்கெரிக்க எண்ணெய் வாங்குவதுண்டு. தண்ணீராலேயே விளக்கெரிக்க முடிந்தவர் ஏன் காசு கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பது ஒரு கேள்வி. இயற்கையின் நியதிகளை சில விசேஷ சந்தர்ப்பங்களில் மீறலாமே அன்றி மற்றபடி இயற்கை நியதிகளுக்குக் கீழ்ப்படிவதே சரி என அவர் கருதியிருக்கலாம். தாம் வகுத்த விதிகளுக்குத் தாமே கீழ்ப்படியாவிட்டால் எப்படி என்றும் அவர் எண்ணியிருக்கலாம். அவர் பிச்சை எடுத்துத்தான் உணவுண்டார். எனவே அவருக்குச் செலவு என்று எதுவும் கிடையாது. பணத்தைக் காணிக்கையாகப் பெற்றாலும் பணத்தால் அவர் அடைந்த தனிப்பட்ட பயன் ஒன்றுமில்லை. தாம் பெற்ற பணத்தையெல்லாம் பணம் தேவைப்படும் எளியவர்களுக்கு அவர் உடனுக்குடன் வழங்கிவிடுவார். ஒருநாளில் அவர் எவ்வளவு காணிக்கை பெற்றாலும் அவற்றையெல்லாம் உடனே தேவைப்படுபவர்களுக்கு வழங்கிவிடுவதால், மறுநாள் பொழுது விடிந்ததும் மீண்டும் பழையபடி அவர் ஏழைப் பக்கிரிதான். பின்னாட்களில் ஆயிரமாயிரம் ரூபாய்களைக் காணிக்கையாகப் பெற்றார் பாபா. ஆனால், அவர் ஸித்தி அடைந்தபோது அவருடைய உடமையில் சில ரூபாய்களே இருந்தன. துறவி, குழந்தை, நோயாளி மூவரையும் வெறும் கையுடன் பார்க்கக் கூடாது என்று இந்திய மரபு சொல்கிறது. துறவியைப் பராமரிக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை. குழந்தை, பெற்றோரின் சொத்து மட்டுமல்ல, சமுதாயத்தின் சொத்து. நோயாளிக்கு திடீர்ச் செலவு வரும். எனவே இம்மூவரையும் பார்க்கும்போது ஏதேனும் கையில் கொடுத்துப் பார்ப்பதை ஒரு வழக்கமாக நாம் பின்பற்றி வருகிறோம்.

அதன்படி துறவியான பாபாவைப் பார்க்க வருபவர்கள் பூ, பழம், இனிப்பு போன்றவற்றையோ காணிக்கைப் பணத்தையோ கொண்டுவந்து  தருவது உண்டு. காணிக்கைப் பணத்தை பாபா அடியவர்கள் முன்னிலையிலேயே தர்மம் செய்தது ஏன்? தான தர்மம் செய்ய வேண்டும் என்பதை அடியவர்களுக்கு போதிக்கத்தான். தாங்கள் பெரிதும் நேசிக்கும் பணத்தைக் காணிக்கையாகக் கொடுக்க முன்வருவதன் மூலம், பணத்தின் மேல் உள்ள பற்று அடியவர்களுக்குக் குறைய வேண்டும் என்பதும் பாபாவின் எண்ணம். பாபாவுக்குக் காணிக்கை கொடுத்தவர்களுக்கு ஏராளமான செல்வம் வந்துசேரும். பாபா சிலரிடம் வற்புறுத்திக் காணிக்கை கேட்டு வாங்கினால் கொடுத்தவருக்கு மிகச் சில நாட்களில் பதவி உயர்வு வரும். இதையெல்லாம் அனுபவத்தில் உணர்ந்த அடியவர்கள் பாபா கேட்ட காணிக்கைப் பணத்தை மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள். மராத்திய நடிகரான கணபதிராவ் போடஸ், சுயசரிதை எழுதியிருக்கிறார். அதில் அவர் தம் குரு பாபாவைப் பற்றிய பல செய்திகளைக் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் ஒன்று, பாபா அவரிடம் திரும்பத் திரும்ப தட்சிணை கேட்டது. போகும்போதெல்லாம் அதட்டி தட்சிணை வாங்கிக் கொள்வாராம். வாங்கிய பணத்தையெல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்து விடுவாராம்.

ஏறக்குறைய அவரின் பணப் பையையே பாபா காலியாக்கி விட்டாராம். ஆனால், பின்னாளில் பாபாவுக்குக் காணிக்கை கொடுத்ததைப் போல் ஆயிரம் மடங்கு செல்வம் அவரிடம் தேடி வந்து குவிந்ததாம். தன்னிடம் அதிகப் பணம் சேர்வதற்குத் தடையாக இருந்த முன் வினையைத் தனக்குக்காணிக்கை கேட்டுப் பெற்றுக் கொண்டதன் மூலம் பாபா அழித்து விட்டார் என்றும், அதனால்தான் தன்னால் மாபெரும் செல்வந்தனாக முடிந்தது என்றும் அந்த நடிகர் குறிப்பிட்டிருக்கிறார். சிலர் என்ன வற்புறுத்தி தட்சிணை கொடுக்க முயன்றாலும் பாபா  சீற்றத்தோடு அதை மறுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. விலை மதிப்புள்ள தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை யாரேனும் காணிக்கையாகக் கொண்டுவந்தால் பாபா சீறுவார். அவற்றை ஏற்க மாட்டார். வீட்டில் இவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும் என நினைத்து நேரில் கொஞ்சம் கூடுதலாகக் கொடுத்தால் முதலில் அந்த அன்பர் மனத்தில் நினைத்ததைக் கூறி அதை மட்டுமே ஏற்பார். சிலர் பாபாவைச் சந்திக்க சந்தர்ப்பம் அமையாவிட்டால், நண்பர்களிடம் காணிக்கை கொடுத்தனுப்புவார்கள். கொடுத்தனுப்பப்பட்ட காணிக்கைப் பணத்தைத் தர அந்த நண்பர் மறந்துவிட்டால் பாபா நினைவுபடுத்தி காணிக்கையைப் பெற்றுக் கொள்வார். ஒருமுறை தட்கட் என்ற பெண்மணி, தம் கணவருடன் பாபாவை தரிசிக்க வந்தாள். ஆறு ரூபாய் தட்சிணை கொடு! எனக் கேட்டார் பாபா. பணம் இல்லையே என்ற அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. பாபா, அவள் கணவரைப் பார்த்து, ம்! நீ சொல்! என்று கட்டளையிட்டார். பாபாவின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட கணவர் என்ன சொன்னார்?…

ஷிர்டி பாபா பகுதி -22
ஷிர்டி பாபா பகுதி -22

மீதித்தொகை ரகசியத்தை அறியும் முன், வாடியா பற்றிய சிறுகுறிப்பைப் பார்த்து விடுவோம்.நாந்தேட் கிராமத்தில் வசித்தவர், பார்சி மில் காண்டிராக்டர் ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா. எல்லாச் செல்வங்களும் இருந்தன, ஒரே ஒரு செல்வத்தைத் தவிர. அதுதான் மக்கட்செல்வம். தமக்கு ஒரு குழந்தையில்லையே என்ற குறை அவர் மனத்தை வாட்டி வதைத்தது. பெரும் செல்வந்தராக இருந்தாலும் அவர் முழுமையான மகிழ்ச்சியோடு இருக்கக் கூடாது என்பது இயற்கையின் திட்டம்போலும். அவரை மக்கள் பெரிதும் மதித்தனர். காரணம் அவர் தர்மசீலர். ஏழை எளியவர்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்துவந்தார். ஆனால், தமக்கு ஒரு குழந்தையில்லாதது குறித்து அந்தரங்கமாக அவர் பெரிதும் வருந்தி வருகிறார் என்பதை மக்கள் அறியவில்லை.  நாட்கள் செல்லச் செல்ல அல்லும் பகலும்அவரை இந்தச் சிந்தனைதான் ஆக்கிரமித்துத் துன்புறுத்தியது. பணி செய்துகொண்டே இருப்பார். திடீரெனத் தமக்குப் பின் தம் தான தர்மங்களைத் தொடர,  வாரிசு இல்லையே என்ற உண்மை நினைவு வரும். அவரிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்படும். அப்படியான ஒரு தருணத்தில் அவரது உற்ற நண்பரான தாஸ்கணு, ஏன் இந்தப் பெருமூச்சு? என அன்போடு வினவினார்.

நண்பரிடம், வாடியா தம் உள்ளத்தை மறைக்க விரும்பவில்லை. தசரதருக்கு இருந்த மனக்குறைதான் எனக்கும் இருக்கிறது. ஒரு குழந்தை எனக்கில்லை என்ற எண்ணம் என்னைத் துயரில் ஆழ்த்துகிறது, என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார். பாபாவின் பரம பக்தர் தாஸ்கணு. பாபா நினைத்தால் எந்த அற்புதத்தையும் நிகழ்த்தக்கூடியவர் என்பதை அவர் அறிவார். எனவே அவர் வாடியாவை பாபாவிடம் செல்லுமாறு ஆற்றுப்படுத்தினார். தசரதருக்குக் குறையிருந்தது உண்மைதான். ஆனால் ரிஷ்யசிருங்கர் மூலம் புத்திரகாமேஷ்டி யாகம் செய்து குறை தீர்ந்ததே? ஸ்ரீராமர் அல்லவா மகனாய்ப் பிறந்தார்? பாபாவைச் சென்று தரிசிப்பது என்பது புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்குச் சமானம். பாபாவிடம் வேண்டினால், கட்டாயம் குழந்தைப் பேறு  கிட்டும் என்றார் தாஸ்கணு. கடலில் மூழ்கித் தத்தளிப்பவனுக்கு ஒரு பற்றுக்கோடு கிடைத்த மாதிரி மகிழ்ந்தது வாடியாவின் மனம். அவர் ஷிர்டி செல்ல முடிவெடுத்தார். சில நாள்களிலேயே பழங்களையும் பூமாலையையும் வாங்கிக் கொண்டு, பாபாவுக்கு தட்சிணையாக ஐந்து ரூபாயையும் எடுத்துக்கொண்டு ஷிர்டி புறப்பட்டார். பாபாவைப் பார்த்த மறுகணமே அந்தக் கருணை நிறைந்த வடிவம் வாடியாவின் மனத்தைக் கரைத்தது. பரவசத்தோடு பூமாலையை பாபா கழுத்தில் அணிவித்து, பழக்கூடையை சமர்ப்பித்தார். பின் அவரது தாமரைப் பாதங்களைக் கீழே விழுந்து நமஸ்கரித்தார். மெல்ல எழுந்து அவர் அருகில் அமர்ந்து கொண்டார். ஏராளமான அடியவர்கள் பாபாவைத் தேடி வருவதையும் அவரது பாதங்களில் சரணடைவதையும் பார்த்து வியந்தார்.

தம் பிரார்த்தனை கட்டாயம் பலிக்கும் என்ற பூரண நம்பிக்கையோடு குழந்தைப்பேறு வேண்டி மனப்பூர்வமாகப் பிரார்த்திக்கலானார். திடீரென வாடியாவின் பக்கம் திரும்பியது பாபாவின் பார்வை. எனக்கு ஐந்து ரூபாய் காணிக்கைப் பணம் கொண்டு வந்திருக்கிறாயே? எடு! என்றார் பாபா உரிமையுடன். தாம் ஐந்து ரூபாய் எடுத்துவந்த விஷயம் இவருக்கு எப்படித் தெரியும் என வியந்தவாறே ரூபாயை எடுத்தார் வாடியா. இந்த சந்தர்ப்பத்தில் தான், அந்த ஐந்து ரூபாயில் ஏற்கனவே மூன்று ரூபாய் பதினான்கு அணா நான் வாங்கிக் கொண்டுவிட்டேன். மீதியை எடு!என்றார் பாபா அதட்டலுடன். வாடியாவுக்கு ஒன்றும் புரியவில்லை. தாம் ஷிர்டிக்கு வருவதே முதல்முறையாக இப்போதுதான். அப்படியிருக்க இந்த மூன்று ரூபாய் பதினான்கணா விஷயம் என்னவென்று தெரியவில்லையே? ஆனால், பாபா எதுசொன்னாலும் அவர் சொன்னபடி எந்தப் பிசகும் இல்லாமல் அப்படியே செய்ய வேண்டும் என அவர் ஏற்கனவே தாஸ்கணு மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தார். ஆகையால், மறுபேச்சுப் பேசாமல், மீதி ஒரு ரூபாய் இரண்டணாவைக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார். தமக்குக் குழந்தைப் பேறு கிட்ட அருளவேண்டும் என நேரடியாகவே பாபாவிடம் விண்ணப்பித்தார். அவரது தலையை அன்போடு வருடிய பாபா, அவரின் கஷ்ட காலமெல்லாம் நீங்கிவிட்டதென்று ஆறுதல் கூறினார். மகிழ்ச்சியோடு ஷிர்டியிலிருந்து மீண்டும் நாந்தேட் கிராமத்திற்கு வந்தார் வாடியா.

நண்பர் தாஸ்கணுவிடம் நடந்தது அனைத்தையும் வரிவிடாமல் சொன்னார். மூன்று ரூபாய் பதினான்கணா விஷயம் மட்டும் புரியவில்லை என்றும் அதன் பின்னணிச் சூட்சுமம் என்னவாக இருக்குமென்றும் கேட்டார். தாஸ்கணுவின் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. திடீரென்று அவர் மனத்தில் மின்னல் வெட்டியது. சில நாட்கள் முன்னால், மவுலா சாஹேப் என்ற இஸ்லாமிய அன்பரை வரவேற்றோமே? அவருக்கு நீங்கள்தானே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தீர்கள்? அதற்கான செலவுக் கணக்கைக் கொண்டு வாருங்கள்! என்றார் தாஸ்கணு. வாடியாவுக்கும் சடாரென்று அது நினைவு வந்தது. அந்த இஸ்லாமிய அன்பர், வாடியா ஷிர்டி செல்ல நினைத்துக் கொண்டிருக்கும்போது வருகை புரிந்தவர். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து, பின் ஆன்மிக நாட்டம் கொண்டு துறவியானவர். அவரின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஆன செலவைத் தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்திருந்தார் வாடியா. ஓடிப்போய் அந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து செலவுக் கணக்கைக் கூட்டிப் பார்த்தபோது என்ன ஆச்சரியம்! அது மிகச் சரியாக மூன்று ரூபாய் பதிநான்கு அணாவாக இருந்தது! ஓர் அணா கூடக் குறையவுமில்லை. கூடவுமில்லை! மவுலா சாஹேப் என்ற அந்த அன்பருக்கு செய்த உபசாரமெல்லாம் தமக்குச் செய்த மாதிரிதான் என்பதை பாபா அழகாக அறிவித்துவிட்டார்!

எல்லா நல்லவர்களின் இதயத்திலும் குடியிருக்கும் இறைவன் பாபாவே என்பதையும், எல்லா நதி நீரும் கடலில் கலக்கிற மாதிரி, எல்லா நற்செயல்களும் இறுதியில் பாபாவையே போய்ச் சேர்கின்றன என்பதையும் இந்நிகழ்ச்சி மூலம் தெளிவாக்கி விட்டார். வாடியாவின் கரங்களும் தாஸ்கணுவின் கரங்களும் பாபாவை நினைத்துக் குவிந்தன. பின் உரிய காலத்தில் வாடியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால், பாபா ஏன் தட்சிணை கேட்டார்? பாபா சரிதத்தில் அவர் அன்பர்கள் பலரிடமும் தட்சிணை கேட்டது பற்றிய குறிப்புகள் வருகின்றன. பணத்தின் மேல் அறவே பற்றில்லாமல் இருப்பவர் தானே தூய துறவி! ராமகிருஷ்ண பரமஹம்சர், வலது கையில் பணத்தையும் இடது கையில் மண்ணையும் வைத்துக்கொண்டு பணம் மண், மண் பணம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி அவை இரண்டையும் கங்கையில் வீசி எறிந்தார் என்பதை அவர் சரிதம் சொல்கிறது. வள்ளலார் போன்ற உயர்நிலைத் துறவிகள் பணத்தை ஒருசிறிதும் லட்சியம் செய்யாமல் வாழ்ந்தார்கள். அப்படியிருக்க பாபா தம் அடியவர்களிடம் காணிக்கை கொடு என்று கேட்டது ஏன்?….

ஷிர்டி பாபா பகுதி -21
ஷிர்டி பாபா பகுதி -21

கொஞ்சம் சோற்றை எடுத்துச் சிறிது தயிரோடு கலந்து, அதை லட்சுமி கோயில் முன்னால் சுற்றிக் கொண்டிருக்கும் கருப்பு நாய்க்குக் கொடுக்கச் சொன்னார். தன் மலேரியாவுக்கும், அந்த நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று கண்பத்திற்குப் புரியவில்லை. எதையும் ஆராய்ச்சி செய்யாமல் பாபாவை ஏற்றுக் கொள்வதும், அவர் சொன்னபடி நூறு சதவிகிதம் அப்படியே செய்வதும்தான் நல்லது என்பதை அவர் உள்மனம் அவருக்கு உணர்த்தியது. பாபாவின் லீலைகள் பல்லாயிரம். அவற்றின் சூட்சுமம் அறிந்தவர் யார்? கண்பத் அன்று வீட்டிற்குப் போனவுடன் அவரின் கண்ணெதிரே கொஞ்சம் சோறும் தயிரும் சமையலறையில் தென்படுவதைப் பார்த்தார். அன்று காலை சமைத்த உணவின் மீதி. இது இப்போது தன் கண்ணில் மீண்டும் மீண்டும் படுவானேன்? பாபாதான் இக்காட்சியைத் தனக்குக் காட்டுகிறாரோ? உடனே பாபா சொன்னபடி செய்வோம். தன் மலேரியாக் காய்ச்சலைப் பொருட்படுத்தாமல் தயிரையும் சோறையும் ஒன்றாகக் கலந்து எடுத்துக்கொண்டு லட்சுமி கோயில் நோக்கி விரைந்தார். அவருக்காகவே காத்திருந்ததுபோல் அங்கிருந்த கருப்பு நாய் ஒன்று, பாய்ந்தோடி அவர் முன்னே வந்து நின்று வாலை ஆட்டியது. தான் முன்பின் பார்த்திராத நாய் தன்னருகே வந்து வாலை ஆட்டும் அதிசயத்தைப் பார்த்த கண்பத் வியப்படைந்தார்.

ஆனால், பாபாவின் சாம்ராஜ்யத்தில் என்ன அதிசயம் வேண்டுமானாலும் நடக்கும்.  கடலிலிருந்து அருவி நீர்,  மலைமேல் ஏறிப் போனாலும் போகும். நெருப்பைத்  தொட்ட அன்பர்களுக்கு, பாபா நினைத்தால் அது கூட குளிர்ச்சியாகத் தான் இருக்கும். எனவே, தன் வியப்பிலிருந்து விடுபட்ட கண்பத், அந்த நாய்முன் தான் கொண்டுவந்திருந்த தயிர் சோற்றை வைத்தார். அது எத்தனை நாள் பசியால் தவித்ததோ? பாய்ந்து பாய்ந்து அந்த உணவைச் சாப்பிட்டது. பிறகு ஏதோ சாதனை செய்து முடித்த நிறைவில், லட்சுமி கோயில் வெளிப்புறச் சுவரின் அருகாகப் போய்ப் படுத்துக்கொண்டது. கண்பத் வீடுநோக்கித் திரும்பினார். பழைய ஆரோக்கியத்தோடு தெம்பாக நடப்பதை உணர்ந்தார். மருத்துவர்களால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட கொடிய மலேரியா நோய், நிரந்தரமாகத் தன் உடலிலிருந்து நீங்கிவிட்டதை அவரால் உணர முடிந்தது. மருத்துவர்களும் அவரது ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்து அந்த அதிசயத்தை உறுதிப்படுத்தினார்கள்.

கண்பத்தின் இரு கைகளும் அளவற்ற பக்தியோடு பாபாவை நோக்கிக் குவிந்தன. இந்த நிகழ்வின் பின்னணி என்ன சொல்கிறது? பாபாவின் செயமுறைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை தான். ஆனால், அவற்றின் பின்புலத்தில் நாம் எளிதில் கண்டுணர இயலாத ஓர் ஆன்மிக விஞ்ஞானம் மறைந்திருக்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது ஆன்மிக விஞ்ஞானத்தின் அடிப்படை விதி. மூட நம்பிக்கைகளின் தொகுப்பாக, இன்றிருக்கும் பல ஆன்மிக விஷயங்கள் மாறிப் போனாலும், உண்மையான ஆன்மிகம் என்பது, உளவியல் சார்ந்த விஞ்ஞானம்தான் என்பதை அடியவர்களின் வாழ்வு நமக்குத் தொடர்ந்து உணர்த்தி வருகிறது. ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்ச்செயல் உண்டு என்கிறது பவுதிகம் சார்ந்த நியூட்டனின் மூன்றாம் விதி. இது பவுதிக விதி மட்டுமல்ல, நம் வாழ்க்கை விதியும் கூட. ஒருவருக்கு ஆயுள் நூறு என்று வைத்துக்கொள்வோம். அவர் வாழ்வின் முற் பாதி  என்பது முதல் ஐம்பது ஆண்டுகள். பிற்பாதி என்பது அடுத்த ஐம்பது ஆண்டுகள். முதல் பாதியில் அவர் செய்த நற்செயல்கள்மற்றும் தீய செயல்களின் விளைவுகளைத் தான் அவர் தன் வாழ்க்கையின் பிற்பாதியில் அனுபவிப்பார்.

முதல் பாதியில் முயன்று கல்வி கற்றதின் விளைவையும் கடினமாக உழைத்ததின் விளைவையும் பிற்பாதியில் அவர் பொருளாதாரப் பலனாகப் பெறுவார். முதல் பாதியில் கெட்ட பழக்கங்களால் அவர் பீடிக்கப்பட்டிருந்தால் பிற்பாதியில் நோய் அவரைத் தாக்கும். இதை சொந்த அனுபவத்திலும், பிறரைப் பார்த்தும் நாம் உணரலாம். ஆனால், எல்லா நிகழ்வுகளையும் இப்படிப் பொருத்திப் பார்த்து விடை கண்டுவிட  இயலாது. ஒருவருக்கு ஆடிசம் குறைபாடுள்ள குழந்தை பிறக்கிறது. நல்ல பழக்கங்கள் மட்டுமே கொண்டுள்ள இன்னொருவருக்குப் புற்றுநோய் வருகிறது. இதற்கெல்லாம் ஆன்மிக விஞ்ஞானம் என்ன விடை சொல்கிறது? இவர்களைப் பொறுத்தவரை முற்பாதி என்பது முற்பிறவி. பிற்பாதி என்பது இந்தப் பிறவி. முற்பிறவியின் நன்மை தீமை ஆகிய இருவினைகளின் பலன்களையும் அவர்கள் இந்தப் பிறவியில் அனுபவிக்கிறார்கள் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும். பல கெட்ட பழக்கங்கள் உடைய ஒருவர் நீண்ட ஆயுளோடு இந்தப் பிறவியில் வாழ்கிறார் என்றால், முற்பாதியான  முற்பிறவியில் அவர் செய்த நல்வினைகளின் பலனை பிற்பாதியான இந்தப் பிறவியில் அவர் அறுவடை செய்கிறார் என்றே கருதவேண்டும். கண்பத் அந்த நாயை முற்பிறவியில் பட்டினி போட்டாரோ என்னவோ?

அந்த நாய் அவரிடம் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்து உரிய ஊதியம் கொடுக்கப்படாமல் வருந்தியதோ என்னவோ? யாரறிவார்? அந்தப் பாவத்தின் காரணமாக இப்பிறவியில் கண்பத்திற்கு வந்த மலேரியா, அந்த நாய்க்குத் தயிர்ச்சோறு கொடுத்தவுடன் விலகியதோ? ஒருவரின் முற்பிறவியைக் கூடக் கண்டுணரும் வல்லமை பெற்ற சித்தர் அல்லவா பாபா? இப்படியெல்லாம் பலவிதமாக யோசித்து பக்தியில் நெகிழ்ந்தார் கண்பத். பாபாவின் இன்னொரு லீலையை உற்று நோக்குவோம்.ரத்தன்ஜி ஷாபூர்ஜி வாடியா என்பவர், நைஜாம் சமஸ்தானத்தில் உள்ள நாந்தேட் என்ற இடத்தில் வசித்தவர். பெரும் செல்வந்தரான அவருக்குப் புத்திர பாக்கியம் அமையவில்லை. மனம் வருந்திய அவர், தம் நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் ஷிர்டி சென்று பாபாவை தரிசிக்க முடிவுசெய்தார். பாபாவுக்குத் தட்சணையாகக் கொடுக்க வென்று ஐந்து ரூபாய் எடுத்துக் கொண்டார். பாபாவைச் சந்தித்து மெய் மறந்து அவர் வழிபட்டபோது, பாபா அவரிடம் தட்சிணை கேட்டார். நீ ஐந்து ரூபாய் கொடுக்க எண்ணியிருக்கிறாய். ஆனால், ஏற்கனவே எனக்கு நீ மூன்று ரூபாயும், பதினான்கு அணாவும் கொடுத்துவிட்டாய். மீதித் தொகையை இப்போது கொடு! என்றார். வாடியாவுக்கு வியப்பு! இவரை இப்போது தானே முதன் முதலாக தரிசிக்கிறோம்…ஆனால், ஏன் இப்படி சொல்கிறார்…வியப்பு விலகாவிட்டாலும், அவர் கேட்டபடியே மீதித் தொகையைக் கொடுத்தார். முதன் முறையாக ஷிர்டி வரும் அவர் எப்படி முன்னரே தட்சணை கொடுத்திருக்க முடியும்? ஆனால். மிக விரைவில் அது எப்படி என்ற விவரம் வாடியாவுக்குப் புரியவந்தபோது. அவர் மனம் மலைப்பில் ஆழ்ந்தது.

ஷிர்டி பாபா பகுதி 20
ஷிர்டி பாபா பகுதி 20

இந்த மருத்துவர் அப்படி ஓடியதற்கு காரணம் உண்டு. சாயி அமர்ந்திருந்த இடத்தில் புன்முறுவலுடன் அமர்ந்திருப்பது யார்? தசரத குமாரனான ராமன் அல்லவா? கையில் வில்லோடும், தலையில் ஒளிவீசும் மகுடத்தோடும், சித்திரத்தில் அலர்ந்த  செந்தாமரை போன்ற முகத்தோடு காட்சி தருகிறானே என் ராமன்? ராமா! எங்கெங்கோ உன்னைத் தேடினேன். கடைசியில் இங்கேயா இருக்கிறாய்? பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் நடந்த உன் பாதங்கள் நொந்திருக்குமே அப்பா? நான் பிடித்து விடவா? மருத்துவர் சடாரென்று பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டார். சரணாகதி தத்துவத்தை நிலை நிறுத்தியவன் அல்லவோ ராமன்? வேடன் குகனானாலும், குரங்கு சுக்ரீவன் ஆனாலும், அரக்கன் விபீஷணன் ஆனாலும் தன் பாதங்களில் சரணடைந்தவர்களுக்கு அடைக்கலம் தரும் வள்ளல் அல்லவா அவன்! காகத்திற்கும் அடைக்கலம் தந்த காகுத்தன். அணிலின் முதுகைப் பரிவோடு தடவி அருள்புரிந்த அண்ணல். உன் பாதங்களில் சரணடைந்த என்னையும் காத்தருள் என் தெய்வமே….!

இப்படி நினைத்தவாறே நிமிர்ந்து பார்த்த மருத்துவர் திடுக்கிட்டார். சடாரென்று தன் கைகளை உதறினார். அங்கே சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தது பாபா தான். ராமனல்ல. அப்படியானால் சற்றுமுன் கண்ட காட்சி பொய்யா? என் கண் என்னை ஏமாற்றியதா? அதுசரி… ஆலயத்தில் இருக்கும் ராமபிரான், எப்படி இங்கே இருப்பான்? மருத்துவருக்குத் தலை சுற்றியது. எதுவும் பேசாமல் விறுவிறுவென்று தான் தங்கியிருந்த இடம் நோக்கிச் சென்றார். பாபா ராமனாக உருமாறியது உண்மையா.. இல்லை பிரமையா? இதன் சூட்சுமத்தை பாபாவே அறிவிக்கட்டும். அதுவரை தான் உணவு உண்ணப் போவதில்லை. யாராவது வற்புறுத்தி அழைத்தாலன்றி, மசூதிக்கும் போகப் போவதில்லை. திடசித்தத்தோடு ஒரு முடிவெடுத்த மருத்துவர் எதையும் சாப்பிடாமல் விரதமிருக்கலானார். மூன்று நாட்கள் கடந்தன. பசி வயிற்றைக் கிள்ளியது. வயிறு என்னைக் கவனி கவனி எனக் குரல் கொடுத்துக்கொண்டே இருந்தது. ஆனாலும், அவர் வயிற்றின் குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. தாம் உண்ணாவிரதம் இருப்பதையோ, தன் எண்ணங்களையோ யாருக்கும் தெரிவிக்கவுமில்லை. நான்காம் நாள் அதிகாலை அவரைத் தேடி வந்தார், ஷிர்டி அருகே கான்தேஷ் என்னும் கிராமத்தில் வசிக்கும் அவரின் நண்பர்.

அவர் இதுவரை பாபாவை தரிசித்ததில்லை. பாபாவை தரிசிக்க விரும்பிய அவர், மசூதிக்கு வாருங்கள் என்று மருத்துவரைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தார். அவர் வற்புறுத்தலால் அவருடன் மசூதி  நோக்கி நடந்தார் மருத்துவர். ராமரும் பாபாவும் ஒன்றுதானா? இந்தக் கேள்விக்கு அன்று விடை கிடைக்குமா? விடை கிடைக்கும் வரை தன் உண்ணாவிரதத்தைத் தொடர வேண்டியதுதான். மருத்துவர் நண்பரோடு மசூதிக்குள் நுழைந்தார். மருத்துவரின் நண்பரைப் பார்த்த பாபா, என்ன, கான்தேஷில்இருந்து வருகிறீர்களே? கான்தேஷில் எல்லோரும் நலமா? என்று அக்கறையோடு விசாரித்தார்! அவர் கான்தேஷிலிருந்து வருகிறார் என்று பாபாவுக்கு எப்படித் தெரிந்தது? நண்பரும் மருத்துவரும் வியப்போடு பாபாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாபா மருத்துவரிடம் பேசலானார்: இப்படிப் பிடிவாதம் பிடித்தால் எப்படி? கடைசியில் உன்னை அழைத்துவர கான்தேஷிலிருந்து ஒருவர் வர வேண்டிஇருக்கிறது! நீயே மருத்துவன். உடலுக்குச் சாப்பாடு எவ்வளவு முக்கியம் என்று உனக்குத் தெரியாதா? வேளாவேளைக்குச் சரிவரச் சாப்பிட வேண்டும் என்று நீயல்லவா மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்? தான் உண்ணாவிரதம் இருக்கும் விஷயம் பாபாவுக்கு எப்படித் தெரிந்தது? வியப்போடு பாபாவை நிமிர்ந்து பார்த்தார் மருத்துவர். அவரை நோக்கிப் பரிவோடு புன்முறுவல் பூத்தது – பாபாவின் முகமல்ல, ராமனின் திருமுகம்!

மருத்துவரின் விழிகளிலிருந்து கண்ணீர் பெருகியது. எந்த வழிபாட்டு தலமாக இருந்தாலும், இறைவன் உறையும் புனிதத்தலங்கள்தான் என்பதையும் எல்லா இடங்களிலும் வெவ்வேறு வடிவங்களில் உறைவது ஒரே தெய்வ சக்திதான் என்பதையும் தெளிவாகப் புரிந்துகொண்டார் மருத்துவர். பாபாவைப் பற்றிய சந்தேக நோயால் பீடிக்கப்பட்டிருந்த மருத்துவரின் மனம், அன்று முழு ஆரோக்கியம் அடைந்தது. அன்று தொட்டு அவர் பாபா பக்தரானார். பாபாவைத் தேடிவருபவர்களில், வியாதி குணமாக வேண்டும் என்னும் கோரிக்கையோடு வருபவர்களின் எண்ணிக்கையே அதிகம். பலதரப்பட்ட மருந்துகளை சாப்பிட்டும், குணமாகாத வியாதிகள் பாபாவின் தரிசனத்தால் குணமாவதை பக்தர்கள் அறிந்திருந்தார்கள். ஏழை நோயாளிகளுக்கு பாபாவே கண்கண்ட தெய்வம். மருத்துவர்கள் மேல் இருந்த நம்பிக்கையை விட, பாபா மேல் இருந்தநம்பிக்கை அவர்களுக்கு அதிகம். பூட்டி என்பவருக்கு ஒருமுறை ஒரே நேரத்தில் இரண்டு சிக்கல்கள் நேர்ந்தன. ஒன்று கடுமையான வயிற்றுப் போக்கு. இன்னொன்று ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை வாந்தி. மிகச் சில நாள்களிலேயே மிகுந்த பலவீனம் அடைந்தார். எல்லா மருத்துவர்களும் கைவிரித்து விட்டார்கள். அவருக்கு பாபா மேல் அளவற்ற பக்தி உண்டு. ஆனால், நேரில் சென்று பாபாவைத் தரிசிக்கும் அளவு அவர் உடலில்  தெம்பில்லை. கிழிந்த நாராகப் பாயில் படுத்திருந்தார். பாபா எவ்விதமேனும் அவரை அழைத்து வருமாறு, ஓர் அடியவரை அனுப்பினார். அவரைக் கைத்தாங்கலாகப் பற்றிக்கொண்டு பூட்டி, மசூதிக்கு வந்துசேர்ந்தார்.

பாபா! என்னைக்  காப்பாற் றுங்கள்! என்று கதறினார். பூட்டியையே உற்றுப் பார்த்த பாபா, உன் வயிற்றுப் போக்கு, வாந்தி இரண்டுமே உடனடியாக நிற்க வேண்டும், இது என் ஆணை, தெரிந்ததா? என்று கண்டிப்பான குரலில் கட்டளையிட்டார். பாபாவின் வார்த்தைகளுக்கு மந்திர சக்தி உண்டல்லவா? வயிற்றுப் போக்கையும் வாந்தியையும் உண்டாக்கிய நோய்க்கிருமிகள் அவரது அதட்டலால் பயந்திருக்க வேண்டும். அடுத்த கணமே அவரது நோய் அவரை விட்டு நீங்கிவிட்டது. பாபாவின்திருவடிகளைப் பணிந்த அவர், கம்பீரமாக நடந்து இல்லம் திரும்பினார். தன்னை ஒரே அதட்டலில் குணப்படுத்திய பாபாவின்கருணையை நினைத்து அவரது நெஞ்சம் நெகிழ்ந்தது. பாபாவுக்கு கண்பத் என்றொரு பக்தர் உண்டு. அவர் கொடிய வகைப்பட்ட மலேரியாவால் கஷ்டப்பட்டார். பாபாவைச் சரணடைந்தார். அவரை உற்றுப் பார்த்த பாபா, முன்வினையால் தான் அந்த நோய் அவரைத் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். அந்த நோய்க்கு பாபா சொன்ன வைத்தியம் யாரும் எதிர்பாராதது. கொஞ்சம் சோறை எடுத்துத் தயிரோடு கலந்துகொள்! என்று பாபா ஆரம்பித்தபோது, கண்பத், தயிர் கலந்த சோறை எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என அக்கறையோடு விசாரித்தார். பாபா நகைத்தவாறே நீ அதைச் சாப்பிட வேண்டும் என்று நான் சொல்லவில்லையே? என்றார்.  பின் அந்தத் தயிர் கலந்த சோறை என்ன செய்யவேண்டும் என அறிவுறுத்தினார். அப்படிச் செய்வதற்கும், தன் நோய்க்கும் என்ன சம்பந்தம்? இப்படி செய்வதனால் தன் நோய் எப்படி குணமாகும்? எனப் பெரும் திகைப்பில் ஆழ்ந்தார் கண்பத்…..!

ஷிர்டி பாபா பகுதி -19
ஷிர்டி பாபா பகுதி -19

பாவின் உருவம் காற்றில் கரைந்து மறைந்தது. பாபாவுக்கு பதிலாக, பாபா அமர்ந்திருந்த அதே இடத்தில், சாஸ்திரியின் குருவான அமரர் கோலப் ஸ்வாமியின் திருவுருவம் திடீரென்று தோன்றியது! கோலப் ஸ்வாமி எப்போதும் குங்குமப் பூ நிற உடை அணிவது வழக்கம். இப்போதும் அதே குங்கும வர்ண உடையில் தோன்றினார் அவர். பாபா ஏற்கனவே அணிந்திருந்த குங்குமப்பூ நிற உடை இப்போது கோலப் ஸ்வாமிக்கு என்னமாய்ப் பொருந்துகிறது! குங்குமப் பூ வண்ணத்தில் பாபா அன்று ஏன் உடை அணிய விரும்பினார் என்பதன் சூட்சுமம் இப்போதல்லவா புரிகிறது! சாஸ்திரியின் கண்களில் அருவிபோல் கண்ணீர்! ஆகா! என் குரு கோலப் ஸ்வாமி அமரராகி விட்டார் என்று வருந்தினேனே! அவர் ஸித்தி அடையவில்லை. பாபா வடிவில் உரு மாறியிருக்கிறார். அவ்வளவுதான். இதை  இத்தனை காலம் புரிந்து கொள்ளாமல் போனேனே? இதோ! நானும் பாபாவும் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் தன் முந்தைய வடிவிலேயே காட்சி தருகிறாரே என் குரு! மெய்மறந்து நின்ற சாஸ்திரி, பாபாவைப் பார்த்துப் படபடவென்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

நகைத்தவாறே, சாஸ்திரி அருகில் வந்தார் பாபா. இப்போது எனக்கு தட்சணை தருவதில் ஆட்சேபணை ஒன்றுமில்லையே? என்று கேட்பதுபோல் ஒரு பார்வை பார்த்து சாஸ்திரியை நோக்கிக் கைநீட்டினார். ரேகை பார்ப்பதற்காக நீட்டப்படாத கை, இப்போது தனக்குரிய தட்சணையைப் பெறுவதற்காக சாஸ்திரி முன் உரிமையுடன் நீண்டது. அந்த மலர்க்கரத்தில் சாஸ்திரி தன்னிடமிருந்த தட்சணை அனைத்தையும் கலகலவெனக் கொட்டினார். தட்சணைக் காசுகள் அவரது கண்ணீரால் நீராட்டப் பட்டிருந்தன. மசூதி என்றும், ஆலயம் என்றும் சாஸ்திரி மனத்தில் இருந்த வேறுபாட்டு உணர்வு முற்றிலுமாய் மறைந்தது. அன்றுமுதல் அவர் பாபாவை வழிபடலானார். அவர் நெஞ்சில் தம் குரு கோலப் ஸ்வாமி ஸித்தி அடைந்தது பற்றிய துயரம் மறைந்து, அவரே சாய்பாபாவாக உருமாறியிருக்கிறார் என்ற எண்ணத்தால் ஒரு நிம்மதி பரவியது. பாபாவின் இனிய மொழிகளைப் பற்றி என்ன சொல்ல! அவர் பல நேரங்களில் கண்ணால் பேசுவார். மவுனத்தாலும் பேசுவார். சில நேரங்களில் சொற்களாலும் பேசுவார். அவர் பயன்படுத்தும் சொற்களைப் பற்றி என்னென்பது! அவை தேனில் ஊறவைத்து வெளிப்படுத்தியதுபோல் செவிகளில் தித்திக்கும். உரையாடலின்போது அதிரப் பேசமாட்டார். மிருதுவாகப் பேசுவார். வார்த்தைகளுக்கு வலிக்குமோ, என்று யோசித்துப் பேசுவதுபோல் இருக்கும்.

சுருக்கமாக, எளிமையாக இருந்தாலும், அது ஆழமான கருத்துகளைக் கொண்டிருக்கும். மேற்பார்வைக்குப் புரியாததுபோல் தோன்றும் சில வார்த்தைகள், பின்னர்  யோசித்தால் ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டதாய் விரிவடையும். பாபா பேசியவை அனைத்துமே கீதைதான். என்றும் நிலைத்திருக்கும் நீதிகளை அவரது பேச்சு புலப்படுத்தும். பேச்சில் தென்படும் உண்மையின் பேரொளி கேட்பவர்களின் இருண்ட மனங்களில்  வெளிச்சத்தைத் தோற்றுவிக்கும். பாமரர்க்கும் பண்டிதர்க்கும் ஒருசேரப் புரியும் ஆழமான பேச்சு அவர் பேச்சு. பண்டிதர்கள், பல ஆயிரம் நூல்களைப் படித்தாலும் கிடைக்காத அற்புதக் கருத்துகள் அவர் பேச்சில் கிடைப்பதைக் கண்டு வியப்பார்கள். பாமரர்கள் அவர் பேச்சையே வாழ்வின் வேதமாகக் கொண்டு அதன்படி வாழத் தலைப்படுவார்கள். பாபா, தம் பேச்சாலும், செய்கைகளாலும், நிகழ்த்திய அற்புதங்களாலும் மனிதர்களை மேலான வாழ்க்கை வாழுமாறு மாற்றிக் கொண்டே இருந்தார். இப்போதும் அவ்விதமே மாற்றிக் கொண்டிருக்கிறார். எல்லா மனிதர்களையும் நல்வழிப்படுத்தி உலகையே சொர்க்கமாக மாற்றிவிட வேண்டும் என்பதே பாபாவின் விருப்பம். என் அன்பர்களே! மாயைக்கு ஆட்பட்டு விடாதீர்கள். எது என்றும் உள்ளது, எது நிரந்தர ஆனந்தத்தைக் கொடுப்பது என்பதைத் தீவிரமாக யோசியுங்கள்.

அந்த வழியிலேயே சென்று உண்மையான பேரானந்தத்தைக் கண்டுகொள்ளுங்கள். முன்வினை காரணமாகத் துன்பங்கள் உங்களைப் பீடித்தால், சாயி சாயி என்று என் நாமத்தை விடாமல் சொல்லுங்கள். உங்கள் அனைவரையும், கர்மவினை சார்ந்து வருகிற துன்பங்களிலிருந்து மீட்கத்தானே நான் அவதரித்திருக்கிறேன். உங்களைத் துன்பங்களிலிருந்து காப்பதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? யார் அதிர்ஷ்டசாலியோ அவர்களே என்னை வழிபடுகிறார்கள். என்னைப் பூரணமாய் நம்புபவர்களை எந்தத் துயரும் வாட்டுவதில்லை! தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு பாபா கொடுக்கும் உறுதி மொழி இது. பாபா தம் அடியவர்களை ஒருபோதும் கஷ்டத்தில் இருக்க அனுமதித்ததில்லை. இக உலக நன்மைகள் அனைத்தையும் பக்தர்கள் விரும்பியதுபோல் வாரிவாரிக் கொடுத்து, பர உலக நன்மையையும் சேர்த்துத் தருவதே பாபாவின் அருள் நெறி. தம் அடியவர்கள், பக்தியால் தங்கள் உடலை வருத்திக் கொள்வதை பாபா அனுமதித்ததில்லை. அடியவர்கள் உள்ளன்போடு தன்னை வழிபட வேண்டும் என்பது மட்டுமே அவர் விரும்புவது. மனத்துக்கண் மாசிலன் ஆதல் தான், உண்மையான வழிபாடு என்பதே அவர் கருத்து.

ஒருமுறை மருத்துவர் ஒருவருடன் ஷிர்டிக்கு வந்தார் ஒரு பாபா பக்தர். அந்த மருத்துவர் அதுவரை ஷிர்டி வந்ததில்லை. அவரோ தீவிர ராம பக்தர். ராமரைத் தவிர வேறு யாரையும் வழிபடுவதில்லை என்பதில் அவர் திட சித்தத்ததோடு இருந்தார். என் இஷ்ட தெய்வம் ராமனிருக்க, இன்னொரு தெய்வம் எனக்கு ஏன் என்பதே அவர் கருத்து. உண்மையில் ஷிர்டிக்கு வர அந்த மருத்துவருக்கு விருப்பமே இல்லை. சாயி பக்தர் தான் அவரை வற்புறுத்தி அழைத்து வந்தார். ஆனால், சாயி பக்தர் அவரிடம் தீர்மானமாய்ச் சொன்னார்: பாபாவை வணங்குமாறோ, அவரை நீங்கள் ஏற்க வேண்டும் என்றோ உங்களை யாரும் வற்புறுத்த மாட்டார்கள். அதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். நானும் நீங்களும் உற்ற நண்பர்கள் அல்லவா! நான் பாபாவைப் பார்க்கச் செல்லும்போது, நீங்களும் என் நண்பராக உடன் வருகிறீர்கள். அவ்வளவே. இது என் நட்பைக் கவுரவிக்க நீங்கள் செய்யும் செயல். உங்கள் இஷ்ட தெய்வம் ராமன்தான் என்பதையும், நீங்கள் ராமரைத் தவிர யாரையும் வணங்குவதில்லை  என்பதையும் நான் அறிவேனே! பிறகு நீங்கள் மசூதிக்கு என்னுடன் என் நண்பராய் வர ஏன் தயங்கவேண்டும்? அவர் சொன்ன வாதம் சரியாகத்தான் இருந்தது. அவருடன், அந்த மருத்துவர் மசூதி நோக்கி நடந்தார். மசூதி நெருங்கியது. திடீரென தன்னுடன் வந்த பக்தரைத் தள்ளிவிட்டு, பாபாவை நோக்கி ஓடினார் அந்த மருத்துவர். அடடா! என்ன செய்யப் போகிறார் அவர்? அனைவரும் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஷிர்டி பாபா பகுதி -18
ஷிர்டி பாபா பகுதி -18

அங்கே அவரது முதலாளி கவலையோடு, அவரை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அப்பனே! வந்தாயா? என்று கட்டியணைத்துக் கொண்டார். என் கடிதம் கிடைத்ததா? என்று கேட்டார். எந்தக் கடிதமும் கிடைக்கவில்லையே! என்றார் காகா. உன்னை எதிர்பார்த்துத் தான் காத்திருக்கிறேன்! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் முதலாளி. காரணம் இதுதான். அலுவலகத்தின் மானேஜர் திடீரென நோய்வாய்ப்பட்டு விட்டார்.  நிர்வாகத்தில் பெரும் சிக்கல். மானேஜர் செய்துவந்த வேலைகளை எப்படி நிர்வகிப்பதென யாருக்கும் தெரியவில்லை. மானேஜர் பொறுப்பு, உடனடியாக காகாவிடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்பட்டது. இடைக்கால மானேஜர் பொறுப்பைச் செம்மையாக நிறைவேற்றினார் காகா. முழுமனதோடு அந்தப் பணியைச் செய்தார். நிரந்தர மானேஜர் செய்த பணி நேர்த்தியை விட, தற்காலிக மானேஜர் செய்த பணியின் நேர்த்தி மேலும் சிறப்பாக இருந்தது!இடர்ப்பாடு ஏற்பட்ட காலத்தில் கைகொடுத்தமைக்காக அவருக்கு விரைவிலேயே பதவி உயர்வு தரப்பட்டது. பாபாவின் அருளால் கிட்டிய பதவி உயர்வு என நெகிழ்ந்தது காகாவின் உள்ளம்.

அலுவலகத்திலிருந்து காகாவை உடனே மும்பை திரும்புமாறு, முதலாளி ஷிர்டிக்கு அனுப்பிய கடிதம், இரண்டு நாட்கள் கழித்து ஷிர்டியைச் சென்றடைந்ததும், அது பின்னர் காகாவின் மும்பை முகவரிக்கே திரும்ப அனுப்பப்பட்டதும் பிறகு நடந்த சம்பவங்கள். எப்படி மும்பையில் ஒரு தனியார் அலுவலகத்தில் நேர்ந்த சிக்கல், பாபாவுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது? ஏன் தெரிய வராது? கடவுளால் அறிய இயலாத விஷயம் என்று உலகில் ஏதும் உண்டா என்ன? பதவி உயர்வு கிடைத்த பின், காகா ஷிர்டி வந்து, பாபாவின் தாமரைப் பாதங்களைக் கண்ணீரால் கழுவினார். பாபா சிரித்துக் கொண்டே அவரது கன்னங்களைத் துடைத்து விட்டார். அடியவர்களுக்கு நன்மை செய்வதைத் தவிர எனக்கு வேறென்ன வேலை? என்று பரிவோடு கேட்டன பாபாவின் அருள்பொங்கும் விழிகள்….. நாசிக்கைச் சேர்ந்த முலே சாஸ்திரி கைரேகை பார்ப்பதில் கைதேர்ந்தவர். ஆசார அனுஷ்டானங்கள் நிறைந்தவர். பிற மதத்தவரின் பக்கம் அவர் தலைவைத்தும் படுப்பதில்லை. அவர் நாள்தோறும் செய்யும்ஜபதபங்கள் ஏராளமாக உண்டு.
காலஞ்சென்ற கோலப் ஸ்வாமிதான் அவரின் குரு.குரு காலமாகி விட்டால் தான் என்ன? அவரைத் தவிர இன்னொருவரை குருவாக ஏற்க சாஸ்திரியின் மனம் ஒப்பவில்லை. கோலப் ஸ்வாமியின் படத்தை வைத்து, தினமும் வழிபாடு செய்து வந்தார். குருவே சரணம் என அவரது பாதங்களையே மனத்தில் பற்றி வாழ்ந்து வந்தார். நாசிக்கைச் சேர்ந்த மாபெரும் செல்வந்தர் பாபு சாஹேப் பூட்டி. அவர் சாஸ்திரியிடம் கைரேகை பார்ப்பதுண்டு. அவர் ஷிர்டி சென்றிருந்த சந்தர்ப்பத்தில், அவரது அழைப்பின் பேரில், அவரைச் சந்திக்க ஷிர்டிக்கு வந்தார் சாஸ்திரி. பூட்டியைச் சந்திப்பதைத் தவிர, சாஸ்திரிக்கு ஷிர்டியில் வேறு வேலை
எதுவுமில்லை. மசூதியில் பாபா என்றொரு மகான் இருப்பதாகப் பலர் சொல்லி அவர் கேட்டதுண்டு. அவரோ ஆசார சீலர். மசூதிக்கு அவர் ஏன் செல்ல வேண்டும்? அவர் தாம் தங்கியிருந்த இல்லத்தில், ஜபதபங்களில் கடுமையாக ஈடுபட்டிருந்தார். மசூதிப் பக்கம்திரும்பவே இல்லை. ஆனால், என்ன சங்கடம் இது! தம் நண்பர் பூட்டியைச் சந்திக்க அவர் போனபோது, பூட்டி, தாம் பாபாவைச் சந்திக்கச் செல்வதாகக் கூறி சாஸ்திரியையும் அழைத்துச் சென்று விட்டார்! வேறு வழியில்லாமல், சாஸ்திரியும் பூட்டியுடன் மசூதி நோக்கி நடந்தார்.பாபாவைப் பார்த்த சாஸ்திரி, தன் வியப்பையோ, மரியாதையையோ ஒருசிறிதும் புலப்படுத்தவில்லை. பாபாவை நோக்கித் தன் மனம் சாய்ந்தாலும், கோலப் ஸ்வாமியைத் தவிர தனக்கு வேறு குரு கிடையாது என்று அவர் மறுபடி மறுபடி, தம் மனத்தில் உறுதிப்படுத்திக் கொண்டார். பாபா சாஸ்திரியையே கனிவோடு உற்றுப் பார்த்தார். அந்தப் பார்வை சாஸ்திரியின் மனத்தை அள்ளி விழுங்கியது. ஆனால், ஏதொன்றும் பேசாமல் அமர்ந்திருந்த சாஸ்திரி, தாம் தொழில் ரீதியாகத்தான் பாபாவைச் சந்திக்கிறோம் என்று பொருள் தருவதுபோல், பாபா, தங்கள் கைரேகையை நான் பரிசோதிக்க அனுமதி உண்டா? எனக் கேட்டார். பக்தர்களுக்கெல்லாம் கைகொடுப்பவர்தான் பாபா. ஆனால், அவருக்குக் கைகொடுக்க அவர் தயாராக இல்லை. பிட்சை வேண்டும் என்று பல வீடுகளில் கை நீட்டுபவர். ஏனோ, கைரேகை சாஸ்திரியிடம் கைநீட்ட மறுத்துவிட்டார். சாஸ்திரிக்கு சில வாழைப்பழங்களைப் பிரசாதமாகக் கொடுத்தார். சாஸ்திரி அவற்றை வாங்கிக் கொண்டு, தாம் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தார். பின் குளித்துவிட்டு தமது வழக்கமான ஜபதபங்களில் ஈடுபடலானார்.

அப்போது, மசூதியில் இருந்த பாபா, குங்குமப் பூ நிற உடையை எடு, நாம் இன்று அந்த வண்ணத்தில் உடை உடுத்தலாம்! என்றார். அந்த உடையின் பின்னணியில் என்ன திட்டம் உள்ளது என்று யாருக்கும் புரியவில்லை. குளிக்கச் சென்ற பாபா, குளித்துவிட்டு வரும்போது, குங்குமப் பூ நிற உடையில் காட்சியளித்தார். பக்தர்கள் பரவசத்தோடு அந்தப் புதிய கோலத்தை தரிசித்தார்கள். பாபா ஆசனத்தில் அமர்ந்தார். அடியவர்கள் அவரை வழிபடலானார்கள். ஆரத்தியும் தொடங்கியது. திடீரென பாபா செல்வந்தரான பூட்டியை அழைத்தார். போய் முலே சாஸ்திரியிடமிருந்து எனக்கான தட்சணையைக் கேட்டு வாங்கிவா! என்றார். பூட்டி மாபெரும் செல்வந்தர். பாபாவுக்கு எத்தனை தட்சணை வேண்டுமானாலும் அவரால் கொடுத்துவிட முடியும். ஆனால், பாபா யாரிடம் தட்சிணை கேட்கிறாரோ, அவரிடம் கேட்டு தட்சிணை வாங்கிவர வேண்டும் என்ற நியதி இருப்பதை அவர் அறிவார். பூட்டி எழுந்து, முலே சாஸ்திரி தங்கியிருந்த இல்லம் நோக்கி நடந்தார்.

பாபா அவரிடம் தட்சணை கேட்டதாக சாஸ்திரியிடம் தெரிவித்தார். சாஸ்திரிக்கு எரிச்சல். பாபாவுக்குத் தாம் ஏன் தட்சணை தரவேண்டும்? தம் குரு கோலப் ஸ்வாமி தான். அப்படியிருக்க மசூதியிலிருக்கும் ஒருவருக்கு தாம் தட்சணை கொடுப்பதாவது? ஒருகணம் யோசித்தார் சாஸ்திரி. ஆனால், கேட்டிருப்பவரோ ஷிர்டியில் பலரால் மகானாகக் கொண்டாடப்படுபவர். வந்திருப்பவரோ பெரிய கோடீஸ்வரர். எனவே, நேரில்  போய் தட்சணை கொடுப்பதுதான் மரியாதை என்ற முடிவுக்கு வந்தார். கையில் தட்சணையை எடுத்துக் கொண்டு, பூட்டியோடு மசூதி நோக்கி நடந்தார். மசூதிக்குள் சென்ற அவர், சற்றுத் தொலைவில் நின்றவாறே கொஞ்சம் மலர்களை எடுத்து, பூட்டி செய்ததுபோல், தாமும் பாபா மேல் அந்த மலர்களை அர்ச்சனை செய்வதுபோல் வீசினார். அடுத்த கணம் நிகழ்ந்தது அந்த அற்புதம்….குங்குமப் பூ நிறத்தில் பாபா அன்று ஏன் உடை அணிய விரும்பினார் என்பது அந்த அற்புத நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் எல்லோருக்கும் தெரிந்தது…

ஷிர்டி பாபா பகுதி -17
ஷிர்டி பாபா பகுதி -17

தூணின் மீது கம்பால் ஓங்கி அடித்தார் பாபா. ம்! நெருப்பே! இறங்கு கீழே! எதற்கிந்த ஆவேசம்? நான் கட்டளையிடுகிறேன். உடனடியாய்க் கீழே இறங்கிவிடு! என்று உரக்க முழங்கினார். தூணில் அவர் அடித்த ஒவ்வோர் அடிக்கும் துனியில் எரிந்த அக்கினி ஜ்வாலை, கட்டுப்பட்டுப் படிப்படியாய்க் கீழே இறங்கியது. பின்எந்த ஆவேசமும் இல்லாமல்,சாதாரணமாய் எரியத் தொடங்கியது. அது தன் நெருப்பு விரல்களால்,பாபாவைக் கைகூப்பி வணங்கியதுபோல் தோன்றியது!அடியவர்கள் பிரமித்தார்கள். பஞ்ச பூதங்களையும் பாபாதம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றுஉணர்ந்து பணிவோடு அவரை வணங்கினார்கள். தங்களைப் படைத்தவருக்குத்தான் பஞ்ச பூதங்கள் கட்டுப்படுகின்றன என்று புரிந்து கொண்டார்கள். அன்னை சீதாப்பிராட்டியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அனுமன் வாலில் அக்கினி தேவன் தன் இயல்பு மாறிக் குளிர்ச்சியாக இருந்தானே!

சீதை அக்கினிப் பிரவேசம் செய்தபோது, கற்பின்கனலியான அன்னையைச் சுடாமல், அக்கினி தேவன் பவித்திரமாக ஸ்ரீராமபிரானிடம் ஒப்படைத்தானே!கடவுளுக்கு நெருப்புகட்டுப்படும் என்பதுராமாயண காலம் தொட்டு நாம் அறிந்தது தானே! தன்னைப் படைத்த இறைவனுக்கு நெருப்பு கட்டுப்படுவதுஇயல்புதானே! பரித்ராணாய ஸாதூனாம் விநாசாயச துஷ்க்ருதாம்! என்கிறான் கீதையில்கண்ணன். நல்லோரைக் காத்து அல்லோரை அழிப்பதேஅவதாரங்களின் நோக்கம். பாபா தீயவர்களை அழிக்கவும் செய்தார். தீயவர்களைநல்லவர்களாக்கி அவர்களைக் காக்கவும் செய்தார்.தம்மை அன்றுசரணடைந்தவர்களையும், இன்று சரணடைபவர்களையும் அவர் கைவிடாமல்காப்பாற்றுகிறார். வாழ்வில் கை தூக்கி விடுகிறார். இது பாபா பக்தர்கள் அனுபவத்தில் அறியும் உண்மை. ஒருதுளி சந்தேகமும் அற்ற முழுமையான சரணாகதிக்கு, இறையருள் கட்டாயம் செவிசாய்க்கிறது என்பதேஆன்மிக வாழ்வின்அடிப்படை விதி. பாபா ஒருபோதும் உயர்வு தாழ்வு பார்ப்பதில்லை.

ஏழை, பணக்காரர் என்ற பேதம் அவர்சந்நிதியில் என்றுமில்லை. ஜாதி மத பேதங்களை அவர் பொருட்படுத்துவது இல்லை. அவரைப் பூரணமாகச் சரணடைந்தவர்களே அவர் அருட்செல்வத்தை அதிகம் அடையும் தகுதியுள்ளவர்கள். வாரி வாரி இறையருளை வழங்குவதில் பாபாவுக்கு இணையான வள்ளல்  யாருமில்லை.பாபா மனிதர்களையோ விலங்குகளையோ தாவரங்களையோ பிரித்துப் பார்ப்பதுமில்லை. எல்லாமே அவர் படைத்தவை என்பதால் எல்லாவற்றிற்கும் அவர் அருள் உண்டு. அவர் அருளால் தானே உலகமே இயங்குகிறது! பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட சிவபெருமானின் பல்வேறு லீலைகளைத் திருவிளையாடல் என்கிறோம். கண்ணனின் ராசலீலை உள்ளிட்ட லீலைகளைக் கிருஷ்ண லீலை எனப் புகழ்கிறோம். அதுபோலவே சாயி லீலைகளும் அனந்தம். அவர் அடியவர்கள் வாழ்வில் எண்ணற்ற லீலைகளைத் தொடர்ந்து புரிந்து வருகிறார். நுணுக்கமாகத் தங்கள் வாழ்வை ஆராயும்சாயி பக்தர்கள், பாபா தங்கள்வாழ்வில் நிகழ்த்திய லீலைகளைப் புரிந்துகொண்டு தொடர்ந்து அவர்மேல் பக்தி செலுத்துகிறார்கள். கடும் நோய்வாய்ப் பட்டவர்களின் உடல் சார்ந்த துயரங்கள், பாபா மேல் கொண்ட நம்பிக்கை என்ற மருந்தினால் உடனடியாக விலகுகின்றன.

பிறவிப்பெருங்கடலைக் கடக்கும் ஓடமாக பாபாவின் தாமரைத் திருவடிகளே பயன்படுகின்றன. பற்றற்றபாபாவின் பாதங்களை இறுகப் பற்றிக் கொண்டவர்களைப் பற்றி, பாபாவே அக்கறை எடுத்துக் கொள்கிறார். அவர்களைரட்சிப்பது பாபாவின் பொறுப்பாகிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர்தம் அடியவர்களிடம்சொல்வாரே! என்னிடம்வக்காலத்து கொடுத்துவிடு (கோரிக்கையை சொல்லி விடு)! என்று! அதுபோல் பாபாவிடம் வக்காலத்து கொடுத்து, நம் வாழ்வை அவரிடம் ஒப்படைத்துவிட்டால், நமது ஒளிமயமான எதிர்காலத்திற்கு பாபாஉத்தரவாதம் தருகிறார்.ஆனால், எல்லாருக்கும் பாபாவைச் சரணடையும் பாக்கியம்கிட்டுமா என்ன? அதற்கும், பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்றுசான்றோர்கள் சும்மாவா சொன்னார்கள்! பாபா மேல் நாட்டம் கொள்ளவும், அவர் அருள் இருந்தால் தான் முடியும். ஷிர்டிக்குச் செல்லவேண்டும் என நினைத்தாலும், பாபாஅருளிருந்தால் தான் செல்லமுடியும். அங்கே எத்தனை நாள் நாம் தங்க வேண்டும் என பாபா நினைக்கிறாரோ, அத்தனை நாள் மட்டுமே தங்க முடியும். பாபா ஸ்தூல வடிவோடு இருந்த அந்தக் காலத்திலும் அப்படித்தான். அருள்வடிவோடு இயங்கும் இந்தக் காலத்திலும்அப்படித்தான்.

காகா மகாஜனி என்பவர், பாபாவின் தீவிர அன்பர். மும்பையில் வசித்து வந்தார். அப்போது கிருஷ்ண ஜெயந்தி விழா வந்தது. கண்ணனின் அவதார தினத்தை ஒட்டி ஷிர்டியில் கொண்டாட்டங்கள் நடைபெறும். பாபா பிரத்யட்ச கண்ணன் அல்லவா! கண்ணனை நேரில் தரிசித்த பலனை அடைய வேண்டுமானால், பாபாவைதரிசனம் செய்தால் போதும். ஷிர்டி செல்வோம். ஒருவாரம் தங்கி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களை அனுபவிப்போம்… இப்படி முடிவுசெய்த அவர், தம் முதலாளியிடம் ஒருவாரம் விடுப்பு சொல்லிவிட்டு, அலுவலகத்தில், இருந்தஇன்னொருவரிடம் தாம் பார்த்துக்கொண்டிருந்த வேலைகளை ஒப்படைத்து விட்டு புறப்பட்டார். அவர் ஷிர்டி செல்லலாம், ஆனால் பாபா எத்தனை நாள் விரும்புகிறாரோ அத்தனை நாள் தானே அங்கு தங்க முடியும்? ஷிர்டியில் ஒருவாரம் தங்க வேண்டும் என்று அவராக எப்படி முடிவு செய்யலாம்? அப்படி முடிவு செய்தால் அந்த ஆணவத்தின் மீது பாபாவின் குட்டு விழும் அல்லவா? பாபாவை அவர் தரிசித்த மறுகணமே, பாபா அவரிடம், அதுசரி. நீ எப்போது மும்பை திரும்பப் போகிறாய்? என்று விசாரித்தார்!

என்ன இது! ஒருவாரம் தங்கி கோகுலாஷ்டமி கொண்டாட்டங்களைக் காண வந்தால், வந்து தரிசித்த மறுகணமே இப்படிக் கேட்கிறாரே பாபா? காகா மகாஜனியின் உள்ளம்துணுக்குற்றது. ஆனால், அவர் மறுத்து எதுவும் பேசவில்லை. பணிவோடு, தாம் ஒருவாரம் ஷிர்டியில் தங்கும் உத்தேசத்தில் வந்ததாகவும், ஆனால் பாபா எத்தனை நாள் தங்க உத்தரவு கொடுக்கிறாரோ அத்தனை நாள் மட்டுமே தங்க முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார். அவர் பதிலால் பாபாவின் மனம் நிறைவடைந்தது. பாபாவின் கண்கள் அவரையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. ஒருவரின் கண்களின் மூலமாக அவர் உள்ளத்தையும் அவரது எதிர்காலத்தையும் படித்து விடுவாரே பாபா? திடீரென பாபா உத்தரவிட்டார்: நீ ஒரே ஒருநாள் இங்கு தங்கினால் போதும். நாளையே புறப்பட்டு பம்பாய் போ. நாளையே மறக்காமல் அலுவலகத்திற்கும் போய்விடு! ஏன் இந்த உத்தரவு என்றறியாமல் வியப்பும் வருத்தமும் அடைந்தார் காகா மகாஜனி. ஆனால். மறுபேச்சுப் பேசாமல் அவரது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்தார். மறுநாளே மும்பை சென்றார். அன்றே அலுவலகத்திற்கும் சென்றார். அங்கே….

ஷிர்டி சாய் பாபா பகுதி – 16
ஷிர்டி சாய் பாபா பகுதி – 16

இதோ அந்த அற்புத பதில்! நான் எவ்விதம் அதை மறுக்க முடியும்? பண்டிட், என்னை அவரது குருவானகாகாபுராணிக் என்றல்லவோ எண்ணுகிறார்? காகாபுராணிக்கிற்கு, ரகுநாத மகராஜ் என்றொரு பெயருண்டு. இப்போது, பாபா என்று இன்னொரு பெயரும் இருப்பதாக பண்டிட் கருதுகிறார். என் வடிவில் தம்குருவையே அவர் காண்கிறார். அவரது குரு பக்தியை நாம் அங்கீகரிக்க வேண்டுமல்லவா? எல்லா குருவாகவும் இருப்பது நான்தானே? தம் குருநாதருக்குப் பூசுவது போலவே, என் நெற்றியிலும் சந்தனம் பூசினார். அவர் என் நெற்றியில் சந்தனம் பூசும்போது நான் பாபா அல்ல. காகாபுராணிக் தான்!  இதைக் கேட்ட பக்தர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.பின்னர் பண்டிட்டிடம் அதுபற்றி விசாரித்தார்கள். பண்டிட்இருகரம் கூப்பி பாபாசொன்னதை அப்படியே ஒப்புக்கொண்டார். மனிதர்களின் மன ஆழத்தில் ஓடும் எண்ணஓட்டங்களை உள்ளது உள்ளவாறே கண்டறிவதில் பாபாவுக்கிருந்த அபாரமானஆற்றலை எண்ணி எல்லோரும் அதிசயித்தார்கள்.

அதேநேரம், இதில் அதிசயிக்க என்ன இருக்கிறது? ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைசக்தியாக உள்ளிருந்து எல்லோர் எண்ணங்களையும் கண்காணித்துக்கொண்டிருப்பவர் பாபாதானே! என்ற உண்மையையும் சிலர் வெளிப்படுத்தினார்கள்.பொதுவாகவே உயர்நிலை மகான்கள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.ஐம்புலன்களைஅடக்கி ஆள்வதில்பூரணமான வல்லமை பெற்றதனால், ஐம்பூதங்களை அடக்கி ஆளவும் வல்லமைபெற்றுவிடுகிறார்கள் போலும்.உரன் என்னும்தோட்டியால் ஓரைந்தும் காப்பான் என, ஐம்புலன்கள் என்கிற யானையை மன உறுதி என்றஅங்குசத்தால்அடக்குபவனே மெய்ஞானி என்றல்லவோவள்ளுவம் சொல்கிறது! ஐம்பூதங்களை அடக்கும் அந்த அபாரமானஆற்றலை மனித குலநன்மையின் பொருட்டாகஅத்தியாவசியத் தேவைநேர்ந்தால் மட்டுமே மகான்கள் பயன்படுத்துவார்கள்.

ஸ்ரீஅரவிந்த அன்னை, தான் பயணம் செய்த கப்பலைப் புயல் தாக்கியபோது, உடலை விட்டுத் தனது உயிரைப் பிரித்து வானில் சென்று , புயலைத் தோற்றுவித்த தீய சக்திகளை அதட்டினார்.அவ்விதம் புயலை நிறுத்தி,தன்னுடன் கப்பலில் பயணம் செய்த அத்தனை மக்களையும் காப்பாற்றினார். பாபாவின்வாழ்விலும் அவர் ஐம்பூதங்களையும் தம் கட்டுப்பாட்டில்வைத்திருந்ததைக் குறிக்கும்சம்பவங்கள் பல உண்டு. ஒருநாள் மாலை நேரம்.இருள் கவியத் தொடங்கியிருந்தது. திடீரெனக் கடும் புயலும் பெருமழையும் ஷிர்டியைத்தாக்கலாயின. அரைமணிநேரத்தில் தெருவெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில்இருந்த வீடுகளுக்குள்ளே வெள்ளம் கடகடவெனப்புகுந்தது. வீட்டுக்குள் வைத்திருந்த கோதுமை மாவும் பிற உணவுப் பொருட்களும் நீரில் கரைந்து ஓடின. கூரைகள் பிய்த்துக் கொண்டு காற்றில்பறந்தன. மக்கள் பரிதவிப்போடு இல்லங்களை விட்டு வெளியே வந்து நின்றார்கள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனகும்பல் கும்பலாகக் கொட்டும் மழையில் நனைந்து நின்றார்கள்.

இப்போது என்ன செய்வது? இந்தப் புயலிலிருந்தும்மழையிலிருந்தும் எப்படித்தப்பிப்பது? அப்போதுதான் அந்த விந்தையான காட்சியைமக்கள் பார்த்தார்கள்.ஆறறிவுடைய மனிதர்களுக்கு இல்லாத புத்தி, ஐந்தறிவுடைய மிருகங்களுக்கு இருக்கும்போல் தோன்றுகிறதே!ஆடுமாடுகள் கூட்டம்கூட்டமாக பாபாவின் மசூதிக்கு ஓடோடிச் செல்வதை அவர்கள் கவனித்தார்கள். கொட்டும்மழையில் கோவர்த்தனகிரியைத் தூக்கி நின்று கோகுலத்துஆனிரைகளைக் காப்பாற்றிய கண்ணனின் அவதாரம்தான் பாபா என்பது ஆடுமாடுகளுக்குப் புரிந்திருக்க வேண்டும். அவை மசூதி வாயிலில் பாபாவின் கருணை வேண்டி நின்றன.அந்த அற்புதக் காட்சியைப் பார்த்த எல்லா மக்களும்,ஆனிரைகளைப் பின்பற்றித்தாங்களும் மசூதி நோக்கி ஓடலானார்கள். எல்லோரும் பாபா! எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று உரத்துக் குரல்கொடுத்தவாறே, அவரிடம் தஞ்சம் புகுந்தார்கள்.மனித குலத்தை ரட்சிப்பதற்கென்றே வந்த அவதாரமல்லவா பாபா? மக்களையும், ஆடுமாடுகளையும் பரிவோடு பார்த்தார் அவர். பின் திடீரெனச் சீற்றத்தோடு எழுந்து மசூதிக்கு வெளியே வந்தார். ஆகாயத்தை உற்றுப் பார்த்தார்.

இடியும் மின்னலும் பேய்க்காற்றும்ஷிர்டியையே உலுக்கிக்கொண்டிருந்தன.அவரது விழிகள் கோவைப் பழமாய்ச் சிவந்தன. பரமசிவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்ததுபோல் இருந்தது அவரைப் பார்க்க! வானை நோக்கிஉறுமினார் அவர். நிறுத்து! போதும் உன் சீற்றம்! எங்கு வந்து யாரிடம்ஆட்டம் போடுகிறாய்? உன் வாலை ஒட்ட நறுக்கிவிடுவேன் தெரிகிறதா? இந்த நரித்தனமான வேலைகளெல்லாம் இங்கு வேண்டாம். ஆடுமாடுகள்,தாவரங்கள் உள்படஇங்கிருப்பவர்கள் எல்லோரும், என் பாதுகாப்பில் உள்ளது உனக்குத் தெரியாதா?ஜாக்கிரதை. உடனே கடையைக்கட்டு. ஓடு இந்த இடத்தை விட்டு! ஒருகணம் கூட நிற்காதே. பாபாவின் முழக்கத்தைக் கேட்ட மக்கள் அச்சத்தோடு வியந்து, வாய்பொத்தி நின்றார்கள். அது வெறும் முழக்கமல்ல. இடி முழக்கம். ஏன், இடியின் ஓசையையும் அடக்கி அதற்கும் மேலான ஒலியில் முழங்கிய முழக்கம்.அடுத்த கணம்ஆகாயத்தில் இருந்த மோட்டார் ”விட்சை யாரோ அணைத்த மாதிரிசடக்கென்று மழை நின்றது. தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பதுபோல், புயல் குளிர்ந்த தென்றலாய் மாறி பாபாவின் பாதங்களைப் பணிவோடுவருடியது. மக்கள் பரவசத்தோடு பாபாவைக் கும்பிட்டார்கள். பின் மெல்லமெல்லக் கலைந்துவீடுகளுக்குச் சென்றார்கள்.

ஆடுமாடுகளைத் தடவிக் கொடுத்தார் பாபா. ஆனிரைகள் பாபாவைப் பிரிந்துசெல்ல மனமே இல்லாமல் தயங்கித் தயங்கி நடந்துசென்றன. தன்னை நாடிவந்த மக்களும், ஆடு மாடுகளும் இல்லம்திரும்புவதைக் கருணையோடு பார்த்தவாறே மசூதி வாயிலில் நின்று கொண்டிருந்தார் பாபா. வானத்தில் அப்போதுதான் தோன்றிய முழு நிலவுபயபக்தியோடு இந்தவிந்தையான காட்சியை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. மழையை மட்டுமல்ல,நெருப்பையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பாபா. ஒருநாள்…மசூதியில் மக்கள்கூடியிருந்த நேரம்….
மசூதியில் எப்போதும் துனி என்ற நெருப்பு எரிந்து கொண்டிருக்குமே! திடீரென அந்த நெருப்பு ஓங்கி எரியலாயிற்று. சடசடவெனப் பற்றிய நெருப்பு, மசூதியின் மேற்பகுதியைத் தொட்டுவிட்டது. இந்த நெருப்பு இப்போது எல்லா இடங்களிலும் பரவும்போல் தோன்றுகிறதே!மக்கள் பதைபதைத்தார்கள்.பாபா, தம் கையில் தாம்எப்போதும் பயன்படுத்தும்சட்கா என்ற கம்பை எடுத்துக்கொண்டார். நெருப்பை நோக்கிச் செல்லாமல் அருகே இருந்த தூணை நோக்கிச் சென்றார்! என்ன செய்யப்  போகிறார் பாபா?..