அரசர் கதைகள் – போர்க்களத்தில் எதிரி

Rate this post

மலைவளம் நிறைந்த நாடு சேர நாடு. அந்த நாட்டின் தலைநகரம் கருவூர். அங்கே இரும்பொறை என்ற அரசர் சிறப்புடன் ஆண்டு வந்தார். குல மரபையும் சேர்த்து அந்துவஞ் சேரல் இரும்பொறை, என்று அவரை அழைத்தார்கள்.

வீரம் நிறைந்த அவர் நீதிநெறி தவறாது ஆட்சி நடத்தினார். அவருடைய அரசவையில் புலவர்கள் பலர் சிறப்புப் பெற்றிருந்தனர்.

இரும்பொறையின் நெருங்கிய நண்பராக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் இருந்தார். இருவரும் இணை பிரியாது இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.

முடமோசியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்தார் இரும்பொறை.

வழக்கம் போல இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த இரும்பொறை ஏதும் பேசவில்லை.

அரசர் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்பது முடமோசியார்க்குப் புரிந்தது.

அரசே! உங்கள் ஆட்சி நல்லாட்சியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வீரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே. ஆட்சியில் ஏதேனும் குறை நேர்ந்து விட்டதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.

புலவரே! உங்கள் அறிவுரைப் படி ஆட்சி செய்து வருகிறேன், எப்படிக் குறை வர முடியும்?
அரசே! வாரி வழங்கியதால் கருவூலம் காலியாகி விட்டதா? மக்களின் மேல் அதிக வரி விதிக்கும் நிலை வந்து விட்டதா?

புலவரே! மலை வளம் மிக்க நாடு நம் சேர நாடு. எவ்வளவு வாரி வழங்கினாலும் இதன் வளம் குறையாது. மக்களும் உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நாட்டின் வளம் பெருகிக் கொண்டே செல்கிறது.

அரசே! ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே?

புலவரே! வளம் மிக மிக நம் நாட்டிற்குத் தீங்கு வருமோ? மக்கள் துன்பம் அடைவார்களோ? இதை நினைத்து என் உள்ளம் கலக்கம் கொள்கிறது.

அரசே! வீரம் மிகுந்த நீங்களா இப்படிக் கலங்குகிறீர்கள்? எனக்கு வியப்பாக உள்ளது.
புலவரே! சேரர் குடியில் பிறந்தவன் நான். அச்சம் என்ற சொல்லையே அறியாதவன். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. போர் மேகங்கள் நம் நாட்டைச் சூழ்ந்து வருகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம்.

மக்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு வருமோ என்று தான் கலங்குகிறேன்.

அரசே! வீரம் மிக்கவர் நீங்கள். நாட்டைக் காக்க வலிமை வாய்ந்த பெரும் படை உள்ளது. எல்லா நாட்டு அரசர்களும் இதை அறிவார்கள். தனக்கே அழிவைத் தேடும் வீண் முயற்சியில் இறங்கும் அந்த அரசன் யார்?
புலவரே! சோழன் தான் அந்த அரசன். சேர நாட்டைக் கைப்பற்ற பெரும்பாட்டை திரட்டி வருகிறானாம். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி இது.

சோழ அரசர் குடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியா. அவருக்கா நாடு பிடிக்கும் பேராசை? இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன? இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன? இதை அவர் அறிய வில்லையா?

புலவரே! புகழ் வெறி யாரை விட்டது? பெரும்படை இருக்கின்றது என்ற ஆணவம் அந்தச் சோழனுக்கு. இங்கே அவனுக்கும் நல்ல பாடம் கிடைக்கப் போகிறது.

அமைதியான இந்த நாட்டில் போர் ஆரவாரம் தான் எங்கும் கேட்கும். நாமும் வழக்கம் போல் அடிக்கடி சந்தித்து உரையாட இயலாது.

நாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். படைத் தலைவர்கள். வீரர்களோடு இது குறித்துப் பேச வேண்டும். நாம் அரண்மனை திரும்புவோம், என்றார் இரும்பொறை.
இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

சோழ நாட்டுத் தலை நகரம் உறையூர். அரசவை கூடியுள்ளது. அரியணையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி பெருமிதத்துடன் வீற்றிருந்தார்.

அமைச்சர்கள், படைத் தலைவர், அவையினர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
அவையினரே! என் முன்னோர்கள் இமயத்தை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் வீரத்தால் இந்தச் சோழ நாடே பெருமை பெற்றது. அவர்களைப் போன்று நானும் பெருமை பெற விரும்புகிறேன், என்றார் அரசர்.
படைத் தலைவர் எழுந்து, அரசே! கடல் போன்று சோழ நாட்டுப் படை உள்ளது. உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறது. விண்ணுலகையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் நம் வீரர்கள். இமயத்தை வெல்லுவதா அவர்களுக்கு அரிய செயல், என்றார்.

படைத் தலைவரே! என் எண்ணத்தை அண்மையில் தான் வெளியிட்டேன். உடனே பெரும்படை திரட்டி விட்டீர்களே. மிக்க மகிழ்ச்சி.

அரசே! நம் வீரர்கள் எப்பொழுது போர் வருமென்று ஆவலுடன் காத்திருந்தார்கள். செய்தி அறிந்தவுடன் எல்லோரும் போருக்குத் தயாராகி விட்டார்கள்.

சேர நாட்டின் மீது படை எடுக்க வேண்டும். அதை வெல்ல வேண்டும். இதுதான் முதல் முயற்சி.
அமைச்சர் எழுந்து அரசே! என் கருத்தை இங்கே சொல்லலாமா? என்று கேட்டார்.

அமைச்சரே! எல்லோர் கருத்தையும் கேட்பதற்காகத்தான் அரசவை உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள்.
அரசே! நமக்கும் சேர நாட்டிற்கும் பகை ஏதும் இல்லை. சேர நாட்டு அரசரும் உங்களைப் போலவே சிறந்த வீரர். அந்நாட்டு மக்களும் வீரம் மிக்கவர்கள். பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போர் தேவையா? சிந்தியுங்கள்.
அமைச்சரே! வலிமை வாய்ந்த அரசனோடு போரிட்டு வென்றால்தானே நமக்குப் பெருமை. பக்கத்தில் வலிமை வாய்ந்த நாடு இருப்பது நமக்கு எப்போதுமே தொல்லை. சேர அரசனை வென்றால் என் புகழ் உலகெங்கும் பரவும். அந்த நாட்டின் செல்வமும் நம் கருவூலத்தில் சேரும். நம் நாடு மேலும் வளம் பெறும்.

அரசே! அமைதியை விரும்பிய நான் என் எண்ணத்தைச் சொன்னேன். வீரம் மிக்கவராகிய நீங்கள் போர் செய்யவே துடிக்கிறீர்கள், என்று அமர்ந்தார் அமைச்சர்.

படைத் தலைவரே! ஒரு திங்களில் நம் படை சேர நாட்டிற்குப் புறப்பட வேண்டும். இந்தப் போருக்கு நானே தலைமை ஏற்கப் போகிறேன். என் வீரத்தை உலகமே அறிந்து போற்றப் போகிறது. எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடியுங்கள்.

அரசே! கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன், என்றார் படைத் தலைவர்.
என் எண்ணம் நிறைவேறும் நாள் வந்து விட்டது. சோழ நாட்டு வெற்றிக் கொடி பல நாடுகளில் பறக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அவையினர் உணர்ச்சிப் பெருக்குடன், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

கருவூர் நகர வீதிகளில் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமைதி தவழ்ந்த அந்த நகரத்தில் எங்கும் ஆரவாரம் கேட்டது.

அரண்மனையில் அரசனும் புலவர் முடமோசியாரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த படைத் தலைவர் பணிவாக அரசனை வணங்கினார்.

படைத் தலைவரே! என்ன செய்தி?

அரசே! சோழர் படை நம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது. நம் காப்பு அரண்களை எல்லாம் அழித்து விட்டார்கள். தலை நகரின் அருகே பாசறை அமைத்துத் தங்கி உள்ளார்கள். எங்கே எப்பொழுது போரிடலாம்? இது குறித்து நம் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

நாம் அவர்களைக் காக்க வைக்க வேண்டாம். விரைவில் போர் செய்வோம். எதிரிகளை விரட்டி அடிப்போம். நம் படைகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா?

அரசே! நம் நால்வகைப் படைகளும் போருக்குத் தயாராக உள்ளன. நம் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். நம் படைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்வையிட வேண்டும்.

படைத் தலைவரே! கோட்டைக்கு வெளியே நாளை நம் படை வீரர்கள் அணிவகுத்து நிற்கட்டும். நானும் முடமோசியாரும் கருவூர்க் கோட்டை வேண்மாடத்தில் இருந்து பார்வை இடுகிறோம். நாளை மறுநாள் படைக்குத்
தலைமை தாங்குகிறேன். எதிரிகளோடு போரிட்டு வெல்கிறேன்.
தங்கள் கட்டளை அரசே! என்ற படைத் தலைவர் வணங்கி விட்டுச் சென்றார்.

முடமாசியாரே! போர் நிகழ உள்ளது. நம் வீரர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். பார்த்தீரா?

ஆம் அரசே! நம் நாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். எத்தகைய பெரிய படையையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்.

புலவரே! சேரனின் வீரத்தை இந்த உலகமே வியந்து போற்றப் போகிறது. பகைவரின் செங்குருதி வெள்ளத்தில் நில மகள் நீராடப் போகிறாள், என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இரும்பொறை.

அரசே! நாம் நாளை சந்திப்போம், என்று சொல்லி விடை பெற்றார் முடிமோசியார்.

கருவூர்க் கோட்டைக்குச் சிறிது தொலைவில் சோழர் படையின் பாசறை இருந்தது.
காலை நேரம். சோழ வீரர்கள் ஆங்காங்கே போர்ப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.
சோழ அரசர் நற்கிள்ளி அவர்களைப் பாராட்டிக் கொண்டே சென்றார்.

குன்றுகளை ஒத்த யானைகள் இருந்த இடத்திற்கு வந்தார் அவர். வலிமை வாய்ந்த யானைப் படையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

எதிரிகளை வெல்ல இந்த யானைப் படையே போதுமே. நம்மை எதிர்த்து ஒரு நாள் கூட அவர்களால் போர் செய்ய முடியாது, என்று நினைத்தார் அவர்.

அங்கிருந்த பட்டத்து யானை பிளிறியது. அந்த யானையின் அருகே சென்றார் அவர்.
பாகன் பரபரப்புடன் ஓடி வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.
பாகனே! பட்டத்து யானையின் மேல் அமர்ந்து நம் படையை பார்வையிட விரும்புகிறேன்.

தயக்கத்துடன் பாகன், அரசர் பெருமானே! பட்டத்து யானை அடிக்கடி பிளிறுகிறது. இரண்டு நாட்களாக எனக்கும் கட்டுப்பட மறுக்கிறது. மதம் பிடித்தது போல உள்ளது.

பட்டத்து யானையின் மேல் அமர வேண்டாம். இன்று மாலைக்குள் பட்டத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவேன். என்னை மன்னியுங்கள், என்று பணிவுடன் சொன்னான்.

பாகனே! மதம் கொண்ட யானையை நான் அடக்குகிறேன், என்று சொன்னார் அவர். யானையின் மேல் ஏறி அமர்ந்தார்.

அரசே! வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள், என்று கெஞ்சினான் பாகன்.
யானையோ பிளிறியபடி வேகமாக ஓடத் தொடங்கியது.
பாகன் திகைத்து நின்றான்.

பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசரைச் சுமந்து ஓடுகிறது, என்ற கூக்குரல் பாசறை எங்கும் ஒலித்தது.
வீரர்கள் ஓடி வந்தார்கள்.

ஐயோ! பட்டத்து யானை கருவூர்க் கோட்டையை நோக்கிச் செல்கிறதே. அதைத் தடுப்பார் இல்லையே, என்று எல்லோரும் அலறினார்கள்.
வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர வீரர்களால் முடியவில்லை.
யானை அவர்கள் கண்களில் இருந்து மறைந்தது.
கருவூர்க் கோட்டைத் திடலில் சேர நாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

கோட்டையின் வேண்மாடத்தில் இரும்பொறையும் முடமோசியாரும் நின்று இருந்தனர். படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்தனர்.

புலவரே! கண்ணுக்கு எட்டிய தொலைவு நம் வீரர்களே உள்ளனர். சேர அரசர் வாழ்க! வெற்றி வேந்தர் வாழ்க, என்று விண்ணதிர முழக்கம் செய்கின்றனர். போர் வேண்டி அவர்கள் செய்யும் ஆரவாரம் உங்களுக்குக் கேட்கிறதா?
அரசே! சேர வீரர்களின் வீரத்தை எல்லோரும் அறிவார்கள். எங்களைப் போன்ற புலவர்கள் போரை விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களுக்கு அழிவுதான் ஏற்படுகிறது. ஒரு போர் மற்றொரு போருக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்து பெருந் துன்பத்தை அடைகிறார்கள்.

புலவரே! நாங்கள் போரையா விரும்பினோம்? சோழன் தூங்கும் புலியை எழுப்பி விட்டான். புலியின் சீற்றத்தையும் வலிமையையும் அவன் சந்தித்தே ஆக வேண்டும்.

அரசே! அதோ பாருங்கள். எங்கிருந்தோ யானை ஒன்று ஓடி வருகிறது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. தன் துதிக்கையால் வீரர்கள் சிலரைத் தூக்கி எறிந்து விட்டது. அந்த யானையின் மேல் ஒரு வீரன் அமர்ந்து உள்ளான்.

ஆம் புலவரே! அந்த யானையின் மேல் நம் எதிரி ஒருவன் உள்ளான். படை அணிவகுப்பிற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கிறான். என்ன துணிவு அவனுக்கு?

அரசே! நம் வீரர்கள் அந்த யானையைச் சூழ்ந்து விட்டனர். யானையும் கோட்டையின் அருகே வந்து விட்டது. இனி எந்த எதிரியால் தப்ப முடியாது. அவன் தோற்றம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.
புலவர் தனக்குள் ஆ! யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர் நற்கிள்ளி அல்லவா? எதற்காக அவர் யானையின் மேல் தனியே இங்கு வந்தார்?

மதம் கொண்ட யானையை அவர் அடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவருக்குக் கட்டுப்படாத யானை இங்கே வந்திருக்க வேண்டும். அரசர் இரும்பொறைக்கு உண்மையை உணர்த்த வேண்டும்? என்று நினைத்தார்.
புலவரே! ஏன் திடீரென்று அமைதியாகி விட்டீர்?

அரசே! அந்த யானையில் மேல் இருப்பவர் சோழ அரசர்.
புலவரே! நீங்கள் சொல்வது உண்மையா? யானையின் மேல் இருப்பது சோழ அரசனா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

அரசே! அவர் சோழ அரசர் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளிதான். நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன்.

அவர் ஏன் யானையின் மேல் அமர்ந்து தனியே இங்கே வந்தார்?
அரசே! யானைக்கு மதம் பிடித்திருக்க வேண்டும். அதை அடக்க அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்க்கு அடங்காமல் யானை இங்கே வந்திருக்க வேண்டும்.

புலவரே! நீங்கள் சொல்வது போலத்தான் நடந்திருக்க வேண்டும். அங்கே பாருங்கள். நம் வீரர்கள் அந்த யானையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

அரசே! யானையின் மேல் இருப்பவர் உங்கள் எதிரிதான். தனியே உங்களிடம் சிக்கி உள்ளார். அவருக்கு எந்தத் துன்பமும் செய்யாதீர்கள்.

அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் உலகம் என்ன சொல்லும்? தனியே தளர்ந்து வந்த அரசனைக் கொன்றான் சேரன். இவ்வாறு உலகமே உங்களை இகழும். புகழ் வாய்ந்த சேரர் குடிக்கே தீராப் பழி நேரும்.

புலவரே! என்னோடு இவ்வளவு காலம் பழகி இருக்கிறீர்கள். என் உள்ளத்தை அறிய வில்லையே. உண்மையான வீரர்கள் போர்க்களத்தில் தான் வீரத்தைக் காட்டுவார்கள். எந்தச் சூழலிலும் போர் அறத்தை விட மாட்டார்கள். தனியே சிக்கிய எதிரிக்குத் தொல்லை தருபவனா நான்?

அருகில் நின்றிருந்த வீரனைப் பார்த்து, யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர். அரசருக்கு உரிய சிறப்புடன் இங்கே அழைத்து வாருங்கள். என்று கட்டளை இட்டார்.

அரசர் வாழ்க, என்ற அந்த வீரன் சென்றான்.
சிறிது நேரத்தில் வீரர்கள் சூழச் சோழ அரசர் அங்கு வந்தார். தலை கவிழ்ந்த வண்ணம் அவர் இருந்தார்.
முகம் மலர அவரை வரவேற்றார் சேர அரசர்.
வாருங்கள்! சோழ அரசரே! எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு இது. உங்கள் வருகையால் இந்தக் கருவூர் நகரமே சிறப்புப் பெற்றது. என் அருகே இருப்பவர் பெரும்புலவர் ஏணிச்சேரி முடமோசியார். என் இனிய நண்பர். அவரால்தான் உங்களை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன், என்றார்.
ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றார் சோழ அரசர்.
இங்கு வந்த சூழலை எண்ணி நீங்கள் வருந்த வேண்டாம். எங்கள் விருந்தினராகச் சிறிது நேரம் இங்கே இருங்கள். பிறகு உங்கள் எண்ணம் போலச் செய்யுங்கள்.

இங்கே உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. நாளை நாம் இருவரும் போர்க்களத்தில் சந்திப்போம்.
போர்க்களத்தில் தான் நீங்கள் என் எதிரி. எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். தனியே நுழைந்த நீங்கள் என் நண்பர். எந்தச் சூழலிலும் போர் அறத்தை நான் மீற மாட்டேன், என்றார் இரும்பொறை.
நற்கிள்ளி தலை நிமிர்ந்து இரும்பொறையைப் பார்த்தார்.

நண்பரே! மண்ணாசையால் உங்களோடு போரிடப் பெரும் படையுடன் வந்தேன். யானை மதம் பட்டதால் உங்கள் பெருமித உள்ளத்தை அறிந்தேன்.

உங்களைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தேன். உண்மையில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான். இனி நமக்குள் போரே வேண்டாம். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், என்றார்.
இரு அரசர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

நண்பரே! நீங்களும் உங்கள் வீரர்களும் எங்களின் விருந்தினர்களாக இங்கே தங்க வேண்டும். சேர நாட்டு விருந்தோம்பலை நீங்கள் அறிய வேண்டும். இது என் வேண்டுகோள், என்றார் இரும்பொறை.
அப்படியே ஆகட்டும், என்றார் சோழ அரசர்.

அருகில் இருந்த புலவர் மகிழ்ச்சியுடன் போரே இல்லாத உலகத்தைக் கனவு கண்டேன். அப்படிப்பட்ட உலகத்தில் மக்கள் அமைதியாகவும். வளமாகவும் வாழ்வார்கள். நற்பண்புகள் கொண்ட உங்கள் இருவரால் என் எண்ணம் நிறைவேறியது. உங்களுக்கு என் பாராட்டுகள், என்றார்.

அணிவகுத்து நின்ற சேர வீரர்கள், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

இரண்டு அரசர்களும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார்கள்.

இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்று மிசையோனே
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

(புறநானூற்றுப் பாடல் 13, அடிகள் 1 முதல் 8 வரை. பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)

Leave a comment